Jan 6, 2011

விமலாதித்த மாமல்லனின் சிறுகதைகள்-ஆத்மாநாம்

இன்றைக்கு எழுதப்படிக்கத் தெரிந்த எவரும் குறைந்தபட்சம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறுகதைக்கு அறிமுகமாயிருக்க வேண்டும். அந்த அளவுக்கு பெரும்பத்திரிகைகள் கவர்ச்சி அரசியல் சினிமா மதம் மற்ற மசாலா அம்சங்களோடு வணிக இலக்கியத்தை காலம் தவறாது ஒரு உபாதையை நீக்கிக்கொள்வதுபோல் செயல் பட்டு வருகின்றன. இந்தப் போக்குகளிலிருந்து விடுபட்டு ஒரு ஈடுபாட்டுடன் கலை இலக்கியத்தைப் படைத்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு சிலரே. அப்படி உள்ளவர்களுக்கு இலக்கியத்தை செழுமைப்படுத்துவதுதான் முதல் நோக்கமாக இருக்கிறது. athmanam அவர்கள் வாழும் ஒவ்வொரு கணத்திலிருந்தும் கற்றுத் தேர்கின்றவற்றை கலா ரீதியாக இலக்கியமாகப் படைக்கும்போது வாழ்க்கையின் புதிய பரிமாணத்தைக் கண்டு கொள்கிறார்கள். கோடிக்கணக்கான ஊசிகளால் தைக்கப்பட்டுள்ள மனித மனத்தின் ஒரு ஊசியை எடுத்துப் பார்த்து மீண்டும் பொறுத்துகிறார்கள்.

நல்ல ஒரு கலைஞன் சூழலை மட்டும் முன் வைக்கிறான். தன்னுடைய கருத்தை அதில் திணிப்பதில்லை. எந்த ஒரு மரபையும் அவன் பின்பற்றுவதில்லை. தன்னையும் ஒரு மரபாக ஆக்கிக்கொள்வதில்லை. இப்படிப்பட்ட ஒருவனின் படைப்பு அது சிறுகதையோ, நாவலோ எதுவாக இருப்பினும் வாசகனின் மனதில் அது உள்ளொளியைத் தோற்றுவிக்கிறது. ஒரு கணமேனும் இப்படிப்பட்ட படைப்பிலக்கியத்தை உருவாக்குபவர்கள் உள்ளொளி நிறைந்தவர்களாயிருப்பார்கள் என்பதைக் கூறத் தேவையில்லை.

ஆனால் வீச்சு என்பது படைப்பாளிக்குப் படைப்பாளி வேறு படுகிறது. ஏனோதானோ என்றிருப்பவன் ஒரு படைப்பிலக்கிய கர்த்தாவாக இருத்தல் அரிது. நிச்சயமானதொரு திசையை அவன் தேர்வு செய்கிறான். வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட மனித குணச்சித்திரங்களை சிறுகதை எழுதுபவன் படைக்கிறான் தனக்குத் திருப்தி அளிக்காதவற்றை நிராகரித்துக் கொண்டு. இப்படிப்பட்ட சூழலில் விமலாதித்த மாமல்லன் சிறுகதைகள் சில நமது கவனத்துக்கு வருகின்றன. இருபதாம் நூற்றாண்டு மனிதனின் பொதுவான குணாம்சங்கள் சிலவும் இவருக்கே உரித்தான தனியான குணாம்சங்கள் சிலவும் சிறுகதைகளில் வெளிப்படுகின்றன. எதிலிருந்தும் அந்நியப்படாமல் எதிலிருந்தோ அந்நியப்பட்டதாக நினைத்துக்கொண்டு சிக்கலில் சிக்கியுள்ள ஒருவனின் கனவுகள் சில சிறுகதைகளின் களங்களாக இருக்கின்றன. உதிரிக் கூட்டம், சரிவு, இழப்பு, அறியாத முகங்கள், போன்ற சிறுகதைத் தலைப்புகள் ஓரளவு இவரிடம் உள்ள வெறுமையையும், கூட்டத்தில் காணாமற்போன குழந்தையின் நிலைமையையும் ஜாடையாகத் தெரிவிக்கின்றன. இன்றைய சமூகச் சூழல், அதற்கு இடம் கொடுக்கும் அமைப்பு, புதிய தலைமுறைக்கு பொருந்தாத பழைய மதிப்பீடுகள், அவற்றிற்கெதிராக எழுப்பப்படும் குரல் இவையெல்லாம் சற்று நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ வெளிப்படுகின்றன இவரது சிறுகதைகளில்.

கதை படைக்கும் கலையில் ஒரு கூரிய பார்வை புலனாகிறது. ‘இலை’ கதையில் வரும் மாமி, மற்றும் கறிவேப்பிலை பறிக்கவரும் ஆள் இருவரும் ஒருவரை விட ஒருவர் கறாராக இருக்கிறார்கள். துணைப்பாத்திரங்கள் பற்றிய விவரங்கள் தெளிவாக இருக்கின்றன. ‘தமக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி விடாமல் அதற்குள்ளேயே தம்மால் இயன்ற அளவிற்கு பௌருஷத்துடன் இருக்கப்பழகி அனேக ஆண்டுகளாகிவிட்டன அவருக்கு’ என்னும் மாமாவைப் பற்றிய வாசகத்தைப் படிக்கும்போது மாமல்லன் பார்வை பளிச்சென்று பிடிபடுகிறது.

உதிரிக்கூட்டம் கதைக் களம் வீட்டிலிருந்து தெருவுக்கு வருகிறது. சென்னை நகரத்தின் மத்தியதர வர்க்கத்தின் திரிசங்கு சொர்க்க வாழ்க்கை நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கதை சொல்லும் உத்தி கொஞ்சம் நையப் புடைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

‘சரிவி’ன் நாயகனுக்கு ஒரு முகம் இல்லை. நீங்கள் பார்த்திருக்கக்கூடிய உணர்ந்திருக்கக்கூடிய விஷயந்தான். ஆழ்ந்த ஒரு அதிர்ச்சியை அளிப்பதில் மாமல்லன் வெற்றி பெற்றிருக்கிறார். மெல்ல நகரும் திரைப்படம் ஒன்றைப் போல செய்திகள் ஊர்கின்றன. நடை கதைக்கேற்ப இயல்பாக உள்ளது. ஒரு நல்ல கதையொன்று சுலபமாக சொல்ல முடிகிறது. கதையில் வருபவன் ஒரு பொந்தில் வாழ்வதாக உணரும் கடம் Metamorphosis கதையில் ஏற்படும் நிகழ்வை நினைவு படுத்தும் விதத்தில் இருக்கிறது. தனிமனித வீழ்ச்சியை சித்தரிப்பதில் இக்கதை ஒரு குறிப்பிடத்தக்க இடம் பெறுகிறது.

155183_125359917527223_100001596457502_167936_4297066_n இழப்பு’ கதையும் பொருளாதாய உலகின் சீரழிவுகளையும் சங்கிலித் தொடர்போல் வீழ்ச்சியடையும் மனித உறவுகளையும் சித்தரிக்கிறது. அதில் வரும் மூவரின் தோற்றங்களும் இயற்கையாக படைக்கப்பட்டிருக்கிறது.

வயிறு போன்ற கதைகளைப் பற்றி பேசவும் விமர்சிக்கவும் போலியான முகத்திரை ஒன்றை போர்த்திக் கொண்டால்தான் வசதியாயிருக்கும். உடல் இயந்திரத்தைப் போல செயல்படும் பொழுது மனிதனின் ஆன்மா பணம் பணம் என்று ஜெபிக்கும் அவலம் மிகவும் கொடியதாக இருக்கிறது. மாமல்லன் கலைக்கு இது ஒரு பரிசாகும்.

’அறியாத முகங்கள்’ கதையும் மீண்டும் பொருளாதாரம் எப்படி மனித உறவுகளை சிதைக்கிறது என்பதை விவரிக்கிறது. செல்லாக் காசாகும் மலட்டுக் கோபம் தனிமனிதனை ஆட்டுவிக்கும் இடங்கள் சிறப்புடன் வெளியாகியிருக்கின்றன.

இப்படி இவர் எடுத்துக் கொண்டுள்ள கருவெல்லாம் பெரும்பாலும் மனிதத்தின் வீழ்ச்சியை விவரித்து வாசகனையே இதற்கான முடிவுகளை கேட்கிறது. பெருமூச்சொன்றை விட்டபடி வாசகன் தான் சிறுகதை இலக்கியம் படைக்கும் நிஜத்தைப் பொய்யாக்க வேண்டும். இப்படிப்பட்ட வாசகர்களை உருவாக்கும் பொழுது ஓரளவிற்கு கலை முழுமை அடைகிறது.

(நன்றி - மீட்சி சிற்றிதழ்)

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

2 கருத்துகள்:

Rangan on December 31, 2011 at 4:10 PM said...

nanri intha eduthuraithalai padikumpothu avarathu padaipukkali padikka unthugirathu

Rangan on December 31, 2011 at 4:11 PM said...

Nanri entha munnurai avrathu padaipugali vasikka unthugirathu

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்