Apr 2, 2010

சாஸ்தாப் பிரீதி-அ. மாதவையா

அ. மாதவையா

செங்கோட்டைக்கும் கொல்லத்துக்கம் இடையிலே, தென்னிந்தியா இருப்புப்பாதை சுமார் இருபது மைல் நீளத்துக்கு, குறிஞ்சி நிலத்தை ஊடுருவிச் செல்கின்றது. அந்தப் பிரதேசம், மலைவளத்திலும் இயற்கைக் காட்சியின் வனப்பிலும், இத்தேசமெங்குமே இணை எதிர் இன்றிச் சிறந்ததாகும். நெடுகவே பலவளஞ் செறிந்து விளங்கும் மேற்குமலைத்தொடர், இப்பாகத்திலே கண்கவர் அழகுடன் செல்வவளமும் மலிந்து, 4acad363-e5f0-4d1e-a54b-1d1c6e3ed3a9 சந்தனமரம், தேக்குமரம், காப்பிக்கொட்டை, தேயிலை, சாதிக்காய், ஏலக்காய், மிளகு, கிராம்பு முதலிய பல்வேறு பொருள்களை விளைவிக்கும் குளிர்ந்த பசிய சோலைகளுடன் பொலியாநிற்கும். மெதுவாகவே செல்லும் ரயில்வண்டியிலிருந்து இருபுறமும் மலைக்காட்சியைக் காண மனோகரமாயிருக்கும். சில சமயங்களில் காட்டுயானைகள் அங்கே வருவதுண்டு. இப்பாதையிலுள்ள ஆரியன் காவு என்னும் ஸ்தலம் மிகவும் அழகானது. அதன் சமீபத்தில் ரயில் வண்டி சற்றேறக்குறைய மூவாயிரம் அடி தூரத்துக்கு மலையை ஊடுருவித் தோண்டியுள்ள குகைமார்க்கமாகச் செல்கின்றது. ஆயின் நம்கதை நிகழ்ந்த காலத்திலே, குகைவழியும் இல்லை, ரயிலும் இல்லை. அந்தப் பிரதேசத்துக்கு ரயில் வந்து கொஞ்சகாலம்தான் ஆகிறது. ஆரியன் காவு என்னும் பெயர், அங்குள்ள ஆரியன், ஐயன், ஹரிஹரபுத்திரன் என்னும் சாஸ்தாவின் கோயிலை ஒட்டி வந்தது.

அசுரர்கள் அமிர்தத்தைப் பானஞ் செய்து நித்தியத்துவம் பெற்றுவிடாதபடி, அவர்களை ஏமாற்றும் பொருட்டு, மகாவிஷ்ணு மோகினி அவதாரமெடுத்த பொழுது, அந்த மோகினிக்கும் பரமசிவனுக்கும் ஹரி ஹர புத்திரன் உற்பவித்த புராண கதையைப் பலர் அறிந்திருக்கலாம். காட்டு யானைகள் சஞ்சரிக்கும் வனப்புமிக்க அம் மலைப்பாங்கிலே, அந்த ஹரிஹர புத்திரர் கோயில்கொண்டு வாழ்வதும், வர்ண பேதமின்றிப் பல்லாயிரம் பக்தர்கள் அவரை வழிபட்டுக் கொண்டாடுவதுமே, நம் கதையைச் சார்ந்த விஷயங்களாகும். திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து செங்கோட்டை - கொல்லம் வழியாக மலையாளம் செல்லும் பிராமணப் பிரயாணிகளுக்கு, ஆரியன் காவில் மலையாளத்து மகாராசா ஏற்படுத்தியிருக்கும் ஊட்டுப்புரை, வழித்தங்கலுக்கு வசதியான இடம். ஆகவே, ஆண்டாண்டுதோறும் அக்கோயிலில் நடக்கும் சாஸ்தாப் பிரீதி என்னும் விசேஷச் சடங்குக்கும் விருந்துக்கும், பிராமணர்கள் திரள் திரளாகக் கூடுவதுண்டு. பிரக்கியாதி பெற்ற சாஸ்தாவின் தரிசன மகிமையும், அன்று நிகழும் விருந்துச் சாப்பாட்டின் சிறப்பும் யாவரும் அறிந்தனவே. செல்வச் சுருக்கமும் சீரண சக்திப் பெருக்கமும் ஒருங்கே வாய்ந்து, ஆங்காங்குள்ள பல புண்ணியஷேத்திரங்களைச் சென்று தரிசித்து, அவ்வவ்விடங்களில் ஏற்பட்டிருக்கும் ஊட்டுப்புரை, சத்திரம், கோயில்களில் பணச்செலவின்றி வயிறுபுடைக்க உண்டுகளித்து, தாம் கண்ட பற்பல தெய்வங்களின் ஏற்றத்தாழ்வையும் வரசக்திகளையும் பற்றிக் கதைபேசியும் வாதாடியும் ஒருநாள்போலப் பல நாளையும் ஆண்டுகளையுங் கழிக்கும் பிராமணோத்தம கோஷ்டிகள் எல்லாம், கிழக்கேயுதிக்கும் ஞாயிறு மேற்கே உதிக்கினும், ஆரியன் காவு சாஸ்தாப் பிரீதியன்று, அங்கு கூடாதொழியார். இத்தகைய கோயில் பெருச்சாளிகளின் யதார்த்தமான தெய்வ பக்தியும் விசுவாசமும் ஆழ்ந்து பரிசோதிக்கத் தக்கதன்று. ''பனங்காட்டு நரி சலசலப்பை அஞ்சாது.''

ஆரியன் காவில் அன்று சாஸ்தா பிரிதி. மணி பன்னிரண்டாகிவிட்டது. வெயில் கடூரமாய் இருந்தது. இலை அசங்கவில்லை. மேற்குத் திக்கிலிருந்து வரும் இரண்டு பிராமணர், ஆரியன் காவை நோக்கி மூச்சிழைக்க நடந்து வந்துகொண்டிருந்தார்கள். மலையேற்றம் அதிகம் இல்லை. ஆனால் தொந்திகளின் பெருமையினால், அவர்கள் வியர்த்து விருவிருத்து, வாய்திறந்து மூச்சு விட்டு, வெகு சிரமத்துடன் நடந்து வந்தார்கள். கோயில் இன்னும் அரை மைலுக்கு மேலிருக்கும். பொழுதாகி விட்டது. ஆகவே அவர்கள் இயன்றமட்டும் அவசரமாக நடந்தார்கள். கடைசியில் ஆரியன் கோயிலை அடைந்தவுடன், அவர்களில் ஒருவர் களைப்புற்று, குளத்தின் கரையில் கீழே விழுந்துவிட்டார். மற்றவர் பரபரப்பாய் விசாரித்ததில், இன்னும் சடங்கு முடியவில்லை, அவர்கள் வந்தது நல்ல சமயந்தான் என்று தெரிய வரவே, களைப்புற்றவரைத் தேற்றி, அவசரப்படுத்திக் கையுதவினார். பின்பு, இருவரும் வேகமாய் நீராடி, சந்தியாவந்தன ஜபங்களை முடித்துக்கொண்டு, கோயிலுக்குள் நுழைந்தார்கள். பழைய பெருச்சாளிகளாகிய அவர்களுக்கு, எங்கே உட்கார்ந்தால் நல்ல சாப்பாடு போதுமானபடி கிடைக்கும் என்பது தெரியும். ஆனால், கோயிலில் கூட்டம் அதிகமாயும், இவர்கள் உட்கார உள்ளங்கை யகலமுள்ள இடம் கிடைப்பதும் அரிதாயுமிருந்தது. யாவரும் சளசளவென்று பேசிக்கொண்டு மிருந்தனர். விருந்துச் சமையல் முடிந்து, சாஸ்தாவின் பூசையும் முடிந்தாய்விட்டது. ஆயின், வழக்கம்போல், ஐயன் இன்னும் எவர்மேலும் ஆவேசமாகி வந்து பிரசன்னமாகி, தான் திருப்தி யடைந்ததை வெளியிட்டு, பிரசாதம் கொடுக்கவில்லை. அதன்பொருட்டு எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தனர். கோயிலில் வெளிப் பிராகாரத்துக்குள் ஒரு நாய் வந்துவிட்டது. அதனால் பூஜையும் விருந்தும் அசுத்தமாகி விட்டது. அதனால்தான் ஐயனுக்குக் கோபம், என்றார் சிலர். சிலர், வந்தது பூனைதான், நாய் இல்லை, அதனால் அசுத்தமில்லை, என்றனர். வேறு சிலர், கோயில் சுயம்பாகிகளில் ஒருவன் கையில், ஒரு நாயர் ஸ்திரீஒரு முறத்தைக் கொடுக்கும்பொழுது அவள் கை அவன்மேல் பட்டும், அவன் ஸ்நாநம் செய்யாமல் மடைப்பள்ளியில் வேலை செய்ததனால்தான் ஐயனுக்குக் கோபம் என்றனர். பின்னும் சிலர், ஊட்டுப்புரைகளிற் சிலவற்றை அடைத்துவிடுவது என்ற திருவாங்கூர் சமஸ்தானத்தாரின் யோசனைதான், தீன தயாளுவாகிய ஐயனது கோபத்துக்குக் காரணமென்றனர். இவ்வாறாக, பலர் பலவண்ணம் கூக்குரலிட்டு வாதாடிக் கொண்டிருப்பினும், எங்கே இடம் போய்விடுமோ என்ற பயத்தினால், ஒவ்வொருவரும், தத்தம் ஸ்தானத்திலேயே நிலையாயிருந்தனர். ஆகவே, இரட்டையிரட்டை வரிசைகளாய் உள்ள பந்திகளினூடே, நூதனமாய் வந்த பிராமணர் இருவரும், திரிந்து திரிந்து பார்த்தும், அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. அதே சமயத்தில், முன்பு களைப்புற்றுக் கீழே விழுந்தவரும் இப்பொழுதுகொடும் பசியினால் வருந்திக் கொண்டிருப்பவருமான கிருஷ்ணையருக்கு, முரட்டு யுக்தி ஒன்று தோன்றிற்று. உடனே அவர், தன் நண்பர் இராமையர் காதில் அதை ஊதினார். கசுகசுவென்று இருவரும் சில நிமிஷம் அந்தரங்கமாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்பு, ஆபத்துக்குப் பாவமில்லை யென்று நினைத்தோ, அல்லது சாகத் துணிந்து விட்டால் சமுத்திரம் முழங்கால் என்று எண்ணியோ, தங்கள் குயுக்தியை நிறைவேற்றத் துணிந்துவிட்டனர்.

பூசை முடிந்து ஒருமணி நேரமாய் விட்டது. பூசாரி நைவேத்யஞ் செய்த தேங்காய் பழம் முதலிய பிரசாதங்கள், அப்படியே திரள் திரளாய் இருந்தன. மூச்சு முட்டும்படி, பூசையறை, தூப தீபங்களால் நிறைந்திருந்தது. நாவில் நீரூறும்படி மணக்க மணக்கச் செய்து வைத்திருந்த போஜன பதார்த்தங்களெல்லாம், ஆறிக்கொண்டிருந்தன. பிராமணப் பாடகர்கள் மூவர், ஐயனது திவ்ய மங்கள குணங்களைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தனர். ஐயன் மனமிரங்கி, இன்னும் எவர்மேலும் ஆவேசமாகிப் பிரசன்னமாக வில்லை. எல்லாருக்கும் அலுப்பும் பசியும் அதிகரித்துக் கொண்டிருந்தன. இங்கனமிருக்கும் பொழுது, அதோ அந்த பிராமணரைப் பாருங்கள்! அவர் தொந்தியினும் பருத்த தொந்தி அங்கு எவருக்குமில்லை. ஒரு தூணிற் சாய்ந்தபடியே கண்களை மூடிக்கொண்டு, இராமையரால் அணைக்கப்பட்டு, கிருஷ்ணையர் உடலெல்லாம் உதறி நடுங்கினார். முதலில் ஒருவரும் அவரைக் கவனிக்கவில்லை. ஆயின், அடுத்த நிமிஷத்தில் ''அதோ ஐயன் வருகிறான்!'' ''ஐயன் வருகிறான்!'' ''ஐயன் வந்துவிட்டான்!'' என்ற சந்தோஷகரமான பேரொலி கோயிலெங்கும் முழங்கிற்று. பாடகர்கள் தங்களுக்கெட்டிய மட்டும் உயர்ந்த குரலில் ஐயனைப் புகழலானார்கள். ஐயனது ஆவேசத்தைப் பார்க்கும் வண்ணம், பலர் எழுந்து வந்தனர். தாசிக்குத் தண்ணீர்க் குடத்திற் கண், என்னும் மூதுரை விளங்க, அங்ஙனம் எழுந்து வந்தோரெல்லாம், தத்தம் ஸ்தானத்திலே மேல்வேஷ்டியோ, துண்டோ, போட்டுவிட்டே வந்தனர். ''உவாய்! உவாய்! உவாய்!'' என்று, அப்பெரு முழக்கமும் அடங்கும்படி கர்ச்சித்தார் கிருஷ்ணையர். இப்பொழுது பார்த்தால், சற்று நேரத்துக்கு முன், மலையேறி வருவதில் மூச்சிளைத்துக் களைத்து விழுந்தவர் இவர்தானோ என்று சந்தேக முண்டாகும். ஐயன் உள மகிழ்ந்து ஆவேசங் கொண்ட மகா புருஷனை, பிரதானிகரான ஐந்தாறு பிராமணர்கள் சூழ்ந்து, அணைத்துப் பிடித்து, பூசையறைக்குள் ஐயன் சந்நிதிக்கு மெதுவாகக் கொண்டு சென்றனர். கிருஷ்ணையரோ, கண்மூடி, கால்களை உதறிக்கொண்டு, பிரக்ஞையின்றி, வலிப்புற்றவர் போலவே இன்னும் தோன்றினார். பூசையறைக்குள், சந்நிதிக்கும் பிரசாதங்களுக்கும் நடுவே, ஒரு பலகையின் மேல் அவரை உட்கார வைத்தனர். அப்பொழுது, அவர், வெறியயர்ச்சியின் வேகம் சற்று தணிந்து, பலகையி லிருந்தபயே சுழன்று, ஆடலானார். மற்றவர்கள், கைகட்டி, வாய்புதைத்து, வெகு வணக்கத்துடனும் மரியாதையுடனும் திருவுளக் கருத்தை விசாரிக்கலாயினர். ''சுவாமி! ஐயனே! உன் குழந்தைகள் நாங்கள். ஒன்றும் அறியாதவர். உன்னைத் தவிர வேறு கதியில்லை. தெரிந்தும் தெரியாமலும் நாங்கள் ஏதாவது செய்துவிட்டால் நீயே பொறுத்தருள வேண்டும். தன் பிள்ளைகளுக்கு வேண்டிய புத்தி சொல்லி அவர்களைத் திருத்துவது, தந்தையின் கடமை யன்றோ? எங்கள் ஐயனாகிய நீயே கோபம் கொண்டுவிட்டால், நாங்கள் மற்றென் செய்வோம்? நீ என்ன உத்திரவு கொடுத்தாலும் நாங்கள் செய்யச் சித்தமா யிருக்கிறோம். ஏழைகளாகிய எங்கள்மேல் இரங்க வேண்டும். உன்னைத் தவிர எங்களுக்கு வேறு கதி யார்?''

இவ்வாறு பிராமணர் வருந்தி வேண்டிக் கொண்டதை ஒருசிறிதும் கவனியாது, ஐயன் ஆடிக் கொண்டிருந்தான். அப்பொழுது, இராமையர் சிறிது கோபத்துடன், ''சுவாமி! இது தர்மமா? வெகு தூரத்திலிருந்து உன் கியாதியைக் கேள்வியுற்றுத் தரிசிக்க வந்த பிராமணோத்தமர்க ளெல்லாம், மிக்க பசியுடன் உன் உத்திரவை எதிர்பார்த்து நிற்கின்றனர். சூரியனும் அஸ்தமிக்க லாயிற்று. அவர்கள் மேல் உனக்கு இரக்கமில்லையா? பிரசாதத்தை அநுக்கிரகஞ் செய்து, பிராமண போஜனம் மேல் நடக்கும்படி உத்திரவு செய்ய மாட்டாயா? இவ்வளவு ஆலசியம் போதாதா?'' என்று சொன்னார்.

உடனே ஐயன், ''உவாய்! உவாய்! உவாய்!'' என்று மறுபடியும் ஓலமிட்டு, தன் இரு கைகளையும் கீழே ஓங்கி அறைந்து, ஆவசத்தின் உக்கிரக மத்தியிலே, பின் வருமாறு திருவாய் மலர்ந்தருளினான். ''பிராமணர்கள் - பிராமணர்கள் - பட்டினியே - பட்டினியே - கிடந்தால் - என் பிசகா? என் பிசகா? உங்கள் பிசகுதான்! உங்கள் பிசகுதான்! ஆம்! முக்காலும் மூன்று தரம் உங்கள் பிசகுதான்! அதற்கு - நீங்கள் - பிரசாயச் சித்தம் - பிராயச் சித்தம் - செய்தாலன்றி - எனக்கு - திருப்தியாகாது. நான் போகவும் மாட்டேன். செய்கிறீர்களா? சொல்! செய்கிறீர்களா?'' உடனே ஊட்டுப்புரைக் கணக்கர் எதிரே வந்து, என்ன அபராதம் விதித்தாலும் தான் தண்டமிறுக்கச் சித்தமாயிருப்பதாகச் சொல்லி, மேல் உத்திரவை வேண்டினார்.

''இந்தப் பிராமணாள் - இந்தப் பிராமணாள் - ஒவ்வொருவருக்கும் - கூட ஒவ்வொரு சக்கரம் - அதிக தக்ஷணை - அதிக தக்ஷணை - கொடுக்க வேண்டும். கொடுக்கிறாயா? - கொடுக்கிறாயா?''

''சுவாமி! உத்திரவுப்படியே கொடுக்கிறேன்'' என்றார் ஊட்டுப்புரை அதிகாரி.

''அந்தப் பரிசாரகப் பயல் - அந்தக் கொலைபாதகப் பயல் - அச்சியை - ஒரு சூத்திர ஸ்திரீயை - தொட்டுவிட்டு - குளியாமல் - என் மடைப்பள்ளிக்குள்ளே - இருந்த பயல் - கொண்டு வா அவனை இங்கே! கொண்டு வா இந்த நிமிஷம்!''

உடனே ஐந்தாறு பேர் கோயில் மடப்பள்ளிக்கும் மற்றப் பாகங்களுக்கும் சென்றோடிப் பார்த்தனர். ஆனால் அந்தக் 'கொலை பாதகப் பயல்' அகப்பட வில்லை.

''சுவாமி! அவன் ஓடிப்போய் விட்டான்'' என்றார் ஊட்டுப்புரை அதிகாரி.

''பிழைத்தான்! பிழைத்தான் இந்த விசை! இல்லாவிட்டால் அவனை - இல்லாவிட்டால் அவனை! - நல்லது - சவம் போகிறான் - இனிமேல் அவன் என் வேலை செய்ய வேண்டாம். என் கோயிலுக்குள் அடியெடுத்து வைக்க வேண்டாம், அந்தப் பயல்.''

''சுவாமி! ஆக்ஞைப்படி அவனை நீக்கி விடுகிறேன்'' என்றார், ஊட்டுப்புரை அதிகாரி.

பின்பு, பஜனமாகவோ, நோன்புக் கடனாகவோ, வந்திருந்த சிலர், தங்கள் தங்கள் முறைபாடுகளை ஐயனிடம் தெரிவித்துக் கொண்டனர். அவர்களில் இரண்டொருத்தருக்கே அநுகூலமான உத்திரவு கிடைத்தது. சிலர் மறுபடியும் வரும்படி உத்திரவு பெற்றார்கள். சிலர்க்கு உத்திரவு கிடைக்கவில்லை. விபூதியும் பிரசாதங்களும் கை நீட்டியவருக்கு ஐயன் உதவியபின், ஆவேசம் ஓய்ந்து முடிந்தது. மற்றவர் அப்பொழுது கவனியாவிட்டாலும், நாம் கவனிக்கத்தக்க விஷயம் ஒன்றும் நிகழ்ந்தது. பிரசாதம் பெற்றவர் பெரும்பாலார்க்கும், ஒரு வாழைப்பழமோ, ஒரு மூடித் தேங்காயோ, சிறிது விபூதியோ, இரண்டொரு புஷ்பமோதான் கிடைத்தது. நிற்க. ஆனால், இராமையர் பாகத்துக்கு மட்டும் ஏழெட்டுத் தேங்காய் மூடிகளும், இருபது முப்பது பழங்களும் கிடைத்தன. ஐயனாரின் ஆவேசப் பாத்திரமாகிய கிருஷ்ணையரும், அவர் நண்பர் இராமையரும், அக்கிர ஸ்தானங்களில் மணைகளின் மேல் வீற்றிருந்து, கோயில் அதிகாரிகளால் மிக்க மரியாதையுடன் உபசரிக்கப்பட்டு, திருப்தி போஜனம் செய்தனர். சாப்பாடான பின், ஊட்டுப்புரை அதிகாரியே அவர்களுக்குச் சந்தனாபிஷேகம் செய்து, ஜோடி தாம்பூலமும், வேசேஷ தக்ஷிணையும் உதவினார்.


மாதவையாவின் 'குசிகர் குட்டிக் கதைகள்' தொகுதியில் இருந்து பெறப்பட்டது. ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன் எழுதிய கதை. கடுமையான சமூக விமர்சனங்களை முன்வைத்த கதைகள் தந்த மாதவையாவைப் பற்றி கண்டனம் தெரிவித்த 'தி இந்து' நாளிதழ், ஒரே வருடத்தில், தானே முன்வநது தன் நாளிதழில் கதைகளை ஆங்கிலத்தில் எழுத அவரை வேண்டிக் கொண்டது.

***

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

8 கருத்துகள்:

Jegadeesh Kumar on August 14, 2011 at 7:47 PM said...

சமூக அவலங்களை அங்கதம் தொனிக்கும் குரலில் சாடும் கதை.

MARUTHU PANDIAN on February 4, 2012 at 2:48 PM said...

This kind of people are still living amidst us. you can see them dancing and foretelling things in village temple functions. In a way our politicians do the same kind of theatrics during elections and grab the attention and votes

கோமதி அரசு on December 17, 2012 at 7:06 PM said...

மாதவையா அவர்களின் நல்ல கதையை படிக்க தந்தமைக்கு நன்றி.

rajkumar on August 18, 2013 at 2:45 PM said...

Is it a century old story? Still holds good and seems to be new. May be because the situation remains the same. Good writing.

Unknown on September 14, 2013 at 5:27 PM said...

MAADAVAIAH VIN 'CLARINDA' NOVEL ENGU KIDAIKUM. YARAVATHU THERINDAL ENAKKU MAIL PANNUNGAL PLEASE

முரளி on May 12, 2014 at 4:25 PM said...

நல்ல கதையை படிக்க தந்தமைக்கு நன்றி.

முரளி on May 12, 2014 at 4:25 PM said...

நல்ல கதையை படிக்க தந்தமைக்கு நன்றி.

கனவுத்தமிழன் on December 20, 2017 at 2:54 AM said...

கதை தந்தமைக்கு நன்றி

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்