Oct 28, 2010

நகுலன் : நினைவின் குற்றவாளி - ஷங்கர்ராமசுப்ரமணியன்

தமிழ் நாவல் கதைப் பரப்பானது, கட்டுறுதிமிக்க புறநிலை யதார்த்தத்தால் சாத்தியங்கள் மட்டுப்படுத்தப்பட்டு, பகுத்தறிவின் தீவிர விழிப்பால் கட்டப்பட்டது. லோகாதாயம், மதம் மற்றும் அரசு போன்ற அமைப்புகள் காலம்தோறும் மனிதனை வடிவமைக்கவும்,கட்டுப்படுத்தவும், வரையறை செய்யவும் முயன்றுகொண்டே இருக்கின்றன. ஆனால்,இவ்வமைப்புகள் தங்கள் நோக்கத்திற்கேற்ப வரையும் மனிதச்சித்திரம் மட்டுமல்ல அவன். தமிழ் நாவல் பரப்பில் பெரும்பாலும் மனிதர்கள் பேசப்பட்டிருப்பது மேற்குறிப்பிட்ட வரையறையின் மீறாத நிலைமைகளில்தான். ஸ்தூலமான நிகழ்வுகள்,வெளிப்பாடுகள், முடிவுகளைக் கொண்டு ஒரு தன்னிலையை, அதன் செயலை வரையறுக்கும் பழக்கத்தை பொதுப்புத்தி உருவாக்கி வைத்துள்ளது.nagulan-by-viswamithran-1 இதிலிருந்து மாறுபட்டு பொருள்கள் மற்றும் உயிர்கள், அவை தொடர்பு கொண்டிருக்கும் சூழலின் மறைதன்மையை சுட்டிப் புலப்படுத்துவதாய், அதன் அகமுகத்தை வரைவதாய், ஒரு பார்வைக் கோணம் நகுலனின் புனைவுகளில், ஒரு விசித்திர அனுபவத்தைச் சாத்தியப்படுத்துகிறது. நகுலன் இவ்வனுபவத்தை திண்ணமான கதை உருவோ,கதாபாத்திரங்களோ இன்றி சாத்தியப்படுத்துகிறார். அவரது எழுத்துகளில் தொடர்ச்சியாய் இடம்பெறும் பூனை போலவே, பிரத்யட்ச நிலைக்கும் அரூப வெளிக்கும் இடையே நினைவு, நடப்பின் அலைக்கழிவில் தொடர்ந்து பயணம் செய்பவனாய் மனிதன் இருக்கிறான். அவன் ஒரே சமயத்தில் பல உலகங்களில் சஞ்சரிக்கிறான். நகுலன் நம்மில் நிகழ்த்தும் விழிப்பு இதுதான். நகுலன், தான் புழங்கிய இலக்கிய வடிவங்கள் கவிதை சிறுகதை நாவல், கட்டுரை எல்லாவற்றிலும் நகுலன் தன்மை ஒன்றை நீக்கமற உருவாக்கியுள்ளார். அவர் புனைவில் திரும்பத் திரும்ப வரும் பிராணிகள் மற்றும் சொற்றொடர்களையும் நகுலனின் பிரஜைகள் என்று சொல்லுமளவுக்கு, அவற்றின் அடையாளங்களுக்குள் தன் சாயலை ஏற்றியுள்ளார்.

'நினைவுப்பாதை' நாவலில் வரும் வாக்கியம் இது: 'நான் தனி ஆள்; ஆன வயதிற்கோ அளவில்லை.' நவீனன் (அல்லது) நகுலன் சொல்லும் இவ்வாக்கியம் பிறப்பு, இறப்பு,குறுகிய வாழ்வு என்ற வரையறைக்குட்பட்ட ஒரு பௌதீக உடல் சொல்ல இயலக்கூடிய வாக்கியமா? சாத்தியமில்லை. இக்கூற்றில் பல்லாயிரக்கணக்கான ஆண்டின் நினைவழுத்தம் அல்லவா வெளிப்படுகிறது. அப்படியெனில் இக்கூற்றைச் சொல்லும் நவீனனுக்கு எத்தனை வயதாகின்றது? மனிதனின் முக்கிய அடிப்படைப் பிரச்சினைகளில் ஒன்று நினைவு. செயலாற்ற விரும்பும் மனிதனின் காரியத்தை வெற்றி கொள்ளும் மனம், நினைவை ஓரளவு கட்டுக்குள் வைத்து அனுசரிக்கும் இயல்பைப் பெற்றுள்ளது. அவன் அனுசரித்துப் பராமரிக்கும் தற்காலிக நினைவென்பதாலேயே அது பொருள்களை, மனிதர்களை உடைமை கொள்ள முடிகிறது.நினைவுகளைக் கட்டுப்பாட்டில்லாமல் பெருகவிடுபவன், வரலாற்றின் சாம்பல் தன்மை படர்ந்த உடலுடன் தோல்வியின் பைத்திய, குற்ற நெடியடிக்கும் பிரதேசத்துக்குள் நுழைந்து விடுகிறான். அவ்வகையில் நகுலனை நாம் நினைவின் குற்றவாளி எனலாம்.

ஆசை - நிராசை, உறவு - பிரிவு, இருப்பு - இன்மை என்ற இருமைகளில் ஆடிக்கொண்டிருக்கும் மனித மனதிற்கு தோல்வியின் மீது ஒரு அடங்காத வசீகரம் உண்டு. அது இடுபாடுகள் மீதான வசீகரம். நினைவுகளிலேயே சதா திளைத்துக் கொண்டிருக்கும் பொய்கைதான் தோல்வி. நகுலனின் ஒட்டுமொத்த புனைவிலும் தோல்விதான் முக்கிய அனுபவம்.

இங்கு சொல்லப்படும் தோல்வி என்பது இலக்கிய தோல்வியோ, நகுலனின் அந்தரங்கத் தோல்வியோ அல்ல. தன்னால் சிருஷ்டிக்கப்பட்ட அமைப்புகளிலிருந்து, தன் உடல்வரை பொறிகளாய் உணரும் தீவிரமான விழிப்பு நிலையில், மனிதன் உணரும் செயலின்மையிலிருந்து பெருகும் தோல்வி.

நகுலன், கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் விசாரம் அல்லது தன் விசாரம் மூலம் மொழி, வரலாறு, யதார்த்தம், கற்றறிவு, பட்டறிவு சார்ந்த எல்லா நினைவுகளையும் பேச்சாய், ரூபமற்ற சப்த அலைகளாய் பெருக வைக்கிறார். இதன்மூலம் பொதுப் பேச்சு,அமைப்பு மற்றும் உறவுகளின் வாழ்வே சடங்காகி விட்டதை உச்சபட்சமாய் பகடி செய்தபடி வாசகனின் நினைவுச் சரடையும் அதிர வைக்கிறார். சிலசமயம் வெட்டி,சம்பந்தமற்ற சரடோடு இணைக்கிறார். வாசகன் போதைமை கொள்ளும், பைத்திய உவகை பொங்கும் தருணங்கள் அவை. 'நினைவுப்பாதை', 'நாய்கள்', 'சில அத்தியாயங்கள்', 'நவீனன் டைரி', 'அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி', 'வாக்குமூலம்' என எல்லா நகுலனின் நாவல்களிலும் நிகழும் உரையாடல் மற்றும் தன் விசாரத்தில் கிடைக்கும் அபத்த அனுபவத்தை எப்படியோ அவர் தன் மொழியின் இசைமை வழியாய் உருவாக்குகிறார்.

மனிதன் சலித்துக் கொண்டிருக்கிறான். பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் உடல் சலிப்படைவதைத்nagulan-by-viswamithran-5 தவிர வேறொன்றும் விசேஷ நிகழ்வுகள் இல்லை. நவீனனின் பாஷையில் சொன்னால், 'எறும்புப் புற்றுக்கு உணவிடுவதுதான் லௌகீகம்'. எறும்புக்கு உணவிட்டுக் கொண்டே அது கடிக்கிறது என்று ஏன் புகார் சொல்ல வேண்டும். இதுதான் லௌகீக வாழ்க்கை குறித்த நவீனனின் விமரிசனம். ராமநாதன், சச்சிதானந்தம் பிள்ளை,சாரதி, கேசவமாதவன் எல்லோருமே எறும்புக்கு உணவிடுபவர்கள்; சலிக்கிறவர்கள்.இவர்களெல்லாம் ஒரே நபரின் சாயல்கள்தான். "நவீனன் என்கிறேன். நகுலன் என்கிறேன்.ஆனால் நான் யார்? யாரைச் சந்திக்கிறேனோ, நான் அவர், அவர் ஆகிறேன்...அதனால்தான் இலக்கணம் பச்சைப்புழு, மறுகணம் சிறகடிக்கிற வண்ணத்துப்பூச்சி."

நகுலனின் புனைவுகளில் பெண்கள் ஸ்தூலமாய் வருகிறார்கள். சுசீலா, அம்மா மற்றும் சுலோசனா. சுசீலா காதலி. மானசீகமான ஒரே முன்னிலை மற்றும் வாசகி. நகுலன் (அ)நவீனனுக்கு தனிமையைக் கற்றுக் கொடுத்துப் பிரிந்த ஆசிரியை. சுசீலாவின் பிரிவும்,சுசீலாவை இடைவிடாமல் ஜபிப்பதும், மனவெறியில் சுசீலாவுடன் உரையாடுவதும்,சுசீலாவை எழுதுவதும் நகுலனுக்கு தனிமையை விலக்கும் செயலாக, தனிமையைப் பெருக்கும் செயலாக இருக்கிறது. அம்மா நவீனனை (அ) நகுலனை நிறை குறைகளோடு ஏற்றுக்கொண்டவள். அங்கீகரித்தவள். அவளும் நவீனனைத் தனியே உலகில் விட்டு மறைந்து விடுபவள். 'இவர்கள்' நாவலை அம்மா என்னும் புராதனப் பிரக்ஞைக்கும்,அதன் நிழலிலிருந்து தற்கால நிகழ்வுகளை எதிர்கொள்ளும் நவீன மனதுக்கும் இடையே உள்ள உரையாடல் என சொல்லலாம். இந்தியா போன்ற கீழைத் தேசங்களில் தாய் என்பவள் தந்தைக்குப் பணிவான, படிந்து போகக்கூடிய ஆளுமையாய் தோற்றம் கொடுத்தாலும் வலிமை கொண்ட மனமாய் அவளே இருக்கிறாள். நினைவைக் காப்பாற்றுபவளாய், ஒருவகையில் நினைவின் எஞ்சிய ஒரே படிமமாகவும் இருக்கிறாள்.தாயின் நினைவின் நிழல் படர்ந்திருப்பவன், நிகழ்கணம் கோரும் செயலில் ஈடுபட இயலாமல் இருப்பவன். 'இவர்கள்' நாவலில் அம்மா 'பழைய காலத்தின் உள்ளுணர்வுள்ள பிரதிநிதியாகவும்' சித்தரிக்கப்பட்டுள்ளாள்.

நகுலன் தன் புனைவின் மூலம் தீய சகுனங்களை கவித்துவமாய் சொல்பவராய் இருக்கிறார். குடும்பம் என்கிற அமைப்பு மனிதனை குரூரமாய் சிதைப்பது. 'நிழல்கள்'நாவலிலிருந்து நவீனனை, சிவனை, ஹரிஹர சுப்ரமணியனை, சாரதியை சிதைப்பது தொடர்கிறது. இவர்களின் வீடுகளில் கழிப்பறையில், உள்ளறைகளில் கரும்பாம்பும்,சாரைப் பாம்பும் சுருண்டு கிடக்கின்றன. நகுலன் ஒரு சூழலை விவரிக்கும் போதும், ஒரு பறவையின் சப்த துணுக்கைச் சொல்லும் போதும் பிராணிகளைப் பற்றிப் பேசும்போதும், அவற்றை சூழலின் விகாசத்துடன் நம் மனதின் உணர்வு நிலைகளாய் மாற்றி விடுகிறார். திருச்சூர் மிருகக்காட்சி சாலையில் உள்ள பாம்பைப் பற்றி விவரிக்கும்போது, அது சட்டென உருப்பெற்று நகுலனின் புத்தகத்துக்குள் சுரீரென உலவுகிறது. நகுலன் எழுத்தும் நம் மனவெளிக்குள் கருத்த, பயங்கர அழகுள்ள பாம்பு ஒன்று புழக்கடை வழியாய் வீட்டின் பிளவுக்குள் புகுவதைப் போல்தான்.

நகுலனுக்கு எழுத்து உடலை அறிதலாகவும் உடலைக் கடத்தலாகவும் இருக்கிறது.எழுத்தும் உடலும் ஒரு தன்மை கொள்ளும் சந்தர்ப்பமும் நேர்கிறது. எழுத்துக்கள் மயங்கும் நேரம். உருவம் தெரியாமல் மறையும் தருணம். உருவத்திலிருந்து தப்புவதற்கு உருவமில்லாத ஒரு உருவத்தைச் சிருஷ்டிக்கிற முயற்சியாகவும் இருக்கிறது. சுசீலாவின் பிரதிபலிப்பையும் நவீனனின் பிரதிபலிப்பையும் எல்லா உயிர் உருவங்களிலும் பார்ப்பதைப்போல கருங்குருவி, பச்சைக்கிளி, மரங்கொத்தி,சாரைப்பாம்பு, மஞ்சள் நிறப்பூனை எல்லாமே பிரஜைகளாகவும் பிரக்ஞைகளாகவும் மாறும் போதே திருமந்திரம், திருக்குறள், பத்திரகிரியார், பாதலேர் என நகுலனின் புனைவில் நினைவுகளாய் தோதான இடங்களில் பிரதிபலிக்கின்றன.

ஆதிசங்கரரின் வாழ்க்கையில் நிகழும் ஒரு நிகழ்ச்சியை சொல்வது நகுலனின் புனைவை, ஒருவகையில் நகுலனைப் புரிந்துகொள்வதற்குத் துணையாய் இருக்கக்கூடும். ('கடைசியாக எந்த மண்ணில் ஆதிசங்கரர் கால்வைத்து நடந்தாரோ அங்கு வந்துவிட்டேன்' -நினைவுப்பாதை) ஆதிசங்கரர் துறவியான பிறகு அவருடைய அம்மா இறந்துபோகிறார். செய்தி அறிந்த உடன் அம்மாவுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்ய ஆயத்தமாகிறார் ஆதிசங்கரர். ஆனால் துறவியாகிவிட்டதால் இறுதிக்கடன்களை அவர் தன் தாய்க்குச் செய்வதற்கு தடை சொல்கின்றனர். ஆதிசங்கரர் அத்தடையை மீறி அம்மாவுக்கு இறுதிக் கடன்களை செய்து முடித்த பிறகே தன் துறவுப் பயணத்தைத் தொடர்கிறார். நகுலனின் ஒட்டுமொத்த எழுத்துக்களை இறந்த அம்மாவுக்கும், பிரிந்து சென்ற சுசீலாவுக்கும் நகுலன் செய்யும் கிரியைகள் எனலாமா?

நகுலனின் மற்ற நாவல்களை விட செயலின் முழுமை நோக்கிப் பயணிக்கும் நாவல் வாக்குமூலம். காஃப்காவின் சாயல் கொண்டது. முட்டாள்கள் தினமான ஏப்ரல் ஒன்றாம் தேதி அரசு ஓர் அறிவிப்பை வெளியிடுகிறது. அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களில் தொடர்ந்து வாழ்வதற்கு விரும்பாதவர்களை அரசே பொறுப்பேற்று வலியின்றி கொல்வதற்கு கொண்டுவரும் தேச  முன்னேற்றச் சட்டம் அது. கதையின் நாயகன் ராஜசேகரன் அச்சட்டத்தை பயன்படுத்திக் கொள்ள sankarமுயன்று அதற்கான விண்ணப்பக் கேள்விகளுக்குப் பதில் எழுதும் முகாந்திரமாக எழுதப்படுவதே வாக்குமூலம். நாவலின் கருப்பொருள் தீவிர அபத்த நிலையில் இருந்தாலும், கதை நிகழும் சூழலும் யதார்த்தமும் வலுவாக வாக்குமூலம் நாவலில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மர்ம நாவலுக்கான மூட்டத்துடன், தொடர்ந்து அறிமுகமாகப் போகும் நபர்கள், நிகழ்வுகள் குறித்த எதிர்பார்ப்புமாக வாசிக்க இயலக்கூடிய நாவல் இது. தற்கொலையைப் பாவம் என நம்பும் ஒரு இந்திய மனம் தற்கொலையை விடுத்து, அரசே பரிந்துரைக்கும் கொலையை விரும்பி ஏற்க முன்வருகிறது. ஆனால், அரசு, கடைசியில் ராஜசேகரன் மற்றும் சிலர் விண்ணப்பித்திருந்த இறப்புக்கான கோரிக்கையை நிராகரிக்கிறது.கடைசியில் மரணத்துக்கான பாதையும் கெஸட்டியர் பிரதிகளாக, ஷரத்துகளாக, பக்க எண்களால் நிரம்பி மூடிவிடுகிறது. ராஜசேகரன் வாழ்க்கையில் இதிலும் ஒரு தோல்வி.ஆனாலும் இலவச இணைப்பாய் ஒரு வெற்றியும் நிகழ்கிறது. தேச முன்னேற்றச் சட்டத்தை இராஜசேகரன் பயன்படுத்துவதற்குக் கேட்கப்பட்ட வாக்குமூலம் பரிந்துரைக் குழுவால் பாராட்டப்பட்டு பிரசுரத்துக்குரியதாய் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதுவே நகுலன் நாம் வாழும் அமைப்பின் மீது வெளிப்படுத்தும் அபத்த நகைச்சுவையும் முரண் நகையுமாகும்.

நகுலனின் கதைகளுக்குப் பின் இயங்கும் அடிப்படைதான் என்ன? புறநிலை யதார்த்தம்,அனுபவம் மற்றும் உறவுகள் என்பதெல்லாம் மனிதன் கற்பிதங்கள் அல்லது மாயை என்றெண்ணும் அத்வைதப் பிரக்ஞைக்கும், தீவிர புறமெய்மை உணர்ச்சிக்கும் இடைப்பட்ட முரண் அல்லது விசாரம் எனலாம். ஒரு புனைவில் அல்லது நாவலில் ஒரு தத்துவம் அடிப்படையாய் இருக்கலாம். ஆனால் அதுவே புனைவு கொள்ளும் மொத்த சாத்தியங்களை வரையறுத்து விடுவதாய் இருக்க முடியாது. மையக்கருத்து அல்லது ஆசிரியரின் முடிவுக்கு அப்பாற்பட்டு புனைவின் போக்கில் சேரும் உபபொருள்கள் தான் புனைவை வேறுரு கொள்ளச் செய்கின்றன. அவ்வகையில் நகுலனின் நாவல்கள் பல குரல் தன்மை கொண்டவை. கதாபாத்திரங்களின் மனஓட்டம்,இயல்பு ஆகியவற்றின் பல குரல் தன்மை அல்ல; நகுலன் நாவல்களில் நாம் உணர்வது மொழி நினைவு, சமூக நினைவு, மரபு, வரலாற்று நினைவுகளுடனான பலகுரல் தன்மை ஆகியவைதான்.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்