கடுமையான தலைவலியுடன் நினைவு திரும்பியது. நினைவு திரும்புவதற்குச் சற்று முன்பிருந்தே வலி துவங்கியிருக்க வேண்டும். இருள் மண்டிய அந்த குறுகலான சிறைக்குள் கிடப்பதை நான் மெல்ல உணர்ந்தேன். கண்களை மெதுவாகத் திறக்க முயன்றேன். இமைகள் அசைய மெதுவாகத் திறக்க முயன்றேன். இமைகள் அசைய மறுத்தன. மீண்டும் முயன்று இமைகளை இறுக்கிக் கண்களைத் திறந்த போது நரம்புகள் இழுபட்டுக் காதோரங்களில் கடுமையான வலி ஏற்பட்டது. கொட்டடியெங்கும் பூண்டும், சிறுநீரும் கலந்தாற் போன்ற குமட்டலெடுக்கும் நெடியடித்தது. தரை முழுதும் ஈரமாகப் பிசுபிசுப்புடன் சில்லிட்டுக் கிடந்தது. பனிக் காற்று என் வெற்றுடம்பைத் தாக்கியபடி இருந்தது.
மடக்கியிருந்த கால்களை நான் மெதுவாக நீட்டி நிமிர்த்தினேன். உடலையும் லேசாகத் தளர்த்தினேன். உடனே திடீரென்று பாதங்களிலும், கால் மூட்டுகளிலும் கடுமையான வலி தாக்கியது. நாளங்களிலிருந்த இரத்தம் வேகமாகப் பாய்ந்து வலியை அதிகரிக்கச் செய்தது போன்று தோன்றியது. உடலின் தசைகள் கதி பிறழ்ந்து தாறுமாறாய் இயங்குவது போலிருந்தது. அந்நிலையில் கிடப்பது உடலெங்கும் வேதனையை ஏற்படுத்தியது. வலியின் அவஸ்தை தாளாமல் என்னையும் மீறி நான் கத்தினேன். சூழ்ந்திருந்த இருளும், நாற்றமும், என் தலைவலியும் மூச்சு மூட்ட வைத்தன. நான் மீண்டும் மயக்கமுற்று விடுவேன் என்று தோன்றியது. மிகவும் பிரயாசைப்பட்டு மீண்டும் புரண்டு கால்களை முன்பு போல் முடக்கிக் கொண்டேன். வலி குறைய நான் மெல்ல முனகினேன். உதடுகளில் லேசான அசைவின்போது அவை வீங்கியும் மரத்தும் போயிருப்பதை உணர்ந்தேன். கீழுதடு ஓர் உப்புக் கரிக்கும் சதைத் துண்டு போல் தொங்கிக் கொண்டிருந்தது.
என் இதயத் துடிப்பின் மெல்லிய ஒலி, இருள் சூழ்ந்த அந்த அறையில் உரக்கக் கேட்டது. மெல்ல மெல்ல என் ஒவ்வோர் உறுப்பும் தன்னிருப்பை உணர்த்தியது. விரல் நுனிகள், குதம், பின்தொடைகள், தோள்கள், கழுத்து ... எல்லா அவயவங்களும் வலியால் தெறித்துக் கொண்டிருந்தன. நான், உடலைக் குறுக்கிக் குறுக்கித் தரைக்குள் புதைந்து போக யத்தனித்தேன். ஈரமான தரையின் பிசுபிசுப்பு வேறு, உடலெங்கும் பரவி என்னைத் துன்புறுத்தியது.
நான் கைகளைக் கோர்த்து என் தொடைகளுக்கிடையே புதைத்துக் கொண்டேன். உள்ளங்கையிலிருந்து பரவிய கொஞ்சமான சூடு இதமாக இருந்தது. எதேச்சையான சிறு கை அசைவுகளின் போது என் பின்தொடைகளில் ஏதோ கசிந்து உறைந்திருப்பது போன்று உணர்ந்தேன். மீண்டும் வருடிப் பார்த்தபோது புரிய ஆரம்பித்தது. அது என் குதத்திலிருந்து வழிந்த இரத்தமாக இருக்க வேண்டும். இந்த உணர்வு எனக்கு முதலில் அதிர்ச்சியைத் தந்தாலும் மெல்ல நான் அதிலிருந்து மீண்டேன்.
என் தொண்டையும் நாவும் வறண்டு விட்டிருந்தன. எனக்கு தாகமாக இருந்தது. நான் வெளியே பார்த்தேன். முற்றத்தில் ஒரு சிறிய மங்கலான விளக்கு எரிந்து கொண்டிருந்தது. காவலாளிகள் முற்றத்தின் மூலையில் எங்கோ இருக்கக் கூடும். நான் உடலை அசைக்காமல் அப்படியே கிடந்தேன்.
நேற்று முன்தினம் அவர்கள் என்னைத் தேடி வந்தபோது அருகாமையில் ஒரு காகம் இறந்து போயிருந்தது. நான் பால்கனியில் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். எதிர்க் கட்டடங்களின் டி.வி. ஆண்டெனாக்களில் நிறைய காகங்கள் வரிசையாக அமர்ந்து உரக்கக் கரைந்து கொண்டிருந்தன. எல்லாத் திசைகளிலிருந்தும் ஒன்றிரண்டாக புதிதாக வேறு காகங்கள் வந்தபடி இருந்தன. சிறகசைப்பின்றி அவை மிதந்து வரும்போதே, சுருக்கமாகக் கரைந்து கொண்டு வந்தன. இறந்துபோன காகத்தை இக் காகங்கள் கண்டு கொண்டு விட்டனவா இல்லையா என்பது கூற முடியாதபடி இருந்தது. எண்ணற்ற காகங்கள் சேர்ந்து கரைந்து கொண்டிருந்தன.
இருப்பு வாசற்கதவை அவர்கள் சப்தத்துடன் திறந்த போதுதான் நான் கவனித்தேன். வெளியே ஜீப் நின்று கொண்டிருந்தது. அவர்கள் வேகமாக உள்ளே நுழைந்தார்கள். கணங்களில், பூட்ஸ் கால்களுடன் மாடிப்படிகளில் அவர்கள் ஏறி வரும் அரவம் கேட்டது. அவர்கள் தட்டுவதற்கு முன்பு நானே முன்னறைக் கதவைத் திறந்து வைத்தேன். வந்தவர்களின் அதிகாரியாக இருந்தவன் என்னை விசாரணைக்காக அழைத்துப் போக வந்திருப்பதாகக் கூறினான். நான் நிதானமாக அவனைப் பார்த்தேன். பின், உடை மாற்றிக் கொண்டு வருவதாகக் கூறி விட்டு உள்ளே சென்றேன்.
அவர்கள் என்னை அழைத்துச் சென்றார்கள். ஆனால் இம்முறை அவர்கள் விசாரணை ஏதும் வைக்க மாட்டார்கள் என்பதை நான் நிச்சயமாக உணர்ந்தேன். என் போன்றவர்களை அவர்கள் ஏற்கனவே பலமுறை விசாரித்திருந்தார்கள். இனி என்னிடம் விசாரிக்க அவர்களுக்கு ஒன்றுமே இல்லை. மூன்று மாதங்களுக்கு முன் நாயகத்தையும் அவர்கள் இப்படித்தான் விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள். நாயகம் அதற்குப் பின் திரும்பவேயில்லை.
மெதுவாகக் கிளம்பிய ஜீப்பில் அமர்ந்தபடி நான் காகங்களை உற்றுப் பார்த்தேன். அவற்றின் கரையல்கள் மெல்லத் தேய்ந்து மறைந்து கொண்டிருந்தன.
தெருவைக் கடந்து பிரதான சாலைக்குள் திரும்பியதும் ஜீப்பின் வேகம் கூடியது. பெரிய ரஸ்தாக்களையும் குறுகிய தெருக்களையும் கடந்து, ஜீப் கடைசியாக சந்தடி மிகுந்த ஒரு நாற்சந்தியிலிருந்த காவல் நிலையத்திற்கு வந்து நின்றது. பின்னால் இருந்த இருவர் குதித்து இறங்கினார்கள். பின் என்னையும் இறங்கச் செய்தார்கள்.
காவல் நிலையத்திற்குள் நுழைந்தவுடன் அவர்களில் ஒருவன் திடீரென்று என் பிடரியில் கை வைத்து வன்மத்துடன் என்னை நெட்டித் தள்ளினான். காவல் நிலையத்தின் பிரதான முன்னறையில் ஒரு கண்ணாடியணிந்த வயோதிகக் காவல்காரன், மேஜை முன் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தான்.அவனுக்கு முன்னும் பக்கவாட்டிலும் சில நாற்காலிகளும் ஒரு பெஞ்சும் கிடந்தன. வலதுபக்க மூலையில் ஒரு லாக்-அப் அறை இருந்தது. இடதுபக்க மூலையில் காவல் நிலைய அதிகாரிக்கான மரத்தடுப்புகளாலான சிறிய அறையிருந்தது. பிரதான அறைக்குள் என்னை நிற்கச் செய்துவிட்டு என்னை அழைத்து வந்த அதிகாரி தன் மேலதிகாரியின் அறைக்குள் சென்றான்.
லாக்-அப் அறைக்குள் ஓர் இளைஞன் கம்பிகளைப் பற்றியபடி வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவன், தலைமுடி வெட்டப்படாமலும், கண்கள் உள்வாங்கியும் காணப்பட்டான். சட்டையற்ற அவனது மேலுடம்பில் எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. லாக்-அப் அறைக்கு வெளியே கம்பிகளுக்கு வெகு சமீபத்தில் சிறிது தண்ணீருடன் ஓர் அழுக்கடைந்த பிளாஸ்டிக் வாளியும் அதற்குள் ஒரு தம்பளரும் கிடந்தன.
சற்றுக் கழித்து, அரை கதவுகளிட்ட மரத்தடுப்புகளாலான அந்தச் சிறிய அறைக்குள் நான் இழுத்துச் செல்லப்பட்டேன். அறைக்குள், ஒரு பெரிய மேஜைக்குப் பின்னால் ஓர் அதிகாரி சிகரெட் பிடித்தபடி அமர்ந்திருந்தான். அவன் என்னை நிமிர்ந்து பார்த்தான். நானும் அவனைப் பார்த்தேன். அகன்ற முகம் கொண்ட அவனுக்கு முன் தலையில் வழுக்கை விழுந்திருந்தது. அடர்த்தியான புருவங்களும் மீசையும் கொண்டிருந்தான். கண்கள் சிவந்திருந்தன. சதைப் பிடிப்பான அவனது பெரிய மூக்கைப் பார்க்க எனக்கு அருவருப்பாக இருந்தது. அந்த மூக்கின் வாளிப்பு அவனுக்கு வெறுக்கத்தக்க ஒரு குரூரத் தன்மையைத் தந்தது. அவன் சில கணங்கள் என்னை ஏறிட்டுப் பார்த்த பின் என்னை அழைத்து வந்த அதிகாரிக்கு சமிக்ஞை செய்தான். உடனே, காவலாளிகள் என்னை வெளியே இழுத்து வந்தார்கள். பின், ஒரு பெரிய முற்றத்தைக் கடந்து என்னைக் காவல் நிலையத்தின் பின் கட்டிற்குக் கொண்டு சென்றார்கள். அந்த முற்றத்தில் 10, 12 காவலாளிகள் அரைக்கை பனியனும், கால்சட்டையும் அணிந்தபடி அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பின்கட்டில் இருட்டாகவும், குறுகலாகவும் இருந்த அந்த அறைக்குள் என்னை அடைத்தார்கள். அறைக்குள் ஒளி மங்கிய மின்விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது.
பதினைந்து இருபது நிமிடங்கள் கழித்துக் கதவு திறக்கப்பட்டது. சதைப்பிடிப்பான மூக்குடைய அந்த அதிகாரியும் மூன்று காவலாளிகளும் கைகளில் லத்திகளுடன் உள்ளே நுழைந்தார்கள்.
அவர்கள் என்னை அடிக்க ஆரம்பித்தார்கள்.
முதலில் அந்த சதைப்பிடிப்பான மூக்குடைய அதிகாரி தன் லத்தியால் என் இடது முழங்காலில் ஓங்கி அடித்தான். நான் வலி தாளாமல் அந்தக் காலை மடக்கிக் கைகளால் பற்றித் தேய்த்துக் கொண்டிருக்கும் போதே மறுகாலின் முட்டியில் ஓர் அடி விழுந்தது. நான் கீழே சரிந்தேன். தலையைத் தரையில் குவித்தேன். திடீரென்று எல்லாம் நிசப்தமாகிப் போனது. மேலும் பல அடிகளை எதிர்பார்த்த நான் ஒன்றுமே நிகழாததை நினைத்துத் தலையை நிமிர்த்திப் பார்த்தேன். அந்த அதிகாரி கையில் லத்தியை ஓங்கியபடி என்னைப் பார்த்து நின்றான். வெளிச்சமற்ற அந்த அறையில் அவனது முகம் சரியாகத் தெரியவில்லை. நான் சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில் அவன் மீண்டும் தன் லத்தியைச் சுழற்றினான். இம்முறை என் தாடையில் விழுந்தது அடி. நான் அலறிக் கொண்டே முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டேன். தொடர்ந்து என் முதுகிலும் பிடரியிலும் தோள்களிலும் அடிகள் விழுந்தன. நான் கதறிக் கொண்டே இங்குமங்கும் நகர்ந்தபடி இருந்தேன். ஓர் அடி என் பாதத்தில் விழுந்தது. நான் முற்றாகத் தரையில் விழுந்தேன்.
என்னை அதுவரை அடித்தது அந்த அதிகாரி மட்டும்தான் என்பதை எப்படியோ அந்நிலையிலும் நான் உணர்ந்தேன். அந்த அதிகாரி அடிக்கும்போது எவ்வித ஆவேசப் பிதற்றலுமின்றி மெளனமாக என்னை அடித்துக் கொண்டிருந்தான். காவலாளிகளிடமும், அதிகாரிகளிடமும் நான் பலமுறை அடிபட்டதுண்டு. பொதுவாக, அடிக்கும்போது அவர்கள் எல்லோரும் ஏதோ ஒருவிதமாக ஏதாவது பிதற்றிக் கொண்டே அடிப்பார்கள். தங்களது குரூரத்தின் உக்கிரத்தை நியாயப்படுத்தவும், சில சமயங்களில் தங்களது வன்மத்தின் விளைவாக தங்களுக்குள் ஏற்பட்ட அதீத அச்சத்தைப் போக்கும் முகமாகவும் பிதற்றிக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் இவன் அப்படியிருக்கவில்லை. இவன் ஒரு மிருகத்தைப் போல எவ்விதக் குறுகுறுப்புமின்றித் தாக்கிக் கொண்டிருந்தான். இவன் பயங்கரமானவன் என்பதை நான் உணர்ந்தேன்.
ஒரு கட்டத்தில் அந்த அதிகாரி அடிப்பதை நிறுத்திவிட்டு மெளனமாக நின்றான். நான் வலியால் துடித்தபடி கீழே கிடந்தேன். காவலாளிகளில் ஒருவன், என் உடைகளை முரட்டுத்தனமாகக் கழற்றி வீசினான். இவன் என்னை நிர்வாணமாக்கியவுடன் மற்ற இருவரும் அடிக்கத் துவங்கினார்கள். லத்தியால் என் தொடைகளில், புட்டத்தில், ஆடுதசையில், கைகளில் ஓங்கி ஓங்கி அடித்தார்கள். முனகிக் கொண்டிருந்த நான் மீண்டும் அலற ஆரம்பித்தேன்.
திடீரென்று ஒருவன் என் மார்பில் காலை வைத்து என் இரு கால்களையும் பற்றி உயர நிமிர்த்தினான். மற்ற இருவரும் என் உள்ளங்கால்களில் லத்தியால் அடித்தார்கள். உள்ளங்கால்களின் நடுப்பகுதியில் குறி வைத்து அடித்துக் கொண்டிருந்தார்கள். நான் தொடர்ந்து அலறிக் கொண்டிருந்தேன். முன்னெப்போதை விடவும் உரத்து அலறினேன். என் அலறல் சப்தம் வெளியே தெருவின் சந்தடியையும் மீறிக் கேட்டிருக்க வேண்டும்.
என் உள்ளங்கால்களில் அடித்து ஓய்ந்த பின் என் கால்களைப் பற்றியிருந்தவன் அவற்றை மேலும் இறுகப் பற்றி என்னைக் குப்புறப் புரட்டினான். பின் மற்ற இருவர் என் இரு கால்களை அகட்டிப் பிடிக்க இவன் என் குதத்தில் லத்தியை ஏற்றினான். அடுத்த கணம் என் தொண்டை அடைத்தது. நான் விநாடிகளில் இறந்து விடுவேன் என்று பட்டது. கண்கள் இருட்ட ஆரம்பித்தன. இவன் மேலும் லத்தியை உள்ளே ஏற்றினான். பின் திடீரென்று வெளியே இழுத்துக் கொண்டான். இவற்றுக்குப் பின் நான் வலியால் பயங்கரமாகக் கத்தினேன். ஒருவன் என் கால்களைச் சேர்த்துப் பிடித்துத் தரையில் ஓங்கிச் சாடினான்.
பிறகு, அவர்கள் என்னைக் காலால் உதைத்தார்கள். அவர்கள் மூவரில் ஒருவன் தவிர மற்ற இருவரும் வெறும் காலோடு இருந்தார்கள். அவர்கள் என் மார்பிலும் முதுகிலும் மாறி மாறி உதைத்தார்கள். என் முகம், கழுத்து என்று மேலும் உதைகள் விழுந்து கொண்டிருந்தன. நான் வலியால் நொறுங்கிக் கொண்டிருந்தேன்.
அவர்கள் ஒருவாறாக என்னை அடிப்பதை நிறுத்திய போது இற்றுப் போன கந்தல் துணியாய்க் கிடந்தேன். உடலே உருக் குலைந்து ஓர் அருவருப்பான திரவமாகி வழிந்து கொண்டிருப்பதைப் போன்று இருந்தது. அவர்கள் போக ஆரம்பித்தார்கள். தங்கள் உடைகளைச் சரி செய்து கொண்டே தங்களுக்குள் பேசினார்கள். என்னை மிகக் கேவலமான வசைகளைக் கொண்டு திட்டினார்கள். போகும்போது பூட்ஸ் அணிந்தவன் திடீரென்று என்னை நெருங்கி ஓர் ஆபாசமான வசையைக் கூவிக்கொண்டே என் குறியில் எட்டி உதைத்தான். நான் அலறிக் கொண்டே பக்கவாட்டில் சரிந்தேன். பின், மயக்கமுற்றேன்.
எங்கும், நிசப்தமாக இருந்தது. இது போன்று முன்பும் பல சிறைகளில், நிசப்தமான இரவுகளை நான் கழித்திருந்தேன். எப்போதுமே சிறைக்கூடங்களின் நிசப்தம் பெரும் பயங்கரத்தை உள்ளடக்கியது. உடைவாளை உருவியபடி இருட்டில் மறைந்து நின்று தாக்கக் காத்திருக்கும் ஒற்றனைப் போன்றது அது.
நிச்சயமாக இதைப் போன்ற நிலவொளியற்ற ஒரு நிசப்தமான இரவில்தான் நாயகத்தையும் அவர்கள் கொன்றிருக்க வேண்டும். எங்கோ கானகத்தில் காயமுற்று தகித்து மடிந்துபோன பறவையைப்போல அவன் நிராதரவாக இறந்திருக்க வேண்டும். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாயகத்தின் பிரேதம் வெகுநாள்களுக்குப் பின் கிடைத்தது. நெற்றிப்பொட்டில் குண்டு பாய்ந்திருந்தது. அவனது கட்டான இளம் உடலெங்கும் ரணமாக இருந்தது. உயிரற்ற சடலத்தில், முகம் அந்தக் கடைசி கணத்தின் அவஸ்தையைப் பதித்தபடி விசித்திரமாகக் கோணிக் கிடந்தது. நாயகத்தின் மனைவி அன்றிரவு முகத்தைக் கவிழ்த்து, கைகளைக் கன்னங்களில் வைத்தபடி, ஒன்றும் பேசாமல் வெகுநேரம் அழுது கொண்டிருந்தாள்.
மறுநாள், நாயகம் காவல் படையினரை ஆயுதமேந்தி எதிர்கொண்டபோது சுட்டுக் கொல்லப்பட்டான் என்று செய்தித் தாள்களில் அரசு அறிக்கை வெளியிட்டது.
நாயகத்தைப் பற்றி நினைக்க நினைக்க வேதனையாக இருந்தது. நாயகம் அற்புதமான மனிதன். அடர்ந்த காடுகளில் தலைமறைவாக இருந்தபோது நானும் அவனுடனிருந்தேன். சுருளான கேசமும், அகன்ற நெற்றியும், புன்னகைக்கும் கண்களையும் கொண்டிருந்தான் அவன். அவனது கட்டான இளம் உடலைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும். புஜங்களின் திரட்சியும் சருமத்தின் பள பளப்பும் சக்தி வாய்ந்த ஓர் அழகான விலங்கைப் போலிருப்பான். அவனுக்கு சாவே வராதோ என்று தோன்றும். ஆனால் அவனும் இறுதியில் செத்துத்தான் போனான். மயிர்க்கற்றைகள் நெற்றியில் குவிய, சிரித்தபடி அவன் நிறையப் பேசுவான். விவாதங்களின்போது, மற்றவர்கள் துணுக்குறும்படி திடீரென்று ஏதாவது சொல்வான். வழக்கமாக அவன் அமரும் அந்தச் சிறிய குன்றின் மீது அமர்ந்து, உடலை முன் சாய்த்து, தலையை வானத்திற்கு உயர்த்தி சோகமாகச் சிரித்தது கண்முன் நிற்கிறது. அவன் சொல்வான்: ''தனிமையிலிருந்தும் இயற்கையிலிருந்தும் உன்னைக் காப்பாற்றிக் கொள். மனிதனுக்கு அதிகபட்ச துக்கத்தைத் தரக்கூடியவைகள், இவை இரண்டும்தான். இந்த வன்முறை நடவடிக்கைகள், இந்தப் போராட்ட உணர்வு எதனாலும் அவற்றை நீ வெற்றிகொள்ள முடியாது. ஏன் உன்னால் அவற்றை முற்றாக வெறுக்கக் கூட முடியாது. கண்களுக்குத் தெரியாமல், கனிந்து விட்ட விஷவாயுவைப் போல் சூழ்ந்திருக்கின்றன அவை".
நாயகத்தின் மறைவு, இயக்கத்திற்குப் பெரும் இழப்பாக இருந்தது. சமீப காலங்களில் இயக்கம், நிறைய இளைஞர்களை இழந்து கொண்டிருந்தது. சிறந்த பிரஜைகளாகக் கூடியவர்கள் வனாந்திரங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டு யாருமறியாமல் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முறையும், கொண்டு செல்லப்படுபவன் யேசுவாகவும், தப்பித்தவர்கள் பாரபஸ்களாகவும் உணர்ந்தோம்.
நாயகத்தைப் போல நானும் மரணத்திற்கு அருகாமையில் வந்து விட்டதை உணர்ந்தேன். ஒரு வகையில் நாம் அனைவரும் எப்போதுமே மரணத்திற்கு வெகு சமீபத்தில் தான் இருக்கிறோம் என்று படுகிறது. மரணம் நமக்குள் ஏற்படுத்தும் பீதிக்கும் ஆவலுக்கும் காரணம், அதன் தன்மையின் அதீத நிச்சயமின்மைதான். வாழ்க்கையின் நிச்சயமின்மைக்கும் ஒரு படி மேலான நிச்சயமின்மையை மரணத்தின் தன்மை கொண்டுள்ளது. உண்மையில் மரணம் நமக்கு அளிக்க வல்லது எது என்பதை நாம் என்றுமே அறிய மாட்டோம். ஆட்டக்காரனும் ஆட்டமுமே மறைந்து போகும் ஒரு விசித்திரமான ஆட்டத்தின் கடைசி நகர்வுதான் மரணம். மரணத்தின் அப்பட்டமான தன்மை நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இல்லை, கற்பனைக்கு உட்படக்கூடியதுதான் என்று கூறினால் நிரூபணங்கள் நமக்கு என்றுமே கிடைக்கப் போவதில்லை.
வெறும், மரணத்திற்கும் - உயிர்த்திருத்தலுக்கும், துக்கத்திற்கும், மகிழ்ச்சிக்கும், கெட்டதுக்கும், நல்லதுக்குமான போரட்டமல்ல வாழ்க்கை. வாழ்க்கை எப்படியும் இறுதியில் செயல்களின் நிறைவுக்கும், விளைவுகளின் வெறுமைக்குமான போராட்டமாகவே இருக்கும். என் நாளங்கள் உலர்ந்து, எனது கைகள் தளர்ந்து போகும் போது ஒரு வேளை, நிச்சயமாக ஒரு வேளை, மரணத்தின் குறுக்கீடு பெரும் நிம்மதியை அளிப்பதாகக்கூட இருக்கலாம்.
ஆனால் இப்போது.... இப்போது மரணத்தின் நினைவு ஆழ்ந்த கசப்புணர்வையே தோற்றுவிக்கிறது. சார்புகளற்றவர்களுக்கு உயிர்ப்பும் மரணமும் ஒன்றுதான். ஆனால் என் போன்றோர்க்கு? இப்போது மரணம் எனக்கு துக்கத்தை விட மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கும். இப்போது எனக்கு மரணம் நிகழ்ந்தால் அது வீர மரணம் என்று கொள்ளப்படக் கூடும். ஆனால் எனக்குத் தெரியும். மரணத்தில் வீர மரணம் என்று ஏதும் கிடையாது. மரணம் வெறும் மரணம்தான். மரணத்திடம் நான் நிச்சயம் தோற்றுத்தான் போவேன்.
வெளியே மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. மழைத் துளிகள் சிறைக் கூரை மீது சப்தத்துடன் விழுந்தன.
மழைத்துளிகளின் ஒலி ஒரு பெரிய இதயத்தின் துடிப்பை ஒத்திருந்தது. அந்த ஓசையின் வசீகரம் என்னுள் ஆழ்ந்த சோகத்தை விளைவிக்கிறது. வாழ்க்கையில் நான் கடந்து வந்த கட்டங்களைச் சற்றும் எதிர்பாராத வகையில் இன்று, இச்சிறு மழைத்துளிகளின் ஒலி, மீண்டும் என் நினைவுக்கு மீட்டுத் தருகிறது. மனித மூளையின் அடந்த சுருள்களை இச்சிறு ஒலி ஊடுருவிக் கொண்டது எனக்கு வியப்பாக இருந்தது. நினைக்க நினைக்க என் தனிமை பூதாகாரமாகத் தோன்றியது. நான் பார்க்க முடியாமல் பெய்து கொண்டிருக்கும் இந்த மழைத்துளிகள், வாழ்க்கை நெடுகிலுமிருந்து நிறைய மனிதர்களையும், நிறைய காலங்களையும் இரக்கமின்றி என் கண் முன் நிறுத்திக் கொண்டிருந்தன. உறவுகளின் தன்மைகளும், அனுபவங்களின் தோற்றங்களும் அர்த்தமிழந்து கொண்டிருந்தன.
மிருகத்திலிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்ட அவனுக்கு சித்தித்திருக்கும் ஓர் அருவ உலகம் முடிவற்றதாகவும், பொருளற்றதாகவும் இருக்கிறது. மரணத்திற்கு வெகு சமீபத்திலிருக்கும் ஒரு மனிதனுக்கு அவனுடைய அந்த அருவ உலகம் எதனால் ஆனது என்பது திடீரென்று புலப்பட்டுப் போகும். அது ஒரு வெற்றிடம்! அந்த வெற்றிடத்தின் முகம், ஞாபகங்களின் துணுக்கு அற்புதங்களும் மாயமோவென நிச்சயிக்க முடியாதபடி கொடூரமாக இருக்கும். பரந்த பெரும் பாழ்வெளியில் காரணமற்றுக் கதறித் துடிக்கும் ஒரு சிசுவைப் போல் மனிதன் ஆகி விடுவான். அந்த மகத்தான உலகத்தில், இறுதியில் அவன் தனியனாகவே இருப்பான்.
நான் குளிரில் நடுங்கியபடி இருந்தேன். விடுவதற்குள் அவர்கள் வந்து விடுவார்கள். என்னையும் ஒரு வனாந்திரத்திற்கு இழுத்துச் சென்று, என் கையில் தோட்டாக்களற்ற ஒரு நாட்டுத் துப்பாக்கியைத் திணித்து, என்னை ஓடவிட்டு, ஓர் அற்பப் பிராணியைச் சுடுவதுபோல் சுட்டுத் தள்ளி விடுவார்கள். பின் எல்லாம் முடிந்துவிடும். சுய இரக்கத்தின் அவலத்திலிருந்து நானும் முற்றாகத் தணிந்து விடுவேன்.
இருள் சூழ்ந்த நாற்றமெடுக்கும் அந்தக் கொட்டடிக்குள் பூட்ஸ் கால்களின் ஒலியை எதிர்பார்த்தபடி நான் அசையாமல் கிடந்தேன்.
நன்றி : மூங்கில் குருத்து
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
0 கருத்துகள்:
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.