திலீப்குமார் மெளனியைக் குறித்ததொரு ‘மெளனியுடன் கொஞ்சதூரம்’ என்றொரு விமர்சன, அறிமுக நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே ….
தமிழின் நவீன இலக்கியத்தோடு பரிச்சயம் கொள்ளவரும் எவரும் முதலில் மௌனியின் எழுத்துக்களையும், அதைச் சார்ந்து ‘மௌனி’ என்ற எழுத்தாளனைப்பற்றி நிலவி வரும் ஒரு விநோதமான படிமத்தையும் உணரத் தவறியிருக்கமாட்டார்கள். குறிப்பாக 60களுக்குப்பின் மௌனியின் எழுத்துக்களும் அவற்றின் சிறப்புகளும் நம்மிடையே வெகுவாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் மௌனியைப் பற்றி நாம் பொருட்படுத்தக்கூடிய தகுதி வாய்ந்த விரிவான விமர்சனங்கள் மிகச் சொற்பமானவையே வெளிவந்துள்ளன. இந்நிலையில் மௌனியைப் பற்றிய அபிப்பிராயங்களை நான் மிகுந்த தயக்கத்துடனேயே முன்வைக்கிறேன். இவற்றில் முழுமை, தெளிவு ஆகிய அம்சங்கள் சற்றுக் குறைவாகவும் இருக்கக்கூடும். என்னளவில், எத்தகைய இலக்கிய விசாரமும் ஒரு வகையில், இலக்கியங்களை முழுமையாக நாம் அனுபவிக்க மேற்கொள்ளப்படும் ‘பயிற்சி’யே. எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பையும், நான் முதன்மையாக இந்தப் பயிற்சியின் ஒரு அம்சமாகவே கருதுகின்றேன்.
மௌனியை நான் முதன் முதலாக 1974ஆம் ஆண்டு படிக்க நேர்ந்தது. தமிழில் முறையான பயிற்சியற்ற நான் நவீனத் தமிழிலக்கியத்தில் பரிச்சயம் கொள்ளத் துவங்கியிருந்த நாட்களவை. அச்சமயத்தில் மௌனியின் கதைகள் என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு, நான் அதை அப்போது அபிப்ராயங்களாக தொகுத்துக் கொள்ள இயலாமற்போயிருப்பினும் எனக்குத் துல்லியமாக நினைவிருக்கிறது. அது மௌனியின் தேர்ந்த வாசகர்கள் பலரின் அனுபவங்களையே ஒத்திருந்தது என்பதை நான் பின்னால் தெரிந்துகொண்டேன். அதைப்போல், மௌனியை அலட்சியப்படுத்த நேர்ந்த வாசகர்கள் அவரது எழுத்துக்களில் கண்ட குறைகளையும் நான் சந்திக்கவில்லை.
1974 -க்குப் பின் நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் மௌனியைப் படித்திருக்கிறேன். ஒரு சந்தர்ப்பத்தில், மௌனியுடனே தங்கியிருந்து, அவரது எல்லாக் கதைகளையும் நானும் அவரும் சேர்ந்து வாசித்து அவற்றை விவாதித்த அனுபவமும் எனக்குக் கிட்டியிருக்கிறது. ஒவ்வொரு சமயமும் என் வளர்ச்சிக்கேற்ப மௌனியின் எழுத்துக்களின் பல சிறப்புகளையும், குறைகளையும் நான் கண்டிருக்கிறேன். இப் புத்தகத்திற்காக அவரது கதைகளை நான் மீண்டும் வாசித்த போதும் இப்படியே உணர்ந்தேன்.
மௌனியைப் பற்றி பல்வேறு விதமான அபிப்பிராயங்கள் நிலவுவதை நாம் காண்கிறோம். அவரை வெகுவாகக் கொண்டாடவும், கடுமையாக தூஷிக்கவும் சாரிகள் உள்ளனர். ’மௌனியின் எழுத்துக்கள் புரியவில்லை’; ‘அவர் சமூகப் பார்வையற்றவர்’ என்றெல்லாம் அவர்மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல், அவரைப் பாராட்டுபவர்களும் ரொம்பவும் தீவிரமான சொற்களைக் கொண்டு பாராட்டுகின்றனர். இத்தகைய அபிப்பிராயங்களில் பாரபட்சங்களை நாம் ஒதுக்கியே விடவேண்டும் என்று தோன்றுகிறது. ஏனெனில் இவை அவரவர் தம்தம் அறிவுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப இலக்கியத்தைப் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும் வரித்துக்கொண்ட தீவிரமான எண்ணங்களைச் சார்ந்தவை. இவற்ரை நாம் முழுதாக ஏற்கவேண்டியதில்லை.
என்னைப் பொறுத்தவரையில், ஒரு தேர்ந்த வாசகன் இலக்கியத்தை அணுகும்போது பரபரப்புக்கோ, புல்லரிப்புக்கோ ஆளாகமாட்டான் என்றே நினைக்கிறேன். மாறாக இலக்கியத்தில் வரையரைகளையும், வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான இடைவெளியையும் உணர்ந்தவனாக அவர் இருப்பான். நுண்ணுணர்வு கொண்ட ஒரு வாசகனால், ஒரு குறிப்பிட்ட இலக்கியப் படைப்பில், சமூகப் பார்வையின் இருப்பையோ, இல்லாமையையோ, அழகியல் நுட்பத்தின் உயர்வையோ தாழ்வையோ நிச்சயமாக உணர்ந்து கொள்ள முடியும். மேலும் இக்கூறுகளின் மிகுதியோ குறைவோ அவனை விசேஷமாகப் பாதிப்பதில்லை என்றே நினைக்கிறேன். என்னதான் படப்பாளியின் இமையருகே சென்று பார்த்தாலும் தான் படைப்பாளியின் கோணத்தில் உலகைப் பார்க்கவில்லை என்பதைத் தெரிந்தவனாக அவர் இருப்பான். அதேபோல், படைப்பாளியின் கோணத்திலிருந்து காட்டப்படும் உலகமே சர்வ நிச்சயமானது என்று ஆவேசம் கொண்டோ, சுருங்கியோ விடமாட்டான். அவர் ஒவ்வொரு படைப்பாளிக்கும் (அப்படப்பாளியின்) அவனது கலமட்டத்திற்கும் ஏற்பத் தன்னை மாற்றியமைத்துக் கொண்டே வாசிப்பதில் ஆழ்கிறான். இன்று நம்மிடையே அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கந்தசாமி, நகுலன், பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன் போன்ற பல எழுத்தாளர்கள் இயங்குவதைப் பார்க்கிறோம். இவர்கள் ஒவ்வொருவரின் படைப்புகளை நாம் அணுகும்போதும் வெவ்வேறு விதமாகத்தான் அணுக வேண்டியுள்ளது. நாம் அவ்வாறே அணுகிக் கொண்டிருக்கிறோம். வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் பலவிதமான எதிரெதிர் பரிமாணங்களைக் காட்டும் எழுத்தாளர்களை வெகுஇயல்பாகவே உலகெங்கும் வாசகர்கள் ஏற்று வந்திருக்கிறார்கள். ஜி. நாகராஜன் போன்ற ஒரு எழுத்தாளரையும், அசோகமித்திரன் போன்ற ஒரு எழுத்தாளரையும் நம்மால் சிரமமின்றி ஏற்றுக்கொள்ளவும், அவர்களுக்கு மதிப்பளிக்கவும் முடிகிறது. இதேபோல், ஒரே தத்துவ சார்புள்ள இரு எழுத்தாளர்களிடையும் கணிசமான வித்தியாசங்கள் இருப்பதை நாம் அறிவோம். மார்க்ஸியவாதிகள் மதிக்கும் இரு எழுத்தாளர்களான ஆண்டன் செக்காவ், மார்க்ஸிம் கோர்க்கி ஆகிய இருவரின் எழுத்துக்களில் காணப்படும் வித்தியாசங்களும் அழகுகளும் ரொம்பவும் நுட்பமானவை. இவற்றையும் நாம் இயல்பாகவே ஏற்றுக்கொள்கிறோம்.
தத்துவ சார்பில் விலகியுள்ள இரு எழுத்தாளர்களின் படைப்புகளையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது. உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் அந்தஸ்தும், மதிப்பும், அவர்கள் ஒரே விதமான தத்துவ சார்புகளைக் கொண்டிருந்தவர்கள் என்பதற்காகத்தான் என்று நம்மால் கொள்ளமுடியுமா? உலக இலக்கியத்தின் சிறப்பான தொகுதியை நாம் பார்க்க நேர்ந்தால், கால, தேச, எல்லைகளையும், தத்துவச் சார்புகளையும் மீறி அது நம்மை ஈர்த்துக் கொள்வதைக் காண்போம். உதாரணமாக - மேற்கத்திய மார்க்ஸிஸ்டுகள் பலராலும், எக்ஸிண்டன்ஷியலிஸவாதிகளாலும் மிகவும் மதிக்கப் பெற்ற பிரஞ்சு எழுத்தாளரான சாச்த் - எக்சூ பெரியை சமீபத்தில் ஒரு ரஷிய விமரிசகர் உலகில் தலைசிறந்த இலக்கிய மேதைகளில் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் போன்ற பல உதாரணங்களை நம்மால் பார்க்கமுடியும்.
இவ்வகையில் பார்க்கும்போது, பல்வேறு தத்துவச் சார்புடைய பல்வேறு எழுத்தாளர்களிடையே - இவர்களுக்கிடையே காணப்படும் வேற்றுமைகளையும் மீறி - ஒற்றுமைக்கான ஏதோவொரு அம்சம் இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த ஒற்றுமைக்கான அம்சம் என்ன? கொகோலுக்கும், எக்சூபெரிக்கும் இடையேயுள்ள ஒற்றுமை என்ன? தஸ்தா வொஸ்கி, கோர்க்கி, டால்ஸ்டாய், செக்காவ், காஃப்கா, காம்யு, ஜேக்லணன், மார்க்வெஸ் போன்ற பலரிடமும் காணக்கிடைக்கும் ஒரே விஷயம், ஒரே வசீகரம்தான் என்ன? இந்த எழுத்தாளர்கள் அனைவரும் வாழ்க்கையின் மீது தீவிரமான அக்கறை கொண்டிருந்தார்கள் என்பது மட்டும்தானா? இல்லை என்றே தோன்றுகிறது. இதையும் மீறிய ‘ஏதோவொன்று’ இருக்கவேண்டும். வாழ்க்கையின் மீது தீவிரமான அக்கறை என்பதைத் தவிர இவர்களது இலக்கியச் செயல்பாடுகளுக்குப் பின்னிருந்து இயக்கிய ஒரு ‘அற இயல்பு’ என்ற விஷயமும் இருந்திருக்கவேண்டும் என்று நான் கொள்கிறேன். இந்த ‘அற இயல்பு ’ தான் இவர்களுக்கிடையேயான ஒற்றுமைக்கான முதன்மையான அம்சம். தன்மையிலும் தத்துவச் சார்புகளிலும் மிகவும் மாறுபட்ட பல எழுத்தாளர்களிடையே காணப்படும் ஒற்றுமை இந்த ‘அற இயல்பு’ தான். மேலும் இந்த ‘அற இயல்பு’ தன்னளவில் தன்மையற்றதே என்றும் நான் கூறுவேன். இது ஒவ்வொரு படைப்பாளியிடமும் அவனது கலை இயபுக்கும், திறமைக்கும், அவன் செயல்பட்ட கால, சமூக, அரசியல், இலக்கிய பின்னணிக்கும் ஏற்ப அவனுள் விகசிக்கிறது. எழுத்தாளர்கள் பலராகவும் பல பார்வை கொண்டவர்களாகவும், வாழ்க்கையின் ஒரு சில பரிமாணங்களிலேயே கவனம் செலுத்தியவர்களாக இருந்திருப்பினும், இந்த ‘அற இயல்பை’ இந்த ஒற்றுமைக்கான அம்சத்தை நாம் எல்லோரிடமும் காண்கிறோம். ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களில், அவன் காட்டும் வாழ்க்கைப் பரிமாணங்களில் அவனது சார்பு நிலைகளில் ஒரு வாசகனுக்கு ஏற்படும் ஆவல் உண்மையில் நான் மேலே சொன்ன ‘அற இயல்பின்’ மீது ஏற்படும் மதிப்புதான். இந்த அற இயபு அதுவே ஒரு பண்பு எனவும், அது சார்ந்திருக்கும் ஏனைய விஷயங்கள் இரண்டாம் பட்சமானவையே என்றும் நான் கொள்கிறேன். இவ்வகையில் ஒரு மார்க்ஸிய எழுத்தாளன் முதன்மையாக மார்க்ஸியவாதியல்ல. அதேபோல், ஒரு சோஷலிஸ எழுத்தாளன் முதன்மையில் ஒரு சோஷலிஸவாதியல்ல. இப்படி அணுகுவதன் மூலமே, இலக்கிய வரலாற்றின் பல்வேறு போக்குகளையும், அதில் செல்வாக்கு செலுத்திய பல்வேரு தத்துவ நிலைகளையும் என்னால் சரியாக விளங்கிக்கொள்ள இயலும்.. இப்படிப் பார்ப்பதன் மூலமே ஒரு மார்க்ஸிய எழுத்தாளனும், அப்படியில்லாத ஒரு எழுத்தாளனும் என்னை ஒரேயளவில் வசீகரிப்பதை என்னால் சரியாகப் புரிந்து கொள்ளமுடியும்
மௌனியின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது, மேலே சொன்ன வகையிலேதான் அவற்றை கணிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. மௌனி ரொம்பவும் குறுகிய ஒரு வட்டத்திற்கான எழுத்தாளராகச் சுருங்கியிருப்பினும், அவரிடமும் நான் மேற்குறித்த ‘அற இயல்பின்’ உந்துதலைக் காண்கிறேன். மேலெழுந்தவாரியான தத்துவச் சார்புகளையும், மேலெழுந்தவாரியான அழகியல் உணர்வுகளையும் தாண்டி வந்து நாம் பார்க்கும் பொழுதே மௌனிக்குரிய மதிப்பை நம்மால் அளிக்கமுடியும்.
மெளனியுடன் கொஞ்ச தூரம் : திலீப்குமார் : வானதி பதிப்பகம்
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
2 கருத்துகள்:
பகிர்ந்தமைக்கு நன்றிகள் ராம்,
தமிழர் திருநாள் (தமிழ்ப் புத்தாண்டு) வாரத்தில் தாங்கள் தமிழ் வலைப் பதிவு நாயகராக இருப்பது, மிகவும் பொருத்தமே/மகிழ்வே
ஒரு தேர்ந்த வாசகன் இலக்கியத்தை அணுகும்போது பரபரப்புக்கோ, புல்லரிப்புக்கோ ஆளாகமாட்டான் என்றே நினைக்கிறேன். மாறாக இலக்கியத்தில் வரையரைகளையும், வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான இடைவெளியையும் உணர்ந்தவனாக அவர் இருப்பான். நுண்ணுணர்வு கொண்ட ஒரு வாசகனால், ஒரு குறிப்பிட்ட இலக்கியப் படைப்பில், சமூகப் பார்வையின் இருப்பையோ, இல்லாமையையோ, அழகியல் நுட்பத்தின் உயர்வையோ தாழ்வையோ நிச்சயமாக உணர்ந்து கொள்ள முடியும்.
---------------------------------------------
கட்டுஅரைஅயி மிகத் தாமதாமக்த்தான் பார்க்க முடிந்தது .
கட்டுரைக்கு மிக நன்றி
திரு திலீப்குமார் அவர்களுக்குப் பாராட்டுக்கள்
------------------------------------------
நந்தினி மருதம், நியூயார்க், 2012-சூன் 25
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.