Dec 11, 2013

பாடலிபுத்திரம் - ஜெயமோகன்

 1

கி.மு. 493இல் சிரேணிக வம்சத்தைச் சார்ந்தவனாகிய அஜாத சத்ரு தன் தந்தையும் மகத மன்னனுமாகிய பிம்பிசாரனை கைது செய்து சிறையிலிட்டான். பிம்பிசாரன் அந்தப்புரத்தில், நாயகியரில் ஒருத்தியைக் கூடியபடி இருந்த நேரம், திட்டமிட்டிருந்தபடி அஜாதசத்ரு தன் வீரர்களுடன் நுழைந்தான்.  மஞ்சத்தில் நிர்வாணமாக இருந்த பிம்பிசாரணை அப்படியே தூக்கி கைகளைப் பின்னால் முறுக்கி அவன் உத்தரியத்தினாலேயே கட்டி வீரர்களிடம் ஒப்படைத்தான். போகத்தின் தாளத்தில் சுயமிழந்து விட்டிருந்த மன்னன்  காலடியோசைகளைக் கேட்கச் சற்று பிந்தி விட்டிருந்தான்.jey தூரத்தில் உடைகளுடன் கழட்டி வைக்கப்பட்டிருந்த உடைவாளை எடுக்க முடியவில்லை. அந்த நாயகி அங்கேயே வெட்டி சாய்க்கப் பட்டாள். பிம்பிசாரன் அந்தப்புறத்தில் நீண்ட புறச்சுற்றுப் பாதை வழியாக இட்டுச் செல்லப்பட்டான். அது கூதிர்காலம். கல்லாலான அரண்மனைச் சுவர்களும் தரையும் குளிர்ந்து விறைத்திருந்தன. உள்ளிழுத்த மூச்சுக் காற்று மார்புக்குள் உறைந்து பனிக்கட்டியாகி, மெல்ல உருகி, நரம்புகள் வழியாகப் பரவி, உடலெங்கும் நிறைவதை பிம்பிசாரன் உணர்ந்தான். பிடரியும், மார்பும் சிலிர்த்து உடல் குலுங்கிக் கொண்டிருந்தான். விரைப்படங்காத ஆண்குறி காற்றில் துழவித் தவித்தது. அந்தப்புரத்தின் படிகளில் இறங்கி சுரங்கப் பாதையின் வாசலை அடைந்ததும் பிம்பிசாரன் திரும்பிப் பார்த்தான். ஒளி ஈரம்போல மின்னிய இலைகளை மெல்ல அசைத்தபடி நந்தவனத்து மரங்களும், சாம்பல் நிறத்தில் மெல்லிய ஒளியுடன் விரிந்திருந்த வானமும், அரண்மனைக் கோபுர முகடுகளின் ஆழ்ந்த மவுனமும் அவனை ஒரு கணம் பரவசப்படுத்தின. அம்மகிழ்ச்சியை வினோதமாக உணர்ந்து அவனே திடுக்கிட்டான். ஆழ்ந்த பெருமூச்சுடன் படியிறங்கினான்.

சுரங்கத்தின் உள்ளிருந்து சத்தமின்றி படியேறிப் பாய்ந்து வந்த குளிர்க்காற்று அவன் தோளை வளைத்து இறுக்கி மார்பில் தன் அங்கங்களைப் பொருத்திக் கொண்டது. பிம்பிசாரன் மனம் வழியாக எண்ணற்ற புணர்ச்சி ஞாபகங்கள் பாய்ந்து சென்றன. நடுங்க வைக்கும் குளிர் ததும்பும் அந்த அணைப்பு அவனை உத்வேகம் கொள்ளச் செய்தது. அஞ்சவும் வைத்தது. கொன்ற மிருகத்தின் உடலைக் கிழித்துப் புசிக்கும் புலியின் பாவனை அவனுக்கு புணர்ச்சியின் போது கூடுவதுண்டு. எதிர் உடல் ஒரு தடை, உடைக்க வேண்டியது. வெல்ல வேண்டியது. பின் சுய திருப்தியுடன் வாளை எடுத்தபடி வானைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும் அவனுக்கு. நீ பிம்பிசாரன் என அது விரிந்திருக்கும். நிலவின் அவன் அந்தப்புரம் வருவதில்லை. லதா மண்டபத்தில் முழுத்தனிமையில் இருப்பதை விரும்பினான். மகத மன்னர்கள் அனைவருமே முழுநிலவில் தனிமையை நாடுபவர்களாகவே இருந்திருக்கின்றனர். குளிர் காற்றின் வயிற்றுக்குள் நுழைந்த தன் உறுப்பில் வாழ்க்கையின் உச்சக்கட்டத் துடிப்பை உணர்ந்தான். ஆனால் மனம் அச்சம் தாங்காமல் பின்வாங்கும்படி கூறியது. அவன் இரத்தம் முழுக்க வடிந்து கொண்டிருந்தது. உதிரும் இலையின் எடையின்மை, பின்பு களைப்புடன் தடுமாறினான். அவன் நரம்புகள் புடைத்து நீலமாக மாறின. உடல் வெளுத்துப் பழுத்தது.

வாள் நுனிகளால் தள்ளப்பட்டு பிம்பிசாரன் சுரங்கத்திற்குள் நுழைந்தான். நரைத்த தாடி பறக்க, கட்டப்படாத தலைமயிர் பிடரியில் புரண்டு அலையடிக்க, தள்ளாடி நடந்தான். அவன் முன் அஜாத சத்ருவின் பாதங்கள் வலுவாக மண்ணை மிதித்து நகர்ந்தன. இருட்டு மணமாகவும், தொடு உணர்வாகவும், நிசப்தமாகவும் மாறி, மனதை நிறைத்தது. காவலர்கள் ஒலியாக மாறினார்கள். பின்பு கரைந்து மறைந்தார்கள். பிறகு எதுவும் ஊடுருவாத தனிமையில் பிம்பிசாரன் நடந்து கொண்டிருந்தான். பாதையெங்கும் கால்களை விறைக்கச் செய்யும் ஈரம் நிறைந்திருந்தது. இருளுக்கு கண் பழகியபோது சுரங்கச் சுவர்கள் கசிந்து கொண்டிருப்பதைக் கண்டான். அவை மெல்ல சுருங்கி விரிந்தபடி இருந்தன. அது ரத்தம். சிறிய நீரோடையாக மாறி அது அவன் கால்களைப் பற்றிக் கொண்டது. சுவர் வளைவுகளை மோதி கிளுகிளுத்தபடி விலகிச் சென்றது. எங்கோ வெகு ஆழத்தில் பேரொலியுடன் அருவியாக விழுந்து கொண்டிருந்தது.

தன் கால்களை இடறிய ஆட்டுக்குட்டிகளைப் பற்றி அப்போது பிம்பிசாரன் எண்ணினான். கனிந்த கண்களுடன், மார்போடு அணைத்த ஆட்டுக்குட்டியுடன் தன் யாகசாலைக்கு வந்த சாக்கிய முனியை கனவில் காண்பது போல் அவ்வளவு அருகே கண்டான். அவன் உடலின் மெல்லிய வெம்மையைக்கூட அக்கடும் குளிரில் உணர முடிந்தது. பவளம் போலச் சிவந்து யாகசாலை மையத்தில் இருந்த பலிபீடம். அதைச் சுற்றி தலை துண்டிக்கப்பட்ட வெள்ளாடுகளின் கால்கள் உதைத்து புழுதியில் எழுதிய புரியாத லிபிகளை இப்போது படிக்க முடிவதை அறிந்தான். புத்தர் புன்னகை புரிந்தார். அவன் அவரை நோக்கிப் பாய்ந்து செல்ல விரும்பினான். ஆனால் ஓட்டம் அவன் பாதங்களைக் கரைத்துவிட்டிருந்தது. உருகும் பனிப் பொம்மை போல மிதந்து சென்று கொண்டிருந்தான். புத்தரின் கரம் படு விழி சொக்கியிருந்த ஆட்டுக் குட்டியின் உடலின் வெண்மை மட்டும் ஒரு ஒளிப் புள்ளியாகக் கண்களுக்கு மிஞ்சியிருந்தது. பின்பு அதுவும் மறைய இருட்டு எஞ்சியது. பலி பீடத்திற்கென்று பிறவி கொண்டு இறுதிக் கணத்தில் மீட்கப்பட்ட ஆடுகள் நந்தவனம் முழுக்க செருக்கடித்துத் திரியும் ஒலி கேட்டது. குளம்புகள் பட்டு சருகுகள் நெரிந்தன. வாழ்வின் நோக்கத்தையே இழந்துவிட்ட அவை ரத்தம் கனக்கும் உடலை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தன. மண்டை ஓடுகள் உடையும்படி பரஸ்பரம் மோதிக்கொண்டன. வழியும் ரத்தத்திலே வெறி கொண்டு மேலும் மேலும் மோதின. மரண உறுமல்கள் எதிரொலித்து சுரங்கம் ரீங்காரித்தது. பிம்பிசாரன் இருட்டின் முடிவற்ற ஆழத்தை ஒவ்வொரு கணமும் உணர்ந்தான்.

2

அஜாத சத்ருவின் முடிசூட்டு விழாவிலும் வானவர் மலர் மாரி சொரிந்தனர். அவன் தன் தந்தையின் தேவியரைத் துரத்திவிட்டு அந்தப்புரத்தை தன் தேவியரால் நிரப்பினான். ஆனால் கூடலின்போது எப்போதும் கவசத்துடனும் வாளுடனும் இருந்தான். இரும்பின் குளுமை பெண்களை உறைய வைத்து விட்டிருந்தது. ஆழத்தில் அவள் உடல் சதைகளும், மிக அந்தரஙகமான தருணத்தில் அவள் சொல்லும் பொருளற்றா வார்த்தையும்கூட சில்லிட்டிருந்தன. பனிக்கட்டிப் பரப்பைப் பிளந்து, காட்டுப் பொய்கையில் நீராடி எழும் உணர்வே அஜாத சத்ரு எப்போதும் அடைந்தான். பின்பு அப்பெண்ணின் அடிவயிற்றில் காது பொருத்தி அச்சத்துடன் உற்றுக் கேட்பான். உடைவாளால் அவளைப் பிளந்து போட்ட பிறகுதான் மீள்வான். அவள் கண்கள்கூட மட்கிப்போய் வெட்டுபவனுக்கு அந்த ஆதி மகா உவகையைச் சற்றும் அளிக்காதவையாக ஆகிவிட்டிருக்கும். இரவெல்லாம் அல்லித் தடாகத்தில் தன் வாளைக் கழுவியபடி இருப்பான். அதன் ஆணிப் பொருத்துகளிலும், சித்திர வேலைகளிலும், உறைந்த ரத்தத்தைச் சுரண்டிக் கழுவுகையில் எப்போதாவது தலையைத் தூக்கினால் விரிந்த வானம் நீதானா என்று வினவும்.

தன் பாதத் தடங்களை இடைவாளால் கீறி அழித்துவிட வேண்டுமென்பதில் அஜாதசத்ரு எப்போதும் கவனமாக இருந்தான். ஒவ்வொரு முறையும் அவன் ஆண்மை நுழைந்து மீண்ட வழியில் அது நுழைந்து சென்றது. உதிரம் பட்டு அது ஒளி பெற ஆரம்பித்தது. அவன் இடையில் அது ஒரு மின்னல் துண்டாகக் கிடந்தது. அவன் உடலில் அது செவ்வொளி பிரதிபலித்தது. அவன் அரியணையை நெருப்பு போல சுடர வைத்தது. வாள் அவனை இட்டுச் சென்றது. பாயும் குதிரைக்கு வழிகாட்டியபடி காற்றை மெல்லக் கிழித்தபடி அது முன்னகரும்போது பயத்துடனும், ஆர்வத்துடனும் அதைத் தொடரும் வெரும் உடலாக அஜாத சத்ரு ஆனான். கோசலத்தில் பிரசேனஜித்தின் தலையை மண்ணில் உருட்டிய பின்பு வாள் உடலைச் சிலுப்பி ரத்த மணிகளை உதறியபோது முதன்முறையாக அஜாத சத்ரு அதைக் கண்டு அஞ்சினான். கூரிய ராவால் ரத்தத்தைச் சுழட்டி நக்கியபடி வாள் மெல்ல நெளிந்தது. அதிலிருந்து சொட்டும் துளிகள் வறண்ட மண்ணில் இதழ் விரிக்கும் அழகைக் கண்டு அஜாத சத்ரு கண்களை மூடிக் கொண்டான். லிச்சாவி வம்சத்துக் குழந்தைகளின் ரத்தம் தேங்கிய குட்டையில் தன் கையைவிட்டு குதித்து பாய்ந்து, வாளைமீன் போல மினுங்கியபடி, வால் துடிக்க, உடல் நெளித்துத் திளைக்கும் தன் வாளைப் பார்த்தபடி அஜாதசத்ரு நடுங்கினான். பின்பு திரும்பி ஓடினான். சாம்ராஜ்யப் படைப்புகளையும் வெற்றிக் கொடி பறக்கும் கொத்தளங்களையும் விட்டு விலகி காட்டுக்குள் நுழைந்தான். அங்கு தன்னை உணர்ந்த மறுகண தாங்க முடியாத பீதிக்கு ஆளானான். நினைவு தெரிந்த நாள் முதல் வெறும் கைகளுடன் வாழ்ந்து அறிந்ததில்லை. கைகளின் எல்லா செயல்பாட்டுக்கும் வாள் தேவைப்பட்டது. ஆபாசமான சதைத் தொங்கலாக தன் தோள்களின் மீது கனத்த கரங்களைப் பார்த்து அஜாத சத்ரு அழுதான். திரும்பி வந்து தன் வாள்முன் மண்டியிட்டான்.

சிரேணிய வம்சத்து அஜாத சத்ரு கோட்டைகளைக் கட்டினான். ராஜகிருக நகரை வளைத்து அவன் கட்டிய பாடலிகாமம் என்ற மாபெரும் மதில் அதற்குள் மவுனத்தை நிரப்பியது. பல்லாயிரம் தொண்டைகளோ முரசுகளோ கிழிக்க முடியாத மவுனம். அதன் நடுவே தன் அரண்மனை உப்பரிகையில் வாளுடன் அஜாதசத்ரு தனித்திருந்தான். நிறம் பழுத்து முதிர்ந்த வாள் அவன் மடிமீதிருந்து தவழ்ந்து தோளில் ஊர்ந்து ஏறியது. சோம்பலுடன் சறுக்கி முதுகை வளைத்தது. அந்த நிலவில் அஜாத சத்ரு எரிந்து கொண்டிருந்தான்.  இரும்புக் கவசத்தின் உள்ளே அவன் தசைகள் உருகிக் கொண்டிருந்தன. புரண்டு புரண்டு படுத்தபின் விடிகாலையில் தன்மீது பரவிய தூக்கத்தின் ஆழத்திலும் அந்நிலவொளியே நிரம்பியிருப்பதை அஜாத சத்ரு கண்டான். இதமான தென்றலில் அவன் உடலில் வெம்மை அவிந்தது. மனம் இனம்புரியாத உவகையிலும் எதிர்பார்ப்பிலும் தவிக்க அவன் ஒரு வாசல் முன் நின்றிருந்தான். நரைத்த தாடி வழியாகக் கண்ணீர் மவுனமாகக் கொட்டிக் கொண்டிருந்தது. கதவு ஓசையின்றித் திறந்தது. ஒளிரும் சிறுவாளுடன் அங்கே நின்றிருந்த பொன்னுடலை அஜாத சத்ரு பரவசத்தால் விம்மியபடி பார்த்தான். அது வாளல்ல தாழைப்பூ மடல் என்று கண்டான். தனனைக் கைது செய்து கூட்டிச் செல்லும் அப்பிஞ்சுப் பாதங்களை எக்களிப்புடன் பின்தொடர்ந்தான். மலர் உதிர்வது போன்று அப்பாதங்கள் அழுந்தி சென்ற  மண்மீது தன் கால்களை வைக்கும் போதெல்லாம் உடல் புல்லரிக்க நடுங்கினான். சிறு தொந்தி ததும்ப மெல்லிய தோள்கள் குழைய தள்ளாடும் நடை அவனை இட்டுச் சென்றது. நீரின் ஒளிப்பிரதிபலிப்பு அலையடிக்கும் சுவர்கள் கொண்ட குகைப் பாதையில் நடந்தான். சுவர்கள் நெகிழ்ந்து வழியும் ஈரம் உடலைத் தழுவிக் குளிர்வித்தது. எல்லா பாரங்களையும் இழந்து காற்றில் மலரிதழ்போல் சென்று கொண்டிருந்தான்.

பதறிய குரலில் ஏதோ புலம்பியபடி அஜாத சத்ரு விழித்துக் கொண்டான். அந்தப்புரத்து அறைகள் வழியாக ஓடினான். தன் மகனைத் தனக்குக் காட்டும்படி கெஞ்சினான். பெண் முகங்கள் எல்லாம் சதைப் பதுமைகளாக மாறின. சுவர்கள் உறைந்திருந்தன. அம்மவுனத்தைத் தாங்க முடியாமல் என் மகன் என் மகன் என்று அழுதான். கற்சுவர் நெகிழ்ந்த வழியினூடே வந்த முதிய தாதி அஞ்சிய முகத்துடன் தன் மகனை அவனிடம் காட்டினாள். போதையின் கணமொன்றில் தவறிவிட்டிருந்த வள் விழித்துக்கொண்டு சுருண்டு எழுந்து தலைதூக்கியது. அவன் அதைத் தன் வலக்கையால் பற்றினான். அவன் கையைச் சுற்றி இறுக்கித் துடித்தது. அழுக்குத் துணிச் சுருளின் உள்ளெ சிறு பாதங்கள் கட்டைவிரல் நெளிய உதைத்தன. அஜாத சத்ரு குனிந்த அந்த முகத்தைப் பார்த்தான். உதயபத்தன் சிரித்தான். என்றோ மறந்த இனிய கனவு ஒன்று மீண்டது போல அஜாதசத்ரு மனமுருகினான். உதயபத்தன் மீது கண்ணீர்த் துளிகள் உதிர்ந்தன. வள் அஜாதசத்ருவை முறுக்கியது. அதன் எடை அவன் கால்களை மடங்க வைத்தது. அவன் தசைகளும் நரம்புகளும் தெறித்தன. அவன் அதை உருவி தன் மகனின் முஷ்டி சுருண்ட சிறு கைகளில் வைத்தான். காந்தள் மலர் போல அது அங்கிருந்தது. அதன் கீழ் தன் தலையைக் காட்டியபடி அஜாதசத்ரு மண்டியிட்டான். அன்றிரவுதான் அவன் மீண்டும் முழுமையான தூக்கத்தை அடைந்தான்.

3

ராஜக்ருக மாநகரம் வெள்ளத்தால் அழிந்தது. மண்ணின் ஆழத்திலிருந்து பெருகிய ஊற்றுக்களே அதைத் தரைமட்டமாக்கின. உதயபத்தன் பின்பு கங்கை நதிக்கரை சதுப்பில் தன் தந்தையின் உடலைப் புதைத்த இடத்தில் இன்னொரு பெரும் நகரத்தை எழுப்பினான். சதுப்பின் மீது மரக்கட்டைகளை அடுக்கி அதன்மீது கோபுரங்களும் கோட்டைகளும் எழுப்பப்பட்டன. மிதக்கும் நகரத்தின் கீழே பூமியின் ஆறாத ரணங்களின் ஊற்றுக்கள் எப்போதும் பொங்கியபடிதான் இருந்தன. அந்த நகரம் ஒருபோதும் இருந்த இடத்தில் நிலைத்திருக்கவில்லை. எவர் கண்ணுக்கும் படாமல் அது நகர்ந்தபடியே இருந்தது; நூற்றாண்டுகள் கழித்து கங்கையை அடைந்து சிதறும்வரை. பாடலிபுத்திரம் பூமி மீது மனிதன் எழுப்பிய முதல் பெருநகர் அது.

-----------

(காலச்சுவடு)

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

இரா.மீ.தீத்தாரப்பன் (R.M. THEETHARAPPAN) in short (RMT) on July 30, 2015 at 8:44 PM said...

Good notorious fiction excellent writing style

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்