ஞானக்கூத்தன்
1974ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு புத்தகக் காட்சி நடைபெற்றது. பல்கலைக்கழகத்தில் ஏதோ நிகழ்ச்சி. கொண்டாட்டம். அதை ஒட்டித்தான் புத்தகங்கள் விற்கப்பட்டன. 1974ஆம் ஆண்டு வாக்கில் பல இளைய படைப்பாளிகள் நவீன இலக்கியத் தொடர்பாக அறியப்பட்டிருந்தனர். பல இளைய படைப்பாளிகள் கல்லூரிக் கல்வி பெறும் வாய்ப்புப் பெற்றுப் பயன் அடைந்தவர்கள்தாம் என்றாலும் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை கல்லூரிப் பதவிகள் அவ்வளவாக அவர்களிடம் மதிப்புப் பெற்றதில்லை. பழைய தமிழ் இலக்கியக் கல்வியே இலக்கிய மதிப்பைத் தரவல்லது எனவும் நவீன இலக்கியம் தேவை அற்ற ஒன்று எனவும் ஒரு கருத்து கல்லூரிகளில் 70களில் நிலவிவந்தது. கவிதையில் குமரகுருபர ஸ்வாமிகள் செய்யாத புரட்சியில்லை என ஒரு பேராசிரியர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவரேதான் பின்னாளில் பாரதியாரின் பாடல்களுக்கு முறையான தொகுப்பை வெளியிட்டவர். பல்கலைக்கழக-கல்லூரித் தமிழாசிரியர்களுக்கு வெறுப்பூட்டும் ஒரு முயற்சியாக நவீன இலக்கியம் தோற்றம் தர, தமிழ்த் துறையை முற்றிலும் புறக்கணிக்கத் தகுந்த ஒரு துறையாக இளைய படைப்பாளிகள் எண்ணிக்கொண்டிருந்த சூழலில்தான் 1974இல் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் புத்தகக் காட்சியும் விற்பனையும் நடைபெற்றன. அங்கே விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்களில் நானும் ஒருவன். மற்ற நண்பர்களில் கசடதபற ஆசிரியர் ந. கிருஷ்ணமூர்த்தியும் க்ரியா ராமகிருஷ்ணனும் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக ராமகிருஷ்ணன் ஒரு புத்தகத்தை எடுத்துக் காண்பித்துப் பார்வையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தது என் நினைவில் உள்ளது. அன்று நகுலனை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. 'யாருக்கும்' என்றால் பொதுவான வாசகர்களுக்குத் தெரியாது. மற்றும் மு.வ., அகிலன் முதலான எழுத்தாளர்களின் அபிமானிகளுக்குத் தெரியாது. இலக்கிய உலகில் சிலருக்குத் தெரியும். ஆனால் பிடிக்காது.
நகுலன் என்றால் புரியாத கதைகளையும் புரியாத கவிதைகளையும் எழுதுகிறவர் என்று சிலர் சொல்லிக்கொண்டிருந்தனர். மதுரையில் 1980களில் நடந்த ஒரு கூட்டத்தில் ஒருவர் இக்கருத்தை என்னிடம் கூறி, அப்படி எழுதினால்தான் இலக்கியமாகுமா என்று கேட்டார். இலக்கிய வட்டம் மற்றும் எழுத்து பத்திரிகைகளில் அவர் வித்தியாசமான கவிதைகளை வெளியிட்டிருக்கிறார். ஆனால், நகுலன் எந்த ஒரு பத்திரிகையிலும் வாசகர்களின் கவனத்தைப் பெற முடிந்ததில்லை. இலக்கிய வட்டத்தில் அவர் கவிதைகளை வெளியிட்டதாகத்தான் நினைவு. ஆனால் உறுதியாகக் கூற முடியவில்லை. தன் வாழ்நாளில் பெரிதும் கவனிக்கப்பட்ட ஒரு படைப்பாளியாக நகுலன் இருந்ததில்லை. அதை அவர் அறிவார். ஆனால், அதற்காகக் கவலைப்பட்டதே இல்லை. இந்த நிலைமையைச் சரி செய்ய அவர் சில வழிகளை மேற்கொண்டார். அவை வெறுமனே வாய்பேசாத சில நண்பர்களைக் கொடுத்ததுதான் மிச்சம்.
1970களின் தொடக்கம் மூத்த தலைமுறை எழுத்தாளர்களின் இலக்கிய வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தின் தொடக்கமாகவும் அமைந்திருந்தது. மூத்த தலைமுறையினரில் ந. பிச்சமூர்த்தியும் க.நா. சுப்ரமணியமும் சி.சு. செல்லப்பாவும் தங்கள் வாழ்க்கைக்கு ஒரு நிமிர்ச்சி உண்டென்று கண்டுபிடித்தனர். புதுக்கவிதையின் முன்னோடி தான்தான் என்று 1976இல் ந. பிச்சமூர்த்தியால் சொல்லிக்கொள்ள முடிந்தது. விமரிசனத்தையும் புதுக்கவிதையையும் ஸ்தாபித்த பெருமை தங்களுக்கு உண்டென்பதை க.நா. சுப்ரமணியமும் சி.சு. செல்லப்பாவும் அறிந்திருந்தனர். ஆனால், இதற்குரிய கௌரவத்தை அவர்கள் அடைந்தார்களா? 'ஆம்' என்றும் 'இல்லை' என்றும் இதற்குப் பதில் அமைகிறது. இலக்கிய வெளியை இவர்களே உருவாக்கினர். அதற்கு முன்பு அப்படி ஒரு வெளி கிடையாது. இவர்களைத் தங்களின் முன்னோடிகளாக இனம் காணத் தொடங்கிய ஒரு தலைமுறை இவர்களுக்கு அடுத்து வந்ததே இவர்கள் பெற்ற கௌரவமாகக் குறிப்பிடவேண்டும். ஆனால் வேறு இடத்தில் இவர்கள் அறியப்படாதவர்களாகவே இருந்தனர். ந. பிச்சமூர்த்தியை ந. பிச்சமுத்து என்றே சிலர் குறிப்பிட்டதை நான் அறிவேன். பாரதிதாசன் வாழ்ந்த வீட்டில் வைத்திருக்கும் போட்டோ ஒன்றில் ந. பிச்சமூர்த்தி பாரதிதாசனோடும் மற்ற சில கவிஞர்களோடும் இருக்கிறார். ஆனால், அவர் பெயர் ந. பிச்சமுத்து என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
1930களிலிருந்தே தொடர்ந்து இலக்கியப் படைப்பாளிகளாக அறியப்பட்டிருந்த பலரைத் தேசியம் அல்லாத அரசியல் இயக்கங்கள் மறைக்கும் மனப்பான்மையை மேற்கொண்டதற்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு. மௌனி, புதுமைப்பித்தன், கு.ப.ரா., பிச்சமூத்தி இவர்கள் இலக்கியம் படைத்து முன்னோடிகளாகிவிட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு பேனா பிடித்தவர்கள்தாம் முன்னோடிகளென்று சிலர் சொல்ல முற்பட்டனர். சிறுகதை, நாவல், கவிதை, விமரிசனக் கட்டுரை என்ற ஒவ்வொரு வடிவத்துக்கும் புதிய தந்தைமார்களைத் தேடும் முயற்சிகளும் சிலரால் மேற்கொள்ளப்பட்டன. திராவிட இயக்கத்தின் எதேச்சாதிகார மனப்போக்குகளுக்கு மாறாகச் சுதந்திரமான இலக்கியப் போக்கு எதுவும் வளர்வதை இயக்க அனுதாபிகள் விரும்பியதில்லை. 'தமிழ் இலக்கியத்தின் பரந்துபட்ட ஜனநாயகப் போக்கு, தம் இலக்கிய மேலாண்மையை நிறுவ முயன்ற இலக்கிய சட்டாம்பிள்ளைகளுக்கு உவப்பானதாக இல்லை. சிறுபத்திரிகைகள் என்ற பண்பாட்டு வடிவத்தின் தோற்றம் இதன் வெளிப்பாடே. திராவிட இயக்க இலக்கிய முறைகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டன. தமக்குச் சாதகமான வகையில் இலக்கியத் தன்மை, கலை நுட்பம், அழகியல் முதலானவை வரையறுக்கப் பட்டன. 'மணிக்கொடி' 'மௌனி' என்று மாயைகளும் புனைவுகளும் உருவாக்கப்பட்டன'* என்று ஒரு கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். புதுக் கவிஞர்களில் இருநூறு சொற்களுக்கு மேல் பயன்படுத்திய கவிஞர்கள் உண்டா என்று அக்கட்டுரையாளரே ஒரு கேள்வியையும் எழுப்பி உதவியிருக்கிறார். புதுக்கவிஞர்களில் ந.பி., சி. மணி, க.நா.சு. போன்றவர்களின் புலமையை இக்கட்டுரையாளர் கண்டுகொள்ளவில்லை. இங்கே நகுலன் ஆங்கிலத்தில் மட்டுமல்ல, தமிழிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பதைக் கட்டுரையாளரின் கூற்று மறைத்துவிடுகிறது.
நகுலன் வெளியிடத் தொடங்கியபோது மணிக்கொடியின் காலம் முடிந்துவிட்டது. மணிக்கொடிக் காலம் எனவும் இன்னின்னார் மணிக்கொடியில் எழுதிய எழுத் தாளர்கள் எனவும் பேசப்பட்ட காலம் தொடங்கிவிட்டது. க.நா.சு. மணிக்கொடி எழுத்தாளர் அல்லர் என சி.சு. செல்லப்பா சொல்லத் தவறியதில்லை. ஆனால், க.நா.சு. மணிக்கொடியில் வெளியிட்டவர் தான். மணிக்கொடியை சிறுகதைப் பத்திரிகையாக நடத்திய பி.எஸ். ராமையாவே முதலில் க.நா.சுவை மணிக்கொடி எழுத்தாளர் இல்லை என்று சொன்னார். பின்னர் 'மணிக்கொடி காலம்' என்ற தொடர்கட்டுரை எழுதத் தொடங்கிய பிறகு க.நா.சு.வும் மணிக்கொடி எழுத்தாளர்தான் என்பதைக் கண்டுபிடித்தார். க.நா.சு.வை மணிக்கொடி எழுத்தாளர் இல்லை என்று சொல்லிவந்த சி.சு. செல்லப்பா, க.நா.சு. மணிக்கொடி எழுத்தாளர் என்ற முத்திரை குத்துவதற்குத் தகுதி யானவர் இல்லையென்று குறிப்பிடத் தொடங்கினார். ஆக, வெவ்வேறு விதமான அங்கீகாரத்துக்கு வெவ்வேறு விதமான அளவுகோல் வைத்து யாரையாவது கதவுக்கு வெளியே நிறுத்திவிடும் வழக்கம் எல்லாத் துறைகளிலும் இருந்துவந்தது. மணிக்கொடியின் பங்கை எடுத்துக்காட்டி அதில் வெளியிட்ட புதுமைப்பித்தன், மௌனி மற்றும் கு.ப.ரா. இவர்களை வாசகர் மனதில் நிலை நாட்டிய க.நா.சுவின் பணியே அதிகார மையங்களால் புறக்கணிக்கப்பட்டதென்றால் நகுலன் எம்மாத்திரம்? மணிக்கொடி எழுத்தாளர், எழுத்துவின் எழுத்தாளர் என்ற முத்திரை எல்லாம் நகுலனுக்குக் கிடையாது. நகுலன் தனியானவர். அந்தத் தனிமை அவருக்குப் பிறப்பிலிருந்தே வாய்த்த ஒரு குணாம்சம் போலும்.
நகுலனின் கவிதைகள் சில என்னைக் கவர்ந்திருந்தாலும் அவரது கவிதைகள் எல்லாமும் படிக்கக் கிடைக்கவில்லை. அவரிடம் அவரது கவிதைகளைக் குறித்துப் பேசியது கிடையாது. ஆனால் அவற்றைப் பற்றி என் கருத்து உயர்வானதுதான் என்று அவருக்குத் தெரியும். என்னைப் பார்க்க நகுலன் கசடதபற ஆசிரியர் ந. கிருஷ்ணமூர்த்தியுடன் வந்திருந்தார். நான் ஜெரார்ட்மான்லி ஹாப்கின்ஸ் என்பவருடைய கவிதைகளைப் படித்துக்கொண்டிருந்தேன். நகுலன் நான் ஹாப்கின் ஸைப் படித்தது குறித்து மகிழ்ச்சி அடைந்தார். அவரது குரல் மிகவும் மெல்லியதாக இருந்தது. பேசியதைவிட அதிகமாகச் சிரித்தார். பல சந்தர்ப்பங்களில் அவர் சிரிப்புக்கு அவசியமே ஏற்பட்டிருக்காது. சிரிக்காமலும் பேசுவார். அப்படிப் பேசும்போது அவருடைய முகபாவம் படு சீரியஸாக இருக்கும். தனக்குப் பிடிக்காத கருத்தை மறுப்பதற்குத் தயங்குவார். தன்னைவிட மற்றவர்கள் புத்திசாலியாக இருக்கக்கூடும் என்றே நம்புவார். அதிக நேரம் பேச நேர்ந்தால் சுந்தர ராமசாமியைப் பற்றியும் கிருஷ்ணன் நம்பியைப் பற்றியும் இரண்டு முறையாவது குறிப்பிடுவார். சுந்தர ராமசாமியை மறுப்பதுபோல் பேச்சைத் தொடங்கி இறுதியில் சுந்தர ராமசாமி பெரிய படைப்பாளிக்குரிய லட்சணங்கள் உள்ளவர் என்று முடிப்பார்.
நகுலனுக்கு ஷண்முக சுப்பையாதான் பிடித்த கவிஞர். நகுலனைச் சந்திக்கும் முன்பே நான் ஷண்முக சுப்பையாவைச் சந்தித்தேன் என்று நினைக்கிறேன். நகுலனின் நட்பு, க.நா.சுவின் விமரிசன ஆதரவு இரண்டும் ஷண்முக சுப்பையாவைத் தன்னம்பிக்கை உடையவராக ஆக்கியிருந்தன. ஆனால் அவரது கவிதைகளில் எனக்குச் சிறிதளவும் ஈடுபாடு ஏற்படவில்லை. இதை நகுலன் அறிவார். அவருக்கு என்மீது வருத்தம். ஆனால், நகுலனும் க.நா.சுவும் குமாரன் ஆசான் பரிசுக்கு ஷண்முக சுப்பையாவைப் பரிந்துரை செய்ததுண்டு. சுப்பையாவுக்குக் கிடைத்ததோ இல்லையோ தெரியாது. பிற்பாடு சுந்தர ராமசாமியும் சி. மணியும் இந்தப் பரிசைப் பெற்றார்கள். நகுலன் இந்தப் பரிசைப் பெற்றிருந்தார். நகுலனை அவர் வீட்டில் சந்தித்தபோது ஆசான் விருதைக் குறித்துப் பெருமையாகப் பேசிக்கொண்டார். என்ன காரணமோ தெரியவில்லை, தனக்குக் கொடுக்கப்பட்ட ஆசான் பரிசுதான் அசலானது என்று சொல்லிச் சத்தமில்லாமல் சிரித்தார்.
நகுலனை எனக்குத் தெரிய வந்தபோது அவர் 50 வயதைக் கடந்திருந்தார். இலக்கிய உலகில் தன் நிலைமை என்ன என்று அவர் அக்கறை காட்டத்தொடங்கினார். என்று நம்புகிறேன். தனக்கு வாசகர்கள் உண்டா என்று ஆராயத் தொடங்கினார். நான், ஆத்மா நாம், ஆர். ராஜகோபாலன், எஸ். வைத்யநாதன், ஆனந்த், தேவதச்சன் பிறகு அழகியசிங்கர் போன்றோர் அவரிடம் அக்கறை உள்ளவர்கள் என்பதை அவர் தெரிந்துகொண்டது அவருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும். ஆனால், என்னை நீக்கி மற்றவர்களை இணைத்து ஒரு வட்டத்தை அவர் கற்பித்துக்கொள்ளத் தொடங்கினார். சென்னைக்கு வந்தால் மற்ற யாருக்காவது விவரம் தெரிவிப்பார். தனக்குப் பிடித்த கவிஞர்களில், இவர்களில் ஒருவரைக் குறிப்பிடுவார். தன் கவிதையின் செல்வாக்கு மற்றவர் கவிதையில் இருப்பதாகக் காணும் படைப்பாளியின் வழக்கத்துக்கு மாறாக மற்றவர் கவிதைகளின் சாயல் தனது கவிதையில் இருப்பதாகக் கூறிக்கொண்டார். இப்படிக் கூறியதால் சம்பந்தப்பட்ட கவிஞர்களை மகிழ்விக்க முயன்றார் என்றே சொல்ல வேண்டும். ஆனால், நகுலன் கவிதையில் யாருடைய சாயலும் கிடையாது என்பதுதான் உண்மை. நகுலன் அப்படிக் கூறியது தனக்கு நெருக்கமான வாசகர்களை உருவாக்கிக்கொள்ளத்தான். இதை நான் தவறாகக் குறிப்பிட விரும்பவில்லை. நகுலன் வாய் திறந்து சொல்லாததை உரத்துச் சொன்னவர்கள் உண்டு.
நகுலனுக்குக் கவலை இருந்தது. அந்தக் கவலை தனது படைப்புகள் காலத்தை வெல்லுமா என்பது பற்றி அல்ல. அவை வாசகன் மனதில் எப்படிப்பட்ட சலனத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அறியத்தான் அவர் விரும்பினார். நன்றாகப் படித்து விமரிசித்துச் சொல்லப்படும் கருத்துகளைவிட எடுத்த எடுப்பிலேயே என்ன சொல்லப்படுகிறதோ அதைத்தான் அவர் விரும்பிக்கேட்டார். ஒரு கதை, கவிதை அனுப்பினால் அது கிடைக்கப் பெற்றதும் அவருக்குப் பதில் எழுதிவிட வேண்டும். அது பிடித்திருந்ததா இல்லையா என்பதை யும் தெரிவித்துவிட வேண்டும். ஒரு நாள் தாமதத்தைக் கூட அவரால் பொறுத்துக்கொள்ள முடியாது. அவரே சில சமயம் தன்முகவரியிட்ட அஞ்சல் அட்டையை அனுப்பிவிடுவார் அல்லது அவர் படைப்பு கிடைத்த மறுநாளே ஓர் அஞ்சல் அட்டை வந்துவிடும். அவருடைய கடிதத் தொடர்பின் கீழே அவர் மனதின் தீவிரமான ஜுரம் வெளிப்படும். ஆனால் நேரில் அது குறித்துப் பேச மாட்டார். அவருடைய புத்தகம் ஒன்றை 'ழ' சார்பில் வெளியிட்டோ ம். அதில் ஒரு பிரதிகூட விற்கவில்லை. அதுகுறித்து அவருக்கு வருத்தம். புத்தகம் விற்கவில்லை என்ற தகவலைச் சொல்லவில்லை என்பதற்காக வருத்தம். தனது சொந்தச் செலவிலேயே நகுலன் தனது புத்தகங்களை வெளியிட்டார். எனக்குத் தெரிந்து அவரது கோட்ஸ்டாண்ட் கவிதைகள் பல பிரதிகள்விற்றன. அதற்கு நான் முன்னுரை எழுதியது ஒரு காரணமல்ல. அவருக்குப் புத்தகங்கள் வெளியிடுவதில் ஊக்கம் குறையத் தொடங்கியது. 'இடைக்காலத்தில் என் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பலவித அனுபவங்களால் நான் மேலும் மேலும் தனிமையில் ஈடுபட வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது' என்று நகுலன் எழுதியிருக்கிறார். சதா சர்வ காலமும் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் படுத்திருக்கும் ஒரு மனிதனாக/சிந்தனையாளனாகத் தன்னை அவர் தன் மனதில் வடிக்கத் தொடங்கினார் என்று நம்புகிறேன். 'எனக்கு வேலையிலிருந்து ஓய்வு பெற இன்றும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. ஓய்வுப் பெற்ற பிறகு என் சொந்தச் செலவில் புஸ்தகங்களைப் பிரசுரிக்க முடியுமா என்பது எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. அந்த நிலையில் இந்த இலக்கியச் சூதாட்டத்தில் என் கடைசிப் பைசாவையும் வைத்து விளையாட முற்பட்ட துணிவே இந்த 'ஐந்து', என ஐந்து கவிதைத் தொகுப்பில் நகுலன் எழுதியிருக்கிறார். உட்கார்ந்த இடத்திலேயே உடைமைகள் எல்லாவற்றையும் இழக்கச் செய்யும் சூதாட்டத்தோடு புத்தக வெளியீட்டை நகுலன் ஒப்பிட்டிருப்பது கவனிக்கத் தகுந்தது. தொடக்கத்தில் நான் குறிப்பிட்டதுபோல ஒரு படைப் பாளியைத் தள்ளிவிட, வாசகர் கவனத்துக்கு வராமல் செய்துவிட வெளியீட்டு அரசியல் பெரிதும் உதவுகிறது. 'அவருக்குத் தரமுடியாதே. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது புத்தகம் ஒன்றும் வரவில்லையே' என்று சொல்லிவிடலாம்! 'அவர் காணாமல் போய்விட்டார்' என்று சொல்லலாம். சொல்லியிருக்கிறார்கள். அரசியல் முதலாளித்துவம்போலவே பத்திரிகை முதலாளித்துவம் கொடுமையானது என்பதை உணர்ந்தவர்கள்தாம் சிறு பத்திரிகை என்ற சிந்தனையைக் கண்ணீர்விட்டு வளர்த்தவர்கள். நகுலன் சொன்ன சூதாட்டத்தில் தோற்றுப்போனவர்கள் ஏராளம். வென்றவர்கள் இல்லை. பத்திரிகை முதலாளித்துவத்தை எதிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களைக்கூடத் தூற்றியவர்கள் உண்டு. நகுலன் தான் தோற்றுக்கொண்டு வரும் ஓர் எழுத்தாளன் என்று 1970இல் நினைக்கத் தொடங்கினார் என்று நம்புகிறேன்.
நகுலன் தன் தோல்வி உணர்வுக்கு ஒருவகையில் தனது தனிமைதான் காரணம் என்று நம்பினார். அவர் உணர்ந்த தனிமைப் பல நிறங்களை உடையது. சில சமயம் அது முதன்மையினால் நிகழ்வது. சில சமயம் பிரதி ஏகத்தன்மையால் நிகழ்வது. இந்நிறங்களும் வேறு நிறங்களின் சாயையைப் பெறுவதுண்டு.
'இன்று என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான
கட்டத்தில் நான் இருக்கிறேன். பெரிய
அண்ணா ஒரு மாதிரி என்றால், உடன்
பிறந்தவன் அவனினும் வேறு என்றால்
அவனும் சில அடிப்படைகளில் அவனைப்
போலத்தான். இவர்களில் கடைசியானவன்
நான். இவ்வளவு பெரிய இராஜ்ஜியத்தில்
நான் தனிப்பட்டவனாக இருந்திருக்கிறேன்.'
'வீடணன் தனிமொழி' என்ற கவிதையில் விபீஷணன் சொல்வதாக நகுலன் எழுதியிருக்கிறார். இந்தப் பகுதியின் நடையைத் தற்காலத் தன்மை உடையதாக அமைத்திருக்கிறார். விபீஷணன் இராவணனைப் 'பெரிய அண்ணா' என்று குறிப்பிடும்போது இராவண-விபீஷணர்கள் ஒரு குடும்பத்தினர் என்பதை நமது மறதியிலிருந்து அது வெளிக் கொண்டுவருகிறது. 'ஒரு கும்பல் அடிப்படையில் ஒரு கொள்கை உருவாகிறது என்பதை என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை' என்ற விபீஷணனின் கூற்று காலத்தைக் கடந்து நீந்துகிறது.
நகுலன் தன்னைத் தோற்றுப்போன கலைஞனாக உருவகித்துக்கொண்டது கலைஞர்களில் அப்படியும் ஒரு வகை உண்டென்று அவர் கருதியதால்தான். வடக்கு அல்லது வடகிழக்கு இந்தியாவில் எங்கோ ஓர் அரங்கத்தில் அவர் படித்த கவிதை வரவேற்பைப் பெறவில்லை. இந்தச் செய்தியை அவர் என்னிடம் சொன்னபோது அதில் எந்த வருத்தமும் தொனிக்கவில்லை. 'நான் ஒரு ஃபெயில்ட் ஆர்ட்டிஸ்ட்' என்று அவரே ஒருமுறை சொல்லிக்கொண்டபோதும் அதைக் கேட்டுக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து எந்த அனுதாபத்தையும் அவர் எதிர்பார்க்கவில்லை.
அவர் அப்படிச் சொன்ன கூட்டத்தில் நான் இருந்தேன். திருவனந்தபுரத்தில் நடந்த தென்னிந்திய கவிசம்மேளனத்தில்தான் அவர் அப்படிச் சொன்னார். நிகழ்ச்சிக்கு முதல் நாள் நகுலனை அவர் வீட்டில் சந்திக்கப் போயிருந்தேன். 1980களில் ஒருமுறை அவருடைய வீட்டுக்குப் போயிருக்கிறேன். ஓட்டலில் தங்காமல் அவரைத் தவிர வேறு யாரும் இல்லாத அவர் வீட்டு வராந்தாவில் தங்கினேன். இரவு நீண்ட நேரம் பேசிவிட்டுப் பின் தூங்கப் போனார். இந்த முறை நான் சந்திக்கப் போயிருந்தபோது அவர் பெரிதும் மாறிவிட்டிருந்தார். எழுத்தாளர்களைப் பற்றி வம்புதும்பு பேசும் இயல்பு நகுலனுக்கு உண்டு. அது அப்படியே இருந்தாலும் இடையிடையே நீண்ட நேரம் மௌனமாகிவிட்டார். என்னை அவர் உடனே தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு நான்தான் மாறிவிட்டேனா அல்லது அவர் கண்டுகொள்ளாமல் இருக்க முயல்கிறாரா என்று தெரியவில்லை. அவருக்கு என்மீது மனஸ்தாபம் ஏற் படும்படி யாரோ ஏதோ சொல்லிவிட்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றியது. ஆனால், சிறிது நேரத்தில் சகஜமாகிவிட்டார். மறுநாள் நிகழ்ச்சிக்கு அவர் வந்தாக வேண்டும் என்று வலியுறுத்தினேன். அப்படி ஒரு நிகழ்ச்சி இருப்பதை அவர் நினைவில் கொள்ளவேயில்லை. மறுநாள் அவரே நிகழ்ச்சிக்கு வந்தார்.
அந்த அமர்வுக்கு நான்தான் தலைவர். நகுலனைச் சம்பிரதாயமாக அறிமுகம்செய்து அவரைப் பேச அழைத்தேன். நகுலன் என்னைப் பார்த்துக் கேட்டார் தமிழில்: 'இவள்ளாம் யார்? ஏன் வந்திருக்கா?' அரங்கில் இருந்தவர்களைப் பார்ந்து 'இவாள்ளாம் யார்' என்று அவர் கேட்டதும் அதிர்ந்துபோனேன். அரங்கு அமைதியாக இருந்தது - இந்த வயதில் இது இயல்பு என்பது போல. நான் அவருக்கு விளக்கிச் சொன்னேன். 'நான் தமிழில்தான் பேசுவேன். தலைவர் என்ற முறை யில் நீங்கள் அனுமதிக்க வேண்டும்' என்றார் நகுலன். நான் இசைந்தேன். அது தென்னிந்தியக் கவிஞர்களின் அரங்கு என்பதால் ஆங்கிலத்தில் நிகழ்ச்சி நடந்தது. நகுலன் தமிழிலேயே பேச விரும்புவதால் அவர் தமிழில் பேசி ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் படிப்பார் என்று நான் அறிவித்தேன். அவர் தமிழிலேயே பேசட்டும் என்று அரங்கில் பலர் சொன்னார்கள். ஒலிபெருக்கிக்கு முன் வந்து நின்ற நகுலன், 'ஐ ஆம் எ ஃபெயில்ட் ஆர்ட்டிஸ்ட்' என்று ஆங்கிலத்தில் சொன்னார். அரங்கம் அதை ஒரு தமாஷாக எடுத்துக்கொண்டதுபோல் சிரிப்பில் ஆழ்ந்தது. அரங்கில் இருந்த தென்னிந்தியப் படைப்பாளிகள் பலரும் தோற்றுப் போய்விட்டதாக நம்பப்படும் படைப்பாளிகளே சிறந்தவர்களாக இருப்பார்கள் என்ற கருத்துடையவர்களாகத் தெரிந்தனர். இப்படிப்பட்ட கருத்துடையவர்களை வேறு அரங்கிலும் நான் பார்த்திருக்கிறேன். திருவனந்தபுரத்து அரங்கம் நகுலனை மதித்தது. நகுலன் தன் கவிதைகளைப் படிக்கச் சில நிமிடங்களே எடுத்துக்கொண்டார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு நகுலனை நான் சந்திக்கவில்லை. அவருக்கு வயது முதிர்ந்துவந்ததும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதும் அங்கலாய்ப்பைத் தந்தன. அவரது கவிதைகள் பலவற்றை நான் சந்தர்ப்பம் வாய்த்தபோதெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அவரது வாக்கு மூலம் சிறந்த நாவல் என்றும் சாகித்திய அகடமியைச் சார்ந்த சிலரிடம் அது இந்திய மொழிகளில் வெளிவர வேண்டும் எனவும் நான் சொன்னதுண்டு - அகடமிக்குக் காது கொஞ்சம் மந்தம் என்றாலும்.
'மழை: மரம்: காற்று' என்ற கவிதையில்
'சவத்தைத் தேய்க்கும்
சோப்பை எனக்குக் கொடுத்துவிட்டும்
போய்விட்டான்.'
என்று நகுலன் எழுதியிருக்கிறார். நகுலனைப் பற்றி ஒரு பெரிய பத்திரிகையில் ஓர் எழுத்தாளர் ரொம்பச் சோகம் தொனிக்க எழுதியிருந்தார். அதைப் படித்த ஒரு வாசகி - வெளிநாட்டில் வாழ்பவர் - நகுலன் இறந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு என்னிடம் விசாரித்தார். நகுலன் நன்றாகத்தான் இருக்கிறார் என்றேன். இது நடந்து மூன்றாண்டுகள் இருக்கும். நகுலனிடம் இதைச் சொல்லியிருந்தால் என்ன சொல்லியிருப்பார் தெரியுமா? 'இப்போதாவது நான் இறந்துபோய்விட்டதை நம்புகிறார்களே' என்றிருப்பார். அந்த மனப்பண்பு அவரிடம் இருந்தது.
நகுலன் ஓர் அத்வைதி - ந. பிச்சமூர்த்தி, க.நா. சுப்ரமணியம், மௌனி இவர்களைப் போல. ந.பி., க.நா.சு., மௌனி, ஆத்மாநாம், சம்பத், சுப்ரமண்ய ராஜு, காசியபன், கு. அழகிரிசாமி, எம்.எஸ். ராமசாமி, சுந்தர ராமசாமி இப்படிப் பலரை நான் இழந்துவிட்டேன். ஆனால், எவ்வளவு ஆழமான நினைவுகளை அவர்கள் என்னிடம் விட்டுச் சென்றிருக்கிறார்கள்! இவர்களைப் பார்த்தேன், பேசினேன் என்பதையே ஒரு வாசகன் என்ற முறையில் நம்ப முடியாத ஒரு பேறாகக் கருதுகிறேன். ஓர் உணர்வு அலைமோதுகிறது:
'அந்தப் பெரிய மீனைப் பிடிக்க
நடுக்கடலில் சாண்டியாகோ
கரையிலிருந்து தொலை தூரம் சென்ற
சாண்டியா கோவின் நினைவு எனக்கு வந்தது.'
'நகுலன்' - மழை: மரம்: காற்று
*******
* அந்தக் காலத்தில் காப்பி இல்லை முதலான ஆய்வுக் கட்டுரைகள், ஆ.இரா. வேங்கடாசலபதி,
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
1 கருத்துகள்:
It is useful to know Sri.Nagulan more through your essay on him.Some men are not looked at in their own perspectives when they live; normally understood in the conventional context.Time changes and human mind evolves accordingly and when they are being understood, if not completely at least a part of their entity and creations , they are gone already from the time frame they were born in.
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.