சந்திப்பு: கடற்கரய்
தமிழ் இலக்கியவெளியில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஆளுமை அசோகமித்திரன். சாகித்ய அகாதெமி விருது (1996) டால்மியா மத நல்லிணக்க விருது (1995) தேவன் விருது (1997) என்று பல விருதுகள் பெற்றவர். இதில் டால்மியா விருதை அன்னை தெரசா வழங்கி கெளரவித்தார். எழுபத்தைந்து வயதைத் தாண்டியும் பங்களிப்பு செய்பவர். தண்டீஸ்வர் நகரில் இருக்கும் அவரது இல்லத்தில் தீராநதிக்காக சந்தித்தோம். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட அவரின் பேச்சில் மையப் புள்ளியாக Non violence கருத்து வலியுறுத்தப்பட்டுக்கொண்டே இருந்தது. இதை இந்த நேர்காணலும் உணர்த்தவே செய்யும்.
தீராநதி :1972_ல் உங்களின் ‘வாழ்விலே ஒரு முறை’ வெளியானது. இதையொட்டி ‘காலமும் ஐந்து குழந்தைகளும்...’ 1988_ல் மீண்டும் அது மறுபதிப்பு கண்டது. அது பரவலாக விற்பனைக்குப் போகும் முன்னதாக எலிக்கும், கறையானுக்கும் உணவாகிப் போனதாக ஒருமுறை வருந்தி எழுதியிருந்தீர்கள். ஆனால், இன்று தமிழ் பதிப்பகங்கள் சர்வதேச தரத்திற்கு வளர்ந்திருக்கின்றன. இம்மாற்றத்தை எப்படி உணருகிறீர்கள்?
அசோகமித்திரன்: முதல் தொகுதி ‘வாழ்விலே ஒரு முறை’ இருக்கே அது ரொம்பக் கொறச்சலா 500 பிரதிகள் தான் போட்டோம். முன் கூட்டியே முன்பதிவு செஞ்சியிருந்தவங்களுக்கு அதைக் கொடுத்துட்டோம். பெரிய பதிப்புன்னு சொல்ல முடியாது இதை. ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ நூல் அதுதான் முறையான பதிப்பாளர் கலைஞன் வெளியிட்டார். கலைஞன் மீது அதுக்காக இன்றைக்கும் நான் ரொம்ப நன்றியுடன் இருக்கேன். 1974_ல் வெளியிட்டார். அப்ப என்ன ஆயிடுத்துன்னா பதிப்பகம் சின்ன எடமா இருந்ததால எலியும் கறையானும் அரிச்சிடுது. அப்ப அவர் மாடிமேல இருந்தார். மழை வேற பெய்ஞ்சு தண்ணில நெனைஞ்சு பாதிக்கு மேல பாழாப்போயிடுத்து. அவரு அன்போடயும் ஆர்வத்தோடயும் வெளியிட்டார். நான் ரொம்ப விற்கக்கூடிய எழுத்தாளன் இல்லன்னு அவருக்குத் தெரியும். தெரிஞ்சும் தைரியமா வெளியிட்டார் .அதுக்காகத்தான் என்னோட வருத்தமெல்லாம். நம்மலால ஒருத்தர் நஷ்டமாயிட்டாரேன்னு வருத்தம். இன்னைக்கு எவ்வளவோ மாறிடுத்து. சுயமா வெளியிட்டுக்குறாங்க. இப்படி சுயமா வெளியிட்டுக்குறதுல சங்கடங்கள் என்னான்னா, அவங்க வந்து இதை விமர்சனப் பூர்வமா செய்ய முடியாது. பப்ளீஷருக்கு என்ன பெரிய விமர்சனம் தெரியும்னு நாம கேட்கலாம். பப்ளீஷரோட தேர்வு இருக்கே அந்தத் தேர்வே ஒரு விமர்சனம். இந்தப் புத்தகம் போடலாம். இந்தப் புத்தகம் போடமுடியாதுன்னு கணிக்குறதே விமர்சனம்தான். ஆகவே, ரொம்ப பேரு என்னது விற்காதுன்னு சொல்லி அனுப்பிச்சிட்டாங்க. அதை ஒண்ணும் தவறா நெனைக்கல. ஏன்னா அது அவங்களோட விமர்சனம். இவருக்கும் (கலைஞன்) பெருசா விற்கும்னு நம்பிக்கை கிடையாது. இருந்தும் மிக்க அன்புடன் போட்டார். பதிப்பகங்கள் வளர்ச்சியில எனக்கு என்னைக்குமே ஒரு மகிழ்ச்சி உண்டு. ஆனா படிக்கப்படணும். நெறைய புத்தகங்கள்லாம் வருது. பாத்தீங்கன்னா தடிதடி புத்தகங்கள்லாம் வருது. இதெல்லாம் படிக்கப் படறதான்னு தெரியுல. ஜெயமோகன், ராமகிருஷ்ணன் எழுதுறதெல்லாம் பார்த்தா எனக்குப் பயமா இருக்கும். 500 பக்கம் 600 பக்கம் எழுதுறாங்க எப்படி? களைச்சுப் போயிடும். அதாவது இன்னைக்கு ஒரு விதத்துல படிக்குறத தவிர வேற அறிவு பூர்வமா ஒரு பயிற்சி தரக்கூடிய ஈடுபாடுகள் கிடையாது.இப்ப எதை நீங்க தவிர்த்தாலும் தவிர்த்துடலாம். பத்திரிகைகளைத் தவிர்க்க முடியாது. ரொம்பக் கஷ்டம் அது. பத்திரிகைகள் படிச்சா பெரிய அளவுக்கு விஷயங்கள் இல்லாத மாதிரி தெரியும். அதேபோல, நீங்க பத்திரிகை படிக்கலைன்னா வாழ்க்கையோட தொடர்பு இல்லாம போயிடும். அது எந்த மாதிரி பத்திரிகையினாலும் தேவல. கட்சி சார்ந்ததா கூட படிக்க வேண்டியது இருக்கு. அந்தச் சமயத்துல இவ்வளவு பெரிய பெரிய புத்தகங்கள் வருது. இது படிக்கப்படணும். படிச்சாங்கன்னா ரொம்ப சந்தோஷம்தான். இதுக்கெல்லாம் ஒரு வாசகத்தளம் இருக்குதான்னு எனக்குத் தெரியுல. விற்கறது கூட வித்துடுறாங்க. நெறைய விற்பனை ஆயிடறதா சொல்றாங்க. என்னோட அனுபவத்துலேயே பார்த்தேன். நெறைய பேரு பேர தெரிஞ்சு வெச்சி இருக்காங்க. முகத்த தெரிஞ்சு வெச்சிருக்காங்க. உங்களை டி.வி.ல பார்த்தேன். பத்திரிகையிலே பார்த்தேங்குறாங்க. ஆனா படிக்கறத பத்தி ஒரு கதைய பத்தி, ஒரு வார்த்தை வரவே வராது. அவரோட ஒரு மணி நேரம் பேசினாக்கூட நம்ம படைப்பைப் பத்தி அபிப்ராயமே வராது. அப்படின்னா என்ன அர்த்தம்? அவர் படிக்கலன்னு அர்த்தம். பத்திரிகையில வரக் கூடிய அளவுக்குப் பிரபலமானவர்_ இதுதான். ஆகவே ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கக் கூடிய விஷயம் என்னான்னா, அவனோடதை படிச்சிட்டு நன்னா இருக்குன்னு சொன்னா போதும். அப்புறம் இந்த பப்ளீஷிங் இருக்கே, நெறைய வெளியிடுறது, விற்பனை ஆறதுயெல்லாம் நல்ல விஷயம் தான். ஆனா இந்த ஒரு கவலையும் இருக்கு. படிக்கப்படணுமே.
தீராநதி: பல எழுத்தாளர்களின் Style படைப்பின் இடை இடையே குறுக்கிடுவதாகவே இருக்கும். அந்தத் தன்மை உங்களிடம் அறவே இல்லாத மாதிரி தோணுகிறது. பொதுவாக Style _ல் உங்களுக்கு உடன்பாடு இல்லையா?
அசோகமித்திரன்: பொதுவா Style _ல பத்தி சொல்வாங்க. Style தான் ஒரு மனிதன்னு. Style of the Men. Style in the writer ன்னு. Style இல்லாம எழுதுறதே ஒரு Style தான். Style இல்லாம இருக்குறதுக்கும் ஒரு பயிற்சி வேணும். இதெல்லாம் அவ்வளவு எளிதில் வந்த ஒரு விஷயம் இல்ல. ஏதேதோ பயிற்சி செய்துதான் வந்தது. படிச்சு, எழுதி எழுதி வந்தது. ஒரு இடைவெளி இருக்கக் கூடாது. அதான் ஒரு முயற்சி. எழுத்துல வர்ற அனுபவத்துல இடைவெளி அதிகம் இருக்க கூடாதுன்னு முயற்சி செய்தேன். இந்த முயற்சில எந்த அளவுக்கு வெற்றி அடைஞ்சி இருக்கேன்னு அதெல்லாம் சொல்ல முடியாது. அம்பது வருஷம் அதுக்கு மேலேயே ஆயிடுத்து நான் எழுத ஆரம்பிச்சு. ஞாபக மறதி வேற வந்துடுத்து. இன்னும் இதை என்னால உறுதியா சொல்ல முடியல, இன்னும் அதுல நான் வெற்றி அடைஞ்சுட்டேன்னு. என்னோட இயல்பா இதை எடுத்துக்கலாம். இப்ப உங்ககிட்ட என்ன மாதிரி உறவு வெச்சிக்கிறனோ அதை மாதிரி தான் என் எழுத்துலயும் வெச்சியிருக்கேன். எழுத்துல வந்து வேற மாதிரியா வெச்சிக்க முயற்சி செய்யல. Style இருக்கே அதை நான் நிராகரிக்கல. நான் அதைச் செய்யல. Style இல்லாம இயங்குறதுல எனக்கு ஒரு நிறைவு இருக்கு, அப்படி செஞ்சும் கதை புரியலங்குறாங்க. பார்த்தீங்கன்னா ‘அமுதசுரபி’ யில இப்ப ஒரு கதை வந்தது. அதுல கிழவர் ஒருத்தர் இலந்த பழம் விற்பார். இலந்தப் பழம் விற்குறவருன்னா நாம் வந்து அவரை பரம ஏழைன்னு நெனைப்போம். அதெல்லாம் இல்ல. பெரிய ஒரு பங்களாவுக்கே அவர்தான் Êஓனர்னு கதை போகும். நல்ல கதை. ஆனா யாருமே அதப்பத்தி சொல்லல. அந்தப் பத்திரிகை ஆசிரியரே கூட சொல்லல.
தீராநதி: ஆரம்பகாலங்களில் ஜெமினி ஸ்டுடியோவில் PRO _வாக பணி செய்திருக்கிறீர்கள். பழைய நாடகங்களில் கூட பங்களிப்பு செய்திருப்பதாக நினைக்கிறேன். இன்றைக்கு நடத்தப்படும் நவீன நாடகங்கள் குறித்தும், தமிழ் சினிமா குறித்தும் உங்களின் மதிப்பீடு என்ன?
அசோகமித்திரன்: இந்த ஸ்டுடியோ பணி இருக்கே ... நான் என்ன செய்றதுப்பா? எங்க அப்பா வந்து அவருக்கு நண்பரா இருந்தாரு. திடீர்னு ஒரு நாள் அப்பா செத்துப் போயிட்டார். வீட்ல ரொம்ப கஷ்டம். அந்த நாள்லயெல்லாம் பெரிய பாதுகாப்பெல்லாம் கிடையாது. நான்தான் வீட்ல மூத்தவன். வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம். ஏதோ நான் மட்டும் கஷ்டப் பட்டுருக்கேன்னு சொல்ல வர்ல. என்னைவிட கஷ்டப்பட்டவன்லாம் இருக்காங்க. வீட்ல பொண்ணுங்க இருக்கு. ஒரு அக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. ஆனாலும் அவ்வளவு சந்தோஷமா இல்ல. வேலைக்கும் போயிட்டேன். அவருக்கு என்ன வேலை எனக்கு தர்றதுன்னே தெரியுல. எனக்கும் தயக்கம், சினிமா கம்பெனியாச்சே. அங்க இருந்தா நமக்கும் சினிமாத்தனமெல்லாம் வந்துடுமே. எழுத்தோடயே சம்பந்தப்பட்ட வேலையா இருந்தா நல்லது. அதான் PRO வேலை. நான் சேர்ந்த போதும் ஒருத்தர் இருந்தார். ரெண்டு மூணு வருஷத்துல அவருக்கு வேற வேலை. செகரட்ரியா போயிட்டார். என்னோட வெறும் டெசிகினேஷன் தான் PRO. அதை வந்து நான் பெரிய பதவியா நெனைக்கல. பெரிய சினிமா அனுபவமெல்லாம் கிடையாது. எல்லோரையும் போல சினிமா பார்த்தேன், அவ்வளவுதான். மாறுபட்ட தன்மையோ பார்வையோ எனக்குக் கிடையாது. ஆனா நாடகங்களோட பரிச்சயம் உண்டானதுக்கு ஞாநிதான் காரணம்.ஞாநி ஒரு பத்திரிகைக்காரர். இந்திரா பார்த்தசாரதியை ஒரு தடவை பேட்டி கண்டு எழுதி இருந்தார். அப்ப ஞாநியை ரொம்ப பிடிச்சுப் போச்சு. இந்த மாதிரி ஒரு ஆள் பத்திரிகையில இருக்குறது எவ்வளவு நல்ல விஷயம்னு தோணுச்சு. அப்புறம் அவரே நாடகம் போடணும்னு இறங்கினார். அவரே நாடகங்களும் எழுதி இருக்கார். அதேபோல நான் மொதல்ல எழுதுறதுக்கு தூண்டுதல இருந்தவர் ஒரு நாடகக்காரர். ராஜாமணின்னு பேரு. நெறைய படிச்சவர். அவரு என்ன ஒத்துண்டதே கிடையாது அவரு இருந்த வரைக்கும். சீக்கிரமே செத்துப் போயிட்டார். அதிக நாள் இல்லை. அப்ப நான் எழுதின கதைகள்லாம் கூட படிச்சிட்டு ‘இல்ல, இல்ல நீ மறுபடியும் இதைத் திரும்ப எழுதணும்னு சொல்லுவார். பப்ளீஷ் ஆன கதையையும் கூட, இதெல்லாம் போதாதும்பார். அந்த அளவுக்கு உரிமை என் மேல எடுத்துக்குவார். தமிழ் சினிமா பத்தி எனக்குத் தெரியாது. ஆனா 14 வருஷம் அந்தத் துறையில இருக்குறவனுக்கு அதுல விஷயம் இருக்கும் இல்லையா? இதெல்லாம் அசாதாரணமான நிகழ்ச்சிகளா நான் நெனைக்கல. இந்த மாதிரி நான் வேற ஒரு துணி உற்பத்தி செய்யறதுல இருந்தா அது சம்மந்தமா எழுதி இருப்பேன். அரசாங்க சம்மந்தப்படுத்தின வேலையா இருந்தா அதை எழுதி இருப்பேன்.ஆனா நான் யாரையும் இழிவுபடுத்தி எழுதணும்னு நெனைச்சு எழுதினது கிடையாது. ரெண்டு லட்சியங்கள் உண்டு. ஒண்ணு: யாருகிட்டயும் விரோதம் பாராட்டக் கூடாது. ரெண்டு: புறம் பேசக்கூடாது. இன்றைக்கு நவீன நாடகங்கள் எல்லாம் வந்து கிமிக்ஸ் அளவோட நின்னுபோவுது. முகத்துல கோரமா வேஷம் போட்டுக்கிட்டு கிமிக்ஸ் பண்றதுன்னு போயிட்டா பண்ணிகிட்டே போகலாம். வாழ்க்கையில இருக்குற விசேஷத்தன்மை சொல்லப்படல. ஷேக்ஸ்பியரை இன்னைக்கும் ஒரு கவிஞராத்தான் எடுத்துக்க முடியுது. அவரு நாடகத்துல எல்லாம் பெருசா செஞ்சார்னு சொல்ல முடியாது. 200, 300 வருஷங்கள் பின்னால வந்தவங்கதான் செஞ்சி இருக்காங்க. ஷெரிடன்னு ஒருத்தர் செஞ்சியிருக்கார். அப்புறம் இப்சன்னு ஒருத்தர் செஞ்சி இருக்கார். ஷேக்ஸ்பியர் நாடகமெல்லாம் பொன்மொழிகளாகத்தான் இருக்கு. நாடகமாப் பெருசா ஒண்ணும் இல்ல. தமிழ்லயும் அதிகம் செய்யுல. ஆங்கிலத்துல செஞ்சு நான் பார்த்து இருக்கேன். ‘மெட்ராஸ் பிளேயர்ஸ்’ நிறைய நாடகங்கள் நடத்தி இருக்காங்க. இங்க யதார்த்தத்தை வந்து மட்டமா நினைக்கிறாங்க. அதை யதார்த்தம்னே தெரியாத மாதிரி ஒரு நிகழ்ச்சியை சுவாரஸ்யமா காண்பிச்சு இருப்பாங்க. ஆனா இதெல்லாம் மேல் நாட்டு நாடகங்கள்ல இருந்து எடுத்து செஞ்சி இருக்காங்க.விஜய் டெண்டுல்கர்ன்னு மராத்தியில ஒரு நாடகக்காரர் அவரு பண்ணுவார். ஆனா அதுல தீவிரத்தன்மை இருக்கும். அவரு ஒரு நல்ல நாடகாசிரியர். தமிழைப் பொறுத்த அளவில் நான் எல்லா நாடகத்தையும் பார்த்துட்டேன்னு சொல்ல மாட்டேன். பார்த்த அளவுக்கு அதிகமாக கவர்ல. எனக்கும் வயசாயிடுத்து இல்லையா? ஒரு மணிநேரம் உட்கார்ந்து நாடகம் பார்க்குற நிலையில இப்ப என் உடம்பு இல்ல.தீராநதி : வ.வே.சு. ஐயர். கு.ப.ரா. புதுமைப்பித்தன் என்று மூத்த படைப்பாளிகள் பற்றியும் நகுலன், ஜெயகாந்தன், கோபிகிருஷ்ணன் என்று பெரும் பட்டியலிடும் அளவிற்கு சகபடைப்பாளி பற்றியும் நிறைய எழுதி இருக்கிறீர்கள். இந்த ஆர்வத்திற்கான அடிநாதம் எது?அசோகமித்திரன் : பெரிய ஆர்வமன்னு ஒண்ணு கிடையாது. சிலதைப் படிக்கிறோம் அது நன்னா இருக்கு. அது எல்லாருக்கும் படிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு இருந்திருக்காது. இந்த மாதிரி நிகழ்ந்திருக்கு சொல்லலாம். ஒரு நூல் இருக்குன்னு சொல் லறதுக்கும் ஒரு எடம் வேணும். அந்த எடம் கிடைச்சது. ஆனா க.நா.சு. ஒரு இயக்கமா இதை நடத்தி வந்தாரு. அடுத்து சி.சு. செல்லப்பா. இலக்கிய விமர்சனம் இலக்கிய படைப்புகள்னு தொடர்ந்து செய்து வந்தாங்க. நான் அந்த மாதிரி இயக்கத் தலைவருன்னுயெல்லாம் என்னை சொல்லிக்க மாட்டேன்.
தீராநதி : அப்படி நீங்கள் எழுதிய விமர்சனங்கள் முன்னுரைகள் கறார்தனம் இல்லாதவை என்று கருத்து நிலவுகிறது. இதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
அசோகமித்திரன்: முன்னுரையில் நாம அப்படி கறாரா இருக்கக்கூடாது. முன்னுரை எழுதச் சொல்லறதோட நோக்கமே இன்னாரை இந்த நாவல படிக்க வெச்சிடனும் என்பதுதான். அவங்களைப் போய் இது மோசமா இருக்குன்னு சொல்லக்கூடாது. கூடுமான வரைக்கும் அதுல இருக்குற நல்ல அம்சங்களை எடுத்துக்காட்டலாம். சாதாரண படைப்புலயும் எங்கேயாவது ஒரு எடத்துல ஒரு பொறி இருக்கும். அந்தப் பொறியை எடுத்துக்காட்டிப் பேசலாம். இதுல வந்து ஏன் இந்த மாதிரி இருக்கீங்க? அது தவறு இல்லையான்னு கேட்கலாம். அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. வாழ்க்கையில நெறைய விஷயங்கள் பெரிய நன்மைக்காக சிறிய விஷயங்களைத் தியாகம் பண்ணவேண்டி இருக்கும். அதனால கறாரா செய்யணும்னு, சொல்லணும்னு நெனைச்சா அது ஒரு தன்மைதான். நான் இல்லன்னு சொல்லல. அதனால இந்த முன்னுரைகள்ல பொதுவா எனக்கு நம்பிக்கை கிடையாது. இப்ப வந்து ஒரு அம்மா எஸ்டிடி போட்டு பேசறாங்க. நீங்க முன்னுரை எழுதித் தரணும்னு. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். ஏன்னா பத்துபக்கம் சேர்ந்தாப்ல படிச்சம்னா பத்தாம் பக்கம் வர்றச்சே முதல் பக்கம் என்ன படிச்சோம்னு மறந்து போயிடுது.
தீராநதி : பாஸிடிவ் அப்ரோச்சான முடிவையே உங்களின் பெரும்பாலான கதைகள் கொண்டிருக்கிறது?
அசோகமித்திரன் : பாசிடிவ் அப்ரோச்ல ஒண்ணும் தவறு கிடையாது. இது என்ன தெரியுமா? பாசிடிவ் அப்ரோச்ன்னாலே ஒரு உண்மையைப் பார்த்து நாம செய்யறோம். சில பேரு எப்ப பார்த்தாலும் நெகடிவ்வாவே பேசுவா. ஜாக்ரதையா போங்க... கீழ விழுந்துடுவேன்னு. இவர் என்ன சொல்றது. போறவனுக்குத் தெரியாதா நாம கீழ விழுந்துடுவோம்னு. அப்படி ஒரு பயமெல்லாம் தேவயே இல்ல. உலகத்துல நெறைய பேரு சங்கடப்படுறாங்க. எனக்கு இன்னும் நெறைய விஷயங்கள் வருத்தமா இருக்கு. நாடு துவேஷம். மொழி துவேஷம். உலகத்த பார்த்தாலும் துவேஷம். யாரை யார் நம்பறதுன்னே தெரியுல. பார்லிமெண்ட் தாக்கப்பட்டப்போது அம்பது பேரு செத்துபோனா. இந்த அம்பது பேருக்கும் அம்மா அப்பா இருக்காங்க. கொழந்தை குட்டி இருக்காங்க. மனைவி இருக்காங்க. எனக்கு வந்து அஃப்சல் குருவ தூக்குல போடணுமா.? தூக்குல போடக்கூடாதாங்குறதுல நான் கலந்துக்கல. அவங்களுக்கு நியாயங்கள் செய்யப்படலேன்னு சொல்றாங்க. இந்த ராணுவத்துக்கு வர்றவங்க இருக்காங்களே... வேற எந்தப் பணிய செய்யமுடியாத நிலையிலே ஆர்மிக்கு வர்றாங்க. திடீர்ன்னு சாவு வர்றதுக்கு வாய்ப்புகள் நெறையா. ராஜீவ்காந்தி அனுப்புன அமைதி படையிலக் கூட 6000, 7000 பேர் செத்துப் போனதா சொல்றாங்க. நாம அவங்களை பலி கொடுத்த மாதிரிதான் ஆயிடுச்சு. என்னத்த பெருசா நம்மலால சாதிக்க முடிஞ்சது? இன்னும் அவங்க சண்டைப்போட்டுகிட்டுதான் இருக்காங்க. இந்த ராணுவ வேலையே அந்த மாதிரிதான். காவல்காரனா இருக்குறானே அவன் என்ன பாவம் செஞ்சான். முதல்ல அவனோட (எதிரிகள்) கண்ணுக்குத் தெரியுறது காவல்காரன்தான். அதனால அவன முதல்ல அடிச்சுடுறது. இராணுவத்துல இருக்குறவன் யாருன்னா காவல்காரன். அவன் எங்கிருந்து வந்தவன்? கிராமத்துல இருந்து வேலை கிடைக்காம ராணுவத்துக்கு வந்தவன். அவன் செத்துப்போறான். என்ன ஒரு ட்ராஜிடி.
தீராநதி : உங்களின் கதை மாந்தர்கள் பெரும்பாலும் நகரவாசிகள். கிராமம் தொடர்பான அனுபவமே உங்களுக்குக் கிடைக்கவில்லையா?
அசோமித்திரன் : எனக்கு கிராம அனுபவமே இல்லன்னுதான் சொல்லணும். சிகந்தராபாத்துல பொறந்து வளர்ந்தவன் நான். அது ஒரு சின்ன கண்டோன்மெண்ட். அதனால எனக்கு எந்த அனுபவம் கொறைவா இருக்கோ, அந்த அனுபவம் கதையில கொறைவா இருக்கும். அதை நான் ஒரு இழப்பா நெனைக்கறதில்ல. நகர வாழ்க்கையில் இருக்குற சின்னச் சின்ன விஷயங்கள் எழுதுறதுக்கு நெறையா இருக்கு. எவ்வளவோ இன்னும் எழுதப்படல. வீடு மாத்திகிட்டு வந்தபோது ரேஷன் கார்டு மாத்த ஏற்பட்ட அனுபவம் இருக்கே, அதை வெச்சி பெரிய நாவலே எழுதலாம். அவ்வளவு தீவிரம் இருக்கும்.
தீராநதி : Commual harmony பற்றி இன்று நிறைய பேசுகிறார்கள். விவாதிக்கிறார்கள். ஆனால் நீங்களோ உங்களின் கதைகள் மூலம் அன்றே அதைச் சாத்தியமாக்கி இருக்கிறீர்கள். இது தன்னியல்பானதா? திட்டமிட்டதா?
அசோகமித்திரன் : நாங்க இருந்த ஏரியா இருக்கே.... அவுங்க அவுங்க அவங்களோட பழக்கத்தை வெச்சிக்குவாங்க. ஆனாலும் ஒண்ணா இருந்துக்குவாங்க. இப்ப சட்டைக்காரங்க இருக்காங்கன்னா அந்தப் பழக்கத்தோட இருப்பாங்க. முடிஞ்சா ஞாயிற்றுக்கிழமயானா சர்ச்சுக்குப் போவாங்க. அதே மாதிரி மூணு முஸ்லிம் இருந்தாங்க. அதுல ஒருத்தர் மட்டும் தமிழ் முஸ்லிம். அப்புறம் முதலியாரு, நாயுடு, அது கலப்படமான எடமா இருந்தது. அதை நீங்க நிர்ணயிக்க முடியாது. நீங்களே ஒரு எடம் இருந்து தனியா தேடிகிட்டுப் போனாதான். இங்க (சென்னை) ஒரு மொழி பெயர்ப்பாளர் அப்துல்லான்னு இருந்தார் _ கோழிக்கோடுக்காரர். அவர் பஷீரை, ஆங்கிலத்துல மொழிபெயர்த்தவர். பஷீர் கூட கோழிக்கோடுகாரர். அவரு (அப்துல்லா) என்னோட நல்ல பழக்கம். 1960_கள்ல இருந்தும் 80 வரைக்கும் இயங்கிட்டு இருந்தார். ஒரியண்ட் லாங்மன்ல வேலை, யுனஸ்கோவுலயே இவரோட மொழிபெயர்ப்பைத்தான் அங்கீகரிச்சு வெச்சி இருக்காங்க. அவரு மாம்பலத்துல குடி இருந்தார். அங்கப் போனப்பதான் தெரிஞ்சுது முஸ்லிம்களுÊக்கு மாம்பலத்துல சுலபமா வீடு கிடைக்காதுன்னு. ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் எடுத்து பதினைஞ்சு குடும்பங்க இருந்தாங்க. தாமு ரெட்டி தெருவ எடுத்துக்கோங்க ஒரு வீடு கிடையாது. இப்ப வந்துட்டாங்க அந்தக்காலத்துல முடியவே முடியாது. சாத்தியமே இல்ல... முஸ்லிம்கள்லாம் கறி சமைப்பாங்கன்னு தரமாட்டாங்க. எதுக்கு சொல்றன்னாக்க இந்த மாதிரி ஒரு விஷயங்கள் ‘டக்’குன்னு ஸ்ட்ரைக் (Strike) ஆவுது.அந்த நாள்ல ஒட்டர்கள்னு இருந்தாங்க. அவங்களெல்லாம் நகரசுத்தி வேலை பார்ப்பாங்க. இப்ப வந்து அந்த மாதிரி இல்ல. ட்ரை லாவட்டரின்னு பேரு. ட்ரை லாவட்டரின்னா அன்ன அன்னைக்கு வந்து எடுத்துகிட்டுப் போகணும். எங்க வீட்ல ஒரு அம்மா ஒருத்தி இருந்தா. தினமும் அவளோட சண்டை. அதாவது நாங்க மூணுநாள் வர்லேன்னு சொல்லுவோம். அவ வந்தேன்னு சொல்லுவா. வர்லங்கறது நமக்குத் தெரியும். இருந்தும் சொல்லுவா. நான் அந்த அம்மாவைத் தேடிகிட்டு ஒரு நாள் அவ வீட்டுக்குப் போனேன். அங்க போனப்பதான் தெரியுது அந்தக் காலனியே கம்லீட்டா ஒட்டர்கள்னு. எதுக்கு நான் சொன்னேன்னா தனிப்பட்ட வாழ்க்கைல இருக்க இந்த இழைகள் வந்து எல்லாத்துக்கும் சொல்றதுக்கு முடியுறதில்ல. நான் என்னவோ கொஞ்சம் கொஞ்சம் தான் முயற்சி பண்ணி இருக்கேன்.சிகந்தராபாத்துல இருக்குற முதலியாருங்க இருக்குறாங்களே அவங்க வீட்லயே உருதுதான் பேசுவாங்க. நான் அவங்க வீட்டுக்குப் போவேன். முஸ்லீம் நவாப் மாதிரி டிரஸ் பண்ணிகிட்டு போட்டோ எடுத்து வீட்ல மாட்டி வெச்சியிருப்பாங்க, அவங்கள பார்த்தா முதலியாருன்னே தெரியாது. ஹைதராபாத்துல அப்ப இந்தியாவுடைய டாங்கெல்லாம் (துருப்பு) வந்துடுச்சு. அங்க இருக்குற முஸ்லிம்க சின்னச்சின்ன கத்தி வெச்சிகிட்டு ‘டெல்லி பக்கடோ’ன்னு கத்திகிட்டு திரிவாங்க. ஓட்டை கத்தி கபடா வெச்சிட்டு எப்படி இவங்கள டெல்லிய புடிக்க முடியும். கொஞ்சம் கூட பொருத்தமே இருக்காது. படிக்கல, எப்படி யோசிக்கமுடியும் பாவம். இப்ப பாருங்க ஹைதராபாத்தோட அடையாளமே மாறிப் போச்சு. எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு. ஆகவே, இது எதுவும் திட்டமிட்டப்படி நடக்கல. இயல்பாகத்தான் நடந்தது. இங்க வந்த பிறகுதான் நெனைச்சுப் பாக்குறப்போ நமக்கே தெரிய வருது.
தீராநதி : தமிழிலக்கியப் போக்கில் கணையாழிக்கு ஓரிடமுண்டு. அதோடு இருபத்தைந்தாண்டுகள் சம்மந்தப்பட்டிருந்தவர் என்பதால் கேட்கிறேன். இன்று அப்பத்திரிகை பற்றி உங்களின் அவதானிப்பு என்ன? திருப்தி தரக்கூடிய அளவுக்கு அதன் செயல்பாடுகள் உள்ளதா?
அசோகமித்திரன்: கணையாழிக்கு நான் உரைநடைக்கு மட்டும் பொறுப்பா இருந்தேன். அதுக்கு நெறைய ஆசிரியர்கள் இருந்தாங்க. டெல்லியில இருந்து கடைசி நிமிடம் சொல்லுவாங்க. இதைப் போடுங்க இதை நிறுத்துங்கம்பாங்க. இதைப் போடணுமா போடக்கூடாதான்னு வர்றப்ப சண்டை வந்திடும். அதை நன்னா கொண்டுவரணும்னு எனக்கு ஒரு ஈடுபாடு இருந்தது. ஈடுபாடு இருக்குறச்ச சரியா செய்யலாம். ஆனா, இன்னைக்கு நின்னுப் போச்சுன்னு சொல்லறாங்க.அப்ப நான் இருந்தப்ப நல்ல கதையா இருந்தா எழுதினவனுக்கு லெட்டர் எழுதி சொல்லிடுவேன். கதைய நாங்க எவ்வளவு நாள் தாமதமானாலும் கண்டிப்பா வெளியிடுவோம்னு எழுதுவேன்.கதையில இது சரியா இருக்கு. இத கொஞ்சம் மாத்தணும்னு இருந்தா அதையும் எழுதிடுவேன். தொடர்ந்து பத்திரிகை இயங்க ஒரு துணிவு வேண்டி இருக்கு. அந்தத் துணிவை எடுத்துகிட்டு செஞ்சது. இன்னைக்கு எப்படியோ தெரியுல. என்ன பணி செய்யும்படியா இருந்ததோ அந்தப் பணிய நன்னாச் செய்யணும்னு நினைக்கிறேன். செஞ்ச வரைக்கும் திருப்தியா இருந்தது.
தீராநதி : சிகந்தரபாத்தில் நீங்கள் இருந்த காலகட்டத்தில்தான் இந்தியாவுக்கு சுதந்திரமே கிடைத்தது. சுதந்திரக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைக் கேட்க அன்று ரேடியோ மட்டுமே தகவல் சாதனம். ரேடியோவின் வால்வ் சூடேறுவதற்கே நான்கு மணிநேரம் பிடிக்கும். பிறகு தான் செய்தி கேட்க முடியும் என்று எழுதியிருந்தீர்கள். குறைந்த அறிவியல் சாதனங்கள் இருந்த காலமது. ஆனால் இன்றோ சகலமும் ஒளி வேகத்தில்... இரு அனுபவமும் வாய்க்கப்பெற்றவர் நீங்கள். இன்றைய தகவல் யுக வளர்ச்சி பற்றி?
அசோகமித்திரன்: ஆகஸ்ட் 14, 1947_ இராத்திரியெல்லாம் ரேடியோ கேட்டோம். சிகந்தராபாத்தில் எங்க வீட்ல இருந்த ஐந்து வால்வ் ரேடியோ மூலமா சென்னை ஒலிபரப்பு நிலைய நிகழ்ச்சிகளை இராத்திரி வேளையிலதான் ஓரளவுக்குக் கேட்க முடியும். ரேடியோவில் வரும் கரகரப்பு சத்தத்தைப் பொருட்படுத்தாம கேட்போம். ஹைதராபாத்திலயும் ரேடியோ நிலையம் இருந்தது. அது நிஜாம் அரசாங்கத்தின் ரேடியோ. இந்திய சுதந்திரக் கொண்டாட்டங்களை ஒலிபரப்பியே ஆகணும்னு கட்டாயம் அதுக்கு இல்ல.நாங்க இருந்த சிகந்தராபாத்தும் _ நிஜாமின் தலைநகர் ஹைதராபாத்தும் பக்கத்துப் பக்கத்து ஊர்கள் என்றாலும், இரண்டிலும் வேறு வேறு போலீஸ் படைகள். நிஜாம் போலீஸ் முழுக்க உருதுமொழியில் இயங்கும். சிகந்தராபாத் போலீஸ் தெலுங்கு, இங்கிலீஷ்ல இயங்கும். நிஜாம் போலீஸ் நீலக்கலருல யூனிஃபார்ம் போட்டு இருப்பாங்க. சிகந்தரபாத் போலீஸ் காக்கிச்சட்டை. சிகந்தராபாத் போலீஸ் ஸ்டேஷன்ல சைக்கிள் லைசன்ஸ் வாங்கினா அது பித்தளைத் தகட்டில் இங்கிலீஷ் எழுத்துகள்ல எழுதி இருப்பாங்க. ஹைதராபாத் போலீஸ் ஸ்டேஷன்ல அதே லைசன்ஸ் தகரத்தகட்டுல உருதுல எழுதினதா இருக்கும். யாரோ ஒருத்தர்கிட்ட லைசன்ஸ் வாங்கினா ரெண்டு நகரத்துக்கும் போதுமானதா இருந்தது.போலீஸ்காரங்கள விரல்விட்டு எண்ணிடலாம். ஆனாலும் அவ்வளவு கட்டுப்பாடு. ரோட்ல எந்த வண்டியும் ரூல்ஸ்ஸ மீற முடியாது. ஆறு மணிக்கு சூரிய வெளிச்சம் இருந்தாலும் சைகிள்ல விளக்கு ஏத்தியிருப்பாங்க.உண்மையில சொல்லணும்னா. இந்தியாவோட சுதந்திரம் நிஜாம் சமஸ்தானத்துக்கு மகிழ்ச்சியான நிகழ்ச்சியா இல்ல. ஜனவரி 30, 1948_ல் காந்தி செத்துப்போனது எங்களுக்கு ஏழு மணிக்குத்தான் தெரியும். ஆனா அவரு 5.10 க்கு செத்துப்போயிட்டார். ரேடியாவுல 9 மணிக்குதான் நியூஸ். இப்போ மணிக்கு ஒரு தரம் நியூஸ் மாதிரி அன்னைக்கு இல்ல. 10 மணிக்கு ரேடியோவே முடிஞ்சி போயிடும். இப்படி இருந்த சமயத்துலயும் உலக இயக்கத்துல நாங்க பங்கு பெற்றது இருக்கே அது ஒண்ணும் தடைபடலன்னுதான் நான் சொல்லுவேன். இப்ப வந்து டான்டான்னு எல்லாம் தெரிஞ்சுடுது. நாம என்ன என்னமோ பார்க்குறோம். தாமதமா தெரிய வந்தாலும், அந்த அனுபவங்கள் இருக்கே நிஜ அனுபவங்களாகவே இருந்தது. தகவல் சாதனங்களின் வேகம் கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் உலக இயக்கத்தில் எங்களின் ஒரு பங்கு இருக்கே அது வந்து குறையலன்னுதான் நான் நெனைக்கிறேன்.
தீராநதி: இந்து_முஸ்லிம் சண்டை சச்சரவுகள் கலவரங்கள் பற்றி அதிகம் எழுதி இருக்கும் தமிழ் எழுத்தாளர் நீங்கள். இரு தரப்புகளுக்கும் இன்று பகை தீர்ந்தபாடில்லை என்பது போல ஒரு தோற்றம் கட்டி எழுப்பப்படுகிறது. இதுவெல்லாம் நிஜமா என்று தெரியவில்லை..? அன்றைய உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
அசோகமித்திரன்: நிஜாம் சமஸ்தானத்தில் அந்த ஆண்டில் (1947) இந்திய சுதந்திரத்தை ஒட்டி விதர்பா ஏழை முஸ்லிம்கள் அகதிகளாக வந்து சேர்ந்தாங்க. நிஜாம் சமஸ்தானத்திலிருந்து ஹிந்துக்கள் பல சமஸ்தானத்தை விட்டு வெளியேறினாங்க. சில குடும்பங்கள் நிரந்தரமாவே வெளியேறிப் போயிட்டாங்க. அதைப் பார்த்ததும் நிஜாம் சர்க்கார் உடனே ஒரு உத்திரவு போட்டது. யாரும் சரியான காரணம் இல்லாம சமஸ்தானத்தை விட்டு வெளியேறக் கூடாதுன்னு. யார் இரயில்ல போக வேண்டுமானாலும் டிக்கெட் வாங்கும் பணத்தோட போலீஸ் பர்மிட்டும் வெச்சிருக்க வேண்டும். இந்தியாவுக்குள்ளாகவே பாஸ்போர்ட் இருந்தாதான் போகமுடியும்.இந்த உத்தரவு போட்டவுடன் சிகந்தராபாத்தில் பதட்டம் இன்னும் ஜாஸ்தியாயிடுத்து. எங்களுக்கு வெளியூர் எங்க போறது... யார் வீட்ல போய் தங்குறதுன்னெல்லாம் யோசிக்க முடியல. ஆனா ஊரைவிட்டுப் போயேயாகணும்னு முடிவெடுத்துட்டோம். பாஸ்போர்ட், பர்மிட் விஷயத்துல தடை வரக்கூடாதுன்னு அப்பாகிட்ட ரெண்டு மனுக்கள் எழுதிக் கொண்டு நான் சிகந்தராபாத் கோர்ட் ஆபீசுக்குப் போனேன். சிகந்தராபாத்தில டிசம்பர் மாதத்துல மழை நின்று போய் பனி பெய்யும். டிசம்பர் பனியில கண் பார்க்கும் எடமெல்லாம் பெரிய ஓவியம் போல இருக்கும்.பெரிய பெரிய காம்பவுண்டுச் சுவர்கள் நிற்கும், ரோட்ல ரெண்டு பக்கமும் இருக்குற மரங்கள் ஒரு குகைமாதிரி தெரியும். அந்தக் குகைக்குள்ள முன்னேறி கோர்ட் ஆபீஸுக்குப் போய் சேர்ந்தேன். அங்கேயேதான் போலீஸ் ஸ்டேஷனும் இருந்துச்சு. அங்க எனக்கு முன்னாலயே டஜன் கணக்குல மக்கள் கூடி இருந்தாங்க. எப்படியோ போராடி பாஸ்போர்ட் வாங்கிட்டோமே தவிர ஊரெதுக்கும் போகல. வட இந்தியாவில் அந்த நாள்ல நடந்த படுகொலைகளை மனம் ஏற்றுக்க மறுத்தது. இருந்தும் உறவினர் வீட்டுக்கு ஒரு லட்டர் போட்டோம். மறு தபாலில் பதில் எழுதிப் போட்டுவிட்டாங்க அவங்க. இங்கு விலைவாசி மிக அதிகம்னு.இதற்கிடையில் இந்திய அரசுக்கும் நிஜாமுக்கும் தற்காலிக ஒப்பந்தம் ஒண்ணு கையெழுத்தாச்சு. ஆனா இது எந்தச் சிக்கலையும் தீர்க்கல. சாதாரண மக்களுக்கு உணவுச் சாமான்கள் கிடைப்பதே அரிதாக இருந்தது. நகரப் பகுதிகள்ல பகிரங்கமாக காஸிம் ரஸ்வி என்ற ஒரு இனவாதத் தலைவரின் ரஜாக்கர் குழுக்கள் ராணுவப் பயிற்சி எடுக்கத் தொடங்கினாங்க. அந்தப் பயிற்சியை வெச்சிகிட்டு மிகச் சாதாரண ராணுவ ஆயுதத்தைக் கூடக் கையாள முடியாதுன்னு ஒரு குழந்தைக்குகூடத் தெரியும். ஆனா அன்று அந்தக் ‘காச் மூச்சு’ கூச்சல் கூப்பாடு இலட்சக்கணக்கான மக்களைக் கதிகலங்க வெச்சது. காரணம் _ அவர்கள் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் அவ்வளோதான். காந்திஜி சாகும் வரை உண்ணாவிரதம்னு அறிவிச்சது சிகந்தராபாத், ஹைதராபாத்துல இருந்த இந்துக்கள் நிலையைக் கொஞ்சம் தீவிரமாக்கியது. ஆச்சர்யமா இருக்கிறது; இவ்வளவு அமளி துமளியிலயும் அந்த ஊர்ல தெலுங்கு சினிமா படங்கள் வரும். மாசக் கணக்குல ஓடும். நாங்களும் ரெண்டு மாசங்கள் மூன்று மாசங்களுக்கு ஒரு முறை ஊர்வலமாக நடந்து போய் அந்தப் படத்தைப் பார்த்துட்டு வருவோம். ஒரு வாரம் தவறாமல் ஒரு மைல் தள்ளியிருந்த பிள்ளையார் கோவிலுக்கு மறுபடியும் ஊர்வலம் போய் வருவோம். இன்று இதையெல்லாம் திரும்ப நினைத்துப் பார்க்கும்போது அப்போ அனுபவித்த பீதி, கிலியெல்லாம் ஆதாரமற்றதுதானான்னு கூடத் தோன்றும். காலம் கடந்த பின்னாடி துன்பங்கள் அவற்றின் கூர்மையை இழந்துவிடுகின்றன.சமீபத்துல ஒரு இந்திய பெண் எழுத்தாளர் கதையை மொழி பெயர்ப்புல படிச்சேன். ‘இந்துசார் உசேன் ஐ ஆம் வெய்டிங் ஃபார் யூ’ங்கறது கதையோட பேரு. இந்துசார் உசேன் பாகிஸ்தான் ரைட்டர். அந்த அம்மாவோ இண்டியன் ரைட்டர். கதை என்னான்னா இந்த அம்மாவோட அப்பா காணாம போயிடுறார். அவர் கலவரத்துல மாட்டி பாகிஸ்தான் போயிட்டதா தெரியவருது. இந்த அம்மா பாகிஸ்தான்ல இருந்து வர்ற கதைகள்ல தன்னோட அப்பாவ பத்தி ஏதாவது சேதி வந்துருக்கான்னு தொடர்ந்து படிக்குறா. கலவரம் முடிஞ்சு அம்பது வருஷமாயிடுச்சு. ஆனாலும் இன்னும் படிக்கிறா. இதை படிச்சப்போ அந்தப் பத்திரிகைக்கு கதை நல்லா இருக்குன்னு எழுதினேன். முடிஞ்சா அந்த அம்மாவுக்கு இதைத் தெரிவிங்கன்னு சொன்னேன். அந்த அம்மாவுக்குத் தகவல் கிடைச்சு பேசினாங்க. இப்ப நான்கு ஐந்து வருஷமாத்தான் இது மாதிரியா படைப்புகள் நிறைய வருது. அந்தக்கால பிரச்னையை மையமாக வைத்து படைப்புகள் நிறைய வருது. அந்தக்காலத்துல பிரச்னை சண்டைகள் இருந்துச்சு. ஆனா இந்த மாதிரி ஒழிச்சிடணும்னு ஒரு வெறி இருந்ததா எனக்குப்படல.
தீராநதி: சிறுகதைகளின் வெளி தமிழில் சுருங்கி வருவதாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. சிறுகதை வளர்ச்சி குறித்துப் பேசுவோமா?
அசோகமித்திரன்: சிறுகதை நெறைய வரலன்னு சொல்ல முடியாது. நெறைய எழுதப்படுறது. ஆனா அதை பத்திரிகைகள் வெளியிடுறதான்னு பார்த்தா கிடையாது. அப்படியே போட்டாலும் ஒண்ணே ஒண்ணுதான். சிறுகதைகள் நெறைய வந்துகிட்டுதான் இருக்கு.
தீராநதி: சிறுபத்திரிகைவாசிகள் ஒரு காலத்தில் வெகு ஜன தளத்தில் பங்கு கொள்ளத் தயங்குவார்கள். இன்றோ நிலை தலைகீழ். சிற்றிதழில் எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்கள் வெகுஜன ஊடகத்திலும் பங்களிப்புச் செய்கிறார்கள். இது ஆரோக்கியத்தின் வெளிப்பாடா. நீத்துப் போனதற்கான அடையாளமா?
அசோகமித்திரன்: ஆரம்பத்துல இருந்தே நான் வந்து பத்திரிகைகள்ல பாகுபாடு பாக்குறத வெச்சிகிட்டதே கிடையாது. பத்திரிகைகள்ல துவேஷம் பார்க்கறது கூடாதுன்னு நெனைப்பேன். எல்லோருக்கும் ஒரே போலதான் எழுதுறேன். இவனுக்கு ஒரு கதை. அவனுக்கு ஒரு கதைன்னு எழுதறது இல்ல. ‘மாலதி’ன்னு ஒரு கதை எழுதி 1974_வாக்குல குமுதத்துக்கு அனுப்பி வைச்சிருந்தேன். அந்தக்கதை வெளி வரல. அப்ப வந்து குமுதம் ஆபீஸுக்கே போய் என்ன அறிமுகப்படுத்திகிட்டு என்னோட கதையைப் போடலயினாலும் பரவா இல்லை. என்கிட்ட அதோட காப்பி இல்லை அத கொடுத்துடுங்களேன்னேன். அவங்க இல்ல இல்ல அந்தக் கதை தீபாவளி மலரில வருதுன்னாங்க. எனக்கு நம்பிக்கை வரல. எங்க காட்டுங்க பார்ப்போம்ன்னேன். உடனே காண்பிச்சாங்க. அந்த வருஷம் சொன்ன மாதிரி தீபாவளி மலர்ல வந்துச்சு. இத ஏன் சொல்லறன்ன, அப்ப போட்டோ காப்பியெல்லாம் கிடையாது. ஒரு கதை எழுதுனா, அத படி எடுத்துதான் அனுப்பி வைக்கணும். அதுக்குள்ள அலுத்துப் போயிடும். சிலநேரம் அப்படியே அனுப்பிடுவோம். அது குமுதத்துல வந்ததால எந்த விதத்துலயும் குறைஞ்சு போயிடல. ஆனா சில நேரம் நம்ம கதையோட தலைப்பையே மாத்தி வெளியிட்டுடுவா ‘குமுதம்’. ஒரு கதை அப்படிதான் ‘விட்டேன் ஒரு விதை’ன்னு மாத்தி போட்டாங்க. அப்புறம் ‘கொண்டு வா பெட்ரோல’ன்னு போட்டாங்க. மத்தவங்கயெல்லாம் என்ன கிண்டல் பண்ணாங்க. மாத்துனா என்ன? படிக்குறவனுக்குத் தெரியாதா நல்லதா கெட்டதான்னு சொல்லுவேன். அதனால சிறு பத்திரிகைக்கும் பெரிய பத்திரிகைக்கும் இப்ப வித்தியாசமெல்லாம் இல்லாம போயிடுச்சு. என்ன இவங்களவிட அவன் கொஞ்சம் சினிமா செய்திய அதிகமா போடுவான் அவ்வளவுதான். சிறு பத்திரிகைகள் அத்தியாவசியமா இருந்த ஒரு காலகட்டம் முடிஞ்சுப் போயிடுத்து.
தீராநதி: பேச்சு மொழியில் இருக்கும் ஒலிச்சிதைவை அப்படியே உரைநடையில் பயன்படுத்துவது கடினமாக இருக்கிறது. பூர்ணமாக கையாள முடியவதில்லை. அப்படியே கையாள முடிந்தால் அப்படைப்பு ரசிக்கும் விதமாய் இருக்குமா?
அசோகமித்திரன்: சிலபேரு மண்வாசனைக்காக பண்றோம்ன்னு பண்றாங்க. அது என்ன ஆயிடுறதுன்னா பேச்சுத் தன்மைக்கு அதிகமாகப் போய் புரியாம போயிடுறது. கொஞ்சமா இருந்தா பரவாயில்லை. வரிக்கு வரி புரியாம போயிடுச்சுன்னா ஒரு தொடர்பே ஏற்படுத்திக்க முடியாம போயிடும். மொழி பெயர்ப்பு எடுத்துக்கிட்டா அவனால எப்படி அந்தப் பேச்சு மொழிய, எப்படி மொழி பெயர்க்க முடியும்.என்னதான் நாம பண்ணாலும் ஆங்கிலத்துல இருக்குற ஒரு ஸ்டேண்டர்டு இங்கிலீஷ்லதான் பண்ணமுடியும். முழுக்க முழுக்க பேச்சுலையே அந்த அனுபவத்த தர்றேன்னு வைச்சிகிட்டா கஷ்டம். ஆனா சில தகவல்கள் கொடுத்து புரிய வைக்கலாம். இதுக்கு உங்களுக்கு நீங்களேதான் ஒரு திட்டம் வகுத்துக்கணும். சிலபேர் நிறைய செய்யறாங்க. அதுக்குன்னு பொதுவான மொழியிலேயே எழுதிட்டுப் போயிட்டா இவர் என்ன ஜாதின்னே தெரியாது. இங்க நாம ஜாதின்னு சொல்றப்ப ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு அடையாளம் இருக்கும். அதனால அந்தக் கதைக்கு தனித்தன்மை வந்திடுது. அதெல்லாம் இல்லாம போயிட்டா எல்லாமே ஒரே மாதிரி ஸ்டேண்டடா போயிடும்.இப்பக்கூட பாமான்னு ஒரு ரைட்டரோடைய கதையை ஆங்கிலத்துல மொழிபெயர்த்திருக்காங்க. அந்த மொழி பெயர்ப்புக்கே அவார்டெல்லாம் கிடைச்சது. ஆனா அந்த மொழி பெயர்ப்பு மேலயும் விமர்சனங்கள் வர்றது. நான் இரண்டையும் படிச்சேன். தமிழ்ல இதுவரைக்கும் அந்த Form வரல. வெளியில இருந்தும் நாமதான் மொழிபெயர்த்து படிக்கிறோம். அப்ப நம்மளோடத யாரு மொழி பெயர்க்குறாங்க? வெள்ளைக்காரன்தான் பண்ணணும். எந்த வெள்ளைக்காரன் வர்றான் நம்மளேதான் பண்ண வேண்டி இருக்கு. ஆக, ஆங்கிலத்துல இருந்தும் நாமதான் பண்றோம். தமிழ்ல இருந்து ஆங்கிலத்துக்கும் நாமதான் பண்றோம். இது ஒரு விதத்துல சங்கடமானதுதான்.
தீராநதி: இரண்டாம் உலகப்போரின் போது இந்தியர்கள் அனுபவித்த சிராய்ப்புகள் அதிகம். அதைக் கண்கூடாக உணர்ந்தவர் நீங்கள். ரொட்டிக்கும் சீனிக்கும் ரேஷனில் காத்துக்கிடக்க வேண்டி இருந்தது என்றெல்லாம் எழுத படித்திருக்கிறோம். அன்று ஜெர்மனி.. இன்று அமெரிக்கா.. இரண்டாம் உலகப் போர் பற்றிப் பேசுங்களேன்?
அசோகமித்திரன்: தலையை எண்ணித் தானியம் கொடுத்தாங்க. அரிசியெல்லாம் கிடையாது. கோதுமை கிடையாது. சோளம். ரேஷன் கடை, ஆபீஸ், அதிகாரின்னு லஞ்சம் கொடுக்கணும். தெருவிளக்குகள் குல்லாய் மாதிரி ஒன்றைத் தொங்கவிட்டாங்க. வெளிச்சம் கம்பத்தின் கீழே மட்டும் அடிக்கும். வீட்டு வெளிச்சம் இரவில் வெளியே தெரியக் கூடாது. ஜன்னலை மூடிவை. சாலையில் மிலிடெரி வண்டிகளைப் பார்த்தாலே பதுங்கத்தான் வேண்டும். பணம் கிடைச்சவங்க, கிடைக்காதவங்க இருவருமே தடுமாறினாங்க. கண்ணியமங்கறது ரெண்டாம் பட்சமானது. யுத்தம் முடிஞ்சதுன்னு சொன்னவுடனேயே அப்பாடா இனிமே ரேஷன்ல காத்துக்கிடக்க வேண்டியதில்லடான்னு தோணுச்சு. எங்க வீட்ல இருந்து ஒரு மைல் தூரம் நடந்து போய் ரேஷன் வாங்கணும். பிற்பகல் தவறவிட்டுடா அடுத்த நாள் காலை போய் நின்னா நேற்றே எல்லாம் வந்து தீர்ந்துடுச்சுன்னு பதில் வரும். இங்க நம்ம சென்னையில விறகு வாங்குறதுக்கு ரேஷன் கார்டு வேணும் தெரியுமா உங்களுக்கு? அரை குண்டு ஒரு குடும்பத்துக்குன்னு தருவாங்க. ஐரோப்பிய யுத்தம், ஜப்பான் யுத்தம், கொரியா யுத்தம், சூயஸ் யுத்தம், பங்களாதேஷ் யுத்தம், வியட்நாம் யுத்தம் எவ்வளவு யுத்தங்கள். ஆனாலும் இன்று வேறு கவலைகள் அந்த இடத்தை எடுத்துக்கொண்டுவிட்டன. ஆக்சுவலி எதுக்கு சண்டைப் போட்டாங்கன்னு யோசிச்சா சங்கடமா இருக்கு. சமீபத்துல ஒரு போலந்து படம் பார்த்தேன். இது யதேட்சையா நடந்தது. ஜெர்மன் போலந்து மேலதான் முதல்ல படையெடுத்தாங்க. முதல்ல இருந்தே ஜெர்மனோட திட்டம் என்னான்னா ஜூசை எல்லாத்தையும் ஒழிச்சிடனும்ங்கறது. அந்தப் படத்துல வர்றவன் ஒரு ஜூ. அவன் ஒரு பியானோயிஸ்ட். அவன் ஜெர்மன் ஆர்மிகிட்ட மாட்டிக்கிறான். ஆர்மி ‘நீ யாரு’ன்னு கேட்கிறான். இவன் பியானோயிஸ்ட்னு சொல்றான். அப்ப பக்கத்து அறையில இருந்து ஒரு பியானோவ எடுத்து வந்து வாசிக்கத் தர்றான் ஆர்மி. இவன் பியானோ வாசிச்சே பல வருஷங்கள் ஆயிடுச்சு. யுத்தத்துக்கு முன்னாடி வரைக்கும் வாசிக்க அவனுக்கு வாய்ப்பிருந்தது. அப்புறம் மேல இல்லாம போயிடுச்சு. அப்ப ரொம்ப இடைவெளி வந்தாச்சு. அவனோட கையெல்லாம் பரபரக்குது. ஆனாலும் வாசிக்கிறான். பிரமாதமா வாசிக்கிறான். அப்ப அந்த ஆர்மி தன் கோட்டைப் பரிசளிக்கிறான். அவ்வளவு வெறிக்கு மத்தியிலேயும் இசையால் அவன் உயிர் பொழச்சிருக்குறான் _ இது அந்தப்படம். நாம எவ்வளவு உயிரை இழந்தோம். அதனால என்னத்த பெருசா சாதிச்சிட்டோம். ஒண்ணுமே கிடையாது. யாரோ நாலுபேர் ஆட்சி செய்றதுக்காக இவ்வளவு சாவுகள். நம்மலால எழுதத்தான் முடியும். வேற என்ன செய்ய முடியும்.
தீராநதி: புது எழுத்து என்ற உத்வேகத்தோடு நிறைய பிரதிகள் எழுதப்படுகின்றன. தமிழுக்குப் புதிய வளம் சேர்க்கும் கோட்பாடுகளில் பரிசோதனைகள் செய்கிறார்கள். பிரேம்_ரமேஷ், எம்.ஜி.சுரேஷ், சுரேஷ்குமார் இந்திரஜித், சாருநிவேதிதா இவ்வாறு நிறைய.. இதையெல்லாம் படிக்கிறீர்களா? சாருநிவேதிதாவுக்கு வழங்கிய முன்னுரையில் கூட தனக்கு உவப்பாகாத எழுத்து என்பது மாதிரி எழுதி இருந்தீர்கள்?
அசோகமித்திரன்: ஒரு ஷாக் கொடுக்கணும்ங்கறதுக்காக இப்படியெல்லாம் எழுதறாங்களோன்னு தோணும். ரியாலிட்டியில இல்லையான்னு கேட்கலாம். தமிழ் பழைய இலக்கியத்துலயும் இருக்கு. சிலப்பதிகாரத்தை எடுத்துகிட்டா அதுவும் இந்த மாதிரியான உறவை பத்தினதுதான். என்ன ஒரு மேன்மையோட சொல்லப்பட்டிருக்குன்னு பார்க்கணும். மேன்மை இல்லாதபடி இதுக்காகதான்னு நாம எழுதுறது இருக்கே, அதுல எனக்கு பெரிய உவப்பு கிடையாது. இந்தக் கோட்பாடுகளெல்லாம் விமர்சனத்துக்குச் சொல்லக்கூடியதா இருக்கலாம். ஆனா படைப்புக்குத் தேவையில்லைன்னு நெனைக்கிறேன். நான் நெனைக்கிறேன் அவ்வளவுதான். அவங்க வேறமாதிரி சொல்லலாம். அதுல தப்பு கிடையாது. இப்ப நோபல் வாங்கி இருக்கிறாரே பாமுக். அவர பாக்குறச்சே எதிர்ப்புகளைக் காண்பிக்கிற மாதிரிதான் எழுதி இருக்குறாரே ஒழிய, இந்த மாதிரியெல்லாம் எழுதுல. ‘டாக்டர் ஷிவாக்கோ’ன்னு ஒரு ரைட்டர். சோவியத் புரட்சி பற்றி ஒரு நாவல் எழுதினார். அதுக்கு நோபல் பரிசு கொடுத்தா வாங்கக்கூடாதுன்னு சோவியத் அரசே சொல்லிடுச்சு. அவரும் நான் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டார். அவருக்கு உள்ளுக்குள்ள என்ன பயம்னா அவரை நாடு கடத்திட போறங்கன்னு பயம். ஆனால் நாவல் மிகவும் சிறந்தது.
தீராநதி: மறுமலர்ச்சி அடைந்திருக்கும் தலித் படைப்புகள் குறித்து?
அசோகமித்திரன்: ரொம்ப நாளைக்கு தலித்காரங்ககிட்ட படிப்பே இல்லாம இருந்தது. எழுத்துல இதையெல்லாம் பதிவு செய்யணும். ஓரல் ஹிஸ்டரின்னு இதைச் சொல்லலாம். இப்ப உடனே பதிவு செய்யப்படுறது. சுதந்திரத்துக்குப் பிறகுதான் எல்லோருக்கும் கல்வி சாத்தியமாச்சு. அப்புறம் எழுதுறதுக்கு ஒரு சாத்தியம் வந்திருக்கு. எல்லா தலித் இலக்கியங்களும் பழையபடி துக்கத்தையும், சோகத்தையும் சொல்லிக்கிட்டே இருந்தா போதாது. வேற மாதிரி வரணும். இந்திய மொழிகள்லயே இந்தியும், மராட்டியும் குறிப்பிட்டுச் சொல்லலாம். தயாபவர் _ மராட்டிய எழுத்தாளர். எனக்கு நல்ல நண்பர். அவரு வீட்டுக்கெல்லாம் வரச்சொல்லி போனபோது என் கையிலேயே துரதிருஷ்டவசமா செத்துப்போனார். அவரை மைனாரட்டின்னு நான் சொன்னப்போ, நீயும் மைனாரட்டிதான்னு சொல்லுவார். அவரு நிறைய எழுதி இருக்கார். அவரோட வாழ்க்கை வரலாற்றை எழுதி இருக்கார். இங்கேயும் நல்ல எழுத்தெல்லாம் வர்றது. அதுல இன்னும் பிரிவுகள் எல்லாம் வரும். இதையெல்லாம் நான் வரவேற்கிறேன்.
தீராநதி: சில மாதங்களுக்கு முன் நீங்கள் ஆங்கில பத்திரிகை ஒன்றில் பிராமணர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. தங்களோட கலாசாரத்தை இயல்பாக கடைப்பிடிக்க முடியாம இருக்கிறார்கள் என்ற ரீதியில் எழுதியதாக சர்ச்சை எழுந்தது.. மறுத்திடாமல் பேசுங்கள்?
அசோகமித்திரன்: இந்தப் பேட்டி சங்கடமானது. இப்படித்தான் டெலிபோன்ல பேட்டி எடுத்தாங்க. பேட்டி எடுக்குறவங்களுக்குன்னு ஒரு சில கருத்துக்கள் இருக்கும். அத நம்ம சொன்னதா சேர்த்து சமயத்துல எழுதிடுவாங்க. இதுவும் அப்படித்தான் நேர்ந்திடுச்சு. இல்லப்பா.. இங்கயெல்லாம் கொஞ்சம் கஷ்டமா இருக்குதுன்னேன். என்னோட பையனுங்க அட்மிஷனுக்காக போறப்ப சில கஷ்டங்கள் இருந்தது. ஒரு பையனுக்கும் அவன் கேட்ட குரூப் கிடைக்கல. இதை நாம சொல்றோம். நமக்கு எந்த துவேஷமும் கிடையாது. காந்தியே சொல்லி இருக்கார். கண்ணுக்குக் கண்ணுன்னு நீங்க ஆரம்பிச்சிட்டீங்கன்னா உலகத்துல எல்லாம் குருடனா போயிடுவான்னு. வலியுறுத்த வேண்டியதுதான். சொல்ல வேண்டியதுதான். சில நியாயத்தைச் சொல்றோம். நியாயம்னு நமக்கு உடனே தெரியுறதில்ல. சில காலம் கழிச்சி தெரியும். ஸெரீனா வாழ்க்கையில ரெண்டு மூணு வருஷம் எப்படி ஆயிடுச்சு பாருங்க. இந்த மூணு வருஷமும் திரும்பக் கிடைக்குமா அவளுக்கு? பீகாரை எடுத்துகிட்டா அப்படிதான். எங்க முன்னேற்றம் இல்லையோ அங்க கிரைமும் அதிகமும் இருக்கும். உடனே முன்னேறின நாடுகள்ல கிரைம் இல்லையான்னு கேட்கக் கூடாது. பீகாருல திருடுனானன்னு நெத்தியில ஒருத்தனுக்கு சூடு போட்டாங்க. என்ன கொடுமை இது? _ ஆயுள் முழுக்க நெத்தியில சுமந்துகிட்டு திரியவேண்டியது. இப்படி பலபேர் செத்துப் போனங்க. அப்புறம் கண்ணை குருடடிச்சு விட்டுடுறது. இவன் யாரு அவன் கண்ணை குருடடிக்க. திருடினான்னா உன்னால நிரூபிக்க முடிஞ்சா எவ்வளவு சிறை வாசமோ அதக் கொடுக்க வேண்டியதுதானே. சித்துவ எடுத்துக்குங்க. அவன்கிட்ட பணம் காசு இருக்கு. அப்பாவிங்க என்ன செய்வாங்க. சிலைகளையும், ஏழை எளியவங்களையும் தாக்கறாங்க. இதுவெல்லாம் சரி கிடையாது. ஏதாவது நாம பேசினா நேஷ்னல் ஆக்ட்ல உள்ள போட்டுடுவாங்க. ஒரு வருஷம் வாய் திறக்க முடியாது. உலகத்துலேயே யாருக்கு அதிக சிலைகள் இருக்குன்னு ஒரு புள்ளி விவரம் எடுத்தா, அம்பேத்காருக்குத்தான் இருக்கு. நிறைய சிலைகள் இருந்தா நிறைய விபத்துகளும் நடக்கும். இத இப்படித்தான் நாம எடுத்துக்கனும். இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா போராடுறதுன்ணு இறங்கிட்டா காந்தி சொன்ன மாதிரி கண்ணுக்குக் கண்ணுன்னு ஆயிடும்.
நன்றி:தீராநதி
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
0 கருத்துகள்:
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.