Mar 16, 2010

இவளோ ? - லா.ச.ராமாமிருதம்

லா..ராமாமிருதம்

மதில்கள் போன்ற பாறைகளின் மேல் மேகங்கள் பொங்கித் தளைத்து நுரை கக்கின.

சென்னையில் கானல் கொடுமையை வருடக் கணக்கில் அனுபவித்தவனுக்கு இங்கு கோடை தெரியவில்லை. வேர்வையும் மறந்தது.

ஆனால் வெய்யிலை மறக்க நான் இங்கு வரவில்லை.

உத்யோகம் புருஷ லட்சணம்.18120731

'ராமாமிருதம், உமக்கு மேற்பதவி வேணுமானால் இனி சென்னையில் இல்லை. நீர்  வெளியூரு போகவேண்டியதுதான். நான் சொல்லவில்லை. இது உங்கள் சங்கத்தின் தீர்ப்பு. இருபத்துமூன்று வருடங்களாய் உயர உயர இதே ஆபீசில் இருந்துவிட்டார்களாம். உங்கள் சங்கத்திற்குக் கண்ணைக் கரிக்கிறது. இப்போதெல்லாம் நிர்வாகம், நிர்வாகஸ்தர் கையிலா இருக்கிறது ? இருந்தாலும் களபலிக்கு உம்மைத் தேர்ந்தெடுத்திருப்பதே உமக்கு தனிப் பெருமையல்லோ ? என்ன சொல்கிறீர்கள் ? '

நான் ஒன்றும் சொல்லவில்லை.

தனிப் பெருமைக்கும் நான் ஆசைப்படவில்லை.

பதவிக்கும் ஆசைப்படவில்லை. இதுவரை நான் உழைத்தது போதாதா ?

ஆனால் சேர்த்து வைத்து அவளுக்கு இருக்கிறதே '

'நன்னாயிருக்கு, வலிய வர சீதேவியை நீங்கள் காலால் உதைச்சுத் தள்ளறது ' தெருவில் போறவா கல்லால் அடிக்காட்டா, ரெண்டு முழம் முண்டில் நீங்கள் ஆபீசுக்குப் போயிடுவேள். ராத்திரி உங்களுக்கு மோருஞ் சோறு போறும், நாங்கள் அப்படியா ? உங்கள் வயதென்ன ? என் வயதென்ன ? 'பாங்க் ஏஜெண்ட் மாமி 'ன்னு என்னை நாலுபேர் சுட்டிக் காட்டினால் எனக்கு வேண்டியிருக்காதா ? தீபாவளிக்குத் தீபாவளி பட்டுப் புடவை எல்லாம் நீங்கள் செயலில் இருக்கும் வரைதானே ? வைரத்தோடு ஆசையைத்தான் நான் அறவே துறந்தாச்சு.

'அடியே ஹேமா, செப்பு மாதிரி உன் காதுக்கு வைரத்தோடு எவ்வளவு அழகாயிருக்கும் தெரியுமா ? நீங்கள் எங்கள் வீட்டிற்கு குடித்தனம் வந்திருக்கும் யோகம், எங்கள் தட்டான்கிட்டேயே சொல்லி வெச்சு நல்லதா, மலிவா வாங்கித் தரேன்னு சியாமளா மாமி படிச்சுப் படிச்சு அடிச்சுண்டதெல்லாம் செவிடன் காதில் சங்காப் போச்சு. ஆமா, என் குறையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்--குமாருக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் ஆக வேண்டாமா ? சேகர் காலேஜ் படிக்க வேண்டாமா ? கண்ணனுக்கு ஒரு வழி புலப்பட வேண்டாமா ? காயத்ரீ கல்யாணம் என்ன ஆறது ?

'அப்புறம் நமக்கு ஒரு கையொட்டி இருக்கே ஸ்ரீகாந்த், ஐயாவுக்குப் பல்லக்கின்போது பையாவுக்கு தொட்டில்னு அவனை ஏலம் போடறதா ? எல்லாம் கிடக்கு எனக்கு இருக்கிறது போறும்னு பொறுப்பில்லாமல் பேசினால் என்ன அர்த்தம் ? என்ன அர்த்தம்னு கேக்கறேன் ? '

கேட்கிறாள்... அடுக்குகிறாள். நான் எங்கிருந்தாலும் கேட்டுக் கொண்டேயிருப்பாள்.

ஆகையால் நான் இங்கிருக்கிறேன்.

ஆனால் குடும்பம் இன்னும் சென்னையில்தான் இருக்கிறது.

பாதிப் பள்ளிக்கூடத்தில் சட்டிப் பானையைத் தூக்க முடியுமா ? என் உத்தியோகம் என்னைப் பந்தாடினாலும் என் ஒண்டி செளகரியத்துக்காகத் திடாரென்று இஷ்டத்துக்குக் குடும்பத்தைக் கலைக்க முடியுமா, குழந்தைகளை ஓட்டல் சாப்பாட்டில் தவிக்க விட்டுட்டு ? வளரும் பயிர்களாச்சே '

இதுவரை குழந்தைகளை விட்டு நெடுநாள் பிரிந்ததில்லை. இப்போது மாலை வேளையில் ஆபீஸ் மொட்டை மாடியில் நிற்கையில், நினைவு என்னையும் மீறிக் குடும்பத்தின் மீது சாய்கிறது; முக்கியமாக ஸ்ரீகாந்த் பெட்ரூம் லைட் சிம்னி போன்று அழகிய சிறு உருண்டைத் தலை. சிறு கூடாய் உடலும் அதே அளவில் வார்ப்படம். 'லாத்திரி ஆச்சே, அப்பா எப்போ வருவார் ? அம்மா. லாத்ரி ஏன் வரது ? '

'நான் பெரியவனானா என்ஜின் டைவர் ஆகப் போறேன். '

'அப்பா, டைவர் பெரீவனா ? கண்டக்டர் பெரீவனா ? கண்டக்டர் பிகில் கொடுத்தாத்தானே டைவர் போகலாம் ?

'ஏண்டி காயத்திலி, பார்த்தயாடி என் பாடி பில்டர் தோளிலே தவளை வரது ' '

'நீதான் குண்டோ ? என்னை வினை வினைங்கறேளே, நானும் குண்டாயிடுவேன்... '

காயத்ரீ ஒரு துரும்பைக்கூட எடுத்து நகர்த்த மாட்டாள். சதா பள்ளிக்கூடம், ஸ்பெஷல் கிளாஸ், டான்ஸ், தையல், படிப்பில் படுதுடி. வகுப்பில் அவள்தான் லீடர். (அப்படி என்றால் என்ன ?) பொண்ணுக்கு வயது பதினொன்றிலேயே அவள் அம்மாவுக்குக் கல்யாணக் கவலை. காயத்ரிக்குக் கல்யாண வயதும் வேளையும் வரும்போது என்னைத் தகரக் கொட்டகையில் வைத்தாகி விடுகிறதோ என்னவோ ?

இப்போது மாலை மங்கிவரும் வேளையில், ஆபீசில் மொட்டை மாடியில் தென்னங் கீற்றுக்களின் சலசலப்பினிடையில், தன்னந் தனியனாய் நான் நின்று கொண்டிருக்கையில், அவர்கள் இவ் வேளைக்கு என்ன செய்து கொண்டிருப்பார்கள் ?

ஜாபர்கான்பேட்டை டெண்டில் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். வீட்டுக்கு அதுதான் கிட்ட, மலிவு. வாரத்துக்கு இரண்டு படங்கள் நிச்சயம். அப்பா, நானூறு மைல்தாண்டி, தூர தேசத்தில் வீட்டுப் பராமரிப்பு இல்லாமல் தனியனாய்க் கஷ்டப்படும் கவலையை மறக்க அதுதான் எல்லா விதங்களிலும் செளகரியம்.

'அட, அப்பாவிற்கு எப்படித் தெரிஞ்சுது ? ஞான திருஷ்டியா ? அங்கிருந்தே ரிமோட் கண்ட்ரோலா ? '

பையன்கள் மலர மலர விழித்துக் கொண்டு கேட்கையில், நிஜமாவே ஆச்சரியமா ? அல்லது கேலி பண்ணுகிறார்களா ? திகைப்பு எனக்குத்தான். இந்தத் தலைமுறையை அவ்வளவு லேசாய்ப் புரிந்துகொள்ள முடிகிறதா ?

அவர்கள் அம்மை, புவனத்தையே வயிற்றில் அடக்கிய ரஹஸ்யப் புன்னகை புரிந்துகொண்டு (உண்மைதானே ' தாயார் இல்லையா ?) அரிவாமணையில் வீற்றிருந்து கொண்டு, கத்தரிக்காயை அதன் முழுமை இற்றுப் போகாமல் நாலாய்ப் பிளந்து கொண்டிருக்கிறாள். புதிதாய் இடித்த காரத்தை உள் அடைத்து இன்று கத்தரிக்காய் எண்ணெய் வதக்கல்; மைசூர் ரஸம். அப்பா, நேற்று வந்து நாளை வண்டி. வந்த சமயத்தில் பாவம் வாய்க்கு வேணுங்கறதை... ' அங்கே மலை நாட்டுக் கத்தரிக்காய், பார்க்க வெண்ணெய் மாதிரி இருந்தாலும் அடிநாக்கில் கடுப்பாமே ' லாலாக்கடை அல்வாகூட பழைய மாதிரியில்லையாமே ' நீங்கள்தான் எங்களுக்கு நினைப்பில்லைன்னு நினைச்சுண்டிருக்கேள். எல்லாம் அப்பப்போ விஜாரிச்சுண்டுதான் இருக்கேன். என்னதான் சொல்லுங்கோ, மெட்ராஸ், மெட்ராஸ்தான். தண்ணைக் காசு கொடுத்து வாங்கினாலும், ஏதோ கிடைக்கறதோன்னோ ? புலிப்பால்னா புலிப்பாலைத் தருவிச்சுடலாமே ' அதுதானே இங்கு விட்டுப் போகவே பயமாயிருக்கு ' ஆமாம், போய்த்தான் மூணு மாசமாச்சே பதவி நஷ்டப்படாமல் திரும்பவும் இங்கேயே மாத்திக்க வழி இல்லையோ ? '

'ஓய், உம்மைக் குற்றாலத்து சீசனுக்கு அனுப்பவில்லை, தெரியுமா ? 'சிவா, ராமா, கிருஷ்ணா ' வேளாவேளைக்கு அருவி ஸ்நானம், உடனே 'கபகப ' பசிக்கு சுடச்சுட, ஆவி பறக்க போத்தி ஹோட்டல் இட்டிலி. உடனே ஐந்தருவி, புலியருவி, தேனருவி, பாலருவி, சிற்றருவி, பழைய குற்றாலம், திரும்பவும் மெயின் ஃபால்ஸ்ன்ணு ரொடேஷன்லே பாங்க் செலவிலே சுகத்தோடு புண்ணியம்னு நினைச்சுக்காதேயும்: வேலையும் செய்யணும் தெரியுமோன்னோ ? அஞ்சு வருஷமா அங்கே வண்டி நஷ்டத்திலே ஓடறதை லாபப்படுத்தணும், அதுக்குத்தான் உம்மை அனுப்பறது, தெரியுமா ? குட்பை, குட்லக், மிஸ்டர் அரவான் ' '

குட் பை புரிகிறது.

குட் லக்--அரவானுக்கு குட் லக் ஏது ?

மோதிக்கொண்டோ முனகிக்கொண்டோ, கண்ணெதிரில் முகங்கள் வளைய வந்து புழங்கி வந்து அதுவே பழக்கமாய்ப்போன சூழ்நிலையின் திடார்மாற்றத்தில் நம்மை நாம் காணும் புதுச் சூழ்நிலையில் மனம் மறுக்குகையில் அதையே பாசம், பிரிவு, ஏக்கம் வருத்தம், துக்கம் என ஏதேதோ பெயர் அழைத்து, அதன் விளைவில் அவதியுறுகிறோம்.

ஆனால் இருப்பதென்னவோ ஒரு அளவுதான். பார்க்கப் போனால் உலகமே ஒரு கைப்பிடி மண்தானே ' அதுவும் எல்லோரிலும் எல்லாரும் எல்லோருக்கும் பங்காகி, வரண்டு கடைசியில், எங்கோ எட்டாம் வகுப்புப் பாடத்தில் நினைப்பு யானை விழுங்கிய விளாங்கனியாமே '--உள்சதை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோய் எஞ்சிய முழு லொட லொட்டையை வெறும் பழக்க வாசனையில் உயிரின் சாதனையாய்க் கட்டிக்கொண்டு அழுகிறோம், சிரிக்கிறோம், தவிக்கிறோம், உவக்கிறோம், ஒற்றையடி வரப்பில் ஒன்வே டிராஃபிக்.

இருந்தாலும்--

ஆனாலும்--

உண்மையே இதுதான். உண்மையை ஏற்றுக் கொண்டே, அதே மூச்சில் உண்மையின் மறுப்பு; பொய்யோடு நிரந்தர உடன்பாடு; அசுவத்தாமா என்கிற யானை; தேர்ச் சக்கரங்களுக்கு 'மக்கர் ' எண்ணெய். உயிருக்கு இழைக்கும் துரோகம்-- அதுவே உயிரின் உந்துதலாய் அமைகிறது. 'ஆனாலே ' என்பது 'அதனாலே ' ஆகிவிடுகிறது.

மிஸ்டர் வாட்ச்மேன் இன்னும் வரவில்லை. அவருக்கு நினைப்பு வரும்போதுதான் அவருக்கு ஆபீஸ் வேளை. வரும்போதே மார்வரை கைகளைத் தூக்கிக்கொண்டு (இந்த தினசரிச் சடங்கில் முழுக் கூம்பலுக்கு கைகளுக்கு வணக்கம் ஏது ?) கள்ளச் சிரிப்பு சிரித்துக்கொண்டே வருவார். ஆமா இதுபோல எத்தனை சாமியைப் பார்த்திருப்பேன் ' இனிமேலும் பார்க்கப்போறேன் ' இன்னைக்கு இந்த ஐயாவுக்கு மசிஞ்சு கொடுத்தோம்னா பின்னால் வர ஏசண்டுகளுக்கெல்லாம் வழி சொல்லிக் கொடுத்தா மாதிரியில்லே ஆயிடும் ' அப்புறம் நம்ம ஸைட் பிஸினெஸ் எல்லாம் என்ன ஆவறது ? மாந்தோப்புக் குத்தகை, வாரத்துக்குப் பயிர், யூரியா வியாபாரம், சொஸைட்டிக்கு பால் சப்ளை, சம்பாதிக்கிற வேளை போக மிச்ச நேரம் வீண் போகாமே இங்கே சம்பளம். எனக்கு இருபது வயசிலேருந்து நடந்து வர இந்த ஏற்பாட்டை இன்னிக்கு வந்து அவரு மாத்தியெழுத முடியுமா எளுதத்தான் விடலாமா ?

நினைவின் ஏக்கம் எப்படி நெஞ்சின் நோக்காடாவே மாறி விடுகிறது. நரம்புகள் ஒன்றை ஒன்று வலிக்கும் பிகுவில் தந்திகளின் மீது மோன கீதம் விளையாடுகிறது. அங்கங்கே அதன் குங்கிலியம் குபீரிடுகிறது. எந்தச் சமயத்தில் எந்தத் தந்தி அறுந்துவிடுமோ ? அறும் வேகத்தில் வாத்தியத்தையே சாய்த்து விடுமோ ? பயமாயிருக்கிறது. மாரைப் பிடித்துக்கொள்கிறேன்.

மலைச் சாரலில் இருந்து உருட்டி விட்டாற்போல் இருள்படுதா எப்போது இறங்கிற்று ? கரும்பட்டில் ஜிகினாப் பொட்டுகள் போன்று மின்மினிகள் ஆங்காங்கே சுடர் சொட்டுகின்றன. மலைக் குன்றுகள் இருள் பொதிகளாய் எப்போது மாறின ? அவைகளின் பின்னணியில் பிதுங்கும் வானத்தில் அழுத விழியில் நரம்புபோல் லேசான செவ்வரியின் படர், அரசனின் மேலங்கிபோல், இரவின் மடிகள் கம்பீரமான வீச்சில் என்னைச் சுற்றிப் புரள்கின்றன.

'இன்று இதுவரை நீ விளையாடியது போது, நேரமாயிற்று ' என்று உணர்த்துவது போன்று இரவு தன் அகண்ட ஆலிங்கனத்துள் பகலை இழுக்கையில், மாலை இரவுள் கடக்கையில் இடையில் எல்லைக்கோடு அழிகையில் பிரும்மசோகம் என்னைக் கவ்வுகிறது. நெஞ்சில் திடாரென அமிர்த கலசம் உடைத்தாற்போல் நெஞ்சு முகட்டை ஏதோ முட்டுகிறது. தென்னங்கீற்றுகளின் வழி அலைந்து வந்து என்மேல் படுவது,

--தேவர்களின் மூச்சா ?

--அசுரர்களின் மூச்சா ?

பெருமூச்சையெடுத்து என் பின்னால் ஆள் கனைப்பு சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினேன். ஆபீஸ் அறை வாயிலில் ஒரு உருவக்கோடு நின்றது.

'யாரது ? '

ஸ்விட்சைப் போட்டேன், ஆனால் மின்சாரம் இல்லை, இந்தப் பக்கம் இது சகஜம்.

'நகையைத் திருப்பணுங்க. '

'உனக்கு நேரம் பொழுதே கிடையாதா ? '--என்னையறியாமல் என் குரல் தடித்தது. ' இதென்ன பாங்க்கா, உன் வீட்டு மாட்டுக்கொட்டாயா ? உன் வீட்டுலே உன் மாடு நீ நினைக்கிற வேளையெல்லாம் கறக்குதா ? உன்னை யார் உள்ளே விட்டது ? '

'கதவு திறந்திருந்தது. கொஞ்சம் பொறுமையாய்க் கேளுங்க. நீங்க கேட்டுத்தான் ஆவணும். '--அவன் குரலில் மரியாதை குறையவில்லை. ஆயினும் கட்டாயம் இருந்தது. பட்டிக்காட்டானுடைய பிடிவாதம். இவன் மறுப்பை ஏற்கமாட்டான், இவன் செவியில் ஏறாது. என்னைத் திகில் பிடித்துக்கொண்டது. நானோ ஊருக்குப் புதுசு. இவன் கத்தியெடுத்துக் காண்பித்தால் என் கதி என்ன ? யார் கீழே கதவைத் திறந்து வைத்துவிட்டுப் போனது ? வாட்ச்மேன் ஏன் இன்னும் வரவில்லை ?

'இந்தப் பெண் பிள்ளையினுடைய தாலியைத் திருப்பணும் ' '

ஓ ' இவனோடு இல்லையா ? அப்பொழுதுதான் அவன் பின்னால் இன்னொரு உருவம் நிற்பது அறிந்தேன்.

உடம்பு பூரா தலை உள்பட இழுத்துப் போர்த்திய ஒரு மெளனமான மொத்தாகாரம் அல்லது மொத்தாகார மெளனமா ?

'இது ஒரு விசேடமான சமயம், நீங்கள் கை கொடுத்தே ஆவணும். '

'நான் உதவறதுன்னா என்ன ? என்கிட்டே பணம் கேக்கறையா ? முன்னையும் தெரியாது, பின்னையும் தெரியாது திடார்னு நடு இருட்டிலே முளைச்சு என் மேலே மரமா ஆடிக்கிட்டு கைகொடுன்னு என்னப்பா சொல்றே ? '

இருளில் என்னை எட்டிய அவன் சிரிப்பில் கேலி புகைந்தது.

'பணம் கொண்டு வந்திருக்கோம் சாமி ' இவ கையெழுத்துப் போடுவா அடையாளத்துக்குக் கவலை வேணாம். தேவையானா தெரிஞ்சவங்களையும் கூட்டி வந்தாலும் போச்சு. '

'எல்லாம் நாளை வா..... '

'அப்படிச் சொல்லக்கூடாது. இன்னும் அரை மணி நேரத்திலே இவ புருஷனை ஆஸ்பத்திரியிலேருந்து மீட்கணும். '

எனக்கு திடாரென கைகால்கள் ஓய்ந்தன. நாற்காலியில் சாய்ந்தேன். தலையில் ஒன்றுமே புரியவில்லை. இந்த ஊர் புரியவில்லை. இந்த ஊர் புரியவில்லை. இந்த ஊர் பாஷை, லேவாதேவி, மனிதர்கள் எல்லாமே இப்படித்தானோ '

'சித்தே நான் சொல்றதே செவி வாங்கிக்கங்க. நமக்கு நேரமில்லே. '

சரி, இனி தப்ப வழியில்லை. 'நமக்கு ' எனும் பிரயோகத்தில் என்னையும் தங்கள் காரியத்துக்கு உடந்தையாக்கிக் கொண்டு விட்டார்கள்.

'இந்தப் பெண் பிள்ளை நமக்கு எதிர்வீடு. ஆறு மாதத்துக்கு முன்னர் இவ புருஷனை ஆஸ்பத்திரியில் சேர்த்தது. அதென்ன ஜ்உரமோ தெரியல்லேங்க--மாயக் காய்ச்சல் விடாமல் மழுவாய்க் காயுதுங்க. வீட்டிலிருக்கிற பண்டம் பொருளெல்லாம் வட்டிக் கடைக்குப் போயாச்சு. காய்ச்சல் டிகிரி இன்னும் இறங்கிட்டில்லே. கடைசிலே வைக்க வீட்டில் ஏதாச்சுமில்லே. நாங்கள் எல்லாம் என்னங்க பயிர்த் தொழில்; அன்னாடக் கூலிக்காரங்க.

ஓஹோ ' வாட்ச்மென் வந்துவிட்டாரா ?

'சரி ' போய் காஷியரைச் சாவியோடு வரச்சொல்... '

காஷியர் 'கடு கடு ' முகத்தோடு வந்தார்.

'சார், உங்களுக்கு இந்த ஊரைத் தெரியாது. கொஞ்ச இடத்தைக் கொடுத்தால் குளம்பு, நகம், கொம்புகூடப் பிரிக்காமல் முழுங்கிடுவா. நீங்கள் இப்படித்தான் இவாளிடம் நல்ல பேர் எடுப்பதாக எண்ணம், ஆனால் நான் எங்கள் யூனியனுக்கு எழுத வேண்டியதுதான்... '

'அதெல்லாம் பின்னால்னா ? இப்போ நகையை எடுப்போம். '

திடாரென்று சொல்லி வைத்தார்போல் விளக்குகள் தாமே ஏற்றிக்கொண்டன. திடாரென இரவின் இருள் 'திகு திகு 'வென எரிந்தது. இதுதான் சகுனமா ?

'பணத்தை எப்படியோ பிரட்டி வந்துட்டோமுங்க. குறையா இருந்தால் வட்டியைப் பார்த்துப் போடுங்க. நீங்க மனசு வெச்சா உங்களால் ஆகாத காரியமா ? ஏழை மக்கள் வயத்துல பாலை வாருங்க. '

அவள் கையெழுத்துப் போடும்போது மூக்கு நுனி கூடத் தெரியவில்லை. அவள் இழுத்துப் போர்த்திக் கொண்டிருந்த அடைப்புக்குள் அவ்வளவு பத்திரமாய் இருந்தாள்.

தாலியை உள்ளங் கையில் அமுக்கிக்கொண்டு 'விடு விடு 'வென மாடி இறங்கி விட்டாள். அவளுக்கு வாயாக வந்த ஆளும் அவளோடு மறைந்தான். காஷியர் மொண மொணத்துக்கொண்டே போனார். பின்னாலேயே வாட்ச்மென் பக்கத்தாத்துப் பாட்டியுடன் பேசப் போய்விட்டான். இடம் திரும்ப வெறிச்சாயிற்று.

நான் விளக்கை யணைத்தேன்--எனக்கு வெளிச்சம் வேண்டியதில்லை. மொட்டை மாடியில் வானம் நக்ஷத்திரக்குடை பிடித்தது.

பிறகு அவள் என்னவானாள் ? அவள் புருஷன் உயிர் அவள் தாலி பாக்கியத்திற்குக் கட்டுப்பட்டதா ? நான் தெருவில் போகையில் அவள் உடல்வாக்கில் எந்த ஸ்திரீ உருவம் என்னைக் கடந்தாலும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு--

இவளேதான் அவளோ ?

என அதிசயிப்பேன். அதுவே ஒரு கெட்டப் பழக்கமா...

அவள் விலாசம் பாங்க் புத்தகத்தில பதிவாகி இருக்கிறது. என்றாலும் அங்கு போய் அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள பயம். நான் அஞ்சும் உண்மை என் முகத்தில் வெடித்துவிட்டால்... ?

தேடற் பொருளின் பொருளே முகம் காட்டாது மூட்டும் இந்த இன்பத் திகைப்புத்தானோ ?

இவளோ ?

--அவளோ ?

--இவளோ ?

*****

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

Happy Smiles on March 17, 2010 at 12:47 PM said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
.
 
 
(Pls ignore if you get this mail already)

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்