Dec 4, 2013

என்னைத் தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன் – எம்.வி.வி.

‘காதுகள்’ நாவலுக்கு – 1993ஆம் ஆண்டு – சாகித்ய அகாதெமி விருது பெற்றபோது எம்.வி. வெங்கட்ராம் நிகழ்த்திய ஏற்புரை. நன்றி : அகரம் பதிப்பகம்.

எந்த உடல் நலனும் குணநலனும் உள்ள கணவனும் மனைவியும் மானத்தைக் காத்துக்கொள்வதற்காக, எதிரிகளோடு போரிட்டு மடிவதை, ‘ஒரு பெண் போராடுகிறாள்’ என்னும் நாவலில்  சித்தரிக்கிறேன். பெண் விடுதலை பற்றி மட்டும் அல்ல, எனக்குத் தென்படுகிற வாழ்க்கைப் பிரச்சினைகள் பலவற்றையும் சுட்டிக் காட்டும் பல சிறுகதைகள், நாவல்கள், பல குறுநாவல்கள், ஓரங்க நாடகங்கள் எழுதியிருmvvengatramக்கிறேன்.

பதினாறு வயதில் எழுதத் துவங்கிய நான் இலக்கியப் படைப்பு மட்டும் அல்லாமல் மொ ழி பெயர்ப்புகள், வாழ்க்கை வரலாறுகள், பொது அறிவு நூல்கள் என சுமார் 200 தமிழ் நூல்கள் படைத்திருக்கிறேன். இன்றைய மனித வாழ்க்கை ஒரு போராட்டமாகக் காட்சி தருகிறது. போராட்டங்களுக்கு இடையில் புதைந்து கிடக்கும் அமைதியைத் தேடுவதாகிறது என் இலக்கியப் படைப்பு.

அகாதெமி விருது பெறும் ‘காதுகள்’ என்கிற என் நாவல் என் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சிறிய பகுதி. என் வாழ்க்கை உங்கள் வாழ்க்கை போன்றது அல்ல என்பதே இதன் தனித்தன்மை. பகுத்தறிவையும் அறிவியலையும் நம்புகிறவர்களுக்கு அது திகைப்பு தருகிறது. அதற்கு நான் என்ன செய்ய?

இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கம், ஓர் எழுத்தாளன். செல்வத்தோடும் செல்வாக்கோடும் வாழ்ந்தான். அவனுக்கு 36, 37 வயதாகும்போது திடீரென்று உள்ளிருந்தும், வெட்ட வெளியிலிருந்தும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின; ஆபாசமாகவும், பயங்கரமாகவும் 24 மணி நேரமும் கத்திக்கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து கற்பனை கூடச் செய்யமுடியாத கோரமான உருவங்களும் அவனைச் சூழ்ந்திருந்தன.

மகாலிங்கம் நிலை குலைந்தான். ஆனால், அவனுடைய புத்தியோ ‘நான்’ என்னும் உணர்வோ சிறிதும் பிசகவில்லை. தன்னுள்ளும் தன்னைச் சுற்றிலும் நிகழ்வதை ஒரு சாட்சியாக இருந்து கவனித்து வந்தான். அவன் ஒரு எளிய பக்தன்; திருமுருகன் என்னும் தெய்வத்தையே குருவாக வரித்துக்கொண்டவன். அருவருப்பு தரும் உருவங்கள் ஆபாசமான சொற்களை உமிழ்வதைச் சகிக்க முடியாமல் அவ்வப்போது தன் இஷ்ட தேவதையின் உருவப்படத்தின் முன்னிலையில் சென்று முறையிடுவதைத் தவிர அவனுக்கு வேறு வழி இல்லை.

தாமச சக்தி தன்னைக் காளி என்று கூறிக்கொண்டது.  மகாலிங்கம் முருகனை வழிபடக்கூடாது என்றும் தன்னைத்தான் வழிபடவேண்டும் என்பது தாமசத்தின் மையக்கருத்து. இந்தக் கருத்தை மகாலிங்கம் ஏற்கவேண்டும் என்பதற்காகவே பல பயங்கரமான அருவருப்பு தருகிற பிரமைக் காட்சிகளை (Hallucination) அலை அலையாகத் தோற்றுவித்தபடி இருந்தது.

இந்த அனுபவம் தொடங்கியதைத் தொடர்ந்து அவனுடைய செல்வமும் செல்வாக்கும் mvv-bookசரிந்தன; வறுமையும் அவன் கால்களைக் கவ்விக்கொண்டது. சுமார் 20 ஆண்டுகள் இந்த அதிசுந்தரமான, அதிபயங்கரமான அனுபவம் நீடித்தது. அமானுஷியமான தமஸ்ஸ¤ம், அதிமானுஷ்யமான சத்துவமும் தன்னுடைய அகத்திலும் புறத்திலும் நடத்தும் போராட்டத்தை உதாசீனம் செய்துகொண்டு அவன் சில நாவல்களும், குறுநாவல்களும், பல சிறுகதைகளும் எழுதினான். ஏராளமான மொழிபெயர்ப்புகள், ஐம்பதுக்கும் அதிகமான வாழ்க்கை வரலாறுகள், பல பொதுஅறிவு நூல்களையும் எழுதிக் குவித்தான்.

தாமச சக்தியின் தாக்குதலில் ஆரம்பித்த ‘காதுகள்’ என்னும் நாவல் அதை வென்று ஒழிக்கவல்ல சத்துவ சக்தியின் தோற்றத்தோடு முடிவு பெறுகிறது. தேடல் தொடருகிறது.

ஆம். தேடல் தொடருகிறது. திரும்பிப் பார்த்தால் ஒரே ஆச்சரியமாக இருக்கிறது. யாரும் இல்லாத இடத்தில் இல்லாத ஒன்றைத் தேடி அலைந்தேனோ என்று சில சமயம் சந்தேகம் தோன்றுகிறது. இந்த என் வாழ்க்கையின் ரகசியம் (Sovereign Mystery)தான் என்ன?

இந்த என் வாழ்க்கை விளங்க மறுக்கும் ஒரு புதிராகவே (Phenomenon) தோன்றுகிறது. இதனை எனக்குத் தெளிவுபடுத்தும் தத்துவம் (Noumenon)தான் என்ன?

நான் என் ஆசானின் சொல்லுக்காகக் காத்திருக்கிறேன்.

***

தட்டச்சு : ஆபிதீன்,  பிரதி உதவி : சென்ஷி

***

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

Anonymous said...

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானது, அத் தனித்துவங்களை பல சமயங்களின் வாழ்வின் துன்பியல்களும், பிணிகளும், விரக்திகளுமே தீர்மானிக்கின்றன. அசரீரிகளும் சப்தங்களும் சிலருக்குக் கேட்கத் தொடங்குவது ஆழ் மனத்தின் கதறல்களின் வெளிப்பாடே, மனப்பிறழ்வுகள் ஏற்படும் பலருக்கும் இத்தகைய அசாத்திய உணர்வுகள் ஏற்படுவதுண்டு, அத்தகையோர் சமயங்களில் சிறந்த படைப்பாளிகளாகவும் மாறிவிடுவதும் உண்டு. அந்த வகையில் ஐயாவின் இந்த படைப்பும் இடம்பெற்றுள்ளது போலும், நிச்சயம் அனைவரும் வாசித்து உணர வேண்டிய இலக்கியமாகவே எனக்குப் படுகின்றது. அறிமுகம் செய்து எம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் தோழரே!

--- விவரணம்.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்