Sep 28, 2008

நினைவுப் பாதையில் பதுங்கியிருக்கும் நகுலன்

ramana_ps75@yahoo.com

தமிழ்ப் புனைவுபரப்பிலும், கவிதை புலத்திலும் நகுலனின் இடம் தனித்தது. தமிழ் நவீன கவிதையின் இரு பாதிக்கத்தக்க குணாம்சங்களாக பிரமிளையும் நகுலனையும் சொல்லலாம். பிரமிளுடையது, மரபின் செழுமையையும் சமத்காரத்தையும் எடுத்துக்கொண்டு படிம மொழியில் பேசுவது. நகுலனின் கவிதையை, மரபை clip_image002[3]அழைத்தும், மரபிலிருந்து விடுபட்டுக் கொண்டும் எழுதிக் கொண்ட நேர் கவிதை எனலாம். முதல் தலைமுறை நவீன கவிஞர்களை உருவாக்கிய சி.சு. செல்லப்பா அவர்களின் எழுத்துப் பத்திரிகையில்தான் நகுலனின் (டி.கே துரைஸ்வாமி) கவிதைகளும் தொடங்கின. எழுத்தில் எழுதிய பல கவிஞர்களின் கவிதைகள் இன்றைய வாசகன் படிக்கும்போது உணர்வெழுச்சியைத் தராமல் அலுப்பை தந்து கொண்டிருக்கும் வேளையில், மஞ்சள் ஒளி படிந்த அபத்த நிலையை எதிர்கொள்ளும் வினோதத்தை நகுலனின் கவிதைகள் தந்தபடியிருக்கின்றன.

நகுலனின் வீடு தமிழ்நாட்டுக்கு வெளியே திருவனந்தபுரத்தில் கெளடியார் ஹில்ஸ் சாலையில் நவீன பங்களாக்களுக்கு இடையில், கேரள நிலப்பரப்புக்கேயுரிய விசித்திரமான திடீர் இறக்கத்தில் உள்ளது. நிலம் சார்ந்து அவரின் வாழ்விடம் அன்னியப்பட்டிருப்பதற்கும், அவருடைய எழுத்துகளுக்கும் நுட்பமான உறவிருக்கிறது. வட்டார நாவல்களும், சிறுகதைகளும் வரவேற்புடன் எதிர்கொள்ளப்பட்ட காலத்தில்தான் இவரது புத்தகங்களும் வெளிவரத் தொடங்குகின்றன. ஆனால் நினைவுப்பாதை, நாய்கள் போன்ற இவரது நாவல்களிலோ, பிற புனைவுகளிலோ தமிழ் புனைவில் ஏற்கனவே உறுதிப்பட்ட செம்மையான கதை மாந்தர் உருவாக்கம், பின்னணி தொடர்ச்சி இவை எதுவும் இருக்காது. நகுலனின் வெவ்வேறு சாயல்களாகத்தான் எல்லா பாத்திரங்களும் இயக்கம் கொள்கின்றன. நினைவுப்பாதை நாவலில், ஒரே ஒரு ஞாபகம் மட்டுமே புனே என்னும் ஊரைப்பற்றிய கவனிப்பாக இருக்கும். (அந்த ஊரில் நிறைய பேர் சைக்கிளில் போய்க் கொண்டிருப்பார்கள்) ஒர் ஊர் பற்றி எந்த ஒட்டுதலும், விருப்பு, வெறுப்பும் அற்ற ஒரு இயக்கத்தை வைத்து சுட்டும் நகுலனின் விவரிப்பு, நகுலனின் ஜன்னலிலிருந்து அவரால் மட்டுமே பார்க்கத் தகுந்தது.

தமிழில் தத்துவ சாய்வு எழுத்துக்கள் நிறைய உண்டு. மனத்தடையற்று எண்ணங்கள் முன்னும், பின்னும் ஊடறுத்த நகுலனின் சுய அவதானத்திலிருந்து, தத்துவமும் புனைவும் ஒரே வெளியில் உருக்கொண்டன.

யாருமற்ற இடத்தில்

என்ன நடக்கிறது

எல்லாம்.

இந்தப் பார்வைதான் வட்டார கலாச்சாரத்தின் நினைவுகளிலிருந்து நகுலன் அணுகப்படாமல் இருப்பதற்குக் காரணம். கலாச்சாரம், தான் உருவாக்கியிருக்கும் தளைகளை எழுத்தாளன் ஊடறுக்கும்போது முதலில் பலத்த எதிர்ப்புணர்வை தெரியப்படுத்துகிறது. காலத்தில் கலாச்சாரம் தன் இறுக்கத்தை நெகிழ்த்துகையில் அந்த எழுத்தாளனின் உடலையும் பொருத்திக் கொள்ள சில சமிக்ஞைகளை அனுப்புகிறது. தன்னைப் போன்ற உடல்கள் புறக்கணிக்கப்படும் வேளையிலும், உரையாடல் என அர்த்தப்படுத்திக்கொண்டு - அர்த்தப்படுவதாக பாவனை செய்து கொண்ட - பதில் சமிக்ஞை செய்து தன்னை படைப்பாளி பொருத்திக் கொள்கிறான். வாழ்வையே அது தெரிவிக்கும் செய்தியின் அடிப்படையில் முப்பரிமாண கனவாக பார்க்காமல் வெளிறிய தன்மையை தொடர்ந்து கவனித்து வரும்போது கலாச்சாரமும் அரசியலும் அந்த விழிகளை ரகசியமாய் புறக்கணித்து விடுகின்றன. கலாச்சாரம் என்பதே ஜாதிகளின் நினைவின் மேலும், இரகசியக் கனவுகளின் மீதும் கட்டப்பட்டதுதானே.

கலாச்சாரம் ஸ்வீகரித்துக் கொள்ளாமல் காலம் தாண்டி இரகசியத் தன்மையை தக்கவைத்துக் கொண்டிருக்கும் நகுலனின் எழுத்து கார்ட்டூன் தன்மையையுடையது. வாழ்வை அதீத கான்வாஸில் பார்க்கும்போது பிறப்பும், மூப்பும், மரணமும் ஒரே கணத்தில் நடந்து, வளர்ந்து, முடிந்து பார்வையாளனின் புன்னகையை மட்டுமே தெரிவிக்க இயலும். வலிகளின், உபாதைகளின் மீதான புன்னகை. கோபம் பகைமை மீதான புன்னகை. கனவு, நம்பிக்கை மீதான புன்னகை. இருப்பு, சுவாதீனம் மீதான புன்னகை. நகுலன் சேரிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நகுலனின் கவிதைத் தொகுப்புகள்:

1. கோட் ஸ்டாண்ட் கவிதைகள்

2. மூன்று

3. ஐந்து

4. சுருதி

5. இரு நீண்ட கவிதைகள்

நகுலனின் உரைநடை:

1. நினைவுப்பாதை (நாவல்)

2. நாய்கள் ( '' )

3. நிழல்கள் ( '' )

4. வாக்குமூலம் ( '' )

5. நவீனின் டைரி ( '' )

6. நகுலனின் கதைகள்(சிறுகதைகள்)

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்