Sep 11, 2010

பல்கலைக் கழகங்கள் விமர்சகர்களை உருவாக்கவேயில்லை - எஸ்.ரா நேர்காணல்

எஸ். ராமகிருஷ்ணன், இன்று தமிழில் அதிக வாசகர்களால் விரும்பி வாசிக்கப்படும் எழுத்தாளர். பத்திரிகையாளராகத் தனது பயணத்தைத் தொடங்கிய எஸ்.ராமகிருஷ்ணன், தற்கால தமிழ் சிறுகதையாசிரியர்களில் மிக முக்கியமானவர். நவீனத்துவ எழுத்தாளர்களுக்குப் பிறகு, தொடர்ந்து பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு, தமிழ் கதைப்போக்கை மாற்றியமைத்த புதிய தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவர். தனது கதைகள், கட்டுரைகள், மொழி

பெயர்ப்புகள், உரையாடல்கள் மூலம் சமகால தமிழ் இலக்கியப் பரப்பில் பெரும் பாதிப்பை IMG_0850 நிகழ்த்தியவராக எஸ். ராமகிருஷ்ணனைச் சொல்லலாம். "வெளியில் ஒருவன்", "காட்டின் உருவம்" தாவரங்களின் உரையாடல்", "வெயிலைக் கொண்டு வாருங்கள்" அகிய சிறுகதைத் தொகுப்புகள், "உபபாண்டவம்", "நெடுங்குறுதி" ஆகிய நாவல்கள், "வாக்கியங்களின் சாலை", துணையெழுத்து", "உலக சினிமா" ஆகிய கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் "நம்பிக்கையின் பரிமாணங்கள்", லூயிகரோலின் உலகப் புகழ் பெற்ற "ஆலிஸின் அற்புத உலகம்" மொழிபெயர்ப்புகள் ஆகியவை எஸ்.ராமகிருஷ்ணனின் வெளிவந்துள்ள நூல்கள். தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படக் கதாசிரியராகவும் பங்களித்துள்ளார் ராமகிருஷ்ணன். தீராநதி இதழுக்கு அளித்துள்ள அவரது பேட்டியிலிருந்து...

தீராநதி: "புதுவகை எழுத்துகள்" ஒரு போக்காக தமிழில் அறிமுகமான காலகட்டத்தில் அதனை முன்வைத்தவர்களில் நீங்களும் ஒருவர். அப்போது, "யதார்த்த வாதத்தின் காலகட்டம் முடிந்துவிட்டது. இனி கதைகளில் கதை அம்சம் தேவையில்லை" என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அப்போதும் புதுமுயற்சிகளை மேற்கொண்டவர்களில் நீங்கள் மட்டும் கதையம்சம் கொண்ட கதைகளை எழுதி வந்தீர்கள். இது சார்ந்து, குறிப்பாக அப்போது நடைபெற்ற விவாதங்களை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள் என்று சொல்ல முடியுமா?

எஸ். ராமகிருஷ்ணன்: யதார்த்த வாதம் என்ற பெயரில், சுயஅனுபவத்தை எழுதுவது மட்டுமே கதை என்று கூக்குரலிட்டுக் கொண்டிருந்த ஒருசாராருக்கும், மறுபக்கம் லட்சியவாத கோட்பாடுகளுக்கு ஏற்றபடி கதையைத் தைத்துக் கொடுக்கும் சிர்திருத்த கதாசிரியர்களுக்கும் இடையில் கதைகள் என்பது ஒரு புனைவு என்று சொன்னவர்களில் நானும் ஒருவன். இது ஒன்றும் எனது கண்டுபிடிப்பல்ல. கதைகள் புனைவு என்பது யாவரும் அறிந்த உண்மைதான். ஆனால் புனைவு என்பதைப் பொய் என்று புரிந்து வைத்திருப்பதை நான் மறுத்தேன். கற்பனை என்பது உண்மைக்கு எதிரானதல்ல. உண்மையைப் புரிந்து கொள்வதற்கும் வெளிப்படுத்துவதற்குமான சாத்தியப்பாடு என்று கூறினேன். யதார்த்தம் என்பதும் ஒரு புனைவே. அதை முன் முடிவுசெய்யப்பட்ட புனைவாகச் சொல்லலாம். கடந்த காலங்களில் யதார்த்தத்தைத் தட்டையான ஒற்றைப் பரிமாணமுள்ளதாக மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் யதார்த்தம் பல தளங்களை உடையது. அதீதமும் இயல்பும் ஒன்றாக முடங்கிக் கிடக்கக் கூடியது. காலத்திற்கு காலம் யதார்த்தத்தைப் பற்றிய புரிதல் தொடர்ந்து மாறிக் கொண்டேதானிருக்கிறது. யதார்த்தம் என்ற பெயரில் நடைபெற்று வந்த சலிப்பூட்டும் ஒற்றைத்தன்மை கதைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்றுதான் நான் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். நம் கதை மரபு ஒற்றைத்தன்மை வாய்ந்தது அல்ல. அது பன்முகத்தன்மை வாய்ந்தது.

கர்ப்பிணி ஒருத்தி நடந்துவரும் போது, அவள் வயிற்றில் உள்ள குழந்தை தன் இருப்பிடத்தில் இருந்து நகரவேயில்லை; ஆனால் குழந்தையும் பல மைல் தூரம் கடந்து தானே செல்கிறது. இது யதார்த்தமா இல்லையா?

தீராநதி:- ஆனால், "புதிய கதை எழுத்து" இன்று ஒரு தேக்கநிலை அடைந்துவிட்டிருக்கிறது. மீண்டும் யதார்த்தவாத கதைகள் அதிகம் எழுதப்படுகிறது. இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எஸ். ராமகிருஷ்ணன்: "புதிய கதை எழுத்து" என்று எதைச் சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. நான் புதிய கதை எழுத்து பாரதி, புதுமைப்பித்தனில் துவங்கி மௌனி, நகுலன், ந.முத்துசாமி, ஜி. நாகராஜன், சம்பத், கோபி கிருஷ்ணன், ஜெயமோகன், கோணங்கி, பிரேம் ரமேஷ், உமா வரதராஜன், முத்துலிங்கம், லக்ஷ்மி மணிவண்ணன், காலபைரவன் என நீண்டு தொடர்ந்துவந்து கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன்.

எது யதார்த்தம் என ஏதாவது வரையறையிருக்கிறதா என்ன? பயன்பாட்டிற்கு (utility) உட்படுகின்றவற்றை மட்டுமே நாம் யதார்த்தமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நம் புலன்கள்தான் யதார்த்தத்தின் வரையறையாக இருந்திருக்கிறது. ஆனால் புலன்கள் முழுமையானவையல்ல. அவை குறைபாடானவை என்பதை ஒவ்வொரு மனிதனும் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்துதானே இருக்கிறான். நம் கால, இடப்பிரக்ஞை கூட புனைவுதானே. அதை நாம் அன்றாடம் புழங்கவில்லையா? புனைவைத்தான் நமது பெயராகச் சூடியிருக்கிறோம். நம் உடல்கள் புனைவால்தானே நிரம்பியிருக்கிறது. புனைவைப் புரிந்துகொள்வதற்கும் அதனூடாக உள்ள புனைவடுக்குகளைக் கண்டறிவதற்கும், உருவாக்குவதற்குமே "புதியகதை எழுத்து" முயற்சிக்கிறது. அது தமிழில் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டுதான் வருகிறது. கடந்த கால எழுத்தாளர்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவேயில்லை. தங்கள் எழுத்து உண்மையைக் கண்ணாடி போல பிரதிபலிக்கின்றது என்று அறிவித்துக் கொண்டார்கள். ஆனால் கண்ணாடி உருவத்தை இடவலமாக மாற்றித் தான் பிரதிபலிக்கும் என்ற நிஜத்தைக் கூட புரிந்து கொள்ளாமல் இருந்ததுதான் வேடிக்கையாக இருக்கிறது.

தீராநதி: அப்படியானால் இதுவரை யதார்த்தவாதமாக நம்பப்பட்டு வந்தவைகள் தவறானவைகளா?

எஸ்.ராமகிருஷ்ணன்: சொல்லும் மரபிலிருந்து எழுத்து மரபிற்கு கதைகள் மாற்றம் கொண்ட போது கூட கதை மரபுகள் கைவிடப்படவில்லை. தமிழ் சிறுகதையின் ஆரம்பகால முயற்சிகளில் வெளிப்படையாக இதைக் காணமுடிகிறது. குறிப்பாக உதிரி மனிதர்களுக்கும் அபௌதீக தளங்களுக்கும் மறுகதைகளுக்கும் இடமிருந்திருக்கிறது. பாரதி, புதுமைபித்தன் கதைகளில் கதை சொல்லல் தனித்துவமாக தானே இருந்தன. ஆனால் அதன் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள், கதையின் மையமாக குடும்பத்தைச் சுருக்கியதும், அதன் தினப்பாடுகளைப் பதிவு செய்வது மட்டுமே கதைகளின் வேலை என்று முடிவு செய்து கொண்டு ரேடியோ நாடகங்களைப் போல வாய் ஓயாமல் பேசும் கதாபாத்திரங்களை எழுதி நிரப்பியதும் தவறான வழிகாட்டுதலாகப்படுகிறது. அதன் தொடர்ச்சி அடுத்த பதினைந்து வருடங்களில் சிறுகதைகள் மத்திய தர வர்க்கத்து மனிதர்களின் புலம்பலுக்கும் நிராசைகளுக்கும் உரிய வடிவமாக சுருங்கிப் போய் விட்டது.

கார்க்கி, செகாவ், தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் போன்றவர்களின் ருஷ்ய சிறுகதைகளும் மாப்பசான், பால்சாக் போன்ற பிரெஞ்ச் இலக்கியவாதிகளும் எட்கர் ஆலன் போ, ஜாக்லண்டன், ஸ்டீபன் கிரேன் போன்ற அமெரிக்க சிறுகதையாசிரியர்களும் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் அந்த எழுத்துகளிடமிருந்து தமிழ் எழுத்தாளர்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியமாகத்தானிருக்கிறது. அதே வேளையில் வளமையான சங்கக் கவிதைகளும் சமணபௌத்த காப்பியங்களும் நூறு வகை கதை சொல்லல் முறைகொண்ட நாட்டார் கதைகளும் தொன்மங்களும் நம்பிக்கைகளும் கூட தமிழ் சிறுகதையாசிரியர்களைப் பாதிக்கவேயில்லை. பின் எதிலிருந்துதான் இவர்கள் உருவானார்கள்? எதைத் தங்களது பார்வையின் அடித்தளமாக கொண்டிருந்தார்கள்? எதை யதார்த்தம் என்று சொல்கிறார்கள் எனப் புரியவில்லை.

தீராநதி: "புது எழுத்து முயற்சிகள் குறைந்து எதார்த்தவாதம் மீண்டும் மேலெழும்பும் மாற்றத்தை உங்களிடமும் காண்கிறோம். உங்களது இரண்டாவது நாவலான "நெடுங்குருதியை" ஒட்டி உங்களது எழுத்துகளில் இந்த மாற்றம் தெரியத் துவங்குகிறது. "நெடுங்குருதி" ஒரு மேஜிக்கை தன்னுள் வைத்திருக்கும் அதே நேரத்தில் அது ஒரு யதார்த்தவாத நாவலாகவும் இருக்கிறது. உங்கள் எழுத்தில் நிகழ்ந்த இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன?

எஸ். ராமகிருஷ்ணன்: "நெடுங்குருதி" நாவலின் துவக்கம் பத்தாண்டுகளுக்கு முன் நான் எழுதிய "காட்டின் உருவம்" சிறு கதையிலே துவங்குகிறது. "நெடுங்குருதி" நாவல் வேம்பலை என்ற புனைவான கிராமத்தில் வாழும் வேம்பர்கள் என்ற மனிதர்களையும் அவர்களது மூர்க்கமான வாழ்க்கைப் போராட்டத்தையும். துக்கத்தையும் வேதனைகளையும் அவர்களது விசித்திரக் கனவுகளையும் சொல்கிறது. "உப பாண்டவம்" போன்று ஒரு இதிகாசத்தின் மீதான மீள்புனைவாக ஒரு நாவலை எழுதிய பிறகு இருபதாண்டுகளுக்கும் மேலாக என்னுள் புதையுண்டிருந்த வேம்பலையை எப்படிப் பதிவு செய்வது என்று யோசனையாக இருந்தது. பால்ய நாட்களில் மாட்டுத் தரகர்களோடு சந்தைக்குச் செல்லும் போது அவர்கள் தாங்கள் அறிந்த கதையை வழியெல்லாம் சொல்லிக் கொண்டு வருவார்கள். அதில் எது நிஜம், எது பொய் என்று பிரிக்க முடியாது. கதாபாத்திரம் போன்று வர்ணிக்கப்பட்ட மனிதனைச் சந்தையில் நேரிலே நாம் காண சந்தர்ப்பம் அமையும். அதேநேரம் அவர்கள் தங்களது நிலவியலையும் அதனைப் பீடித்திருக்கும் துர்கனவையும் தொடர்ந்து எல்லாக் கதைகளிலும் சொல்லிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. அந்த கதை சொல்லல் முறையைத்தான் "நெடுங்குருதி"யிலும் காணமுடியும். குறிப்பாக இயற்கையின் கரங்கள் வாழ்வை எப்படி புரட்டிப் போடுகின்றன என்பதையும் அதன் குரூரமும் கருணையும் எப்படி பீறிடுகின்றன என்பதையுமே இந்நாவல் மையமாக கொண்டிருக்கிறது. என்னைப் பொருத்தமட்டில் இந்த நாவல் ஒரு வெயிலின் கதை. நிலப்பரப்பெங்கும் வெயில் ஒரு மூர்க்கமான மிருகத்தைப்போல தன் விருப்பப்படி சுற்றியலைகிறது. வெயிலைக் குடித்துக்கிறங்கிய மனிதர்கள் தீமையின் உருக்களைப் போல நடமாடுகிறார்கள். வாழ்வைப் பற்றிய உயர்வெண்ணங்கள் எதுவும் அவர்களிடமில்லை. சாவைக் குறித்த புலம்புதல்களுமில்லை. அந்த நிலவியலில் வாழ்வது என்பதே ஒரு மாயம் தான்.

"தாவரங்களின் உரையாடலில்" இருந்து எனது கதைவெளி மாறிக்கொண்டு வரத்துவங்கியது. அதன் தொடர்ச்சியாக "வெயிலைக் கொண்டுவாருங்கள்" தொகுப்பின் அதிகதைகளையும் "உப பாண்டவம்" நாவலையும் சொல்லலாம். அதன் பின்னணியில்தான் "நெடுங்குருதி" வந்திருக்கிறது. ஆகவே எழுத்து முறை இப்போதுதான் மாற்றமடைந்துள்ளது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

தீராநதி: இன்றைய தமிழ் இலக்கியப் போக்குகள் குறித்த உங்களது அபிப்ராயம் என்ன?

எஸ்.ராமகிருஷ்ணன்: பன்முகப்பட்டதாகவும் பல்வேறு சிரிய தளங்களில் செயல்படுவதாகவும் புதிய எழுத்துவகை உருவாகியிருக்கிறது. குறிப்பாக தமிழ் கவிதையில் பெண் கவிஞர்களின் வரவு இதுவரையில்லாத சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது. அவர்கள் ஆபாசமாக எழுதுகிறார் என்று கூச்சலிடுவது அர்த்தமற்றது. ஆபாசம் வீட்டுத் தொலைகாட்சியில், பாடல்களில் பேச்சில் நடவடிக்கைகளில் என்று வீடுகளிலும் ஊடகங்களிலும் பெருகி வழிவதை ரசித்துக் கொண்டிருப்பவர்கள், பால் உணர்வுகளை ஒடுக்கப்பட்ட உடலின் குரலாக கவிதைகளில் வெளிப்படுத்துவதை எதிர்ப்பது ஒரு திட்டமிட்ட வன்முறை என்பேன்.

சிறுகதையிலும் உதிரி மனிதர்கள் பற்றியும் மனத்திரிபுகள், பால் இச்சைகள் குறித்தும் பேசும் கதைகள் சிறப்பாக எழுதப்பட்டு வருகின்றன. புத்தகவெளியீட்டில் ஒரு உலகத்தரம் தமிழுக்குச் சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் நாவல்கள் மிக குறைவாகவே எழுதப்படுகின்றன. அதிலும் குறிப்பிடும்படியாக எதுவுமில்லை.

மாலதி மைத்ரி, தென்றல், குட்டிரேவதி, ராணி திலக், ஸ்ரீநேசன் போன்றவர்களின் கவிதைகள் பிடித்திருக்கின்றன. சிறுகதையில் ஜே.பி. சாணக்யா, ஸ்ரீராம், லக்ஷ்மி மணிவண்ணன், காலபைரவன் போன்றவர்கள் புதிய தளங்களை உருவாக்கி வருகிறார்கள். இவர்களைத் தவிர்த்து நான் தொ. பரமசிவத்தின் எழுத்துக்களையும் தியடோ பாஸ்கரனின் கட்டுரைகளையும் ஈடுபாட்டுடன் வாசித்து வருகிறேன். மொழிபெயர்ப்பில் ஜி. குப்புசாமியின் செயல்பாடு மிகவும் கவனிக்கபட வேண்டியது.

தீராநதி: தமிழ் இலக்கிய விமர்சனப்போக்குகள் பற்றி, குறிப்பாக தமிழ் விமர்சகர்கள் படைப்பாளிக்கு ஊக்கம் தருபவராக இருக்கிறாரா இல்லையா என்பதை ஒரு படைப்பாளி என்னும் முறையில் சொல்ல முடியுமா?

எஸ்.ராமகிருஷ்ணன்: இன்று தமிழில் இலக்கிய விமர்சகர்களேயில்லை. தற்போது விமர்சகர்களாகயிருப்பவர்கள் பலரும் தங்களுக்கு பரிச்சயமான கோட்பாடுகளைப் பரிசோதித்து பார்ப்பதற்கான சோதனை எலியாகத்தான் இலக்கியப் படைப்புகளை எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு முறையானதொரு இலக்கியக் கோட்பாடுகள், தத்துவங்களின் பரிச்சயமும், தமிழ் இலக்கியத்தின் தேர்ச்சியும் இல்லை.

இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த விமர்சன தந்தைகள் எதை எழுதுவது, எதை எழுதக் கூடாது என்று முடிவு செய்யும் கலாச்சார காவலர்களாக தங்களைக் கருதிக்கொண்டு வெட்டுக் கத்திகளுடன் தணிக்கையாளர்களைப்போல செயல்பட்டிருக்கிறார்கள். அன்றைய இலக்கிய விமர்சனம் தெருச்சண்டை போல வசைகளும் கொச்சையும் நிரம்பியதாகதான் காணப்படுகிறது. இன்னொரு பக்கம் இலக்கிய விமர்சனம் என்ற பெயரில் துதிபாடுதலும் ஆராதனைகளும் மிக அதிகமாக நடைபெற்றிருக்கின்றன. தமிழ்நாட்டின் போர்ஹே, தமிழ் கால்வினோ, தமிழைக் காப்பாற்ற வந்த பின் நவீனத்துவ டொனால்டு பார்த்தல்மே, தமிழ் காப்கா என தமிழ் எழுத்தாளர்களுக்கு உலக அங்கீகார பட்டங்கள் தந்தது உள்ளுர் விமர்சகர்களைத் தவிர வேறு யார்?

புதுக்கவிதையைப் பற்றி உப்புப் பெறாத இரண்டு விமர்சன கட்டுரை தொகுதிகளை வெளியிட்டுவிட்டு சாகித்ய அகாதமி பதவியையும் சர்வதேச அரங்கங்களில் கட்டுரைவாசிக்கும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கிக் கொள்ளும் அபத்தம் வேறு எங்காவது இருக்கிறதா என்ன? ஆங்கிலத்துறைகளில் பணியாற்றிக் கொண்டு அரைகுறையாக கற்றுக்கொண்ட விமர்சனபாடங்களைத் தமிழ் இலக்கியவாதிகளின் மீது ஏவிவிடும் உளறல் இன்னொருபுறம் பின் நவீனத்துவ விமர்சனமாக பெருகிக் கொண்டிருக்கிறது.

பல்கலைக் கழகங்கள் குறிப்பிடத் தகுந்த இலக்கிய விமர்சகர்களை உருவாக்கவேயில்லை. மாறாக நல்ல நாவல்களை, கவிதைகளைப் பரிட்சைக்குரிய பத்து மார்க் கேள்விகளாக உருமாற்றி வகுப்பெடுத்து சராசரி ரசனை அளவைக் கூடச் சிதைத்து விட்டிருகிறார்கள். விதிவிலக்காக உள்ள தொ.பராமசிவம், அ.கா.பெருமாள், அ.மார்க்ஸ், வீ. அரசு போன்ற பேராசிரியர்கள் கூட கவிதை, நாவல், சிறுகதை போன்ற இலக்கிய விமர்சனத்தை விடவும், நாட்டார் கலைகள், மொழித்துறை, நாடகம், அரசியல் நிகழ்வுகள் சார்ந்துதான் அதிகம் செயல்பட்டு வருகிறார்கள். மிகவும் கவனத்துக்குரிய விமர்சகர்களாக மதிக்கப்பட்ட தமிழவன், நாகார்ஜுனன். எம்.டி.முத்துகுமாரசாமி, எஸ்.சண்முகம் போன்றவர்கள் இப்போது எழுதுவதேயில்லை. அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பணியாற்றிக் கொண்டு தமிழ் இலக்கியத்திற்கு ஏ.கே.ராமானுஜமும் ஜார்ஜ் எல்.ஹார்ட்டும் செய்த பங்களிப்பின் ஒரு பகுதியாவது இங்குள்ள கல்வித்துறை அறிஞர்களால் செய்யப்பட்டிருக்கிறதா?

மிகைல் பக்தின், தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகினைப் பற்றி விரிவாக "Dostoevsky"s Poetics" என்ற 300 பக்க நூலை எழுதியிருக்கிறார். இதாலோ கால்வினோ செவ்விலக்கியங்களை எப்படி வாசிப்பது என்று தனிப் புத்தகமே எழுதியிருக்கிறார். உம்பர்த்தோ ஈகோவின் கட்டுரைகள் மொழியியலையும் மறைக்கப்பட்ட சரித்திரத்தையும் பேசுகின்றன. இவர்களைப் போலவே டெரிதாவும், லக்கானும், மிஷைல் பூக்கோவும் எழுதிய விமர்சனங்கள் நம்கையில் வாசிக்கக் கிடைக்கின்றன. இவர்கள் எவரும் எழுத்தாளர்களைப் புகழ்ந்து கொண்டாடுவதற்கு விமர்சனத்தை பயன்படுத்தவில்லை. மாறாக படைப்பை புரிந்து கொள்வதற்கான சாத்தியங்களை அதிகமாக்குகிறார்கள். தமிழில் இந்த வகை விமர்சனங்கள் இல்லை. அதனால்தான் இன்றைய இலக்கிய விமர்சகர்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தீராநதி: தற்போது "உயிர்மை" இதழில் உலக எழுத்தாளர்கள் பற்றி, அவர்களின் எழுத்துக்கு அப்பாற்பட்ட ஆர்வங்களைப் பற்றி எழுதி வருகிறீர்கள். இதை எழுதவேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது?

எஸ்.ராமகிருஷ்ணன்: எனது பதினெட்டு வயதிலிருந்து உலக இலக்கியங்களை வாசித்து வருகிறேன். அத்தோடு சமகாலத்தின் முக்கிய படைப்புகள் எந்த தேசத்தில் எழுதப்பட்ட போதும் அவற்றைத் தேடி வாசிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறேன். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இலக்கியவாதிகளைத் தேடிச் சென்று பார்த்து அவர்களோடு எனது வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். எழுத்தாளர்களின் வேலை கதை எழுதுவது மட்டுமே என்று கற்பிக்கப்பட்டிருந்த பிம்பம் இந்த வாசித்தலில், சந்திப்பில் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து போகத் துவங்கியிருந்தது. வைக்கம் முகமது பஷீரைச் சந்தித்த போது சின யாத்ரீகன் மார்க்கோ போலோவைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தது போன்ற அனுபவமேயிருந்தது. மகாஸ்வேதா தேவியைச் சந்தித்த போது பழங்குடியினருக்காகப் போராடும் போராளியைக் கண்ட சந்தோஷம் உண்டானது.

எழுத்தாளர்கள் கதைகளை விடவும் புதிராக வாழ்ந்திருக்கிறார்கள். எதை, எதையோ தேடியலைந்திருக்கிறார்கள். அரசியல் ஈடுபாட்டின் காரணமாகச் சிறைபட்டிருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடியிருக்கிறார்கள். "எழுத்தாளனின் செயல்பாடு பன்முகப்பட்டது. எழுத்தாளன் யாவையும் கடந்த ஒரு ஞானி, எழுத்து ஒரு அகதரிசனம்" என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, என் வாசிப்பில் நான் நெருக்கமாக உணர்ந்த சிறந்த இருபது புத்தகங்கள் குறித்து "வாக்கியங்களின் சாலை" என்று ஒரு கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகத்தான் "உயிர்மை" இதழில் தற்போது எழுதி வரும் பத்தியைச் சொல்லலாம்.

தீராநதி: இந்தத் தொடரில் தமிழ் எழுத்தாளர்கள் மீது, அவர்களுக்குப் பல்வேறு துறை சார்ந்த ஆர்வம் இல்லை என்ற விமர்சனத்தை முன் வைக்கிறீர்கள். அப்படியொரு ஆர்வம் எழுத்தளார்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

எஸ். ராமகிருஷ்ணன்: ஆர்வம் என்று அதைச் சொல்ல முடியாது; ஒரு கற்றுக் கொள்ளல் என்று சொல்லலாம். கற்றக் கொள்வதை கட்டாயப்படுத்த முடியுமா என்ன? நாம் எழுதத் துவங்கியதும் கற்றுக் கொள்வதை நிறுத்திவிடுகிறோம்.

தீராநதி: உங்கள் கவனம் தற்போது எதில் குவிந்திருக்கிறது. அல்லது எதைத் தொடர்ந்து விரும்பி வாசித்து வருகிறீர்கள்?

எஸ். ராமகிருஷ்ணன்: புத்தரைத் தொடர்ந்து பத்தாண்டுகளாகப் பயின்று வருகிறேன். இந்திய சமூகத்தை, மனதைப் புரிந்து கொள்வதற்கு பௌத்தம் சரியான வழிகாட்டுதலாகயிருக்கிறது. சாஞ்சி, கயா, சாரநாத், நாகார்ஜுன கொண்டா என பௌத்த வாழ்விடங்களைத் தேடிச் சென்றும் பார்த்து வருகிறேன். இன்று பௌத்தத்தைக் கொண்டாடும் பலரும் அதன் சமூக கருத்துக்களை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்ற யாவையும் விலக்கிவிடுகிறார்கள். அரசியல் காரணங்களுக்கான மாற்றுப் படிமமாக மட்டுமே புத்தர் பயன்படுத்தப்பட்டு வருகிறார். உண்மையில் பௌத்த வாழ்முறையில் எவருக்கும் ஈடுபாடில்லை. பௌத்த அரசியலை மேற்கொள்பவர்கள் வன்முறையைத் தங்களது ஆயுதமாக கொள்வதையும் சுயமோகத்தில் ஊறிப்போயிருப்பதையும் காணும்போது இவர்கள் எந்த புத்தரைப் பற்றி பேசுகிறார்கள் என்று சந்தேகமாகத்தானிருக்கிறது. புத்தத்தினைப் புரிந்து கொள்ளாமல் போனதும் அதை வாழ்க்கை நெறியாக பின்பற்றக் தவறியதும் இந்திய சமூகம் இழைத்த மாபெரும் தவறு. புத்தத்திற்கு ஒருவர் மதம் மாறுவது என்பதையே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருவன் எந்த மதத்தினைச் சார்ந்து இருந்தாலும் அவன் பௌத்தனாக வாழ முடியும். பௌத்தம் ஒரு மதமல்ல; ஒரு வாழ்முறை. ஒரு சிந்தனைவெளி. இன்னும் சொல்லப்போனால் பௌத்த ஈடுபாடு ஒரு மதமறுப்புச் செயல்.

பௌத்தம் முழுமையாக ஸ்தாபனமயமாக்கப்பட்டுவிட்டது. இரண்டு மகாபிரிவுகள், அதற்குள் நூறு துணைப்பிரிவுகள். மாந்திரீகம் தாந்திரீகம் என ரகசிய சடங்குகளையும் பாலியல் கிளர்ச்சி, பரபரப்பான மனிதர்களின் மனநெருக்கடியை போக்கும் எளிய தியானமுறை என்று வணிக தந்திரங்களைக் கொண்டதாகவும், ஏன் மறைமுக அதிகார சக்தியாகவும் கூட தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் பௌத்த சிந்தனைகளும் தத்துவமும் அறமும் ஸ்தாபன கட்டுப்பாடுகளுக்கு வெளியில் தனித்த சிந்தனைகளாக, அறிவார்ந்த வழிகாட்டுதலாக உள்ளது. நாம் பின்பற்ற வேண்டியது இதுபோன்ற பௌத்த நெறியைத்தான். அதைப் போலவே பெரியாரை இந்து மத எதிர்பாளர் என்று சுருக்கி, அவரை ஒரு திராவிடக் கட்சி தலைவரைப் போல கட்சி அடையாளத்திற்குள் அடைக்க முயன்றதும் தமிழ் அறிவாளிகளின் தவறான வழிகாட்டுதல் என்றே சொல்வேன். பெரியாரைப் பற்றிய இன்றைய விமர்சனங்கள் யாவும் அவதூறுகளாகவே உள்ளன. அவரின் சிரிய விவாதங்களை மூடிமறைப்பதற்கான தந்திரமாகவே தெரிகிறது. பெரியாரை நுட்பமாக வாசித்த எவரும் அவரை துதிபாட மாட்டார்கள். மாறாக தமிழ் சமூகத்தின் மீது அவர் எழுப்பிய கேள்விகளும் அவரது நேரடி செயல்பாடும் எத்தனை வலிமையானது என்று கட்டாயம் புரிந்த கொள்வார்கள். பெரியார் ஒரு சிந்தனை தளத்தை உருவாக்குகிறார்; அதே வேளையில் அதன் செயல்பாட்டிற்கான சாத்தியப்பாடுகளையும் உருவாக்கியிருக்கிறார்.

தீராநதி: ஊர் சுற்றுவதில் உங்களுக்கு உள்ள ஆர்வம் வெறும் பயணியின் ஆசையா, இல்லை எதையாவது தேடிச் சென்று கொண்டிருக்கிறீர்களா?

எஸ். ராமகிருஷ்ணன்: நான் சுற்றுலாபயணி அல்ல. இன்னும் சொல்லப்போனால் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலங்கள் எதையும் நான் பார்த்ததே கிடையாது. தாஜ்மகாலைக்கூட யமுனையின் கரைகளை ஒட்டிய கிராமங்களில் சுற்றிக்கொண்டிருந்த போது வயல் வெளிகளின் பின்னிருந்துதான் பார்த்திருக்கிறேன். எனது தேடுதலின் காரணம் தெளிவற்றது. அது அவ்வப்போது கிளைக்கக் கூடியது. பயணத்தில் குறிப்பெடுப்பதோ, புகைப்படம் எடுத்துக் கொள்வதோ எதுவும் கிடையாது. இன்னும் சொல்வதானால் குறிப்பாக எந்த ஊருக்குப் போகப் போகிறேன் என்ற திட்டம் கூடக் கிடையாது. இமயமலையின் பதினெட்டாயிரம் அடி உயரம் வரை சென்றிருக்கிறேன். கிர்காட்டிற்குள் நடந்து திரிந்திருக்கிறேன். கீழ்வாலை குகை ஓவியங்களைக் கண்டிருக்கிறேன். அஜ்மீரின் தெருக்களில் உறங்கியிருக்கிறேன். புழுதிபடிந்த உடையும் பிளாட்பார கடைகளில் உணவுமாக வாழ்வது பழக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் எனது பயணம் இலக்கற்று எந்த நேரமும் புறப்படத் தயராகத்தானிருக்கிறது. ஒரேயொறு வேறுபாடு, பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல பயமற்று எந்த நகரிலும் சுற்றித்திரிய முடிவதில்லை. அத்தோடு பலவருடமாக ஊர் சுற்றியதால் சம்பாதித்த உடல்கோளாறுகள் பயண எல்லையை சுருக்கிக் கொண்டு விட்டிருக்கிறது.

தீராநதி: தற்போது வெளிவந்துள்ள உங்களது உலக சினிமா புத்தகத்தை எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போது உருவானது. உலக சினிமாவின் மீது உங்களுக்கு எப்படி ஈடுபாடு வந்தது?

எஸ்.ராமகிருஷ்ணன்: கல்லூரி நாட்களில் இருந்தே மதுரையில் உள்ள திரைப்பட சங்கங்களின் வழியாக உலக திரைப்படங்களைக் காணும் பழக்கம் எனக்கு உருவாகியிருந்தது. அத்தோடு கேரளாவில் ஜான் ஆபிரகாமால் துவக்கப்பட்ட "ஒடேசா" என்ற திரைப்பட இயக்க நண்பர்களின் நட்பு, தொடர்ந்து அவர்கள் நடத்திய சினிமா பயிலரங்குகளில் கலந்து கொள்ளவும் திரைப்பட விழாக்களில் பங்கேற்கவும் ஆர்வத்தை உருவாக்கியது. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நான் உலகத் திரைப்படங்களைப் பார்த்து வருகிறேன். டெல்லி, கல்கத்தா, பெங்களூர் என பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு சென்று வந்திருக்கிறேன். ஆந்த்ரே தார்கோவெஸ்கியும், லூயி புனுவலும், பெலினியும், குரசேவாவும் எனக்குப் பிடித்தமான இயக்குனர்கள்.

சென்னை போன்ற பெருநகரங்களில் கூட திரைப்படங்களைத் திரையிடுவதைத் தவிர்த்து, அதைப்பற்றிய முறையான அறிமுகமோ, தீவிரமான விமர்சனங்களோ நடைபெறுவதேயில்லை. தியடோர் பாஸ்கரன், வெ.ஸ்ரீராம் போன்ற ஒரு சில தனி நபர்களின் ஈடுபாடு மட்டுமே சினிமாவைப் புரிந்து கொள்வதற்கான எழுத்துப் பிரதிகளை உருவாக்கித் தந்திருக்கின்றன. சினிமாவைப் பற்றி எழுதுபவர்கள் தமிழில் மிகக் குறைவு. இலவசமாக உலகின் சிறந்த படங்கள் திரையிடப்படும் போது கூட அங்கு தமிழ் எழுத்தாளர்களோ, கவிஞர்களோ வந்து பார்ப்பதேயில்லை என்பது தான் உண்மை.

சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கில் உதவி இயக்குனர்களும் துணை இயக்குனர்களுமிருக்கிறார்கள். இவர்களில் ஐந்நூறு பேராவது நல்ல புத்தகங்களைத் தேடி வாசிப்பவர்கள். ஆனால் அவர்கள் தெரிந்து கொள்வதற்குக் கூட தமிழில் உலக சினிமாவைப் பற்றிய புத்தகங்களில்லை.

தற்போது சென்னைத் தவிர்த்த சிறுநகரங்களில் வசிப்பவர்கள்கூட ஹாலிவுட் திரைப்படங்களைத் தவிர்த்து வேறு திரைப்படங்களைக் காண்பதற்கான சாத்தியம் DVD வழியாக உருவாகி உள்ளது. ஆனால் எந்த படங்களை பார்ப்பது, எப்படித் தேர்வு செய்வது, எப்படி புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை. நவீன ஓவியம், இசை போலவே சினிமாவினை ரசிப்பதற்கும் ஆழ்ந்த பயிற்சியும் உழைப்பும் தேவை. ஆகவே இதற்கான மாற்று முயற்சிகளில் ஒன்றாக சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்த இளம் நண்பர்கள் சிலரையும் ஒன்றிணைத்து உலக சினிமாவிற்கான ஒரு புத்தகத்தை உருவாக்கினேன். இந்த புத்தகம் உருவாவதற்கு மூன்று ஆண்டுகள் கால அவகாசம் தேவைப்பட்டது.

தீராநதி: ஒரு சிறு பத்திரிகை எழுத்தாளராக அறியப்பட்டு வந்த நீங்கள் இன்று பிரபலமான தமிழ் எழுத்தாளராக ஆகியுள்ளீர்கள். இந்த மாற்றத்தை எப்படி உணர்கிறீர்கள்?

எஸ். ராமகிருஷ்ணன்: நான் 1984ல் எழுதத் துவங்கி இன்றுவரை இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை இலக்கியவாசகர்களுக்கு மட்டுமே பரிச்சயமாயிருந்த எனது எழுத்து இன்று பல்வகைப்பட்ட வாசகர்களை நோக்கி விரிந்திருக்கிறது. இது என் புத்தகங்களுக்கான வாசகர்களை அதிகப்படுத்தியிருக்கிறதே தவிர எனது ஈடுபாட்டில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை.

தீராநதி: "ஆனந்த விகட"னில் வெளியான உங்கள் "துணையெழுத்து" தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஆனால் உங்கள் எழுத்தில் இதுவரையில்லாத ஒரு "ரொமாண்டிசிச"த்தைத் "துணையெழுத்து" கொண்டிருப்பதாக ஒரு விமர்சனமுமிருக்கிறது. அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எஸ்.ராமகிருஷ்ணன்: துணையெழுத்து ஒரு கட்டுரைத் தொடர். எனது பயணத்தையும் நான் கண்ட மனிதர்களையும் முன்வைத்து எழுதப்பட்ட ஒரு பத்தி. அது விகடனில் வெளியானதே தவிர எந்த சிறுபத்திரிகையிலும் வெளிவந்திருக்க கூடிய சாத்தியம் கொண்டதுதான். நான் கட்டுரைகளைப் புனைவுமொழியில் எழுதுகின்றவன். தமிழில் பொதுவாக கட்டுரைகள் என்றாலே ஒரு சலிப்பூட்டும் நடையில் வழக்கொழிந்து போன வார்த்தைகளையும், புள்ளிவிபரங்களையும், கோட்பாடுகளையும் நிரப்பி நம்மை மூச்சுத்திணற வைப்பதாகவே இருந்து வந்திருக்கின்றன. நான் வாசித்தவரை போர்ஹேயின் கட்டுரைகள் மிக தீவிரமானவை. ஆனால் அதன் மொழி புனைவுத்தன்மை மிக்கது. உம்பர்த்தே ஈகோவின் "How to travel with a salmon and other essays" வாசித்துப்பாருங்கள். எவ்வளவு பெரிய விஷயங்களைக் கூட எத்தனை எளிமையாகவும் பரிகாசத்துடனும் புரிந்து கொள்ள வைக்கிறார். இதாலோ கால்வினோ, ஆக்டோவியா பாஸ், மார்க்வெஸ் என பல முக்கிய எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் தரும் வாசிப்பு அனுபவம் மிக உயர்ந்த நிலையிலிருக்கிறது.

காருக்குறிச்சி அருணாசலம் மறைந்து நாற்பதாண்டுகள் முடிந்துவிட்டன. இதுவரை அவருக்கு வாழ்க்கை வரலாறு கூட எழுதப்படவில்லை. அவரைப் பற்றி எந்த இதழிலும் யாரும் எழுதுவதில்லை என்று "துணையெழுத்தில்" அவரைப்பற்றி எழுதியதைப் படித்துவிட்டு அவரது மகள் நன்றி தெரிவித்ததோடு காருக்குறிச்சி நினைவாக பூஜையில் வைக்கப்பட்டிருந்த சிறிய சந்தன நாதஸ்வரத்தை எனக்கு பரிசாகவும் அளித்தார்கள். அதுபோலவே பிரமிள் பற்றிய கட்டுரையை வாசித்துவிட்டு அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கரடிக்குடியில் ஒரு நினைவு மண்டபம் எழுப்புவதற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு மருத்துவர் ஒரு லட்ச ரூபாய் எனக்கு அனுப்பிவைத்திருந்தார். நினைவு மண்டபம் உருவாக்குவதை விடவும் புத்தக வெளியீடுகள், இலக்கியக் கூட்டங்கள் நடத்துவதற்காக சென்னையில் பிரமிள் பெயரால் ஒரு நினைவு அரங்கம் அமைப்பது நல்லது என்று தோன்றுவதாக சொல்லி அப்பணத்தை திருப்பி அனுப்பிவைத்தேன். இரண்டு ஆண்டுகளுக்குள் பிரமிள் பெயரால் அரங்கம் கட்டித்தருவதற்கு இப்போது அவர் ஆர்வமாக பணம் சேகரித்துக் கொண்டிருக்கிறார். வாசிப்பை மீறிய ஒரு செயல்பாடாகத் தான் "துணையெழுத்"தின் எதிர்வினை அமைந்திருந்தது.

தீராநதி: எழுத்தாளனின் சமூக அக்கறை, அரசியல் குறித்து இன்று அதிகம் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட போது "சமூகத்தில் இதுபோன்ற முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போது எழுத்தாளர்கள் எதிர்வினையாற்ற வேண்டும்" என்று சுந்தர ராமசாமி குறிப்பிட்டார். ஒரு படைப்பாளியாக அதை ஏற்றுக்கொள்வீர்களா?

எஸ்.ராமகிருஷ்ணன்: சங்கராச்சாரியாரின் கைது ஒரு முக்கிய சமூக நிகழ்வா என்ன? தலித் மக்கள் மீது தொடர்ந்து வரும் வன்முறையை கவனிக்கக்கூட முடியாமல் கண்ணை, காதை பொத்திக் கொண்டவர்கள் சங்கராச்சாரியார் விசயத்தில் மட்டும் சமூகப் போராளியாவது வேடிக்கையாக இருக்கிறது. சுனாமியால் இத்தனை ஆயிரம் பேர் தங்கள் குழந்தைகளை இழந்து, வீட்டை இழந்து அகதிகளைப் போல ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இறப்பு எண்ணிக்கை எவ்வளவு என்று இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. எத்தனை எழுத்தாளர்கள் இந்த முகாம்களுக்குச் சென்று உதவிப்பணிகள் செய்திருக்கிறார்கள் தாமிரபரணி படுகொலையின் போது எங்கே போனார்கள் நாஞ்சில் நாட்டு எழுத்தாளர்கள். பாபர்மசூதி இடிப்பு, பம்பாய் மதக்கலவரம், குஜராத் கலவரம் என எத்தனையே விஷயங்கள் நம்மை உலுக்கிய போதும் எதிர்வினையே தமிழில் இல்லை.

உண்மையைச் சொல்வதற்கு எனக்குத் தயக்கமில்லை நான் இதுபோன்ற சமூக நிகழ்வுகளுக்கு எதிரான கண்டன ஊர்வலங்களிலும் மேடைகளிலும் கலந்து கொண்டதில்லை. ஆனால் மதவாதத்தை ஒருபோதும் நான் ஆதரிப்பவனில்லை. சுனாமி முகாம்களில் எனது உதவியும் பங்களிப்பும் சொல்லிக் கொள்ளும் அளவு முக்கியமானதில்லை. ஆனால் அவர்களின் துயரம் என்னை இன்றுவரை தூக்கமற்று செய்திருக்கிறது.

தொடர்ந்து தமிழகமெங்கும் சமணபௌத்த சின்னங்கள் இடிக்கப்பட்டும், படுகைகள் உள்ள மலைக்குகைகள் கல்குவாரிகளாக வெடி வைத்து தகர்க்கப்படுவதும், கிராம மக்கள் தங்கள் வாழ்விடங்களைத் துறந்து நகரங்களை நோக்கி வந்து கொண்டேயிருப்பதையும், கிராமங்களில் சாதி முன்னை விட ஆழமாக வேர் ஊன்றிவிட்டதையும், ஆரம்ப கல்வியில்கூட மதவாதம் கலக்கப்பட்டு சரித்திரமும் கலாச்சாரமும் பொய்யால் நிரப்பப்படுவதையும் சமூக பிரச்சனைகளாக நாம் கண்டு கொள்வதேயில்லை. அதை பற்றி குரல் கொடுப்பவர்களும் அதிகமில்லை.

நான் எனது அரசியல் சமூக நிலைப்பாடாக இந்த இரண்டாவது வகையை சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன். கல்வியிலும் கலாச்சார தளங்களிலும் ஏற்பட்டுவரும் சிரழிவுகளைத் தொடர்ந்து பல அரங்கங்களில் கண்டித்தும் எனது பார்வையை வலியுறுத்தியும் வருகிறேன். வாழ்விடங்களை விட்டு வெளியேறுபவர்களின் மீது எப்போதுமே அக்கறை கொண்டிருக்கிறேன்.

தீராநதி: "அரவான்" என்ற உங்களது நாடகம் சமீபத்தில் அதிகம் பேசப்பட்டது, ஏன் நாடகத்திற்கு அரவானை தேர்வு செய்தீர்கள்?

எஸ்.ராமகிருஷ்ணன்: வியாச பாரதத்தில் அரவான் களப்பலி பெரிதாக விவரிக்கப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் அரவானுக்கு ஒரு முக்கியத்துவமிருக்கிறது. குறிப்பாக நாட்டார் மரபில், அரவான், கிருஷ்ணனால்தான் களப்பலிக்கு தேர்வு செய்யப்படுகிறான். பின்பு கிருஷ்ணனே பெண் வேடமிட்டு வந்து அரவானோடு கலவி கொள்கிறான். கிருஷ்ணன் ஆண், பெண் என இரண்டு உடல் கொண்டவனாகயிருந்ததால் அரவாணிகளும் அவரைப் போலவே நீலம் பூசிக்கொண்டு ஒரு இரவு அரவானை மணந்து, மறுநாள் தாலியறுத்துவிட்டு ஒப்பாரி வைக்கிறார்கள். இந்த சடங்கு கூவாகத்தில் ஆண்டுதோறும் நடக்கிறது.

அரவான் ஒரே நேரத்தில் ஒடுக்கப்பட்ட மனிதனுக்கும் விலக்கப்பட்ட பால் உறவிற்கும் அடையாளமாகயிருக்கிறான். அத்தோடு யுத்தத்தில் சாதாரண மனிதர்கள் பலிகொடுக்கப்பட்டு வருவது காலம்காலமாக நடந்துவருகின்றது என்பதற்கு சாட்சியாகவுமிருக்கிறான். அரவான் ஒரு வனகுடி. இப்படி பலதளங்கள் கொண்ட கதாபாத்திரமாகயிருப்பதால் தான் அரவானை நாடகமாக்கினேன்.

தீராநதி: இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?

எஸ்.ராமகிருஷ்ணன்: பௌத்த விகாரை ஒன்றைப் பற்றிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். விகடனில் "கதாவிலாசம்" என்று தமிழின் முக்கிய சிறுகதையாசிரியர்களைப் பற்றி ஒரு பத்தியை எழுதிக்கொண்டு வருகிறேன். இணையத்தில் "அட்சரம்" என்ற பெயரில் உள்ள எனது பிளாக்கில் அவ்வப்போது சிறுகட்டுரைகள் எழுதுகிறேன். இயற்கையைப் பற்றி உலகமெங்கும் உள்ள பல்வேறு பழங்குடி மக்களால் சொல்லப்பட்டுவரும் நூறு குழந்தைகள் கதைகளை மொழி பெயர்த்திருக்கிறேன். அது ஏப்ரலில் தனி நூலாக வெளிவரயிருக்கிறது.

தீராநதி: இரண்டு வருடமாக சென்னைவாசியாகி விட்டீர்கள். எப்படியிருக்கிறது சென்னை வாழ்க்கை?

எஸ்.ராமகிருஷ்ணன்: எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. குழந்தைகள் தான் விளையாடுவதற்கு இடமின்றியும், சேர்ந்து கதை பேச நண்பர்கள் இன்றியும், தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். கரை ஒதுங்கிய படகைப் போல ஒரு தீராதனிமை பீடித்திருக்கிறது. நான் தப்பிக் கொள்வதற்கு புத்தகங்களுக்குள் தலைகவிழ்ந்தபடியோ அல்லது யாவரும் உறங்கிய பின் இரவில் விழித்துக் கொண்டு தெருவை வேடிக்கை பார்த்தபடியோ இருக்கிறேன். மனைவியும் குழந்தைகளும் தங்களது இயல்பை மறந்து மௌனமாகிக் கொண்டு வருகிறார்கள். தொலைக்காட்சியில் ஆழ்ந்து போயிருக்கும் அவர்கள் முகங்களைக் கவனிக்கும் போது அது நிம்மதியற்றதாகவே தெரிகிறது. அதை நினைக்கும் போதுதான் சற்றே பயமாக இருக்கிறது.

நன்றி: தீராநதி

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

2 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ on September 11, 2010 at 9:07 AM said...

Thanks for sharing dear

கிருஷ்ண மூர்த்தி S on September 11, 2010 at 7:02 PM said...

/பல்கலைக் கழகங்கள் குறிப்பிடத் தகுந்த இலக்கிய விமர்சகர்களை உருவாக்கவேயில்லை/

பல்கலைக்கழகங்கள் இலக்கிய விமர்சகர்களை உருவாக்கவே இல்லை! குறை சொல்லும் எஸ்.ராவிடம் ஒரு கேள்வி!

பல்கலைக் கழகங்கள் ஏதோ ஒரு இலக்கியத்தையும், அல்லது எழுத்தாளனையோ உருவாக்கி இருந்தால் அல்லவா, விமரிசகர்கள் உருவாவதற்கு?

இலக்கியங்கள், இலக்கியவாதிகள், விமரிசகர்களை உருவாக்குபவை பல்கலைக் கழகங்கள் அல்ல. படைப்புத் தான்!

படைப்புத் தான், படைப்பை வியந்து போற்றுகிறவனையும், அதனுடன் மாறுபட்டுக் கருத்துச் சொல்பவனையும் உருவாக்குகிறது. மோனலிசா புன்னகையை ஐரோப்பிய ஓவியக் கலையைப் பற்றித் தெரிந்தவன் ஆச்சரியப்பட்டுக் கருத்துச் சொல்லலாம், கொண்டாடலாம்! அதே மாதிரி இங்கேயும் ஏன் எவரும் கொண்டாடவில்லை என்று கேட்கிற மாதிரியே இந்த நேர்காணலின் மொத்தமும் சொல்கிற மாதிரித் தான் படுகிறது.அது அப்படியே இங்கும் இருக்க வேண்டியது அவசியமா என்ன!!

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்