Sep 27, 2008

மௌனி கதை மொழி

தமிழ்மணி, நன்றி: தினமணி, நவம்பர் 10, 1990 

தமிழின் நவீன இலக்கியத்தோடு பரிச்சயம் கொள்ளவரும் எவரும் முதலில் மௌனியின் எழுத்துக்களையும், அதைச் சார்ந்து ‘மௌனி’ என்ற எழுத்தாளனைப் பற்றி நிலவி வரும் ஒரு வினோதமான படிமத்தையும் உணரத் தவறியிருக்க மாட்டார்கள். குறிப்பாக 60_களுக்குப்பின் மௌனியின் எழுத்துகளும் அவற்றின் சிறப்புகளும் நம்மிடையே வெகுவாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும், மௌனியைப் பற்றி நாம் பொருட்படுத்தக்கூடிய தகுதிவாய்ந்த விரிவான விமர்சனங்கள் மிகக்குறைவாகவே வெளிவந்துள்ளன.

13_mouni1 1934ஆம் ஆண்டு வாக்கில், மணிக்கொடியில் மௌனி முதன்முதலாக சிறுகதைகளை எழுதத் துவங்கினார். அந்தக் காலகட்டத்தில் புதுமைப்பித்தன், கு.ப.ரா. ஆகியோரும் மணிக்கொடியில் எழுதினார்கள். தமிழ்ச் சிறுகதைத்துறை முதிர்ச்சியடையத் துவங்கிய காலமும் இதுதான் எனக் கொள்ளப்படுகிறது. மணிக்கொடியில் மௌனியின் பிரவேசம் இதை வெகுவாக ஊர்ஜிதப்படுத்தியது. மௌனி படைப்புத்துறைக்கு வந்தது ஒரு தற்செயல் நிகழ்வு என்று பலரும் அறிவித்திருக்கிறார்கள். மௌனி மணிக்கொடியில் எழுதினாலும் மணிக்கொடி என்ற இயக்கத்தின் இலக்கிய படிமத்தோடு இனம் காணப்படக்கூடாதவர் எனவும் வலியுறுத்தப்படுகிறது. மௌனிக்குத் தமிழில் முன்னோடிகள் யாருமே இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

  ஒருவகையில் கலைக்கும் மரபுக்குமான உறவு மிகவும் சிக்கலானது. கலைகளின்மீது மரபின் பாதிப்பு ஒரே சீராகவும் முற்றாகவும் என்றும் இருந்ததில்லை. ஆண்டுகளின் வரிசைக் கிரமப்படியும் அடியொற்றி அமைந்ததில்லை. விளைவாக, கலை வரலாறுகளை நாம் பார்க்கும்பொழுது, புதுமையான கலைவடிவங்களுக்கு ஒரே மரபான முன்முயற்சிகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் காணக்கிடைப்பதில்லை. அதே மாதிரி, எந்தப் புதுமையான கலைப்படைப்பும் முற்றாக மரபிலிருந்து விடுதலை பெற்றதாகவும் இருந்ததில்லை. அதில் மரபின் பல்வேறு காலப்பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அம்சங்கள், சம்பந்தப்பட்ட கலைஞனின் பக்குவத்திற்கும், அவனது சமகால வெளிப்பாட்டுத் தேவைக்கும் ஏற்ப வெவ்வேறு கோணங்களில் பிரயோகப்படுத்தப்பட்டிருப்பதைப் பல சந்தர்ப்பங்களில் காணலாம்.

  கலைகள் மீது மரபின் செல்வாக்கு ஒருபுறமிருக்க, அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களுக்கேற்ப, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் மரபென எஞ்சி நிற்கும் ஒன்றேகூட தீவிரமான பல மாறுதல்களுக்கு ஆளாகிவிட நேர்வதுண்டு. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நம் வாழ்க்கைப் போக்குகளிலும் கலைத் துறைகளிலும் கணிசமான மாற்றங்களை நாம் சந்தித்திருக்கிறோம். அதேபோல மொகலாயர்கள் ஆண்ட காலத்திலும் பல அம்சங்கள் நம் மரபோடு வந்து ஒட்டிக்கொண்டுவிட்டன என்பதை நாமறிவோம். நீடித்த ஆங்கிலேய ஆட்சி நம்மை மேற்குடன் நெருக்கம் காண வைத்தது. ஆங்கிலக்கல்வி, தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி ஆகியவை இந்த இடைத்தொடர்பை துரிதப்படுத்தின. இதன் நேரடியான, மறைமுகமான விளைவாக தமிழ் இலக்கிய மரபு, மேற்கிலிருந்து சிறுகதை, நாவல் ஆகிய புதிய இலக்கிய வடிவங்களை சுவீகரித்துக்கொண்டது. மணிக்கொடி எழுத்தாளர்களில் முக்கியமாக புதுமைப்பித்தன், மௌனி இருவரும் மேலை இலக்கியத்தில் மிகுந்த பரிச்சயம் கொண்டவர்களாக இருந்தார்கள். மௌனி, காஃப்காவின் எழுத்துகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவராகத் தெரிகிறது. காப்ஃகாவின் கதைகளைப் படித்த மௌனி, அவை பிரத்யேகமாக தனக்காகவே எழுதப்பட்டவை என்று கூறுமளவுக்கு உணர்ந்தார். இருப்பினும், காஃப்காவுக்கும் மௌனிக்கும் பல்வேறு தீர்மானமான வித்தியாசங்கள் உள்ளன. அவரை காஃப்காவுடன் ஒப்பிடுவது பெரும் தவறு. மணிக்கொடி எழுத்தாளர்கள் பலரும் மேற்கின் சிறுகதைத் துறையிலிருந்து அதன் நவீன வடிவத்தையும், வடிவம் சார்ந்த அதன் சிறப்பான பல கூறுகளையும் மட்டுமே ஏற்றுக்கொண்டார்கள். கதையம்சத்திலும், மொழிப்-பிரயோகத்திலும் அவர்கள் தம் இந்திய வாழ்க்கை, மற்றும் மரபிலிருந்தே பல அம்சங்களை எடுத்துக்கொண்டார்கள். இதில் மௌனி, மற்றவர்களைக் காட்டிலும் சற்றுக் கூடுதலான வெற்றி பெற்றார் என்றே கூறலாம். இந்திய இலக்கிய, தத்துவ மரபின் பல அம்சங்களைத் தன் தனித்துவமான பார்வைக் கோணங்களுக்கு ஏற்ப, வடிவ நுட்பத்தோடு அவர் வெளிப்படுத்திய விதமே அவரது எழுத்துக்களுக்கு ‘நவீன’த் தன்மையை வழங்கியது. தமிழ் இலக்கிய உலகம் அதுவரை அலசிப் பார்க்காத, உணராத இந்திய வாழ்க்கையின் பல பரிமாணங்களை மௌனி முன் வைத்தார். புதுமைப்பித்தன்கூட தமிழ்ச்சிறுகதைத் துறையில் சாதித்த புதுமைகளனைத்தும் முதன்மையாக உள்ளடக்கம் சார்ந்தவையே. வடிவத்தில் சிறப்பான முயற்சிகளை அவர் கைக்கொள்ளவே இல்லை. ஒருவகையில், மௌனி முன்னோடியற்றவர்தான். இருப்பினும் இந்தக் கூற்றின் சிறப்பை நாம் காலப்போக்கில் சாதாரணமாக எடுத்துக்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என்றே தோன்றுகிறது.

  மௌனியின் கதைகளில் முக்கிய அனுபவங்களாக நாம் காண்பவை வாழ்க்கையின் நிச்சயமின்மை, இரு மனிதர்களுக்கிடையேயான உறவில் இருக்கும் தனித் தன்மைகளும் அவற்றின் விளைவுகளாக ஏற்படும் அதிருப்தி, தோல்வி, மரணம், பயணம் ஆகியவையும் அந்த அனுபவங்கள் மௌனியின் கதைகளில் ஆண்_பெண் உறவு என்ற அடித்தளத்தின்மீது நிறுவப்பட்டு வெளிப்படுத்தப்-படுபவை. அநேகமாக மௌனியின் எல்லாக் கதைகளிலும் காதலில் தோல்வியுற்ற, நுண்ணுணர்வுமிக்க ஒரு வேதாந்தியின் எட்டிய வெளியை நோக்கிய சஞ்சாரத்தைப் பார்க்கமுடியும்.

கதையம்சம் என்ற அளவில் நாம் அலட்சியப்படுத்திவிடக்கூடிய காதல் என்ற அனுபவமே எல்லாக் கதைகளிலும் காணப்பட்டாலும் அந்த அனுபவத்தின் உந்துதலில் மௌனியின் பாத்திரங்கள் கொள்ளும் விகசிப்பு, ஒரு குறிப்பிட்ட உணர்வுத் தளத்திலிருந்து மனித வாழ்க்கையின் அடிப்படையான பல பிரச்சினைகளையும் நிலைகளையும் நோக்கி விரிகின்றது என்பதால் அவற்றை நாம் பொருட்படுத்தியே தீரவேண்டியுள்ளது.

  தன் கதைகள் வாயிலாக மௌனி கொள்ளும் தத்துவ விசாரம் திட்டமற்றது என்றே கூறலாம். வாழ்க்கையின் பல விஷயங்களைப் பற்றி மௌனியின் தத்துவார்த்த விளக்கங்கள் எந்தவிதமான பொது தர்க்க நியதிக்கும் உட்பட்டவையல்ல. ஏனெனில், அவரது அனுபவங்களின் தன்மைகள், அவற்றின் பாதிப்பை ஏற்றுக்கொள்ளும்   அவரது பக்குவம், அதைத் தொடர்ந்து எழும் எண்ணங்கள் தோற்றம் கொள்ளும் மனநிலை, காலம், இவ்வெண்ணங்களை வெளிப்படுத்த அவர் கைக்கொள்ளும் பல பரிமாணங்கள் கொண்ட இலக்கிய வடிவம் இவையெல்லாம் அவரது விளக்கங்களை ஒரு பொது விதிக்கப்பால் இழுத்துச் சென்றுவிடுகின்றன. வாழ்க்கை பற்றிய பல உண்மைகளை அவர், மனம் நொடிந்து-போகும்படியும், குதர்க்கமாகவும், விசித்திரமான மனக்கோணங்களிலிருந்தும் அளிப்பதாகத் தோன்று-வதற்கும் மேற்சொன்ன கூற்றிலிருந்தே விடைபெற முடியும்.

  முதன்முதலில் வாழ்க்கை அனுபவங்களிலிருந்துதான் நாம் நம் சார்புகளை உருவாக்கிக்கொள்கிறோம். பின், அந்தச் சார்புகளிலிருந்து மீண்டும் வாழ்க்கை அனுபவங்களை விளக்க முற்படுகிறோம். அனுபவங்களுக்கு இன்னின்ன சார்புகளை நாம் கொள்ளவேண்டும் என்றும் நினைக்கிறோம். அனுபவங்கள் ஒவ்வொரு மனி தனிடையேயும் ஏற்படுத்தும் வெவ்வேறு விதமான விளைவுகளை நாம் கருத்தில் கொண்டாலும் அதற்கு முக்கியத்துவம் தராமல் ஒரு பொதுவான நியதிக்குள்ளேயே வாழ்க்கையை சார்புபடுத்தவும் வகைப்படுத்தவும் முயல்கிறோம். கலைஞர்கள் இதற்கு நேர்மாறான நிலையிலிருந்து செயல்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கை அனுபவங்களை சார்புபடுத்துவதை, வகைப்படுத்துவதை-விடவும் வாழ்க்கை அனுபவங்கள் மனிதரிடையே உண்டாக்கும் வெவ்வேறு விதமான விளைவுகளை விசாரிப்பதற்கும் விவரிப்பதற்குமே அதிக அழுத்தம் தருகின்றனர். வாழ்க்கையைப் புரிந்து கொள்ள தத்துவம் உதவுவதைப் போன்றே இலக்கியமும் இன்னொரு கோணத்தில் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவுகிறது. தத்துவத்திற்கான இறுக்கம் இலக்கியத்திற்குக் கிடையாது என்பதைப் போன்றே தத்துவத்தில் காணப்படும் தர்க்க ஒழுங்கும் இலக்கியத்தில் காணக் கிடைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், இலக்கியம், தத்துவம் இரண்டுமே முழுமையற்றதான அருவமான இரு உலகங்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும், இந்த இரு உலகங்களும் வாழ்க்கையை விளங்கிக் கொள்ளவும், வெற்றி காணவும் யத்தனித்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கை இந்த உலகங்களை சதா தோற்கடித்துக் கொண்டேயிருக்கிறது.

  தத்துவத்தைப் போன்றே இலக்கியமும் சிந்தனையைச் சார்ந்த செயல்பாடு, அதன் விளைவாக சமூகப் பார்வையையும் சார்ந்து நிற்கும் ஒன்று. எல்லாக் காரியங்களுக்கும் ஒரு சமூகப் பரிமாணம் உண்டு. மற்றவற்றைவிட இலக்கியத்திற்கும் தத்துவத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள இடையுறவு பல தளங்களில் நிகழக்கூடியது; இதைப் போன்றே இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள இடையுறவும் பலதளங்களில் நிகழக்கூடியதுதான். எனவே மௌனியின் எழுத்துகளில் சமூகத்தோடு கொள்ளும் உறவு ஒரு குறிப்பிட்ட தளத்தில் நிகழ்ந்தது. நிகழ்கிறது என்பதே உண்மை. புதுமைப்பித்தனின் எழுத்துகள் சமூகத்தோடு கொள்ளும் உறவு வெளிப்படையான யதார்த்த தளத்தில் நிகழ்வதை நாம் பார்க்கலாம். மௌனியின் எழுத்துகள் உள்ளார்ந்த மனம் சார்ந்த ஒரு தளத்தில் இயங்குகின்றன. புதுமைப்பித்தன் தன் எழுத்துகளின் மூலம் சமூகத்தோடு கொள்கிற உறவு முழுமையானது அல்ல என்று ஒரு மார்க்ஸியவாதி கருதக்கூடும். ஒரு வாசகருக்கும் அவ்வகை எண்ணங்கள் ஏற்படலாம். அதேபோல், மௌனி தன் எழுத்துகள் மூலம் கொண்டிருந்த சமூக உறவு முழுமையானதா, அல்லவா என்று பரிசீலிக்கப்படவில்லை. குறிப்பாக மார்க்ஸியவாதிகள் அவரை சமூகப் பார்வையற்றவர் என்று பகிஷ்கரித்துள்ளனர்.

மௌனிக்கு இலக்கியத்தில் போன்று தத்துவத்திலும் நல்ல புலமை இருந்தது. அவரது தத்துவப் பரிச்சயம் அவரது கலை இயல்புக்கு வெகுவாக உதவியது; என்றாலும் தத்துவத்தின் செல்வாக்கு அவர்மீது துல்லியமாக ஒரு குறிப்பிட்ட போக்கின் அடிப்படையில் லட்சியம் கொள்ளும்படியாக இருந்ததில்லை. மௌனிக்கு அத்வைதத்தில் ஈடுபாடு இருந்தது என்று கூறப்படுகிறது. இதை ஊர்ஜிதம் செய்யும் பல வாசகங்களை நாம் அவரது கதைகளில் காணமுடியும். சமீபத்தில் ஓர் அமெரிக்க ஆய்வாளர் மௌனியை ஓர் எக்ஸிஸ்டன்ஷியலிஸவாதி என்று கூறியிருக்கிறார். இதையும் ஊர்ஜிதம் செய்யும் பல வாசகங்களை மௌனியிடம் நாம் எளிதாகக் காணமுடியும். மௌனியை இவ்வாறு வகைப்படுத்துவது அவரைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக அவரிடமிருந்து நம்மை வெகுவாக விலக்கி வைத்துவிடும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் மௌனி கதைகளில் காணப்படும் தத்துவச்சாயல் கொண்ட வாசகங்கள் ஒரு பிரக்ஞைபூர்வமான திட்டமிடுதலின் விளைவுகள் அல்ல. அனுபவங்களில் வெளிப்பாட்டின்-போது தெறித்துவிழும் பார்வைத் துணுக்குகளவை! உணர்வுகளின் உத்வேகத்தில் வெளிப்படும் இவற்றை எந்த ஒரு குறிப்பிட்ட தத்துவப்போக்கிலும் ஐக்கியம் கொள்ள வைக்க முடியாது. மௌனியின் தத்துவப் பூச்சுள்ள வார்த்தைகள் பன்முகம் கொண்டவை. இவற்றில் முழுமை காண முயல்வது அவ்வளவு சரியாக இராது. மௌனி தத்துவ விசாரங்களைப் பகிர்ந்துகொள்ள இலக்கியத்தைப் பயன்படுத்தவில்லை. எந்த வகையான தத்துவமும் வாழ்க்கையை வகைப்படுத்துவதிலேயே ஆர்வம் கொண்டிருப்பதாக இவர் காண்கிறார். தத்துவத்தின் நோக்கம் மௌனியிடம் இல்லை. வாழ்க்கைக்குத் தத்துவம் தரும் நிம்மதியுணர்வை அவர் தன் கதைகளின் மூலம் முறியடிக்க நினைத்தார். தவிர, அவரது கதைகளில் காணப்படும் இந்த அம்சங்கள் ஒரு கலைப்படைப்புக்கான தேவையின் அடிப்படையில் எழுந்தவை. தம் சிறு கதைகளின் வடிவத்தில் அவர் கொண்டிருந்த பிரக்ஞையும் கண்ட வெற்றியும் இதை ஊர்ஜிதப்படுத்துகின்றன. மௌனி முதன்மையான ஒரு கலைஞர்.

  மேலும், மௌனியின் எழுத்துகளைப் படிக்கும்பொழுது ஒன்றை நாம் அவரது எல்லாக் கதைகளிலும் காண முடியும். மௌனியின் கதை மாந்தர்கள் அனைவரும் எப்போதும் ஒரு தீவிரமான பிரக்ஞை நிலையில் சஞ்சரிப்பவர்களாகவே இருக்கிறார்கள். எந்த ஒரு மனிதனும் தீவிரமான பிரக்ஞை நிலையில் வாழ்க்கையின் அடிப்படைகளைப் பற்றிச் சிந்திக்கவும் பேசவும் தலைப்பட்டு விடுகிறான். அவனுக்குத் தத்துவப் பரிச்சயமோ, படிப்போ இல்லாத போதுங்கூட மரணம், காதல், போதை போன்ற உளவியல் விளைவுகள், பரிமாணங்கள் மிகுந்த அனுபவங்களில் மனிதன் ஆழ்ந்து தீவிரமான பிரக்ஞை கொள்ளும்போது அந்நிலை அவன் பேச்சையும் நடத்தையையும் வெகுவாகப் பாதிக்கிறது. மௌனியின் கதைமாந்தர்கள் இவ்வகை அனுபவங்களைக் கொண்டவர்களாகவும் இத்தகைய பாதிப்பை ஏற்றவர்களாகவும் உள்ளார்கள். ஏற்கெனவே, கூறியதுபோல மௌனி கதைகளின் முக்கிய அனுபவங்களும் உளவியல் பரிமாணங்கள் மிகுந்த மரணம், ஆண்_பெண் உறவு, வாழ்வின் நிச்சயமின்மை போன்றவையே. மௌனிக்கு மனித அனுபவங்களின் புறவிளைவுகளில் அதிக ஈடுபாடு இருந்ததில்லை. ஓர் அனுபவம் மனிதனிடம் ஏற்படுத்தும் உளவியல் விளைவுகளிலேயே அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக பல சமயம் அவரது பாத்திரங்களின் அனுபவங்கள், அதற்கு அவை காட்டும் எதிர்வினைகள் ஆகியவை விசித்திரமாகத் தோற்றம் தரக்கூடியவை. ‘‘எங்கிருந்தோ வந்தான்’’ என்ற அவர் கதையில் காணப்படும் பின்வரும் வரிகள்:

  ‘‘..நடு இரவில் நான் விழித்துக் கொண்டேன். ஒருகால் நான் தூங்காமலேயே விழித்துத்தான் படுத்திருந்தேனோ என்னவோ? பக்கத்து அறையிலிருந்து, கேட்டதும் கேட்காததுமாக, அடித்தொண்டையிலிருந்து அவன் பாடிக்கொண்டிருந்தான்... பாட்டும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது. அது மறைந்த இடத்திற்கு என்னை இழுத்துச் சென்றதுபோலும்... என்னையே, என்னுடைய சவத்தையே நான் வெகு தூரத்திற்கப்பால் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நானே உணர்ந்த என் இறப்பு, வருத்தம், ஆத்திரம், ஓர் அருவருப்பு, ஒருங்குகூடின... ஒரு கேலி நகைப்பு எங்கேயோ கேட்டது... மறுபடியும் என் சவத்தையே நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

  இறப்பு..? இறப்பு...? அடைய ஆவல் கொண்டு ஒரு ஸ்வரத்தை எட்டி எட்டிப்பிடிக்க மேலிருந்தும் கீழிருந்தும் முயலும் அவன் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

  ஒரு சோகமானகீதம் அவன் பாடிக் கொண்டிருந்தான். என் உணர்வை உயர்த்தி, கனவிற்கும் நினைவிற்கும் உள்ள நுண்ணிய எல்லைக்கோட்டைத் துடைக்கவல்ல அவனது கானம் சாதாரணமானதல்ல. ஆழித் தண்ணீரில் எல்லை பிரித்துக் கோடிட்டதுதானா நம் வாழ்க்கை..?அசைந்து அசைந்து மிதக்கும் தோணி (மனம்) எல்லை கடக்க அறியாது கடந்தது போலும்! கனவின் கரையைத் தாண்டி அவன் பாடிக் கொண்டிருப்பதைத் தான் நான் கேட்டுக் கொண்டிருந்தேன் போலும். நான் கனவு கண்டு கொண்டிருந்தேன் என்றால் எப்போது நான் விழிப்படைந்தேன்?’’

  மௌனி, மனித அனுபவங்களை, அநேகமாகத் தன் எல்லாக் கதைகளிலும், உள்ளார்ந்த மனமும் அறிவும் மட்டுமே சார்ந்த உளவியல் தளத்தில் நிகழ்த்திக் காட்டுகிறார். யதார்த்த உலகின் அம்சங்கள் அவரது கதைகளில் படிமப் பிரமாணம் கொள்ளும்போது மட்டும் அற்புதமாகப் பிரகாசிப்பதையும், மற்ற சமயங்களில் மங்கலாகிப் போவதையும் காணலாம். இவ்வகையில் வாழ்க்கை அனுபவங்களின் உளவியல் பரிமாணங்களை வெவ்வேறு கோணங்களிலிருந்து ஆழமாக அலசிப்பார்க்கும்போது மௌனி அனுபவங்களின் புறத் தோற்றத்தின் குறுகிய தன்மையைத் தகர்த்துவிடுகிறார். தவிர, தன் தனித்துவமான பார்வைகளை வழங்கி அந்த அனுபவங்களைப் புதிய ஒளியில் காட்டி வாசகனைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறார்.

  மௌனி இயற்கையின் பிரும்மாண்டத்திற்கும், மனித வாழ்க்கையின் நிச்சயமின்மைக்கும் வெகுவாக ஆட்பட்டிருந்தார். இரண்டுமே அவரைத் தீவிரமாக அச்சுறுத்தியிருக்கின்றன. மௌனி தன் அனுபவங்களின் பல்வேறு பரிமாணங்களைக் காண்பதற்கும் விளக்குவதற்கும் உந்துதலாக இயற்கையின் பல்வேறு அம்சங்களை எடுத்துக்கொள்கிறார். இயற்கை நிச்சயத்தின் குறியீடாக இருந்தாலும் தன்னளவில் அது பொருளற்றது, மனிதனுடன் உறவு கொள்ளும்போதே அது உயிர் கொள்ளுகிறது. இயற்கையின் நிச்சயமான இருப்பு, மனிதன் அல்லாதபோது பொருளற்றுப் போய்விடும். அதன் நிலை, இவற்றை மனித வாழ்வின் நிச்சயமின்மையோடு சேர்த்துப் பார்க்கும்போது மனித வாழ்வின் சிறுமை நமக்குப் புலப்படும். இந்தச் சிறுமையின் பிரக்ஞை நம்மை அச்சுறுத்துவதும் நமக்குப் புரியும்.

  இருள், வானம், மரங்கள், மலைகள், வெப்பம், காற்று, வெயில், நிழல் போன்ற இயற்கையின் அம்சங்கள் மௌனியிடம் அலாதியாக உருக்கொள்கின்றன. இவற்றை உள்ளடக்கி மௌனி எழுதியிருக்கும் பகுதிகள் விசேஷ அழகுடன் திகழ்கின்றன. சூழ்நிலை உருவாக்கத்திற்காக மட்டுமல்லாது இந்த அம்சங்களை மௌனி வாழ்க்கைப் பற்றிய தன் தயக்கங்களின், தனது சோகங்களின் தீவிரத்தை வெளிப்படுத்தவும் பிரயோகிக்கிறார். விவரங்களின் தொகுப்பில் காணப்படும் நேர்த்தி மௌனியின் குரலை அழகாக வெளிப்படுத்தி விடுகிறது. உதாரணமாக மனக்கோட்டை என்ற அவரது கதையில் வரும் கீழ்க்காணும் பகுதியைப் பார்க்கலாம்.

  ‘‘.... மேற்குஅடிவானத்தில் மறையவிருக்கும் பிறைச்சந்திரன், அரையிருட்டைத்தான், அழகுடன் அளித்துக் கொண்டிருந்தது. ஆகாயத்தில் தெரிந்த எண்ணிலா நக்ஷத்திரங்கள், மொத்தமாக சிறு ஒளி கொடுக்க இருந்தன. ஸ்டேஷனில் இறங்கியவன், சிறிது நேரம் அப்பிராந்தியத்தைச் சுற்றி பார்வை கொண்டு நின்றிருந்தான். மங்கிய ஒளித்திரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரியும் அநேக மலைக் குன்றுகள், பல ரூபத்தில் பதிந்திருக்கக் கண்டான். தேவாசுர யுத்தத்தில், ஒருவருக்கொருவர் மலைகளைப் பிடுங்கி அடித்துக் கொண்டதில், சிதறித் தெறித்தனவென, ஆங்காங்கே தோன்றித் தெரிந்தனவே போலும். உயிரற்ற அவைகளுக்கு, எல்லையிலா கற்பனையில், ஜீவன் கொடுக்க, இச்சிறு ஒளிபோதும். மேலே வானத்தில் எண்ணிலா நக்ஷத்திரங்கள் தெரிவதும் கீழே பூமியில் கண்ணுக்கெட்டிய வரையில் ஆங்காங்கே தெளிக்கப்பட்டுத் தெரியும், சிறு குடிசைகளின் விளக்கொளியும் போதும் போலும். புதைவு கொண்ட அமைதி விட்டுவிட்டு, விம்முதலில் காணும் மௌனக் குமுறலின் ஓலமென எல்லாவற்றையும் பார்த்து, சிறிது நின்றிருந்தான்...’’

  ஒரு எழுத்தாளனுக்கும் மொழிக்கும் உள்ள உறவு மிக முக்கியமானது. தனித்துவம் மிக்கது. அவன் பிரயோகிக்கும் குறிப்பிட்ட சில நூறு வார்த்தைகளின் தொகுதி, அவற்றிற்கிடையேயான இசைவில் உள்ள அழகு, பொருட்செறிவு, மொழி நடையின் ஊடாகத் தெரியும் எழுத்தாளனின் அகம் போன்ற பல விஷயங்கள் மிகச் சுவாரஸ்யமானவை. மொழிக்கும் எழுத்தாளனுக்கும் உள்ள உறவில் காணப்படும் நுட்பச் செறிவே அவனது இலக்கியத்தின், வெற்றியை பெருமளவு தீர்மானிக்கிறது என்று கூறலாம். இந்த நுட்பச் செறிவு ஒவ்வொரு எழுத்தாளனின் அறிவிற்கும், அனுபவத்திற்கும் ஏற்ப மாறுவதுண்டு. சிலரிடையே மிக எளிமையாகவும் வேறு சிலரிடம் மிகச் சிக்கலாகவும் இந்த நுட்பச் செறிவு காணப்படுவதுண்டு. புதுமைப்பித்தனிடம் காணக்-கிடைக்கும் எளிமை, மௌனியிடம் கிடைப்பதில்லை. (புதுமைப்பித்தனை வெகுவாக மதித்த மௌனியும் இதை உணர்ந்தே இருந்தார். மௌனியின் மொழிச் சிறப்பை புதுமைப்பித்தனும் புரிந்துகொண்டிருந்தார்) மௌனியின் மொழி நடையின் நுட்பச் செறிவு பூடகமான ஒன்று. அனுபவத்தின் உள்தோற்றங்களை நோக்கிய விரிவின்போது அதற்குக் கிடைத்த தன்மையிது. வெற்று அனுபவங்களை வார்த்தைகளால் ஜோடிப்பவர் அல்ல மௌனி. எளிமையான அனுபவங்களை, மிக எளிமையான வாக்கியங்களில் அவர் கூறிவிடுவதை அவரது எல்லாக் கதைகளிலும் காணலாம்.

  மௌனி வார்த்தைகளை மிகுந்த பொறுப்புணர்வுடனும் நேர்மையுடனும் உபயோகித்தவர். வார்த்தைகளின் பொருளுக்கும் அவற்றின் ஒலிக்கும் உள்ள இசைவை மௌனியைப் போல் வேறு எவரும் உணர்ந்து கையாண்டிருப்பதாகத் தெரியவில்லை. ‘‘இருட்டு’’, ‘‘இருள்’’ ஆகிய ஒரே பொருளைச் சுட்டும் இரு சொற்களைக்கூட அவற்றின் சக்தியுணர்ந்தே பிரயோகப்-படுத்துபவர். ‘இருட்டு’ என்ற சொல் யதார்த்தமான ஒரு சூழ்நிலையைக் குறிப்பதாகவும், ‘இருள்’ என்ற சொல்லின் பொருளும் அதன் ஒலியும் யதார்த்தமான ஒரு சூழ்நிலையைக் குறிப்பதுடன் வேறு பல பரிமாணங்களையும் கொண்டதாகவும் இருப்பதை அவரைப் போன்றே நம்மாலும் உணர முடியும்.

  மௌனியின் கதைகள் வடிவச் சிறப்பு மிக்கவை. மொழி நடையைச் சிறப்பாகக் கையாள்வதுடன், தன் ஒவ்வொரு கதையிலும் மௌனி, அவற்றின் யதார்த்த தளத்திற்கும் உளவியல் தளத்திற்குமான இடையுறவை நுட்பமாகவும் லாவகமாகவும் ஏற்படுத்துகிறார். இதில் குறிப்பாக உளவியல் தளங்களில் திகழும் பகுதிகள் மிக உயர்ந்த அழகியல் நுட்பம் மிகுந்தவையாக உள்ளன. ஒவ்வொரு கதையிலும் உளவியல் மற்றும் யதார்த்த தளங்களின் தொகுப்பே கூட ஒருவிதத்தில் குறியீட்டுத் தன்மையுடன் துலங்குவதைக் காணலாம். நிதர்சனத்திற்கும், லட்சியத்திற்கும் உள்ள இடைவெளியைக் குறிப்பதாக இவை அமைந்துள்ளன. இவ்விரு தளங்களுக்கும் அவர் மாறி மாறி செல்வதும், இவை சேரும் பிரியும் இடங்கள் உறுத்தாதபடி கட்டமைக்கப்பட்டிருப்பதும், காணப்படும் முக்கியச் சிறப்புகள். இன்னும் சொல்லப்போனால் மௌனி கதைகள் தரும் அடிப்படை வாசக அனுபவத்தை அளிப்பவை இக்கூறுகளே! மேலும், குறியீடுகளென தோன்றும்படி அவர் யதார்த்தத்தின் பல கூறுகளை உருமாற்றம் செய்து விடுவதும், அதன் மூலம் ஸ்தூலத்திற்கும் அருவத்திற்கும் அவர் போடும் முடிச்சுகளும் மிக அழகானவை.

  ‘‘காலத்தைக் கையைப் பிடித்து நிறுத்தி கனிந்த காதலுடன் கட்டித் தழுவினாலும் அது நகர்ந்து சென்றுகொண்டேதான் இருக்கும்’’ என்று மௌனி கூறும்போது நம்மால் ஏற்க முடியாமற் போகாது. இன்னும், இவ்வாக்கியத்தின் கட்டமைப்பு ரீதியான இலக்கிய நயத்தைப் போலவே, அதன் பொருளில் காணப்படும் ஆழ்ந்த சோகத்தையும் நம்மால் உணர முடியும். மௌனியின் கதைகளில் இவ்வாறான சோகங்கள் நிறைய உள்ளன. மௌனி உணர்த்தும் சோகங்கள் நமக்கும், நம் சமூகத்திற்கும் பொதுவானவை.

  மௌனியின் முக்கியமான கதைகள் : மனக்கோட்டை, பிரபஞ்சகானம், குடை நிழல், மாறுதல், மனக்கோலம், தவறு, எங்கிருந்தோ வந்தான், அழியாச்சுடர், பிரக்ஞை வெளியில் மௌனி சற்று வித்தியாசமான ஓரிரு கதைகளையும் எழுதியுள்ளார். சுந்தரி, மிஸ்டேக் போன்ற மிகச் சாதாரண கதைகள் தவிர, ‘குடும்பத்தேர்’ என்ற ஒரு நல்ல கதையும் உண்டு. இது மற்ற பல கதைகளைப்போல் வெகுவாகப் பேசப்படாவிட்டாலும், மௌனியின் சம்பிரதாயமான மனப்போக்கைப் புரிந்து கொள்ள உதவுகிறது. மௌனிக்கு மிகவும் பிடித்த தன் கதைகளில் இதுவும் ஒன்று, என்றாகும் போது இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

  மௌனியின் எழுத்துகளைப்பற்றி பல்வேறு அபிப்பிராயங்கள் இருப்பினும் அவை தமிழுக்கு மிக முக்கியமான எழுத்துகள். இலக்கிய அனுபவத்தின் நிறைவு பெரிதும் வாசகனின் நுண்ணுணர்வையே சார்ந்துள்ளது என்ற உண்மையை இன்றும் வலியுறுத்திக் கொண்டிருப்பவை மௌனியின் கதைகள். இலக்கிய உலகில் அவர் அடைந்த வெற்றிக்கும் (தோல்விக்கும்கூட) அவரது கதைகளின் இந்தப் பண்பே காரணம் என்றும் சொல்லலாம்.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்