Mar 15, 2017

மௌனியும் எம். வி.வி.யும் - எம்.வி வெங்கட்ராம்

என் இலக்கிய நண்பர்கள் (எம்.வி வெங்கட்ராம்) - நூலிலிருந்து


விளக்கேற்றி வெகுநேரமாயிற்று. மணி ஏழரை எட்டுக்குள் இருக்கும். வீட்டில் மின்சாரம் வராத காலம்; அகல் விளக்குகள், பவர்லைட், அரிக்கேன் லைட், சிம்னி விளக்குகளை ஏற்றி வெளிச்சத்தை வரவேற்போம்: ஆயினும் வெளிச்சம் வீட்டின் சில பகுதிகளுக்குப் போதாது.

வீட்டின் நடுப்பகுதியில் தரையில் உட்கார்ந்தபடி ஏதோ படித்துக் கொண்டு இருந்தேன். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் நான் இரண்டாம் ஆண்டு மாணவன். எங்கள் காலத்தில், எஸ். எஸ். எல். சி.யில் தேறியதும் பட்டப்படிப்புக்கு நாலு ஆண்டுகள் ஆகும். இரண்டு ஆண்டுகள் .... (Intermediate) , பட்டப்படிப்பு இரண்டு ஆண்டுகள். கல்லூரியில் சேர்ந்த ஆண்டிலேயே என் சிறுகதைகள் மணிக்கொடியில் வெளி வரத் தொடங்கின. அதனால், கல்லூரி
பாடப்புத்தகங் களைவிட அதிகமாய் அப்போதைய பத்திரிகைகள், ஆங்கிலச் சிறுகதைகள், நாவல்களைப் படிப்பது என் வழக்கம், 1937ஆம் வருடத்தில் நடந்ததைக் கூறுகிறேன்.

எங்கள் தெரு நண்பன் ஒருவன் என் படிப்பில் குறுக்கிட்டான். டேய் வெங்கட்ராம், உன்னைப் பார்க்க என் கணித ஆசிரியர் வருகிறார்...'
கணித ஆசிரியர் என்னை எதற்குப் பார்க்கவேண்டும்?' என்றபடி நான் தலை நிமிர்ந்தபோது, நண்ப னுக்குப் பின்னால் ஒர் இளைஞர் வருவதைக் கண் ேடன்

அவசரமாக எழுந்து, வாருங்கள் சார்!’ என்று கைகுவித்தேன்.
நீதானே வெங்கட்ராம்? நான் எதிர்பார்த்ததைவிட சின்ன பையனாக இருக்கிறாயே! என்னைத் தெரிய வில்லையா? நான் மெளனி...... o
அவ்வளவுதான்; அந்தப் பெயர் காதில் விழுந்ததும் என் கைகால்கள் நடுங்கத் தொடங்கின. -

உட்காருங்கள் சார்!’ என்று சொல்லவே குரல் தடுமாறியது. எங்கள் வீட்டில் நாற்காலி-மேஜை என்கிற ஆடம்பரம் கிடையாது. பட்டுசேலை வியாபாரம் என் தந்தையாருக்கு; தரையில் நீளமான கடைய பாய் விரித்திருக்கும்; யார் வந்தாலும் அதன்மேல்தான் அம்ர வேண்டும். மெளனி உட்கார்ந்ததும் என் நண்ப்ன் அவரிடம் விடைபெற்றுப் போய் விட்டான். அவருக்கு முன்னால் உட்காரத் தயங்கிய என்னை அவர் வற்புறுத்தி உட்கார வைத்தார்.
சமீபத்தில்தான் வயது கணக்குப் பார்த்தேன். அப்போது எனக்குப் பதினேழு வயது; அவருக்கு முப்பது. பதின்மூன்று வருட இடைவெளி எங்களுக்குள் எவ்வளவு பெரிய வேற்றுமையைக் கற்பித்து விட்டது! ஒல்லியாக, சிவப்பாய் பையன் எண்ணும்படியாகவே என் உடல் வளர்ச்சி இருந்தது; அதற்கு ஒரு கம்பீரம் கொடுப்பதற்காக நேவிகட்' என்று அந்தக் காலத்தில் பிரபலமான துளிர் மீசை வைத்திருந்தேன். என் தோற்றம் பற்றி நான் மிகுந்த அக்கறை காட்டுகிறவன்; கிராப்பை விதவிதமாக வாரிக் கொள்வேன். அல்லது யாராவது வாரி விடுவார்கள். பெரும்பாலும் அரைக்கை சட்டையே அணிவேன்; ரோல்டு கோல்டு பொத்தான்கள் தான் போடுவேன். சட்டையின் ஒரு காலரில் ரோல்டு கோல்டு பின் ஒன்று வழியும். என்னுடைய இந்த

கவனம் எல்லாம் என்னை ஒரு மாணவனாகக் காட்டிக் கொடுத்தது.
அவருடைய தோற்றம் எனக்கு நேர்மாறு. அதுபற்றி அவர் கவனம் கொண்டவராய்த் தோன்றவில்லை. அவரும் ஒல்லி-கறுத்த கிராப், இடது பக்கம் வகிடு எடுத்து சீவப் பெற்றாலும், அவர் தன் கையாலேயே ஒதுக்கி விட்டாற்போல் இருந்தது. நீண்ட மூக்கும், கரிய கண்களும், சதையில் செதுக்குண்ட கிரேக்கச் சிலை போல. வெள்ளை அரைக்கைச் சட்டை, அதற்குமேல் கதர் துண்டு போர்த்திருந்தார். அவருடைய உருவம் என் மனத்தில் பதிவு பெற, எங்கள் வீட்டில் போதுமான வெளிச்சம் இருந்தது. ..

மணிக்கொடியில் கதை எழுதியவர்கள் எல்லோரிடமும் எனக்கு ஆழ்ந்த பக்தி உண்டு, அரை நூற்றர்ண் டுக்கு முன்னால், பிச்சமூர்த்தியும், கு. ப. ரா.வும் எனக்கு மணிக்கொடியில் இடம் கண்டவர்கள். புதுமைப்பித்தன், மெளனி, ஆசிரியர் பி. எஸ். ராமையர், உதவி ஆசிரியர் இ. ராமச்சந்திரன், சிதம்பர சுப்பிரமணியன், சிட்டி ஆகியோரின் பெயர்களோடு என் பெயரும் சேர்ந்து வருவதை நான் பெரும்பேறாக மதித்தவன். மணிக்கொடி இதழ் ஒவ்வொன்றையும் பல தடவை படிப்பேன். இந்த இலக்கியப் படைப்பாளிகள் அனைவருமே வானத்திலிருந்து வந்த தேவப்பிறவிகளாக எனக்குத் தோன்றி னார்கள். இவர்களிலும் புதுமைப்பித்தன், மெளனி இருவரின் படைப்புகளைச் சிறப்பாகப் போற்றினேன்.

மெளனியின் முதல் கதை மணிக்கொடியில் வந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு என் முதல் கதை வந்தது. தொடர்ந்து அவருடைய சிறுகதைகளைப் போலவே என் கதைகளும் வெளிவந்தன. நானும் வாசகர்களின் கவனத்தைப் பெற்றிருந்தேன். முதல் கதைக்குப் பிறகு, ந. பி. யிடமோ, கு. ப. ரா. இடமோ நான் என் கதை,எதனையும் காட்டியதில்லை. என் சங்கோச குணம் காரணமாக, அவர்களை கண்டாலே ஒதுங்கி விடுவேன். மெளனியும் கும்பகோணத்துக்காரர் என்பதையும், அவரும் ந. பி.யும், கு. ப. ரா.வும் அடிக்கடி சந்தித்துப் பேசுவார்கள் என்பதையும் அவர்களுடைய நண்பரான என் ஹிந்தி ஆசிரியர் சொல்லியிருந்தார். ஆனால் நானாகச் சென்று அவர்களுடன் பேச, எனக்குத்’ தைரியம் இல்லை. இன்று மெளனியே என்னைத் தேடி வந்திருக்கிறார்; நான் அவருக்கு முன்னால் உட்கார்ந்திருக் கிறேன் என்பதே எனக்கு அதிசயமாக இருந்தது.

! நின்றய எழுதுகிறாயா? '....

இல்லை சார். படிப்பு நேரத்துக்குப் பிறகு...எழுதுவேன். என்று பொய் சொன்னேன். உங்கள் காதல் சாலையை இருபது முப்பது தடவை படித்தேன்.....உங்களுடைய ஸ்டுடன் ட் எப்படி சார்?' என்று என் தெரு நண்பனைப் பற்றிக் கேட்டேன்.

ஒன்றும் இல்லாத இடத்தில் சாமான்களை வைப்பது. சுலபம்; ஆனால் தேவையில்லாத சாமான்களும் குப்பை கூளமும் நிறைந்த இடத்தில் சரியான சாமான்களை எப்படி வைப்பது? உன் சினேகிதன் நிறைய தெரிந்து வைத்திருக்கிறான்-தப்பு தப்பாக! முதலில் அதை எல்லாம் கூட்டித் தள்ளி சுத்தம் செய்ய வேண்டியிருக் கிறது. பிறகுதான் புதிதாய் சொல்லித்தர வேண்டி இருக் கிறது. ஆக, இரண்டு வேலை எனக்கு!

என் நண்பனைப் பற்றிய இந்த வருணனையைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது.

"சரியானது எதையும் அவன் மூளை ஏற்க மறுக்கிறது. அவனோடு இது வேறே கஷ்டம். மேத்ஸ் மட்டும் வரவில்லை என்று என்னை டியூடராக வைத்தார்கள்.

ஆனால் அவன் எந்த சப்ஜெக்டில் கெட்டிக்காரன் என்று அவனுக்கே தெரியவில்லை!"

என் நண்பன் பணக்கார வீட்டுப் பிள்ளை; அவனைப்பற்றி மெளனி ஜோக் அடிப்பதைக் கேட்க எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
'உங்களுக்கு எப்படி சார் இவன் பழக்கம்?" -*

'எனக்குப் பழக்கம் இல்லை. ஒரு சிநேகிதன் சிபாரிசு செய்தான்; ஒப்புக்கொண்டேன். எனக்கும் பொழுது போகுமே என்று நினைத்தேன். நிறைய படிக்கிற வழக்கம் இருக்கிறதா உனக்கு: அதென்ன புத்தகம்?" என்றபடி நான் படித்துக்கொண்டிருந்த த கிரேட் ரஷ்ஷியன் ஷார்ட் ஸ்டோரீஸ்' என்ற புத்தகத்தைக் கையில் எடுத்தார்; அதைப்பற்றி ஏதோ கூறினார்; எனக்குப் புரியவில்லை.

ஒரு பெரிய ஆச்சரியத்துக்கு எதிரில் அமர்ந்திருப்பது போன்ற பரவசத்தில் நான் சிக்கியிருந்தேன். எனக்கு அவருடைய கதைகளில் ஈடுபாடு இருந்தது. ஆனால், அக்கதைகளின் சிறப்பு என்ன என்று விண்டுநோக்கும் பக்குவம் எனக்கு இல்லை. மணிக்கொடி ஆசிரியர் பி. எஸ். ராமையா முதல் அத்தியாயம்' என்ற தலைப்பில் ஒவ்வொரு இதழிலும் எழுதியுள்ள ஆசிரியர்களைப் பற்றியும் கதைகளைப் பற்றியும் சிலபல வரிகள் எழுதுவது வழக்கம். மெளனியின் முதல் கதையைப் பெரிதும் வியந்து பாராட்டி எழுதினார். காதல்சாலை' என்ற கதையைப்போற்றி ராமையா ஒரு முழுப்பக்கமே எழுதியிருந்தார். அவற்றை எல்லாம் நான் கவனமாய்ப் படிப்பேன். என் கதைகள் வெளிவந்துகொண்டிருந்தா லும் சிறுகதையின் வடிவம் உள்ளடக்கம், உத்தி முதலியவை பற்றி அப்போதுதான் நான் சிறிதளவு தெரிந்துகொண்டிருந்தேன். ஆகையால், மெளனியின்


கருத்துகளைக் கேட்டுக்கொள்ளத்தான் என்னால் முடிந்தது.

மெளனி வாரத்தில் 3, 4 நாள் எங்கள் தெருவுக்கு வருவார்; டியூஷன் முடிந்த பிறகு வாரம் ஒருமுறையாவது என்னைப்பார்க்க வருவார். அவர் வருவதையும், பேசுவதையும் நான் மிகவும் விரும்பினேன்; வேண்டி னேன். ஆனால், அவருடைய கருத்துகள் என்னைத் திகைப்புறச் செய்தன.

வெறும் சென்டிமென்ட்ஸ் வைத்துக் கவிதை எழுதும் (பாரதியார் ஒரு கவிஞனா?” என்று அவர் பலமுறை சொன்னதை வியப்புடன் கேட்பேன். ஒரு சந்திப்பின்போது, நேற்று ராத்திரி பிச்சமூர்த்தி, ராஜகோபாலனோடு பேசிக்கொண்டிருந்தேன். இவன்கள் எல்லாம் என்ன கதைகள் எழுதுகிறான்கள். சரியான அப்ரோச்சே இல்லை' என்று பரிகாசம் செய்தார். அவருடைய பல சந்திப்புகளால், புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு. ப. ரா., சிதம்பர சுப்புரமணியன்,
சிட்டி, ராமையா முதலிய மணிக்கொடி எழுத்தாளர் யாரையும் அவர் எழுத்தாளராக ஏற்றதில்லை என்பது தெரிந்தது. நான் மிகவும் மதித்த இலக்கியப் படைப்பாளிகளை எல்லாம் அவர் பீடத்திலிருந்து கீழே தள்ளிவிடுவதை நான் வேதனையோடு பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஆர். எஸ். மணி என்பது மெளனியின் இயற்பெயர். மெளனி என்னும் புனைப்பெயரை அவருக்கு சூட்டியவர் ஆசிரியர் பி. எஸ். ராமையா. புனைப்பெயரைப் பொய்யாக்கி நிறையப்பேசுகிற சுபாவம் அவருக்கு. அரை நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது; மெளனி பேசியதெல்லாம் எனக்கு நினைவு இல்லை. நினைவில் உள்ளவற்றை மட்டும் உண்மைக்கு மாறுபடாமல் இங்கே பதிவு செய்கிறேன்.


ஒருமுறை அவரைக் கேட்டேன். நீங்கள் எப்படி கதை எழுதுகிறீர்கள்?"
'மனத்தில் தோன்றுகிறவை, கற்பனையானவை, திடீரென்று எழும் கருத்துகள்-எல்லாம் நான் ஒரு நோட்டில் குறித்துவைக்கிறேன். எழுதும்போது அதில் சில எனக்கு உபயோகப்படும். வீட்டுக்கு வாயேன், காட்டுகிறேன்' என்றார்.

நான் கல்லூரிக்குப் போகும் வழியில்தான் அவர் வசித்த காமாட்சி ஜோசியர் தெரு இருக்கிறது. மறுநாள் மாலையே அவருடைய வீட்டுக்குப் போனேன். பெரிய, இரட்டை மாடி வீடு. வாசலைத் தாண்டி உள்ளே நுழைந்ததும், எதிரெதிரான இரண்டு நாற்காலிகளுக்கு இடையில் ஒரு சிறிய மேஜை அவர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும், வா’ப்பா, காலேஜ் போகவில்லையா? என்றார்.
-- கடைசி பீரியட் லெக்சரர் வரவில்லை. வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டார்கள். நீங்கள் வரச்சொன்னர் களே......

உள்ளே சென்று உடனே திரும்பியவர், மேஜை மீது ஒரு கனமான புத்தகத்தை வைத்தார்: கதைக்கான குறிப்புகளை இதில்தான் எழுதிவைக்கிறேன்.'

ஐந்தாறு கொயர் பருமனிருந்த அந்த நோட்டை அவரே தயாரித்துக் கொண்டிருக்க வேண்டும். நோட்டைப் புரட்டினேன். எந்த பக்கத்திலும் நேர்வரிசை யாக எழுதப்படவில்லை. குறுக்கும் நெடுக்குமாகப் பாதி நோட்டுக்கு மேல் கிறுக்கியிருந்தார். கஷ்டப்பட்டுத்தான் அவருடைய கையெழுத்தைப் படிக்க முடிந்தது. பல வரிகள் படித்தேன். எதுவும் இப்போது நினைவில்லை.

இது இரண்டாவது நோட்டு என்றார் மெளனி.


அவரைப்போலவே நானும் இப்படி குறிப்புகள் எழுதப்பழகவேண்டும் என்று மனத்தில் ஒரு தீர்மானம் செய்தேன்; ஆனால், அதை ஒருநாளும் நான் செயல் படுத்தவில்லை. எங்கள் வீட்டுக்கு அவர் வந்தாலும் சரி, அவர் வீட்டுக்கு நான் போனாலும் சரி, பேசியவர் அவர்: கேட்டுக்கொண்டவன் நான்.

sweet seventeen - (G)anfu 16Gaurop)3(51% thirsty thirty - (தாகம்ான் முப்பது)க்கும் இடையில் நிகழ்ந்த இந்தச் சந்திப்புகளால் எனக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? என் எழுத்துப்பித்தம் வலுத்தது. மெளனி என்னும் ಹಾಕಿ சிலை மேலும் அழகுற்றது என் மனத்தில். i
பதினோரு வருடங்களுக்குப் பிறகு நான் தேனி மாத இதழைத் தொடங்கினேன். மெளனியைக் கட்டாயம் எழுதவைக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு. அவர் கும்பகோணம் வீட்டை விற்றுவிட்டு சிதம்பரத்தில் அரிசி மில் வைத்திருந்தார். அவருக்கும், க. நா. சு. வுக்கும் கடிதம் எழுதியதோடு, எனக்குத் துணையாக உத்விய கரிச்சான்குஞ்சு"வையும் அவர்களை நேரில் கண்டு தேனீக்கு எழுதும்படி வற்புறுத்தினேன். இருவருமே தேனி ஆபீஸுக்கு-எங்கள் வீடுதான் ஆபீஸ்-அடிக்கடி வரலானார்கள்; ஸ்டைல்தான் வித்தியாசம் க. நா. சு. ஆடம்பரமாக வந்து இரண்டொரு நாள் தங்குவார். மெளனி திடீரென்று முற்பகலில் வருவார்; அவசரமாகத் திரும்ப வேண்டும் என்று திண்ணையிலேயே புறப்படத் தயார் நிலையில் உட்காருவார்; இரண்டு மூன்று மணி நேரம் பேசிவிட்டு அவசரமாய்த் கிளம்புவார். இரண்டொரு முறைதான் அவர் ஆபீசுக்குள்ளே வந்ததாய் ஞாபகம். மெளனியும், க. நா. சு. வும் ஏக காலத்தில் தேனி ஆபீசுக்கு வந்தார்களா என்பது எனக்கு நினைவில்லை.


மணிக்கொடி நின்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. கு. ப. ரா. கிராம ஊழியனுக்கு ஆசிரியராக இருந்தார்; ஆனால், அவர் மெளனி'யின் எழுத்துகளைத் தேடிப் போகவில்லை. கவிஞர் சாலிவாகனனின் (வி. ரா. ராஜகோபாலன்) ஆசிரியராக இருந்த கலாமோகினி' யில் கு. ப. ரா., நான், க. நா. சு., தி. ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு, சிட்டி முதலியவர்கள் எழுதினார்கள். க. நா. ஏனோ மெளனியை எழுதத் துண்டவில்லை. 1 லிருந்து 1948 வரை மெளனி ஒன்றும் எழுதியதாகத் தெரியவில்லை. இந்தக் காலகட்டத்தில்தான் புதுமைப் பித்தன் ஒரு ரேடியோ பேச்சுக்கு இடையில் மெளனியை சிறுகதையின் திருமூலர், சொல்லில் அடைபட மறுக்கும் கருத்துகளைச் சொல்லாக்கியவர்' என்று வரையறை இன்றிப் புகழ்ந்தார். புதுமைப்பித்தனின் இந்தப் போற்றி உரையைக்கூட க. நா. சு. வும் மற்றும் சிலரும் உடனே பற்றிக்கொள்ளவில்லை; பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர்கள் புதுமைப்பித்தனின் கருத்தைப் பின்பற்றி மெளனியைக் கண்டுகொண்டார்கள் என்று நான் கூறினால் தவறாகுமா? க. நா. சு. ஆசிரியராக இருந்த சந்திரோதயம், சூறாவளி-இதழ்களில் மெளனி எழுதவில்லை.

மெளனியின் சிறுகதைகள் தேனி'யை அலங்கரிக்க வேண்டும் என்பது என் விருப்பம்; அவருடைய இரண்டு சிறுகதைகள் தேனியில் வந்தபோதும் க. நா. சு. அவைபற்றி போற்றியோ துாற்றியோ எங்களிடம் அதிகமாகப் பேசியதில்லை. மணிக்கொடிக்குப் பிந்தைய பத்து ஆண்டுகளில் நான் ஓரளவு இலக்கியப் பயிற்சியும் வாழ்வியல் அறிவும் பெற்றுவிட்டேன். 17, 18 வயதுகளில் என்னிடம் இருந்த மாணவ மனோபாவம் முற்றிலும் அகன்றுவிட்டது. மணிக்கொடியில் எழுதியவர்களின் இலக்கியப் பங்களிப்பின் பெருமையை, கல்லூரிப் பருவத்தின் கலங்கல் இல்லாத தெளிவுடன் இப்போது உணரத் தொடங்கியிருந்தேன்.


தேனி முதல் இதழுக்கு மெளனியின் சிறுகதை வரவில்லை. இதழ் வெளியான சில நாட்களுக்குள் அவரே எங்கள் வீட்டுக்கு வந்தார். முதல் இதழ் பூராவையும் அவர் படித்ததாய்க் கூறினார். அந்த இதழில் எழுதிய எழுத்தாளர் ஒவ்வொருவரையும் மற்றோர் எழுத்தாளர் அறிமுகப்படுத்தி இருந்தார். இது ஒரு நல்ல அம்சம் என்று கரிச்சான்குஞ்சு, ஜானகிராமன், நான்கருதினோம்.

மெளனிக்கு இந்தப்பகுதி பிடிக்கவில்லை: ஒருவரை ஒருவர் முகஸ்துதி செய்துகொள்ளக்கூடாது' என்றார்:

'இது முகஸ்துதி இல்ல்ை, சக எழுத்தாளரிடம் நாம் காணும் குறைகளையும் சுட்டிக் காட்டியிருக்கிறோம். என்றதோடு அந்தப் பகுதிகளையும் காட்டினேன். அவர் திருப்தி அடையவில்லை.
அந்த இதழில் ராஜகுடும்பம்' என்கிற என் சிறுகதை வந்திருந்தது. தேனியை மிகவும் பாராட்டி வரவேற்ற ஹிந்து நாளேடு என் கதைகளையும் புகழ்ந்து சில வரிகள் எழுதி இருந்தது. -
'ஹிண்டுவில் தேனி விமரிசனம் படித்தேன், உன் கதையை மெச்சி இருக்கிறான். அந்தக் கதையில் அப்படிப் பேச என்ன இருக்கிறது? தப்புத் தப்பாக எழுதியிருக் கிறதே! என்று அவர் கூறியது எனக்குப் புரியவில்லை.

‘என்ன தப்பு சார்?' அக்கதைப் பற்றி எனக்கு ஒரு நிறைவு இருந்தது, அதில் என்ன தப்பு கண்டார் என்று கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
'கதையில் ராஜாவும் வரவில்லை, ராணியும் வர வில்லை. ராஜ குடும்பம் என்று எப்படி பெயர் வைக்க லாம்?-அவர் கூறியதை நான் ஜோக் அடிக்கிறார்’ என்று எண்ணிச் சிரித்தேன்.


'இப்படி சம்பந்தம் இல்லாமல் பெயர் வைப்பது தப்பு'-என்று மறுபடியும் அழுத்திப் பேசின. பிறகுதான் அவர் உண்மையாகவே கண்டிக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன்.

கதைநாயகனுக்கு ராஜா என்று பெயர். அவன் தன் மனைவியை ராணி என்று பிரியமாக அழைக்கிறான். ஒரே குழந்தையை இளவரசு என்கிறார்கள், பாகத்தால் பிணைந்த இந்த அழகான குடும்பத்தை ராஜகுடும்பம் என்கிறேன்; அதிலே தப்பு என்ன?" -- ?----

‘ராஜா, ராணி வராத கதைக்கு ராஜகுடும்பம் என்று நீ பெயர்:இட்டது தப்புதான் என்று அவர் முடிவு கட்டி பேசினார்.

; : அதிே கதையில் என் கதாநாயகன் ஈரானி ஹோட்ட லுக்குச் சென்று பிரியாணி சாப்பிடுகிறான். . .

- அந்த வார்த்தையைக் கேட்டால்ே எனக்குக் குமட்டு கிறது. நீ எழுதியிருக்கக் கூடாது!"

-\ . அவருட்ைய தர்க்க நியாயத்தின் அடியொற்றி நான், அவன் , அசைவப்பயல் சார் என்ன என்னவோ சாப்பிட்டுத் தொலைக்கிறான், நான் என்ன செய்ய முடியும்!" என்றேன்.

நீ அந்த வார்த்தையை எழுதி இருக்க வேண்டாம்' என்றார் முடிவாக. - -
அவருடைய சைவ உணவுப் பற்று-என் கதையைப் புதுமையாக ஒரு விமரிசனத்துக்கு உள்படுத்தியது. சாதி, மதம், கட்சி பார்த்து விமரிசனம் செய்கிறார்கள் தமிழ் நாட்டில் சிலர், உணவுமுறையையும் பார்ப்பது புது முறை விமரிசனமாக இருக்குமே! .

தேனியில் நான் எழுதிய முதல் கதையைத் தூளாக்கி விடுவது என்னும் உறுதியோடு மெளனி அன்று வந்திருந் தாக் போலும்; அடுத்து, கதாசிரியனான என்னைப்பற்றி


தி. ஜானகிராமன் எழுதியிருந்ததை மெளனி கண்டிக்கத் தொடங்கினார். -
மகாபாரதத்தில் வெறும் எலும்புக்கூடுகள் என ஜீவனற்றுக் கிடந்த சில பெண் பாத்திரங்களை உயிரும் உணர்வும் உள்ள அழகிகளாக நான் உருவாக்கினேன் என்பதுபோல் தி. ஜா எழுதியிருந்தார். -
---
"மகாபாரதத்திலிருந்து எலும்புக்கூடுகள் தோண்டி எடுப்பதாவது சொல்லவே அருவருப்பாக இருக்கிறது:மெளனியின் இந்த விமரிசனத்தை நான் கட்சியர்டாமல் ஒப்புக்கொண்டேன். மாபெரும் இதிகாசத்தைப் படைத்த வியாச முனிவர் எலும்புக்கூடுகளையா தம் நூலில் போட்டிருப்பார்? அப்படி எழுதியதும், அதை நான் வெளியிட்டதும் அநாசாரம், அநாகரிகம் என்பதை மெளனி சுட்டிக்காட்டிய பிறகே நானும், தி. ஜா வும் உணர்ந்தோம். -
இந்த உரையாடல்கள் ஒருபுறம் இருக்க, தேனிக்கு கதை எழுதித் தருமாறு ஓயாமல் அதைக் கேட்டுக்கொண் டிருந்தேன். அந்த பெரும் கலைஞன்ைத் தேனி'யில் காணவேண்டும் என்று எனக்கு ஏக்கமாக இருந்தது.

மெளனியின் முதல் கதையை, கரிச்சான்குஞ்சு சிதம்பரத்துக்குச் சென்று வாங்கிவந்தார். மெளனி கரிச்சான்குஞ்சுவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு கதையை எழுதிக் கொடுத்துள்ளார். அவர் எழுதியதைப் படித்துக்கூடப் பார்க்கவில்லை, திருத்திப் போட்டுக் கொள்ளச் சொன்னார்?' என்றபடி கைப்பிரதியை என்னிடம் கொடுத்தார் கரிச்சான்குஞ்சு. -
'நீங்கள் படித்தீர்களா?

நேரம் ஏது? கடிதங்களைச் சுருடடிக்கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடிவிட்டேன், அவருக்கும் அவசரம்'.

ஆவலும் மகிழ்ச்சியுமாகக் கதையைப் படிக்கத் தொடங்கினேன். முதலில் எழுத்துகள் புரியவில்லை. பிறகு, ஒரு வாக்கியமும் முடிவுபெறவில்லை, அடுத்த வாக்கியம் எங்கே ஆரம்பம் ஆகிறது என்றும் புரியவில்லை. இலக்கண அமைதியோ தெளிவோ கதையில் காணோம்-எனக்கு ஒரே மலைப்பாக இருந்தது.

கரிச்சான்குஞ்சுவும் படித்தார். நாலைந்து பக்கம் படித்ததும், இதென்ன, ஒன்றும் புரியவில்லை. அவரையே சரிசெய்து கொடுக்கச் சொல்லலாமே! என்றார்.

வேண்டாம், அவர் திருத்திக்கொடுப்பதற்குள் மாதம் போய்விடும், நான் எடிட் செய்கிறேன்.

கதையைத் திருத்தம் செய்ய எனக்குச் சில நாட்கள் ஆயின. மெளனியின் சிறுகதை வடிவம் அவருக்கு இயல்பாக வந்த ஒர் அற்புதம் போகிற போக்கில் காட்சிகளைத் தோற்றுவிப்பதும், பிம்பங்களை (images) உயிர்ப்பிப்பதும் அவருடைய எழுத்துகளின் வலிமை. இந்த அவருடைய பெருமைகளுக்குச் சற்றும் ஊனம் ஏற்படாமல் கதையைத் திருத்தம் செய்ய எனக்கு மிகக் கவனம் தேவைப்பட்டது. கால், அரை, முற்றுப்புள்ளி க்ளைக்கூட ஜாக்கிரதையாகப் பயன்படுத்தவேண்டி யிருந்தது.

மெளனியைச் சந்தியுங்கள் என்று ஹிண்டு, மித்திரன், தினமணி ஆகிய தினசரிகளில் எல்லாம் விளம்பரம் கொடுத்தேன். இதனால், கரிச்சான்குஞ்சு உள்படச் சில எழுத்தாளர்களுக்கு என்மேல் வருத்தம். கதை வெளியான பிறகு, அவர்களின் பொருமல் எனக்குக்கேட்டது. லா. ச. ராமாமிர்தம் கதையைப் பாராட்டு வதேபோல் பரிகாசம் செய்து ஒரு நீண்ட கடிதம் எழுதியது இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. மெளனி தன் கதையை தேனி'யில் கண்டு எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அச்சான பிறகு, கதையைப் படித்தபோது: அக்கதையின் படைப்பாளி நானே என்பது போன்ற பெருமிதம் எனக்கு உண்டாயிற்று.

மெளனியின் தமிழ் பற்றி எனக்கு சிறிது கவலையாக இருந்தது. அவசர அவசரமாக எழுதியதால் மெளனியின் தமிழ் குழம்பி இருக்கலாம் என்று நானும் சமாதானம் சொல்லிக்கொண்டேன். அடுத்த கதைக்காக அவரை 'நச்சரிக்க'லானேன்.

மெளனின் முதல் கதையுடன், அவரை வாசகர்களுக்கு. அறிமுகம் செய்யும் பொறுப்பை க. நா. சு. வுக்கு கொடுத்தேன்; அவர் தன் பொறுப்பை நல்லவிதமாகவே நிறைவேற்றினார். க. நா. சு. வின் அறிமுகத்தோடுதான் மெளனி யின் முதல் கதை தேனியில் வந்தது. மெளனி பின் தமிழ் பற்றிப் பேசியபோது க. நா. சு. அதை பொருட்படுத்தவில்லை. -

இரண்டாவது கதை வந்து சேர்ந்தது. அதுவும் முதல் கதைபோலவே இருந்தது. நானே அதையும் ஒழுங்குபடுத்தி 'நினைவுச்சுவடி’ என்ற பெயரிட்டு தேனீயில் வெளியிட்டேன். முன்னைப்போலவே மெளனிக்கு மட்டும் தினசரிகளில் விளம்பரம் செய்தேன். -
இந்தத்தடவை கரிச்சான்குஞ்சுவோடு தி. ஜானகி ராமனும் சேர்ந்து கொண்டார். இருவரும் மெளனி'யின் ரசிகர்களே; ஆனால் அவருக்கு மட்டும் சிறப்பிடம் கொடுப்பதை இருவரும் விரும்பவில்லை.
மெளனியின் தமிழ் பற்றி எனக்குக் கவலையும் வியப்புமாக இருந்தது. மணிக்கொடியில் வெளியான

கதைகளின் கைப்பிரதிகளும் இப்படித்தான் இருந்தனவா? பி. எஸ். ராமையா எடிட்' செய்தாரா, வேறு யாராவது அவருக்கு உதவினார்களா? அல்லது மெளனியின் கைப்பிரதிகள் சரியான தமிழில் இருந்தனவா?

இந்த கேள்விகளுக்கு விடைகாணும் முன், மெளனி யின் மூன்றாவது கதை வருமுன், தேனியை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. - -

இலக்கிய விசாரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு வியாபாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். 1954-ஆம் ஆண்டு, ஜூலை, ஆகஸ்ட் மாதம் நானும். ஒரு வியாபாரி நண்பரும் சிதம்பரம் செல்ல நேர்ந்தது, ஏதோ ஒரு தெரு வழியாகப் போகும்போது, பின்னா லிருந்து யாரோ என் பெயர் கூறி என்னைக் கூப்பிட்டார் கள். திரும்பிப் பார்த்தேன்: மெளனி ஒரு வீட்டு வாசலில் நின்றார். மகிழ்ச்சியோடு அவரை நெருங்கினேன்: என்ன் சார், எப்படி இருக்கிறீர்கள்?’ என்றபடி.
'நீ எங்கே இங்கே?' என்றவரிடம், நான் சிதம்பரத் துக்கு வந்த வேலையைக் கூறினேன். அவர் எங்களை உள்ளே வருமாறு அழைத்தார். திண்ணையிலேயே உட்கார்ந்த அவருக்குப் பக்கத்தில் நாங்கள் அமர்ந்தோம். என்னோடு இருந்த நண்பர் வியாபாரி, இலக்கிய வாசனை அறியாதவர் உள்ளே வருமாறு அழைத்த மெளனி எங்களைத் திண்ணையில் நிறுத்தியதை நண்பர் ரசிக்கவில்லை; சீக்கிரம் போகணுமே!’ என்றார்.

மெளனியும் நானும் இரண்டு மணி நேரத்துக்கு மேல் பேசிக் கொண்டிருந்தோம்; பேச்சுக்கு இடையில் அவர், 'ஒரு கதை எழுதினேன். விகடனுக்கும் குமுதத்துக்கும் அனுப்பினேன். திருப்பி அனுப்பி விட்டார்கள்', என்று வருத்தப்பட்டார்.


‘விகடனுக்கும் குமுதத்துக்கும் ஏன் சார் அனுப்பினர் கள்?' என்றேன் வியப்புடன்.

- "அவைதானே பிரபலமாக இருக்கின்றன! அவர்கள் அதிகப் பணம் தருவதாகச் சொன்னார்கள்.

'உங்களுக்கு எதுக்கு சார் பணம்: விகடன், குமுதம் எல்லாம் உங்கள் கதையைப் போடாது. சிவாஜி தீபாவளி மலரில் போடச் சொல்கிறேன். சிவாஜி சிறிய பத்திரிகை, பணம் கிடைக்காது. கதையை மரியாதையோடு வெளியிடு வார்கள், அதைப் பெருமையாகவும் நினைப்பார்கள்.

அவர் உள்ளே சென்று கைப்பிரதியைக் கொண்டு வந்தார். நீயே வைத்துக் கொள். தீபாவளி சமயம் சிவாஜிக்கு அனுப்பலாம்'
சார், வேண்டாம். காணாமல் போய் விட்டால், கஷ்டம். நீங்கள் தீபாவளி மலருக்கு அனுப்பல்ாம். கடிதம் வரும்'-நான் கதையைப் படிக்கவில்லை. நேர மில்லை, மதிய உணவு நேரம்; பசியால் என் நண்பருக்கு ஒரே கோபம். இடையிடையில், போவோமா? என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தார்.

ஒருவாறு மெளனியிடம் விடைபெற்றோம். வெளியில் வந்ததும் என் நண்பர் குமுறினார். பெரிய எழுத்தாளர், உங்களுக்கு ரொம்ப வேண்டியவர் என்றீர்கள். விட்டுக் குள்ளேகூட அழைத்துப் போகவில்லை. இவ்வளவு நேரம் பேசினீர்கள், ஒருவாய் தண்ணீர்கூட தரவில்லை.

தாகமாக இருந்தால் தண்ணிர் கேட்டிருக்கலாமே!என்று சிரித்தேன். கட்டாயம் கொடுத்திருப்பார்.

சிவாஜி தீபாவளி மலருக்கு மெளனியின் கதை கிடைக்கும் என்று ஆசிரியர் கவிஞர் திருலோக சீதாராம னுக்கு கடிதம் எழுதி விட்டேன்.
அடைமழை பெய்து கொண்டிருந்தது. ரயில், பஸ் போக்குவரத்துப் பாதைகள் காயப்பட்டுக் கிடந்தன. ஊருக்குள் தெருக்கள் சாக்கடைகள் போலக் காட்சி அளித்தன. வீட்டுக்கு வெளியே செல்லவும் அச்சமாக இருந்தது. தீபாவளி 15 நாள் தூரத்தில் இருந்தது.
நள்ளிரவு கடந்து விட்டது. கொட்டுமழையின் சந்தடியை மீறி, யாரோ பலமாய் கதவு தட்டும் சத்தம் கேட்டு என் தூக்கம் கலைந்தது. கதவு திறந்தேன். சிவாஜி ஆசிரியர் கவிஞர் திருலோக சீதாராம். பாதி நனைந்த கோலத்தில்!

எனக்கு ஆச்சரியமாக இல்லை. கவிஞருக்கும் எனக்கும் இருந்த நட்பு அப்படி நேரம் கெட்ட நேரத்தில் அவர் என்னைக் காண வருவது சகஜம். கவிஞருக்குப் பள்ளிப் படிப்பு அதிகமில்லை. மகாகவி பாரதியாரின் கவிதை களை அரசியல், இலக்கியக் கட்டங்களில் பாடிப்பாடியே கவியாக மாறியவர். பாரதியாரின் கவிதைகள் எல்லாம் அவருக்கு மனப்பாடம். அவருக்கு இயற்கையாக அமைந்த செளக்கியமான சாரீரம், உணர்ச்சிவசப்பட்டுப் பாடு வதைக் கேட்டவர்கள் இருப்பிடத்தை விட்டு அசைய மாட்டார்கள். தமிழ்நாட்டில் அவர் கலந்து கொள்ளாத பாரதிவிழா சுகப்படுவதில்லை. அவர் பாரதியாரின் ஞான வாரிசு என்றே பலரும் கருதினார்கள்.

அவருடைய வாழ்க்கை சித்தர்களின் வழி வளமை யிலும் ஜொலிப்பார், வறுமையிலும் ஜொலிப்பார். வெற்றி வீரர்களாய் உலகத்தால் ஏற்கப்பட்ட பெரிய மனிதர்கள் பலர் மனம் சோரும்போது அவரைத் தேடிச் செல்வார்கள்; அவர் பாடக்கேட்டு தைரியத்தை மீட்டுக் கொள்வார்கள். டெலிபோனில் அவரைப் பாடச் சொல்லிக் கெஞ்சுவார்கள் பலர். அவருடைய குரல் ஒலி குனிந்த தலையை நிமிரச் செய்யும்.


1944இலிருந்து எங்கள் நட்பு தொடங்கியது; பரஸ் பரம் வியக்கும் நட்பு. தமிழ்நாட்டில் அவர் எந்த ஊரில் சொற்பொழிவாற்றினாலும், உடனே திருச்சிக்கு திரும்ப மாட்டார். நேராக கும்பகோணத்துக்கு என்னைத் தேடி வருவார். தூத்துக்குடியிலோ, நாகையிலோ பேசியதை அப்படியே, அதே உணர்ச்சிப் பாவனையோடு எனக்கு முன்னால் பேசுவார்; நான் சபாஷ் சொன்னால்தான் அவர் அமைதி அடைவார்.

திடீரென்று நள்ளிரவில் கதவு தட்டுவார்; உள்ளே வரும்போதே, சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?" என்று கேட்பார். நீராகாரமும் நீர் வடுவும் நிச்சயம் இருக்கும். சிலசமயம் பட்சணமும் பழமும் கொடுப்போம். வயிறு நிம்மதியானதும்; குழந்தைகள் தூக்கத்தைக் கெடுக்க வேண்டாம். திண்ணைக்குப் போவோம்' என்ற படி வெற்றிலை டப்பாவுடன் திண்ணைக்குப் போவார்;எங்கள் இருவரிடமும் வெற்றிலை, சீவல் ஸ்டாக் நிறைய இருக்கும்.

திண்ணைக்குப் போனதும், கன்யாகுமரியில் பேசிய தைத் திரும்பப் பேசுவார்; பாரதியார் பாடல்களோடு சொந்தக் கவிதைகளையும் பாடுவார். நாலு அல்லது ஐந்து மணி ரயிலைப் பிடிக்க வேண்டும் என்று பையைத் தூக்கிக் கொண்டு கிளம்புவார்...... இது எங்கள் நட்பின் ஒரு பகுதி......

ஒரு மழையில் வந்த கவிஞர் திருலோகத்திடம், எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று கேட்டேன்.
'மதுரையிலிருந்து......
'மதுரையிலிருந்து கும்பகோணமா...... இந்த மழையில்...உட்காருங்கள்'.

உட்கார நேரம் இல்லை; மூன்றரை மணி ரயிலை, .பிடிக்க வேண்டும். புறப்படுங்கள்......" -


‘என்ன, ஏது என்று சொல்லாமல்...... -
நீங்களும் நானும் சிதம்பரம் போகிறோம். மெளனியிடமிருந்து கதை வாங்கிவர வேண்டும்'.

இந்தப் பிரளய மழையில் சிதம்பரத்துக்கா?

பிரளய கால மழையில் இரண்டு கவிஞர்கள் மெளனியின் கதை தேடிப் போனார்கள் என்று வரலாறு படைப்போமே!’ என்றார் கவிஞர், நின்றபடியே.

திருலோகம், முதலில் உட்காருங்கள். பிறகு வரலாறு படைப்போம். இந்தப் பேய் மழையில் கதை தேடி அலைய வேண்டாம். தாளைக்கு நான் மெளனிக்கு எழுது கிறேன், இரண்டே நாளில் கதை வந்து விடும். ---
மெளனியின் கதையோடுதான் இந்த ஆண்டு தீபாவளி மலர் வெளிவர வேண்டும்.

அது என் பொறுப்பு. எழுதிய கதை வீணாகி விடக் கூடாது என்று மெளனியும் நினைக்கிறார்

சிவாஜி ஆசிரியர் விடியலில் திருச்சிக்குப் புறப்பட் டார். கதை கேட்டு மெளனிக்கு எழுதினேன். நான் எதிர் பார்த்தபடி, மறு தபாலில் கதை வந்தது. வழக்கம்போல் அதைத் திருத்தி சாவில் பிறந்த சிருஷ்டி என்று பெயர் சூட்டி, சிவாஜிக்கு அனுப்பினேன். 1954ஆம் ஆண்டு சிவாஜி தீபாவளி மலரில் அக்கதை வெளிவந்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சிவாஜி ஆசிரியர் கேட்டுக்கொண் டதற்கு இணங்கி, மெளளியிடம் கதை கேட்டேன். அவரும் உடனே அனுப்பினார். இந்தக் கதையையும் திருத்தம் செய்து குடை நிழல்' என்று தலைப்பிட்டு சிவாஜிக்கு அனுப்பினேன். 1959 சிவாஜி தீபாவளி மலரில் இக்கதை இடம்பெற்றது.

1948 முதல் 1959 வரை நான் மெளனியின் நான்கு கதைகளை திருத்தம் செய்திருக்கிறேன். அவருடைய தமிழ்


எனக்குப் பிரமிப்பாகவே இருந்தது. மணிக்கொடியில் அவர் எழுதிய கதைகளின் தமிழும் இப்படித்தான் இருந்ததா? என்றொரு சந்தேகம் எனக்கு. பல ஆண்டு களுக்குப் பிறகு ஆசிரியர் பி. எஸ். ராமையாவிடம் பேச்சுக்கிடையில் இதுபற்றிக் கேட்டேன். ஒருமாதிரி யாகத்தான் இருக்கும். நாங்கள் திருத்தி வெளியிட்டோம்' என்று கூறினார். ஒரு பெரும் கலைஞனிடம் இப்படி ஒரு பலவீனம் இருந்ததை நினைக்க இப்போதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
அப்பால் ஒரு தடவை மெளனி எங்கள் வீட்டுக்கு வந்தார். இருவரும் பேசியபடி ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்தோம். தம்மிடம் ஒரு கதைக்கான கரு இருப்பதாய்க் கூறிய மெளனி கதையைச் சொல்லத் தொடங்கினார். மிகவும் அழகாய்க் சொன்னார். கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. -

(LGaు சொல்லாதீர்கள், கதையை நானே எழுதிவிடுவேன்போல் இருக்கிறது.

எழுது நானும் எழுதுகிறேன்' என்றார் அவர். மெளனி கொடுத்த கருவிலிருந்துதான் கருகாத மொட்டு’ என்னும் என் கதை பிறந்தது. அது கல்கி'யில் வெளி வந்தது. மெளனி அதே பீஜத்தைக் கொண்டு பிரக்ஞை வெளியில்' என்னும் கதையை எழுதினார்; அது 1960இல் சரஸ்வதியில் வந்தது. பிறகு, பல ஆண்டுகள் வரை நான் அவரைச் சந்திக்க வில்லை

1973ஆம் ஆண்டு, ஐந்து எழுத்தாளர்கள் என்னிடம் ஒரு நீண்ட பேட்டி எடுத்தார்கள். அது கண்ணதாசன் செப்டம்பர் இதழில் வெளிவந்தது. அந்த பேட்டியில் மெளனியின் சிறுகதைகள் பற்றின என் கருத்தைக்
கூறாமல், எழுத்தாளர் என்ற முறையில் அவரிடம் கண்ட பலவீனங்களை மட்டும் சொல்லிவைத்தேன்.

கண்ணதாசனின் பேட்டி வெளியாகும் முன்பே, மெளனியை இரண்டு மூன்று முறை சந்தித்திருந்தேன். சிதம்பரம், மணிவாசகர் பதிப்பகத்தார் என் நாவல்களை வெளியிடும் பொறுப்பை ஏற்றிருந்தார்கள்; அவர்கள் தான் மெளனியின் புதிய முகவரி கொடுத்தார்கள். தனியாகவும், நண்பர்கள் சிலரோடும் அவரை நான் சந்திப்பது வழக்கம்.

கண்ணதாசனின் பேட்டி அச்சான பிறகு, மெளனி பற்றி பேசியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. அவருக்கு வாழ்க்கையில் பல அல்லல்கள், சித்தத்தைக் குழப்பும் பல துயர நிகழ்ச்சிகள். நானும் பல துன்பங் களோடு வாழ்ந்தவன். அவருடைய மனத்தைப் புண்படுத்திவிட்டோமே என்று வருத்தமாக இருந்தது. ஆயினும், எய்தான பிறகு அம்பை மீட்டுக் கொள்வது எப்படி?
பேட்டியைப் படித்த மெளனியின் ரசிகர்கள் சிலர் வாய்ப்பு கிடைத்தபோது என்னைத் தாக்கி எழுதி வந்தார்கள். நான் யாருக்கும் பதில் கூறவில்லை.

ஆனால், என் பேட்டி வெளியான பிறகு, சில நண்பர்களோடு அவரைச் சில தடவை சந்தித்தேன். பேட்டியைக் கண்டுகொண்டதாகவே அவர் காட்டிக் கொள்ளவில்லை._நானும் அதுபற்றிப் பேசவில்லை. பிறகு, இந்த விஷயத்தை மறந்துபோனேன்.

ஒருமுறை ஏதோ வேலையாக, சென்னை சென்ே றன். ஒருநாள் மாலை, திருவல்லிக்கேணி ஃபெல்ஸ் ரோடில் நண்பர் அசோகமித்திரனைக் கண்டேன். இருவரும் பேசிக்கொண்டே அருகில் இருந்த முரளி கபோக்குப் போனோம். பேச்சுக்கு இடையில் அசோகமித்திரன், மெளனி உங்களுக்குப் பதில் சொன்னாரே, படித்திர் களா? என்று கேட்டார்.

மெளனி எனக்குப் பதிலா? எதுக்கு?- என்றேன் விளங்காமல்,
உங்களுடைய கண்ணதாசன் பேட்டிக்கு, கணையாழி யில் வந்தது. 3 மாதம் ஆயிற்றே.

'கணையாழியை என் நண்பர் வீட்டில் படிப்பது வழக்கம். மெளனியின் பதிலை நான் பார்க்கவில்லை. நீங்கள் எனக்கு காபி அனுப்பி இருக்கலாம். நான் அதைப்பார்க்க வேண்டுமே", என்றேன்.
அப்போது கணையாழியின் ஆசிரியர் அசோக மித்திரன். அவரோடு ஆபீஸுக்குப்போய், மெளனியின் பதிலைப் படித்தேன். எனக்கு கோபமூட்டும்படி பேட்டி யின் ஒரு பகுதி இருந்தது; எனக்கு கோபம் வரவில்லை; விசனமாக இருந்தது.

'நீங்கள் இதற்கு பதில் சொல்லப்போகிறீர்களா? என்று கேட்டார் அசோகமித்திரன்.

இல்லை. நான் கண்ணதாசன் பேட்டியில் சொன்னது எல்லாம் உண்மை. ஆனால், மெளனி துன்பப்பட்டவர். என்னால் அவருக்கு மேலும் துன்பம் வேண்டாம்.'
சரியான முடிவு' என்றார் அவர்.

மெளனியின் பேட்டி வெளிவந்த கணையாழி இதழை விலைக்கு கேட்டும் அசோகமித்திரன் கொடுக்க வில்லை. ஆபீஸ் காபி தவிர, விற்பனைக்கு பிரதிகள் இல்லை என்று கூறிவிட்டார். ஆகையால் அந்தப் பேட்டியை இரண்டாம் முறை நிதானமாகப் படிக்கவும் எனக்கு வாய்ப்பு இல்லை.

சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, 1991-டிசம்பர் மாதக் கணையாழியில் மெளனியின் பேட்டி மறு பதிப்பாக (re-print) மீண்டும் வந்துள்ளதைக் காண எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதை இப்போது அமைதியாகப் படிக்க முடிகிறது. பழைய நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாய் காட்சிகள் ஆகின்றன. மெளனியும் மறைந்துவிட்டபின் அவர் மனத்தைப் புண்படுத்த நேருமோ என்கிற அச்சம் எனக்கு இல்லை. அவர் உயிரோடு இருந்தபோது, அவருக்குப் பதில் கூறுவதில்லை என்று நான் முடிவு செய்தது சரி; அது சரியான முடிவு

என்று நண்பர் அசோகமித்திரன் கருதினார். இப்போது
பதில் கூறுவது நியாயமாகும் என்று எண்ணுகிறேன்.
கணையாழி பேட்டியில் மெளனி கூறுகிறார்:
கண்ணதாசன் (செப்டம்பர்-73) எம். வி. வி. பேட்டி யில் என்னைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தவைகளில் சில தவறுகள் நேர்ந்துள்ளன. தேனியில் வெளிவந்த என் இரண்டு சிறுகதைகள் எந்தச் சூழ்நிலையில் எழுதப் பட்டவை, தரப்பட்டவை என்பதைச் சொல்கிறேன்.

மனக்கோலம் (1948) கதையை என் வழக்கப்படி திருப்தியின்றி வெவ்வேறு scriptஆக பதினைந்து தடவைக்கு மேல் எழுதிக் கிழித்தும், கடைசியாக நான் பக்கம் பக்கமாக எழுதிப்போட, கரிச்சான்குஞ்சு அருகிலி ருந்து வாங்கிக் கொள்ள-மகளின் திருமணம் முடிந்த அன்று நள்ளிரவு ரயிலில் சிதம்பரம் திரும்பியாக வேண்டிய அவசரத்தில் - கரிச்சான்குஞ்சு கதையின் கடைசிப் பக்கத்தை இன்னொரு தடவை படித்து விட்டு வேறு எழுதக் கோரியபோது-அவ்வளவுதான், அதைத் திருப்பிப் பார்த்தால்-எல்லாமே எனக்குத் திருப்தி தராமல் கிழித்துப் போட்டுவிட்டு வேறு எழுதத் தோன்றி விடும்...நான் ஊருக்குக் கிளம்பியாக வேண்டும் என்று இளம்பி விட்டேன்.

எம். வி. வி. தன் பேட்டியில் முதல் கதையை நேரில் கொண்டு வந்து தந்தார். திருத்திப்போடு என்று சொல்லி விட்டுப் போனார் என்று கூறியிருப்பதற்காக இதனைக் கூறுகிறேன்......
முதல் தேனி கதையைக் கரிச்சான்குஞ்சு வாங்கி வந்தார் என்று மெளனி கூறுவது சரி; அவர் நேரில் கொண்டு வந்து கொடுத்தார் என்று நான் 'கண்ணதாசன் பேட்டியில் சொன்னது சரியல்ல. கரிச்சான்குஞ்சுவிடம் கேட்டு நான் சரிசெய்து கொண் டேன். ஆனால், முக்கியமான பிரச்சினை அது அல்லவே. மெளனியின் தமிழ் குறைப்பட்டது என்று நான் உரைத்த தற்கு அவர் பதில் கூறவில்லை. மகளின் திருமண வேலை களின் நிர்ப்பந்தத்தால் அவர் அவசரமாக எழுதிக் கொடுத்ததால், அவருடைய தமிழ் பிழைபட்டது என்று அவர் நமக்கு உணர்த்துவதாய் வைத்துக் கொள்வோம். தேனியில் அவர் எழுதிய இரண்டாவது கதை பற்றி அவர் கூறுவதைப் பார்ப்போம்.
மெளனி கூறுகிறார் :

'இரண்டாவது சிறுகதையை நான் தேனிக்குத் தந்த கதை இது: அப்போது க. நா. சு. பொறுப்பேற்று நடத்திய ‘சந்திரோதயம்' பத்திரிகையின் ஆண்டு மலர் கொண்டுவரப் போவதால் என் கதை வேண்டுமெனக் கேட்க நான் எழுதிக் கொடுத்த கதை நினைவுச்சுவடு' (1948)- சந்திரோதயத்தில் அப்போது உதவி ஆசிரியராக சி. சு. செல்லப்பாவும், ஓவியராக சாரதியும் இருந்தார் கள். சந்திரோதயம் மலர் வெளியீடு முன்பே நின்று விட்டது. அச்சமயத்தில் எம். வி. வி. தேனி பத்திரி கைக்கு என் கதை அவசியம் தேவை என்று கேட்க, நான் க. நா. சு. விடம் வெளியிடாமல் வைக்கப்பட்டிருக்கும் என் கதையைக் கேட்டு பெற்றுக் கொள்ளச் சொன்னேன். க. நா. சு. அந்தக் கதைத் தாள்களை கறையான் அரித்து விட்டதாகக் கூறியதால், மறுபடியும்
எம். வி. வி. என்னை வந்து துளைத்தார். நினைவுச்சுவடு கதையைத் திருப்தியின்றி மாற்றி மாற்றி எழுதிய கடைசி versionக்கு முந்திய பிரதி தற் செயலாக அகப்பட, அதை அவருக்குக் கொடுத்தேன். அதுவே தேனி'யில் வெளிவந்த எனது இரண்டாவது சிறு
-
கதை......
தேனீயில் வந்த இரண்டாவது கதையின் கதையை இவ்வாறு கூறுகிறார் மெளனி. ...... &#3Dl_@ versioně(5 முந்தியபிரதியை’ என்னிடம் கொடுத்ததாய் சொல்கிறார். ஆகையால், அது சரியான தமிழில் இருக்காது என்கிற தொனி அவர் கூற்றில் இருக்கிறது. அவர் எந்தப் பிரதி கொடுத்திருந்தாலும் சரி, அது எந்தவித இலக்கண அமைதியும் இல்லாதது என்றுதான் நான் கண்ணதாசன் பேட்டியில் குறிப்பிட்டேன்.

ஆக, தேனீயில் வெளிவந்த இரண்டு சிறுகதைகளின் தமிழ் பிழையானதே என்று மெளனி நேராக ஒப்புக் கொள்ள விட்டாலும் மறைமுகமாக ஏற்றுக் கொண்ட தாகவே நான் கருதுகிறேன். தன்னால் பிழையற்ற தமிழில் எழுத முடியும் என்று அவர் சொல்லவே இல்லை. மெளனி கணையாழி பேட்டியில் மேலும் கூறுகிறார்:
'நான் கதை எழுதுவது என்பதே நாள் கணக்கில் ஏற்படுகிற சிரமமான விஷயமாக இருக்க, கதை எழுதி வைத்திருந்து விகடனுக்கும் குமுதத்துக்கும் அனுப்பி திரும்ப வந்து விட்டது' என்று நான் வருத்தப் பட்டதாக () எம். வி. வி. தன் பேட்டியில் கூறியிருப்பது உண்மை இல்லாத விஷயம்."

அவருடைய பேட்டியின் இந்தப் பகுதிதான் என் மனத்தைப் புண்படுத்தியது; அவர்மீது சிறிது கோபமும் உண்டாக்கியது._ஆனால், அவரிடம் எனக்குள்ள :மரியாதை காரணமாக நான் அவருக்கு அப்போது பதில் கூற விரும்பவில்லை.

அந்தப் பேட்டியின் தொடக்கத்திலேயே மெளனி "...ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளுக்கு உயரிய கதை எழுதி அனுப்பி திரும்பப் பெற்றால் எந்த மனோபாவம் _ கொள்ள வேண்டும்- psychological mistake என்று சொல்லக் கூடிய- தரமற்ற பத்திரிகைகள் அவை என்று துாற்றுவது rational ஆகுமா? ஆனால், இவன் இந்த முடிவிற்கு இந்தக் காரணம் முன்னிட்டுக் கொள்வது logical? தற்போது அநேக குழுவினரையும்... ஒரு reaction விளைவாகத்தான் காண முடிகிறது என்று கூறியிருப்பதை வைத்தே நாம் உண்மையை ஊகிக்கலாம்.

தேனியில் வெளிவந்த தன் இரண்டு கதைகளின் கதையை ஒரளவு விஸ்தாரமாக எழுதிய மெளனி, சிவாஜியில் ஐந்தாண்டு இடைவெளியில் (1954லிலும் 1959லிலும்) வெளியான தன் இரண்டு கதைகளைப் பற்றி ஒரு வார்த்தைகூட கூறவில்லை. ஏன் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்: எம். வி. வி. க்கு அவர் கதைகளை அனுப்பியதையும் எம். வி. வி. அவற்றை திருத்தம் செய்து சிவாஜி வார ஏட்டில் பிரசுரமாக உதவி யதையும் பற்றி மெளனி பேச விரும்பவில்லை. மெளனி சிவாஜி ஆசிரியர் கவிஞர் திருலோக சீதாராமை அதுவரை சந்தித்ததே இல்லை! -

கண்ணதாசன் பேட்டியில் நான், மெளனியின் கதை யில் ஒருவாக்கியமும் இலக்கண சுத்தமாக இல்லை. அவருக்குக் கைவந்த கதை வடிவம் கெடாமல் அதைத் திருத்த எனக்குச் சில நாட்கள் ஆயின' என்று குறை கூறியிருந்தேன். கணையாழி பேட்டியினால் அவர் தனக்கு இலக்கண சுத்தமாக எழுதத் தெரியும் என்பதை நிலை நாட்டவில்லை. மாறாக, என் கருத்துக்கு வலுக்கொடுப்ப தாகவே அவருடைய பேட்டி அமைந்துள்ளது.

மெளனியின் பேட்டியில் என்னைப்பற்றி அவர் கூறியுள்ள மற்ற விவரங்களுக்கு நான் பதில் கூறத் தேவையில்லை.
1936இல் மெளனியின் சிறுகதைகள் வெளியான போது அவை என்னுள் வலிய கிளர்ச்சியை உண்டாக்கின. புதுமையான காதல் கதைகளாகவே அவை என்னைக் கவர்ந்தன-அப்போது நான் கல்லூரி மாணவன். ஆனால், புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு. ப. ரா. , ராமையா முதலியவர்கள் மெளனியின் கதைகளில் வடிவம், மொழி, நடை, உத்தி முதலியவற்றை ரசித்தே அவரைப் பாராட்டினர். மணிக்கொடியில்தான் அவருடைய பெரும்பாலான கதைகள் வந்துள்ளன. முழுமையாக உருவான ஒரு பொருளாகவே (finished product) நான் அப்போது அவருடைய கதைகளைக் கண்டேன். ஆனால், ஆசிரியர் ராமையாவும், துணை ஆசிரியர் கி. ரா. வும் மெளனியின் கைப்பிரதிகளைப் பார்த்திருப்பார்கள். அவர்கள் அவருடைய இலக்கண மற்ற தமிழைப் பற்றி ஒன்றும் சொல்லாதது ஏன்? ராமையாவுடன் நெருங்கி இருந்த புதுமைப்பித்தன் முதலியவர்களும் ஏதும் பேசாதது ஏன்? 'மெளனி'யின் தமிழ் ஒருமாதிரி இருக்கும்; திருத்திப்போடுவோம்', என்று ராமையா அலட்சியமாக என்னிடம் கூறினாலும், அவர் அதைப்பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. மணிக்கொடிக்கு வந்து மெளனியின் கதைகள் அதிகம் பிழைபடாததாக இருந்திருக்குமோ? என் பார்வைக்கு வந்த நாலு கைப்பிரதிகளும் ஏதோ மனக்குழப்பத்தில் எழுதப்பட்டிருக்குமோ? கணையாழிப் பேட்டியில்கூட அவர் தன்னால் பிழையற்ற தமிழ் எழுத முடியும் என்று ஓங்கிச் சொல்லவில்லையே!

இலக்கியப் படைப்பாளிகளுக்கு மொழிப்புலமையோ, இலக்கண் அறிவோ கட்டாயத் தேவை என்று நான் கூறவில்லை; பேச்சு வழக்குக் கொச்சை மொழியும் இலக்கியம் ஆகும்-படைப்பாளியின் கையில். நான் கண்ட மெளனியின் தமிழ் இந்த விதிகளுக்கும் அப்பாற்பட்டது. மற்றொருவரால் திருத்தப்பட்டா,தான் விளங்கும். வாசகர்களுக்கு கிடைப்பது தட்டிக் கொட்டி ஒழுங்கு செய்யப்பட்ட பொருள்தானே!
மெளனியை சிறுகதையின் திருமூலர்' என்று புதுமைப்பித்தன் ஏதோ வேகத்தில், குறிப்பிட்டுவிட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்று அடக்கமானவர் திருமூலர். தமிழர்ல் எந்த ஆழத்துக்கும் செல்ல முடியும், எந்த உயரத்துக்கும் ஏற முடியும் என்பதைச் செய்துகாட்டியவர். தமிழ் மொழியை எவ்வளவு அழகாய்க் கையாள முடியும் என்பதை இன்றைய எழுத்தாளர்களுக்கும் உணர்த்தும் வழிகாட்டி. பிழையின்றி தமிழ் எழுத முடியாத ஒருவரைத் திருமூலரோடு ஒப்பிட்டுப் பேசுவது பொருத்த மற்றது. 'திருமூலரோடு என்னை ஒப்பிட்டு புதுமைப் பித்தன் ஏன் பேசினார் என்று அவரையே கேட்க வேண்டும் என்று மெளனியே கூறுகிறார்.

அதே புதுமைப்பித்தன் மற்றொரு சமயம், தமிழில் வந்துள்ள சிறுகதைகளில் பத்து நல்லவற்றைத் தேர்ந்து எடுக்கும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டால், என் சிறுகதைகளில் பத்தைப் பொறுக்கித் தருவதைத் தவிர வேறு வழி இல்லை'-என்று உரைத்ததாய் ச. பொதிய வெற்பன் எழுதிய புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாறு' கூறுகிறது. மெளனியை அவர் ஏன் மறந்தார்?

'கம்பனை ரசிக்கிறவர்கள் மெளனியையும் ரசித்துப் பாராட்ட வேண்டும்', என்று க. நா. சு. மொழிந்ததும் மிகமிகை. இதிகாசத்தை மகாகாவியமாகப் படைத்த மகாகவியைச் சில சிறுகதைகள் எழுதியவரோடு ஒப்பிட்டுப் பேசுவது அபத்தம். ஆர்வமிகுதியால் இவ்வாறு பேசுவது-சரியான விமரிசனக் கண்ணோட்ட் மும் ஆகாது.
மனம் சுதந்திரமாக இயங்கும் தன்மை வாய்ந்தது. கலைஞனின் மனம் தன் போக்கில் சஞ்சாரம் செய்யும்போது, எண்ணத்தின் எல்லையையும் கடந்து, பலவித கற்பனைகளையும், படிமங்களையும், பாவனைகளையும், உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் கைப்பற்றுகிறது. இந்த அனுபவத்தை அப்படியே எழுத்தோவியமாக்க வந்த மொழிக்கும் வல்லமை கிடையாது. தான் பெற்ற அனுபவத்தை வாசகரிடம் தாண்டிவிடும் ஒரு கருவியாக மொழி கலைஞனுக்குப் பயன்படுகிறது. வாக்குக்கு எட்டாத இறைவனை வாக்குப்படுத்தி வெற்றி கண்டவர் திருமூலர். இறைமையையும் அளக்கும் வலிமை வாய்ந்தது தமிழ்மொழி என்பதை அறிந்திருந்ததால் அவர் 'தமிழ் செய்யுமாறு: ஆண்டவன் தன்னை 'நன்றாகப் படைத்தான்' என்று அறிக்கையிடுகிறார். ஆனால், தமிழ் தெரியாத மெளனி தமிழ்மொழி கலை வெளியீட்டுக்கு இப்போதுள்ள நிலையில் செயல்பட முடியாது' என்றும், 'என் மூளை எழுதிப்பார்க்கும் சில அபூத impression களை express செய்ய மிகவும் சிரமமாக இருக்கிறது’ என்றும் கூறி தன் பலவீனத்தைத் தமிழின் பலவீனமாய்க் காட்டுகிறார்.

தமிழ் பல துறைகளிலும் வளர்ச்சி பெற வேண்டும் என்பது உண்மை; ஆனால், மெளனி சொல்லியுள்ள பொருளில் அல்ல.
இவை எல்லாம் என் கருத்துகள்; மற்ற சிலருக்கும் எனக்கும் உள்ள கருத்து வேறுபாடுகள். இவை ஒருபுறம் இருக்க, நான் இன்னும் மெளனியின் ரசிகன்; அவருடைய சிறு கதைகளை தன்னிறைவோடு படிக்கிற வாசகன், தமிழின் புதிய இலக்கியத்தில் அவருக்குச் சிறப்பான இடம் உண்டு என்றும் நம்புகிறேன். ஆனால், அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்று பண்டைப் புலவர் களின் பாணியில் அவரைப் போற்ற நான் விரும்பவில்லை. அவ்வாறு செய்வது, அவரோடும், அவருக்குப் பிறகும் எழுதியlஎழுதுகிற சிறந்த சிறுகதைப் படைப்பாளிகளுக்கு. அநியாயம் செய்வதாகும். .

சென்னையில் மெளனியின் கணையாழிப் பேட்டியை படித்த பிறகும் நான் தனியர்கவோ, அல்லது சில நண்பர் களுடனோ அவரை அவ்வப்போது சந்தித்துக் கொண்டு இருந்தேன். கண்ணதாசன் பேட்டியைப் படித்ததாய் அவர் காட்டிக் கொள்ளவில்லை. கணையாழி பேட்டியை பார்த்ததாய் நான் காட்டிக் கொள்ளவில்லை. எங்களுக்கு இடையில் வழக்கம்போல் செளஜூன்யமான நட்பு
நிலவியது.

ஒருமுறை தஞ்சை பிரகாஷ் உள்பட நாங்கள் ஐந்து பேர் மெளனியைச் சந்தித்தோம். வழக்கம்போல் அவர் எங்களை அன்பேடு வரவேற்றாலும், அவர் 'யாரையும் எதிர்பார்க்கவில்லை போலும்; அவருடைய முகத்தில் சோகம் பட்டையாக அப்பிவிட்டாற்போல் இருந்தது. அது என் வெறும் பிரமையாக இருக்கலாம். சுமார் நாற்பது ஆண்டுக் காலமாக நாங்கள் பழகுகிறோம். என்னை அவர் ரொம்ப சின்ன பையன் என்றார்; அவரை நான் இளைஞராய்க் கண்டேன். இப்போது நிலைமை மாறி விட்டது. என் தலைமுடி நரைத்துப் பின்னடைய, என் நெற்றி விசாலமாகி வந்தது; இன்னும் ஆங்காங்கு கருமுடி இருந்தது. அவருடைய தலைமுடி முற்றிலும் வெள்ளையானாலும் அடர்த்தியாக, கையால் ஒழுங்கு செய்யப்பட்டாற் போலிருந்தது. என் கண்கள் ஓரளவு பலவீனப்பட்டாலும், பார்வை மங்கவில்லை. அவருடைய கண்கள் பார்வையைக் குறைத்து விட்டன; எங்களைப் பார்க்கையில், வெறுமையைப் பார்ப்பவர் போலத் தோன்றியது. உதடுகளின் இருபுறமும் கோடுபோட்டாற் போல மடிப்பு விழுந்திருந்தது. எனக்கு ஒருவகைத் துன்பம் என்றால், அவருக்கு வேறுவகைத் துன்பம்; அது எங்களை முதுமைக்குத் தள்ளிக் கொண்டிருந்தது.

நேற்று ஜெயகாந்தன் வந்திருந்தார். அவருடைய கதை ஒன்று படித்தேன். இவர்கள் எல்லாம் என்ன எழுதுகிறார்களோ, என்ற மெளனி ஜெயகாந்தன்கதையின் முதல் இரண்டு வாக்கியங்களைக் கூறினார்: ‘the second sentence cancels the first sentence’.
அவருடைய இந்தக் கதை பிரபலமானது' என்றார் பிரகாஷ்.
இப்படி எழுதுவதால் பிரபலம் ஆகலாம் போல', என்ற மெளனி வீட்டுக்கு உள்பக்கம் பார்த்து யாருக்கோ குரல் கொடுத்தார்; எல்லோருக்கும் காபி கொண்டு வரும் படி கட்டளை இட்டார்.
"இங்கே வரும்போது சாப்பிட்டு வந்தோம், சார்' என்றேன்.
'அதனால் என்ன; என்றார் அவர். அதற்கு முன்னால் அவர் வீட்டில் காப்பி சாப்பிட்டிராத எனக்கு இந்தப் புதிய உபசாரம் சற்று வினோதமாக பட்டது.

சிறிது நேரத்தில் ஓர் இளைஞன் ஒரு டிரேயில் டபராடம்ப்ளர் காப்பியை ஜாக்கிரதையாகக் எடுத்து வந்தான். -
'எம். ஏ. லிடரேசர் பண்ணின பையன் இந்த வேலை செய்யறான்', என்றார் மெளனி. அவர் தொடர்ந்து ஒன்றும் கூறவில்லை. நானும் கேட்கவில்லை. எவ்வளவு நெருங்கிய நண்பர்களானாலும், அவர்களுடைய தனிப் பட்ட|குடும்ப அல்லல்கள் பற்றித் நானாக ஏதும் கேட்ப தில்லை. அவர்களே சொன்னால் கேட்டுக் கொள்வது என் பழக்கம். -
மேஜை மீது காப்பி டிரேயை வைத்த வாலிபனிடம், 'சாப்பிட்டானதும் எல்லாம் எடுத்துக் கொண்டு போக வேணும்', என்றார் மெளனி.
சாப்பிட்டானதும் டபார-டம்ப்ளர்களை டிரேயில் வைத்து எடுத்துப் போனான் இளைஞன்.


பிறகு கொஞ்சநேரம் ஏதோ பேசினோம். இடையில் மேஜை டிராயரைத் திறந்து ஒரு கடிதத்தை எடுத்துக் கொண்டு எனக்கு அருகில் வந்தார் மெளனி. அது அமெரிக்காவிலிருந்து வந்த கடிதம்; அதன் தலைப்பு நுனி கள் இரண்டையும் விரல்களால் கெட்டியாகப் பிடித்தபடி கடிதத்தை என்னிடம் காட்டி, இதைப்படி என்றார் அவT.
'கடிதத்தை என்னிடம் கொடுங்கள், சார், படிக்க சுலபமாக இருக்கும்', என்றேன்.

அவர் கொடுக்கவில்லை. இப்படியே படி”, என்றார்.
'கடிதத்தைத் துக்கிக் கொண்டு ஓடிவிட மாட்டேன். இங்கே கொடுங்கள்...... என்று சிரித்தேன்.

அவர் கடிதத்தை தன் கையிலிருந்து விடுவிக்க விரும்ப வில்லை: சும்மா இப்படியே படி, வெங்கட்ராம்!”

- அமெரிக்காவிலிருந்து ஆல்பர்ட் ஃபிராங்களின்
எழுதிய கடிதம் அது. தமிழில் தேர்ச்சி பெற்ற அந்த அமெரிக்கர் மெளனியின் சிறு கதைகளின்பால் பெரு மோகம் கொண்டார். மெளனியின் இரண்டு சிறுகதை களை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். கருமேகங்களுக்கு இடையில் ஒரு மின்னல்’ என்று மெளனியை அமெரிக்க வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி னார்; இரண்டு கதைகளும் நியூயார்க்கர் என்னும் அமெரிக்கப் பத்திரிகையில் வெளியாயின. தன் உத்தி யோகத்துக்கு ஒரு வருடம் சம்பளம் இல்லாத லீவ் போட்டு விட்டு, மெளனியின் மற்ற சிறுகதைகள் அனைத்தையும் மொழி பெயர்க்கப் போவதாய் ஆல்பர்ட் ஃப்ராங்ளின் கூறியிருந்தார். இந்தத் தகவல்களை மெளனி யும், க. நா. சு.வும் என்னிடம் கூறியிருந்தார்கள்.

--- அந்த அமெரிக்கர் எழுதிய கடிதத்தைத்தான் என் கண்களுக்கு முன்னால் காட்டிப் படிக்கும்படி சொன்னார்மெளனி. அவருடைய ஒரு கதையை மீண்டும் படித்ததாக வும், அது இந்தியத் தத்துவத்தை நுட்பமாகவும், அழகாக வும் பிரதிபலிப்பதாயும் ஃப்ராங்களின் பாராட்டி எழுதி யிருந்தார். நானும் பிரகாஷாம் படித்தானதும்: கடிதத்தை ஜாக்கிரதையாக மேஜை டிராயரில் வைத்து விட்டு மெளனி உட்கார்ந்தார்.

வெங்கட்ராம், அந்தக் கதையில் ஃபிராங்க்ளின் சொல்லும் அர்த்தம் வருகிறதா?’ என்று கேட்டார்.

கேள்வியை எதிர்பாராத நான் பதில் கூறத் தயங்கினேன். அது மெளனியின் எந்தக் கதை என்று இப்போது நினைவில்லை. அப்போது கதை நினைவில் இருந்தது. அது எந்த இந்தியத் தத்துவத்தையும் பிரதிபலிப்பதாய் எனக்குத் தோன்றவில்லை. நான் பதில் சொல்வதற்குள், மெளனி, அந்த அர்த்தம் வருகிறதா? என்று பலமுறை கேட்டுவிட்டார், ஆவலுடன்.

எனக்கு அப்படி தோன்றவில்லை...' என்றேன் தயக்கத்துடன்,
'அப்படி அர்த்தம் ஆவதாய் ஃபிராங்க்ளின் சொல்கிறானே!"
அது உங்கள் எழுத்தின் சிறப்பு, சார், உங்கள் எழுத்தின் பெருமை. விதவிதமான அர்த்தம் கொள்ளும் படி இருப்பதுதான் உயர்ந்த இலக்கியத்துக்கு லட்சணம்; இல்லையா சார்?' என்றேன்.
அந்த சோகத்தின் முகத்தில் ஒரு புன்சிரிப்பு உதித்தது. அதைக்காண எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அப்பால், எத்தனை நாட்களோ, மாதங்களோ,வருடங்களோ எதுவும் எனக்கு நினைவாகவில்லை. சிதம்பரம் கோயிலின் மேற்கு வாசலில் உள்ள மணிவாசகர் பதிப்பகத்தில் ஒரு மாலை நேரம் உட்கார்ந்திருந்தேன். இருட்டுவதற்கு முன்பு ஊருக்குப் புறப்பட வேண்டும் என்று பரபரத்துக்கொண்டிருந்தேன்.
தற்செயலாக, என் கவனம் தெருப்பக்கம் சென்றது. மெளனி கோயிலின் மேற்கு வாயிலை நெருங்கிக் கொண்டிருந்தார். யாரோ ஒருவர் அவருடைய இடது கையைப் பற்றி வழிநடத்திக் கொண்டிருந்தார். மெளனியோடு பேசுவதா வேண்டாமா என்று ஒரு நொடி தயங்கினேன்.

சிதம்பரத்துக்கு நான் வருவதே, ஆறு மாதத்திற்கு ஒருமுறை, ஒராண்டுக்கு ஒருமுறை என்றாகிவிட்டது. ஆகையால், அவரோடு சிறிதுபேசலாம் என்று எண்ணி அவரை நோக்கி விரைந்தேன்.
'சார், வெங்கட்ராம் வந்திருக்கிறேன் - என்று அவரை நெருங்கும்போதே குரல் கொடுத்தேன். அவர் நின்றார்.
என்னப்பா ஆளையே காணோம்?

'சிதம்பரத்துக்கு வருகிற வேலை அதிகமில்லை... நல்லபடி இருக்கிறீர்களா சார்!"இருக்கிறேன். கண் சரியாகத் தெரியவில்லை. துணை இல்லாமல் வெளியே புறப்பட முடியவில்லை...... y
அதே வெள்ளை முடி அலங்காரம். கருப்புக் கண்ணாடி அணிந்து, கைத்தடி வைத்திருந்தார் என்று ஞாபகம். மிகவும் இளைத்திருந்தார். பித்தான்கள் சரியாத போடப்படாத-அரைக்கைச்சட்டை, மேல் துண்டை இடுப்பில் கட்டியிருந்தார். நெற்றியில் திருநீற்றுப்பூச்சு. வயோதிகத்துக்கு உதாரணமான சிலையைச் செதுக்கப் பொருத்தமான உருவம்.
கோயில்-புதிய பழக்கமாக இருக்கிறதே?

விமோசனத்துக்கு வேறே வழி? பெரும்பாலும் தினம் வருகிறேன். உள்ளே வருகிறாயா?"

'இல்லை சார், ஊருக்குக் கிளம்புகிறேன்.

'மறுபடியும் எப்போது வருவாய்?

சொல்லமுடியாது. சிதம்பரம் வந்தால், உங்களைப் பார்க்கிறேன் சார்".
கட்டாயம் வா."

வருகிறேன்."

நான் பார்க்கையிலேயே, மெளனி ஆடலரசன் ஆலயத்துக்குள் நுழைந்தார்.

(ஆல்பர்ட் ஃபிராங்க்ளின் என்னும் அமெரிக்கர் மெளனியின் மற்ற சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவில்லை; வாசகர்கள் ஊக்கத்தோடு மெளனியின் இரண்டு கதைகளை வரவேற்காததால் நியூயார்க்கர்’ தொடர்ந்து வெளியிட மறுத்துவிடவே ஃபிராங்க்ளின் மொழிபெயர்ப்பைக் கைவிட்டார். இந்த தகவலை என்னிடம் கூறியவர் க. நா. சு. இந்த தகவல் சரியானதா என்று எனக்குத் தெரியாது).


நன்றி:rrn.rrk.rrn@gmail.comflow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்