Sep 13, 2010

ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்

என் பெயர் நவீனன். சென்ற 25 வருஷங்களாக எழுதி வருகின்றேன். நான் எழுதியது ஒன்றாவது பிரசுரமாகவில்லை. அப்படிச் சொல்வது கூடப் பிசகு. சுமார் 15 (கதை, குறுநாவல், கவிதை) பிரசுரமாகியிருக்கும். இவற்றில் 13க்கு ஒரு விதச் சன்மானமும் கிடைக்கவில்லை. 14வது கதைக்கு வந்த செக்கைக் கமிஷன் குறைத்துக் கையில் கிடைத்தது 4 ரூ. 25 பைசா.
nagulan5 நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவள் பெயர் சுசீலா. அவளுக்குக் கல்யாணம் நடந்தது. இப்பொழுது அவள் ஒரு தாயார். இதை நினைக்கும் பொழுதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இருந்தாலும் கல்யாணம் நடைபெறுவதும் குழந்தை பெறுவதும் சர்வசாதாரணமான நிகழ்ச்சிகள் என்பதும் எனக்குத் தெரியாததில்லை.
நான் வேலை செய்து வரும் பாங்கில் எல்லோருக்கும் உத்தியோக உயர்வு, எனக்கு முன்னரே ஏற்பட்டது. எனக்கு ஒரு வருஷத்திற்கு முன்தான் உயர்வு கிடைத்தது. அப்பொழுது விலைவாசியும் உயர்ந்தது. என் உடன்பிறந்தவர்கள் அயலூரில் இருக்கிறார்கள். மூன்று வருஷங்களுக்கு முன் என் பெற்றோர்களும் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர்.
ஆனால் இதனால் ஒன்றும் நான் அசைந்துவிடவில்லை. எனக்கு ஒருவிதக் கசப்பும் ஏற்படவில்லை.
நான் கடந்த 5 வருஷமாக ஒரு நாய் வளர்த்து வந்தேன்.
அது ஒரு நாட்டு நாய். மங்கின செங்கல் வர்ணம். வளையாத காதுகள், குள்ளமும் இல்லை, உயரமும் இலை, நல்ல முரட்டுத் தேகம். அதற்கு நான் ராஜூ என்று பெயர் வைத்திருந்தேன். அதற்கு இப்பொழுது வயோதிகம் தட்டிவிட்டது. இருந்தாலும் அது என்னுடன் அன்பாக இருந்தது. சில நாட்கள் நான் அதனுடன் பேசுவேன்.
”ராஜூ மகாலக்ஷ்மி தியேட்டரில் கைதி வந்திருக்கிறது. பார்க்கலாமா? என்ன சொல்கிறாய்?”
அது படுத்துக்கொண்டே வாலையாட்டும்.
“ராஜூ உனக்குக் கதை பிடிக்குமா? குறுநாவல் பிடிக்குமா?”
அது என்னைப் பார்த்துக் கொண்டே படுத்துக் கொண்டிருக்கும்.
ஜூரத்தில் நான் படுத்துக் கொண்டிருந்தால் என்னை விட்டு ஒரு அடி நகராது.
அப்படி ஒரு தடவை நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கையில் என் காலில் என்னவோ வழவழவென்று ஊர்வது மாதிரி ஒரு உணர்ச்சி. நான் பயந்து சத்தம் வெளிவராத நிலையில் கண்ணைத் திறந்த பொழுது ராஜூ என் காலை நக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
ஒரு நிமிஷம் நான் அசடாகிவிட்டேன் என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் இவ்வளவு அன்புள்ள ராஜூ எனக்கு வெள்ளிக்கிழமை தோறும் ஒரு பெருஞ்சோதனையாகி விட்டது என்றே சொல்ல வேண்டும்.
வெள்ளிக்கிழமை தோறும் வேலைக்காரன் அதற்கு இறைச்சி வாங்கி வருவான்.
அதை அவன் பாகமாக்கிக் கொடுக்க 12.30 மணி ஆகும். எனக்குக் காப்பிக் கொடுத்துவிட்டு அவன் இறைச்சி வாங்கப் புறப்படுவான்.
ஆனால் ராஜூ 11.30 மணிக்கே என் அறைக்கு வந்துவிடும்.
என்னைப் பார்த்துவிட்டு சமையல் அறைப்பக்கம் வேலைக்காரன் இருக்கும் இடத்திற்கு ஓடும். பிறகு என்னிடம் வரும், பிறகு அவனிடம் போகும். நான் அதட்டுவேன்.
ஒரு அரை நாழிகை அடங்கிக் கிடக்கும். பிறகு என்னைப் பார்த்துவிட்டு என் முகபாவம் சரியாக இருந்தால், சமையல் அறைப்பக்கம் பார்க்கும், பிறகு மெல்ல எழுந்திருக்கும். நான் ஒன்றும் சொல்லாவிட்டால் பழைய பல்லவி அதற்கு இறைச்சி வருவதற்கு முன் எனக்குக் காபி வரும்.
அது என்னையே பார்த்துக் கொண்டிருக்கும்.
உங்க மனித ஜாதியே இப்படித்தான். எதிரில் ஒரு நாலுகால் மிருகம் பட்டினி கிடப்பது மறந்துவிடும். உங்களுக்கு இரண்டு கால்தான். இருந்தாலும் நீங்கள்தான் பிரதானம் என்ற திமிர் என்று சொல்வது போல் இருக்கும். நான் கவனிக்க மாட்டேன்.
ஆனால் வேலைக்காரன் வந்து இறைச்சி வாங்க என்னிடம் காசு கேட்க வருவான்.
அப்பொழுது நீங்கள் ராஜூவைப் பார்க்க வேண்டும். திடீரென்று அறை முழுவதும் தலைதெறிக்க ஓடும். என் இரண்டு கால்களின் நடுவில் நுழைந்து என் கால்களை உரசிக் கொண்டு, என் காலை நக்கிக் கொடுக்கும்.
நான் எவ்வளவோ தடவை கண்டித்தும் அடித்தும் அதன் இந்தப் பழக்கத்தை மாற்ற முடியவில்லை.
நீ ஏன் என்னை அடிக்கிறாய்? நீ இறைச்சி வாங்கித் தருவதற்கென்றா நான் இதைச் செய்கிறேன்? நானோ நாய் ஜென்மம். மனிதன் காலை நக்குவதில் அதுவும் உன்னைப் போல் தயை காட்டுபவர்களின் காலை நக்குவதில் எங்களுக்கு ஒரு தனி ருசி. நீ இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்வது போல் இருக்கும்.
அதன் சுபாவத்தை என்னால் மாற்ற முடியவில்லை. அதனால் நான் வெள்ளிக்கிழமை தோறும் வீட்டிலிருக்கும் போது கூடக் கான்வாஸ்ஷூஸ் அணிந்து கொள்வது வழக்கமாகி விட்டது. ராஜூ அதைப் பொருட்படுத்தவில்லை. செருப்பை நக்குவதில் அதற்குப் பன்மடங்கு உற்சாகம். என் நண்பர்கள் கூட ஏதாவது ”சருமவியாதி பிடித்துவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் அவர்களிடன் என்ன சொல்வது. “வெள்ளிக்கிழமை தோறும் 12 மணிக்கு இறைச்சி கிடைக்கும் என்பதால் என் ராஜூ என் காலை நக்கித் தின்கிறது” என்று சொல்ல முடியுமா? நான் சிரிப்பேன்.
ஆனால் 10 நாட்கள் முன்பு நடந்த சம்பவம்தான் என்னை அசத்தி விட்டது.
அன்றும் ஒரு வெள்ளிக்கிழமை.
பாம்பேயிலிருந்து என்னைக் காண்பதற்குப் பிரசித்த எழுத்தாளர் என். எஸ். கானேகர் வருவதாக எழுதியிருந்தார்.
இத்தனைக்கும் அவர் என்னை ஸ்டேஷனுக்கு வரக்கூட எழுதவில்லை, நான் போகவுமில்லை.
அவராகத்தான் வீடு தேடி வந்தார்.
நான் அவருக்கு ஹோட்டலில் அறை எடுத்துக் கொடுக்கவில்லை.
அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ளவில்லை.
ஏன், முதல் நாள் அவர் நண்பர் ஒருவர் வீட்டில் சாப்பிட்டார் என்பதால் அடுத்தநாள் என் வீட்டில் வலுக்கட்டாயமாகச் சாப்பிடவும் செய்யவில்லை.
ஆனாலும் அவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். வெகு காலமாக எங்கள் இருவருக்கும் இலக்கியம் மூலமாக ஒரு பிணைப்பு. ஒவ்வொரு சமயம் என்னிடம் “என்னை விட நீ நன்றாக எழுதுகிறாய்” என்று சொல்லியிருக்கிறார்.
எனக்கு அவர் என்னை உற்சாகப்படுத்த அப்படிச் சொல்கிறார் என்பது தெரியும். இல்லாவிட்டாலும் எங்களிருவரிடையும் நீ பெரியவன் நான் சின்னவன் என்ற சின்னத்தனமான பாவம் என்றுமே இருந்ததில்லை.
அப்படிப்பட்டவரிடம் நான் வெள்ளிக்கிழமை என்பதையும் மறந்து பேசிக் கொண்டிருந்தேன். ராஜூ சற்று நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தது. பிறகு சமையல் அறைப்பக்கம் சென்றது. மீண்டும் என்னருகில் வந்தது. மீண்டும் வாசல் திண்ணைக்குச் சென்றது. மீண்டும் என்னிடம் வந்தது.
“இவருடன் ஏன் சமயத்தை வியர்த்தமாக்குகின்றாய்? ஏதாவது இறைச்சி கிடைக்குமோ?” என்று கேட்பது போல் இருந்தது.
திடீரென்று அது வாசல் திண்ணையில் இருந்த காக்கையை துரத்திச் சென்றது.
கானேகர் என்னிடம் “உன் நாய் ஏன் ஒரு மாதிரி இருக்கிறது?” என்று கேட்டார்.
நான் ஒன்றுமில்லை என்றேன். அப்படி இல்லாமல் நான் அவரிடம் என் செருப்பை நக்கச் சமயம் கிடைக்காததால் அதற்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று சொல்ல முடியுமா?
மணி 12 அடித்த பொழுது கானேகர், “வா வெளியில் போய் சாப்பிடலாம்” என்றார்.
அப்பொழுதுதான் ராஜூ ஓடிவந்து என் காலின் ஆடு சதையை கடித்தது. கானேகர் ஆடிவிட்டார். அவர் முதலில் நாயைப் பிடித்துக் கட்டு என்றார். ஆனால் ராஜூ நான் அதட்டியவுடன் அடங்கிவிட்டது. வேலைக்காரன் அதைக் கட்டினான்.
கானேகர் ஊருக்குத் திரும்பும் முன் என்னுடன் டாக்டரிடம் வந்தார். டாக்டர் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றார். கானேகர் ரயிலில் ஏறினதும் (நான் ராஜு என்னைக் கடித்ததும், அதன் பரபரப்பின் காரணத்தைச் சொல்லியிருந்தேன்) சிரித்துக் கொண்டே நாய்க்கு ஒரு ராத்தல் இறைச்சி என்றால் இவ்வளவு சபலமா என்று கேட்டது ஞாபகத்திற்கு வந்தது.
பத்து நாட்களுக்குப் பிறகு என் வேலைக்காரன் ராஜூவை கார்ப்பரேஷன் நாய் பிடிக்கிறவனிடம் சேர்த்த பொழுது எனக்குச் சற்று வருத்தமாகத்தான் இருந்தது. ஏனென்றால் அது செய்தது அவ்வளவு பெரிய குற்றமாக எனக்குப் படவில்லை. ஆனால் நான் வேலைக்காரனைத் தடுக்கவில்லை. ஏனென்றால் அது கடித்ததைவிட அது வாரந் தவறாமல் என் காலை நக்கினதுதான் எனக்குச் சகிக்க முடியவில்லை.
கணையாழி, 1968
தட்டச்சு : சென்ஷி
flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

7 கருத்துகள்:

hemikrish on September 13, 2010 at 10:41 AM said...

ஹா..ரசித்தேன்.ராஜுவை கார்பரேஷன் ஆட்கள் கூட்டிட்டு போவதை சொல்லாமலாவது இருந்திருக்கலாம்..:-(

ராம்ஜி_யாஹூ on September 13, 2010 at 11:05 AM said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள் ராம்.

நகுலன் வசித்த வீடு- புகைப்படங்கள் பாருங்கள்.

எனக்கு அவர் வீடு அருகில் போன பொழுது உங்கள் ஞாபகம், எஸ் ரா ஞாபகம் வந்தது.

http://yahooramji.blogspot.com/2010/09/tiruvanandhapuram.html

Anonymous said...

மரியாதை- ஒரு பார்வை:

http://ramasamydemo.blogspot.com/2010/09/blog-post.html

Guru.Radhakrishnan on September 13, 2010 at 3:58 PM said...

This story is a animal physcology and teaches so many valuable dedicated ideas of a dog which is very loyal to his master

Kaarthik on March 23, 2011 at 3:59 AM said...

//ஏனென்றால் அது கடித்ததைவிட அது வாரந் தவறாமல் என் காலை நக்கினதுதான் எனக்குச் சகிக்க முடியவில்லை//- மிகவும் ரசித்தேன் :-)

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி on September 11, 2012 at 2:30 PM said...

சிறுகதைகளிலேயே நான் மிகவும் ரசித்த கதை இதுதான்..எப்பேர்ப்பட்ட உள்ளர்த்தக்கதை இது...

Shadusaravanan on August 9, 2020 at 6:38 AM said...

அருமையான கதை.யாரும் அவர் காலை நக்குவது அவருக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர் காதலி இல்லை. பதவி உயர்வு தாமதம். உடன் பிறந்தவர்கள் உடன் இல்லை. அவரை பார்க்க வரும் எழுத்தாளருடனும் அப்படியே. இறுதியில் அந்த நாய் கடித்ததும் பிரச்சனையில்லை, அது காலை நக்கியது தான் பிடிக்கவில்லை.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்