அந்தப் பையனை ஒரு நிமிஷம் வெறித்துப் பார்த்தார் திருமலை. சர்க்கரைக் குட்டி, பட்டுக் குஞ்சு என்றெல்லாம் கொஞ்ச வேண்டும் போலிருக்கும். அத்தனை லட்சணம். அப்படி முகக் களை. புருபுருவென்று கண். சுருள் சுருளாகத் தலையில் மயிர். ஏழு வயதுக்கான வளர்த்தி இல்லை. உடம்பு மெல்லிசுவாகு. அதனாலேயே ஒரு கவர்ச்சி.. ஐயோ! இவ்வளவு பூஞ்சையாக இருக்கிறதே என்று ஒரு பரிவுக் கவர்ச்சி.
ஆனால் மண்டையில் இத்தனை களிமண்ணா! திருமலைக்கு அதுதான் ஆச்சரியம். அரை மணி நேரமாக அந்த மண்டையில் ஒரு கணக்கை ஏற்ற, சாகசம் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஒரு சாகசமும் பலிக்கவில்லை. அந்தச் சின்ன மண்டை ஒரு அறை போலவும், அதற்குப் பல கதவுகள் இருப்பது போலவும், ஆனால், உள் முழுவதும் ஒரே ஈரக் களிமண்ணாக இருந்ததால் கதவுக் கீலில் அந்த மண்ணெல்லாம் சிக்கித் திறக்க முடியாமல் அடைத்துக் கொண்டிருப்பது போலவும் உவமானப் படம் தோன்றிற்று. இன்னொரு தடவை அந்த மண்டையை வெண்ணைய் என்று நினைத்து அவர் ஊசி முனையால் குத்தப் போனது போலவும், ஆனால் ஊசி முனை உடைந்ததும், அது வெண்ணெய் இல்லை, வெள்ளைக் கருங்கல் என்றும் அவருக்குப் புரிந்ததாக ஒரு தோற்றம். இப்படி ஒவ்வொரு தோல்விக்கும் ஓர் உவமானப் படம் தோன்றிக் கொண்டிருந்தது.
அவர் கையில் ஒரு கட்டு மரக் குச்சி. சுளுந்துக் குச்சி. உள்ளங்கை வேர்த்து சுளுந்து கட்டும் கசகசவென்று நனைந்திருக்கிறது.
“இத பாரு மூணும் மூணும் என்ன?”
விரல் விட்டு எண்ணி “ஆறு” என்றான் பையன்.
“உங்கிட்ட மூணு குச்சி இருக்கு. உங்க அண்ணா கிட்ட மூணு குச்சி இருக்கு–”
“எனக்கு அண்ணா இல்லியே.”
“சரி, உங்க அக்கா கிட்ட இருக்கு.”
“அக்காவும் இல்லே.”
“நீ ஒரே குழந்தையா?”
“ஆமாம்.”
“சரி. உங்கிட்ட மூணு குச்சி இருக்கு. எங்கிட்ட மூணு குச்சி இருக்கு. மொத்தம் எத்தனை? இரண்டு கையையும் சேர்த்து?”
“இரண்டு கையும் சேரவில்லையே என்று விழித்தான் பையன். கடைசியில் அவனுடைய இடது கையில் மூன்றும், வலது கையில் மூன்று குச்சியுமாக வைத்து, சேர்த்து எண்ணி ஆறு என்று ஏற்றிவிட்டார்.
அடுத்த கணக்குதான் அவருடைய மூளையின் பலங்களைத் தகர்த்துக் கொண்டிருந்தது.
“என் கிட்ட மூணு குச்சி இருக்கு. உங்கிட்ட எங்கிட்ட இருக்கிறதைவிட மூணு குச்சி அதிகமா இருக்கு. இப்ப ரெண்டு பேர் கிட்டவும் சேர்ந்து எத்தனை குச்சி இருக்கு?”
“ஆறு.”
“இல்லெ, என்கிட்ட மூணு குச்சி ஈ ஈ ஈ ஈ, உங்கிட்ட அதைவிட மூணு குச்சி அதிகமா இருக்கு ஊ ஊ ஊ. புரியறதோ. நான் சொன்னதைச் சொல்லு பார்ப்பம்.”
“என்கிட்ட மூணு குச்சி ஈ ஈ, உங்கிட்ட அதைவிட மூணு குச்சி அதிகமா இருக்கூ ஊ ஊ ஊ…”
“அவ்வளவுதான் இப்ப மொத்தம் எத்தனை?”
“ஆறு.”
அவருடைய மேஜை மேல் சுளுந்துக் குச்சிகள் இறைந்து கிடந்தன.
கால் மணி போராடிவிட்டு, குச்சி வாண்டாம்; மூணு மாம்பழம்னு வச்சுக்கோயேன். எங்கிட்ட மூணு மாம்பழம் இருக்கு. உங்கிட்ட அதைவிட மூணு மாம்பழம் அதிகமா இருக்கு.”
பையன் தன் கையைப் பார்த்துக் கொண்டான்.
“அப்ப மொத்தம் எத்தனை மாம்பழம் இருக்கும்?”
அவன் இப்போது ஆறு கூடச் சொல்லவில்லை. நேராக இருக்கிற சுளுந்துக் குச்சியே பலிக்கவில்லை. இல்லாத மாம்பழமா பலிக்கப் போகிறது?
“உனக்கு மாம்பழம் பிடிக்குமா?”
“பிடிக்காது?”
“ஓகே. அப்படியா? ஏன் பிடிக்காது?”
“சிரங்கு வரும்.”
“உனக்கு எந்தப் பழம் ரொம்பப் பிடிக்கும்?”
“நாகப்பழம்.”
“நாகப்பழம்.”
“சரி. நாகப்பழம். உன் இந்தக் கையிலே மூணு நாகப்பழம் இருக்கு — அந்தக் கையிலே அதைவிட மூணு நாகப்பழம் அதிகமா இருக்கு…. கேட்டியா, இந்தக் கையிலே மூணு — அந்தக் கையிலே? அதைவிட மூணு நாகப்பழம் அதிகமா இருக்கு. இப்ப ரண்டு கையையும் சேர்த்து எத்தனை பழம் இருக்கும்?”
“ஆறு.”
“ராமா.”
அரை மணி ஆகிவிட்டது.
மற்ற குழந்தைகள் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தன. ஓரிண்டு குழந்தைகள்தான் அலுத்துப்போய் ஒன்றை ஒன்று கிள்ளத் தொடங்கின.
இந்தப் பையனை அரை மணியாக நிறுத்தி வைத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார் திருமலை. பையன் இரண்டு கையையும் தொங்கவிட்டவாறே பிசையத் தொடங்கினான். கால் நொந்ததோ என்னவோ நகர்ந்து நின்றான். கொஞ்சம் அசைந்து அசைந்து சிரமம் தீர்த்துக் கொள்வது போலிருந்தது. கால் மாற்றிக் கொண்டான்.
திருமலை நன்றாகப் பார்த்தார். வரவர பையனின் கண்கள் புருபுருவென இருந்தவை, மந்தமாகத் தூங்குவது போல வெளிச்சம் மங்கிவிட்டிருந்தது. அவரும் விடவில்லை. எப்படியாவது இந்த “அதிகத்தை” மண்டையில் ஏற்றாமல் விடுவதில்லை என்று வீம்பு பிடித்துக் கொண்டது.
“நன்னா கவனிச்சுக் கேக்கணும்… என் கையிலே… இல்லெ. உன்னோட இடது கையிலே — மூணு நாகப்பழம்…”
பையனின் முகம் இடுங்கிற்று. புருவம் சுருங்கிற்று. திருமலைக்குச் சட்டென்று வாய் மூடிக் கொண்டது. இந்த புருவச் சுருக்கம்…. பத்மாவின் முகம் மாதிரி. இந்தப் புருவச் சிணுக்கம் இப்போது அவர் கண்ணை வந்து குத்திற்று.
கல்யாணப் பந்தல். திருமலை மாப்பிள்ளை. சம்பந்திகளை இறக்கியிருக்கிற வீட்டிலிருந்து மேளதாளத்துடன் அவர் பரதேசக் கோலம் கிளம்புகிறார். இடுப்பில் முடமுட வென்று பஞ்சக் கச்சம். மயில்கண். மேலுக்கு ஒரு மயில் கண் ஐந்து முழம். கையில் விசிறி. காலில் செருப்பு. அவர் தம்பியோ யாரோ குடையைப் பிரித்து திருமலையின் மீது வெயில் படுவதும் படாததுமாகப் பிடித்துக் கொண்டு வந்தான். இடையில் பஞ்சக் கச்சம் அவிழாமல் பெல்ட்டு.
காலையில் அந்த கிராமத்துப் பரியாரி வந்து அவனுக்குச் சர்வாங்க க்ஷவரம் செய்து வைத்திருந்தான். திருமலைக்கு ஒரே கூச்சம். தலைமயிரை மட்டும் விட்டுவிட்டு மார்பு கை கால் என்று ஒரு இடம் விடாமல் மழித்து விட்டான். திருமலைக்குக் கொஞ்சம் சிரமம். மயிரெல்லாம் போனதும் கறுப்புத் தோலில் கொஞ்சம் கறுப்பு உதிர்ந்தாற் போல ஒரு திருப்தி. ஆனால் உடம்பு முகமெல்லாம்,நெற்றி முதல் பாதம் வரையில் அம்மி – கல்லுரலைப் புளிந்தாற் போல அம்மை வடு. சிறுசிறு குழிகளாக பெரிய அம்மை வடு. அதனால் பரியாரியின் கத்தியும் வழவழவென்று மழித்து விடவில்லை. கர் கர் என்ற ஓசையுடன் அம்மைத் தழும்புகளையும், பள்ளங்களையும், வரம்புகளையும் நரநரத்துக் கொண்டிருந்தது. மலர் எல்லாம் போனதும் ஒரு அரிப்பு வேறு.
கல்யாணப் பந்தலில் புகுந்ததும் கிழக்கே பார்த்து நிற்க வைத்தார்கள் திருமலையை. கலியாணப் பெண் உள்ளேயிருந்து வந்து அவனுக்கு மாலையிட்டு ஊஞ்சலில் ஆட்டிய பிறகு, உள்ளே அழைத்துப் போக வேண்டும். தாயாரும் தங்கைகளும் கிழவிகளும் நடு வயதுகளும் புடைசூழ மொட மொடவென்று பட்டு மடிசாரும் தலையில் சூரியப் பிரபை, சந்திர பிரபையும் பூப்பின்னலுமக மெதுவாக வந்தாள்.
“பார்றீ பத்மா, பாரு. நன்னாப் பார்த்துக்கோ ஆம்படையானை” என்று மேளச் சத்தத்துக்கு நடுவில் ஒரு பெண் குறும்பாகக் கத்திற்று.
பதமா நிமிர்ந்து பார்த்தாள் ஒரு புன்னகையுடன். அதே கணம் முகத்தில் ஒரு சுளிப்பு. என்னமோ குத்தினது போல ஒரு வலி, ஒரு பயம்… சிறிது நேரம் அவள் மார்பு, கை, பாதம் எல்லாம் சிலுசிலுப்பது போல ஒரு சிறு அதிர்வு. அதே சுளிப்போடு ஒரு பார்வை. மீண்டும் தலை குனிந்தது.
புன்னகையைக் காணவில்லை. அப்போது, தாலிகட்டும் போது, நலங்கின்போது-ம், ஹும், அந்தப் புன்னகை மறைந்தது மறைந்ததுதான்.
கலியாணப் பந்தலில் கண்ட அந்த முதல் சுளிப்பு! திருமலைக்குப் புரிந்துவிட்டது. அவன் நல்ல அட்டைக் கறுப்பு. அம்மை வடு. அகல மூக்கு. பல் சோழிப் பல். அவனுக்கே கண்ணாடியில் பார்த்துக்கொள்ள பல சமயம் வேதனையாயிருக்கும்.
முன்னால், பெண் பாக்கவில்லை. அம்மாக்களும் அப்பாக்களும் பார்த்து நிச்சயம் பண்ணிவிட்ட கலியாணம். கண்ணாடியைப் பார்க்கத் தயங்குகிற திருமலைக்கு எந்தப் பெண்ணையும் போய்ப் பார்த்து வேணும் வேண்டாம் என்று சொல்லத் தயக்கம்.
பத்மாவைப் பார்த்ததும் அவனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி, கொஞ்சம் என்மாதிரி இருக்கக் கூடாதோ? கொஞ்சம் பங்கரையாக, கட்டை குட்டையாக – இல்லை, ஒரு கால் விந்தலாக, இல்லை, ஒரு கண் பூ விழுந்து… இப்படி ஏன் மூக்கும் முழியுமா, மாநிறமா பளிச்சென்று ஒல்லியாக, பச்சை நரம்பு ஓட…
இந்தப் பையனுக்கும் அப்படி பச்சை நரம்பு-ஒல்லி. முகத்தை ஏன் இப்படி சுளுக்கினாள்? என் முகத்தைப் பார்த்தா? பத்மா முகத்தைச் சுளுக்கினது போலவே இருந்தது. திருமலைக்கு மனசு மறுபடியும் பத்மாவுடன் ஓடிற்று. பத்மா நாளைந்து நாள் அப்படியிருந்தாள், இப்படி வந்து சேர்ந்து விட்டதே என்கிறது போல.
பிறகு படுக்கை அறையில்……….!
“அப்பா! உடம்பைப் பாரு, சமையக்காரன் மாதிரி கண்டு கண்டா, ம்க்கும்” என்று அவனுடைய இரண்டு கன்னங்களையும் ஒவ்வொரு கையின் ஐந்து விரலாலும் உள்ளங்களை அழுத்திக் கவ்வி மயக்கமும் சிரிப்பும் – அவள் கை வேர்வையும் அவன் முதுகின் வேர்வையும் சேர்ந்து கசங்கி நசுங்கி……
சுளிப்பு மறைந்து விட்டது.
இந்தப் பையன் அப்படித்தான் முகம் சுளுக்கினான் இப்போது. பத்மாவை ஜெயித்தாற்போல் இவனை எப்படி ஜெயிக்க முடியும்?
படிக்கிற குழந்தை – ஏழு வயது….
திருமலை வெறித்துப் பார்த்தார் அவனை.
“உங்கப்பா என்ன பண்றார்?”
“செத்துப் போய்ட்டார்” என்றான் பையன். கண்ணில் அழுகை இல்லை.
“அம்மா?”
“அம்மாவும் செத்துப் போயிட்டா!”
“ஆ! எப்ப?”
“போன வருஷம்!”
“அண்ணா, தம்பியாவது இருக்காளா?”
“ஒருத்தருமில்லை.”
“நீ யார் கிட்ட இருக்கே?”
“மாமா கிட்ட.”
“மாமா என்ன பண்றார்?”
“பக்கோடா, காராபூந்தி எல்லாம் பண்ணி தெருவோட வித்துண்டு போவார்! தலையிலே ஒரு பெரிய தட்டுலெ வச்சுண்டு.”
“அப்படின்னா உனக்குக் கணக்கு நன்றாத் தெரிய வேண்டாமா?”
“ஆமா.”
“ஆமா?”
பையனின் முகம் மறுபடியும் சுளித்தது. வயிற்றைப் பிடித்துக் கொண்டான்.
“என்ன பண்றது?”
“வயத்தை வலிக்கிறது. போகணும், போகணும், போகணும்” என்று வலது கையின் ஆள் காட்டி – பாம்பு விரல்களை நீட்டினான் பையன்.
“சரி, சரி போ… ஓடு” என்றார் திருமலை.
பையன் ஓடினான். கால் சட்டையிலேயே போய்விடப் போகிறானே என்று கவலை. நல்ல வேளையா ஓடிவிட்டான்.
மற்ற பையன்கள் சிரித்தார்கள்.
“பொய் சார்” என்றான் ஒரு பையன் எழுந்து.
“என்னடா பொய்!”
“அவனுக்கு அப்பா அம்மா எல்லாம் இருக்கா சார்.”
“ரண்டு அண்ணா இருக்கான் சார்.”
“ஒரு தங்கச்சி கூட இருக்கா சார்.”
“அவன் – அப்பா , பக்கோடா விக்கலெ சார். பாட்டு வாத்தியார் சார். எங்க அக்காவுக்குக் கூடச் சொல்லிக் கொடுத்தார் சார்.”
“அட!”
“அவனும் நல்லாப் பாடுவான் சார்.”
“அட.”
“அப்பா அம்மா, யாருமே இல்லென்னானே?”
“சும்மனாச்சிம் சார்.”
“ஏன் சொன்னான்?”
குழந்தைகள் பதில் சொல்லவில்லை.
“வரட்டும்” என்றார்.
திருமலைக்கு குழப்பம். முதலில் கோபம். பிறகு தன் முகம் தெரிந்தது.
குழப்பம்.
“வரட்டும்.”
எல்லோரும் காத்துக் கொண்டிருந்தார்கள். பையன் வரவில்லை. கால்மணி, அரைமணி, பகல் இடை வேளை ஆயிற்று. வரவில்லை. பிற்பகல் ஆயிற்று. வரவில்லை. மாலையில் கடைசி மணியும் அடித்தது. பையன் வரவில்லை. திருமலைக்கு வயிற்றில் புளி.
“புஸ்தக மூட்டையை வச்சுட்டுப் போயிட்டானே. அவன் வீடு தெரியுமா உங்களுக்கு?”
“நான் கொடுக்கிறேன் சார். எங்க தெருதான் சார்.” என்று ஒரு பையன் அந்தப் பையை எடுத்துக் கொண்டான். திருமலை சிறிது நின்றார்.
“நானும் வரேன். வீட்டைக் காமிக்கிறீயா?” என்றார்.
“வாங்க சார், காமிக்கிறேன்” என்று பெருமையாக அவருக்கு முன் நடந்தான்.
இரண்டு மூன்று தெரு கடந்ததும், “அதோ அந்த சந்துதான் சார்” என்றான்.
“அடி வாங்கி வைப்பீங்களா சார் அவனுக்கு?” என்றான் மறுபடியும். எத்தனை ஆசை அவனுக்கு!
திருமலை பேசவில்லை.
“இவங்கத்தான் சார் அவன் அம்மா” என்று எதிரே வந்த ஒரு அம்மாவைக் காட்டினான்.
“ஏண்டா குழந்தே! பள்ளிக்கூடம் விட்டாச்சா?”
“விட்டாச்சே, இதோ நட்டுவோட பையி புஸ்தகமெல்லாம்” என்று அவளிடம் கொடுத்தான்.
“இவங்கத்தான் எங்க சார். மூணாவது சார்” என்று அறிமுகப்படுத்தினான்.
திருமலை கும்பிட்டார்.
“வயித்து வலின்னு ஓடி வந்தான் குழந்தை, புஸ்தகப் பையைக் கூட வச்சுட்டு வந்துட்டேன்னு அழுதான். அதான் எடுத்துண்டு வரலாம்னு கிளம்பினேன்” என்றாள் அம்மா.
“இப்ப தேவலையா?”
“தேவலை. தூங்கறான்.”
திருமலை திரும்பி விட்டார்.
வழி காட்டின பையன், “ஏன் சார், நீங்க ஒண்ணும் சொல்லலே நட்டு அம்மா கிட்டே” என்று நமூட்டுச் சிரிப்பு சிரித்தான். அவனுக்கு ரொம்ப ஏமாற்றம்.
“சொன்னா அடிக்க மாட்டாங்களா”
“அடிச்சாத்தான், நாளைக்கு பொய் சொல்லாமல் இருப்பான்.”
“நாளைக்கு அடிச்சுக்கலாம் போ. நீ போ வீட்டுக்கு” என்று அனுப்பி விட்டு விடு விடு என்று நடந்தார்.
பையன் முகம் இன்னும் அவர் கண்களில் சுளித்தது. பத்மாவின் பத்து விரல்களும் அழுத்திப் பிழிந்து நசுக்க வேண்டும் என்று அவர் கன்னங்கள் புருபுருவென்று பரந்தன. பயமும் தினவுமாக வேகமாக நடந்தார்.
***
நன்றி: ஐந்திணைப் பதிப்பகம் (‘மனிதாபிமானம்’ தொகுப்பு), தாஜ்
தேர்வும் தட்டச்சும்: தாஜ் | satajdeen@gmail.com
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
3 கருத்துகள்:
ஆண் பெண் உறவின் நுட்பத்தை தமிழில் தொட்டு காட்டியவர்கள் வேறு யாருமில்லை தி.ஜா. ரா.வை தவிர.
நன்றி பகிர்வுக்கு.
class writing
காலமும் கைபிடித்தவளும் கடந்து வந்து விட்ட சுளிப்பு கதை நாயகனின் மனதில் மட்டும் உறைந்து உறுத்துகிறது...நுணுக்கமான சிலிர்ப்பு..
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.