Oct 3, 2010

தீராக்குறை- எஸ்.ராமகிருஷ்ணன்

வேல.ராமமூர்த்தி

 

ராமநாதபுர மாவட்டத்தின் பெருநாழியைச் சேர்ந்தவர் வேvelaramல.ராமமூர்த்தி. அவரது  கதைகள் கிழக்குச் சீமையின் அடிநிலை மக்களின் வாழ்வை விவரிப்பவை. ராணுவத்தில் வேலை செய்து ஓய்வு பெற்று, தற்போது தபால்துறையில் பணிபுரிகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ள இவர், தனது எழுத்து பேரன்பும் பெருங்கோபமும் நிரம்பியது என்பவர். வேல.ராமமூர்த்தி கதைகள், கூட்டாஞ்சோறு, இருளப்பசாமியும் 21 கிடாயும் போன்றவை இவரது முக்கியப் படைப்புகள். இவரது கதைகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியாகியுள்ளன.



திருச்செந்தூரின் வைகாசி விசாகத்தைக் காண்பதற்காகச் சென்றிருந்தேன். பெருந்திரளான மக்கள் கூட்டம். பாதுகாப்புப் பணிக்காக வெவ்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு காவலர்கள் வந்து இறங்கியிருந்தார்கள். ஜனத்திரளுக்குள் அந்த போலீஸ்காரர் மட்டும் தனியே தெரிந்தார்.
அவருக்கு ஐம்பது வயதிருக்கும். கறுப்பு கூலிங்கிளாஸ் அணிந்திருந்தார். கண்ணாடியின் மீது பிள்ளையார் ஸ்டிக்கர் இரண்டு பக்கமும் ஒட்டப்பட்டு இருந்தது. அவர் உற்சாகமாகக் கையில் மைக்கை வைத்துக்கொண்டு கிரிக்கெட் வர்ணனையாளரைப் போல கூட்டத்தினரை நோக்கி வாய் ஓயாமல் அறிவிப்புகளைச் செய்தபடி இருந்தார்.

அன்றிரவு, கோயில் வளாகத்தில் நடைபெற்ற கச்சேரியின் போது மீண்டும் அவரைப் பார்த்தேன். இருட்டினுள் அதே கூலிங்கிளாஸ் அணிந்தபடியே, கச்சேரியில் பாடப்படும் ஒவ்வொரு பாடலையும் அவரும் உரத்த குரலில் சேர்ந்து பாடிக்கொண்டு இருந்தார். கச்சேரி கேட்டுக்கொண்டு இருந்தவர்களில் ஒன்றிரண்டு பேர் திரும்பிப் பார்த்து அவரை முறைத்தபோதும், அவர் புன்சிரிப்பு மாறாமல் தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தார்.

மறுநாளின் அதிகாலையில் அதே நபர், கடலில் உற்சாகமாகத் தாவித் தாவி குளித்துக்கொண்டு இருந்தபோது, நாங்கள் கடற்கரையில் சூர்யோதயம் பார்ப்பதற்காக நின்றிருந்தோம். இரண்டு நாட்களில் அந்த போலீஸ்காரர் மிகவும் பரிச்சயமானவரைப் போலாகியிருந்தார்.

மூன்றாம் நாளில், பொம்மைகள் விற்கும் கடையில் மரத்தில் செய்யப்பட்டு இருந்த செப்புச் சாமான்களை விலை கேட்டுக்கொண்டு இருந்தபோது, அருகில் அவர் ஒரு தலையாட்டி பொம்மையின் விலையை விசாரித்தார். பேரம் இழுபட்டுக்கொண்டு இருந்தது. பணத்தைக் கொடுத்து பொம்மையை வாங்கும் போது என் பையன் அவர் கையில் வைத்து இருந்த தலையாட்டி பொம்மையைப் பார்த்து விட்டான். அது தனக்கு வேண்டும் என்று அடம்பிடித்து அழத் துவங்கினான். அந்த போலீஸ்காரர் சிரித்த படியே பொம்மையை என் பையனிடம் தந்துவிட்டு, ‘பையனுக்கு எத்தனை வயசாகுது சார்?’ என்று அன்போடு விசாரித்தார். நான் ஆர்வம் தாள முடியாமல், ‘எதுக்கு கூலிங்கிளாஸ் மீது பிள்ளையார் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கீங்க?’ என்று கேட்டேன்.

அவர் சிரித்தார். ‘‘காலையில விடிஞ்சதிலிருந்து ராத்திரி தூங்கப்போற வரைக்கும் திருட்டுப் பயக, கொலை பண்றவனுங்க, கஞ்சா விற்கிறவங்கன்னு அப்படிப்பட்ட ஆட்கள் முகத்தில்தான் முழிக்க வேண்டியிருக்கு. அந்தப் பாவம் நம்மளைச் சும்மா விடுமா, சொல்லுங்க... அதான் கண்ணாடியில பிள்ளையாரை ஒட்டிட்டேன். இப்போ எதுவா இருந்தாலும் பிள்ளையார் வழியாதான் பார்க்க முடியும். இதனால எந்தப் பாவமும் நம் மேல நேரடியா படாது பாருங்க’’ என்றார்.

அவர் பேசுவது வேடிக்கைக்காகவா இல்லை, நிஜம்தானா என்று புரியவில்லை. ‘என்ன வேலை சார்... எப்போ பாரு அடிதடி, சாவு, வெட்டிட்டான், குத்திட் டான்னு எவனாவது வந்து நிப்பான். ஒரு நாளைக்கு ஒரு நல்ல சேதி கேட்க முடியாது. ஊர்ல எத்தனை கோயில் இருக்கு. ஒரு கோயிலுக்குப் போறதுக்குக்கூட நேரம் கிடையாது. இவ்வளவு ஏன் சார்? பிள்ளைக படிக்கிற பள்ளிக் கூடத் தைக்கூட போய்ப் பார்த் தது இல்லை. விடிஞ்சா கோர்ட், கொலைக் கேஸ§, ரௌடிப் பயக... இதைத்தான் வருஷம் பூரா பார்த்துக்கிட்டே இருக்கேன்.

அன்னிக்குப் பாருங்க... ஒரு கைதியைக் கூட்டிக் கிட்டு மதுரைக்குப் போயிட்டு இருக்கேன். பஸ்ல என் மாமனார் ஏறிட்டார். ரொம்பக் கூட்டம். ‘வாங்க மாமா! உட்காருங்க’னு சொல்லணும்னு ஆசையா இருந்துச்சு. ஆனா, கூட கைதி இருக்கான். அவனை என் கையோடு சேர்த்து விலங்கு போட் டிருக்கேன். எழுந்து நின்னா ரெண்டு பேரும்தான் நிக்கணும். என்ன செய்யறது? பார்க்காத மாதிரி இருந்துட்டேன். ராத்திரி வீட்டுக்குப் போனா, பொண்டாட்டி கோவிச்சுகிடுறா.

இதுவாவது பரவாயில்லை. ஒரு காரும் லாரியும் எதிரெதிரே மோதி, கார்ல வந்த குடும்பமே காலி. பச்சைப் பிள்ளை, ஆறு மாசமிருக்கும். வாயில நிப்பிளை வெச்சுக்கிட்டு செத்துக் கிடக்குது. அதைக் கையில் எடுத்து வெச்சுக்கிட்டு, ராத்திரி பூரா நடு ரோட்லயே இருட்டுக்குள்ள நின்னுக்கிட்டு இருக்கேன். என்னை அறியாம கண்ணுல தண்ணி கொட்டுது. எதுக்குடா இந்த உத்யோகத்துக்கு வந்தோம்னு மனசு அடிச்சுக்கிச்சு. சம்பளத்துக்குத்தான் இந்த உத்யோகம் பாக்கிறோம்னு சொன்னாலும், மனசு ஒட்டலை சார். அதான், இப்படி ஏதாவது கோயில்ல டூட்டி போட்டா கிளம்பி வந்திருவேன். ஒரு நாளைக்குப் பத்து தடவை சாமி கும்பிடுவேன்.

என் அனுபவத்துல மனுஷன் அவ்வளவு நல்லவன் இல்லை சார். எல்லார் மனசுக்குள்ளேயும் தப்பு பண்ற ஆசை இருக்கத்தான் செய்யுது. எது எதுக்கோ பயந்துபோய்தான் அடங்கியிருக்காங்க. அதே மாதிரி திருட்டுப் பயக எல்லோரும் கெட்டவங்களும் கிடை யாது சார். இப்படித்தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சூரசம் ஹாரத்துக்கு டூட்டி போட்ருந்தாங்க. ராத்திரி சாப்பிட்டது சேராம ஒரே வயித்துப்போக்கு. கூட்டத்துக்குள்ளேயே மயங்கி விழுந்துட்டேன். முழிச்சுப் பார்த்தா ஜி.ஹெச்ல கிடக்கேன்.

நம்மளை இங்கே கொண்டு வந்தது யாருன்னு பார்த்தா, கையில ஒரு தூக்குவாளி வெச்சுக்கிட்டு கட்டைக் குமார்னு பிக்பாக்கெட் அடிக்கிற பய நிக்கிறான். ‘என்ன ஏட்டய்யா... இப்போ எப்படி இருக்கு?’னு விசாரிச்சுக்கிட்டு, டீயை ஆத்திக் கொடுத்துக் குடிக்கச் சொல்றான். ‘நீ எதுக்குடா என்னைக் காப்பாத்துனே?’னு கேட்டா, சிரிக்கிறான்.

அந்தப் பயலை எம்புட்டு அடி அடிச்சிருப்பேன்..! அது எதுவும் கழுதைக்கு ஞாபகமில்லை. என்னிக்கோ ஒரு நாள் பசிக்குதுனு கேட்டப்ப, நாலு இட்லி வாங்கிக் குடுத்தேனாம்... அதை சொல்லிக் காட்டுறான். மூணு நாள் ஆஸ்பத்திரியில படுத்திருந்தேன். அவன்தான் கூடவே இருந்தான். இவங்களுக்கு எல்லாம் எப்படி கைம்மாறு செய்யறது சொல்லுங்க?’’

நீருற்றைப் போல, அவரது மனதில் ஊறிக்கிடந்த எண்ணங்கள் பீய்ச்சி அடித்துக்கொண்டு வெளிப்பட்டன. பையன் கையில் வைத் திருந்த பொம்மையை அவரிடம் வாங்கிக் கொடுப்பதற்காக நான் எத்தனித்தபோது, பையன் அழத் துவங்கினான். அது போல வேறு ஏதாவது பொம்மை இருக்கிறதா என்று கேட்டதற்கு, கடைக்காரர் இல்லை என்றார். கான்ஸ்டபிள் சிரித்த முகத்தோடு, ‘பரவாயில்லை சார்! வெச்சுக்கிடட்டும். நானும் என் பேத்திக்கு தான் வாங்கிட்டுப் போறதா இருந்தேன். இப்போ பேரனுக்குக் கொடுத்துட்டேன்னு நினைச்சுக்கிடுறேன்’ என்றார்.

உறவுக்கும் அன்புக்கும் ஏங்கும் அந்த மனிதரைப் பார்த்தபடியே செய்வது அறியாமல் நின்று இருந்தேன். ‘நடை பூட்டுறதுக் குள்ள இன்னொரு தடவை சாமி கும்பிட்டு வந்து டறேன்’ என அவர் சந்நிதியை நோக்கி நடந்து போனார்.

அறைக்குத் திரும்பிய பிறகும் அந்த மனிதரின் பேச்சும் ஆழ்ந்த வலியும் என்னைப் பற்றியபடியே இருந்தன. வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப் பாடத்தைக் கற்றுத் தருகிறது போலும்!
‘கொலைகாரர்கள், அடையாளம் காணப்பட்டவர்கள். அவர்களிடம் நாம் பயம் கொள்வதற்கு எதுவுமில்லை. ஆனால், சாதாரண மனிதன் எந்த நேரமும் ஒரு கொலையைச் செய்வதற்குச் சாத்தியம் இருக்கிறது. ஆகவே, அவன் மீது மட்டும் சற்று கவனமாக இருக்கவேண்டும்’ என்று ஸ்பானிய எழுத்தாளர் போர்ஹே தனது கதை ஒன்றில் குறிப்பிடுகிறார். அதுதான் வாழ்க்கை காட்டும் நிஜம்!

எல்லாக் குற்றமும் ஒரு நிகழ்வுதான். இந்த நிகழ்வின் பின்னால் அறியப் படாத காரணம் ஒன்றும் இருக்கிறது. அந்தக் காரணம் குற்றவாளிக்கு உண்மையானதாக இருக்கிறது அதனால் தான் குற்றம் சாத்திய மாகிறது. பொது நியாயங்களும், அறமும் குற்றத்தின் முன் காரணமற்ற தாகவே போய் விடுகின்றன.

ஆதி நாட்களில் திருட்டைத் தொழி லாகக் கொண்ட கிராமங்கள் எத்த னையோ இருந்திருக் கின்றன. சங்க இலக் கியத்தில், ஆறலைக் கள்வர்கள் என்ற இனம் பற்றிக் குறிப்புகள் காணப்படுகின்றன. இவர்களின் முக்கிய தொழில், வழிப்பறி செய்வது. வாழ்வதற்குத் தேவையான எந்தப் பின்புலமும் இல்லாத இந்தப் பாலை நில மக்கள், வணிகர்களிடம் வழிப்பறி செய்து வந் தார்கள் என்று பாலை இலக்கியம் விவரிக் கிறது.

விவசாயம் சார்ந்து நடைபெறும் திருட்டுத் தொழிலில் மிக முக்கியமானது ஆடு, மாடுகளைத் திருடுவது. ராமநாதபுர மாவட்டத்தில், ஒரு காலத்தில் இத்திருட்டு மிக முக்கிய பிரச்னையாக வளர்ந்திருந்தது. அதைக் கொஞ்சம் கொஞ்சமாக இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது காவல்துறை.
இப்படி களவுக்குப் பிரசித்தி பெற்ற ஊர்களில் காணப்படும் அன்றாட வாழ்வும் விசித்திரமானதாகும். வேல.ராமமூர்த்தியின் ‘இருளப்பசாமியும் 21 கிடாயும்’ என்ற சிறுகதை, இந்த உலகைப் பற்றி விவரிக்கும் நுட்பமான கதை.

தன்னுடைய கதைகள் ரத்தக் கறை படிந்த எழுத்து என்று கூறும் வேல.ராமமூர்த்தி, ராமநாதபுர மாவட்டத்தின் வெக்கையை தன் எழுத்தில் படியச் செய்தவர். மிகக் குறைவான சிறுகதைகளே எழுதியிருந்தபோதும் தனித்துவமாக அறியப்பட்டவர்.

இக்கதை ஆட்டுக்கிடை போடப்பட்டு இருக்கும் இடங்களுக்குச் சென்று நள்ளிரவில் ஆடுகளைத் திருடிவரும் கள்ளர்கள் சிலரின் வாழ்வை விவரிக்கிறது. கவுல்பட்டு என்ற ஊருக்கு இருளாண்டி தலைமையில் சிலர் திருட்டுக்குப் புறப்பட்டுப் போகிறார்கள். எல்லோரது கையிலும் வேல்கம்பு. பதுங்கிப் பதுங்கிப் போய் ஆடுகளைத் திருடி விட்டுக் கிளம்பும்போது கிடைக் காவலுக்கு இருந்த நாய் குரைத்துவிடுகிறது.

‘கள்ளன்... கள்ளன்’ என்று கிடைக்காரன் கத்துகிறான். கவுல் பட்டிக்காரர்கள் ஊரோடு சேர்ந்து துரத்துகிறார்கள். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பியோடி வருகிறார் கள் திருடர்கள். காவல் நாய் பாய்ந்து வந்து குதிகாலைக் கவ்வியபோதும் அதை அடித்துத் தூக்கிப்போட்டுவிட்டு, தப்பி வந்து சேர்கிறார்கள்.

மறுநாள், பெருநாழி போலீஸ் ஸ்டேஷனில் கவுல்பட்டிக்காரர்கள் ஊரோடு வந்து முறையிடுகிறார்கள். காவல்துறையினர் மிக ஆத்திரமாகி, திருட்டுக்குப் போனவர்கள், போகாதவர்கள் என்ற பாகுபாடின்றி சந்தேகப்பட்ட அத்தனை பேரையும் பிடித்து வந்து சூடு போடுகிறார்கள்.
இது நடந்து சில காலத்துக்கு திருட்டு மட்டுப்பட்டது. திருட்டுக்குத் தலைமை தாங்கிய இருளாண்டி தொடையில் சூடுபட்டுப் படுத்தே கிடந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, அந்த ஊரின் மூத்த குடும்பத்துப் பிள்ளையான சேது வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு, அவரைப் பார்க்கப் போகிறார் இருளாண்டி.

திருட்டுக்குப் பேர்போன ஊரிலிருந்து முதன்முறையாக சப்&இன்ஸ்பெக்டராக வேலைக்குத் தேர்வு ஆகியிருக்கிறான் சேது. அது அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் தருவதாக இருக்கிறது. வேலை கிடைத்துவிட்டால், இருளப்பசாமிக்கு கிடாவெட்டி பொங்கல் வைப்பதாக அம்மா நேர்ச்சை செய்திருப்பதாகவும், அதற்காக அண்ணன் கிடாகுட்டி வாங்கி வரப் போயிருப்பதாகவும் சேது சொல்கிறான்.

அதைக் கேட்டதும் அவர்களுக்கு ஆத்திரமாக வருகிறது. சேதுவின் நேர்த்திக்கடனுக்காக 21 கிடாய்களை ஏற்பாடு பண்ண வேண்டியது தங்கள் பொறுப்பு என்று சொல்கிறார்கள். சேது அதைத் தடுக்கிறான். ‘மாப்பிள்ளை தப்பா நினைக்காதீங்க. நாம வெட்டப்போறது கள்ள ஆடுகள் இல்லை. எல்லாம் நாம் வளர்த்த ஆடுகள்’ என்று இருளாண்டி உண்மையைச் சொல்கிறார். சேதுவுக்கு அவர்கள் மனதில் உள்ள ஆறாத ரணம் புரிகிறது.

பின்பு, அவர்கள் தயங்கி சேதுவிடம் இன்ஸ்பெக்டர் உடையை அணிந்துகொண்டு வந்து தங்களோடு ஒன்றாக உட்கார்ந்து சில நிமிஷம் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். சேது அவர்கள் ஆசையை நிறைவேற்றும்படியாக இன்ஸ்பெக்டர் உடுப்பை போட்டுக்கொண்டு வெளியே வருகிறான். ஆனால், அதுவரை திண்ணையில் உட்கார்ந்திருந்த அவர்கள் தங்களை அறியாமல் பதறி எழுந்து, தோளில் கிடந்த துண்டை கட்கத்தில் இடுக்கியபடி நின்றார்கள், என்பதோடு அக்கதை முடிகிறது.
கையில் ஆயுதம் இல்லாமல் தெய்வங்களே வாழ முடியாத நம் காலத்தில், மனிதர்கள் அவமதிப்பும் அறியாத வடுக்களும் ஏற்படாமல் வாழ முடியாதுதான் போலும்! பறப்பது சுதந்திரம் என்று பறவையைப் பார்த்து மகிழும் எவரும் பறத்தல் ஒரு இடையறாத போராட்டம் என்று புரிந்துகொண்டு இருக்கிறார்களா, என்ன?

நன்றி: கதாவிலாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

2 கருத்துகள்:

enjoy!.. anywhere.. anywhere on October 11, 2010 at 9:14 PM said...

Thunai Ezhuthu -Kathavilasam
Both are very interesting....




senthiladk@gmail.com

MARUTHU PANDIAN on February 4, 2012 at 2:28 PM said...

The last two lines have left a lump in my throat...

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்