
பச்சை, மஞ்சள், வெள்ளை பரிசாரகி உடையணிந்து நிற்பவள் ஓர் அகதிப் பெண்; இலங்கை அல்லது இந்தியப் பெண்ணாக இருக்கும். கயானாவாகக்கூட இருக்கலாம். கறுப்பு சருமம், கறுப்பு தலைமயிர், கறுப்பு கண்கள். அவள் உதட்டுச் சாயம், நகப்பூச்சுக்கூட கறுப்பாகவே இருந்தது. அவள் பெயர் நீளமாகவும் அதிக மெய்யெழுத்துக்கள் நிரம்பியதாகவும் இருந்திருக்கக்கூடும். அதைச் சுருக்கி 'ரத்ன' என்று தன் உடையின் ஒரு பக்கத்தில் குத்தி வைத்திருந்தாள். பரிசாரகப் பயிற்சி...