Apr 13, 2010

ஏவாரி - பெருமாள் முருகன்

பெருமாள் முருகன்

என்னக்கா அடுப்புல பொவையுது ? '

'காப்பித்தண்ணி வாத்தியாரு '

'அப்படியே எனக்கும் ஒரு கிளாசு குடுக்கா '

'கட்டல்ல உக்காரு வாரேன் '

'பாலூத்தீட்டு வந்தாச்சா ? '

perumal-murugan 'இப்பத்தான் வந்தன். எந்தப் பாலிருக்குது. சனியனுவ ஆனையாட்டம் தீனிதான் திங்குவ. குர்குர்ரென்னு கறக்குதா. இந்த ஈத்தோட எருமய வித்துப்புடறேன் '

'ஆமா. வித்துப்புட்டு வேறொண்ணு நல்லதா வாங்கிக்குங்க.... அட அட... வெள்ளாட்டுக்குட்டி ஊட்டுக்குள்ள போவுது பாருக்கா. '

'உஸ்... உஸாய்... இதுவ இப்பத்தான் மனசன ஒரு பக்கம் நிக்க உடுதா. காட்டுல போயில் மேயறது. ஊட்லதான் கொட்டி வச்சிருக்குதாமா ? '

'குட்டிவ தாம் பெருசாயிருச்சே ஏக்கா குடுத்திர்றீங்களா ? '

'இப்ப என்ன. இன்னுரு எட்டுக்கு இருக்கட்டும் வாத்தியாரு. '

'ரண்டும் கெடாக்குட்டிவ தான. ஒடையடுச்சு உட்டாச்சா. '

'ஆரு ஒடையடிச்சா. சும்மாத்தான் திரியுதுவ '

'ம்க்கும். அப்ப இது தானக்கா தரணம். இன்னமே வெச்சிருந்தா குட்டி ஒடஞ்சு போய்ராது. வெள்ளாட்டு மேல உழுந்துதுன்னா அவ்வளவுதான். நஞ்சு போயிரும். சொல்லுக்கா பாப்பம் '

'இங்க எந்த வெள்ளாட்டு மேல போயி உழுவுது. அவுத்துடறம். மேஞ்சதியும் புடிச்சுக் கட்டிப்புடறம். இருக்கட்டும் '

'மேச்சலுக்குப் போறப்ப பாத்துக்கிட்டேவா இருப்பீங்க ? ரண்டுதரம் வெள்ளாட்டு மேல உழுந்துதுன்னா ஒரு நூறு ரூவா போயிரும். '

'எங்க போவுது வாத்யாரு. இன்னம் வெள்ளாட்டுல பாலூட்டுதுவ '

'வெள்ளாடு பயராயிருச்சா ? '

'அதென்னமோ இந்த ஈத்து இன்னம் பயராவக் காணாம் '

'அப்ப வெள்ளாட்டையும் சேத்திக் குடுத்தர்ரது ? செனையோட வேற ஒண்ணு வாங்கிக்கலாமில்ல ? '

'ம்... இன்னொரு மாசங் கழிச்சுத்தான் பயராவட்டுமே. நாலு ஈத்தாச்சு. எப்பேர்ப்பட்ட வம்சம். இது மாதிரி வருமா வெள்ளாடு ? '

'அப்ப வெச்சிருங்க. குட்டிய வித்துப்புட்டா சீக்கிரம் பயரயிரும். இன்னம் பாலூட்டிக்கிட்டிருந்தா எப்படி பயராவும் ? '

'பாலூட்டப் பாலூட்டவே பயராயிரும். இந்த ஈத்துத்தான் என்னமோ இன்னுங் காணாம் '

'அத்தப்ப கவுண்ட்ரூட்டு வெள்ளாடு இப்படித்தான் பயராவாதயே கெடந்துது. குட்டிய வித்தொடன நாலே நாளுல பயராயிடுச்சுக்கா '

'கல்லாக்காட்டு அத்தப்ப கவுண்ட்ரூட்டுதா ? '

'ஆமாக்கா. அந்தக்கா கூட பாலூட்டற குட்டிய எங்க விக்கிறதுன்னுது. நாந்தாஞ் சொல்ச்லி வாங்கினே '

'ம்.. செரி பாரு இந்தக் குட்டிவளத்தான். எவ்வளவு வருமுன்னு பாப்பம் '

'நேத்துப் பையன் மேய்க்கும்போது புடுச்சுப் பாத்தன்; குட்டிவ பரவாயில்ல. ஒரு அளவுக்குப் 'புடி ' இருக்குது. வெலச் சொல்லுங்க '

'நானென்னத்தச் சொல்றது. நீ கேளு வாத்யாரே '

'அதெப்டாக்கா. நீ சொல்லாத நாங் கேக்கறது. ஒரு வெலச் சொன்னா, படிஞ்சா மேல கேக்கலாம் '

'செரி தொளாயரம் குடு '

'என்னக்கா இது. குடுக்கற மாதிரி சொல்லுங்க. ரண்டும் பூங்குட்டிவ. பாலூட்டற குட்டிவள இந்த வெலைக்கு வாங்கி நா மொதலு பண்ண வேண்டாமா ? '

'அந்த வெலைன்னா குடுக்கறது. இல்லன்னா எட்டுக்கு இருக்கட்டும் '

'இன்னொரு எட்டுக்கு வெச்சிருந்தா மட்டும் எவ்வளவு வந்தரப் போவுது ? செரி. ஒரு குட்டி நல்லா முறுக்கம். ஒண்ணு அந்த அளவுக்கு வராது. கொஞ்சம் உடும். ரண்டுஞ் சேந்து ஏழ்நூறுக்குத் தாக்கா போவும் '

'என்ன வாத்யாரு. கறி கிலோ நாப்பது ரூவா சொல்ற. குட்டிய மட்டும் இப்பிடிக் கேக்கற '

'ஆமாக்கா, குட்டி அஞ்சஞ்சு கிலோத்தான் வரும். தோலு, தல, கொடலு.. இப்படித்தான் சேத்து மொதலு பண்ணோணும். அதும் நாளைக்கு ஞாயித்துக்கெழம. வர்றவங்களுக்கு இல்லைன்னு சொல்லக்கூடாதுன்னு பாக்கறன். ஒரு இருவத்தஞ்சு சேத்தி வெச்சுக் குடுங்க '

'எட்நூத்தி அம்பதுக்குக் கம்மி வராது வாத்யாரே. ஆனா இல்ல. நாட்றாயன், மணி ஆராச்சும் வருவாங்க '

'பத்து ரூவா எச்சுக்க்கம்மி. கையில காச வாங்கிக்கலாம். அவுங்களுக்கெல்லாம் குடுத்தா ஒரு மாசம் ரண்டுமாசம் இழுத்தடிப்பாங்க. நம்மகிட்ட அந்த வேலயே வேண்டாம். கையில காச வாங்கிக்கங்க '

'அதான் சொல்லிப்புட்டன். அதுக்குங் கம்மின்னா இல்ல வாத்யாரு '

'பாதிப்பணம் இப்பவே வாங்கிக்குங்க. நாளைக்குக் காத்தால பாதி. நம்மகிட்ட பாக்கிகீக்கிங்கற பேச்சே இல்ல. ஒடச்சுச் சொல்லுக்கா. எட்நூறுக்குக் கீழ வாக்கா '

'கீழ மேலங்கற பேச்சே வேண்டாம். செரியா எட்நூறு குடுத்துரு. இப்ப ஒரு பேச்சு சொல்லிப்புட்டு பணத்துக்கு அப்பறம் வா. இப்பறம் வான்னு இழுத்தடிக்கக் கூடாது ஆமா '

'ஏக்கா எப்பவாச்சும் நா அப்படிச் செஞ்சிருக்கறனா. சொன்னாச் சொன்னதுதான். சந்தேகம். கையில காசக் குடுத்துட்டுக் குட்டிய புடிச்சுக்கறேன். போதுமா. ஒரே வெல எழுநூத்தி அம்பது. அதுக்கு மேல போவாதுக்கா. புடி காச '

'இல்ல வாத்யாரு. இருக்கட்டும். அவுங்கப்பன் வந்தா சண்டக்கட்டுவாரு. இந்த வெலக்கா குடுத்தீனு '

'எனக்குன்னு சொன்னா மாமன் ஒண்ணுஞ் சொல்ல மாட்டாரு. இன்னக்கி நேத்தா பழக்கம். எத்தன வருசத்துப் பழக்கம். புடாக்கா காச '

'இன்னொரு இருவத்தஞ்சு சேத்திக் குடு வாத்யாரு. கைல பணம் வந்தாத்தான் குட்டிய குடுப்பன் ஆமா '

'எங்காசு எங்கீக்கா போயிருது. உங்கூட்ல இருக்கறாப்பல. செரி, பத்து ரூவா சேத்தி. அரவது புடிக்கா '

'எப்படியும் எட்நூறுக்குப் போவும். வெலய உட்டுத்தான் குடுத்துட்டன் '

'இன்னம் பத்து நாளைக்கு வெச்சிருந்து ரண்டு மூனுபடி சோளம் வெச்சா அது பணமில்லையா, எல்லாஞ் செரியாப் போயிரும். இந்தாக்கா மும்பணம் பத்து ரூவா. முன்னூறு ரூவா போயில் இப்பவே பையன் கிட்டக் குடுத்தனுப்பறன் '

'குடுத்துடு வாத்யாரே. அது இதுன்னு சாக்குச் சொல்லக்கூடாது ஆமா '

'இப்பவே குட்டியப் புடிச்சோரன். நாளைக்குக் கறிக்கு இதுதான். பணத்தப் பத்தி கவலைப்படாதீங்க. இப்பவே போயிப் பையங்கிட்ட குடுத்தனுப்பறன். மீதி ஞாயித்துக்கெழம தாரன். புடாங்க குட்டிய '

***

திருச்செங்கோடு சிறுகதைத்தொகுதி

***

Thinnai 2000 February 13

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

5 கருத்துகள்:

clayhorse on April 13, 2010 at 8:18 AM said...

தங்கள் தளத்துக்கு என்னுடைய 'தமிழ்ப் புத்தக மதிப்புரை' இணையத்தில் இணைப்பு கொடுத்துள்ளேன். அவகாசமிருந்தால் பார்த்துச் செல்லவும்.
http://baski-reviews.blogspot.com/

Ramprasath on April 13, 2010 at 8:29 AM said...

நான் உங்கள் தளத்தின் நிரந்தர வாசகன்தான். வித்தியாசமான முயற்சி. நமது இலக்கியத்தின் அதி முக்கிய தேவை உண்மையான தீவிரமான கருது செறிவுள்ள விமர்சனங்கள்தான். தொடருங்கள் வாழ்த்துகள்.
அழியாசுடர்களுக்கு உங்களது சிபாரிசுக்கு நன்றி.

govindasamy on April 13, 2010 at 4:32 PM said...

¿øÄ ¦¸¡íÌ ¾Á¢ú, ¿øÄ Åð¼¡Ã ¦Á¡Æ¢
¾¢Õîºí§¸¡ðÎ째 §À¡öÅó¾Ð §À¡ø þÕó¾Ð !

¯ñ¨ÁÅ¢ÕõÀ¢.
Óõ¨À.

Ramprasath on April 13, 2010 at 6:52 PM said...

நல்ல கொங்கு தமிழ், நல்ல வட்டார மொழி
திருச்சங்கோட்டுக்கே போய்வந்தது போல் இருந்தது !

உண்மைவிரும்பி.
மும்பை

தமிழ்ச் செல்வன்ஜீ on August 24, 2010 at 11:32 PM said...

nalla kathai, aanal vattara mozhli kathaiyin pokkai puriyavidamal seyyum naveena abayam konjam thokkal,perumal murugan pondra nalla padaippalikal vattara mozhi vattathai vittu vanthal thamilukku nallathu

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்