'சங்கர நாராயணன் வீடு இதுதானே ' என்று கேட்டவர் முழுக்கைச் சட்டை போட்டுக் கொண்டிருந்தார். கையில் ஒரு தகரப்பெட்டி இருந்தது. இதுவரை பார்த்திராத ஒரு சின்ன அளவில், மட்டமான ஒரு பச்சை வண்ணம் அடிக்கப்பட்டதாக, நீலப் பூக்கள் நான்கு முனைகளிலும் வரையப்பட்டு அந்த பெட்டி இருந்தது.
அவர் யாரைப் போலவும் இருந்ததாக யோசித்துக் கொள்ளமுடியும். ரயில் பெட்டியின் நெரிசலில் தூங்கிக் கொண்டே எதிரே வருகிறவர். சாராயக் கடை வாசலில் மேலும் குடிப்பதற்கு காசின்றி நிற்பவர். கல்யாணப் பந்தியில் உட்கார்ந்து எழுப்பி வெளியே தள்ளப்பட்டவர். மூணு சீட்டு விளையாடுவதாகக் கைது செய்யப்பட்டு, கோர்ட் வராந்தாவில் போலீஸ்காரர்களுக்கு, வெளியே போய்க் கம்பித் தூக்கில் டா வாங்கி வருகிறவர், இப்படி யாராகவும் அவரை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.
பக்கத்தில் நின்றவருக்கும் அவருக்கும் அப்படியொன்றும் அதிக வித்யாசமில்லை. மஞ்சள் டா ஷர்ட்டும் கருப்புக் காலரின் தொய்வும் கூடு கூடான திறந்த மார்பு எலும்புமாக இருந்தவர் கையில் ஒரு கிழிந்த தோல்பை இருந்தது. தோல் பை என்றால் அப்படியே பேகம்பூரில் பதனிட்டு வந்த தோலில் வழுவழு என்று செய்யப்பட்டதாகத்தான் இருக்க வேண்டுமா என்ன ? கைப்பிடி ஒரு நிறத்தில், பக்கிள் நான்கும் நான்கு விதமாக, செருப்புத் தைக்கிறவரிடம் கைத்தையலாக ஏழு கொண்டிருந்தாலும் தோல் பைதானே. அதை முழங்கையில் தொங்கப் போட்டுக் கொண்டு, ஒருவிதமாகத் தயாராகச் சிரித்துக்கொண்டே இருந்தார். இதில் கொஞ்சம் நல்லவிஷயம் என்னவென்றால், கம்பிக்கதவுக்கு அந்தப்புறம் சரிந்து கிடக்கிற நந்தியாவட்டைப் பூவைப் பறித்து, கையில் தொங்குகிற பையோடுஅவ்வப்போது அவர் முகர்ந்து கொண்டிருந்ததுதான்.
'காலேஜில் வேலை பார்க்குற சங்கர நாராயணன் ' - சற்று இழுத்துக்கொண்டே அவர் ஏறிட்டுப் பார்க்க, 'ஆமாம், நான்தான் ' என்று நான் கொக்கியை நீக்கிக் கதவைத் திறக்க வேண்டியதாயிற்று. ஒவ்வொரு நீக்கப்படுகிற தாழ்ப்பாளும், திறக்கப்படுகிற ஒவ்வொரு கதவும் என்னென்னவெல்லாமோ செய்துவிடுகிறது அல்லவா. சத்தம் கேட்டு உள்ளேயிருந்து ஓடி வந்து 'யாருப்பா வந்திருக்காங்க ' என்று சுந்தர் கேட்கிறான். என்ன சொல்ல முடியும்.
'உங்க ஸன்னா ? ' என்று என்னைக் கேட்டவர், 'வாட் இஸ் யுவர் நேம் ' என்று ஆங்கிலத்தில் பையனிடம் கேட்டார். அதே ஆங்கிலத்தில் 'ஐ நோ யுவர் ப்ரதர் நமசு ' என்றார். அது தமிழாக இல்லாமலும் ஆங்கிலமாக இல்லாமலும் இருந்தது. இரண்டுக்கும் மத்தியிலான ஒரு நெரிசலில் நான் நின்ற சின்ன வினாடியைப் பயன்படுத்திக்கொண்டு, 'கம் இன் கதிரேசன். யோசிக்காதீங்க. சங்கர நாராயணன் நமக்கு அந்நியர் இல்லை. ஒரே ஊர். தி வெரி சேம்... ராஜபாளையம் ' என்று அவரே கதவை இன்னும் அகலத் திறந்து வழி செய்தார்.
கதிரேசன் ரப்பர் செருப்புக்களுடன் உள்ளே வருகையில், கரண்டைக்கு வெகு உயரத்தில் முழுக்காற் சட்டை மடிப்பு இருந்தது. தோல் பையை விடாமல் தொங்க விட்டுக் கொண்டு இருப்பதாலோ என்னவோ, அந்தப் பக்கத்து கையின் தையல் கூடப் பனியனில் கிழிந்திருந்தது. குறைவே இல்லாமல் சம பங்காக இரண்டு பேர் பேசும்போது பீடி வாசனை அடித்தது.
'யாருப்பா இவுங்க '-இந்தக் காலத்தில் எந்தச் சின்னப் பிள்ளை பதில் வாங்காமல் கேள்வியை நிறுத்தியது. சுந்தர் நிறுத்த, திரும்பத் திரும்ப யார் யார் என்று கேட்டுக் கொண்டே இருக்கையில்,வாசல் திரைச்சீலையை உள்ளே இருக்கிறவர்கள் வந்து இழுத்து மூடிவிட்டுப் போனால் என்ன அர்த்தம் என்று தெரியாதா.
'வெளியே வைத்துப் பேசி அனுப்புங்கள் '
அவருக்கு இந்த சங்கேதங்கள் எல்லாம் அத்துப்படி போல.
'ஏன் சங்கர நாராயணன் ஸார். நாம இங்கேயே வெளியில் உட்கார்ந்து பேசுவோமே. உள்ளே போய் டிஸ்டர்ப் பண்ணவேண்டாம் '--மூன்று பேர்களுக்கு இரண்டு நாற்காலிகள் மட்டுமே இருந்தும், அவர் முதலில் உட்கார்ந்து கொண்டார். பச்சைப் பெட்டியை அவர் தன்னுடைய வலது பக்கம் வைத்துவிட்டு, பித்தான்களற்ற அந்த முழுக்கைச் சட்டையை வேகமாக அகற்றி, கையில் கட்டியிருந்த காசிக் கயிற்றைத் தளர்த்திவிட்டுக் கொண்டார்.
தனக்குத் தண்ணீர் வேண்டுமென்று சொல்லாமல், 'தண்ணீர் ' குடிக்கிறீங்களா மிஸ்டர் கதிரேசன் ' என்று கேட்டார். கதிரேசன் ஆகப்பட்டவர், நாற்காலிகள் போடப்பட்டிருக்கிற தாழ்வாரத்தின் ஓரமாகச் செருப்பையை கழற்றிப் போட்டுவிட்டு, அதன் பக்கத்திலேயே தன்னுடைய கைப்பையையும் வைத்தார். வசமில்லாமல் பை ஒரு முறை சரிய, மீண்டும் நிமிர்த்தி வைத்துக் கொண்டு இருக்கையில் நான் மூன்றாவது ஒரு நாற்காலியை எடுத்து வரவும், தண்ணீர் கொண்டு வரவும் உள்ளே போனேன்.
'இவங்க ரெண்டு பேரும் யாருப்பா ' -- என்று எத்தனாவது தடவையாகவோ சுந்தர் கேட்டுக் கொண்டு என் பின்னாலேயே உள்ளே வந்தான். அப்பாவின் காலை கட்டிக்கொண்டு வருவது சிறுபிள்ளைகளின் சுபாவம்தான். ஆனால் லேசாக எரிச்சல் வர ஆரம்பித்திருந்தது சுந்தர் என் காலைக் கட்டிக் கொண்டு கூட வரும்போது.
முதலில் ஒரு டம்ளரையும், அப்புறம் நேரடியாகச் செம்பையும் வாங்கித் தண்ணீர் குடித்தார். கடக் கடக் என்று மிகுந்த தாகத்துடன் அவர் குடிப்பதையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சுந்தர்,
'அது என்னப்பா, தாத்தா தொண்டையில் பால் மாதிரிக் குதிக்குது ' என்று கேட்டான். அவன் கேட்டதை விட, அதற்கு அவர் பதிலாகச் செய்ததுதான் ஆச்சரியம்.
படக்கென்று நாற்காலியில் இருந்து தரையில் தாவி, கால்களுக்கிடையில் கைகளை ஊன்றிக் கொண்டு குதித்தார். ஒவ்வொரு அடியாக மூன்று நான்கு முறைகள் சுவரின் கடைசி வரை தவ்வினவர், செருப்புக்கள் வைக்கப்பட்டிருக்கிற, மின்சார மீட்டர் இருக்கிற மடங்கலிலிருந்து உடம்பைத் திருப்பிக் கொண்டு, மறுபடியும் ஒரு தவளை போலத் தவ்விக் கொண்டும், தவளை போலச் சத்தமிட்டுக் கொண்டும், சுந்தர் பக்கமாகப் போய்
'தவளையை முழுங்கிட்டேன். மாஜிக். அதான் தொண்டையில குதிக்குது ' என்றார். அவருக்கு முன்னை விடவும் வியர்த்திருந்தது. செருகுவதற்கு வளையம் இல்லாத இடுப்பு பெல்ட் தொங்கிக் கொண்டிருந்தது. கட்டியிருந்த வேட்டி விலகி உள்ளாடை வழியாக, அவருடைய தளர்ந்த பீஜங்கள் தெரிந்தது.
மேலும் அவிழ்ந்துவிடாமல் வேஷ்டியைச் சரி பண்ணிக் கட்டிக் கொண்டே அவர் நாற்காலியில் உட்கார்ந்தபோது துப்புரவாகச் சிரிப்பே அற்ற ஒரு முகத்தை அவர் அடைந்திருந்தார். இதுவரை பார்த்தே இராத துயரமும் சிறுமையும் நிரம்பிய ஒரு மனித முகமாக அது இருந்ததை மேலும் அனுமதிக்காமல் சட்டென்று புரட்டித் தள்ளினவராக என்னைப் பார்த்தார்.
'மாஜிக்தான் என் தொழில் மிஸ்டர்.சங்கர நாராயணன் ' என்றார்.
'உங்கள் பாங்க் மேனேஜர் அண்ணன் நமசுக்குத் தெரியும். அவர்கள் கிளையில் என் நிகழ்ச்சி நடத்தியிருக்கிறேன் ' என்றார்.
என் அண்ணன் மேனேஜர் இல்லை. ஒரு நீண்ட நாள் ஊழியன் மட்டுமே. ஆனால் அதை இப்போது சொல்ல அவசியமென்று படவில்லை.
'அறுபதுகளில் என் வித்தை காண்பிக்கப்படாத எலிமெண்ட்ரி ஸ்கூல், ஹைஸ்கூல்களே சென்னை மாகாணத்தில் கிடையாது ' என்று சொல்லியபடி பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தார். கதிரேசன் என்பவர் சுவர் ஓரமாக வைத்த கைப்பையைத் திறந்து, ஒரு கிழிந்துபோன போட்டோ ஆல்பத்தை எடுத்துப்பணிவுடன் அவர் கையில் கொடுத்தபோது, ஒரு புகைப்படம் அதிலிருந்து நழுவிக் கீழே விழுந்தது.
நான் எடுத்துப் பார்த்தேன். கருப்பு வெள்ளையில் கவர்னர் ஸ்ரீபிரகாசா இருந்தார். முழுக்கைச் சட்டை மேல் ஒரு வெயிஸ்ட் கோட் மாதிரி இவர் அணிந்திருந்தார்.
என்னை நாற்காலியைப் பக்கத்தில் இழுத்துப் போட்டுக் கொள்ளச் சொல்லி, அந்த ஆல்பத்தை தன் மடியில் வைத்துக் கொண்டு வருடவாரியாக அவர் காண்பிக்கத் துவங்கினார்.
காமராஜருடன் இருப்பது மாதிரி ஒன்று. ராமசாமி ராஜா கூட ஒன்று. சேவியர் கல்லூரி சூசை அடிகள் தலையில் இவர் பூக்களாகக் கொட்டுவது மாதிரி ஒன்று. ஜி.டி. நாயுடு ஒன்று. வயதில் மிகச் சிறியவராகத் தென்பட்ட குன்றக்குடி அடிகளாருடன் மேடையில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருப்பது மாதிரி ஒன்று.
பத்மினியுடன் இருக்கிற ஒரு படத்தைக் காட்டும்போது, 'வஞ்சிக்கோட்டை வாலி 'பனில் போட்டி டான்ஸ் வருமில்லையா, அதைப் படம் பிடிக்கிற அன்றைக்கு ஜெமினியில பத்து நிமிஷம் மாஜிக் ஷோ காட்டினேன். வாசன் ஸார் முழு நூறு ரூபாய் நோட்டு ஒன்று கொடுத்தார் ' என்றார். எனக்கு பத்மினியை அந்த உடையில் ராஜாதேசிங்கு படப்பாட்டுப் புத்தகத்தில்தான் பார்த்த ஞாபகம் இருக்கிறது.
'இது யாரு தெரியுமா. ஃப்ரண்ட் ராமசாம். நிஜமாகவே எனக்கு ஃப்ரண்ட் 'என்றார். அகலமாக டை கட்டி, தொப்பி வைத்து ராமசாமி சிரித்துக் கொண்டிருந்த சிரிப்பு அப்பழுக்கற்று சிநேகபூர்வமாக இருந்தது.
'நீங்க ஒருஹெல்ப் பண்ணனும் மிஸ்டர். சங்கர நாராயணன். யூ ஆர் எ காலேஜ் லெக்சரர். உங்களுடைய கல்லூரியில் ஒரு புரோகிராமுக்கு ஏற்பாடு பண்ணனும். ஒரு மணி நேரம் என்றால் ஒரு மணிநேரம். ஹாஃப் அன் அவர் என்றால் ஹாஃப் அன் அவர். உங்களுடைய செளகரியம். கலெக்ஷன் பண்ணினாலும் சரி. நீங்களா ஒரு அமெளண்டைக் கொடுத்தாலும் சரி. எனக்கு சந்தோஷம்தான் '
நான் மிகுந்த காரண காரியங்களுடன் என்னுடைய இயலாமையைச் சொல்ல வேண்டியிருந்தது. இந்தக் காலக் கல்லூரிச் சூழ்நிலை, மாணவர்களின் ருசிகள், எலும்பேயற்ற சினிமா நடனங்கள், மூன்று வயதுப்பையனுக்குக் கூட இன்று தேவைப்படுகிற வேகமான அதிர்வுகள் என்று எப்படி யெல்லாமோ நான் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
மழை வருவது போல் சற்று மேக மூட்டமாக இருட்டுக் கவிந்து கொண்டிருந்த காலை நேரத்தில், அவருக்கு உதவ முடியாதபடி இருக்கிற நிகழ்காலத்தை மிகக் குறைந்த சொற்களில் சொன்னால் அவர் வருத்தப்படக் கூடும் என்று தோன்றியது.
முப்பது வருஷங்களுக்கு முன்னால் அவர் மண்ணைப் பொரிகடலையாக்கி இருப்பார். பொரிகடலையை ஆரஞ்சு மிட்டாயாகக் குலுக்கிப் பிள்ளைகளுக்கு மத்தியில் வீசியிருப்பார். வாயிலிருந்து சரம் சரமாகக் கலர் பேப்பரை உருவியிருப்பார். ஒரு சிறு துண்டு ரோஸ் உல்லன் நூலை விழுங்கிவிட்டு தொப்புள் குழியிலிருந்து ஒரு நூல்கண்டு பருமனுக்கு எடுத்துப் போட்டுக் கொண்டே இருந்திருப்பார்.
மேல் டப்பாவில் போட்டு மூடின கோழி முட்டை கீழ் டப்பாவிற்கு வந்திருக்கும். ஹெட்மாஸ்டர் கையில் போட்டிருந்த மோதிரம் எட்டு சி. ஜெகன்னாதன் ஜாமெட்ரி பாக்ஸில் இருக்கும். நிஜமாகவே எல்லோரும் சிரித்திருப்பார்கள். காலணா, அரையணா, பத்து நயா பைசா, இருபத்தஞ்சு நயாபைசா என்று வைத்திருந்தால் கூட ஒவ்வொரு பள்ளிகூடத்திலும் நிறைய பணம் பிரிந்திருக்கும். அவர் மைனர் செயின் போட்டிருந்திருக்கலாம். பார்வையாளர்களுக்கு அதிகம் கண்ணில் படுகிற விரல்களில் பருமனான கல் வைத்த மோதிரம் இருந்திருக்கக் கூடும். அவர் முழுக்கைச் சட்டைக்குள் காசிக் கயிறுக்குப் பதிலாக ஃபேவர் லூபா அல்லது ஹென்றி ஸான்டெஸ் கடிகாரம் தங்கமினுக்குப் பட்டியுடன் ஓடிக் கொண்டு இருந்திருக்கும். கதிரேசன் கூடக் கிழியாத சொந்த உடைகள் அணிந்திருக்கலாம்.
'நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது சங்கர நாராயணன் '
அவர் குரல் காய்ச்சல்காரருடையது போல இருந்தது. நாக்கு உலர்ந்துவிட்டது போலவும், உதடுகள் வெடித்துத் தோலுரித்துவிட்டன போலவும் எப்படியெல்லாமோ அது ஒலித்தது.
'இந்தக் காலனியில் பத்து இருபது பிள்ளைகள் இருந்தால் கூடக் கூப்பிடுங்கள். ஒரு சிறு ஷோவுக்கு ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் பையன் சுந்தரின் நண்பர்கள் கூடப் போதும் '
சுந்தருக்கு அவனைப் பற்றிப் பேசுவது புரிந்தது தவிர, என்ன பேசுகிறார் என்று புரியவில்லை. என்னையும் அவரையும் ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே நான் உட்கார்ந்திருந்த நாற்காலியில், என் மடியில் அவனும் வந்து உட்கார்ந்து கொண்டு, அவர் முகத்தையே பார்த்தபடி இருந்தான்.
'இரண்டுபேரும் இருந்து சாப்பிட்டுவிட்டுப் போகிறீர்களா ? ' அவருடைய முகத்தைப் பார்த்துக் கேட்பதைத் தவிர்ப்பதற்காக, நான் அந்த இன்னொருவரின் பக்கத்தில் போய்க் கேட்க நெருங்கினேன்.
'புறப்படுவோமா கதிரேசன் ' - எனக்குப் பக்கவாட்டில் இருந்து அந்தக் குரலுடன் எழுந்து, தகரப் பெட்டியும் முழுக்கைச் சட்டையுமாக இரும்புக் கதவை அவர் திறந்த போது, ஏற்கனவே தானும் அப்படித் தீர்மானித்து விட்டது போலக் கதிரேசன் என்பவரும், அந்தத் தோல் பையைக் குனிந்து எடுத்துக் கொண்டிருந்தார்.
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
4 கருத்துகள்:
வண்ணதாசன் சார் எங்கே பிடிக்கிறீர்கள் இப்படியான இயல்பும்,சுவராசியமுமான கதா பாத்திரங்களை,சிரிப்பும் சிலிர்ப்பும் கலந்த கதை நிகழ்வுகளை-அற்புதம்
பசியும் வறுமையும் எந்த கலைநனையும் விட்டு வைப்பதில்லை.
எந்த கலைநனனும் தன்மானத்தை விட்டுக் கொடுப்பதில்லை.
பசியும் வறுமையும் எந்த கலைநனையும் விட்டு வைப்பதில்லை.
எந்த கலைநனனும் தன்மானத்தை விட்டுக் கொடுப்பதில்லை.
காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளாதவர்களுக்கு எஞ்சிய வாழ்க்கை கொடியது தான்.
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.