நீல பத்மநாபன்
இன்னும் இரண்டொரு மணி நேரத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த என் ஓவியக் கண்காட்சி முடிந்து விடப்போகிறது. இன்றிரவு ரயிலிலேயே ஊர் திரும்பிவிடப் போகிறோம். இந்த ஊரிலேயே இருப்பதாய் கேள்விப்பட்ட வித்யாசாகரை எப்படியும், ஒரே ஒரு முறையாவது சந்தித்துவிட முடியும் என்று நெஞ்சம் நிறைந்திருந்த ஆசை அபிலாஷை எல்லாம் வெறும் நீர்க்குமிழிகளாய் பொசுபொசுத்துப் போய்விடுமோ '
கண்காட்சியைப் பார்த்துவிட்டு திரும்புகிறவர்கள் வீல் சேரில் இருக்கும் என்னிடம் வந்து ராஜஸ்தானியிலும், இந்தியிலும் தெரிவிக்கும் பாராட்டுரைகள்..... இந்த மொழிகள் சரிவரப் புரியாதிருந்தும் அந்தச் சொற்கள் பாராட்டு வசனங்கள்தான் என்பதை அவர்கள் விகசித்த விழிகள்--- வார்த்தைகளின் உணர்ச்சி உத்வேகங்களில் இருந்தெல்லாம் யூகித்துக் கொள்ள முடிகிறது.
அந்த ஹாலில் எங்கே நின்றாலும் முழுசாய்ப் பார்க்க முடிகிற அளவுக்கு நடுநாயகமாய் மாட்டியிருந்த 'அம்மையப்பன் ' என்று பெயரிட்ட பெயிண்டிங். இரண்டு ஆண்டுகளுக்குமுன் சுவிட்சர்லாந்து மெளத் அண்ட் புட் பெயிண்டர்ஸ் அசோசியேஷன் ஓவியக் கண்காட்சியில் விருது பெற்று தனக்குப் பெருமை சேர்த்த ஓவியம்.
அதைத்தான் பலர் பல கோணத்தில் ஃபிளாஷ் லைட் மின்ன படமெடுத்துக் கொள்கிறார்கள். ஒரு வெளிநாட்டுத் தம்பதி உட்பட சிலர் அருகில் வந்து அதைச் சுட்டிக்காட்டி ஆங்கிலத்தில் சொன்ன வார்த்தைகள்...
யந்திரகதியில் நன்றி தெரிவிக்கும்போது சில கணங்களில் அந்த சித்திரம் வரை சென்று சென்று திரும்பும் தன் பார்வை...
முதல் பார்வையில் அர்த்தமாகாத சிவலிங்கத்தில் ஊன்றி அனுபவித்து தன்னிச்சையாய் என்னவோ ஒரு நியதியின் நியோகமாய், பிரக்ஞையில்லாத பிரக்ஞையுடன் சலித்திருந்த தன் தூரிகை இருண்ட வர்ணங்கள்...
சுவிட்சர்லாண்டில் வைத்து இந்த ஓவியம்தானே வித்யாசாகரைத் தன்னிடம் ஈர்த்தது.
அவரைப் பார்க்காமலேயே ஊர் திரும்ப வேண்டி வந்துவிடுமோ ?
இந்த ஊரிலிருந்து தான் கிளம்ப இன்னும் சில மணிநேரம் மீதியிருக்கிறதே.. '
இப்போது தன்னைத் தேடிக்கொண்டு வந்த கெ.எம்.பிரசாத், இங்கே இந்த ஓவியக் கண்காட்சி, தன் வருகை எல்லாவற்றையும் மிகுந்த பொறுப்போடு ஏற்பாடு செய்தது இவர்தானே... ' அவர் கூட சற்றுமுன் வந்து பேசிச் சென்ற வெளிநாட்டுத் தம்பதிகள் வேறு சில புதிய முகங்கள்...
அவர்களையெல்லாம் அறிமுகப்படுத்திவிட்டு அவர் சொன்னார்...
கார்த்தீ.. சொன்னேனில்லே.. இவங்க எல்லாம் ப்ரிலேன்ஸ் பிரஸ்காரங்க. இந்த இளம் வயசில்-- உங்களுக்கு இருபத்தஞ்சு வயசுதானே ஆகிறது- இத்தகைய பெயிண்டிங்சை எல்லாம் நீங்க எப்படி தீட்டினீங்கன்னு ஆச்சரியப்படறாங்க. அதுவும் ஒரு வயசாகும் முன் கால்களும், அஞ்சு வயசில் ரெண்டு கைகளும் இளம்பிள்ளை வாதத்தால் முடங்கிப் போன நீங்க இந்த சித்திரங்களையெல்லாம் வரைஞ்சது உங்க வாயால் என்பதை நுணுக்கமான, சூக்குமமான இதன் கோடுகளிலிருந்து தெரிஞ்சுக்கவே முடியாதுங்கிறாங்க.. உங்களைப் பற்றி, நீங்க எப்படி இந்த துறைக்கு வந்தீங்க, எப்படி வரையறீங்க...இதைப் பற்றியெல்லாம் உங்க வாயாலேயே தெரிஞ்சுக்க வேணுமுண்ணு வந்திருக்காங்க... கேள்வி பதில் பார்மாலிட்டி ஒண்ணும் வேணாம்..உங்களுக்குத் தெரிஞ்ச வரையில் நீங்களே சொல்லுங்க...அவுங்க நோட் பண்ணிக்குவாங்க... காஸட்டில் பதிவு பண்ணி பயன்படுத்திக் கொள்வாங்க.
கண்காட்சியைக் காண வருகிறவர்களைக் கவனிக்க பிரசாத் போய்விட்டார். அவர்கூட வந்தவர்கள் கீழே விரிந்திருந்த கம்பளத்தில் உட்கார்ந்து கொண்டு என்னையே கவனிக்கிறார்கள்.
இவர்களிடம் என்ன சொல்வது ?
எப்படிச் சொல்வது ?
பிறந்து ஓர் ஆண்டு திகையும் முந்தியே கால்கள் இரண்டும் முடங்கிப் போய்விட்டதினால் தனக்கு அறிவு வரும் நாளில் இருந்தே கால்களின் பயனை இழந்தவன். அப்படிப் பார்க்கும்போது தன்னைப் பொருத்த வரையில் பிறவியிலேயே முடம் என்பதைச் சொல்லவா ? ஐந்து வயசில் கைகளும் அசைக்கும் வலுவை இழப்பதுவரை வீட்டு முற்றத்தில் புழுதி மண்ணில், மனசில் தோன்றும் கோலங்களை எல்லாம் கிறுக்கி கிறுக்கிக் கழித்த பால பருவத்தைச் சொல்லவா ?
ஏழ்மையின் அடையாளங்கள் நிறைந்து நின்ற வீட்டில், குடும்பத்தில் யாருக்கும் சித்திரக் கலையில் ஈடுபாடு இருந்ததாகத் தெரியவில்லை.
அப்படியென்றால்... '
அப்பா தடியில் குடைந்து நுணுக்கமான தச்சுவேலை செய்கிறவர். தச்சர் குடும்ப ரத்தம்தானே என்னிடம் ஓடுகிறது.
எது எப்படியோ -- பின்னிரவில் தூங்கும் நேரம் போக ஏனையபொழுது முழுதும் இந்த வீல் சேரிலேயே கழிக்கும் நாட்கள்....
அன்று தொடங்கி இப்போதும் தொடரும் அலோபதி, ஹோமியோ, ஆயுர்வேத சிகிச்சைகள். கையும் கால்களும் தவிர வயசுக்கேற்ப வளர்ந்து வந்த உடம்பு... கூட வீல் சேரி உட்கார்ந்தபடி வாயில்கவ்விய பிரஷ்ஷால் மனம் போன போக்கில் எல்லாம் கிறுக்கிக் கிறுக்கி தனக்குத் தானே யார் துணையுமில்லாத ஏகாந்தங்களில் வளர்த்துக் கொண்ட இந்த ஓவியக்கலை...
உடம்பின் ஊனம் மனதைப் பாதிக்காதிருக்க, இந்தத் தூரிகை இருந்தும், துயரத்தின் இருண்ட கணங்களுக்கு சித்தம் வழுதி விழும்போது உடல் சுவாதீனம் இல்லாதிருந்தும் கலைகள் படைத்த ஹோமரையும், மில்டனையும் எல்லாம் எண்ணி மனதை திடம் கொள்ளச் செய்த நாட்கள்..
கையின் சுவாதீனம் இழந்த பிஞ்சு நாளிலிருந்தே வாயினால் படம்வரைய முயற்சி செய்தேன். யாரும் சொல்லித் தந்ததினால் அல்ல.
மனசில் தோன்றும் காட்சிகளுக்கெல்லாம் வாயிலிருக்கும் பிரஷ் வழி பேப்பரில் கிறுக்கி வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்த இருபத்தி அஞ்சு வயசு பிராயத்தில் ஆயிரக்கணக்கில் சித்திரங்கள் இதுவரை வரைந்து விட்டேன்.
அப்படித்தான், சுவிட்சர்லாண்டில் ஸ்டிங்மார் நிறுவிய எம்.எம்.பி.யிலிருந்து அழைப்பு வந்தது.. ஓவியங்களுடன் அங்கே போய் பெயிண்டிங் எக்ஸிபிஷனில் பங்கெடுத்தேன். அங்கே ஒரு டெமான்ஸ்ட்ரேஷனில் பங்கெடுத்து வரைந்த ஓவியம்தான் இந்த அம்மையப்பன்.
இப்போது மீண்டும் வித்யாசாகர்... அங்கே வைத்து தானே அவரிடம் பழக்கம் ஏற்பட்டது '
தன்னைப் போலல்ல, ஓவியம் -- சிற்பம் இப்படி கலைகளில் பாரம்பரியம் மிக்க பழம்பெரும் குடும்பத்திலிருந்து வந்தவர். தன்னைவிட இருமடங்கு வயசு வந்த பெரியவர். இந்தியாவில் உயர்ந்த கலை பட்டப்படிப்பு முடித்து சித்திரக்கலையின் உன்னதங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கையில், பொருளாதார நிலைமை கீழே வந்துவிட்ட குடும்பச் சூழல்....
இருந்தும் பல்வேறு விருதுகள் -- பரிசுகள் ஆராய்ச்சிக்கான உதவி பணத் தொகைகளால் சமாளித்துக் கொண்டிருந்தவருக்கு படித்த கலைக் கல்லூரியில் படிப்பிக்கும் ஆசிரியர் வேலை கிடைத்தது பெரிய ஆறுதலாக இருந்தது.
ஆனால் எல்லா கலை, தொழில்துறைகள் போல கூட உள்ள கலைஞர்களின் பொறாமை, எதிர்ப்புகள்.
சுவிட்சர்லாண்டில் வாய், கால் ஓவியர் கண்காட்சியின்போது அவரை சந்தித்த நிகழ்ச்சி...
உலகின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தெல்லாம் தன்னைப் போல உடம்பால் ஊனமுற்ற பல்வேறு ஓவியர்கள் தத்தம் ஓவியங்களுடன் பங்கெடுத்த கண்காட்சி...
பலநாட்டு பல தரப்பட்ட ஓவியங்கள், பார்த்துக் கொண்டிருந்த ஹிருதயர்கள். முதிர்ந்த கலை விமர்சகர்கள், வித்தகர்கள், பொது ஜனங்கள்...
'தம்பீ....நீங்கதான் கார்த்தியா ? '
தன்னை தேடிக் கொண்டு வந்த உயரமான மனிதர்.. அடர்ந்த தாடியைவிட, நீளமாய் இரு பக்கமும் முறுக்கி விடப்பட்டிருந்த மீசை, சுருள் சுருளாய் தோள்பட்டை வரை வந்திருந்த தலைமயிர்.. நரையும் கருமையும் கலந்த தோற்றம்.
ஆமாம் என்று தலையாட்டும் முன்பே, வீல் சேரில் உட்கார்ந்திருந்த தன்னை அவர் அப்படியே கட்டிப்பிடித்து வாயில் முத்தமிட்டார்.
ஜில்லென்று உடம்பு பூரா ஒரு புல்லரிப்பு. வாழ்நாளில் இந்நாள் வரை அனுபவமாகாத புதுமை.
உங்க 'அம்மையப்பனை ' பார்த்து அப்படியே பிரமித்துப் போனேன். இத்தனை நாள் என் கலை உபாசனைக்குப் பின்னால் என் கையால் இப்படியொரு பெயிண்டிங்கை வரைய முடியுமென்று தோணல்லே.. இதை வரைஞ்ச இந்த வாய்க்கு இப்ப என்னால் தர முடிவதெல்லாம் இந்த அன்பு முத்தம்தான்.. உங்க பெயிண்டிங்கின் சிவலிங்க பிம்ப கற்பனையின் உருவக முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கி இன்றைய மாலை நேர கருத்தரங்கில் விரிவுரை செய்ய என் பெயரை பதிவு செய்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். இயந்திரல்லாத இங்குள்ள கலை ரசிகர்களுக்கு இதன் மகத்துவத்தை விளக்கிப் புரியச் செய்ய வேண்டியது என் கடமை என்றே கருதுகிறேன்...
இப்படித் தொடங்கிய நட்புறவு....
தன் வாழ்க்கையில் ஒருநாளும் மறக்க முடியாத அன்றைய மாலைப் பொழுது... ' பள்ளி சென்று எண்ணும் எழுத்தும் கற்க முடியாத நிலைமையிலிருந்த நான் சொந்தமாய் வீட்டில் உட்கார்ந்து எஸ்.எல்.சி.பரீட்சை பாஸாவது வரை படித்தது, சாபல்யமடைந்த நேரம்.... அத்தனைக்காவது ஆங்கில அறிவு இருந்தால்தானே வித்யாசாகரின் அந்த ஆழமான விரிவுரையை சிறிதளவாவது புரிந்து கொள்ள முடிந்தது... ' உபநிஷத்தையும், வேதங்களையும் எல்லாம் எடுத்தாண்டு அவர் சொன்ன ஆன்மீக கருத்துக்களில் தன்னால் புரிந்து கொள்ள முடிந்ததைவிட, புரிய முடியாத கனமான கருத்துக்களே அதிகம்.
எது எப்படியோ, அதற்குப் பின் தன் மதிப்பே அங்கு பெருமளவுக்கு உயர்ந்துவிட்டது போல ' திரும்பும் இடங்களில் எல்லாம் தன்னைத் தேடிவந்து மனப்பூர்வமாய் பாராட்டும், வாழ்த்தும் முன்பின் தெரியாத கலை ரசிகர்கள்.... ' வாய், கால் ஓவியர் சங்கத்தின் 'ஸ்டைபண்டராக ' தான் அங்கீகரிக்கப்பட்டு விட்டது, மாதாமாதம் இத்தனை ஓவியங்கள் வரைந்து தான் இங்கே அனுப்பி வைத்துவிட வேண்டியது -- இப்படி வாழ்க்கையைப் பயனோடு வாழ பயன்படும் வழிமுறை தன் முன்னால் திறக்கப்பட்டுவிட்டது.
இதற்கெல்லாம் காரணமாயிருந்தவர்..
விமான நிலையத்தில் வழியனுப்ப வந்திருந்தபோது அவர் சொன்ன வார்த்தைகள்..
தம்பீ..நம்மை விமர்சிப்பவர்களுக்கு, குறை சொல்கிறவர்கட்கு நாம் உள்ளுக்குள் நன்றியுடையவர்களாக இருக்கணும். அவர்களால் தானே ஒருவித வைராக்கியத்தோடு நாம் மேலும் மேலும் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம் '
பிளேனில் தன் கூட இந்தியாவுக்குப் பயணம் செய்த ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கேணல் பிரசாத் சொல்வதுவரை வித்யாசாகர் வாழ்விலும் கலைப்படைப்பிலும் ஒருங்கே வெற்றி பெற்ற மனிதர் என்று தான் எண்ணியிருந்தது...
கார்த்தீ... சொந்தக் கவலைகளைப் பிறரிடம் அவர் சொல்வதில்லை. அதுதான் அவர் சிறப்பம்சம். அவருக்கு சுவிட்சர்லாண்டில் ஆராய்ச்சிக்கான மேல் படிப்புக்காக காலர்ஷிப்புடன் அழைப்பு வந்தபோது சொந்த ஊரில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்... அது வேறு கதை.
இனி ஊர் திரும்பும்போது என்னவெல்லாம் நடக்கப் போகுதோ.... ' இருந்தும், இங்கே அவர் எவ்வளவு ஊக்கமாய் இயங்குகிறார்.... '
பிரசாத் ஆர்மியில் பணியாற்றியபோது குண்டுவீச்சில் கைகளை இழந்தவர். இப்போது காலால் அவர் வரையும் ஓவியங்கள்... இந்தியாவிலிருந்து தனக்கும் அவருக்கும் மட்டும்தான் இங்கே வர அழைப்புக் கிட்டியிருந்தது.
வித்யாசாகரின் ஊர்ப் பக்கமிருந்து வந்திருக்கும் பிரசாதின் வார்த்தைகளை எப்படி நம்பாதிருக்க முடியும் ?
முன்னால் உட்கார்ந்திருந்தவர்களிடம் கார்த்தி சொல்லிக் கொண்டிருந்தான்......
என் உடல் ஊனத்தை நினைத்து கொஞ்சங்கூட நான் கவலைப்படுவது கிடையாது. இந்த வீல்சேரில் உட்கார்ந்தவாறே இந்தியாவிலும் உலகத்தின் பல்வேறு இடங்களுக்கும் நான் தனிமையில் போய் வந்துவிட்டேன். அதில் நான் பெருமையடைகிறேன். நான் வரையும் ஓவியங்கள் ஒன்றும் விற்பனைக்காக அல்ல ' ஒவ்வொரு ஓவியத்துக்கும் ஒவ்வொரு லட்சியம் உண்டு. உடல் சுவாதீனம் இல்லாதவன் என்ற அனுதாபத்தைவிட படைப்பாளி என்ற முறையில் என் கலைப் பார்வையை நீங்கள் இனம் காண வேண்டுமென்பதுதான் என் கோரிக்கையெல்லாம் '.
கண்காட்சியெல்லாம் முடித்துக் கொண்டு பிரசாத் கூட அவர் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு ரயில் நிலையம் வந்தபோது தயாராக உறுமிக் கொண்டு நிற்கும் ரயில்.....
ரயில் பெட்டிக்குள் உட்கார்ந்து கொண்டு பிளாட்பாரத்தில் வழியனுப்ப நிற்கும் பிரசாத்தைப் பார்க்கையில்.....
அவரைப் பார்க்க முடியவில்லை.....
ரயில் நிலையத்தின் சந்தடிகள்......
ஒரு கணம் தன் விழிகளை உற்று நோக்கும் பிரசாத்......
கார்த்தி அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கும் உன்னை வேதனைப்படுத்த வேணாமுன்னுதான் இந்த மூணு நாளா உங்கிட்டே அவரைப் பற்றி ஒண்ணும் நான் சொல்லல்லே.... நீ இப்பவும் இந்த ஏக்கத்தை சுமந்துகிட்டு ஊர் திரும்புவதைப் பார்த்தா எனக்குக் கஷ்டமா இருக்குது அதனாலே சொல்றேன். சுவிட்சர்லாண்டில் வைத்து ஒரு லவ் அபயரில் நேர்ந்த ஏமாற்றம், இங்கே சொந்த ஊரில் அவருக்காகக் காத்திருக்கும் அடுக்கடுக்கான கசப்புகளைப் பற்றிய செய்திகள்.....
இவையெல்லாம் அவர் சமசித்தத்தை இழக்கச் செய்து விட்டது. இதற்கெல்லாம் மேல் பாஸ்போர்டின் காலக்கெடு முடிந்த பின்னரும் இந்தியா திரும்பாத அவரை கட்டாயமாய் ஊருக்குத் திரும்பி அனுப்பி வைத்தபோது அவர் சொத்தாய் மிஞ்சியிருந்தது இரண்டு மூன்று சூட்கேஸ் நிரம்பியிருந்த அவர் ஆயுள் கால கலைப்படைப்புகள். அவருடன் எங்கெல்லாமோ பயணம் செய்து, எல்லாம் இழந்த நிலையில் இங்கு வந்து அவற்றைத் திறந்து பார்த்தபோது......
வெறும் கூழாங்கற்கள்..... அதைக் கண்டதும் சித்த சுவாதீனத்தை முற்றிலும் இழந்து அசல் பைத்தியத்தின் சேஷ்டைகள்..... '
இப்ப இதே ஊரில் தெருக்களிலும் சுடுகாட்டிலும் தாடி ஜடை வளர்ந்து தொங்க வெறும் பித்தனாய் அலைந்து கொண்டிருக்கிறார் அவர்....
ரயில் இப்போது நகரத் தொடங்கியது.
*****
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
0 கருத்துகள்:
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.