Apr 18, 2010

கோலி - பூமணி

பூமணி

சுப்புவுக்குப் பள்ளிக்கூடம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. எல்லாரும் ஒரே மாதிரி உட்காருவது நிற்பது பாடுவது படிப்பது ஒரே சமயத்தில் ஒண்ணுக்குப் போவது சாப்பிடுவது தண்ணீர் குடிப்பது ஒரே விளையாட்டைச் சேர்ந்து விளையாடுவது, அதென்ன படிப்பு. நெருக்கும் போது ஒண்ணுக் கடிக்கணும். தவிக்கும் போது தண்ணீர் குடிக்கணும். தோணும் போது விளையாடணும். இன்ன விளையாட்டு என்றல்லாம்  இஷ்டத்துக்கு விளையாடணும். வேப்ப மரத்தில் ஏறி ஊஞ்சலாடணும். வகுப்பில் ஒளிந்து தேடிப்பிடிக்கணும். பக்கத்திலுள்ள குமரன்கோயில் மலைக்கு ஓடி கால்வலிக்கப் படியேறி உச்சியில் நின்று ஊரை அளந்து விட்டு உருண்டு திரும்பணும். பள்ளிக்கூடக் கூரை விட்டத்தில் அருவியாக வடியும் குருவிக் கூட்டில் குடும்பம் நடப்பதை மல்லாந்து பார்த்தபடி கண்சொருகணும்.
poomani
கால்சட்டைப் பைக்குள் ரெண்டு கோலிக் காய்கள் துருதுருத்து உறுத்தின. அவ்வப்போது தொட்டுப் பிதுக்கி மோதவிட்டு சமாதானப்படுத்தினான். அவை பையை விட்டுக் கெலிக்கு முன் எடுத்து விரலுக்கொரு முறை வில்லாக வளைத்து 'அடி கடக்கோ' என்று தெறித்தால்தான் ஆசையடங்கும். எதிராளி முக்காமுக்கா மூணுதரம் கோலியைச் சுண்டி விரல்மொளி வீங்கணும். தேக்கித் தேக்கி முழங்கை தேயணும்.

ஊரும் மோசந்தான். எந்தப் பயலைப் பார்த்தாலும் ஏதாவது வேலை செய்கிறான். பெரிய வியாபாரி மாதிரி தோளில் பையைத் தொங்கப் போட்டுக்கொண்டு தாள் பொறுக்குகிறான். சீசா மூடியென்று கண்டதைக் கிண்டிக் கிளறுகிறான். கடையில் சைக்கிளுடன் மல்லுக்கட்டுகிறான். வண்டி தள்ளிக் கொண்டு கட்டை சுமந்துகொண்டு சைக்கிளில் தண்ணீர்க் குடங்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு... எல்லாம் நடக்கிறது. விளையாட்டைத்தான் காணவில்லை.

சிலநேரம் எல்லா இடத்திலும் விளையாட்டு நடக்கிறது. சாந்துச் சட்டியை சூட்டிக் கையாகக் கைமாற்றும் ஆட்கள் வாலிபால் விளையாடுகிறார்கள். கொத்தனார் கரண்டியால் சாந்தை சுவரில் வீசி பேட்மின்டன் விளையாடுகிறார். மம்பட்டி வேலைக்காரர்கள் ஹாக்கி விளையாடுகிறார்கள். சம்பளத்துக்காகச் சண்டை நடக்கும் போது சடுகுடு நடக்கிறது.

தெற்கு ரோடு மைதானத்தில் கொஞ்ச நாளைக்கு முந்தி ஹாக்கிமேச் நடந்தது. தூரத்திலிருந்தெல்லாம் விளையாட வந்திருந்தார்கள். ஊரே திரண்டு பார்க்கப் போனது. அவனுக்கு ஆசை. அம்மாவை அரித்தான். அவள் அசையவில்லை.

''வெளயாட்டுத்தானா சோறு போடுது''

சொல்லாமல் கம்பி நீட்டவும் முடியாது. ''அடே சுப்பு'' என்று வாய் வலிக்கத் தேடுவாள்.

எப்படியோ அவளை அசத்தி ஒருநாள் போய்விட்டான். மைதானத்தைச் சுற்றி ஏகக் கூட்டம். நடுவில் விளையாட்டுக்காரர்கள் சிதறிக் கிடந்தார்கள். எல்லாரும் பெரிய பெரிய ஆட்கள். சிலருக்கு மண்டை வழுக்கை சாயங்கால வெயிலுக்கு மின்னியது. வற்றிய குளத்து அயிரை மீன்களாக அவர்கள் துள்ளி விளையாடும்போது பையன்களாகிவிட்டார்கள். அவன் விளையாட்டைச் சொகமாகச் சுமந்து கொண்டு வீட்டுக்கு வந்தான். மேச் காய்ச்சல் சின்னப்பையன்களைப் பிடித்துக் கொண்டது. வாழைத்தார்க் காம்பு வைத்து ரோட்டில் ஹாக்கி விளையாடினார்கள். கல்லுகூட பந்துதான். அப்படி விளையாடணும் போல் எச்சூறும். அம்மா விடணுமே. சே இந்த அம்மா ரொம்ப மோசம்.

கொஞ்சநேரம் சும்மா இருக்க முடியாது. எப்போதும் வேலைதான். காலையில் அக்காவுடன் கட்டையடுக்கணும. சுமந்து போய் தீப்பெட்டியாபீசில் சேர்க்கணும். வெத்துக்கட்டை வாங்கி வரணும். வரும் போது ரோட்டில் கல்லை எத்தி விளையாடக் கூடத் தோதிருக்காது. கட்டைமேல் உட்கார்ந்திருக்கும் குச்சுச் சாக்கு பயமுறுத்தும். கட்டையை இறக்கியதும் பள்ளிக்கூடப் பையைத் தூக்கணும்.

சாயங்காலம் வீடு திரும்பினால் வேலை சரியாக இருக்கும். மளிகைக் கடைக்குப் போய் சாமான்கள் வாங்கி வரணும். கூடவே காத்திருந்து இட்லி தோசைக்கு மாவரைத்து வரணும். அந்த நேரத்திலும் விளையாட முடியாது. மாவு கொஞ்சம் குறைந்தால் அம்மாவிடம் வசவு வாங்கிக் கட்டணுமே.

ராத்திரி அந்திக்கடையில் அம்மாவுக்குத் துணையாக இருக்கணும். பஜாரில் பஸ்டாண்டுக்கு முன்னால் எட்டு மணிக்கெல்லாம் கடை போடணும். சுடச்சுட இட்லி தோசை கிடைக்கும். வடை மொச்சைக் கிழங்கு என்று வகைவகையாக அம்மாவும் அக்காவும் பண்டம் செய்வார்கள். பொடி சட்னி ருசிக்காகவே ரொம்ப ஆட்கள் வருவார்கள். மிளகாய் எள்ளு பருப்பு இப்படி பொடியில் பல ரகம் உண்டு. சட்னி வகையில் மல்லி தக்காளி வெங்காயம் புதினா இன்னும் என்னென்னமோ.

அந்திக்கடை வியாபாரம் குடும்பத்துக்கு ஏந்தலாக இருந்தது. கடை தொடர்ந்து ஓடுவதற்கு எங்கெங்கோ கவனித்துச் சரிகட்ட வேண்டியிருந்தது. யார் யாரோ வந்து ஓசியில் சாப்பிட்டுவிட்டுப் போவார்கள். அம்மா அக்கறையாகக் கவனித்துக் கொள்வாள்.

அவளே இலை விரித்து எல்லாம் பரி மாறணும். அம்மா இட்லி தோசை சுட்டுக் கொடுப்பாள். நேரம் கிடைக்கும்போது பொடியைக் குழைப்பதற்காக சிறுசிறு பாட்டில்களில் நல்லெண்ணெய் ஊற்றி வைக்கணும். அதோடு ராத்திரிச் சாப்பாட்டையும் முடித்துக் கொள்ளணும். சிலசமயம் லேசாக ஆடிக்கொண்டு பரிமாறு வான். ''அடே சுப்பு'' என்று அம்மா அதட்டுவாள்.

சாக்கடையை மூடியிருக்கும் சிமிண்டுப் பிளேட்டை விலக்கி உண்டு பண்ணிய வழியில் எச்சிலையைப் போட்டுக் கை கழுவணும். தண்ணீர் இல்லையென்றால் அவன் ஓடிப்போய் பம்பில் அடித்து வருவான். அது பெரிய வேலை.

திங்கள்கிழமை சந்தையென்பதால் கூட்டம் அதிகமிருக்கும். உட்கார நேரமிருக்காது. அம்மாவுக்கு இடுப்பு ஒடிந்துவிடும். நெருப்பு சூட்டில் கன்றிப் போன முகத்தைப் பார்க்கப் பாவமாக இருக்கும்.

ரெண்டாவது ஆட்டம் சினிமா முடியும் வரை கடையிருக்கும். அதுக்குப் பிறகு சாமான்களைக் கழுவி எடுத்துவைத்து வண்டியைத் தள்ளிக்கொண்டு போகணும். வீடுபோய்ச் சேருமுன் உறக்கம் சொக்கும். போகிற வழியிலும் விளையாட முடியாது. அப்படியும் வண்டி உருளுவதற்கேற்ப கால்பின்னி நடப்பான். அதையும் அம்மா கவனித்து விடுவாள்.

''ஏம்ல காலு ஒரு தரையில நிக்காதா...''

''நான் வண்டிதான் தள்ளுறென்...''

''தள்ளுற லச்சணத்தப் பாத்துட்டுத்தான வாறென்... நல்லாச் சாப்பிட்டயா...''

அவன் பலமாகத் தலையாட்டிவிட்டு வண்டியைத் தள்ளுவான். மேடான இடங்களில் அம்மா கை கொடுப்பாள். அவர்கள் போகும்வரை அக்கா முழித்திருப்பாள். அப்போதும் அவள் கை சும்மா இருக்காது. அன்றைக்குக் காலையில் கம்பெனியிலிருந்து கட்டை சுமந்து வரும்போது நடுரோட்டில் பசப்பசவென்று மாட்டுச்சாணி குமித்துக் கிடந்தது. கஷ்டப்பட்டுக் குனிந்து பார்க்கையில் காலில் ஒரு குறுகுறுப்பு. ஒரே மிதியில் ரெண்டாக வெட்டினால் சாணி துள்ளிக் குதித்துச் சிதறும் அழகே தனி. கிராமத்தில் அவனுக்கு சாணி வெட்டிச் சண்டீர் என்று பட்டப்பேர் உண்டு. அப்படி மிதித்து ரெம்ப நாளாயிற்று.

வலதுகால் தானாக எழும்பியது. நடுச் சாணியில் ஓங்கி மிதித்தான். உள்ளே ஆணி முங்கிக்கிடந்திருக்கிறது. பாதத்தில் வசமாகக் குத்திவிட்டது. வலிக்கிறுகிறுப்பில் நொண்டி நொண்டி வீட்டுக்குள் வந்தான்.

''இதும் தலையெழுத்தா சொன்னபடி கேக்கமாட்டங்கானே''

அம்மாவின் முந்தானை தினமும் ஈரமானது.

அனாவசியமாக ஆஸ்பத்திரிச் செலவு. அதைச் சரிகட்ட அக்காவுடன் அனேக நேரம் உட்கார்ந்து கட்டையடுக்க வேண்டியிருந்தது. காலில் கட்டவுக்கும் வரை அம்மா கட்டை சுமந்தாள். ஒருத்தருக்குச் சம்பளம் கொடுத்து அந்திக்கடை நடந்தது. அம்மா அவனுக்குச் செருப்பு வாங்கிக் கொடுத்தாள்.

ஒரு லீவு நாளன்று குமரன்கோயில் மலைப்பக்கம் போயிருந்த போது மாட்டுக்காரப் பையன்கள் சுத்தியல் வைத்து பெரிய பெரிய கோலியாகத் தட்டிக் கொண்டிருந்தார்கள். ஓங்கித் தட்டத் தட்ட கல்குழியில் கருங்கோலி எவ்வித் துள்ளி உருண்டையானது. அவ்வளவு பெரிய காய்களை மோதவிட்டால் எருமைச்சண்டை போலிருக்கும். விரல் வலித்தாலும் கவலையில்லை.

ரெண்டு கோலி இருந்தால் கூட்டாளி சேர்த்துக் கொண்டு கும்மாளம் போட்டு விளையாடலாம். தட்டிக் கொடுக்கச் சொல்லலாமென்றால் அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது. வீட்டில் வேலை காத்திருக்கும்.

ராத்திரி முழுக்க கனாவில் கோலி கோலியாக உருண்டது. கிராமங்களிலிருந்து பெரியவர்களும், சிறியவர்களும் பாறையளவு கோலிக்காய்களை டவுனுக்கு உருட்டிக் கொண்டு வருகிறார்கள். இரும்புத் தடியால் தெண்டித் தெண்டி உருட்டுகிறார்கள். நொடியான இடங்களை மம்பட்டியால் சரிப்படுத்திக் கொள்கிறார்கள். அடை கொடுப்பதற்கு வழியில் கற்களைக் காணவில்லை. எல்லாம் ரோட்டில் அமுங்கி உடைந்து முங்கிவிட்டது. பருத்திமார்க் கூடைகளை குப்புறக்கவுத்தி அடை கொள்கிறார்கள். வரவர அது இரும்புச்சட்டியாக மாறுகிறது. சொரசொரத்த ரோட்டுப் பாதை சமதளமாக விரிந்து வழுவழுத்த ரோடாகிறது. அதனால் சிரமமில்லாமல் உருட்டுகிறார்கள்.

ரோட்டுக்கு இருபுறமும் கரிசக்காடுகளை இரும்பு முள்வேலி வளைத்துப் போட்டிருக்கிறது. வேலிக்குள் வெள்ளைக் கட்டிடங் கள் முழிக்கின்றன. அதைச் சுற்றி என் னென்னமோ மரங்கள் செடிகள், புதுசு புதுசாகப் பூக்கள், சிரிப்பு சிந்தும் பருத்திப் பூவையும் ஆவரம்பூவையும் காணவில்லை.

சில நிலங்களில் அட்டைக்கம்பெனி விரட்டியடித்த கழிவுதான் களை முக்காடு போட்டுக்கொண்டு வெள்ளாமைப் பயிர்களும் செடிகளும் காற்றசைவில் அழுது புலம்புகின்றன. அமர்த்தி ஆறுதல் சொல்ல ஆளில்லை.

நெருங்க நெருங்க நிறைய நிலங்கள் கல்லறைத் தோட்டங்களாகத் தெரிகின்றன. எங்கு பார்த்தாலும் கல் முளைகள், குறுக்கும் நெடுக்குமாகச் சிந்திய செம்மண் பாதைகள், பெரும்பாதைகள் ரோட்டுடன் பின்னியி ருக்கின்றன.

இப்போது ரோட்டில் கோலிக்காய்களை வேகமாக உருட்டுகிறார்கள். அந்த வேகத் திற்கேற்ப ஆணும் பெண்ணும் ஓடி நடக்கிறார்கள்.

கோலிகள் உருளும் நறநறப்பு உறக்கத்திற்குத் தோதாக ஓயாமல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

குடும்பம் கிராமத்திலிருந்த காலமே தனி. அய்யா முக்குரோட்டில் டீக்கடை வைத்திருந்தார். அம்மா காட்டுவேலை செய்தாள். அக்கா வீட்டைக் கவனித்துக் கொண்டாள். அவன் பள்ளிக்கூடம் போனான்.

அப்போதெல்லாம் ராவும் பகலும் விளையாட்டுத்தான். நேரத்துக்கொண்ணு. திகட்டும் வரை ஓயாது.

வீட்டில் சகல விளையாட்டுப் பொருளும் இருக்கும். அம்மாவுடன் திருவண்ணாமலைக் கோயிலுக்கு போயிருந்த போது ஒரு பொட்டணம் தெல்லுக்காய் வாங்கி வந்தான். அதில் பாலாங்காய் பவளக்காய் போர்க்காய் கருப்புக்காய் எல்லாமே உண்டு. எச்சைத் தொட்டு குறிவைத்துத் தெறித்தால் என்னமாய் ஏறி அடிக்கும் தெரியுமா. காணாக் குறைக்கு பானையோட்டிலும் சோடா மூடியிலும் பலவிதமான தெல்லுக்காய் துணைக்குத் தயாராக இருக்கும்.

பம்பரத்தில் பத்து வகைக்குக் குறையாது. அத்தனைக்கும் தனித் தனிக்கயிறு. ஒவ் வொண்ணும் சுண்டிவிட்டால் அப்படி லொங்கும். அது போதாதென்று விளாம்பழப் பம்பரம் வேறு. கும்மென்று அதன் இரைச் சலே தனி.

அதுக்கடுத்து செதுக்கு முத்துக்கல் வரிசையாகப் படுத்திருக்கும். வழலை சாரை விருசு மங்கிணி என்று ஒண்ணொண்ணுக்கும் பேர் உண்டு. தரைக்குத்தக்கபடி எடுத்துத் தட்டிவிடணும். சர்சர் என்று பாய்ந்து புளிய முத்தை விரட்டியடிக்கும்.

அண்ணன் தம்பிகளைப் போல் பெரிசும் சிறிசுமாக கோலிக் காய்கள் பக்கத்தில் குமித்துக் கிடக்கும். எதை எடுத்து அடிக்கலாம் என்பது எதிராளியைப் பொறுத்தது.


பனங்கூத்து சோளத்தட்டை உடைந்த தோசைச்சட்டி சலிப்பு இரும்பு வளையம் இப்படி வண்டிகளும் உண்டு. ஊரைச் சுற்றிப் பார்க்கணுமென்றால்தான் வண்டி பூட்ட வேண்டியிருக்கும். அதுக்கு நிறையக் கூட்டாளிகள் சேரணும்.

எல்லாம் அய்யா கண்ணை மூடியதுடன் சரி. அத்தனை விளையாட்டும் மனசுக்குள் வற்றி வறண்டு வண்டலாகிவிட்டது. அவர் திடீரென்று கதையை முடித்துக்கொண்டார். கடுமையான காய்ச்சலில் மூணு நாள் முனங்கியவர் நாலாம்நாள் மூச்சையும் நிறுத்திக் கொண்டார். குடும்பம் திக்கித் திணறித் தவித்தது.

மூணுமாசம் கழித்து டவுனிலிருந்து வந்திருந்த மீனாட்சியத்தை அம்மாவுக்குத் தைரியம் சொன்னாள். குடும்பத்துடன் டவுனுக்கு வந்துவிடுமாறு யோசனையும் சொன்னாள். அவள் ரொம்ப நாளைக்கு முன் குடிபெயர்ந்து போனவள்.

அம்மா அழுது அழுது ஓய்ந்து அந்தப்படியே முடிவுசெய்தாள். ஊரை விட்டுக் கிளம்பும் போது சேக்காளிகளையும் விளையாட்டுகளையும் விட்டுப் பிரிய அவனுக்கு மனசே இல்லை. ரொம்ப வருத்தமாக இருந்தது. விளையாட்டுப் பொருட்களை சீதனம் கொடுத்துவிட்டு அம்மாவுக்குப் பின்னால் நடந்தான்.

மீனாட்சியத்தை பக்கத்து லைனில் வீடு பார்த்துக் கொடுத்தாள். அவன் மேலப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தான். முதலில் அம்மாவும் அக்காவும் தீப்பெட்டி வேலை செய்தார்கள். பிறகுதான் அந்திக்கடை ஏற்பாடு நடந்தது.

மூணுவருசத்துக்கு மேலாகிவிட்டது. அவன் டவுன்காரானாகிவிட்டான். பொங்கல் பூசைக்கு கிராமத்திற்குப் போனால் உண்டு. ரெண்டு நாள் சேக்காளிகளுடன் குளிக்கலாம் விளையாடலாம். தலைக்குமேல் வேலை கிடக்கிறதென்று அம்மா அடுத்தநாள் கிளம்பிவிடுவாள். மனசுக்குள் குதியாளம் போடும் விளையாட்டு அமுங்கியடங்க ரொம்ப நாளாகும்.

செவ்வாய்க் கிழமை ராத்திரி. இன்றைக்கு ரெண்டிலொண்ணு பார்த்துவிட வேண்டியதுதான். எத்தனை நாளைக்கு கோலிக் காய்களை கால் சட்டையை விட்டு மாற்றிக் கொண்டிருப்பது. உறங்கும்போது தப்பி விடாமல் பொத்திப் பொத்திக் காப்பாற்றுவது. அம்மா கொடுத்த காசில் மிச்சம் வைத்து கடைகடையாக ஏறி வாங்கியது. ரெண்டும் தக்கட்டிப்பழம்போல் கண்ணுக்குக் குளிர்ச்சியான நிறம்.

பஜாரில் கூட்டமில்லை. பஸ் ஸ்டாண்டிலும் குறைவுதான். செவ்வாய்க்கிழமையானதால் பிரயாணம் போகும் ஆட்கள் கம்மி.

அந்திக்கடையில் ரெண்டுபேர் மட்டுமே உட்கார்ந்திருந்தார்கள். அம்மா ஆவலுடன் அங்குமிங்கும் பார்த்தாள். நிறைய ஆட்கள் வரும் போது அவள் முகத்தில் சந்தோசக் களை அப்படி மினுங்கும். மாவைக் கலக்கி தோதுப்படுத்துவதும் இட்லிக் கொப்பரையைத் திறந்து வேக்காட்டைச் சரிபார்ப்பதும் தோசைக் கல்லில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி கச்சிதமாக இளுகுவதுமாக அவள் கைகள் பம்பரமாகச் சூழலும். முந்தானையை இடுப்பில் சொருக நேரமிருக்காது. அந்த அவசரத்திலும் துட்டுக் கணக்கில் கவனமாக இருப்பாள்.

அவன் அடிக்கடி ரோட்டுப்பக்கம் வந்து பஸ் போக்குவரத்தைக் கவனித்தான். கொஞ்சநேரம் கிடைத்தால் போதும். ஒருமுறை அம்மா பார்த்துவிட்டு அரட்டினாள்.

''ஏய் சுப்பு அங்கென்ன வேல.''

அவனுக்குச் சப்பென்று போயிற்று. கிட்ட வந்ததும் கடிந்து கொண்டாள்.

"கடையெங்க இருக்குது ஒன் காலு எங்க திரியிது. வேலையக் கவனி. பசிச்சா சாப்பிட்டுக்கோ. இட்லி வேணுமா தோச ஊத்தவா...''

''எனக்குப் பசிக்கலம்மா, பெறகு சாப்பிட்டுக்கிறென்...''

ரோட்டுக்கு அந்தப்புறம் லாட்டரிக் கடையில் சீட்டுக்கள் காற்றுக்கு விசிறிக் கொண்டிருந்தன. ராத்திரியிலும் சீட்டு வாங்க ஆளில்லையென்றால் திறந்து வைத்திருப்பானா, பலகாரக் கடைகளில் சேவும் சீனிமிட்டாயும் கோபுரங்கட்டி நின்றன. சீனி மிட்டாய்க் கோபுரங்கள் தகர்ந்து சரிந்துவிடாமல் சுற்றிலும் அப்பியிருந்த தேன்குளவிகள் பிரயாசைப்பட்டுத் தாங்கிக்கொண்டிருந்தன.

ஆட்டோக்காரர்களின் சகடால் சச்சரவுகள் இல்லை. ரெண்டு மூணு ஆட்டோக்கள் மட்டும் அருவமில்லாமல் நின்றிருந்தன. உள்ளே டிரைவர்கள் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். நல்ல வருமானமில்லை போலிருக்கிறது. இல்லையென்றால் நேரமிருக்கவே நாலு தோசையும் மொச்சையும் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குக் கிளம்பி விடுவார்கள்.

கடையில் இப்போது ஒருவர் காத்திருந்தார். அவருக்கு இலை போட்டு தண்ணீரும் வைத்துவிட்டான். எண்ணெயும் ரெடி.

அம்மா இட்லியை எடுக்கவும் தோசை போடவும் கொஞ்ச நேரமாகும். அதுக்குள் திரும்பிவிடலாம். அம்மாவை ஓரக்கண்ணால் கவனித்தப்படி மெல்ல ரோட்டுப் பக்கம் நழுவினான்.

பஸ்போக்குவரத்து அவ்வளவாக இல்லை. லாரிகள் மட்டும் விட்டுவிட்டு கூவிக் கொண்டு போனது. சுற்றுமுற்றும் பார்த்து விட்டுத் தயாரானான். அம்மாவையும் ஒருமுறை பார்த்துக் கொண்டான்.

ஒரு பஸ் வந்து நின்று புறப்பட்டது. உடனே ரோட்டோரம் வெளிச்சமான இடத்துக்கு ஓடி கால்சட்டைப் பைக்குள்ளிருந்து அவரசமாக கோலிக்காய்களை எடுத்து உருட்டினான். முந்திப் போனதைப் பிடித்து மற்றதைக் குறிவைத்து அடித்தான்.

''கடக்கோ.''

இப்போது ஒரு விரலுக்குச் சந்தோஷம் சொல்ல முடியாது. மற்ற மூணு விரலும் துடித்தன.

அடிபட்ட காய் நடுரோட்டுக்கு விரண் டோடியது. அதுக்கு இன்னொரு கொடுப்பு கொடுக்கு முன் ஒரு பஸ் வந்து மறைத்துக் கொண்டது.

''ஓடவா செய்ற... இரு வாறென்..''

அந்த பஸ் கடந்ததும் ரோட்டுக்கு ஓடி விரண்டு போன கா¨யை ஆவலாகத் தேடினான். நல்லவேளைக்கு அது பஸ்ஸின் மிதிக்குத் தப்பிவிட்டது. மேற்கே பார்த்தபடி காயை எடுத்துக் கொண்டு இந்தப் பக்கம் ஓடிவந்தான். கிழக்கேயிருந்து வேகமாக வந்த லாரிக்காரனுக்கு நிலைமை பிடிபடவில்லை. பையன் ரோட்டைத் தான் கடக்கிறானாக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டான். திரும்பி வருவான் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் பிரேக்கைப் பிடிக்காமல் ஓரேயடியாக மிதித்துவிட்டான்.

தோசையைப் புரட்டிப்போட்ட அம்மா ஏறிட்டுப் பார்த்துக் குரல் கொத்தாள்.

''அடேய் சுப்பு...''

கருப்பு ரோட்டில் அவனது உடல் முழுக்க எண்ணெயில் குழைத்த மிளகாய்ப் பொடியைப் போல் நசுங்கிப் போயிருந்தது. தலைமட்டும் காயப்படாமல் பெரிய கோலிக் காயாக தனித்துக் கிடந்தது.

*****

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

2 கருத்துகள்:

இளமுருகன் on April 19, 2010 at 2:50 AM said...

அனைவருக்குமே விளையாட்டு,விளையாடுவது ஆசையாக எண்ணமாக உள் உறைந்துதான் இருக்கும்.அற்புதமாக படம் பிடித்து எழுதி உள்ளார் பூமணி.சிறு வயது விளையாட்டெல்லாம் ஞாபகம் வரவழைத்த எழுத்து.முடிவு நெஞ்சை தைத்தது.

இளமுருகன்
நைஜீரியா.

kavignar ara on April 25, 2023 at 11:43 AM said...

ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பு

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்