சாமநாது அரசமரத்தடி மேடை முன்னால் நின்றார். கல்லுப் பிள்ளையாரைப் பார்த்தார். நெற்றி முகட்டில் குட்டிக் கொண்டார். தோப்புக்கரணம் என்று காதைப் பிடித்துக்கொண்டு லேசாக உடம்பை மேலும் கீழும் இழுத்துக்கொண்டார்.
“நன்னா முழங்காலை மடக்கி உட்கார்ந்து எழுந்துண்டுதான் போடேன் நாலு தடவை. உனக்கு இருக்கிற பலம் யாருக்கு இருக்கு? நீ என்ன சுப்பராயன் மாதிரி நித்யகண்டம் பூர்ண ஆயுசா? சுப்பராயன் மாதிரி மூட்டு வியாதியா, ப்ளட்ப்ரஷரா, மண்டைக் கிறுகிறுப்பா உனக்கு?” என்று யாரோ சொல்வது போலிருந்தது. யாரும் சொல்லவில்லை. அவரேதான் சொல்லிக் கொண்டார். அந்த மனதே மேலும் சொல்லிற்று. “எனக்கு எழுபத்தேழு வயசுதான். சுப்பராயனுக்கு அறுபத்தாறு வயசுதான். இருக்கட்டும். ஆனா யாரைப் பார்த்தா எழுவத்தேழுன்னு சொல்லுவா? என்னையா, அவனையா? பதினஞ்சு லக்ஷம் இருபது லக்ஷம்னு சொத்து சம்பாதிச்சா ஆயிடுமா? அடித் தென்னமட்டை மாதிரி பாளம் பாளமா இப்படி மார் கிடைக்குமா? கையிலேயும் ஆடுசதையிலியும் கண்டு கண்டா இப்படிக் கல்லுச் சதை கிடைச்சுடுமா? கலியாணம் பண்றானாம் கலியாணம்! உலகம் முழுக்கக் கூட்டியாச்சு! மோளம் கொட்டி, தாலிகட்டி கடைசிப் பொண்ணையும் ஜோடி சேத்து, கட்டுச் சாதம் கட்டி எல்லாரையும் வண்டி ஏத்திப்ட்டு, நீ, என்ன பண்ணப் போறே? கோதுமைக் கஞ்சியும் மாத்திரையும் சாப்பிட்டுண்டு; பொங்கப் பொங்க வெந்நீர் போட்டு உடம்பைத் துடச்சுக்கப் போறே! கையைக் காலை வீசி இப்படி, ஒரு நாளைக்கு வந்து காவேரியிலே ஒரு முழுக்குப்போட முடியுமான்னேன்!”
சாமநாது சுற்றும்முற்றும் பார்த்தார். அரசமரத்து இலைகள் சிலுசிலுவென்று என்னமோ சொல்லிக் கொண்டிருந்தன. காவேரிக்குப் போகிற சந்தில் இந்தண்டையும் அந்தண்டையும் குளித்தும் குளிக்கவும் ஆண்கள், பெண்கள், குளுவான்கள் எல்லாம் கடந்துகொண்டிருந்தார்கள். முக்கால்வாசி புது முகங்கள் - போகிற வாக்கில் பட்டுப் புடவைகள், வெறுங் குடங்கள் - வருகிற வாக்கில் சொளப்சொளப்பென்று ஈரப் பட்டுப் புடவைகள், நிறை குடங்கள். ஈரக்காலில் பாதை மண் ஒட்டி மிளகு மிளகாகத் தெறிக்கிறது. கீரைத்தண்டு மாதிரி ஒரு குட்டி - ஐந்தாறு வயசு - குளித்துவிட்டு அம்மணமாக வருகிறது. காவேரியில் குளித்துவிட்டு அங்கேயே உடை மாற்றி, நீல வெளுப்புடன் சேலம் பட்டுக்கரை வேஷ்டிகள் நாலைந்து வருகின்றன. முக்காலும் தெரியாத முகங்கள்.
“கலியாணமா?” என்று ஒரு சத்தக் கேள்வி. ஒரு நீல வெளுப்பு வேட்டிதான் கேட்டது.
”ஆமாம்.” என்று சாமநாது அந்த முகத்தைப் பார்த்தார் கண்ணில் கேள்வியோடு. மனசிற்குள் ‘ஏன் இப்படிக் கத்தறே? நான் என்ன செவிடுன்னு நெனச்சுண்டியா?” என்று கேட்டார்.
“தெரியலியா?” என்றது அந்த சலவை ஜரிகை வேஷ்டி. “நான்தான் சீதாவோட மச்சினன் - மதுரை!”
“அப்படியா?... ஆமாமா இப்ப தெரியறது. சட்டுனு அடையாளம் புரியலெ... இன்னும் பலகாரம் பண்ணலியே. போங்கோ... ராத்திரி முழுக்க ரயில்லெ வந்திருப்பேள்” என்று உபசாரம் பண்ணினார் சாமநாது.
“இவா, சுப்பராயரோட சித்தப்பா. குடும்பத்துக்கே பெரியவாளா இருந்துண்டு, எல்லாத்தையும் நடத்தி வைக்கறவா” என்று பக்கத்திலிருந்த இன்னொரு சலவை வேட்டியிடம் அறிமுகப்படுத்திற்று மதுரை வேட்டி. அவர் போனார்.
“இவர் வந்து...” என்று என்னமோ யாரோ என்று அறிமுகப்படுத்தவும் செய்தது.
“நீங்க போங்கோ - நான் ஸ்நானம் பண்ணிவிட்டு வந்துடறேன்” என்று சாமநாது அவர்களை அனுப்பினார்.
மனசு சொல்லிற்று. “சீதாவுக்கு மச்சுனனா? சுப்பராயா, எப்படிடா இப்படி ஏழு பெண்ணைப் பெத்தே! ஒரோரு குட்டிக்குமா கலியாணம்னு ரயில் ரயிலா சம்பந்திகளையும் மாப்பிள்ளைகளையும் மச்சுனன்களையும் கொண்டு இறக்கறே. காவேரியிலே கால் தட்றதுக்குள்ளே இன்னும் எத்தனை மச்சுனன்களைப் பாக்கப் போறேனோ!”
அரசமரத்தை விட்டு, பாதை அதிர அதிர, காவேரியை நோக்கி நடந்தார் சாமநாது. நுனியை எடுத்து இடுப்பில் செருகி, முழங்கால் தெரிகிற மூலக்கச்சம். வலது தோளில் ஒரு ஈரிழைத் துண்டு - திறந்த பாள மார்பு, எக்கின வயிறு, சதை வளராத கண், முழுக்காது - இவ்வளவையும் தானே பார்த்துக்கொண்டார்.
காவேரி மணலில் கால் தட்டு முன்பே, தெருவிலிருந்த தவுல் சத்தம் தொடங்குவது கேட்டது. நாகஸ்வரமும் தொடர்ந்தது. பத்தரை மணிக்குமேல்தான் முகூர்த்தம். மணி எட்டுக்கூட ஆகவில்லை. சும்மா தட்டுகிறான்கள். அவனுக்குப் பொழுது போக வேண்டும். சுப்பராயனும் பொழுது போகாமல்தானே ஏழு பெண்களையும் நாலுபிள்ளைகளையும் பெற்றான்.
தண்ணீர் முக்கால் ஆறு ஓடுகிறது. இந்தண்டை கால் பகுதி மணல். ருய்ருய் என்று அடியால் மணல் அரைத்துக் கொண்டு நடந்தார்.
மேளம் லேசாகக் கேட்கிறது. கூப்பிடுவார்கள். குடும்பத்திற்குப் பெரியவன். சித்தப்பா சித்தப்பா என்று சுப்பராயன் கூப்பிட்டுக்கொண்டு வருவான் - இல்லாவிட்டால் அவன் தம்பிகள் கூப்பிடுவார்கள் - என்னமோ நான்தான் ஆட்டி வைக்கிறாற் போல... கூப்பிடட்டும்....
சாமநாது பார்த்தார் - இடது பக்கம்.
ஆற்றின் குறுக்கே புதுமாதிரிப் பாலம் - புதுப்பாலம் - சுப்பராயனா அது நடந்துபோவது?... இல்லை... எத்தனையோ பேர் போகிறார்கள். லாரி போகிறது; சுமை வண்டிகள்; நடை சாரிகள் - எல்லாமே சுப்பராயன் மாதிரி தோன்றுகின்றன - லாரிகூட, மாடுகூட. சுப்பராயன்தான் பாலம் இந்த ஊருக்கு வருவதற்குக் காரணம். அவன் இல்லாவிட்டால் நாற்பது மைல் தள்ளிப்போட்டிருப்பார்கள். சர்க்காரிடம் அவ்வளவு செல்வாக்கு.
வலது பக்கம் - பின்னால் - வேளாளத் தெருவில் - புகை - வெல்லம் காய்ச்சுகிற புகை. புகை பூத்தாற்போல, அந்ததண்டை கருப்பங் கொல்லை கருப்பம் பூக்கள் - காலை வெயில் பட்டு பாதிப் பூக்கள் சிப்பிப் பூக்களாகியிருக்கின்றன - கூர்ந்து பார்த்தால் சுப்பராயன் மாதிரி இருக்கிறது... சுப்பராயன் தான் கரும்புப் பயிரைக் கொண்டு வந்தான் ஊருக்கு - எதிரே அக்கரையில் நாலு இடத்தில் புகை, வெல்ல ஆலைப் புகை - எல்லாம் சுப்பராயன்.
அதோ பள்ளிக்கூடம் - சுப்பராயன்.
பாலத்துக்கு ஓரமாக கோவாப்பரட்டி - சுப்பராயன்.
“ஏன் கிடந்து வேகறேள்! உங்க அண்ணா பிள்லைதானே அவன்! நானும் உங்க கையைப் பிடிச்சுண்டு படியேறி இருபது வருஷம் பாதி நாளைக்குப் பழையது, வத்தக் குழம்பு, இந்தப் பவழமலை - வேற என்னத்தைக் கண்டேன்? சுப்பராயனுக்கு மாசம் நாலு ரூவா சம்பளம் அனுப்பிக்க முடிஞ்சுதா, உங்களாலியும், உங்க அண்ணாவாலேயும்! யாரோ உறவுன்னு ஒருத்தரைப் பிடிச்சு மலைக்கோட்டையிலே கொண்டு படிக்க வச்சேளே - நன்னாப் படிக்கிறான்னு - அதுதான் முழுக்க முடிஞ்சுதா உங்களாலே, உங்க அண்ணாவாலே? முகாலரைக் கால் கிணறு தாண்ட வச்சாப்பல, கடசீ வருஷத்திலே போரும் படிச்சதுனு இழுத்துண்டு வந்தேள். குழந்தை ஆத்திரமா திரும்பி வந்தான். அலையா அலைஞ்சான். ஓடாக் காஞ்சான். லக்ஷ்மி வந்து பளிச் பளிச்சுன்னு ஆடலானா, குடும்பத்துக்குள்ளே...”
சாமநாதுவுக்குக் கேட்க இஷ்டமில்லை. அது அவர் மனைவி குரல். இப்போது காற்றில் கேட்கிறது. ஏழெட்டு வருஷம் முன்பு, நேரில் கேட்டது.
சுப்பராயனைப் படிக்க வைக்க முடியவில்லைதான். ஊருக்கு வந்தான். ஓடிப்போனான். கோட்டையில் கடையில் உட்கார்ந்து கணக்கு எழுதினான். அங்கே சண்டை. கடை வாடிக்கை ஒருவரிடமே கடன் வாங்கி பாதி பங்கு லாபத்திற்கு அதே மாதிரி மளிகைக்கடை வைத்தான். பயலுக்கு என்ன ராசி! முகராசியா! குணராசியா! சின்னக் கடை மொத்தக் கடையாகி, லாரி லாரியாக நெல் பிடித்து, உளுந்து பிடித்து, பயறு பிடித்து இருபது வருஷத்துக்குள் இருபது லட்சம் சொத்து. உள்ளூரிலேயே கால் பங்கு நிலம் வாங்கியாகி விட்டது.
அதையே பாகம் பண்ணி சாமநாதுவுக்குப் பாதி கொடுத்தான். சாமநாதுவுக்குக் கோபம். அவர் பங்கு ஊருக்கு சற்று எட்டாக் கையில் விழுந்தது. அது மட்டுமில்லை. ஆற்றுப்படுகைக்கும் எட்டாக்கை. சண்டை. அப்போதுதான் வாலாம்பாள் சொன்னாள்: “என்ன! கொடுத்து வச்சேளா? உங்க பாட்டா சம்பாதிச்ச சொத்தா - இல்லே உங்க அப்பா சம்பாதிச்சதா? ஒண்டியா நின்னு மன்னாடி சம்பாதிச்சதை பாவம் சித்தப்பான்னு கொடுக்கறான். இந்த தான மாட்டுக்கு பல்லு சரியாயில்லெ, வாலு சரியாயில்லியா? பேசாம கொடுத்ததை வாங்கி வச்சுக்கட்டும். ஊரிலே கேட்டா வழிச்சுண்டு சிரிப்பா. நான் ஊர்ப் பெரியவாள்ள ஒருத்தியா இருந்தேனோ....”
“நீ இப்பவேதான் வேறயா இருக்கியே! நீ அவனுக்கு பரிஞ்சுண்டு கூத்தாடறதைப் பார்த்தா, நீ என் ஆம்படையாளா. எங்க அண்ணா ஆம்படையாளான்னே புரியலியே-”
“தூ- போறும் - அசடு வழியவாண்டாம்” என்று வாலாம்பாள் நகர்ந்துவிட்டாள்.
“ம்ஹஹ” என்று அவருடைய அடித்தொண்டை மாட்டுக் குரலில் சிரித்தது - பெருமையோடு. பெருமை அசட்டுத்தனத்தோடு. பிறகு அவராகவே குழைந்து தொடர்ந்தார். “கோச்சுக்காதெ. உன் மனசு எப்படியிருக்குன்னு பார்த்தேன்.”
”போரும். என்னோட பேச வாண்டாம்.”
மூன்று நாள் வாலாம்பாள் பேசத்தான் இல்லை - அந்த அசட்டு விஷமத்திற்காக.
அவள் கண்ணை மூடுகிற வரையில் சொத்துத் தகராறு இல்லை. பாகம் பிரித்தாகிவிட்டது. ஏற்றுக்கொண்டாகிவிட்டது. இனிமேல் என்ன?
ஆனால் முழு பாகமும் கிடைக்கவில்லை. சாமநாதுவின் வாலாம்பாள் இப்போது இந்த உலகத்தில் இல்லை. அவள் பெற்ற முதல் இரண்டு பிள்ளைகள் - இந்த உலகத்தில் இல்லை. மூன்றாவது பெண் - இல்லை. நாலாவது பெண் - கலியாணமாகி மூன்றாவது வருடம் கணவனை இழந்து, பிறந்து வீட்டோடு வந்துவிட்டாள். பழுப்பு நார் மடி கட்டிக்கொண்டு பிறந்த வீட்டோடு வந்துவிட்டாள். குடும்ப வழக்கப்படி தலைமுடியை வாங்கி நார்ப்பட்டுப் புடவை அணிவித்தார்கள். சுப்பராயனுடைய மூன்றாவது பெண்ணோடு ஒரே பந்தலில்தான் அந்தக் கலியாணம் நடந்தது.
ஐந்தாவது - பையன் - டில்லியில் ஏதோ வேலையாய் - சித்திரம் வரைகிறானாம் - ஆறாவது பையன் - எடுப்பாள் மாதிரி இந்த சுப்பராயனின் இந்த ஏழாவது பெண் கலியாணச் சந்தடியில் அலைந்துகொண்டிருக்கிறான். “போய், குளிச்சுட்டு வாங்களேன். சட்சட்டுனு. பெரியவாளா யாரு இருக்கறது?” என்று அவன்தான் அவரைக் காவேரிக்குக் குளிக்கத் துரை படுத்தி அனுப்பினவன்.
ஈரிழையை இடுப்பில் கட்டி முடிச்சிட்டு சாமநாது தண்ணீரில் இறங்கினார். முழுக்குப் போட்டு, உடம்பைத் தேய்த்தார்.
பாலத்தின் மீது பஸ் போகிறது. பஸ்ஸின் தலைக்கட்டு மேல் வாழை இலைக்கட்டு - ஒரு சைகிள் - நாலைந்து மூட்டைகள் - கருப்பங்கட்டு - எல்லாம் சுப்பராயன். “அப்படியே அந்தப் பயலைக் கழுத்தைப் பிடித்து உலுக்கி, கண்ணு பிதுங்க.... அவன் பெண் பிள்ளைகளை எல்லாம் ஒரு சாக்கில் கட்டி...” அவர் பல்லை நெரித்தார்.
“காவேரியிலே கொண்டு அமுக்கட்டும். அப்பதானே கரையேறாத நரகத்திலே கிடக்கலாம். இப்பவே போங்கோ.”
அவளேதான். வாலாம்பாள்தான். துவைக்கிற கருங்கல்லில் அவள் மாதிரி தெரிகிறது. கறுப்பு நிறம். அலைபாய்கிற மயிர் - பவழமாலை. கெம்புத்தோடு. ரவிக்கையில்லாத உடம்பு. நடுத்தர உடம்பு. அவள் காவேரியில் குளிக்கும்போது எத்தனையோ தடவை அவரும் வந்து சற்றுத் தள்ளி நின்று குளித்திருக்கிறார். யாரோ வேற்றுப் பெண் பிள்ளையைப் பார்ப்பதுபோல, ஓரக்கண்ணால் பார்த்திருக்கிறார். அந்த ஆற்று வெளியில், வெட்ட வெளியில் ஈரப்புடவையை இடுப்பு, மேல்கால் தெரிந்து விடாமல் சிரமப்பட்டு அவள் தலைப்பு மாற்றிக்கொள்ளும்போது ஒரு தடவை அவர் பார்த்துக்கொண்டேயிருந்து, அவள் அதைக் கவனித்ததும் - சரேலென்று அவர் ஏதோ தப்புப் பண்ணிவிட்டது போல, அயல் ஆண் போன்று நாணினது...
இப்போதும் அது தெரிகிறது! ஏன் அவள் மேலுலகத்துக்கு முந்திக்கொண்டாள்?
”சம்பாதிச்சதிலே பாதி நமக்குக் கொடுத்திருக்கான். மீதியை தன் தம்பியோட பாகம் பண்ணிண்டிருக்கான் சுப்பராயன். அவன் பிள்ளைகளுக்கு அதிலியும் கால் கால்னுதான் கிடைக்கும். ஏன் இப்படிக் கரிக்கறேள்...?” என்று இந்தக் காவேரியில் அவரைப் பிடித்து அலசினாள் அவள் ஒருநாள்.
ராட்சச முண்டை! கடைசி மூச்சு வரைக்கும் என்ன நியாய புத்தி! என்ன தர்ம புத்தி!
“என்னை மனுஷனா வச்சிருந்தியேடி, என் தங்கமே - போயிட்டியேடி” என்று முனகினார். கண்ணில் நீர் வந்தது. திரும்பிப் பார்த்தார். அடுத்த துவைகல் எங்கோ இருந்தது. யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். கேட்டாலும் சுலோகம் போலிருந்திருக்கும்.
(நர்மதே சிந்து காவேரி என்று சுலோகம் சொல்லிக்கொண்டே பிழிந்து) உடம்பைத் துடைத்து (க்கொண்டு) அரை வேட்டியைப் பிழிந்து கொசுவி உதறிக் கட்டி (க்கொண்டு) விபூதி பூசிக்கொண்டு நடந்தார் சாமநாது. (சித்தப்பா சித்தப்பா என்று அரற்றுவான் சுப்பராயன் பாவம்.)
நாயனமும் தவுலும் நெருங்கிக்கொண்டிருந்தன. அரசமரத்து மேடைமுன் நின்று பிள்ளையாரையும் கல் நாகங்களையும் கும்பிட்டுவிட்டு விரைந்தார். தெருவில் நுழைந்தார்.
கிராமமே கலியாணப் பெண் போல ஜோடித்துக்கொண்டிருக்கிறது. புதுப் புடவைகளும் நகைகளும் சிவப்புப் பாதங்களும் சிவப்பு ஆடு சதைகளும் முகங்களும் வீடு வீடாக ஏறி இறங்கிக்கொண்டிருக்கின்றன. நாலு திண்ணைகளில் சீட்டாட்டம். தெருவெல்லாம் சலவை வேஷ்டி. நாலு மூலைத் தாச்சி பாய்கிற குளுவான் இரைச்சல்கள்.
“மணலூரார் கலியாணம்னா கலியாணம்தான்” - சாமநாதுவே சொல்லிக்கொண்டார். அவர் குடும்பம் ஊரே இல்லை. மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் (புரோகிதப்) பிழைப்புக்காக மணலூரை விட்டு இங்கு குடியேறி, ஒரு (அக்ரஹாரத்து) ஓரத்தில் ஒரு குச்சில் நுழைந்தது. இப்போது தெரு நடுவில் பக்கம் பக்கமாக இரண்டு மூன்று கட்டு வீடுகளில் சொந்த இடம் பிடித்துவிட்டது. மணலூர்ப் பட்டம் போகவில்லை. உள்ளூரான்களை எகிறி மிஞ்ச வந்த இந்த நிலை சாமநாதுவின் பார்வையிலும் நடையிலும் இந்தக் கணம் எப்படித் தெறிக்காமல் போகும்? உள்ளூர், வந்தவர்கள் எல்லாரும் பார்க்கட்டும்.
அவர் வீடு, சுப்பராயன் வீடு இரண்டும் அண்ணன் தம்பியாக நிற்கின்றன. இரண்டு வாசல்களையும் அடைத்து பந்தல், திண்ணையெல்லாம் புது வேட்டிக் கூட்டம். உள்ளே கூடத்தில் பூ, பிச்சாணா, குழந்தைகள் இரைச்சல், ட்ரங்குகள்.
தாண்டிக்கொண்டு உள்ளே போனார். வேட்டியைக் கட்டிக்கொண்டார். கொல்லைக்குப் போய் காலை அலம்பி வந்து ஜபத்திற்கு உட்கார்ந்தார். முன்பெல்லாம் அறையின் நான்கு சுவர்களிலும் கிருஷ்ணன், ராமன், பிள்ளையார் என்று வரிசையாகப் படங்கள் மாட்டியிருக்கும். இப்போது ராமனும் கிருஷ்ணனும் பிள்ளையாரும் பூஜை அலமாரிக்குள் மட்டும் இருந்தார்கள். சுவர்களில் மாது எழுதின படங்களாக மாட்டியிருக்கின்றன.
மாது - அவருடைய மூன்றாவது பையன். கலியாணத்திற்கு வரவில்லை. சுப்பராயன் பெண்கள் பிள்ளைகள் என்ற எத்தனை கலியாணத்திற்குத்தான் வருவான்?
“அப்பா!”
கூப்பிட்டது அவர் பெண்தான். நார்மடியும் முக்காடுமாக நின்ற பெண்.
“மாப்பிள்ளையை அழைச்சு மாலை மாத்தப் போறா. பரதேசக கோலம் புறப்படப் போறது. போங்களேன். நாளைக்கு ஜபம் பண்ணிக்கலாமே.”
“சரி, சரி - வரேன் போ.”
அவள் ஏறிட்டுப் பார்த்தாள் அவரை. குழப்பம்.
“போயேன். அதான் (நான் இதோ) வரேன்னேனே... இதான் வேலை” கடைசி வார்த்தைகள். அவள் காதில் விழவில்லை.
முண்டனம் செய்த தலை. முப்பத்தோரு வயது. கன்னத்திலும் கண்ணிலும் இருபது வயது பாலாக வடிகிறது.
”போன்னா போயேன். வரேன்.”
அவள் நகர்ந்தாள் - கதவை லேசாக சாத்திக்கொண்டு. அவர் கழுத்துக்குள் அனலாகச் சுடுகிறது.
சுற்றும்முற்றும் பார்த்தார். மாது வரைந்த படங்கள். கூர்ந்து பார்த்தார். சிரிப்பு வருகிறது. ஒரு படம் முழுதும் வெறும் முழங்கால். அதில் ஒரு கண். கண்ணில் ஒரு சீப்பு செருகியிருக்கிறது. இன்னொன்று பெண்பிள்ளை மாதிரி இருக்கிறது. ஒரு கால் பன்றிக்கால். வயிற்றைக் கிழித்துக் காட்டுகிறாள். உள்ளே நாலு கத்தி - ஒரு பால் டப்பா - ஒரு சுருட்டின சிசு. இன்னொன்று - தாமரைப் பூ - அதன்மேல் ஒரு செருப்பு. பாதிச் செருப்பில் ஒரு மீசை...
என்ன இதெல்லாம்! திகைப்பூண்டு மிதித்தாற்போல மனம் ஒடுங்கிப் பார்த்துக்கொண்டே நின்றார். கால் வலிக்கிறது. எனக்குக்கூடவா?
மேளச்சத்தம்.
”அப்பா, கூப்பிடுறாப்பா?” - நார்மடித் தலை எட்டிப் பார்த்தது. சிறிசு முகம்.
“இதோ.”
சாமநாது வெளியே போனார்.
“சித்தப்பா, எங்க போய்ட்டேள்?”
சுப்பராயன் குரல். மூச்சு வாங்குகிற குரல், கூனல் முதுகு.
மாலை மாற்றுகிறார்கள் - பெண்ணும் பிள்ளையும். அதையும் ஊஞ்சலையும் பார்த்தால், பார்வதி பரமேச்வரனை, லக்ஷ்மி நாராயணனைப் பார்க்கிற புண்யமாம். ஊரிலிருக்கிற விதவைகள்கூட மூலை முடுக்கெல்லாம் வந்து நிற்கிறார்கள். எங்கு பார்த்தாலும் பல். ஒடிந்த பல், அழுக்கிடுக்குப் பல், தேய்ந்த பல், விதவைப் பல், பொக்கைப் பல், சமையற்காரன் கூட வந்து நிற்கிறான்.
“கண்ணூஞ்சலாடி நின்றார்....”
நாயனக்காரன் வாங்கி வாசிக்கிறான் அந்த ‘ஊஞ்சலை’!
சாமநாதனுக்கு மூச்சு முட்டிற்று. மெதுவாக நகர்ந்தார். வியர்வை சுடுகிறது. காற்றுக்காகக் கொல்லைப்பக்கம் நடந்தார். கூடத்தில் ஈ, காக்காய் இல்லை. கொல்லைக்கட்டு வாசற்படி தாண்டி கடைசிக்கட்டு. அங்கும் யாருமில்லை. கோட்டையடுப்புகள் மொலாமொலா என்று எரிகின்றன. கூட்டம் கூட்டமாக நெருப்பு எரிந்தது. தவலை தவலையாகக் கொதிக்கிறது. சாக்கு மறைவில் எண்ணெய்ப் பாடத்தோலும் அழுக்குப் பூணூலுமாக ஒரு பயல் வெள்ளரிப் பிஞ்சு நறுக்குகிறான். வேறு ஒரு பிராணி இல்லை. பார்வதி பரமேச்வராள் மாலை மாற்றுகிற காட்சியில் இருக்கிறான்கள்.
கோட்டையடுப்புக்கு இப்பால் மேடைமீது ஒரு பாரி ஜோட்டுத் தவலை. இடுப்பளவு - மேல் வயிறளவு உயரம் பாயசம் மணக்கிறது. திராட்சையும் முந்திரியுமாக மிதக்கிறது. எப்படித்தான் தூக்கி மேடைமீது வைத்தான்களோ? மேல் வளையங்களில் கம்பைக் கொடுத்து பல்லக்கு மாதிரி இரண்டு பேராகத் தூக்கினால்தான் முடியும். ஐந்நூறு அறுநூறு பெயர் குடிக்கிற பாயசம்.
நான் ஒண்டியாகவே கவிழ்த்து விடுவேன்.
சாமநாது இரண்டு கைகளையும் கொடுத்து மூச்சை அடக்கி, மேல்பக்கத்தைச் சாய்த்தார். ப்பூ - இவ்வளவுதானே. அடுத்தநொடி, வயிறளவு ஜோட்டி, மானம் பார்க்கிற வாயை, பக்கவாட்டில் சாய்த்துப் படுத்துவிட்டது. பாயாசம் சாக்கடையில் ஓடிற்று.
வெள்ளரிப் பிஞ்சு நறுக்குகிற பயல் ஓடிவந்தான்.
“தாத்தா தாத்தா!”
சாமநாதுவுக்கு முகம், தோலியெல்லாம் மணல் படர்ந்தது.
அரிவாள் மணையை எடுத்துண்டுன்னா வரான் பயல்!
கை கால் உதறல் - வாய் குழறிற்று.
“படவாக்களா, எங்கே போயிட்டேள் எல்லாரும் - இத்தனை பெரிய எலியைப் பாயசத்திலே நீஞ்சவிட்டுவிட்டு. இத்தனை பாயாசத்தையும் சாக்கடைக்கா படைச்சேள் - கிராதகன்களா! மூடக்கூடவா தட்டு இல்லே?”
ஒரு வேலைக்காரி ஓடிவந்தாள்.
”என்னா பெரியசாமி!”
“ஆமாண்டி - பெரியசாமி பார்க்காட்டா, பெருச்சாளி முழுகின பாயசம்தான் கிடைச்சிருக்கும். போங்கோ, எல்லாரும் மாலை போட்டுண்டு ஊஞ்சலாடுங்கோ..?”
இன்னும் நாலைந்து பேர் ஓடிவந்தார்கள்.
நார்மடியும் முக்காடுமாக அந்தப் பெண்ணும் ஓடி வந்தாள்.
வேலைக்காரி அவளிடம் சொன்னாள்.
“எப்படிப்பா இத்தணாம் பெரிய ஜோட்டியை சாச்சேள்!”
அவள் உடல், பால்முகம் - எல்லாம் குரு படர்கிறது.
“போ அந்தாண்டை” என்று ஒரு கத்தல். “நான் இல்லாட்டா இப்ப எலி பாஷாணம்தான் கிடைச்சிருக்கும். பாயசம் கிடைச்சிருக்காது.”
பெண் அவரை முள்ளாகப் பார்த்தாள். கண்ணில் முள் மண்டுமோ?
சாமநாதுவுக்கு அந்தப் புதரைப் பார்க்க முடியவில்லை. தலையைத் திருப்பிக்கொண்டு, “எங்க அந்த சமையக்கார படவா?” என்று கூடத்தைப் பார்க்கப் பாய்ந்தார்.
- பெ பெ பே பே
பே பெ பே பே எ -
பே பெ பே பே எ -
ஆனந்த பைரவியில் ஊஞ்சல் பாட்டை வாங்கி நாயனம் ஊதுகிறது.
வாலாம்பாள் பாடுகிற மாதிரியிருந்தது.
****
தட்டச்சு : சென்ஷி
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
25 கருத்துகள்:
ஜானகிராமன் என்ற தஞ்சை மணம் கமழும் எழுத்து சித்தருக்கு அடியேன் -வல்லம் தமிழ்
manitha manangalin vkkirangal kathaiyil nangu chiththarikkappattullathu.silarai thiruththamudiyathu.
thi.ja.vin arumaiana kathaikal pala undu.
mappillai thozhan, vendam pooshani ponravai
marakka mudiyathavai.
radhakrishnan.
above comment is mine.and not ganesh.kindly
correct this.
radhakrishnan
ram,
if possible kindly share the story -vendam pooshani--.it is a very powerful story that evokes
instant feeling and sympathy for elders.
radhakrishnan.
30 வருடம் முன் படித்தாலும் இதுவும் செண்பக பூவும்
மனதை விட்டு அகலாத கதைகள்.
இந்த கதையை அறுபது எழுபது தடவைகளாவது படித்திருப்பேன். இப்போது மீண்டும் படித்தேன். ஆழ்மனக் கொந்தளிப்பை அப்படியே வடித்திருக்கிறார் - தி. செ. க.
தி. ஜா. வின் 'கோபுரவாசல்' என்றொரு அற்புதமான கதையை பிரசுரிங்களேன். - தி.செ.க.
உங்கள் வலைத்தளம் இன்னமும் அதிக வாசகர்களை சென்று அடையாதது வருத்தம்.
இங்கு வருபவர்கள் மிக குறைவாக இருப்பதும் ஏன் என்றும் புரிய வில்லை.
என்னுடை ப்ளாகரில் இங்குள்ள கதைகளை வெளியிட விரும்புகிறேன்.
அனுமதிப்பீர்களா?
தி.ஜானகிராமனின் சிறுகதைகளே அவரது சாதனைகள் என்பது என் எண்ணம் [இலக்கியமுன்னோடிகள் வரிசையில் மிக விரிவாக எழுதியிருக்கிறே -தமிழினி பிரசுரம்]
ஜானகிராமனின் சிறுகதைகளின் சிறப்பியல்பு என்ன? பொதுவாக கனகச்சிதமாகச் சொல்வதற்குரிய இலக்கியவடிவம் சிறுகதை. சிறந்த உதாரணம் அசோகமித்திரன். ஒரு சொல் மிகாது. ஆனால் நேர்மாறாக இசைப்பாடலைப்போல வளைந்து வளைந்து தன்போக்கில் செல்கின்றன ஜானகிராமனின் சிறுகதைகள்.
சொல்லவந்ததை பாதிசொல்லி மீதி சொல்லாமல் ஊகிக்க விடுவது உலகமெங்கும் சிறுகதைகளின் சிறப்பியல்பு. அதற்கும் அசோகமித்திரனே உதாரணம். ஆனால் ஜானகிராமன் சொல்லவந்ததை துல்லியமாகவே எல்லா கதைகளிலும் சொல்கிறார். ஆனால் அப்பட்டமாக அல்ல. தேர்ந்த பாடகனின் சங்கதிபோல இயல்பாக, தன்னிச்சையாக நிகழ்வதுபோல, அவை கதையில் வருகின்றன
ஜானகிராமனின் கதைகளின் இயல்பை இவ்விரண்டு கூறுகளின் அடிப்படையில் வகுக்கலாம். சொகுசு, தற்செயலாக உருவாகும் அழகு. அந்த தற்செயல் என்பது அபாரமான கதைத்தொழில்நுட்பம் மூலம் உருவாகக்கூடியது என்பதை இலக்கியநுட்பம் அறிந்தவன் உணரமுடியும்.
இக்கதையின் ஓட்டம் அவரது சொகுசுக்கு உதாரனம். சாமநாதுவின் மனசிக்கலை அவர் சொல்லவில்லை. ஆனால் கதை முழுக்க அது வழிந்துகொண்டே இருக்கிறது. தீமையும் தன் தீமையை தானே உணரும் மேன்மையுமாக அவர் மனம் ஓடுகிறது.
தற்செயல்நுட்பத்துக்கு முடிவு சிறந்த உதாரணம். அவரது மகளின் பார்வையில் சாமநாது தன்னை அறியும் தருணம். அது தன் மனைவியை மறுபடியும் காணும் கணமும் கூட
திஜா-வின் கதைகள் என்றுமே இனிமையாது. ஒரு அனாசியமான நடை, உள்மனதின் அதிர்வுகள். அற்புதம்.
நடந்து முடிந்த ஒரு காலக்கட்டத்தை ஒரு சில பாராக்களில் அல்லது ஒரு பக்கத்தில்
சுவையாக, சுருக்கமாக சொல்வது சிறுகதைகளில் ஒரு சவாலான விஷயம்.
திஜாவிற்க்கு அது piece of cake!
இந்தக்கதையிலும் அவர் லாவகமாக கையாண்டிருப்பார்!
சாமநாதுவின் முன் கதை சுருக்கத்தை, பல வருட புராணத்தை, அவர் காவிரியிலிருந்து
குளித்து கல்யாண வீட்டிற்க்கு வருவதிற்குள் நமக்கு அழகாக அறிமுகப்படுத்தி, நம்மை -
கல்யாண நாள் மற்றும் நடக்கப்போகிற சம்பவத்திற்கு தயார்ப்படுத்தி விடுவார்!
இதற்கு இன்னோரு உதாரணம் அவரது 'ஆரத்தி'
Essex சிவா
இணையதளங்களில் இந்த ராம்ஜீ யாகூ வராமல் தடுக்க ஏதாவது வைரஸ் கார்ட் இருக்கிறதா?
[குளுவான் என்றால் தவக்கூடியவன், அதாவது குழந்தை. குளுவர்கள் என்பது ஒரு நாடோடி சாதி.]
பொன். மகாலிங்கம்.
தஞ்சை மாவட்டத்தில் Diploma படிக்கச் சென்றபோது, அங்குள்ள பேச்சு, பழக்க வழக்கம் எல்லாமே எனக்குச் சற்று அந்நியமாக இருந்தது.
இயல்பில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எனக்கு, தஞ்சை நண்பர்கள் மூலம் மெல்ல மெல்ல
அவர்களுடைய கலாச்சாரம் புரிபட ஆரம்பித்தது. ஆனாலும், என்னுடைய சில கேள்விகளுக்கு அவர்களால் தெளிவான பதிலைத் தர முடியாமல் போனதும் உண்டு. பின்னாளில், அதே தஞ்சை மாவட்டத்தில் படித்துக் கொண்டே வேலை பார்த்தபோது, சிதம்பரம் நூலகத்தில் எடுத்துப் படித்த
தி.ஜா கதைகள்தான் ஒரு திறப்பைக் கொடுத்தன.
மனதை அள்ளும் அற்புத நடை..
அற்புதமான கதை மற்றும் எழுது நடை. தி.ஜாவின் மோகமுள்ளைப் பற்றி மட்டுமே அறிந்துள்ளேன். எஸ்.ராவின் நூறு சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இக்கதை இடம்பெற்றிருப்பதால் வாசித்தேன். வியந்தேன்.
@jeyamohan, ஆனால் ஜானகிராமன் சொல்லவந்ததை துல்லியமாகவே எல்லா கதைகளிலும் சொல்கிறார். ஆனால் அப்பட்டமாக அல்ல.
உதாரணம்- //அது அவர் மனைவி குரல். இப்போது காற்றில் கேட்கிறது. ஏழெட்டு வருஷம் முன்பு, நேரில் கேட்டது//.
அவர் மனைவி இறந்ததை மிகவும் சொல்லாமல் சொல்லியுள்ளார் :)
இதுபோன்ற பொக்கிஷங்களைப் பதிவு செய்யும் இத்தளத்திற்கு மிக்க நன்றிகள் :)
தி ஜானகிராமன் ஓர் வித்தியாசமான படைப்பாளி . அவரது கதைகளில் எதிர்பாராத திருப்பங்களை காணும் போது அமெரிக்க எழுத்தாளர் ஒ ஹென்றி யை ஞாபகப்படுத்துவார் . வழக்கு தமிழ் சொற்களை ஆளுவதில் சமர்த்தர் . அவரது கால அக்ரஹா ரத்தில் நடந்ததை கண் முன் கொண்டுவந்து காட்டினார் .
தங்கள் உழைப்புக்கு நன்றி,
பாலசுப்ரஹ்மணியன் அ
பெங்களூர்
ஒருவனுடைய வளர்ச்சி பெரிதும் பாதிப்பது தன்னுடைய உறவினர்களைத்தான். இது தனி மனிதனைச் சார்ந்த விஷயமாக பார்க்கப்படுவதை விட இச்சமுதாயத்தின் பிரச்சினையாக அணுக வேண்டியது. ஒருவனுடைய வளர்ச்சியை அடிப்படையாக வைத்து இன்னொருவனை எள்ளி ஏளனப்படுத்துவது இச்சமுதாய சிக்கலன்றி வேறெது. விளைவு பல சாமநாதுக்களின் பிரவேசம். திஜா வின் அற்புதமான பிரதிபலிப்புபு.
மிக அற்புதமான கதை
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.