Sep 27, 2008

மௌனி குறித்த உரையாடல்கள்

வெளி ரெங்கராஜன்

அவ்வப்போதைய இலக்கிய வரையறைகளுக்கேற்றபடி மௌனியைப் பற்றி பலவிதமான அபிப்பிராயங்கள் imageஎழுந்திருக்கின்றன. ஆனால், மௌனி குறித்த புரிதல் என்பது சரியானபடி நிகழ்ந்திருக்கிறதா என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியாது. அவரை அகஉலகம் சார்ந்தவர், சமூக அக்கறை அற்றவர் என்ற பிரிவுகளிலேயே வைத்துப் பார்த்து பெரும்பாலும் விவாதங்கள் தோன்றியிருக்கின்றன. இந்நிலையில் தலித் இதழ் ஒரு மறுவாசிப்பில் மௌனி உருவாக்கும் இலக்கியச் சலனங்கள் குறித்த ஒரு உரையாடலை முன்வைத்தபோது (பாண்டிச்சேரி செப்டம்பர் 1,2) மௌனியின் பொருத்தப்பாடு மற்றும் மௌனியின் பிம்பம் தூக்கி நிறுத்தப்படுவதின் இலக்கிய நிர்ப்பந்தம் பற்றிய அ.ராமசாமியின் கேள்விகளை அமைப்பாளர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. மௌனியின் இலக்கிய சாதனைகளுடன் ஒப்பிடும்போது அவர் குறைந்த அளவுதான் பேசப்பட்டார் என்பதுவே உண்மை நிலையாய் இருக்க, மௌனி போன்ற ஒரு முந்தைய படைப்பாளியைத் தலித் இதழ் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது என்பது திறந்த மனதுடன் அணுகப்பட வேண்டியது என்ற பா. ரவிக்குமாரின் விளக்கம் சற்று ஆறுதலாகவும், ஒரு முன்நோக்கிய நகர்தலுமாகவே பட்டது.

ஆனால், மௌனிக்குத் தமிழின் சக படைப்பாளிகள் குறித்த ஒரு முழுமையானப் பார்வை இல்லை என்றும், அவர் சொந்த வாழ்வில் நீஷீஸீsமீக்ஷீஸ்ணீtவீஸ்மீ ஆகவும் க்ஷீமீணீநீtவீஷீஸீணீக்ஷீஹ் ஆகவும் இருந்தாலும் அவரது எழுத்துக்கள் முற்போக்கு என்று சொல்லிக் கொள்பவர்களுடையதைவிட உயர்வாக இருந்ததை நாம் யோசிக்கவேண்டும் என்ற சுந்தர ராமசாமியின் கருத்துக்கள் மௌனியின் இலக்கியம் பற்றிய பார்வைக்கு எப்படி வலு சேர்க்கும் என்று தெரியவில்லை. ஏனென்றால் மௌனியின் `வைதீகத்தனம்’ என்பது எந்த விதத்திலும் அவருடைய கலையில் குறுக்கிடாத போது இதுபோன்ற அவதானிப்புகள் வெறும் தகவல்களாகவும், தனிப்பட்ட பார்வையுமாகவே தங்கிவிடக்கூடிய சாத்தியங்கள் உண்டு. அதே போல் மௌனியின் தத்துவப் பார்வை என்பது ஸ்போட்டா (ஒரு வகையான தற்செயல்) மற்றும் அபோஹா (விலக்குதல்) ஆகிய சமஸ்கிருத தத்துவ மரபுகளின் சாயல் கொண்டது என்ற ஞானக்கூத்தனின் விளக்கத்தில், ஒரு வலிந்து பொருள் கொள்ளும் தொனியே தென்பட்டது. விலக்குதல் அல்லது எதிர்நிலைகளின் சாத்தியங்களை குறுக்குதல் என்பதில் மௌனிக்கு மிகவும் பரிச்சயமான கணித தத்துவங்களின் சாயலும் உண்டு. `பிரக்ஞை வெளியில்’ கதையில் கன்னிப்பெண் சுசிலா எதிர்நிலையான மனைவி சுசீலாவின் ஸ்தானத்திலிருந்து இடைவெளியைக் குறைத்துக்கொண்டே வருகிறாள். ஆனால், மௌனியின் அசாதாரணப் பாத்திரங்கள் விதிகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக இல்லை.

அதேபோல் நம்முடைய தமிழ்/ஆங்கில பேராசிரியர்கள் மௌனியின் வாக்கிய அமைப்பு பிழைகள் கொண்டது என்றும் (தலைப்பு மற்றும் சில விஷயங்களில்) திருத்தப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த பிரதிகள் மௌனியின் உண்மையான பிரதிகள் தானா என்ற அடிப்படையான சில சந்தேகங்களையும் முன் வைத்தனர். கதைகளின் தலைப்புகள் மௌனியுடையவை அல்ல என்பதை ஏற்பதில் சிக்கல் இல்லை. ஆனால், மௌனி வாழ்ந்த காலத்திலேயே இரண்டு முறை பிரசுரம் கண்ட இப்பிரதிகளை மௌனியே ஏற்றுக் கொண்டிருப்பதிலிருந்து அதிக முரண்பாடுகளுக்கு வாய்ப்பில்லை என்றுதான் கொள்ளமுடியும். மேலும் ஒவ்வொரு சொல்லையும் அதன் சப்த அமைப்புடன் தேர்ந்தெடுத்துப் பிரயோகித்த மௌனி, சில இடங்களில் இலக்கணத்தைப் பின்னுக்குத் தள்ளியதை இலக்கிய நோக்கம் கருதித்தான் என்று கொள்ள இடமுண்டு (உதாரணம் _ வெற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?) அதேபோல் கட்டுடைத்தல் செய்வதாகச் சொல்லி மௌனியின் `மனக்கோட்டை’ கதையில் திராவிட இயக்கங்களுக்கு எதிரான மௌனியின் மனப்போக்கு வெளிப்படுவதாகவும் (அதற்கு ஆதாரமாகச் சுட்டிக் காட்டப்பட்ட வரிகள் இவை _ ``அந்த அரசன் அவன் தகப்பன் அவன் _ அவன் மகன் இவன் எனக்கொண்டு, கடல் கடந்து வாணிபம் செய்தது... இமயத்தை வென்றது. பேரவை கூட்டியது, முத்தமிழ் பரிமாறியது. அது இது எல்லாமும், மனப் பிராந்தியில் சரித்திரமாகி, கற்பனைகளுடன், உண்மையும் மறந்துவிட்டது, மறைந்தும் விட்டது’’) அண்ணன் பாத்திரத்தை தொடர்ந்த தங்கையின் மரணம் ஒரு உறவுப் பிறழ்ச்சியின் (வீஸீநீவீst ) வெளிப்பாடு என்றும் பேராசிரியர் பூர்ண சந்திரன் அவதானிப்பு செய்தது ஒரு கொடூரமான வாசிப்பாக இருந்தது.

மௌனியின் எந்தக் கதையும் வீட்டுக்கு உள்ளே நிகழ்வதில்லை. வீட்டுக்கு வெளியேதான் எல்லாம் நடக்கிறது. வீட்டுக்கு வெளிய இருப்பது சமூகம் தானே என்று ஜீ. முருகன் கூறியது. மௌனி சமூக உணர்வு அற்றவர், தலித்தின் அக உலகத்திற்கும் மௌனிக்கும் தொடர்பில்லை என்ற ராஜேந்திர சோழன் மற்றும் ராஜ்கௌதமனின் குற்றச்சாட்டுகளுக்கான பதில் போல் இருந்தது. ஒரு சமூகத்தின் பாலியல் சிக்கல்களுக்குள் உழன்ற ஒரு மனிதன் சமூக உணர்வுள்ளவன் இல்லையா? எது சமூக உணர்வு என்பதில் இடதுசாரிகள் தங்கள் சூத்திரங்களிலிருந்து விடுபடுவது நல்லது. மரணம் குறித்த அதீத உணர்வுகள் மௌனியின் கதைப்போக்குகளைப் பாதித்ததாக பாவண்ணன் வாசிப்பு செய்தார். மௌனி குறித்த எம்.டி. முத்துக்குமாரசாமியின் விமர்சனத்தை ஒட்டி மனமும், உடலும் இணைந்து செயல்படாமல் மௌனியின் கதைகளில் உடல் பிரக்ஞை அற்று மனம் மட்டும் இயங்குவது தான். மௌனியின் வாசிப்புதன்மையை பாதித்திருப்பதாக பா.வெங்கடேசன் கருத்து தெரிவித்தார். எம். கண்ணன் மௌனியின் மறுவாசிப்புகளின் போதாமை பற்றியும், தலித்துகளின் அக உலகம் குறுக்கப்படுவது ஷிtமீக்ஷீஹ்ஷீtஹ்ஜீமீ படைப்புகளையே உருவாக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

கடைசியாக ஒரு தலித் மாணவர் தான் ஒரு பெண்ணுடனான உறவில் சிக்கல் கொண்டிருப்பதாகவும் இந்த மன நிலையில் மௌனியின் வார்த்தைகள் தீவிரம் கொண்டு தன்னைத் தாக்குவதாகவும் கூறினார். இந்த இடத்திலிருந்து மௌனி பற்றிய விவாதத்தைத் துவக்கி இருக்கலாம் என்று தோன்றியது.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்