Jan 19, 2011

சிலிர்ப்பு - தி. ஜானகிராமன்

திருச்சிராப்பள்ளியிலிருந்தே புறப்படுகிற வண்டி அது. மாயவரத்தோடு நின்றுவிடும். பத்தரை மணிக்குத் தொடங்கி மூன்று மணியோடு அதன் வாழ்வு முடிந்துவிடும். மதுரை, மானாமதுரை, ஈரோடு என்று எல்லா வண்டிகளையும் அனுப்பிவிட்டு திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் புயல் புகுந்து விளையாடின தோப்பைப் போல, ஒரே வெளிச்சமாக ஹோவென்று வெறிச்சிட்டுக் கிடந்தது. வாழைத்தொலி, ஆரஞ்சுத்தொலி, எச்சில் பொட்டணம், தூங்குமூஞ்சிகள்- இவற்றைத் தவிர ஒன்றையும்தி.ஜானகிராமன் காணவில்லை. வண்டி புறப்பட இன்னும் அரைமணிதான் இருக்கிறது. எஞ்சின், கார்டு, ஒன்றும் வரவில்லை. வண்டிக்கு வண்டி ஒரு பரட்டை, அழுக்கு இப்படி ஏதாவது தூங்கிக் கொண்டிருந்தது. பங்களூர் எக்ஸ்பிரஸில் இறங்கி வந்த குடும்பம் ஒன்று இரண்டாம் வகுப்பில் சாமான்களைப் போட்டுக் காவல் வைத்து எங்கேயோ போய்விட்டது. எக்ஸ்பிரஸ் வண்டி சென்றால் என்ன கூட்டம். வரும்போது என்ன வரவேற்பு, என்ன உபசாரம்! போகும்போது எவ்வளவு கோலாகலம்! இது நாதியில்லாமல் அழுது வழிந்தது. ஷட்டிலும் கேடுகெட்ட ஷட்டில், ரயில் ஜாதியில் கூட ஏழை, பணக்காரன் உண்டு போல் இருக்கிறது.
நான் தனியாக கடைசிப் பெட்டிக்கு முன் பெட்டியில் உட்கார்ந்திருந்தேன். பக்கத்தில் என் பையன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். தலைமாட்டில் கையிலிருந்து நழுவிய ஆரஞ்சு உருண்டு கிடந்தது. அதைப் பார்க்கும்போது சிரிப்பு வந்தது எனக்கு. பையனை பங்களூரிலிருந்து அழைத்து வருகிறேன். மாமா சம்சாரம் ஊருக்கு வந்திருந்தபோது அவனை அழைத்துப் போயிருந்தாள். நான் காரியமாக பெங்களூர் போனவன் அவனை அழைத்துக் கொண்டு வந்தேன். பெங்களூர் ஸிட்டி ஸ்டேஷனில் மாமா ரெயிலேற்றி விட வந்திருந்தான். ரெயில் புறப்பட ஐந்து நிமிஷம் இருக்கும்போது ஆரஞ்சுப் பழக்காரனைப் பார்த்து, ""ஆரஞ்சுப்பா, ஆரஞ்சுப்பா'' என்று பையன் முனகினான். மாமா காதில் விழாததுபோல அந்தண்டை முகத்தைத் திருப்பிக்கொண்டு விட்டான். பையனைச் சுடுகிறாப்போல ஒரு பார்வை பார்த்தேன். அவன் வாய் மூடிக் கொண்டது. ஆனால், வண்டி புறப்பட்டதுதான் தாமதம்; ஆரம்பித்து விட்டான். ஆறு வயசுக் குழந்தை; எத்தனை நேரந்தான் அடக்கிக் கொண்டிருப்பான்.
""யப்பா, யப்பா!''
""ஏண்டா கண்ணு!''
""பிச்சி மாமாவுக்கு வந்து, வந்து, தொளாயிர ரூபா சம்பளம். பணக்காரர். இவ்வளவு பணக்காரர்ப்பா!'' என்று கையை ஒரு கட வாத்திய அளவுக்கு அகற்றி, மோவாயை நீட்டினான் - குறை சொல்லுகிறாற்போல.
""அதுக்கு என்ன இப்ப?''
""வந்து, செத்தே முன்னாடி ஆரஞ்சு கேட்டேனோல்லியோ, வாங்கிக் குடுக்காம எங்கேயோ பாத்துண்டு நின்னார்ப்பா.''
""அவர் காதிலே விழுந்திருக்காது. விழுந்திருந்தா வாங்கியிருப்பார்.''
""நான் இரைஞ்சுதான்பா சொன்னேன்''.
""பின்னே ஏன் வாங்கிக் கொடுக்கலை?'' கேள்வியை நானே திருப்பிக் கேட்டுவிட்டேன். பையன் திணறினான்.
""வந்துப்பா, வந்து, பிச்சி மாமாவை வந்து ஒரு மூணு கால் சைக்கிள் வாங்கித் தான்னேன். வந்து, தரேன் தரேன்னு ஏமாத்திப் பிட்டார்ப்பா...''
""அவர் என்னத்துக்குடா வாங்கணும்? நான் வாங்கித் தரேன்.''
""நீ எப்படி வாங்கித் தருவியாம்?''
""ஏன்?''
""உனக்கு நூறு ரூபாதானே சம்பளம்?''
""உனக்கு யார் சொன்னா?''
""வந்து, பிச்சி மாமாதான் சொன்னா.''
""உங்கிட்ட வந்து சொன்னாரா, உங்கப்பாவுக்கு நூறு ரூபாதான் சம்பளம்னு?''
""வந்து எங்கிட்ட இல்லேப்பா. மாமிகிட்டச் சொன்னா. நீ வந்து மெட்ராஸ்லேந்து லெட்டர் எழுதியிருந்தே பாரு, புள்ளையார் பூஜையன்னிக்கி; அப்பச் சொன்னா மாமிகிட்ட. வெறுமெ வெறுமே நீ மெட்ராஸ் போறியாம். உனக்கு அரணாக்கொடி வாங்க முடியாதாம்.''
இது ஏதுடா ஆபத்து!
""சரி நாழியாச்சு. நீ படுத்துக்கோ.''
""எனக்கு மோட்டார் வாங்கித் தரயா?''
""தரேன்.''
""நெஜ மோட்டார் இல்லே. கீ கொடுக்கிற மோட்டார், இவ்வுளூண்டு இருக்குமே, அது.''
""அதான் அதான். வாங்கித் தரேன்.''
""யப்பா, ஆரஞ்சுப்பா.''
""நீ தூங்கு. திருச்சினாப்பள்ளி வந்தவுடனே வாங்கித் தந்துடறேன்.''
""போப்பா!''
""இப்ப எங்கடா வாங்கறது, ரெயில் போயிண்டிருக்கிற போது?''
""அப்பன்னா ஒரு கதை சொல்லு.''
""அப்படிக் கேளு. நல்ல கதையாச் சொல்றேன். ஒரே ஒரு
ஊரிலே...'' பாதிக் கதையில் பையன் தூங்கிவிட்டான்.
""குழந்தை நல்ல சமத்து ஸôர். ஷ்ரூடா இருக்கான். ஆளை எப்படி "ஸ்டடி' பண்றான்!'' என்று திடீரென்று எதிரே இருந்தவர் மதிப்புரை வழங்கினார்.
""அதுதான் தலை பெரிசா இருக்கு!'' என்று பையனைப் பார்த்தேன். தலை சற்றுப் பெரிதுதான் அவனுக்கு. எடுப்பான முகம். மூக்கும் முழியுமான முகம். மொழு மொழு வென்று சரீரம். தளதளவென்று தளிரைப் போன்ற தோல். கன்னத்தில் தெரிந்தும் தெரியாமலுமிருந்த பூனை மயிர் ரெயில் வெளிச்சத்தில் மின்னிற்று. தலைமயிர் வளையம் வளையமாக மண்டி, அடர்ந்து பாதி நெற்றி வரை விழுந்திருந்தது. அழகில் சேர்க்க வேண்டிய குழந்தைதான். நாளை மத்தியானம் அம்மாவைப் பார்க்கத்தான் போகிறான். அதுவரையில்? யாரோ அநாதையைப் பார்ப்பது போல் இருந்தது எனக்கு. தாய் பக்கத்தில் இல்லாவிட்டால் குழந்தைக்குச் சோபை ஏது? குழந்தையை இரண்டு மூன்று முறை தடவிக் கொடுத்தேன். கபடமில்லாத இந்தக் குழந்தையை எப்படி ஏமாற்றத் துணிந்தது பிச்சி மாமாவுக்கு. கிருபணன், கிருபணன் என்று வேலைக்குப் போன நாள் முதல் வாங்கின பிரக்யாதி போதாதா? குழந்தையிடங் கூடவா வாங்க வேண்டும்? சரிதான், போனால் போகிறது என்று விட்டுவிடக்கூடிய வலுவும் எனக்கு இல்லை. குழந்தையின் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் துன்பம் கிளர்ந்தது. சிறிய அற்பமான நிகழ்ச்சி. ஆனால் எனக்குத் தாங்கவில்லை. பிச்சி மாமா எத்தி எத்திப் பிழைக்கிற வித்தைகள், பிறந்தது முதல் உள்ளும் புறமும் ஒன்றாமல் அவன் நடத்தி வருகிற வாழ்க்கை, பெண்டாட்டியிடங்கூட உண்மையில்லாமல் அவன் குடும்பம் நடத்துகிற "வெற்றி'- எல்லாம் நினைவில் வந்து, திரண்டு சுழல் வண்டுகளைப் போலச் சுற்றிச் சுற்றி வந்தன. ராத்திரி முழுவதும் அதே தியானம். தூக்கமே இல்லை.
திருச்சி வந்ததும் ஆரஞ்சு வாங்கினேன். ""யப்பா, இதை ஊருக்குப் போய்த் திங்கறேம்ப்பா. அம்மா உரிச்சுக் கொடுப்பா கையிலே, வாங்கித் திங்கறேம்பா'' என்று கெஞ்சினான்.
""ஆல் ரைட், அப்படியே செய்.''
வண்டி புறப்பட இன்னும் அரை மணி இருந்தது. தாகம் வறட்டிற்று. இறங்கிப் போய்த் தண்ணீர் குடித்துவிட்டு, வெற்றிலை போட்டுக்கொண்டு வந்தேன்.
திரும்பி வரும்போது யாரோ ஓர் அம்மாள் என் பெட்டியில் ஏறிக்கொண்டிருந்தாள். கூட ஒரு பெண். எதிர்த்த பலகையிலேயே உட்கார்ந்து கொண்டார்கள்.
""இதுதானே மாயவரம் போகிற வண்டி?''
""இதேதான்.''
""எப்பப் புறப்படும்?''
""இன்னும் இருபத்தைந்து நிமிஷம் இருக்கு.''
""நீங்கள் எதுவரையில் போறேள்.''
""நான் கும்பகோணம் போறேன்.''
""உங்க குழந்தையா?''
""ஆமாம்''
""அசந்து தூங்கறானே.''
""பங்களூரிலிருந்து வரோம். அலுப்பு; தூங்கறான்.''
""நீயும் படுத்துக்கறயா?''
""இல்லே மாமி, தூக்கம் வரலே'' என்றது அந்தப் பெண்.
""கொஞ்சம் தூங்குடி குழந்தை. ராத்திரி முழுக்கப் போயாகணும். நாளைக்கு வேறே, நாளன்னிக்கி வேறே போகணுமே.''
""இல்லே மாமி, அப்பறம் தூங்கறேன்.''
அம்மாளுக்கு நாற்பது வயது இருக்கும். இரட்டை நாடி. ருமானி மாம்பழம் மாதிரி பளபளவென்று இருந்தாள். காதில் பழைய கட்டிங்கில் ஒரு பெரிய ப்ளூ ஜாக்கர் தோடு. மூக்கில் வைர பேஸரி. கழுத்து நிறைய ஏழெட்டு வடம் சங்கிலி. கையிலும் அப்படியே. மாம்பழ நிறப் பட்டுப்புடவை. நெற்றியில் பளீரென்று ஒரு மஞ்சள் குங்கும வட்டம். பார்க்கப் பார்க்கக் கண்ணுக்கு நிறைவான தோற்றம், பக்கத்தில் ஒரு தோல் பெட்டி. ஒரு புதுக் குமுட்டி அடுப்பு.
அந்தப் பெண்ணுக்கு எட்டு வயது இருக்கும்; மாநிறம்; ஒட்டி உலர்ந்த தேகம்; குச்சி குச்சியாகக் கையும் காலும்; கண்ணை வெளிச்சம் போட்டுப் பார்க்க வேண்டியிருந்தது; எண்ணெய் வழிகிற முகம்; தூங்குகிறார்போல ஒரு பார்வை. கையில் ஒரு கறுப்பு ரப்பர் வளை; புதிதாக மொடமொடவென்று ஒரு சீட்டிப் பாவாடை; சிவப்புப் பூப்போட்ட வாயில் சட்டை; அதுவும் புதிதுதான்; கழுத்தில் ஒரு பட்டையடித்த கறுப்புக் கண்ணாடி மணிமாலை. பக்கத்தில் ஒரு சீட்டிப்பாவாடை, கொசுவி முறுக்கிச் சுருட்டிக் கிடந்தது. அதிலேயே ஒரு சட்டையும் திணித்திருந்தது.
அந்த அம்மாளுக்கும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்? எப்படிக் கேட்பது?
வண்டி புறப்படுகிற சமயத்திற்கு ஒரு மலைப்பழக்காரன் வந்தான். ஒரு சீப்பு வாங்கி ஒரு பழத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்தேன். பதில் பேசாமல் வாங்கிக் கொண்டது.
""சாப்பிடு.''
""சாப்பிடு'' என்று அந்த அம்மாள் சொன்னதும் உரித்து வாயில் போட்டுக் கொண்டது.
""இந்தப் பொண்ணு கல்கத்தாவுக்குப் போறது.''
""கல்கத்தாவுக்கா!''
""ஆமாம், நம்ம பக்கத்து மனுஷா ஒத்தர் அங்கே பெரிய வேலையிலே இருக்காராம். அங்கே போறது. ராத்திரி மாயவரத்திலே இருந்து அவாளுக்குத் தெரிஞ்சவா யாரோ போறா. அவாளோட சேர்த்துவிடணும். நல்ல பொண்ணு, சாதுவா, சமர்த்தாயிருக்கு.''
பிறகு நானே கேட்க ஆரம்பித்துவிட்டேன்.
""உம் பேரு என்னம்மா?''
""காமாக்ஷின்னு பேரு. குஞ்சுன்னு கூப்பிடுவா.''
""பேஷ், பேஷ்!''
""என்ன பெரிய பேஷாப் போடறேள்?'' என்று அந்த அம்மாள் சிரித்தாள்; ""இவ எப்படி இரண்டு பேரைச் சுமக்கிறாள்னா!''
எனக்கும் சிரிப்பு வந்தது.
""அதுவும் சரிதான். ஆனால் நான் நெனைச்சது வேறே. எனக்குக் காமாக்ஷின்னு ஒரு தங்கை இருக்கா. இந்தச் சாயலாத்தான் இருப்பா. நல்ல தெம்பான இடத்துலேதான் குடுத்துது. ஆனா மாப்பிள்ளை ரொம்ப உபகாரி. யாருக்கோ மேலொப்பம் போட்டார் இருபதினாயிரத்துக்கு. அவன் திடீர்னு வாயைப் பொளந்துட்டான். அவர் குடும்பம் நொடிச்சுப் போயிடுத்து. ரொம்பக் கஷ்டப்பட்டார். இன்னதுதான்னு சொல்லி மாளாத கஷ்டம். இப்பத்தான் நாலஞ்சு வருஷமா அவர் ஒரு வேலைன்னு கிடைச்சுப் பிடுங்கலில்லாமெ இருக்கார். அவ கஷ்டம் விடிஞ்சுடுத்து. அவளுக்கு அடுத்தவ இன்னொரு தங்கை. குஞ்சுன்னு பேரு. அவளுக்குக் கல்யாணம் பண்ண அலையா அலைஞ்சோம். கடைசியிலெ எனக்கு அத்தை பொண் ஒருத்தி; அவளுக்குக் குழந்தை இல்லெ. சீக்குக்காரி. தன் புருஷனுக்கே அவளைக் கொடுத்துடணும்னு தலைகீழா நின்னா. அப்படியே பண்ணிட்டார், எங்கப்பா. ஆனா, கல்யாணம் ஆன நாளிலிருந்து அவ பட்ட பாடு நாய் படாது. பத்து வருஷம் கழிச்சு ஒரு புள்ளைக் குழந்தை பிறந்திருக்கு. மூணாம் வருஷம். அதுக்குப் பிற்பாடுதான் அந்த வீட்டிலே அவளும் ஒரு மனுஷின்னு தலை தூக்கி நடமாடிண்டிருக்கா.''
""ஆயிரம் இருக்கட்டும் பெண்ணிருக்கப் பெண் கொடுக்கலாமோ?''
""என்ன பண்றது? பிராப்தம். இவ பேரைக் கேட்டவுடனே ஞாபகம் வந்தது. ரெண்டு பேரும் ஒரே இடத்திலே அமைஞ்சிருக்கேன்னுதான் பேஷ் போட்டேன்.''
அந்தப் பெண் எப்படி இந்தப் பேச்சை வாங்கிக்கொண்டது என்று புரிந்துகொள்ள முடியவில்லை. அதே தூங்கும் பார்வையுடன் முகத்தில் ஓர் அசைவு, மாறுதல் இல்லாமல் எல்லாவற்றையும் கேட்டுப் பார்த்துக்கொண்டிருந்தது.
""குழந்தை, உனக்கு அப்பா அம்மா இருக்காளா?''
""இருக்கா.''
""அப்பா என்ன பண்றார்?''
""ஒண்ணாவது வாத்தியார்.''
""அக்கா, தங்கை, அண்ணா, தம்பியெல்லாம் இருக்காளா?''
""இருக்கா... நாலு அக்கா... ரெண்டு அண்ணா, ஒரு தம்பி இருக்கான். அதுக்கப்புறம் ஒரு தங்கை.''
""அக்காவுக்கெல்லாம் கல்யாணம் ஆயிடுத்தா?''
""மூணு பேருக்கு ஆயிடுத்து. ரெண்டாவது அக்கா, நாலு வருஷம் முன்னாடி குறைப்பட்டுப் போயிட்டா. எங்களோடே தான் இருக்கா.''
""அண்ணா என்ன பண்றான்!''
""பெரிய அண்ணா கிளப்பிலே வேலை செய்யறான். சின்ன அண்ணா சகிண்ட் பாரம் வாசிக்கிறான்.''
""நீ வாசிக்கிலையா?''
""இல்லை, அண்ணா ஒருத்தன்தான் வாசிக்கிறான். எங்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்க முடியலை, அப்பாவுக்கு.''
""அதுக்காக நீ வேலைக்குப் போறயாக்கும்?''
""ஆமாம். மத்தியானச் சாப்பாட்டுக்கே எல்லாருக்கும் காணமாட்டேங்கறது.''
""உனக்கு என்ன வேலை செய்யத் தெரியும்?''
""பத்துப் பாத்திரம் தேய்ப்பேன். காபி, டீ போடுவேன். இட்லி தோசைக்கு அரைப்பேன். குழம்பு, ரசம் வைக்கத் தெரியும். குழந்தைகளைப் பாத்துப்பேன். கோலம் போடுவேன். அடுப்பு மெழுகுவேன். வேஷ்டி புடவை தோய்ப்பேன்.''
""புடவை தோப்பியா! உனக்குப் புடவையைத் தூக்க முடியுமோ?''
""நன்னாத் தோய்க்கத் தெரியும்.''
""இதெல்லாம் எங்கே கத்துண்டே?''
""ராமநாதையர்னு ஒரு ஜட்ஜி இருக்கார். அவாத்துலெதான் கத்துண்டேன்.''
""ம்ஹ்ம், ஸர்வீஸ் ஆனவளா? அவாத்துலெ எத்தனை வருஷம் இருந்தே?''
""மூணு வருஷமா இருக்கேன்.''
""மூணு வருஷமா? உனக்கு என்ன வயசாறது?''
""இந்த ஆவணிக்கு ஒன்பது முடிஞ்சு பத்தாவது நடக்கிறது.''
""ஏழு வயசிலேயே உனக்கு வேலை கிடைச்சுட்டுது; தேவலை. என்ன சம்பளம் கொடுப்பா?''
""சம்பளம்னு கிடையாது. ரெண்டு வேளை சாப்பாடு போடுவா. தீபாவளிக்குப் பாவாடை சட்டை ஒரு ஜோடி எடுத்துக் கொடுப்பா.''
""இந்தச் சட்டை யார் வாங்கிக் கொடுத்தா?''
""அவாதான்.''
""கோலம் போட்டு, அடுப்பு மெழுகி, புடவை தோய்ச்சு, குழந்தையைப் பாத்துண்டு, தோசைக்கு அரைச்சு எல்லாம் பண்ணினத்துக்கு இந்த ஆறணாச் சீட்டிதான் கிடைச்சுதா அவாளுக்கு? கிழிசலாப் பார்த்துப் பொறுக்கி எடுத்துக் கொடுத்திருக்காளே.''
"".......................''
""நீ நல்லதா வாங்கிக் கொடுக்கச் சொல்லிக் கேட்கப் படாதோ?''
"".......................''
""ஜட்ஜ் வீட்டிலெ சாப்பிட்டிண்டு இருந்தேங்கறே. உன் உடம்பைப் பார்த்தா அப்படித் தெரியலியே! பஞ்சத்திலே அடி பட்டாப்பலே, கண்ணுகிண்ணெல்லாம் உள்ளே போயி, ஒட்டி உலர்ந்து, நாய் பிடுங்கினாப் போல இருக்கியே.''
""பெரிய மனுஷாள்ளாம் தனி ரகம்னு உங்களுக்குத் தெரியாது போல் இருக்கு. அவா வத்தல் குழம்பு, சுட்ட அப்பளாம், மிளகு ரசம் இதைத்தான் பாதிநாள் சாப்பிடுவா. ராத்திரி பருப்புத் துகையலும் ரசமுந்தான் இருக்கும். ஆனா அவா உடம்பு என்னவோ நிகுநிகுன்னுதான் இருக்கும். அது தனி உடம்பு. நம்மைப் போல அன்னாடங் காய்ச்சிகளுக்குத்தான் இதெல்லாம் ஒத்துக்காது. ரெண்டு நாளைக்கு இப்படிச் சாப்பிட்டா, வாய் வெந்து, கண் குழிஞ்சு, சோர்ந்து சோர்ந்து வரும்'' என்று அம்மாள் தன்னையும் என்னோடு சேர்த்துப் பேசினாள். மரியாதைக்குத்தான் அப்படிச் சொல்லியிருக்க வேண்டும். உடனே ஏதோ தவறாகப் பேசிவிட்டவன் போல, ""நான் என்னென்னவோ பேசிண்டிருக்கேன்; நீங்க என்ன பண்ணிண்டிருக்கேள்?'' என்று கேட்டாள்.
""பயப்படாதீங்கோ. நானும் அன்னாடங் காய்ச்சிதான். தாலுகாவிலே குமாஸ்தா.''
தஞ்சாவூர் ஸ்டேஷன் வந்துகொண்டிருந்தது.
""துண்டைப் போட்டுட்டுப் போறேன். கொஞ்சம் இடத்தைப் பார்த்துக்கோங்கோ; சாப்பிட்டு, குழந்தைகளுக்கும் சாப்பாடு பண்ணி அழைச்சிண்டு வந்துடறேன்.''
""இன்னும் சாப்பிடலியா நீங்க? ஏம்மா, நீ என்ன சாப்பிட்டே காலமே?''
""பழையது.''
""எங்கே?''
""ஜட்ஜியாத்திலே!''
""பார்த்தேளா, பெரிய மனுஷாள்னா இப்படின்னா இருக்கணும்! ஊருக்குப் போற குழந்தைக்கு, மூணு வருஷம் வீட்டோட கிடந்து உழைச்சிண்டிருந்த பொண்ணுக்கு, கொஞ்சம் நல்ல சாப்பாடாப் போட்டு அனுப்பிச்சாதான் என்ன? ஒன்பதே கால் மணிக்கு, நான் புறப்படறபோது கொண்டுவிட்டா. அதுக்குள்ளே
சமையல் பண்ண முடியாதா என்ன? நல்ல குளிர்ந்த மனசு! பழையது சாப்பிடற ஆசாரம் அத்துப் போயிடப் போறதேன்னு கவலைப்பட்டுண்டு போட்டா போல் இருக்கு. ஏன் குழந்தை, அவாத்துலே யாராவது பழையது சாப்பிடுவாளோ?''
""நான்தான் சாப்பிடுவேன்.''
""ம்...ஹ்ம்; சரி. இப்பப் பசிக்கிறதோ உனக்கு?''
""இல்லை.''
""ஏதாவது சாப்பிடும்மா.''
""சரி மாமி.''
""நீங்க ஒரு பொட்டலம் சாம்பார் சாதமும் ஒரு தயிர் சாதமும் வாங்கிண்டு வாங்கோளேன்.''
""நானே அழைச்சிண்டு போயிட்டு வரேனே.''
""ரொம்ப நல்லதாப் போச்சு. இந்தாருங்கோ.''
""என்னத்துக்குக் காசு? நான் கொடுக்கிறேன்.''
""வாண்டாம்னு நீங்க எப்படிச் சொல்ல முடியும்? நான்னா அவளை அழைச்சிண்டு வரேன்!''
தர்மசங்கடமாக இருந்தது. வாங்கிக்கொண்டேன். பையனை எழுப்பினேன். அவசரமாகக் கூட்டத்தில் புகுந்து இரண்டையும் இழுத்துச் சென்றேன்.
""இது யாருப்பா?''
""இந்தப் பொண்ணு மாயவரம் போயிட்டுக் கல்கத்தாவுக்குப் போறா. உன்னோட இவளும் சாப்பிடறதுக்கு வரா.''
இரண்டு அநாதைகளும் சாப்பிடும்போது எனக்கு இனம் தெரியாத இரக்கம் பிறந்தது. தாயை விட்டுப் பிரிந்த அநாதைகள்! ஆனால் எவ்வளவு வித்தியாசம்! ஓர் அநாதை இன்னும் இரண்டுமணி நேரத்தில் தாயின் மடியில் துள்ளப் போகிறது. இன்னொன்று தாயிடமிருந்து தூர தூரப் போய்க் கொண்டே இருக்கப் போகிறது.
""ஸ்ஸ்.. அப்பா, அப்பா!'' என்று பையன் வீரிட்டான். மிளகாய்!
""தண்ணியைக் குடி... ம்... ம்.''
அந்தப் பெண் உடனே எழுந்து போய்க் கவுண்டரிலிருந்து கை நிறையச் சர்க்கரையை அள்ளி அவளிடம் கொடுத்தது.
சற்றுக் கழித்து, ""அம்பி, தயிர்சாதம் கட்டி கட்டியாக இருக்கு. இரு பிசைந்து தரேன். அப்புறம் சாப்பிடலாம்'' என்று சாப்பிடுவதை விட்டுக் கையை அலம்பிவந்து ரெயில்வே சாதத்தை நசுக்கிப் பிசைந்து பக்குவப்படுத்திக் கொடுத்தது.
அவள் பிசைவதைப் பார்த்துப் பையன் என் பக்கம் திரும்பிப் புன்சிரிப்புச் சிரித்தான்.
""ஏண்டா சிரிக்கிறே?''
""அவ பிசைஞ்சு கொடுக்கிறாப்பா!'' அதற்கு மேல் அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை.
அவனுக்குக் கையலம்பி, வாய் துடைத்துவிட்டதும் அவள்தான்.
""இந்தா, ஜலம் குடி'' என்று அவனுக்குத் தண்ணீர் கொடுத்தாள்.
""வாண்டாம்.''
""ஜலம் குடிக்காட்டா ஜீரணமாகாது. இதைக் குடிச்சுடு.''
பாடாகப் படுத்துகிறவன், பதில் பேசாமல் வாங்கிக் குடித்துவிட்டான். ஏதோ வருஷக்கணக்கில் பழகிவிட்டதுபோல, அவனைக் கையைப் பிடித்து ஜாக்கிரதையாக அழைத்துக் கொண்டு வந்தது அந்தப் பெண். அவனும் அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்து கொண்டிருந்தான்.
""கல்கத்தாவுக்குப் போறேங்கிறியே. அவாளைத் தெரியுமோ?''
""தெரியாது மாமா. பெரிய வேலையிலே இருக்காராம் அவர். மூவாயிர ரூபாய் சம்பளமாம். குழந்தையை வச்சுக்கணுமாம். அதுக்குத்தான் என்னைக் கூப்பிட்டிருக்கா.''
எந்தக் குழந்தையையோ பார்த்துக்கொள்ள எங்கிருந்தோ ஒரு குழந்தை போகிறது. கண் காணாத தேசத்திற்கு ஒரு தாய் அந்தக் குழந்தையை அனுப்புகிறாள். அதுவும் ஒரு பாவாடையைச் சுருட்டிக் கொண்டு கிளம்பிவிட்டது.
""ரொம்ப சமர்த்தும்மா இந்தக் குழந்தை'' என்றேன் அம்மாளிடம்.
""நாதனில்லாட்டாச் சமர்த்துத் தானா வந்துடறது. ஒட்டி ஒட்டிண்டு பழகறது அது. கல்கத்தாவுக்குப் போகாட்டால் நானே இதை வச்சுண்டிருப்பேன். பாருங்களேன் பசிக்கிறது கிசிக்கிறதுன்னு நாமாக் கேட்கிற வரையில் வாயைத் திறந்ததோ? என்னவோ பகவான்தான்காப்பாத்தணும்.''
பையன் ஆரஞ்சை மறுபடியும் கையில் எடுத்து வைத்துக் கொண்டான்.
""ஏண்டா குழந்தை, உரிச்சுத் தரட்டுமாடா?'' என்றாள் அம்மாள்.
""வாண்டாம். ஊரிலே போய் அம்மாவை உரிச்சுக் குடுக்கச் சொல்லப் போறேன்.''
""நானும் அம்மாதாண்டா.''
பையன் சிரித்து மழுப்பிவிட்டான். ஒரு நிமிஷமாயிற்று. ""உனக்கென்ன வயசு?'' என்று திடீரென்று பையன் குஞ்சுவைப் பார்த்து ஒரு கேள்வி போட்டான்.
""பத்து.''
""பத்து வயசா? அப்பன்னா நீ வந்து அஞ்சாவது படிக்கிறியா!'' என்று விரலை எண்ணிக்கொண்டே கேட்டான்.
""இல்லை''
""ஏண்டா, பத்து வயசுன்னா அஞ்சாவது படிக்கணுமா?''
""ஆமாம்பா. எனக்கு ஆறு வயசு. ஒண்ணாவது படிக்கிறேன். ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து. அவ அஞ்சாவது.''
""அவ படிக்கலைடா.''
""நீ படிக்கலை?''
""வீட்டிலேயே வாசிக்கிறியா?''
""ம்ஹ்ம்''
""அவ கல்கத்தாவுக்குப் போறாடா. அதான் படிக்கலை.''
அங்க எதுக்குப் போறாளாம்?''
""வேலை பாக்கப் போறா?''
""போப்பா... ஏண்டி, நீ வேலை பார்க்கப் போறியா?''
""ஆமாம்.''
பையன் அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு நம்பிக்கை வரவில்லை. மீண்டும் கேட்டான்;
""உனக்கு சைக்கிள் விடத் தெரியுமா?''
அந்தப் பெண் வாய்விட்டுச் சிரித்தது. முதல் முதலில் அது சிரித்ததே அப்போதுதான்.
""எனக்கு எப்படி சைக்கிள் விடத் தெரியும்? தெரியாது.''
""அப்படீன்னா எப்படி வேலைக்குப் போவியாம்?''
""நடந்து போவேன்.''
மறுபடியும் அவளைப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தான் பையன். அவன் அப்பா  சைக்கிளில் வேலைக்குப் போகும்போது அவள் மட்டும் எப்படி நடந்து போக முடியும் என்று அவனுக்குப் புரியவில்லை. இரண்டு குழந்தைகளும் வயல்வெளிகளைப் பார்த்துக் கொண்டு வண்டியின் வேகத்தை ரஸித்துக்கொண்டிருந்தன.
""இந்தப் பொண்ணு யாரை நம்பி இப்படிப் போறது?... போகிற இடம் எப்படி இருக்கோ!'' என்று கேட்டேன்.
""இந்த ஜட்ஜுக்கு ஒன்றுவிட்ட மச்சினராம் அவர். மூவாயர ரூபாய் சம்பளம் வாங்கறாராம் ஏதோ கம்பெனியிலெ. நம்ம பக்கத்துக் குழந்தைன்னு விசுவாசமாத்தான் இருப்பா. என்னதான் இருக்கட்டுமே, நல்ல சாப்பாடு, துணிமணியெல்லாம் கொடுக்கட்டும்; எத்தனை பண்ணினாலும் அது பிறத்தியார் வீட்டுக் குழந்தை, வேலைக்கு வந்திருக்கிற குழந்தைங்கிற நினைவு போயிடுமா அவாளுக்கு? இதுதான் அவாளைத் தாயார் தோப்பனார்னு நெனச்சுக்கமுடியுமோ? ஆனா இது ஒட்டி ஒட்டிண்டு வித்தியாசமில்லாம பழகுறதைப் பாத்தா எங்கேயும் சமாளிச்சுண்டுடும் போல்தான் இருக்கு. இருந்தாலும் பெத்தவாகிட்ட இருக்கிற மாதிரி இருக்க முடியுமா, ஸ்வாமி? நீங்களே சொல்லுங்கோ.''
எனக்கு வயிற்றைக் கலக்கிற்று. நானே முகம் தெரியாத உற்றார் உறவினர் இல்லாத புது ஊருக்குப் போவதுபோல ஒரு சூன்யமும் பயமும் என்னைப் பற்றிக்கொண்டன.
""கடவுள் இதையுந்தான் காப்பாத்தப் போறான். இல்லாவிட்டால் மனிதர்களை நம்பியா பெத்தவர்கள் இதைவிட்டு விட்டிருக்கிறார்கள்?'' என்றேன்.
""கடவுள்தான் காப்பாத்தணும். வேறே என்ன சொல்லத் தெரியறது நமக்கு? சுத்திச் சுத்தி அதுக்குத்தான் வந்துடறோம். ஆனா, இப்படி அனுப்பும்படியான நிலைக்கு ஒரு குடும்பம் வந்துடுத்தே. அது எப்படி ஏற்பட்டதுன்னு யார் யோசிக்கிறா? அதுக்கு என்ன பரிகாரம் தேடறது? அந்த வாத்தியாரோட குழந்தைகளுக்கெல்லாம் தலைக்கு இத்தனைன்னு பள்ளிக்கூடம் வச்சிருக்கிறவன் படி போட்டிருந்தான்னா இப்படிக் கண்காணாத தேசத்துக்கு இது போகுமா?''
""அப்புறம் ஜட்ஜு வீட்டுக் குழந்தைகளை யாரு
பாத்துப்பா?''
""அதுவும் சரிதான்.''
""வீட்டுக்கு வீடு வாசல்படி. கொடுக்கிறவனும் வாத்தியார் மாதிரி ஆண்டியோ என்னமோ?'' என்றேன்.
ஒன்றும் புரியவில்லை.
குழந்தையைப் பார்த்து எல்லார் நெஞ்சமும் இளகிற்று. பக்கத்தில் தஞ்சாவூர், ஐயம்பேட்டை என்று நடுவில் ஏறி உட்கார்ந்து கொண்டவர்களுக்கு அரைகுறையாகக் கேட்டாலும் நெஞ்சு இளகிற்று. அம்மாள் உட்கார்ந்திருந்த பலகையின் கோடியில் உட்கார்ந்திருந்தவர்- ராவ்ஜி மாதிரி இருந்தது. உதட்டைக் கடித்து ஜன்னலுக்கு வெளியே தலையைத் திருப்பிக்கொண்டார். நெஞ்சைக் குமுறி வந்த வேதனையை அடக்கிக்கொண்டு தைரியசாலியாக அவர் பட்ட பாடு நன்றாகத் தெரிந்தது.
கும்பகோணம் வந்துவிட்டது.
""போயிட்டு வரேம்மா. குழந்தே, போயிட்டு வரட்டுமா?'' என்று ஒரு ரூபாயை அதன் கையில் வைத்தேன்.
""நீங்க எதுக்காகக் கொடுக்கறேள்?'' என்று அம்மாள் தடுத்தாள்.
""எனக்கும் பாத்யமுண்டு. நீங்களும் அழச்சிண்டுதானே போறேள்? இது வாத்தியார் குழந்தைதானே? உங்க குழந்தையில்லையே? நீங்க கொண்டாடற பாத்யம் எனக்கும் உண்டும்மா. நான் என்ன செய்யறது. எனக்குக் கொடுக்கணும் போல் இருக்கு. எனக்கும் இதுக்கு மேலே வக்கில்லை.''
""ஹ்ம்'' என்று இரட்டைநாடிச் சரீரத்தில் ஒரு பெருமூச்சு வந்தது. ""வாங்கிக்கோடிம்மா. உங்களுக்கு ஒரு குறைவும் வராது, ஸ்வாமி'' என்றாள் அம்மாள்.
""யப்பா... இதைக் கொடுத்துட்டு வரேம்பா'' என்று என் பையன் ஆரஞ்சைக் காண்பித்தான்.
""கொடேன்டா, கேட்பானேன்?''
""வாண்டாண்டா, கண்ணு. குழந்தை, பாவம். அம்மா உரிச்சுக் குடுக்கணும்னு சொல்லிண்டிருந்தது.''
""யப்பா... வாங்கிக்கச் சொல்லுப்பா'' என்று பையன் சிணுங்கினான்.
""வாங்கிக்கோம்மா.''
பெண் வாங்கிக்கொண்டது.
""ஸ்வாமி! நல்ல உத்தமமான பிள்ளையைப் பெத்திருக்கேள். வாடா கண்ணு. எனக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டுப் போ'' என்று அம்மாள் அழைத்தாள். பையன் கொடுத்துவிட்டு ஓடிவந்தான்.
என் மெய் சிலிர்த்தது. முகத்தைக் கூடியவரையில் யாரும் பார்க்காமல் அப்பால் திருப்பிக்கொண்டு கீழே இறங்கி அவனைத் தூக்கிக்கொண்டு நடந்தேன். அவனுக்கு நடக்கவா தெரியாது? எனக்கு என்னவோ வாரியணைத்துக் கொள்ளவேண்டும் என்று உடம்பு பறந்தது. தூக்கி எடுத்துத் தழுவிக்கொண்டே போனேன். உள்ளம் பொங்கி வழிந்தது. அன்பையே, சச்சிதானந்தத்தையே கட்டித் தழுவுகிற ஆனந்தம் அது
*******
கலைமகள்  - நவம்பர் 1953

நன்றி: தினமணி தீபாவளி மலர் 2010
flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

20 கருத்துகள்:

மதி on January 19, 2011 at 11:22 PM said...

very good story.. very natural emotions and conversations. all characters are impressively sketched

ராம்ஜி_யாஹூ on January 20, 2011 at 9:17 AM said...

பகிர்ந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள் ராம்.
தமிழ் புத்தாண்டு முதல் வாரம் (தைமாசம் முதல் வாரம்) தமிழ் தாய்க்கு திருவிழாவே நடத்துகிறீர்கள்

எண்ணங்கள் 13189034291840215795 on January 20, 2011 at 10:38 AM said...

அற்புதம்...

பொன் மாலை பொழுது on January 20, 2011 at 11:46 AM said...

தி.ஜா. ரா. வின் இந்த சிறுகதையை முன்பு நான் படித்ததில்லை. எப்படியோ தவறி விட்டுள்ளது.
படிப்பவர்களும்,தாங்களும் அந்த நிகழ்வில் ஒரு பாத்திரமாக மாறிவிடுவதே தி.ஜா.ரா. வின் வித்தை.
அவரின் பெருமை தமிழில் என்று வாழும்.
இங்கு பகர்ந்தமைக்கு நன்றி.

geethappriyan on January 20, 2011 at 12:14 PM said...

மிக்க நன்றி ,மிக அருமையான கதை,கண்ணீர் துளிர்த்தது.ஐம்பதுகளின் நடுத்தர மக்களின் யதார்த்த வாழ்வை சிறப்பாய் சொன்ன கதை,ஐம்பதுகளின் ரயில் யாத்திரைக்கதைகள் படித்திருந்தாலும் இப்படி பாதித்ததில்லை.

Paavai on January 20, 2011 at 2:59 PM said...

This story and Oru Pidi Soru by Jeyakandan always bring tears to my eyes, everytime I read them. But both are irresistable reads. Human emotions are described in quite a non judgmental manner by these two giants in all their stories that make them so special .. thanks for posting

Thangamani on January 20, 2011 at 3:29 PM said...

மனசு சோகத்தில உறைஞ்சுடுத்து!
கதையாப் பாக்கலை.
நிகழ்வுதான்! நெஞ்சைச் சுடறது.
பிஞ்சு உள்ளத்துக்குள்ளே
எத்தனை பொறுப்பு,தாய்மை உணர்வு,தன்னம்பிக்கை!
நம் மனசு பாரம் தாங்காமல் துக்கம் அழுத்தறது1
என்னத்த சொல்ல?

அன்புடன்,
தங்கமணி.

RAMESHKALYAN on January 20, 2011 at 3:51 PM said...

சிலிர்ப்பு கதைத் தலைப்பு மட்டும் அல்ல. முடிவு மட்டும் அல்ல. படித்தபின் வாசகனுக்கு ஏற்ப்படும் உணர்ச்சியும் அதுதான். We really miss Janakiraaman.

RAMESH KALYAN

செ.சரவணக்குமார் on January 20, 2011 at 3:57 PM said...

நட்சத்திர வாரத்தை அழகு செய்கிறீர்கள். பொதுவாகவே அழியாச்சுடர்கள் அழகு இப்போது மேலும் பொலிவுடன்.

நன்றி ராம். வாழ்த்துகள்.

அன்புடன் அருணா on January 20, 2011 at 5:45 PM said...

பூங்கொத்து!

கார்த்திக் பாலசுப்ரமணியன் on January 20, 2011 at 8:04 PM said...

உண்மையில் சிலிர்க்க வைத்தது இந்தக் கதை. அருமை அருமை. பகிர்வுக்கு நன்றி ராம்.

மாரிமுத்து on January 22, 2011 at 5:13 PM said...

அன்பை தழுவும் ஆனந்தம்!

Kaarthik on March 24, 2011 at 2:04 AM said...

சமீபத்தில் 'முத்துகள் பத்து' சிறுகதைத் தொகுப்பில் படித்தேன். மிகவும் பாதித்த சிறுகதைகளில் ஒன்று. தலைப்பு - வாசகர்களுக்கு ஏற்படும் உணர்வு.

R.S.KRISHNAMURTHY on September 15, 2011 at 8:10 PM said...

இப்படிக் கூட எழுத முடியுமா? ரயிலில் கூட ஏழை பணக்கார ரயிலாம்! என்னவோ பரிட்சைக்குப் படிப்பதைப் போல மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கும் நடையும் கருத்தும்... உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்!

rajkumar on October 24, 2011 at 9:35 PM said...

நன்றி ராம்

KKLOTUS on January 29, 2012 at 1:52 AM said...

நெஞ்சை யாரோ தொட்டதுபோல் ஓர் உணர்வு, அனுபவம், சிலிர்ப்பு. Every single line is a gem truly explaining and making you experience true human emotions. It is very hard not to cry when you read the last paragraph.

கார்த்திகை on March 26, 2013 at 3:06 PM said...

எத்தனையோ நாட்கள் ஆகி விட்டது, ஒரு சிறு கதைக்காக வழியும் கண்ணீரை மறைத்து, இதயம் விம்முவதை அடக்க முடியாமல் தவிப்பது. காலை அப்படி ஒரு பாக்யம் பெற்றேன்.

கார்த்திகை on March 26, 2013 at 3:08 PM said...

எத்தனையோ நாட்கள் ஆகி விட்டது, ஒரு சிறு கதைக்காக வழியும் கண்ணீரை மறைத்து, இதயம் விம்முவதை அடக்க முடியாமல் தவிப்பது. காலை அப்படி ஒரு பாக்யம் பெற்றேன்.

Unknown on December 7, 2014 at 9:32 AM said...

தி. ஜா. வின் எழுத்து நடை எப்போதுமே அருமை. எதார்த்தமான மனிதர்களையும் வாழ்வின் நிதர்சனத்தையும் சுமப்பதே அவற்றின் சிறப்பு. உயர்ந்த வார்த்தை பிரயோகம். உண்மையிலேயே சிலிர்த்தது....

Murugan Subramanian on July 10, 2015 at 7:02 AM said...

Thanks Ram

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்