Jan 29, 2011

ப. சிங்காரம்: அடங்க மறுக்கும் நினைவு – எஸ்.ரா

ப.சிங்காரம் என்ற பெயர் புது யுகம் பிறக்கிறது இதழில் சி. மோகன் எழுதிய நாவல் பற்றிய கட்டுரையில்தான் எனக்கு முதன் முதலாக அறிமுகமானது. மோகன் தமிழின் சிறந்த நாவலாசிரியர் வரி சையில் சிங்காரத்திற்குத் தனியி டம் அளித்திருந்தார். அந்த நாட் களில் ஜானகிராமன், ஜெயகாந் தன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி என்று தேடித்தேடி வாசித்துக்கொண்டிருந்த எனக்கு சிங்காரம் யார் என்ன எழுதியிருக் கிறார் என்ற குsingaram---26ழப்பம் உண்டா னது. எனது சேமிப்பிலிருந்த சிறு பத்திரிகைகளைப் புரட்டிப்புரட் டிப் பார்த்தபோது சிங்காரத்தைப் பற்றிய சிறுகுறிப்பு கூடத் தென்பட வில்லை.

மறுநாளே பொதுநூலகத்திற்குச் சென்று சிங்காரத்தின் நாவலைத் தேடத் துவங்கினேன். இரண்டு  நாட்கள் தேடிச்சலித்த போதும் நாவலைக் கண்டுபிடிக்க முடிய வில்லை. திடீரென ஒரு சந்தேகம் வந்தது. நூலகங்களில் உள்ள பொருள்பகுப்பு முறை மிக விசித் திரமானது. அங்கே ஜானகி ராம னின் சக்தி வைத்தியம் சிறுகதைத் தொகுப்பு சித்த வைத்திய பிரிவில் வைக்கப்பட்டிருந்தது. அது போலவே சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை  இயற்கைநூல் பிரிவிலிருந்தது.

இப்படியான வகைப்பாட்டியிய லில் சிங்காரம் மாட்டிக்கொண்டி ருக்கக்கூடும் என்ற யோசனை யோடு கடல் தொடர்பாகப் புத்த கங்கள் உள்ள விஞ்ஞானப் பிரி வில் தேடியபோது அதில் கட லுக்கு அப்பால் என்ற சிங்காரத் தின் நாவலிருந்தது. அந்தப் புத்த கத்தை அதுவரை மொத்தமே நான்கு பேர்தான் படித்திருக் கிறார்கள் என்பது முன்பக்க நூல கப் பதிவில் தெரிந்தது. உடனே வீட்டிற்கு எடுத்துச் சென்று மாலைக்குள்ளாகவே படித்து முடித்தேன்.

கதை சொல்லும் முறையும், பின்புலமும் தமிழ் நாவலைத்தான் படிக்கிறேனா என்று வியப்பூட்டும் படியாக இருந்தன. குறிப்பாக பர் மீய தமிழ்வாழ்வும் யுத்தகாலப் பின்புலமும் நாவலுக்குப் புதிய தொரு தளத்தினை உருவாக்கியிருந் தது. அதே சமயம் நாவலின் ஊடா கவே வெளிப்படும் பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயமும், பிரயோக மும் இதை எழுதியவர் தேர்ந்த இலக்கியப் பரிச்சயம் உள்ளவர் என்பதையும் புரிந்து கொள்ளச் செய்தது.

அராபியக் கதைகளில் வரும் பாக்தாத்தைவிடவும் மதுரை மாநகரம் அதிகக் கதைகள் கொண் டது என்று எனக்கு எப்போதுமே ஒரு எண்ணமுண்டு. குறிப்பாக மதுரையின் சிறுசந்துகள், தினசரி வாழ்வு சார்ந்த மனிதர்கள். நகரின் புதிரான சரித்திரம் மற்றும் மதுரை யின் மைய வாழ்வைச் சுற்றி நடை பெறும் நூற்றுக்கணக்கான நிகழ்வு களின் பின்னால் அறியப்படாத ஓராயிரம் கதைகள் புதைந்திருக் கின்றன. மதுரையின் இரவும் பக லும் இன்று வரை முழுமையாகக் கதையுலகில் பதிவு செய்யப்படவே யில்லை.

சிங்காரம் காட்டும் மதுரையும் அதன் மனிதர்களும் மிக நெருக்க மானவர்களாகயிருந்தார்கள். ஒரு வேளை சிங்காரத்தைப் பிடித்திருப் பதற்கான காரணமாக அதுகூட இருந்திருக்கக்கூடும். புத்தகத்தில் சிங்காரத்தைப் பற்றிய சிறுகுறிப்பு கூடக் கிடையாது. கலைமகள் பரி சுப் போட்டியில் தேர்வு பெற்றது என்பதைத் தவிர வேறு தகவல்கள் இல்லை.

அன்றிரவு கோணங்கியைச் சந்திப்பதற்காகக் கோவில்பட்டியி லிருந்த அவரது வீட்டிற்குச் சென் றேன். ரயில்வே தண்டவாளத்தை யட்டியது கோணங்கியின் வீடு. இரவு பூச்சிகளின் சப்தமும் மின் மினி வெளிச்சமுமாக உள்ள அந்த ரயில்பாதை நினைவில் என்றும் ஒளிர்ந்துகொண்டிருக்கக் கூடியது. நள்ளிரவில் செல்லும் கூட்ஸ் ரயில் கள் நமது பேச்சை நிறுத்தியபடியே கடந்து செல்வதை வேடிக்கை பார்ப்பது தனி அனுபவம்.

அன்று மழை பெய்து வெறித்த இரவு. திட்டுத் திட்டாக இருள் பதுங்கியிருந்தது. கோணங்கி வீட் டின் மொட்டைமாடிச் சுவரில் அமர்ந்தபடியே  சிங்காரத்தின் எழுத்து பற்றிப் பேசத் துவங்கிய தும் அவர் ரொம்பவும் சிலாகித் துச் சொல்லத் துவங்கினார். கோணங்கிக்கு ஐம்பது ஆண்டு களுக்கு முற்பட்ட மதுரையைப் பற்றிய  விவரிப்பு மற்றும் ஐஎன்ஏ நிகழ்வுகள் அவரை வசீகரித் திருந்தது.

நான் அதன் சில மாதங்களுக்கு முன்புதான் எரிக் மரியா ரிமார்க் கின் All Quites in the western front நாவலை வாசித்திருந்தேன். அது தந்த நெருக்கம் மனதில் அப்ப டியே நின்றிருந்தது. அந்த நாவலை யும் சிங்காரத்தின் எழுத்தும் பற்றிப் பேசத் துவங்கிய போது கோணங்கி சிங்காரத்தினை மறுநாள் பார்க்க லாமா என்று கேட்டார். சிங்காரம் எங்கே வசிக்கிறார் என்ற போது அவர் மதுரையில் இருப்பதாகவும், தான் இரண்டு முறை அவரைச் சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார். மறுநாள் ஏழு மணிக்கே  மதுரைக் குப் புறப்படலாம் என்று முடிவு செய்தோம்

அதுவே தாமதம் என்று உள் மனது சொன்னது. காரணம் யாரா வது ஒரு எழுத்தாளரைப் படித்து முடித்தவுடன் அவரைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் எந்த நள்ளிரவு என்பதைப் பற்றிக் கூடப் பொருட்படுத்தாமல் நானும் கோணங்கியும் உடனே கிளம்பி விடுவோம்.

சில எழுத்தாளர்களின் வீட்டில் அதிகாலை வாசற்கதவு திறக்கும் போது எதிரில் நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். சில நேரம் எழுத்தாளரே இல்லாத போதும்கூட அவரது வீட்டில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டு வீட்டு விருந்தாளிபோலச் சாப் பிட்டு தூங்கி எழுந்து வந்ததும் நடந்தேறியிருக்கிறது.

காலை மதுரையில் போய் இறங்கியதும் கோணங்கி நேரடி யாக அன்னம் புத்தகக்கடைக்கு அழைத்து சென்றார். அந்த நாட் களில் மதுரையின் இலக்கிய மைய மாக இருந்தது அன்னம் புத்தகக் கடை. அநேகமாக மதுரைக்குள் வரும் எழுத்தாளர்கள் தவறாமல் அங்கே வருவதைக் காணமுடியும். அத்துடன் நண்பர்கள் சந்திப்பிற் கும் உரையாடலுக்குமான கலாச் சாரவெளியாக உருவாகியிருந்தது. மதுரைக்கு வந்து இறங்கியதி லிருந்து சிங்காரத்தைச் சந்திப் பதைப் பற்றிக் கோணங்கி எதுவும் பேசவேயில்லை. பழைய புத்தகக் கடைகளுக்குச் சென்று சுற்றிவிட்டு மீனாட்சி மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு வெயிலேற நடந்து திரிந்த போதும் சிங்காரம் எங்கேயிருக் கிறார் என்று சொல்லவேயில்லை.

முடிவில் நான்கு மணிக்கு நேதாஜி சாலையிலிருந்த ஒய்எம்சி ஏவின் தங்குமிடத்திற்கு அழைத் துக்கொண்டு போனார். சிங்காரம் அங்கேதானிருக்கிறார் என்ற தகவ லுடன் படியேறும்போது மனதில் இந்திய தேசியத்தைச் சேர்ந்த ராணுவ வீரரைப் போன்ற தோற் றத்தில் சிங்காரம் உருவானார்.

சிங்காரத்தின் அறைக்கதவு சாத் தப்பட்டிருந்தது. கீழே உள்ள ஆவின் கடை அருகே நின்று கொண்டிருப்பார் என்று சொல் லியபடியே அவரது தினப்படி அலுவல் அறிந்தவரைப் போல விடுவிடுவெனக் கீழே இறங்கினார் கோணங்கி. இருவரும் வீதிக்கு வந்தபோது நகைக்கடை வீதியிலி ருந்து தலைகவிழ்ந்தபடியே நடந்து வந்து கொண்டிருந்த பெரியவரி டம் கோணங்கி சென்று ஏதோ பேசியதும் அவர் தலையசைத்த படியே உடன் வந்தார்.

அவர்தான் ப.சிங்காரம் என் பதை மனது ஏற்றுக்கொள்ள மறுத் தது. சிங்காரம் அருகில் வந்ததும் சிரிப்பான தொனியில் உங்களைப் பார்க்க வந்திருக்கான் என்று கோணங்கி சொன்னார். தன்னைப் பார்ப்பதற்காக எதற்காக வந்திருக் கிறார்கள் என்ற பாவனை அவரது முகத்திலே இருந்தது. எந்தூரு என்று சுத்தமான மதுரைத் தமிழில் சிங்காரம் கேட்டார். பதில் சொன் னதும் தலையாட்டிக் கொண்டார்.

சிங்காரம் முகத்தில் வெளிப் படாத சிரிப்பு ஒன்று ஒளிந்திருப் பதை அறியமுடிந்தது. அறுபது வயதைத் தொட்ட தோற்றம். வழுக் கையேறிய நெற்றியும் பெரிய காது களும்  தடித்த புருவங்களும் மீசை யில்லாத முகமும் கொண்டிருந் தார். காது ரோமங்கள் நீண்டிருந் தன. ஒற்றைத்தட்டு வேஷ்டியும் கதர்சட்டையும் அணிந்திருந்தார். தோற்றத்தை வைத்துப் பார்த்தால் மதுரையில் பலசரக்குக் கடை வைத்திருக்கும் அண்ணாச்சிகளில் ஒருவரைப் போன்ற ஜாடையே இருந்தது.

தனது சட்டைப் பையிலிருந்த சாவியால் அறைக்கதவைத் திறந்து உள்ளே அழைத்து அங்கிருந்த கட் டிலில் உட்காரும்படியாகச் சொன் னார். கோணங்கி முன்னதாகவே அறிமுகமாகியிருந்த காரணத்தால் சற்றே உரிமையுடன் சிங்காரத்து டன் பேசிக்கொண்டிருந்தார். என்ன பேசுவது என்று புரியமால் சில நிமிசங்கள் அமைதியாக இருந் தேன். உங்க நாவலைப் படிச்சிருக் கான். அதைப் பத்தி உங்ககிட்டே பேசணும்னு சொன்னான். காலேஜ்ல இங்கிலீஷ் லிட்ரேசர் படிக்கிறான் என்று என்னை அறி முகம் செய்து வைத்தார்.

சிங்காரம் தன் நாவலைப் பற்றிய கருத்தை அறிய விருப்ப மற்றவரைப் போல உங்க ஊரு மல்லாங்கிணர்ல மஞ்சள் காமா லைக்கு மருந்து கட்டுற ஒரு பொம் பளை இருக்குல்லே என்று விசா ரிக்கத் துவங்கினார். ஆமாம் என்ற போது தனக்குத் தெரிந்தவரின் மகளுக்குக் காமலைக்குப் பச்சிலை கட்டுவதற்காக அங்கே ஒரு முறை வந்திருப்பதாகச் சொன்னார். அவ ரது பேச்சு காமாலை, காலரா என்று முன்நாட்களின் தீராத வியாதிகளைப் பற்றியதாக நீண் டது. ஆனால் பேச்சு வளராமல் சில நிமிசத்தில் தானே அறுபட்டு நின்றது.

சிங்காரம் திருமணம் செய்து கொள்ளாமல் தனியே வசிக்கிறார், அதுவும் இதுபோன்ற ஒற்றையறை யில் மாதவாடகைக்குத் தங்கிக் கொண்டு ஹோட்டலில் சாப்பிட் டுக்கொண்டு மௌனமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று முன்னதாகவே கோணங்கி சொல்லியிருந்ததை மெய்யாக்கு வது போன்றிருந்தது அவரது அறை.

அந்த அறையில் இரண்டு ரங் கூன் பெட்டிகள் இருந்தன, மர மேஜையின் மீது வாடிப்போன வாழைப்பழம் ஒன்றிருந்தது. சிகரெட்டு அட்டை ஒன்றில் ஏதோ சில கணக்குகள் குறித்து வைக்கபட்டிருந்தன. ஜன்னல் அருகே ஈர வேஷ்டி ஒன்று காய்ந்து கொண்டிருந்தது. அறையின் மூலையில் சிவப்பு நிற மண் பானையன்று காணப்பட்டது. கட்டிலின் அருகில் பழைய தினந் தந்தி பேப்பர்கள் தூசியடைந்து கிடந்தன.

அறைக் கதவைக்கூடப் பாதியே திறந்து அவர் பயன்படுத்தி வரு கிறார் என்பது திறக்கப்படாத மறு பாதியில் படிந்திருந்த நூலம்படை யிலிருந்து தெரிந்தது. மின்சார மில்லாவிட்டால் அந்த அறையில் ஒரு நிமிசம்கூட இருக்க முடியாது என்பதை அங்கிருந்த வெக்கை யால் உணர முடிந்தது. சிங்காரம் தன் சட்டையைக் கழட்டிக் கட்டி லின் மீது போட்டுவிட்டு வெறும் மேலோடு உட்கார்ந்து கொண் டார்.

கோணங்கி வேடிக்கையாக இந்தப் பெட்டிக்குள் ரங்கூனை அடைத்துக்கொண்டு வந்துவிட்டீர் கள் போலிருக்கிறது என்றபடியே அதைத் திறந்து பார்க்கலாமா என்று கேட்டார். சிங்காரம் அதுல என்ன இருக்கு சும்மா பாருங்க என்றார்.

கோணங்கி பெட்டியைத் திறந்த போது உள்ளே பழைய உடுப்பு களும், ஓடாத அலாரம் கடிகாரம் ஒன்றும் ஒரு பிளாஸ்டிக் கவரும் மட்டுமேயிருந்தது. அவர் ஒரு எழுத்தாளர் என்று அங்கிருந்தவர் களுக்குத் தெரியுமா என்று கோணங்கி கேட்டதும் அதெல் லாம் ஒரு ஆளுக்கும் தெரியாது. அப்படி நான் சொல்றதும் இல்லை. சொல்ற மாதிரி என்ன எழுதியிருக்கேன் என்று கேட்டார்.

பேச்சு ஐம்பது வருடத்திற்கு முந்திய மதுரையைப் பற்றியதாகத் திரும்பியது. அதிகம் மின்சார வசதி இல்லாத மதுரையின் தெருக் களும் அருகாமை கிராமங்களில் இருந்து மதுரைக்கு வந்துபோகும் மக்களின் பழக்க வழக்கங்களைப் பற்றியும் சிங்காரம் சொல்லிக் கொண்டிருந்தார்.

கோணங்கி, இரவில் துணிகளை ஏலம் போடுகின்றவர்கள் மதுரை யின் அந்த நாட்களில் வருவார்கள் தானே என்று கேட்டார். ஆர்வத் துடன் சிங்காரம் அந்த மதுரையே வேற. அப்போ மேலூரில் இருந்து நாங்க மதுரைக்கு வந்து இங்கேயே சுத்துவோம். கோவிலை விட்டா வேற என்ன இருக்கு மதுரையில். ஏலத்தில போர்வை துண்டு எல் லாம் நானே எடுத்திருக்கிறேன் என்றார்.

என்னால் அதன்பிறகும் பொறு மையாக இருக்க இயலாது என் பதைப் போல கடலுக்கு அப்பால் நாவல் மிகவும் நன்றாக இருக்கிறது. ஏதோவொரு விதத்தில்  அது எரிக் மரியா ரிமார்க்கின் நாவலைப் போன்றிருக்கிறது என்று சொன் னேன். அவர் சிரித்துக்கொண்டே தனக்கு அதிக வாசிப்பு அனுபவம் கிடையாது. நாவலில் உள்ள பெரும்பான்மை விஷயங்கள் தனது சொந்த வாழ்க்கை, சில சம்பவங்கள் தான் நேரில் கண்டது என்றார்.

கடலுக்கு அப்பால் முழுமை பெறாத நாவல் போன்றிருக்கின் றது என்றதும் ஒரு அளவுக்குத் தான் சொல்லியிருக்கிறேன். எதை எழுதாம விடணும்னு தெரிஞ்சி கிடுறது தானே எழுத்தில முக்கியம் என்றார். சிங்காரம் எழுத்தாளர் என்பது அந்த நிமிசத்தில் உறுதியா னது. தனது நாவல் உரிய முறை யில் வெளியிடப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் அவரது பேச்சில் வெளிப்பட்டது.

நாவல் வெளிவந்து பலவரு டங்களுக்குப் பிறகு தந்தி பேப்ப ரில் மட்டும் சிறிய விமர்சனம் வந்துள்ளதாகவும் வேறு எதிலும் யாரும் கண்டு கொள்ளவே யில்லை என்றார். அத்துடன் இந்த நாவல் எழுதப்பட்டு பல மாத காலம் பெட்டி யிலே சீந்துவாரற்றுக் கிடந்தது. யாரும் அதை வெளியிட முன்வர வில்லை. தனக்கும் அதை என்ன செய்வது என்று தெரியவில்லை.

கடைசியில் கலை மகள் நாவல் போட்டி யின் தேர்வுக்கு அனுப்பி வைத்தேன். புத்தகமாக நாவல் வெளியிடப்பட்டபோது சில வாசகங்கள். பத்தி கள் நீக்கப்பட்டிருக் கின்றன. இப்போகூட யாரோ மோகன்னு மதுரைக்காரர் ஏதோ எழுதினதுக்கு அப்புறம் தான் உங்களை மாதிரி ஒன் றிரண்டு பேர் பார்க்க வருகிறார் கள் என்று சொன்னார்.

எது உங்களை இப்படியரு நாவலை எழுத வைத்தது என்று கேட்டவுடன் சிங்காரம் தனக்கு ஹெமிங்வேயின் நாவல்கள் பிடிக் கும் என்றும் அதைத் தான்  தொடர்ந்து வாசித்திருப்பதாகச் சொன்னார். வியப்பாக இருந்தது. ஹெமிங்வே எனது ஆதர்ச எழுத் தாளர்களில் ஒருவர், உடனே நான் அவரிடம் ஹெமிங்வேயைப் பற் றிப் பேசத் துவங்கினேன். அவரது எந்த நாவல் உங்களுக்கு ரொம்ப வும் பிடித்தது என்றவுடன் அவர் பேர்வெல் டு ஆர்ம்ஸ் என்று சொன்னார்.

சில வருடங்களுக்குப் பிறகு சிங்காரத்தின் நாவல்களை ஒருசேர வாசித்தபோது ஹெமிங்வேயின் நுட்பமான பாதிப்பு அவரிடமிருப் பதை உணர்ந்து கொள்ள முடிந் தது. குறிப்பாக சலூன்களில் சென்று நண்பர்கள் சந்திப்பது. மது அருந்திவிட்டு உணர்ச்சிபூர்வ மாக உரையாடுவது, பேச்சின் இடையில் பழைய சம்பவங்கள் குறுக்கிடுவது போன்றவற்றில் ஹெமிங்வே சாயல் தெளிவாகவே தெரிந்தது.

ஹெமிங்வேயை எங்கே படித் தீர்கள் என்று கேட்டேன். தான் ஒரு கடைப்பையனாக வேலை செய்வதற்காக பர்மா போனதாக வும் அதற்காக நாகப்பட்டினத்திலி ருந்து கப்பலில் சென்று ரங்கூனில் உள்ள ஒரு செட்டியிடம் கடைப் பையன் போல வேலை செய்யத் துவங்கி பிறகு அங்கேயே வேறுசில வேலை பார்த்தாகவும், தங்கியிருந்த இடத்தின் அருகாமையில் உள்ள நூலகத்திற்குச் சென்று படித்து வரு வது தனக்குப் பழக்கம் என்றும் அதிகம் வாசிப்பதற்கு நேரம் கிடைக்காது என்றும் சொன்னார்.

அந்த நாட்களில் பர்மா வாழ்க்கை எப்படியிருந்தது என்று கேட்டவுடன், தான் வேலைக்குச் சென்ற நாட்களில் பெரிய கொந்த ளிப்புகள் இல்லை. ஆனால் இரண் டாவது உலக யுத்தம் துவங்கிய பிறகு பர்மாவில் ஏற்பட்ட மாற்றங் கள் மறக்க முடியாதவை. குறிப் பாக ஜப்பானிய ஆக்ரமிப்பு மற் றும் இந்திய தேசிய ராணுவத்தின் எழுச்சி போன்றவற்றைத் தான் கண் எதிரில் பார்த்திருப்பதாகச் சொன்னார்.

பிறகு அவர் தன் நினைவில் மூழ்கிவிட்டதைப் போன்று அமைதியாக இருந்தார். நானும் கோணங்கியும் ஏதேதோ பேசிய போதும் அவரது கவனம் எங் களிடமில்லை. அது நழுவி எங்கோ போய்க்கொண்டிருந்தது அவரது முகபாவத்தில் தெரிந்தது.

சிங்காரத்திடமிருந்து விடை பெற்றுக்கொண்டு வந்து மாப் பிள்ளை விநாயகர் அருகில் உள்ள தேநீர்க் கடையன்றில் நின்ற படியே சிங்காரத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். அவரது நாவலைத் திரும்ப வாசிக்க வேண்டும் போலிருந்தது.

அன்றிரவு என் னைத் தனித்து அனுப் பிவிட்டு கோணங்கி சிவகங்கை புறப்பட் டுச் சென்றார். எனக் குத் திரும்பவும் சிங் காரத்தைச் சந்திக்க வேண்டும் போலிருந் தது. மறுநாளும் பார்க் கலாமே என்ற ஆசை யோடு இரவெல்லாம் மதுரை வீதிகளில் சுற்றியலைந்துவிட்டு விராட்டிபத்திலிருந்த நண்பன் அறைக்குச் சென்று தங்கிவிட்டு மறுநாள் காலை சிங்காரம் அறைக் குச் சென்றேன். சிங்காரம் தனியே உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். நேற்று பார்த்த தைவிட அன்று உற்சாகமாக இருந் தார். தான் இன்னும் சாப்பிடப் போகவில்லை என்று சொல்லிய படியே மார்டன் கபே வரை போய் வரலாமா என்று கேட்டார். இரு வரும் இறங்கி சாலைக்கு வந்தோம்.

சிங்காரம் வழியில் இருந்த ஒவ் வொரு கடையையும் சுட்டிக் காட்டி எவ்வளவு தூரம் கால மாற்றத்தில் மாறியிருக்கிறது என்று சொல்லிக்கொண்டே வந்தார். சாப்பிட்டுத் திரும்பும்போது அரு காமையில் உள்ள சலூன் ஒன்றில் தெரிந்த ஆள் இருக்கிறார். அவ ரைப் பார்க்கலாம் என்று அழைத் துக்கொண்டு போனார். அந்த சலூ னில் வேலைக்கு இருந்த நபர் பர் மாவில் இந்திய தேசிய ராணுவத்தி லிருந்தவர் என்றும் அவரும் சிங் காரமும் பலவருட பழக்கம் உள்ள வர்கள் என்பது அவர்கள் பேச்சிலி ருந்து அறிந்துகொள்ள முடிந்தது.

சிங்காரத்தின் நண்பர் இந்திய தேசிய ராணுவம் பற்றிச் சொல்லச் சொல்ல இடைமறித்து சிங்காரம் தகவல்களைச் சரி செய்தபடியே இருந்தார். இந்திய தேசிய ராணு வத்திற்குள் வடக்கத்தியார்களின் அதிகாரம் மேலோங்கியிருந்தது எல்லாம் அந்த மோகன்சிங்கின் வேலை என்று நேற்று நடந்த விஷயம் போல சிங்காரத்தின் நண் பர் குறைபட்டுக்கொண்டார்.

நேதாஜியைப் பார்த்து இருக் கிறீர்களா என்று கேட்டேன். நண் பர், இந்தக் கையாலேதேன் அவ ருக்கு சல்யூட் அடித்தேன் என்று வீரவணக்கம் செய்து காட்டினார். சலூன் கண்ணாடியில் அவரது முகத்தில் இருந்த பெருமிதம் துல்லி யமாகத் தெரிந்தது. நேதாஜியைப் பத்தி ஒரு கதை சொல்வியே அதை இவர்கிட்டே சொல்லு என்றார் சிங்காரம். அந்த நண்பர் சிரித்துக் கொண்டே இது சிங்கப்பூர்ல நடந்ததுனு சொல்றாங்க நிஜமானு தெரியாது.

ஒரு பொதுக் கூட்டத்திற்கு நேதாஜி வர்றப்போ  சர்க்கஸில இருக்கிற கோமாளி ஒருத்தன் நேதாஜியைப் பார்க்கக் கூடவே ஓடி வந்திருக்கிறான். அவன் ஒரு குள்ளன், ஜனங்க அவனை இடிச் சித் தள்ளுறதை நேதாஜி கவனித்தி ருக்கிறார். உடனே அவனை அரு கில் வரச்சொல்லி தன்னோடு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளும் படியாகச் சொன்னார். குள்ளன் தன்னை நேதாஜி தூக்கி வைத்துக் கொள்வது போல போட்டோ எடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னதும் நேதாஜி வேடிக்கையாக அதற்கென்ன என்று குள்ளனைக் குனிந்து  தூக்க முயற்சித்தால் அவனைத் தூக்க முடியவேயில்லை.

தன் பலங்கொண்ட மட்டும் முயற்சித்தும் முடியவில்லை. குள் ளன் சிரித்தபடியே இப்போது தூக் குங்கள் என்று சொன்னதும் உடனே நேதாஜி அவனைச் சுலப மாகத் தூக்கிவிட்டார். அது எப்ப டிச் சாத்தியமானது என்று குள்ள னிடம் கேட்டதும் அவர் உடலின் எடையைத் தன்னால் எப்போது வேண்டுமானாலும் கூட்டவும் குறைக்கவும் முடியும். அது ஒரு பயிற்சி என்று சொன்னான். அதைக் குள்ளனிடமிருந்து நேதாஜி கற்றுக்கொண்டார். பல நேரங்களில் ராணுவத்தில் அதை நேதாஜி செய்து காட்டியிருக்கிறார் என்றார்.

சிங்காரம் சிரித்தபடியே  இப் படி நூறு கதைகளை தினம் ரங் கூன்ல கேட்டிருக்கேன். அந்த ஊரை நாசம் பண்ணினது கெம் பித்தாய்ங்கிற ஜப்பானிய ராணுவ போலீஸ். அவங்க பண்ணுகிற இம்சை சகிக்க முடியாதது. இந்தக் கெம்பித்தாய்களோட வேலை பட் டாளத்துகாரனுக்குப் பொம் பளையை ஏற்பாடு பண்ணித் தர் றது. அதுக்காக மலாய் சீனாக்காரி களை ஏற்பாடு பண்ணி அதைப் பராமரிப்பு பண்ணி வச்சிக்கிட்டு வருவாங்க. இதுல அடிதடி வேற வரும் என்றார். சிங்காரத்தின் நண் பர் ஒரு சீனப்பெண்ணின் பெயரைச் சொல்லி அவளுக்குப் பெரிய கிராக்கி என்று நினைவுபடுத்தினார்.

சிங்காரம் வாழ்க்கையில் காதல் அரும்பியிருக்கிறது. ஆனால் அது நிறைவேறவில்லை. அது ஒரு செட்டிவீட்டுப் பெண் என்று சொன்னார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளை ஒரு நாள் புது மண்டபம் அருகே பார்த்தாகவும் அந்தப் பெண்ணிற்குத் தன்னை அடையாளமே தெரியவில்லை என்றபடியே எனக்கு அவ முகம் அப்படியே மனசில இருக்கு என் றார். அவரது நாவலில் இடம் பெற்ற சம்பவங்கள் அவரது வாழ் வின் பகுதிகள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அன்று மதியம் வரை சிங்காரத்துடன் பேசிக் கொண்டிருந்தேன்.

அவரது மனதில் எழுத வேண் டும் என்ற உத்வேகமில்லை. அவ ருக்குப் பிடித்த புத்தகம் எது என்று கேட்டவுடன் சிங்காரம் மணி மேகலை என்று சொல்லி அதற்கும் தன்னுடைய நாவலுக்கும் உள் ளார்ந்த தொடர்பு இருக்கிறது என் றார். அவர் மணிமேகலையை ஆழ்ந்து வாசித்திருப்பது புரிந்தது. அவரிடமிருந்து விடைபெற்று வந்த சில நாட்களுக்கு சிங்காரத்தை மட்டுமே வாசித்துக் கொண்டிருந் தேன். சரளமும் நுட்பமும் கலந்த எழுத்து.

அதன் பிறகு சிங்காரத்தை ஒரு வருடத்தின் பிறகு திரும்பச் சந் தித்தேன். இப்போது முன்பு இருந்ததைவிடவும் ஒடுங்கிப் போயிருந் தார். தன்னைப் பார்த்து எதுவும் ஆகப்போவதில்லை என்று சொல் லியதோடு தன்னை இலக்கியக் கூட்டத்திற்காக ஒரு நண்பர் அழைத்ததாகவும் அது  தன்னால் முடியாது என்றும் சொன்னார். சிங்காரத்தோடான மூன்றாவது சந்திப்பு வெறுமையில்தான் முடிந் தது. அதன்பிறகு சில முறை கோணங்கி, லோகு, முருகேச பாண்டியன் போன்றவர்கள் அவரைப் பார்த்ததைப் பற்றிச் சொல்வார்கள். ஒரு முறை அய்யனார் அவரைச் சந்தித்த சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

sஎன் மனதில் சிங்காரத்தின் சித்திரம் அவரது நாவலில் வரும் பாண்டியன் கதாபாத்திரமாகவே பதிந்து போயிருக்கிறது. சிங்காரத் தின் எழுத்து தனித்துவமானது. பர்மீய தமிழ்வாழ்வின் உண்மை யான சித்தரிப்பு அவரிடமிருந்தே துவங்குகிறது. யுத்தகால வாழ்வைப் பற்றியும் நெருக்கடியான அந்த நாட்களில் ஏற்படும் மனித அவ லங்கள் குறித்தும் அவர்தான் முதன்முறையாக அடையாளம் காட்டுகிறார். அவரது புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் இரண்டும் தமிழின் முக்கிய நாவல் கள் என்றே சொல்வேன்.

சிங்காரத்தின் வா ழ்க்கை அவரை எப்போதுமே நினைவிலே அமிழ்ந்து போக வைத்திருக்கிறது. மனதில் கொளுந்துவிட்டெறியும் கடந்தகாலத்தின் சுவாலைகளுடன் மௌனமாக வாழ்ந்துகொண்டிருந்தார் சிங்காரம். அவருக்கு யாரோடும் உறவில்லை. தினந்தந்தி நாளிதழில் வேலை செய்திருக்கிறார். அங்கே அவரை யாரும் எழுத்தாளராக அறியவேயில்லை. நெருக்கமான நட்புமில்லை. எதையும் அவர் விரும்பவில்லை என்பது தான் நிஜம்.

ஒருவேளை அவர் மனதில் நீள் கடலும் துரத்தியடிக்கபட்டு நாடிழந்து புகலிடம் திரும்பும் மனிதர் களை ஏற்றுக்கொண்டு காற்றின் திசையில் அலைபடும் தோணியும் எப்போதுமிருந்திருக்ககூடும். தனிமை பலரையும் எழுத வைத்திருக்கிறது. சிங்காரத்தின் எழுத்தை அவரது தனிமை கவ்விக்கொண்டு விட்டது. தன் வெளிப்பாட்டிற்கு எழுத்து மட்டுமே சிலருக்குப் போதுமானதில்லை போலும் என் பதை சிங்காரம் நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறார்.

*****

நன்றி: உயிர்மை

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

4 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ on January 30, 2011 at 10:07 AM said...

சிங்காரம் அவர்களை சந்திக்க நானும் இரண்டு முறை மதுரை தினத் தந்தி அலுவலகம் சென்றேன். நான் போன பொழுது எல்லாம் அவர் வெளியில் சென்று விட்டார்.
அடுத்த முறையேனும் சந்திக்க வேண்டும் என்ற ஆவலுடன் உள்ளேன்

அருண்மொழிவர்மன் on January 30, 2011 at 12:16 PM said...

தமிழினி வெளியீடாக வந்த புயலிலே ஒரு தோணியில் சிங்காரத்தின் நேர்காணலும் வெளியானது. புயலிலே ஒரு தோணியின் அதே காலப்பகுதியில் நடந்த இன்னொரு நல்லதோர் ஆவணப்பதிவு சயாம் மரண ரயில்.

rasu on December 18, 2014 at 12:54 PM said...

நாடோடிகள் கலைக்குழு பெயரில் “சயாம் பர்மா மரணரயில் பாதை” என்ற ஆவணப்படம் தயாரித்துள்ளோம். கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் ஒரு சோகம் தோய்ந்த கலை வடிவம் தான் “சயாம் பர்மா மரணரயில் பாதை (PG)” ஆவணப்படம்.
Facebook : https://www.facebook.com/Nadodigalcreations
IMDB : http://www.imdb.com/title/tt3883834/
ஆவணப்படம் பற்றிய சில தகவல்கள் :
தமிழுலகம் அதிகம் அறிந்திடாத ஒரு துயரம் சயாம்(தாய்லாந்து) – பர்மா மரணரயில் பாதை. சிங்கப்பூர் – மலாயாவை இரண்டாம் உலகப்போர் நேரத்தில் கைப்பற்றிய ஜப்பானிய இராணுவம், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைவதற்காக மிக நீண்ட ரயில்பாதை ஒன்றை அமைத்தது. அதை அமைக்கும் பணியில் 30,000 பிரிட்டீஷ் – ஆஸ்திரேலியப் போர்க்கைதிகளோடு, ஒன்றரை இலட்சம் (மலாயாவின் ரப்பர்த்தோட்டத் தொழிலாளர்கள்) தமிழர்களையும், 50,000 பர்மியர்கள், சீனர்கள், இந்தொனேசியர்கள் மற்றும் மலாய் இனத்தவர்களையும் கொண்டு சென்றது.
ஒரே நாளில் சயாம் மற்றும் பர்மா ஆகிய இருமுனைகளில் தொடங்கப்பட்ட இந்த இரயில்பாதை என்னும் துயரக்கதையின் பக்கங்கள் கனமானவை. ஏறத்தாழ 72 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இக்கொடியச்சம்பவத்தில் 80,000 தமிழர்கள் உள்ளிட்ட 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் தம் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். கண்ணீரைப் பெருக வைக்கும் இச்சம்பவம் குறித்து 64 நிமிடங்கள் கொண்ட ஒரு ஆவணப்படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
மரணரயில்பாதையில் பணியாற்றி உயிருடன் மீண்டு, இன்று தங்களது வாழ்நாளின் இறுதிக்கணங்களை எண்ணிக் கொண்டிருக்கும் முதியவர்கள் பலர் அந்த நினைவலைகளை இப்படத்தில் பகிர்ந்துள்ளனர். மனித உரிமைகள் பற்றிக் கவலைப்படும் எவரின் உள்ளத்திலும் ஆழமான காயங்களை உருவாக்கும் பல சம்பவங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். மேலும் பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வாளர்களும் பங்கேற்க உரிய ஆவணங்கள்/ஆதாரங்களோடு இப்படம் நிறைவடந்துள்ளது.
பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகளில் படப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் இந்த இரயில்பாதையில் தம் அரிய பிறவியைத் தியாகம் செய்த இலட்சக்கணக்கான ஆசியத்தொழிலாளர்களுக்குச் செலுத்தும் அஞ்சலியாகவே அமைந்துள்ளது. இப்படத்திற்கான ஆதாரங்கள்/தகவல்கள் ஆகியவை கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஆவணக்காப்பகங்கள் மற்றும் நூலகங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.
இப்பணியில் இறந்த (இழப்பீடு உள்ளிட்டச் சலுகைகளைப் பெற்ற) பிரிட்டீஷ்-டச்சு-அமெரிக்காவைச் சேர்ந்த 16000 வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் நாள் ANZAC DAY என்ற பெயரில் நினைவுத்தினங்கள் உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகின்றன. 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் பற்றி எவரும் கவலை கொண்டதில்லை.
SIAM BURMA DEATH RAILWAY (Buried tears of asian labourers) என்னும் தலைப்பில் ஆங்கிலத்திலும் சயாம்-பர்மா மரணரயில் பாதை (எழுதப்படாத ஆசியத் தமிழர்களின் கண்ணீர்க் கதை) என்ற தலைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
நன்றி.
இப்படிக்கு,
ராஜ்சங்கர்

அ.பாண்டியன் on July 10, 2017 at 11:19 PM said...

எஸ்.ராவின் இக்கட்டுரை எனக்கு சில குழப்பங்களைக் கொடுக்கிறது. ப.சிங்காரம் மேடான் வாழ்க்கையையும் அங்கு கயூனிஸ்டு ஜப்பான் கொடுமைகளையும் கதைக்குள் காட்டுவார். அதேப் போல் கடலுக்கு அப்பால் முழுக்க பினாங்கு தீவை மையமிட்ட கதையாகும். புயலிலே ஒரு தோணி கதையும் பினாங்கை க்ச்தைக் களமாக கொண்டிருந்தது.ஆனால் இக்கட்டுரை அவை பர்மாவில் நடந்தவை என்று சிங்காரம் கூறியதாக சொல்கிறது. மேலும் சிங்காரம் ஆங்கில நாவல்களைப் படித்தது பினாங்கு பொது நூலகத்தில் என்று முன்னம் ஒரு கட்டுரையில் வாசித்துள்ளேன். அதேத் தகவலை சாரு நிவேதிதாவும் தனது அண்மைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.ஆனால் எஸ்.ராவின் கட்டுரையில் அவர் ஹெமிங்வேயின் நூல்களை பர்மாவில் வாசித்ததாக உள்ளது. அதுவும் ப.சிங்காரத்தின் வாய்மொழி தகவலாக உள்ளது. மீண்டும் கூர்ந்து ஆராய வேண்டும்.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்