Oct 20, 2010

புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன்

பத்து வருஷங்களுக்கு முன் வெளிவந்த `ரப்பர்' நாவலிலிருந்து சமீபத்தில் வெளிவந்த `கன்னியாகுமரி' நாவல் வரை தமிழ் இலக்கிய உலகில் அதிகச் சர்ச்சைகளைjayamohan1ச் சந்தித்துக் கொண்டிருப்பவர் ஜெயமோகன். 1991ல் `கதா' விருதும், 1993ல் சமஸ்கிருதசம்மான் என்கிற தேசீய விருதும் ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டது.

  கதை, நாவல், விமர்சனம் என்று இதுவரை பதினொரு தொகுப்புகளைத் தமிழில் தந்திருக்கிற ஜெயமோகனது தாய்மொழி மலையாளம். நாகர்கோவிலுக்கு அருகில் தக்கலை என்னும் ஊரில்   தொலைபேசித் துறையில் வேலை செய்துவருகிறார்.

  நாகர்கோவிலின் நகர்ப்புறச் சந்தடியிலிருந்து ஒதுங்கி சற்று அமைதியாக இருக்கிற தெரு. புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கிற வீடு. மாடியில் ஓலைக் கீற்றுகளுடன் ஒரு கொட்டகை பக்கத்தில் அவரது மனைவி; ஓடியாடும் அவரது குட்டிமகள்.

  இப்படியான ஒரு சூழ்நிலையில் இலக்கியம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த பிரத்யேக மொழியுடன் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் நீண்டது அவருடனான பேட்டி:

கேள்வி: வாழ்க்கையின் எந்தவிதமான நெருக்கடி உங்களைப் படைப்புலகத்தை நோக்கி திருப்பியது. அல்லது உங்களது எழுத்துக்குப் பின்புலமாக இருந்திருக்கிறது?

ஜெயமோகன்: எனக்கு ஆரம்பத்திலிருந்து திருப்தியாகச் செய்யக்கூடிய காரியமாக எழுத்து தான் இருந்திருக்கிறது. சிறுவயதில் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த நாட்களிலேயே நான் நிறைய எழுதியிருக்கிறேன். பல புனை பெயர்களில் ஏகப்பட்ட கதைகள். சுமார் எண்பது வரை. பல பத்திரிகைகளில் எழுதியிருக்கிறேன். கதைக்கு ஐம்பது, அறுபது ரூபாய் கிடைக்கும். அந்தப் பணத்தில் போய் சினிமா பார்த்துவிட்டு புரோட்டா சாப்பிட்டு வருவேன். புரோட்டா மீது அப்போதே ஒரு காதல் உண்டு.

  நிறையப் படிப்பேன்; ஒரு கட்டத்தில் சாண்டில்யன் மீது ஒரு மோகம் இருந்தது; பிறகு கல்லூரி நாட்களில் எனது ஹீரோ ஜெயகாந்தன். இப்போது மனதில் அடுக்குகள் மாறினாலும் ஜெயகாந்தன் அதே நிலையில் இருக்கிறார்.

   இந்தக் காலகட்டத்தில் ஒரு நெருக்கடியான விஷயம் உருவாயிற்று. எனக்கு நெருக்கமான நண்பராக இருந்த ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனார். ரப்பருக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை `ஆஸிட்'டை அவர் குடித்திருந்தார். அது கொடூரமான மரணம். அவருடைய மரணம் எனக்குப் பெரிய பிரச்னையாக இருந்தது. நானும் அவனும் முந்தின தினம் இரவு வரைக்கும் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு அவன் கிளம்பிப் போனான். போய் ஒரு மணிநேரத்தில் இறந்து போய்விட்டான்.

   மரணத்தின் குரூரம்; மரணத்தின் மூலம் ஒருவன் முழுக்க இல்லாமல் போய்விடுகிற வெறுமை; எவ்வளவு தான் இரண்டு ஆத்மாக்கள் நெருக்கமாக இருந்தாலும் மரண அவஸ்தையைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு இருந்த இடைவெளி; இதெல்லாம் எனக்குப் பெரிய உறுத்தலை ஏற்படுத்தியது. மானசீகமாக நிலைகுலைந்து போயிருந்தேன். கல்லூரிக்குப் போகமுடியாமல், தூங்க முடியாமல் இருந்தேன். பிறகு படிப்படியாக மனசு தேறிவந்தேன்.

   இந்த நேரத்தில் ஆன்மீகம் மீது ஈடுபாடு ஏற்பட்டது. இன்றைக்கு வரை என்னை எழுத வைத்திருக்கிற கேள்விகள் இந்தக் கால கட்டத்தில் தான் உருவானதென்று நினைக் கிறேன். கல்லூரியில் கடைசி வருஷம் துறவு மனப்பான்மையில் எனது வீட்டை விட்டுப் புறப்பட்டேன். மதுரை திருவேடகம், திருச்சி என்று பல இடங்களில் அலைந்து கொண்டிருந்தேன்.

கே : ஏன் துறவு கொள்கிற அளவுக்கு மனநிலை சென்றது.

ஜெயமோகன் : என்னுடைய கன்னியாகுமரி நாவல் தவிர மற்ற என்னுடைய எல்லாப் படைப்புகளிலும் அடிப்படையில் மரணம், அதற்கு முன் உறவுகளுக்கு, இருத்தலுக்கு இருக்கிற அர்த்தங்கள்; அது குறித்த விசாரணைகள் புலப்பட்டிருக்கின்றன.

   பதினெட்டு வயதில் நமக்கு, மனசுக்குள் ``நான் நிரந்தரமாகப் பூமியில் இருந்து கொண்டிருக்கிற ஆள்; என்கிற உணர்வு இருக்கும். நான் மலையாளத்தில் எழுதின மாதிரி. எனக்குப் பின்னால் ஒரு ஒளித்தச்சன் என்னுடைய ஒவ்வொரு கணத்தையும் கல்லில் நிரந்தரமாகச் செதுக்கிக் கொண்டிருக்கிறான் என்கிற பிரமை இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. ஒரு குமிழி மாதிரி லேசில் எப்போது வேண்டுமானாலும் உடைந்து போவோம். அவ்வளவுதான்'' என்று மனசில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது. எனக்கு இருபத்தெட்டு வயசில் உருவான மனச் சித்திரம் மற்றவர்களுக்கு நாற்பத்தைந்து, ஐம்பது வயசுக்குப் பிறகு முதல் `ஹார்ட் அட்டாக்'கோ, முதல் `ஸ்ட்ரோக்'கோ வரும்போது வந்திருக்கலாம். இந்த உணர்வு வந்த பிறகு நமது வாழ்க்கை முறையே மாறிப் போவதைப் பார்க்க முடியும். இந்த உணர்விலிருந்து கிளம்புகிற கேள்விகள்தான் எனக்கு முக்கியம்.

   துறவு மனநிலையில் சுவாமி சித்பாவனந்தருடன் சில நாட்கள் இருந்தேன். வயது முதிர்ந்த நிலையில் அவர் பேசும் போது அவரது கைகள் நடுங்கும், என்னிடம் ``கால்மணி நேரம் தனியாகப் பேசவேண்டும்'' என்று சொன்னார், உள்ளே போய்ப் பேசினார்.

   ``நீ எடுத்துப் படிக்கிற புஸ்தகங்களையெல்லாம் பார்த்தேன். கதைப் புஸ்தகங்களைத்தான் பார்க்கிறே.. ஆன்மீகம், தியானம் எல்லாமே கணக்கு மாதிரி `லாஜிக்'கலான விஷயங்கள். நீ முழுக்க முழுக்கக் கற்பனையில் இருக்கே.. உண்மையை அடைவதற்கு ஒரு பயணம் உண்டேன்றால் அது உனக்கு இலக்கியம் வழியாகத்தான் சாத்தியம். இன்னொருவன் சங்கீதம் வழியாகச் செய்வான். துறவெல்லாம் உனக்கு ஒத்துவராது. வீட்டுக்குப் போய் விவசாயம், ஏதாவது பண்ணு'' என்றார்.

   எனக்கு அப்போது அவர் மீது கோபம் வந்தது. எனக்குச் சாப்பாடு போடத் தயங்கித்தான் அப்படிச் சொல்கிறார் என்று வியாக்கியானம் செய்து கொண்டு திருப்பராய்த்துறையில் போய்ச் சில நாட்கள் இருந்தேன். அங்கும் என்னை அதைரியப்படுத்திவிட்டார்கள். திரும்பி ஊருக்கு வந்த பிறகு ஒரு காலகட்டத்தில் ``அவர் சொன்னது உண்மை'' என்று தெரிய வந்தது. அந்த காலகட்டத்தில் நான் எழுத ஆரம்பித்தேன்.

கே : உங்களது குடும்பச் சூழ்நிலை அப்போது எப்படியிருந்தது

ஜெயமோகன் : என் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிற திருவரம்பு, குலசேகரத்திற்கும் திற்பரப்புக்கும் நடுவில் இருக்கிறது. எங்கம்மாவின் அண்ணன் பெரிய கம்யூனிஸ்ட். கம்யூனிஸ்ட் பின்னணியில் வந்தவர் எங்க அம்மா.

   எங்கம்மாவுக்கு தோப்பில் பாசியைத் தெரியும். ஈ.எம்.எஸ். ஸைத் தெரியும். எழுத்து கூட்டித் தானாகவே தமிழும், ஆங்கிலமும் கற்றுக் கொள்கிற அளவுக்கு அவங்களுக்கு தீவிரம் இருந்தது. அப்பா, அம்மா இருவருமே மாறுபட்ட குணாதிசயங்கள். அவர்களுக்குள் எவ்வளவுதான் தீவிரப் பிரியம் இருந்தாலும், அந்த பிரியம் முழுவதும் பாதி விஷமாக மாறிவிடும்.

  jayamohan3 எங்கம்மா பெரிய படிப்பாளி. தமிழ், மலையாளம், ஆங்கிலம் மூன்று மொழிகளிலுமே படிப்பார்கள். சில கதைகள் அம்மா எழுதி மலையாளத்தில் பிரசுரமாகியிருக்கிறது. எங்கப்பா அப்போதே ஐம்பது ரூபாய் வரை செலவழித்து அம்மாவுக்காக ஹெமிங்வேயின் நாவல்கள் எல்லாம் வாங்கி வருவார். ஆனாலும் என்ன காரணத்தாலோ அவர்களுக்கிடையில் கடுமையான உரசல் இருந்து கொண்டே இருந்தது. எங்கப்பாவுக்கு எங்கம்மா அவங்களோட அண்ணன் மீது வைத்திருந்த பக்தி மாதிரியான உணர்வைத் தாங்கமுடியவில்லை. எங்கள் வீட்டில் நல்ல புஸ்தகச் சேகரிப்பு இருந்தது. இரண்டாயிரம் புத்தகங்கள் வரை இருந்தன. எங்கம்மாவுக்கு தி. ஜானகிராமனை, ஜெயகாந்தனையெல்லாம் புத்தகங்கள் வழியாகத் தெரியும்.

   எங்க அம்மா தோட்டத்தில் புல் பறித்துக் கொண்டிருப்பார்கள். கூடவே நானும் புல் பறிப்பேன். பேசிக் கொண்டே பறிப்போம். ஆங்கில நாவல் பற்றி அம்மா பேசிக் கொண்டு புல் பறிப்பது நடக்கும். அபூர்வமாக ஒரு பஸ் வந்து போகிற அந்தக் குக் கிராமத்தில் புல் பறித்தபடி இப்படியொரு இலக்கிய சம்பாஷணை நடக்கும் என்று மற்றவர்கள் கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியாது. தாக்கரே, டிக்கன்ஸ் என்று அவர்களுடைய ரசனை இருந்தது. தளம் எனக்கிருந்தது. டால்ஸ்டாய், தாஸ்தாவ்ஸ்கி நாவல்களை எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் போது மலையாளம் வழியாகப் படித்திருக்கிறேன். ஒன்பதாவது வகுப்பு படிக்கும் போதுது அம்மா வழியாக மலையாளம் எழுதப் படிக்கக் கத்துக் கிட்டேன். அதுவரை பள்ளியில் பாடமொழி தமிழ்தான்.

   வீட்டில் மலையாளம் பேசிக் கொண்டாலும், தமிழ் இலக்கியம் பற்றிப் பேசும் போது தமிழில் பேசிக் கொள்வோம். எங்க அம்மாவும் நானும் தனி உலகத்தில் இருந்தோம். மற்றவர்களுக்கு இப்படியொரு உலகம் இருப்பதே தெரியாது.

   இப்படி இருந்த என்னுடைய அம்மா தற்கொலை செய்து கொண்டது எனக்குப் பெரிய அடியாக இருந்தது. அம்மா அம்மாதிரியான வழியைத் தேர்ந்தெடுக்கக்கூடும் என்பதற்கான சிறுபொறி கூட எனக்குத் தெரியாது. என்னால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மிகக்பெரிய துக்கங்கள், ஏமாற்றங்கள் இருந்தன என்பதெல்லாம் பிறகு தான் எனக்குத் தெரிந்தது. அவர் இறந்த பிறகு கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்களையெல்லாம் பார்த்த எனக்கு அம்மாவின் மரணம் பலத்த அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வருஷம் வரைக்கும் இந்தச் சம்பவம் என்னைத் தூங்கவிடாமல் பண்ணியது.

   எங்கப்பா மீது எனக்கு விருப்பும் வெறுப்பும் கலந்த மரியாதை உண்டு. ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அப்பா கறாரானவர். கல்லூரி நாட்களில் என்னை எந்த விதத்திலும் அவர் எதற்கும் வற்புறுத்தினதே கிடையாது. ஆனால் எங்கப்பா கடைப்பிடித்த ஒழுக்கங்களுக்கு நானும் வந்து சேர்ந்திருந்தேன். அவரும் எங்கம்மா மாதிரியே தற்கொலை செய்து கொண்டார். கடும் மன அவஸ்தை, நெருக்கடி. இருந்தும் எந்தப் பழக்கங்களுக்கும் ஆட்படாமல் நான் தனியான ஆளாக இருந்தேன். சோகமான மனநிலை தான் எப்போதும்.

   ஒரு முறை ரயிலில் போய்க் கொண்டிருந்தபோது அருகே இருந்த பயணியின் கையில் ``ஜே.ஜே. சில குறிப்புகள்'' நாவலைக் வைத்திருந்தார். அவரிடம் நாவலை வாங்கிச் சீக்கிரமே படித்து முடித்துவிட்டேன். எனக்கு மனதில் பெரிய அதிர்வைக் கொடுத்தது அந்த நாவல். படித்ததும் எழுந்த கேள்விகளுடன் சுந்தர ராமசாமிக்கு ஒரு கடிதம் எழுதினேன். எதிர்மறையான கடிதம்தான். அந்த நாவலில் இருந்த தேடலும், தவிப்பும் எனக்கு முக்கியமானதாகப் பட்டது.

கே : அப்போதிருந்த உங்களது மனநிலைக்கு நாவல் ஒத்திருந்ததா.

ஜெயமோகன் : ஆமாம். உதாரணமாக, `குடிக்கிறேன்-அதுவும் தற்காலிகத் தற்கொலைதான்' என்று அந்த நாவலில் வரும் வாக்கியம் என்னை உலுக்கியெடுத்துவிட்டது. நான் உணர்கிற உலகத்திற்கு நெருக்கமானதாக அந்த நாவல் இருந்தது. சுந்தர ராமசாமியை நேரடியாகச் சந்தித்துப் பேசினேன். ரொம்பவும் சகிப்புத் தன்மையுடன் இருந்தார் அவர். நான்தான் அதிகம் பேசுவேன். ``உங்களிடம் ஒரு கலை இருக்கிறது. நீங்கள் எழுதவேண்டும். `ஆர்டிவெய்ங்' என்கிற சைக்கியாட்ரிஸ்ட் ``வேலை செய்வதுதான் மனநெருக்கடிக்குப் பெரிய சிகிச்சை'ன்னு சொல்றார். அதனால் எழுதுங்கள்'' என்று சொன்னார். உடனே அவருக்குக் கத்தை கத்தையாகக் கடிதங்கள், சிறு கதைகள், குறுநாவல்கள் எழுதி அனுப்பினேன். இதில் ஒரு கவிதை அப்போது வெளிவந்து கொண்டிருந்த `கொல்லிப்பாவை' என்கிற சிறு பத்திரிகையில் வெளியானது. மறுபடியும் எழுத்துலக பிரவேசம் ஆரம்பித்துவிட்டது.''

கே : படைப்பு ரீதியாக இயங்க உந்து சக்தியாக வேறு யார் அப்போது இருந்தார்கள்.

ஜெயமோகன் : நான் எழுத்தாளர்களைச் சந்திப்பதில் ரொம்பவும் கூச்சம் உள்ள ஆள். சந்தித்த முதல் எழுத்தாளர் சுந்தர ராமசாமிதான். அவருக்கு மேற்கத்திய மனம் உண்டு. அவர் அதைச் சொல்ல மாட்டார். எனக்கும் அவருக்கும் குரு சிஷ்ய உறவு என்று சொல்லிக் கொள்வதில் எனக்குத் தயக்கம் கிடையாது. புத்தகங்கள் நூலகங்களில் இருக்கலாம்; கருத்துக்கள் இருக்கலாம்; ஆனால் சிந்திப்பதற்கான வழிமுறையை ஒரு தனி நபர்தான் உருவாக்கிக் கொடுக்க முடியும். அவர் வாழ்ந்து காண்பித்தால்தான் அவரது லட்சியம் இன்னொருவரை வந்து சேர முடியும். அவர் அந்த மாதிரி அவரைக் குருவாக கண்டெடுத்த விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவன்தான்.

கே : மலையாளச் சாயல் படிந்த மொழி நடை உங்களுடையது, இந்த மொழியைக் கூர்மைப் படுத்தியதில் யாருக்குப் பங்கிருக்கிறது.

ஜெயமோகன் : என்னுடைய சமகால எழுத்தாளர்களை விடக் குறைவான சமஸ்கிருத வார்த்தைகள் கலந்த நடையைத்தான் நான் உபயோகப் படுத்துகிறேன். கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், பிரேம் போன்றவர்களின் படைப்புகளைவிட என்னுடைய படைப்புகளில் சமஸ்கிருதப் பிரயோகம் குறைவுதான்.

கே : ஆனால் உங்கள் நாவல்களில் விஷ்ணுபுரத்தில் அதன் பிரயோகம் அதிகமாக இருக்கிறதே.

ஜெயமோகன் : விஷ்ணுபுரத்தைப் பொறுத்த வரை அது சமஸ்கிருதத்தைப் பற்றின நாவல். அந்தச் சூழலையும், சிந்தனைகளையும் முன்வைக்கிற நாவல். அதற்கேற்றபடி உணர்வு பூர்வமாக சமஸ்கிருதம் அதில் கையாளப்பட்டிருக்கிறது. என்னுடைய படைப்பிலக்கியத்திலும், சிந்தனையிலும் நான் சார்ந்திருக்கிற மொழி சுந்தர ராமசாமியின் மொழி. இப்போது அதன் தாக்கம் சற்றுக் குறைந்திருந்தாலும், இன்றும் அவரது தாக்கம் என் படைப்பு மொழியில் உண்Êடு. எப்படி சுந்தர ராமசாமியிடம் புதுமைப் பித்தன் இருக்கிறாரோ, அது போல ஜெயமோகனிடம் சுந்தர ராமசாமி இருக்கிறார். அடுத்து என் மொழியைப் பாதித்தவர்கள் அசோகமித்திரனும், சுஜாதாவும்.

   மொழியைக் கனகச்சிதமாகப் பயன் படுத்தியிருப்பவர் சுஜாதா. அவரைப் பற்றித் தமிழில் உருவாகியிருக்கிற சித்திரம் வேறுமாதிரியானது. வெறும் கணேஷ்-வசந்த் எழுத்தாளராக ஒரு கும்பல் பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கும் அவர் தீனி போடுகிறார். சர்வதேசத் தரம் வாய்ந்த இருபது கதைகளுக்கு மேல் அவருடைய கதைகளிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொடுக்க முடியும். அந்த அளவுக்கு நல்ல சிறுகதைகளை எழுதின கதாசிரியர்கள் தமிழில் அதிகபட்சம் பத்து, பதினைந்து பேர் தான் இருக்கிறார்கள். இதை சிறுகதையின் வரலாறு தெரிந்த யாரும் மறுக்க முடியாது. சுஜாதாவால் பெரிய அளவில் ஆழ்ந்த கேள்விகளையும், தேடலையும் உருவாக்க முடியாது. அந்த மாதிரியான விசாரணை அவரிடத்தில் இல்லை. ஆனால் வாழ்க்கையின் சூட்சமங்களை உணர்ந்து உள்ளே போகிற நல்ல எழுத்தாளர் அவர். `கமர்ஷியல்' எழுத்தாளர் என்று அவரைப் புறக்கணித்துவிடமுடியாது.

   சுஜாதாவின் மொழி தமிழின் மிக முக்கியமான மொழி, இருபத்தொன்றாம் நூற்றாண்டின் குணாம்சங்களைக் கொண்ட மொழி அது. அதில் குறிப்பிட்ட ஒழுங்கு உண்டு. நுட்பம் உண்டு. நளினம் உண்டு. நான் கூர்ந்து படிக்கிற எழுத்தாளர் அவர்.

   அவருடைய தொடர்கதை ஒன்று, கணேஷ்-வசந்த் கதைதான். போக்குவரத்து நெருக்கடி. இவர்கள் காரில் உட்கார்ந்திருக்கிறார்கள். ``அப்போது சோகையாய் ஒரு ஊர்வலம் கடந்து போயிற்று'' என்று எழுதியிருப்பார். அது மனதில் ஏற்படுத்தக்கூடிய சித்திரம் எப்படிப்பட்டது ஆக்ரோஷமில்லாமல் ஒப்புக்கு ஒரு ஊர்வலம் போவதை `சோகை' என்கிற ஒரு நுட்பமான வார்த்தை உணர்த்தி விடுகிறது. இதுதான் அவருடைய பாணி.

   சமகாலத்தில் சட்டத்தில், விளம்பரத்தில், சினிமாவில், சினிமாப் பாட்டில் ஒரு விதத் தமிழில், இன்றைய `போஸ்ட் மாடர்னிச' சூல்நிலையில் இந்த விதமான எல்லா மொழிநடையையும் படைப்புக்குள் கொண்டு வருவது என்பது ஒரு சவால். இதை சுஜாதாவால் எழுதமுடியும். அதற்கடுத்து என்னாலும் எழுத முடியும்.

கே : மொழி சம்பந்தமான கவனம் எப்போதும் உங்களிடம் இருந்து கொண்டிருக்கிறதா. மொழி நடையை முன்பே தீர்மானித்து விடுகிறீர்களா.

ஜெயமோகன் : அப்படி இல்லை. எழுதும்போது தான் அதற்கான திறமைகள் நம்மிடம் இருப்பது தெரியவருகிறது. நாய் துரத்தும் போதுதான் நம்மால் இவ்வளவு தூரம் தாண்டமுடியும் என்பது தெரிகிற மாதிரி. ஆனால் எப்போதும் ஒருவிதக் கவனம் இருந்து கொண்டிருக்கிறது. நான் சாலையில் போகும்போதுகூட எல்லா போஸ்டர்களையும், கண்ணீர் அஞ்சலி, காதனிவிழா போஸ்டர்கள், அதில் தெரிகிற வித்தியாசம் என்று எவ்வளவோ விஷயங்கள் உன்னிப்பான கவனத்துடன் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன.

   இந்த அவதானிப்பையும், மொழியின் பிரயோகத்தையும் ஒன்றிணைக்க வேண்டும். என்னுடைய `பின் தொடரும் நிழல்' நாவலைப் பார்த்தால் அதில் பனிரெண்டு வகையான மொழிநடை இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துண்டுப் பிரசுர மொழி நடை இருக்கிறது.

கே : பொதுவாக இப்போது சிறு பத்திரிகைகளில் எழுதுபவர்களிடம் இறுக்கமான மொழிநடை இருக்கிறது. இந்த மொழிநடைச் சிக்கலை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்.

ஜெயமோகன் : எனக்கும் மற்ற எழுத்தாளர்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் எனக்குப் புதுவகையான படைப்பை உண்டாக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் கிடையாது. அப்படி நான் எழுதவும் மாட்டேன். மரபிலிருந்து புதிது புதிதாக எழுகிற கேள்விகள்தான் என்னை எழுத வைக்கின்றன. அதற்கேற்ற வடிவம்தான் முக்கியம். என்னைப் பொறுத்தவரை படைப்பு ஒரு விசாரணைதான்.''

    ஒரு புதுவகை நாவலை எழுதிவிடலாம் என்கிற எண்ணம் அல்ல `பின் தொடரும் நிழலில்' நாவலை நான் எழுதக் காரணம். ஒரு தத்துவத்துக்கும் வன்முறைக்கும் உள்ள தொடர்பு, லட்சக்கனக்கானவர்கள் சாகிற அவலம், வரலாறு என்பதுதான் என்ன என்கிற கேள்விகள் தான் அந்த நாவலை எழுதக் காரணம்.

கே : துறவு நிலைக்கான தேடுதல் மனநிலை உங்களுக்கு இருப்பதை முதலில் Êதெரிவித்திருந்தீர்கள். துறவு நிலைக்கான அந்த தூண்டுதலும், வேகமும் படைப்பு நீதியாக நீங்கள் இயங்க ஆரம்பித்த பிறகு சமப்படுத்தப்பட்டிருக்கிறதா?''

ஜெயமோகன் : விஷ்ணுபுரம், எழுதுகிற நேரத்தில் ரொம்ப காலம் என்னை அலைக்கழித்த அடிப்படையான கேள்விகளையெல்லாம் அந்த நாவல் வழியாகப் பதிவு பண்ணிவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. அதன் கதா பாத்திரங்கள் எல்லாம் என்னுடைய கிளைகள் தான். நான் அலைந்து திரிந்த காலமெல்லாம் அதில் இன்னொரு விதத்தில் பதிவாகியிருக்கிறது. என்னுடைய படைப்புகள் எல்லாமே என்னுடைய விசாரணையும், என்னுடைய துக்கங்களும்தான். ஏதோ இலக்கியம் படைக்க வேண்டும் என்பதெல்லாம் என் நோக்கம் அல்ல. திரும்பத்திரும்ப நான் சொல்வது இதைத்தான். புத்தருக்குத் தியானம் எப்படியோ அப்படி எனக்கு எழுத்து.

கே : ஒரு படைப்பை எழுதி முடித்த பின்பான மனநிலை எப்படி இருக்கும்?

ஜெயமோகன் : பெரும்பாலும் செய்து முடித்த ஒரு வேலை இன்னொரு வேலையைத் துவங்கத் தூண்டதலாக இருக்கிறது அல்லது கட்டாயத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லலாம். விஷ்ணுபுரத்தில், விஷ்ணு என்கிற படிமம் பிரமாண்டமான கொந்தளிப்புடன் எனக்குக் கிடைத்த படிமம். அந்த அநுபவத்தை என்னால் மறக்க முடியாது. நான் உணர்ந்த அந்தப் பிரம்மாண்டம் அந்த நாவலில் இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். அது ஒரு வகையான பிரபஞ்சத் தரிசனம். ஆனால் நாவல் முடியும்போது நீலியின் பாதங்களுக்குக் கீழே சின்னக் குமிழி மாதிரி கோபுரம் உடைந்து போய்விட்டது. அவ்வளவுதான் விஷ்ணு. நாவல் முழுக்கவும் ராஜகோபுரத்தைப் பார்ப்பவர்கள் அதலபாதாளத்தில் உடைந்து போகிற கோபுரத்தைப் பார்ப்பதில்லை.

   இந்த நீலி யார் என்று பார்த்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலநூறு வருஷங்களாக இருக்கிற பழங்குடி தெய்வம். என்னுடைய குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் நான் பத்மநாப சுவாமி கிட்டே போய் வேண்டிக்கொள்ளமாட்டேன். இந்த மாதிரி மேலாங்கோட்டை அம்மன் கிட்டேதான் வேண்டிக் கொள்ளமுடியும். என்மனது அங்கே தான் இருக்கிறது. அந்த அம்மனைத்தான் என்னால் கடவுளாக ஏற்றுக் கொள்ள முடியும். என்னுடைய தெய்வம் நாக்கில் ரத்தம், கையில் சூலாயுதம், கோவில் பலி என்று தான் இருக்கிறது. என் முன்னோர்கள் போன அந்த வழியை விட்டு நான் வேறு வழியில் போக முடியவில்லை. ஆக விஷ்ணு எனக்கு வெளியிலிருந்து வந்த ஒரு விஷயம் தான். இந்தப் பின்னணியில் விஷ்ணுபுரம் முடிவதைப் பார்க்கும் போது எனக்கு அது ஒரு கண்டுபிடிப்பாகவும் இருக்கிறது.

கே : சிறுதெய்வ வழிபாடுகள் பற்றி சொன்னாலும் கூட, விஷ்ணு என்கிற விஷயம் இந்துமதக் கோட்பாடு சார்ந்து அரசியலாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் இந்துமதத்தை நீங்கள் தூக்கிப் பிடிக்கிறீர்கள் என்கிற குற்றச்சாட்டு வருகிறது

ஜெயமோகன் : முதலில் இந்த மாதிரியான விமர்சனம் விஷ்ணுபுரத்தைச் சரியாகப் படிக்காதவர்களிடமிருந்து வருகிற விமர்சனம். நாவலில் `விஷ்ணு' என்ற ஒன்றே கிடையாது. விஷ்ணுவின் பல்வேறு முகங்களைப் பிரித்துக் காட்டி முடிவில் ஒன்றுமில்லாமல் நீலி மட்டும் மீந்திருக்கிற நிலையில் முடிகிறது நாவல். விஷ்ணுவை ஆதார மூர்த்தியாக்கி மையப்படுத்துவதை இந்த நாவல் செய்யவில்லை. அவரை மையத்திலிருந்து விளிம்புக்கு நகர்த்தி இல்லாமல் பண்ணுகிறது. இது இந்த நாவலைப் படிக்கிற எந்தக் குழந்தைக்கும் கூடத் தெரியும் .

கே: ``பின் தொடரும் நிழலின் குரல்'' நாவல் குறித்து மார்க்சீயத்திற்கு எதிரான விரோதி என்கிற குற்றச்சாட்டு உங்கள் மீது வைக்கப்படுகிறதே

ஜெயமோகன் : மலையாள எழுத்தாளர் எம். கோவிந்தனின் பிரசித்தி பெற்ற வாக்கியம் ஒன்று உண்டு. ``அறிவுக்கு எல்லையுண்டு, எதிர்ப்புமுண்டு, அறிவு இல்லாமைக்கு இரண்டுமே கிடையாது.'' இது நமக்குப் பொருந்தும். எந்தவிதமான அறிவுக்கும் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் அது நம்மைப் பாதிக்கும். தமிழ்ச் சூழலில் எதிர்ப்பு, அல்லது கோபம் அல்லது குறைந்த பட்ச உறுத்தலை ஏற்படுத்தினால் உடனே அதற்கு ஒரு பிம்பம், ஒரு முத்திரை வந்துவிடுகிறது. எந்தத் தீவிரமான படைப்பாளி வாழும் காலத்தில் எதிர்ப்பைச் சம்பாதிக்காமல் இருந்திருக்கிறான்

   `பின் தொடரும் நிழலின் குரல்' நாவலைப் பற்றி உருவாகிற சித்திரமும் நாவலைப் படிக்காதவர்கள் உருவாக்குகிற சித்திரம் தான். நாவலைப் படிக்காமலே அறிவுஜீவித் தனமாகப் பேசும் ஒரு கும்பல் தமிழ்நாட்டில் இருக்கிறது. ``முதலில் இது மார்க்சீயத்தைப் பற்றின நாவலே அல்ல. சோவியத் ரஷ்யா பற்றின நாவலும் கிடையாது. லட்சியவாதம் என்பது எப்படித் தவிர்க்க முடியாமல் வன்முறைக்குப் போகிறது கோடிக் கணக்கான அழிவை உண்டாக்குகிறது. சிறிது காலம் கழித்து அந்த லட்சியவாதம் தப்பு என்றால் இந்தக் கோடிக் கணக்கான அழிவுக்கு என்ன பதில் இந்தக் கேள்விகளைத்தான் பக்கம் பக்கமாகப் அந்த நாவல் பேசுகிறது.

   இவர்கள் எழுப்புகிற சந்தேகம் எதுவும் வந்துவிடக்கூடாது என்பதால் அந்த நாவலிலேயே எஸ். எம். ராமசாமி என்கிற கதாபாத்திரம் நேரடியாக இதை விரிவாகச் சொல்லி விடுகிறது. பிறகும் இந்த நாவல் சோவியத் ரஷ்யாவைப் பற்றிப் பேசுகிறது என்று சொன்னால் உண்மையில் இந்த நாவலை எழுதுவதற்குத் தூண்டுதலாக இருந்தது சோவியத் ரஷ்யாவே கிடையாது. நாவலின் முழுக் கருவே இலங்கை தான். இந்தக் கேள்விகள் அனைத்தும் இலங்கையிலிருந்தே எழுகின்றன. அதை முன் வைத்துதான் இந்த நாவலை எழுதினேன்.''

கே : தமிழ் இலக்கிய உலகில் வாசகர்கள் என்பது சக எழுத்தாளர்கள்தான். இதை மீறி எழுத்தாளர்கள் அல்லாத ஒரு வாசகர் கூட்டம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதா.

ஜெயமோகன் : சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு விதத்தில் என் நாவல்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை நான் சந்திக்கிறேன், யாரோ எங்கோ இந்தப் படைப்புகளை இயல்பாக, எந்த முன் அபிப்பிராயங்கள் இல்லாமல் படிக்கிறார்கள், கடிதம் எழுதுகிறார்கள். சிறு பத்திரிகை வட்டாரத்திற்கு வெளியேதான் உண்மையில் வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் நிஜமாகவே படைப்புகளைப் படிக்கிறார்கள்.

   `விஷ்ணுபுரம்' வந்த பிறகுதான் சிறு பத்திரிகை வட்டாரத்தைத் தாண்டி நான் வெளியே போனேன். அவர்கள் கடிதம் எழுதுகிறார்கள், சொந்த அநுபவத்துடன் எழுதுகிறார்கள். அது ஆரோக்யமாக இருக்கிறது.

கே : உங்களது படைப்புகளில் வெளித் தெரிகிற ஆன்மீகச் சாயல்; அதன் பின்னணி எங்கிருந்து உருவானது

ஜெயமோகன் : எனக்கு ஆன்மீக ரீதியான விசாரணையும், தர்க்கமும் தான் இருக்கிறதே ஒழிய, ஆன்மீக நிலைப்பாடு கிடையாது. ஆன்மீகத்தை எனது படைப்புகளில் ஒரு விடையாகச் சொல்லவில்லை, முடிவும் சொல்லவில்லை. அதற்கான தகுதியும் எனக்குக் கிடையாது.

    எனக்கு ஆன்மீக ரீதியாக ஒரு தேடல் சாத்தியப்பட்டிருக்கிறது, போகிற வழியில் ஒன்று மாற்றி ஒன்றாகப் பல வாசல்கள் திறக்கின்றன. ஃபூக்கோ பற்றி, நாராயண குரு பற்றி, கதக்களி பற்றி, விவேகானந்தர் பற்றி, தாந்திரீக மரபு பற்றித் தெரிந்த முழுமையான நபரைப் பற்றின தேடல் என்னிடம் இருந்து கொண்டே இருக்கிறது...''

கே: இருந்தாலும் எந்த விதமான ஆன்மீக நோக்குடன் உங்களால் ஒத்துப் போக முடிகிறது.

ஜெயமோகன் :ஸ்ரீநாராயணகுருவிடம் போகிற மாணவர்களைப் பார்த்தாலே தெரியும், கேரள நாஸ்திக மரபில் வந்த அய்யப்பன். அவருடைய முக்கியமான சீடர். ``ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு தெய்வம்'' என்று நாராயண குரு சொல்லும்போது,`` மதம் வேண்டாம்; சாதி வேண்டாம்; தெய்வம் வேண்டாம்' என்று அதே மேடையில் சொல்கிறார் சீடர். நாராயண குரு இறப்பதற்கு முன்பு தமது நிறுவனங்களுடைய வாரிசாக நியமிக்க விரும்பியதும் இதே அய்யப்பனைத் தான்; எப்படி முழுக்கத் தன்னை நிராகரிக்கிற ஒருவரைச் சீடராக நாராயண குரு ஏற்றுக் கொள்கிறார். இந்தச் சுதந்திரம் தான் ஆன்மீக விசாரணையின் உலகம்.

   இதே மாதிரி நித்யசைதன்ய யதியின் புத்தகத்தில் ஒரு வரி, ``அழகு அனுபவம் என்பது ஒருவகையில் அறிவதின் அனுபவம் தான்...'' நான் மறுத்தால் அவர் `உண்டு' என்று சொல்வார். இப்படியே தர்க்கம் போய்க் கொண்டிருக்கும், எப்போதும் சுலபமான பதிலுக்கு உட்காரவிடாதபடி பண்ணி விடுவார், எப்போதும் தொடர்ந்து இயக்கம் இருந்து கொண்டிருக்க வேண்டும், ஒரிடத்தில் சோர்ந்து உட்கார்ந்து விடக் கூடாது என்பார். தொடர்ச்சியாக துருவித்துருவி விசாரித்து அறிகிற இந்த மரபு இந்து மரபு அல்ல, பௌத்த மரபு. எனக்கு இந்த மரபுடன் மிகவும் நெருங்க முடிகிறது. ஆன்மீகம் என்பது மதத்துடனும், கடவுளுடனும் தொடர்புடையது அல்ல. அடிப்படையான கேள்விகளின் விடையாகவே `கடவுள்' பிறந்தார் அல்லது வெளிப்பட்டார் அடிப்படையான கேள்விகளுக்கான சில விடைகளை நம்பிக்கைகளாகவும், சடங்குகளாகவும் மாற்றும் போதே மதம் பிறந்தது. ஆகவே, ஆன்மீகமும், மதமும் பின்னிப் பிணைந்துள்ளன. ஆன்மீகத் தேடல் உள்ளவன் கடவுளையும். மதத்தையும் கூர்ந்து கவனிப்பான், இருந்தாலும் அவை வேறு வேறு என்றும் அறிந்திருப்பான். எனக்கு ஏன் இப்படி நிகழ்கிறது என்ற இடத்திலிருந்து தான் படைப்பு தொடங்குகிறது. அது விரிவடையும் போது அந்தப் படைப்பும் ஆழமுடையதாகிறது, இப்படித்தான் ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கென்று ஒரு பிரபஞ்சத் தரிசனத்தை உருவாக்கியிருப்பான்.

கே: பல விஷயங்களில் தன்னை மற்றவர்களிடமிருந்து விலக்கிச் சுருக்கிக் கொள்வது தான் பலருக்கு ஆன்மீகமாக இருக்கையில், உங்கள் செயல் பாட்டைத் தீவிரப் படுத்துவதற்கான உந்துதலை அதிலிருந்து உங்களால் பெறமுடிந்திருக்கிறதா.

ஜெயமோகன் : பிரபஞ்சத்துக்கு அப்பால் இருக்கிற ஒன்றைப் பற்றின தேடல் என்று ஆன்மீகத்தை வியாக்கியானம் செய்யக்கூடியவர்கள் ஒரு புறம் இருக்கிறார்கள். வாழ்க்கையின் உள்ளச் சத்தை, அதன் சாராம்சத்தைத் தேடுகிறவர்களும் இருக்கிறார்கள். நித்ய சைதன்ய யதிக்கு அப்போது எழுபத்தைந்து வயது. ஒரு `ஸ்ட்ரோக்' ஏற்பட்ட பிறகும் அந்த வயதில் வீணை கற்றுக் கொள்கிறார். ஒரு கை இயங்க முடியாத நிலையிலும் தணியாத வேகத்துடன் இன்னொரு கையால் வீணை வாசிக்கக் கற்றுக் கொள்கிறார். எப்படியும் ஆறு மாதத்தில் அவர் இறந்து விடுவார் என்று டாக்டர்கள் சொல்லியும் இரண்டு கீர்த்தனையாவது அதற்குள் கற்று வாசித்துவிட முடியாதா என்று மனசுக்குள் வேகம். இந்த அளவுக்கு வாழ்க்கையின் மீது இருக்கிற பிரியம் தான் என்னோட ஆன்மீகம், ஒரு வாழ் நாளில் நூறு வாழ் நாட்கள் வாழ்வதற்குச் சமமான இந்தப் பிரியமும், வேட்கையும் தான் முக்கியம்.

   `ஜாக்ரதா' `கிரத்தா' என்ற இரு சொற்கள் முறையே உபநிடத மரபாலும், பௌத்த மரபாலும் ஆழ்ந்த அகவிழிப்பு நிலைக்குரிய கலைச் சொற்களாக முன் வைக்கப் படுகின்றன. ஆனால் தகவல் ரீதியான அறிதலுக்கு அப்பால் உள்ள அனைத்து அறிதல்களும் அந்த அகவிழிப்பு நிலையிலேயே சாத்தியமாகின்றன. அவற்றை அறிவது ஒரு அறிவுலகப் பயணம்.

   என் அநுபவத்தை இதற்குச் சான்றாகக் கூறமுடியும். எப்போதும் படைப்பு இன்னதென்று தெரியாத பதற்றமாகவோ, அமைதியில்லாத தன்மையிலோ தான் தொடங்குகிறது. என்ன என்று திரும்பித் திரும்பிக் கேட்டுக் கொள்கிறோம். தொலை தூரத்தில் கேட்கிற பழைய பாடல், பலவிதமான ஏக்கம், துயரம், நெகிழ்ச்சி, உவகை எல்லாம் கலந்த உணர்வுகளின் கலவையாக மனதை அலைக்கழிப்பது போல ஒரு உணர்வு. இது சில சமயம் ஒரிரு நாட்களுக்கு மேலும் நீடிக்கலாம். பிறகு ஒரு தொடக்கம் கிடைக்கிறது. அந்தத் தொடக்கத்தை மனதில் போட்டு மீட்டி ஒரு கட்டத்தில் மளமளவென்று எழுத ஆரம்பிப்பேன். எழுத எழுத கதை வளர்ந்து முழுமை பெறும், அது ஒரு போதை மாதிரி. ஒரு கனவு நம்மில் பிறப்பது மாதிரி.

   ஒரு கதையும் அமைப்பும், முடிவும் முன்னமே நமக்குத் தெரிந்திருந்தால் அது நல்ல கதையே அல்ல. அது நிகழவேண்டும், எழுதி முடித்த பிறகு `நானா எழுதினேன்' என்றிருக்க வேண்டும். கனவு நம்மிலிருந்து தான் வருகிறது. அது வரும் வரை அதை நாம் அறிவதில்லை. வந்த பிறகு வியப்பும், சில சமயம் அதிர்ச்சியும், பரவசமும் அடைகிறோம். படைப்பு மொழியும். ஒரு வகைக் கனவு தான். படைப்பு ஓர் அகவிழிப்பின் மூலம் பிறக்கும் அக உண்மை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

கே: தமிழின் மற்ற எழுத்தாளர்களை விட, எழுதத்துவங்கிய குறுகிய காலத்திற்குள் கதை, நாவல்கள், கட்டுரைகள் என்று அதிகமாக எழுதிவிட்டீர்கள் இந்த வேகத்திற்குக் என்ன காரணம்?

ஜெயமோகன் : நீங்கள் கடலில் விழுந்துவிட்டால் கரை சேரும் வரை சோர்வடைய முடியாதில்லையா? கடலுக்கு நடுவில் தீவில் ஓய்வாக நின்று கொண்டிருக்கிறவர்கள் நின்று கொண்டிருக்கலாம். இது தான் மற்ற எழுத்தாளர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் ஏன் நிறைய எழுதவில்லை என்றால் அவர்களது வாழ்க்கையில் எழுத்துக்குக் கொடுத்திருக்கிற இடம் குறைவு. எவ்வளவோ விஷயங்களுக்கிடையில் அவர்களுக்கு சின்ன ஓய்வு மாதிரி, எப்போதாவது `தண்ணி' அடிக்கிற மாதிரி கதை, கவிதைகள் எழுதுவார்கள். அவர் அவர்கள் போக முடிகிற தூரம் அவ்வளவுதான்.

   என்னுடைய எழுத்து அப்படியல்ல. நான் தூங்குகிற நேரத்தில் கூட எழுத்தைப் பற்றி, எழுதுவதைப் பற்றித்தான் கனவு காண்கிறேன். அதைப் பற்றிதான் யோசிக்கிறேன். எழுதுகிறேன். நண்பர்களுக்கு நாற்பது, ஐம்பது பக்கங்களில் சாதாரணமாகக் கடிதம் எழுதுகிறேன். எந்த நல்ல படைப்பைப் படித்தாலும் உடனடியாக அவர்களுக்கு விரிவான கடிதம் எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்கு எழுதுகிறேன். இதில் எந்த விதமான அலுப்புமில்லை. உற்சாகம் கூடுகிறது. என்னுடைய காரியம் என்பதால் இதில் என்ன சோர்வு

   இப்போது என்னிடம் முழுமை பெறாத நிலையில் நான்கு நாவல்கள் இருக்கின்றன; பின் தொடரும் நிழலின் குரல் வெளிவந்த நான்கு மாதங் களுக்குள் `கன்னியாகுமரி' நாவல் எழுதிவிட்டேன்.

   குறைந்தது மூன்று முறை எழுதாமல் எந்தப் படைப்பையும் பிரசுரித்ததில்லை. விஷ்ணுபுரம் எழுதப்பட்டது நான்கு முறை; பின் தொடரும் நிழலின் குரல் மூன்றாவது முறை எழுதின நாவல். ரப்பர், கன்னியாகுமரி எல்லாமே நான்கு முறை எழுதினவை மலையாளத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் ஐந்தாறு முறை திருப்பி திருப்பி எழுதப்பட்டவை. அதில் வருகிற சின்ன சின்ன மாறுதல்கள் கூட முக்கியம். அதில் சலிக்கவே மாட்டேன். எழுத்தில் அலட்சியம் என்பதே இருக்கக்கூடாது. அந்த அளவுக்கு அதன் மீது சிரத்தை உருவாகியிருக்கிறது.

கே : ஆரம்பத்தில் தமிழ் எழுத்தாளராகத்தான் நீங்கள் அறியப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது தொடர்ந்து மலையாளத்திலும் எழுதி வருகிறீர்கள்.

ஜெயமோகன் : `பாஷா போஷினி' என்கிற மலையாளப் பத்திரிக்கையில் தொடர் எழுதுகிறேன். `நோட்டங்கள்' என்கிற அந்தத் தொடர் பிரமாதமாக அங்கு வாசிக்கப்பட்டது. என் மனசில் படைப்புக்கரு தமிழாகத்தான் இருக்கிறது. அதை மலையாளத்தில் மொழி பெயர்க்கிறேன். அவ்வளவுதான். மலையாளத்தில் நான் எழுதும்போது கூட தவிர்க்கமுடியாமல் தமிழ்வார்த்தைகள் வந்துவிடும்.

கே: உலக இலக்கியச் சூழலுடன் ஒப்பிடும்போது தமிழ் இலக்கியத்திற்கான இடம் குறித்து என்ன அபிப்ராயப்படுகிறீர்கள்.

ஜெயமோகன்: க.நா.சு. விலிருந்து சுந்தர ராமசாமி வரை, பலர் தமிழ் இலக்கியத்தில் ஒன்றுமில்லை, மேலை இலக்கியங்களில் எதைத் தொட்டாலும், `கிளாசிக்' குகள் என்கிற அபிப்ராயத்தை இங்கு உருவாக்கிவிட்டார்கள். இதை தங்களுக்கேற்ப பார்த்து பயன்படுத்தும் போலிகள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள். குறைந்த பட்ச ஆர்வத்துடன் தமிழ் இலக்கியம் படிக்க வருகிறவர்களைக் கூட மிரள வைத்துவிடுவார்கள். இந்தத் தமிழ் இலக்கியக் குற்ற உணர்வு வேண்டியதில்லை. உலக இலக்கியத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழ் இலக்கியத்தைப் பற்றித் தாழ்வுணர்ச்சி கொள்வதில் எந்த விதமான நியாமும் கிடையாது. அமெரிக்காவில் வெளிவந்த முக்கியமான சிறுகதைகளை விட முக்கியமான சிறுகதைகள் தமிழில் இருக்கின்றன; ஆனால் இங்கு அளவு ரொம்ப குறைவு; எழுத்தாளர்கள் குறைவு; வாசிப்புக் குறைவு.

கே: தனி மனித ஒழுக்கத்திலிருந்து உறவுகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் மதிப்பு வரை எல்லாவற்றையும் உடைத்துக் கலகக்குரல் எழுப்புவதுதான் நவீனத் தமிழ் இலக்கியவாதியின் இயல்பு என்கிற தோற்றம் இருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

ஜெயமோகன் : எந்தத் தீவிர மனநிலையிலும் உண்மையான தருணங்களும் உண்டு, பாவனைகளும் உண்டு, தமிழ்சூழலில் `கலகக்காரன்' என்கிற பாவனை இன்று மிகவும் கவனிக்கப்படுகிற ஓரளவு செல்லுபடியாகக் கூடிய ஒன்று. இன்று அது ஒரு மோஸ்தராக இருக்கிறது.

   உண்மையில் ஆன்மீகவாதியும், கலைஞனும், தத்துவ சிந்தனையாளனும் நிரந்தரமான கலகக்காரர்களாகவே இருக்க முடியும், ஏனென்றால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட எதையும் அவர்களால் முழுக்க ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே எல்லா தரப்பினராலும் எதிர்க்கப் படுகிறவர்களாலும், புறக்கணிக்கப்படுகிறவர்களாகவும் தான் அவர்கள் இருப்பார்கள். பலமுத்திரைகள் அவர்கள் மீது குத்தப்படலாம். கலகம் படைப்பு மூலம்தான் வெளிப்படுத்தப்பட வேண்டும். சமரசமில்லாமல், சுய நம்பிக்கையிலும் அது வெளிப்படவேண்டும்.

  நமது கலகங்களில் பெரும் பகுதி நடிப்பு என்பதற்கு அவர்களின் படைப்புகளில் ஆழமற்ற கூச்சல்கள் நிரம்பியிருப்பதே சான்று. உண்மையான கலகம் அதிகாரத்துக்கு எதிரானது. நமது கலகக்காரர்கள் அரசுடன் அந்தரங்கமாகச் சமரசம் செய்து கொண்டவர்கள்.

   இந்தக் காலகட்டத்தில் முற்போக்கு என்று கருதப்படும் ஒரு கருத்தின் மீது ஆழமான சந்தேகம் ஏற்பட்டால் அதை வெளியிட்டு விவாதிக்கும் துணிவு எத்தனை கலகக்காரர்களிடம் உள்ளது. வெளியிட்டால் சக முற்போக்காளர்களிடமிருந்து அவன் தனிமைப் பட நேரும். இதற்கு அஞ்சுகிறவர்கள்தான் இங்கு கலக பாவனை செய்கின்றார்கள்.

   “ உண்மையான கலகக்காரன் தனித்தும், பசித்தும் , விழித்தும் இருப்பான்.''


சந்திப்பு : மணா படங்கள் : .ஸ்நேகிதன்.  நன்றி: தீராநதி.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

8 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ on October 20, 2010 at 7:31 AM said...

நன்றி ராம் பகிர்தலுக்கு.

தி ஜா வின் கதை- சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்- முடிந்தால் பகிரவும்.

uthamanarayanan on October 21, 2010 at 8:35 AM said...

Good interview and bringing out from the bottom of the heart of Mr.Jeyamohan, why he started writing and reading as a Meditation and his walking through writing to attain liberation; since he knows human life is like water bubble , that any point of time bursts irrespective of the one's age , as he said this usually occurs one's mind when one comes through his 50s and 60s and it struck him when he was too young and that process started when he lost his friend at an young age and lost his parents through untoward incidents Dhavam , a word used by him is correct in its perception and meaning as suggested by Chithbhavananda.

Muthu on October 23, 2010 at 10:06 AM said...

யதி அவர்களைப்பற்றிய புதிய தகவல் மிகவும் உத்வேகமூட்டுவதாக உள்ளது.

பேட்டியை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

ராம்ஜி - அந்த கதை திண்ணை தளத்தில் உள்ளது. தேடிப்பாருங்கள்.

மாரிமுத்து on October 23, 2010 at 5:13 PM said...

அவர் ஒரு புதுவெள்ளம், முதலில் கழிவு கசடுகளை அடித்துச் சென்றுவிடும். பின்பு வருவதை அவரவர் தேவைக்கேற்ப சேமித்துக் கொள்ளவேண்டியதுதான்.

Thekkikattan|தெகா on October 24, 2010 at 5:49 PM said...

பேட்டியும் எழுத்தாளரின் சுயமறிதலும் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது. இப்படி தனக்கு வேண்டியவர்களின் அகால மரணங்களின் மூலமாக அந்த மரணத்தின் கண்களை நேருக்கு நேராக சந்தித்து துறவறத்தின் விளிம்பை எட்டிப்பார்த்த ஒருவருக்கு, மானுடம் சார்ந்து ஒவ்வொரு முறையும் கொத்து கொத்தாக அழிவிற்கென பாதைகளை அநீதியாக வலியச் சென்று வகுத்துக் கொள்ளூம் (உ.தா: அயோத்திய மசூதி இடிப்பு இன்றைய அதனையொட்டிய தீர்ப்பு மற்றும் ஈழத் தமிழர்களின் வாழ்வுச் சூழ்நிலை சூதாடப் படும் பொழுதும் அந்த மரணங்களின் வலி புரியாமல் போனதெப்படி...) போது இது போன்ற படைப்பாளிகள் உண்மை பேச தயங்குவது ஏன்? வலிகள் நன்கு உணரப்பட்டு, நுண்ணுர்வு அதீதமாக இந்த ப்ரபஞ்சத்தின் வழியாக தன்னுள் வியாபித்து பிறர் வலியும் தன் வலியாக உணரும் பட்சத்தில் இருப்பவர்கள்.

ஜெமோ கூறியது... அழுத்தமான, உண்மையான வார்த்தைகள் - ஆனால், கலைஞன் வளர,வளர சமரசப் பட்டுவிடுகிறானோ என்று புரியவில்லை - அந்த பேட்டிக்கும் அவருடைய இன்றைய வயசுக்குமான வித்தியாச இடைவெளியில் நானும் ’அதன் தேவை’ அறிந்து கொள்வேனோ என்னவோ...

//... உண்மையில் ஆன்மீகவாதியும், கலைஞனும், தத்துவ சிந்தனையாளனும் நிரந்தரமான கலகக்காரர்களாகவே இருக்க முடியும், ஏனென்றால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட எதையும் அவர்களால் முழுக்க ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே எல்லா தரப்பினராலும் எதிர்க்கப் படுகிறவர்களாலும், புறக்கணிக்கப்படுகிறவர்களாகவும் தான் அவர்கள் இருப்பார்கள். பலமுத்திரைகள் அவர்கள் மீது குத்தப்படலாம். கலகம் படைப்பு மூலம்தான் வெளிப்படுத்தப்பட வேண்டும். சமரசமில்லாமல், சுய நம்பிக்கையிலும் அது வெளிப்படவேண்டும்...//

Unknown on November 29, 2010 at 2:40 AM said...

எனக்கு ஏன் இப்படி நிகழ்கிறது என்ற இடத்திலிருந்து தான் படைப்பு தொடங்குகிறது. அது விரிவடையும் போது அந்தப் படைப்பும் ஆழமுடையதாகிறது, இப்படித்தான் ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கென்று ஒரு பிரபஞ்சத் தரிசனத்தை உருவாக்கியிருப்பான்.

எனக்கு பிடித்தமான வரிகள். மிக்க நன்றி.

Aranga on January 22, 2011 at 4:38 AM said...

எந்த வருடம் வந்த பேட்டி என குறிப்பிட்டால் உபயோகமாக இருக்கும் (இது அநேகமாக 2000 த்தில் வந்தது என நினைக்கிறேன்)

எல்லா படைப்புகளையும் வருடத்தோடு வெளியிடுவது பின்பு உதவும்.

தயாஜி on February 25, 2011 at 3:10 AM said...

நண்பர் மூலம் அறிந்திருந்த 'ஜெயமோகன்' குறித்து மேலும் தெரிந்துக் கொள்ள முடிகின்றது... பகிர்வுக்கு நன்றி....

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்