Sep 27, 2008

மௌனி எழுத்துக்களும் செம்பதிப்பின் தேவையும்-தளவாய் சுந்தரம்

தளவாய் சுந்தரம்

mouni தமிழ் இலக்கியத்தில் இரண்டு குறிப்பிடத்தக்க ஆளுமைகளாகக் கருதப்படும் புதுமைப்பித்தன், மௌனி ஆகியோரில் புதுமைப்பித்தனுடன் ஒப்பிடும்போது மௌனியின் இடம் இப்போதும் மிக முக்கியமானது. சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த புதுமைப்பித்தன் பற்றிய கூட்டம் மற்றும் இம்மாதம் 1, 2 தேதிகளில் தலித் அமைப்பு
பாண்டிச்சேரியில் நடத்திய மௌனி பற்றிய கூட்டம் ஆகியவை இதனை மீண்டும் உறுதி செய்கிறது. எழுத்தாளர்கள், விமர்சகர்கள் என்று கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் பாண்டிச்சேரி மௌனி கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுந்தர ராமசாமியும், கி.அ. சச்சிதானந்தமும் மௌனியுடனான தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, ராஜேந்திரசோழன், ஞானக்கூத்தன், அ. ராமசாமி, யுவன் சந்திரசேகர், எம். கண்ணன், பாவண்ணன், கிருஷ்ணசுவாமி, பூரணச்சந்திரன், பிரம்மராஜன், நாஞ்சில் நாடன், பா. வெங்கடேசன், ராஜ் கௌதமன், அப்பாஸ் ஆகியோர் மௌனி கதைகள் குறித்துப் பேசினார்கள். ‘‘மிகவும் பழமைவாதியாகவும், பிற்போக்கானவராகவும் மௌனி இருந்தபோதும் அவரது கதைகள் இதற்கு மாறாக இருக்கும் முரண்பாடு எளிதில் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது’’ என்றார் சுந்தர ராமசாமி. ராஜேந்திரச்சோழன், ‘‘மௌனியின் கதைகள் தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு கதை சப்ளை செய்யக்கூடியவை’’ என்றார். அ. ராமசாமி, ``எம்.ஜி.ஆர். படங்களைப் போல ஒரே சூத்திரத்தை வைத்துக்கொண்டு ஒரே விதமான கதைகளை எழுதியவர் மௌனி’’ என்றார். பிரம்மராஜன், ‘‘இப்போது மௌனியின் கதைகளைத் தன்னால் படிக்கமுடியவில்லை’’ என்றார். எனினும் ஒட்டுமொத்த கூட்டத்தின் மனநிலை மௌனியின் கதைகளையும் தமிழ் இலக்கியத்தில் அவரது நிரப்பப்படாத இடத்தையும் முக்கியமானது என்ற கருத்தையே கொண்டிருந்தது. கட்டுரைகள், விவாதங்கள் கலந்துரையாடல்களின் வழி கடைசியில் கூட்டம் மௌனியின் கதைகளை பி.எஸ். ராமையா எடிட் செய்தது, அவரது கதைகளுக்குத் தலைப்புகளைப் பிறர் கொடுத்தது ஆகியவற்றை ஒட்டி இப்போது நம் கைக்கு கிடைக்கும் மௌனியின் கதைகள் எந்த அளவுக்கு அவரது அசல் எழுத்தைச் சார்ந்தது என்று தெரியாமல் மௌனியின் படைப்புகளைப் பற்றிய மதிப்பீடுகளை எப்படி மேற்கொள்வது என்ற கேள்விக்கு வந்து சேர்ந்தது. அச்சாகாமல் இருக்கும் கிட்டத்தட்ட 2000 பக்க அளவுள்ள மௌனியின் எழுத்துக்கள் பற்றிய தகவலும் வெளியிடப்பட்டது. ஏதாவது நிறுவனம் நிதியுதவி செய்யுமெனில் அச்சாகாமல் இருக்கும் மௌனி எழுத்துக்களையும், இன்றும் விற்பனை உறுதி இல்லாத மௌனியின் திருத்தப்பட்ட கதைகளின் செம்பதிப்பையும் வெளியிட பலர் முன்வரக்கூடும். யார் நிதியுதவி செய்வார்?

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

2 கருத்துகள்:

கார்த்திகைப் பாண்டியன் on July 11, 2009 at 11:52 AM said...

மௌனியின் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று சொல்ல முடியுமா நண்பா?

Ramprasath on August 26, 2009 at 10:39 PM said...

மௌனியின் முதல் சிறுகதைத் தொகுப்பு `அழியாச்சுடர்’ 1959ஆம் ஆண்டு வெளியானது. பின்பு `மௌனி கதைகள்’ என்ற தலைப்பில் `க்ரியா’ பதிப்பகம் 1967ஆம் ஆண்டு ஒரு தொகுப்பும் 1978ஆம் ஆண்டு மற்றொரு தொகுப்பையும் கொண்டு வந்தது. 1991ஆம் ஆண்டு `பீக்காக்’ பதிப்பகம் மூலமாக கி.அ. சச்சிதானந்தம் மௌனியின் எல்லாக் கதைகளும் அடங்கிய `மௌனி கதைகள்’ புத்தகத்தைக் கொண்டுவந்தார். இப்புத்தகத்தில் 1968ல் ஆனந்த விகடனில் மௌனி எழுதிய `செம்மங்குடி _ தன் ஊர் தேடல்’ கட்டுரையும் 1965 பி.எஸ். ராமையா மணிவிழா மலருக்காக எழுதப்பட்ட `எனக்குப் பெயர் வைத்தவர்’ கட்டுரையும் மற்றும் மௌனியை கி.அ. சச்சிதானந்தம் கண்ட நேர்காணலும் இடம்பெற்றது. பின்பு இன்றுவரை மௌனி கதைகள் மறுபதிப்பு காணவில்லை.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்