Jun 25, 2010

பிரயாணம் - அசோகமித்திரன்

 asoka     மீண்டும் முனகல் ஒலி கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். என் குருதேவரின்
கண்கள் பொறுக்க முடியாத வலியினால் இடுங்கியிருந்தன. அவரைப் படுக்க வைத்து நான் இழுத்து வந்த நீளப் பலகை நனைந்திருந்தது. ஒரே எட்டில் அவரிடம் சென்றேன்.
“இனிமேலும் முடியாது” என்றார். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்த நேரத்தில் ஆகாயத்தில் ஒரு வெள்ளைக் கீறல் கூட இல்லை. ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை
பரந்துகிடந்த மலைச்சாரலைச் சிறுசிறு மேகங்கள் அணைத்தபடி இருந்தன. நாங்கள் நடந்து வந்த மலை விளிம்பு அந்த இடத்தில் செங்குத்தாகப் பல நூறு அடிகள் இறங்கி,
அடியில் ஒரு ஓடையைத் தொட்டது. தண்ணீர் தேங்கும் குட்டைபோல அந்த இடத்தில் ஓடை இருந்தாலும் சற்றே தள்ளி, அதுவே ஆவேசத்துடன் பாறைகள் மீது மோதிப் பள்ளத்தில் பாய்ந்து கொண்டிருந்தது. இந்தப் பக்கத்தில் மலை உயர்ந்து கொண்டிருந்தது. நாங்கள் வந்த விளிம்பு ஓரமாக இன்னும் பத்துப் பன்னிரண்டு மைல் போனால் ஒரு
கணவாய் வரும். அதற்குப்பிறகு சிறு புதர்களால் நிறைந்த ஒரு சமவெளிப் பிரதேசம்.
அது ஒரு காட்டை எட்டிக் கரைந்து விடும். அந்தக் காட்டைத் தாண்டியவுடன் ஒரு
சிற்றாறு. அதன் அக்கரையில்தான் முதன் முதலாக மனித வாடை வீசும் ஒரு கிராமம் -
ஹரிராம்புகூர். ஆறு மாதங்களுக்கு முன்பு ஹரிராம்புகூரைத் தாண்டி நானும்
குருதேவரும் நடைப் பயணமாக எங்கள் ஆசிரமத்திற்கு வந்து சேர இரண்டு பகல்
பொழுதுகள் தான் தேவைப்பட்டன. இப்போது மலையிலிருந்து பாதி இறங்குவதற்குள் ஒரு
பகல் போய்விட்டது. அரை மணி நேரத்தில் இருட்டிவிடும்.

    நான் என் சாக்கைப் பிரித்துப் பெரியதாக ஒரு துப்பட்டியையும், முரட்டுக்
கம்பளியினால் தைக்கப்பட்ட நீளப் பையொன்றையும் எடுத்தேன். என் குருதேவரைப்
போர்த்தியிருந்த கம்பளத்தையும், துணிகளையும் அகற்றிய பிறகு துப்பட்டியால்
அவரைச் சுற்றிவிட்டு அவர் மெதுவாக அந்தக் கம்பளப் பையில் நுழைந்துகொள்வதற்கு
உதவினேன். பை அவரது தலையையும் மூடிக்கொள்ள வசதியிருந்தாலும் முகத்தை மட்டும்
திறந்து வைத்தேன். கம்பளி மஃப்ளர் ஒன்று இருந்தது; அதை அவர் காது முழுவதும்
மூடியிருக்குமாறு தலையைச் சுற்றிக் கட்டிவைத்தேன். ‘சிறிது கஞ்சி தரட்டுமா?”
என்று கேட்டேன். அவர் கண்களால் “கொடு”  என்றார். சாக்கிலிருந்து மூடியிடப்பட்ட
சிறு தகரப் பெட்டி, இரண்டாம் உலக யுத்தத்தில் சிப்பாய்களுக்குக் கொடுத்த
வட்டமான ஒரு தகரப் பாத்திரம், ஒரு ராணுவத் தண்ணீர் ‘பாட்டில்’ இவை மூன்றையும்
எடுத்தேன். வட்டப் பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டுக்கொண்டு தகரப்
பெட்டியின் மூடியைத் திறந்தேன். அதில் பாதியளவு உறையவைத்த மண்ணெண்ணெய்
இருந்தது. நெருப்புக் குச்சியைப் பற்ற வைத்து அதன் அருகே கொண்டு போனேன்.
மண்ணெண்ணெய் குப்பென்று பிடித்துக்கொண்டு ஒரே சீராக எரிந்தது. பாத்திரத்தின்
மடக்குப் பிடியை நீட்டிக்கொண்டு ஜூவாலையில் தண்ணீரைச் சுட வைத்தேன். ஒரு கொதி
வந்ததும் என் முதுகுப் பையில் சிறு மூட்டையாகக் கட்டிப் போட்டிருந்த கிழங்கு
மாவில் ஒரு பிடி எடுத்துப் போட்டேன். ஒரு குச்சி கொண்டு கிளறிக்கொண்டே
மாவுத்தண்ணீரைக் காய்ச்சினேன். அது கூழாகிவிடக் கூடாதென்று இன்னும் சிறிது
தண்ணீர் சேர்த்தேன். கஞ்சி தயாராயிற்று. எரிந்துகொண்டிருந்த தகரப் பெட்டியை
அதன் மூடி கொண்டு மூடினேன். நெருப்பு அணைந்து சிறிது மட்டும் வந்தது. கஞ்சியைப்
பாத்திரத்தில் கலக்கியே ஆற வைத்தேன். பொறுத்துக்கொள்ளக்கூடிய சூடு என்று
தோன்றியபோது என் குருதேவரின் தலையை மெதுவாக என் மடிமேல் ஏற்றி வைத்துக்கொண்டு,
கஞ்சியை அவருக்குப் புகட்டலானேன். இரண்டு வாய் குடித்ததும் அவர் ‘போதும்’
என்றார். அவருக்குச் சிறிது தெம்பு வந்திருந்த மாதிரி இருந்தது. மிச்சமிருந்த
கஞ்சியை நான் குடித்தேன். பாத்திரத்தைக் கழுவாமல் ஒரு துணி கொண்டு துடைத்து
வைத்தேன். தண்ணீர் ‘பாட்டி’லில் சிறிதுதான் தண்ணீர் இருந்தது. நான் கீழே இறங்கி
ஓடையில் தண்ணீர் பிடித்துவர அடுத்த நாள் காலையில்தான் முடியும்.

    என் குருதேவர் வாயைத் திறந்தபடி படுத்திருந்தார். அவரிடம் ஒரு வருடம் யோகம்
பயின்ற நான் வாயை எக்காரணம் கொண்டும் மூச்சு விடுவதற்குப் பயன்படுத்தாமல்
இருக்கக் கற்றுக்கொண்டு விட்டேன். ஐம்பது, அறுபது வருட காலம் முதிர்ந்து
யோகியாகவே வாழ்க்கை நடத்திய என் குருதேவர், அந்நேரத்தில் வாயைத் திறந்து
வைத்துக் கொண்டும்கூட மூச்சு விடுவதற்குப் பெரும் உபாதைப்பட்டுக்
கொண்டிருந்தார். பதினைந்து நாட்களுக்கு முன்பு திடீரென்று வயிற்றை அழுத்திப்
பிடித்துக்கொண்டு ”அம்மா” என்று அவர் கீழே விழும்வரையில், அவர் சுவாசம் விடுவதே
மிகவும் கூர்ந்து கவனித்தாலன்றித் தெரியாது. அப்படிப் புலனானால், ஒரு
மூச்சுக்கு இன்னொன்று மிக நீண்ட சீரான இடைவெளிவிட்டு வருவதை உணர முடியும்.
இப்போது அவர் வாயால் மூச்சு விடுவதற்குத் திணறிக் கொண்டிருந்தார்.

    சூரியன் மலைகளின் பின்னால் விழுந்து, மலைகளே மலைகள் மீது பூதாகரமான
நிழல்களைப் படர விட்டுக் கொண்டிருந்தன. இரவும் அந்த நிழல்களும் ஒன்றறக் கலக்கச்
சில நிமிடங்களே இருந்தன. அதற்குள் அங்கே குச்சி குச்சியாக வளர்ந்த பரந்து
கிடந்த செடிகளில் உலர்ந்துபோன சிலவற்றைச் சேகரிக்க நான் முனைந்தேன். எனக்குக்
குளிரவில்லை. மேலங்கியே போட்டறியாத என் குருதேவர் இரு வாரங்களாகக் கம்பளத்தைச்
சுற்றிக்கொண்டு கம்பளப் பையிலும் நுழைந்து கிடக்க வேண்டியிருந்தது. அவருக்குக்
கணப்பு வேண்டும். அர்த்த ராத்திரி அளவில் பனி இறங்க ஆரம்பித்து விடும். ஆவி
போலல்லாமல் பஞ்சுப் பொதிகளாகவும் இறங்கும். என் குருதேவருக்குக் கணப்பு
வேண்டும். இன்னொரு காரணத்திற்காகவும் கணப்பு வேண்டும். பகலில் சில
அடிச்சுவடுகள்தான் காணப்படும். இரவு வேளையில் அந்த அடிச்சுவடுக்குரியவை
வந்துவிடும்.

    உலர்ந்த செடிகளை நான் வேரோடு பிடுங்கிக்கொண்டு வந்தேன். என் கைகளால்
மார்போடு அணைத்துக்கொண்டு வரக்கூடிய அளவு இருமுறை கொண்டு வந்து சேர்ப்பதற்குள்
எல்லாவற்றையும் கண்ணை இடுக்கிக்கொண்டு பார்க்க வேண்டியிருந்தது. என்
குருதேவரைப் படுக்கவைத்து நான் இழுத்து வந்த பலகையுடன் ஒரு விறகுக் கட்டும்
கட்டிவைத்திருந்தேன். அந்த விறகுத் துண்டுகள் இலகுவில் பற்றிக் கொண்டுவிடாது.
பற்றி கொண்டாலும் ஓர் இரவு நேரத்திற்கு மேல் வராது. எங்கள் ஆசிரமத்திலிருந்து
வருடத்திற்கு இரண்டு மூன்று முறை அத்யாவசியத் தேவைகளுக்காக ஹரிராம்புகூருக்கு
நாங்கள் வந்து போகும் போதெல்லாம் பிரயாணத்திற்கு அந்த அளவு கட்டைக்குமேல்
எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் இம்முறை அது போதவே போதாது என்று எனக்குத்
தெரிந்துவிட்டது.

    நான் பிடுங்கி வந்த குச்சிகளில் ஒரு கைப்பிடியில் அடங்குபவையை எடுத்து ஒரு
சிறு கூடாரம் மாதிரித் தரையில் பொருத்தி வைத்தேன். என் குருதேவரின் கால்
பக்கமாகத்தான் வைத்தேன். அந்தப் பிரதேசத்தில் பறவைகளே கிடையாது. காற்று மிகவும்
லேசாக வீசிக்கொண்டிருந்தாலும் மலைச்சாரலில் மோதிப் பிரதிபலிக்க
வேண்டியிருந்ததால் ‘கும்’மென்ற ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. பல நூறு
அடிகள் கீழே, குறைந்தது அரை மைலுக்கப்பால் பிரவாகமாக மாறும் ஓடை, தொடர்ந்து
இரைச்சல் எழுப்பிக்கொண்டிருந்தது. இந்தச் சப்தங்களும், என் குருதேவரின்
மூச்சுத் திணறலும் தவிர வேறு எதுவும் என் காது கேட்க அங்கிருக்கவில்லை.

    பட்டாசுத் திரி போல் உலர்ந்த குச்சிகள் பற்றிக்கொண்டு எரிந்தன. அந்த
ஜூவாலையில் நுனி மட்டும் படும்படியாக ஐந்தாறு விறகுத் துண்டுகளை ஒரு
சக்கரத்தின் ஆரைக்கம்புகள் போல் வைத்தேன். நட்சத்திரங்கள் கூட்டம் கூட்டமாகத்
தெரிய ஆரம்பித்துவிட்டன.

    ஒரு விறகு பற்றிக்கொண்டு எரிந்தது. நான் பாய்ந்து சென்று அதைக் கையில்
எடுத்து மூன்று, நான்கு வீச்சுகளில் ஜூவாலை விட்டு எரிவதை அணைத்து அது வெறும்
தணலாக எரியும்படி செய்தேன். ஒரு விறகு மட்டும் அதிகமாகப் புகைந்து
கொண்டிருந்தது. அதைத் தரையில் ஒருமுறை தட்டிவிட்டுப் புரட்டி வைத்தேன். புகை
சிறிது கரைந்தது. நான் என் குருதேவரின் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டேன்.
பின்னர் எழுந்து எங்களிடமிருந்த நீண்ட மூங்கில் கழியை என் பக்கத்தில் எடுத்து
வைத்துக்கொண்டு அமர்ந்தேன். எல்லாப் பக்கத்திலும் உறைந்துபோன பேரலைகள்போல்
மலைச் சிகரங்கள் அந்த இருளிலும் கரும் நிழல்களாகக் கண்ணுக்குத் தெரிந்தன.
பொழுது விடிய இருக்கும் இன்னும் பல மணி நேரத்துக்கு அவற்றைத்தான் நான்
பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். அமைதியாக உட்கார்ந்துகொண்டே இருந்ததில் நான்
எனக்குள்ளே விரிந்துகொண்டிருக்கும் உணர்வு ஏற்பட ஆரம்பித்தது. ஆசிரமக்
குடிசைக்குள் என் குருதேவர் எந்த வித உடல் இடர்ப்பாடும் இல்லாமல் படுத்திருக்கும் வேளைகளில் நான் ஒவ்வொரு நாளும் வெட்ட வெளியில் உட்கார்ந்து, இந்த விசால உணர்வைக் காத்திருந்து வரவழைத்துக்கொள்வேன். இப்போது என்னிச்சையின்றி அந்த விசால உணர்வு வர ஆரம்பித்ததும் அதை அகற்றிவிட வேண்டுமே என்ற கவலை வந்தது. அந்நேரம் தூரத்தில் இரு மலைச் சிகரங்கள் அசைந்து என் திசையில் குவிந்து வருவதுபோல் இருந்தது. என் அடிவயிற்றில் திடீரென்று பயம் எழுந்தது. உடனே மன லயம் கலைந்துபோயிற்று. மலைச் சிகரங்களைப் பார்ப்பதை விட்டு ஆகாயத்தைப் பார்த்தேன். தாறுமாறாகச் சிதறிக் கிடப்பதுப்போல் இருந்த
நட்சத்திரங்கள் சீக்கிரத்தில் தனித்தனிக் கூட்டங்களாக் கண்ணுக்குத் தெரிய
ஆரம்பித்தன. முதலில் அந்த உருவங்களுக்கு என் மனம் கற்பிக்கும்படியான தோற்றம்
ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அது மாறி ஒவ்வொரு நட்சத்திரக் குவியலும் வெவ்வேறு
விதமான கை கால்களை நீட்டிக் கொண்டு வெறியுடன் பறந்து செல்லும் உருவங்களாகக் காண
ஆரம்பித்தன. கண்களை மூடிக்கொண்டு மூச்சு விடுவதுகூட ஒரு தாள லயத்துடன்தான்
வந்து கொண்டிருந்தது. அதன் மீது மனத்தைச் செலுத்தியபோதும் என் நினைவுப் பிரக்ஞை
அமிழ்ந்து என்னை உறக்கத்துக்குக் கொண்டு செல்வதை உணர்ந்தேன். அதைத் தடுத்துக்
கண்களைத் திறந்துகொண்டு நட்சத்திரங்களைப் பார்த்தேன். நட்சத்திரங்கள் வெவ்வேறு
கூட்டமாகப் பிரிந்து உருவங்களாக மாறும் தருணத்தில் மலைச் சிகரங்களை நோக்கினேன்.
என்னை அறியாமல் என் கவனம் என் குருதேவரின் சுவாச ஒலியில் மீண்டும் லயிக்க
ஆரம்பித்த போது எழுந்திருந்து உட்கார்ந்தேன். நான் எக்காரணம் கொண்டும் அன்றிரவு
என் நினைவை இழக்கக் கூடாது. மலையைத் தாண்டி, சமவெளியைத் தாண்டி, வனத்தைத்
தாண்டி, ஆற்றைத் தாண்டி, ஹரிராம்புகூரை அடைந்தே தீரவேண்டும். என் குருதேவருக்கு
வைத்திய உதவி கிட்டும்படி செய்ய வேண்டும். பனி இறங்க ஆரம்பித்தது. நான்
எங்களிடம் மிகுதியிருந்த ஒரே பழந்துண்டைத் தலையோடு போர்த்திக் கொண்டு ஒரு
தொடையை இன்னொரு தொடை மீது இறக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்.

    மலைச் சிகரங்களிடையே புகுந்து வீசிக்கொண்டு செல்லும் காற்றின் ஒலி
எனக்குள்ளேயே கேட்டது. ஓடைச் சப்தமும் கேட்டது. நான் விரிந்து கொண்டிருந்தேன்.
எல்லாத் திசைகளிலுமாக விரிந்து கொண்டிருந்தேன். கணத்துக்குக் கணம் நான்
இலேசாகிக்கொண்டே வந்து எனக்கு எடை, உருவமே இல்லை என்கிற அளவுக்கு விரிந்து,
இன்னமும் விரிந்து கொண்டிருந்தேன். எல்லா ஒலிகளையும் கேட்க முடிந்த எனக்கு
அவையெல்லாம் எங்கோ ஓர் அடித்தளத்தில் மட்டும் இயங்கிக்கொண்டிருந்ததாகத்தான்
தோன்றியது. அப்போது தனியாக ஒரு ஒலி, அவையெல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று,
கேட்டது. அந்த நிலையில், அந்தத் தருணத்தில் அது பொருந்திப் போகவில்லை.
மறுபடியும் அந்த சீறல் வந்தது. நான் நொடிப் பொழுதில் என்னைக்
குறுக்கிக்கொண்டேன். ஒரு வருடப் பயிற்சியில் மன லயத்தில் நான் அடைந்திருந்த
தேர்ச்சி எனக்கு அப்போது வேண்டாததாக இருந்தது. அந்தச் சீறல் மீண்டும் கேட்டது.
என் பக்கத்தில் இருந்த தடியைப் பற்றிய வண்ணம் சீறல் வந்த திசையில் பார்த்தேன்.
இரண்டு மின்மினிப் பூச்சிகள் பளிச்சிட்டன. என் கழியை வீசினேன். முதல் வீச்சில்
அந்த இரட்டை ஒளிப்பொறிகள் சிறிது அசைந்து மட்டும் கொடுத்தன. நான் என் கையை
எட்டி மீண்டும் கழியை வீசினேன். அது எதன் மீதோ தாக்கிற்று. மயிர்
குத்திடக்கூடிய ஊளையொலி கேட்டது. மறுகணம் அந்த ஓநாய் பின் வாங்கி ஓடிச்
சென்றுவிட்டது.

    என் குருதேவரின் பக்கம் பார்த்தேன். நான் வைத்திருந்த விறகுகள் அநேகமாக
எல்லாம் எரிந்து அணையும் தறுவாயில் இருந்தன. நடு ராத்திரியைக்
கடந்திருக்கக்கூடும். நான் தூங்கிப்போயிருந்திருக்கிறேன். தணலாக இருந்த
விறகுகள் கூட முக்காலுக்கு மேல் சாம்பலாகிப்போயிருந்தன. அதன் பிறகுதான் ஒரு
ஓநாய் வந்திருக்கிறது. ஒரு சாண் அளவுக்கு மிஞ்சியிருந்த ஒரு கட்டைத் துண்டை ஊதி
ஊதி ஜூவாலை எழச் செய்தேன். அதைக் கொண்டு என் குருதேவரைத் தலையிலிருந்து கால்வரை
பார்த்தேன். அவர் படுத்திருந்த பையில் கால் பக்கத்தில் சிறிது கிழிந்திருந்தது.
நான் ஓரிரு நிமிஷங்கள் தாமதித்திருந்தால்கூட அந்த ஓநாய் கம்பளப் பையை இன்னமும்
கிழித்து என் குருதேவரின் காலைக் கவ்வியிருக்கும்.

    அந்தக் கட்டை அணைந்து புகைய மட்டும் செய்தது. நான் உறைந்த மண்ணெண்ணெயை ஒரு
விரலில் எடுத்துத் தணல் மீது வைத்தேன். கட்டை பற்றிக்கொண்டு எரிந்தது. அதை என்
குருதேவர் முகத்தருகே கொண்டுசென்று, ”ஐயா” என்று கூப்பிட்டேன். அவர் காதில் அது
விழவில்லை. முன்பு வாயைத் திறந்து படுத்துக்கொண்டிருந்தவர் இப்போது வாயை
மூடிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார். நான் தூங்கிக்கொண்டிருந்த வேளையில்
அவருக்குத் தாகம் எடுத்திருக்கக் கூடும்; பசித்திருக்கக்கூடும். நான் “ஐயா”
என்று சொல்லி அவரைச் சிறிது அசைத்து எழுப்பினேன். அவர் அப்படியே இருந்தார்.
அவர் மூக்கருகே என் புறங்கையை வைத்துப் பார்த்தே. அடுத்தபடி என் காதை அப்படியே
அவர் மார்பு மீது அழுத்திக்கொண்டு கேட்டேன். அங்கு காது கேட்பதற்கு
ஒன்றுமில்லை.

    குருதேவரின் சாவு அதிர்ச்சியைத் தரவில்லை. அப்பழுக்கில்லாத தேக நிலை உடைய
அவர் எப்போது நீர் விலகிக் கொண்டிருக்கும்போது கூடத் தன்னை நகர்த்திக்கொள்ள
இயலாத அசக்தி அடைந்திருந்தாரோ அப்போதே நான் எதற்கும் என் மனத்தைத் தயார்
செய்துகொண்டிருந்தேன். என் யோக சாதனை விடுபட்டுவிடும். அவரைத் தேடிக்
கண்டுபிடித்து, அவர் என்னை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு மூன்றாண்டு காலத்திற்கும்
மேலாயிற்று. இனி இன்னொரு தகுதி வாய்ந்த குருவை அடைய எவ்வளவு ஆண்டுகள்
பிடிக்குமோ தெரியாது. வேறு குரு கிடைப்பாரா என்பதே சந்தேகம். எனக்கு நிர்ணயம்
செய்யப்பட்டதற்கிணங்கத்தான் எனக்கு வாய்க்கும். ஹரிராம்புகூரை அடைவதற்குள் என்
குருதேவருக்கு ஒன்றும் நேர்ந்துவிடக் கூடாது என்பதே அப்போது என் பிரார்த்தனை.
கடைசிச் சுவாசம் என்று தோன்றும்போது சிறிது பசும்பாலை வாயில் ஊற்ற வேண்டும் -
இதை வெகு நாட்கள் முன்பே என் குருதேவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், அன்று
அந்தப் பேச்சே பொருத்தமில்லாததாக இருந்தது. ‘என் போன்றவர்களை ஆறடி குழி
தோண்டிப் புதைக்க வேண்டும்’ என்று அவர் சொன்னதும் அபத்தமாகப்பட்டது. அன்று நான்
பசும்பால் விடத் தவறிவிட்டேன். ஆறடி குழி தோண்டியாவது புதைக்க வேண்டும். அதற்கு
எப்படியும் இந்த மலைப்பாறையிடத்திலிருந்து சமவெளியருகில் இறங்கியாக வேண்டும்.
ஆறடி தோண்டி, வெறும் மண்ணை மட்டும் போட்டு மூடினால் போதாது. பெரிய பெரிய
கற்களையும் போட வேண்டும். ஒரு ஓநாய் அவரை முகர்ந்துவிட்டது. அடுத்து, ஒரு
ஓநாய்ப்படை வருவதற்கு அதிக நேரம் பிடிக்காது.

    அப்போது அரைகுறைச் சந்திரன் வந்துவிட்டான். நான் என் குருதேவரைப்
போர்த்திருயிருந்த துணிகள், கம்பளப்பை முதலியவற்றை மெதுவாக உருவி எடுத்தேன்.
என் குருதேவரின் முகம் அற்புதமான அமைதியுடன் காணப்பட்டது. சுவாசத்திற்கும்,
இதயத் துடிப்பிற்கும் நான் தேடியிராவிட்டால் அவர் தூங்கிக்கொண்டுதான்
இருக்கிறார் என்று நினைக்கும்படியான தோற்றம். ஒரு பழந்துணியைக் கிழித்து
அவருடைய கால் கட்டை விரல்களைச் சேர்த்துக் கட்டினேன். அதே போல் கைகள்
இரண்டையும் பிணைத்தேன். ஒற்றை வேஷ்டி கொண்டே அவரைத் தலை முதல் கால்வரை சுற்றி,
கம்பளப் பைக்குள் நுழைத்து, பையின் வாயை இழுத்துக் கட்டினேன். மெதுவாகத் தணல்
எரியும்படி செய்துகொண்டு பொழுது விடிவதற்காகக் காத்திருந்தேன்.
முழங்கால்களுக்கிடையில் தலையைப் புதைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். கிழக்கு
வானத்தில் வெளிர்ச்சாயம் தோன்றுவதற்குள் என்னைச் சுற்றி இரண்டங்குல
உயரத்திற்குப் பனி உதிர்ந்திருந்தது. அந்த அரை வெளிச்சத்தில் நான் மீண்டும் என்
குருதேவர் கிடந்த பலகையை இழுத்து நடக்க ஆரம்பித்தபோது பின்னால் ஒரு முறை
பார்த்ததில் தூரத்தில் ஒரு உருவம் அசைவதை உணர முடிந்தது. நான் இரண்டாம் முறை
திரும்பிப் பார்த்தபோதும் அது அதே தூரத்தில் வந்துகொண்டிருந்தது. இம்முறை அந்த
ஓநாய் முனகிற்று.

    இறந்தவர்கள் எப்படி எடை கூடக்கூடும் என்று தெரியவில்லை. என் குருதேவரை,
அவர் சுவாசம் இயங்கிக்கொண்டிருந்தபோதைவிட இப்போது இழுத்துப் போவது கடினமாகிக்
கொண்டிருந்தது. காலையில் சற்று நேரத்திற்குத் தலையில் பனியிருந்தபோது பலகை என்
பின்னால் வழுக்கிக்கொண்டு வந்தது. ஆனால், உச்சி வேலை நெருங்குவதற்குள் அங்கு
பனியும் பெய்திருக்குமா என்று தோன்றுமளவுக்கு எல்லாம் உலர்ந்துவிட்டது. இப்போது
நான் இறங்குமுகமாக இருந்தேன். பல சமயங்களில் பலகையை இழுத்து வருவதற்குப் பதில்
பின்னாலிருந்து தள்ளி நகர்த்தி வந்தேன். கனம் அதிகரித்துக்கொண்டே வந்த அந்தச்
சுமை பள்ளத்தில் சரிந்து விழுந்துவிடாமல் பாதுகாத்துக்கொண்டு போவது மிகவும்
சிரமமாக இருந்தது. முன்னிரவு என் குருதேவர் குடித்து மிஞ்சியிருந்த கஞ்சியைச்
சாப்பிட்ட பிறகு நான் எதுவும் உண்ணாமலிருந்தபோதும் எனக்கு பசி எழவில்லை.
இடுப்பும், தோளும் மட்டுமே வலித்தன. நான் எங்கும் நிற்கவில்லை. மறுபடியும் இரவு
வருவதற்குள் மலைப் பிரதேசத்தைக் கடந்து சமவெளியை அடைந்துவிட வேண்டும் என்ற ஒரே
நோக்கமாக இருந்தேன். என் மனத்திடத்திற்கு உடல்திடம் முடிந்தவரையில்
ஈடுகொடுத்தது. ஆனால் அது போதவில்லை. நான் அடிமேல் அடி எடுத்து வைத்துத்தான்
செல்ல முடிந்தது. நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மலை நிழல் நீண்டுகொண்டு
போவதை உணர முடிந்தது. இன்னும் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் வெளிச்சம்
இருந்தால் எனக்குப் போதும் ஆனால், எனக்கு அது கிடைக்கத் தவறவிட்டு மீண்டும்
கள்ளிகளுக்காக அலைந்து திரட்டி வைப்பதும் அறிவற்றது. சற்றும் எதிர்பார்க்க
முடியா வண்ணம் பல இடங்களில் பாறை வெடித்துப் பல நூறு அடிகளுக்குச் செங்குத்தாக
இறங்கியது. அந்தப் பிளவுகளின் அடியிலும் செடி கொடிகள் வளர்ந்து படர்ந்திருந்தன.
அந்த ஒரு பகல் நேரப் பிரயாணத்திலேயே நான் அந்தப் பள்ளங்களில் தவறிப்போய்
விழுந்த பல மிருகங்களின் சின்னங்கள் - அழுகி, உலர்ந்து, பூச்சி அரித்து,
காற்றில் சிதறிப்போன சடலங்கள் - கிடப்பதைக் கண்டேன்.

    அதிகரித்துவரும் உடல் சோர்வைக் குறைந்துவரும் வெளிச்சம் சரிக்கட்டி வந்தது.
வெளிச்சம் இம்மியளவு குறைவதையும் என் உடல் முழுதாலும் என்னால் உணர முடிந்தது.
என் உடல் யத்தனம் அதிகரித்தபோதிலும் என் பிரயாணத்தின் வேகம் வெகுவாக
அதிகரிக்கவில்லை. நடப்பதென்றில்லாமல் நகர்வதற்கே மிகுந்த பிரயாசை
எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. என் கண் முன்னால் ஆயிரக்கணக்கான பூச்சிகள்
பறப்பதுபோலத் தெரிய ஆரம்பித்துவிட்டது. இன்னமும் இரண்டு மணி நேரப் பிரயாணம்
இருந்தது. நிமிஷங்கள் செல்லச் செல்ல வெளிச்சம் மறைவதற்குள் நான் மலைப்
பிரதேசத்தைக் கடந்துவிடுவேன் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. இன்னொரு
இரவு பனி விழும் மலைகளுக்கிடையில் நான் தங்க வேண்டும். பகலில் என் கண்களுக்கு
ஒன்றும் படவில்லை. ஆனால் அந்த உணர்வு என்னுடன் இருந்துகொண்டேயிருந்தது. அந்த
ஓநாய் என்னுடைய ஒவ்வொரு அசைவையும் அறியும். அது வரும்போது தனியாக வராது.

    கண்ணுக்கெட்டும் தூரத்தில் சமவெளி தெரிந்தது. ஆனால் அதை நம்பி நான்
பிரயாணத்தைத் தொடர முடியாது. என் குருதேவரின் சடலம் கிடந்த பலகையை அப்படியே
தழைத்துக் கீழே வைத்துவிட்டு மீண்டும் கள்ளிகலுக்காக அலைந்தேன். நேற்று கிடைத்த
அளவு கிடைகக்வில்லை. நேற்றைவிட இன்று நான் ஒரு நாள் வயது கூடுதலானவன்; உடல்
களைப்பும் பலஹீனமும் அதிகரித்தவன். கிடைத்ததை வைத்து நெருப்புப் பற்றவைத்தேன்.
நான்கே விறகுக் கட்டைகள் பாக்கியிருந்தன. ஒவ்வொன்றாகப் பற்ற வைத்துக்கொண்டு,
தணலாக எரியும் விறகுடன் என் குருதேவரின் சடலத்தைச் சுற்றிச் சுற்றி
வந்துகொண்டிருந்தேன். இன்றும் நான் தங்கிய இடத்திற்குப் பக்கத்திலேயே
செங்குத்தாகப் பள்ளம் இறங்கியது. அங்கு ஓடையில்லை - அது எங்கோ வேறு திசையில்
சென்றுவிட்டது. இந்தப் பள்ளத்தின் அடியில் புதர்தான் மண்டியிருந்தது. நேற்றுப்
பிரயாணத்தை நிறுத்தியபோது எனக்குப் பீதி எழவில்லை. என் குருதேவர் நேற்றும்
உடலால் எனக்கு எவ்வித உதவியும் செய்ய இயலாதவர். அந்த விதத்தில் நேற்றும் நான்
தனியன்தான். ஆனால் நேற்று இல்லாத பீதி இன்று என் அறிவைச்
சுருக்கிக்கொண்டிருந்தது. என் வாழ்க்கையின் சாதனைகள், லட்சியங்கள், சிந்தனை
அடிப்படைகள், ஆசைகள், உணர்ச்சிகள் எல்லாம் ஆவியாகப் பறந்துபோய், என்
குருதேவரின் சடலத்தை முழுமையாகச் சமவெளியில் அடக்கம் செய்துவிட வேண்டும்
என்பதைத் தவிர வேறு இலக்கு ஒன்றும் இல்லாமல் இருந்தேன். இன்னொரு இரவுப் பனி
உயிரற்ற சடலத்தை ஒன்றும் செய்துவிட முடியாது. ஆனால் என் பற்களிலும்,
எலும்புகளிலும்கூட இழையோடும் பீதியுடன் இருந்தேன். என் உடலெல்லாம் காதாகக்
கேட்டுக்கொண்டிருந்தேன். நன்றாக இருட்டிய பின் காற்றோசையோடு வேறொன்றும் கேட்க
நான் அதிக நேரம் காத்திருக்க நேரவில்லை. மெல்லிய சீறலுடன் பல ஜதை மின்மினிப்
பூச்சிகள் என்னை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தன.

    நான் ஒரு கையில் கொள்ளிக்கட்டையையும், இன்னொன்றில் மூங்கில் கழியும்
எடுத்துக் காத்திருந்தேன். அந்த இருட்டிலும் என் கண்கள் ஓரளவு பார்க்கத்
தொடங்கிவிட்டன. ஓநாய்கள் கூட்டமாக வந்தாலும் பதினைந்து இருபது அடி
தூரமிருக்கையில் பிரிந்து எங்களைச் சுற்றிவர ஆரம்பித்தன. ஒவ்வொன்றும் உறும
ஆரம்பித்து, சிறிது நடந்து, பின்வாங்கி, ஒருமுறை சீறி, முன்னேறி, பின்வாங்கி,
எங்களைச் சுற்றியவண்ணம் இருந்தது. நிமிஷங்கள் யுகமாக நகர்ந்தன. ஓநாய்கள்
எங்களைச் சுற்றும் வட்டத்தின் விட்டம் அங்குல அங்குலமாகக் குறைய ஆரம்பித்தது.
ஐந்தாறு ஓநாய்கள் முழு வளர்ச்சி பெற்றவை. அவையெல்லாம் வாலைப்
பின்னங்கால்களுக்கிடையில் பொருத்தி வைத்துக்கொண்டு எங்களைச் சுற்றின. நான் என்
குருதேவரின் தலைப் பக்கமாக நின்று கொண்டு, நாற்புறமும் மாறி மாறி என்
கொள்ளிக்கட்டையை ஆட்டியவண்ணம் இருந்தேன். பகலெல்லாம் ஓநாய்களைக் கண்ணெதிரே
பாராமல், ஆனால் அவை எங்களைத் தாக்க எங்கோ தூரத்தில் பின்தொடர்ந்து வருகின்றன
என்ற உணர்வே என்னைப் பெரும் பீதியில் விறைப்பாக இருக்கச் செய்தது. இப்போது
அவற்றை நேரே கண்டவுடன் என் ஆழ்ந்த அமைதி ஏற்பட்டது. அந்நேரத்தில் எனக்குச்
சிந்தனைகளே அவ்வப்போது எழாமல் போவதையும் உணர்ந்தேன்.

    நான் மிகவும் நிதானமாக என் கைகளை அசைத்துக்கொண்டிருந்தேன். ஓநாய்கள் எங்களை
இன்னமும் சுற்றிச் சுற்றி வந்தவண்ணமிருந்தன. நான் முதலில் தாக்க வேண்டும் என்று
அவை காத்திருந்ததுபோலத் தோன்றிற்று. எனக்கும் அந்த ஓநாய்க் கூட்டத்துக்குமிடையே
எழுந்திருக்க ஒரு இக்கட்டு நிலையை இருவரும் தீவிரப்படுத்தாமல் இருந்தால் இரவின்
எஞ்சிய நேரம் அப்படியே கழிந்துவிடும் என்றுகூடத் தோன்றிற்று. பகல் என்று
ஏற்பட்டவுடன் ஓநாய்கள் பின்வாங்கிவிடக்கூடும்.

    நான் நிச்சயமாக இருந்தேன். அந்த ஓநாய்களின் அடக்கமான உறுமல்கூட அப்போது
அப்பிரதேசத்தின் அமைதியோடு பொருந்திவிடக் கூடியதாகவே தோன்றியது. தாமாகவே
தங்களுக்குள்ளாக ஏற்படுத்திக்கொண்ட ஒரு நியதிக்கு அவை தம்மைக்
கட்டுப்படுத்திக்கொண்டு அதிலிருந்து இம்மியளவு  பிறழத் தயாராக
இல்லாதிருப்பதுபோல எங்களை வலம் வந்துகொண்டிருந்தன. எனக்கு அந்த ஓநாய்கள் மீது
பெரும் பரிவு ஏற்பட்டது. அவற்றைக் காலம் காலமாக நான் அறிந்து பழகியதுபோல ஒரு
உணர்வு ஏற்பட்டது. ஒரு நிலையில் நானே அவற்றுடன் சேர்ந்து என்னையே சுற்றி
வருவதுபோலத் தோன்றிற்று. அப்போது என் கையிலிருந்த கொள்ளிக் கட்டை சட்டென்று
அணைந்துவிட்டது. ஜூவாலை எழுப்ப அதை நான் வேகமாக வீசினேன். அப்போது, அந்த மலைப்
பிரதேசமே மூச்சு விடுவதை அப்படியே நிறுத்திக்கொண்டு ஸ்தம்பித்துக்
கிடப்பதுபோலத் தோன்றிற்று. என் கைக்கட்டை முழுவதும் அணைந்துவிட்டது. அதைப்
போட்டு விட்டுக் கீழே தணல் நுனிகளுடன் கிடந்த கட்டைகளில் ஒன்றைப் பொறுக்கி
எடுக்க நான் தீயின் பக்கம் குனிந்தேன். ஒரு அரைக் கணம் ஓநாய்கள் உறுமுவதுகூட
நின்றுவிட்டது. அடுத்துப் பேரிரைச்சலுடன் பெரிய ஓநாயாக ஒன்று என் மேல்
பாய்ந்தது. என் முகத்திற்கு நேரே பயங்கரமாக விரிந்துவந்த ஓநாயின் வாயில் என் கை
விறகுக் கட்டையைத் திணித்தேன். அது ஊளையிட்டுக் கொண்டு பின் வாங்கிற்று. அந்த
நேரம் வேறு சில ஓநாய்கள் என் குருதேவரின் உடலைப் போர்த்தியிருந்த கம்பளப்
பையைக் கடித்துக் கிழிக்க ஆரம்பித்தன.

    அதுவரை நிலவிய அமைதி, நியதிக்குட்பட்ட கட்டுப்பாடு எல்லாம் நொடிப் பொழுதில்
சிதறுண்டுபோயின. என்னை ஒவ்வொரு ஓநாயாகத்தான் தாக்கின. ஆனால் உயிரற்றுக் கிடந்த
என் குருதேவரின் சடலத்தின் மீதே கூட்டமாகப் பாய்ந்தன. நான் என் மூங்கில்
கழியைச் சக்கரமாகச் சுற்றினேன். ஒவ்வொரு முறை என் கழி எதையாவது தாக்கும்போது
என் தோள் பட்டை விண்டுவிடுவது போல நான் எதிரடி உணர முடிந்தது.

    இப்போது ஓநாய்கள் என் மீதும் இரண்டு மூன்றாகத் தாக்கின. அந்த நேரத்தில்
எங்களுக்குள் இருளே நிலவாதது போல் இருந்தது. என் ரத்தமும் ஓநாய்களின் ரத்தமும்
தீப்பற்றி வெடித்த வாணம் போல் எங்கள் மேலேயே சிதறி, சுற்றுப்புறமெல்லாம் சிதறி
விழுந்தன.

    ஓநாய்கள் உறுமிக்கொண்டு பாய்ந்து வந்து, பிடுங்கி, அடிபட்டு, பின்வாங்கி,
மீண்டும் பாய்ந்த வண்ணமிருந்தன. அப்போது இன்னொன்றையும் உணர்ந்தேன். என்
சுயநினைவில் கற்பனை செய்தும் பார்க்க முடியாத ஒலிகளை, உரத்த ஒலிகளை, நான்
எழுப்பிக்கொண்டிருந்தேன். அந்தப் போரில் நானும் ஒரு பயங்கர விலங்காக
மாறிப்போயிருந்தேன். ஒரு நிலையில் நாங்கள் இரு தரப்பினரும் சம வலிமை
பெற்றவர்களாகத் தோன்றினோம். ஓநாய்களுக்குள் ஓநாயாக நான் இருந்தேன்.

    ஆனால் அது நீடிக்க முடியவில்லை. ஓநாய்ப் படையின் பெரும்பகுதி அடிபட்டு,
ஊனமுற்று ஓடிப்போய்விட்டது. மூன்றுதான் எஞ்சியிருந்தன. என் மேலங்கி பல
இடங்களில் கிழிந்து ரத்தக் கறையோடு தொங்கிக் கொண்டிருந்தது. என் குருதேவரின்
சடலம் வைக்கப்பட்ட கம்பளப் பை எப்போதோ துண்டு துண்டுகளாக்கப்பட்டு விலகிக்
கிடந்தது.

    ஒரு ஓநாய் என் கழியின் வீச்சில் படாமல் என்னைப் பல திசைகளிலிருந்து
தாக்கிக்கொண்டிருந்தது. நான் தழைய வீசினால் அது எகிறிக் குதித்தது. நான் மேலாக
வீசினால் அது தலையைத் தரைமட்டத்துக்குத் தாழ்த்திக் கொண்டது. அதை ஒழித்துவிட
என் வெறியெல்லாம் சேமித்து நான் போரிட்டுக்கொண்டிருந்தேன். அது என்னுடைய
ஒவ்வொரு அசைவையும் உணர்ந்ததாக இருந்தது. ஒரு இரட்டைச் சகோதரனிடம் ஏற்படும்
அன்புடனும், குரோதத்துடனும் நான் அதைத் தாக்கினேன். நான் இருந்த இடம், என்
குருதேவரின் சடலம், மற்ற ஓநாய்கள் ஆகிய எல்லாவற்றையும் மறந்து அந்த ஒரு ஓநாயைத்
துரத்தி ஓடினேன். அது பெரியதாக ஊளையிட்டுக்கொண்டே இருட்டில் ஓடி மறைந்தது. அது
ஊளையிடுவதாகக் கேட்கவில்லை. ஏதோ வெற்றி முரசு முழக்குவதுபோலச் சீறிவிட்டுத்தான்
சென்றிருந்தது. மற்ற இரு ஓநாய்கள் என் குருதேவரின் சடலத்தைக் கவ்வி
இழுத்துக்கொண்டிருந்தன. “ஐயோ” என்று நான் அலறிக்கொண்டு அவைமீது பாய்ந்தேன்.
அதற்குள் என் குருதேவரின் சடலத்துடன் அவை பள்ளத்தில் விழுந்துவிட்டன. அதுவரை
என் கண்ணுக்கு எல்லாமே வெட்ட வெளியாகத் தெரிந்தது தடைப்பட்டுவிட்டது. “ஐயோ,
ஐயையோ!” என்று அலறிக்கொண்டு நான் பாய்ந்தேன். காலில் ஏதோ தடுக்கிற்று - என்
குருதேவரை நான் கிடத்தி இழுத்து வந்த பலகையாகத் தான் இருக்க வேண்டும். நான்
விழுந்தேன். நான் தரையை அணுகுவதற்குள் என் நினைவு நீங்கிவிட்டது.

    நான் மீண்டும் விழித்துக்கொண்டபோது என் மீது லேசான பனிப்போர்வை இருந்தது.
காலைச் சூரியனின் ஒளிக்கதிர்கள் நேரடியாக என் கண்களைத் தாக்கின. அப்படியே
படுத்திருந்தவன் ஒரு குலுக்கலுடன் எழுந்தேன். பஞ்சுபோலப் பனி சிதறிற்று. நான்
கிடந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த பள்ளத்தில் எட்டிப் பார்த்தேன்.
விளிம்பு ஓரமாக இறங்கி, ஓட்டமும் நடையுமாகப் பள்ளத்தின் அடியை அடைந்தேன்.
ஓநாய்கள் என் குருதேவரின் வயிற்றுப் பாகத்தைக் குதறித் தள்ளியிருந்தன. தலையையே
காணோம். உடலெல்லாம் இரத்தம் வெளிப்பட்டு உறைந்திருந்ததுபோல இருந்தது. கைக்
கட்டை விரல்களைக் கட்டியிருந்த துணி அறுபட்டுக் கிடந்தது. ஒரு ஓநாயின் கால்
அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்கப்பட்டு, என் குருதேவரின் வலது கைப்பிடியில் இருந்தது.

(1969)

*******

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

7 கருத்துகள்:

ஜெயமோகன் on November 8, 2010 at 6:47 PM said...

அசோகமித்திரனின் முக்கியமான கதைகளில் ஒன்று இது. அவரது புனைவுத்தன்மையின் மையம் என்பது அபத்த தரிசனம்தன். ‘மனிதன் அவனை உருவாக்கிய சக்திகளால் கைவிடப்பட்ட மிருகம்’ என்ற சார்த்ரின் வரிகளில் அசோகமித்திரனின் தரிசனத்தையும் வகுத்துவிடலாம். அசோகமித்திரன் இருத்தலியலின் கொடிபறந்த நவீனத்துவ காலகட்டத்தின் உச்சகட்ட அடையாளம்.

மனிதனை உருவாக்கிய ஆதிமனஎழுச்சிகளே அவனுடைய அன்றாட யதார்த்தத்துக்கு முன்னால் அர்த்தமிழந்து கிடப்பதைக் காட்டும் கதைகளில் ஒன்று இது. நமது யோக மரபு பல்லாயிரம் வருடத்து பாரம்பரியம் உள்ளது. அதற்காக பல்லாயிரம்பேர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்கள். தன் வாழ்நாளெல்லாம் அதற்காக ஒவ்வொரு கணத்தையும் செலவிட்டவர் இந்த குரு. ஆனால் கடைசியில் மரணம்-உயிரின் வாழ்வாசை என்ற இரு அடிப்படை இயற்கைச்சக்திகள் மட்டுமே எஞ்சுகின்றன. மிச்சமெல்லாம் வெறும் கற்பனை, வெறும் பிரமை-- என்று எண்ணச்செய்கிறது இந்தக்கதை

சாதாரணத்துவமே என்றும் அசோகமித்திரனின் கலையின் இயல்பு. சர்வசாதாரணமான மானுடர்களின் சர்வசாதாரணமான வாழ்க்கைக் கணங்கள். ஆனால் மிக அசாதாரண மனிதர்களின் மிக அசாதாரண வாழ்க்கைக்கணங்களைச் சொல்லும் கதைகளையும் அசோகமித்திரன் எழுதியிருக்கிறார்

இது அத்தகைய கதை

இளங்கோ கிருஷ்ணன் on November 9, 2010 at 10:46 AM said...

அற்புதமான கதை. ஜெயமோகனின் இணைப்பால் நெடுநாட்களுக்குப் பின் மீண்டும் வாசித்தேன். மனித வாழ்வுக்கு மனிதன் கொடுத்துக் கொள்ளும் அர்த்தத்தை இயற்கை மிக மிகச்சாதரணமாக நிராகரிக்கும் போது ஏற்படும் அபத்த உணர்வு மோசமானது. எந்த மனிதனும் சந்திக்கவே சந்திக்க விரும்பாதது..

V.Srinivasan./வ.ஸ்ரீநிவாசன் on November 9, 2010 at 5:55 PM said...

தமிழ்ச் சிறுகதையுலகின் சிகரங்களில் மகத்தானவரான அசோகமித்திரன் தொட்ட உயர்ந்த சிகரங்களிலொன்று இச்சிறுகதை. இணைப்பு தந்த ஜெயமோகனுக்கு நன்றி.

Kuttymaanu on December 6, 2010 at 6:54 PM said...

எதற்கு வேண்டுமாலும் ஆசைப்படலாம். ஆனால் நடப்பவற்றை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்பதை அருமையாக உருவகப்படுத்தி இருக்கிறார். குரு நாதரை காப்பாற்ற நினைத்தது, நல் அடக்கமாவது செய்ய போராடுவது, ஒநாய்களாய் தொடரும் எதிர் சக்திகள்.....எல்லாவற்றிற்கும் மேலாக " ஒரு ஓநாயின் கால் அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்கப்பட்டு, என் குருதேவரின் வலது கைப்பிடியில் இருந்தது." என்ற வரிகள்.... அப்பா...எழுந்த உணர்வுகளை எப்படி எழுதுவது...தெரியவில்லை.

Anonymous said...

மானுடம் கண்டறியாத பல கேள்விகளுக்கான விடையைத் தேடத் தூண்டும் தருணங்கள் அமையப்பெற்ற கதை,அசோகமித்திரனின்
'பிரயாணம்'. தன்னை மிஞ்சிய குரு தானேவெனும் உணர்தலில் இருந்துவரும் எனக்கு இக்கதையும் மற்றுமொரு உதாரணமே.

உதவத் திராணியற்ற சதைத் தொக்குப்பாகத் திகழ்ந்தாலும் பிறன் இருப்பு தரும் மனோதிடம், புதிரான ஒன்றே.இந்த குருவும் அவனுக்கு அப்படியே. மரணம் நெருங்கும் தருவாயில் உயிர்களுள் ஏற்ப்படும் அசாத்திய அசுர பலம் வியப்பிற்குறியதே.

'நான் நிச்சயமாக இருந்தேன்.அந்த ஓநாய்களின் அடக்கமான உறுமல்கூட அப்போது அப்பிரதேசத்தின் அமைதியோடு பொருந்திவிடக் கூடியதாகவே தோன்றியது.'- மலைப்பாதைகளில் பிணத்துடன் பயனிப்பவனின் விழிப்புணர்வு,இயற்கையோடு அவனையுமறியாமல் இயந்து போனதின் வெளிப்பாடே இது.

'..கடைசியில் மரணம்-உயிரின் வாழ்வாசை என்ற இரு அடிப்படை இயற்கைச்சக்திகள் மட்டுமே எஞ்சுகின்றன. மிச்சமெல்லாம் வெறும் கற்பனை, வெறும் பிரமை என்று எண்ணச்செய்கிறது இந்தக்கதை'- என்னும் திரு. ஜெயமோகன். அவர்களின் கூற்றை வழிமொழிகிறேன்.

'அதுவரை நிலவிய அமைதி, நியதிக்குட்பட்ட கட்டுப்பாடு எல்லாம் நொடிப் பொழுதில்
சிதறுண்டுபோயின'- என்னும் வரிகள் எண்ணத்தூண்டும் கேள்விகள் பல..

Jegadeesh Kumar on July 8, 2011 at 9:10 AM said...

இந்த கதையை கொஞ்ச நாட்கள் முன் படித்து அதிர்ந்து போனேன். இது பற்றி ஜெயமோகனுக்குக் கடிதம் எழுதினேன். ஆனால் இங்கு கருத்து சொல்லவில்லை என்பதை இப்போதுதான் பார்த்து நாக்கைக் கடித்துக் கொள்கிறேன். இந்தக் கதை பற்றி நான் எழுதிய பதிவு இங்கே,

http://jekay2ab.blogspot.com/2010/07/blog-post_17.html

பகிர்வுக்கு நன்றி.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி on September 12, 2012 at 11:44 AM said...

இந்த குருவைத் தேடிப்பிடிக்கவே மூன்று வருடங்கள் ஆயின, இனி அடுத்த குரு எங்கே, எப்போது எனக்குக் எனக்குக்கிடைப்பாரோ?

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்