Mar 14, 2010

பலூன் பைத்தியம் -ந.பிச்சமூர்த்தி

ந. பிச்சமூர்த்தி

பலூன் பைத்தியம்

     இன்றைய தினம் குழந்தைகள் பலூன் வாங்கினார்கள். அவர்களுக்கும் அவர்கள் தாயாருக்கும் சண்டை. காசு தரமாட்டேன் என்ற தாயார் கட்சி. குழந்தைகள் அழுகை எதிர்க்கட்சி.

     pichamoorthyபலூன் வாங்கும் சமயம் ஒவ்வொன்றிலும் இந்தத் தகராறுதான். இதுதான் கடைசி தடவை என்ற எச்சரிக்கையுடன் காசும் கிடைத்துவிடும். குழந்தைகள் கைக்குப் பலூனும் வந்துவிடும். இந்தத் தகராறு விஷயம் பலூனுக்கு எப்படித் தெரியும்! சில  நிமிஷங்களுக்குள் பட்டென்று வெடித்துவிடும். ஒரு வேளை தெரிந்துதான் குழந்தைகளைப் போல ரோஸமில்லாமல் இருக்கிறதோ என்னமோ! இந்த மாதிரி எத்தனை கடைசித் தடவையாக பலூன் வாங்கியிருக்கிறார்கள் தெரியுமா? இன்றும் கடைசித் தடவையாகத் தான் பலூன் வாங்கியிருக்கிறார்கள். குழந்தைகள் திரும்பத் திரும்ப பலூன் வாங்க ஆசைப்படுவது எனக்கு பெரிய வியப்பாய் இருக்கிறது. பலூன் இரண்டு நிமிஷத்திற்குள் வெடித்து விடும் என்று குழந்தைகளுக்கு நன்றாய்த் தெரியும். தாயார் மறு பலூன் வாங்க காசு தர மறுப்பாள் என்றும் தெரியும்; பின் ஏன் கடைசி தடவையாகத் தினம் பலூன் வாங்குவதில் அவ்வளவு மோகம் கொள்கிறார்கள்...

     பலூனுடைய வர்ணம் ஒரு வேளை அவர்களைக் கவர்வதாய் இருக்குமோ? இருக்க முடியாது. ஏனென்றால் கண்ட இடங்களிலெல்லாம் புஷ்பங்கள் காணாத வண்ணக் கவர்ச்சியா பலூன்களில் காண்கிறது? அவை வேண்டாம். மேகங்களும் அந்தி, சந்தியில் காணும் வானமும் இல்லையா? - வண்ணக் களஞ்சியமாக? ஆனால் மேகத்தையோ அந்த வானத்தையோ அங்கையில் அடக்கிவிட முடியாது. புஷ்பத்தைக் கையில் எடுக்கலாம். எனில் வாடிவிடும். கசங்கிவிடும். வண்ணத்தை திரும்பி ஏற்றிவிட முடியுமோ? முடியாது.

     ஆம்! இதில்தான் பலூன் மோகத்தின் மர்மம் இருக்க வேண்டும். வித்தில்லாக் கத்திரிக்காயைப் போல் வாடி வதங்கிய பலூன் சிவப்புச் சந்திரனும் பச்சைச் சூரியனுமாக மாறிவிடுகிறதல்லவா - குழந்தைகள் கையில் ஏறியவுடன்? சிருஷ்டி சக்தி என்று ஒன்றிருக்கிறது. அதுவும் தங்களுக்குள் இருக்கிறது என்ற அறிவை இந்த விந்தை குழந்தைகளுக்குப் புகட்டுகிறது. நமக்கிருக்கும் சக்தியை வெளிப்படுத்துவதில்தான் இன்பம் உண்டாகிறது. இந்த இன்பத்தை நீடிக்கச் செய்ய வேண்டுமென்ற வெறிதான் பலூன் உடைந்துவிடுவதைக்கூட லஷ்யம் செய்வதில்லை! கடைசித் தடவை என்று தாயார் சொல்வதைக் கூட லட்சியம் செய்வதில்லை.
     பலூன் உடைந்தால்தான் என்ன? துண்டுகளைக் கொண்டு குழந்தைகள் "மூட்டை" செய்துவிடுவார்கள், சுண்டைக்காய் அளவுக்கு சூரியனையும், சந்திரனையும் போல் செய்து நெற்றியில் சொடுக்கி இன்புறுவார்கள்.

     இந்த சிருஷ்டி சக்தியே விசித்திரமானது; உலகப் போக்குக்கே ஒத்து வராதது. உடமை என்ற நினைப்பையும் ஆசாரம் என்ற கோட்பாட்டையும் சண்டைக்கிழுப்பதே இதன் தன்மை! அதன் காரணமாகத்தான் காசு செலவழிகிறதே என்று தாயார் நொந்து கொள்கிறாள். குழந்தைகள் எச்சில் செய்கிறதே என்று அடுத்த வீட்டுக்காரர் ஏசுகிறார்.

     இன்னொரு உணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம். தரையில் நடந்தாலும் பறக்க வேண்டும் என்ற ஆசை இயல்பாக முளைத்து விடுகிறது. நம்மால் முடியாததை நமக்கு அடங்கிய பொருளைக் கொண்டு செய்து விட்டால் அந்தப் பெருமை நம்மைத்தானே சாரவேண்டும். நம்மால் பறக்க முடியாது. ஆனால் நம்மால் எதையாவது பறக்கவிட முடியும் பொழுது எவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறது. காற்றாடி, தாத்தாபூச்சி, பலூன் - இவை குழந்தைகளின் சாதனம். பெரியவர்களுக்குப் பறக்கும் சாதனம்-

     விண்வெளி விமானமில்லையா?

****

டென்னிஸ்

     மழைக் காலம் ஆரம்பித்து விட்டது. மக்களின் மனம் கொஞ்சம் குளிர ஆரம்பித்திருக்கிறது. வறட்சையால் தவித்த செடி, கொடி, பயிரினங்கள் கொஞ்சம் உயிர் பெற்றிருக்கின்றன. வருமோ என்று ஏங்கிய ஜனங்களும் கொஞ்சம் உயிர் பெற்றிருக்கின்றனர். பச்சைப் பசேலென்று வயல்கள் சிரித்துச் சிரித்து ஆடுகின்றன. குடியானவர்கள் மழைத் தெய்வத்தைக் கும்பிடுகிறார்கள். நமக்கும் வெகு ரம்மியமாகத்தானிருக்கிறது.

     ஆனால் - இந்த எழவு ஆனாலைச் சொல்லு! எந்த நல்ல விஷயத்திலும் ஒரு நொடிக்குள் விஷத்தை திணித்து விடுகிறதே... உம்! அதற்கு நாமென்ன செய்யலாம். 

     மழையினால் நன்மையென்றேனல்லவா? அதனாலேயே பலருக்குத் துன்பம் விளைகிறது தெரியவில்லையா? எவ்வளவு தான் வெயில் கொளுத்தி, கால்களில் 'பொடி' ஒட்டிக் கொண்ட போதிலும் "நல்லா வெயில் கொளுத்துது" என்று மட்டும் சொல்வார்கள். ஒருக்கால் சற்று இளைப்பாறுவார்கள். ஆனால் சேர்ந்தாற் போல் இரண்டு மூன்று நாள் மழை மட்டும் பொழிந்து விட்டால் உலகம் தவிப்பாய் தவிக்கிறது. கூரை வீடுகளுக்கும் மண் சுவர்களுக்கும் காலம் பெருங்கி விடுகிறது. ஏழைகள் வீடெல்லாம் ஒரே ஒழுக்கு. வீட்டிலிருக்கும் குடியானவனோ, வண்டிக்காரனோ, கொசுவோடும், மாடுகளோடும், சாணியோடும், மழை ஜலத்தோடும், குழந்தைகளோடும் திரும்ப இடமில்லாமல் வீட்டில் தத்தளிப்பது பார்க்க சகிக்காத காட்சி. இதற்குக் கதி மோட்சமேது?

     ஏழைகளுக்கு இப்படிப்பட்ட கஷ்டம். பணக்காரர்களுக்கும் இது பெரிய கஷ்டந்தானாம். "என்ன சார்! டென்னிஸ்தான் இல்லை. ஹாலுக்குப் போய் ஒரு ஆட்டம் 'பிரிட்ஜ்' போடுவோமென்றால், போக முடியாது போலிருக்கிறதே. தரித்திர மழை!" என்கிறார் ஒரு பணக்காரர்.

****

குளவிக் கூடு

     மதுரையான் கோவிலுக்குப் பக்கத்தில் அரசமரத்தின் நிழலில் பிள்ளையார் உட்கார்ந்திருக்கிறார். பயங்கர விஷத்திற்கு மனிதர் முடி தாழ்த்தி வணங்குவதைக் குறிப்பிடும் நாகங்கள் ஆலம் விழுதைப் போல் கல்லிலே நெளிகின்றன. பக்கத்தில்தான் ஒரு புதர் இருக்கிறது - இருள சாதிப் பெண்ணின் தலைமயிரைப் போல். நான் மேடையில் மேய்ந்து கொண்டிருந்தேன். நான் மாடென்னவோ அல்ல. இருந்தாலும் சைவ சித்தாந்திகள் சொல்வதுபோல் பசுதானே? அதிலும் ஆரறிவுள்ள பசுவானதால் நுனிப்புல்லை மேய்வதில் என்ன உபயோகம்?

     ஒரு குளவி பிள்ளையாரண்டை வந்து உட்கார்ந்தது. என்னை நினைத்துக் கொண்டதோ என்னவோ - பிள்ளையார் பீடத்தை முன் மீசையால் தொட்டுத் தடவிவிட்டு, எப்படி வலம் வருவது - இடமாகவோ, வலமாகவோ - என்று மாறி மாறி சோதித்துக் கொண்டிருந்தது.

     நான் குளவியின் பக்தியைவிட அதன் உடலின் மேல் அதிக நாட்டம் கொண்டேன். என்ன அற்புதமான ஆகாய விமான உடல்! எவ்வளவு லேசான இடுப்பு! நூல் போன்ற இடை! அந்தி நேரத்துச் செங்காவி போன்ற என்ன இறகுகள். அமாவாசை போன்ற என்ன பளிங்கிருள் உடல்! நட்சத்திரம் போன்ற என்ன கண்கள்!

     என் நாட்டத்தைக் கலைத்தது ஒரு நாதம். ஆகாய விமானம் எட்டத்தில் மிதந்து வருவது போன்ற ஆழ்ந்த குமுறல். கண்ணுக்கருகில் பறக்கும் ஈ வான் முகட்டில் பறக்கும் கருடனோ என்ற பிரமையைச் சில சமயம் உண்டாக்குக்கிறதல்லவா? அதே போன்று ஒரு ஓசை. கிட்டத்திலிருக்கும் குளவியின் ரீங்காரம் எனத் தெரிய ஒரு வினாடி பிடித்தது. ஐந்து நிமிஷம் புதரில் மறைந்திருந்து விட்டுத் திரும்பவும் பிள்ளையாரண்டை வந்தது. பிள்ளையாரண்டை வந்து செய்த காரியம் ஒன்றும் இல்லை. பைத்தியத்தைப் போல் குறிப்பில்லாமல் வருவதும் போவதுமாயிருந்தது.

     புதரைப் போய் பார்ப்போம் என்று போய் அங்கே ஊன்றிக் கவனித்தேன். குளவியின் கூடு தென்பட்டது. லக்ஷ்மணர் சீதையின் பர்ணசாலையைச் சுற்றி வந்து, சுற்றி வந்து பாதுகாத்தாராமே, கண்களை இமை காத்து வருகிற மாதிரி. அதைப் போல் குளவி கூட்டின் மேல் உட்காருவதும் பறப்பதும் வருவதுமாய்க் கூட்டைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது.

     எனக்கு விஷம புத்தி வந்து விட்டது. கூட்டைக் காக்கக் கூடிய திறமையை அளவிட்டு விட வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. ஒரு சிறியகல்லை எடுத்தெறிந்தேன். அது கூட்டின் பக்கத்தில் விழுந்தது. ஆகாசவாணத்தைப் போல் உஸ் என்று சீறிக்கொண்டு இரண்டு அடி உயரம் குளவி பறந்து உட்கார்ந்தது. ஒரு காரியத்தை சாதிக்க வேண்டுமானால் போகப் போகக் கடுமையான சோதனையைக் கையாள வேண்டும் என்கிறார்கள். எட்டிக் கொட்டையைத் தின்ன வேண்டுமானால் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று பிறகு அளவை உயர்த்திக் கொண்டே போனால், ஒரு மண்டலத்திற்குப் பிறகு மண்டலமிட்டு வரும் கருநாகம் கடித்தால் கூடப் பாம்புதான் சாகுமாம்.

     பிறகு ஒரு குச்சியை எடுத்துக் கூட்டைத் தொட்டிழுத்தேன். வேட்டைக்காரனுடைய துப்பாக்கிப் புகைவழியே வேங்கை பாய்வதுபோல் என் குச்சி திரும்பிய வழியே குளவி சீறியது. ஒரு பக்கத்தில் நகர்ந்தேன். குளவி எதிரியைக் காணாமையால் கூட்டுக்கே திரும்பி விட்டது.

     குளவி சீறி வந்ததால் மனிதனை இந்த அற்பப் பொருள் எதிர்ப்பதா என்ற அகங்காரம் எழுந்தது. அப்படியா சேதி என்று கூட்டை ஒரு மூலையில் இடித்தேன், கோபத்துடன் குளவி வந்தடித்தது. நான் மறைந்தேன். கூட்டுக்குக் குளவி திரும்பிவிட்டது. தாய், தற்காப்பு என்ற நினைப்புகளைத் தவிர குளவிக்கு கூடு மூளியாகி இருந்தது தெரியவில்லை.

     நான் விளையாட நினைத்தவனாகையால், கூட்டை அப்படியே கீழே தள்ளிவிட்டேன். குளவியின் நிலையைப் பார்க்க வேண்டுமே! கோபங் கொண்ட தாயைக் காணேம். பிள்ளைகளை இழந்தபேதை, பரிதவித்துப் புலம்புவதுபோல் கூடு இருந்த இடத்தில் சுற்றிச் சுற்றி வந்ததே ஒழிய என் பக்கம் பாயவில்லை. கூட்டின் முக்காலே மூணு வீசம் பங்கு எவ்வித சேதமுமாகாமல் கீழே கிடந்தும் அது குளவியின் கண்ணுக்குப் படவில்லை. தான் கூடு கட்டிய இடம் காலியானதே அதற்கு சாவின் குறி. அப்படி இப்படி மயங்கி மயங்கி, துயரத்துடன் புலம்புவது போன்ற ஓசை கொஞ்ச நேரம் கேட்டது. குழந்தை இறந்ததென்று உறுதியானதும் தாயுள்ளம் செத்துவிட்டது போல புது ஓசையுடன் கிளம்பி விட்டது.

     அதுதான் நாயகனைத் தேடும் ஓசையா?

*****

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்