May 21, 2013

மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள் - அ.முத்துலிங்கம்

பச்சை, மஞ்சள், வெள்ளை பரிசாரகி உடையணிந்து நிற்பவள் ஓர் அகதிப் பெண்; இலங்கை அல்லது இந்தியப் பெண்ணாக இருக்கும். கயானாவாகக்கூட இருக்கலாம். கறுப்பு சருமம், கறுப்பு தலைமயிர், கறுப்பு கண்கள். அவள் உதட்டுச் சாயம், நகப்பூச்சுக்கூட கறுப்பாகவே இருந்தது. அவள் பெயர் நீளமாகவும் அதிக மெய்யெழுத்துக்கள் நிரம்பியதாகவும் இருந்திருக்கக்கூடும். அதைச் சுருக்கி 'ரத்ன' என்று தன் உடையின் ஒரு பக்கத்தில் குத்தி வைத்திருந்தாள். amuttu

பரிசாரகப் பயிற்சி வகுப்பில் சொல்லிக் கொடுத்ததுபோல அவள் மேசைக்கு சற்று தூரத்தில் நின்றாள். கண் பார்க்கக்கூடிய தூரம், காது கேட்கக்கூடாத தூரம். அதுவே விதி.

இன்னும் பல விதிகள் அவளுக்கு தெரியும்.

உணவை மேசையின் மேல் வைக்கும்போது அதை விருந்தினரின் இடது பக்கத்தில் நின்று வைக்கவேண்டும். விதி 12.

மீதமான உணவை மேசையில் இருந்து எடுக்கும்போது அதை விருந்தினரின் வலது பக்கத்தில் நின்று எடுக்கவேண்டும். விதி 11.

விருந்தினரின் நாற்காலியை இழுத்து வசதிசெய்து கொடுக்கும்போது இடது பக்கமாக நிற்கவேண்டும். விதி 26.

நாப்கினை மடித்து பிளேட்டின் இடது பக்கத்தில் வைத்தால் விருந்தினர் முடித்துவிட்டார் என்று அர்த்தம். விதி 7.

நாப்கினை மடித்து பிளேட்டின் நாற்காலியின் மேல் வைத்தால் விருந்தினர் இன்னும் முடிக்கவில்லை என்று அர்த்தம். விதி 9.

சாப்பிட பயன்படுத்தும் உபகரணங்கள் வெளியில் இருந்து உள்ளுக்கு குறைந்துகொண்டே வரவேண்டும். விதி 19.

இன்னும் இருக்கின்றன. அவளுக்கு எல்லாமே மனப்பாடம்.

அவளுக்கு தொல்லை கொடுப்பது விதிகள் அல்ல. ஆங்கில வகுப்பு. பெயர் சொற்களையே அவளுடைய ஆசிரியர் படிப்பிக்கிறார்; அவையே முக்கியம் என்றும் சொல்கிறார். சாலட், நாப்கின், சீஸ், கூகம்பர், கிளாம் சூப், ஒலிவ், லெட்டுஸ். வினைச்சொற்கள் இப்போது தேவை இல்லை, அவை தானாகவே வந்து இணைந்துகொள்ளும் என்கிறார். எப்போது, எந்தத் தேதியில் வந்து சேரும் என்பதை அவர் சொல்லவில்லை. ஸ்தோத்திரம்போல அவள் ஓர் ஒற்றை ரூல் கொப்பி நிறைய பெயர்ச் சொற்களையே எழுதி வைத்து பாடமாக்குகிறாள். வினைச்சொற்கள் இல்லாமல் அவற்றை எப்படி பயன்படுத்துவது? ஆனால் அவள் ஆசிரியர் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும்.

அவளுடைய அறைச் சிநேகிதி அவள் படிக்கும் முறையை பரிகாசம் செய்கிறாள். இதனிலும் உத்தமமான ஒரு வழி அவளுக்கு தெரிந்திருக்கும். ஒரு காதலன் கிடைத்தபிறகு அவள் காலண்டரில் புள்ளடி போட்டு வைக்கத் தொடங்கியிருந்தாள். அந்த தினங்களில் அகதிப் பெண் பதினொரு மணிக்கு முன்னர் அறைக்கு திரும்பமுடியாது. காதலர்கள் சந்திக்கும் புனித கணத்துக்கு அவளால் கெடுதல் வரக்கூடாது என்கிறாள். தகரக் குழாய் சத்தத்தில் அவள் காதலன் பேசுகிறான். அவன் கையை நீட்டும்போது அது திராட்சைக் குலைபோல தொங்கும். அவள்தான் அதைப் பிடித்துக் குலுக்கவேண்டும். அவன் கண்களும் அவள் முகத்தை நேரே பார்க்காமல் அவனுடைய வலது தோளுக்கு மேலால் பார்க்கின்றன.

அன்றைய விருந்தை கனடாவின் அதி செல்வந்தர்களில் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார். அவர் வீட்டிலே நாளுக்கு ஒரு தடவை திரைச் சீலைகளையும், இரண்டு தடவை படுக்கை விரிப்புகளையும், எட்டு தடவை பல்புகளையும் மாற்றுவார்களாம். அவ்வளவு பெரிய பணக்காரர். மணி பதினொன்றைக் கடந்து வெகு நேரமாகிவிட்டது. அவளுக்கு மணித்தியாலத்துக்கு இவ்வளவு என்று சம்பளம். திருமண விருந்து, பிறந்ததின விருந்து போன்ற கொண்டாட்டங்களின்போது அவள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பாள். அவளுடைய மேலாளர் தவறுகளை அனுமதிப்பதில்லை. கறுப்பு ஸ்டொக்கிங்க்ஸ் அணிந்து, கைகளை ஒரு பறவை பறக்க ஆயத்தம் செய்வதுபோல விரித்து, தட்டு தட்டென்று அறையினுள் நிழையும்போது அவள் அளவு கன அடி காற்று வெளியேறிவிடும். இதைக் கண்டுபிடிப்பதற்கு ஆர்க்கிமெடிஸ் தேவையில்லை. அகதிப் பெண்ணே அதைச் செய்துவிடுவாள்.

திடீர் திடீரென்று மேலாளர் பரீட்சை வேறு வைப்பார்.

'இதற்கு என்ன பெயர்?'

'புட்டிங்.'

கரண்டியால் ஒரு துண்டை வெட்டி வாயிலே வைத்து சுவைப்பார்.

'இப்போது இதற்கு என்ன பெயர்?'

'எச்சில் உணவு.'

'இதை என்ன செய்யவேண்டும்?'

'குப்பையில் வீச வேண்டும்.'

அவள் பரீட்சையில் பாஸ்.

புத்தகத்தில் சொல்லப்பட்ட ரூல்கள் தவிர தனிப்பட்ட முறையில் அவளுக்கும் சில விதிகளை மேலாளர் உண்டாக்கியிருந்தார்.

விருந்தினர்களுடன் இன்முகமாய் இருக்கவேண்டும். அது அவளுக்கு தெரியும்.

விருந்தினர்கள் குறிப்பறிந்து அவர்களை திருப்திப் படுத்தவேண்டும். அது அவளுக்கு தெரியும்.

விருந்தினர்களுக்கு எரிச்சலூட்டும் காரியத்தை செய்யக்கூடாது. அது அவளுக்கு தெரியும்.

அகதிப் பெண்ணின் ஆங்கிலம் குறைபாடுள்ளது. ஆகவே விருந்தினர்களுடன் அவள் பேசுவதை தவிர்க்கவேண்டும். அவர்கள் ஏதாவது கேட்டால் புன்னகையை தாராளமாக செலவு செய்யலாம். இந்தக் கடைசி விதி அவசியமில்லாதது என்றே அவள் நினைத்தாள். வினைச்சொற்கள் இல்லாத வசனங்களை அவள் பேசும்போது அவை யாருக்குமே புரிவதில்லை.

பிரதம மேசைக்கு எதிர் மேசையில் இருந்த குடும்பம் வினோதமாக இருந்தது. தாய்போல தோற்றமளித்தவளுக்கு வயது 30 இருக்கலாம். தகப்பனுக்கு 50. மகனுக்கு 18, மகளுக்கு 8 என்று அவள் கணக்கு போட்டாள். அப்படியானால் அந்த மனைவி இரண்டாம் தாரமாக இருக்கலாம். மகன் முதல் தாரத்துக்கு பிறந்திருக்கவேண்டும். எல்லாம் ஒரு ஊகம்தான். ஊகிப்பதில் அவள் மிகவும் கெட்டிக்காரி.

அவர்களுடைய மேசை அவள் பொறுப்பில் இருந்தது. அது மிகவும் கலகலப்பனது. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை ஏதோ பேசி சிரித்து சத்தம்போட்டு மகிழ்ந்தார்கள். அவர்கள் பேசியது போலந்து மொழியாக இருக்கலாம். அதில் நிறைய மெய்யெழுத்துக்கள் கலந்து கிடந்தன, ஆனால் அவை பெயர்ச்சொற்களா, வினைச்சொற்களா என்பது தெரியவில்லை. ஒரு ஐம்பது வயது தகப்பனுக்கும், முப்பது வயது மனைவிக்கும், 18 வயது மகனுக்கும், 8 வயது மகளுக்கும் இடையில் பொதுவாக என்ன இருக்கும். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் பரிசாரகிக்கும் சிரிப்பு தொற்றியது.

அப்பொழுதுதான் அவன் அவளைப் பார்த்தான். அவளை ஒருவருமே பார்ப்பதில்லை. இந்த பதினெட்டு வயது, சிவப்பு தலைமுடிக்காரன் அவளைப் பார்க்கிறான். அவன் கண்கள் துளைத்துவிடும்போல இருக்கின்றன. அந்த விருந்தில் கலந்துகொண்ட எத்தனையோ இளம் பெண்கள் அங்கே இருந்தார்கள். ஆனால் இவளையே அவன் பார்த்தான். விதிகள் என்ன சொல்கின்றன. மேலாளர் இதைப்பற்றி என்ன நினைப்பார். அவள் அந்தப் பார்வையை திருப்பித்தர முடியுமா? அவளுக்கு தெரியவில்லை. தன் வேலையை அவள் இன்னும் சிரத்தையுடன் கவனித்தாள்.

இதற்கு முன் என்றும் ஏற்பட்டிராத வகையில் அவள் மனதில் ஏதோ குறுகுறுவென்று ஒடியது. தன் தங்கையுடன் முகத்தை திருப்பி பேசிப் பேசி சிரித்தான் சிவப்பு முடிக்காரன். அந்த சிரிப்பின் மிச்சத்தை அவள் பக்கம் திரும்பி முடித்துக்கொண்டான். அவள் அவர்களுக்கு ஏதாவது பரிமாறப் போகும்போதெல்லாம் அவன் கண்கள் அவளைத் தொட்டு வாசல்வரை கொண்டுவந்து விடுவது வழக்கமானது.

அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவன் மடியிலிருந்த நாப்கின் மெதுவாக நழுவி கீழே விழுந்தது. அப்படி விழுவதற்கு அவன் விரல்கள் உதவிசெய்தன என்றே நினைக்கிறாள். அதற்கும் ஒரு விதி இருக்கிறது. அவள் நாப்கினை குனிந்து எடுத்து அவன் கையில் கொடுத்தாள். அவன் நன்றி என்று வாங்கிக்கொண்டான். அப்படிச் சொன்ன அதே நேரம் அவன் கைவிரல்கள் அவள் உள்ளங்கையை ஒருவித சந்தேகத்துக்கும் இடமில்லாமல் அழுத்தின. நடுக்கம் வழக்கம்போல அடிக்காலில் இருந்து தொடங்கியது. ஒன்றுமே நடக்காததுபோல அவள் மறுபடியும் தன்னிடத்துக்கு நகர்ந்தாள். அவளைச் சுற்றியிருக்கும் காற்றைக் கலைத்துவிடக்கூடாது என்பதுபோல நின்றாள். மேசையில் பேசுவது கேட்கக்கூடாத தூரமாகவும், அவர்கள் பார்க்கக்கூடிய தூரமாகவும் அது இருந்தது. அது ரூல் 17.

இப்பொழுது நடனம் ஆரம்பமாகிவிட்டது. அவனுடைய தாயும் தகப்பனும் எழுந்து மேடைக்கு போய்விட்டார்கள். தாய் சுழன்று சுழன்று ஆடினாள். ஆடலறை முழுக்க அவள் நிறைந்து இருந்தாள். தகப்பன் ஆகக் குறைந்த அங்க அசைவுகளை வெளிப்படுத்தி தன் பங்கு நடனத்தை கச்சிதமாக நிறைவேற்றினார். அவன் தங்கை நாற்காலியை நகர்த்தி வைத்து நடனத்தையே கண் கொட்டாமல் பார்க்கத் தொடங்கினாள்.

திடீரென்று அவன் முகத்தில் புன்னகை தோன்றியது. கையை உயர்த்தி அவளை அழைத்தான். ரூல் 16. அவள் விரைந்து சென்று பணிவுடன் ஒரு குளவியின் இடைபோன்ற தன் இடையை கண் மதிக்கமுடியாத அளவுக்கு வளைத்து எஸ் என்றாள். அந்த வார்த்தை பேசுவதற்கு அவளுக்கு அனுமதி இருந்தது.

அவன் 'கொஃபி, டீ காஃப், டூ சுகர்' என்றான். அவன் அந்த வார்த்தைகளை சொன்னது, அவளுடைய பெயரை யாரோ கனிவுடன் உச்சரித்ததுபோல இனிமையாக இருந்தது. 'கொஃபி, டீகாஃப், டூ சுகர்' அவன் நாக்கில் தொடாமல் அந்த வார்த்தைகள் உருண்டு வந்து விழுந்தன.

அன்று விருந்து முடிவதற்கிடையில் அவன் மூன்றுதரம் கொஃபி ஓடர் பண்ணிவிட்டான். அவளுடைய கடமை அவன் கேட்டதை பரிமாறுவது. ரூல் 22. அவன் இன்னும் 20 தடவை கேட்டாலும் அவள் பரிமாறத் தயாராக இருந்தாள்.

விருந்தினர்கள் ஒவ்வொருவராக புறப்பட்டுப் போயினர். இவர்களும் விரைவில் போய்விடுவார்கள். அவனுடைய தாயார் கைப்பையை திறந்து ஏதோ சரிசெய்தபடி அதை தோள்மூட்டிலே மாட்டி தயாரானாள். இவன் தன் நாப்கினை எடுத்து நாலாக மடித்து தன் பிளேட்டின் மேல் அவளைப் பார்த்தபடியே வைத்தான். பிறகு கண்களால் சைகை காட்டினான்.

இவள் ஒரு விதியையும் மீறவில்லை. நிதானமாக எல்லா கோப்பைகளையும் ஒவ்வொன்றாக அகற்றினாள். அவன் முறை வந்தது. அவன் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவனுடைய பிளேட்டை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள். நாப்கினை அகற்றியபோது கீழே ஐந்து டொலர் நோட்டு இருந்தது. பேனையால் நாப்கினில் ஒரு டெலிபோன் நம்பர் வேறு எழுதியிருந்தது. அவள் அந்த நம்பரை தன் உள்ளங்கையில் உடனேயே எழுதி வைத்தாள். அன்று இரண்டாம் முறையாக அவளுடைய உள்ளங்கை அவளுக்கு பயன்பட்டது.

அறைச் சிநேகைதியை காணவில்லை. கையை திருப்பி நம்பரைப் பார்த்தாள். அது இன்னும் அழியவில்லை. உரத்து அந்த இலக்கத்தை சொன்னாள். அந்த இலக்கம்கூட இனிமையாக ஒலித்தது. அவள் மனம் என்றும் இல்லாதவிதமாக அந்தரத்தில் உலாவியது. சிவப்பு முடிக்காரன் இப்பொழுது என்ன செய்வான். அவளை நினைப்பானா? அறை அமைதியாக இருந்தது. ஒருமுறை அவனை அழைத்தால் என்னவென்று தோன்றியது. அந்த நடுநிசியில் யாரும் பேச மாட்டார்கள் என்றே நினைத்தாள். ஆகவே ஒவ்வொரு தானமாக மெதுவாக டயல் பண்ணினாள்.

மறுமுனையில் இருந்து ஒரு குரல் உடனேயே ஒலித்தபோது இவளுக்கு புரிந்துவிட்டது அவன்தான் என்று. 'கொஃபி, டீ காஃப், டூ சுகர்' என்று உச்சரித்த அதே உருண்டையான குரல். ஆனால் அவளுடைய கைகள் நடுங்கின, வாய் நடுங்கியது. தொடைகள் நடுங்கின. உடனே அவள் டெலிபோனை திருப்பி வைத்துவிட்டாள். ஆனால் சரியாக ஒரு நிமிடத்தில் தொலைபேசி திரும்பவும் ஒலித்தது. கடைசியாக வந்த நம்பர் பட்டனை அவன் அமுக்கியிருக்கிறான். அவள் தொலைபேசியை எடுக்கவில்லை. சுருண்டுபோய் இருக்கும் ஒரு பாம்பை பார்ப்பதுபோல எட்டத்தில் நின்று அதைப் பார்த்தாள். அது அடித்துக்கொண்டே போனது. இறுதியில் அவனிடம் இருந்து வந்த ஒரு தகவலை டெலிபோன் சேமித்து வைத்துக்கொண்டது.

அவள் அந்த தகவலை ஓடவிட்டுக் கேட்டபோது பாதிதான் புரிந்தது. அவன் குரலில் தகவலை சரியான இடத்தில் விடுகிறோமோ என்ற தயக்கம் தெரிந்தது. யார் அழைத்தது என்ற ஊகமும் இருந்தது. அவளை திருப்பி அழைக்கும்படி மன்றாட்டமாகக் கேட்டிருந்தான்.

அவள் அவனை அழைக்கவில்லை. ஆனால் வேண்டியபோது அவனுடைய குரலை ஓடவிட்டுக் கேட்டாள். தினம் ஒரு சடங்குபோல அதைச் செய்து வந்தாள். அது எப்படியோ அவளுடைய அறைவாசிக்கு தெரிந்துவிட்டது. அவளுக்கு எரிச்சலைக்கூட உண்டாக்கியிருக்கலாம். ஒரு நாள் அவள் இல்லாத நேரம் பார்த்து அந்த அற்புதமான குரலை அறைவாசி அழித்துவிட்டாள். அகதிப் பெண் அன்று துடியாய் துடித்துப் போனாள்.

அவர்கள் வசித்த அறை ஒரு கூரை, ஒரு கதவு, ஒரு யன்னல் கொண்டது. அவளுடைய கட்டிலுக்கு பக்கத்தில் அவள் சிநேகிதியின் கட்டில் இருந்தது. கையை நீட்டினால் சிநேகிதி முகத்தில் அது இடிக்கும். ஆகவே அகதிப் பெண் சுவருடன் முட்டிக்கொண்டு படுப்பாள். இன்னும் பல இன்னல்கள் இருந்தன. தகரக் குழாய் குரல்காரன் அவளைப் பார்க்கும் விதம் அவளுக்கு பிடிக்கவில்லை. அவள் சிநேகிதி இல்லாத சமயங்களில் டெலிபோனில் கூப்பிட்டு சிநேகிதியைப் பற்றி விசாரிப்பான். அவள் இல்லையென்ற பிறகு தொலைபேசியை கீழே வைக்கவேண்டியதுதானே. அவன் செய்வதில்லை, ஒரு சம்பாசணையை உண்டாக்கப் பார்ப்பான்.

தோள்மூட்டுக்கு மேல் சூரியன் உயர எழும்பாத ஒரு பனிக்காலத்து பகல் வேளை. அவளுடைய அறைத் தோழியும், காதலனும் அவளுக்கு ஒரு விருந்து கொடுத்தார்கள். அவள் எப்படி மறுத்தும் அவர்கள் கேட்கவில்லை. அவளை அன்றுடன் ஒரு வழி பார்த்துவிடவேண்டும் என்பதுபோல வருந்தி அழைத்தார்கள். சரி என்று அவளும் போனாள். அவளை இம்சிப்பதுதான் அந்த விருந்தின் முழு நோக்கமும் என்பது பின்னாலேதான் அவளுக்கு தெரிந்தது. மதிப்புக்காக கறுப்புக்கண்ணாடிகளை தங்கள் தங்கள் தலைகளில் குத்தி வைத்துக்கொண்டு காதலர்கள் இருவரும் அடிக்கடி கண் ஜாடையில் பேசினார்கள். திடீரென்று பெருங்குரலில் சிரித்தார்கள். அவளுக்கு புரியவில்லை. சிரிப்புக்கு காரணம் பல சமயங்களில் அவள்தானோ என்றும் தோன்றியது.

அவளுக்கு அது பிடிக்கவில்லை. தினம் ஒரு விருந்து என்று வெட்டி முறிகிறாள். அவளுக்கே ஒரு விருந்தா? ஆவு ஆவென்று அலுவலக மண்டபத்துக்கு அன்று வந்து சேர்ந்தபோது இன்னும் சில நிமிடங்களே இருந்தன. வழக்கத்தில் வேலை தொடங்க ஐந்து நிமிடம் முன்பாகவே வந்து சீருடை அணிந்து தயாராகிவிடுவாள். ரூல் 16. எந்த மண்டபத்துக்கு வேண்டுமானாலும் அவளை அவர்கள் அனுப்புவார்கள். ரூல் 18. அவளைப்போல பரிசாரகி வேலைகேட்டு வந்த சிலர் அங்கே காத்திருந்தார்கள். யாரையோ பழிவாங்கத் துடிப்பதுபோல அன்று பத்து மணி நேரம் தொடர்ந்து வேலை செய்தாள். ஒரு நிமிடம்கூட உட்காரவில்லை. கால்கள் கெஞ்சின. கைகள் பாரமான தட்டங்களை தூக்கியபடி அலைந்து சோர்ந்தன. அது அவளுக்கு பழக்கமாகிப் போயிருந்தது.

நடுநிசி தாண்டியும் விருந்து முடிந்தபாடில்லை. அப்படியான வேளைகளில் மேலாளருக்கு கருணை பிரவாகம் எடுக்கும். ஐந்து நிமிடம் ஓய்வு தருவார். சாப்பாட்டுக் கூடத்துக்கும், விருந்து மண்டபத்துக்கும் இடையில் ஒரு சின்ன ஒடுக்கமான அறை. அங்கே சுழட்டி டயல் பண்ணும் கறுப்பு டெலிபோன் ஒன்று இருந்தது. அதைக் கடந்து போகும் போதெல்லாம் அவள் மனம் அலைபாய்ந்தது; திக்திக்கென்று அடித்தது. என்றும் இல்லாதவாறு அன்று அவளுக்கு அவன் நினவு வந்துகொண்டே இருந்தது.

பல வாரங்களுக்கு முன் முதல் தடவையாக அவனை அழைத்த பிறகு மேலும் மூன்று முறை அழைத்திருக்கிறாள். அப்பொழுதெல்லாம் ஒரு முரட்டு ஆண்குரல் பேசியது. அவனுடைய தகப்பனாக இருக்கலாம். அவள் உடனே தொலைபேசியை வைத்துவிடுவாள். அன்று என்னவோ அவன் குரலை ஒரு முறையாவது கேட்கவேண்டும் என்று பட்டது. கையிலே இருந்த தட்டத்தை கீழே வைத்துவிட்டு டெலிபோனை சுழட்டி டயல் பண்ணினாள். விரல்கள் நடுங்கின. நெஞ்சு, இன்னும் சில கணங்களில் நின்றுவிடப்போகும் ஒரு குருவியின் இருதயம்போல, படபடவென்று அடித்தது.

அதிசயமாக அவன் குரல் கேட்டது. அவன்தான். அவளுக்கு சந்தேகமே இல்லை. உடனேயே உலகம் வரண்டுவிட்டது. வாயிலே சத்தம் வருவது நின்றுவிட்டது. அவன் ஹலோ ஹலோ என்று விடாமல் ஒலித்தான். என்ன பேசுவது? என்ன பேசுவது? எந்த வார்த்தையை சொல்வது, என்ன சுருதியில் ஆரம்பிப்பது, ஒன்றையுமே அவள் சிந்திக்கவில்லை. அவனுடைய குரலைக் கேட்டாலே போதும் என்று நினைத்திருந்தாள். அவன் மீண்டும் ஹலோ என்றான்.

'மொஸரல்லா சாலட்'

'லெட்டூஸ்'

'ப்ரூஸெட்'

'சுப்படீ வங்கோல'

'லாசன்யா'

அவளிடம் வினைச் சொற்கள் இல்லை. சில வாரங்களுக்கு முன்பு அவன் சாப்பிட்ட அத்தனை உணவு வகைகளையும் ஒப்பித்தாள். மறுபக்கத்தில் இருந்து சிரிப்புக்கு நடுவில் ஒரு சத்தம் கேட்டது. அத்துடன் பரிசாரகி டெலிபோனை துண்டித்து விட்டாள்.

இது நடந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. அவள் படுக்கையில் கால்களை நீட்டி, ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு, சிவப்பு முடிக்காரனின் முகத்தை ஞாபகத்துக்கு கொண்டுவர முயன்றாள். திடீரென்று அவளுடைய சிநேகிதி கதவைத் திறந்து பிரவேசித்தாள். அவள் கதவை அடித்துச் சாத்தும் சத்தத்திலும் பார்க்க திறக்கும் சத்தம் கூடுதலாக இருக்கும். இதை எப்படிச் சாதிக்கிறாள் என்பது தெரியவில்லை. நின்ற கோலத்தில் கால்களை உதறி சப்பாத்துகளை கழற்றினாள். கைப்பையை வீசி எறிந்தாள். அவள் உதடுகள் மேலும் கீழும் இமைகள் துடிப்பதுபோல அடித்தன, ஆனால் சத்தம் வரவில்லை.

அகதிப் பெண் வாயே திறக்கவில்லை. அப்போதுதான் விழித்ததுபோல மறுபக்கம் சுழன்று கழுத்தை இரண்டு பக்கமும் திருப்பி பார்த்தாள். மிக மட்டமான அறை; மட்டமான சிநேகிதி; மட்டமான போர்வை; மட்டமான மணம். எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரு சுவரைக் காணக்கூடிய அந்த அறையில் அவள் கண்களை மூடிக்கொண்டு மீண்டும் அவனுடைய முகத்தை நினைவில் மீட்டாள். அவனுடைய சொண்டுகள் உருண்டு வார்த்தைகள் வழுக்கி விழுந்ததை எண்ணிப் பார்த்தாள்.

'கொஃபி, டீகாஃப், டூ சுகர்'

'கொஃபி, டீகாஃப், டூ சுகர்'

அப்படியே அவள் தூங்கிப்போனாள்.

டெலிபோன் சம்பாசணை வெட்டுப்பட்ட பிறகு அவன் சும்மா இருக்கவில்லை. விருந்தில் அவன் சாப்பிட்ட அத்தனை உணவு அயிட்டங்களையும் சொன்னது பரிசாரகி என்பதை ஊகிக்க அவனுக்கு சில நிமிடங்களே எடுத்தன. ஆனால் அவள் வேலை செய்யும் கம்பனியை கண்டு பிடிக்க கொஞ்ச அவகாசம் தேவைப்பட்டது. அந்தக் கம்பனி, தன் ஊழியர்களை எந்த விருந்து மண்டபத்துக்கு, எப்போது அனுப்புகிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டி இருந்தது. ஆனாலும் அவன் முயற்சியைக் குறைக்கவில்லை. அடுக்கடுக்காக பல விருந்து மண்டபங்களுக்கு போய் அவளைத் தேடினான். அது ஒன்றும் அகதிப் பெண்ணுக்கு தெரியாது.

படிக்கட்டுகள் முடிவுக்கு வந்த உச்சிப் படியில் அவன் நின்றான். அகதிப் பெண் கீழே நின்றாள். அவன் இவளைப் பார்க்குமுன் இவள் அவனைப் பார்த்தாள். அவனும் இப்போது பார்த்துவிட்டான். அவனுடைய பார்வையில் போலந்திலிருந்து அவன் கொண்டுவந்திருந்த அத்தனை வார்த்தைகளும் இருந்தன. அவளுடைய பார்வையில் பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள், இன்னும் இலக்கணத்தில் சொல்லப்பட்ட அத்தனை வகையான சொற்களும் இருந்தன. அவனுக்கு அவை எல்லாம் தேவைப்பட்டன.

அவள் தன் கையிலே வைத்திருந்த தட்டத்தை பச்சை, மஞ்சள், வெள்ளை மார்போடு சேர்த்துப் பிடித்துக் கொண்டாள். சீருடையில் அவள் தேவதைபோல காட்சியளித்தாள். இரண்டு இரண்டு படியாக அவன் பாய்ந்து நெருங்கியபோது அவர்களுக்கிடையில் அந்த தட்டம் இடைஞ்சலாக இருந்ததைக் கண்டான். அவள் அதை இறுக்கிப் பிடித்திருந்தாள். அவன் கீழே பார்த்தான். அவள் இரண்டு கைகளாலும் காவிய தட்டத்தில் இன்னும் சில நிமிடங்களில் யாரோ சாப்பிட்டு முடிக்கப் போகும் உணவு வகை இருந்தது.

அவள் விதி 27 ஐயும், 32 ஐயும், 13 ஐயும் ஒரே சமயத்தில் முறித்தாள்.

********

நன்றி: அ.முத்துலிங்கம் தளம்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

5 கருத்துகள்:

srinivasansubramanian on May 23, 2013 at 12:14 AM said...

mika nanRu .

நிலாமகள் on May 23, 2013 at 8:20 PM said...

நாளுக்கு ஒரு தடவை திரைச் சீலைகளையும், இரண்டு தடவை படுக்கை விரிப்புகளையும், எட்டு தடவை பல்புகளையும் //

வர்ணிப்பின் அழகு!

விதி 27 ஐயும், 32 ஐயும், 13 ஐயும்//

சொல்லாமலேயே நமக்கு புரியச் செய்யும் எழுத்தின் வீர்யம்!

நிலாமகள் on May 23, 2013 at 8:24 PM said...

பரிசாரகி... இன்று மாலையில், மூன்றாம் வகுப்பு படிக்கும் தெரிந்தவர் வீட்டுப் பெண் குழந்தை ஒன்றாம் வகுப்பு படிக்கும் தன் சிநேகிதனை 'வாயாடன்' என்றபோது அடைந்த வியப்பு மிகுந்தது. தஸ்தாவேச்கியின் நாவலை 'அசடன்' ஆக்கிய ஏ.எம்.சுசீலா மனதில் நிழலாடினார்கள்.

Anonymous said...

மிகவும் அருமை கனேடிய வாசம் வீசும் சிறுகதை.

R.GIRI NARAYANAN on October 10, 2015 at 4:08 PM said...

POWER OF LOVE. MAY LOVERS LIVE HAPPILY

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்