Apr 24, 2010

ஜென்ம தினம்-வைக்கம் முகம்மது பஷீர்

வைக்கம் முகம்மது பஷீர்
தமிழில்: குளச்சல் மு. யூசுப்

மகர1 மாதம் 8ஆம் தேதி. இன்று எனது பிறந்த நாள். வழக்கத்துக்கு மாறாக அதிகாலையிலேயே எழுந்து, குளிப்பது போன்ற காலைக் கடன்களை முடித்தேன். இன்று அணிவதற்காகவென்று ஒதுக்கிவைத்திருந்த வெள்ளைக் கதர்ச் சட்டையையும்  வெள்ளைக் கதர் வேட்டியையும் வெள்ளை கேன்வாஸ் ஷ¨வையும் அணிந்து எனது அறையில் சாய்வு நாற்காலியில் கொந்தளிக்கும் மனதுடன் மல்லாந்து படுத்திருந்தேன். என்னை அதிகாலையிலேயே பார்த்தது, பக்கத்தில் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் பி.ஏ. மாணவனாகிய மாத்யூவுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அவன் புன்சிரிப்புடன் எனக்குக் காலை வணக்கம் தெரிவித்தான்.

"ஹலோ, குட்மார்னிங்."bashher--8

நான் சொன்னேன்:

"எஸ். குட்மார்னிங்."

மாத்யூ கேட்டான்:

"என்னா, இன்னைக்கு என்ன விசேஷம், காலையிலேயே? எங்கியாவது போகப்போறீங்களா?"

"சே . . . அதெல்லாம் ஒண்ணுமில்லெ." நான் சொன்னேன், "இன்னைக்கு என்னோட பிறந்த நாள்."

"யுவர் பர்த் டே?"

"எஸ்."

"ஓ . . . ஐ விஷ் யூ மெனி ஹாப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே."

"தாங்க் யூ."

மாத்யூ கையிலிருந்த பிரஷைக் கடித்துப் பிடித்தபடி குளியலறைக்குள் சென்றான். கட்டடத்திற்குள், ஆங்காங்கே கூச்சல்கள், ஆரவாரம், இடையிடையே சிருங்காரப் பாடல்கள். மாணவர்களும் குமாஸ்தாக்களும்தான். யாருக்கும் எந்த அல்லல்களுமில்லை. உல்லாசமான வாழ்க்கை. நான் ஒரு சிங்கிள் சாயா குடிக்க என்ன வழியென்று யோசித்துக்கொண்டிருந்தேன். மத்தியானச் சாப்பாட்டுக்கான மார்க்கம் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. நேற்று பஜார் வழியாகப் போகும்போது ஹமீது என்னை இன்று சாப்பிட வரச்சொல்லி அழைத்திருந்தான். இந்த ஆள், சிறு தோதுவிலான ஒரு கவிஞரும் பெரிய பணக்காரனுமாவார். இருந்தாலும் மத்தியானம்வரை சாயா குடிக்காமலிருக்க முடியாது. சூடான ஒரு சாயாவுக்கு என்ன வழி? மாத்யூவின் வயதான வேலைக்காரன் சாயா போடும் பணியில் சிரமத்துடன் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் விஷயத்தை நான் என் அறையிலிருந்தே கிரகித்தேன். அதற்கான காரணம், நான் தங்கியிருந்த அறை மாத்யூவின் சமையலறையின் ஸ்டோர் ரூம்தான். மாதம் ஒன்றுக்கு எட்டணா2 வாடகைக்குக் கட்டட உரிமையாளர் எனக்குத் தந்திருந்தார். அந்தக் கட்டடத்தின் மிகவும் மோசமானதும் சின்ன அறையும் இதுதான். இதற்குள், என் சாய்வு நாற்காலி, மேஜை, செல்ஃப், படுக்கை - இவ்வளவையும் வைத்தது போக சுவாசம் விடுவதற்கும் இடமில்லை. பெரிய மதில் கட்டினுள்ளிருக்கும் இந்த மூன்று கட்டடங்களின் மாடியிலும் கீழேயும் உள்ள எல்லா அறைகளிலும் மாணவர்களும் குமாஸ்தாக்களும்தான் தங்கியிருந்தார்கள். கட்டடத்தின் உரிமையாளருக்குக் கொஞ்சமும் பிடிக்காத ஒரேயரு நபர், நான் மட்டும்தான். என்னுடனான இந்த விருப்பமின்மைக்கு ஒரே ஒரு காரணம், நான் சரியான வாடகை கொடுப்பதில்லை, அவ்வளவுதான். என்னைப் பிடிக்காத வேறு இரண்டு பிரிவினரும் இங்கே இருக்கிறார்கள், ஓட்டல்காரனும் அரசாங்கமும். ஓட்டல்காரனுக்கு நான் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. அரசாங்கத்திற்கு அப்படியான பாக்கி எதுவுமில்லை. இருந்தாலும் என்னைப் பிடிக்கவே பிடிக்காது. அப்படி உணவு, உறைவிடம், தேசம் . . . மூன்றிலும் பிரச்சினைகள் இருந்தன. அடுத்த பிரச்சினைகள்: என் உடைகள், ஷ¨, விளக்கு. (விஷயங்களை எல்லாம் எழுதுவதற்கு முன் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த வேண்டியதிருக்கிறது. இப்போது நடுஜாமம் கடந்துவிட்டது. காகிதத்தையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியே வந்து நீண்ட நேரமாக இந்த நகரத்திலேயே சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறேன். வேறு விசேஷமான எந்தக் காரணமோ, நோக்கமோ இல்லை. இந்த ஒரு நாளைய நாட்குறிப்பை ஆரம்பம் முதல் இறுதிவரை எழுத வேண்டும். சுமாரான அளவில் ஒரு சிறுகதைக்கான வாய்ப்புகள் இதில் உண்டு. ஆனால், என் அறையிலிருக்கும் விளக்கில் எண்ணெய் இல்லை. நிறைய எழுத வேண்டியதுமிருக்கிறது. ஆகவே தூக்கப் பாயிலிருந்து எழுந்துவந்து இந்த நதியோரத்தின் விளக்குத் தூணில் சாய்ந்தமர்ந்து சம்பவங்களின் சூடு ஆறிப்போவதற்குள் எழுதத் தொடங்கினேன்.) சூல் கொண்ட கார்மேகங்கள் போல், இந்நாளில் சம்பவங்கள் எல்லாம் என் அக மனத்தை வெடிக்கச் செய்துவிடுவதுபோல் நெருக்கியடித்து நிற்கின்றன. பெரிய அளவில் ஒன்றுமில்லைதான். ஆனால், இன்று எனது பிறந்த நாள். நான் சொந்த ஊரிலிருந்து நீண்ட தூரத்தில், அன்னிய தேசத்திலிருக்கிறேன். கையில் காசில்லை. கடன் கிடைப்பதற்கான வழிகளுமில்லை. உடுத்திருப்பதும் மற்றுள்ளவைகளுமெல்லாம் நண்பர்களுடையவை. எனக்கானவை என்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை. இந்த நிலைமையிலான ஒரு பிறந்த நாள் மீண்டும் மீண்டும் வரவேண்டுமென்று மாத்யூ வாழ்த்தியபோது என் மனதிற்குள் ஏதோ ஒரு அகக்குருத்து வலித்தது.

நினைத்துப் பார்த்தேன்.

மணி ஏழு: நான் சாய்வு நாற்காலியில் படுத்தபடியே நினைத்துக்கொண்டேன். இந்த ஒரு நாளையாவது களங்கமேதுமில்லாமல் பாதுகாக்க வேண்டும். யாரிடமிருந்தும் இன்று கடன் வாங்கக் கூடாது. எந்தப் பிரச்சினைக்கும் இன்று இடந்தரக் கூடாது. இன்றைய தினம் மங்களகரமாகவே முடிய வேண்டும். கடந்து போன நாட்களின் கறுப்பும் வெள்ளையுமான சங்கிலித் தொடர் களில் இருக்கும் அந்தப் பல நூறு நான்களாக இருக்கக் கூடாது, இன்றைய தினத்தின் நான். இன்று எனக்கு என்ன வயது? சென்ற வருடத்தைவிட ஒரு வயது அதிகமாகி இருக்கிறது. சென்ற வருடத்தில் . . .? இருபத்தாறு. இல்லை முப்பத்தி இரண்டு, ஒருவேளை நாற்பத்தி ஏழோ?

என் மனதில் தாங்க முடியாத வேதனை. எழுந்து சென்று முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துப் பார்த்தேன். மோசமில்லை. சுமாரான, பரவாயில்லாத முகம். நல்ல அகன்ற முழுமையான நெற்றி. அசைவற்ற கண்கள். வளைந்த, வாள் போன்ற மெல்லிய மீசை. மொத்தத்தில் குறை சொல்ல முடியாது - என்றெல்லாம் யோசித்துக்கொண்டே நிற்கும்போது ஒரு காட்சி கண்ணில் பட்டது. மனதில் கடினமான வலியேற்பட்டது. ஒரு நரைமுடி. என் காதின் மேல் பாகத்தில் கறுத்த முடிகளினூடே ஒரு வெளுத்த அடையாளம். நான் மிகுந்த சிரமத்துடன் அதைப் பிடுங்கியெறிந்தேன். பிறகு தலையைத் தடவிக்கொண்டிருந்தேன். பின்புறம் நல்ல பளபளப்பு. கசண்டி4தான். தடவிக்கொண்டிருக்கும்போது தலை வலிப்பதுபோன்ற சிறு உணர்வு ஏற்பட்டது. சூடு சாயா குடிக்காததால் இருக்குமோ?

மணி ஒன்பது: என்னைக் கண்டதுமே ஓட்டல்காரன் முகத்தைக் கறுவிக்கொண்டு உள்ளே போய்விட்டான். சாயா போடும் அந்த அழுக்குப் பிடித்த பையன் பாக்கியைக் கேட்டான்.

நான் சொன்னேன்:

"சரி . . . அதெ நாளைக்குத் தந்திடுறேன்."

அவனுக்கு நம்பிக்கை வரவில்லை.

"நேற்றைக்கும் இதத்தானே சொன்னீங்க."

"நான் இன்னைக்குக் கெடெச் சுடும்னு நெனச்சிருந்தேன்."

"பழைய பாக்கியெத் தராம உங்களுக்கு சாயா கொடுக்க வேண்டாம்னு மொதலாளி சொல்லிட்டார்."

"செரி."

மணி பத்து: காய்ந்து சுருங்கிப்போய்விட்டேன். வாயில் உமிழ் நீர் சுரக்கவில்லை. மத்தியான நேரத்தின் கடும் வெப்பம். சோர்வின் பெரும் பாரம் என்மீது கவியத் தொடங்கிவிட்டது. அப்போது புதிய மிதியடி விற்பதற்காக வெளுத்து, மெலிந்த எட்டும் பத்தும் வயதுள்ள இரண்டு கிறிஸ்தவப் பையன்மார் என் அறை வாசலுக்கு வந்தார்கள். நான் இரண்டு மிதியடிகள் வாங்க வேண்டுமாம். ஜோடி ஒன்றுக்கு மூன்று அணாதான் விலையாம். மூன்று அணா.

"வேணாம், குழந்தைகளே."

"சாரைப்போல உள்ளவங்க வாங்கலேன்னா வேற யார் சார் வாங்குவாங்க?"

"எனக்கு வேணாம், குழந்தைகளே . . . எங்கிட்டே காசு இல்லெ."

"செரி." நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய சிறு முகங்கள். எதையும் உட்புகுந்து அறிந்துகொள்ளவியலாத சுத்த இதயங்கள். இந்த வேஷமும் சாய்வு நாற்காலியில் கிடக்கும் இந்தத் தோரணையும். நான் ஒரு சாராம் . . .! சாய்வு நாற்காலியும் சட்டையும் வேட்டியும் ஷ¨வும். எதுவும் என்னுடையதல்ல குழந்தைகளே. எனக்கென்று இந்த உலகத்தில் சொந்தமாக எதுவுமே இல்லை. வெறும் நிர்வாணமான இந்த நான்கூட என்னுடையதுதானா? பாரதத்தின் ஒவ்வொரு நகரங்களிலும் எத்தனையெத்தனை ஆண்டு காலங்கள் சுற்றித் திரிந்து ஏதேதோ ஜாதி மக்களுடன் எங்கெங்கெல்லாமோ தங்கியிருக்கிறேன். யாருடைய ஆகாரங்கள் எல்லாம் சேர்ந்தது இந்த நான். எனது இரத்தமும் எனது மாமிசமும் எனது எலும்பும் இந்த பாரதத்திற்குரியது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் கராச்சி4 முதல் கல்கத்தா வரையிலும் - அப்படி பாரதத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். பெண்களும் ஆண்களுமான அந்த அத்தனை நண்பர்களையும் நான் இன்று நினைவுகூர்கிறேன். நினைவு . . . ஒவ்வொருவரையும் தழுவியபடியே என் அன்பு அப்படியே வியாபித்துப் பறக்கட்டும். பாரதத்தைக் கடந்தும் . . . உலகைக் கடந்தும் . . . சுகந்தம் வீசும் வெண்நிலவுபோல் . . . அன்பு, என்னையறிந்து அன்பு காட்டுபவர்கள் யாராவது இருக்கிறார்களா? அறிதல், எனக்குத் தோன்றுவது . . . ரகசியங்களின். . . அந்தத் திரையை விலக்குவதுதான். குறைகளையும் பலவீனங்களையும் களைந்து பார்த்தால் என்ன மிச்சமிருக்கப் போகிறது? வசீகரமான ஏதாவது ஒன்று மனிதனுக்குத் தேவைப்படுகிறது. அன்புகாட்டவும் அன்புகாட்டப்படவும். ஹோ . . . காலந்தான் எத்தனை துரிதமாக இயங்குகிறது. தகப்பனின் சுட்டு விரலை இறுகப் பற்றிக் கொஞ்சி விளையாடித் திரிந்த நான் "உம்மா பசிக்குது" என்று தாயின் உடுமுண்டின் தலைப்பை இழுத்துக் கேட்ட நான், இன்று? ஹோ, காலத்தின் உக்கிரமான பாய்ச்சல். சித்தாந்தங்களின் எத்தனையெத்தனை வெடிகுண்டுகள் என் அகத்தளங்களில் விழுந்து வெடித்துச் சிதறியிருக்கின்றன. பயங்கரமான போர்க்களமாக இருந்தது என் மனது. இன்று நான் யார்? புரட்சிக்காரன், ராஜத் துரோகி, இறை எதிரி, கம்யூனிஸ்ட் - மற்றும் என்னவெல்லாமோ. உண்மையில் இதில் ஏதாவது ஒன்றா நான்? ஹ§ம். என்னென்ன மனச் சஞ்சலங்கள். தெய்வமே? மூளைக்குள் சுள்சுள்ளென்று குத்துகிறது. சாயா குடிக்காததாலிருக்குமோ? தலை நேராக நிற்கவில்லை. போய், சாப்பிட்டுவிட வேண்டியதுதான். இந்தத் தலைவேதனையுடன் ஒரு மைல் தூரம் நடக்க வேண்டும். இருந்தாலும் வயிறு நிறையச் சாப்பிடலாமல்லவா?

மணி பதினொன்று: ஹமீது கடையில் இல்லை. வீட்டிலிருப்பாரோ? என்னையும் அவர் கூடவே அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அதுதான் முறை. ஒருவேளை, மறந்து போயிருக்கலாம். வீட்டுக்கே போய்விடலாமா? சரி.

மணி பதினொன்றரை: ஹமீதின் மாடி வீட்டின் கீழ் இரும்புக் கதவு அடைக்கப்பட்டிருந்தது. நான் அதைத் தட்டினேன்.

"மிஸ்டர் ஹமீது."

பதில் இல்லை.

"மிஸ்டர் ஹமீ. . .து."

மிகுந்த கோபத்துடனிருந்த ஒரு பெண்ணின் உரத்த குரல் மட்டும்.

"இங்கெ இல்லை."

"எங்கே போயிருக்காரு?"

மௌனம். நான் திரும்பவும் கதவைத் தட்டினேன். மனம் மிகுந்த சோர்வடைந்தது. திரும்பி நடக்கப் போகும்போது பக்கத்தில் யாரோ வருவது போன்ற காலடிச் சத்தம். கூடவே வளை கிலுக்கமும். வாசல் கதவு இலேசாகத் திறந்தது - ஒரு இளவயதுப் பெண்.

நான் கேட்டேன்: "ஹமீது எங்கே போயிருக்காரு?"

"அவசரமா ஒரு எடத்துக்கு." மிகுந்த பொறுமையுடன்தான் பதில்.

"எப்போ வருவாரு?"

"சாயுங்காலத்துக்குப் பிறகு ஆயிடும்."

சாயுங்காலத்துப் பிறகு?

"வந்தா நான் வந்து தேடுனதாகச் சொல்லுங்க."

"நீங்க யாரு?"

நான் யார்?

"நான் . . . ஓ . . . யாருமில்லெ. எதுவும் சொல்ல வேண்டாம்."

நான் திரும்பி நடந்தேன். அனல் தகிக்கும், கால் புதையும் வெள்ளை மணல் பரப்பு. அதைத் தாண்டினால் கண்ணாடிச் சில்லுபோல் பளபளக்கும் கால்வாய். கண்களும் மூளையும் இருண்டு போயின. மிகுந்த மன அங்கலாய்ப்பு. எலும்புகள் சூடேறிக்கொண்டிருந்தன. தாகம், பசி, ஆவேசம். உலகத்தையே விழுங்கிவைக்கும் ஆவேசம். கிடைப்பதற்கான வழியில்லையென்பதுதான் ஆவேசம் அதிகரிப்பதற்கான காரணம். கிடைப்பதற்கான உத்தரவாதமேதுமற்ற நிலையில் எண்ணற்ற பகல் இரவுகள் என் முன். நான் தளர்ந்து விழுந்துவிடுவேனா? தளர்ந்து போய்விடக் கூடாது. நடக்க வேண்டும் . . . நடக்க வேண்டும்.

மணி பன்னிரண்டரை: பரிச்சயமானவர்கள் அனைவரும் பார்த்ததாகவே காட்டிக்கொள்ளாமல் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள். "தோழர்களே, இன்று எனது பிறந்த நாள். எனக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போங்கள்" என்று என் மனம் உச்சரித்தது. நிழல் தடங்கள் என்னைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தன. நண்பர்கள் ஏன் என்னைக் கண்டு பேசாமல் போகிறார்கள்? அது சரி!

என் பின்னால் ஒரு சி.ஐ.டி.

மணி ஒன்று: ஒரு காலத்தில் பத்திரிகை அதிபரும் இப்போது வியாபாரியாகவுமிருக்கும் மி.பியைப் பார்க்கச் சென்றேன். கண்பார்வை தெளிவுடன் இல்லை. பதற்றமாக இருந்தது.

பி, கேட்டார். "புரட்சிகளெல்லாம் எந்த இடம்வரை வந்திருக்கு?"

நான் சொன்னேன்: "பக்கத்துலெ வந்துட்டு."

"ம்ஹ§ம்! எங்கிருந்து வாறீங்க? பார்த்தே கொஞ்ச காலம் ஆயிட்டுதே?"

"ஹா . . ."

"அப்புறம், என்ன விசேஷம்?"

"சே . . . ஒண்ணுமில்லெ. சும்மா."

நான் அவரது பக்கத்திலிருந்த செயரில் அமர்ந்தேன். எனது கட்டுரைகளில் பலவற்றை நான் அவரது பெயரில் எழுதிப் பிரசுரம் செய்திருந்தேன். பண்டைப் பெருமை பேசுவதற்காக அவர் அந்தப் பழைய பத்திரிகைகளை அட்டையிட்டுவைத்திருந்தார். நான் அதையெடுத்துத் தலைச்சுற்றலோடு அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன். "எனக்குச் சூடா ஒரு சாயா வேணும். நான் ரொம்பத் தளந்து போயிருக்கேன்" என்று என் மனம் வேகமாகச் சொல்லிக்கொண்டிருந்தது. பி, ஏன் என்னிடம் எதுவுமே கேட்காமலிருக்கிறார்? நான் சோர்ந்து போயிருப்பதை அவர் கவனிக்கவில்லையா? அவர் கல்லாப் பெட்டியின் பக்கத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். நான் மௌனமாகத் தெருவைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். துண்டு தோசைக்காக இரண்டு தெருக்குழந்தைகள் சண்டையிடுகிறார்கள். "ஒரு சூடு சாயா." நான் கேட்கவில்லை. என் சர்வ நாடிகளும் இரந்துகொண்டிருந்தன. பி, பெட்டியைத் திறந்து நோட்டுகளின், சில்லறைகளினிடையிலிருந்து ஒரு அணாவை எடுத்து ஒரு பையனிடம் கொடுத்தார்.

"சாயா கொண்டு வாடா."

பையன் ஓடிச் சென்றான். என் மனம் குளிர்ந்தது. எவ்வளவு நல்ல மனிதன் . . . பையன் கொண்டுவந்த சாயாவை பி. வாங்கிவிட்டு என்னைப் பார்த்துத் திரும்பினார்.

"உங்களுக்குச் சாயா வேணுமா?"

நான் சொன்னேன், "வேண்டாம்."

ஷ¨வின் லேசை இறுக்குவது போன்ற பாவனையுடன் குனிந்து கொண்டேன். முகத்தை அவர் பார்த்துவிடக் கூடாது. என் மன விகாரத்தை அது காட்டிக் கொடுத்துவிடக் கூடும்.

பி, வருத்தத்துடன் சொன்னார், "உங்களோட புத்தகங்கள் எதையும் எனக்குத் தரலியே?"

நான் சொன்னேன்: "தர்றேன்."

"அதெப் பற்றியதான பத்திரிகை விமர்சனங்கள் எல்லாத்தையும் நான் வாசிப்பதுண்டு."

நான் சொன்னேன்: "நல்ல விஷயம்."

சொல்லிவிட்டுக் கொஞ்சம் சிரித்துவிட முயற்சி செய்தேன். மனத்தில் பிரகாசம் வற்றிப்போன முகம், எப்படிச் சிரிக்கும்?

நான் விடைபெற்றுத் தெருவிலிறங்கி நடந்தேன்.

என் பின்னால் அந்த சி.ஐ.டி.

மணி இரண்டு: நான் தளர்ந்து, மிகவும் சோர்ந்துபோய் அறையில் நாற்காலியில் சாய்ந்து கிடந்தேன். நல்ல ஆடைகள் உடுத்தி, வாசனைத் திரவியம் பூசிய ஏதோ ஒரு பெண் எனது அறை வாசலில் வந்தாள். எங்கோ தொலைதூரத்திலுள்ளவள். தண்ணீர் பிரளயத்தால் நாடே அழிந்துபோய்விட்டது; ஏதாவது உதவிசெய்ய வேண்டும். மெல்லிய புன்சிரிப்புடன் அவள் என்னைப் பார்த்தாள். மார்பகங்களை வாசல் கதவின் சட்டத்தில் இறுக அமர்த்தியபடியே பார்த்தாள். என் மனதிற்குள்ளிருந்து சூடான விகாரம் எழுந்தது. அது படர்ந்து நாடி நரம்புகளெங்கும் பரவியது. என் இதயம் அடித்துக் கொள்வது எனக்குக் கேட்பதுபோல் தோன்றியது. பயங்கரமும் சிக்கலும் மிகுந்தது அந்த நிமிடம்.

"சகோதரி, எங்கிட்டே எதுவுமே இல்லை. நீங்க வேறெ எங்கயாவது போய்க் கேளுங்க - எங்கிட்டே எதுவுமே இல்லை."

"எதுவுமே இல்லியா?"

"இல்லே."

அதன் பிறகும் அவள் போகாமல் நின்றாள். நான் சத்தமாகச் சொன்னேன்.

"போயிரு, ஒண்ணுமில்லே."

"சரி." அவள் வருத்தத்தோடு குலுங்கி அசைந்து நடந்து போனாள். அப்போதும் அவளிடமிருந்து பரிமள வாசம் வந்துகொண்டிருந்தது.

மணி மூன்று: யாரிடமிருந்தாவது கடன் வாங்கினால் என்ன? பயங்கரமான சோர்வு. மிகவும் இயலாத ஒரு கட்டம். யாரிடம் கேட்பது? பல பெயர்கள் நினைவுக்கு வந்தன. ஆனால், கடன் வாங்குவது நட்பின் அந்தஸ்தைக் குறையச் செய்கிற ஒரு ஏற்பாடு. செத்துவிடலாமா என்று யோசனை செய்தேன். எப்படியான சாவாக இருக்க வேண்டும்?

மணி மூன்றரை: நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டிருந்தது. கொஞ்சமும் முடியவில்லை. குளிர்ந்த நீரில் அப்படியே மூழ்கிக் கிடந்தால். உடல் முழுவதையும் கொஞ்சம் குளிரவைத்தால். அப்படியே படுத்திருக்கும்போது சில பத்திரிகை அதிபர்களின் கடிதங்கள் வந்தன. கதைகளை உடனே அனுப்பிவைக்க வேண்டும். திருப்பியனுப்பும் வசதியுடன். கடிதங்களை அப்படியே போட்டுவிட்டு நான் இயலாமல் படுத்திருந்தேன். வங்கிக் குமாஸ்தா கிருஷ்ணபிள்ளையின் வேலைக்காரப் பையன் ஒரு தீக்குச்சிக் கேட்டு வந்தான். அவனிடம் சொல்லி ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டுவரச்செய்து குடித்தேன்.

"சாருக்கு உடம்புக்குச் சொகமில்லையா?" பதினொரு வயதான அந்தப் பையனுக்குச் சோர்வுக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நான் சொன்னேன், "சுகக்கேடு எதுவுமில்லை."

"பெறகு . . .? சார், சாப்பிடலியா?"

"இல்லெ ."

"அய்யோ, ஏன் சாப்பிடலெ?"

அந்தச் சிறுமுகமும் கறுத்த கண்களும் உடுத்திருக்கும் கரிபுரண்ட ஒரு துண்டும்.

அவன் அதிர்ச்சியுடன் நின்றுகொண்டிருந்தான்.

நான் கண்களை மூடிக்கொண்டேன்.

அவன் மெதுவாகக் கூப்பிட்டான்.

"சாரே."

"உம்?"

நான் கண்களைத் திறந்தேன்.

அவன் சொன்னான்: "எங்கிட்டே ரெண்டணா இருக்கு."

"செரி?"

"நான் அடுத்த மாசம் வீட்டுக்குப் போவும்போது சார் தந்தாப் போதும்."

என் மனம் வெதும்பியது. அல்லாஹ§ . . .

"கொண்டு வா."

முழுசாக இதைக் காதில் வாங்குவதற்கு முன் அவன் ஓடினான்.

அப்போது, தோழர் கங்காதரன் வந்தார். வெள்ளைக் கதர் வேட்டி, வெள்ளைக் கதர் ஜிப்பா, அதன்மீது நீளச் சால்வை போர்த்தியிருந்தார். . . கறுத்து, நீண்ட முகமும் விஷய பாவமுள்ள பார்வையும்.

சாய்வு நாற்காலியில் நான் மிடுக்காகப் படுத்திருப்பதைக் கண்டதும் அந்தத் தலைவன் கேட்டான்: "நீ ஒரு பெரிய பூர்ஷ§வா ஆயிட்டே போலிருக்கு?"

எனக்குத் தலைச்சுற்றல் இருந்துகொண்டிருந்தாலும் சிரிப்பு வந்தது. தலைவனின் உடைகளின் உரிமையாளர்யாராக இருக்குமென்ற யோசனை என்னுள் உதித்தது. எனக்குப் பரிச்சயமுள்ள ஒவ்வொரு அரசியல்வாதிகளின் உருவமும் என் கற்பனையில் ஓடியது. இழப்பதற்கு என்ன இருக்கிறது?

கங்காதரன் கேட்டான்: "நீ எதுக்குச் சிரிக்கிறே?"

நான் சொன்னேன்: "ஒண்ணுமில்லை மக்களே, நம்ம இந்த வேஷங்களை நினைச்சதும் சிரிப்பு வந்தது."

"உன் பரிகாசத்தை விட்டுட்டு விஷயத்தைக் கேளு. பெரிய பிரச்சினை நடந்துட்டிருக்கு. லத்தி சார்ஜும் டீயர்கேசும் துப்பாக்கிச் சூடும் நடக்கும் போலிருக்கு. பத்து மூவாயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்காங்க. ஒண்ணரை வாரமாக அவங்க பட்டினி கிடக்கிறாங்க. பெரிய கலவரம் ஏற்படலாம். மனுசன் பட்டினி கிடந்தா என்ன நடக்கும்?"

"இந்த விவரங்கள் எதையும் நான் பத்திரிகைகள்லே வாசிக்கலியே?"

"பத்திரிகைகள்லே போடக் கூடாதுன்னு எச்சரிக்கை விடப்பட்டிருக்கு."

"அது செரி. நான் இப்போ என்ன செய்யணும்?"

"அவங்க பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருக்காங்க. நான்தான் தலைமை. நான் அங்கே போய்ச் சேர, படகுக் கூலி ஓரணா வேணும். அப்புறம், இன்னைக்கு நான் எதுவும் சாப்பிடவுமில்லை. நீயும் கூட்டத்துக்கு வா."

"மக்களே, எல்லாமே செரிதான். ஆனா, எங்கிட்டெ காசெதுவும் இல்லே. கொஞ்ச நாளாயிட்டுது, நானும் ஏதாவது சாப்பிட்டு. நேரம் வெளுத்த பெறகு இதுவரை நானும் ஒண்ணுமே சாப்பிடல்லை. போதாத குறைக்கு இன்னைக்கு என்னோட பிறந்த நாள் வேறே."

"பிறந்த நாளா? நமக்கெல்லாம் ஏது பிறந்த நாள்?"

"பிரபஞ்சத்திலெ உள்ள எல்லாவற்றுக்குமே பிறந்த நாள்னு ஒண்ணு இருக்கு."

அப்படியாக, பேச்சு பல திசைகளிலும் சென்றது. கங்காதரன் தொழிலாளர்களைப் பற்றியும் அரசியல்வாதிகளைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் பேசினான். நான் வாழ்க்கையைப் பற்றியும் பத்திரிகை அதிபர்களைப் பற்றியும் இலக்கியவாதிகளைப் பற்றியும் பேசினேன். அதற்கிடையில் பையன் வந்தான். அவனிடமிருந்து நான் ஒரு அணாவை வாங்கினேன். பாக்கி ஒரு அணாவுக்குச் சாயாவும் பீடியும் தோசையும் கொண்டு வரச் சொன்னேன். சாயா காலணா. தோசை அரையணா. பீடி காலணா.

தோசையை பார்சல் செய்திருந்த அமெரிக்கப் பத்திரிகைக் காகிதத்துண்டில் ஒரு படமிருந்தது. அது என்னை ரொம்பவும் கவர்ந்தது. நானும் கங்காதரனும் தோசை தின்றோம். ஒவ்வொரு தம்ளர் தண்ணீரும் குடித்துவிட்டுக் கூடவே ஆளுக்குக் கொஞ்சம் சாயா. பிறகு ஒரு பீடியைப் பற்றவைத்துப் புகை விட்டபடியே கங்காதரனிடம் ஒரு அணாவைக் கொடுத்தேன். போகும்போது கங்காதரன் விளையாட்டாகக் கேட்டான்: "இன்னைக்கு உன் பிறந்த நாளில்லியா? நீ இந்த உலகத்துக்கு ஏதாவது செய்தி சொல்ல விரும்புறியா?"

நான் சொன்னேன்: "ஆமா, மக்களே. புரட்சி சம்பந்தமான ஒரு செய்தி."

"சொல்லு, கேட்போம்."

"புரட்சியின் அக்னி ஜுவாலைகள் படர்ந்து உலகெங்கும் கொளுந்துவிட்டெரியட்டும். இன்றைய சமூக அமைப்புகள் அனைத்துமே எரிந்து சாம்பலாகி, பூரணமான மகிழ்ச்சியும் அழகும் சமத்துவமும் நிரம்பிய புது உலகம் அமையட்டும்."

"பேஷ். நான் இன்னைக்கு இதைத் தொழிலாளர் கூட்டத்திலெ சொல்லிர்றேன்." என்று சொல்லிவிட்டுக் கங்காதரன் வேகமாக இறங்கிச் சென்றான். நான் ஒவ்வொரு அரசியல்வாதிகளைப் பற்றியும் ஒவ்வொரு எழுத்தாளர்களைப் பற்றியும் எல்லா வகையான ஆண் பெண்களைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கினேன். இவர்களெல்லாம் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்? தோசை பொதிந்துவந்த அந்தக் காகிதத் துண்டைப் படுத்திருந்தபடியே எடுத்தேன். அப்போது வாசலைக் கடந்து, முகத்தை இறுக்கிப் பிடித்து, வீட்டின் உரிமையாளர் வருவதைக் கண்டேன். இவரிடம் இன்று என்ன பதில் சொல்லலாம் என்று நினைத்தவாறே காகிதத்தைப் பார்த்தேன். வானத்தை முத்தமிட்டு நிற்கும் உயர்ந்த மணிக்கூண்டுகள் நிறைந்த பெரு நகரம். அதன் நடுவே, தலை உயர்த்தி நிற்கும் ஒரு மனிதன். இரும்புச் சங்கிலிகளால் அவன் வரிந்து கட்டப்பட்டுப் பூமியோடு பிணைக்கப்பட்டிருந்தான். ஆனாலும், அவனது பார்வை சங்கிலியிலோ பூமியிலோ அல்ல. தொலைவில், பிரபஞ்சங்களுக்குமப்பால், முடிவற்ற நெடுந்தொலைவில், ஒளிக்கதிர் விதைக்கும் மாபெரும் ஒளியான அந்தக் குவிமையத்தில். அவனது கால்களின் அருகில் ஒரு திறந்த புத்தகமிருந்தது. அதன் இரண்டு பக்கங்களிலுமாக அந்த மனிதனுடையது மட்டுமல்ல, எல்லா மனிதர்களுடையதுமான வரலாறு. அதாவது: 'விலங்குகளால் மண்ணோடு சேர்த்துப் பிணைக்கப்பட்டி ருந்தாலும் அவன் காண்பது, காலங்களைக் கடந்த, அதி மனோகரமான மற்றொரு நாளை.'

"நாளை . . . அது எங்கே இருக்கிறது?"

"என்னா, மிஸ்டர்?" வீட்டுக்காரரின் எகத்தாளமான கேள்வி. "இன்னைக்காவது தந்துருவீங்களா?"

நான் சொன்னேன், "பணமெதுவும் கையிலெ வந்து சேரல்லெ. அடுத்த ஒண்ணுரெண்டு நாள்லெ தந்திடறேன்." ஆனால், இனி அவர் தவணையை ஏற்றுக் கொள்வதுபோல் தெரியவில்லை.

"இப்படியெல்லாம் எதுக்கு வாழணும்?" அவரது கேள்வி. நியாயமான விஷயம். இப்படியெல்லாம் எதுக்கு வாழணும்? நான் இந்தக் கட்டடத்தில் வந்து மூன்று வருடம் ஆகப் போகிறது. மூணு சமையலறைகளை நான்தான் சரியாக்கிக் கொடுத்தேன். அதற்கு இப்போது நல்ல வாடகை கிடைக்கிறது. இந்த நான்காவது ஸ்டோர் ரூமையும் மனிதன் வாழ்வதுபோல் நான் ஆக்கிக் கொடுத்த பிறகு அதிக வாடகைக்கு இதை எடுக்க வேறு ஆள் இருக்கிறதாம். அந்த வாடகையை நானே தந்து விடுகிறேன் என்று ஒத்துக்கொண்டாலும் போதாது - காலிசெய்து கொடுத்துவிட வேண்டுமாம்.

இல்லெ. முடியாது. காலிசெய்ய விருப்பமில்லெ. என்னவேணா செய்துக்கிடுங்க.

மணி நான்கு: எனக்கு இந்த ஊரே அலுத்துப்போய்விட்டது. என்னைக் கவர்வதற்கான எதுவுமே இந்த நகரில் இல்லை. தினமும் சஞ்சரிக்கும் ரோடுகள். நித்தமும் பார்க்கும் கடைகளும் முகங்களும். பார்த்தவைகளையே பார்க்க வேண்டும். கேட்டதையே கேட்க வேண்டும். பயங்கரமான மன அலுப்பு . . . எதுவுமே எழுதவும் தோன்றவில்லை. இல்லையென்றாலும் எழுதுவதற்குத் தான் என்ன இருக்கிறது?

மணி ஆறு: மகிழ்ச்சியான மாலைப் பொழுது. கடல் விழுங்கிக்கொண்டிருக்கும், வட்ட வடிவமாக ஜொலிக்கும், இரத்த நிற அஸ்தமன சூரியன். பொன்னிற மேகங்கள் நிறைந்த மேற்கு அடிவானம். கரை காண முடியாத பெருங்கடல். அருகே, சிற்றலைகளைப் பரப்பும் கால்வாயின் ஓரத்தில் கரைபுரண்டோடியது மகிழ்ச்சி. ஆடையலங்காரங்களுடன் சிகரெட் புகைத்தபடி சஞ்சரிக்கும் இளைஞர்கள். துடிக்கும் கண்களுடன் வண்ணச் சேலைகளைக் காற்றில் அலையவிட்டுப் புன்னகை தூவும் முகங்களுடன் உலாவும் இளம் பெண்கள். காதல் நாடகங்களின் பின்னணிக் காட்சிபோல், மனதைக் குளிர்விக்கும் பூங்காவனத்தில் வானொலிப் பாடல்களும், இடையே மலர்களைத் தழுவி வாசனைகளுடன் கடந்து செல்லும் இளங் காற்றும் . . . ஆனால், நான் தளர்ந்து விழுந்துவிடுவேன் போலிருக்கிறது.

மணி ஏழு: ஒரு போலீஸ்காரர் நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து இன்றும் என்னைக் கூட்டிக்கொண்டு போனார். கண்களைக் கூச வைக்கும் பெட்ரோமாக்ஸ் விளக்கினெதிரில் என்னை உட்காரவைத்தார். கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது என் முகத்தில் தென்படும் பாவமாற்றங்களை நுட்பமாகக் கவனித்தவாறே கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டு போலீஸ் டெபுடி கமிஷனர் அங்குமிங்குமாக உலாத்திக் கொண்டிருந்தார். அவரது பார்வை, எப்போதுமே என் முகத்தில்தான் படிந்திருந்தது. என்ன ஒரு பாவனை! எவ்வளவு கம்பீரம்! நான் ஏதோ ஒரு பெரிய குற்றம் செய்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டதுபோல். ஒரு மணிநேரக் கேள்விக்கணைகள். என்னுடைய நண்பர்கள் யார், யார்? எங்கிருந்தெல்லாம் எனக்குக் கடிதங்கள் வருகின்றன? அரசாங்கத்தைக் கவிழ்க்க நினைக்கும் ரகசிய இயக்கத்தின் உறுப்பினன்தானே நீ? புதிதாக இப்போது என்னென்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்? எல்லாவற்றிற்கும் உண்மையான பதிலைத்தான் சொல்ல வேண்டும். அப்புறம் . . .

"உங்களை இங்கிருந்து நாடு கடத்த என்னாலெ முடியுங்கிறது உங்களுக்குத் தெரியும்தானே?"

"தெரியும். நான் எந்த ஆதரவுமில்லாதவன். ஒரு சாதாரண போலீஸ்காரர் நெனைச்சாகூட என்னெ அரெஸ்ட் செய்து லாக்கப்பிலே போட்டு . . ."

மணி ஏழரை: நான் அறைக்குத் திரும்பிவந்து இருட்டில் அமர்ந்திருந்தேன். நன்றாக வேர்த்தது. இன்று என் பிறந்த நாள். நான் தங்குமிடத்தில் வெளிச்சமில்லை. மண்ணெண்ணெய்க்கு என்ன வழி? பசியடங்க ஏதாவது சாப்பிடவும் வேண்டும். ஆண்டவா, யார் தருவார்கள்? யாரிடமும் கடன் கேட்கவும் மனமில்லை. மாத்யூவிடம் கேட்டுப் பார்ப்போமா? வேண்டாம். அடுத்த கட்டடத்தில் வசிக்கும் கண்ணாடிபோட்ட அந்த மாணவனிடம் ஒரு ரூபாய் கேட்டுப் பார்ப்போம். அவன் ஒரு பெரிய வியாதிக்கு நிறையப் பணத்தை ஊசிக்கும் மருந்துக்குமென்று செலவு செய்துகொண்டிருந்தான். கடைசியில் எனது நாலணா மருந்தில் அது குணமாகிவிட்டது. அதற்கான பிரதிபலனாக என்னை ஒரு தடவை சினிமாப் பார்க்கக் கூட்டிக்கொண்டு போனான். அவனிடம் போய் ஒரு ரூபாய் கேட்டால் தராமலிருப்பானா?

மணி எட்டேமுக்கால்: வழியில் மாத்யூ எங்கே என்று விசாரித்தேன். அவன் சினிமா பார்க்கப் போயிருக்கிறானாம். பேச்சுச் சத்தமும் உரத்த சிரிப்பும் கேட்டுக் கொண்டிருந்த அடுத்த கட்டடத்தின் மேல்மாடிக்குச் சென்றேன். புகைந்துகொண்டிருக்கும் சிகரெட்டின் வாசம். மேஜையின் மீது எரியும் சரராந்தலின் ஒளிபட்டுப் பிரகாசிக்கும் பற்கள், ரிஸ்ட் வாட்சுகள், தங்கப் பொத்தான்கள்.

இயலாமையின் பிரதிபிம்பமான நான் செயரில் அமர்ந்தேன். அவர்கள் பேச்சைத் தொடர்ந்தார்கள். அரசியல் விஷயங்கள், சினிமா, கல்லூரி மாணவிகளின் உடல் வர்ணனைகள், தினமும் இரண்டு முறை சேலை மாற்றும் மாணவிகளின் பெயர்கள் . . . இப்படிப் பல விஷயங்கள் . . . எல்லாவற்றிலும் நான் என் கருத்துகளைச் சொன்னேன். இடையே துண்டுக் காகிதத்தில் ஒரு குறிப்பெழுதினேன். 'ஒரு ரூபாய் வேண்டும். மிக அவசியமான ஒரு தேவை. இரண்டு மூன்று நாளில் திருப்பித் தந்துவிடுகிறேன்.'

அப்போது கண்ணாடிக்காரன் சிரித்தான்.

"என்னா, ஏதாவது சிறுகதைக்கு பிளாட் எழுதுறீங்களா?"

நான் சொன்னேன்.

"இல்லை."

அதைத் தொடர்ந்து விஷயம் சிறுகதை இலக்கியத்திற்கு வந்தது.

அழகாகயிருந்த அரும்பு மீசைக்காரன் குறைபட்டுக் கொண்டான்;

"நம்ம மொழியிலெ நல்ல சிறுகதைகள் ஒண்ணுமே இல்லை."

தாய்மொழியிலும் தாய்நாட்டிலும் நல்லதாக என்ன இருக்கப்போகிறது. நல்ல ஆண்களும் பெண்களும்கூடக் கடலுக்கப்பால்தான்.

நான் கேட்டேன்:

"யாருடைய சிறுகதைகளையெல்லாம் வாசிச்சிருக்கிறீங்க?"

"ரொம்ப ஒண்ணும் வாசிச்சதில்லெ. முதல் விஷயம், தாய்மொழியில் ஏதாவது வாசிக்கிறதுகூட ஒரு அந்தஸ்து குறைஞ்ச விஷயம்தான்."

நான் நமது சில சிறுகதை ஆசிரியர்களின் பெயர்களைச் சொன்னேன். இவர்களில் பெரும்பாலானவர்களின் பெயர்களைக்கூட இவர்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை.

நான் சொன்னேன்:

"ஆங்கிலத்துலெ மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா மொழிச் சிறுகதைகளோடும் போட்டிபோடத் தகுந்த சிறுகதைகள் நம்ம மொழியில் இன்னைக்கு உண்டு. நீங்க ஏன் அதையெல்லாம் வாசிக்கிறதில்லெ?"

சிலவற்றை அவர்கள் வாசித்திருக் கிறார்களாம். அதில் பெருமளவும் வறுமையைப் பற்றிய கதைகள் தானாம். எதுக்கு அதையெல்லாம் எழுத வேண்டும்?

நான் எதுவும் பேசவில்லை.

"உங்களோட கதைகளையெல்லாம் வாசிச்சுப் பார்த்தா . . ." தங்கக் கண்ணாடிக்காரன் அறுதியாகச் சொன்னான்: "இந்த உலகத்துலெ என்னமோ ஒரு கோளாறு இருக்குறதெப்போலெ தோணும்."

உலகத்தில் என்ன கோளாறு? அப்பா அம்மாக்கள் கஷ்டப்பட்டு மாதந்தோறும் பணம் அனுப்பிவைக்கிறார்கள். அதைச் செலவுசெய்து கல்வி பயிலுகிறார்கள். சிகரெட், சாயா, காஃபி, ஐஸ்கிரீம், சினிமா, குட்டிக்கூரா பவுடர், வாஷ்லின், ஸ்பிரே, விலையுயர்ந்த ஆடைகள், உயர்தர உணவு வகைகள், மது வகைகள், போதை மருந்து, சிபிலிஸ், கொனேரியா - அப்படிப்போகிறது, கோளாறு இல்லாமல். எதிர்கால யோக்கியர்கள், நாட்டை ஆள வேண்டியவர்கள், சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்கள், அறிவுஜீவிகள், பண்பாட்டுக் காவலர்கள், மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள் . . . சித்தாந்தவாதிகள் . . .! உலகத்தில் என்னதான் கோளாறு?

எனக்குப் பயங்கரமாக ஒரு சொற்பொழிவாற்ற வேண்டும்போல் தோன்றியது.

"இன்றைய உலகம் . . ." நான் தொடங்கினேன். அப்போது கீழேயிருந்து தளர்ந்து போன ஒரு சிறு குரல்:

"மிதியடி வேணுமா, மிதியடி?"

"கொண்டுவா" சிரித்தவாறே உத்தரவிட்டான், கண்ணாடிக்காரன். அப்படியாக விஷயம் மாறியது. மேலே ஏறிவந்தவர்கள் காலையில் பார்த்த அதே பிஞ்சு முகங்கள் தான். அவர்கள் மூச்சுவாங்கிக் கொண்டிருந்தார்கள். கண்களை வெறித்தபடி, முகங்கள் வாடித்தளர்ந்து, உதடுகள் வறண்டுபோயிருந்தன. அதில் பெரிய பையன் சொன்னான்:

"சார்மார்களுக்கு வேணும்னா ரெண்டரை அணா."

காலையில் மூன்று அணாவாக இருந்த மிதியடி.

"ரெண்டரை அணாவா?" தங்கக் கண்ணாடிக்காரன் மிதியடியைச் சந்தேகத்துடன் திருப்பித் திருப்பிப் பார்த்தான்.

"இது, கருஈட்டி இல்லியேடா?"

"கருஈட்டிதான் சார்."

"உங்க வீடு எங்கெ குழந்தைகளே?" என் கேள்விக்குப் பெரியவன் பதில் சொன்னான்.

"இங்கிருந்து மூணு மைல் தூரத்துலே உள்ள ஒரு இடம்."

"ரெண்டணா." தங்கக் கண்ணாடிக்காரன் கேட்டான்.

"ரெண்டே காலணா குடுங்க சார்."

"வேண்டாம்."

"ஓ . . ."

அவர்கள் வருத்தத்துடன் படியிறங்கினார்கள். தங்கக் கண்ணாடிக்காரன் திரும்ப அழைத்தான்.

"கொண்டு வாடா."

அவர்கள் திரும்பவும் வந்தார்கள். நல்லதாகப் பார்த்து ஒரு ஜோடி மிதியடியைத் தேர்ந்தெடுத்துவிட்டு ஒரு பத்து ருபாய் நோட்டை நீட்டினான். அந்தக் குழந்தைகளிடம் ஒரு நயா பைசாகூட இல்லை. அவர்கள் இதுவரை எதுவுமே விற்கவில்லை. நேரம் விடிந்தது முதல் அலைந்து திரிகிறார்கள். மூன்று மைல் தொலைவில், ஏதோ ஒரு குடிசையில், அடுப்பில் சூடாறிக் கிடக்கும் தண்ணீருடன் தமது குழந்தைகள் வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெற்றோர்களின் காட்சி என் மனத்தில் ஓடியது.

தங்கக் கண்ணாடிக்காரன் எங்கிருந்தோ தேடியெடுத்து இரண்டணா கொடுத்தான்.

"காலணா, சார்?"

"இவ்வளவுதான் இருக்கு. இல்லேண்ணா இன்னா மிதியடி."

குழந்தைகள் பரஸ்பரம் பார்த்தபின் துட்டை வாங்கிவிட்டுப் பேசாமல் இறங்கிப் போனார்கள். மின்சாரக் கம்பத்தின் கீழ், ரோட்டில் அவர்கள் போவதைப் பார்த்துவிட்டு வந்த தங்கக் கண்ணாடிக்காரன் சிரித்தான்.

"நான் ஒரு வேலை காட்டியிருக்கேன். அதுலெ ஒண்ணு செல்லாத ஒரணாத்துட்டும்."

"ஹ . . . ஹ . . . ஹா . . ." அனைவரும் சிரித்தார்கள். நான் நினைத்துக்கொண்டேன். மாணவர்கள் அல்லவா? சொல்வதற்கு என்ன இருக்கிறது? வறுமையும் கஷ்டங்களும் என்னவென்று இன்னும் அறியவில்லை. நான் எழுதிவைத்திருந்த குறிப்பை மற்றவர்கள் பார்க்காமல் தங்கக் கண்ணாடிக்காரனிடம் கொடுத்தேன். அவன் அதை வாசிக்கும்போது என் கற்பனை ஓட்டலில் பதிந்திருந்தது. ஆவி பறக்கும் சோற்றின் எதிரில் நான் அமர்ந்திருப்பது போன்றெல்லாம். ஆனால், குறிப்பை வாசித்துப் பார்த்துவிட்டுத் தங்கக் கண்ணாடிக்காரன் அனைவரும் கேட்கும்படியாகச் சொன்னான்;

"சாரி, சேஞ்ச் ஒண்ணுமில்லெ."

இதைக் கேட்டதுமே என் உடலிலிருந்து சூடான ஆவி பரந்தது. வேர்வையைத் துடைத்துவிட்டு நான் கீழே இறங்கி அறைக்கு நடந்தேன்.

மணி ஒன்பது: நான் பாயை விரித்துப் படுத்துக்கொண்டேன். ஆனால், இமைகள் மூட மறுத்தன. தலை, பாரமாக இருந்தது. இருந்தாலும் படுத்தே கிடந்தேன். உலகில் வாழும் கதியற்றவர்களைப் பற்றி நான் நினைத்தேனா. . . எங்கெங்கெல்லாம் எத்தனையெத்தனை கோடி ஆண் பெண்கள் இந்த அழகான பூலோகத்தில் பட்டினி கிடக்கிறார்கள. அதில் நானும் ஒருவன். எனக்கு மட்டும் என்ன விசேஷ அம்சம்? நானும் ஒரு ஏழை அவ்வளவுதான். இப்படி நினைத்துக் கொண்டே படுத்திருக்கும்போது - எனது வாயில் நீரூறியது. மாத்யூவின் சமையலறையில் கடுகு தாளிக்கும் சத்தம் . . . வெந்த சாதத்தின் வாசமும்.

மணி ஒன்பதரை: நான் மெதுவாக வெளியில் வந்தேன். இதயம் வெடித்துவிடுவதுபோல் . . . யாராவது பார்த்துவிட்டால். . . ? எனக்கு வேர்த்துக் கொட்டியது. . . வந்து முற்றத்தில் காத்து நின்றேன். அதிர்ஷ்டம், முதியவர் விளக்கையெடுத்துக்கொண்டு குடத்துடன் வெளியில் வந்து, சமையலறைக் கதவை மெதுவாக அடைத்துவிட்டுக் குழாயடிக்குச் சென்றார். குறைந்தது பத்து நிமிடமாவது பிடிக்கும், திரும்பிவர. சத்தமில்லாமல் படபடக்கும் இதயத்துடன் மெதுவாகக் கதவைத் திறந்து சமையலறைக்குள் நுழைந்தேன்.

மணி பத்து: நிறைந்த வயிறுமாகத் திருப்தியுடன் வேர்த்துக் குளித்து வெளியே வந்தேன். முதியவர் திரும்பியதும் நான் குழாயடிக்குச் சென்று தண்ணீர் குடித்து, கைகால் முகம் அலம்பிவிட்டுத் திரும்ப என் அறைக்குள் வந்து ஒரு பீடியைப் பற்றவைத்து இழுத்தேன். முழுதிருப்தி. சுகமாக இருந்தது. இருந்தாலும் ஏதோ ஒரு மனப்பதற்றம். உடல் சோர்வுமிருந்தது. படுத்துக் கொண்டேன். தூக்கம் வருவதற்கு முன் சிறிது யோசனையிலாழ்ந்தேன். பெரியவருக்குத் தெரிந்திருக்குமோ? அப்படியென்றால் மாத்யூவும் அறிந்துவிடுவான். மற்ற மாணவர்களும் குமாஸ்தாக்களும் அறிந்துகொள்வார்கள். அவமானமாகப் போய்விடும். எதுவானாலும் சரி, வருவது வரட்டும். பிறந்த நாளும் அதுவுமாக, சுகமாகத் தூங்கலாம். எல்லோருடையவும் எல்லாப் பிறந்த நாட்களும். . . மனிதன் . . . பாவப்பட்ட உயிர். நான் அப்படியே தூக்கத்திலாழ்ந்துகொண்டிருந்தேன். . . அப்போது என் அறைக்குப் பக்கத்தில் யாரோ வருகிறார்கள்.

"ஹலோ மிஸ்டர்." மாத்யூவின் குரல். எனக்கு வேர்க்கத் தொடங்கியது. தூக்கம் கடல் கடந்தது. சாப்பிட்டதனைத்தும் ஜீரணமாயின. எனக்குப் புரிந்துவிட்டது. மாத்யூ அறிந்துவிட்டான். பெரியவர் கண்டுபிடித்துவிட்டார் போலிருக்கிறது. நான் கதவைத் திறந்தேன். இருளின் இதயத்திலிருந்து வருவதுபோல் சக்திவாய்ந்த வெளிச்சத்தின் நீள ஈட்டிபோல் ஒரு டார்ச் வெளிச்சம். நான் அதனுள். மாத்யூ என்ன கேட்கப் போகிறான்? பதற்றத்தால் என் இதயம் துண்டு துண்டுகளாக உடைந்து சிதறிவிடும் போலிருந்தது.

மாத்யூ சொன்னான்,

"ஐ ஸே . . சினிமாவுக்குப்போயிருந்தோம். விக்டர் ஹ்யூகோவின் 'பாவங்கள்.' நீங்க பார்க்க வேண்டிய ஒரு ஃபர்ஸ்ட்கிளாஸ் ஃபிலிம்."

"ஓஹோ. . ."

"நீங்க சாப்டீங்களா? எனக்குப் பசிக்கலெ. சோறு வேஸ்டாயிடும். வந்து சாப்பிடுங்களேன். வர்ற வழியிலெ நாங்க 'மாடர்ன் ஹோட்டல்'லெ ஏறினோம்."

"தாங்க்ஸ். நான் சாப்பிட்டாச்சு."

"அப்படியா? சரி தூங்குங்க, குட்நைட்."

"எஸ். குட் நை . . ."

(1945)

******

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

8 கருத்துகள்:

AkashSankar on April 24, 2010 at 7:54 AM said...

அருமையான கதை... பாராட்டவேண்டும் மொழி பெயர்த்தவரை

தமிழ்ச் செல்வன்ஜீ on August 22, 2010 at 11:44 PM said...

aliya sudarkal illa vittal ithu mathiri kathaikalai naan vasithirukka mudiyathu,thanks

Anonymous said...

புத்த‌க‌ திருவிழாக்க‌ளில் ம‌ட்டுமே கிடைக்கும் இந்த‌ மாதிரியான‌ அற்புத‌ ப‌டைப்பை இங்க‌ளித்த‌ அழியாச் சுட‌ருக்கு ஆயிர‌ம் கோடி ந‌ன்றி

Rajesh Pillai on May 4, 2011 at 9:27 PM said...

arumai... nenchai nanaithu vittathu.

Unknown on January 1, 2012 at 9:15 PM said...

பஸீரின் படைப்புகளை தேடி படிப்பவர்களில் நானும் ஒருவன் பகிர்வுக்கு பல கோடி நன்றிகள்

செந்தமிழன் on April 19, 2012 at 1:45 AM said...

அற்புதம் ... மிக சிறந்த கதை ... பசியின் கொடுமை கதை முழுதும் தோய்ந்து கிடக்கிறது ...

Haridass kannikandath on February 2, 2018 at 3:41 PM said...

மலையாளத்தில் படிக்கவில்லை. ஆனால் மொழிபெயர்ப்பு மிக நெருக்கமாக இருந்தது.

Unknown on March 22, 2020 at 5:36 PM said...

சுய வேலை நிறுத்தத்தில் இன்று தங்கள் அன்றாட கூலியை இழந்து வாடுகின்ற கோடிக்கணக்கான அமைப்பு சாரா தொழிலாளிகளின் பசியை நினைவூட்டகிறது இச்சிறுகதை.வாழ்க ! தோழர் வைக்கம் பஷீர் !

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்