Apr 1, 2010

பாரதியின் இளம் நண்பர்கள்

அம்ஷன் குமார்

barathiyar ‘சுப்பிரமணிய பாரதி’ டாகுமெண்டரி படம் அனைவரையும் எளிதில் சென்றடைவதாக இருக்க வேண்டும் என்று அதன் தயாரிப்பாளர் ந. முருகானந்தமும் நானும் முடிவு செய்தோம். ஒரு மணி நேரப் படமாக அது திட்டமிட்டபொழுது அதற்கான காட்சிகளைத் தீர்மானிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. பாரதி பற்றி நூல்கள் எழுதத் தேவையான தரவுகள் நிறைய உள்ளன. அவரது வாழ்வைக் காட்சிப்படுத்தப் போதுமான ஆவணங்கள் இல்லை. ரா. அ. பத்மநாபனின் ‘சித்திர பாரதி’யில் உள்ள புகைப்படங்கள் அவற்றிற்கு ஒரு தோற்றுவாயைத் தந்தன. எனவே இப்படத்தை எடுக்கும்பொழுதே எதிர்காலத்திற்கும் தேவையான காட்சி ஆவணங்களைத் தயாரிப்பது அவசியமென்று உணர்ந்தோம். அதன்படி பாரதியின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட வீடுகள், இடங்கள், கல்வி நிலையங்கள், படித்த, பணியாற்றிய பத்திரிகைகள் ஆகியனவெல்லாம் படம்பிடிக்கப்பட்டன. பாரதியை ஏதாவது காரணம் காட்டிக் கைதுசெய்யத் துடித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். தடைசெய்யப்பட்ட ‘காலிக் அமெரிக்கன்’ என்னும் அமெரிக்காவிலிருந்து வெளியான அயர்லாந்து விடுதலை ஆதரவுப் பத்திரிகையின் சந்தாதாரர் என்னும் குற்றச்சாட்டினைச் சுமத்தி அவர்மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. படத்தில் இடம்பெற வேண்டி அப்பத்திரிகை அமெரிக்காவிலிருந்து மிகுந்த பிரையாசைக்கிடையில் வரவழைக்கப்பட்டுச் சேர்க்கப்பட்டது. பல தடயங்கள் அழிந்துபோயிருந்தன. எஞ்சிய அனைத்தையும் ஒன்றுவிடாமல் சேர்க்க வேண்டிப் புதுவை, சென்னை, எட்டயபுரம், கடையம், மதுரை, திருநெல்வேலி, கானாடுகாத்தான், காரைக்குடி, காசி ஆகிய இடங்களிலெல்லாம் படப்பிடிப்பை நடத்தினேன்.

barathi-back-copy அந்த இடங்களுக்கெல்லாம் சென்று அங்குள்ள வயது முதிர்ந்தவர்களையெல்லாம் பார்த்தபொழுது அவர்கள் யாராவது பாரதியைச் சந்தித்திருக்க மாட்டார்களா அவர்களது அனுபவங்களைச் சொல்ல வைத்துப் படம்பிடிக்கமாட்டோமா என்னும் ஏக்கம் எனக்குள் தலைதூக்கியது. பாரதி இறந்தது 1921இல், நான் 1998இல் படம் பிடிக்கிறேன். பாரதியை நேருக்குநேர் சந்தித்த சமயத்தில் அவர்களுக்குக் குறைந்தது பத்து வயதாவது இருந்திருக்கும் பட்சத்தில் தற்சமயம் அவர்கள் 88 வயதுக்காரர்களாக இருக்க வேண்டும். அத்தகைய அபூர்வ மனிதர்கள் உயிருடன் இருப்பார்களோ இல்லையோ என்ற எண்ணத்துடன் நான் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தேன். ஒரு இருபது வருடங்களுக்கு முன்னால் இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தால் என்னால் பாரதியுடன் பழகிய நிறையப் பேர்களைச் சந்தித்திருக்க முடியும். இதற்கு முன்னால் தமிழ்நாடு பிலிம்ஸ் டிவிஷன் 16 எம்.எம்.மில் எடுத்திருந்த பாரதி டாக்குமெண்டரி ஒன்றில் அவருடைய இளைய சகோதரர் சி. விசுவ நாதனின் பேட்டியைப் பார்க்க முடிந்தது. அவரைத் தவிர பாரதியுடன் பழகிய வேறு எவருடைய நேர் காணலும் படம் எடுக்கப்படவில்லை. இப்பொழுது அவரும் உயிருடன் இல்லை.

சில இடங்களில் பாரதியுடன் நன்கு பழகியவர்கள் இருப்பதாகஅம்ஷன் குமார் எனக்குத் தகவல்கள் கிடைக்கும். அவர்களைத் தேடிச் சென்று சந்தித்த உடனேயே அவர்கள் பிறந்த ஆண்டைத் தெரிந்துகொள்வேன். எந்தெந்த ஊரில் பாரதி எவ்வளவு காலம் தங்கியிருந்தார் என்பதுடன் அவர்கள் சொல்லும் வருடத்தையும் ஒப்பிட்டு ஒரு  மனக்கணக்குப் போட்டுவிடுவேன். ஆனால் அதற்கெல்லாம் முன்பாக அவர்கள் தாங்களாகவே பாரதியைச் சந்தித்தது கிடையாது என்று கூறிவிடுவார்கள். பாரதி பற்றித் தங்களுக்கு அங்கு வாழ்ந்த தங்களைவிட மூத்தவர்கள் கூறிய தகவல்கள் மட்டுமே தெரியும் என்று கூறிவிடுவார்கள். ஓரிருவர் பொய் சொல்லி மாட்டிக்கொண்டதும் உண்டு. அவர்கள் பாரதியை நேரடியாகத் தங்களுக்குத் தெரியும் என்று கூறிச் சுற்று வட்டாரத்தில் அதன் காரணமாகச் செல்வாக்கை அனுபவித்தவர்கள்.

கடையத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு குழுவினருடன் வேனில் செல்ல முற்பட்டபொழுது ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி என்னை அணுகினார். பாரதியை நேரில் அறிந்தவர்கள் அங்கு யாரும் இருக்கிறார்களா என்று நான் விசாரித்துக்கொண்டிருந்ததை அவர் கேட்டதாகவும் தொண்ணூறைக் கடந்த ஒரு முதியவர் இன்னமும் அங்கு வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார். அந்த முதியவரின் பெயர் கல்யாணசுந்தரம் என்றும் அவர் தற்சமயம் விக்கிரமசிங்கபுரத்தில் தன் மகள் வீட்டில் இருப்பதாகவும் கூறினார்.

kalyanasundaram எதற்கும் அங்கு சென்று பார்த்துவிடுவோமே என்று எனக்குத் தோன்றியது. மாலையில் விக்கிரமசிங்கபுரத்தை சென்றடைந்தபொழுது லேசாக மழை தூறி நின்றிருந்தது. அவர் தங்கியிருந்த வீட்டைக் கண்டுபிடிப்பது ஒருவர் வழிகாட்டியபின் சுலபமாக இருந்தது. கைவைத்த பனியன் போட்ட சிவந்த நிறமுடைய க. பி. கல்யாணசுந்தரம் ஈஸிசேரில் அமர்ந்து ‘கல்கி’ படித்துக்கொண்டிருந்தார். தலையில் போதுமான நரைமுடி. வயதைக் குறைத்து மதிப்பிடலாம் என்பது போன்ற உடல் தோற்றம். ஒரு பருவத்திற்குமேல் உடலின் மூப்படையும் வேகம் குறைத்துவிடுகிறது. என்னைச் சுருக்கமாக அறிமுகம் செய்துகொண்டேன். வெற்றிலை பாக்கைக் குதப்பிக் கொண்டிருந்தவரிடம் ‘உங்களுக்குப் பாரதியைத் தெரியுமா?’ என்று கேட்டவுடன் அவர் முகத்தில் அப்படியொரு மலர்ச்சியைக் காட்டினார். ‘ஓ! தெரியுமே! என்றவர் கடகடவென்று தனது நினைவுகளை வெளிக்கொணர்ந்தார். அவர் பேச ஆரம்பித்த முப்பது விநாடிகளுக்குள் அவர் பாரதியுடன் உண்மையிலேயே பழகியிருக்கிறார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. கேமராவையும் உபகரணங்களையும் வேனிலிருந்து இறக்குமாறு எனது உதவியாளரிடம் கூறிவிட்டு, அவரிடம் வேறு திசையில் சம்பாஷணையைத் தொடங்கினேன்.

திரைப்படத்திற்காகப் பேட்டி எடுப்பது பத்திரிகைக்காகப் பேட்டி எடுப்பதிலிருந்து வேறுபட்டது. பத்திரிகைப் பேட்டியில் முகபாவங்கள், சைகைகள், குரலிறக்கங்கள் முக்கியமல்ல. வார்த்தைகள் கிடைத்தால் போதும். படத்திற்குத் தரும் பேட்டியில் பேட்டி தருபவரின் உடல்மொழி பதிவுசெய்யப்பட வேண்டும். சிலர் பேட்டி காணச் சென்றவுடன் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு சிரிப்பார்கள், ஆத்திரப்படுவார்கள், அழுவார்கள். அவர்கள் திரும்பவும் கேமராவின் முன் அவற்றைச் சொல்லும்பொழுது அந்த உணர்வுகள் வெளிவராது. பழகிப்போன ஓர் உணர்வுடன் அவற்றைப் பேசுவார்கள். எங்கே என்னிடம் பேசும்பொழுது தனது உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்துவிடுவாரோ எனப் பயந்தேன். படத்திற்காகப் பேசும்பொழுது அவை முதன்முதலாக வெளிவரட்டும் என்பதற்காக அவரிடம் அவர் வாழ்க்கை பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் கூட்டுறவுச் சங்கத்தில் வேலை பார்த்து ஓய்வுபெற்றிருந்தார். மரபுக் கவிதைகள் எழுதுவதில் அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. பேட்டி எடுத்தபொழுது அவருக்கு 92 வயது. இடையிடையே பாரதி பற்றி ஞாபகங்கள் கிளர்ந்தெழ அவை பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். 1919இல் பாரதியுடன் பழகியிருந்தார்.

கேமரா கொண்டுவரப்பட்டுப் படப்பிடிப்பிற்கு எல்லோரும் தயாராக இருந்தோம். அவர் வீட்டிலுள்ளவர்கள் அவருக்கு வெள்ளை முழுக்கைச் சட்டை அணிவித்து நெற்றியில் குங்குமப் பொட்டை வைத்தனர். என்னுடைய கேள்விகளுக்கு நிதானமாகப் பதில் கூறினர். அவ்வப்போது ஒன்றுக்கு வருகிறது என்று பள்ளிச் சிறுவன்போல் விரலைக்காட்டி அனுமதி கேட்டார்.

நீங்கள் எப்பொழுது பிறந்தீர்கள்? பிறந்ததிலிருந்தே கடையத்தில்தான் வாழ்கிறீர்களா?

நான் 1908 ஜனவரி 16ஆம் தேதி பிறந்தேன். தாயார் வீடு தென்காசி. என் தாத்தா புலியூர் கர்ணம். தைப் பொங்கலிட்ட சமயம் பொங்கல்படி வாங்குவதற்காக மேளதாளம் தப்பட்டைகளுடன் வந்து பொங்கலிட்ட சமயத்தில் நான் பொறந்தேன். நான் பொறந்ததிலிருந்து கடையத்தில்தான் வாழ்கிறேன்.

பாரதியாரைச் சந்திக்கிற சந்தர்ப்பம் எப்படிக் கிடைத்தது? அவருடன் எவ்வாறு பழகினீர்கள்?

எனக்குப் பன்னிரெண்டு வயசு இருக்கும்னு நினைக்கிறேன். அப்பொழுதுதான் நான் பாரதியாரைச் சந்திச்சேன். சின்னப்பசங்க எந்தவொரு வேடிக்கையா இருந்தாலும் நாங்க போய்ப் பார்ப்போம். அது மாதிரி பாரதி ஒரு வேடிக்கையான ஆள். அவர் யார்கூடவும் அதிகம் பேசிக்கிட மாட்டாரு. அவர் டிரஸ் பண்ற விதமே தனி. ஒரு க்ளோஸ் கோட்- அல்பகா கோட்- போட்டிருப்பாரு. அதுக்குள்ளே ஷர்ட் போடமாட்டாரு. வேஷ்டியை உள்ளுக்கு வச்சு அதுக்குமேலே கோட்டை மாட்டி ஒரு நீல நிற வேஷ்டியை டர்பன் கட்டித் தொங்கப் போட்டுவிட்டு ஸ்ட்ரெய்ட் ஆ கையை வைச்சுகிட்டு நடுத்தெருவிலே மார்ச் பண்றமாதிரி போவாரு. யாரையும் பாக்கமாட்டாரு . . . முக்கு வந்தா அட் ரைட் ஆங்கிள்- ரைட் லெப்ட் திரும்பற மாதிரி திரும்புவாரு (கையில் சைகை செய்து காண்பிக்கிறார்) ஆக அவரு ஒரு தனிப்பட்ட பிறவி அப்படிங்கற எண்ணத்திலே அவரை நாங்க எல்லாம் வேடிக்கை பார்ப்போம். அப்பறம் கொஞ்சநாள் ஆகவும் இவரோடு ப்ரண்ட்ஷிப் நமக்குக் கிடைச்சா தேவலியே, புது மாதிரி ஆளா இருக்காரேன்னு எண்ணம் வந்தது. அப்ப என்கூடச் சேர்ந்த பையனுங்க இரண்டு மூணுபேர். அவருக்குத் தனியா ஒரு வீடு கொடுத்திருந்தாங்க தங்கியிருக்க. அவர் கடையத்தில் இருக்கும்பொழுது அந்த வீட்டில்தான் தங்கி இருந்தாரு. அவருடைய மனைவி வீடு பக்கத்திலுள்ள பெருமாள் கோவில் தெரு. அதைப் பழைய கிராமம்னு சொல்லுவாங்க. அங்க இருந்து சாப்பாடு இவர் இருக்கிற வீட்டிலே கொண்ணாந்து கொடுப்பாங்க. இவரு சாப்பிட்டுட்டு எழுத்து வேலையைப் பாத்துக்கிட்டு இருப்பார். கவிதை எழுதுவாரு. அவரு என்ன எழுதுவாருங்கிறதைப் பத்தி நாங்க கவலைப்படமாட்டோம். நிறைய தபால் எழுதுவார். கார்டில் எழுதினதைத் தானே கைப்பட போஸ்ட் ஆபீசிலே கொண்டுபோய்ப் போட்டுட்டு வருவாரு. அந்த மாதிரி நாங்க அவரோட பழகிக்கிட்டு இருந்தோம்.

அந்தத் தபால் கார்டுகள் பற்றி சொல்லிக் கொண்டிருந்தீங்க...

என்னுடைய தோழன் ஒருவன். அவன் பின்னால் வாத்தியார் வேலை பார்த்தான். அவன் என் க்ளாஸ்மேட். அவன் பாரதி வெச்சிருந்த அந்தக் கார்டுகளில் சிலதைத் தனக்கு உபயோகப்படும்னு எடுத்தானோ என்ன காரணமோ. அவன் கார்டு எழுதக்கூடிய பையனாவும் தெரியலே. எதுக்கோ எடுத்து மடியிலே வைச்சிகிட்டான். பாரதியார் இன்ன இன்னார்க்கு எழுதனும்னு ஒரு திட்டத்தோட நிறையக் கார்டு வாங்கி வச்சிருப்பாரு. அதில நாலு கார்டு காணலேன்னா தேடத்தானே செய்வாரு! ஏழெட்டுக் கார்டை எடுத்து மடிக்குள்ளே வைச்சுக்கிட்டான். அவரு பத்து இருபது கார்டு வாங்கிக்கொண்டு வந்து வச்சிருந்தார்னு நெனைக்கேன். அவர் வந்த உடனே எழுத ஆரம்பிச்சாரு. நாங்க அப்போ வீட்டுத் தோட்டத்துக்கு முன்னாலே பின்னாலே ஓடி விளையாடிகிட்டு இருப்போம். அப்ப இவர் பார்த்து ‘இங்கே வாங்கடா. இதிலே இருந்து போஸ்ட் கார்டை யாராவது எடுத்தீங்களா?’ அப்படின்னு கேட்டாரு. எங்கள் ஒருத்தருக்கும் தெரியாது. நான் பரக்க பரக்க முழிச்சேன். யார் அவர் எழுதற இடத்தில உள்ளதை எடுக்கப்போறா. அங்க நாங்க போகமாட்டோம். அவன் ஒருத்தன் மட்டும் ஒரு மாதிரியா முழிச்சான். ‘யாரும் எடுக்கலியே, ஒண்ணும் எடுக்கலியே’ அப்படின்னான். அவர் கூர்மையா அவன் மடி கனமா இருந்ததைப் பார்த்துக்கிட்டு ‘வேட்டியை அவுருடா’ அப்படின்னு சொன்னார் (சிரிப்பு). அவன் வேட்டியை அவுக்கும்போதே கீழே மடியிலே சொருகி வச்சிருந்த கார்டு பொலுபொலுன்னு விழுந்தது. உடனே அவருக்கு மகாகோபம் வந்து அவனை அடிச்சிட்டாரு. அடிச்சவுடனே ஓன்னு அழுதான். தெரியாம செஞ்சிட்டேன். அப்படி இப்படின்னு.

‘ஏண்டா, மத்த பையனுங்களையும் சேர்த்துத் திருட்டுப் பயலாக்க பாத்தியே நீ! இப்படிச் செய்யலாமா? செய்யறது தப்பு இல்லையா? நீ உணரல்லையா?’ அப்படியெல்லாம் கேட்டாரு. அவர் அவன் அறியக்கூடிய சக்திக்கு மேற்பட்ட அளவிலே கேள்விகள் கேட்டாரு. தெரியாம செஞ்சிட்டேன். தெரியாம செஞ்சிட்டேன்னு’ சொல்லிக்கிட்டிருந்தான்.

‘சரி. அழாதே. இனிமே நான் உன்னை அடிக்க மாட்டேன்’. கொஞ்ச நேரம் கழிச்சு அவனைக் கையெடுத்துக் கும்பிட்டார். ‘இனிமேல் நீ நல்ல பையனா இருக்கணும். நீ பொய் பேசக் கூடாது. அதனாலதான் உன்னை அடிச்சேன். கோழைப்பயல், தைரியம் இல்லாதவன்தான் பொய் பேசுவான். உள்ளதை மறைச்சுப் பேசணும்கிற அவசியம் அவனுக்குத்தான் உண்டு. நீ யாருக்கும் பயப்பட வேண்டாம். பொய் சொல்லப் பயப்படணும். உண்மை சொல்றவன் யாருக்கும் பயப்படத் தேவை கிடையாது’ அப்படின்னு அவனுக்குப் பெரிசா ஒரு உபந்நியாசமே செய்து முடிச் சிட்டாரு. அப்புறம் எங்களோட விளையாட விட்டுட்டாரு. அவன் நாலஞ்சு நாள் வராமல் இருந்தான். பாரதியார் கேட்டாரு ‘ஏண்டா, ராமையா உங்ககூட வரலையா?’ன்னு.

‘என்னமோ வரலை சார்.’ அப்படின்னேன்.

‘அவன் வந்தா வரட்டும். அவன வரவேண்டாம்னு நான் சொல்லலை’ அப்படின்னு சொன்னார். அப்புறம் அவன் கொஞ்சம் கொஞ்சமா எங்களோட வந்தான். தொடர்ந்து பாரதியாரோட ஒத்துப்போகிற ஆள் நான் ஒருத்தன்தான். மத்த பசங்க எல்லாம் விளையாடிட்டுப் போயிடுவாங்க.

நீங்கள் சொல்வதிலிருந்து பாரதியுடன் நீங்களெல்லாம் அதிக நேரத்தைக் கழித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அவர் பாடக் கேட்டிருக்கிறீர்களா?

எங்க ஊர்ல பெரிய மணல் பரப்பு. அதிலே போய் உக்காருவோம். சாயங்கால நேரத்தில் அவர் பாடுவாரு. அவர் கவிதைகளை புனைவதற்குத்தான் பாடுகிறாரா அல்லது புனைந்து வைத்த கவிதைகளைத்தான் பாடுகிறாரான்னு எனக்குத் தெரியாது. கார்வையான தொண்டை. கடுவா மாதிரி இருக்கும். ஆனால் நல்ல இசை நுட்பத்தோடதான் அவர் பாடுவாரு. அவர் பாடிகிட்டு இருக்கிறதை நாங்க கேட்டுக்கிட்டே இருப்போம். முடிஞ்ச உடனே போகலாமான்னு கேட்பாரு. அவருக்குப் பின்னாலே போவோம். எங்க ஊர்ல கல்யாணி அம்மன் கோயில் இருக்கும். அந்தக் கோயிலுக்குப் பின்பக்கம் பொத்தைன்னு சொல்லுவாங்க. சிறு குன்றுகள், நிறைய இருக்கும். அதுமேல போய் உச்சிக்குப் போவாரு. அது ஒரு கிலோ மீட்டர் இருக்கும். நாங்க எல்லாம் அது கிட்டப் போகப் பயப்படுவோம். இவரு போறாரேன்னு கூடவே போவோம். அப்போ இடையிலே சத்தம் போடுவாரு. எதிரொலிச் சத்தம் கேட்கும். அதுல அவருக்கு ஒரு வேடிக்கை. இரண்டு மூணு தடவை சத்தம் போடுவாரு. ‘அங்க ஒருத்தன் பதில் சொல்றான் பாத்தியா’ அப்படின்னு எங்ககிட்ட வேடிக்கை பண்ணிகிட்டே கூட்டிப் போவாரு. மேலே போய் நின்னு பாடுவாரு.

பாரதி மேலே கடையத்து மக்களுக்கு ஒரு பகை உணர்வு இருந்தது இல்லையா? அந்தச் சமயத்தில் அவருடன் நெருங்கிப் பழகின உங்களுக்கெல்லாம் அங்கே உள்ளவங்க என்ன மாதிரி வரவேற்பு கொடுத்தாங்க?

Bharathiyar-1 எங்க வீட்ல பாரதியார் வீட்டுக்குப் போறேன் அவரோட பழகிறேன்னு கேள்விப்பட்டு எனக்கு உதைதான் கிடைக்கும். சண்டை பிடிப்பாங்க. எங்க வீட்ல நான் சொல்லவேமாட்டேன். அவங்க எப்படியோ தெரிஞ்சு ‘ஏண்டா, அந்த ஐயர் வீட்டுக்கு போறே. பாரதி வீட்டுக்குப் போறியாமில்லே. அவன் ஒரு கிறுக்கன்.’ பாரதியாரை ஒரு கிறுக்கன் என்றே வைத்திருந்தார்கள். அவருடைய உடை இவர்கள் உடை மாதிரி இல்லே. அவர் ஒரு மாதிரி பஞ்சகச்சம் வைச்சுக் கட்டியிருப்பாரு. அதுக்கு மேல ஒரு வேஷ்டியைப் போத்தி அதுக்குமேலே அல்பகாக் கோட்டை போடுவாரு. அதுமேல ஒரு டர்பன் கட்டியிருப்பாரு. அப்படியே அகலமா ஜவ்வாது பொட்டுப் போட்டிருப்பாரு. இதுதான் அவரது அலங்காரம். பெரிய ஆளுங்க எல்லாம் உக்கார்ந்து பேசுவாங்க. இவர் போனா ஒருத்தரும் அவர்கிட்டே பேசமாட்டாங்க. இவர் பாட்டுக்கு அதைச் சட்டை பண்ணாமப் போவாரு. இவரோட நோக்கம் என்னவோ அதைப் பாத்துக்கிட்டு வருவாரு.

சிறுவர்களைத் தவிர பாரதியுடன் அங்கு பழகியவர்கள் வேறு யார்?

அப்ப எல்லாம் சிலபேர் கொஞ்சம் பழகிறவங்களும் இருப்பாங்க. சில பழக்கங்கள் உள்ளவர்களிடம் இவர் போய்ப் பழகுவாரு. கொஞ்சம் குடி, மதுபான பழக்கம் இவர்கிட்டே உண்டு. நாராயணசாமி பிள்ளைன்னு ஒருத்தர் இருப்பார். அவர் பாட்டிலில் நிறைய பிராந்தி, விஸ்கி எல்லாம் வைச்சு கிளாஸ்ல ஊத்திக் கொடுப்பார். ‘பாரதி, நீங்கள் என்னவெல்லாம் கவிதை பாடுவீங்க?’ன்னு கேட்பார்.

‘எது எல்லாம் தோணுதோ அதை.’

‘நான் கொடுக்கிற கவிதையை நீங்க புது மாதிரியாப் பாட முடியுமா? கவிதையில அகவல்னு ஒண்ணு இருக்கு. அதைப் பாடுங்க’ன்னாரு.

‘அப்படியா. நீங்க அதைச் சொல்லுங்க. நான் எப்படிப் பாடறேன்னு காட்டறேன்.’

‘நான்முகன் படைத்த நானாவித உலகில்’ அப்படின்னு அவர் பாடிக்காட்டுனாரு.

உடனே பாரதி தடையில்லாமல் நான்முகன் படைத்ததுவாம். இந்த நானாவித உலகில்’ அப்படின்னு தனிச் சீர் வைச்சு இப்படிப் பூராவையும் பாடினார். இது ஒரு நாள் நடந்தது.

பாரதியோட ஒத்திசைந்த சிறுவனா நீங்க இருந்தீங்கன்னு சொன்னீங்க. பாரதிக்கும் உங்களுக்குமிடையே நடந்த தனிப்பட்ட உரையாடல் எதுவும் ஞாபகம் இருக்கா?

அநேகமா ஞாபகம் இருக்கு. சில விஷயம் மறந்திருக்கு. அந்தச் சமயத்தில என் வயசில கனமான சம்பாஷணை எதுவும் இருக்காது. விளையாட்டுப் போக்கிலதான் இருக்கும். அதைத்தான் கவனிப்போம். அந்த வயசு அதுதானே? ஒரு தடவை பெருமாள் கோவில்கிட்டே ஒரு பெரிய மைதானம். அங்க அப்பத்தான் போட்ட ஒரு கழுதைக்குட்டி. கழுதைக்குட்டி நல்லாதானே இருக்கும்! (சிரிக்கிறார்.) அக்ரஹாரப் பிராமணர்கள் ரொம்ப ஆர்தடாக்ஸ். ஆத்தங்கரையில குளிச்சிட்டு ரொம்ப மடியா வருவாங்க. இவரு அப்படியே ஓடிப்போய் அந்தக் கழுதைக்குட்டியை எடுத்து முத்தம் கொஞ்சினார். அந்தப் பெரிய கழுதை பேசாமல் நின்னுது. ‘இவனைப் போய் . . . கர்மம் கர்மம்’னு தலையிலே அடிச்சுகிட்டுப் போய்ட்டாங்க. இவங்களுக்கு என்ன கெட்டுப் போச்சுன்னு சொல்லிட்டு இவர் வந்திட்டாரு. அவர் சம்சாரம் செல்லம்மா அப்ப சின்ன வயசுதானே. என்ன இப்படியெல்லாம் பண்றேள்! கிராமத்துல எல்லோரும் மதிப்பா நம்மளைப் பேச வேணாமா? எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு’ம்பாங்க.

‘நீ அவங்க பேசறதை ஏன் கவனிக்கறே? அதைப் பத்தி உனக்கென்ன? நான் எனக்கு இஷ்டப்பட்டதைச் செய்யறேன். அது வேற யாருக்கும் இடையூறா இருக்கா? அவங்க அதைப் பாக்க வேணாம். அவ்வளவுதான்’ அப்படின்னு செல்லிடுவாரு. அதை ரொம்ப சிம்பிளா முடிச்சிடுவாரு.

பாரதியாரோட பழக்கவழக்கங்கள் பற்றி?

Bharathiyar-2 அவருக்குச் சில வீக்னஸும் உண்டு. கஞ்சா குடிக்கறது. வடநாட்டுக்கெல்லாம் போயிருந்திருக்காரு இல்லே. சிறு வயசிலே காசியிலதான் முக்கியமா இருந்திருக்காரு. அங்க கஞ்சா குடிக்கிற பழக்கத்தைப் பாத்திருக்காரு. எங்க ஊர் கடையம் சின்ன கிராமம். அங்கேயும் ஒரு கஞ்சா ஆசாமி. அவன் ஒருத்தன் கிட்டேதான் கிடைக்கும். எங்கேயிருந்தோ அவன் வாங்கிட்டு வந்திடுவான். அவன் பெயர் ஆறுமுகம். கோவில்ல பணி செய்யறான். ஓச்சன்னு சொல்லுவாங்க. அவனைத் தெரிஞ்சு வீட்டுக்கு வரவழைச்சாரு. அவனைக் ‘கஞ்சா கொண்டாறியா’ன்னு கேட்பாரு. அவன் கொண்ணாந்தான். சிலும்பியை (விரல்களை விரிக்கிறார்) அப்ப பார்த்ததுதான். அதுக்கு முன்னாலே அதெல்லாம் தெரியாது. அதை நல்லாக் கசக்கி உள்ளே வைப்பார். அதைப் பத்தவைக்க முக்கியமா தேங்காய் நார் வேணும். அதுக்கு என்ன செய்றது? அவர் வீட்டுக்குப் பின்னாலே ஒரு கிணறு. அந்தக் கிணத்திலே ஒரு ராட்டினம் போட்டிருந்தது. ராட்டினத்தில ஒரு கத்தைக் கயிறு. கிணத்துத் தண்ணீரை இறைக்கிற அளவுக்கு நீளக் கயிறு அது. வர வர அதோட நீளம் குறைஞ்சிருச்சு. அதைக் கட் பண்ணிடுவாரு. இவ்வளவு நீளம் கட் பண்ணினால்தான் கனியும். அப்ப இந்தக் கஞ்சாவை ஊன்னு உறிஞ்சுடுவாரு (சிலும்பியை உறிவதுபோல் பாவனை செய்கிறார்). அப்படி உறியும் போதே பரலோகத்திலே போற மாதிரி கண்ணை மூடிக்குவாரு. அது ஒரு வேடிக்கை. அவரும் இவனும் மாறிமாறிக் குடிப்பாங்க. ஒருநாள் ‘என்ன கிணத்திலே வாளிக் கயிறு எட்டமாட்டேங்குதே’ன்னு செல்லம்மா கேக்கறாங்க ‘அதுக்கு வேற வாங்கிக்கோ. இப்ப அதுக்காக என்ன? கொஞ்சம்தானே எடுத்தேன். இனிமே எடுக்கமாட்டேன்’ அப்படின்னு ஒரு சமாதானம் சொல்லிவிட்டுட்டாரு. இப்படி ஒரு வேடிக்கையான ஆளு அவரு.

எல்லோர் கூடவும் அவர் பழகியிருக்காரு. அவரோட மைத்துனர் அண்ணாத் துரைன்னு ஒருத்தர் சிங்கப்பூர் அங்கே இங்கே எல்லாம் போய்ட்டாரு. அவர் ரொம்ப வேகமாகப் பேசுவாரு. அவருக்கு இவரைப் பத்தி அப்ரிசியேஷன்தான். ஆனா வீட்ல அவரை யாரும் விரும்பமாட்டாங்க. பேச்சே வச்சுக்கமாட்டாங்க. மத்த பிராமணர்களும் அவரோட பழக்கம் வச்சுக்கமாட்டாங்க. ஆக பிராமணர் இல்லாத கூட்டம். அதிலேயும் கொஞ்சம் தன் கூட்டத்திலே சேருகிற மாதிரி ஆட்களைத்தான் வச்சுக்குவாரு. ஆக நாங்களே அவருக்குத் துணைவர்களா ஆயிட்டோம். எங்களுக்கு அது ஒரு பெருமை. நாங்க சின்னப் பையங்க. அவர் ஒரு பெரிய புலவர். வரகவி. நாங்க பள்ளிக்கூடத்துப் பாடத்தையே சரியாப் படிக்கத் தெரியாதவங்க. எங்க தொடர்பு அந்த மாதிரி ஆரம்பிச்சுது. அவர் எங்கமேலே ரொம்பப் பிரியமா இருப்பாரு. கல்யாணசுந்தரம் இன்னைக்கு வரக் காணோமேன்னு சொல்லுவாரு. வராதவனையெல்லாம் நோட் பண்ணிக்கிடுவாரு. அந்த அளவுக்கு எங்ககூடப் பழகினாரு. அந்த அம்மாவுக்கு எப்பவும் கஷ்டம். வறுமைதான். அவங்க எங்கேயோ போயி ரவை உப்புமா கிண்டி டிபன் எடுத்துவந்து அவர் கையில் கொடுப்பாங்க. இவர் அந்த வீட்டுச் சுவர்மீது ஏறி உச்சிக்குப் போயிடுவாரு. அங்கே உக்காந்து அதைத் தூக்கித் தூக்கிப் போடுவாரு. கடன் வாங்கித் தன் புருஷன் பட்டினியா கிடக்கக்கூடாதுன்னு சொல்லி ஆதங்கத்தோட கொண்டு வந்ததையெல்லாம் எடுத்து அநாயாசமா வீசுவாரு. உடனே வரும் காக்கா குருவி எல்லாம். ‘காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ இவரோட நோக்கம் பரந்த நோக்கம். இவரிடம் எவ்வளவு பரந்த இதயம் இருக்கோ அவ்வளவுக்கு அவ்வளவு சுருக்கம் அவங்களுக்கு. இவரை அவங்களாலே புரிஞ்சிக்க முடியாது.

பாரதியோட புதல்வி சகுந்தலா உங்களோட படிச்சவங்கன்னு சொன்னீங்க?

அது ஒரு க்ளாஸ். என்னோட ஜூனியர். ‘ஓடி விளையாடு பாப்பா’ன்னு அதுக்காகத்தான் பாடினார். பாரதி அதைப் பாடச் சொல்லுவார். அது பாடும். எங்களுக்கும் சொல்லித்தருவார். ஒரு ஆர்மோனியம். மிருதங்கம் இருக்கும். மிருதங்கம் படிக்கிறாரு. அந்தத் தாள லயம். ததிதும்நம் அப்படின்னு அந்த விரல். அவருகிட்டேதான் நான் படிச்சேன். அதுதான் மிருங்கத்திற்கு முதல் பாடம். மிருதங்கத்தை எவனோ கொண்டுவந்து போட்டிருந்தான். அநேகமாக அது ஆறுமுகமாத்தான் இருக்கும். அப்புறம் ஒரு ஆர்மோனியம். ஆர்மோனியம் எல்லோர் வீட்டிலேயும் இருக்கும். அதையும் வச்சுப் பாடுவாரு. பாட்டுக்குச் சுரம் வாசிச்சுப் பாத்துக்கிடுவாரு. சுரத்தை எழுதி அந்தச் சந்தத்திலேயே பாட்டுப் பாடுவாரு.

செல்லம்மா பாரதியுடன் உங்களுக்குப் பழக்கம் உண்டா?

Bharathiyar-4 எல்லோரையும் தெரியும். நான் இன்னார் வீட்டுப் பிள்ளைன்னு தெரியும். ஆகையினால எங்க அப்பாமீது கவுரவம் வச்சிருந்தாங்க. என்ன உங்க பையன் பாரதியோட திரியறான்னு அவங்களே சொல்லுவாங்க. எங்க அப்பாகிட்டே போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணி இருக்காங்க. அதைப் பாரதியார் லட்சியப்படுத்த மாட்டார். ‘சொன்னாங்களா, சொல்லிட்டுப் போகட்டும். நீ பயப்படறியா’ன்னு கேட்பாரு. நான் பயப்பட மாட்டேன். அவர் ‘வா போகலாம்’னு இன்னொரு இடத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயிடுவாரு. மது பானத்தை அந்தந்த கிளாஸ்லேதான் ஊத்திச் சாப்பிடணும்னு அவர்கிட்டே ஒரு கண்டிப்பு கிடையாது. சாயந்திரம் வயக்காட்டிலே வேலை செஞ்சிட்டு அரிஜனங்கள் போவாங்க. போற வழியிலே அங்கே சேரிப் பக்கம் கள்ளுக்கடை இருக்கும். அவங்க பட்டையைக் குடிச்சிட்டு அலுப்புத் தீர ஆட்டம் பாட்டம் எல்லாம் போடுவாங்க. ஒரு நிமிஷம் இதோ வந்திடறேன்னு எங்ககிட்டே சொல்லிட்டு உள்ளே போயிடுவாரு. அவரு பட்டையை நீட்டமாகப் புடிச்சிக்குவார். ‘ஏ சாமி வந்திருக்கார்’னு அதில ரெண்டு மூணு விடுவான். நல்லா நிறையச் சாப்பிடுவாரு. அவங்க எல்லாம் ஆடுவாங்க. பாடுவாங்க. இவரு நேராக் கிளம்பி வந்திடுவார். அந்த ஸ்மெல் மட்டும் கொஞ்சம் இருக்கும். மற்றபடி எந்தவித நடவடிக்கைகளிலும் வித்தியாசம் இருக்காது.

பாரதி மது அருந்திவிட்டுக் கலாட்டா ஏதாவது பண்ணினார்னு செய்திகள் உண்டா?

பண்ணமாட்டார். ரொம்ப டீஸண்ட் ஆனவர் அவர். ஒழுக்கம் உடையவர். நல்லொழுக்கம் பற்றி எவ்வளவோ பாடியிருக்கிறார். பேசியிருக்கார். அவங்களெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் கவிதை எழுதறேன்னு சொல்லுவார். ஸ்தோத்திர கீதங்கள், தேசிய கீதங்கள், பாப்பா பாட்டு இப்படித் தனித்தனியா புஸ்தகம் ப்ரிண்ட் பண்ணினார். யார் வாங்குவா? எங்ககிட்டேக் கொடுத்து இதையெல்லாம் வித்துக்கொண்டு வாங்கடான்னு சொல்லுவாரு. நாங்க அதை எடுத்துக்கிட்டுச் சுற்றுவோம். சார், ஒண்ணு வாங்கிக்கிறீங்களா’ன்னு மத்தவங்ககிட்டே கேப்போம். ‘பாரதி எழுதின பாட்டுன்னு, என்கிட்டே அந்தக் கதையெல்லாம் விடாதே போ அப்படிம்பாங்க. நாங்க மனம் ஒடிஞ்சு, ஒரு புஸ்தகம்கூட விக்கலேன்னு அவர்கிட்டே சொல்லுவோம். இப்படி ஒருத்தரும் வாங்காமல் இருந்ததுதான் ‘பாரத ரத்னா விருது’ வாங்கக்கூடிய அளவுக்கு மேல் மதிப்பு பெற்றது.

பாரதிக்கு யானையைப் பிடிக்கும்னு சொன்னீங்க!

Bharathiyar-5 யானையை அவருக்குப் பிடிக்கும். கழுதைக் குட்டியை வைத்து முத்தம் கொஞ்சினார்னு சொன்னேனே! அதே மாதிரி எங்க ஊர்க் கோவிலுக்குச் சித்திரை மாத உற்சவத்திற்குச் சங்கரன் கோவிலிலிருந்து ஒரு யானை வரும். அதோடு யானைப்பாகன் வருவான். நாராயணசாமி பிள்ளைன்னு கவிதை அகவல் பத்தி சொன்னேனே அவர்தான் கோவில் ட்ரஸ்டி. இலுப்பைத் தோப்பில் யானையைக் கட்டியிருப்பார்கள். அந்தப் பாகனிடம் போய் ‘யானைகிட்டே நான் விளையாடப் போகணும்’னு சொல்லுவார். ‘சரி கிட்டே போங்க. ஆனா அதை ஒண்ணும் செஞ்சிடாதீங்க. அப்புறம் அது மிதிச்சுப் போட்டுச்சுன்னா என்மேலே பழிவரும்’ என்றான்.

அதோட துதிக்கை அவ்வளவுதான் இருக்கும். அதன் துதிக்கையைக் கட்டி முத்தம் கொஞ்சினார். அதன் தந்தத்திற்குத் தான் அவர் உயரம். தந்தத்தைக் கரகரன்னு கடிச்ச சத்தம் எங்களுக்குக் கேட்டது. ஏது இவரு வம்பு பண்ண ஆரம்பிச்சிட்டாரேன்னு பயந்தோம். அது ஒண்ணும் செய்யலை. பாகனும் கவனிச்சிக்கிட்டிருந்தான். அப்புறம் கொஞ்சநேரம் கழிச்சு யானையிடம் ‘வரோம்’ன்னு விடைபெற்றுக்கொண்டார். திருவல்லிக்கேணி யானைகிட்டே விளையாடக் கேட்டிருக்காரு. ஏதோ எசகுபிசகாப் போய் அவர் மாட்டிக்கிட்டார். தூக்கி வீசி எறிஞ்சிடுச்சி. ஒரு சமட்டுச் சமட்டினால் அங்கேயே க்ளோஸ் ஆயிருப்பாரு. யானை ஒரு மனுசனைத் தூக்கி வீசினா சுவத்திலே பாய்ச்சை மாதிரி அப்பிக்குவான். அவர் பயந்துபோனாரு. அந்த ஷாக்கில் அவரை மெள்ள ஆட்கள் வீட்டுக்குக் கூட்டிப் போனாங்களாம். அதோட படுத்து டிசண்டரி மாதிரி சீக்கு வந்திடுச்சி. அதிலதான் இறந்திருக்கார்னு சொன்னாங்க.

பாரதி இறந்த செய்தி உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?

நாங்க (நானும் எனது நண்பரும்) பாளையங் கோட்டையிலே படிக்கப் போனோம். செயிண்ட் சேவியர் காலேஜ். அப்போது அது ஹைஸ்கூலா இருந்தது. அங்க ஒரு ஹாஸ்டல்லே நாங்க படிச்சுக்கிட்டு இருந்தோம். 21ஆம் வருஷம்னு நினைக்கிறேன். அப்ப ஒருத்தன் வந்து பாரதி செத்துப்போயிட்டாராண்டான்னு சொன்னான். சொன்னவுடன் நான் நம்பலே. யானை தூக்கிப்போட்டு அவரைக் கொன்னுட்டதாம்ன்னு அவன் சொன்னான். உடனே நானும் எனது நண்பனும் அழுதுகிட்டு இருந்தோம். ‘என்னடா, ரொம்ப அழுதுகிட்டு இருக்கீங்க’ன்னு வார்டன் வந்து கேட்டார். ‘எங்க ஊர்ல பாரதின்னு ஒருத்தர் இருந்தார். அவர் எங்களுக்கெல்லாம் ரொம்ப ப்ரண்டு. அவர் வீட்டிலேயே போய் இருப்போம் ‘அவர் எங்களுக்கெல்லாம் ரொம்ப நல்லவரா இருந்தார்’ அப்படின்னோம். அதோட எங்களோட உறவு முடிஞ்சிப்போச்சு. பின்னால அவர் வீட்டு ஆட்களோட எனக்குத் தொடர்பில்லை.

***

படப்பிடிப்பு முடிந்து சென்னைக்குத் திரும்பிய சில நாட்களில் கல்யாணசுந்தரத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் பாரதி பற்றிய ஞாபகங்களைத் தன்னுள் தூண்டிவிட்டதற்காக எனக்கு நன்றி தெரிவித்திருந்தார். டாகுமெண்டரி படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அவர் வீட்டை நோக்கிப் படையெடுத்தார்கள். இணையதளங்களில்கூட அவரது பேட்டிகள் வெளிவந்தன. அவருக்கு டாகுமெண்டரியின் வீடியோ கேசட்டை அனுப்பி வைத்தேன். அதை அவர் பலமுறை பார்த்திருக்கிறார். நள்ளிரவில் இறந்த அவர் அன்று மாலைகூட அப்படத்தைப் போடச்சொல்லிப் பார்த்து மகிழ்ந்தார் என்று அவரது உறவினர் கூறினார். 2003இல் அவர் இறந்தபொழுது அவருக்கு 95 வயது.

***

நா. ராமசாமி ஐயர் என் கண்டுபிடிப்பு அல்ல. அவர் பாரதியை நேரிடையாகப் பார்த்துப் பழகியவராக ஏற்கனவே டி.ஜி.என். ஆன்மிக மையம் வெளியிட்ட ‘பாரதி விழா மலர்’ ஒன்றில் அறிமுகமாகி இருந்தார். அப்போது இந்தியாவின் அடிஷனல் சொலிசிட்டராகப் பணியாற்றிய அவரது மகன் என்.ஆர். சந்திரனுடன் தொடர்புகொண்டு படப்பிடிப்பிற்கான நாள் குறித்தேன். அடையாறிலுள்ள பத்மநாப நகரிலுள்ள அவர் வீட்டிற்கு ஒரு நாள் சென்றபொழுது அவர் ஜிப்பா, உருத்திராட்ச மாலை, பச்சை சால்வை ஆகியன அணிந்து எங்களை வரவேற்கத் தயாராக இருந்தார். உடல் உறுதியாக இருந்தது. கணீரென்று பேசினார். கேட்கும் சக்தியை காது வேகமாக இழந்துகொண்டிருந்தது என்பதைத் தவிர 97 வயதில் மிக ஆரோக்கியமாக இருந்தார். புதுக்கோட்டையில் பலகாலம் வழக்குரைஞராகப் பணியாற்றியவர். சில காலம் அமெச்சூர் நாடகங்களில் நடித்ததாகவும் கூறினார். 1901இல் பிறந்தவர். பாரதியுடன் 1920இல் பழகியிருந்தார். கல்யாணசுந்தரம் போலவே இவருக்கும் கேமராக் கூச்சம் அறவே இல்லை. இருவரது பேட்டிகளும் 1998இல் எடுக்கப்பட்டவை.

நீங்க முதன்முதலா பாரதியை எப்பொழுது பார்த்தீர்கள்?

N.-Ramasamy நான் புதுக்கோட்டைவாசி, எனக்கு இப்ப வயசு 97 ஆகிறது. “நான் ஆதியிலே 1919லே புதுக்கோட்டைக் காலேஜிலே எம்.ஏ. படிச்சுகிட்டு இருந்தேன். அப்போ பாரதியோட மருமான் (சகோதரியின் மகன்) டி. சங்கரன்ங்கிறவர் அரசர் கல்லூரியில் வாத்தியாரா இருந்தார். ஸ்கௌட் மாஸ்டர் ஆகவும் இருந்தார். அவரைச் சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் பாரதியோட பாட்டையெல்லாம் பாடுவார். அவர் பேசும்பொழுது வாய் திக்கினாலும், பாரதியார் பாட்டுப் பாடும்பொழுது வாய் திக்கவே திக்காது. அது எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். பாரதியார் பாட்டிலே எனக்கொரு மோகம் வந்து அவர் பாடிய பாட்டை நெட்டுரு பன்னிப் பாடியிருந்தேன். சங்கரனை எனக்குத் தெரிஞ்சது பெரிய அதிர்ஷ்டம். மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்லே பி.ஏ. வாசிக்க வந்தேன். அப்ப என்னோட ஒன்னுவிட்ட மாமா வீட்லே 12, மேட்டுத் தெருவிலே ஒரு போர்ஷன்ல தங்கும்படியா நேர்ந்தது. ஹாஸ்டல்ல சீட் கிடைக்காததால அங்கே ஒரு நாலைஞ்சு மாசம் தங்கியிருந்தேன். மேட்டுத் தெரு ப்ரண்ட் போர்ஷன். தம்புச்செட்டி தெரு. அதன் நம்பர் 209. எண்ட்ரன்ஸ் மேட்டுத்தெருன்னு சொல்லுவா ஆனால் நடுவிலே வாசப்படி தொறப்பு உண்டு. பாரதியார் 209இல் இருந்ததால் பின் போர்ஷனில் இருந்த எனக்கு அவரை அடிக்கடி சந்திக்கிற சான்ஸ் ஏற்பட்டது. ஒரு நாள் அவரை சந்திச்சு நான் புதுக்கோட்டைவாசி, உங்க மருமான்கிட்டே உங்க பாட்டையெல்லாம் கேட்டு நெட்டுரு பண்ணியிருக்கேன்னு அறிமுகமானேன். அவர் என்னை ராமுன்னு தான் கூப்பிடுவார்.

அவருடன் வேறு யார் இருந்தார்கள்? அவர் என்ன செய்தார்னு ஞாபகம் இருக்கா?

அப்ப அவர் சம்சாரம், கூடவே, பத்துப் பன்னிரெண்டு வயசு பொண்ணு ஒண்ணும் இருக்கும். நேரம் இருக்கும்போதெல்லாம் காலை வேளையிலே அவர் வீட்டுக்குப் போவோம். அவர் சம்சாரத்தைப் பார்ப்போம். அவர் ‘சுதேசமித்திர’னில் சப்-எடிட்டர் ஆக இருந்தார். அவருக்கு அப்போ ஐம்பது ரூபாய் சம்பளம். காலம்பரை பத்துமணிக்கு ரிக்ஷாவில் போயிட்டுச் சாயங்காலம் ஆறு மணிக்கு வந்திடுவார். அதனாலே அவரோட அடிக்கடி பேசுவோம். அவர் வெட்டிப்பேச்சே பேசமாட்டார். நல்ல ஆழ்ந்த கருத்துள்ள பேச்சைத்தான் பேசுவார். ஒழிஞ்ச வேளையிலே ரூம்லே கதவைச் சாத்திக்கிட்டு எழுதிண்டிருப்பார். இல்லேன்னா ஏதாவது படிச்சிண்டிருப்பார். காலை வேளைலே சாப்பிட்டுச் சரியா டயத்துக்குப் போயிடுவர். ராத்திரி வேளைலே சாப்பிடறதுக்கு அவருக்குச் சாப்பாட்டு நினைவே இருக்காது. அந்தச் சமயங்கள்லே எங்களைப் போல முட்டாள்ங்ககிட்டே அந்த அம்மா வந்து சொன்னாக்கா, நான் அவரை மாமான்னுதான் கூப்பிடுவேன். ‘மாமா, மாமி குழந்தையெல்லாம் சாப்பிடாம காத்திண்டிருக்காளே. நீங்க இப்படிக் கதவை சாத்திண்டிருக்கேளே’. ‘அடடே நாழியாயிடுச்சா’ன்னு சொல்லிச் சிரிச்ச முகமா இருப்பார். கோபமே வராது அவருக்கு. குடும்ப ஞாபகமோ பண ஞாபகமோ லட்சியம் பண்ணமாட்டார். அந்த வகையிலே அவர் ஒரு ஞானி. இந்தக் குடும்ப பாரம் பணத்தைப் பத்திய கவலை அதெல்லாம் அவருக்குக் கிடையவே கிடையாது. அவருக்குத் தங்கமும் ஒண்ணுதான். மண்ணாங்கட்டியும் ஒண்ணுதான். அப்படிப்பட்ட மனுஷன். அவர் அடிக்கடி சகஜமாப் பேசுவார். வாரத்திலே ரெண்டு மூணு நாளு ராத்திரி வேளையிலே தம்புச்செட்டி வீட்டு முகப்பில் உள்ள பெரிய திண்ணையில் ஷேட் விளக்கு வச்சுகிட்டு பஜனை விளக்கம், பேச்சு எல்லாம் நடக்கும். நல்ல ஜனக்கூட்டம். தெருவிலே டிராபிக்கெல்லாம் இடைஞ்சல் ஏற்படற மாதிரி ஜனக் கூட்டம் சேர்ந்துடும். அவர் புதுப்புதுப் பாட்டாப் பாடுவார். விளக்கம் சொல்லுவார். ரசிகா ரொம்ப பேர். தெருவிலே இருக்கிற ஆட்கள் எல்லாம் கூடிடுவா. அது இரண்டு மணிநேரம் இருக்கும்.

பாரதி பார்ப்பதற்கு எப்படி இருப்பார்?

எனக்குத் தெரிஞ்ச பாரதி இந்த போட்டோவிலே இருக்கிற மாதிரி இல்லே. அவர் இந்த மாதிரி ட்விஸ்ட் மீசை வைச்சுக்கலே. மாநிறம். ரொம்ப சாமான்யமா இருப்பார். எப்பவாவது குர்தா போட்டுக்குவார். இல்லேன்னா வெறும் பாடியோடதான் இருப்பார். வெளியிலே போகும்போது கோட் போட்டுக்கிட்டுத் தலைப்பா கட்டிக்குவார். அப்படித்தான் நான் பார்த்திருக்கேன்.

பண விஷயத்திலே பிறத்தியார் கஷ்டப்படுவதை அவர் சகிக்கமாட்டார். ‘சுதேசமித்திரன்’ எடிட்டர் சி.ஆர். சீனிவாசன், அவராலேதான் தம்புச்செட்டி தெரு வீடு கிடைச்சதுன்னு பாரதி சொன்னார். ஒரு விசை பாரதி சம்பளம் வாங்கிட்டு வரும்போது அவரைக் கொண்டுவந்த ரிக்ஷாக்காரன் தான் ரொம்ப கஷ்டப்படறேன்னு சொன்னதுக்காக கோட் பையிலிருந்த அந்த ஐம்பது ரூபாயையும் கொடுத்திட்டார். வீட்டுக்கு வந்து அவர் சம்சாரத்துக்கிட்டே இந்த மாதிரி ரிக்ஷாகாரன் கஷ்டப்பட்டான். கொடுத்திட்டேன்னு சொல்லியிருக்கார். அந்த அம்மாவாலே ஒண்ணும் சொல்ல முடியல்லே. அப்பறமா அந்த அம்மா என்னைக் கூப்பிட்டு ‘இந்த மாதிரி மாமா பண்ணிட்டார். ரிக்ஷாகாரனுக்குப் பணத்தைக் கொடுத்திட்டார். நம்ம குடும்பச் செலவை எப்படிப் பண்றதுன்னு நேக்குப் புரியலை’ன்னு அந்த அம்மா சொன்னா. அந்த ரிக்ஷாக்காரன் வழக்கமா வர்றவன். நானும் என் சிநேகிதனும் அவனைத் தேடிப் புடிச்சி என்னடா, அய்யாகிட்டே பூராப் பணத்தையும் வாங்கிட்டு வந்திட்டே. அவாளுக்கு வேண்டாமான்னு சொன்னப்புறம் அவன் அஞ்சு ரூபாய் செலவழிச்சதுபோகப் பெருந்தன்மையா நாற்பத்தி அஞ்சு ரூபாயையும் கொடுத்துட்டான். அப்புறம் அதை அந்த அம்மாகிட்டே கொடுத்ததிலே அந்த அம்மாவுக்கும் பெரிய திருப்தி.

செல்லம்மா எப்படி இருப்பார்?

எனக்கு அந்த அம்மாகிட்டே ரொம்ப மரியாதை. ஏன்னா நம்ம ஹிந்துப் பெண்கள் எப்படி இருக்கணுமோ கிரஹனி எப்படி இருக்கணுமோ அப்படி இருப்பாங்க. மடிசார்தான் கட்டிக்குவாங்க. மேலாக்கை எடுக்கவே மாட்டாங்க. ராமுன்னுதான் (என்னை) கூப்பிடுவாங்க. குழந்தை மாதிரி ட்ரீட் பண்ணுவாங்க. ஏதாவது வீட்ல பண்ணியிருந்தா எனக்குக் கொடுப்பாங்க. அந்த அம்மாவுக்கு ஏதாவது அப்பப்ப எங்களால் ஆன உதவி நாங்க செய்வோம். எதிர்பார்க்கமாட்டாங்க. நாங்க வாலண்டர் பண்ணிக்குவோம். ஏன்னா அவங்க தனியா இருப்பாங்க. வெளிவாசல் போறதே இல்லே. அதை நான் பார்த்ததே இல்லே. எனக்கு இன்னிக்கும் அந்த அம்மாவின் முகம்தான் முன்னால் நிக்கறது. பாரதியாரைவிட. எனக்கு அவங்ககிட்டே பிரமாத பக்தி. ரொம்ப பிரியமா இருப்பாங்க. எனக்கு இந்த நாலு மாசமும் ஏண்டா முடிஞ்சதுன்னு இருந்தது. நான் அதுக்குமேலே ஹாஸ்டலுக்குப் போய்ட்டதனாலே பழக முடியலே. என்னோட வாழ்க்கை பாரதியார் குடும்பத்தோட ஏற்பட்ட தொடர்ச்சியை மறக்கவே முடியலே. எப்பவும் அதை நினைச்சிண்டு இருப்பேன். எனக்கு இந்த வாய்ப்புக் கொடுத்ததற்கு உங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றி.

***

சென்னையில் ஜூலை 1999இல் நடைபெற்ற டாகுமெண்டரி வெளியீட்டு விழாவிற்குச் சென்னைவாசி என்பதால் ராமசாமி ஐயர் அழைத்துவரப்பட்டார். ஜெயகாந்தன் வீடியோ கேசட்டை வெளியிட அதன் முதல் பிரதியை அவர் பெற்றுக்கொண்டார். பல மாதங்களுக்குப் பிறகு அன்று அவரை மீண்டும் சந்தித்த பொழுது அவர் சக்தி இழந்தவராகத் தோன்றினார். ‘நீங்க கூப்பிட்டதாலே வந்தேன். என்னாலே முடியல்ல’ என்று கூறிவிட்டு உடனே சென்றுவிட்டார். அவரை அப்படிப் பார்த்தது மனதிற்கு வருத்தமாக இருந்தது. மறுவருடமே அவர் காலமானார். அப்போது அவருக்கு வயது 99.

***

‘சுப்பிரமணிய பாரதி’ டாகுமெண்டரி படம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தமிழர்கள் வாழும் நாடுகள் பலவற்றிலும் திரையிடப்பட்டது. மிக அதிகமான தடவைகள் திரையிடப்பட்ட தமிழ் டாகுமெண்டரி இதுவாகத்தான் இருக்கும். பாரதிமீது மக்கள் கொண்டுள்ள அபிமானம் அத்தகையது. பாரதியின் நண்பர்களின் பேட்டிகள் படத்தில் அதிகம் பாராட்டப்பட்டன. கூடவே விமர்சனங்களும் எழுந்தன.

படத்திற்கான வர்ணனையை இந்திரா பார்த்தசாரதி ஆய்வுநுட்பம் மிக எழுதியிருந்தார். படப்பிடிப்பு முடிந்து எடிட் செய்யும்பொழுது மேலும் தேவையான பகுதிகளுக்கு அவருடன் ஆலோசித்து நான் வர்ணனைகளை எழுதிச் சேர்த்துக்கொண்டேன். ‘குடும்ப வறுமை, நியாயமான எதிர்பார்ப்புகளுக்குக் கிடைத்த தோல்விகள், பலகாலமாகத் தொடர்ந்துவந்த அரசாங்க அச்சுறுத்தல்கள், போதைப் பொருள் பழக்கம் ஆகியவற்றால் ஏற்கனவே நலிவுற்றிருந்த உடலும் மனமும் மேலும் சீர்கெட்டது’ என்று எழுதி அவரது முடிவுக் காட்சிகள் மீது அதை ஒலிக்கச் செய்திருந்தேன். ‘போதைப் பொருள் பழக்கம்’ என்கிற தொடருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன். இளைஞர்கள் அதை அறிந்து கெட்டுப்போய்விடுவார்கள் என்பது அவர்களது வாதம். ‘போதைப் பழக்கம் கொடியது என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறதேயொழிய அது சிகரெட் விளம்பரம்போல் கவர்ச்சியாக்கப்படவில்லை. பாரதியைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவரது வாழ்க்கையை முழுதாக அறிந்துகொள்ள வேண்டும். வ.உ.சி, வ.ரா, யதுகிரி அம்மாள் ஆகியோர் இது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளார்கள்’ என்று கூறியதைக் கேட்டுச் சிலர் சமாதானமடைந்தார்கள்.

இங்கே தரப்பட்டுள்ள கல்யாணசுந்தரம், ராமசாமி ஐயர் ஆகியோரின் பேட்டிகளிலிருந்து படத்தின் மைய ஓட்டத்திற்குத் தேவையான சில பகுதிகளைத்தான் படத்தில் இணைத்திருந்தேன். பாரதி சிலும்பியில் கஞ்சா புகைத்தது, பட்டைச் சாராயம் அருந்தியது ஆகியவற்றையெல்லாம் கல்யாணசுந்தரம் சொல்வதைக் காட்டியிருந்தால் எத்தகைய எதிர்ப்புகள் தோன்றியிருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.

அவர்களது பேட்டிகள் முழுவதையும் பரந்த நோக்குடன் பார்த்த பாரதி அன்பர்கள் அவற்றின் அரிய ஆவண மதிப்பைச் சுட்டிக்காட்டினார்கள். இதுவரை எங்கும் வெளிப்படாத பாரதியை அவற்றில் பார்க்க முடிவதாகவும் கருத்துத் தெரிவித்தனர்.

கல்யாணசுந்தரம், ராமசாமி ஐயர் ஆகியோரிடம் பாரதியின் வெவ்வேறு நடத்தைகள் பதிவாகியுள்ளன. கடையத்தில் தன்னிடம் வம்பு செய்தவர்களைக் கலவரப்படுத்த வேண்டி அவர் மேற்கொண்ட நடை உடை பாவனைகளைச் சென்னையில் அவரிடம் நாம் காணவில்லை. தான் உண்டு, தன் வேலையுண்டு என்று அவர் செயல்பட்டிருக்கிறார். வெளிப்படையான கொந்தளிப்பை அவரது நடவடிக்கைகளில் பார்க்க முடியவில்லை. பஜனைகள் பாடித் தன்னையும் பிறரையும் மகிழ்வித்திருக்கிறார். தனது படைப்புகள் அனைத்தையும் நாற்பது நூல்களாக வெளியிடத் திட்டமிட்டு அதற்குப் பொருளுதவி கேட்டுப் பலருக்கும் கடிதங்கள் எழுதித் தோல்வி சுமந்த பின்னணியில்தான் தபால் கார்டு சம்பவம் நிகழ்ந்திருப்பது தெரியவரும். பாரதி சிறுவர்களுக்குத் தோழனாகவும் ஆசிரியனாகவும் இருந்திருக்கிறார். குன்றுகளில் அவர்களுடன் சுற்றித் திரிந்ததைக் கேட்கும்பொழுதே கவித்துவமான காட்சிகள் மனத்தில் தோன்றுகின்றன.

‘சுதேசமித்திர’னில் உதவி ஆசியராக வேலைபார்த்த அவருக்கு ஐம்பது ரூபாய்ச் சம்பளம் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் அது நல்ல தொகை. அந்தச் சம்பளம் அவருக்குத் தரப்பட்டது என்னும் பட்சத்தில் அவரது இறுதி நாட்களில் அவருக்கு வறுமைத்தொல்லை ஏற்படவில்லை என்று கருதலாம். தம்புச் செட்டி தெரு வீட்டில் குடியிருந்த நாட்களில் பாரதியும், செல்லம்மாவும் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் குடும்ப வாழ்க்கை நடத்தியிருப்பதையும் நம்மால் அறிய முடிகிறது

*****

நன்றி : காலச்சுவடு

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

4 கருத்துகள்:

subramani periyannan on January 26, 2011 at 2:26 PM said...

Wonderful.Real Bharathi ,the Human,has been brought out by Thiru.Kalyanasundaram who happened to be the only person ,an true observer at an early age and who alone the authenticated person to narrate the day today living of Bharathi's life at Kadayam, lived an extended life by Gods grace or because of the last wishes of Bharathi TO REVEAL HIMSELF through Kalyanasundaram, till Mr.Amsan Kumar recorded it in History.We now have the true picture of Bharathi the human.Yet to see the Documentry
GOD IS GREAT

Anonymous said...

வேடிக்கை ம‌னித‌ரைபோல் நீ வீழ‌வில்லை பார‌தி....இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய்

subramani periyannan on December 3, 2011 at 12:54 AM said...

it seems the posting and the documentary does not have the reception what it has deserved.this article must be included in the text books for our generation to know the true Bharathi.At least we need to print a few thousand copies and distribute it to our Tamils

Unknown on May 20, 2012 at 4:13 PM said...

இறைவனருளால் இங்கே தடுக்கி விழுந்தேன். பின் இஃதோர் ஆலயமென்பதறிந்தேன். ஆம். பாரதி ஆலயம் இது. இதைப் பதிப்பித்தமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மஹாகவியைப் பார்த்து, பழகியர்வகளின் பாத தூளியை சிரசில் தரிக்கிறேன். மிக்க நன்றி.

நிர்வாகி
GnanaBoomi.com

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்