Jun 4, 2010

சப்தமும் நிசப்தமும் -தேவதச்சனின் கவிதை-பாவண்ணன்

ல்லாப் பூங்காக்களிலும் காலைநடைக்காகவென்றே சதுரக்கற்கள் அடுக்கப்பட்டு செப்பப்படுத்தப்பட்ட வட்டப்பாதைகள் இப்போது உருவாகிவிட்டன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவை அனைத்தும் வெறும் ஒற்றையடிப்பாதையாகவே இருந்தன. அந்த நாட்களில் பூங்காவில் ஒரு பெரியவர் எனக்கு அறிமுகமானார்.எழுபதை நெருங்கிய வயது.மெலிந்த தோற்றம். படியப்படிய வாரிய அவருடைய வெளுத்த தலைமுடிக்கோலம் வசீகரமானது. இரண்டு அல்லது மூன்று devathachan சுற்றுகள்மட்டுமே நடப்பார். வேகநடையெல்லாம் கிடையாது. எல்லாத் திசைகளிலும் வேடிக்கை பார்த்தபடி மெதுவாகவே செல்வார். பிறகு, ஒரு மஞ்சட்கொன்றை மரத்தடியில் போடப்பட்டிருக்கும் சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்துகொள்வார். எதிரில் இறகுப்பூப்பந்து விளையாகிற சிறுமிகளையும் அருகில் இருக்கிற தோப்பையும் சுற்றுச்சுவரையும் சாலையையும் கடந்து செல்லும் வாகனங்களையும் மாறிமாறி வேடிக்கை பார்ப்பார். ஒரு குறிப்பிட்ட நேரம்வரை அப்படியே உட்கார்ந்திருந்துவிட்டு எழுந்து சென்றுவிடுவார். தொடர்ச்சியாக சந்தித்துக்கொள்வதன் அடிப்படையில் பார்க்கும்போதெல்லாம் புன்சிரிப்பு சிந்தி,வணக்கம் சொல்லி, பெயர் சொல்லி அறிமுகமாகி, நெருக்கமாகப் பேசத் தொடங்குவதற்கு ஏறத்தாழ இரண்டு மாதங்கள் பிடித்தன. பேசிப்பேசித்தான் அவருடைய மனதைப் புரிந்துகொண்டேன்.

அவருடைய மனைவி கடந்த ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் இறந்துபோய்விட்டார். அதுவரைக்கும் இந்தப் பூங்காவுக்கு பல ஆண்டுகளாக காலைநடைக்கு இருவருமாகவே வருவார்கள். மனைவி ஆறு சுற்றுகளோடு நடையை முடித்துக்கொண்டு இதே சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்துகொள்வார்.கணவர் கூடுதலாக இரண்டு சுற்றுகள் சுற்றியபிறகு அருகில் சென்று உட்கார்வார். சிறிது நேரம் வேடிக்கை, சிறிது நேரம் பேச்செனப் பொழுதைக் கழித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிப் போய்விடுவார்கள். இப்போது மனைவி இல்லை. ஆனால் பூங்காவுக்குள் வந்ததுமே மனைவியும் கூடவே நடந்துகொண்டிருப்பதாக ஒரு உணர்வு தோன்றத் தொடங்கிவிடுகிறது.பெஞ்சில் அமர்ந்திருக்கும்போது அவரும் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதாகவும் தோன்றத் தொடங்கிவிடுகிறது. மனைவி இல்லாத வாழ்வு ஒரு பெரும் பாரமென்ற எண்ணமே அவருக்கிருந்தது. ஒரு கட்டத்தில் மனைவியுடன் புழங்கிய இடங்கள் அனைத்தும் அவருடன் நிகழ்த்திய உரையாடல்களையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவருவதை உணர்ந்தார்.பிறகு, அமைதியான பூங்காவில் எந்த இடத்தில் இருந்தாலும் அவருடைய உரையாடல்கள் காதில் விழத் தொடங்கிவிட்டன. மனைவி மறைந்துவிட்டார் என்கிற எண்ணம் பெரும்பாலும் எழுவதில்லை என்றும் இல்லாமையிலும் அவருடைய இருப்பை ஒவ்வொரு கணத்திலும் உணர்ந்தபடியே இருக்கிறேன் என்றும் சொல்லி முடித்தார். அவர் சொல்லச்சொல்ல வியப்பில் மூழ்கினேன் நான். சிமென்ட் பெஞ்சில் தனக்கு அருகேயே தன் மனைவி உட்கார்ந்திருப்பதுபோன்ற நம்பிக்கையை அவருடைய கண்களில் கண்டேன்.

இருப்புக்கும் இல்லாமைக்குமான பொதுவரையறைகளை வகுப்பது கடினம் என்று தோன்றுகிறது. ஒவ்வொன்றுக்கும் சான்றுகளைக் கோருகிற அறிவியலின்முன் இருப்புக்கும் இல்லாமைக்குமான வரையறைகள் கறாராக உள்ளன. ஆனால் மனஉலகத்தில் அவ்வரையறைகளுக்கு இடமே இல்லை. "சிவபக்தனின் வீட்டுமுற்றம் வாரணாசி என்பது பொய்யோ?" என்று கேள்வி கேட்கிற அக்கமகாதேவியின் கவிதையில் அவ்வரையறைகள் சரிந்துபோகின்றன. அக்கவிதையில் "சிவபக்தனின் வீட்டுமுற்றத்தில் எட்டுவகைத் தீர்த்தங்களும் நின்றிருக்கின்றன என்றும் சுற்றிவர ஸ்ரீசைலம்,அக்கம்பக்கம் கேதாரம் என்றும் அங்கிருந்து வெளியே ஸ்ரீவாரணாசி" என்றும் சொல்லிக்கொண்டு போகிறார். தன் வீட்டு முற்றத்தில் வளர்கிற ஒரு மரத்தை தன் அக்காவின் இருப்பாக நம்புகிற தலைவியை நம் அகப்பாடல் ஒன்றில் காணலாம். இன்றும் கைக்குட்டையையும் எழுதுகோலையும் கையெழுத்து போட்டுக்கொடுத்த புத்தகங்களையும் நினைவுச்சின்னங்களாகப் போற்றிப் பாதுகாத்துக்கொண்டிருப்பவர்கள் பலருண்டு. நண்பர் ஒருவருடைய வீட்டில் பார்வையாளர்கள் அறையில் பொம்மைகளும் பல கலைப்பொருட்களும் வரிசையில் வைக்கப்பட்டிருந்த சுவரடுக்கில் ஒரு சின்ன வெள்ளிக்கோப்பை இருப்பதைப் பார்த்தேன். என் கண்கள் அதன்மீது பதிவதைப் பார்த்த நண்பர் தான் பள்ளியில் படித்த காலத்தில் கால்பந்து விளையாட்டில் தொடர்ந்து பங்கேற்று பல சுழற்கோப்பைகளை பள்ளிக்கு வாங்கித் தந்ததற்காக பள்ளியின் சார்பில் பாராட்டி வழங்கப்பட்ட கோப்பை என்று கண்கள் மின்னச் சொன்னார்.அவருடைய கண்களில் விரிந்த மைதானமொன்றில் பந்தைத் துரத்திக்கொண்டு ஓடுகிற ஒரு சிறுவனின் நிழல் விரிவதை என்னால் உணரமுடிந்தது.அக்கோப்பையின் இருப்பின் வழியாக அந்த இளமையின் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தேவைப்படும்போதெல்லாம் அவர் மீட்டெடுத்துக்கொள்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.

இருப்பு மற்றும் இல்லாமை சார்ந்த ஒரு வரையறையை வழங்குகிறது தேவதச்சனின் கவிதை. இக்கவிதையில் நுட்பமான ஒரு காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது. துணிதுவைக்கும் ஒருவருக்கருகே இரைச்சலிடும் குருவிகளின் கூட்டத்தை முதலில் முன்வைக்கிறது கவிதை.துணிதுவைக்கிறவரின் மனம் அந்த இரைச்சலை உள்வாங்கிப் பதித்துக்கொள்கிறது. அதையே ஒரு இசைத்துண்டைப்போல அவர் மனம் மீண்டும்மீண்டும் அசைபோடுகிறது. இடையில் அக்குருவிகள் பறந்துபோகின்றன. துணிதுவைக்கிற சத்தத்தைத் தவிர வேறெந்த சத்தமும் இல்லை. எங்கும் நிசப்தம். ஆனாலும் நிசப்தத்தை ஊடுருவிக்கொண்டு குருவிகள் இரைச்சலிடுவதாக உள்ளூர அவர் மனம் கற்பத்துக்கொள்கிறது.வெளியே, குருவிகளும் இல்லை. இரைச்சலும் இல்லை. அவை இடம்மாறி உள்ளே இடம்பிடித்துவிடுகின்றன. எவ்வளவு ஆழ்ந்த நிசப்தத்திலும் அந்த சப்தங்களின் கலவை ஒலித்தபடியே இருக்கிறது. சத்தம் என்பது இருப்பு.சத்தமின்மையின் வழியாக உணர்கிற சத்தம் என்பது இல்லாமையின் ஊடே உணரப்படுகிற இருப்பு.

முதலில் ஒன்றின் இருப்பை நேருக்குநேராக, வெகு அருகில் உணர்கிறது நம் மனம். அதன் ஒவ்வொரு அசைவையும் ஆழமாக நினைவில் வைத்துக்கொள்கிறது. இருப்புடன் உருவாகும் தொடர்ச்சியான ஓர் உறவு அந்நினைவுகளைப் பசுமையாகப் pavannan பேணிப் பாதுகாக்கிற உந்துதலைத் தருகிறது.பிறகு, இல்லாத போதும் அந்நினைவுகள்வழியாக அந்த இருப்பு தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறது. சுருக்கமாக, இன்னொரு விதமாகவும் சொல்லிப் பார்க்கலாம். இப்போது கடந்த காலம் என்பது இல்லை. ஆனால் கடந்த காலத்தின் அடையாளமாக இருக்கிற எண்ணற்ற சிற்பங்கள், சுவடிகள்,பாடல்கள், வழிபாட்டுத்தலங்கள் மீண்டும்மீண்டும் அக்காலத்துக்குள் சென்றுவர நமக்கு வழிவகுத்துத் தருகின்றன. தாராசுரம் கோயில் வளாகத்துக்குள் நடக்கும்போதெல்லாம் குந்தவை நாச்சியார் அதோ அந்தப் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறார் என்கிற எண்ணம் எழாமல் இருப்பதில்லை. கல்கியின் புதினத்தைப் படிக்கும் ஒவ்வொருவருடைய செவியருகிலும் குதிரைகளின் குளம்போசை கேட்காமல் இருப்பதில்லை. கங்கைகொண்ட சோழபுரத்தின் ஆலயவெளியில் நாம் சுற்றிக்கொண்டிருக்கும்போது ராஜேந்திர சோழன் உள்ளே கருவறையில் இருப்பதுபோன்ற உணர்வே எழுகிறது.

வரையறுக்கப்பட்ட பொருளைத் தாண்டி குருவியையும் அதன் சத்தத்தையும் படிமமாக விரிவாக்கிப் பார்த்தால், மானுட உறவாக முதலில் விரிவடைவதைக் காணலாம். நம் உறவினர்களும் மனத்துக்குப் பிடித்தமானவர்களும் நண்பர்களும் எப்போதும் நம் அருகிலேயேவா இருக்கிறார்கள்? இல்லையே.நினைவுகள் வழியாகவும் சொற்கள்வழியாகவும் அல்லவா, அவர்கள் நம்மோடு உறவுள்ளவர்களாக இருக்கிறார்கள். இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

*

 

தேவதச்சன்

துணி துவைத்துக்கொண்டிருந்தேன்

காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்

தொடர்ந்து துவைத்துக்கொண்டிருந்தேன்

காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்

அடுத்த துணி எடுத்தேன்

காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்

*

நவீனத் தமிழ்க்கவிதை உலகில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த முக்கியக் கவிஞர் தேவதச்சன். தேவதச்சனும் ஆனந்த்தும் எழுதிய கவிதைகள் ஒருங்கே தொகுக்கப்பட்டு அவரவர் கைமணல் என்கிற தலைப்பில் வெளிவந்து நல்ல வாசக கவனத்தைப் பெற்றது. படிமத்தன்மையை இயல்பாக அடைகிற இவருடைய கவிதைகள் மிகச்சிறந்த வாசிப்பனுபவம் வழங்கக்கூடியவை.இவருடைய எல்லாக் கவிதைகளையும் அடங்கிய தொகுப்பு ’கடைசி டினோசர்’என்கிற தலைப்பில் உயிர்மை வெளியீடாக வந்தது. அதற்குப் பிறகு எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பான ’யாருமற்ற நிழல்’ உயிர்மை சமீபத்தில் வெளிவந்த கவிதைத் தொகுதிகளில் மிகச்சிறந்த ஒன்று.

******

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

2 கருத்துகள்:

geethappriyan on June 5, 2010 at 1:39 PM said...

நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி

RAVISHANKAR on November 10, 2016 at 11:24 AM said...

மிக அருமையான ஜென் கவிதை -விவரிக்க முடியாத உணர்வை உணரவைப்பது, கவி தேவதச்சன் மட்டுமே

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்