Mar 4, 2010

நீல பத்மநாபனின் நாவல்கள் - ஜெயமோகன்

ஜெயமோகன்

நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை

[ஒன்று]

தமிழிலக்கியத்தில் நுழையும் ஒரு வாசகன் நீலபத்மநாபனைப்பற்றி குழப்பமான ஒரு சித்திரத்தையே அடைவான் . அவரது பெயர் அதிகமாக எங்குமே மேற்கோள் neelapadmanaban1 காட்டப்படுவது இல்லை.அவரது படைப்ப்புக்கள் பேசப்படுவதுமில்லை. அவரைப்பற்றி பொதுவான கருத்தைக் கேட்டால் கணிசமான சமகால வாசகர்கள் அவர் தமிழிலக்கியத்தின் கடந்தகாலத்து நினைவுகளில் ஒன்று மட்டுமே என்று சொல்லவும் கூடும். இன்று அவருடைய படைப்புகள் ,அவரது பாணி ஏதும் அவ்வளவு முக்கியமில்லை என்ற எண்ணம் பரவலாக உள்ளதை அவன் காண்பான்.பல எளிய இளம் வாசகர்கள் உடனடியாக அவரை ஒதுக்கிவிடுவதுமுண்டு . அதேசமயம் தமிழ் நாவல்கள் பற்றிய எந்த ஒரு விமரிசனத்திலும் , எந்த பட்டியலிலும் அவரது இரு நாவல்கள் 'தலைமுறைகள் ' , 'பள்ளிகொண்ட புரம் ' இடம் பெற்றிருப்பதையும் அவன் காண்பான்.மிகப் பெரும்பாலான விமரிசகர்களுக்கு அவர்களுடைய மிகச்சிறிய பட்டியலில்கூட கடந்த முப்பத்தைந்து வருடங்களாக அப்படைப்புகளை தவிர்க்க முடியவில்லை என்பது ஓர் எளிய விஷயமல்ல . இந்த நிலை அவ்வாசகனுக்கு ஒரு ஆழமான குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.

நீல பத்மநாபனின் இலக்கிய பங்களிப்பின் முக்கியப்பகுதி அவருடைய இளமைப்பருவத்திலேயே நடந்து விட்டது என்பது ஒரு வகையில் சோகமானது . அதன் பின்பு மெல்ல மெல்ல காலம் தன்னை கடந்து முன் செல்வதை கண்டபடி அவர் பின்தங்கி நிற்க வேண்டியிருந்தது. இலக்கிய வாதிக்கு அங்கீகாரமும் புகழும் அவசியம் கிடைக்க வேண்டிய முதிய காலத்தில் அவர் பழையவராக கணிக்கவும் படுகிறார் . எந்தபடைப்பாளியையும் எப்போதாவது ஒரு நாள் காலம் கடந்து செல்லும். எப்போதைக்குமான படைப்பாளிகள் என்று நமக்கு தோன்றிக் கொண்டிருந்த ஒரு படைப்பாளி சட்டென்று காலத்தின் எல்லைக்கோட்டுக்கு அப்பால் நிற்பதை நாம் பார்க்கும் அனுபவம் இலக்கியத்தில் மிக வியப்பும் பிரமிப்பும் சில சமயம் அச்சமும் தருவதாகும்.

என் அனுபவத்தில் எனது 20 வயதில் என் அம்மாவிற்கு பிடித்த எழுத்தாளரான ஹெமிங்வே அறிமுகமானபோது அவரே என்றென்றும் மாறாத இளமையுள்ள படைப்பாளி என்று எண்ணினேன்.அந்த அளவுக்கு அவரது நடையின் புதுமையும் வேகமும் என்னை ஆட்கொண்டன. ஆனால் என் 30 வயதில் சட்டென்று ஹெமிங்வே பழைய படைப்பாளியாக மாறியிருப்பதை கண்டேன் . 'மணி ஒலிப்பது எவருக்காக ' ஒரு மிகப்பழைய நாவலாக, தல்ஸ்தோயைவிட பழையதாக பட்டது. அதன் வலிமை அதிலுள்ள கறாரான புறவயமொழியில் உள்ளது . வன்முறையை சித்தரிக்கும்போது அது இயந்திரங்களின் நுட்பமும் லாவகமும் கொண்டு விடுகிறது .அன்றைய என் மனப்பிம்பம் என்னவென்றால் ஹெமிங்வே பழைய இயந்திரவியல் காலகட்டத்தை சேர்ந்தவர் , இலக்கியத்தில் மின்னணுவியல் காலகட்டம் பிறந்துவிட்டது என்பதுதான் . . இது ஒரு மன உருவகம் ,படிமம் என்று சொல்லலாம் , மட்டுமே .ஆனால் பல சிந்தனையாளர்களை படிக்கும்போது அப்படித்தோன்றும் .எலியட்டும் ,ரஸ்ஸலும் அப்படி இயந்திரங்களின் மொழியில் பேசுவதாக எனக்கு பட்டிருக்கிறது.வெறு சிலருக்கும் அப்படி தோன்றியிருக்கலாம்.

தமிழில் அப்படி ஏற்பட்ட கால அதிர்ச்சி சமீபத்தி ல் சுந்தராமசாமியின் கதைகளையும் கட்டுரைகளையும் படிக்கும்போது ஏற்பட்டது . ஏற்கனவே ஆங்கிலம் வழியாக சமகால உலகப்படைப்புகளை படித்தபிறகு சுந்தர ராமசாமியின் பிம்பம் பற்றி ஏதும் அறியாமல் அவரை படிக்கவரும் புதுவாசகர்கள் அவரை பற்றி சாதாரணமாக மதிப்பிடுவதை கண்டிருக்கிறேன் .ஆயினும் அருகாமை அளிக்கும் திரை விலக ஒரு தருணம் வேண்டியுள்ளது. இப்போது சுந்தர ராமசாமி அடுத்த கட்ட இயந்திரவியல் இயக்கம் கொண்டவர் மட்டுமே என்று படுகிறது .அதாவது அவரது இயந்திரம் மின்னணுப் பொறியால் கட்டுப்படுத்தப்படுவது . இயந்திரத்தின் மூர்க்கமான கச்சிதத்தையும் மின்னணுக்கருவிகளின் அதி நுட்பத்தையும் அது கொண்டிருக்கிறது . ஆனால் இன்றைய எழுத்து உயிரின் கட்டற்ற வேகத்தையும் தன்னிச்சயான வளர்ச்சிப்போக்கையும் இயல்பாகக் கொண்டிருக்கிறது .

இதையொட்டி சில முக்கிய பழைய படைப்பாளிகளை மீண்டும் படித்து அவர்களை மறுமதிப்பீடு செய்யவேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது . நீலபத்மநாபனின் படைப்புகளை அதன் பொருட்டு மீண்டும் வாசித்தேன்.அத்துடன் அவரது படைப்புகள் பற்றி சமீபத்தில் வெளிவந்துள்ள விமரிசனப் பெருந்தொகுப்பும் உந்துதலாயிற்று. அப்போது ஏற்பட்ட முக்கியமான எண்ணம் நாம் இலக்கியப்படைப்புகளை சமகாலத்தில் மேலோங்கியுள்ள அழகியல் மனோபாவங்களையும் , அரசியல் சமூகவியல் கோட்பாடுகளையும் , வடிவ பிரக்ஞைகளையும் வைத்துத்தான் எப்போதும் சாதாரணமாக மதிப்பிடுகிறோம் என்று .அவையோ மிக வேகமாக காலாவதியாகிவிடுகின்றன. அத்துடன் நமது மதிப்பிடுமுறையில் எப்போதுமே ஒப்பிடுவது முக்கிய வழிமுறையாக உள்ளது .அதை தவிர்க்கவும் முடியாது ஏனெனில் படைப்பின் வாசக மதிப்பு என்பது பெரும்பாலும் ஒப்பிடப்படுவதன் மூலம் உருவாவதேயாகும். ஆனால் இம்மாதிரி ஒப்பீட்டு மதிபீடுகளை தாண்டி நமக்கு சில தளங்களிலேனும் விமரிசன அளவுகோல்கள் இருக்கவேண்டுமென்று ஓர் எண்ணம் ஏற்பட்டது .

உதாரணமாக எண்பதுகளில் படிக்க ஆரம்பித்தவர்கள் நவீனத்துவ அழகியலும் அதை ஒட்டிய இருத்தலியக் கோட்பாடுகளும் மைய இடத்தில் இருக்கும் போது உள்ளே வந்தவர்கள் . அதற்கு முன்பே இங்கு வந்து சேர்ந்த முற்போக்கு அழகியலும் கோட்பாடுகளும் கூட நவீனத்துவ அழகியலுடன் முயங்கி ஒரு பொது அழகியல் வடிவத்தை உருவாக்கி விட்டிருந்தன . உதாரணமாக பூமணியின் படைப்புகள் இந்த முயக்கத்தின் தெளிவான அடையாளங்கள் . ஆகவே அதுவே ஒரே அழகியலும் வடிவமும் என்ற எண்ணம் பொதுவாக வாசகர்களுக்கு ஏற்பட்டது . அக்கால விமரிசன மதிப்பீடுகளை தீர்மானிப்பதில் சுந்தரராமசாமி பெரும் பங்கு வகித்துள்ளார். கன கச்சிதமான ஒருமை கொண்ட வடிவம் , கறாரான சொற்சிக்கனம் ,மொழி மீது முழுக்கட்டுப்பாடு , கூர்ந்த சித்தரிப்பு மூலம் உருவாக்கப்படும் குறிப்பமைதி ஆகியவை அப்போது இலக்கியத்தின் அழகியல் இலக்கணங்களாக வகுக்கப்பட்டன. இவை நவீனத்துவ படைப்பின் வடிவ இலக்கணங்களே என நாம் இன்று அறிவோம். ஆனால் இலக்கியத்துக்கு எப்போதைக்குமே உரிய வடிவ இலக்கணங்களாக அவை அப்போது நம்பப்பட்டன என்பதை இப்போது அக்கால விமரிசனங்களை காணும்போது அறிய முடிகிறது .

அக்காலத்துக்கு முன்புவரை இருந்த அழகியல் வடிவங்கள் பல . கற்பனாவாத படைப்புகள், கற்பனாவாதப் பண்பு கொண்ட யதார்த்தச் சித்தரிப்புகள் முதலில் வந்தன. பிறகு கறாரான நிதரிசனப்பண்பு கொண்ட படைப்புகள் .இவை மரபிலிருந்து பெற்றுக் கொண்ட சில செவ்வியல் பண்புகளையும் கொண்டிருந்தன. அவை இந்த நவீனத்துவ வடிவ இலக்கணத்தால் அளவிடப்பட்டு பழையவையாகவும் வடிவ ரீதியான குறைப்பாடுகள் கொண்டவையாகவும் கணிக்கப்பட்டன . அக்கால படைப்புகள் குறித்து எழுபது எண்பதுகளில் வந்த எல்லா விமரிசனக்களிலும் இந்த வடிவபோதாமை சுட்டப்பட்டுள்ளது.இன்றைய படைப்புகள் கச்சிதத்துக்கு பதிலாக உள்விரிவை , பலகுரல்தன்மையை ,விவாத இயல்பை , முன்வைப்பவை .தடையற்ற உத்வேகத்தை , கட்டுக்கடங்காத மொழியை அவை கொண்டிருக்கின்றன. செதுக்கி வடிவமைக்கப்படும் குறிப்பமைதிக்கு பதிலாக வாசகனின் மொழி / வரலாற்று / அற பிரக்ஞைகளில்

உருவாக்கப்படும் அதிர்ச்சி மூலம் , அவற்றை ஒட்டு மொத்தமாக மறுகட்டுமானம் செய்வதன் மூலம் அவனை தன் புரிதல்களை முழுமையான மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதையே அவை தங்கள் வழிமுறையாகக் கொண்டுள்ளன.அதாவது எப்படி நவீனத்துவ வடிவம் கற்பனாவத ,நிதரிசனவாத அழகியல் வடிவங்களை பழையவையும் போதாதவையும் ஆக்கியதோ அப்படி இன்று நவீனத்துவ அழகியலும் வடிவங்களும் மாறிவிட்டிருக்கின்றன.அதாவது முன்பு சுந்தர ராமசாமியுடன் ஒப்பிடப்பட்ட நீல பத்மனாபன் பழையவராக கணிக்கப்பட்டாரென்றல் இன்று அவரும் பழையவராகை இருவரும் ஒரே வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள் .

நீல பத்மநாபனின் படைப்புகள் கடந்த 25 வருடங்களாக நவீனத்துவ வடிவ இலக்கணத்தால் மதிப்பிடப்பட்டு எதிர்மறைகள் சுட்டப்பட்டுள்ளன .அவை நிதரிசனப் பாங்கு உடையவை .அழகியல் ரீதியாக சொல்லப்போனால் அவை இயல்புவாதப் படைப்புகள் . அவை 'உள்ளது உள்ளபடி ' , ' அப்பட்டமாக ' சொல்ல முயலக்கூடிய படைப்புகள் என்று சொல்லலாம் . நவீனத்துவ படைப்பில் இருப்பது போல மிகச்சிறந்த கதைத் தொழில்நுட்ப நிபுணன் அவற்றுக்கு பின்னால் இல்லை . படைப்பாளி எந்த அளவுக்கு இல்லாமல் இருக்கிறானோ அந்த அளவுக்கு அவை சிறந்த படைப்புகள் என்பதே அவற்றின் இலக்கணமாகும் .அவை வாழ்க்கை ஓட்டத்தின் தர்க்கத்தையே தங்கள் அழகியலாக கொண்டவை .நம்பகத்தன்மையையே முதல் தகுதியாக கொண்டவை .ஆகவே நவீனத்துவ வடிவ அழகியல்பார்வைக்கு அவை கவனமற்ற கூறுமுறை கொண்டவையாக தோன்றும். அவற்றின் வடிவம் தளர்வானதாகவும் , உத்வேகமும் கவித்துவமும் இல்லாத தட்டையான சித்தரிப்பு உள்ளவையாகவும் படும். நீலபத்மநாபன் உட்பட பல இயல்புவாதப் படைப்பாளிகள் குறித்து அவ்விமரிசனம் நவீனத்துவ விமரிசகர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது .வாசகர்களும் அதை ஏற்றுள்ளார்கள் .

இப்போது நவீனத்துவ வடிவ இல்க்கணங்களும் காலாவதியாகியுள்ள நிலையில் எப்படி நம் மதிப்பீடுகளை செய்வது ? வழக்கமாக வாசகர்களாக நாம் செய்வது இரண்டு தரப்பையுமே ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதுதான். ஆனால் அதை விமர்சகன் செய்ய முடியாது .சமகாலத்து அழகியலே உண்மையானது மேலானது என்று வாதிடுவது அபத்தம் . அதுவே மேலும் உபயோகமானது என்று சொல்வதிலேயே பொருள் உள்ளது. அதை முன்வைத்து கடந்த காலத்தை முழுக்க நிராகரிப்பது அர்த்தமில்லாதது .ஆகவேதான் பொதுவான ஓர் அழகியல் அளவுகோலை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது . துரதிருஷ்டவசமாக தத்துவார்த்தமான தேடலுடன் செயல்படும் விமரிசகர் எவரும் நமக்கு இல்லை . இவ்வாறு பொது அளவுகோல் எனும்போது அது ஒருபோதும் இலக்கியத்தை மட்டும் சார்ந்ததாக இருக்க முடியாது என்பது வெளிப்படை .ஆகவே தான் அங்கு தத்துவமும் அறவியலும் பெரும் பங்காற்றவேண்டியுள்ளது .கறாரான எப்போதைக்குமுரிய வரையறைகளை உருவாக்க முயன்றால் அது இலக்கியப்படைப்புகள் மீதான வன்முறையாகவே முடியும்,அது எத்தனை விரிவான வரையறையாக இருப்பினும். ஆகவே அதை ஒரு நிபந்தனையகவோ ,வரையறையாகவோ இல்லாமல் இலக்கியப்படைப்புகள் சார்ந்த ஒரு தேடலாக மட்டுமே நாம் உருவாக்கிக் கொள்ளமுடியும்.அதுவே நீலபத்மனாபன் போன்ற கடந்த காலகட்டத்து படைப்பாளிக்கு நியாயம் செய்வதாக அமையும்.

[ இரண்டு ]

நீல பத்மநாபனின் பிரசுரமான முதல் நாவல் தலைமுறைகள் அவருக்கு 30 வயது இருக்கும்போதே வெளிவந்து விட்டது .அதை அவர் எழுதும்போது அவர் வயது 24 . நான்காண்டுகாலம் பிரசுரத்துக்கான அலைச்சல்களில் செலவாயிற்று . ல் வெளிவந்தது . முக்கிய இலக்கியவாதிகள் நீலபத்மனாபனுக்கு நண்பர்களாக இருந்தும் அந்நாவலின் முக்கியத்துவத்தை அவர்களால் உணர முடியவில்லை .பேராிசிரியர் . ஜேசுதாசன் அந்நாவலை அடையாளம்கண்டு ஒரு முன்னுரை அளித்தார் . ஆசிரியரின் சொந்த செலவிலேயே நாவல் வெளிவந்தது . ஆனால் வெளிவந்த உடனே க .நா .சுப்ரமணியம் அதை கவனப்படுத்தினார்.அடுத்த 10 வருடங்களில் அது தமிழின் இலக்கிய வரலாற்றையே மாற்றி அமைத்தது. தி ஜானகிராமனின் 'மோக முள் ' நீல பத்மனாபனின் 'தலைமுறைகள் ' இரு படைப்புகளும் இரு விதங்களிலான மாதிரி படைப்புகள்[ trend setters ]ஆக மாறின.முதல் பாணி மெல்ல வணிக எழுத்துக்கு முன்மாதிரியாயிற்று . நுட்பத்துடன் சமத்காரமும் தளுக்கும் கலந்த பாணி அது . தலைமுறைகள் முற்றிலும் வேறுபட்டது,நேர் மாறானது.பிற்பாடு தமிழில் வெளிவந்த கணிசமான முற்போக்கு இலக்கியப்படைப்புகள் அதையே முன்னுதாரணமாக கொண்டன.அவ்வகையில் தமிழில் முதன்மையான முன்னுதாரணம் அந்நாவலே .

க நா சு இலக்கியத்தின் நேரடித்தன்மையை , அப்பட்டத்தை [அல்லது யதார்த்தத்தை ,நிதரிசனத்தை ] தொடர்ந்து முன் வைத்தபடி இருந்தார் .அதற்கு காரணமிருந்தது.அன்றைய எழுத்துக்கு இரு பாணிகள் மட்டுமெ இருந்தன .ஒன்று கல்கி பாணியிலான நாடகத்தன்மையும் மிகையான வாய்சாலமும் கலந்த கற்பனாவாதப் பாணி. இன்னொன்று புதுமைப்பித்தன் முன்வைத்த நேரடியான விமரிசனப்பாணி. இரண்டிலுமே ஆசிரியனின் அதி தீவிர இருப்பு உண்டு.ஆசிரியன் கிட்டத்தட்ட இல்லாமலாகுமளவுக்கு மறைந்து இயங்கும் ஒரு கதைகூறலை க. நா .சு விழைந்து முன்வைத்தார். தமிழ் மரபில் கற்பனாவாதப் பண்புள்ள எழுத்தும் சரி ,சீர்திருத்த பண்புள்ள எழுத்தும் சரி ,தமிழ் வாழ்விம் முக்கியமான பல தளங்களை தொட முடியவில்லை என்று க. நா. சு கருதினார் .ஆகவே க. நா .சு தேடியது அப்பட்ட மாக சமரசமோ சுவாரசியப்படுத்தலோ இல்லாமல் தமிழ் வாழ்வைப்பற்றி சொல்லும் எழுத்து முறையை.அதன் முதல் முன்னோடியை ஆர் ஷண்முக சுந்தரத்தின் 'நாகம்மாளி 'ல் கண்ட க நா சு அப்படைப்பை மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லிவந்தார்.

இந்நிலையில் வந்த 'தலைமுறைகள் ' ஒரு திருப்புமுனையாக இருந்தது .அது அப்பட்டமானது.கற்பனையே கலக்காமல் எழுதப்பட்டது போன்ற புனைவுப் பாவனை கொண்டது . இம்மி கூட மிகை இல்லாதது . வட்டார வழக்கிலேயே கதையையும் சொல்ல முயல்வது .அதாவது மைய ஒட்ட அம்சங்கள் எதுவுமே இல்லாமல் முழுக்க முழுக்க பிராந்திய வட்டாரக் கலாச்சார அடையாளத்தை நம்பி இயங்கும் படைப்பு அது. ஆகவே அதை க. நா .சு ,வெ சாமிநாதன் ஆகியோர் ஒரு முக்கிய முன்னுதாரண படைப்பாக கருதி முன்வைத்தார்கள் .இப்போதும் தமிழ் எழுத்தின் முக்கியமான neelapadm வலிமை என்பது இங்குள்ள பெரும்பாலான படைப்புகளின் பிராந்திய அடையாளத்தில்தான் உள்ளது .அதற்கு வழிகாட்டிய படைப்பு இது. [இவ்வகையில் அடுத்தபடியாக குறிப்பிடப்படவேண்டிய படைப்பு ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம்வீடு ] சமீபத்தில் குமுதம் எடுத்த ஒரு சர்வேயில் தமிழின் 10 நாவல்கள் பட்டியலில் எல்லாருடைய பட்டியலிலும் இடம் பெற்றிருந்த நாவல்களில் தலைமுறைகளும் ஒன்று .இது இப்போதும் இப்படைப்புக்கு உள்ள விமரிசக அங்கீகாரத்தை காட்டுகிறது.இன்று இப்படைப்பு அதன் இறுதிப் பகுதி கவித்துவமாக அமையாமல் நாடகத்தன்மையுடன் அமைந்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டாலும் ஒட்டு மொத்தமாக முக்கியமான படைப்பாகவெ கருதப்படுகிறது.

'தலைமுறை 'களின் கதை காலாகாலமாக இந்திய இலக்கியங்களின் பேசுபொருளாக உள்ள பெண்ணின் துயரம்தான் .நமது செவ்வியல் படைப்புகளிலும் சரி ,நவீன படைப்புகளிலும் சரி இவ்வாறு முக்கியமான அவலங்கள் பெண்கள் சார்ந்தவையாக இருப்பது சமூகவியல் ரீதியானகாழமான கவனத்துக்குரியது .ஏனெனில் பெண்கள் ஒடுக்கப்பட்டது உலகளாவிய நிகழ்வு ,பிற கலாச்சாரங்களில் மேலும் அதிகம் .அங்கெல்லாம் இப்படி பெண் காவியநாயகி யாக ஆக்கப்படவில்லை . வீரர்களே முக்கியமான காவியநாயகர்கள் அங்கு . இங்கு சீதையும் கண்ணகியும் மணிமேகலையும் காவியநாயகிகள்.அர்ச்சுனன்போன்ற ஒரு வீரனை ஐதீக மரபு உருவாகியபோதே அல்லியையும் அது உர்வாக்கியது .அடுத்த கட்ட வாய்மொழிக் கதைகளில் நல்லதங்காள் போன்ற அவல நாயகிகள் உள்ளனர் .பெண் ணை மையமாக்கிய அவலக்கதைகள் நம் அமரபின் கதைச்சொத்தின் பெரும்பகுதியை அடைத்துக் கொடன .பிற்பாடு நவீன புனைகதை வடிவங்கள் இஉருவான போது அதே பாணி தொடர்ந்தது .அக்கதைகளில் மரபில் உள்ள கதைகளின் தீவிரமான சாயல் இருந்தது இயல்பே.பிறகு திரைப்படங்களில் கூட அதே மரபுநீடித்தது .வான்மீகி ராமாயணமும் , மதர் இந்தியாவும் ஒரே நேர்கோட்டில் அமைந்தவையே .

இது குறித்து அடிப்படையான ஆய்வுக் குறிப்பொன்றை டி டி கோசாம்பி சொல்ல்லியுள்ளார். தாய்வழி சமூக அமைப்பாக இருந்து தந்தை வழி அமைப்புக்கு மாறியவையே இந்திய சமூகங்கள் ..நமது எண்ணற்ற தாய் தெய்வங்கள் அம்மரபின் தொடர்ச்சிகளே. நமது ஐதீக வாய் மொழிக்கதைகளில் அந்த வீழ்ச்சி குறியீட்டு வடிவில் முக்கிய இடம் பிடித்தது . பிறகு அத்தனை நேரடி வாழ்க்கை நினைவுப்பதிவுகளும் அந்த ஐதீக மரபில் இணைவு பெற்றன. ஆகவே காவியம் முதல் சிறிய கதை மரபு வரை வரை பெண்ணின் அவலம் முக்கிய மையமாயிற்று. இன்றும் நம் அகமன கட்டுமானத்தில் படிமங்களாக உள்ளது அந்த இறந்தகாலமே .ஆகவே நவீன இலக்கியங்கள் கூட அதே பாணியில் உள்ளன. பழிவாங்கும் உக்கிர தேவதை [பழையன்னூர் நீலி ] அருள் வழங்கும் அன்னை[ காஞ்சி காமாட்சி ] அடக்கியளும் அன்னை [சமயபுரம் மாரி ]என்று தமிழ் புனைகதைகளின் பெண் கதாபாத்திரங்களை நாம் தொல்படிம [aaன்] தர்க்கத்துக்குள் அடுக்கிப் பார்க்க முடியும்.

'தலைமுறை 'கள் அந்த மரபில் சகஜமாக இணைவதை அதன் தொடக்கப்புள்ளியிலேயே காணலாம். ஏழுவீட்டுச் செட்டிகளின் குடும்பத்தில் குலமரபின் வாய்மொழி ஐதீகமாக ஒரு கதை உள்ளது . அவர்களுடைய பூர்வீகம் காவிரிப்பூம்பட்டினம் .அவர்கள் அங்கிருக்கும்போது அங்குள்ள சோழ் மன்னனுக்கு விலைமதிப்பிட முடியாத சில பவளங்கள் கிடைக்கின்றன. அதில் துளைபோட்டு மாலையாக்க அங்குள்ள எல்லா பொற்கொல்லர்களும் முயன்றபோதும் முடியவில்லை .பவளங்கள் உடைந்து விடக்கூடும். என்ன செய்வதென்று மன்னன் தவித்து கடசியில் தன் அவையில் இருந்த ஒரு செட்டியாரை கூப்பிட்டு நீர் என்ன செய்வீரென்று தெரியாது நாளைக்கு விடிவதற்குள் இந்த பவளங்களுக்கு துளைபோட்டு கொண்டுவரவேண்டும் இல்லையேல் கழுத்தில் தலை இருக்காதெள என்று உத்தரவு போடுகிறான் . வீட்டுக்கு வந்த செட்டியார் கவலையுடன் இருப்பது கண்ட அவரது இரு மகள்கள் தங்கம்மையும் தாயம்மையும்தேற்றுகிறார்கள் .துளையை தாங்கள் போட்டு விடுவதாகச் சொல்கிறார்கள் .ஊசி நுனியில் பனைவெல்லச் சாறை தொட்டு ஒவ்வொரு பவளத்திலாக ஒரு பொட்டு வைத்து அவற்றை வரிசையாக எறும்பு புற்றுக்கு முன்னால் போடு விடுகிறார்கள் .எறும்புகள் வெல்ல வாசனையை குறிவைத்து அரித்து எல்லா பவளங்களிலும் சிறு துளைபோட்டு விடுகின்றன .

இந்த விஷயம் தெரியவந்தபோது மன்னன் இத்தனை அறிவுள்ள பெண்கள் இருக்கவேண்டிய இடம் அந்தப்புரம்தான் என்று சொல்லி பெண் கேட்கிறான் . சாதியை விட்டு பெண் கொடுக்க செட்டியார் குலத்துக்கு விருப்பமில்லை . மறுக்கவும் முடியாது .ஆகவே செட்டியார் தன் வீட்டில் இருந்த நிலவறைக்குள் அப்பெண்களை போகச்சொல்லி மூடி மேலே மண்ணை நிரப்பி விட்டார். பிறகு எல்லாரும் அங்கிருந்து கிளம்பி நடந்து குமரிமாவட்டம் வந்து இரணீயலில் குடியேறுகிறார்கள் . இந்தக் கதையை இந்நாவலின் முக்கிய கதாபாத்திரமான உண்ணாமுலை ஆச்சி தன் பெரனும் கதாநாயகனுமாகிய திரவியத்துக்கு குழந்தையாக இருக்கும் போது வீட்டை பெருக்கி கோலம் போட்டபடி சொல்கிறாள் .குறியீட்டு ரீதியாகப்பார்த்தால் பெண் புதைக்கப்பட்ட மேடு மீதுதான்நேழுவீட்டு செட்டியார் குலமே கட்டப்பட்டுள்ளது .அந்தக் குற்றவுணர்வு தலைமுறைதலைமூறையாக கைமாறவும் படுகிறது .ஆனால் அடிப்படையில் அது ஆண்வழி அதிகாரக்குலம் .அதன் அடையாளம் உலகமே தனக்கானது என்று எண்ணும் கூனங்காணிப்பாட்டா .

ஆகவே நாகு அக்கா அவள் கணவனால் குழந்தைபெற முடியாதவள் என்று விலக்கப்பட்ட போது ,சர்வ சகஜமான அந்த செயலுக்கு எதிராக திரவி செயல்பட ஆரம்பித்தது ஒரு முக்கியமான புரட்சி .ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டுபோய் அக்காவிடம் எந்தப் பிரச்சினையுமில்லை என்று அவன் நிரூபத்தது ஒருவகையில் அடுத்த காலகட்டத்தின் ---அறிவியல் காலட்டத்தின்-- வருகையின் குறியீடுமாகும் .அவள் கணவன் அவளை ஏற்கமறுத்தபோது அவளுக்கு மறுமணம் செய்விக்க அவன்முயன்றது கண்டிப்பாக ஒரு பெரும் புரட்சி நடவடிக்கையே . ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை .மொத்த நாவலும் தீவிரமான அவலத்தில் முடிகிறது . இந்த அவல முடிவு பெரிதும் விவாதிக்கப்பட்டது . அந்த வலம் சினிமாத்தனமாக இருப்பதாக முதிர்ச்சியில்லா விமரிசகர்கள் சொல்ல அழகியல் மொழி அறிந்தவர்கள் அம்முடிவு அதுவரை நாவலுக்கு இருந்துவந்த அப்பட்டமான நிதரிசனப்போக்குக்கு ஒத்து வராமையினால் சற்று நம்பகத்தன்மையை இழந்து விட்டிருக்கிறது என்றார்கள் . ஆனால் ந்தன் விடையை நாம் இலக்கிய வடிவில் மட்ட்மே தேடி விட முடியாது . தலைமுறைகள் ஒரு நீண்டன் வாய்மொழிமரபின் , ஐதீக மரபின் இன்றியமையாத தொடர்ச்சியாகும் .அம்மரபில்ஈருந்துவரும் அவல முடிவை அதுவும் தவிர்க்க முடியாது . அதாவது அந்த பவளம் கோர்க்கும் கதை நாவலின் தொடக்கத்தில் வந்ததுமே குறியீட்டு ரீதியாக நாவலை அது தீர்மானித்து விட்டது .அதை நீல பத்மனாபன் மீறிவிட முடியாது . சொந்த வாழ்வில் அவர் அதை மீறி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் கதை எப்போதுமே கதைமரபின் தர்க்கத்துக்கு உட்பட்டது .

'தலைமுறை 'களின் நடை பெரிதும் பாராட்டப்பட்டது.ஏற்கனவே சொல்லப்பட்டது போல அது மிக நிதரிசனமான நடை .அதில் சுவாரஸியப்படுத்தும் அம்சங்கள் ஏதும் இல்லை .அழகுகளே இல்லை .உண்மையிலேயே அத்தகைய ஒரு வாழ்க்கைச் சூழலுக்கு எவ்வளவு உத்வேகம் இருக்குமோ அவ்வளவு உத்வேகமே அதிலும் உள்ளது. பொதுவாக இக்கியப்படைப்புகளில் கதைமையம் அல்லது கதைசொல்லி அறிவாளியாகவோ ,மிகுந்த நுண்ணுணர்வுள்ளவனாகவோ காட்டப்படுவதே வழக்கம் . காரணாம் அவன் மூலம் ஆசிரியர் வெளிப்படுகிறார் என்பதே .ஆனால் திரவி மிகச்சாதாரணமானவனாகவே காட்டப்படுகிறான்.லெளகீகமான , நடுத்தர வற்கத்துகே உரிய எல்லா கோழைத்தனங்களும் தயக்கங்களுமுள்ள ஒருவன் . அவன் புரட்சியாளனோ கலகக் காரனோ அல்ல .அவன் சற்று படித்து அதன்

மூலம் நவீன காலகட்டத்துக்குள் வந்தது மட்டுமே அவனுக்கும் பிறருக்குமிடையேயான வித்தியாசம் .இதன் மூலம் நாவலின் ஒவ்வொரு வரியிலும் நம்பகத்தன்மைமிக்க எளிமை உருவாகிவந்தது . ' 'சர்வ சாதாரணத்தின் கலை ' ' என்று தமிழில் எதையாவது சொல்லவேண்டுமென்றால் நீலபத்மநாபனின் இந்நாவலையே சொல்ல முடியும்.சாதாரணமான நடையின் சாதாரணத்தன்மையை மேலும் அதிகரிக்கும் முகமாக நீலபத்மநாபன் கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்லாமல் கதை சொல்லும் குரலுக்கும் வட்டார வழக்கை அளித்தார் .இது அக்காலகட்டத்தில் மிகவும் விவாதிக்கப்பட்டது .தூயதமிழ் வாதிகளின் எதிர்ப்பு நாவலுக்கு ஒரு எதிர்மறை விளம்பரமாகவும் அமைந்தது .

'சர்வசாதாரணம் ' என்பதற்கும் 'சர்வசாதாரணத்தின் கலை ' என்பதற்கும் ஏராளமான வேறுபாடு உண்டு . கலையின் சர்வசாதாரண இயல்பு ஒரு தோற்றமே . அது வாசக நம்பிக்கைக்காக உருவாக்கப்படும் ஒரு வெளிப்பாட்டு உத்தி மட்டுமே .கலை ஒரு போதும் சர்வசாதாரணமல்ல .சாதாரணமான நிகழ்வுகளின் பிரவாகமான வாழ்க்கை ஓட்டத்திலிருந்து சிலவற்றை பிரித்தெடுத்து முன்வைத்து ,அழுத்தம்தந்து ,உபரி அர்த்தம் அளித்து ,விளக்கி ,செறிவுபடுத்தி அதில் வாழ்க்கையின் ஒட்டுமொத்தம் சார்ந்த ஒரு பார்வையை அல்லது ஒரு அகத்தெளிவை குறிப்புணர்த்திக் காட்டுவதே இலக்கியக்கலையின் செயல்பாடாகும் .எல்லா கலையும் இவ்வியல்பினையே கொண்டிருக்கின்றன என்பார்கள் மொழியியல் பேராசிரியர்கள் .ஹால்லிடே முன்னிறுத்தல் [forefronting] என்று இதை விரிவாக விளக்குகிறார் . உதாரணமாக நித்ய சைதன்ய யதி ஒன்றை குறிப்பிடுவார் .வான்கா ஒரு ஏழை விவசாயியின் பழைய செருப்பை வரைந்தார் .அது ஒரு வெறும் பொருள்தான்.ஆனால் அதை முன்னிலைப்படுத்தி விடுகிறார் .அவரது கலை என்பது அங்குதான் செயல்படுகிறது . அதன் பிறகு அந்த செருப்புகள் வெறும் பொருட்களல்ல ,குறியீடுகள் ஆகிவிடுகின்றன அவை .அவற்றுக்கு உள்ளர்த்தங்கள் உருவாகி விடுகின்றன.உண்மையில் ஒரு பழைய செருப்பு உருவாக்காத பலவகையான மன அதிர்வுகளை அவை நம்முள் உருவாக்குகின்றன .

அதாவது உத்தி என்று பார்த்தால் மிகைப்படுத்தல் சாதாரணமாக்கல் ஆகிய இரண்டுக்குமே ஒரே மதிப்புதான் .தன்னளவில் எதற்கும் மதிப்போ இழிவோ உருவாவது இல்லை .ஒப்பீடூ சார்ந்து தற்காலிகமான மதிப்பீடுகள் உருவாகுமென்பது உண்மையே .அதாவது ஒரு சூழலில் எல்லா படைப்புகளுமே மிகையான கற்பனாவாதத் தன்மையுடன் இருக்கும்போது வரும் அப்பட்டமான யதார்த்தவாதப்படைப்பு அச்சூழலில் அதிர்ச்சியையும் அதன்மூலம் கவன ஈர்ப்பையும் அதன் அடுத்த கட்டமாக விமரிசன முக்கியத்துவத்தையும் பெறக்கூடும்.அதேபோலவே யதார்த்தவாத படைப்புகள் மலிந்த காலத்தில் வெளிவரும் அற்புத யதார்த்த படைப்புக்கும் அந்த முக்கியத்துவம் ஏற்படலாம் . ஆனால் படைப்பின் மொத்தமான முக்கியத்துவமென்ன

அதற்கு அவ்வுத்தி என்ன வகையில் பங்காற்றியுள்ளது என்பதே முக்கியமானது . தலைமுறைகளின் மேல்தளம் சாதாரணமானது என்றாலும் அதன் அடித்தளத்தில் நாம்வாழும் சமூகம் சார்ந்த சிக்கல்கள் சருமத்துக்கு அடியில் ரத்தக்குழாயின் பின்னல்கள் போல அடர்ந்துள்ளன. ஒரே ஒரு உதாரணம் சொல்லலாம்.திரவி தான் சார்ந்த ஏழுவீட்டு செட்டியார் சாதியை அதன் பழைமைப்போக்குகளில் இருந்து மீட்டு அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல முயல்பவன். அதேசமயம் அவன் தன்னை அறியாமலேயே பழைய காலத்துக்கான ஏக்கத்தையும் வெளிப்படுத்தியபடியே இருக்கிறான்.இந்தமுரண்பாடு எளிதில் விளக்கிவிடக் கூடியது அல்ல

திரவி இலட்சியவாதி அல்ல .தன் அக்காவை அவளது வாழ்க்கையின் துக்கத்திலிருந்து மீட்பதே அவனது இலக்கு .அவன் புதியகாலத்துக்கு போக முனைவது ஒரு சமூகஜீவியாக .அவனது மனம் இளமைப்பருவத்தை எண்ணி கடந்தகால வாழ்க்கைக்காக ஏங்குவது ஒரு தனிமனிதனாக . இத்தகைய ஆழமான அகமுரண்பாடுகள் நிரம்பிய ஒரு பரப்பாக உள்ளது தலைமுறைகளின் கதையோட்டம் .

'தலைமுறை 'களை மிக இளம்வயதில் படிக்கும்போது விசித்திரமான ஒரு பொறுமையின்மை ஏற்படும். திரவி என்ன செய்தும் ஒன்றுமே நிகழவில்லை .கூடிக்கூடிப் பேசுகிறார்கள்.மனக்கசப்புகளையும் நெகிழ்வுகளையும் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் .உறவுச்சிக்கல்கள் அடர்ந்து விரிந்தபடியே செல்கின்றன . மிக எளிய விஷயம் ,ஆனால் அது நடக்கவே இல்லை . ஒரு கட்டத்தில் தமிழக வாழ்க்கைச் சூழலை அறிந்தவர்களுக்கு நாகுவின் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற உண்மை புலப்பட்டுவிடும்.அதன் பின்பும் பேச்சுகள் .அவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.குடும்பம் இரணியலைவிட்டு கிளம்புகிறது .நம் எளிய வாசக மனம் வேறு வகை முடிவுகளுக்காக துடிப்புகொள்வதும் ஆசிரியர் மீது மனக்கசப்பு கொள்வதும் இயல்பே . ஆனால் இம்முடிவே தமிழ் வாழ்க்கைச்சூழலில் பெருமளவு நடக்கக் கூடியது .மாறாக நடப்பது விதிவிலக்கே . 'தலைமுறைகள் ' அதன் யதார்த்த இயல்புப்படி விதியையே சார்ந்து இயங்க முடியும் .விதிவிலக்குகளை மையமாக்கும் படைப்புகள் கற்பனாவாதம் நோக்கி நகர்கின்றன.

'தலைமுறைகள் 'அவ்வகையில் ஒரு முன்னோடியாக அமைந்தது. நாம் முதலில் எழுதவேண்டியது கனவுகளையல்ல நிதரிசனத்தை என்று அது கற்பித்தது . எந்தக் கனவும் நிதரிசனம் சார்ந்து செயல்படும்போதே முக்கியத்துவம் பெறுகிறது என்று பொட்டில் அடித்தது போல சொல்லியது. இப்போது யோசிக்கும்போது வியப்பு ஏற்படுகிறது . அக்காலகட்டம் அரசியல் நோக்கோடு உற்பத்தி செய்யப்பட்ட வெற்றுக்கனவுகளும் ஆடம்பரச் சொற்களும் காற்றில் நிரம்பியருந்த காலகட்டம் . கற்பனாவதப்படைப்புகளை வாசகர்கள் ருசித்து விழுங்கிக் கொண்டிருந்த காலகட்டம் .அச்சூழலில் இருந்தபடி இத்தனை கறாரான யதார்த்த உலகை ஆக்குவதற்கு தன் கலையில் முழுக்க ஆழ்ந்து போகும் மனஒருமை கூடவேண்டும் . தன் கலைமீது ஆழமான நம்பிக்கை உருவாகவேண்டும் . மேலான கலைப்படைப்பு அதை சகஜமாக உருவாக்கிவிடும்போலும்.அந்த கலையம்சத்தால்தான் அது உருவான காலகட்டத்தின் எல்லா சூழல்சார்ந்த அர்த்தங்களும் அடிக்குறிப்புகளும் இல்லாமல்போன அடுத்த காலகட்டத்திலும் அதற்கடுத்த காலகட்டத்திலும் அந்நாவல் சட்டையுரித்து முன்னகரும் அரவம் போல புற அடையாளங்களையெல்லாம் கழட்டிப்போட்டு சென்றபடியெ இருக்கிறது போலும்.

[மூன்று ]

நீல பத்மநாபனின் அடுத்த முக்கியப் படைப்பு 'பள்ள ிகொண்ட புரம் ' . தமிழில் இதுவும் ஒரு முன்னோடி முக்கியத்துவம் உடையது.இதுவே தமிழில் எழுதப்பட்ட முதல் நனவோடை உத்தி[stream of conscious ] நாவல் எனப்படுகிறது.திருவனந்தபுரம் நகரின் பின்னணியில் அனந்தன் நாயரின் வாழ்க்கையின் வீழ்ச்சியின் சோகமான சித்திரத்தை அளிக்கும் இந்நாவலே நீல பத்மநாபனின் சாதனை என்று சொல்லப்படுவதுண்டு.அதற்கு முக்கிய காரணம் 'தலைமுறைகள் ' போல இந்நாவலில் விரிந்து செல்லும் வடிவம் இல்லாமல் கச்சிதமான வடிவம் உள்ளது என்பதே. பூஞ்சை உடலும் மெல்லிய மனமும் உள்ள குமாஸ்தா அனந்தன் நாயரின் பேரழகியான மனைவி கார்த்யாயினி விகரமன் தம்பி என்ற அரசாங்க உயர் அதிகாரியால கைப்பற்றப்படுகிறாள் .அவாரால் ஒன்றும் செய்யமுடியாத நிலையில் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகிறார் . வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில் திருவனந்தபுரம் நகரில் நிலைகொள்ளாது அலையும் அனந்தன்நாயரின் ஒருநாள் நினைவுகள் மூலம் நாவல் சொல்லப்படுகிறது . காலம் கடந்துசென்றபோது தவறு சரிகள் எல்லாம் மழுங்கிப்போய்விடுகின்ற்ன.அனந்தன்நாயரின் மகனுக்கு அம்மாவின் தற்போதைய செல்வாக்கு மூலம் சில லாபங்கள் அடையும் இலக்கு . பெண்ணுக்கு அப்பா மீது கரிசனம் . ஒழுக்கம் அறம் தியாகம் ஒன்றுக்கும் உறுதிப்பாடு ஏதுமில்லை என்ற உணர்வை அடைந்த நாயர் தன் மன ஆவேசத்தை வெளிப்படுத்தி முடிக்கிறார் .

எழுபது எண்பதுகளின் வடிவபோதத்தை இந்நாவலின் சுருக்கமான கச்சிதவடிவம் பெருமளவுக்கு திருப்திப்படுத்தியது . அனந்தன் நாயரின் வாழ்க்கை அவரது சிதறிய நினைவுகள் மூலம் துளிதுளியாக சொல்லப்படுவது வாசகனுக்கு பல ஊக இடைவெளிகளை உருவாக்குகிறது . ஆனால் அக்கால கட்ட விமரிசகர்கள் சிலர் இக்கதையை நேரடியாகவே சொல்லியிருக்கலாம் என்று இப்படைப்பு குறித்து கருத்து சொன்னதுண்டு.[கோ . ராஜாராம் ,கணையாழி] .ஆனால் இன்றைய வாசிப்புக்கு இவ்வடிவமே இப்படைப்புக்கு உரிய இயல்பான வடிவம் என்று படுகிறது . இந்நாவலை நேரடியான சித்தரிப்பாக எழுதியிருப்பின் இப்பிரச்சினையின் விரிவான சமூக அரசியல் பின்னணிக்குள் போகவேண்டியிருக்கும். கேரளச் சூழலில் ஒற்றைமணமுறை நடைமுறைக்கு வர ஆரம்பித்த காலகட்டத்தில் நடக்கும் நாவல் இது .ஜனநாயக முறை உருவாகாத ,மன்னராட்சிக்கால அரசியல் பின்னணி அப்போது இருந்தது . கார்த்யாயினி விக்ரமன் தம்பியுடன் போனதை அப்பின்னணியில் வைத்தே விரிவாக பேச முடியும் ஆசிரியரின் இலக்கு அதுவல்ல.அது முழுக்க அனந்தன் நாயரிலேயே குவிகிறது . இன்னும் சொல்லப்போனால் அனந்தன்நாயரில் கூட அல்ல .அவரது 'சாமன்யத்தனத்தில் ' மட்டும்தான் .அதற்குரிய வடிவையே ஆசிரியர் தேர்வு செய்கிறார் .அது கூட தவறுதான் .நீலபத்மநாபனுக்கு இலக்கியத்தில் வடிவதேர்வு ஏதும் இல்லை .அவர் பெரும்பாலும் அகமன இயக்கத்தை [அதை அவர் கடவுள் என்றே சொல்கிறார் ] நம்பி எழுதும் படைப்பாளி.

ஆனந்தன் நாயரின் அந்த ஒரு நாள் வாசகனுக்கு முன்னரே தெரியாதென்றாலும் அனந்தன் நாயருக்கு ஏதோ ஓர் உள்ளுணர்வால் தெரிந்தபடி ஒரு முக்கியமான நாள். ஆகவே தான் அன்று முழுக்க அவர் ஒரு நெகிழ்ந்த மனநிலையில் , உத்வேகம் ஓயாத எண்ண பாய்ச்சலுடன் இருக்கிறார் . அந்த ஒருநாள் தேர்வு செய்யப்பட்டுள்ளதே அதற்குத்தான் . நீண்ட வாழ்க்கை முழுக்க அம்மாதிரி உக்கிர உணர்வுகளுடன் அவர் இருந்திருக்க நியாயமில்லை . அவளை மறந்த நாளும் அவளை மன்னித்த நாளும் எல்லாம் இருந்திருக்கும் . அதாவது அக்கதையை உக்கிரம் குறையாமல் சொல்ல அந்த நாளே உகந்தது .அந்த நாளில் தான் அவரது ஆழ்மனம் நிலப்பரப்பை மீறி வெளியே வந்து வழிகிறது .இந்த அம்சத்தை அன்றைய முக்கிய விமரிசகர்கள் எவருமே கவனித்ததாக தெரியவில்லை . 'பள்ளிகொண்ட புரத்தின் 'மிக முக்கியமான அம்சம் அதில் அந்நகரம் வெறும் பெளதீக பின்னணியாக வரவில்லை என்பதே .அது அனந்தன் நாயரின் மனமேதான்.அதன் ஒவ்வொரு இடமும் , ஒவ்வொரு பொருளும் அவரது மனத்தின் ஒருபகுதியின் குறியீடாகும். எந்த இடம் அல்லது பொருள் அவரில் எந்த நினைவை உருவாக்குகிறது என்ற கவனம் வாசகனுக்கு இருக்குமென்றால் இந்நாவலை மிக விரிவாக அவன் வாசித்து விரிவுபடுத்திக் கொள்ள முடியும். துரதிருஷ்டவசமாக தமிழில் அன்று பிரபலமாக இருந்தது ஒன்று ' கச்சிதவடிவத்து 'க்கான தேடல் .மறுபக்கம் சமுக்க அரசியல் கோட்பாடுகளுக்கான தேடல். ஆகவே அத்தகைஉய ஒரு கூர்ந்த வாசிப்பு அந்நாவலுக்கு கிடைக்காமலே போயிற்று . அத்தகைய வாசிப்பை கேரள விமரிசகரும் கவிஞருமான என் வி கிருஷ்ண வாரியர்தான் நிகழ்த்தியுள்ளார் . அதைப்போல அனந்தன் நாயரின் மனத்தில் ஒரு நினைவு எப்படி இன்னொரு நினைவை இழுத்து வருகிறது என்ற சூட்சுமமும் வாசகக் கவனத்துக்கு உரியது .

' பள்ளி கொண்டபுரம் ' அதன் எளிமையான நேரடிமொழியை மீறிய பலவகையான உளவியல் சிக்கல்கள் கொண்டது .அனந்தன் நாயரின் மனநிலை குரூரத்திலிருந்து சுயவதைக்கும் மாறி மாறி ஊசலாடுவதை அந்நாவலில் கவனிப்பது மிக முக்கியமான இலக்கிய அனுபவம் .என் கேரள நண்பர் சொன்னார் தன்னை வதைக்கப்பட்டவனாகவும் அநீீதி இழைக்கப்பட்டவனாகவும் ,அதை மீறி நன்மை செய்யும் தியாகியாகவும் சித்தரித்துக் கொள்வது அனந்தன் நாயருக்கு ஆழமான சுயதிருப்தியையும் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் அளிக்கிறது .ஆகவே அவர்தான் தன் மறைமுகமான குரூரம் மூலம் அவளை துரத்த்குகிறார் .கார்த்யாயினியின் அழகு அனந்தன் நாயருக்கு அளித்த தாழ்வுணர்வு அதற்கு காரண என்று கருதலாம் . ஒரு சமான்யன் தன்னை சாமான்யன் மட்டுமே என அனுதினமும் அறியும்போது ஏற்படும் சுயவெறுப்பும் அதை வெல்ல உருவாக்கிக் கொள்ளும் முடிவற்ற மனநாடகங்களும் இத்தனை கூர்மையாக வெளிப்பட்ட நாவல்கள் அபூர்வமாகவேரிருக்க முடியும். அவ்வகையில் எக்காலத்துக்கும் உரிய படைப்பு இது.

[ நான்கு ]

நீல பத்மனாபனின் 'உறவுகள் ' அவரது முக்கிய நாவல்களில் ஒன்று. முந்தைய நாவல்களைப்போலஆதிகமாக இது கவனிக்க்ப்படவில்லை .மறுபதிப்புகளும் வரவில்லை .மரணப்படுக்கையில் கிடக்கும் அப்பாவை சுற்றி வந்து நகரும் மகனின் நினைவுகள் வழியாக சொல்லப்படும் இந்நாவல் தமிழ்க மனத்திலுள்ள உறவு வலையின் ஒரு முக்கியமான சித்திரம் என்று சொல்லலாம் . இதுவெளிவந்த போது இதில் ஃப்ராய்டிய சிதனையை தேடியவர்கள் உண்டு. அப்போது இருத்தலியம் பிரபலமாக இருந்தது . இரு மனிதர்களுக்கிடையேயான உறவு மோதலால் உருப்பெறுவது என்பது ஒரு சூத்திரமாக பயிலப்பட்ட காலம்ணுறவுகளில் அப்பா மகன் மோதல் இல்லை . அப்பாவுக்காக உருகி நினைவுகளில் அலைந்து அவரது neelapadmanaban தொடர்ச்சியாக தன்னை கண்டடையும் ராஜகோபாலின் கதை இது . பரமேஸ்வர பிள்ளையும் அதற்கேற்ப குழந்தைகளுக்காக தன்னையே பலியிடும் குணச்சித்திரமாகவே படைக்கப்பட்டுள்ளார் . இந்நாவலில் இந்த்தலியத்தையும் ஃப்ராய்டியத்தையும் தேடியவர்களில் நானும் ஒருவன் .ஆனால் என்மப்பா இறந்த போது என் சொந்த அனுபவங்கள் ஃப்ராய்டியத்தாலோ இருத்தலியத்தாலோ விளக்கக் கூடியதாக இருக்கவில்லை .இந்நாவல் அந்த மன இயக்கத்தின் ஒவ்வொருதுளியுடனும் ஒத்துப்போவதை அப்போதுதான் கண்டேன். அது குறித்து நீல பத்மநாபனுக்கு எழுதவும் செய்தேன். உண்மையில் என் இலக்கிய வாழ்வில் அது ஒரு கண்திறப்பு .நமது படிப்பையோ ,புத்திசாலித்தனத்தையோ அல்ல நமது சொந்த வாழ்வனுபவத்தையே இலக்கியப்படைப்பு மீது நாம் பிரயோகித்துப்பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது .

இந்திய சூழலில் மகனின் பிரச்சினை அப்பாவை எப்படி சுவீகரித்துக் கொள்வது எப்படி , அவரது தொடர்ச்சியாக இருக்கும் அதே சமயம் தன் தனித்தன்மையையும் தக்க வைத்துக் கொள்வது எப்படி என்பதே . இந்திய அப்பாக்கள் தியாகத்தால் தான் மகனுடன் உறவை நீட்டிக்கிறார்கள். விதிவிலக்குகளைதவிர்த்தால் இதுவே இங்குள்ள பொது மரபு . மோதல் கண்டிப்பாக உண்டு ,ஆனால் அதைவிட முக்கியமானது மகனில் எஞ்சும் நன்றி /குற்ற உணர்வுதான் . ஆகவே அவரை எதிர்கொள்வது சிரமமாக இருக்கும்போது அவரை இம்மிகூட புறக்கணிக்கவும் முடியவில்லை .அதைவிட முக்கியமான விஷயம் அவர் மூலமே அத்தனை சமூகத் தொடர்பும் அவனுக்கு இருக்கிறது என்பதே.இன்னார் பிள்ளை என்றே அவன்ஆடையாளப்படுத்தப்படுவான் . அத்தனை உறவுகளும் அவனுக்கு அப்பா மூலம் வந்து சேர்வதே . இளமையில் அவன் உறவுகளை உதாசீனம் செய்யலாம் ,முதுமை நெருங்க நெருங்க அது முடியாது .அப்போது அவன் மேலும் மேலும் தன் தந்தையை நெருங்கி வருவான் .மெல்ல உருமாறி தன் தந்தையே ஆகிவிடுவான்.

ராஜகோபாலின் பிரச்சினையும் இதுதான் . அப்பாவுக்கு உடல் நலமில்லை என்ற செய்தி வந்தபோது உடனே ராஜ சேகரன் மனத்தில் எழுந்த முதல் எண்ணம் செலவுக்கணக்குதான். ஆனால் குற்ற உணர்வும் பழைய நினைவுகளும் கலந்த மனநெகிழ்வு , லெளகீக அலைச்சல் முதலியவை வழியாக 18 நாள் அப்பாவின் மரணப்படுக்கை அருகே இருந்த அவன் இறுதியில் அவரை கடவுளாக்கி நிம்மதி அடைந்து விடுகிறான். கூர்ந்த வாசிப்பு அளிக்கப்படாத இந்நாவலும் தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டது . மிக அபத்தமான இருத்தலிய வாசிப்பை இதற்கு அளித்த சுந்தர ராமசாமி இந்த புறக்கணிப்புக்கு முக்கிய காரணமானார் என்றால் அது மிகையல்ல . ராஜகோபால் தன் தந்தையுடனான உறவில் ஏன் மோதலே இல்லாமல் ஒத்திசைவும் மனநெகிழ்வும் மட்டுமே உள்ளவனாக இருக்கிறான் என்றார் ராமசாமி .எந்த மகனும் அப்பா மீது மனக்குறைகள் இல்லாமல் இப்படி முழுமையான மனக்கசிவுடன் இருக்கமாட்டான் ,இது செயற்கையானது என்றார் .[ இப்போது யோசிக்கும்போது தனிப்பட்ட முறையில் மிக வருத்தம் தரும் ஒரு விஷயம் தோன்றுகிறது.இதை ஒரு எளிய அக்கப்போராக எவரும் காணலாகாது .நீல பத்மநாபன் படைப்புகளை பற்றி மிக எதிர்மறையான விமரிசனங்களை மிக விரிவான நேர் பேச்சுகளிலும் உரைகளிலும் முன்வைத்து அவர் மீதான விமரிசனக் கணிப்புகளை உருவாக்கக் காரணமாக இருந்த சுந்தர ராமசாமி எங்குமே அந்தக் கருத்துக்களை கறாராக பதிவு செய்து விவாதத்துக்கு வரவேயில்லை. இது ஒரு படைப்பாளிக்கு இழைக்கப்படும் முக்கியமான அநீதியாகும்.சுந்தரராமசாமி மீதான விமரிசனங்களை சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்துமுன்வைத்து வந்தனர் . அது அவருக்கு முக்கியத்துவத்தையும் உருவாக்கியது.அம்மாதிரி முக்கியத்துவம் பிறருக்கு உருவாகலாகாது என்பதில் அவர் சிறப்பான கவனம் செலுத்தினார் என்றே கொள்ளவேண்டியுள்ளது . இதை தி .ஜானகிராமனுக்கும் ப . சிங்காரத்துக்கும் ,ஆ.மாதவனுக்கும் எல்லாம் அவர் செய்தார் . இதில் அறியாமல் பங்கு பெற்ற குற்ற உணர்வு எனக்கு உண்டு .]

ராஜகோபாலின் அந்த 18 நாள் மனநெகிழ்வு ஒரு ஆழமான சுயபாவனையே என்பது நாவலிலேயே தெளிவாக உள்ளது .படிப்படியாக அவன் அம்மனநிலையை வளர்த்து எடுக்கிறான். அவர் உடல்நலமில்லை என்று சொன்னபோது அதை கவனிக்காதபாவனையில் போனவன்தான் அவன். இந்த பாவனை ஆழ்மனம் போடும் ஒரு நுட்பமான வேடம் .ராஜகோபாலுக்கே அது தெரியாது .மிக சீக்கிரத்திலேயே அவன் அவரை ஒரு படமாக்கி பூபோட்டு வணங்க ஆரம்பித்து தன் அன்றாட வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிவிடுவான்.அவர் விட்டுசென்ற உறவுகளில் மரபுகளில் எவை அவனுக்கு வசதியானவையோ அவற்றை மட்டும் அவன் பேணுவான் . அதாவது அவனுக்கும் அவன் தந்தைக்குமான மோதலின் ஒரு சமமான மறுதட்டுதான் இந்த நெகிழ்வு.ராஜகோபாலை பொறுத்தவரை தந்தை தரும் குற்ற உணர்வையும் அவர் வழியாக வரும் உறவின் வலையையும் எப்படி கையாள்வது என்பதே பிரச்சினை . ராஜகோபாலின் நெகிழ்ச்சியை , அதனூடாக ஓடும் சுயபாவனைகளை ,உறவுகளில் அவனது சுயநலப்பார்வையை கூர்மையாக நீலபத்ம நாபன் சுட்டி காட்டுகிறார்.நகுலன் 'தமிழ் நாவல்களில் இந்த அளவுக்கு எந்தக் கதாபாத்திரமும் தோலுரிக்கப்பட்டதில்லை ,அதன் வேஷம் கலைக்கப்பட்டதில்லை ' ' என்று குறிப்பிட்டார் . அவ்வகையில் தமிழின் முக்கியமான படைப்புகளில் ஒன்று இந்நாவல் .

[ ஐந்து ]

நீல பத்மநாபன் நாவல்களின் சிறப்பம்சம் அவை அறிவுபூர்வமானவை அல்ல என்பதே.அவருக்கு நுட்பங்கள் தன் படைப்புகளில் கூடியிருக்கும் விஷயமே தெரியாது.தன் எழுத்தில் மிதமிஞ்சிய உணர்ச்சியுடன் ஈடுபடுவதை மட்டுமே அவர் செய்து வருகிறார் . பழுத்த லெளகீக வாதியின் பார்வை அவருடையது. ஆன்மீக விஷயங்களை அவர் எழுதும்போதுகூட அந்த லெளகீக பார்வையே மேலொங்கியுள்ளது . மனமயக்கங்கள் இல்லை. அக , புற ஆராய்ச்சிகளும் இல்லை.கூடுமானவரை 'அப்படியே ' சொல்ல முயல்கிறார். அவர் பிற கதாபாத்திரங்களை பொதுவாக அந்த அளவுக்கு கூர்ந்து கவனிப்பதில்லை.ஆனால் அவர் தன்னை[தன்னை போன்று வரும் மையக் கதாபாத்திரத்தை ]மிக ஆழமாகக் கவனிக்கிறார் . தோலுரிக்கிறார் .தன் விஷயத்தில் இந்த அளவுக்கு ஈவிரக்கமற்று செயல்பட்ட தமிழ் எழுத்தாளர் இல்லை .விளைவாக பல முதல்கட்ட வாசகர்கள் நீலபத்மநாபனே ஒரு சுயநலவாதி , அற்பத்தனமானவர் தான் என்ற மனச்சித்திரத்தைக்க்கூட அடைந்துள்ளனர் . இந்த மூர்க்கமான சுயாறுவை சிகிழ்ச்சைமூலம் அவர் நாவல்களில் மிக ஆழமான ஒரு உளவியல் வெளிப்பாட்டுக்களம் உருவாகிவருகிறது .அவரது எல்லா நாவல்களையும் அவை ஒருவகை உளவியல் ஆவணங்கள் என்ற அடிப்படையில் நாம் மிக கூர்ந்து வாசிக்கவேண்டியுள்ளது.

மின் உலகம் ஃபைல்கள் போன்ற நாவல்களில் அவரது அலுவலக சூழல் குறித்து நுட்பமான அவதானிப்புகளை நீல பத்மநாபன் முன்வைத்துள்ளார். ஆயினும் அவை முக்கிய படைப்புகளாக ஆகாமல் போனதற்கு பல காரணங்கள் உண்டு . லெளகீக நுட்பம் நிரம்பிய அப்பார்வை அந்நாவல்களில் வாழ்க்கையின் அடிப்படை வினாக்கள் நோக்கி நகரவில்லை என்பதே. அவரது பிற்கால நாவல்கள் எவையுமே ஆழமான மனநகர்வினை அளிப்பவையாக இல்லை.அதற்கு காரணம் அவை மேலோட்டமான சுய விசாரணக்ளாக நின்றுவிட்டன என்பதும் அவற்றி சாராம்சம் நோக்கி நீலபத்மநாபனின் பார்வை விரியவில்லைஎன்பதும் தான் .குறிப்பாக தேரோடும்வீதி என்ற ப்ரும் நாவல் சமகால இலக்கிஅய் சூழல் குறித்த அவரது குற்றம்சாட்டல்களாகவே நின்றுவிட்டது .

நீலபத்மநாபனுக்கு தமிழ்ச் சிறுகதை மரபில் இடமில்லை.அவர் அடிப்படையில் நாவலாசிரியர்.

சிறுகதையின் கச்சிதமும் கூர்மையும் கவித்துவமும் குறிப்பமைதியும் பெரும்பாலான நீல பத்மநாபன் கதைகளில் கைகூடவில்லை .வெறும் அனுபவ விவரணைகளாகவே அவை நின்று விடுகின்றன. கவிதைகளும் அப்படியே.கவிதைகளில் நீலபத்மநாபன் உணர்ச்சிப்பீரிடலாக புலம்புகிறார் . ,

நீல பத்மநாபன் யதார்த்த [நாச்சுரலிச ]எழுத்தின் காலத்தை சேர்ந்தவர் . ஆகவே அவரது எழுத்தில் தத்துவார்த்த பார்வையும் , செதுக்கப்பட்ட கச்சித வடிவமும் இல்லை. மனம் ஆசிரியரால் ஆய்வு செய்யப்பட்ட வடிவில் வெளிவருவது இல்லை .மாறாக அது ஒரு வகை தன்னிச்சையான வெளிப்பாடு போல நேரடியாக சொல்லப்படிகிறது .நீலபத்மநாபனின் மொழிநடையில் செயற்கையான சொல்லாட்சிகள் ,பொருத்தமற்ற வருணனைகள் உண்டு . புதிய வாசகர்களுக்கு அவரது நடை அவரை ஒரு முதிர்ச்சியற்ற படைப்பாளி என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடும் . அவரது நாவல்களில் ஒரு நிகழ்ச்சி எந்த அளவுக்கு ஆழ்மனத்தின் நுட்பமான வெளிப்பாடாக உள்ளதோ அந்த அளவுக்கு அவற்றின் சித்தரிப்பும் மொழியும் தட்டையாக இருக்கும். அதாவது கற்பனையற்ற ஒரு சாதாரண மனிதன் நம்மிடம் தன் வாழ்க்கையைப்பற்றி பேசுவதுபொல அவை இருக்கும் .அக்காரணத்தாலெயே அவற்றை நாம் தவறவிட்டுவிட வாய்ப்புண்டு

நீலபத்மநாபனை அளவிட நமக்கு இருக்கவேண்டிய அளவுகோல் அவரது காலத்துக்கும் நமக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். இயல்புவாத எழுத்துக்கும் பின்நவீனகால வடிவங்களுக்கும் ஒரே சமயம் பொருந்துவதாக இருக்கவேண்டும் . அப்படியானால் அது வடிவம் சார்ந்ததாக இருக்க முடியாது . இலக்கியவாசிப்புக்கு எப்போதும் அடிப்படையாக அமையும் வாழ்க்கை சார்ந்ததாகவே இருக்க முடியும் .மிக தோராயமாகவே அந்த அளவுகோலைப்பற்றி நாம் பேச முடியும்.இப்படி சொல்லலாம். ஒரு இலக்கியப்படைப்பு வாழ்க்கையின் ஏதாவது ஒரு தளத்தை வாழ்ந்து பெற்ற அனுபவத்துக்கு சமானமாக நமக்கு விளக்கிக் காட்டுகிறது .வாழ்க்கையின் சாராம்சம் சார்ந்த ஒரு மனநகர்வினை நமகு அளிக்கிறது நீல பத்மநாபனின் நாவல்கள் அந்த அர்த்தத்தில் தமிழின் மிக முக்கியமான கலைப்படைப்புகளேயேகும்.

************

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்