Mar 6, 2017

பானை - இரா.முருகன்

 வழக்கம் போல் நடு ராத்திரிக்கு அப்புறம் தான் ரங்கம்மா மாடி ஏறினாள்.

சன்னமாகப் புகை வழியும் லாந்தரைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு படியாகக் கால் எடுத்து வைத்தபோது வலித்தது. படியிலிருந்து விழுந்து விடுவோமோ என்ற பயமும் கூடவே எட்டிப் பார்த்தது.

‘இன்னும் எத்தனை நாள் இப்படி அவதிப் படணுமோ?’

ரங்கம்மா முனகிக் கொண்டாள். இதற்கு ஏதாவது பதில் கிடைக்கும் என்பதுபோல் அடைத்துக் கிடந்த மாடிக் கதவை உற்றுப் பார்த்தாள்.

அரையிருட்டில் குறுகிக் கிடந்த மாடியறை வாசல். இரண்டு பக்க்த்திலும் பெரிய மண் பானைகள் அடுக்கி, கதவுக்குக் குறுக்கே நீளமான இலைக் கட்டு சார்த்தி வைத்திருந்தது அங்கே. ஏதோ வினோதமான படையல் நடக்கிற இடமாகத் தோன்றிய அறை
வாசலில் புதுப்பானைச் சில்லுகள் சிதறிக் கிடந்தன. பானை உடைந்த சத்தம் கேட்டுத்தான் ரங்கம்மா படி ஏறி வந்தது.

’ரெண்டு வாரமா ஆளு, அம்பு, போக்குவரத்துன்னு வீடு அமர்க்களப்பட்டுது. நீயும் சும்மா இருந்தே. மவராசனைக் கட்டி எடுத்துத் தூக்கிப் போய் எரிச்சு பாலும் ஊத்தியாச்சு. வந்த சனமும் இந்தோ அந்தோன்னு புறப்பட்டுப் போயிடுத்து. நீ மறுபடியும் ஆரம்பிச்சிட்டே..’.

ரங்கம்மா கீழே நொறுங்கிக் கிடந்த பானைத் துண்டுகளைக் குனிந்து எடுத்தபடி மறுபடியும் கதவைப் பார்த்துக் கேட்டாள்.

இதற்காவது பதில் வந்தே ஆக வேண்டும் என்பதுபோல் எதிர்பார்ப்பில் அவள் நின்ற மாதிரி இருந்தது.

ரங்கம்மாவின் வீட்டுக்காரன் சென்னகேசவன் வாயில் புற்றுநோய் முற்றி, ஏக அவதிப்பட்டு இறந்து போய்ப் பதினைந்து நாளாகிறது.

வெறும் சென்னகேசவன் என்றால் தெரியாது. பொடிக்கடை சென்னு.;

‘மாப்பிள்ளை இருக்காரே அவர் ஜில்லா முழுக்க பட்டணம் பொடி சப்ளை பண்ற பெரிய கை.யாவாரம்... வீட்டு வாசல்லே கடை.. என்னேரமும் கூட்டம் அலைமோதும்..அப்பா இல்லே..அம்மாவும் ரெண்டு வருஷம் முந்தி போய்ச் சேர்ந்தாச்சு... அங்கே இனிமே உன் ராஜ்ஜியம் தாண்டி ரங்கம்மா’.

கல்யாணமாகி சென்னகேசவனுடன் ஜட்காவில் வந்து இறங்கியதும் கண்ணில் பட்டது இடிந்து கொண்டிருக்கும் பழைய ரெண்டு கட்டு வீடு. படியேற, வாசல் திண்ணையில் தட்டி வைத்துத் தடுத்து ஒரு பீங்கான் ஜாடியில் பொடியும், சுற்றி அழுக்கு போத்தல்களில் கிச்சலி மிட்டாயும், கடலை அச்சும் பரத்தித் திண்ணைக்குக் கீழே மரப் பெஞ்சு போட்ட கடை. ரங்கம்மாளின் ராஜ்ஜியம் அவ்வளவு தான்.

‘எளவெடுத்த பொடிக்கடை. வித்தது ரெண்டு தம்பிடிக்கும் ஒரு தம்பிடிக்கும். சிமிட்டா சிமிடாவா அள்ளி பல்லு சந்துலே அந்தச் சனியனை வச்சுத் தேச்சுத் தேச்சு வாய் புண்ணாகிப் போயி..பாழாப் போன மனுசன் உசிரையே விட்டாச்சு.. இங்கே பேயையும் பிசாசையும் குடித்தனம் வச்சுக்கிட்டு நான் கெடந்து மல்லாட வேண்டி இருக்கு’.

ரங்கம்மா கொஞ்சம் குரலை உயர்த்தினாள். கையில் பிடித்த லாந்தர் ‘ஆமா.. ஆமா’ என்று அலை பாய்ந்தது.

‘பேய் பூதம்னு சொன்னா மொகரையைப் பேத்துடுவேன் .. நானும் உன்னிய மாதிரி பொம்பளை தான்’.

இருட்டிலிருந்து முணுமுணுப்பாகப் பதில் வந்தது இப்போது.

‘பொம்பளை.. நீ?..’ ரங்கம்மா வராத எச்சிலைக் காறி உமிழ்ந்தாள். ‘எங்கே.. சடசடன்னு ஒரு குடம் தண்ணி எறச்சு தொட்டியிலே ஊத்து.. கல்லு உரல்லே இட்டலிக்கு மாவாட்டிக் கொடு.. மெஸ்ஸிலே சாப்பிட வர்றவங்களுக்கு எலை நறுக்கித் துடைச்சு வய்யி.. அப்புறம் சொல்லு பொம்பளைன்னு..’

உரத்த குரலில் ரகசியம் பேச முயற்சி செய்வது போல ரங்கம்மா சொன்னது பிசிறடித்து மூச்சு வாங்கியது. லாந்தரை இறுகப் பிடித்துக் கொண்டு கதவையே வெறித்தபடி நின்றாள் அவள்.

‘பெரிய மெஸ்ஸு.. சோத்துக்கடைன்னு சொல்லேன்.. மெஸ்ஸும் மசுரும் பாழை போறது..’

உள்ளே இருந்து வந்த குரலில் எகத்தாளம் ஏறி இருந்தது.

‘உனக்குத் தெரிஞ்சதெல்லாம் மண்ணாங்கட்டியும் மசிரும் தான்.. வாவரசி தலை முடியை அறுத்துப் போடறது.. சட்டி பானையை உடைக்கறது..சட்டி பானையை உடைச்சு நொறுக்கறது.. வேறே என்ன தெரியும் உனக்கு? சோத்துக்கடைன்னா எளக்காரமா என்ன? எனக்கும் அந்த மனுசருக்கும் இத்தனை நாள் பசி, பட்டினி இல்லாம காப்பாத்தினது அந்தக் கடைதான்.. இனியும் எனக்கு அதான்.. உக்கார வச்சு எனக்கு ஆயுசுக்கும் கஞ்சி ஊத்த பிள்ளை குட்டியா கொடுத்துட்டுப் போனான் பொசை கெட்ட மனுசன்..’

ரங்கம்மா லாந்தரைத் தரையி ல் வைத்து விட்டுத் தலை தலையாக அடித்துக் கொண்டாள்.

கல்யாணமாகி இங்கே நுழைந்த மறுநாளே திண்ணைப் பொடிக்கடையும், மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் பாகம் பிரித்த படி வந்து சேரும் பங்கு  அரிசியும் மட்டும் போதாது, இரண்டு உசிரை இழுத்துப் பிடிக்க என்று தெரிந்து கொண்டவள் அவள்.

‘என்ன செய்ய.. நமக்குன்னு விதிச்சது இதான்.. அம்மா இருந்த வரைக்கும் கையில் மிச்சமிருந்த நகை, நட்டு, பண்டம், பாத்திரம் ஒண்ணு விடாம வித்துத் தின்னோம். பால் கிண்டி கூட விட்டு வைக்கலேன்னா பாத்துக்கோ.. இப்ப உள்ளபடிக்கு ஒண்ணுமில்லே தான். நீதான் சொல்லேன்.. வரும்படிக்கு.என்ன பண்ணலாம்?..’

முன் வழுக்கையும், அழுக்கு நீர்க்காவி வேட்டியுமாக அரையில் சதா சொரிந்து கொண்டு பொதபொதவென்று மாமிச மலை போல ஒரு புருஷன்... புத்தியும் மட்டுதான்.. அவனுக்கும் சேர்த்து ரங்கம்மா தான் யோசிக்க வேண்டியிருந்தது.

‘சோத்துக்கடை போடலாம்’.

‘ஊருலே ஏற்கனவே ரெண்டு மூணு கடை அபபடி இருக்கே..’

‘இருக்கட்டுமே.. கொஞ்சம் வித்தியாசமா கடை போட்டா இங்கேயும் நாலு பேர் படியேற மாட்டாங்களா?’

இந்த வித்தியாசமான யோசனையும் ரங்கம்மா தான் சொன்னது - ‘மணக்க மணக்க மண் பானையிலே சோறு வடிச்சு, புளிக் குழம்பு வச்சா ருசியே அலாதிதான்’.

அது நல்ல யோசனைதான் என்று சென்னகேசவனுக்கும் பட்டது. ஆனால், நடத்த இடம்?

வீட்டு உள்கட்டு பெண்சாதி, புருஷன் உட்கார்ந்து, படுத்துக் குடும்பம் நடத்தப் போதுமானது. ஆனால் பத்துப் பேரை உட்கார வைத்து இலை போட்டுப் பரிமாறத் தோதுப்படாது. பின்னங்கட்டு பாதிக்கு மேல் இடிந்து எருக்கஞ்செடி முளைத்திருந்தது.

‘மாடியிலே கடை போடலாமா?’

ரங்கம்மா அப்படிச் சொன்ன அடுத்த வினாடி மாடியில் ஏதோ தடதடவென்று தரையில் உருளும் சத்தம்.

ரங்கம்மா கலவரப்பட்டுப் போனாள்.

‘என்ன சத்தமுங்க அது?’

‘ஒண்ணுமில்லே.. நீ சொன்னது பெரியாத்தாவுக்குப் பிடிக்கலே.’

சென்னகேசவன் சாதாரணமாகச் சொன்னபடி மாடியைப் பார்த்தான்.

‘அது ஏதோ சின்னப் புள்ளே தெரியாமச் சொல்லிடுச்சு.. நீ எதுக்குக் கெடந்து குதிக்கறே..பேசாம இரேன்..’

உரக்கச் சொல்லிவிட்டுத் தலையைத் திருப்பி ரங்கம்மாவைப் பார்த்துச் சிரித்தான் அவன்.

‘மாடியிலே யாருங்க?’

ரங்கம்மா உடம்பு முழுக்கப் பயம் கவிந்து வர, சென்னகேசவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

‘ஒண்ணுமிலே.. சொல்றேன்.. நீ இப்படி உக்காரு.. ஒண்ணுமில்லேன்னேனே .. அப்படித்தான் ..’

அவளை சுவரில் சாய்ந்து ஆசுவாசமாக் உட்கார வைத்துவிட்டு வாசலுக்குப் போய் எலுமிச்சை மிட்டாய் எடுத்து வந்து கொடுத்தான். அவள் தலையை வருடிக் கொண்டே சொன்னான் -

‘பெரியாத்தா ரொம்ப வருசமா இங்கேயே தான் இருக்கு.. எங்க முப்பாட்டன் சம்சாரம்.. தாத்தாவோட அப்பாவுக்கு அம்மா’.

‘இத்தினி நாள் எப்படி உசிரோட இருக்காங்க?’

ரங்கம்மா புரியாமல் பார்த்தாள்.

‘அது செத்துப் போய் எத்தனையோ வருசம் ஆச்சு.. நடு ராத்திரியிலே பின்னாலே போனபோது கிணத்துலே தவறி விழுந்துடுச்சாம்.. கெட்ட சாவு இது.. கடைத்தேத்த காசிக்குத்தான் போவணும்... அய்யருக்கு நெறைய தட்சணை தரணும்னாங்களாம்..யார் கிட்டே அம்புட்டுப் பணம் இருந்துச்சு.. என்ன செய்யணும்னு வழிவகை புரிபடலை..  கடைசியா நடு சாமத்துலே உடுக்கை அடிச்சுக்கிட்டு வந்த சாமக் கோடாங்கி மூலமா பெரியாத்தா கிட்டேயே கேட்டாங்களாம்.. அது சொல்லிச்சாம்... போங்கடா போக்கத்த பயலுவளா.. நீங்க ஒண்ணும் என்னைக் கரை சேர்க்க வேணாம்..நானும் இந்த வீட்டை விட்டுப் போகப் போறதில்லே.. எங்க வீட்டுக்காரர் கட்டினது தானே.... நான் பாட்டுக்கு எப்பவும் போல மாடியிலே இருந்துக்கறேன்.. உடம்பு இல்லாட்ட என்ன.. எனக்கும் இருக்க எடம் வேணாமா? ...நாம ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரிச்சுப் போயிடலாம்.. அப்படீன்னுடுச்சாம் பெரியாத்தா..’

ரங்கம்மா திகிலோடு மாடியறைக் கதவைப் பார்த்தாள். இப்படி மேலே ஒரு உடம்பில்லாத சீவனும், கீழே மனுஷர்களுமாக அவரவர் காரியத்தைப் பார்த்துக் கொண்டு போகிற ஏற்பாடு பற்றி என்ன நினைத்தாலும் மனம் சமாதானமாகவில்லை.

‘நீங்க பாத்திருக்கீங்களா?’

ராத்திரியில் பக்கத்தில் படுத்துக் கிடந்த சென்னகேசவனிடம் கேட்டாள். அவளை மெல்ல அணைத்துக் கொண்ட கையில் பொடி வாடை வீசியது அப்போது.

‘எதைச் சொல்றே .. பெரியாத்தாவையா.. நான் மாடிப்படி ஏறினாலே அபூர்வம்.. நடந்தாலே இரைக்குது சரீர வாகு..’

‘ஏங்க .. அய்யரைக் கூப்பிட்டு.. எங்கம்மா சிறுவாடு சேர்த்து வச்சிருக்கே பணம்.. அதை வச்சுக்கிட்டு..’

சென்னகேசவன் தூங்கியிருந்தான். எல்லா விதத்திலும் ஏமாற்றமான ராத்திரி அது. அப்புறமும் தான்,

பின்னங்கட்டில் தென்னை ஓலைப் பந்தல் இறக்கி, த்ரையைக் கொத்திச் சீராக்கி தட்டி மறைப்பில் சமையலும் செய்து சோத்துக்கடை நடத்தலாம் என்று தீர்மானமானது. ரங்கம்மா தான் முன்கை எடுத்து எல்லாம் செய்தது. சென்னகேசவன் எப்போதாவது தம்பிடிக்குப் பொடியும் காலணாவுக்குக் கடலை அச்சும் எடுத்துக் கொடுத்துக் கொண்டு, சதா வாசல் பெஞ்ச் வயசாளிகளோடு பேசிக் கொண்டிருந்தான்..

முதலில் சாப்பிட வந்தது ஒரு கோர்ட் கிளார்க். பரமக்குடிக் காரன். சகாய விலையில் வீட்டுச் சாப்பாடு போலக் கிடைக்குமா என்று படியேறி வந்தவனுக்கு ரங்கம்மா கைப் பக்குவம் பிடித்துப் போக, அவன் சிநேகிதர்களான தாலுகா கச்சேரி உத்தியோகஸ்தர்கள் சில பேரும் வருவது வாடிக்கையானது.

உள்கட்டில் காய்கறியும் இலைக்கட்டும் குவித்துப் போட்டு இடத்தை அடைத்துக் கொண்டபோது, ஒரு பிரயோஜனமும் இல்லாமல் சும்மாவே பூட்டி வைத்திருக்கும் மாடியைப் பார்த்துப் பார்த்து ரங்கம்மாள் பொருமுவாள்.

‘மாடி வேணாம்.. அங்கே கதவு முன்னாடி வராந்தாவிலேயாவது இதை எல்லாம் போட்டு வச்சுக்கலாமா?’

ஆசை ஆசையாகப் பக்கத்தில் படுத்துக் கொண்டு கேட்டபோது சென்னகேசவன் பதிலே சொல்லாமல் குரங்கைப் போலப் பல்லை வெளியே தள்ளிப் பொடியை ஈஷிக் கொண்டான். சுவாதீனமாக அவள் புடவைத் தலைப்பில் எச்சில் விரலைத் துடைக்க, குமட்டிக் கொண்டு வந்தது ரங்கம்மாவுக்கு.

‘சே ... என்ன மனுஷன்... அந்த கோர்ட் கிளார்க் வந்தாலே ஜவ்வாது மணக்கும்..  ஜவ்வாதெல்லாம் வேணாம்.. பொடியை நிறுத்தினாலே போதும்..’

சென்னகேசவன் மாடியை உபயோகப் படுத்திக்கொள்ள சரியென்று சொல்லா விட்டாலும் ரங்கம்மா சந்தையில் போய் புதுச் சட்டியும் பானையும் வாங்கி வந்து மாடி வராந்தாவில் வைத்தாள். இலைக் கட்டைக் கதவுக்குக் குறுகே நிறுத்தினாள்.

‘எதுக்கு என் வாசலை மறிச்சு கண்டதையும் போட்டு வச்சிருக்கே?’

ஒரு சாயந்திரம் ரங்கம்மா காய் நறுக்கிக் கொண்டிருந்தபோது  பின்னாலிருந்து மொணமொணவென்று சத்தம். என்னமோ, ரங்கம்மாவுக்குப் பயமே வரவில்லை.  யாரோ வலுச் சண்டைக்கு இழுக்கிற நினைப்பு. சூடாக நாலு வார்த்தை கேட்டால், இந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார்கள்.

‘சட்டி பானையை தலையிலே வச்சுக்கிட்டா திரிய முடியும்? சும்மாதானே கிடக்கு வராந்தா.. நான் அங்கேதான் வைப்பேன்..’

முணுமுணுத்தபடி அவள் அடுத்த காயை நறுக்க எடுத்தாள் அப்போது. அரிவாள்மனை விரசாகப் பின்னால் நகர்ந்து விரலைப் பதம் பார்க்க, தரையை நனைத்தது ரத்தம்.

‘வீட்டுக்கு வந்த பொண்ணோட விரலை வெட்டப் பார்த்த ஈவிரக்கமில்லாப் பாவி தானே நீ.. அன்னிக்கு ரத்தம் சிந்த வச்சே..இன்னிக்குப் புதுப் பானையைப் போட்டு உடச்சிருக்கே.. சொல்லு உனக்கு என்ன கோராமை.. இப்படிக் கெடந்து என்னியப் படுத்துறியே..’

இருபத்து ஐந்து வருஷம் முந்திய, விரல் அறுபட்ட அந்த சாயங்காலத்தையும், பானை உடைபடும் இந்த ராத்திரியையும் ஒரு கணத்தில் நேர்கோட்டில் நிறுத்தி, ரங்கம்மா பதிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.

’எனக்கு வாடை பிடிக்கலே....  சத்தம் தேய்ந்து வந்த பதில்.

அதுதானா விஷயம்? ரங்கம்மா தலையை ஆட்டிக் கொண்டு சிரித்தாள்.

சாப்பிட வருகிறவர்கள் ருசிக்கேற்றது போல புதிது புதிதாகச் சமைக்க வேண்டியிருக்கிறது. எங்கே பார்த்தாலும், ஜன வித்தியாசமில்லாமல் கவிச்சி பழகி வருகிறது. வருகிறவர்கள் கோழியும் மீனும் மண் சட்டியில் ஆக்கித் தரச்சொல்லிக் கேட்கிறார்கள். காசு கொஞ்சம் அதிகமானாலும் சரிதான். கொடுத்து விடுகிறோம் என்று நச்சரிக்கிறார்கள். பருப்பும், புளிக் குழம்பும் அலுத்துப் போகிறது. மீனும் சைவம் தான். வேறு ராஜ்ஜியங்களில் அப்படித்தான் சொல்கிறார்களாம் ..

ரங்கம்மா வீட்டில் கவிச்சி சேர்த்துக் கொள்வது உண்டுதான். சென்னகேசவனுக்கோ அந்த வாடையே சுத்தமாகப் பிடிக்காது. பூண்டு கூடப் பக்கத்தில் வரக் கூடாது.

கோர்ட் கிளார்க் பூண்டு ரசத்துக்காக உயிரையே கொடுப்பான். சிரிப்பும், வார்த்தையில் சீண்டலுமாக அவன் சாப்பிட வந்தாலே ரஙக்ம்மாவுக்கு மனசு கிறங்கிப் போகும். சென்னகேசவனும் கோர்ட் உத்தியோகத்துக்குப் போய் ஜவ்வாது பூசிக் கொண்டு .. அதற்கெல்லாம் நாலெழுத்து படித்திருக்க வேண்டும். .. பூண்டு பழக வேண்டும்.

‘கிளார்க்கனுக்காக வீட்டிலே பூண்டை நுழைச்சே. இப்போ எவனை வசியம் பண்ண மீனும் முட்டையும்?’

பெரியாத்தா சிரிக்கும் சத்தம். கதவு மெல்ல அதிர்கிறது.

‘பாழாப் போனவளே.. இந்த வயசிலே நான் எவனை வசியம் பண்ணனும்? தலை நரைச்சு, மாரு தொங்கி.. வசியம் பண்றேனாம்... வசியம் என்ன பேச்சு பேசறே..’

ரங்கம்மா கதவில் அறைந்தபடி சொன்னாள்.

சென்னகேசவன் போய்ச் சேர்ந்த அப்புறமும் மண்பானைச் சமையல் மெஸ் சுத்த சைவமாகத் தடுமாறிக் கொண்டிருப்பதை விட, மீனும் முட்டையும் சேர்த்துக் கொள்வதாக மாறலாம் என்று தீர்மானம் எடுத்து,அவள் தான் காலையில் மீன்காரனைக் கூப்பிட்டு வஞ்சிரம் வாங்கினாள்.

’நாத்தம் கொடலைப் புடுங்குது’

பெரியாத்தா திரும்பவும் அழுத்தமாகச் சொன்னாள்.

‘புடுங்கற எடத்துலே ஏன் இருக்கணும்?’

‘நான் எங்கே போக?’

‘அப்பச் சும்மா இருக்கணும். ஏன் புதுப் பானையைப் போட்டு உடச்சே?’

‘நான் எங்கே உடச்சேன்? பூனை, எலி ஏதாச்சும் தள்ளியிருக்கும்’.

‘இத்தனை காலமா இல்லாமப் புதுசா இன்னிக்கு எலியும் பூனையும் இங்கே அடைய வருதாக்கும்?’

‘இந்த ரூம்புள்ளே இருக்கு அதெல்லாம்’.

’ரூம்புக்குள்ளேயா.. நீதான் அங்கே யாரையாச்சும் அடைய விட்டுடுவியாக்கும்?’

‘ஏன்.. நீயும் கிளார்க்கனும் அன்னிக்கு உள்ளே தானே வந்தீக?’

கதவுக்குப் பின்னால் இருந்து சின்னச் சீறலாக வெளிப்பட்டது குரல். இதற்கு மேல் அது பேசாது.  ரங்கம்மாவுக்குத் தெரியும். அங்கே சுற்றி, இங்கே சுற்றி தினசரி இங்கே தான் முடியும்.

‘ஏண்டி வங்கெழட்டுத் தேவடியாளே,,, அபாண்டமாப் பழி போடறியே..எலைக்கட்டை எடுக்கப் படி ஏறினவளுக்கு ஒத்தாசை செய்ய ஆம்பளை ஆளு கூட வந்தா என்ன பேச்செல்லாம் பேசறே.. உனக்கு நாக்கு இருந்தா அழுகிடும்.. நாசமாப் போயிடுவே..’

ரங்கம்மா கேவலும் அழுகையுமாகக் கையை நெரித்தாள்.

இருபத்தைந்து வருடம் முந்திய சமாசாரம் அது. பதிவாக வருகிறவர்கள் சாப்பிட்டுப் போயிருக்க, கோர்ட் கிளார்க் நேரம் கழித்து வந்த ராத்திரி. புழுக்கம் தாங்காமல் சாயந்திரம் குளித்து விட்டுத் தலைமுடியை நெகிழ்த்திக் கட்டியிருந்தாள் ரங்கம்மா. செழுமை பூசியிருந்த உடம்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் புதிதாகத் தைத்து வாங்கிய கிளிப்பச்சை ரவிக்கை திணறிக் கொண்டிருந்தது.

சோறு பரிமாறப் பாத்திரத்தை எடுக்கும்போது தான் சாப்பிட விரிக்கும் வாழை இலை தீர்ந்து போனது நினைவு வந்தது. மேலே போய் எடுத்து வர வேண்டும்.

வாசலில் சென்னகேசவன் வழக்கம் போல் கிழவர்களுடன் மாட்டு வாகடம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். இன்னும் ஒரு மணி நேரமாகும் அவன் கடை கட்ட.

‘கொஞ்சம் மாடியிலே போய் எலை எடுத்துத் தர்றீங்களா?’

‘ஓட்டமும் நடையுமாக வாசலுக்குப் போய் சென்னகேசவனைக் கேட்டாள். அவனால் முடியாது என்று தெரியும் தான். கேட்டுக் கொண்டிருக்கிற யாராவது உதவிக்கு வர மாட்டார்களா?

‘வாங்க, நான் வரன்’.

சாப்பிட உட்கார்ந்த கோர்ட் கிளார்க் எழுந்தான்.

கொஞ்ச நாளாகவே அவன் பார்வை சரியில்லை. கண்ட இடத்திலும் மேய்கிறது. முந்தானையை இழுத்து விட்டுக்கோடி. ஓரமா உக்காந்து மாரைப் பாக்கறான் கிளார்க்கன்... பரிமாற்ற போது பொடவையை இப்படி தெரச்சுக்காதே.. அவன் எங்கே உத்துப் பாக்கறான்னு நான் சொல்லணுமா..’

பெரியாத்தா கூடவே தொடர்ந்து சத்தம் போட்டாலும், ரங்கம்மா மனதில் ஏதோ குறுகுறுவென்று ஓடிக் கொண்டு தான் இருந்தது.

’வாங்க, எலை எடுத்துட்டு வந்துடலாம்’

அவள் கேட்கவில்லையோ என்பது போல் கொஞ்சம் நெருங்கி வந்து இன்னொரு முறை சொன்னான் கோர்ட் கிளார்க். ஜவ்வாது வாசனை ரங்கம்மாளைக் கிறங்கடித்துக் கொண்டிருந்தது.

‘நீங்க இருங்க.. நான் போய் எடுத்தாறேன்’, ரங்கம்மா நகர்ந்தாள்.

‘பொய்.. முழுப் பொய்.. நீ தலயை குனிஞ்சு சிரிச்சுக்கிட்டு நாலு படி ஏறி அவனைத் திரும்பப் பார்க்கலே? முடி வேறே முன்னால விழுந்து வா.. வான்னு அவனைக் கூப்பிடுது..’

தொடர்ச்சியாக உள்ளே இருந்து கெக்கலி கொட்டிய சிரிப்பு.

‘இல்லே .. நான் அப்படிப் பார்க்கவே இல்லே.. மேலே போனதும் தான் எனக்கே தெரிஞ்சது, பின்னாடியே வந்திருக்கான்னு.... இந்த எலைக்கட்டு தானே.. எடுத்துக்கட்டுமான்னு கேட்டான்..’

‘அப்படி இல்லேடி ரங்கம்மா.. குளிச்சியா? உன் தலைமுடி சில்லுன்னு கெடக்குதுன்னு தோள்லே கை வச்சான்.. இந்த எலைக்கட்டு தானே..எடுத்துக்கட்டுமான்னு கீழே யாருக்கோ கேக்கணும்னு சத்தமாச் சொன்னான்.. நீ தலையை அவன் தோள்லே சாய்ச்சு கன்னத்திலே ஈர முடியை எழைய விட்டபடி கண்ணை மூடிக்கிட்டே..’

’கிடையவே கிடையாது.. நான் முன்னாலே போறேன்.. பார்த்து எறங்கி வாங்கன்னு ரெண்டு கையாலேயும் எலைக் கட்டைத் தூக்கிக்கிட்டு கீழே இறங்கினான்..’.

‘அவனா.. பின்னாலே நின்னு சேத்துப் பிடிச்சுத் தலைமுடியிலே முகத்தைப் பொதச்சுக்கிட்டு ரெண்டு கையாலேயும் உன்னைக் கட்டித் தூக்கிக்கிட்டு இந்த ரூம்புக்குள்ளே வந்தான்.. பிடிச்ச பிடியிலே கிளிப்பச்சை ரவிக்கை கசங்க, நீ அவன் தோளை வளச்சுப் பிடிச்சுக்கிட்டே.. அப்புறம் உள்ளே தரையிலே..’

ரங்கம்மா காதைப் பொத்திக் கொண்டாள், அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

’கொஞ்சம் கூட ஈவிரக்கம் இல்லாமே மனசு போனபடி பொய் சொல்றியே.. நீ நரகத்துக்குத் தான் போவேடி.. நல்ல கதியே வராது உனக்கு..’

அன்றைக்கு கோர்ட் கிளார்க் சரியாகச் சாப்பிடாமல் திரும்பிப் போனான். ரங்கம்மா ப்ரிமாறும்போது அவளுக்கு வியர்த்து விறுவிறுத்துப் படபடவென்று வந்தது. அன்றைக்கென்று பார்த்து ஜமாபந்திக்கு வந்த பக்கத்து கிராமக் கர்ணம், முன்சீப் என்று ஏழெட்டு பேர் அடுத்த பந்திக்குச் சாப்பிட வந்தார்கள்.

உடம்பு அசதியாகப் படு படு என்றது. கைகால் ஓய்ந்து வந்தது. இருந்தாலும் ரங்கம்மா அரிசி களைந்தாள்.

‘திருப்தி தானே.. இப்பத் திருப்தி தானே.. படுத்து எழுந்தாச்சில்லே..’

பெரியாத்தா குரல் எல்லாத் திசையில் இருந்தும் வந்தது.

‘நான் ஒண்ணும் செய்யலே.. ஒண்ணும் செய்யலே.. இலை எடுத்துக்கிட்டு வந்தேன்.. அம்புட்டுதான்..’

ரங்கம்மா திரும்பத் திரும்ப முனகினாள்.

பெரியாத்தா அம்மியிலிருந்து மிளகாய் விழுதைக் கண்ணில் தெறித்து எரிய வைத்தாள். உலைநீர் வடிக்கும்போது, சூட்டோடு காலில் சிந்த வைத்தாள். கோட்டையடுப்பில் தீயை வால்முனி போல ஹோஹோவென்று வளைத்து உயர்ந்து ஆட வைத்தாள்.

‘சோறு விக்கறியா .. இல்லே, கறி விக்கறியா..? .. தொடக் கறி, மார்க் கறி, உடம்புக் கறி..’

நெருப்போடு சேர்ந்து முகமும் உருவமும் மட்டுப்படாமல் பெரியாத்தாவும் ஆடினாள்.

‘அபாண்டமாச் சொல்லாதே.. போயிடு.. போயிடு..’

ரங்கம்மா பின்னால் திரும்பி திரும்பிப் பார்த்தபடி முனக, பெரியாத்தா இன்னும் பெரிதாகச் சிரித்தாள்.

எப்படியோ முடித்து, வந்தவர்களை அனுப்பி விட்டு ரங்கம்மா உள்கட்டுச் சுவரில் சாய்ந்து தீனமாக அழுதபோது, பின்னால் வந்து, ‘சிறுக்கி முண்டே.. பின்னஞ்சந்து வரைக்கும் தலை முடி நீளமா வளர்த்துக்கிட்டு எவனைக் கட்டிப் போடலாம்னு அலையறியேடி.. வெக்கமா இல்லே.. படுத்து எளுந்து வந்து அடுப்பு நாச்சியா கிட்டே வெக்கமில்லாம நிக்கறே .. தலை முளுக்க. மேல் முளுக்க தூசி துப்பட்டை.. ரூம்புக்குள்ளே இருந்ததெல்லாம் உம்மேலதான்.. போய்க் குளிச்சுட்டு வாடி..’ என்று நடு ராத்திரிக்குக் கிணற்றடிக்குத் துரத்தி விட்டாள்.

’என்னை விட்டுடு.. விட்டுடு.. நான் சுத்தமானவ.. தப்பாப் பேசாதே.. போயிடு..’

ரங்கம்மா அழுது கொண்டே கிணற்றில் தண்ணீர் சேந்தினாள். உடை முழுக்கக் களைந்து விட்டு வாளி வாளியாகத் தலையில் கவிழ்த்துக் கொண்டாள். சுவர்க்கோழிகள் தறுதலையாகச் சீழ்க்கை ஒலியெழுப்பிச் சிரிக்க, குறி விரைத்த நாய்கள் வெளியே பெட்டைக்காக குரைத்துக் கொண்டு ஓடின. மூத்திர நெடியைச் சுமந்து கொண்டு காற்று சுற்றி அடித்தது.

உள்கட்டுக் கதவு திறக்க உருவம் சிதைந்து புகையாக  பெரியாத்தா மிதந்தபடி கிணற்றடிக்கு வந்தாள்.

‘இந்தத் தலைமுடி தானே குடி கெடுக்குது.. வேணாம்.. இது உனக்கு வேணாம்..’ . பெரியாத்தா அரிவாள் மனையை வீசியபடி நெருங்கினாள்.

‘வேணும்.. எனக்கு முடி வேணும்..’ ரங்கம்மா ஈரத்தில் நடுங்கியபடி நின்றாள்.

‘வேணாம்.. வேணாம்..’.

கையிலும் தரையிலும் கிணற்றுக்குள்ளுமாக பாம்பு சட்டை உரித்தது போல் ரங்கம்மாவின் தலைமுடி உதிர்ந்து, சுருண்டு விழுந்தது. பாரம் தலை இறங்க, நெஞ்சு கனத்தது.

‘என்னைப் பெத்தவளே..’

அந்த ராத்திரியில் துவைக்கிற கல் மேல் உட்கார்ந்து அவள் அழுவதைக் கேட்ட கூகைகள் ரொம்ப நாழி அது பற்றியே பேசிக் கொண்டிருக்க, ரங்கம்மா உள்ளே வந்து சென்னகேசவன் பக்கத்தில் அவனுடைய பழைய வேட்டியைச் சுற்றிக் கொண்டு படுத்தாள். அங்கே இதமான பொடி வாசனை சுற்றிலும் படிந்தது.

வழக்கம்போல் சென்னகேசவன் காலுக்கு நடுவே கையை நுழைத்துக் கொண்டு தூங்கியிருந்த ராத்திரி அது.. இருபத்தைந்து வருடம் முந்திய ராத்திரி....

கீழே நாய் குரைக்கும் சத்தம்.

ரங்கம்மா மாடிப் படியில் எழுந்து நின்றாள்.

‘ஏன் இப்படி அலங்கோலப் படுத்தினே.. எதுக்காக...’

இந்தக் கேள்வியை அவள் எத்தனை நாள்.. எத்தனை வருஷமாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறாள்... பெரியாத்தா பதில் சொல்லவே மாட்டேன் என்கிறாள்.

‘எனக்கு கருமம் பண்ண ஆள் கிடையாது. ஆனாலும் நான் பெரியாத்தா மாதிரி இங்கேயே அடைய மாட்டேன்.. ஏற்கனவே அரைக்குக் கீழே செத்து உன்னைக் கஷ்டப் படுத்திட்டேன்.. இப்ப முழுக்கச் செத்து.. இனியும் துன்பம் தரணுமா...நான் மாட்டேன்..’.

சாகும் முன் சென்னகேசவன் தன் கையைப் பிடித்தபடி அழுதது ரங்கம்மாவுக்கு நினைவு வந்தது. கண்ணைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள் அவள்.

‘போயாச்சு... எல்லாம் போயாச்சு.. எல்லோரும் போயாச்சு.. நீ மட்டும் ஏன் இங்கியே கிடந்து உசிரை வாங்கறே .. போயிடு.. போயிடு..’.

ரங்கம்மா வெறி பிடித்தது போலக் கத்திக் கொண்டே மாடிக் கதவைத் தள்ள, அது திறந்து கொண்டது. கையில் லாந்தர் அணைந்து போனது. தூக்கத்தில் நடப்பவள் போல அறைக்குள்ளே போனாள் அவள்.

‘எங்கே இருக்கே.. எங்கே இருக்கே...எங்கே இருக்கே..’

பதில் இல்லை.

இருட்டில் கை வைத்துத் துழாவினாள், சிலீரென்று ஏதோ பட்டது. பானை. பெரிய பழம்பானை.

‘இங்கே தானே.. இதுக்குள்ளே தானே இருக்கே..’

பானையைக் கட்டித் தூக்கிக் கொண்டு அவள் படியிறங்கி வந்தபோது காலில் அசாத்திய வலு சேர்ந்திருந்தது.

மெல்லக் கிணற்றடிக்கு நடந்து போனாள். நிலா காய்ந்து கொண்டிருந்த பின்னிரவு நேரம்.

‘போ.. போய் ஒழி..’

பானையைத் தலைக்கு மேல் தூக்கிக் கீழே போட்டு உடைக்க, உள்ளேயிருந்து அழுக்கும் கிளி பச்சையுமாகக் கந்தலாகிப் போன ரவிக்கை. தூசிப் பந்தாகத் தலைமுடி.

வற்றிய்ச் சுருங்கிய மார்பின் மேல் அந்தப் பழந்துணியை வைத்தாள். பாதி நரைத்து சுண்ணாம்புத் தீற்றாக அப்பியிருந்த முடியோடு இன்னொரு கையால் தூசிப் பந்திச் சேர்த்துப் பிடித்தாள்.

‘போயிடறேன்... போயிடறேன்..’

உதடு துடிக்கப் பெருங்குரலெடுத்து ரங்கம்மா அழுதாள்.

*******

கணையாழி - ஏப்ரல் 1997


flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்