Oct 13, 2010

”அங்கீகாரமா? அப்படீன்னா, என்ன?” - நகுலன்

 

திருவனந்தபுரத்தில் ரோட்டோரத்தில்nagulan5 இருக்கும் புதர் ஒன்றில் இறங்கிப் போனால் பி.கே.துரைசாமியார் வீடு. அந்த பகுதி மக்களுக்கு டி.கே.துரைசாமி, ஆங்கிலப் பேராசிரியர். தமிழ்  மக்களுக்கு கும்பகோணத்தைச் சேர்ந்த நகுலன் - எழுத்தாளர். நனவோடை உத்தியில் நாவல்கள், சிறுகதை, கவிதை என்று படைப்புலகில் வரிந்து கட்டி வாழ்ந்தவர். 80 வயதில் கோணங்கி கொடுத்த ”பாழி” நாவலை படித்துக் கொண்டிருக்கும் நகுலன், அம்பலம்இணைய இதழுக்காக அளித்த பிரத்யேக பேட்டியிலிருந்து……

திருவனந்தபுரத்தில் எவ்வளவு காலமாக வசித்து வருகிறீர்கள்?

என்னோட சிறு வயதில் கும்பகோணத்திலிருந்து திருவனந்தபுரம் வந்தேன். அப்பாவுக்கு திருவனந்தபுரம் சொந்த ஊர் என்பதால் அம்மா, அவருடைய கும்பகோணத்தை விட்டுக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. நான் சிறுவயதில் கும்பகோணத்தில் பயின்ற தமிழை மறக்காமல் என் எழுத்தில் கொண்டு வந்தேன். இன்றுவரை எனக்கு மலையாளம் எழுதத் தெரியாது. ஆங்கிலம் தனியாகக் கற்றுக் கொண்டேன். எனக்குத் தெரிந்த தமிழில்தான் எழுதினேன். இன்று எனக்கு 80 வயது.

என் 15 வயதில் அறிமுகமானது திருவனந்தபுரம். அதற்கப்புறம் எனக்கும், திருவனந்தபுரத்திற்கும் நெருக்கம் அதிகமாகி விட்டது. அதனால்தான் இந்த வீட்டில் அடைந்து கிடக்கிறேன்.

ஏன் வெளியில் போவதில்லையா?

நான் கொஞ்சம் உற்சாகப் பேர்வழி. இலேசாக தண்ணி போட்டவுடன், இலக்கியம் பேச யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு, சைக்கிளில் ஊர் சுற்றுவேன். கா.நா.சு. இங்கு வந்தபோதெல்லாம் நானும், அவரும் சேர்ந்து ஊர் சுற்றியிருக்கிறோம். இப்போது வயதாகிவிட்டது. ஆனால் அது உடம்புக்குத்தான் என்று தெரிகிறது. மனது எப்பவும் கும்பகோணத்தை விட்டு வந்த 15 வயதில்தான் இருக்கிறது. ஒரு நாள் வாக்கிங் போனபோது விழுந்து விட்டேன். ரோட்டில் விழுந்து கிடந்த என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. அன்றிலிருந்து வெளியில் போவதை நிறுத்திக் கொண்டேன்.

நீங்கள் 65 வருடமாக வாழ்ந்து வரும் இந்த பகுதி மக்கள் கண்டு கொள்ளவில்லையா?

இங்குள்ள மக்கள் இப்போது ரொம்பவும் வேகமாக இருக்கிறார்கள். ஊர்தான் கிராமம் போல இருக்கிறது. மக்கள் வேலையை நோக்கி பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நகுலனைத் தெரியாது. டி.கே.துரைசாமி என்ற ஆங்கிலப் பேராசிரியரைத்தான் தெரியும். நீங்கள் வரும்போது நகுலன் என்று கேட்டிருந்தால், விலாசம் தெரிந்திருக்காது. துரைசாமிதான் தெரியும். அதனால் என்னை இப்பகுதி மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தமிழ் நாட்டு (மக்களே) இலக்கியவாதிகளுக்கே நகுலன் இருக்¢கிறானா? என்று தெரியாது. படைப்பாளி இறக்கும்வரை இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மனதில் இருக்க முடியும்.

இப்போது தமிழ் இலக்கிய உலகிற்கு பொற்காலம் எனலாம். நிறைய படைப்புகள் வருகின்றன. உங்கள் படைப்புகள் எதுவும் மறுபதிப்பாக வரவில்லையே?

பலர் இதே கேள்வியைக் கேட்கிறார்கள். அதற்கு நான் காரணம் இல்லை. அந்நாளிலேயே என் எழுத்துக்களை நான் பணம் கொடுத்துத்தான் புத்தகமாக வெளியிட்டேன். ஆனாலும் என் படைப்புகளின் பதிப்புரிமை இப்போது என்னிடம் இல்லை. காவ்யா சண்முகசுந்தரம் என் நாவல்களை மறுபதிப்பு செய்வதற்காக கேட்டார். அவைகள் என்னிடம் இல்லாததனால், என் கவிதைகளை வெளியிட்டுள்ளார். முன்பு புத்தகம் வெளியிட்டவர்கள் சரியாக ராயல்டி கூடத் தருவதில்லை. எழுத்தாளன், எழுத்தை நம்பி வாழ்க்கையை நடத்துவது முடியாததாக இருக்கிறது.

உங்கள் எழுத்துக்கள் தமிழ் இலக்கியத்திற்குள் வரையறுக்க முடியாமல், - நனவோடை உத்தி என்ற புதியபாணியை எடுத்துக் கொண்டது ஏன்?

கதை இப்படியான பாணியை எடுத்துக் கொள்ளவில்லை. நான்தான் அப்படி எழுதினேன்.

இலக்கியத்திற்குள் வரையறுக்க முடியாமல் என்றால் என்ன…? யார் இலக்கியத்தை வரையறுப்பது?

எனக்கு இரவில் தூக்கம் வருவது குறைவு. அப்போதெல்லாம் நான் Valium மாத்திரை பாவிப்பேன். அப்போது எனக்கு வித்தியாசமான கதைகளும், எதார்த்தமும் கலந்த உணர்வு நிலைப்பாடுகள் வெளிப்படும். ஆனாலும் அதிலிருந்து நான் அறிவை உணரக் கூடிய உணர்வுகளை மட்டும் எடுத்துக் கொள்வேன். உணர்ச்சிகளும், சென்டிமெண்டுகளும் நிறைந்த தமிழ் நாவல் இலக்கியம் எனக்குத் தேவையில்லை. நான் படித்த ஆங்கில நாவல்கள் எனக்கு அதைச் சொல்லவில்லை.

நீங்கள் ஆங்கில நாவல் வழியாக தமிழ் சமூகத்தைப் பார்ப்பதாக சொல்லலாமா?

என்னங்க ஆங்கில சமூகம்? தமிழ் சமூகம்? எதில் நல்லது இருந்தாலும் எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே! நான் கும்பகோணத்துக்காரன். எனக்குத் தெரியாத சாஸ்திரம், சம்பிரதாயம் இல்லை. ஆனால் எது நமக்குத் தேவை என்பதை நாம் தேர்ந்தெடுக்க உரிமை கொடுக்க வேண்டும். அத்தகைய உரிமை பெற்ற சமூகம்தான் வளரும்.

இப்போது சமபந்தி போஜனம் என்கிறார்கள். நான் பிராமணன். என்னால் மாமிசம் சாப்பிடுபவன் பக்கத்தில் இருந்து சாப்பிட முடியாது. இது வெறுப்பினால் வந்தது இல்லை. உடல் ரீதியாகவே என்னால் முடியாதது. அதே போல் நமக்கு எது தேவை என்பதை நாமே தேர்வு செய்ய வேண்டும். சமூகம் நமக்கு என்ன செய்தது? திருவனந்தபுரத்தில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். என் காலத்திற்கு பின்னால் இந்த சமூகம் என்ன செய்யப் போகிறது?

உங்கள் நாவல்களில் ‘சுசீலா’ என்ற பெயர் தொடர்ந்து வருகிறதே?

‘தென்பாண்டிச்சிங்கம்’ என்றதும் யார் ஞாபகம் வருகிறது உங்களுக்கு? (என்னைத் திரும்பக் கேட்டார்) ”கருணாநிதி…?” என்றதும், ”அதைப்போலத்தான், என் நாவல்களில் ‘சுசீலா’. தென்பாண்டிச் சிங்கம் நாவல் கருணாநிதியால் எழுதப்பட்டது என்று எனக்கு எப்பவோ பதிவான விஷயம். இப்போதும் மனதில் இருக்கிறது. பேசும்போது வெளிவருகிறது. ‘சுசீலா’ என் வாழ்வில் எப்போதோ வந்துவிட்டுப் போன பெண்ணாக இருக்கலாம். அசோகமித்திரன், ஆ.மாதவன் கூட என் சுசீலாவைப் பற்றி அதிகம் பேசி இருக்கிறார்கள். இந்த 80 வயதில் நீங்களும் சுசீலாவைப் பற்றி கேட்கிறீர்கள். (இதைச் சொன்னபிறகு நகுலன் பேசாமல், அவர் எழுத்துப் போலவே ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி விட்டார்.)

திரும்பவும் ஆரம்பிக்கும்போது, ‘நீங்கள் Madras (சென்னை)- ல் இருந்து வந்திருக்கிற பத்திரிகையாளர். எந்தப் பத்திரிகைக்கு பேட்டி?’ என்று தொடங்கினார். ‘ambalam.com’ என்ற இணைய இதழுக்காக!’ என்று திரும்பவும் அவரை ரீ-சார்ஜ் செய்து கொண்டு வரவேண்டிய நிலை வந்தது.

உங்களது கவிதைகளை அவை வெளிவந்த நேரத்தில் ஏற்றுக் கொண்டார்களா?

ஒரு எழுத்தாளன் முதலில் பெயர் எடுத்துவிட்டால், தொடர்ந்து அவன் எழுதுவதெல்லாம் எழுத்துதான். நம்ம ஊரில் கதை எழுதுபவன் கவிதை எழுத முடியாது. கவிதை எழுதுபவன் கதை எழுத முடியாது. நான் இரண்டிலும் முயற்சி செய்து பார்த்தேன். விமர்சனம் வந்தாலும்கூட இரண்டிலும் நான் செயல்படுவதை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். தாஸ்தோவஸ்கி புத்தகம் படித்து விட்டுக் கூட கவிதை எழுதி இருக்கிறேன். ‘கோட் ஸ்டாண்ட் கவிதைகள்’ எனக்குப் பிடித்தமான கவிதைத் தொகுதி. என் கவிதை, கதைகளை மலையாளத்தில் ஒரு மாணவன் ஆராய்ச்சி செய்துள்ளார். என் கவிதைகள் பற்றி எனக்கே புரிய வைத்தது அவன்¢தான். எல்லாவற்றையும் இப்போது காவ்யா சண்முகசுந்தரம் தொகுப்பாகக் கொண்டு வந்துள்ளார்.

உங்கள் தங்கை திரிசடை நல்ல கவிஞராக அறியப்பட்டவர்தானே?

என் தங்கை திரிசடை இறந்து போய் விட்டார். இன்னொரு சகோதரன் பெங்களூரில் இருக்கிறார். நான் அம்மாவின் பிள்ளை… லா.சா.ரா. கதைகளில் வருவது போல், எனக்கு தாய்தான் தெய்வம், அம்மா, நட்பு எல்லாமாக இருந்தாள். நான் அப்போது நிறையப் படிப்பேன். அவைகளை திரிசடையும் படிப்பாள். அந்த ஆர்வத்தில் M.A. ஆங்கில இலக்கியம் படித்தாள். அவள் எழுதி உருவாக்கிய ”பனியால் பட்ட பத்து மரங்கள்” தொகுப்பை பார்த்தவுடன் வியந்து போய் விட்டேன். ஆச்சரியம். திரிசடை எழுதி உதிரியாக இருக்கும் கவிதைகளை அவளின் கணவன் கலெக்ட் பண்ணினார். அப்புறம் எனக்கு விவரம் எதுவும் தெரியாது.

இப்போது வெளிவரும் இலக்கியங்களைப் படிப்பதுண்டா?

என்ன அப்படி கேட்டு விட்டீர்கள். நான் தொடர்ந்த வாசகன். (அப்படிச் சொல்லி அவர் படுத்திருக்கும் கட்டிலுக்கடியில் காட்டினார். ஏராளமான புத்தகங்கள்) கோணங்கி இங்கு வந்திருந்தபோது பாழி நாவல் கொடுத்திருந்தார். முதல் அத்தியாயத்துடன் அப்படியே நிற்கிறது. நீங்கள் பாழி படித்திருக்கிறீர்களா… அதை எப்படிப் படிப்பதென்று சொல்லுங்கள் என்று கேட்டார். நாஞ்சில் நாடன் இங்கு வருவார். இப்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறார். அவரின் நாவல்கள் நன்றாக இருக்கிறது. ராமகிருஷ்ணன், ஜெயமோகன் இருவரையும் எனக்குத் தெரியும். இதில் ராமகிருஷ்ணன் விஷயமுள்ளவராகத் தெரிகிறார். அவரின் உபபாண்டவம் படித்தேன்.

”குரு«க்ஷத்திரம்” தொகுப்பு கொண்டு வருவதற்கு முன்நின்றவர்களில் நீங்களும் ஒருவர். அதைப்பற்றி?

அந்தத் தொகுப்பு வந்தபோது பலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அந்தத் தொகுப்பை படித்தபின் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டார்கள். தாமு சிவராம், ஹெப்சிபா ஜேசுதாசன், சார்வாகன், சுஜாதா மேலும் மலையாள எழுத்தாளர்கள் பி.கே.பாலகிருஷ்ணன், ஐயப்பபணிக்கர், விஜயன்கரோடு என்று திருவனந்தபுரத்து இலக்கியவாதிகள் ரசித்த இலக்கியங்களை, எழுத்துக்களை தொகுத்து வெளியிட்டோம். அதை ரசிகனாக இருந்துதான் வெளியிட்டோம். இப்போது வெளிவரும் தொகுப்புகளுக்கெல்லாம் அதை முன்னோடி எனச் சொல்லலாம்.

உங்களுக்கும், க.நா.சு.விற்கும் இருந்த நட்பைப்பற்றி சொல்ல முடியுமா?

க.நா.சு. என்னைவிட சீனியர். ஆனால் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து ‘ஜாலி’யாய் மனம் விட்டு பேசிப் பழகுவோம். கா.நா.சு. நல்ல சாப்பாடு, காப்பி இவையிரண்டிலும் அற்புதமாக சுவை பார்ப்பவர். அதனால் நாங்கள் நல்ல இலக்கியம், நல்ல சாப்பாடு இவையிரண்டிலும் ஆர்வமாக இருப்போம். கா.நா.சு.வின் பாத்திரம் போல் என் நாவலில் நான் படைத்ததுண்டு. அவர் ‘அனுபவத்திலிருந்து தொடங்கப்படுவதே தரமான எழுத்து’ என்பார். நான் ‘அனுபவமும், கற்பனையும் கலைப்படைப்புக்கு முக்கியம்’ என்பேன். அதைத்தான் நனவோடை உத்தியாக நான் கொடுப்பது. மௌனி இரங்கல் கூட்டத்தில் க.நா.சு.விற்கும் எனக்கும் சின்ன மனத்தாங்கல் ஏற்பட்டது. அது பின்னர் சரியாகி விட்டது.

விருதுகளைப் பற்றி உங்கள் கருத்து?

தமிழ்நாட்டில் விருதுகள் படும் பாட்டை நினைத்தால் கவலையளிக்கிறது. ஒரு எழுத்தாளர் அவருக்கு பரிசு கிடைக்கவில்லை என்பதனால், அவர்தான் பரிசுக்குரியவர் என்று பத்திரிகையில் எழுதுகிறார். ஏற்கெனவே பரிசு வாங்கியவர்களெல்லாம் - அவர்களுக்கு தெரிந்தவர்கள் தேர்வுக் குழுவில் இருந்ததினால்தான் வாங்கினார்கள். அல்லது பணம் கொடுத்து வாங்கினார்கள்.

இந்த வருடம் எழுத்து பத்திரிகை நடத்திய சி.சு.செல்லப்பாவிற்கு கிடைத்து இருக்கிறது. இதில் யாருக்கும் விமர்சனம் இருக்க முடியாது. என் எழுத்தை யாரும் வெளியிடாதபோது என் எழுத்தை அங்கீகரித்து ‘எழுத்து’ பத்திரிகையில் வெளியிட்டவர் சி.சு.செல்லப்பா. அவர் பத்திரிகை தமிழ் இலக்கியத்திற்கு பெரிய ஊன்றுகோலாக இருந்தது.

நகுலன்’ - ‘எழுத்து’, ‘இலக்கியவட்டம்’ போன்ற பத்திரிகையில் எழுதியிருக்கிறார். ஆனந்தவிகடன், குமுதம் போன்ற வணிகப் பத்திரிகைகளில் எழுதவில்லையா?

எனக்கென்று எந்த வட்டமும் இல்லை. கதையை எந்தப் பத்திரிகை பிரசுரம் பண்ணினாலும் அனுப்பி இருப்பேன். ஆனால் ஆனந்தவிகடன் என் கதையைப் போடவே இல்லை. சி.சு.செல்லப்பா எழுத்தில் பிரசுரம் பண்ணினார். க.நா.சு.வால் இலக்கியவட்டத்தில் எழுதினேன். எழுத்து பத்திரிகைகளைப் பொறுத்தவரையில் எல்லாம் சி.சு.செல்லப்பாதான். எதைப் போடுவது எப்படி எழுதுவது என்பதையெல்லாம் எங்களுக்கு சொல்லி விடுவார். க.நா.சு. கொஞ்சம் விட்டேத்தியாக இருப்பார். கதையைக் கொடுத்தால் வெளியிடுவார்.

தமிழ் இலக்கியத்தில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததாக நினைக்கிறீர்களா?

எனக்கு தமிழ் இலக்கிய உலகில் நியாயமான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இன்னொன்று அங்கீகாரம் என்பது என்ன.. நான் எழுதுகிறேன் வாசகர்கள் படிக்கிறார்கள். படித்தல் நல்லது இல்லையென்றால் நகுலன் என்ன செய்வது? துரைசாமிக்கு வரும் பென்சன் பணத்தை வைத்து வாழ்ந்து வருகிறேன். போனவர்களை வழியனுப்பி விட்டு போகப் போவதற்கு நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?

எதையும் நான் திட்டம் போட்டுச் செய்வதில்லை. அம்மாவுடன் இருந்தவரைக்கும் அம்மாதான் எனக்கு வேண்டி இருந்தது. அப்படி இருந்தும் ஒரு பொண்ணைப் போய்ப் பார்த்தேன். என் வாத்தியார் வேலையும், எழுத்தும் அவளுக்கு சம்பாதித்துக் கொட்டும் வழிகள் இல்லை என்று தெரிந்தபடியால் மறுத்து விட்டாள். கல்யாணத்துக்கு பேசி அத்துடனே முடிந்து போன பெண்கள் நிறைய இருந்தார்கள். பிறகு ‘கல்யாணம் வேண்டாம்’ என்று ஒதுங்கிக் கொண்டேன். 80 வயதிலும் நான் ‘பேச்சலர்’தான்.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

4 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ on October 13, 2010 at 8:34 AM said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

நகுலன் அவர்களின் வீடு புகைப்படம் இங்கே.

நகுலன் சொன்னது உண்மையே. அந்த பகுதியில் துரைசாமி சார் வீடு எங்கே என்று கேட்டால் தான் தகவல் அறிய முடிகிறது.

http://yahooramji.blogspot.com/2010/09/tiruvanandhapuram.html

Anonymous said...

In your blog when we move the mouse arrow(cursor) over a link an underline will appear below that link. apart from this underline effect you can also make one more change. You can change color of the link when mouse arrow mouse over it. go to edit html in layout. dont checkmark expand widget templates.

find this

a:hover {
color:$titlecolor;
text-decoration:underline;
}

In the above code change $titlecolor into css number of any color u like. for finding css number of any color go to layout.click template designer. click advanced. click any item associated with color. click any color. notice the css number appear in the box near to that color. use that css number in your template.

Anonymous said...

நானும் இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் திருவ‌ன‌ந்த‌புர‌த்தில் வாழ்ந்திருந்தேன். அந்த‌ ஊரை விட்டு வேறு ப‌ல‌ ஊர்க‌ளுக்கு சென்றுவிட்டாலும் ஏனோ என்னை நிறைவாய் வாழ‌ வைத்த‌ ஊர் என்று ந‌குல‌னைப் போல் என‌க்கும் தோன்றுகிற‌து.

Unknown on September 11, 2019 at 5:05 PM said...

நல்ல உரையாடல் என் போன்ற துளிற்கும் எழுத்தாளர்களுக்கு நல்ல படிப்பினையான பதில்கள்

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்