Sep 18, 2011

போய்க் கொண்டிருப்பவள்-வண்ணதாசன்

கன்னங்கரேல் என்று சிறு சிறு குமிழ்களுடன் அசைவே அற்றுப் பல வருடங்களாகக் கிடப்பது போன்று தோன்றுகிற அந்தச் சாக்கடையைத் தொடர்ந்து போனாவே ஜூடி வீடு வந்து விடும்.

மூன்றாவது தடவையோ, நான்காவது தடவையோ இந்த ஊருக்கு வருகிற சமயம் வந்து எட்டிப் பார்க்கிற எனக்கே எப்படியோ அருவருப்பாக இருக்க, அதென்னவோ ஒரு காம்பவுண்ட் சுவர் மாதிரி நொதித்துக் கிடக்கிற சாக்கடை பற்றிக் கவலையற்று இந்த வீட்டுக்காரர்கள் நvannskalyanji (2)டமாடுகிறார்கள். இரண்டு மூன்று முட்டைத் தோடு, இப்போதுதான் எறியப்பட்ட பளீர் வெள்ளையுடன் அந்தச் சாக்கடைக் கருப்பில் வினோதமாகக் கவனம் பெறுகிறது. ஒரு வதங்கிய பூச்சரம் வேறு. இப்படி அற்பமாகக் கவனம் சிதைக்கிற சிலவற்றைத் தாண்டித்தான் அன்னம் ஜூடி வீட்டிற்குப் போக வேண்டியதிருக்கிறது.

ஜூடியைப் பார்க்க முதலில் விருத்தா கூடத்தான் வந்தேன். விருத்தா அல்லாமல் இந்த அன்னம் ஜூடியை அறிந்திருக்க எனக்கு எந்த முகாந்திரமுண்டு. இன்னொரு ஸ்டூடியோவில் வேலை பார்த்துக் கொண்டு கல்யாண வீட்டுப் புகைப்படங்களை மட்டும் எடுத்துக் கொண்டிருந்த விருத்தாவும் நானும் சிநேகிதர்களாகி விட்டது இந்த வாழ்க்கையின் எத்தனையோ விசித்திரமான உண்மைகளில் ஒன்று.

என் அலுவலக சகா ஒருவனின் கல்யாணத்திற்குப் புகைப்படம் எடுத்த இவன். ஏதோ ஓர் கோளாறால் வரவேற்புப் புகைப்படம் ஒன்றுகூடப் பதிவாகவில்லை என்ற சங்கடமான விளக்கத்தைச் சொல்லிக் கொண்டிருந்த தினத்தில்தான் அறிமுகமானேன். என் அந்த சகாவே அதிகம் கவலைப்படாதிருந்த போது, இனிமேல் மறுபடியும் திரும்ப வர முடியாத அந்த வரவேற்பு வேளைக்காக விருத்தாசலம்தான் திரும்பத் திரும்ப அதிகம் வருந்தினான்.

'இது மாதிரி நூறு சாயங்காலம் வரும்ங்க சார். ஆனால் கல்யாணம் ஆகிற சாரோட முகத்திலிருக்கிற, முழுப் பகலோட சந்தோஷம், களைச்சுப் போனாலும் துடைச்சுத் துடைச்சு மேலே வருகிற ஒரு குதூகலம், என்னண்ணு தெரியாத ஒரு பதட்டம், சில செயற்கையான அசைவு, கையை இப்படித் தூக்கறத்துக்குப் பதிலா கொஞ்சம் வீசி மடக்கித் தூக்குவீங்க. கடியாரத்திலே மணி பார்க்கிறதுகூட ஸ்டைலா இருக்கும். வழக்கமாச் சிரிக்கிறபோது கவுந்து சிரிச்சா, இன்றைக்குத் தலையைத் தூக்கி கனம்மாச் சிரிக்கிறது. பக்கத்திலே எட்டிப் பாக்கிற குட்டிப் பிள்ளைகளை வளைச்சு செல்லங் கொஞ்சுகிறது. இப்படியாப் பட்ட முகம் மறுநாள் வருமா. ரெண்டு நாள் கழிச்சா வருமா, வராதே. போச்சுங்களே ஸார். தப்பா போச்சே '--இப்படித்தான் பேச்சை என்னிடம் ஆரம்பித்தான். அவனுடைய தவிப்பும், அதை முழு ஈடுபாட்டோடு சொன்ன விதமும் எனக்குப் பிடித்துப் போயிற்று.

இதைத் தவிர அவனுக்குப் புத்தகங்கள் பற்றியோ, எனக்குக் காமெராக்களின் நுணுக்கம் பற்றியோ ஒருவர்க்கொருவர் பற்றிக் கொள்ளும் படியாக எந்தத் தூண்டுதலும் மத்தியில் இல்லை. அவரவர் விஷயங்களின் உன்னதமான சிகரங்களை நோக்கியே கவலையாவது எங்கள் இரண்டு பேருக்கும் அவரவர் இடமாவது தங்கியிருந்ததா என்று கேட்டால் கூடச் சொல்ல முடியாததுதான்.

விருத்தா ஒரு அற்புதமான கலைஞன் என்று எனக்குத் தோன்றச் செய்தது. அந்தப் புகைப்படம் ஒன்றைப் பார்த்ததும்தான், வில் வண்டிக்குள் ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறது போன்ற அற்புதமான படம். பாதையோ, முன்புறம் பூட்டியிருக்கிற காளைகளோ, வண்டிக்காரனோ, விழுந்து தொலைவுக்கு இட்டுச் செல்கிற தெருவோ எதுவும் தெரியவில்லை. வில்வண்டி உட்பகுதியின் வளைந்த பிரம்பு வரிசைகள் கொஞ்சம் தெரிகிறது. அந்தப் பெண் வண்டிக்குள் இருக்கிறாள். இவ்வளவுதான். இதை அவன் எடுத்திருந்த விதத்தில் ஏதோ ஓர் மாயமிருந்தது. அந்த வண்டி நகர்வது தெரிந்தது. பாதையில் இருக்கிற சிறிய நொடியொன்றில் கடக் என்று சக்கரம் இறங்கி ஏறுகையில் வண்டியின் விட்டத்திலிருந்து தொங்குகிற கைபிடிக் குஞ்சலம் ஆடி மோதுவது தெரிகிறது. அந்தப் பெண், பார்க்கிற ஒவ்வொருவரிடமிருந்து விடைபெற்றுத் தவித்துக் கொண்டு செல்வது தெரிந்தது. தனிமையின் அடர்வுக்குள் இருந்தும், அவள் நம்பிக்கையுடன் இந்த வாழ்க்கையை நேசிக்கிறதே உகந்தது எனத் தீர்மானித்துக் கொண்டுவிட்ட பாவனை தெரிந்தது. இளகிப் பரவிக் கொண்டிருக்கிற பார்வையில் வண்டியிலிருந்து அப்படியே அவளைக் காப்பாற்றி அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டுவிடச் சொல்லும் ஒரு அபூர்வமிருந்தது. எப்படியெல்லாமோ கிளர்ச்சியூட்டிக் கடைசியில் அணைத்துக்கொள்ள வேண்டும் எனக்குப் பட்டதை வெளிக்காட்ட முடியாத ஒரு தனித்த பரவசத்தில் நான் அமைதியாக இருந்தேன்.

அவள்தான் அன்னம் ஜூடி. இந்தப் பெயரை வெகுகாலத்திற்குப் பின்தான் விருத்தா எனக்குச் சொன்னான் அவளுக்கும் மாடியில் இருந்த அவனுக்கும் இருந்திருந்த புரிபடாத உணர்வுகள் காதல்தான் என்பதை நான்தான் ஒரு நேரத்தில் உடைத்துச் சொன்னேன். நிறையப் புத்தகம் படித்த பாவத்தில், நான் அறிந்துவைத்திருந்த கதைக்கான சூத்திரங்களையும் வாய்ப்பாடுகளையும் போட்டு பார்க்கையில் எனக்கு வந்த விடை அதுவாக இருந்ததால் அப்போது அப்படிச் சொல்லிட, சொன்ன நேரத்திலிருந்து, ஆமாம் அப்படித்தான் என்று அவர்களும் ஒப்புக் கொண்டுவிடப் பெரிய சிக்கலாகி விட்டது எல்லாம்.

அன்னம் ஜூடிக்கும் விருத்தாவுக்கும் இடையில் நானும் இது பற்றிப் பேச நேர்கிற சந்தர்ப்பங்களை விருத்தாவே உண்டாக்கித்தர, அவளைப் பார்த்து விட்டுப் போன பையனை நிராகரித்து அனுப்பி வைக்கத் தோதுவான கற்பனை வாசல்களை நாங்கள் மூன்றுபேரும் ஒவ்வொரு பக்கமும் திறந்து திறந்துவைத்துப் பார்த்தோம். நடப்பில் ஒன்றும் பிரயோஜனமில்லை. அறிக்கை வாசித்ததின்படி, அந்தக் குருடர் பள்ளிக்கூடச் சர்ச்சில், முற்றின சோளக் கதிர்கள் குளிர்ந்த காற்றில் அசைந்து ஆட, இதமான வெயிலில், புழக்கத்தில் மேன்மேலும் வழவழப்பான மரப்பெஞ்சு ஒன்றில் நானும் விருத்தாவும் அமர்ந்து, கையில் கொடுக்கப்பட்ட அச்சடித்த சிறுபுத்தகங்களுடன் பாட்டுப்பாடிச் சேர்ந்து கொள்ள, அன்னம் ஏதுமறியாத ஒரு வெள்ளை இறகுபோலக் கனமற்று திருமணச் சடங்குகளில் மிதந்திருந்தாள்.

முற்றிலுமாகவே அவள் அந்த தினத்துக்குள் பணிவன்புடைய ஒரு மனைவியாக மாறி எங்களையெல்லாம்கூட அறிமுகப்படுத்தி வைத்தாள். கனவான்களுக்கு மத்தியில் கனவான்களாக நடக்கிற மரபை ஒட்டி, நான் அன்னம் ஜூடி என்றுகூட எழுதாமல் திருமதி, சந்திரன் தேவநேசன் என்று ஜாக்கிரதையாகப் புத்தகத்தில் எழுதிக் கொடுத்தேன். விருத்தா புகைப்படக்காரன் என்பதால் என்னைவிடப் பிரகாசிக்க முடிந்தது. அவர்களை வெவ்வேறு தோற்றங்களில் மிகச் சலுகையான நெருக்கத்தில் எடுத்துக் கொண்டிருந்தான்.

புகைப்படம் எடுக்கும்போது ஒவ்வொரு தடவையும் அவன் வேறு மனிதனாகி விடுகிறான். நான் ஒருவன் நிற்கிறேன் என்றோ அவள் அன்னம் என்றோ, அவர் இன்னார் என்றோ நினைக்கிறதை ஒழித்து வெவ்வேறு பரிமாணங்களுக்கு அந்த புகைப்படத்தை இட்டுச் செல்கிற முழுக் கவனத்துடன் இயங்குவான். புன்னகைக்க வைக்கிற கோணங்கித் தனங்களைப் பிறர்போல பிரயோகிக்காமல் நெற்றி இறுகி இறுகி புருவமத்தியில் ஒரு பள்ளம் விழுந்து கொண்டே போக, எதிரிலிருப்பவர்களை அவர்களின் பாவனைகளிலிருந்து உதறி எடுத்த ஒரு சட்டென்ற நொடியில் பிடிப்பான். சேலை மடிப்புகளை நீவிவிடுவது, காலணி மேல் மடங்குகிற கால்சட்டைகளை ஒழுங்கு செய்வது போன்ற எதுவுமின்றி ஆடைகள் எல்லாம் இடையூரு அல்ல ஒரு நல்ல புகைப்படத்திற்கு என்ற வகையில் இயல்பின் சுபாவமான அவிழலில் எல்லாம் அதனதன் இடத்திலிருக்க, ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு ஜீவனை வருத்தியிருப்பான்.

ஆல்பத்திற்கு அல்லாமல் அவனுடைய சொந்தத் தேர்விற்கென்று வைத்திருக்கும் புகைப்படங்களில் ஜூடியின் அந்தக் குருடர் பள்ளி சோளக்கதிர் பக்கம் நின்று காகித மாலையணிந்த வாடகைக் காரை ஒட்டிய புகைப்படமும் இருந்தது.

அது அவள் நடந்து செல்கிற தோற்றத்தில் கைகளில் சரிந்த சேலையை முழுவதுமாக அள்ளி மறுபடி மேலே வீசிக்கொள்கிற நேரத்தின் படம். ஒரு கை தோளுக்குச் சென்று கொண்டிருக்க, ரவிக்கைக்கு முழுக் கனத்தைக் கொடுத்திருந்த மார்பும், தோளின் செழுமையும் பக்கவாட்டில் தெரிய, புடவை ஒரு சந்தோஷமான பாய்மரம் போலப் பின்பக்கம் விசிறி அந்தரத்தில் இருக்க, அவள் கண்கள் மூடியிருக்கும். வாய்கொள்ளாத சிரிப்பில் கன்னத்து ரோஸ் பவுடர் பூச்சுத் திரண்டு மேடிட்டு ஓரிரண்டு ஜிகினா மினுங்கும்.

விருத்தா அதைக் காட்டுகையில் சொன்னான். 'கண்ணை மூடியிருக்கிறது எவ்வளவு வாய்ப்பா இருக்கு பாரு '. 'வாய்ப்பாக ' என்கிற அந்த வார்த்தையின் சுகத்தில் அமிழ்ந்திருக்கையில், மூடின கண்களை எல்லாம் தாண்டி, மறுபடியும் அந்தப் புகைப்படம் எனக்கு அணைத்துக் கொள்வதையே யோசிக்க வைத்தது. இப்படித் தோன்றுவதும். அப்புறம் அவரவர் பாடுகளைப் பார்க்கத் தீராது அலைவதில் எல்லாம் சரியாகப் போவதும் நியமமாகிப் போயிற்று.

ஆபீஸ் வேலையாக நாடாக்கட்டின தாட்களையும் அட்டையையும் இந்தப் பட்டணத்து மேஜைகளில் நகர்த்தி, இரண்டு மூன்று பச்சைக் கையெழுத்தை வாங்கி முத்திரை குத்தி மறுபடி கட்டிவைத்து இன்னொரு அலுவலக ஊழியரின் சொசைட்டி லோனுக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, எலெக்ட்ரிக் ட்ரெய்னில் தொங்கின தொங்கலுக்கு எளிமையான ஆசுவாசமாகப் பன்னீர் சோடா குடித்துக் கொண்டிருக்கிறவரை இன்றைக்கு அன்னம் ஜூடி பற்றி எந்த நினைப்புமில்லாமலே இருந்தது.

அப்படிக் குடித்துக் கொண்டிருந்தபோது தான் 'ஹலோ... ' என்று நான் கல்யாணத்துக்குப் பரிசளித்த புத்தகத்துப் பெயரையும் என்பெயரே போலச் சொல்லிக் கூப்பிடுகிற தேவநேசனின் குரல் கேட்டது. லட்சியங்களின் உன்னத விளிம்புகளை ஒரு எவ்வு எவ்விப் பிடிக்கச் சொல்கிறதுபோல ஒரு புத்தகத்துக்கு மிகப் பொருத்தமாக இருந்த அந்தப் பெயரை, என் பெயராகச் சொல்லி கூப்பிடும் பொழுது ஒரு கிண்டல் தானாகவே கிடைத்தது. இப்படி என் பெயரை விட்டுவிட்டு நான் பரிசளித்த புத்தகத்தின் பெயரையே சொல்லிக் கூப்பிடுகிற இவருடைய வழக்கத்தை எப்படி எடுத்துக் கொள்ள ?

இந்தக் கிண்டல் போதாமல் ஏற்கனவே இவரைப் பற்றி, விருத்தா கூறியிருக்கிற விஷயங்களாலும் இவர் மீது கோபம் அடைந்திருக்கிற நான் 'அடடே, வாங்க ' என்று அகலமாகச் சிரித்ததுதான் கொடுமையான விஷயம். அலுவலகத்தில் வேலை பார்க்க எவ்வளவு கேவலமான சாயல் எல்லாம் வந்து சேர்ந்து விடுகிறது.

பின்னே இவன் என்ன மனுஷன் ?

அன்னம் ஜூடிமாதிரி ஒரு பெண் கிடைத்திருக்க, இவனோ எனில் வெவ்வேறு வக்கிரங்களுடன் திரிகிறானாம். கல்யாணம் ஆன ஆரம்ப தினங்கள் என்று எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டிருந்த அன்னத்துக்கு, அவனுடைய ஒவ்வொரு காரியமும் தாங்க முடியாத இம்சையாகி விட்டதாம். வேளை பாராமல், நாள் பாராமல் இவளைத் தின்று தீர்ப்பது போக, இரண்டொரு சிறுபையன்களுடனேயே திரிவதன் அசிங்கம்தான் அன்னத்துக்கே தாங்க முடியாதிருக்கிறதாம்.

'மடியிலே கிடந்துக் கிட்டு அப்படியே பச்சைப் பிள்ளை மாதிரி அழுதா. சும்மா தட்டிக் கொடுத்துச் சின்னப் பிள்ளையக் கண்ணைத் துடைச்சு விடுகிறது மாதிரித்தான் இருந்தது முதல்லே '-விருத்தா அன்றைக்கு அதற்கு பிறகு சொல்லுவதை இப்படித்தான் ஆரம்பித்தான். கலர் பிரிண்ட் போட என்று வருகிற போதெல்லாம் விருத்தா அன்னத்தைப் பார்ப்பது என்றாயிற்று. மாற்றியும் சொல்கிற அளவுக்கு இருக்கும் என்றே எனக்குப் பட்டது. என் இஷ்டத்திற்குப் பூர்த்தி செய்து கொள்ளும்படியாக அவன் இடையிடையில் காலியிடங்களைத் தந்தே வந்தான்.

'அந்த ஆளை, அவனோட தீராத இம்சையைப் பொறுக்காமல் கூனிக் குறுகிக் கட்டையாய்க் கிடந்து கிடந்தே இந்த ரெண்டு மூணு வருஷமும் கழிஞ்சு போச்சு. கல்லைப் புரட்டிப் போட்டு வாசலை அடைச்சது மாதிரித்தான் 'னு கூட வச்சுக்கலாம். நிச்சயமாச் சொல்வேன். நாளைக்கு ஒண்ணு பொறந்துச்சுன்னா, அதுக்கும் உனக்கும்தான் பேச்சு. '--அன்னம் தன் அடிவயிற்றில் கையை வைத்துக் கொண்டு விருத்தாவிடம் சொன்னதெல்லாம், விருத்தா திருப்பி என்னிடம் சொன்னான்.

அங்கங்கே நட்டுச் செல்வதற்கு வசதியாகப் புத்தகம் படிக்கிறவன் கணிசமாகத் தன் கையில் திசைகாட்டிகள் வைத்திருப்பான் என்று விருத்தாவிடம் எதிர்பார்ப்புகள் இருந்தன. ஒழுங்காகத் தாலிகட்டிக் குடித்தனம் நடத்தி நல்ல பெயர் எடுத்துக் கொண்டிருக்கிறவனான எனக்கு விருத்தாவிற்குச் சொல்லப் புதிய புதிய யோசனைகள் தோன்றிற்று.

'நான் ஏன் அன்னத்தைக் கட்டிக் கொள்ளக்கூடாது ? ' என்று லேசாகக் கேட்பான் எனில், விருத்தாவிடம் அழுத்தம் திருத்தமாக இவ்வளவு நடந்ததற்கும் பிறகு, இப்படி நடந்ததற்கான பொறுப்பேற்காவிடில் உனக்கும் அந்தத் தேவநேசனுக்கும் வித்தியாசம் இருக்காது என்றே சொல்ல முற்பட்டேன். குழந்தை பெறுவதற்கு முன்பு அப்படிச் செய்வதா, அல்லது பெற்ற பின்பா என்று அதிலுள்ள சட்டப் பிரச்சனைகள் பற்றி விருத்தா கேட்டதும், இதை ஏன் அவளிடமே கேட்கக்கூடாது என இரண்டு பேருமாக நேரே புறப்பட்டோம்.

அப்போது தான் அன்னம் ஜூடி வீடிருக்கிற இந்த இடத்திற்கு வந்தது. சாக்கடையைத் தாண்டி உள்ளே போனதும் அப்போது தான்.

விருத்தாவுடன் இந்த வீட்டுக்குள் நுழைந்த போது அன்னம் கிணற்றிலிருந்து இன்னோர் பெண்ணுடன் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தாள். சாக்கடையா, உறை இறக்கிய கிணற்றிலிருந்து வாரிக் கொட்டியிருந்த சேற்று வாடையா என்றில்லாத ஒரு தண்ணீர்க் கரை வாடை அடித்தது. பிளாஸ்டிக் குடம் ஒன்றை இறக்கி வைத்துவிட்டு எங்களை வரவேற்றாள்.

இது ஜூடியல்ல. வேறு யாரோ என்றிருந்தது எனக்கு; நாலு பிள்ளை பெற்றவள் போலிருந்தாள். மினுமினுப்பனைத்தும் உதிர்ந்து ரசமற்று உலர்ந்திருந்தது உடம்பு. மிகவும் அசிரத்தையாகச் சுற்றப்பட்டிருந்த சேலையுடன் குனிந்து இரண்டு மோடாக்களை அவள் இட்டபோது புறங்கழுத்திலும் மேல் முதுகிலும் பொரிப் பொரியாக வெடித்திருந்தது. ஒரு உயரமான இரும்பு ட்ரங்குப் பெட்டியில் அவள் எப்படியோ ஒரு வசத்தில் உட்கார முற்பட்டபோது வயிற்றின் பூச்சு மேடிட்டது.

விருத்தாவும் அவளும் பேசினார்கள். இவன் என்னைப் பற்றி அவள் எதுவும் கேளாமலே, தற்செயலாக நான் வந்ததாகச் சொல்ல, பதிலுக்கு அவள் அதைவிட முக்கியமற்றதாக இன்னொன்று சொல்ல, எனக்கு மட்டும் இவளா, இவளையா என்று வட்டம் சுழன்று சுழன்று நின்றது. கொடிகள் முழுவதும் துணிகளும் சட்டைகளுமாய் அடைந்து தொங்க, இந்தப் புழுங்கிய இரண்டு அறைகளே உள்ள வீட்டில் அன்னத்தைக் கொண்டு வந்து ஆகாதது போகாததை எடுத்துப் பரண்மேல் வீசுகிறது மாதிரி வாழ்க்கை வீசியிருப்பதிப் பார்க்கத் துயரமாயிற்று.

நானும் பேசினேன். அவள் எதையோ குடிக்கக் கொடுத்து உபசரித்தாள். குடித்தோம். எது பற்றியும் பேச ஒன்றுமில்லை என்பது போலவும், அந்தச் சாக்கடையை இரண்டு தடவை தாண்டுவதற்காக மட்டும் ஊரிலிருந்து புறப்பட்டு வந்தது போலவும், ஒருவர்க்கொருவர் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டோம்.

இரண்டு பையன்கள் பாடப் புஸ்தகங்களுடன் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன்தான் 'அக்கா, யாரோ வந்திருக்காங்க ' என்றான்.

கலர் தாள்களில் ஏதேதோ வெட்டி ஒட்டிக் கொண்டிருந்த கையுடன் ஜூடி நிமிர்ந்தாள். 'வாங்கண்ணா ' என்றாள். இப்போது இரண்டு முறையாகத்தான் இப்படிக் கூப்பிடுகிறாள். கண்களின் புரண்டு திரும்பிய விரியலில் சிறு பிரகாசம் ஏறியது. உட்கார்ந்திருந்த இடத்தின் ஜன்னல்கள் இரண்டும் மூடியிருக்க, சமையலறைப் பக்கத்திலிருந்து வந்த வெளுச்சம் மட்டுமிருந்து, எங்கே உட்கார்வது என யோசித்துக் கொண்டும், ஜூடியைப் பார்த்துக் கொண்டுமிருந்தேன்.

பவுடர் டப்பாக்களைப் பிரித்து அடித்த தகர முற்றத்தில் கீரையும், பாதி அளவு பின்னி வரி வரியாக நைலான் ஒயர்கள் முடியக் காத்திருக்கிற நிலையில் ஒரு மஞ்சட் பையும் இருந்தன. அதை இடம் மாற்றிக் காலியாக்கினதும் என்பக்கம் உட்கார நகர்த்தினாள்.

'அப்புறம் சொல்லித் தாரேன் ' என்று சொன்னதும் பையன்கள் சரி சொல்லிக் கொண்டு புத்தகங்களை ஒழுங்கு செய்தார்கள். கீழ்த்தாடையும் கழுத்தும் தீக்காயம் ஏற்பட்டது போல வழுவழுவென்று கையகலம் சுருங்கி ஒட்டியிருக்கிற பையன் என்னைப் பார்த்த படியே போனான்.

'ட்யூஷனா ' என்றபடி இன்னும் உட்காராமலே நான் ஜூடியைப் பார்த்தேன். அவள் ஒரு மூலையிலிருந்த டேபிள் ஃபேனைச் சிரத்தையுடன் தூக்கி வைத்து இணைப்புக் கொடுத்துக் கொண்டே 'பொழுது போகணுமல்லவா ' என்றாள். எந்த அதிகப்படியான கனமுமல்லாத இந்த சாதாரண பதிலைத் தொடர்ந்து அவள் அழுவாள் என எதிர்பார்க்கவில்லை. மிக மெல்லிய ஒரு இழையில் அவளின் கஷ்டம் முழுவதும் முட்டிக் கொண்டு நின்றது போலவும், அந்தப் பதிலின் சிறு அதிர்வே, அது உடைந்து பெருகப் போதுமானதென்றும் தோற்றம் தர அப்படியே மடங்கி உட்கார்ந்து அழுதாள்.

இந்த சூழ்நிலைக்கெல்லாம் நான் தயாராகவே வரவில்லை. காலையில் பன்னீர் சோடாக் குடிக்கும் நேரத்தில் தேவநேசன் என்னைப் பார்க்கும் பொழுது, 'அதே வீட்டிலதான் இருக்கோம். இங்கேயிருந்து தான் பாசஞ்சர்ல போயிட்டு வந்திட்டு இருக்கேன். மட்டன் எடுத்து வைக்கிறேன். காலையிலே வீட்டுக்கு வாங்க... ' என்று எலெக்ட்ரிக் ட்ரெயினைப் பிடிக்கப் போகிற அந்த அவசரத்திலும் நான் பரிசளித்த அந்தப் புத்தகப் பெயரையே என்னுடையதாகச் சொல்லிக்கொண்டு, முகத்தைப் பின்பக்கமாகப் பொருத்திக் கொண்ட ஒரு உருவத்துடன் நகர்ந்தார். 'நாளைக்குக் காலையில் இல்லை உடனடியாக அப்போதே ' என்று தீர்மானித்துக் கொண்டு, ஒரு மிகத் தனிமையான ஜூடியுடன் சற்று நேரம் பேசுகிற திருப்திக்காக வந்த இடத்தில் இந்த அழுகை ஒரு வினோதமான இக்கட்டில் நிறுத்தியது.

'ரெண்டு வருஷமா எல்லாத்தையும் மறந்துட்டு அவங்க அவங்கபாடு அவங்களுக்குண்ணு இருந்தோமில்லையா. இப்போ எதுக்கு இந்தமாதிரி ஒரு போட்டோவைப் பத்திரிகைக்கு அனுப்பி எல்லாரு முன்னாலியும் என் மானத்தை வாங்கணும். '

ஜூடி காலை மடக்கிய நிலையில், கழுத்தை திருப்பி இடது தோளில் அடிக்கடி கண்ணீரைத் தேய்த்துத் தேய்த்துத் துடைத்துக் கொண்டு குழறிக் குழறிச் சொல்கிற எதுவும் எனக்குப் புரியவில்லை.

'அவங்க ஸ்டுடியோ வைக்கிறது, முன்னுக்கு வர்றது, கல்யாணம் கட்டுறது, புள்ளையப் பெத்துக்கறது. இதெல்லாம் சந்தோஷம்தான். அதுக்காக இப்படி ஒரு போட்டோவைத் தேடிப் புடுச்சுப் பத்திரிகையிலே போட்டுக் கேவலப்படுத்த வேண்டாம். நான் கட்டின மனுஷன்கிட்டப் படுகிற அசிங்கம் பத்தாதுண்ணு, இப்ப ஊர் உலகம் முழுதும் படும்படி ஆயிட்டுது. '

இவளுடைய சத்தமான அழுகையைக் கேட்டு, வெளியிலிருந்து யாரோ வாசல் பக்கம் நிழலாக உள்ளே நகர்ந்து வருவது மாதிரிப் பட்டது. கழுத்தில் தீக்காயம் பட்ட பையன் மிகத் தயங்கி வந்து அழுதுகொண்டிருக்கிற ஜூடியைத் திகைத்தபடி பார்த்துக் கொண்டே அவன் விட்டுச் சென்றிருந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு போனான்.

மோசமாக ஒத்துழைக்கிற, அந்த டேபிள் ஃபேனின் இரைச்சலும் அவள் அழுகையின் காரணம் புரியாமையுமாக நான் அந்த இடத்தில் அசைவற்ற ஒரு சிக்கலாகக் கிடந்தேன்.

'இவ்வளவுதானா இதுக்கு மேற்கொண்டு இன்னும் ஏதாவது எடுத்திருக்கானா அவன் 'னு கேட்டுக்கிட்டு ஒரு மிதி. அன்னிக்கு நான் பட்டிருக்கிற அடிக்கும் உதைக்கும் கூட நான் போய்ச் சேரலைண்ணா அது இந்தப் பயல் ஜீவா மேலே இருக்கிற அக்கறையால் தான். வேற எதுக்காக இல்லாட்டியும் ஜீவாவுக்காகச் சுட்டியாவது நான் இருக்கணும் '

அன்னம் உட்கார்ந்தபடியே சற்றுச் சாய்ந்து கையால் தையல் மெஷினுக்கும் அதற்கடுத்த தோல்பெட்டி ஒன்றின் சந்திற்கும் இடையில் மடித்துச் செருகியிருந்த அந்தப் பத்திரிகையை உருவிப் போட்டாள். அழுகையும் அழுகைக்கு அனுசரணையுமான அசைவுகளுமாகவே இயங்குகிற அவளுடைய இறுகின மொத்த உருவத்திலும் கங்குபோல் ஒரு மினுக்கம் கனிந்து விசிறியது.

'என் படத்தைப் போடணும்னு தோணினா இதையா போடணும் '--அன்னம் அந்த ஆங்கிலப் பத்திரிகையை என் முன்னால் போட்டாள்.

மிகப் பிரபலமான வாரப் பத்திரிகையான அதுவும் ஒரு புகைப்பட சுருள் தயாரிக்கிற நிறுவனமும் இணைந்து நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறதாக வெளியாகியிருக்கிற இந்தப் படம் பற்றிய விபரம் இப்போதுதான் முதன்முதலாக எனக்குத் தெரிகிறது. வாரப் பத்திரிகைகளில் அடைந்து கிடக்கிற நூலாம் படைகளில் என்னுடைய தேர்ந்த வாசகச் சிறகுகள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று விலகி லைப்ரரியின் அச்சாணித் தட்டுகளின் தூசியில் மூச்சு முட்டிக் கொண்டிருக்கிற எனக்கு இப்படி நேர்ந்ததில் ஆச்சர்யமில்லை.

பெரிதுபடுத்தப்பட்ட புகைப்பட அளவாலும், அற்புதமான அச்சாலும் அருமையாக இருந்தது புகைப்படம்.

அன்னம் ஜூடி நடந்து செல்கிற தோற்றத்தில் கைகளில் சரிந்த சேலையை அள்ளி வீசுகிற படம். ரவிக்கைக்கு அழுத்தமாகக் கனமூட்டியிருக்கிற மார்பு. தோளின் பக்கவாட்டுச்செழுமை, வாய்க்கொள்ளாத சிரிப்பு, மூடிய அந்தக் கண்கள்.

'பழகின பழக்கம். குத்திக் குத்தி எடுத்தாலும் உசிரைப் பிடிச்சுக்கிட்டு இந்த ஜீவாப் பயலுக்காக நான் இருக்கிற இருப்பு. இதெல்லாம் ஞாபகமில்லை. இந்த உடம்பு ஒண்ணுதான் ஞாபகம் இருக்கு போல '--கிட்டதட்ட விருத்தா என்பக்கத்தில் தலை கவிழ்ந்து இந்நேரம் நிற்பதான பாவனையுடனேயே ஜூடி பேசினாள்.

நான் இதையெல்லாம் அவனிடம் சொல்வேன்; சொல்ல வேண்டும் என்ற குரலில் கொஞ்சம் கொஞ்சமாக இதைப் பகிர்ந்து கொண்டே வந்தாள். என்னிடம் தேறுதலை எதிர்பார்க்கிறதான அடையாளமில்லை. அவளுடைய கணவனைப் பற்றிய மிகையான அவதூறுகளை எடுத்து என் முன்னே விசிறி. 'பார், நான் எவ்வளவுக்கு மத்தியில் இருக்கிறேன் ' என்ற இரக்கம் சம்பாதிக்கவுமில்லை. விருத்தாவுக்கும் அவளுக்கும் ஜீவாவுக்கும் என்று நேர்ந்திருக்கிற ஒரு துல்லிய உறவின் மீது, பின்னப்படுத்துவது போலப் பதிகிற வேற்று ரேகைகளைத் துடைத்துத் துடைத்து அப்புறப்படுத்துகிற ஒரு காரியமாகவே இருந்தது.

இத்தனைக்கிடையிலும், ஒரே ஒரு மிகச் சிறு கணம், ரொம்பவும் குலைந்துகிடக்கிற அவளைப் பார்க்கும் போது அவளை அப்படியே சற்று ஆறுதலாக அணைத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது எனக்கு. அதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் பட்டது. உடனேயே கேட்டேன்

'ஜீவா எங்கே, ஸ்கூலுக்கா ? '

அன்னம் சட்டென்று எழுந்தாள். சேலையால் முகத்தை மிக அழுத்தி துடைத்துக் கொண்டாள். தலையை அவசரமாக ஒழுங்கு செய்தாள்.

'அவனுக்குத்தான் சாப்பாடு கொண்டு போகணும். பேசிக்கிட்டே இருந்ததில் நேரமாயிட்டுது. பெல் அடிச்சிருவாங்க '--போய் அடுக்களையிலிருந்து சின்னப் பாத்திரத்தில் எதையோ மாற்றினாள். ஒரு ப்ளாஸ்டிக் குடுவையில் தண்ணீர் ஊற்றித் திருகினாள். இரண்டு பிஸ்கட்டுகளை ஒரு பாலிதீன் பையில் மடித்து எல்லாவற்றையும் ஒரு வயர் பையில் வைத்துவிட்டு குடையையும் எடுத்துக் கொண்டு 'போவோமா ' என்றாள்.

முழுமையான இன்னொரு பாத்திரமாகத் தன்னை ஒன்றிணைத்துக் கொண்டு அவள், ஃபேனை நிறுத்தி, 'பூனைச் சனியன் எல்லாவற்றையும் இழுத்து இழுத்து வாயை வைக்கும் ' என்று சொன்னபடி ஜன்னல் கதவு அடைத்து செருப்புப் போட்டு கதவை சாத்திப் பூட்டிக் கையால் இழுத்துக் கொண்டு வேகமாக முன்னால் சாக்கடைப் பக்கம் நின்றுகொண்டிருந்த என்னிடம் வந்து மறுபடியும் சிறு தெளிவுடன் 'போகலாமா ' என்று கேட்டாள்.

போகலாமா என்று என்னிடம் கேட்டாலும், போய்க் கொண்டே இருப்பவள் என்று அவளைப்பற்றி எனக்குத் தோன்றிற்று.

*******

நன்றி: திண்ணை

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

7 கருத்துகள்:

மதி on September 18, 2011 at 3:53 AM said...

excellent narration.. it is only apt that vannadasan wrote about a photographer and a photo.. his words bring the photo and the scenes in virtual print in vision

ராம்ஜி_யாஹூ on September 18, 2011 at 10:05 AM said...

நல்ல கதை.


ஸ்டுடியோவிற்கு ஒரு கரகாட்ட பெண் கலைஞர் புகைப்படம் எடுக்க வருவது, பின்பு கால் இழந்த அவர் கணவருடன் புகைப் படம் எடுக்க வருவது போன்ற நிகழ்வுகள் இருக்கும் இன்னொரு கதையும் அற்புதமாக இருக்கும்

இராஜராஜேஸ்வரி on September 18, 2011 at 3:50 PM said...

பரிதாபமான பெண்ணின் வாழ்க்கைச்சித்திரம்!!

இரசிகை on October 18, 2011 at 8:58 AM said...

nutppam...

mu swaminathan on January 27, 2012 at 8:52 AM said...

முதல் முறையாக திரு.வண்ணதாசனின் கதையை படிக்கிறேன்.கதாசிரியரின் கதைகளை பற்றி அறிமுகம் செய்த என் தோழனுக்கு மனமார்ந்த நன்றிகள்..! முதல் வரி முதல் கடைசி வரி வரை நிருத்தாது படித்து பல ஆண்டுகளாயிற்று..கண் முன் காட்ச்சிகளை கொன்டுவந்தது திரு.வண்ணதாசனின் எழுத்துக்களின் பலம் என்பதை அறிந்தேன்.. நேரில் காணாத அந்த மானுடர்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

Unknown on May 15, 2012 at 11:17 PM said...

நானும் முதன் முதலாக வண்ணதாசனின் சிறுகதையை வாசிக்கிறேன். ஒரு அற்புத படைப்பாளரை இத்தனை காலம் அறியாமல் இருந்த்தது எனது அறியாமைதான். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்த அழியாச்சுடருக்கு நன்றிகள்

Mugilan on February 18, 2016 at 5:11 PM said...

//போகலாமா என்று என்னிடம் கேட்டாலும், போய்க் கொண்டே இருப்பவள் என்று அவளைப்பற்றி எனக்குத் தோன்றிற்று. //
இது வெறும் வாக்கியம் அல்ல, வாழும் முறை! அருமையான கதை!

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்