Apr 15, 2010

அவன் மனைவி - சிட்டி

சிட்டி

மீனாக்ஷி அம்மாள் ரொம்பவும் நல்லவள். அவளுடைய மனப்பான்மையில் பொறாமையோ சந்தேகமோ கிடையாது. அன்பு நிறைந்த அவளுடைய சம்பாஷணை அவளை வெகுளி என்றே தோற்றுவிக்கும். விளைவைக் கருதாமல் எதைப் பற்றியும் விஸ்தாரமாகவே பேசிவிடுவாள். சந்தர்ப்பத்திற்கேற்றவாறு பரிபாஷையிலோ, இருபொருளாகவோ பேசும் வழக்கம் அவளிடம் கிடையாது.

chitti அந்த அம்மாளைப் பற்றி இவ்வளவு தெரிந்திருந்தும் அவளுடைய வார்த்தைகள் எனக்கு ஏன் குழப்பம் ஏற்படுத்தியது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. அவள் சொன்னது பொதுவாக இயற்கையாகவே இருக்கலாம். இருந்தாலும் அன்று அந்த நிலையில் லக்ஷ்மண் வீட்டில் விருந்தாளியாக இருந்த எனக்கு அசம்பாவிதமாகவே பட்டது.

லக்ஷ்மண் வீட்டிற்கு நான் வர நேரிட்டதே சந்தர்ப்பங்களின் சூழ்ச்சிதான். சம்பவங்கள் மறந்துவிடலாம், உணர்ச்சிகளை வென்று விடலாம். காலப்போக்கில் இது சாத்தியம் என்று மனிதன் எப்பொழுதுமே தற்பெருமை கொள்கிறான். அதே மனிதன் சம்பவங்களின் கருவியாகவும், உணர்சசிகளின் அடிமையாகவும் மாறுவதை யார் எடுத்துச் சொல்வது? ஞானிகள் முயற்சிக்கலாம். ஆனால் ஞானமே அனுபவத்தின் விளைவுதானே? அனுபவம் அவசியமா. தவிர்க்க முடியாததா என்பதைப் பற்றி ஆராயக்கூட மனிதனுக்கு அவகாசம் இருப்பதில்லை, தன்னுடைய தோல்விகளையே வெற்றியாகக் கொண்டாடி மயக்கமடையும் இயல்பு ஜீவ ஜந்துக்களிடையே அபூர்வப் பிறவியான இந்த மனிதனுக்குத்தான் வாய்த்திருக்கிறது.

கணக்கப் பரிசோதனைக்காக உத்தியோக முறையில் நான் மதுரைக்குச் சென்றபோது அந்த ஆபீஸில் நான் லக்ஷ்மணணை சந்திக்காமல் இருப்பதற்கு எனக்குப் போதிய காரணங்கள் இருந்தன. ஆனால் நாளை அவன் மாமியார் மீனாக்ஷிஅம்மாள் மனம் நொந்து கொள்ளாமல் இருக்க வேண்டுமே? இந்த ஒரு காரணம்தான் நான் அவனைப் பார்த்துப் பேசும்படி செய்தது என்பதை இன்று என்னாலேயே நம்ப முடியவில்லை. மனத்திற்குள் ஒரு மனம் உண்டு. அதன் சேஷ்டைகள் பல என்று சொல்லுகிறார்களே, அதற்கு இது ஒரு உதாரணம் போலும்.

முதல்நாள் நான் அவனைப் பார்த்து அறிமுகம் செய்து கொண்ட போது பொதுவாகத்தான் பேசிக் கொண்டிருந்தோம். என்னைப் பற்றி அதிகமாக நான் சொல்லிக் கொள்ளாமலிருந்தது எனக்கு வியப்பாகத் தான் தோன்றிற்று. மறுநாள் லக்ஷ்மணன் என்னைத் தேடி வந்து வீட்டுக்கு அழைத்த போது நான் சிறிது பின் வாங்கினேன். அவனுடைய மாமியாருக்கும் மனைவிக்கம் என்னை நன்றாக தெரியமென்பதையும், அவர்களுக்கு நான் ஒரு முறையில் உறவினர் என்பதையும் அறிந்து கொண்டு, அவன் நட்பும் சொந்தமும் கொண்டாட ஆரம்பித்து விட்டான்.

மறுத்துப் பயனில்லை என்று தெரிந்து அவனுடன் காப்பி மாத்திரம் சாப்பிட அவன் வீட்டுக்குச் சென்ற நான், அங்கேயே இரண்டொரு நாள் தங்கும்படி ஏற்பட்டதற்கு எனது மன உறுதியின்மையே காரணம் என்பதை நான் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனாலும் அன்பு ததும்பப் பேசி, அம்மாளின் குணத்தைக் கேவலம் மனஉறுதியுடன் எதிர்த்திருந்தால், சுய மரியாதை ஒன்றுதானே மிஞ்சி இருக்கும்? இல்லை, ஆவலும் மரியாதையும் கலந்த பண்புடன் நடந்து கொண்ட பார்வதியின் வரவேற்பைத்தான் புறக்கணிக்க முடியுமா? அவளுடைய கணவன் லக்ஷ்மணன் தான் கண்டுபிடித்த புதிய நட்பில் கர்மசிரத்தையும் மகிழ்ச்சியும் என் உறுதியைத் தகர்க்கும் முறையிலேயே அமைந்தது.

ஏழு வருஷங்களுக்கு முன் பார்வதி என்னை மணந்திருக்க வேண்டியவள். அநேகமாய்ப் பூர்த்தியான ஏற்பாடுகள் அவளுடைய தந்தையின் மரணத்தினால் தடைப்பட்டன என்ற விவரத்தை அவ்வளவு வெளிப்படையாக, அவ்வளவு சீக்கிரமாக எங்கள் மூவர் முன்னிலையிலும் மீனாக்ஷி அம்மாள் சொல்லியிருக்க வேண்டாம். ஆனால் லக்ஷ்மணன் அதை சாதாரணத் தகவலாகவே பாவித்ததை அறிந்ததும் எனக்கு அவன் மேல் அதிக மதிப்பு ஏற்பட்டது. பார்வதி என்னை மணந்திருந்தால் அதிருஷ்டசாலியாக - ஒரு ஆபீஸர் மனைவியாக வாழ்ந்திருக்கலாம் என்று லக்ஷ்மணன் ஹாஸ்யமாகப் பேசியது எனக்கு சற்று ஆறுதலளித்தது. மனதில் தோன்றம் உணர்ச்சிகளை முகத்தில் காட்டாத பொம்மைத் தோற்றம் படைத்தவள் பார்வதி. சிறுபருவத்தில் அன்று நான் கண்ட அதே பதுமைபோல இன்றும் இருந்தாள். அவள் மனதில் என்ன நினைத்தாளோ என்பதை ஊகிக்க நான் துணியவில்லை.

'என்னுடைய அதிருஷ்டம் அவருக்கு வாய்த்துவிட்டால் ஆபீஸராவது எப்படி?' என்று திரைச் சீலையிடம் பேசாமடந்தை பேசியது போல் அவள் கேட்டது எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

''ஏண்டியம்மா, உன் அதிர்ஷ்டத்திற்கு என்ன கொறைச்சல்? என்று மீனாக்ஷி அம்மாள் ஆரம்பித்தவுடன் நான் குறுக்கிட்டேன்.

''இன்னும் இரண்டு வருஷத்திற்குள் லக்ஷ்மணன் ஆஃபீஸர் ஆகவேண்டியது தானே!'' என்று சொல்லி உத்தியோக விஷயங்கள் சிலவற்றை விளக்கி, பேச்சின் போக்கை மாற்ற முயன்றேன்.

நான் வேறு பெண்ணை மணக்க நேரிட்டதைப் பற்றி ஆராயத் தொடங்கி விட்டாள். சரியான விவரங்களைக் கொடுத்து, கதையை முடித்து விடுவது என்று தீர்மானித்து நானே விளக்கினேன்.

பார்வதியின் தந்தை காலமானதால் அவளுக்கு சீக்கிரம் விவாகம் நடக்க முடியாத நிலையில் என்னைத் தேடி பல பெண்களின் பெற்றோர்கள் வந்ததையும், அவர்களில் ஒருவர் வெற்றி பெற்றதற்கு

அவர் என்னுடைய பெற்றோர்களுக்கு 'பிள்ளையைப் பெற்றவர்கள்' என்ற முறையில் திருப்தி அளித்ததையும் ஒளிக்காமல் எடுத்துச் சொன்னேன். பார்வதிக்காக நான் காத்திருந்திருக்க வேண்டுமா என்பதைப் பற்றி அப்பொது நான் சிந்திக்கவில்லை. அன்று லக்ஷ்மண் வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது அப்படி சிந்திக்காமலிருந்தது சரிதானா என்ற ஒரு பிரச்சினை திடீரென்று என் மனதில் தோன்றிற்று. காதலும் வைராக்கியமும் கதைகளுக்குத்தான் பொருந்தும் என்ற நான் வேறு பெண்ணை மணக்க நேரிட்டதைப் பற்றி ஆராயத் தொடங்கி விட்டாள். சரியான விவரங்களைக் கொடுத்து, கதையை முடித்து விடுவது என்று தீர்மானித்து நானே விளக்கினேன். பார்வதியின் தந்தை காலமானதால் அவளுக்கு சீக்கிரம் விவாகம் நடக்க முடியாத நிலையில் என்னைத் தேடி பல பெண்களின் பெற்றோர்கள் வந்ததையும், அவர்களில் ஒருவர் வெற்றி பெற்றதற்கு அவர் என்னுடைய பெற்றோர்களுக்கு 'பிள்ளையைப் பெற்றவர்கள்' என்ற முறையில் திருப்தி அளித்ததையும் ஒளிக்காமல் எடுத்துச்
சொன்னேன். பார்வதிக்காக நான் காத்திருந்திருக்க வேண்டுமா என்பதைப் பற்றி அப்பொது நான் சிந்திக்கவில்லை. அன்று லக்ஷ்மண் வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது அப்படி சிந்திக்காமலிருந்தது சரிதானா என்ற ஒரு பிரச்சினை திடீரென்று என் மனதில் தோன்றிற்று. காதலும் வைராக்கியமும் கதைகளுக்குத்தான் பொருந்தும் என்ற கொள்கையைக் கொண்ட எனக்கு அம்மாதிரி அப்பொழுது தோன்றியது விசித்திரமாயிருந்தது. பார்வதியைப் பார்த்தேன். பார்க்கக் கூடாதென்று நினைத்தவன்தான், அப்பொழுது அவள் எங்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டி ருந்தாள். அவளும் என்னைப் பார்த்த அந்த நொடி நேரத்தில், ஏதோ ஒரு அறைகூவலை உணர்ந்தேன்; இல்லை. அது என் மனோ பிரமை என்று எனக்கே சொல்லிக் கொண்டேன். விளக்கொளியில் அவளுடைய முகம் வழக்கமான அமைதிக்கு மாறாகத் தோன்றிற்று.

சாப்பாடு முடிந்ததும் நானும் லக்ஷ்மணனும் அவன் அறையில் அமர்ந்து பல விஷயங் களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். காரியாலய அலுவல் முறை நுணுக்கங் களிடையே சொந்த விஷயங்களும் எங்கள் பேச்சுக்குப் பொருளாயின. என்னைப் பற்றி வீட்டில் வந்து சொன்னவுடன் அவனுடைய மாமியார் என்னுடைய பூர்வோத்தரமெல்லாம் எடுத்துச் சொல்லி உறவை விளக்கியத்தைப்
பற்றி சொன்னான். தாய் தந்தையற்ற தனக்கு மீனாக்ஷிஅம்மாள் எவ்வளவு ஆதரவாய் இருந்தாள் என்பதையும் பெருமையாகச் சொல்லிக் கொண்டான்.

பார்வதியின் தந்தை மறைந்த இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, அவளுக்கு வயதாகிவிட்டது என்ற கவலை மிகுதியினால் அவளைத் தனக்குக் கொடுக்க மீனாக்ஷி அம்மாள் முன் வந்தாள் என்று லக்ஷ்மணன் சொன்னபோது எனக்கு அவன் மீது ஏற்பட்ட மரியாதை இன்னும் அதிகமாயிற்று. பார்வதியைப் பற்றியும் அவன் பாராட்டிப் பேசியபோது அதை நான் மிகவும் ஆவலுடன் ஆமோதிக்க முற்பட்டதை திடீரென்று உணர்ந்து நானே நிறுத்திக் கொண்டேன்.


'உன்னை வீட்டுக்கு அழைத்து வர வற்புறுத்தியதில் என் மாமியாருக்கு இருந்த ஆவல் பார்வதிக்கு இல்லை என்றுதான் நான் நினைத்தேன்' என்று லக்ஷ்மணன் சொன்ன போது இந்த சம்பாஷநணையை வேறு பொருளைப் பற்றித் திருப்ப வேண்டுமென்று தீர்மானித்தேன். ஆனால் லக்ஷ்மணன் மேலும் விளக்கினான்.

'இப்பொழுதுதான் தெரிகிறது. தனக்க வரனாகப் பார்க்கப்பட்டவன் நீ என்றால், வெட்கமாயிருக்காதா பார்வதிக்கு...! ஏன் தூக்கம் வந்து விட்டதா?''

தூக்கம் வந்து விட்டதாகப் பாசாங்கு செய்தால் தான் சர்ச்சை முடியும் போலிருந்தது. ஆனால், படுத்த பிறக எனக்குத் தூக்கம் வரவில்லை என்பது என்னுடைய ரகஸ்யமாகத்தானிருக்க வேண்டும்.

மனதில் தோன்றிய பல நினைவுச் சுழல்களுடன் போராடிய களைப்பினாலோ என்னவோ நெடுநேரம் கழித்துத்தான் தூங்கினேன்.

கபடமற்ற தன்மையிலும், நினைத்ததைப் பேசுவதிலும் லக்ஷ்மணனும் மீனாக்ஷி அம்மாளும் போட்டி போட்டது எனக்குப் பலவிதத்திலும் சிரமமாக இருந்தது. மறுநாள் எனக்கு ஓய்வு. லக்ஷ்மணன் மட்டும் ஆஃபீஸுக்குப் போயிருந்தான். நான் பல நண்பர்களைப் போய் சந்திக்க வேண்டும் என்று சொல்லி வெளியேற முயற்சித்தது வீணாயிற்று. அன்பின் அடிப்படையில் தோன்றிய அவர்களுடைய
வற்புறுத்தலை எதிர்க்க சக்தியில்லை.

அன்றுதான் மீனாக்ஷிஅம்மாள் அப்படிப் பேசினாள். என்னுடைய விவாகம், என் மனைவி, குழந்தைகளைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொள்ள ஆவலுற்றாள். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் பற்றி நான் சொல்லிக் கொண்டிருந்தபோது பார்வதி மிகவும் ஆர்வத்துடன் கவனித்ததைக் கண்ட அந்த அம்மாள் சொன்னாள்.

''பார்வதிக்கு குழந்தைகள்னா அவ்வளவு பிரியம். எதிர்த்த வீட்டுக் குழந்தை எப்பொழுதும் இங்கேதானிருக்கும்! ஊம்... ஆச்சு, வருஷம் ஏழு ஓடிப் போயிடுத்து.. இருக்காத விரதம் இல்லை. செய்யாத நோம்பில்லெ... ராமேஸ்வரம் கூட போகணும்னுதான்... மாப்பிள்ளெக்கு லீவு கெடைக்கணும்... ஆமா இப்போ ஒன் ஆத்துக்காரி வெறுமனத்தானே இருக்காள்?

கதவோரத்தில் நின்று கொண்டிருந்த பார்வதியின் முகத்தை நான் பார்க்கவில்லை. அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் என்றதற்காக நான் ஏன் உண்மையை மறைத்தேன் என்று எனக்கே விளங்கவில்லை.

'ஆமாம்' என்று ஒரே வார்த்தையில் பொதுப்படையாக மீனாக்ஷிஅம்மாளுக்கு பதில் அளித்தேன்.

'என்னமோ பாவம்.. அப்படியே இருக்கட்டும்... அவளும் சம்சாரி ஆயிட்டா. பார்வதி வயசுதானே... ஏதோ அவ அப்பா உயிரோடெ இருந்து நிச்சயமானபடியே கலியாணம் நடந்திருந்தா இன்னிக்கி பார்வதியும் ரெண்டு கொழுந்தைகளோடே...'

''ஐயோ, போறமேம்மா... என்ன, அவருக்குத் தான் எப்பிடி இருக்கும், இப்பிடியே பேசிண்டிருந்தா?'

திகைத்து நிமிர்ந்து பார்த்தேன். ஆம், பார்வதிதான் பேசிக் கொண்டிருந்தாள். துணிந்து அவள் முகத்தைப் பார்த்தேன். நான் தான் தலைகுனிந்தேன்.

எதிர்வீட்டுக் குழந்தையின் வருகை ஒரு நல்ல வாய்ப்பாகக் கிடைத்தது. அந்தக் குழந்தையை அருகில் அழைத்துக் கொள்ள முயன்றேன். குழந்தை திமிறிக் கொண்டு பார்வதியிடம் ஓடிற்று. பார்வதியின் உள்ளத்தில் தொனித்த சிரிப்பு அவளுடைய பார்வையில் தெரிந்தது.

''ஏதோ நான் ஒளர்றேன். பைத்தியக்காரி. நீதான் சொல்லப்பா இருக்காதா? ஒடப் பொறந்தான் மாதிரி வந்திருக்கே. பார்வதிக்கு நீதான் ஆசிர்வாதம் பண்ணணும்.''

மீனாக்ஷிஅம்மாளின் பரிசுத்த மனதிற்கு இந்த வார்த்தைக்கள் அத்தாட்சியாக ஒலித்தன. ஆனால், சற்றுமுன் அவள் சொன்னதை பார்வதி ரசிக்கவில்லை என்பது உண்மைதானா என்று அனாவஸ்யமான கேள்வி என் மனதைக் கவ்விற்று.

எழுந்து லக்ஷ்மணன் அறைக்குச் சென்று ஒரு புத்தகத்தை எடுத்தேன். படிக்க முயன்றேன். மனம் குழம்பிக் கிடந்தது. பார்வதி அந்தக் குழந்தையுடன் கொஞ்சுவது லேசாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

மீண்டும் புத்தகத்தில் ஈடுபட்டேன். அறை கதவருகில் பார்வதி நிற்பது போல்... இல்லை. பார்வதிதான் நின்று கொண்டிருந்தாள், குழந்தையுடன்.

''இந்த மாமாவெக் கேக்கறயா.. இந்த மாமா எங்காத்து மாமா. ஊர்லேர்ந்து வந்திருக்கா. அவாத்துலே ஒரு பாப்பா இருக்கானாம். அவனெ இங்கே அழைச்சுண்டு வரச் சொல்லு, உன்னேடெ விளையாடா?'

இப்படி எதிர்பாராத விதமாய் பார்வதி முகமலர்ச்சியுடன் வந்து பேசியதில் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து நான் விடுபடுவதற்கள் அவள் மீண்டும் சொன்னாள்:

'அம்மா ஒரு அசடு; ஏதாவது பேத்தும். நீங்க ஏதாவது நெனச்சுக்காதீங்கோ.''

''ஏன்? அதனாலென்ன? அம்மா சொன்னதுலெ ஒன்னும்...' எப்படி முடிப்பதென்று தெரியாமல் தயங்கினேன். மீனாக்ஷிஅம்மாளுக்கு பரிந்து பேசுவதால் ஏற்படக்கூடிய விபரீதப் பொருளையும் பார்வதி ஆமோதிப்பதால் நேரும் மரியாதையற்ற நிலைமையையும் நினைத்துத் தவித்தேன்.

அப்பொழுது லக்ஷ்மணன் வந்தது எவ்வளவோ உதவியாயிருந்தது.

''என்ன.. பார்வதி என்ன சொல்கிறாள்? என்னைப் பத்தி ஒண்ணும் புகாரில்லையே? தேவலையே. நேத்தெல்லாம் ஒரேடியா பேசாம இருந்தாள். எனக்குக்கூட நீ என்ன நெனப்பையோன்னு..' என்று லக்ஷ்மண் ஆரம்பித்தான்.

'ஏன்? பார்வதி என்ன எனக்குப் புதுசா? மாமி சொன்ன மாதிரி நான் இப்பொ அவளுக்குத் தமையன் இல்லையா?'' என்றேன்.

பேசத் தெரியாமல் நிலைமையை சமாளிக்க சும்மா பேத்தினேன் என்றுதான் சொல்ல வேண்டும். பார்வதி குழந்தையுடன் உள்ளே சென்று விட்டாள். லக்ஷ்மணன் ஆஃபீஸ் விஷயமாக சில தகவல்களைக் கொடுத்தான். எங்கள் பேச்சு உத்தியோக ரீதியில் வளர்ந்து கொண்டு போயிற்று. அந்தக் குழந்தை ஓடி வந்தாள்.

''மாமா, மாமி கோயிலுக்குப் போகணும்னு சொல்றா. இந்த மாமாவும் வருவாளோல்லியோ?' என்றான் என்னைக் காண்பித்து.

''ஆம்! மறந்தே போய்விட்டேன். போகலாமா கோவிலுக்கு? என் அதிர்ஷ்டம் வீட்டிலும் மீனாக்ஷிஅம்மன், கோவிலிலும் மீனாக்ஷி' என்று சிரித்துக் கொணடே லக்ஷ்மணன் உள்ளே சென்றான்.

கோவிலுக்குள் நுழைந்ததும் தூண்களில் உள்ள உலக பிரசித்தமான சிற்பங்களைப் பார்த்து மகிழ்வதில் நான் சற்று பின் தங்கிவிட்டேன். பொற்றாமரைக் கரையில் சுவர் ஓவியங்களை பார்வதி குழந்தைக்குக் காண்பித்துக் கொண்டிருந்தாள். லக்ஷ்மணன் அங்கு எதிர்ப்பட்ட ஒரு நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தான். நான் அவர்களை அணுகியபோது பார்வதியின் தோற்றத்தில் காணப்பட்ட பொலிவு எனக்கு ஒரு புதுமையாக இருந்தது. என்னைப் பார்த்ததும் லக்ஷ்மணன், ''பார்வதியும் நீயும் போய்க் கொண்டிருங்கள், இதோ வந்துவிட்டேன்' என்றான்.

பார்வதி என்னைப் பார்த்தாள். அவள் உதடுகளில் ஏதோ புன்முறுவல் போலத் தோன்றிற்றே ஒழிய, பார்வை மிகவும் நிதானமாகவே இருந்தது. லக்ஷ்மணன் சொன்னபடி முன்னோக்கிப் போகத் தயாராயிருந்த அவளைத் தொடர்ந்தேன். இருவரும் அம்மன் சந்நிதியை நெருங்கினோம். அந்தக் குழந்தை பார்வதியைக் கேட்டது. 'ஏம் மாமி, இந்த மாமாவாத்து மாமி எங்கே?''

''நீயே கேளேன் இந்த மாமாவெ..'' என்றாள் பார்வதி.

'ஏன் மாமி, நீங்க பேசமாட்டேளா மாமாவோடெ?''

பார்வதி குலுங்கச் சிரித்தாள்.

''போக்கிரி. நீதானே மொதல்லெ கேட்டே.. பார்த்தேளா, இவளொடெ துடுக்குத்தனத்தெ!' என்றாள் என்னைப் பார்த்து.

''உன்னோடெ பழகுறாளோல்லியோ?...' என்றேன்.

''ஏன்.. நான் துடுக்கா இருக்கேனா?'

''இப்போ எப்படியோ? முந்தி எல்லாம்!'

'ஓஹோ! பழைய கதையைச் சொல்றேளா?'

அவள் கேட்ட மாதிரியில் எனக்கு உற்சாகம் குன்றிவிட்டது. ஆனால் அவள் மட்டும் குதூகலமாகவே இருந்தாள். என் மனைவி, குழந்தைகளைப் பற்றி தன் தாயாரைப் போலவே பல பேர்வாகள் கேட்க ஆரம்பித்தால்...

லக்ஷ்மணண் வரவில்லை. சிறிது நேரம் காத்திருந்து விட்டு சுவாமி சந்நிதிக்கும் போய்விட்டு வரும் போதுதான் அவனை மீண்டும் சந்தித்தோம். அதற்குமுன் நான் அவனைத் தேடிய போதெல்லாம் பார்வதி 'வருவார்' என்று பொதுவாகச் சொன்ன போது அவள் குரலில் தொனித்த அலட்சியம் எனக்குப பிடிக்கவில்லை. தான் எங்களை விட்டுப் பிரிந்து விட்டதைப் பற்றி லக்ஷ்மணனும் அதிகக் கவலைப் படவில்லை. மறுநாள் சினிமாவுக்குப் போகலாம் என்று லக்ஷ்மணன் சொன்னபோது நான் தட்டிக் கழிக்க முயன்றேன்.

''நீ வந்திருக்கேன்னு தானே... வா.. போகலாம்' என்று லக்ஷ்மண் வற்புறுத்திய போது நானும் அவனும் மட்டும் போவதாக நினைத்தேன். பார்வதி கூட வந்ததும், லக்ஷ்மணன் டிக்கட் வாங்கப் போனபோது அவள் என் அருகில் நின்று கொண்டு, அன்றைய படத்தின் கதையை சொல்லிக் கொண்டிருந்த போதும் எனக்கு மிகவும் சங்கடமாகவே இருந்தது. தியேட்டருக்குள் படம் நடக்கும் போது ஒவ்வொரு கட்டத்தையும் பார்வதி எனக்கு விளக்கிக் கொண்டே வந்தாள். அவளுடைய குதூகலமும் முக மலர்ச்சியும் எனக்கு விந்தையாகவே இருந்தது. படத்தில் என் மனம் செல்லவில்லை.

மறுநாள், ஊருக்குப் புறப்பட்டு விடுவதென்று தீர்மானித்தேன்.

லக்ஷ்மணன், மீனாக்ஷிஅம்மாள் இருவருடைய அன்பையும், ஆதரவையும் மீறிக் கொண்டு புறப்படுவது கஷ்டமாய்த் தான் இருந்தது. இருந்தாலும் வந்த காரியம் முடிந்துவிட்டது. சென்னை சேர்ந்து ரிப்போர்ட் எழுத வேண்டுமென்று சொல்லி தப்பித்தேன். மீனாக்ஷிஅம்மாள் வழக்கம் போல் உபசரிப்பை அதிகரித்தாள். நான் என் மனைவி மக்களை அழைத்துக் கொண்டு வந்து ஒரு மாதமாவது தங்க வேண்டுமென்றாள்.

பார்வதி இதை ஆமோதித்ததாகத் தெரிய வில்லை. ஆனால் மிகவும் சந்தோஷத்து டனேயே காணப்பட்டாள். அவளுடைய நடத்தையில், ஒரு விசேஷ பரபரப்பு இருந்தது. அடிக்கடி என் தேவைகளை கவனித்க் கொண்டிருந்தாள். பலமுறை நான் இருக்கும் பக்கம் வந்து பேசுவதற்கு முயன்றாள். லக்ஷ்மணனும் மீனாக்ஷி அம்மாளும் இல்லாத சமயங்களில் இந்த முயற்சியை அவள் மேற் கொண்டதை அறிந்தேன்.

அவளைப் பற்றி எனக்கு ஏற்பட்ட வியப்பு கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பாக மாறும்போல் இருந்தது. கூடிய மட்டும் லக்ஷ்மணன் கூடவே பேசிக்கொண்டிருந்து நாளை கழித்த விட்டேன்.

மாலை ரயிலுக்குப் போவதற்கு வண்டி கொண்டு வருவதற்காக லக்ஷ்மணன் போய்விட்டான். நானும் வருகிறேன் என்று சொன்னதை அவன் கேட்கவில்லை. அன்று மீனாக்ஷிஅம்மாள் அவசரமாக என் குழந்தை களுக்காக செய்த பக்ஷணங்களை பார்வதி கட்டி வைத்துக் கொண்டிருந்தாள். மீனாக்ஷி அம்மாள் ரேழி அறைக்கு வந்து என்னுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

'எல்லாரையும் கேட்டதாகச் சொல்லு. அவளைக் கட்டாயம் அழைச்சுண்டு வா. உடம்பைப் பார்த்துக் கொள்ள சொல்லு என்று வழக்கமான புத்திமதிகளை சொல்லிக் கொண்டிருந்தாள்.

பார்வதி வந்தாள். 'அம்மா, அடுப்பிலே எண்ணெய் தீய போறது' என்றாள். மீனாக்ஷிஅம்மாள் உள்ளே விரைந்தாள்.

பார்வதி என்னைப் பார்த்துக் கொண்டு பாதியிலேயே நின்றாள். அடுப்பிலிருந்த எண்ணெயை அவளே கவனித்திருக்கலாமே என்று எனக்குப் பட்டது. என்னிடம் ஏதோ சொல்லப் போகிறாள் என்று எனக்கு என் மனம் எச்சரித்தது. புறப்படும் சமயத்தில் நாடக ரீதியில் ஒன்றும் நிகழ்ந்து விடக்கூடாது என்ற உறுதியில் நான் எழுந்து வாசலுக்குச் செல்ல முயன்றேன்.

'உட்காருங்களேன்; அவர் வந்துவிடுவார். இப்பொ உங்களோடே கொஞ்சம் பேசணும்'. இந்தத் துணிகரமான சொற்களைக் கேட்டுத் திடுக்கிட்டேன். என் ஆச்சரியம் கோபமாக மாறிற்று. இரண்டு நாட்களாக அடக்கி வைத்திருந்த ஆத்திரம் முழுவதும் வெளிப்பட்டது.

''தெரியும் அம்மா, பார்வதி, ரொம்ப புத்திசாலித்தனமான விஷயம். என்னோடே தனியாப் பேசணும்னு நீ ஆசைப்படுவது ரொம்ப தெளிவாய்த் தெரிகிறது. இவ்வளவு கேவலமான நடத்தையை உன்னிடம் நான் எதிர்பார்க்கவில்லை. நான் இங்கே வந்தது என் தவறு. ஆனால், அன்பை அள்ளிக் கொடுக்கும் உத்தமமான லக்ஷ்மணனுக்கு துரோகம் செய்ய நீ நினைத்தால் அதற்கு என்னை உடந்தையாக்க வேண்டாம். உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளத் தவறியது என் அதிர்ஷ்டம் என்று இப்பொழுது தான் தெரிகிறது. இனிமேல் இந்த வீட்டுப் பக்கம் நான் வரப் போவதில்லை. சீ! ஒரு கல்யாணமான பெண்ணுக்கு இவ்வளவு..'

ரிக்ஷா வரும் சத்தம் கேட்டது. என் வெறுப்பை வார்த்தைகளில் கொட்டிவிட்டு அறையைவிட்டு வெளியேற முயன்றேன். என் திகைப்பு பயமாக மாறும் முறையில் பார்வதி குறுக்கே நின்றாள்.

''எல்லாம் சொல்லியாச்சா? நான் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன். ரெண்டு நாள் உங்களிடம் ஒன்று சொல்ல நினைத்தது உண்மைதான். அது என்ன தெரியுமா? நான் என் கணவருடன் சந்தோஷமாயிருக்கிறேன். எனக்கு ஒரு குறையுமில்லை என்பதுதான் குழந்தையில்ல என்பது அம்மாவுக்கு குறையாகத்தான் இருக்கும். என் மட்டில் சந்தோஷமாகவே இருக்கிறேன். என்னைப் பற்றி வேறு விதமாக நினைக்க வேண்டாம் என்று சொல்லத்தான் வந்தேன். அதற்குள் என்ன விபரீதப் பேச்சு! புருஷாள் வழக்கந்தானே! கடைசியில் வாக்குக் கொடுத்தீர்களே, இனிமேல் இங்கே வருவதில்லைன்னு அதைக் காப்பாற்றுங்கள்! அதுவே எனக்கு செய்யற பெரிய உபகாரம்!' பழைய பதுமை ரூபத்திலேயே பார்வதி நின்றாள். வார்த்தைகள் ஒலித்தனவே ஒழிய உதடுகூட அசையவில்லை.

நான் ஸ்தம்பித்து நின்றுவிட்டேன். தேவதை போல் தோன்றிய பார்வதியின் காலில் விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டுமென்று தோன்றிற்று. என்னுடைய சிறுமையை உணர்ந்து வருந்த நேரம் கிடைக்கவில்லை. வண்டி வந்துவிட்டது. லக்ஷ்மணன் உள்ளே வந்தான். மீனாக்ஷிஅம்மாளிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டேன்.

'கட்டாயம் மாமியையும் குழந்தைகளையும் அழைச்சிண்டு வரணும்' என்று கலகலப்புடன் பார்வதி சொன்னது எனக்கு குழப்பத்தை அதிகரித்தது. வாசலில் ரிக்ஷா காத்துக் கொண்டிருந்தது.

*****

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

Jegadeesh Kumar on April 15, 2010 at 12:46 PM said...

அருமையான கதை. பகிர்வுக்கு நன்றி ஒருஇடத்தில் பாரா ரிபீட் ஆகிறது தவிர்த்திருக்கலாம்.
pls visit my blog
www.jekay2ab.blogspot.com

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்