Sep 28, 2008

காவல்-ந. பிச்சமூர்த்தி

ந.பிச்சமூர்த்தி

சேவு செட்டியார் திடீரென்று இறந்துபோயிருக்கக் கூடாது. ஆனால், ஓரணா காசு கொடுத்து வாங்குகிற பலூனே பட்டென்று உடையும்பொழுது, காசு கொடுத்து வாங்காத பலூன் உடையக்கூடாதென்று யாரால் கட்டளையிட முடியும்? சேவு செட்டி இருந்தபொழுது செங்கமலத்தின் மகிழ்ச்சி ஒன்றும் பொங்கி வழிந்துகொண்டு இருக்கவில்லை. கண்ணில் விழுந்த தூசியைப்போல் சதா வாழ்வு உறுத்திக்-கொண்டே இருந்தது. செங்கமலம் கொஞ்சம் அசடு. அவன் லேசான போக்கிரி. ஊர் வம்பை .ஏதாவது கிளறிவிடாமல் நாளை விடமாட்டான். அவனைக் கண்டால், ஊரில் பயம் தான். அவன் போனதிலே செங்கமலத்திற்கு வேதனை குறைந்ததென்றாலும், வாழ்வு பெரிய மலைபோல் எழுந்தது. கண்ணில் விழுந்த மணலை எடுத்துவிடலாம். மலையை எப்படித் தாண்டுவது? புருஷன் கடன் வைத்துவிட்டுப் போகவில்லை. ஆனால், ஒன்பது வயதுள்ள நரியனை வைத்துவிட்டுப் போய்விட்டான். பிழைப்புக்கு ஒன்றும் வைக்கவில்லை. ஒரு ஓடு போட்ட சின்ன வீட்டை வைத்திருந்தான். பெரிய வீடாக இருந்தாலாவது சோறு போடும். அதுவுமில்லை பின்-? அதனால் தான் மலையை எப்படித் தாண்டுவதன்று செங்கமலம் புரண்டு புரண்டு அழுதுகொண்டிருந்தான்.

  செத்த பதினேழாவது நாள் நரியன் அழுகையை வலுக்கட்டாயமாக ஓய வைத்துவிட்டான். திடுதிப்பென்று மற்றொரு செக்கானை வீட்டுக்-கழைத்துக் கொண்டு வந்து, செக்கை விற்று விடலாமா என்று தாயாரை நரியன் கேட்டான். தகப்பனைப்போல் வெகு தீர்மானமாகக் காரியம் செய்திருந்ததைப் பார்க்கச் செங்கமலத்திற்கு வியப்பாக இருந்தது. அதோடு ஒரு ஆறுதல்! எந்த யோசனையும் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த செங்கமலத்திற்கு நாலு பணம் கிடைக்கச் சிறு பையன் தெளிவுடன் வழி செய்துவிட்டானே என்ற மகிழ்ச்சி! சிறு பையனும் பெண்பிள்ளையும் செக்கு வைத்துக்கொண்டு தொழில் நடத்தி வெற்றி கண்டுவிட முடியுமா? மூன்று நாளைக்குள் செக்கையும் மாட்டையும் செங்கமலம் விற்றுவிட்டாள்.

  கைக்குப் பணம் வந்த பிறகு, அவளுக்கு ஒரு புதுக் குழப்பம் வந்துவிட்டது. இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு வாழ்நாளை முழுதும் ஓட்டிவிட முடியுமா? பணம் தீர்ந்துபோய்விட்டால்? அரளி வேரும் நல்லெண்ணெயுமா? இல்லை என்றால், நரியனையா யோசனை கேட்பது? இருப்பதை இல்லாமல் செய்வதற்கு வழி சொல்லிவிட்டான்; அவளும் ஏமாந்துவிட்டாள்! இல்லாமல் இருப்பதைக் கொண்டு வருவதற்கு வழி சொல்ல அவனுக்கு என்னத் தெரியும்? கையில் பணம் இருந்தவரையில் யோசித்துக்கொண்டே இருந்தாள்.

  சேவு செட்டி செத்த ஏழாவது மாதம் நரியன் ஒரு வேலையைத் தேடிக்கொண்டு வந்தான். தனக்கல்ல, தன் தாயாருக்கு. உணவும் கொடுத்து ஒன்பது ரூபாய் பணமும் கொடுப்பதாக ஒரு கிளப்புக்காரர் சொல்லுகிறார் என்று தாயாரிடம் சொன்னான். வேண்டும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய நிலையில் செங்கமலம் இல்லாததால் சரி என்று சொல்லிவிட்டாள். அப்பனைப்போல் மகனும் இருப்பான் போலிருக்கிறதே என்று நினைத்துக்-கொண்டாள்.

  மறுநாள் முதல் கிளப்பு வேலைக்குப் போகத் தலைப்பட்டாள். காலையில் ஐந்தரை மணிக்கு எழுந்திருந்தாள். நரியன் தூங்கிக்கொண்டிருக்கிறானே, எப்படி எழுப்புவது என்று மயங்கிக்கொண்டிருக்கும் பொழுதே, அவனும் எழுந்து உட்கார்ந்தான். ‘போகலாமா வேலைக்கு?’ என்று நரியன் கேட்டதும், அவளுக்கே வியப்புத் தாங்கவில்லை. நரியன் பிழைத்து விடுவான் என்ற எண்ணம் அவளுக்கு எழுந்தது.

  இருவருமாகக் கிளப்புக்குப் போய்ச் சேர்ந்தார்கள். தண்ணீர் கட்டுவது, பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவுவது, எச்சில் இலைகளைத் தொட்டியில் போடுவது, கூட்டுவது _ இவைதான் அவளுடைய முக்கிய வேலை. ரொம்பப் பழக்கப்பட்டவள்போலச் செங்கமலம் வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள்.

  காலை எட்டு மணி இருக்கும். கொல்லைக் கிணற்றண்டை அவள் ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தாள். கிளப்புப் பையன் ஒருவன் அவளுக்கு நாலு இட்லியும் காப்பியும் கொண்டுவந்து கொடுத்தான்.

  “இது எனக்கும் அவனுக்குமா?’’ என்றாள் செங்கமலம்.

  ``தெரியாது’’ என்று சொல்லிவிட்டுப் பையன் உள்ளே போய் விட்டான்.

  ``இது உனக்குத்தான். உன்னைத்தானே வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? எனக்கெப்படிக் கொடுப்பார்கள்?’’ என்றான் நரியன். அவன் செய்கையிலும் பேச்சிலும் ஒரு உறுதி இருந்தது. அவள் மனத்தில் தைத்துக்கொண்டே இருந்தது.

  பதினொரு மணிக்குமேல் பெரிய பாத்திரங்களைத் தேய்க்கும் வேலை, மளிகை சாமான்களைப் புடைக்கும் வேலை, கொழிக்கும் வேலை, பொறுக்கும் வேலை, அரைக்கும் வேலை _ இப்படி ஏதேதோ வேலை செய்து, ஓய்ந்தபொழுது ஒரு மணி ஆகிவிட்டது. ஒன்றரை மணிக்குப் பழைய பையன் சாப்பாடு போட வந்தான். செங்கமலம் இரண்டு இலையை எடுத்துப் போட்டுக்கொண்டாள். பையன் செங்கமலத்தை விறைக்குப் பார்த்தான். ``போடுவதை இரண்டு இலையிலும் நிரவிப் போட்டுவிட்டுப் போய்யா’’ என்று சொன்னதும், அவன் ஊமைக் கோட்டனைப்போல விழித்தபடியே காரியத்தை நிறைவேற்றிவிட்டான்.

  சாப்பாட்டுக்குப் பிறகு கொஞ்ச நேரம் ஓய்வு. வீட்டுக்கப் போய்விட்டுத் திரும்புவோம் என்று அவளுக்குத் தோன்றவில்லை. கவனிக்கவேண்டிய காரியம் எதுவாவது இருந்தால்தானே வீட்டுக்குப் போகக் கால் இழுக்கும்?

  இலைக்கட்டு, கறிகாய் அறையில் உடம்பை நீட்டிக் கொண்டு படுத்தாள். நரியன் பக்கத்தில் படுத்துப் பார்த்தான். தூக்கம் வரவில்லை. எழுந்து காவல் நாயைப்போல் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு சின்ன உருளைக்கிழங்கைக் கோலியாக்கி, விளையாடிக்கொண்டிருந்தான்.

  பிறகு மூணு மணியிலிருந்து எட்டு மணி வரையில் வேலை. அதற்குமேல் மத்தியானத்தைப்போல் சாப்பிட்டு விட்டு ஒன்பது மணிக்கு வீடு திரும்பினார்கள்.

  அன்று முதல் இதுவேதான் மாமூலாக இருந்தது. வேலை முறையிலே முக்கிய மாற்றம் எதுவும் இல்லை.

  ஒன்பதாவது நாள் காலையில் கிணற்றங்கரையில் செங்கமலம் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள். நரியன் நாரத்தை மரத்திலிருந்து தொங்கிய மஞ்சள் சிட்டுக் கூட்டண்டை ஏதோ நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.

  குனிந்த தலை நிமிராமல் அவன் தாயார் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்ததால், முதலாளி கொல்லைப் பக்கம் வந்து வெந்நீர் அறை ஒரமாக நின்றதைக் கவனிக்கவில்லை. பாம்பு இருந்தால் மாட்டுக்கு வாசனை தெரியும் என்பார்களே, அதைப்போல நரியன்மட்டும் இதைக் கவனித்துவிட்டான். அதற்குப் பிறகு மஞ்சள் சிட்டுக் கூட்டண்டை இருந்தபடியே கவனத்தை எல்லாம் முதலாளியின்மேல் திருப்பினான். முதலாளி அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்தாரே ஒழிய வேறு எதுவும் செய்யவில்லை. சிறிது நேரம் கழித்து அவர் உள்ளே போய்விட்டார். தன்னையும் அறியாமல் நரியன் மனது உஷாரடைந்துவிட்டது. ஆனாலும், தன் தாயாரிடம் இதைப்பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை.

  மறுநாளும் தாயார் வழக்கம்போலப் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள். அதே மஞ்சள் சிட்டுக் குருவி கூட்டண்டை நரியன் நின்றுகொண்டிருந்தபோதிலும் அவன் பார்வை எல்லாம் கொல்லைப் புறத்து வாசலிலேயே இருந்தது. எதையோ தேடுபவர்போல முதலாளி கொல்லைப்புறம் வந்தார். முதலாளி வந்ததைச் செங்கமலம் இன்று பார்த்துவிட்டாள். விருட்டென்று ஆடை கலைய எழுந்திருந்தாள். முதலாளி ஒன்றையும் கவனிக்காதவர்போல் ஏதோ பேசத் தொடங்கினார். நரியன் இருந்த இடத்தைவிட்டுத் தாயாருக்கருகில் வந்து நின்று கொண்டான். ``சாப்பாடு எல்லாம் வேளைக்கு வருதா?’’ என்றார்.

  செங்கமலம் வாய் திறந்து பேசாமல் கிடைத்தது என்பதற்கு அறிகுறியாகத் தலையை ஆட்டினாள். ``வேலை எப்படி இருக்கிறது? செக்காத்திக்கு இந்தமாதிரி வேலை பழக்க மிருக்காதே?’’

  ``வயிறு இருக்கல்ல. எதுவும் பழகிப்போகும்’’ என்றாள். மெதுவாக.

  ``வாஸ்தவம்தான். வேறென்ன _இந்த வேலை செய்கிற பயல்கள்_’’ என்று என்னவோ சொல்ல வந்தார் முதலாளி.

  அதற்குள் செங்கமலம் குறுக்கிட்டுவிட்டாள்.

  ``கவுடு சூதில்லாமெ, திருட்டு புரட்டில்லாமே வேலை செய்யுறாங்க. சும்மா சொல்லலாமா?’’ என்றாள்.

  ``மறந்து போய்விட்டேன். இந்த நரியனுக்கு எதாவது கொடுக்கிறாங்களா?’’

  ``எங்க ஆயாவுக்குக் கொடுக்கிறதே எனக்கும் கண்டு போகுதுங்க’’ என்றான் நரியன்.

  முதலாளி நரியன் பக்கம் திரும்பவில்லை. செங்கமலத்தை உற்றுப் பார்த்துவிட்டு, வேறு ஒன்றும் பேசாமல் உள்ளே போய்விட்டார்.

  ``ஏண்டா! ஐயா என்னைக் கேட்டால் நீ குறுக்கே மாட்டை விட்டு ஓட்றாப்போலப் பேசறே? அவரு என்னா நெனைச்சுக்குவாரு?’’ என்றாள் செங்கமலம் நரியனைப் பார்த்து.

  ``நடக்கறதை யார் சொன்னா என்ன?’’

  ``ஒங்கப்பாரு மாதிரி எதாவது வம்புலே இழுத்து வச்சுடப் போறெ?’’

  ``பயப்படாதே ஆயா’’ என்று தைரியம் சொன்னான் நரியன்.

  செங்கமலத்துக்கு அப்பொழுதுதான் ஒரு விஷயம் தோன்றிற்று. நரியன் எப்பொழுதும் தன் கூடவே இருக்கிறானே அன்றி, வேறெங்கும் செல்வதில்லையே! வாயோ துடியாக இருக்கிறது! முதலாளியை மற்றொரு சமயத்தில் ஏதாவது சொல்லிவிட்டால், பிழைப்புக்குத் தீம்பு ஏற்பட்டு விடுமே!

  ``ஏண்டா நரியா! நீ என்ன எனக்கு இடுப்புப் பிடிக்கிறாயா, இங்கியே சுத்திகிட்டுக் கிடக்கிறே? சின்னப் புள்ளையா அங்கே இங்கே விளையாடறதில்லை’’ என்றாள்.

  ``இனிமேத்தான் போவணும். எல்லாமே புதுசல்ல’’ என்று பெரிய அறிவாளிபோல பதிலளித்தான்.

  மறுநாள் வழக்கம்போல் நரியன் தாயாருடன் சென்றான். நாரத்தை மரத்தின்கீழே ஒரு சிறிய பள்ளத்தைத் தோண்டி முந்திரிக்கொட்டைகளை வைத்துக்கொண்டு, வல்லா விளையாடிக்கொண்டிருந்தான். செங்கமலம் தன் பொறியைத் தொலைத்துக் கொண்டிருந்தாள்.

  வழக்கம்போல, எட்டு மணிக்கு செங்கமலத்துக்கு ஹோட்டல் பையன் காலை உணவு கொண்டு வந்தான். ஆனால், வழக்கத்துக்கு விரோதமாக, நரியனுக்கு வேறு தனியாக உணவு கொண்டு வந்திருந்தான்.

  “இவனுக்கா?” என்று வியப்புடன் கேட்டாள் செங்கமலம்.

  “ஆமாம்” என்றான் ஹோட்டல் பையன்.

  “யாரு குடுக்கச் சொன்னாங்க?”

  “முதலாளி” என்று கூறிவிட்டு, அவன் உள்ளே போய் விட்டான்.

  முதலாளியின் கருணையைச் செங்கமலத்தால் மனத்தில் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஆனால், நரியன் மட்டும், முதலாளி இந்தக் காரியத்தை எதற்காகச் செய்தார் என்று யோசித்துக்கொண்டே, இட்லியைத் தின்றுகொண்டிருந்தான். செங்கமலம் வாழ்த்திக்கொண்டே தின்றுகொண்டிருந்தாள்.

  அப்பொழுது ஓட்டலில் இலை நறுக்கும் மலையாளி அங்கு வந்து சேர்ந்தான். கிளப்புக்கு வேலை செய்ய வந்த இரண்டு மூன்று நாட்களுக்குள்ளேயே யார் யார் அங்கு வேலை செய்கிறார்கள் என்பது இவர்களுக்கு அத்துப்படியாகிவிட்டது. சிலருடன் பேசிக்கூடப் பழக்கமுண்டாய்விட்டது. இலை நறுக்குகிற மலையாளி, பிந்திய வகுப்பைச் சேர்ந்தவன்.

  வந்தவன் கையிலிருந்த பேனாக் கத்தியைக் குழாய் அடியில் தேய்த்து அலம்பிவிட்டுத் திரும்பினான். இவர்கள் உட்கார்ந்து சிற்றுண்டி அருந்திக்கொண்டிருந்த இடத்தைத் தாண்டிக் கத்தியில் இருந்த தண்ணீரைப் போக்குவதற்காகக் கையை ஆட்டி, மலையாளி ஒருதரம் உதறினான். தாயார்மேல் நான்கைந்து தண்ணீர் துளிகள் தெறித்தன. ஆனால், ஒன்று கூட இவன்மேல் விழவில்லை. ஏதோ தவறுதலாக விழுந்திருக்கிறதென்றுதான் இருவரும் முதலில் நினைத்தார்கள். இரண்டாவது தடவையும் செங்கமலத்தின்மீதே துளிகள் விழுந்தன.

  “பார்த்துத் தண்ணீரை உதறதில்லே _ மேலே எல்லாம் விழுதே” என்றாள்.

“ஒடம்பு மழையா நனைஞ்சு போச்சா _ சவுக்கம் கொணாந்து தாரேன்” என்று சிரித்துக்கொண்டே உள்ளே போய்விட்டான்.

  மலையாளி செய்ததோ பேசினதோ நரியனுக்குப் பிடிக்கவில்லை. விஷமத்திற்காகத்தான் செய்தான் என்று நரியன் மனது சொல்லிவிட்டது. ஆனால், அவன் தாயாருக்குக் கோபமே வரவில்லையே, ஏன்? தன்மீது தண்ணீர் தெறித்திருந்தால் கட்டாயம் சண்டைக்குப் போயிருப்பான். தாயாருக்கு வரவில்லையே, ஏன்?

  இப்படி ஏதோ நினைத்துக்கொண்டி-ருக்கும்-பொழுதே, உள்ளே இருந்து குஞ்சான் வந்தான். கிளப்பிலே குஞ்சானுக்கு இன்ன வேலைதான் என்று இல்லை. அவன் கிளப்பில் எப்பொழுதும் இருப்பான். எல்லா இடத்திலும் இருப்பான். தலைமயிரை எப்பொழுதும் சாய்த்து முடிபோட்டிருப்பான் _ கிராப் வைத்த உலகத்திலே ஒரு விதிவிலக்கு.

  பெரிய பாத்திரங்கள் தேய்த்த களைப்பிலே செங்கமலம் உட்கார்ந்து வெற்றிலைப் போட்டுக் கொண்டிருந்தாள். கொட்டைப்பாக்கில் ஆணி அடித்து, நரியன் பம்பரம் செய்து கொண்டிருந்தான்.

  “என்ன செங்கமலம், குஷியாக வெற்றிலைப் போட்டுக் கொண்டிருக்கிறாய்?’’ என்று குஞ்சான் ஆரம்பித்தான்.

  தன்னுடன் பேச வந்திருக்கிறான் என்று அவள் நினைக்கவில்லை.

  “சும்மாத்தான்’’ என்றாள்.

  “அது சரி, குடி இருக்க உங்கள் வீட்டிலே ஒரு ரூம் இருக்குன்னு சொன்னாங்களே’’ என்று குஞ்சான் செங்கமலத்தின் முகத்தைப் பார்த்தான்.

  “யார் சொன்னாங்க?”

  “யாரோ!’’

  “யாருக்கு?’’

  “எனக்கேதான். எட்டாக் கையிலிருந்து இங்கே போகவர கஷ்டமாயிருக்கு’’ என்று சொல்லிக்கொண்டே சிரித்தான்.

  “இடமில்லையே” என்று சொல்லிவிட்டு, பிசகுக்கு மன்னிப்புக் கேட்பதுபோல அவளும் சிரித்தாள்.

  யாரோ சொன்னாங்க கேட்டேன். ஒண்ணும் நெனச்சுக்கிடாதே!’’ என்று கண்ணைச் சிமிட்டினான்.

  கண் சிமிட்டலுக்குள்ள பொருள் செங்கமலத்திற்குத் தெரியாதென்று சொல்லமுடியாது. ஆனால், அவள் மறுபடியும் சிரித்தாளே ஒழிய, வேறு பதில் சொல்லவில்லை.

  குஞ்சான் அவளை விட்டுவிட்டு நரியன் பக்கம் திரும்பினான்.

  “ஏண்டா பயலே! கோழிக் குஞ்சுபோல ஆயாவையே சுத்திக்கிட்டுக் கிடக்கிறே? பம்பரம் கிம்பரம் எல்லாம் ரோடிலே ரெண்டு பயல்களோடே போய் விளையாடறதில்லே?’’

  நரியன் அவனை வெறிக்கப் பார்த்தானே ஒழிய, பதில் சொல்லவில்லை.

  “சொன்னால்கூடப் போறதில்லை” என்று செங்கமலம் குறுக்கிட்டாள்.

  “சின்னப் பயதானே!’’ என்று சொல்லிவிட்டு, குஞ்சான் அரைச் சிரிப்பு சிரித்துக்கொண்டே, உள்ளே போய்விட்டான்.

  அன்று மத்தியானம் செங்கமலம் வழக்கம்போல இலைக்கட்டு அறையில் சாப்பாட்டுக்குப் பிறகு கண்ணயர்ந்தாள். நரியனுக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ, கிளப்பை விட்டு வெளியே கிளம்பினான். அவன் கிளம்பிப் போன பொழுது முதலாளி பெட்டி அடியில் உட்கார்ந்திருந்தார். நரியனுக்குக் குறிப்பு எதுவும் இல்லை. கால் போன வழியே போனதில் சிறிது நேரத்திற்குள் குளத்தங்கரை அண்டை வந்துவிட்டான்.

  நல்ல உச்சிப் பொழுது. குளம் வெய்யிலிலே தவித்துக் கொண்டிருந்தது. கரையோரத்திலிருந்து மரங்களும் செடிகளும் சேர்ந்திருந்தன. நரியன் குளத்தைச் சுற்றி வந்தான். காவல்காரனைக் காணோம். குளத்தில் மூலைக்கொருவராய்த் தூண்டில் போட்டுக் கொண்டிருந்தார்கள். காவல்காரனில்லாவிட்டால் எத்தனை பேர் மீன் பிடிக்கிறார்கள்!

  இவர்களை எல்லாம் பார்த்ததும் ஏனோ அவனுக்குத் தாயாரின் நினைப்பு வந்துவிட்டது. வழக்கமாக அவள் தூங்கும்பொழுது பக்கத்தில் உட்கார்ந்திருப்பவன், இப்பொழுது சொல்லிக்கொள்ளாமல் வந்துவிட்டான்! குளத்துக் காவல்காரன் செய்த காரியத்தைத் தானும் செய்துவிட்டான்! இந்த ஞாபகம் வந்ததும் கிளப்புக்குத் திரும்பினான்.

  இலைக் கட்டறையில் அவன் தாயார் தூங்கிக்கொண்டிருந்தாள். முதலாளி இலைக் கட்டுகளைப் பரிசோதித்து, அழுகினதையும் கிழிந்ததையும் ஒதுக்கிக்கொண்டிருந்தார். நரியன் திரும்பி வந்ததைப் பார்த்ததும், திடுக்கிட்டவர்போல கைவேலை ஒரு நிமிஷம் தானாக ஓய்ந்தது. “எங்கேடா வெய்யிலில் சுத்திவிட்டு வருகிறாய்?’’ என்றார். அவர் கேட்ட மாதிரி, ஏன் திரும்பி வந்தாய் என்று கேட்பது போலிருந்தது. தாயார் தூங்கிக்கொண்டிருந்த அறையில் முதலாளி இலைக்கட்டைப் பரிசோதிக்க வந்தது அவன் மனத்தில் கோபத்தையும் வெறுப்பையும் தூண்டிற்று. அவன் பதில் சொல்லவில்லை.

  “ஏண்டா, கேட்கிறேன்_?’’

  நரியன் அமைதியாகப் பதில் கூறினான்:

  “சும்மா குளத்தங்கரைப் பக்கம் போனேன். காவல்காரன் இல்லை. ஆளுக்கொரு பக்கமாகத் தூண்டில் போட்டுக்கிட்டு இருந்தாங்க. பாத்துட்டு வரேன்.”

  நரியன் பதில், முதலாளிக்குச் சுருக்கென்று தைத்தது. அவசர அவசரமாக இலைக்கட்டுகளைக் கட்டி வைத்துவிட்டு, அறையைவிட்டு வெளியேறினார்.

  சிறிது நேரம் கழித்து, செங்கமலம் தூங்கி எழுந்தாள்.

  “நல்ல தூக்கம்போல இருக்கு’’ என்றான் நரியன்.

  “காலையில் இருந்து வேலை செய்யறது சோறு தின்னதும் தலையை அமட்டுது. நல்லாத் தூங்கிட்டேன்.’’

  “நான் இப்போ குளத்தங்கரைப் பக்கம் போயிருந்தேன். குளத்திலே காவல்காரன் இல்லை. ஆளுக்கொரு பக்கமாகத் தூண்டி போட்டுக் கிட்டிருந்தாங்க. குளத்துத் தண்ணி சின்னச் சின்ன அலையா சிரிச்சு ஓடிக்கிட்டிருந்துச்சு, வேடிக்கை பாத்துட்டு வரேன்... ஆமாம், முதலாளி இங்கே வந்து இலைக்கட்டை எல்லாம் சரிப்படுத்திக்கிட்டிருந்தாரே, தெரியுமா?”

  “நான்தான் தூங்கிட்டேனே! அறைக்கா வந்தாரு?’’ என்று செங்கமலம் உதட்டைக் கடித்துக்கொண்டாள்.

  “அதான் இங்கெல்லாம் தூங்கக்கூடாதுன்னு சொல்றேன். இனிமே உருமத்திலே சோறு தின்னூட்டு, ஊட்டுக்குப் போயிட்டுத் திரும்பி வந்தா என்னவாம்?’’

  திரும்பி வர நேரமாகிவிடும் என்று தாயார் சொன்ன போது, நரியனுக்குச் சரியாகப் படவில்லை. இருந்தாலும் தாயாருடன் தர்க்கத்திற்கு ஆரம்பிக்கவில்லை. மனதிற்குள்ளேயே ஒரு தீர்மானம் செய்து கொண்டான். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆயா இருக்கும் இடத்தை விட்டுப் போவதில்லை என்று முடிவு செய்துகொண்டான்.

  ஆனால், கிளப்பிலிருந்தவர்கள் மட்டும் நரியனை ஒரு ஆளாகவே மதிக்கவில்லை, சின்னப்பயல் என்று நினைத்துக்கொண்டு, அவன் இருந்தால்கூட ஏதோ சாக்கிட்டு செங்கமலத்திடம் பேசினார்கள். செங்கமலம் எல்லாரிடத்திலும் சின்னச் சிரிப்பும் பெரிய சிரிப்புமாக எதிர்க்கடைப் போட்டாள். நரியனுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. குளத்துக்குக் காவல்காரன் இல்லை என்று நினைத்துக்கொண்டே இருக்கட்டும்; பிறகு தெரியும் என்று, நரியன் நினைத்துக் கொண்டான்.

  இப்படியே சில நாட்கள் போன பிறகு, நரியன் ஒரு மாறுதலைக் கண்டான். மலையாளி, குஞ்சான் முதலியவர்கள் தாயாருடன் பேச முயல்வதில்லை. அது ஒரு ஆச்சர்யமாக இருந்தது நரியனுக்கு. ஆனால், அதைவிடப் பெரிய ஆச்சர்யமொன்று அன்றிரவு காத்துக் கொண்டிருந்தது.

  இரவில் கிளப் வேலை எல்லாம் முடிந்து சாப்பிட்ட பிறகு செங்கமலமும் நரியனும் வீட்டுக்குத் திரும்பினார்கள். வழக்கம்போலக் கால் கையைக் கழுவிக்கொண்டு செங்கமலம் முற்றத்தின் ஓரத்தில் சிம்மிணி விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, வந்து உட்கார்ந்துகொண்டாள். தன் இடுப்பிலிருந்த இரண்டு மூன்று பொட்டலங்களைப் பிரித்துக் கீழே வைத்து, நரியனைப் பார்த்து, “சாப்பிடு’’ என்றாள்.

  நரியனுக்கு ஒரே பிரமிப்பாய் இருந்தது.

  “இதேது, வாங்கினியா?’’

  “இல்லியே?’’

  “பின்னே ஏது?’’

  “முதலாளி குடுத்தாரு.’’

  “எதுக்காக?’’

  “சொச்சமிச்சம் இருந்தா, கிளப்புங்களிலெல்லாம் வேலைக்காரிக்குக் குடுக்கிற வழக்கம்தான்.’’

  “எப்பொ குடுத்தாரு?’’

  உடல் அயர்ந்து வீட்டுக்கு வந்திருந்தவளுக்கு, நரியன் நச்சுநச்சென்று கேட்பது பிடிக்கவில்லை.

  “எப்போ குடுத்தாரு _ உனக்குக் காட்டினப் புறவுதான் குடுக்கணுமா என்ன? தின்னுன்னா திம்பியா?” என்று அதட்டினாள்.

  ஆயா சொல்வதற்காக இரண்டை வாயில் எடுத்துப் போட்டுக் கொண்டான். தூக்கம் வருது என்று அந்த இடத்திலேயே குப்புறப்படுத்துக் கொண்டு விட்டான்.

  அப்பொழுதுதான் செங்கமலத்துக்கு முதல் முதலாக மகனிடத்தில் _ சின்னப் பையனிடத்தில் _ பயம் வந்தது. தவறுதல் ஒன்றுமில்லாத போதே, என்னென்னவோ பேசுகிறானே! இவன் வாய்த் துடுக்கு எங்கேபோய் நிற்குமோ என்று பயந்தாள்.

  மறுநாளைக்குக் கிளப்புக்குப் போய்விட்டுத் திரும்பு காலில் நரியன் ரொம்ப எச்சரிக்கையாக இருந்தான். கிளப்பை விட்டு வெளியே போகும்போது முதலாளி தாயாரிடத்தில் பொட்டலம் கொடுத்ததைப் பார்த்தான். பார்த்தவன் சும்மா இருக்கவில்லை.

  “இது என்னாத்துக்குங்க? கொசறா?’’ என்றான்.

  “ஒனக்குத் தாண்டா; ஊட்டுலே போய்ச் சாப்பிடு’’ என்றார்.

  மேலே நரியன் பேச முடியாதபடி செங்கமலம் நடையைச் கட்டிவிட்டாள். நரியனும் மனதிற்குள் ஏதோ நினைத்துக்கொண்டே கிளம்பிவிட்டான்.

  அதற்குப் பிறகும் நாள் தவறாமல் வீட்டுக்குப் பொட்டலங்கள் வந்து கொண்டிருந்தன. நரியன் சிலநாள் பட்சணம் தின்பான். சிலநாள் தின்ன மறுத்துவிடுவான். அவன் சிலநாள் தின்றபோதிலும் செங்கமலத்திற்கு நரியனிடத்தில் இருந்த பயம் நீங்கவில்லை.

  பதினைந்து நாளைக்குப் பிறகு வழக்கம்போல் செங்கமலமும் நரியனும் வீட்டுக்குத் திரும்பிக்-கொண்டி-ருந்தார்கள். முதலாளி கொஞ்ச தூரம் பின்னால் வந்து-கொண்டிருந்தார். இதை இருவரும் பார்த்தார்கள். வழக்கமாக இந்த வழியே அவர் வீடு செல்வதில்லை. “முதலாளி வருகிறாரோ?’’ என்று கேட்டான் நரியன்.

  “எங்கே போறாரோ?’’ என்றாள் செங்கமலம்.

அதற்குப் பிறகு செங்கமலம் வீட்டுக்கு வந்து சிம்மிணி விளக்கை ஏற்றிக்கொண்டு, முற்றத்தின் ஓரத்தில் உட்கார்ந்தாள். நரியனும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான். முதலாளி திடீரென்று வீட்டுக்குள் நுழைந்ததும், செங்கமலத்திற்குத் திகைப்பாய் இருந்தது. நரியனக்கு குப்பென்று உடலில் சூடுண்டாயிற்று.

  “என்னங்க’’ என்றாள் செங்கமலம்.

  “ஒண்ணுமில்லை; நாலு பசங்களுக்கு என் பிறந்த நாளைக்குச் சட்டைத் துணி வாங்கிக் குடுக்கிற வழக்கம். மூணு பேருக்குக் கொடுத்து விட்டேன். இந்தா நரியனுக்கு’’ என்று ஒரு கடுதாசுப் பொட்டலத்தை அவிழ்த்து ஒரு டிராயரையும் சட்டையையும் செங்கமலத்தினிடம் நீட்டினார்.

  செங்கமலத்தின் முகம் மலர்ந்தது. ஆனால், வாக்கில் மட்டும் “இதெல்லாம் என்னாத்துக்குங்க’’ என்ற சம்பிரதாயமான பேச்சு வெளிப்பட்டது. வாய் பேசிற்றே ஒழிய, கை அவைகளை வாங்கிக்கொண்டது. அவைகளைப் பிரித்துப் பார்க்காமல், “இந்தா’’ என்று நரியனிடம் கொடுத்தாள்.

  நரியன் தயங்காமல் வாங்கிக்கொண்டான். ஆனால், அடுத்த நிமிஷம் அவன் செய்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. துணிகளைச் சுருட்டி அவர் காலடியில் விசிறி எறிந்தான். முதலாளிக்கு முகம் தொங்கிவிட்டது. “வெறும் தறுதலை’’ என்றார்.

  “இவன் அப்பாரைப்போல் எதுனாச்சும் நல்ல இடத்திலே பொல்லாப்பைக் கொண்டாந்துடுவான்னு
நெனைச்சேன்; சரியாப் போயிட்டுது. சின்னப் பயல், மனசுலே வச்சுக்காதிங்க” என்றாள்.

  முதலாளி தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு, வெளியே போய்விட்டார்.

  செங்கமலம் நரியனுடன் பேசவில்லை. பாயைப் போட்டுக் கொண்டு தூங்கிவிட்டாள். மறுநாள் காலையில் வழக்கம்போல் கிளப்புக்கு வேலை செய்யக் கிளம்பும் சமயம். நரியனும் அப்பொழுது எழுந்துவிட்டான். “ஆயா?’’ என்றான்.

  “ஏண்டா’’ என்று எரிந்து விழுந்தாள்.

  “இம்மே இந்த வேலை வேண்டாம். காவல்காரன் இல்லாத குளமின்னு நெனைச்சுக்கிறான்கள். ஆயா வரமாட்டான்னு நான் போய்ச் சொல்லிடறேன்” என்று நரியன் வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டான்.

  செங்கமலம் திகைத்து உட்கார்ந்துவிட்டாள்.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்