வண்ணநிலவன்
அஞ்சலி: லா.ச. ராமாமிர்தம் (30.10.1916 - 30.10.2007)
மணிக்கொடி காலத்தின் எஞ்சிய ஒரேயொரு நட்சத்திரமும் உதிர்ந்துவிட்டது. 'லா.ச.ரா.' என்று இலக்கிய உலகம் பிரியமாக அழைத்துவந்த லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் மறைந்துவிட்டார். அது ஒரு யுகம். அந்த யுகத்தின் கடைசி மூச்சும் இதோ ஒடுங்கிவிட்டது. புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா., ந. பிச்ச மூர்த்தி, சிட்டி, சி.சு.செல்லப்பா, பி.எஸ். ராமையா, எம்.வி.வி. என்ற அந்த இலக்கியப் பாரம்பரியத்தின் எஞ்சியிருந்த விழுதுகளில் ஒன்று லா.ச.ரா.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை ரீகல் டாக்கீஸுக்கு எதிரே டவுன்ஹால் ரோடு ஆரம்பிக்கும் இடத்தில் பாரதி புத்தக நிலையம் இருந்தது. விடுமுறையில் மாமா வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் தேடிப்போன புஸ்தகக் கடை அது.
திண்டுக்கல் ரோட்டில் (இந்நாளைய நேத்தாஜி சாலை) ஜி. நாகராஜனின் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட 'பித்தன் பட்டறை' இருந்தது. மேல மாசி வீதி சௌராஷ்டிரா சந்தினருகே பெரும் பண்டிதர் ஆ. ஜெகவீர பாண்டியனாரின் கண்ணகி அச்சகம். மேலக் கோபுர வீதியில் தானப்ப முதலித் தெருவுக்கு எதிரே மீனாட்சி புத்தக நிலையம். வெண்கலக் கடைத் தெருவில் கலைப் பொன்னி பத்திரிகை அலுவலகம். மேலமாசி வீதியில் ஸ்வீட்லேண்டைத் தாண்டிப் போனால் ப. நெடுமாறனின் (அப்போது அவர் பழ. நெடுமாறனில்லை.) குறிஞ்சி பத்திரிகையை அச்சிட்ட விவேகானந்தா அச்சகம்.
புஸ்தகங்களும் பத்திரிகைகளும் தின்பண்டங்களைப் போல் மனத்துக்குப் பிடித்திருந்தன. எவ்வளவுதான் படித்தாலும் தீராத தாகம். இன்றும் தீர்ந்தபாடில்லை. புஸ்தகம் வாங்கப் பணமில்லாவிட்டாலும் அவ்வப்போது பாரதி புத்தக நிலையத்துக்குப் போய் எதையாவது புரட்டிக்கொண்டிருக்க வேண்டும். அமுத நிலையம் வெளியிட்டிருந்த சிறுகதைத் தொகுப்பு ஒன்று கண்களில்பட்டது. நாலணாவோ எட்டணாவோ விலை. அத்தொகுப்பின் முதல் சிறுகதையே பாற்கடல் லா.ச.ராவுடையது. சுந்தர ராமசாமியின் கிடாரி என்னும் அற்புதமான சிறுகதையும் அத்தொகுப்பில் இருந்தது. லா.ச.ரா. என்னும் பெயர் எனக்குப் பரிச்சயமானது இப்படித்தான்.
முழுக்க முழுக்க எழுத்தாளர்கள் பதிப்பகங்களால் அறியப்பட்ட காலமொன்று இருந்தது. கு.ப.ரா., பிச்சமூர்த்தியின் சிறுகதைகள் என்றால் கலைமகள் காரியாலயம் நினைவுக்கு வராமல்போகாது. எம்.வி.வி.யின் படைப்புகள் என்றால் மணிவாசகர் நூலகந்தான். ஜெயகாந்தன் என்றதும் சட்டென்று மீனாட்சி புத்தக நிலையம்தான் ஞாபகத்துக்கு வரும். இதேபோல், 'லா.ச.ரா.' என்றால் - கலைஞன் பதிப்பகம். கலைஞனில் மட்டும் ஏறத்தாழ லா.ச.ராவின் ஆறு தொகுதிகள் வெளிவந்துள்ளன.
கல்யாணி வீட்டில் கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட லா.ச.ராவின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று இருந்தது. அத்தொகுப்பில்தான் என்னை உலுக்கிய பச்சைக் கனவு என்னும் சிறுகதை இருந்தது. சொன்னால் நம்புவதற்குக் கடினமாக இருக்கும். பச்சைக் கனவு சிறுகதையை எத்தனை தடவை படித்திருப்பேன் என்பது நினைவிலில்லை. இன்று அதை எடுத்து வாசிக்கிறேன். உலகத்து மொழிகளிலேயே இது போன்ற சிறுகதையை யாராவது எழுதியிருப்பார்களா என்பது சந்தேகமே. அதற்குச் சமதையான தமிழ்ச் சிறுகதை ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் பி.எஸ். ராமையாவின் நட்சத்திரக் குழந்தையைச் சொல்லலாம். அவ்வளவு ஒப்பற்ற வனப்பும் செறிவும் மிக்க சிறுகதை பச்சைக் கனவு. அனார் கலியில் இடம் பெற்ற 'ராஜசேகரா . . .' என்னும் பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்கத் தோன்றுவதுபோல், திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும் மீளாத வசீகரத்தைப் பச்சைக் கனவு கொண்டிருக்கிறது. தமிழ்ச் சிறுகதையுலகின் சிகரச் சாதனை அக்கதை.
புதுமைப்பித்தனுடைய சிறுகதைகளை முதன்முதலாகப் படித்தபோது அவரது எள்ளல், பாத்திரங்கள், களம் இவற்றிலெல்லாம் பிறந்த மண்ணின் நினைவுகள் இருந்தன. இதனால் மிக எளிதாகப் புதுமைப்பித்தன் மனத்தில் இடம்பெற்றார்.
ஆனால், லா.ச.ரா.வின் உலகம் வேறுவிதமானது. லா.ச.ராவிடம் பு.பியின் குத்தல், கேலி மிகக் குறைவு. பு.பியின் கதைகளில் இடம்பெறும் சோகம் விமர்சனத்துடன் கூடிய துயரம். லா.ச.ராவின் சோகம் தீவிரமானது. பார்வை அகவுலகம் சார்ந்தது. பெரும்பாலும் குடும்பந்தான் அவரது கதைகளின் களன். ரேழி, புறக்கடை, கோவில், கடைத்தெரு எல்லாம் பிற யதார்த்தவாதிகளைப் போல் அவரது படைப்புகளில் இடம் பெறுகின்றன. ஆனால், அவை ஒருவிதமான சோக முலாம் பூசி நிற்கின்றன.
அவரது கதா உத்தியை 'நனவோடை உத்தி' என்று பல ஆண்டுகளுக்கு முன்பே அமரர் சி.சு. செல்லப்பா சரியாகவே கணித்துவிட்டார். பாற்கடல் கதை ஒரு சாயலில் வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரச மரத்தின், தானே தன் கதையைச் சொல்வது போன்றிருந்தாலும் உணர்ச்சிகள் நுங்கும் நுரையுமாகச் சுழிக்கின்றன. அவரது நீண்ட நெடுங்கதையான புத்ரவிலாகட்டும், அபிதாவிலாகட்டும் பாத்திரங்களின் மனவோடை எது, லா.ச.ரா.வின் மனவோடை எதுவென்று பல சந்தர்ப்பங்களில் பிரித்துப் பார்க்க முடியவில்லை. மௌனியைப் போல் லா.ச.ரா. ஒரு மனவெளிக் கலைஞர்.
அந்நாள்களில் அவர் எழுத்துக்கள் ஊட்டிய லகரி தனிவிதமானது. அது அவர் மீதான பிரேமையாகவே விரிந்திருந்தது. லா.ச.ரா. பற்றிய எல்லாம் வியப்பூட்டுவதாகக் கிளர்ச்சியூட்டுவதாக இருந்தன. ஆனந்த விகடனில் தனது ஊரான லால்குடியைப் பற்றி அவர் எழுதியிருந்ததுகூட மனத்தைப் புரட்டிற்று. புகைப்படத்தில் பார்த்த அவரது அடர்த்தியான புருவ மயிர்க் கற்றைகள்கூட அவரது படைப்புகளைப் போல் அமானுஷ்யமாகத் தோன்றின.
மறைந்த நண்பர் தா. மணியுடனும் விக்கிரமாதித்யனுடனும் 1975 மே வாக்கில் தென்காசியில் பணிபுரிந்து வந்த லா.ச.ரா.வை முதன்முதலாகச் சந்திக்க முடிந்தது. மிக நீண்ட நேரம் அவருடன் ஆசை தீரப் பேசிக்கொண்டிருந்தோம். அவரது படைப்புகளில் உள்ளதைப் போலவே அவருடனான அந்த உரையாடலே, மொழியும் மனமும் முயங்குகிற லயத்துடனிருந்தது. அந்த அமானுஷ்யத்தையும் மயக்கத்தையும் தனது படைப்புகளில் திகட்டத் திகட்ட வாசகனுக்குப் பரிமாறியவர் லா.ச.ரா. எனத் தோன்றுகிறது.
*****
நன்றி : காலச்சுவடு
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
8 கருத்துகள்:
அடடா! அவாளையும் பிள்ளைவாள்களையும் வுட்டா வேறெ எவனும் எலக்கியம் தமிழுல வழக்கலையாக்கும்!!
The condolance message dedicated to LASAARAA by Thiru Vannanilavan who is my rollmodel is really suberb. I read most of the works of demised writter whose memories will always be shared all writtings left in the tamil literature world.
The condolance message dedicated to LASAARAA by Thiru Vannanilavan who is my rollmodel is really suberb. I read most of the works of demised writter whose memories will always be shared all writtings left in the tamil literature world.
The condolance message dedicated to LASAARAA by Thiru Vannanilavan who is my rollmodel is really suberb. I read most of the works of demised writter whose memories will always be shared all writtings left in the tamil literature world.
லா சா ராவுக்கு அஞ்சலி. அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி அவர் கதைகளை வாசிப்பதும், அவரது எழுத்துக்களை முன்னெடுத்துச் செலவ்துமே. பகிர்வுக்கு நன்றி.
www.jekay2ab.blogspot.com
தமிழ்ப் படைப்பாளிகளை ஆவணப்படுத்தும் நல்ல்தோர் முயற்சி
வாழ்த்துக்கள்
லா.ச.ரா. ஒரு சகாப்தம். புரியாத எழுத்துக்குள் மாயவலை பின்னி அதில் நம்மை சிக்க வைத்து சிக்கலை பிரிப்பவர்.அன்னாருக்கு தலை வணங்குகிறேன்.
it is good tripute to la.sa.ra.
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.