Mar 10, 2012

நினைவோடை: க. நா. சுப்ரமணியம் – சுந்தர ராமசாமி

நினைவோடை: க. நா. சுப்ரமணியம் – சுந்தர ராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்

1954ல் என்று நினைக் கிறேன், க. நா. சு. வை முதன்முதலாகத் திருவனந்தபுரத்தில் சந்தித்தேன். திருவனந்தபுரத்திற்குக் க. நா. சு. வந்திருக்கும் செய்தி எனக்கும் கிருஷ்ணன் நம்பிக்கும் கிடைத்திருந்தது. யார் மூலமாக என்பது ஞாபகத்தில் இல்லை.

நம்பி, ‘நாம் ரெண்டு பேரும் போய் க. நா. சுவைப் பார்த்துவிட்டு வருவோம்’ என்றுசொல்லிக்கொண்டேயிருந்தான். நம்பிக்கு நானும் கூட இருந்தால் ஆதரவாக இருக்கும், தைரியமாகப் போய்ப் பார்க்க முடியும் என்ற எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில் என்னால்  அவனுடன் போக kanasuமுடியவில்லை. உடம்புக்கு முடியாமல் வீட்டில் அடைந்து கிடக்கும் நான் அடிக்கடி திருவனந்தபுரம், மதுரை என்று புறப்பட்டுப் போவதைப் பார்த்து என் அப்பா இவனுக்கு ஒரு வியாதியும் கிடையாது. வீட்டில் கொஞ்ச நாள் இருக்கமாட்டான். எங்கையாவது புறப்பட்டுப் போய்விடுகிறான். பிரயாணம்தான் எல்லாத்துக்கும் காரணம் என்று தீர்மானமாகச் சொல்லிவிடுவார். இதையெல்லாம் கேட்டுக்கேட்டு அலுத்துப்போயிருந்த நான் நம்பி கூப்பிட்ட போது, ‘நீ போயிட்டு வா . . . ரொம்ப எளிமையான ஆளாகத்தான் இருப்பார்’ என்று சொன்னேன்.

‘இல்லை, எனக்குப் பயமாக இருக்கு. ரொம்பப் படிச்சவரா இருக்காரே’ என்றான் நம்பி.

‘ரொம்பப் படிச்சவர்ங்கறதுனால பயப்படணும்னு இல்லை. படிக்காதவர்களும் பயமுறுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். நீ தைரியமாகப் போய்ப் பாரு. கொஞ்ச நாள்லயே நானும் வந்துடறேன். ரெண்டாவது தடவை நாம வசதியாகப் போக முடியும்’னு சொன்னேன்.

க. நா. சுவிடம் கல்லூரியில் பேச வரும்படிச் சொன்னபோது, ‘கூட்டத்துக்கெல்லாம் வர்றேன். உங்க கூடவும் நிறைய நேரம் பேச முடியும் இல்லையா. மத்ததெல்லாம் இரண்டாம்பட்சமானதுதான்’ என்றார். கடைசியாக ஸ்காட் கிறித்துவக் கல்லூரி ஆங்கிலத்துறை சார்பாக ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு பண்ணினோம். அங்கிருந்த பேராசிரியர் க. நா. சுப்ரமணியம் என்ற பெயரைக் கேள்விப்பட்டதேயில்லை. தமிழ் இலக்கியத்தில் பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு அவருக்கு யார் பெயருமே தெரிந்திருக்கவில்லை. எனக்கு அப்போது எப்படியோ க. நா. சு, ஹிண்டு தினசரியில் மதிப்புரை எழுதும் விஷயம் நினைவுக்கு வந்தது.K.N. Subramaniam என்ற பெயரில் எழுதினார். நானே கிட்டத்தட்ட பத்து மதிப்புரைகள் படித்திருக்கிறேன். அதைச் சொன்னதும் ‘ஓ . . . K.N.S. ஆ . . . அதை முதல்லயே சொல்லக்கூடாதா? நன்றாகத் தெரியுமே. கண்டிப்பாகக் கூப்பிட்டுவிடலாம். பிரின்சிபாலுக்குக்கூட நன்றாகத் தெரியுமே’ என்றார். ஹிண்டு வில் எழுதுவதென்றால் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்று என்னைவிட க. நா. சுவைப் புகழ ஆரம்பித்து விட்டார். பி. ஏ., எம். ஏ. படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் தகவல் தெரிவித்து ஒரு நாள் நிச்சயித்து அதைக் க. நா. சுவுக்குத் தெரிவித்தோம்.

அவர் வருவதை உறுதி செய்ய மீண்டும் ஒரு கடிதம் எழுதினோம். கூட்டம் நடக்க இருக்கும் நாளன்று பேராசிரியர் பஸ் ஸ்டாண்டுக்குப் போய் அவரைக் காரில் அழைத்துக் கொண்டு வருவதாக முடிவு செய்யப்பட்டது. கல்லூரிக்குப் போனபோது ஒரு மாணவன், ‘K.N.S. வந்தாச்சு. அவரைப் பேராசிரியர் சாப்பிட அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்’ என்றான். கொஞ்ச நேரத்தில் அவர் வந்து சேர்ந்தார். வராண்டாவில் நின்று பேச ஆரம்பித்தார். ஒரு கூட்டத்துக்குப் பேச வந்திருக்கிறோம்; உள்ளே பேராசிரியர்கள், மாணவர்கள் நமக்காகக் காத்துக்கொண்டிருப்பார்கள்; தலைமை தாங்க வந்த ஒருவர் காத்துக்கொண்டிருப்பார் என்பதெல்லாவற்றையும் மறந்துவிட்டவர்போல கூட்டம் நடந்த திசையைப் பார்க்காமல் எதிர்த்திசையைப் பார்த்தபடி அவர்பாட்டுக்கு எங்களுடன் பேசிக்கொண்டேயிருந்தார். அவராகப் பேச்சை முடித்துவிட்டு வருவார் என்று மரியாதை காரணமாக அவர்கள் மேடையில் காத்துக்கொண்டிருந்தார்கள். இவரோ பேச்சை நிறுத்திவிட்டுப் போவதாகத் தெரியவில்லை. எனவே ஒரு பேராசிரியர் மெதுவாக வந்து, ‘கூட்டத்தை ஆரம்பிச்சுட லாமே . . . நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது. வர்ரீங்களா . . .’ என்றார். அப்புறம்தான் அவர் புறப்பட்டுப் போனார். ரொம்பத் தெரியும் என்று சொன்ன அந்தப் பேராசிரியர் க. நா. சுவின் பெயரை அன்று தப்பாக உச்சரித்தார். கே. என். எஸ். சுப்பிரமணியம் என்று பல தடவை சொன்னார். அது எனக்கு ரொம்ப ஏமாற்றமாகவும் கஷ்டமாகவும் இருந்தது. க. நா. சுவாவது எழுந்து தன் பெயரைத் திருத்துவார் என்று எதிர்பார்த்தோம். அவர் பாட்டுக்கு உட்கார்ந்துகொண்டிருந்தார். எப்படியும் சொல்லிட்டுப் போறார். நமக்கென்ன? என்பதுபோல் உட்கார்ந்துகொண்டிருந்தார். கீழேதான் உட்கார்ந்துகொண்டிருந்தார். பேசுவதற்கு முன்னால் மேடைக்குப் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அறிமுகம் முடிந்ததும் பேசக் கூப்பிட்டார்கள். மேடையில் போய் நின்றார். தமிழ்கூட அவருக்குப் பிரச்சினையாக இருக்கலாம். ஆங்கிலம் சரளமாகப் பேசுவார் என்ற கற்பனை எங்கள் மனதில் இருந்தது. ஆனால் அவரால் சரிவரப் பேச முடிந்திருக்கவில்லை. சுற்றிச் சுற்றி வந்தார். நிறைய ஆங்கில வாக்கியங்களை உருவாக்கவே முடியவில்லை. ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அவர் பேசும்போது பாதியில் நிறுத்தும் இடங்களில் நாங்கள்கூட மனதிற்குள் மீதி வாக்கியத்தைப் பூர்த்தி செய்துகொண்டோம். அந்த வாக்கியங்களைக் கூட அவரால் பேச முடியவில்லை. தமிழ்க் கலாச்சாரம், தமிழ்க் கல்லூரிப் பேராசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது பற்றிய விமர்சனபூர்வமான பேச்சுதான். ஆனால் அவை பேராசிரியர்களைச் சென்றடைய முடியாத விதத்தில் சொல்லும் முறை தடையாக இருந்தது.

கூட்டம் ஏற்பாடு செய்திருந்த ஆங்கிலப் பேராசிரியர் தலைமை தாங்க தமிழ்த்துறைத் தலைவரை அழைத்திருந்தார். ஆங்கிலப் பேராசிரியருக்குத் தெரிந்த அளவுக்குக்கூட தமிழ்த் sura14 (1)துறைத்தலைவருக்கு க. நா. சுவைப் பற்றித் தெரியாது. ஆனால் க. நா. சு., தமிழ் இலக்கியம் பற்றி, தமிழ்க் கலாச்சாரம் பற்றி ஏதோ விமர்சனம் செய்கிறார் என்பதைப் புரிந்துகொண்டுவிட்டிருந்தார். பொதுவாக விருந்தினரைப் பேசக் கூப்பிட்டால் அவர்களைப் பாராட்டித்தான் பேசுவார்கள். யாரும் விமர்சனம் செய்ய மாட்டார்கள். ஆனால் தமிழ்த்துறைத் தலைவர் ரொம்பவும் உணர்ச்சி வ சப்படக்கூடியவராக இருந்தார். எனவே எடுத்த எடுப்பிலேயே விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார். க. நா. சு. மேற்கத்திய சிந்தனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவருடைய கருத்துக்களுடன் நான் உடன்பட முடியாது என்று சொன்னார். உடனே க. நா. சு. எழுந்து - அவர் அப்படிச் செய்வார் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்கவேயில்லை - ‘என்னைப் பாருங்கள். ஒரு பழங்காலத்து வேட்டியும் பழைய சட்டையும் அணிந்து கொண்டிருக்கிறேன். பேராசிரியரையும் பாருங்கள், சூட் போட்டுக்கொண்டிருக்கிறார், கோட் போட்டுக் கொண்டிருக்கிறார். இவர் சொல்லும் விஷயங்களும் இப்படித்தான் இருக்கும்’ என்று சொல்லிவிட்டு உட்கார்ந்துவிட்டார்.

கூட்டம் ஒருவழியாக முடிந்தது. எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு வெட்க உணர்ச்சி ஏற்பட்டிருந்தது. எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது என்பது க. நா. சுவுக்குத் தெரிந்து விட்டிருந்தது. ‘இதெல்லாம் இப்படித்தான் இருக்கும். அதுக்கென்ன’ என்றார். ‘நான் நன்றாகப் பேசவில்லையே என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். எனக்கு இவ்வளவுதான் சொல்ல இருக்கு. நான் இங்கிலீஷ் நன்றாகப் பேசக்கூடியவன் இல்லை’ என்றார். ‘அதெல்லாம் இல்லை. நீங்கள் சொன்னவை எவ்வளவு முக்கியமானவை’ என்றோம். எங்கள் வீட்டுக்கு வந்தார். நாலைந்து மணிநேரம் இருந்தார். அப்போது என் வீட்டில் ஏதோ ஒரு function.என்ன என்று ஞாபகம் இல்லை.

அவரிடம் ஒரு சின்னப் பெட்டி மட்டுமே இருந்தது. வேறெதுவும் கிடையாது. அவரிடம் இருக்கும் ஆடைகளும் குறைவு. அதைத் தூக்கிக்கொண்டு போய்விடுவார். அந்தப் பெட்டியை அறையிலேயே வைத்துவிட்டுப் போங்கள் என்று நாங்கள் சொல்லவும் முடியாது. அவர் திரும்பி வராமலேயே போய்விடுவார். போய்விட்டார் என்றால் அவரிடமிருந்து ஒரு கடுதாசிகூட வராது. அவருடைய சுபாவம் அப்படி. அவர் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பதற்குக்கூட ஒரு பெரிய ஆராய்ச்சி செய்ய வேண்டி வரும். இப்படிப்பட்டவர் எங்கே வராமல் போய்விடுவாரோ என்று மனதுக்குள் ஒரு பயம் இருந்து கொண்டேயிருக்கும். ஆனால், அங்கு இருந்தபோது சாயந்திரம் வருவேன் என்று சொல்லிவிட்டுப் போனால் அநேகமாக ராத்திரியாவது வந்து சேர்ந்துவிடுவார். ரொம்ப நேரம் பஸ் ஸ்டாண்டில் காத்துக்கொண்டிருப்போம். வரவில்லை என்றதும் சலித்துப் போய் லாட்ஜ்க்குப் போவோம். நான்காவது மாடியில் ஆள் நடமாட்டமில்லாத படிகளில் உட்கார்ந்துகொண்டிருப்போம். அவர் வருவார். அறையைத் திறந்துகொண்டு உள்ளே போனதுமே பேச ஆரம்பித்துவிடுவோம்.

எத்தனை மாதங்கள் நாகர்கோவிலில் இருந்தார் என்பது திட்டவட்டமாக ஞாபகம் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ஒரு வாரம், பத்து நாள் இருந்துவிட்டுப் போகிறேன் என்று சொன்னவர் குறைந்தது இரண்டு மாதத்திற்கு மேல் இருந்தார் என்பது மட்டும் நினைவிருக்கிறது. இதில் நடுவில் மூன்று நான்கு தடவை திருவனந்தபுரம் போய்விட்டு வந்திருந் தார்.அவரை நிறைய இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஆசைப்பட்டோம். ஆனால், அவருக்கு அதில் ஆர்வம் இருக்கவில்லை. ஒரு தடவையோ, இரண்டு தடவையோ கன்னியாகுமரிக்குப் போயிருந்தோம். அன்று கன்னியாகுமரி உண்மையிலேயே அற்புதமான இடமாக இருந்தது. கடற்கரை ஓரமாகப் போய்க்கொண்டே இருந்தால் ஒரு மணல் குன்று வரும். அந்த மணல் குன்றிற்கு மேலே ஏறிப்போய் உட்கார்ந்து கொண்டால் ரொம்ப அருமையான காற்று வீசும். பெரும்பாலும் சாயந்திரம் அந்த இடத்தில் கூட்டமே இருக்காது. பெண்கள் எல்லாம் அந்த இடத்திற்கு வரமாட்டார்கள். முன் பக்கம் வந்து பார்த்துவிட்டுக் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பி விடுவார்கள். இப்போது அந்த விஷயங்கள் எல்லாம் பார்க்க முடியாமல் போய்விட்டது. அந்தக் குன்றே தரையோடு தரையாக ஆகிவிட்டது. கரைக்கும் கடலுக்கும் நடுவில் ஒரு பெரிய கல்சுவரை எழுப்பியிருக்கிறார்கள். அதைப் பார்ப்பதற்கு ரொம்பக் கொடுமையாக இருக்கிறது. கடல் அரிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக அறிவு பூர்வமாக யோசித்து அவர்கள் அதைக் கட்டியிருக்கலாம். அதன் மூலம் கடற்கரை அரிப்புக்கு ஆளாகாமல் காப்பாற்றப்படவும் செய்யலாம். ஆனால் கடல் சம்பந்தப்பட்ட ஒரு விகாசம், அதனுடைய அழகு, அடிவானம் வரையில் பார்வையைச் சுழலவிடும்போது ஏற்படும் உணர்வு இவற்றையெல்லாம் எப்படியோ அந்தக் கல்சுவர் நாசம் செய்து விடுகிறது. கல்சுவர் கட்டினதுக்கு அப்புறம் கன்னியாகுமரிக்கு நான் போகவே இல்லை. அதுக்கு முன்னால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் கன்னியாகுமரிக்குப் போவேன். உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ, உறவினர்கள் யாராவது வந்தாலோ போகாமல் இருந்திருப்பேனே தவிர வருடத்திற்குக் குறைந்தது ஐம்பது தடவையாவது போவேன். அலுப்பே இல்லாமல் போய்வருவேன்.

எங்கள் ஊர்ப்பக்கம் சின்னதாக, இனிப்பாக ஒரு வாழைப் பழம் இருக்கும். அதுக்கு மட்டிப்பழம் என்று பெயர். க. நா. சு. அதை விரும்பிச் சாப்பிடுவார். அதிகமாகச்சாப்பிடமாட்டார், ஒன்று இரண்டு சாப்பிடுவார். அவருக்கு இவற்றையெல்லாம் விட காஃபி டிபன்தான் ரொம்பப் பிடிக்கும். காலையில் டிபன் சாப்பிட்ட விஷயம், இரவில் டிபன் சாப்பிட்ட விஷயம் எல்லாவற்றையும் எங்களிடம் ஆர்வமாகச் சொல்லுவார். இந்தப் பக்கம் கோட்டாறுவரை அந்தப் பக்கம் பார்வதிபுரம்வரை கிட்டத்தட்ட ஐந்து மைல் சுற்று வட்டாரத்தில் அவர் சாப்பிடாத ஹோட்டலே கிடையாது என்று சொல்லலாம். எங்களுக்குத் தெரியாத இருபத்தைந்து முப்பது ஹோட்டல்களில் அவர் சாப்பிட்டிருப்பார். தினமும் புதுப் புதுப் பெயராகச் சொல்லுவார். ரசவடை அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. பீம விலாஸில் இன்னிக்கு ரசவடை ரொம்ப நன்னா இருந்தது என்பார். காலையில் என்ன சாப்பிட்டேன், ராத்திரி என்ன சாப்பிட்டேன் என்று சொல்லியிருக்கிறாரே தவிர, மத்தியானச் சாப்பாடு பற்றி அவர் எதுவுமே எங்களிடம் சொன்னது கிடையாது. அந்த ரகசியத்தைத் துப்பறிய வேண்டும் என்று நானும் நம்பியும் நேரம் மாத்தி மாத்திப் போயிருக்கோம். நீங்க சாப்பிட்டாச்சா என்று கேட்க ஏதோ காரணத்தினால் கூச்சமா இருந்தது. மத்தியானச் சாப்பாட்டை அவர் ‘ஸ்கிப்’ பண்ணறாரோ என்ற சந்தேகமும் இருந்தது. அவருக்குச் சோறு பிடிக்காது என்பது ஒரு புறம் இருக்க அவரிடம் காசு இல்லையோ என்றும் தோன்றும். நானும் நம்பியும் அவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வீட்டிலிருந்து ஏதாவது எடுத்துக் கொண்டு போய்விடுவோம். அவருக்கு அதில் சந்தோஷம் இருக்கிற மாதிரியும் தெரியாது. சாப்பிடுவார். நாங்களும் அவருடன் உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவோம். இதெல்லாம் ரொம்பக் குறைவான தடவைகள் தான் நடந்திருக்கும்.

க. நா. சுவிடமிருந்த இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவருக்கு இந்திய இலக்கியத்தில் நல்ல பரிச்சயம் இருந்தது. ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு இவற்றில் வெளியான படைப்புகளை அவை ஆங்கிலத்தில் வந்திருந்தாலும் சரி, தமிழில் வந்திருந்தாலும் சரி, அவர் படித்திருந்தார். நாங்கள் அப்போது அதுமாதிரியான புத்தகங்கள் நாலோ ஐந்தோதான் படித்திருந்தோம். எங்களுக்கு அறிமுகமாகியிருந்த உலகம் மிகவும் சின்னதாக இருந்தது. அதுபோல் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருப்பதை அவர்தான் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அந்தப் புத்தகங்கள் எல்லாம் எங்கே கிடைக்கும் என்று கேட்டபோது, ‘அதையெல்லாம் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். புத்தகம் நம்மைத் தேடி வருமா? அதைத் தேடுவதே பெரிய சுவாரஸ்யமான விஷயம்’ என்பார். அவர் சொல்வதைப் பார்த்தால் எந்தப் புத்தகமும் சீக்கிரமாகக் கிடைத்துவிடக்கூடாது; தேடித் தேடி அலைந்து திரிந்த பிறகுதான் கிடைக்கவேண்டும் என்று ஒரு விதி இருப்பதுபோல் தோன்றும். அப்படி ஒரு பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம். அப்படியே செய்தும் வந்தோம். நம்பியின் மறைவு வரையிலும் இந்தத் தேடல் தீவிரமாக நடந்தது.

பாரதி பற்றி அவரிடம் ஒரு மௌனம் இருந்தது. பாரதியைக் குறை சொல்லி எதுவும் எழுதினதும் இல்லை சொன்னதும் இல்லை. அதுபோல் பாரதியைப் பாராட்டி எதுவும் சொன்னதும் இல்லை, எழுதினதும் இல்லை. அவருக்கு 18-19ம் நூற் றாண்டுத் தமிழ் இலக்கியங்கள் மிகவும் பிரியமானவை. அவர் மனதிற்குள் அது பற்றி விரிவான சித்திரங்கள் இருந்தன. யார் யார் எந்தெந்தக் காலத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களது காலத்தில் சமூகச் சூழல் எப்படி இருந்தது போன்றவை பற்றித் தெரிந்து வைத்திருந்தார். ஆங்கிலக் கட்டுரைகள் எழுதுவதற்கும் அந்தத் தகவல்கள் அவருக்கு உபயோகமாக இருந்திருக்கின்றன. ராமலிங்க சுவாமிகளைப் பற்றி அடிக்கடிச் சொல்லுவார். ஜோதி ராமலிங்கம் என்றுதான் சொல்லுவார். இதுபோல் பல விஷயங்களைக் கொஞ்சம் வித்தியாசமாகச் சொல்லுவார். சின்ன வயதில் அவருக்குப் பெயர் அப்படிப் பதிந்திருக்கலாம். கடிதங்களிலும் அப்படித்தான் எழுதுவார்.

அவருடைய முக்கியமான குணமாகப் பரவலாகப் பலர் சொன்னது என்னவென்றால், ஒரு லட்ச ரூபாய் தருகிறேன்; ஒரு குறிப்பிட்ட சினிமா பற்றி விமர்சனம் கொஞ்சம் தூக்கி எழுதுங்கள் என்று யாராவது சொன்னாலும் நடக்கவே நடக்காது. அந்த ஆள் அடுத்த தடவை அவர் முகத்தில் முழிக்கவே முடியாது. ஆனால் அவராகவே ஒரு படத்தை ஆஹா ஓஹோ என்று தூக்கி எழுதுவார். அது வேற விஷயம். ‘நல்ல தம்பி’ என்ற என். எஸ். கிருஷ்ணனின் படத்துக்கு ஒரு விமர்சனம் எழுதியிருந்தார். என். எஸ். கிருஷ்ணனுக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு அந்த விமர்சனம் என்று சொல்லலாம். அந்தப் படத்தில் என். எஸ். கிருஷ்ணன் மது விலக்குப் பிரச்சாரம் செய்திருக்கிறார். அதனால் கல்கி அவரைப் பற்றி அப்படி எழுதினார் என்று சொல்வார்கள். கல்கி பற்றி அன்று எனக்கிருந்த அபிப்ராயங்கள் அவை. இதெல்லாம் க. நா. சுவிடம் சொன்னேன்.

உடனே அவர், ‘கல்கி பெரிய க்ரியேட்டிவ் எழுத்தாளர் கிடையாது. அவருக்குப் புகழ் அதிகமாக இருந்தது அவ்வளவு தான்’ என்றார்.

க. நா. சுவுக்கு ஆர். ஷண்முகசுந்தரம் பற்றி ரொம்ப உயர்வான எண்ணம் இருந்தது. ஆனால் அந்த அபிப்ராயம் கொஞ்சம் மிகையானதோ என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. அவர் நிறைய நாவல் எழுதி இருக்கிறார். நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். விற்பனை ஆகவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் பல நாவல்கள் எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் நல்ல நாவல்கள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்த காலத்திலேயே கிட்டத் தட்ட பத்து நாவல்கள் எழுதியிருக்கிறார். அவையெல்லாம் அவ்வளவு உயர்வாக இல்லை. ஒரே ஒரு நாவல் - குறு நாவல் என்று சொல்வது சரியாக இருக்கும் - எழுதியவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டுமா என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால், க. நா. சுவைக் குருவாக மதிக்கக்கூடியவர் ஷண்முக சுந்தரம். க. நா. சுவால்தான் நான் ஒரு எழுத்தாளனாக இருக்கிறேன் என்று சொல்லுவார். அதில் உண்மையும் உண்டு. அந்த அளவுக்கு அவர்மீது பக்தியும் உண்டு. இதேவிதமான பக்தி கு. அழகிரி சாமிக்கு க. நா. சு. பேரில் ஏற்பட்டது. கு. அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ தொகுதிக்கு க. நா. சு. ஹிந்து இதழில் மிகவும் சிலாகித்து எழுதிய மதிப்புரை மூலம்தான் தீவிர எழுத்தாளர்கள் / வாசகர்கள் கவனத்தைத் தான் பெற்றதாகப் பலமுறை அழகிரிசாமி என்னிடமே கூறியிருக்கிறார். க. நா. சுவுக்கு செல்லப்பா பற்றி உயர்வான அபிப்ராயம் கிடையாது. சிதம்பர சுப்பிரமணியனைப் பற்றி இருக்கும் அளவுக்குக்கூட செல்லப்பா பற்றிக் கிடையாது. ‘இதயநாதம்’ நாவல் அவருக்குப் பிடித்திருந்தது. அந்த நாவலை அவருக்குப் பிடித்திருந்தது என்று சொல்லும் போது இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்கவேண்டும். தமிழில் இருப்பவற்றில் சிறந்த நாவல் எவை என்று க. நா. சுவைக் கேட்டால் ‘நாகம்மாள்’, ‘பொய்த்தேவு’, ‘இதயநாதம்’ என்று சொல்லுவார். அவை ரொம்பச் சிறந்த நாவல்கள் என்ற அபிப்ராயம் அவருக்கே கிடையாது. இருப்பவற்றில் சிறந்தவை அவை என்றுதான் சொல்லுவார். அவ்வளவுதான்.

பிச்சமூர்த்தி மேலே அவருக்கு மதிப்பும் அக்கறையும் உண்டு. முக்கியமாக பிச்சமூர்த்தியின் இரண்டாவது ஜென்மம் இருக்கே -நீண்ட இடைவெளி விட்டு அதன்பின் அவர் எழுதத் தொடங்கிய காலம் - அதன் பின் அவர் எழுதிய கதைகள் எங்கு இருந்தாலும் தேடிப் போய்ப் படித்துவிடுவார். ஒரு தடவை கலைமகளில் பிச்சமூர்த்தியின் ஒரு கதை வெளிவந்திருப்பதாகத் தகவல் கிடைத்திருந்தது. மணிமேடையில் கேட்டபோது கிடைக்கவில்லை. நானும் நம்பியும் எங்கள் ஊரில் பூங்காவுக்குள் ஒரு நூலகம் இருக்கும் விவரத்தைப் பற்றி க. நா. சு. விடம் சொல்லியிருந்தோம். நேராக அங்கு போய்த் தேடிப்பிடித்து அதைப் படித்து விட்டார். கதை எப்படி இருக்கிறது என்று கேட்டோம். நன்றாகத்தான் இருக்கிறது என்றார். அவர் சொல்வதைப் பார்க்கும்போது பிச்சமூர்த்தி எப்போதுமே நன்றாகத்தான் எழுதுவார் என்ற தொனி இருக்கும். பரிபக்குவமான எழுத்தாளர். சில கதைகளில் எல்லாம் கூடி வரும். சில கதைகளில் அப்படிக் கூடி வந்திருக்காது. ஆனால் ஒன்றுகூட அசட்டுத்தனமாக இருக்காது என்ற நிம்மதியோடுதான் அவரைப் பற்றிப் பேசினார். பிச்சமூர்த்தியின் கதைகளில் உங்களுக்குப் பிடித்த கதை எது என்று கேட்டேன். எனக்கு ரொம்பப் பிடித்த கதை ‘காவல்’ என்றார். பிச்சமூர்த்தியின் கதைகள் முழுவதையும் படித்த பின் எனக்கும் அந்தக் கதைதான் பிடித்திருந்தது. க. நா. சுவின் அபிப்ராயங்கள் சார்ந்து பிடித்திருந்ததா, என் அபிப்ராயங்கள் சார்ந்து பிடித்திருந்ததா என்பது வேறு விஷயம். அவர் எழுதின ஆகச் சிறந்த கதை அது என்று சொல்ல முடியாவிட்டாலும் சிறந்த நாலைந்து கதைகளில் அதுவும் ஒன்று என்று சொல்லும்படியாக இருந்தது. அப்படிச் சிலர் மேல் அவருக்கு ரொம்ப அக்கறை உண்டு. அப்படிப்பட்டவர்களில் புதுமைப்பித்தன் முக்கியமானவர். புதுமைப்பித்தனின் சாதகமான அம்சங்களைப்பற்றிச் சொல்லுவார். அவரது நகைச்சுவை உணர்வு, மொழியில் இருக்கும் பிடிப்பு, நிறைய புத்தகங்களைப் படிக்கும் பழக்கம், தமிழுக்குப் புதிதாக எழுதிச் சேர்க்க வேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வம், அப்படி எழுதும்போது தோல்வி வந்தால் அது தோல்வி அல்ல என்ற நம்பிக்கை. இப்படிப் பலவிதமான குணங்கள் கொண்ட எழுத்தாளர் என்று சொல்லியிருக்கிறார்.

க. நா. சு. ஆரம்ப காலத்தில் கு. ப. ரா., மௌனி இவர்களைத் தான் சிறந்த எழுத்தாளராகச் சொல்லி வந்திருக்கிறார். புதுமைப் பித்தனுக்குப் பரவலான பெயர் கிடைத்த பிறகுதான் கட்சி மாறி அவரையும் பெரிய எழுத்தாளராகச் சொல்ல ஆரம்பித்தார் என்ற தொனியில் தொ. மு. சி. சொல்லியிருக்கிறார். நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆரம்பத்திலேயே அவருக்குப் புதுமைப்பித்தன் பற்றி நல்ல அபிப்ராயம் இருந்திருக்கிறது. மௌனி பற்றியும் ரொம்ப உயர்வான அபிப்ராயம் வைத்திருந்தார். மௌனி, புதுமைப்பித்தன் இவர்களில் யார் உயர்ந்தவர் என்பதுபற்றி அவருக்குக் குழப்பம் இருந்திருக்கிறது. ஒரு விதத்தில் மௌனி சிறந்தவராகவும் இன்னொரு விதத்தில் புதுமைப்பித்தன் சிறந்தவராகவும் அவருக்குத் தோன்றுகிறார்கள். அது ஒரு பெரிய குற்றமே கிடையாது. தெளிவாக வெளிப்படையாகத்தான் அந்த மதிப்பீட்டை அவர் வைத்துக்கொண்டிருக்கிறார். கு. ப. ரா. பற்றிச் சொல்லும்போது அவர் நல்ல சிறுகதை எழுத்தாளர்தான். வடிவமெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என்று சொன்னாலும் அவருக்கு கு. ப. ரா. மேல் ஈடுபாடு அதிகம் இருக்கவில்லை. எழுத்துவில் ஒரு நீளமான கட்டுரை கு. ப. ரா. பற்றி க. நா. சு. எழுதியிருந்தார் என்றாலும் அது செல்லப்பா வற்புறுத்தியதால் எழுதிய கட்டுரை. செல்லப்பாவுக்கு கு. ப. ரா. மேல் ரொம்பப் பெரிய அபிப்ராயம் உண்டு. பின்னாளில்தான் திடீரென்று பி. எஸ். ராமையாவைப் பற்றி உயர்வாகச் சொல்ல ஆரம்பித்தார். எனக்குக்கூடத் தோன்றியதுண்டு - இப்படி இவர் ராமையாவை முக்கியமான எழுத்தாளராகச் சொல்லுகிறாரே, செல்லப்பாவின் இலக்கிய விமர்சனம்மீது மரியாதை வைத்திருப்பவர்கள் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டி வருமே என்று.

இலக்கிய வட்டம் காலத்துக்குப் பிறகும் எனக்கும் க. நா. சுவுக்கும் இடையில் நெருக்கமான நட்பு இருந்தது. அவர் எந்தப் பத்திரிகையில் எழுதினாலும் அதை ஒன்றுக்கு இரண்டு தடவை படித்து என்ன சொல்ல வருகிறார் என்பதைத் தொடர்ந்து புரிந்துகொண்டுவந்தேன். ஆனால் ஒருதடவைகூட அவருக்கு இது பற்றி எழுதியதே கிடையாது. அந்த மாதிரியான கடிதப் போக்குவரத்து வைத்துக்கொள்ளக்கூடிய சுபாவமே அவருக்குக் கிடையாது. இருந்தும் அவர் எனக்கு முக்கியமானவராகத்தான் இருந்திருக்கிறார். அவருடைய சில கருத்துக்கள் நான் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லாவிட்டாலும் ஆழ்ந்து சிந்திக்கும் படியாக அவை இருந்திருக்கின்றன. தமிழில் மிக முக்கியமான மாற்றத்தை அவர் உருவாக்கியிருக்கிறார் என்பது தெளிவாகவே எனக்குத் தெரிகிறது. கோபதாபங்களுக்கு அவர் பயப்படவேயில்லை. எழுத்து உலகில் ‘கெட்ட’ பெயர் வாங்கிக்கொள்ளாமல் எந்த உண்மையையும் சொல்ல முடியாது என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.

1947- 48களில்கூட யார் பிரபலமானவர்களாக இருந்தார்களோ, யார் லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டிருந்தார்களோ அவர்கள்தான் சிறந்த எழுத்தாளர்கள் என்ற எண்ணம் சமுதாயத்தின் எல்லாத் தளங்களிலும் இருந்தது. க. நா. சு. தான் அதை முதன்முதலாக உடைத்தார். அப்போது வெகு குறைவான பேர்களே அவரது கருத்துக்களை ஏற்றுக்கொண்டார்கள். சிறு பத்திரிகை வட்டத்துக்கு, பின்னாட்களில் வந்து சேர்ந்தவர் கள்கூட ஆரம்பத்தில் இவர் என்ன சொல்கிறார், இவரைப் படிப்பதற்கு யாருமே இல்லையே. லட்சக்கணக்கானவர்கள் படிக்கிறார்களே, அவர்கள் என்ன மோசமான எழுத்தாளர்களா என்று முரட்டுத்தனமாகக் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அந்தக் கேள்வி மழுங்கி க. நா. சுவின் பார்வை நாளாக நாளாக வலுப்பட்டு வந்திருக்கிறது. லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் எப்படி அந்த வாசகர்களை உருவாக்கிக்கொண்டார்களோ அதே போல் க. நா. சுவால் தீவிரமான எழுத்தாளர்களுக்கு ஒரு வாசகர் பட்டாளத்தை உருவாக்கித்தர முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள் முன்னால் இலக்கிய விமர்சனம் சார்ந்து ஒரு வாதத்தை க. நா. சு. முன்வைத்திருந்தாரே அது தமிழ் இலக்கியத்துக்கு அவர் ஆற்றிய மிகப் பெரிய பங்களிப்பு என்று நான் நினைக்கிறேன். வணிக எழுத்தாளர்கள் முன்வைத்த வாதமானது ஒரு தர்க்க நிலையோ, விமர்சன மரபோ கொண்டது அல்ல என்பதெல்லாம் இப்போது அம்பலப்பட்டுப் போய்விட்டிருக்கிறது. ஒருபுறம் அவர் சிறந்த நாவலாசிரியர் - இல்லையென்றால் நல்ல நாவல்களை எழுத ஆசைப்பட்டுக் கைகூடாமல் போனவர் - அவர் நமக்கு மிகச் சிறந்த விமர்சனக் குறிக்கோளை உருவாக்கித் தந்திருக்கிறார்.

க. நா. சு. மேற்கத்திய புத்திகொண்டவர்; தமிழ் நாட்டைப் பற்றி அக்கறை இல்லாதவர் என்று சொல்வது வழக்கத்தில் இருக்கிறது. இன்றைக்கும் பலர் அப்படிச் சொல்கிறார்கள். சொல்ல ஆசைப்படுகிறார்கள். ஆனால், அவர் பல சந்தர்ப்பங்களில் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் செயல்பட்டிருக்கிறார் என்பதற்கான தடயங்கள் இருக்கின்றன. இந்தத் தமிழ் நாட்டைப் பற்றி உயர்வாகப் பேசிக்கொண்டு அதன் மதிப்பீடுகளை அழிக்கக்கூடிய புத்தகத்தைச் சந்தோஷமாகவும் தாராளமாகவும் பலர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. அதனால் அவர் எல்லாவற்றையும் ஒரு முன்யோசனையோடுதான் செய்கிறார் என்று தோன்றுகிறது. அவர் சொன்னது உண்மைதான் என்பது பின்னால் நிரூபணமாகியிருக்கிறது. அதற்கு ஒருவிதமான பலன் ஏற்பட்டிருக்கிறது என்ற தெளிவு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர் மொழிபெயர்த்த நாவல்களை ஒருசிலராவது விரும்பிப் படித்தார்கள். எழுத்தாளர்களை அது முக்கியமாகப் பாதித்திருக்கிறது. மகாபாரதத்தைப் படிப்பதில் எவ்வளவு ஆர்வம் உண்டோ அதே அளவு ஆர்வத்துடன் க. நா. சு. மொழிபெயர்த்த நாவல்களைப் பலர் விரும்பிப் படித்திருக்கிறார்கள். நிறைய எழுத்தாளர்கள் அந்த நாவல்களால் பாதிப்பு பெற்றிருக்கிறார்கள். பேர்லாகர் குவிஸ்டின் ‘பாரபாஸ்’ (அன்பு வழி) என்ற நாவல் பலரை ரொம்பவும் பாதித்திருக்கிறது. நம்பி தான் படித்ததிலேயே ‘மதகுரு’ மிகச் சிறந்த நாவல் என்று சொல்லியிருக்கிறான். அதை அவன் படித்தான் என்று சொல்வதைவிடப் பாராயணம் செய்தான் என்று சொல்வது தான் சரி. க. நா. சு. கூட அந்நாவலை மொழிபெயர்க்கும்போது மொழிபெயர்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் பல பக்கங்கள் படித்துக்கொண்டே போய்விட்டதாகவும் பின்பு விட்ட இடத்திலிருந்து மொழிபெயர்க்க ஆரம்பித்ததாகவும் சொல்லியிருக்கிறார். ஸெல்மா லாகர்லாஃபின் அந்தப் புத்தகத்தை வருடத்துக்கு ஒரு சில தடவைகள் படிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

மேற்கத்திய விமர்சனங்களைப் பின்னாட்களில்படித்தபோது ஒரு விஷயம் தெரிய வந்தது. அதாவது அந்த ஸ்வீடிஷ் படைப்பாளிக்கு இவ்வளவு மரியாதை கொடுத்துப் பேசியது உலகத்தி லேயே க. நா. சு. ஒருவர்தான். பல சமயங்களில் அந்தக் காலத்து எழுத்துக்களைப் பற்றி எழுதிய பிற மேற்கத்திய விமர்சகர்களின் பட்டியலில் ஸெல்மா லாகர்லாஃபின் புத்தகத்தைப் பற்றிப் பேச்சு மூச்சில்லை. உலக விமர்சனம் புறக்கணித்துவிட்ட படைப்பாளியைத் தன்னந்தனியாகப் பல பத்தாண்டுகள் சொல்லிக்கொண்டு வந்திருப்பதுடன் அந்த நாவலை மொழி பெயர்க்கக் கிடைத்த சந்தர்ப்பத்தையும் அச்சந்தர்ப்பத்தின் ஓட்டைகள் தெரிந்த நிலையிலும் முழுமையாக மொழிபெயர்த்திருக்கிறார்.

அவரது மொழிபெயர்ப்பு பற்றிப் பொதுவாக ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அவர் மொழிபெயர்ப்பைச் சரளமாகப் படிக்கும்படிச் செய்திருக்கிறார். அதைப் படிக்கும்போது எந்த ஒரு சிக்கலும் இருக்காது. ஆனால், அநேக மேற்கத்திய படைப்புக்களைப் படிக்கும்போது - அவை சகஜமாகப் படிக்கும்படியாக இருக்கின்றன என்றாலும் - சில இடங்களில் ஒரு அந்நியமான, சிக்கலான விஷயங்கள் வரத்தான் செய்கின்றன. ஏனென்றால், மேற்கத்தியக் கலாச்சாரம் என்பது நம் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்ட ஒன்றுதானே. அங்கு பல விஷயங்கள் வித்தியாசமாக நடந்திருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக, சர்ச் சம்பந்தமாக பல சண்டைகள் விவாதங்கள் அங்கு நடந்திருக்கின்றன. கிறிஸ்தவ தியாலஜி சம்பந்தமான விவாதங்கள் அவற்றுக்குரிய சொற்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்த மாதிரியான பகுதிகளையும் சேர்த்து மொழிபெயர்ப்பவர்கள் மொழிபெயர்ப்பில் வாசிக்கும் போது சிக்கலை உணர நேரிடலாம். க. நா. சுவின் மொழி பெயர்ப்புகளில் அந்த விதமான சிக்கல்களைக் காணவே முடியவில்லை. மொழிபெயர்ப்பு, மூலத்துக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறது என்பதை யாருமே சோதித்துப் பார்க்கவில்லை. நான் வலிமைப்படுத்த விரும்பும் கருத்து என்னவென்றால் அவருடைய தேர்வுகள் முக்கியமானவை. தேர்வு செய்யும்போது அதைப் பிரக்ஞை பூர்வமாகச் செய்திருக்கிறார். தமிழ் மக்களை, தமிழ்க் கலாச்சாரத்தை மனதில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஒட்டக் கூடியதைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்து அவர்ஒருவருக்குத்தான் அப்படி ஒரு பார்வை இருந்திருக்கிறது. மற்றவர்களெல்லாம் தங்களுக்கு என்னென்ன சந்தர்ப்பங்கள் வருகிறதோ அவற்றைச் செய்து தருவார்கள். அதற்கான வருமானத்தைப் பெற்றுக் கொள்ளுவார்கள். அதை மீறிப் பல விஷயங்களைச் செய்திருக்கிறார். அவ்வளவு உயர்வாக அவரே கருதாத புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறார் என்பது உண்மைதான். அவருடைய வாழ்க்கை அப்படியான நிர்ப்பந்தங்களை அவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் தனக்கு விருப்பமில்லாத ஒன்றை அவர் ஒருபோதும் செய்திருக்கவில்லை. இன்னும் நாம் அவரை விரிவாக ஆராய்ந்து பார்த்தால் அதிகக் குறைகள் கண்டுபிடிக்கச் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். எதிர்காலத்தில் அவை வெளிப்படுத்தப்பட்டாலும்கூட மொழிபெயர்ப்பிற்கு அவர் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. அது மட்டுமல்ல, இன்றுவரை அதைத்தாண்டி யாருமே போயிருக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்.

அடுத்ததாகக் க. நா. சுவின் பங்களிப்பாக நான் கருதுவது அவர் புதுக்கவிதைக்கு ஆற்றியது. ஆரம்பத்தில் பிச்சமூர்த்தி, கு. ப. ரா., வல்லிக்கண்ணன் இவர்களால் ஆரம்பிக்கப்பட்ட புதுக்கவிதை இயக்கம் நடுவில் சற்று ஓய்ந்து போய்விட்டிருந்தது. அது இறந்துபோய்விட்டது என்ற எண்ணங்கள் அதை உருவாக்கியவர்களுக்கேகூட இருந்திருக்கின்றன. தற்செயலாக 1959ல் ந. பிச்சமூர்த்தியின் ‘பெட்டிக்கடை நாரணன்’ கவிதையைச் செல்லப்பா மறுபிரசுரம் செய்யப்போக, நிறைய பேர் அதைப் பார்த்துவிட்டுப் புதுக்கவிதை எழுதத் தொடங்கினார்கள். அந்தக் கவிதை அவர்களைப் பாதித்தது என்று சொல்வதைவிட அது வெளியான காலத்தில் இளம் படைப்பு மனங்களில் புதிதாக ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் எப்படிச் செய்வது என்று தெரியாத தத்தளிப்பும் இருந்தன. சமுதாயத்துக்குப் புதுவிதமான கவிதை தேவையாக இருந்தது. பாரதிதாசன் மறைந்தபிறகு எழுத்துத் தோன்றுவது வரை எழுதப்பட்ட கவிதைகளை இன்று நாம் படிக்கவே முடியாது. கவிதையை உண்மையாக நேசிக்கக் கூடியவனுக்கு கவிதை இல்லாமல் இருந்தது. ஒருவித வறட்சி ஏற்பட்ட நேரத்தில் வழி திறந்துவிட்ட விஷயத்தைத்தான் எழுத்து செய்தது.

ஒருதடவை நான் அவரைப் பெங்களூரில் சந்தித்திருந்தேன். நான் என் மனதுக்குள் எந்த இடைவெளியையும் உணர்ந்திருக்கவில்லை. இடைவெளி இருப்பதை நான் விரும்பவும் இல்லை. அங்கு அவரைச் சந்தித்தபோது ஒரு மனநிறைவு ஏற்பட்டது. இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட மனநிறைவு. என் அப்பா அம்மா காலமானபின் அவரைச் சந்தித்திருக்கவில்லை. அது பற்றி இங்கிதமாகத் தொட்டும் தொடாமலும் பேசினார். அதன்பின் இந்தக் காலத்தில் முக்கியமானவர்களில் யார் யாரெல்லாம் நாகர்கோவிலுக்கு வந்திருந்தனர் என்று கேட்டார். ராமாமிர்தம், தி. ஜா., கு. அழகிரிசாமி இவர்கள் எல்லாரும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள் என்றேன். செல்லப்பா வந்து தங்கியதைப் பற்றிச் சொன்னேன். அழகிரிசாமி, பார்த்தசாரதி இவர்களுடன் கடிதத் தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிறீர்களா என்று கேட்டார். அந்தக் கேள்வியை அவர் கேட்கும்போது உற்சாகமும் ஆர்வமும் அவர் குரலில் தெரிந்தது. தொடர்பு இப்போது விட்டுப்போயிருக்கிறது. சென்னைக்குச் சென்று மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் என்றேன். ‘ரகுநாதனைச் சந்திப்பதை முற்றாக விட்டாச்சோ?’ என்றார். நான் க. நா. சுவைச் சந்திப்பதற்கு முன் ரகுநாதன் தான் என்னை வெகுவாகப் பாதித்திருந்தார் என்பது அவருக்குத் தெரியும். ‘ரகுநாதன் இப்போது சோவியத் யூனியன் அலுவலகத்தில் வேலை செய்கிறார். அவருடைய இலக்கியப் பணிகள் சொல்லும்படியாக இல்லை. எனக்கும் வேறு விதமான கவனங்கள் வந்திருக்கின்றன. அவரது அலுவலகத்துக்குப் போய் அவரைப் பார்ப்பது என்பது சுலபமும் இல்லை’ என்றேன். இன்னொரு நாள் சாயந்திரம், நாளைக்கு நான் ஃப்ரீ, நீ ஃப்ரீயா இருந்தா பார்ப்போம் என்றார். உண்மையிலேயே அன்று எனக்கு வேறு வேலைகள் இருந்தன. மதியத்துக்கு மேல் சந்திக்கலாம் என்றேன். ‘நான் பிரீமியர் புக் ஸ்டாலில் இருப்பேன், நீயும் அங்கு வந்துவிடு’ என்றார். அந்தக் கடை மகாத்மா காந்தி ரோட்டுக்கு அருகில் இருந்தது. முக்கியமான கடை என்று தமிழவன் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. நான் அதுக்கு முன் பெங்களூர் போனபோது வேறு பல கடைகளுக்குப் போயிருக்கிறேன். ஆனால் அந்தக் கடை எனக்குத் தெரிய வந்திருக்கவில்லை. அது ஒரு சந்துக்குள் உள்ளடுங்கி இருந்ததால் என் பார்வையில் விழவில்லை. க. நா. சுவுடன் ஏதாவது பேசுவதானால் பேசிக்கொள்ளட்டும் என்று கண்ணனையும் அழைத்துக்கொண்டு போனேன். அங்கு நாங்கள் போனபோது அவர் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். க. நா. சு. புத்தகங்களைப் பார்ப்பது ஒரு தினுசாக இருக்கும். அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. எல்லாப் புத்தகத்தையும் எடுத்துக் கூர்ந்து பார்ப்பார். அநேகமாகப் பல புத்தகங்கள் அவர் படித்ததாக இருக்கும். சில புத்தகங்கள் கேள்விப்பட்டதாக இருக்கும். அவருக்குத் தெரியாத புதுப்புத்தகங்கள் என்று கொஞ்சம்தான் இருக்கும். அந்தப் புதிய புத்தகங்களை எடுத்து அது என்ன சரக்கு என்று யீமீமீறீ பண்ணிப் பார்க்க முயற்சி செய்வார். அதுவும் தவிர புத்தகக்கடையில் இருக்கும்போது அவருக்குச் சுய உணர்வே இருக்காது. நமக்கு ஒரு உடம்பு இருக்கிறது. நாலுபேர் போக வர இடம் விட்டு நிற்க வேண்டும் என்ற உணர்வே இருக்காது அவருக்கு. அதுவும் தவிர ஒரு புத்தகத்தை நாம் விலை கொடுத்து வாங்கினதுக்கு அப்புறம்தான் அது நமக்குச் சொந்தமாகும், அதுவரை அது புத்தகக் கடைக்காரருக்குத்தான் சொந்தம் என்பது போன்ற எண்ணமெல்லாம் அவருக்கு இருக்காது. அங்கே இருக்கும் ஒரு புத்தகத்தை எடுத்து இங்கே வைப்பார். இங்கே இருக்கும் புத்தகத்தை எடுத்து அங்கே வைப்பார். அப்படிச் செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல்தான் இருப்பார்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக ஆனார். அதுக்கு அவருக்கு நல்ல வெகுமதி கிடைத்தது. அதை எவ்வளவு சீக்கிரம் தீர்க்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தீர்த்துவிட்டார். அதன் பின் அவருடன் எனக்குத் தொடர்பிருக்கவில்லை. பத்திரிகை நடத்தும்போது மேட்டர் கேட்டுக் கடிதம் அனுப்புவார். அது தவிர கடிதம் ஒன்று இரண்டு வந்திருக்கும். அவ்வளவு தான். திருவனந்தபுரத்தில் அதாவது 1954ல் அவரைப் பார்த்ததிலிருந்து அவர் இறந்துபோவதுவரை ஒரு மானசீகத் தொடர்பு, நேர் சந்திப்பு, நட்பு, மதிப்பு எல்லாம் இருந்து வந்திருக்கின்றன. அவர் நேரில் இல்லாதபோதும் அவருடன் தனியாகப் பேசிக் கொள்வதுபோல் ஒரு உறவு தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. இப்போதும் சில விஷயங்களுக்கு அவரிடம் ஆலோசனை கேட்டு மனதளவில் பெற்றுக்கொண்டுதானிருக்கிறேன். அவர் 1989ல் இறந்தார். ரொம்ப ஆரோக்கியமாகத்தான் இருந்தார். சட்டென்று மரணம் வந்துவிட்டது. அது ஒருவிதத்தில் நல்லது தான். அவரெல்லாம் படுக்கையில் படுத்து நோயால் வதை பட்டுக்கொண்டிருப்பது மிகக் கொடுமையான விஷயம். பார்வை அழிந்து படிக்க முடியாமல் ஆகிவிடுவதைவிட உயிர் பிரிவது தான் அவருக்கு நல்லது. அப்படியான நிலைமையெல்லாம் வராமல் அதற்கு முன்பே போய்ச் சேர்ந்துவிட்டார்.

அவரது மறைவு எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்னால் தாங்கிக்கொள்ள முடிந்திருக்கவில்லை. அவரைப் போன்ற ஒரு பெரிய மனிதரைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்ததைப் பெரிய விஷயமாகத்தான் மதிக்கிறேன். சாதாரண எழுத்தாளருக்கெல்லாம் இவரிடம் இவ்வளவு ஆத்மார்த்தமாகப் பேசக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான். அந்த நட்பில் மேடு பள்ளங்கள் இருந்தன என்றாலும் அதெல்லாம் இயற்கையானதுதான் என்பது இப்போது நன்றாகவே தெரிகிறது. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இடையில் கூட எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றனவே. ஆனால் தமிழ்நாட்டுக்கு அவரைப்பற்றித் தெரியாது. தமிழ்நாட்டு இடது சாரி எழுத்தாளர்களுக்கு அவரைப்போன்ற ஒருவர் தேவையே இல்லை. அவர்களுக்குத் தேவை வல்லிக்கண்ணனும் தி. க. சியும் தான். ரகுநாதன்கூடத் தேவையில்லை.

*****

நன்றி: http://sundararamaswamy.com/

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்