Oct 14, 2010

சுந்தர ராமசாமியின் கவிதை உலகம் - குவளைக் கண்ணன்

சுந்தர ராமசாமி நினைவு தினம் அக்டோபர் 14

கவிதை காத்திருக்கும் கலை

குவளைக் கண்ணன்

பல விதமான நிலப்படுகைகளைக் கொண்டது பூமி, இந்த நிலப்படுகைகளில் ஏதோ ஒரு ஆழத்தில்  உள்ள நீரோட்டம், தனக்கு மேலேயுள்ள கல்லையும் மண்ணையும் விலக்கித் தள்ளி, மேலே கிளம்பிப் பூமியின் மேற்பரப்பில் வெளிப்படும்போது அது சுனையென்றும் ஊற்றென்றும் அழைக்கப்படுகிறது. திரவப்பொருள் திடப்பொருளைத் துளைத்து மீறி வெளிப்படுகிறது. நீரோட்டத்தின் அளவையும் விசையையும் பொறுத்து, சுனை நீர் பள்ளம் நோக்கிப் பாய்கிறது. தனது ஓட்டத்தின் வேகத்தால் தான் ஓடும் பாதையில் உள்ள ஊற்றுகளை உடைத்து நீர் சேர்த்து, கிளைத்தும் கிளைசேர்த்தும் அகன்றும் குறுகியும் ஓடி அந்தப் பிரதேசத்தை வளப்படுத்துகிறது. நதி தனது விசையோட்டத்தால் பாதையில் உள்ள குன்றுகளின் பாறைகளைக்கூட அறுத்தெறிந்துவிடுகிறது. நீரோட்டத்தின் அளவு குறைவதாலோ அல்லது குறைந்த விசையாலோ சுனைநீர் குளம், குட்டையாகத் தேங்கியும் நின்றுவிடுகிறது.

 Sura-Album10உலகின் மூத்த நாகரிகங்கள் அனைத்தும் நதிக்கரை நாகரிகங்கள்தான்; இலக்கியத்தில் மூத்த கலை வடிவம் கவிதைதான். மூத்தது என்பதால் பழமையானதாக ஆகிவிடுவதில்லை. நதியும் மலையும் கடலும் பழமையடைவதில்லை. மலையை உடைத்துக் கல்லெடுத்து, நதியிலிருந்து மணலும் தண்ணீரும் எடுத்து மனிதர்களால் எழுப்பப்படுபவை - கோட்டைகளிலிருந்து குடிசைகள்வரை - அனைத்தும் பழமை அடைந்து, ஒரு கட்டத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு லாயக்கற்றுப் போய்விடுகின்றன. கவிதையை மனித மனத்தின் சுனையாகக் கொள்ளலாம். ஊற்று பீறிட்டுக் கிளம்புவதில் கவிதை எழுதுபவனுக்குப் பங்கில்லை. ஊற்றின் விசையைப் பொறுத்துப் பள்ளம் நோக்கிப் பாய்கிறபோது அது நதியென்று ஆகிறது. நதியின் பாதையைக்கூடக் கவிஞன் தீர்மானித்துவிட முடிவதில்லை, நதியின் பாதையை நதியே தீர்மானிக்கிறது. சமுதாய அசுத்தங்கள் கலந்து மாசுபடாமல் நதியைப் பாதுகாப்பதே நதிக்கும் நாகரிகத்துக்கும் ஒரு கவிஞன் செய்துவிடக்கூடிய மிகப் பெரிய பணி. நதியுடனான ஊடாட்டத்தின் மூலம் அவனுடைய சுய அசுத்தங்கள் அவ்வப்போது கழுவப்படுவதே கவிதையால் கவிஞனுக்குக் கிடைக்கக்கூடிய மிகப் பெரிய பயன், மற்றபடிக்குத் திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை போன்றவை நகராட்சிப் பணிகள். கவிஞனுக்கு வேறு பணிகள் தரப்பட்டுள்ளன.

ஒருவர் அதிகப்பட்சம் தனது எந்தெந்த அசுத்தங்கள் நதியால் எந்தெந்த சமயத்தில் கழுவப்பட்டன என்று எழுதலாம். ஒரு தேர்ந்த கவிஞனால் நதியை மடைமாற்றிவிட இயலலாம். எப்படியானாலும் இங்கே நதிதான் முன்னிலைப்பட வேண்டும். வேறுமாதிரியாக இருக்கும்போது வாசகருக்குக் கவிஞர் கிடைப்பார், கவிதை கிடைப்பதில்லை. வாழ்வின் ஊற்று, இருத்தலின் ஊற்று, ஒரு தனிமனத்தின் வழியாகக் கவிதையென வெளிப்படுகிறது எனலாம். ஒரு மோசமான கவிதையில்கூட வாழ்வின் கீற்றை, உயிர்ப்பின் ஒளியைப் பார்த்துவிட இயல்வதால், வாழ்வின் சாரமே கவிதையென வெளிப்படுகிறது என்றுகூடச் சொல்லிவிடலாம்.

கவிதை என்றால் என்ன? எது நல்ல கவிதை என்கிற வகையிலான கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகின்றன. சிலர் இதுதான் கவிதை எனச் சொல்லத் துணிந்ததைக் காலம் கவ்விச் சென்றுவிட்டது. இதுதான் கவிதை என்று யாராலும் திட்டவட்டமாகச் சொல்லிவிட முடியாது. எது கவிதை அல்ல என்று சொல்லப்பட்டுள்ளது. கவிதை என்பதற்கான சில அடிப்படைக் கூறுகள் சொல்லப்பட்டுள்ளன. இவ்வகைக் கூறுகள் சிலவற்றை சுந்தர ராமசாமியும் சொல்லியிருக்கிறார். கட்டுரைகளிலும் சொல்லியிருக்கிறார். கவிதையிலும் சொல்லியிருக்கிறார். அவர் கவிதையில் சொல்லியிருப்பதைப் பார்ப்போம்: 'கவிதை என்பது சுதந்திரம்' எனும் தலைப்பில் உள்ள கவிதையின் (முழுக் கவிதை இந்த இடத்தில் திசை மாற்றும் என்பதால்) சில வரிகளைப் பார்ப்போம்.

கவிதை என்பது சுதந்திரம்
கவிதை என்பது கட்டுப்பாட்டின் அட்டகாசம்

எனும் வரிகளைக் கவிதை தோன்றுவதற்கான சாதக நிலையாகவோ கவிதை எழுதுதல் எனும் முறை பாட்டைச் சொல்வதாகவோ

கவிதை என்பது பூஜ்ஜியம்
உளறல்களின் பேரர்த்தம்
கவிதை என்பது ஊடுருவி உருக்குலைப்பது

எனும் மூன்று வரிகளையும் கவிதையின் தன்மையாகவும்

கவிதை என்பது பற்றுக்கோலின் கண்கள்
கவிதை என்பது உடலுறவின் உச்சக்கட்டம்

எனும் இரண்டு வரிகளையும் கவிதையின் செயலாக்கத்தைச் சொல்லும் வரிகளாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

'கதவைத் திற' எனும் தலைப்பிலுள்ள கவிதையைப் பார்ப்போம்!

கதவைத் திற காற்று வரட்டும்
சிறகை ஒடி
விசிறியின்
சிறகை ஒடி.
விசிறிக்குக் காற்று
மலடிக்குக் குழந்தை
கதவைத் திற காற்று வரட்டும்
உணவை ஒழி
உடலின்
உணவை ஒழி
உணவில் உயிர்
நீருள் நெருப்பு
கதவைத் திற காற்று வரட்டும்
சிலையை உடை
என்
சிலையை உடை
கடலோரம்
காலடிச் சுவடு
கதவைத் திற காற்று வரட்டும்.

உலக அமைதிக்காகவும் மனிதர்கள் வீடுபேறு அடைவதற்காகவும் பீடம் அமைத்துத் தியானம் போதிக்கிற சமீபத்திய தியான குரு ஒருவர் தமிழ் வாரப் பத்திரிக்கை ஒன்றில், தமிழர்களின் அக இருளைப் போக்கவும் அகப் புழுக்கத்தை நீக்கவும் பேசிய / எழுதிய தொடரின் தலைப்பாக 'கதவைத் திற காற்று வரட்டும்' எனும் வரி உபயோகிக்கப்பட்டது. தமிழர் நாகரிகப்படி, இது இந்தக் கவிஞரின் கவிதை வரி என்ற குறிப்பு காணப்படவில்லை. இந்தக் கவிதை வேறொரு காரணத்திற்காக இங்கே தரப்பட்டுள்ளது. அந்தக் காரணத்தைப் பின்னர் பார்ப்போம்.

சுந்தர ராமசாமியின் கவிதைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவரது முதல் கவிதை பிரசுரமான 1959முதல் 1975 வரை முதல் வகையாகவும் 1975முதல் 2005வரை உள்ள கவிதைகளை இரண்டாம் வகையாகவும் பிரிக்கலாம். கரட்டு வடிவத்தில் விடப்பட்டுப் பிரசுரம் பெறாமல் இத்தொகுப்பில் இப்போது சேர்க்கப்பட்டுள்ள கவிதைகளை மூன்றாம் வகையாகப் பிரிக்கலாம். (இந்தக் கரட்டு வடிவக் கவிதைகள் மிகவும் சுவாரஸ்யமானவையாக உள்ளன.) முதல் கட்டக் கவிதைகளில் ஒருவிதச் சந்தம் இழையோடுகிறது. இந்தப் பாங்கு இரண்டாம் கட்டக் கவிதைகளில் அருகிவிடுகிறது. கரட்டு வடிவக் கவிதைகளில் மீண்டும் ஒருவிதச் சந்தம் தொனிக்கிறது. இரண்டாம் கட்டக் கவிதைகளின் உருவாக்கத்தின்போது சந்தம் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லது கவிஞரின் நம்பிக்கைகள் சார்ந்து கவிதைகள் வெளிப்படும்போதே சந்தத்தைத் தவிர்த்த நடையில் வெளிப்பட்டிருக்கலாம், மூன்றாம் கட்டத்தில் கவிதைகள் வெளியாகும்போது - கவிஞரை மீறி மீண்டும் சந்தத்தோடு வெளிப்பட்டிருக்க வேண்டும்.

மனித மனத்தின் பல தளங்களில் மொழி சற்றே ஆழமான தளத்தைச் சார்ந்தது. மொழியின் தளத்தைவிட ஆழமான தளத்திலிருந்து கிளம்பும் கவிதையானது மொழித் தளத்திலிருந்து தனக்கான சொற்களைத் தன்னோடு எடுத்துக்கொண்டு வந்துதான் கவிஞனின் வழியாக வெளிப்படுகிறது. 'அப்படியானால் கவிதையில் கவிஞனின் பங்கு என்ன' என்ற கேள்வி எழுகிறது. வெளிப்பாட்டு அளவில் ஒரு கவிதை தவறாக அர்த்தமாகாமல் பார்த்துக்கொள்வது, கவிதையின் ஒழுங்குவரிசையை மொழியின் அர்த்தங்கள் சார்ந்த ஒழுங்குவரிசைக்கு ஏற்பட அமைப்பது, நெருக்கமான வாசிப்பை ஏதுவாக்கும் வகையில் சொற்களை உபயோகிப்பது, கூறியது கூறலைத் தவிர்ப்பது, சொற்கள் இடறும்போது சரியான சொற்களை மாற்றிவைப்பது போன்ற செயல்களைக் கவிதையில் கவிஞனுடைய பங்காகக் கொள்ளலாம்.

சுந்தர ராமசாமியின் பல கவிதைகளைப் பொதுமனக் குரலுக்கு எதிரான தனி மனத்தின் எதிர்ப்புக் குரலாக, பொது மனத்துக்குத் தனிமனம் விடுகிற சவாலாகப் பார்க்க முடியும். ஒருபக்கம் மரங்கள், கடல் பறவைகள், பறவைகளின் குரல் என்று போகும் கவிதைகள், மறுபக்கம் மணக்கோலத்தில் நிற்கும் பெண், ரயிலடியில் அழுதபடி இருப்பவள், தலையில் சுள்ளிக் கட்டுடன் உள்ள கறுத்த பெண், சைக்கிளில் பூ விற்பவர் எனச் சமூக வாழ்வின் பல தளங்களில் உள்ளவர்களோடு உறவுகொள்கின்றன. இயற்கையோடும், தான் காண்கிற (பரிச்சயமுள்ள/பரிச்சயமற்ற) அனைவருடனும் நட்புக்கொள்ள விரும்புகிற தன்மையை, அனைத்தோடும் அனைவரோடும் பங்குகொள்ள விரும்புகிற தன்மையை சுந்தர ராமசாமியின் கவிதை உலகின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகக் கருதலாம். இத்தகு உறவால் 'கண்ணீருக்குப் பல வண்ணங்கள்' எனும் வரி, கரட்டு வடிவிலுள்ள கவிதை ஒன்றில் வெளிப்படுகிறது. சுந்தர ராமசாமியின் கவிதைகளைப் பதற்றமும் தத்தளிப்பும் நிறைந்த உண்மையின் பாற்பட்ட அகவுலகின் வெளிப்பாடுகளாக, புறவுலகிற்கு எதிரான வெளிப்பாடுகளாகக் கொள்ளலாம். இந்தப் பதற்றமும், தத்தளிப்பும் இவரது கட்டுரைகளிலோ கதைகளிலோ வெளிப்படையாகக் காணக் கிடைப்பதில்லை. சுந்தர ராமசாமியின் உரைநடைகளில் இருந்து ஒருபோதும் தனது சமநிலையைத் தவறவிடாத ஒருவரது பிம்பம் கிடைக்கையில், இதற்கு மாறாகக் கவிதைகளில் ஆசானுக்குரிய கட்டளைத் தொனியும் ஆலோசனை வழங்கும் தொனியும் ஒருபுறம் தொனிக்க, மறுபுறம் தன்னைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிற, எல்லோரோடு உறவாட விரும்புகிற மிகவும் நெகிழ்வான தொனியும் மாறிமாறி ஒலிக்கிற, பதற்றமும் தத்தளிப்பும் நிறைந்த ஒருவரது பிம்பம் நமக்குக் கிடைக்கிறது.

இவரது கவிதை உலகின் மற்ற முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

மரணம் பற்றிய குறிப்புகளைப் (திரிவிளக்கு ஒருமுறைக்கு மேல் இடம் பெறுகிறது) பரவலாக அங்கங்கே சில கவிதைகளில் காண முடியும். நான், என், எனது தன்மை போன்ற ஒருமைச் சுட்டுகளால் ஆன சொல்முறை ஏறத்தாழ ஐம்பது கவிதைகளில் உபயோகிக்கப்படுகிறது. நண்பரிடம் பேசுவது போன்ற தன்மையிலான கவிதைகள் சில உள்ளன. சந்தம் தவிர்க்கப்பட்டதைப் போலவே கிண்டலான, கேலியான தொனியிலானவையும் (மந்த்தரம், வித்தியாசமான மியாவ், உங்கள் யோசனை, 184ஆம் பக்கத்திலுள்ள தலைப்பிடப்படாத கவிதை) கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்று தோன்றுமளவுக்குக் குறைவாகவே உள்ளன. இரண்டு கவிதைகளில் ஆந்தை, இரண்டு கவிதைகளில் நாய்கள், இரண்டில் பூனைகள். இந்த எல்லாக் கவிதைகளும் வெளிப்படையாக எங்கும் காணக் கிடைக்கிற பொதுமன மனிதர்களைக் குறிப்பவை. இவற்றில் எந்தக் கவிதை எவரைக் குறித்து எழுதப்பட்டது எனும் ஆய்வு பொதுமனத்தின் பாற்பட்டதே அன்றி, கவிதையின்பாற்பட்டதல்ல. கிடைத்துவிட்ட கவிதையைத் தர்க்கத்தின் வழி சென்று நிறைவு செய்வது, தர்க்கத்தில் இருந்து புறப்பட்டுக் கவிதையைச் சென்றடைவது அல்லது கிடைத்துவிட்ட கவிதையை அறிவின் வழிசென்று நிறைவு செய்வது, அறிவின் அலசலில் ஆரம்பித்துக் கவிதையைச் சென்றடைவது (அறிவு எனும் சொல்லுக்குரிய மேலான பொருளில்) எனும் போக்கை சுந்தர ராமசாமி கவிதைகளின் ஆதாரமான போக்காகக்கூடச் சொல்லலாம் ஆனால் இப்படிச் சொல்கிற அதே வேளையில் இதன் எதிரிடையாகவோ எதிரிணையாகவோ தர்க்கத்தின் போதாமையையும் அறிவின் போதாமையையும் சொல்கிற வரிகளையும் அறிவினால் களைப்புற்றும் சலிப்புற்றும் அறிவுக்கு அப்பால் செல்ல விரும்பும் விழைவைத் தெரிவிக்கிற வரிகளையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். இப்படியான வரிகள் சிலவற்றைப் பார்ப்போம்:

"மூளையில் தர்க்கம்/ அறுபட்டு விழித்ததும். முகவையில் அளந்து காட்டு என/ சின்ன மூளை கொக்கரிக்கும். சிறுகச் சிறுக நான் என் மூளையில் ஒட்டி/ சிறுகச் சிறுக பிறருடைய மூளைகளிலும்/ நான் ஒட்ட ஆரம்பித்தபோது / சீரழியத் தொடங்கினேன். அவன் மூளை நரம்பில் என் ஜீவன் கரையும் போது கூடும். நம் குருதி நாளங்கள் வழியாக/ நம் மூளையில் ஒட்டும் திசுவை/ நக்கி மீண்டும் நக்கி/ நம் வாயோரம் வழிந்த போதையில் உயிர்கள் குலைந்து உன்மத்தம் பரவி''.

இந்த வகையாக மூளை செயல்படாமல், நாம் அறிவைக் கடந்து அப்பால் சென்றுவிட்டால் அந்த உலகம் எப்படி இருக்கும்? கவிஞர் 'வாழும் கணங்கள்' எனும் தலைப்பில் (பக்கம் 77) எழுதியுள்ள கவிதையைப் பார்ப்போம்.

மூளை நரம்பொன்று அறுந்து
ஒளிவெள்ளம் உள்ளே புகுந்தது
மனவெளியும் நிலவொளியில் குளிர
செவிப்பறை சுயமாய் அதிர
மண்ணில் ஒருபோதும் கேட்டிராத
ஓசை உவகைகள் எழும்பின
பாஷை உருகி ஓடிற்று
ஒரு சொல் மிச்சமில்லை
என் பிரக்ஞை திரவமாகி
பிரபஞ்சத்தின் சருமமாய்
நெடுகிலும் படர்ந்தது
ஒரு கணம்தான்
மறு கணம்
லாரியின் இரைச்சல்
எதிரே நாற்காலி.

சுந்தர ராமசாமி வாழும் கணங்களாக எதைச் சொல்கிறார்? மூளையிலிருந்து உடலுறுப்புப் பகுதிகளுக்குத் தூண்டுதல் உணர்வுகளைக் கொண்டுசெல்லும் தசை நாணை நரம்பு என்று சொல்கிறோம். அறிவியல் ரீதியாக மூளை நரம்பு அறுபடுவதால் மரணம்வரை சம்பவிக்கக்கூடும். இந்தக் கவிதையில் மனம் தற்காலிகமாகச் செயலிழந்துவிடும் கணங்கள் சொல்லப்படுகின்றன. எண்ணங்கள் அற்ற நிலை மனத்தின் தற்காலிகச் செயலிழப்புக்குக் காரணமாக முடியும். மனத்தின் எண்ணங்களற்ற, தர்க்கங்களற்ற இவ்வாறான நிலை 'வாழும் கணங்கள்' என்று சொல்லப்படுகிறது. இந்த வாழும் கணங்கள் மனத்தின் பழக்கம் சார்ந்த சிந்திப்புகளற்ற ஒரு நிலை என்று கொள்ளலாம். இத்தகு நிலையில் அத்தனையும் பிரகாசமாகிவிடுகிறது. ஒருவகையான இன்பநிலை போலத்தான் உள்ளது மனவெளி நிலவொளியில் குளிர்ந்ததாகச் சொல்லப்படுகிறதே. இதுவரை கேட்டிராத ஓசை செவிப்பறை அதிர்வதால் ஏற்பட்டு ஒவ்வொரு அதிர்விலும் ஓர் உவகை என உவகைகள் எழும்புகின்றன. இந்த உவகைகளால் சொல்லற்றுப் போகிறது. சொல்லற்ற நிலையில் பிரக்ஞை தனது இயல்பான நிலைக்குப் போய்விடுகிறது. அதாவது திரவமாகிப் பிரபஞ்சத்தின் சருமமென எங்கும் படர்கிறது. மேலோட்டமான மனத்தின்பாற்பட்ட எண்ணங்கள், தர்க்கங்கள், அடையாளங்கள் அற்றுப்போகிறபோது அது சார்ந்த பிரக்ஞை தனது அடையாளங்களை இழந்து, தனது தோற்ற நிலைக்குச் செல்லும்போது அது பிரபஞ்சத்தின் பிரக்ஞையாக ஆகிவிடும் என்பது போன்ற முடிவுகளுக்கு இந்தக் கவிதையின் வழியாகச் செல்ல முடியும். இது ஒரே ஒரே ஒரு கணம்தான். மீண்டும் பிரத்யட்ச உலகுக்கு வந்துவிடுகிறது. லாரியின் இரைச்சல் கேட்கிறது. கடைசி வரியாக 'எதிரே நாற்காலி' என்ற சொற்கள் வருகின்றன. எதிரே நாற்காலி என்கிறபோது அதில் யாரும் அமர்ந்திருக்கவில்லை என்று தெரிகிறது. இந்த வரி ஏன் எழுதப்பட வேண்டும்? இந்தக் கவிதை அனுபவம் ஏற்படத் துவங்குவதற்கு முன் அந்த நாற்காலியில் யாரோ அமர்ந்திருந்து இப்போது அவர் எழுந்து போய்விட்டார் என்றோ அல்லது இந்த அனுபவம் யாருக்கு ஏற்பட்டதோ அவர் இந்த அனுபவத்தின்போது எதிரே நாற்காலி போடக்கூடிய ஒரு இடத்தில் (வீட்டிலோ அலுவலகத்திலோ) இருந்தார் என்பதைக் குறிப்பிடுவதற்காகவோ இந்த வரி எழுதப்பட்டிருக்க வேண்டும். கவிதையின் ஒவ்வொரு சொல்லும் எதையோ குறிக்கிறது. தேவையற்ற ஒரு சொல் கவிதையில் இருப்பதில்லை.

சுந்தர ராமசாமியின் கவிதை உலகை மேலும் அறிய அவருடைய பிரத்தியேகமான குரல் என நாம் கொள்ளக்கூடிய குரலில் அமைந்த சில வரிகளைப் பார்ப்போம்.

"நகத்தை வெட்டியெறி - அழுக்குச் சேரும் * என்னை அழிக்க யாருண்டு/ எழுத்தில் வாழ்பவன் அன்றோ நான் * தேடி அலையாதே/ அலைந்து திரியாதே * என்று ஆடை உரித்து/ அம்மணம் பற்றும் என் பார்வை * எழுதுவது எப்படி என்று என்னைக் கேட்காதே / எழுது அதுவே அதன் ரகசியம் * நண்ப / வருந்தாதே / வெட்கப்படாமல் துக்கப்படு * என் கனவை உணர்ந்த ஒரு இதயம்/ எனக்காக அதைக் கட்டும்/ தன் கனவில் * சவுக்கின் சொடுக்கு நம் மரணத்தில் கெக்கலிப்பது/ நமக்குத் தெரியாமல் போயிற்று * என் அனுபவம் பொய்க்கட்டும்/ கனவு நிறைவேறட்டும்/ மனிதர்கள் மீண்டும் குழந்தைகளாகும் கனவு.

நாம் சுந்தர ராமசாமியின் கவிதை உலகை அறிவதற்காக அவரது கவிதைகளைச் சில வகைகளாக வகைப்படுத்திப் பார்த்தோம். இந்த வகையாக வகைப்படுத்திப் பார்ப்பது நமது புரிதலின் பொருட்டு நமது வசதிக்காக நாம் செய்துகொள்வது. எந்தக் கவிஞரின் கவிதைகளையும் திட்டவட்டமாக யாராலும் வகைப்படுத்திவிட முடியாது. அப்படி ஒருவர் வகைப்படுத்தத் துணிந்தால், அந்த வகைப்பாட்டுக்குள் அடங்காத கவிதைகளை வேறொருவர் எடுத்துக்காட்ட முடியும். இதுவரை நாம் செய்த வகைப்பாடுகளுக்குள் அடங்காத ஒரு கவிதையைப் பார்ப்போம். 'தனித் தனியே' என்ற தலைப்பில் உள்ள கவிதை:

ஒரு பறவையின் சிறகுகள்
பறவையின்றிப் பறப்பதைக் கண்டேன்
சிறகுகளின்றிப் பின் வந்த பறவை
ஒரு இசையின் குழைவில்
லாவகமாய் தன் சிறகுகளைத்
தன்னோடு இணைத்துக்கொண்டது.
பறந்து பறந்து
பறவையின்றிப் பறக்கச் சிறகுகளுக்கும்
சிறகுகளின்றிப் பறக்கப் பறவைக்கும்
கூடி வந்த சூட்சுமம்
என் அகத்தில் விரிந்தபோது
துவண்டுகிடந்த என் மனத்தில்
ஒரு பூ மலர்ந்தது.

முதலில் சிறகுகள் மட்டும் பறவையின்றிப் பறப்பது பார்க்கப்படுகிறது. அதன் பின்னால் சிறகுகளின்றி வரும் பறவை இசையின் குழைவில் தன்னுடைய சிறகுகளைத் தன்னோடு இணைத்துக்கொள்கிறது. மாயமான, இயற்கையில் சாத்தியமற்ற ஒரு காட்சி கவிஞருக்கு மனக்காட்சியாகச் சாத்தியப்படுகிறது. இது எவ்வாறு நிகழக்கூடும் என்பது துலங்கும்போது துவண்டுகிடந்த மனத்தில் இதுவரை மலராதது மலர்கிறது. இது கவிதையின் அமைப்பு, ஆனால் மேலிருந்து கீழாக, வரிசையாக இதே அமைப்பில் இந்தக் கவிதையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அது முடியாது என்று தோன்றுகிறது.

கவிதையை இன்னொரு முறை வாசித்துப் பார்ப்போம். இப்போது வேறு வகையாக முயன்று பார்ப்போம், இந்தக் கவிதையில் கடைசியிலிருந்து இரண்டாம் வரியில் கவிதையின் வாசல் உள்ளதுபோல் இருக்கிறது. மனம் துவண்டுகிடக்கிறது. ஏதோ பிரச்சினை, பிரச்சினைகூட இல்லை, நெருக்கடி. நமக்கு ஒரு நெருக்கடி ஏற்படும்போது நம் அறிவுக்கு எட்டுகிற அனைத்தையும் முயன்றுபார்க்கிறோம்,

அந்த நெருக்கடியை நமது அறிவால் அலசிப் பார்க்கிறோம். நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. கையறு நிலையில் ஓய்ந்து விடுகிறோம். அந்த நெருக்கடியை ஆராய்வதை விட்டுவிட்டு என்ன ஆனாலும் ஆகட்டும் என்று நெருக்கடியால் ஏற்படும் விளைவைச் சந்திக்கத் துணிகிறோம். அப்போது ஏதோ ஒரு சொல், ஏதோ ஒரு காட்சி நமது மனத்தில் தோன்றி நெருக்கடியைத் தீர்த்துவைத்துவிடும். அந்தச் சொல், ஒரு மொழியின் அகராதியில் இல்லாததாக, பரிச்சயமற்ற வேறொரு மொழியினுடையதாக இருக்கலாம். அந்தக் காட்சி சாதாரணமாகச் சாத்தியமற்றதாக இருக்கலாம். ஆனால், அந்தச் சொல் அந்தக் காட்சி நமக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்திவிடும். நமது மேல்மனத்தால் ஏற்படும் நெருக்கடிக்கு, மேல்மனத்தின் தர்க்கத்திற்கு உட்படாத ஆழ்தளங்களிலிருந்து வரும் பதில்கள் புதிர்களைப் போன்ற குறியீடுகளாக வருமெனச் சொல்லப்படுவதுண்டு, இந்தக் கவிதையில் ஏதோ ஒரு நெருக்கடியில் முட்டி மோதிக் களைத்துத் துவண்டு கிடக்கும் மனமொன்றுக்கு ஆழ்மனத்திலிருந்து புதிரான குறியீடாக ஒரு பதில் வருகிறது. அந்தக் குறியீடு புரியும்போது துவண்டு கிடந்த மனம் புத்துணர்வு பெறுகிறது. மனத்தில் புதிதாக ஒன்று பூத்துவிடுகிறது. இந்தக் கவிதையில் நெருக்கடி என்னவென்று சொல்லப்படுவதில்லை, நெருக்கடியிலிருந்து மீண்டது எவ்வாறு என்று மட்டும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. 'சூட்சும் அகத்தில் விரிந்தபோது' என்று வருகிறது. எது அந்தச் சூட்சுமம், அந்தச் சூட்சுமத்தைக் கவிஞர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறாரா? கவிதையை இன்னொரு முறை வாசித்துப்பார்ப்போம்.

கவிஞர் பகிர்ந்துகொள்கிறார். 'பறந்து பறந்து' எனும் வரிதான் அந்தச் சூட்சுமம், இசை என்பதைச் சீரான, சீராக்கப்பட்ட ஒலிக்குறிப்புகள் என்று வைத்துக் கொள்ளலாம். இப்படியான சீர் நெகிழ்ந்து குழையும்போது சிறகுகளைப் பறவை தன்னோடு இணைந்துக்கொள்கிறது. நெருக்கடிக்கான காரணங்கள் நம்மிடையே வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் நெருக்கடி நமக்குப் பொதுவானது, ஆழ்மனம் அனுப்பும் பதிலை அகத்தில் விரித்துப் புரிந்துகொள்வதுதான் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழி என்பதுபோல் உள்ளது. நமது நெருக்கடிக்கான பதிலைப் புத்தகங்களோ மதங்களோ தெய்வங்களோ மற்ற மனிதர்களோ வைத்திருப்பதில்லையா? நமது நெருக்கடிக்கான குரலை நமது ஆழ்மனமே வைத்துள்ளதா?

n n n

கதவைத் திற

கதவைத் திற காற்று வரட்டும்
காலடிச் சுவடு
கடலோரம்
சிலையை உடை
என்
சிலையை உடை
கதவைத் திற காற்று வரட்டும்
நீருள் நெருப்பு
உணவில் உயிர்
உணவை ஒழி
உடலின்
உணவை ஒழி
கதவைத் திற காற்று வரட்டும்
மலடிக்குக் குழந்தை
விசிறிக்குள் காற்று
சிறகை ஒடி
வசிறியின்
சிறகை ஒடி
கதவைத் திற காற்று வரட்டும்

இந்தக் கவிதை இக்கட்டுரையில் தவறுதலாக இரண்டு முறை பிரசுரமாகிவிடவில்லை, கடைசி வரியில் இருந்து முதல்வரியை நோக்கி மேல் நோக்கி முயற்சி செய்து பார்க்கப்பட்டுள்ளது. தலைகீழாகக் கீழிருந்து மேலாக வாசிக்கும்போது அர்த்தம் தருவது, குறிப்பாக அதே அர்த்தத்தைத் தருவது இந்தக் கவிதையின் அழகு.

சுந்தர ராமசாமி ஏதோ ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், ''நான் உரைநடையின் சந்ததி, அதனால் எனது எழுத்துக்கள் உரைநடையில் அமைந்திருக்கின்றன. இதுவே நான் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து வளர்ந்து எழுதியிருந்தால் அன்றைய சமகால வடிவமான கவிதையில் மட்டுமே எழுதியிருப்பேன்'' எனச் சொன்னதாகக் கவிஞர் சுகுமாரன் இந்தப் புத்தகத்தின் பின்னுரையில் குறிப்பிடுகிறார். நேர்காணல்களில் தமிழ் வெகுஜன ஊடகங்களுக்கே உரித்தான கேள்விகளில் ஒன்றாகக் கேட்கப்பட்டிருக்கக் கூடிய, "நீங்கள் ஏன் அதிகமாகக் கவிதைகள் எழுதவில்லை?'' என்பது போன்ற சாந்து பூசிய புத்திசாலித்தனமான கேள்விக்கான பதிலாக அவரது நேர்காணல் கூற்றை எடுத்துக்கொள்ளலாம். மேலும் அவருடைய பதிலின் கடைசியில் கவிதையில் மட்டுமே எழுதியிருப்பேன் எனும் வார்த்தைகளுக்கு ஒருவித அழுத்தமுள்ளதாகத் தோன்றுகிறது, 'ந. பிச்சமூர்த்தியின் கலை; மரபும் மனித நேயமும்' எனும் புத்தகத்தில் 43ஆம் பக்கத்தில், "உரைநடை எழுத முடியாத ஒரு கவிஞன் கவிதை எழுத முடியாது''. உரைநடையிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு கவிஞன் கவிதை எழுதுவான் என்றால், உரைநடைகூட எழுத முடியாதவன் அவன் என்பதை அவனது கவிதையே காட்டிவிடும். 'என்னால் நடக்க இயலாது. பரதம் மட்டுமே ஆட முடியும்' என்று எந்த நாட்டியக் கலைஞரும் சொல்ல முடியாது'' என்கிறார் சுந்தர ராமசாமி. கவிதை, உரைநடை இரண்டிலும் இயங்குபவர்கள் பலர் நம்மிடையே இன்று இருக்கிறார்கள். சுந்தர ராமசாமியின் மொழியில் சொல்வதனால் நடந்து காட்டுவது அவசியமில்லை என்று நினைக்கும் கவிஞர்களாலும் நடனமாடத் தெரியாத (உரை) நடைக்காரர்களாலும் நிரம்பியுள்ளது தமிழ் இலக்கிய வீதி என்று ஒருவர் சொல்லலாம்.

சுந்தர ராமசாமி கவிதைகள் எனும் இந்தத் தொகுப்பைப் படித்துவிட்டு, 'சுந்தர ராமசாமி அடிப்படையில் ஒரு கவிஞர், அதனால்தான் அவரால் உரைநடையில் உயரங்களை எட்ட முடிந்தது, எனும் முடிவுக்கு நம்மால் வர முடியும். இந்தத் தொகுப்பைப் படிப்பவர்களுக்கு அவரவர் மனப்பாங்கைப் பொறுத்து வெவ்வேறு கவிதைகள் பிடிக்கலாம், நிச்சயமாக ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகள் பிடித்துப்போகும் என்று சொல்ல முடியும். தமிழின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான சுந்தர ராமசாமி கதைகள், கட்டுரைகளில் போலவே கவிதையிலும் தனக்கான இடத்தைத் தக்க வைத்திருக்கிறார்.

இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள இதுவரை பிரசுரமாகாத கரட்டு வடிவிலான கவிதைகளில் பல அற்புதமான வரிகள் உள்ளன. அவற்றில் கவிதை பற்றி அவர் இதுவரை தெரிவித்துள்ள பல கூற்றுகளுக்கும் சாராம்சமான வரிகள் உள்ளன:

கவிதை எளிமை இல்லை
எழுத யாரும் முற்படலாம்
கூடி வருவதில்லை
கவிதை காத்திருக்கும் கலை.

சுந்தர ராமசாமி (46 ஆண்டுகளில் 110 கவிதைகள்) காத்திருந்தவர்.

1985இல் இவர் எழுதியுள்ள 'கதவைச் சுண்டாதே தயவு செய்து' எனும் தலைப்பிலுள்ள கவிதையில்,

ஒரே ஒரு கவிதை
போதும் இந்த ஜென்மம் பொருள்பட என்பது என் நம்பிக்கை
அதை எழுதிவிடக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

எனும் வரிகள் இடம்பெறுகின்றன. இந்த நம்பிக்கை கவிதை எழுதுகிற எல்லோருக்கும் இருக்க வேண்டிய நம்பிக்கை. அந்தக் கவிதையை எழுதிவிடக் காத்துக்கொண்டிருக்க வேண்டும். நாம் எழுதும் கவிதைகள் அனைத்தும் அந்த ஒரே ஒரு கவிதையை எழுதிவிடுதற்கான முயற்சிகளாக இருக்க வேண்டும், அந்தக் கவிதையை எழுதிவிட்டதாக நினைத்துவிடக் கூடாது கடைசிவரை. சுந்தர ராமசாமி அவரது அந்த ஒரே ஒரு கவிதையை எழுதிவிட்டார்.

n n n

இப்போது நான் மீண்டும்
நண்ப, எனக்கு உறக்கமில்லை
இருளின் செழுமை சேர்த்து
ரகசிய அறைகளில் நெசவாகிக்கொண்டிருக்கும்
இனங்கூற முடியாத ஏதோ ஒன்று நெற்றிப்பொட்டை
சதா தாக்கிக்கொண்டிருக்கிறது
இன்று அதிகாலை வாசல் கதவைத் திறந்தபோது
எதிரே சீரழிவின் துள்ளி மறியும் கோலம் ஒன்று
இன்றுவரை (உன்) அன்பைச் சொல்வதில்
தோல்வியே தொடர்கிறது
அன்பு என்பது ஆபத்து
இசை என்பது அவசரம்
கலை என்பது கொலை
அச்சுக் காட்டில் முளைத்து நிற்கும்
அறிவின் அகங்காரம்
கண்ணீரைத் துடைக்க முடியாது
(என்) துக்கத்திற்கு விடுமுறை இல்லை என்பதறிவேன்
இருப்பினும் அது சற்றுத் தூங்கினால்
நானும் சற்றுத் தூங்கமுடியும்
சதா ஒரு சத்தம்
செவிப்பறையைத் துளைக்கும் இரைச்சல்
சந்தடி: அவலங்களின் கோலங்கள்
நடுநெஞ்சில் அவலம் பீறிட்டது
மீண்டும் இறந்தேன் நேற்று
ஆனால், வருவேன் மீண்டும்
வருவேன் என்று என் முன் சொன்னவன்
வந்த பின் வருவேன் நான்.

n

என்னை அழைக்கிறது அந்த அடிவானம்
சலனமற்ற தடாகத்தில்
நீரின் மொக்குகள் போல்
குமிழிகள் பூத்துக் குலுங்குவதைக் கவனித்தேன்
குமிழிகளின் மலர்ச்சி
பின் அவற்றின் மறைவு
இல்லாததற்கு இருப்புத் தருவது
இருப்புத் தந்தபின் மறுப்புத் தருவது
காய்ந்த சருகு சலசலக்கும்
புகைந்தெரியும்
பச்சை இலை காய்ந்து உதிரும்
முன்னகர்த்தி என்ன வீசும் இலைகடல்
அலை என்பது காற்றின் வடிவம்
என் தாய் போல் காற்று
அழைத்துச் செல்லும் அது
ஒற்றையடிப் பாதைகளில் நகரும் காற்றை
நான் ஒருபோதும் பார்த்ததில்லை

அங்கொரு உயிர்
அல்லது உயிரின் நிழல்
(அந்தக்) குழந்தையின் காலோசை(நம்மை)
அழைக்கிறது
காலடி ஓசை
அல்லது காலடி ஓசையின் நிழல்
அந்த இருளில் குளிர் ஊடுருவி நின்றது
இருளும் குளிரும்
இருளிலிருந்து இழை எடுத்து
சவுக்குகளிலிருந்து மலர் தொடுத்து
அந்த உலகின் அற்புதங்கள்
யாராலும் நிகழ்த்திக் காட்ட முடியாதது
அந்த உலகின் வர்ணங்கள்
வானத்தின் விற்கள் அறிய முடியாதவை.

இயற்கையின் இமைகள்
துடிக்கின்றன
இப்போதைக்கு விடைபெற்றுக் கொள்கிறேன்
என்னை அழைக்கிறது அந்த அடிவானம்
இப்போது என் கைக்கிளி புள்ளியாய் அடிவானத்தில்.

குறிப்பு: மேலேயுள்ள இரு கவிதைகளும் நான் எழுதியவை. இவற்றில் உள்ள வரிகள் அனைத்தும் சுந்தர ராமசாமியின் கரட்டு வடிவக் கவிதைகளில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. அடைப்புக் குறிகள் என்னுடையவை. ஓவியத்தில் கொலாஜ் என்கிற வடிவம் உண்டல்லவா, அதுபோல் கவிதையில் ஒரு முயற்சி. இயங்குதளம் அமைத்துத் தந்த முன்னோர் ஒருவருக்குச் செய்யும் சிறு மரியாதை.

- குவளைக் கண்ணன்

நன்றி: காலச்சுவடு  இதழ் 82, அக்டோபர் 2006

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

2 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ on October 14, 2010 at 8:39 AM said...

கடைசி வரியில் இருந்து முதல்வரியை நோக்கி மேல் நோக்கி முயற்சி செய்து பார்க்கப்பட்டுள்ளது. தலைகீழாகக் கீழிருந்து மேலாக வாசிக்கும்போது அர்த்தம் தருவது, குறிப்பாக அதே அர்த்தத்தைத் தருவது இந்தக் கவிதையின் அழகு.

பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல

kavinsandron on October 30, 2010 at 4:15 AM said...

நல்லதோர் தொகுப்பு..

படைப்புகளுக்கு மிகவும் நன்றி

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்