Sep 19, 2010

சி.சு.செல்லப்பா: சுமந்து சென்ற எழுத்து- எஸ்.ரா

சி.சு.செல்லப்பா: சுமந்து சென்ற எழுத்து- எஸ்.ராமகிருஷ்ணன்

சி.சு.செல்லப்பாவிற்கு விளக்கு விருது அறிவிக்கபட்டதைத் தொடர்ந்து அவரைச் சந்திப்பதற்காக நானும் வெளிரெங்கராஜனும் திருவல்லிக்கேணியில் இருந்த அவரது வீட்டிற்குச் சென்றிருந்தோம். பிள்ளையார்கோவிலின் அரு காமையில் உள்ள சிறிய ஒற்றையறைக் குடித்தனம். வயதான செல்லப்பாவும் அவரது மனைவியும் மட்டும் தனியே வசித்துக் கொண்டிருந்தார்கள்.

chellappa செல்லப்பாவை மதுரையில் இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கிறேன். ஆனால் சென்னைக்கு வந்த பிறகு சந்திக்கவேயில்லை. வீடு தேடிச் சென்றதும் அதே உற்சாகம் குறையாமல் உள்ளே அழைத்து பாயில் உட்காரச் சொன்னார். வீட்டில் சாமான்கள் அதிகமில்லை. ஒரு பெரிய காகிதப்பெட்டி நிறைய புத்தகங்கள் மற்றும் காகிதங்கள் நிரம்பியிருந்தன. கொடியில் காய்ந்து கொண்டிருந்த ஈர வேஷ்டியும் துண்டுமே அவரது சொத்தாக மிஞ்சியிருந்தது.

ஆனால் இலக்கியம் பற்றிப் பேசத் துவங்கியதும் அவர் குரலில் அதே ஆவேசம். கண்களில் ஒளிரும் வேகம். புதிய விமர்சன முறைகளை விவரிக்கும் கறார்தன்மை. உலக இலக்கியத்தைப் பற்றி எடுத்துச் சொல்லும் தடையற்ற பிரவாகம். யாவும் கடந்து சகமனிதன் மீது கொள்ளும் நெருக்கமான அன்பும் அக்கறையும் அவரிடமிருந்தன.

ரங்கராஜனும் அவரும் விருது பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். விருது வாங்கிக் கொள்வதில் தனக்கு உள்ள தயக்கத்தை வெளிப் படையாகப் பகிர்ந்து கொண்டபடியே தனக்கான பரிசுத்தொகையில் ஒரு புத்தகம் வெளியிட முடியுமா என்று கேட்டார்.

அவர் விருப்பபடியே செய்துவிடலாம் என்றதும் அவசர அவரசமாகத் தனது காகிதப் பெட்டிக்குள் இருந்த கையெழுத்துப் பிரதிகளைத் தேடி வெளியே எடுத்தார். ஒன்று பி.எஸ்.ராமையாவைப் பற்றியது. மற்றொன்று நவீனத் தமிழ் விமர்சனத்தின் வரலாறு பற்றியது என்று பத்துப் பதினைந்து கையெழுத்துப் பிரதிகள்.

அழகாக எழுதி, எண் இடப்பட்டு வெளியாவதற்காகப் பல வருடமாகக் காத்துக்கிடக்கின்ற பிரதிகள். உங்களுடைய சிறுகதைகளை வெளியிடலாம் என்று ரங்கராஜன் சொன்னதும் முதல்ல பி.எஸ்.ராமையா வரட்டும் எவ்வளவு பெரிய எழுத்தாளர். அவரைப் பத்திய விபரங்கள் முதல்ல தெரியட்டும் என்று ராமையாவின் சிறுகதைகளைப் பற்றிய விரிவான கட்டுரைத் தொகுதியை முன்னால் எடுத்துக் காட்டினார்.

செல்லப்பா மாறிவிடவேயில்லை. அதே தீவிரம். அதே உற்சாகம் என்று தன் வாழ்வின் இறுதி நாள் வரை படைப்பிலக்கியத்தின் போராளிக்குணம் மிக்க மனிதராகவே வாழ்ந்தார் செல்லப்பா.

செல்லப்பாவின் புத்தகத்திற்கு உதவி செய்வதற்காக நாலைந்து முறை அவரைத் தேடிச்சென்று சந்தித்தேன். அவரது வீடு குடியிருப்பதற்கே போதுமானதில்லை. அதில் சந்திக்க வருகின்றவர்களுக்கு ஏது இடம். அருகாமையில் உள்ள தஞ்சாவூர் பட்சணக்கடைக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து காபி வாங்கித் தந்து பேசிக் கொண்டிருப்பார்.

எண்பத்திநாலு வயதைக் கடந்த முதுமையில் ஏன் இப்படித் தனியாக வாழ்கிறீர்கள் என்று கேட்டேன். யாருக்கும் சுமையா இருக்கவிரும்பலை. பிள்ளைகள் நம்மைப் புரிஞ்சிக்கிடலே. சண்டை போட்டு ஆகப்போறது ஒண்ணும் இல்லே. அவளுக்கு காது வேற கேட்கலை. நீ வேணும்னா மகன்கூட இருனு சொன்னேன். கேட்கலை. என் பின்னாடி வந்துட்டா.

இதே தெருவில்தான் கல்யாணம் ஆகிப் புதுக்குடித்தனம் வந்து இருந்தேன். இப்போ பேரன் பேத்தி வரைக்கும் பாத்திட்டு அதே தெருவில் முன்னாடி இருந்ததைவிடச் சின்னவீட்ல சாவை எதிர்பார்த்து உட்கார்ந்துகிட்டு இருக்கேன். எனக்கிருக்கிற ஆசை எல்லாம் நான் எழுதினது எல்லாத்தையும் அச்சில ஏத்திப் பாத்துறணும். ஒவ்வொரு புத்தகம் எழுதுறதுக்கும் மாசக்கணக்கில ஆகியிருக்கு. ஆனா அதை வெளியிட யாரும் முன்வரலை. நானே போட்ருவேன். கையிருப்பு இல்லை. நகையை வித்துப் புத்தகம் போட்ட காலம் முடிஞ்சி போச்சி. இப்போ விக்கிறதுக்கு எதுவுமில்லை. என்று வலியை மறைத்த மனதுடன் பேசினார்.

யாருமற்ற தனிமையில் நீளும் அவர்களின் முதுமையும், எழுதி வெளியிடக் காத்திருக்கும் கையெ ழுத்துப் பிரதிகளும், எழுத்தின் மீதான செல்லப்பாவின் அசாத்தியமான நம்பிக்கையும் அவர் மீது பெரும் மதிப்பை உருவாக்கியது.

1650 பக்கங்கள் கொண்ட நாவலான சுதந்திர தாகம், ராமையாவைப் பற்றிய புத்தகம் என்று வீடு நிறைய அச்சிடப்பட்ட புத்தங்களுடன் அமர்ந்துகொண்டு தன் காலத்திற்குள் தன் நாவலை அச்சில் பார்த்துவிட்டேன் என்று தன்னைப் பார்க்க வருகின்ற ஒவ்வொருவரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார் செல்லப்பா. எல்லாக் குடும்ப நெருக்கடிகளையும் தாண்டி அவரைச் சந்தோஷம் கொள்ளச் செய்தது அவரது எழுத்துகள் மட்டுமே.

தமிழ்ச் சிற்றிதழ் இலக்கியம் இன்று அடைந்துள்ள வளர்ச்சியின் முதல்படியாக அமைந்தது செல்லப்பாவின் எழுத்தே. அவரிடமிருந்தே தமிழின் புதுக்கவிதை இயக்கம் துவங்குகிறது. வாடி வாசல் தமிழில் வெளியான மிக முக்கியமான நாவல். செல்லப்பாவின் இந்த நாவல் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டது. நான் அறிந்தவரை இந்த ஒரு நாவலைத் தவிர ஜல்லிக்கட்டு குறித்த தனித்த இலக்கியப் பதிவுகள் எதுவுமில்லை.

என் பதின்வயதிலிருந்து ஜல்லிக் கட்டைத் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன். சில வேளைகளில் ஜல்லிக்கட்டிற்கு மாடு கொண்டு போகின்றவர்களுடன் சேர்ந்து அலைந்திருக்கிறேன். ஜல்லிக்கட்டுக் காளையை வளர்ப்பது ஒரு தனிக்கலை. அதில் தேர்ந்தவர்கள் பெண்களே. அவர்கள் ஜல்லிக்கட்டுக் காளையோடு கொள்ளும் உறவு மிக விசித்திரமானது. எவ்வளவு முரட்டுக் காளையும் அவர்களது சொல்லில் கட்டுப்பட்டுவிடும் வியப்பைக் கண்டிருக்கிறேன்.

அத்தோடு காளையைப் போட்டிக்காகக் கொண்டு போவது, களம் தயாரிப்பது. காளையை அடக்க வரும் வீரர்கள், அதையொட்டிய நிகழ்வின் உற்சாகம், போட்டியில் வெற்றியோ தோல்வியோ எதுவுமாயினும் காளைகளை வீடு திரும்பச் செய்வது என்று ஜல்லிக்கட்டின் பின்னால் மதுரையைச் சுற்றிய நிலப்பரப்பின் தொன்மையான கலாச்சாரம் நீண்டு படர்ந்துள்ளது.

செல்லப்பா அதை மிக நுட்பமாகத் தனது நாவலில் பதிவு செய்திருக்கிறார். வாடிவாசலைப் படித்த நாளில் இருந்து செல்லப்பாவைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்துகொண்டேயிருந்தது. எண்பதுகளின் இறுதியில் செல்லப்பா மதுரையில் தனது மகன் வீட்டில் தங்கியிருக்கிறார் என்று நண்பர் ஒருவர் சொன்னதும் செல்லப்பாவை சந்திப்பது என்று முடிவு செய்தேன்.

தமிழ்ச் சிறுபத்திரிகைகளின் முன்னோடி இதழ் எழுத்து. அதிலிருந்துதான் புதுக்கவிதை, நவீன விமர்சனம் உருவாகின. செல்லப்பா அதை ஒரு இலக்கிய இதழாக மட்டுமின்றி ஒரு இலக்கிய இயக்கமாகவே நடத்தினார்.

தமிழ்ப் புனைவுலகிற்கு இணையாக இலங்கையில் இருந்த படைப்பாளிகளையும் ஒன்று சேர்த்து sisuchellappa அவர்களுக்கான எழுத்துக்களம் அமைத்துத் தந்தது செல்லப்பாவே. இன்று சிறுபத்திரிகைகள் சார்ந்த பதிப்பகங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதற்கான முன்முயற்சியும் அவர் உருவாக்கியதே. எழுத்து சார்பில் அவர் வெளியிட்ட புத்தகங்கள் மிகத் தனித்துவமானவை.

எழுத்து, மணிக்கொடி என்ற சொற்களை மட்டுமே அறிந்திருந்த எனக்கு வாசிப்பதற்கு அவை எங்கே கிடைக்கும் என்று எந்த விபரமும் தெரியவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெனிங்டன் நூலகத்தில் கிடைக்கக்கூடும் என்றார்கள். இதற்காகவே அங்கே உறுப்பினராகி தேடியபோதும் எழுத்தோ மணிக் கொடியோ கையில் கிடைக்கவில்லை.

கோட்டையூரில் உள்ள ரோஜா முத்தையா செட்டியாரிடம் இருக்கிறது என்று இன்னொரு நண்பர் சொன்னதை நம்பி கோட்டையூருக்குச் சென்று ரோஜா முத்தையா செட்டியாரைச் சந்தித்தபோது அவர் வீடு மிகப்பெரிய நூலகமாக இருந்ததைக் காணமுடிந்தது.

அவர் தன்னிடம் பழைய இதழ்கள் எல்லாமும் இருக்கிறது. அத்தனையும் எடுக்க முடியாது. மாதிரிக்காக ஒரு இதழைக் காட்டுகிறேன். இங்கேயே வாசித்துவிட்டுத் தந்துவிட வேண்டும் என்றார். கண்ணில் பார்த்துவிட்டால் போதும் என்று தலையசைத்தவுடன் அவரே உள்ளே சென்று இரண்டு சிற்றிதழ்களைக் கொண்டுவந்து தந்தார். அத்தோடு சாப்பிடுவதற்கு அடையும் காபியும் கொண்டுவந்து தந்து, சாப்பிட்டுவிட்டுப் பிறகு நிதானமாக இதைப் படித்துக் கொண்டிருக்கலாம் என்று அன்போடு உபசாரம் செய்தார்.

மனம் சாப்பாட்டில் கவனம் கொள்ளவில்லை. செல்லப்பாவின் எழுத்து இதுதானா என்று கையில் வைத்திருந்த சின்னஞ்சிறு இதழின் மீதே கவனம் குவிந்திருந்தது. ரோஜா முத்தையா தன் சேகரத்தில் வைத்திருந்த பல்லாயிரம் புத்தகங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். சில நாடக விளம்பரங்கள், பாட்டுப் புத்தகங்கள் போன்றவற்றைக் கொண்டுவந்தும் காட்டினார்.

ஒரேயொரு மணிக்கொடி இதழையும் எழுத்து இதழையும் கையில் புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டேயிருந்தேன். எழுத்து என்ற முகப்பு அச்சு மிக அழகாக இருந்தது. மௌனியின் மனக்கோலம் என்ற கட்டுரை, நாலைந்து கவிதைகள். டி.கே.துரைசாமி என்ற பெயரில் நகுலன் எழுதிய விமர்சனம், முருகையன் எழுதிய கட்டுரை என்று இதழ் தீவிரமானதாகவே இருந்தது. இதழில் செல்லப்பா ஏதாவது எழுதியிருக்கிறாரா என்று தேடினேன். சிறிய குறிப்புகளைத் தவிர அதிகமில்லை. மற்றவர்கள் எழுத வேண்டும் என்பதற்காகவே அவர் தன் இதழ் முழுவதையும் பகிர்ந்து கொடுத்திருக்கிறார்.

ஒப்பிடும்போது மணிக்கொடியைவிடவும் எழுத்து நவீனப் பிரக்ஞை கொண்டதாகத் தோன்றியது. அரை மணி நேரத்திற்குள் படித்து முடித்தபோதும் அதைத் திருப்பித் தர மனதின்றி கையில் வைத்துக்கொண்டேயிருந்தேன். மாலையில் ரோஜா முத்தையா மிகக் கவனமாக அதை வாங்கிக் கொண்டுபோய் உள்ளே வைத்து விட்டார். வீடு திரும்பும்போது எப்படியாவது எழுத்து இதழ்கள் அத்தனையும் ஒன்று சேரப் படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. யாரிடம் மொத்த இதழ்கள் இருக்கும் என்று தேடத்துவங்கினேன்.

ராமநாதபுர மாவட்டக் கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் எனது நண்பனின் அப்பா வேலை செய்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவரைச் சந்திக்கச் சென்றபோது தங்கள் அலுவலகத்தில் ஒரு நூலகம் இருப்பதாகவும் அதை யாரும் பயன்படுத்துவதேயில்லை என்றும் சொன்னார். ஏதாவது காந்திய நூல்கள் வாங்கி வைத்திருப்பார்கள் என்ற சலிப்பில் அதில் அக்கறை காட்டவேயில்லை. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அவர் அந்த நூலகத்தில் இருந்து தபால்காரன் என்ற நாவலை எடுத்து வந்து காட்டி இது உங்களுக்குப் பிரயோஜனப்படுமா என்று கேட்டார்.

உலகப் புகழ்பெற்ற நாவலின் தமிழாக்கம் எப்படி ஒரு கூட்டுறவு வங்கியின் நூலகத்திற்கு வந்தது என்ற ஆச்சரியத்துடன் வாங்கிக்கொண்டு இதைப்போல வேறு புத்தகங்கள் உள்ளதா என்று கேட்டேன்.

ஆமாம் வேண்டுமானால் நேரில் வந்து பாரு என்றார். மறுநாளே அவரோடு பயணம் செய்து பல வருடமாகக் கண்ணாடி பீரோவில் பூட்டி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் புரட்டினால் பாதி சைவ சிந்தாந்த பதிப்பு நூல்கள், தேவாரத் திரட்டுகள், யுனெஸ்கோ இதழ்கள். அதற்குள் பைண்ட் செய்யப்பட்ட இரண்டு சிவப்பு நிற புத்தகங்கள் தென்பட்டன. உருவி எடுத்தபோது முதல் இதழில் இருந்து எழுத்து இதழ் தொகுத்து பைண்ட் செய்யப்பட்டிருந்தது.

அத்தோடு தாமஸ்மன்னின் மாறிய தலைகள், ஆயிரத்தோரு அற்புத இரவுக் கதைகள் என்று பத்து பதினைந்து புத்தங்கள் கிடைத்தன. அத்தனையும் அவர் பெயரில் பதிவு செய்து எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறியபோது நம்பமுடியாமல் இருந்தது. எப்படிக் கூட்டுறவு வங்கியில் எழுத்து இதழ்கள் வாங்கி வாசிக்கப்பட்டு பைண்ட் செய்யப்பட்டிருக்கின்றன.

வீடு வரும்வழி முழுவதும் வாசித்துக்கொண்டேயிருந்தேன். ஹெமிங்வே, பாக்னர், ஜாக் லண்டன் என்று தேர்ந்தெடுத்த மொழி பெயர்ப்புகள். புனைகதைகள் பற்றிய விரிவான கட்டுரைகள். புதுக்கவிதை குறித்த சர்ச்சைகள் விவாதங்கள், புதிய அழகியலை நோக்கிய அறிமுகம் என்று எழுத்து இதழை வாசிப்பது பரவசம் ஊட்டுவதாகவே இருந்தது.

அந்த இதழின் வழியாக செல்லப்பா நவீனத் தமிழ் இலக்கியத்திற்காக எவ்வளவு தூரம் ஓடியோடி உழைத்திருக்கிறார். எவ்வளவு கனவு கண்டிருக்கிறார். எத்தனை எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறார் என்ற உண்மை துல்லியமாகப் புலப்பட்டது. தன் விருப்பத்தின் வழியே மட்டுமே அவர் பயணம் செய்திருக்கிறார். தமிழ் இலக்கியத்தைச் சமகால உலக இலக்கியத்திற்குச் சமமானதாக உருமாற்ற வேண்டும் என்ற வேட்கை அவருக்குள் தீவிரமாக இருந்திருக்கிறது.

si-su-chellappa குறிப்பாகத் தமிழ் விமர்சனத் துறையை ஆங்கில இலக்கியத்தின் நவீன விமர்சனத் துறைக்கு நிகரானதாக உருவாக்கவேண்டும் என்பதில் கூடுதலாகவே அக்கறை கொண்டிருக்கிறார். அதே வேளையில் தனது கருத்துகளோடு உடன்படாத பல முக்கியப் படைப்புகளையும் அவர் பிரசுரம் செய்திருக்கிறார்.

செல்லப்பாவின் எழுத்து தமிழின் நவீன இலக்கியப் பிரக்ஞையின் முதல் அடையாளம். மிகக் கவனமாகவும் தேர்த்தியாகவும் நடத்தப்பட்ட சிற்றிதழ். ஒவ்வொரு இதழிலும் படைப்பாளிகள் பற்றிய குறிப்புகளும், புத்தகங்களை வாங்குகின்றவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளும் புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதற்குப் பயன்படுத்தப்பட்ட வாசகங்கள் மற்றும் வாசகன் மீது அவருக்கு இருந்த அக்கறை மிகவும் பாராட்டப்பட வேண்டியது.

என்னிடம் எழுத்துத் தொகுதி இருக்கிறது என்பதைப் பெரிய புதையல் கிடைத்த சந்தோஷத்துடன் போகின்ற இடங்களுக்கு எல்லாம் கொண்டு சென்றேன். அதைக் கையில் வாங்கிப் புரட்டி பலர் அடைந்த வியப்பும் இன்னும் மனதில் நிற்கிறது. எழுத்துத் தொகுதியை வாசித்தபிறகே செல்லப்பாவின் எழுத்துகளைத் தேடி வாசிக்கத் துவங்கினேன். அதன்முன்பாக வாடி வாசல் மட்டுமே படித்திருந்தேன்.

இந்த மயக்கமே என்னை செல்லப்பாவைக் காண்பதற்கு அழைத்துச் சென்றது. செல்லப்பா மதுரையின் பைபாஸ் ரோட்டின் உள்ள புறநகர் குடியிருப்பு ஒன்றில் தனது மகனோடு தங்கியிருந்தார். நான் பார்க்கச் சென்ற மதியநேரத்தில் வீடு அமைதியாக இருந்தது. அழைப்புமணியை அழுத்தியபோது ஒரு வயதான பெண்மணி வெளியே வந்து யார் வேண்டும் என்று விசாரித்தார். சி.சு.செல்லப்பாவைப் பார்க்க வேண்டும் என்று சொன்னேன். உடனே அவர் நீங்க எழுத்தாளரா என்று கேட்டார். ஆமாம் என்று தலையசைத்தவுடன் இருங்க வரச்சொல்றேன் என்றபடியே உள்ளே சென்றார்.

சில நிமிசங்களில் நாலு முழ வேஷ்டி அணிந்து சட்டையில்லாத வெறும் உடம்புடன் நரைத்த தலையும் ஒடுங்கிய கண்களும் மெலிந்த உடலுமாக செல்லப்பா வெளியே வந்து நின்று கைகூப்பினார். வீட்டில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. நாற்காலியில் அமர்ந்து கொண்டபோது அவர் தரையில் உட்கார்ந்துகொண்டார். என் முன்னே அமர்ந்திருப்பவர்தான் சி.சு.செல்லப்பாவா என்பது நம்ப முடியாமல் இருந்தது.

அவர் பாதங்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு தூரம் அலைந்த கால்கள் அவை. நீண்டு மெலிந்த பாதங்கள். அதில் கடந்து சென்ற பாதைகளின் சுவடேயில்லை. எந்த ஊருல இருந்து வர்றீங்க என்று பரிவான குரலில் கேட்டார். ஊரைச் சொன்னவுடன் உங்க ஊர்ல வாசகசாலை இருக்கா என்று கேட்டார். இருக்கிறது என்று சொன்னேன். சுப்பாராஜ்னு ஒரு காங்கிரஸ்காரர் இருக்கிறாரா என்று கேட்டார். ஆமாம் என்றதும் எப்பவோ ஒரு தடவை உங்க ஊருக்கு பொஸ்தகம் விக்க வந்திருக்கிறேன். ஒரே செம்மண் புழுதியா இருக்கும் என்றார்.

தான் வெளியிட்ட புத்தகங்களைத் தலைச்சுமையாகக் கட்டித் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு இடமாகச் சென்று விற்று வந்தவர் செல்லப்பா என்று வாசித்திருக்கிறேன். அது நிஜம் என்பதை அவரது பேச்சின் துவக்கத்திலே புரிந்து கொள்ள முடிந்தது. சில நிமிச நலவிசாரிப்புகளுக்குப் பிறகு நேரடியாக ஆங்கில இலக்கிய விமர்சனத்தைப் பற்றிப் பேசத் துவங்கினார்.

எப்ஆர் லீவிஸ் மற்றும் கிளாயண்டே புருக்கின் விமர்சன முறைகள் எப்படிப்பட்டவை, கோல்ட்ரிஜ் கவிதையைப் பற்றி என்ன கோட்பாடு வைத்திருக்கிறான், நியூ கிரிட்டிசிசம் என்றால் என்ன என்று மடமடவெனக் கொட்டிக்கொண்டிருந்தார்.

எங்கிருந்து இவற்றை எல்லாம் வாசித்தார். எப்படி இவ்வளவும் மனதில் சேகரமாகியிருக்கிறது என்ற வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். கதை எழுதுற அத்தனை பேரும் விமர்சனமும் எழுதணும். அப்போதான் இலக்கியம் வளரும் என்று வலியுறுத்தினார். நான் தேடி வந்தது செல்லப்பா என்ற ஆளுமையின் கடந்தகாலச் சுவடுகளை அறிந்துகொள்வதற்காக. அவர் விரும்புவதோ எதிர்காலத்தின் மீதான கனவுகளுடனான உரையாடல்களை என்று புரிந்தது.

நாலுமணியளவில் அருகில் போய்ப் பால் வாங்கி வர வேண்டும் போகலாமா என்று கூப்பிட்டார். வீட்டை விட்டு இறங்கி நடந்தோம். செல்லப்பா வேகமாக நடக்கக் கூடியவர். எழுபதைக் கடந்த வயதிலும் நடையின் வேகம் அப்படியே இருந்தது. பால் வாங்கிக்கொண்டு திரும்பி வந்தவுடன் இன்னொரு நாள் வாங்கோ.. நிறைய பேசுவோம் என்று வாசலில் வைத்து விடை தந்து அனுப்பிவைத்தார். குடும்ப உறவுகளின் கசப்பிற்குள்ளாக அவர் வாழ்ந்துகொண்டிருந்தார் என்பது அப்போது தெரியாது. எதற்காக என்னை இவ்வளவு அவசரமாக அனுப்பி வைக்கிறார் என்ற ஆதங்கத்துடன் மதுரைக்குள் சென்றேன்.

அதன்பின்னே சில மாதங்களுக்குப் பிறகு செல்லப்பாவை இரண்டாம் முறையாகப் பார்க்கப் போனபோது அவர் வெளியே எங்காவது போகலாமா என்று கேட்டார். இரு வருமாகப் பொதுப்பணிதுறையின் பூங்கா ஒன்றில் போய் உட்கார்ந்து கொண்டோம்.

செல்லப்பா தன்னைப்பற்றிப் பேசத்துவங்கினார். அவரது அப்பா சுப்ரமணிய ஐயர் அரசாங்க ஊழியர், பொதுப்பணித்துறையில் வேலை செய்தவர். காந்தியவாதி. சுதந்திரப் போராட்ட காலத்தில் தீவிரமாக காந்தியப்பணிகளில் செயல்பட்டவர்.

செல்லப்பாவிற்கோ பகத்சிங்கின் மீது தீவிரமான விருப்பம். பகத்சிங் கொல்லபட்டதற்கு காந்தியே காரணம் என்று சில காலம் காந்தியவாத இயக்கங்களை விட்டு விலகி இருந்தார். அப்பாவின் தொடர்ந்த அறிவுரை காரணமாக சத்யாகிரகத்தில் ஈடுபட்டு ஆறுமாத சிறைவாசம் சென்றார். அங்கிருந்து வெளியாகி குடிசைத்தொழிலாகக் காகிதம் தயாரிப்பதை மேற்கொண்டிருக்கிறார்.

பி.ஏ பொருளாதாரம் படித்தபோது ஆங்கிலப் பாடம் மனதில் நிற்கவேயில்லை. அதனால் தொடர்ந்து chellapa-4 தோல்வியுறவே படிப்பை அப்படியே கைவிட்டார். முதல்கதை சுதந்திரச் சங்கில் வெளியானது. பத்திரிகைகளில் சில காலம் பணியாற்றிவிட்டு எழுத்து என்ற சிற்றேட்டைத் துவங்கி நடத்தியிருக்கிறார்.

தன்னிடமிருந்த கேமிராவால் மதுரையைச் சுற்றியுள்ள ஜல்லிக்கட்டுகளைத் தேடித்தேடிச் சென்று தான் புகைப்படம் எடுத்து வைத்துள்ளதாகவும், தனக்குப் புகைப்படக் கலையின் மீது அதிக விருப்பம் என்றும் சொன்னார். அது போலவே மாதவையாவின் நாவல்கள் பற்றி விரிவாகப் பேசினார். செல்லப்பாவின் மனதில் யாவும் நேற்று நடந்தவை போலவே இருந்தது ஆச்சரியமாக இருந்தது.

எது உங்களை வாடிவாசல் எழுத வைத்தது என்று கேட்டேன். அவர் ஹெமிங்வேயின் குறுநாவல் ஒன்றை வாசித்ததாகவும் அது காளைச்சண்டை வீரனைப் பற்றியது என்றும். அது போலவே மதுரையைச் சுற்றிய பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டை வைத்துதான் ஏன் ஒரு நாவல் எழுதக் கூடாது என்று முடிவு செய்து வாடி வாசல் எழுதியதாகவும் சொன்னார். ஹெமிங்வேயின் தோற்காதவன் என்ற குறுநாவல் எழுத்து இதழில் வெளியாகி இருப்பதை வாசித்திருக்கிறேன் என்றேன். அது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

எழுத்து படித்திருக்கிறீர்களா என்று கேட்டார். ஒன்றிரண்டைத் தவிர மற்ற முழுத்தொகுப்பும் என்னிடம் இருக்கிறது என்று சொன்னேன். அவரால் நம்பமுடியவில்லை. எப்படிக் கிடைச்சது என்று கேட்டுக்கொண்டேயிருந்தார். பிறகு தன்னிடம் இருந்த இதழ்கள் கால ஓட்டத்தில் சிதறிப் போய்விட்டன. உங்களிடம் உள்ள தொகுப்பு எனக்குக் கிடைக்குமா என்று கேட்டார். மறுமுறை கொண்டுவந்து தருவதாகச் சொன்னேன். அவர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை.

தனது இலக்கியப்பயணத்தில் அடைந்த வலியும் ரணமுமான நாட்களைப் பற்றி எவ்விதமான ஒளிவும் இன்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். புத்தகம் போட்டு அஞ்சு பைசா சம்பாதிக்கலை. நடையா நடந்து படிக்கிற ஒவ்வொரு ஆளையும் தேடிப் போய்ப் புத்தகம் வித்து இருக்கேன். யாரும் என்னை வாவானு வரவேற்பு குடுத்துக் கூப்பிடலை. நான் ஆசைப்பட்டதுக்கு நான் அலைஞ்சேன். அவ்வளவுதான். ஆனா மனசுக்குப்பிடிச்ச வேலை செஞ்ச திருப்தியிருக்கு என்றார்.

பிறகு என்னிடம் சிகாவை உங்களுக்குப் பழக்கம் உண்டா என்று கேட்டார். யார் சிகா என்று கேட்டேன். பேராசிரியர் சி. கனகசபாபதி. ரொம்பப் பிரமாதமான விமர்சகர். புதுக்கவிதையைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். உங்களுக்கு அவரைப் பரிச்சயப்படுத்தி வைக்கிறேன். ரொம்ப முக்கியமான ஆளு என்றார்.

நான் அறிந்தவரை செல்லப்பாவிற்குப் பேராசிரியர்கள் எவரிடமும் மரியாதை கிடையாது. பெரும்பான்மையான கல்லூரிப் பேராசிரியர்கள் கூலிக்காக வேலை செய்கின்றவர்கள் அவர்களுக்கு நவீன இலக்கியத்தில் பரிச்சயமே கிடையாது என்று சொல்லித் திட்டுவார்.

ஏதோ ஒரு கல்லூரியில் அவரைப் பேச அழைத்து அங்கே வாடி வாசல் நாவலில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் ஜாதியைப் பற்றிய விபரங்களைக் கேட்டிருக்கிறார்கள். செல்லப்பா கோபத்தில் கூட்டத்தை விட்டே வெளிநடப்பு செய்துவிட்டதாகச் சொன்னார். அவ்வளவு ஆவேசமான அவர் சிகாவை உயர்வாகப் பேசியது நிச்சயம் அவர் படைப்புகளின் மீதான மரியாதையால் என்பது புரிந்தது.

செல்லப்பாவை வாழ்வின் நெருக்கடிகள் கடுமையாக முடக்கியிருந்தன. ஆனால் அவருக்குள் இருந்த எழுத்தாளன் ஒடுங்கவேயில்லை. அவர் தீவிரமான செயல்பாட்டை நோக்கியே தன்னைத் தக்கவைத்துக்கொண்டிருந்தார். ராஜராஜன் விருதை வாங்க மறுத்த காரணத்தால் தன் குடும்பத்தினர்களே தன்னை வெறுத்து ஒதுக்கியதாகவும் இதன் காரணமாக வீட்டிற்குள் பெரிய கசப்பு என்று சொல்லியபடியே அதெல்லாம் பெரிய விஷயமில்லை. நாளைக்குப் புதுசா படிக்க வரப்போகிறவனுக்கு நான் செஞ்சு வச்சிருக்கிற வேலைகள் புரியும். அது போதும் எனக்கு என்றார்.

மேலை இலக்கியத்தில் எதை அறிமுகம் செய்யவேண்டும், அதை எப்படி அறிமுகம் செய்ய வேண்டும், விமர்சனம் என்பதன் முக்கியத்துவம் என்ன? கோட்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என்று துல்லியமான எண்ணங்கள் செல்லப்பாவிடம் இருந்தன. அத்தோடு எவரையும் எதிர்பாராமல் தன் எழுத்தின் திசையில் போராடிச் செல்லும் மனவுறுதியும் அவரிடமிருந்தது.

செல்லப்பாவின் பங்களிப்பு மகத்தானது. அவரது படைப்புகள் மறுவாசிப்புக்கு உள்ளாகவே வேண்டும் என்பதோடு அவரது இலக்கியப் பணிகள் முழுமையாக சமகால வாசகர்களின் பார்வையில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

சி.சு.செல்லப்பா எழுத்தையும் இலக்கியத்தையும் நம்பி வாழ்ந்த ஒரு ஆளுமையின் அடையாளம். தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய முன்னோடிக் கலைஞன். இன்றும் அவருக்கு உரிய இடமும் கௌரவமும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. வாசகனைத் தேடிச் சென்ற எழுத்தாளனின் பாதை இன்று தூர்ந்து போயே கிடக்கிறது.

இருநூறு வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு ஆங்கில இலக்கிய இதழின் பிரதியைக் கணினி வழியாக இங்கிருந்தே வாசித்துவிட முடியும் அளவு இன்று தொழில் நுட்ப வசதி பெருகியிருக்கிறது. ஆனால் தமிழின் முன்னோடிச் சிற்றதழ்களின் பிரதிகளை வாசிக்கத் தேடி அலைய வேண்டிய துர்பாக்கியமே இன்றும் உள்ளது.

இப்போதும் திருவல்லிக்கேணியைக் கடந்து செல்கையில் பாரதி, சி.சு.செல்லப்பா. புதுமைப்பித்தன். கு.ப.ரா என்று வாழ்ந்து மறைந்த எழுத்தாளர்களின் நினைவு பீறிடவே செய்கிறது. எழுத்து வலியது என்பதை ஒவ்வொரு நிமிசமும் அது நினைவூட்டிக்கொண்டேயிருக்கிறது.

நன்றி: உயிர்மை.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ on December 4, 2011 at 8:55 PM said...

inspirational and informative post

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்