Apr 21, 2010

பணம் பிழைத்தது-பி.எஸ். இராமையா

பி.எஸ். இராமையா

நாலைந்து வீடு தள்ளியிருந்த தெருமுனையிலிருந்து ஒரு நாய் ஊளையிட்ட சத்தம் வந்தது. இரவு மணி ஒன்பதுக்கு மேல் இருக்கும். அருணாசல முதலியாரைச் சூழ்ந்திருந்த யாவரையும் அந்த ஊளை ஒரு குலுக்குக் குலுக்கியெடுத்தது. அறையில் மங்கலாக எரிந்து கொண்டிருந்த வெளிச்சத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். வாசல் திண்ணையில் இருளில் உட்கார்ந்திருந்தவர்களும், வீட்டினுள் கூடத்தில் கூடி, சிரமத்துடன் மெளனம் பயின்ற பெண்மக்களும் திடுக்கிட்டுப் பார்த்தனர்.

psrAMAYYA_thumb1 திண்ணையில் இருந்த ஒருவர் நாயை விரட்ட எழுந்து போனார். அருணாசல முதலியார் படுத்திருந்த அறையில் அவருடைய இளைய மகன் ஜகதீசன் அவசரமாக ஜன்னல் கதவுகளை அடைக்க முயன்றான். முதலியார் சிரமத்துடன் தலையைத் திருப்பிக் கையைக் காட்டினார். மூத்தவன் வைத்தியலிங்கமும், மைத்துனர் கந்தசாமி முதலியாரும் கிழவரிடம் நெருங்கினார்கள். வைத்தியலிங்கம், ''என்னப்பா வேணும்?'' என்றான்.

கிழவர், ''ஜன்னலை ஏன் அடைக்கிறான்?" என்றார். அவர் குரல் மிகமிக நைந்து தணிந்திருந்தது. ஆனாலும் ஜகதீசன் காதுக்கு எட்டியது. "சில்லுனு குளுந்த காத்து வருது'' என்றான். கிழவர் ''பரவாயில்லை அடைக்காதே'' என்றார். மூடிய ஒரு கதவையும் திறந்து வைத்தான் ஜகதீசன்.

நாயின் ஊளைச் சத்தத்தைக் கிழவர் கேட்கக்கூடாதென்பதுதான் ஜகதீசன் கருத்து. ஆனால் அவர் அதைக் கேட்டு விட்டார் என்பது தெளிவாயிற்று. கவலையுடனும் பயத்துடனும் அவரைப் பார்த்தார்கள் எல்லோரும். கிழவர் புதிய அசதியுடன் கண்ணை மூடிக்கொண்டார்.

நாய் இரண்டாம் முறையாக ஊளையிட்டது. மறுகணம் தன்மேல் வந்து தாக்கிய கல்லின் வேதனை தாங்காமல் வாள் வாளென்று கதறிக் கொண்டு ஓடியது.

அருணாசல முதலியாரின் கண்கள் மூடியே இருந்தன. முகத்தில் மரணபயத்தின் வேதனை படர்ந்தது. நாயின் ஊளை அவர் நெஞ்சில் தயக்கத்துடன் தலை காட்டிக் கொண்டிருந்த ஆசையையும் நம்பிக்கையையும் தலையில் இடித்து முடுக்கியது. "காலையில் சென்னையிலிருந்து மிகமிகப் பெரிய டாக்டர் வருகிறார். அவர் நிச்சயமாக என் ஆயுளை நீடித்துக் கொடுத்துவிடுவார்'' என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டிருந்தது மனம். டாக்டர் வருவதற்குள் அவரைத் தொடவரும் காலனைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியது. ''இனி நம்பிக்கைக்கு இடமே இல்லை. இனி நம்பிக்கைக்கு இடமே இல்லை!'' என்ற வார்த்தைகள் நெஞ்சிலே வேகமாகச் சுழன்றன.

முதலியார் சென்னையிலிருந்து கிராமத்துக்கு வந்து ஒரு மாதம் ஆகிறது. சென்னையிலேயே உடல்நிலை சரியாக இல்லை. எல்லையேயற்றது என்று தோன்றிய அவருடைய உழைப்புச் சக்தி தேயும் குறிகள் தென்பட்டன. அடிக்கடி சோர்ந்து உட்கார்ந்தார். மேல்மூச்சு வாங்கத் தொடங்கியது. அவருக்கே இதெல்லாம் புதுமையாக இருந்தன.

''நரையும் திரையும் உடலைச் சேர்ந்தவை, மூப்பு மனத்தைச் சேர்ந்தது. நம்முடைய சிந்தனையின் வேகந்தான் நம் பருவத்தின் அறிகுறி. நெஞ்சிலே இளமை இருக்கும் வரையில் நமக்கு முதுமை கிடையாது..'' என்று அவர் எங்கோ படித்திருந்தார். அதையே தமது வாழ்க்கைத் தத்துவமாகவும் கொண்டு விட்டார். ''உடலின் இயல்பான வளர்ச்சியிலே தோன்றும் மாறுதல்கள் தோன்றித்தான் தீரும். ஆனால் என் நெஞ்சிலே முதுமைக்கு இடம் கிடையாது'' என்று தாமே சொல்லிக் கொள்வது வழக்கமாகிவிட்டது.

அப்படிப்பட்டவருடைய சிந்தனையோட்டத் திலே திட்டுக்கள் தோன்ற ஆரம்பித்தவுடன் பயந்துவிட்டார். டாக்டரைக் கலந்தார். ''வேறு ஒன்றும் இல்லை. அளவுக்கு மிஞ்சிய உழைப்புத்தான் காரணம். உடல் அயரும் போது உள்ளத்தையும் பாதிக்காமல் விடாது. கொஞ்சநாள் எங்கேயாவது வெளியூரில் போய் ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள்'' என்றார் டாக்டர்.

அருணாசல முதலியார் டாக்டர் யோசனையை ஏற்றுக் கொண்டார். கொடைக்கானல், குற்றாலம், நீலகிரி என்றார்கள் மக்களும் உறவினர்களும். ஆனால் முதலியார் தம்முடைய சொந்தக் கிராமத்திற்குப் போக முடிவு செய்தார்.

கிராமத்தில் அவருடைய மூதாதையர் தேடி வைத்து, தலைமுறை தலைமுறையாக கைமாறி வந்த நிலபுலங்கள் இருந்தன. அவற்றோடு அவர் சம்பாதித்த ஏராளமான பணத்தின் ஒரு பகுதியையும் நிலங்களாக மாற்றிச் சேர்த்திருந்தார். தாமே நேரில் போய் ஆறு மாதமாவது நிலங்களையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று நெடுநாளாக எண்ணம் இருந்தது. ஆனால் சென்னையிலிருந்த வருமானத் தலையூற்றை விட்டு அப்படி இப்படி நகரவும் மனம் இடம் கொடுக்கவில்லை.

இப்போது டாக்டர் சொன்ன யோசனை அந்த நெடுநாளைய எண்ணத்தை நடத்திக் கொள்ள வழிகாட்டியது. ஓய்வெடுத்துக் கொள்ளக் கிராமத்திற்குப் புறப்பட்டார்.

அருணாசல முதலியாரின் வரவு கிராமத்தில் ஒரு விழாவாக நிகழ்ந்தது. அந்த வட்டாரத்திலேயே மிகப் பெரிய மிராசுதார். சென்னையிலே பரந்த வியாபாரம். லட்சக் கணக்கில் கொண்டு கொடுக்கும் சரக்கு களைத்தான் அவருடைய ஸ்தாபனங்கள் கையாண்டன. முதலியார் தொட்டது தங்கமாகிறது என்று நம்பிக்கை கிராம மக்களிடையே, ஏன் நகர மக்களிடையிலுங்கூடப் பரவியிருந்தது.

ஓரளவுக்கு அது உண்மைதான். முதலியாரின் வர்த்தகத் திறமை நன்றாக முற்றிப் பழுத்திருந்தது. வியாபாரத்தில் வரப்போகும் லாப நஷ்ட முடிவைப் பற்றி முன்கூட்டியே உணரும் மனக்குறளி படைத்திருந்தார் அவர். அதன் உதவியால் தங்கமாகும் இனங்களைத்தான் தொடுவார். நஷ்டமாகும் வியாபாரத்தில் அவர் இறங்கியதே இல்லை.

முதலியார் தமது இருபத்தைந்தாவது வயசில் சென்னைக்குச் சென்றார். முப்பது வருஷங்களுக்கு மேலாகின்றன. மேலே மேலே முன்னேறிக் கொண்டே இருந்தார். வருஷந்தோறும் அவருடைய சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டேயிருந்தது. வருஷத்திற்கு ஒரு லட்சம் என்று கணக்குப் போட்டது போல அவர் கிராமத்திற்கு வந்த போது அது முப்பது லட்ச ரூபாய் மதிப்பாக உயர்ந்திருந்தது.

அவர் ஓய்வெடுத்துக் கொள்வதற்காகவே கிராமத்திற்கு வந்தார். அந்த ஓய்வு நேரத்தைத் தமது நிலச் சொத்துக்களைச் சீர்படுத்துவதில் செலவழிக்க எண்ணினார். ஆனால் வந்து சேர்ந்த இரண்டு மூன்று நாட்களிலேயே உடல்நிலை மிகவும் சீர்கேடடைந்து விட்டது. உடனேயே சென்னைக்குத் திரும்பியிருக்கலாம். இன்னும் கொஞ்சம் பார்க்கலாம் என்று தங்கினார். ஊரைவிட்டு அசையவே கூடாது என்று டாக்டர் சொல்லும் நிலைமை வந்துவிட்டது.

சென்னையிலிருந்தே டாக்டர்கள் வந்தார்கள். முதலியார் ஆசையாக வாங்கிய புது 'ப்யூக்' காரும் வைத்தியலிங்கம் தனியாக வாங்கிய 'ஆர்ம்ஸ்ட்ராங்ஸிட்ஸி' காரும் சென்னைக்கும் கிராமத்துக்கும் அஞ்சல் ஓட்டம் போட்டுக் கொண்டேயிருந்தன. 'இனிமேல் பயம் இல்லை. இன்னும் ஒரு வாரத்தில் சென்னைக்குப் புறப்பட்டு விடலாம்' என்பார் டாக்டர். அந்த மகிழ்ச்சி இரண்டு நாள் பொங்கிக் கொண்டிருக்கும். மூன்றாம் நாள் அவ்வளவும் வடிந்துவிடும். ''இன்னும் பதினைந்து நாள் வரையில் நீங்கள் பேசக்கூடாது'' என்று உத்தரவிட்டு விடுவார்.

அவர் வந்து சேருவதற்குள் காலன் வந்துவிடுவான் என்பதை அந்த நாய் ஊளையிட்டுச் சொல்லிவிட்டது. முதலியார் மனம் மிகமிக வேகமாகச் சுழன்றது. ''நம்பிக்கைக்கு இடம் இல்லை. இனி நம்பிக்கைக்கு இடம் இல்லை!'' என்ற எண்ணம் திரும்பத் திரும்ப எழுந்தது.

முதலியார் வியாபாரத்தில் ஈடுபட்ட ஆரம்ப காலத்தில் நல்ல தெய்வபக்தர். பின்னாலும் அவர் நாஸ்திகராக மாறிவிடவில்லை. ஆயினும் அவர் நெஞ்சிலே தெய்வம் என்னும் வார்த்தை உணர்ச்சியுடன் ஒட்டவில்லை. எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக அது அவர் உணர்ச்சிகளிலிருந்து விடுபட்டுத் தூர ஒதுங்கிவிட்டது. வீட்டிலே நடக்கும் நாள் கிழமை பண்டிகை பூஜைகளில் அவரும் கலந்து கொள்வார். வெளியிலே தம்மை வந்து அணுகும் தானதரும தெய்வ சம்பந்தமான காரியங் களுக்குப் பணம் கொடுப்பார். ஆனால் அதிலெல்லாம் அவருடைய நெஞ்சம் ஒட்டியதேயில்லை.

இந்த நிலைமை அவர் தம் நினைவுடன் சிந்தித்து உண்டாக்கிக் கொண்டதல்ல. அவர் உள்ளத்திலே வந்து நிறைந்து கொண்டிருந்த பணம் என்ற சக்தி கொஞ்சம் கொஞ்சமாக மற்றவற்றையெல்லாம் வெளி யேற்றிவிட்டது. அதை அவர் அறியவேயில்லை.

கிராமத்திற்கு வந்து உடல்நிலை கவலைக் கிடமாக ஆனபோது அவர் மனத்தில் பணத்தை நெட்டித் தள்ளிக் கொண்டு பிற விஷயங்கள் வந்து புக ஆரம்பித்தன. தமக்குப் பின் தம் சொத்துக்களும், வியாபாரமும் என்ன ஆகும் என்பதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். கூடிய வரையில் அதற்குத் தகுந்த வழி வகுத்துவிட வேண்டுமென்று எண்ணினார். தம் குமாரர்களை வரவழைத்து அவர்களிடம் பேசினார். மைத்துனர் கந்தசாமி முதலியார், ''அதைப் பற்றியெல்லாம் இப்பொழுது ஏன் கவலைப்படுகிறீர்கள்? சென்னையிலிருந்து பெரிய டாக்டரையே வரவழைப்போம். இன்னும் ஒரு வாரத்தில் சென்னைக்குப் போய் விடலாம். அதன்பின் வேண்டியதை யோசித்துக் கொள்ளலாம்'' என்று சொல்லி விட்டார். அவர் சொன்னது மிகமிக இதமாக இருந்தது. தமக்குப் பின் சொத்துக்களுக்கு வகை செய்துவிட்டுத் தாம் போகும் வழியைப் பற்றிச் சிந்திக்க விரும்பினார் முதலியார். முதல் விஷயத்திற்கே அவசரம் இல்லை என்று வந்தவுடன் இரண்டாவது அம்சத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பதே நல்லதென்று முடிவு செய்துவிட்டார். ஆனால் அந்தத் தடவை உடல் தேறி எழுந்தவுடன அடுத்த உலகத்தில் தமக்குச் சரியான இடம் பிடித்துக் கொள்வதற்கு வேண்டியதையெல்லாம் செய்வதென்று மாத்திரம் உறுதி செய்து கொண்டார்.


அந்த உறுதியை நிறைவேற்ற அவகாசமே கிடைக்காதென்று சொல்லிவிட்டது நாயின் ஊளை. முதலியார் சிந்தனை குழம்பியது. இந்த ஜன்மத்தில் வேண்டிய அளவு தாம் தெய்வத்தைத் தொழுது ஆராதித்துப் பணிவதற்கு இடம் கொடுக்காமலே தமது ஆயுனை முடிக்க முயல்வது அநியாயம் என்று எண்ணினார். அதைப் பகவானிடம் சொன்னார். ''ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடு, ஸ்வாமி!'' என்று கெஞ்சினார்.

''அதற்கு நீ என்ன விலை கேட்டாலும் கொடுக்கிறேன். எல்லாம் நான் தேடிய சொத்து. அதில் எத்தனை லட்சம் வேண்டுமானாலும் நீ காட்டும் இடத்தில் கொடுக்கிறேன்'' என்றார்.

பகவானிடத்திலிருந்து பதில் கிடைக்கவில்லை. அவர் மனமே சொல்லிற்று. ''எமன் கிராம எல்லைக்குள் வந்துவிட்டான் என்று நாய் சொல்லுகிறதே. பகவானால்கூட அவனைத் திருப்பி அழைக்க முடியாது'' என்று ஓடியது சிந்தனை.

அங்கிருந்து ஒரே பாய்ச்சலில் மனம் எமன் சந்நிதிக்குத் தாவிற்று. ''ஒரே ஒரு வருஷம் கொடு. அதற்குள் எல்லாவற்றிற்கும் தக்க வழி செய்துவிடுகிறேன். எனக்கும் தெய்வ வழிபாடு செய்ய. அது போதும்'' என்று விண்ணப்பம் செய்தார். அதற்கும் பதில் இல்லை.

''அவன் வந்துவிட்டான். வெறும் கையுடன் திரும்ப மாட்டான். ஐயோ! எனக்குப் பதில் வேறு யாராவது அவனுடன் போகச் சம்மதித்தால்... ஆம்... அவன் வெறுங்கையுடன் போக வேண்டாம். யாராவது அதற்குச் சம்மதித்தால் அவர் குடும்பத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் எழுதி வைத்து விடுகிறேன்'' என்று ஓடியது சிந்தனை.

கண்களை விழித்தார். எதிரில் கந்தசாமி முதலியார், மக்கள், மனைவி எல்லோரும் கவலையுடன் குனிந்து தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. கந்தசாமி முதலியார் முகத்தைப் பார்த்து உதட்டை அசைத்தார். குரல் வெளி வரவில்லை. கந்தசாமி முதலியார் குனிந்து காதை முதலியார் உடுகளினருகில் கொண்டு போனார்.

அருணாசல முதலியார் "என் செக் புத்தகம் கொண்டு வரச் சொல்லுங்கள்...'' என்றார். மறுபடி கண்களை மூடிவிட்டார்.

ஐந்து நிமிஷம் கழிந்திருக்கலாம். கிராமத்திலேயே தங்கியிருந்த டாக்டர் வந்து தமது நாடியைச் சோதித்ததை உணர்ந்த முதலியார், டாக்டர் முகத்தில் என்ன குறிகள் தோன்றியிருக்கும்? ஜகதீசன் ஏன் அப்படிப் பதறிய குரலில் ரகசியமாகக் கேட்கிறான்!

டாக்டர் ஊசி குத்தினார். மருந்தின் வேகம் இடது கரத்திலிருந்து தமது இருதயத்தை நோக்கி விரைந்ததை உணர்ந்தார். அதோ, அதோ... இருதயத்தினுள் புகுந்துவிட்டது. வெளியே புறப்படுகிறது. உடல் முழுவதும் பரவப் புறப்பட்டுவிட்டது.

முதலியாருக்குச் சிறிது தெம்பு வந்தது. டாக்டர் மறுபடி நாடியைச் சோதித்தார். பேசுகிறார்: ''ஒரு மணி நேரம் வரைக்கும் இப்படியே இருக்கட்டும். எனக்கு வாசலில் ஒரு ஈஸி சேர் போட்டுக் கொடுக்கச் சொல்லுங்கள். மறுபடி ஓர் ஊசி போட வேண்டும்'' என்றார்.

கந்தசாமி முதலியார் செக் புத்தகத்துடன் வந்து, ''டாக்டர்! செக் புத்தகம் கொண்டு வரச் சொன்னாரே'' என்றார்.

டாக்டர், ''அவராகக் கேட்டால் பார்த்துக் கொள்ளலாம். ஊசி குத்தியவுடன் நாடி பலம் அடைந்திருக்கிறது. அவரை அலட்டினால் மறுபடி தளர்ந்து போகும்'' என்று சொல்லி விட்டு வெளியே போய் விட்டார்.

அருணாசல முதலியார் கண்களை மூடியபடியே இவ்வளவையும் கேள்விக் கண்ணால் கண்டார். ''ஊசி குத்தியவுடன் நாடி பலமடைந் திருக்கிறது. எனக்கே தெரிகிறதே... எமன் அருகில் வர இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. மறுபடி ஓர் ஊசி... இன்னொரு மணி நேரம். இப்படியே காலைவரை... பெரிய டாக்டர் விமானத்தில் வந்துவிடுவார். ஊஹ¤ம்... தவறு, ஊசியை நம்பி இருக்க முடியாது. எமனை எதிர்க்க ஊசிக்கு வலுவுண்டா? இரண்டு லட்ச ரூபாய்... எனக்குப் பதில் அவனுடன் போகச் சம்மதிக்கிறவர் குடும்பத்துக்கு ஒரே செக்... அதில் எழுதுவானேன்? மைத்துனரிடம் சொல்லிவிட்டால் போதும்...''

அருணாசல முதலியார் உதடுகள் அசைந்தன. கண்கள் மூடியபடியே இருந்தன. குரல் கேட்கவில்லை. ஜகதீசன் தந்தையிடன் நெருங்கி குனிந்து கேட்டான். நிமிர்ந்து தணிவான குரலில், ''என்னவோ இரண்டு லட்சம் என்கிறாரே'' என்றான் மாமாவிடம். மறுபடி முதலியாரின் உதடுகள் அசையுமென்று ஆவலுடன் கவனித்தார்கள்; அசையவில்லை.

அருணாசல முதலியாரின் உடல் அவர் வசத்திலிருந்து நழுவி நின்றது. அதை இயக்க முடியவில்லை என்பதை உணர்ந்தார்.

ஒரு மணிக்கு ஒன்றாக மறுபடி இரண்டு ஊசிகள் குத்தப்பட்டதை உணர்ந்தார். ஒவ்வொரு தடவையும் மருந்தின் வேகம் உடல் முழுவதும் பரவுவதையும் உணர்ந்தார். ஆனால் உடல் மாத்திரம் வசப்படவில்லை.

இரண்டாம் முறை மருந்தைச் செலுத்திய பிறகு டாகடர் நாடியைப் பரிசோதித்துவிட்டு, ''நாடி இயல்பு நடைக்கு வந்துவிட்டது. இனிமேல் பயம் இல்லை. இருந்தாலும் நான் வாசலிலேயே இருக்கிறேன்'' என்று சொன்னது தெளிவாகக் கேட்டது.

அதன் பிறகு அந்த அறையில் வேறு சத்தமே இல்லை. ஒன்றிரண்டு தடவை யாரோ மிகவும் நிதானமாக நடந்து சென்ற காலடி யோசை கேட்டது. யாரோ குசுகுசு வென்று சொன்ன, ''நீங்கள் தூங்குங்கள், நான் இருக்கிறேன்'' என்றதும் கேட்டது.

அப்புறம் நிசப்தம். அப்படி எவ்வளவு நேரம் ஆகியிருக்குமோ தெரியாது. திடீரென்று இரவின் நிசப்தத்தைக் கலக்கிக் கொண்டு, ''ஐயையோ! வந்துவிட்டானே'' என்ற கூச்சலொன்று வந்தது. அதை அடுத்து வேறு பல கூச்சல்கள் கேட்டன. அதெல்லாம் முதலியார் காதில் படவில்லை.

''வந்துவிட்டான். வேறு யார்? அவன் தான். பதிலுக்கு ஆள் திட்டம் விட்டார்களா? கந்தசாமி முதலியாரிடம் சொன்னேனோ? இரண்டு லட்சம் கொடுத்துவிடலாம். ஆள் அகப்பட்டிருப்பானா? அந்தத் தொகைக்குச் சம்மதிக்காவிட்டால் இன்னும் அதிகம் கேட்டாலும் தயங்க வேண்டாம். கொடுத்து விடுங்கள் என்று சொல்லாமல் போனேனே. அதோ! அது என்ன சத்தம்? காலன் காலடி ஓசையா? வைத்தி, மாமாவைக் கூப்பிடு, ஆள் அகப்பட்டானா? இரண்டு லட்சத்திற்கு ஒரே செக்காகக் கொடுக்கிறேன், என்று சொன்னீர்களா? டாக்டர், நாடி இயல்பு நடையிலேயே இருக்கிறதா? ஒரே ஒரு வருஷம் போதும்; பதில் ஆள் பேசி வைத்திருக்கிறேன். அவன் குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்கப் போகிறேன்...''

முதலியாரின் உள்ளம் காவிரி வெள்ளத்திலே தோன்றும் சூழல் போலச் சுற்றியது. திரும்பத் திரும்ப இரண்டு லட்சம், பதில் ஆள், ஒரு வருஷம் என்று வட்டமிட்டுக் கொண்டே இருந்தது.

தூரத்தில் எங்கிருந்தோ பலமான இரைச்சல் வந்து அந்தச் சூழலைக் கலைத்துவிட்டது. மனம் தனக்குள்ளேயே சுழல்வதை விட்டு வெளியிலிருந்து வந்த சப்தங்களைத் தொடர முயன்றது. வீதியில் பலர் ஓடினார்கள். என்ன என்னவோ கூவினார்கள். தம் வீட்டிலும் பலர் நடமாடினார்கள். தாம் இருந்த அறையிலும் பரபரப்பு நிறைந் திருந்தது. ஆனால் ஒன்றும் தெளிவாக இல்லை. கண்களை திறக்க முயன்றார். ஒன்றும் தெளிவாக இல்லை. உடல் இன்னும் தம் வசத்திற்குள் வரவில்லை என்பதை உணர்ந்தார். தாம் அதைப் பிரிந்து போகுமுன் நேரும் இயற்கையின் ஒரு படியா அது என்று சிந்தித்தார்.

வீதியில் யாரோ பேசிய குரல் கேட்டது. வார்த்தைகள் மிகவும் தெளிவாக ஒலித்தன. முதலியார் மனம் ஆவலுடன் காதின் வழிவந்த குரலைப் பற்றியது.

முனிரத்தினம் நாயுடு வீட்டுக்குள்ளே திருடர்கள் புகுந்து விட்டார்கள். நாயுடு ஊரில் இல்லை. அவர் மனைவியும் குழந்தைகளுந்தான். திருடர்கள் உள்ளே நுழைந்து நகைப்பெட்டியைத் தூக்க முயன்ற போது நாயுடு மனைவி விழித்துக் கொண்டு ''ஐயையோ! திருடன் வந்துவுட்டானே!'' என்று கூவினாள். திருடர்களில் ஒருவன் கத்தியைக் காட்டி அவளைச் சும்மா இருக்க வைத்தான். மற்றவர்கள் பெட்டியுடன் வெளியேறிவிட்டார்கள்.

அவள் போட்ட கூச்சலைக் கேட்டு அக்கம் பக்க வீடுகளில் இருந்தவர்கள் எழுந்து ஓடினார்கள். வீட்டுவாசல் கதவு உட்புறம் தாழிட்டிருந்ததால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

தெற்கு வீதியில் சிலரும் அந்தக் கூச்சலைக் கேட்டு ஓடிவந்தார்கள். நாயுடுவின் அக்காள் வீடு அவர் வீட்டுக்கு நேர் பின்புறம் இருக்கிறதல்லவா? நாயுடுவின் அக்காள் மகன் வேங்கடசாமி வீட்டுப்பின்புறமாக ஓடி வந்தான்.

அப்போதுதான் கத்தியைக் காட்டி நின்றவன் சுவரேறிக் குதித்துத் தப்பியோட முயன்றான். வேங்கடசாமி பாய்ந்து அவனைப் பிடித்தான். இருவரும் போராடினார்கள். வேங்கடசாமி போட்ட கூச்சலைக் கேட்டு இன்னும் சிலரும் அந்தப் பக்கம் ஓடி வந்தார்கள். ஆட்கள் வருவதைக் கண்ட வுடன் திருடன் வேங்கடசாமியை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டான். உதவிக்கு வந்தவர்களில் சிலர் திருடனைத் துரத்தினார்கள். ஆனால் அகப்படவில்லை. கத்தி வேங்கடசாமியின் மார்புக் கூட்டின் நடுவில் பாய்ந்து அரையடி மேல் நோக்கிப் போயிருக்கிறது. ரத்தம் வெள்ளமாக வெளியேறி விட்டது. பையன் பிழைப்பது கஷ்டம் என்கிறார்கள்'' என்று முடித்தது வாசல் குரல்.

அதை அடுத்து யாரோ கேட்டான், ''டாக்டர், பையனைப் பார்த்தீர்களா? பிழைத்துக் கொள்வானா?'' என்று.

டாக்டர், ''நான் போவதற்கு முன்பே உயிர் ஓய்ந்துவிட்டது. கத்தி இருதயத்தையே கிழித்துவிட்டது'' என்றார்.

இன்னொருவர், ''இறந்து விட்டானா? அடப் பாவமே! போன மாசந்தான் கல்யாணம் நடந்தது. ரொம்ப நல்ல பையன். கெட்டிக்காரன். தைரியசாலி. போலீஸில் சேர மனுப்போடப் போகிறேன் என்றான். இன்ஸ்பெக்டர் பயிற்சிக்குச் சுலபமாகத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்'' என்றார்.

முதலியார் உடலில் புதுப்பலம் ஊறியதை உணர்ந்தார். சிந்தனை புதுவழியில் கும்மாளம் அடித்துக் கொண்டு ஓடியது. ''அப்பாடா! நாய் ஊளையிட்டது எனக்காகவே அல்ல. எமன் வந்தது உண்மைதான்... ஆனால் எனக்காக வரவே இல்லை. முனிரத்தினம் நாயுடு வீட்டுக் கொல்லை புறத்தில் வந்து நின்றவனைப் பார்த்துத்தான் நாய் ஊளையிட்டிருக்கிறது. அவன் என்னைப் பற்றி எண்ணியிருக்கவே மாட்டான்'' என்றது அவர் மனம்.

கண்களைத் திறக்க முயன்றார். என்ன ஆச்சர்யம்! கண்கள் திறந்தன. கையை அசைக்க முடிந்தது! 'வைத்தீ!' என்று கூப்பிட்டார். குரல் தெளிவாக ஒலித்தது. இரண்டு பிள்ளைகளும், மைத்துனரும் கட்டிலருகில் வந்து நின்றார்கள்.

ஜகதீசன் ''வேர்த்திருக்கிறதே!'' என்று சவுக்கத்தால் தந்தையின் நெற்றியைத் துடைத்தான்.
முதலியார் மைத்துனரிடம், ''செக்கைக் கிழித்துப் போட்டுவிடுங்கள்'' என்றார்.

மைத்துனர், 'இன்னும் எழுதவேயில்லையே! செக் புத்தகத்தை கொண்டுவா என்றீர்கள்...'' என்றார்.

அருணாசல முதலியார் இடைமறித்து, ''எழுதவேயில்லையா? புத்தகத்தைக் கொண்டு போய் வைத்து விடுங்கள்'' என்றார்.

நஷ்டம் வரும் வியாபாரத்தில் அவர் இறங்கியதேயில்லை.

*****

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

3 கருத்துகள்:

இரசிகை on April 21, 2010 at 9:21 PM said...

//
நஷ்டம் வரும் வியாபாரத்தில் அவர் இறங்கியதேயில்லை.
//

:)

இளமுருகன் on April 22, 2010 at 6:18 PM said...

வசீகரமான நடை,என்ன அழகாய் நெய்திருக்கிறார் பி.எஸ்.இராமையா

இளமுருகன்
நைஜீரியா

Sreeva venkat on April 12, 2020 at 9:57 PM said...

மணிக்கொடி எழுத்தாளர்களுக்கே உரிய நடை.கவர்ச்சி.திருப்பம்
மனித மனங்களை ஆசையை இதைவிட
எழுதிவிட முடியுமா
Great writer psr.
By
Svn

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்