Apr 5, 2010

பெருவழி-பெருமாள்முருகன்

பெருமாள்முருகன்

பூபதி இரவு வெகுநேரம் கழித்துத் தன் அறைக்கு வந்து கதவைத் திறந்தபோது, மறுநாள் ஞாயிற்றுக் கிழமை என்பது துலங்கிற்று. விரித்தபடி கிடந்த பாயில் தடாரென்று விழுந்தான். விடிவிளக்கு வெளிச்சத்தில் தென்பட்ட அறை அவனுக்குச் சந்தோசம் கொடுத்தது. மண்ணெண்ணெய் ஸ்டவ்வும் பாத்திரங்களும் ஒரு பகுதியில் பரவிக் கிடந்தன. பாத்திரங்களிலிருந்து கமழ்ந்த புளித்தவாடை அறை முழுக்க வீசிக்கொண்டிருந்தது. அழுக்குத் துணிகளும் புத்தகங்களும் இறைந்திருந்தன. கடந்த ஒருவார காலமும் எத்தனை நாற்றம் மிக்கதாயிருந்தது, அது உற்பத்தி செய்த அழுக்குகள் எவ்வளவு என்பதற்கெல்லாம் தன் அறையே சாட்சியாக இருப்பதாக உணர்ந்தான். ஒவ்வொரு நாளும் திருத்தமாகக் கிளம்பிப் பகல் முடிவில் அவன் திரட்டிவரும் கசப்புகள் அறையெங்கும் வீசிக்கொண்டேயிருக்கின்றன. அவற்றை எப்படித் தவிர்க்க முடியும்? அவன் படுத்துக்கிடக்கும் பாயின் அடியில் சேகரமாகியிருக்கும் மண் துகள்கள் அவன் இந்த வாரம் முழுக்க நடந்து தொலைத்த தூரத்தின் அளவு.

perumal_murugan நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. ஆனால் அம்மா வரமாட்டாள். பகலெல்லாம் தூங்கலாம். ஒழுகும் கோட்டு வாயின் நசநசப்போடும் முட்டும் சிறுநீரை அடக்கிக்கொண்டும் மாலை வரைக்கும் தூங்கலாம். எப்போதாவது தோன்றினால் அறை சேமித்து வைத்திருக்கும் வாரப் புழுக்கத்தைக் கணக்கெடுக்கலாம். அறையின் முன் நின்று கையை அசைத்தால் தேநீரும் சிகரெட்டும் கொண்டுவரும் டீக்கடைப் பையனின் கையில் பத்து ரூபாயைக் கொடுத்தால் போதும். முன்னிரவொன்றில் வந்து அறையை வரும்வாரத்திற்குத் தயார்ப்படுத்திவிடுவான். ஞாயிற்றுக்கிழமையைப் பார்த்து இனிப் பயப்படத் தேவையில்லை.

வாரம் முழுக்க உறைந்து கிடக்கும் அறையின் மௌனம், அந்த ஒரு நாளில் படீரென வெடித்துத் திறந்துகொள்ளும். அம்மாவின் இடைவிடாத சொற்கள் அறையை நிரப்பி எப்போது திங்கள் விடியும் என்று எதிர்பார்க்க வைத்துவிடும். விடிந்தும் விடியாததுமாக அறையைவிட்டு வெளியேறுவான். தினமும் எட்டு மணிக்கு மேல் எழுந்து மாடியிலிருந்து கைகாட்டுபவன், திங்கள்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கே, பால் காய்ந்துகொண்டிருக்கும்போதே டீ கேட்டு வந்து நிற்கும் மர்மத்தை அந்தக் கடைப் பையன் எத்தனையோ முறை கேட்டும் தெரிந்துகொள்ள முடிந்ததில்லை. இதழ் திறந்த வெற்றுப் புன்னகைதான் அவன் பதில்.

அம்மாவுக்குத் தெரியாமல்தான் பல மாதங்கள் அந்தச் சிறுநகரத்தின் குறுந்தெருக்களுக்குள் அவன் ஒளிந்து வாழ்ந்தான். ஊர்க்காரர்கள் யாரையாவது காணும்போது அவர்கள் மூலமாக அம்மாவுக்குக் கையிலிருக்கும் தொகையைக் கொடுத்தனுப்புவான். அம்மாவின் முகம் லேசாக மங்கிக்கொண்டிருந்த நாள்களில், ஞாயிற்றுக்கிழமை ஒன்றின் விடிகாலைப் பொழுதில் அறைக்கு முன்னால் அம்மா வந்து நின்றாள். அந்த அறையை அவளுக்கு யார் காட்டினார்கள், எப்படி முகவரி கிடைத்தது, ஞாயிற்றுக் கிழமைதான் அவனுக்கு விடுமுறை தினம் என்பது எப்படித் தெரிந்தது என்பதொன்றும் புரியவில்லை. அம்மாவிடம் லேசாகத் தூண்டில் போட்டுப் பார்த்தான். பதில் சொல்வதற்கான கேள்வி அதுவல்ல என்பதாகப் பேச்சை எங்கோ திசைமாற்றிவிட்டாள். அறை இருந்த கோலத்தில் அம்மாவை எவ்விதம் உள்ளே வரவேற்பது என்று தயங்கினான். அவனுடைய வழக்கம் அறிந்தவள்போல் 'நீ படுத்துக்கோ' என்றாள் அம்மா. அவள் முகம் சரியாகப் பதியாத தூக்கச் சடைவில், போய்ப் படுத்துக்கொண்டான்.

வெகுநேரம் கழித்து அவன் விழித்தபோது அறை மாறி வந்துவிட்டதாக உணர்ந்தான். சில மணி நேரங்களில் அவன் அறை மாயமாக மாறியிருந்தது. இறைந்துகிடந்த அழுக்குத் துணிகளைக் காணவில்லை. பாத்திரங்கள் துலங்கின. அறைக்குள் இதுவரைக்கும் நுகராத ஏதோ ஒரு குழம்பின் மணம் பரவியிருந்தது. விழித்ததும் சுவரின் மேலே நேராகத் தென்படும் பெரிய சிலந்தியின் பின்புற முட்டை அன்றைக்குத் தெரியவில்லை. அவனும் அவன் பாயும் தவிர மற்றெல்லாம் அம்மாவின் கைக்குப் போய் மாறியிருந்தன. அம்மாக்கள் மாயக்காரிகள், அவர்களிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டே வெளியே வந்தான். கண்கூச்சம் தெளிந்து பார்க்கையில் மாடிப்படியில் நின்று கொண்டு கீழ்வீட்டுப் பெண்ணிடம் அம்மா சுவாரஸ்யமாகப் பேசியபடியிருந்தாள். அந்தப் பெண்ணிடம் அவன் இதுவரைக்கும் ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை. அவள் இரவில் கண்ணில் பட்டதேயில்லை. பகலில் அவன் வெளியேறும் நேரங்களில் சில சமயம் நிழல்போல அவள் நகர்வதைக் கண்டிருக்கிறான். வந்த சில மணி நேரங்களில் அன்னியோன்யமாகச் சிரித்துப் பேசுமளவு எப்படி நெருக்கமாயிற்று? அம்மாவின் திறனில் பாதியளவு தனக்கு இருந்தால்போதும், தொழிலில் பெரும் வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்தான்.

அம்மா பரிமாறியபோது எல்லாம் ருசியாக இருந்தன. அவள் பேச்சுத்தான் ருசிக்கவில்லை. சாயம்போன சேலை முந்தானையால் விசிறியபடி அவள் பேச ஆரம்பித்தபோது, கஷ்டங்களைச் சொல்லிப் புலம்பிப் பெரிய தொகையாக ஏதாவது கேட்பாள் என்று நினைத்தான். பின் எதற்காக இத்தனை சிரமப்பட்டு ஆளைத் தேடிக் கண்டு பிடித்து வர வேண்டும்? ஆனால் அம்மா, அவனுக்குப் பார்த்து வைத்திருக்கிற பெண்கள் பற்றிப் பேசினாள். அவள் சொல்வதைக் கேட்க, ஊரெல் லாம் அவனுக்காகவே பெண்களை வளர்த்து வைத்திருக்கும் பெற்றோர்கள் அனேகமாக இருக்கிறார்கள் எனத் தோன்றியது. ஒவ்வொரு பெண்ணைப் பற்றியும் விதவிதமான தகவல்களைச் சொன்னாள். சில பெண்களின் அங்கலட்சணங்கள் பற்றி. சிலரின் வசதிகள் பற்றி. ஒருத்தியை அவன் கட்டிக்கொள்ளலாம் என்பதற்கான காரணத்தை இப்படிச் சொன்னாள்:

"பொண்ணுக்குக் கழுத்து நெறையப் போடுவாங்கடா".

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை எனினும் அம்மா பேசிக்கொண்டிருந்தாள். அவள் பேச்சில் சமையலின் ருசி முழுக்கக் கரைந்துவிட்டதாக உணர்ந்தான். வழக்கம்போலவே அவன் நாக்கு மரத்திருந்தது. மாலை நேரமான பின்னும் அம்மா கிளம்புவதாகத் தெரியவில்லை. இரவிலும் இங்கேயே தங்கிவிடுவாளோ என்று பயந்தான். புறப்படச் சொல்லும் வார்த்தைகள் மனத்தில் இருந்தாலும் நாக்கு மடியவில்லை. ஞாயிற்றுக்கிழமை அவன் வெளியே போவதேயில்லை. அன்றைய உலகம் அறைச்சுவர்களோடு முடிந்துவிடும். ஆனால் அம்மாவை எப்படியாவது கிளப்ப வேண்டும் என்பதற்காக, வெளியே கிளம்புவதாகச் சொன்னான். அவன் எதிர்பார்ப்புப் பலித்தது. 'பொழுதாச்சு. நானும் போயிட்டு வர்றன்' என்றாள் அம்மா. அப்பாடா என்றிருந்தது. கூடவே இருந்துகொண்டு நச்சரித்து நச்சரித்துத் தன்னைக் குடும்பத்துக்குள் தள்ளி விழிபிதுங்கவைத்துவிடுவாளோ என்ற பயம்விட்டது. அம்மாவிடம் ஏதோ ரூபாய் நோட்டைத் திணித்தான். அம்மா ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொண்டாள்.

அம்மாவை அனுப்ப வேண்டுமே என்னும் அவசரத்தில் கையில் கொஞ்சம் அதிகமாகக் கொடுத்துவிட்டோ மோ என்று தோன்றியது. வரும் வாரத்தைச் செலவழிக்கப் போதுமான தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் கவலையை விட்டான். அம்மா, பாலிதீன் பை ஒன்றைக் கையில் பிடித்துக்கொண்டு அரவமற்ற அந்தத் தெருவை நடந்து கடப்பதையே பார்த்துக்கொண்டிருந்தான். திருப்பத்தில் அம்மாவின் தலை மறைந்ததும் கடையை நோக்கிக் கைகாட்டினான். அன்றைய நாளின் முதல் சிகரெட்டும் தேநீரும் மிகுந்த ஆசுவாசம் கொடுத்தன. அவனுடைய உலகத்திற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாதவளாகிவிட்டாள் அம்மா. ஆனால் அது அவளுக்குப் புரியவில்லை.

அதற்குப் பின் ஞாயிற்றுக்கிழமைதோறும் அவன் அறையைத் தேடி வருவதை வழக்கமாக்கிக்கொண்டாள் அம்மா. அவனுடைய தூக்கம் தொலைந்து போயிற்று. கிராமத்திலிருந்து விடிகாலை முதல் பேருந்தைப் பிடித்து, இரண்டு பேருந்துகள் மாறி வந்து அறைக் கதவை விரல் மடித்து மெல்ல அவள் தட்டும்போது சரியாக ஏழு மணியாயிருக்கும். அவள் குரலும் தட்டலைத் தொடரும். 'பூபதீ . . .' என்னும்போது அது கிச்சுக்கிச்சு மூட்டி எழுப்புவதாயிருக்கும். திறக்க முடியாத கண்களோடு அவன் கதவைத் திறப்பான். 'படுத்துக்கோ' என்பாள் அம்மா. படுத்துக்கொள்வான். அவன் தூக்கத்தைக் கெடுத்துவிடக் கூடாது என்னும் எச்சரிக்கையோடுதான் அம்மா வேலைகள் செய்வாள். ஆனாலும் அந்த பூனைச் சத்தங்கள் அதிர்வலைகளாக அவனை வந்தடையும். வெகுநேரம் இஷ்டப்படி தூங்க முடியாது. அவன் விழிக்கும்போது, பாயடியில் படிந்திருக்கும் மண் துகள்களைக் கூட்டி எடுப்பது ஒன்றுதான் பாக்கி என்பதாகக் கதவை ஒட்டி அம்மா உட்கார்ந்திருப்பாள்.

அறையைப் பார்க்க ஒளிவீசும். இவ்வளவையும் அம்மா செய்திருக்கிறாளே என்னும் குற்றவுணர்வு அவனைப் பீடிக்கும். அன்று மட்டுமல்ல, அடுத்தடுத்த நாள்களில் அறை தன் பழைய நிலையை அடைய முயலும்போதெல்லாம் 'அம்மாதான் வந்து இதையெல்லாம் சரியாக்க வேண்டும்' என்று நினைப்பான். மனம் குன்றி இயல்பாக இருக்க முடியாமல்போகும். அவன் நடைமுறைகளே வேறு. குறைந்த விலையில் வாங்கும் உள்ளாடைகளை ஒருமுறை அணிந்துவிட்டுத் தூக்கி வீசிவிடுவான். குவியலாகப் போட்டிருக்கும் அவற்றையெல்லாம் துவைத்துப் பாந்தமாக அடுக்கிவைத்திருப்பாள் அம்மா. ஞாயிற்றுக்கிழமையே அடுத்த இரண்டு மூன்று நாள்களுக்கு ஆகிற மாதிரியான குழம்பு வகைகளைச் செய்துவைத்துப் போவாள். அதைச் சாப்பிடும்போது அவன் மனம் வலிக்கும். அம்மா செய்கிற வேலைகள் எதுவுமே அவனுக்குச் சந்தோசம் தருவதாயில்லை. குற்றவுணர்வை ஏற்படுத்திக்கொண்டே இருப்பவள் அம்மா. அதுதான் அவள் வாழ்க்கை லட்சியம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையின் அதிகாலை விழிப்பின்போதும் அம்மா வரக் கூடாது, அம்மா வரக் கூடாது என்று வாய்விட்டுப் பிரார்த்திப்பான். அவன் வேண்டுதல்களுக்கு ஒருபோதும் பலன் கிடைத்ததில்லை.

தேர்ந்த சொற்பொழிவாளர் ஒருவரின் திட்டமிடுதலோடு அம்மா வருவதாகத் தோன்றும். அவள் பேச்சனைத்தும் ஒரு பொருள் பற்றியவையே. கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான். அதை ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமாக வலியுறுத்துவாள். ஒரு நாள் முழுக்க அவன் ஜாதகத்தைப் பற்றியே பேசினாள். ஜாதகத்தில் குருபலன் இப்போதுதான் கூடிவந்திருப்பதாகவும் அடுத்த வயது தொடங்கும்முன் அவனுக்குத் திருமணமாவது நிச்சயம் என்பதையும் பலவாறு விரித்துரைத்தாள். இதற்கு முன்னான வருஷங்களில் அவள் எவ்வளவோ முயற்சிகள் செய்தபோதும் திருமணமாகாததற்கு ஜாதகப் பலனே காரணம் என்பதாகக் காட்டினாள். அவனுடைய ஜாதகத்தைப் பல இடங்களுக்கும் கொண்டுசென்று பார்த்துப் பார்த்து அவளே கிட்டத்தட்ட ஜோசியக்காரி ஆகிவிட்டாளோ என்று அவனுக்குத் தோன்றியது. அன்று கடைசி அஸ்திரத்தைப் போகும்போது பிரயோகித்தாள். கல்யாணத்திற்குப் பிறகுதான் அவனுக்கு யோகம் கூடிவரும் என்றும் யார் கீழும் வேலை செய்யாமல் அவனே பத்துப் பேருக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்வான் எனவும் சொன்னாள்.

அம்மா சொன்ன அந்த வாசகங்கள் இவை: 'பொண்டாட்டி வர்ற நேரம் ஒவ்வொருத்தரத் தூக்கி உடும். ஒவ்வொருத்தரக் கவுத்துப்போடும். தூக்கி உடற ஜாதகம் உன்னோடது.' அவனுக்கும் கொஞ்சம் சபலம் தட்டிற்று. தனக்குக் கீழ்ப் பத்துப் பேர் வேலை செய்யும் காட்சியைக் கற்பனை செய்துகொள்ளவே சந்தோசமாயிருந்தது. தினமும் ஒருவனிடம் பலவிதமான சமாதானங்களைக் கூறித் தன்னை இழிவுபடுத்திக்கொள்ள வேண்டிய நிலையில்தான் அவன் இருந்தான். தன் சமாதானங்களைத் துச்சமாக நினைத்து அவனைக் கேவலமான சொற்களால் தாக்கும் அந்த ஒருவனுக்காகவே அம்மா கைகாட்டும் பெண்ணைக் கட்டிக்கொண்டு யோகக்காரனாகிவிடவேண்டும் என்றெண்ணினான்.

இன்னொரு வாரம், சோற்றைப் பரிமாறிக் கொண்டே பேச்சைத் தொடங்கினாள். அன்றைக்கு ஒரே ஒரு பெண்ணைப் பற்றித்தான் பேச்சு. வீட்டுக்கு ஒரே பெண் என்று சொல்லி, அவளுடைய பின்புலத்தைப் பலவிதமாக விவரித்தாள். ஒரே பெண்ணாதலால், அவளுக்குரியவை அனைத்தும் அவனுக்குக் கிடைத்துவிடும் என்பதன் சூசகம் அது. அவ்வாரம், அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு தன் அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்வது பற்றி யோசிக்கலானான். சுகமாக இருந்தது. அறைக்குச் சற்று முன்னேரத்தில் திரும்பி வந்த அவன், வாசல் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு வானத்து மீன்களை இலக்கற்று எண்ணியபடியிருந்த பொழுதில், சட்டென அவன் மனத்தில் அம்மாவின் சாகசங்கள் பிடிபட்டன. ஏதாவது செய்து அவனைப் பிடித்துப் பெரிய புதைகுழிக்குள் தள்ளிவிட வரும் அம்மா, பிசாசாய்ப் பீடிக்கும் சொற்களைப் பிரயோகிக்கும் தந்திரத்தை அப்போது உணர்ந்தான். அம்மாக்களின் பரிதாப முகங்கள் அனைத்தும் சாகசப் பாவனைகளை ஒட்டியவைதான்.

அம்மாவின் வலையை அறுத்தெறியும் நேர்த் துணிவு அவனுக்கில்லை; யாருக்குமே இருக்காது என்றும்கூடத் தோன்றியது. அவளை எப்படியாவது தவிர்த்துவிட வேண்டும். கிராமத்தின் வீட்டுத் திண்ணையில் அவள் உளறல்கள் கேட்டுக்கொண்டிருந்தால் போதும். அந்த வார ஞாயிற்றுக்கிழமை அறையில் இருப்பதில்லை என முடிவெடுத்தான். சனிக்கிழமை இரவே நண்பன் ஒருவனுடைய அறைக்குப் போய்ப் படுத்துக்கொண்டான். காலையில் ஒன்பது மணிக்குத்தான் விழித்தெழுந்தான். அம்மா ஏழு மணிக்கெல்லாம் வந்து கதவில் தொங்கும் பூட்டை வெறித்துப் பார்த்துவிட்டுக் கிளம்பியிருப்பாள். அரை மணிநேரம், ஒரு மணிநேரம் காத்திருந்து பார்த்தாலும்கூட இந்நேரம் போயிருக்கக்கூடும். வரும்வாரம் முழுக்க அம்மாவின் ரீங்கரிப்பு உடன்வந்து படுத்தாது என்று நினைக்கவே சந்தோசமாயிருந்தது. நண்பனின் அறையில் சாவகாசமாகப் புகை ஊதி, இரண்டு முறை தேநீர் சொல்லிக் குடித்து மெதுவாக அறையை நோக்கிப் புறப்பட்டான். அறைக்கு வந்தபின்னும் இன்னொரு பெருந்தூக்கம் போட வேண்டும் என்பதுதான் அவன் திட்டம்.

வெகுநாள்களுக்கு அப்புறம் ஒரு ஞாயிற்றுக் கிழமை கிடைக்கப்போகிறது என்னும் சந்தோசம் அவனுள் பெருகிற்று. தூக்கம் நீங்காத முகத்தோடு மாடிப் படியேற முனைந்தபோது, கீழ் வீட்டுக்காரப் பெண் அவன்மீது ஒரு வெறுப்புப் பார்வையை வீசிவிட்டு உள்ளே வேகமாகப் போனாள். அம்மா, இந்தப் பெண்ணிடம் அவனைப் பற்றி விசாரித்திருக்கக்கூடும். சாவியைக் கொடுத்துப் போயிருக்கிறானா என்றும் கேட்டிருக்கலாம். வெயில் உறைக்கும் முற்பகல் பொழுதில் தூக்கம் பொங்கப் படியேறும் அவனைப் பற்றித் தன் புருசனிடம் சொல்வதற்காகத்தான் அவள் அவசரமாக உள்ளே போகிறாள். அப்பாடா, இப்படியான தொந்தரவுகள் தனக்கில்லை எனப் பெருமூச்சு விட்டுக்கொண்டே படியேறியவனின் சந்தோசம் முழுக்க வடியும்படியாக அறைவாசலில் அவன் அம்மா உட்கார்ந்திருந்தாள்.

அவனைக் கண்டதும் ஊரிலிருந்து அவள் சுமந்து வந்திருந்த பைமூட்டை சாய எழுந்தாள். அவள் உட்கார நிழலே அற்ற வகையில் அவன் அறை இருந்ததை அப்போதுதான் உணர்ந்தான். 'ஊருக்குப் போயிருக்கலாமில்ல' என்று எரிச்சலோடு முனகிக் கொண்டே கதவைத் திறந்தான். அம்மா அவனுக்குச் சமாதானங்கள் சொல்லத் தொடங்கினாள். எப்படியும் நண்பகலுக்குள் அவன் அறைக்கு வந்துவிடுவான் என்று நம்பிக்கை கொண்டிருந்தாள். அறையை ஒழுங்குபடுத்த அவனுக்கு நேரமிருக்காதே என்பதால் எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை என்றிருந்தாள். ஊரிலிருந்து தூக்கி வந்த மூட்டைப் பொருள்களைத் திரும்பவும் எடுத்துப்போவது சிரமம் என்பதால் வாசலிலேயே உட்கார்ந்துவிட்டாள். அன்றைக்குக் கிளம்பும்வரை அதுதான் பேச்சு. இடையிடையே அவனுக்கு அலுவலகத்தில் வேலை அதிகமாக என்று கேட்டு, ஞாயிற்றுக் கிழமைகூட முழுதாக விடுமுறை தராத அவன் அதிகாரிகளைத் திட்டினாள். அவன் மீதான அக்கறைகளை அவள் மிகுதியாக வெளிப்படுத்துவது அவனால் சகிக்க முடியாததாக இருந்தது. அதீதங்களே அம்மாக்கள். அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 'தூக்கம் வருதும்மா' என்று சொல்லிவிட்டுக் கொஞ்ச நேரம் தூங்குவது போலப் பாவித்துத் தப்பித்தான். ஆனால் விலக்கவே இயலாத இருளாக அம்மா அவன்மீது கவிந்து கொண்டிருந்தாள்.

அந்த வாரம் முழுக்க அவன் யோசனைகள் எல்லாம் அம்மாவைப் பற்றியே இருந்தன. வேலைகளில் கவனம் சிதறியது. பழகிப் போயிருந்தாலும் கூடுதலாகத் திட்டுகள் வாங்க வேண்டியிருக்கிறதே என மன உளைச்சல்பட்டான். இப்போதிருக்கும் அறையை மாற்றிக்கொள்ளலாம் எனத் தீவிரமாக நினைத்தான். பகலெல்லாம் பல முகங்களை இடைவிடாமல் சந்தித்துக்கொண்டேயிருப்பதால் இரவுகளிலும் ஞாயிறுகளிலும் முழுக்கத் தனித்திருப்பதை அவன் மனம் விரும்பியது. மீண்டும் மனிதர்களைச் சந்திக்கும் பலம் பெறுவதற்குத் தனிமையே காரணம் என்று நம்பினான். அதற்கு இப்போதிருக்கும் இந்த மாடியறை ரொம்ப வாகாக அமைந்தது. அவன் தொழில் சார்ந்த நண்பர்கள் கூடித் தங்கப் பல முறை அழைத்திருக்கிறார்கள். அவன் சிறிதும் சஞ்சலமில்லாமல் அவற்றைத் தவிர்த்திருக்கிறான். அந்த அளவு மாடியறை அவனுக்குப் பொருந்திப் போயிருந்தது. அதை உதறிவிட்டு இந்த நகரத்தின் ஏதோ மூலையில் புறாக் கூண்டு அறை ஒன்றுக்குள் போய் ஒளிந்து கொண்டாலும் அம்மா கண்டுபிடிக்கமாட்டாள் என்பது என்ன நிச்சயம்?

பதற்றத்தோடு காத்திருந்த அந்த ஞாயிற்றுக் கிழமையும் வழக்கம்போல அம்மா வந்தாள். காலையும் பகலும் சாப்பிடாமலேகூடக் கழிந்துபோகும் அவன் நாள், இப்போது காலம் தாழ்ந்தேனும் இருவேளையும் சாப்பிடும்படி ஆயிற்று. சோற்றைப் பிசைந்துகொண்டிருந்தபோது அம்மா பேச்சைத் தொடங்கினாள். வெகுகாலம் உள்ளேயிருந்த தகிப்பு பொங்குவதுபோலச் சொற்களைக் கொட்டினாள். எல்லாம் ஒரே புலம்பல். செத்துப்போனபின் கொள்ளி போடப் பேரன் வேண்டும் என்னும் பிதற்றல். சொத்து, பணம் எதுவும் இல்லாதபோதும் வாரிசுக்கு அம்மா ஆசைப்படும் சூட்சுமம் அவனுக்குப் புரிந்தது. அவன் நலத்திற்காகத் திருமணம் பற்றிப் பேசுவதாக அவள் செய்த பாவனை அப்பட்டமாயிற்று. அம்மாவின் சுயநலம் இவ்வளவு சீக்கிரம் வெளிறிப் போகும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவன் வெறுமனே தலையைக் குனிந்துகொண்டிருந்தான். படுத்தும் தூக்கம் வரவில்லை. அம்மா எழுப்பும் ஓசைகள் தொந்தரவு கொடுத்தன. சின்ன அறை ஒன்றுக்குள் எத்தனை விதமான வேலைகளை அம்மாவால் ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது என்று எரிச்சல்பட்டான். எழுந்து உட்கார்ந்தால் பேச்சு தொடரும் என்னும் பயத்தால் தூங்குவதுபோலப் படுத்தே இருந்தான். அம்மாவின் அசைவுகளால் கொஞ்சம் முன்னதாகவே கிளம்ப ஆயத்தம் செய்வதாகப்பட்டது. சந்தோசத்தோடு எழுந்தான். அம்மா சுவரைப் பார்த்துச் சொன்னாள்.

"சரசூட்டுக் கலியாணத்துக்குப் போவோனும்"

தன்னையும் அழைக்கிறாளோ எனப் பதறி 'எந்தச் சரசு?' என்றான்.

"எத்தன சரசு இருக்கறாங்க?. எல்லாம் உனக்கு மறந்து போச்சு. நம்ம பக்கத்தூட்டுச் சரசுதாண்டா. எதோ அவ ஒருத்திதான் எனக்குக் கூடமாட ஒத்தாசயா இருக்கறா. அவளும் இல்லீனா எப்பவோ நாதியத்தவளாகிப்போயிருப்பன்"

பேசும்போதெல்லாம் அவன் மௌனமாக இருப்பது அம்மாவுக்குக் கூடுதல் பலத்தைக் கொடுத்துவிடுகிறது.

"அவ தம்பிக்குக் கலியாணம். என்னயக் கட்டாயம் வரோனும்னு வழியெல்லாம் எழுதிக் குடுத்துட்டுப் போயிருக்கறா. அங்கயாச்சும் போயி ரண்டு நாளைக்கு அக்கடான்னு இருக்கறன். எனக்குனு போக்கிடம் எங்க இருக்குது."

இந்த உளறல்களுக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். வேறொரு நகரத்திற்குத் தன் வேலையை மாற்றிக் கொள்ளலாமா என்று தோன்றியது. எல்லா நகரங்களுக்கும் ஒரே முகம்தான். எங்கே என்றாலும் செய்ய வேண்டிய வேலையும் ஒன்றேதான். முதலில் செல்லுபடியாகக் கூடிய சொற்களை இலவசமாக வழங்க வேண்டும். முடிவில் ஏதோ ஒரு பொருளைத் தலையில் கட்ட வேண்டும். இந்தச் சிறு நகரத்தைவிடப் பெருநகரம் ஒன்றுக்குள் புகுந்துவிட்டால், எல்லாவிதமான அடையாளங்களும் அழிந்துபோகும். என்ன பாடுபட்டாலும் அம்மாவால் கண்டு பிடிக்கவே முடியாது. சொந்த ஊர், உறவு முகங்கள் என்று அடிக்கடி தென்பட்டுக்கொண்டிருப்பதாலேயே அடையாளங்கள் உயிர் வாழ்கின்றன. இவை எட்டாத தூரத்து நகரம், அடையாளங்களை இழக்கச் செய்யும். அடையாளமற்றுத் திரிவதன் சந்தோசத்தை எண்ணி அவன் மனம் ஏங்கியது.

இடமாறுதல் ஆவதில் அவனுக்குச் சின்ன சங்கடம் இருந்தது. இப்போதிருக்கும் நிலையைத் தொடர்ந்தால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் கொஞ்சம் பதவி உயர்ந்து இயல்பாகவே பெருநகரம் ஒன்றிற்குப் போய்விடலாம். அப்போது வேலையிலும் இத்தனை அலைச்சல் இருக்காது. இதை விட்டு வேறொரு இடத்தில் போய்ப் பொருந்துவதென்றால், மீண்டும் தொடக்கத்திலிருந்தே வர வேண்டும். அம்மாவைத் தவிர்க்க அந்தச் சிரமத்தையும் தாங்கிக்கொள்ளலாமோ என்று பட்டது.

அம்மா கேட்டாள்.

"இங்கருந்து ஆத்தூருக்குப் போற பஸ் எத்தன மணிக்குடா இருக்குது?"

"எந்த ஊரு?"

"ஆத்தூரு."

அந்தப் பெயர் அவனுக்குள் பரவசத்தைக் கொடுத்தது. அவன் முதன் முதலாக வேலை தொடங்கிய ஊர் அது. அதன் சந்துபொந்துகள் கூட அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் ஆத்தூர் என்னும் பெயர் கொண்ட சிறியதும் பெரியதுமான ஊர்கள் ஆறேழு இருக்கக்கூடும். அம்மா போக வேண்டியது எந்த ஆத்தூர்? அவனிருந்த ஆத்தூர் நடுத்தர நகரம். அம்மா நிச்சயம் அந்த ஊருக்குப் போகவேண்டியிருக்காது. ஏதாவது குக்கிராமமாகத்தான் இருக்கும். அவன் மூளையில் பெரும் குழப்பம் சட்டெனத் தெளிவு பட்டது. அம்மாவுடன் ஆவலோடு உரையாடலானான்.

"எந்த ஆத்தூரும்மா?"

"அதெதுவோ. எனக்கா தெரியுது?" என்றபடியே திருமணப் பத்திரிகை ஒன்றையும் கசங்கிய வெள்ளைத் தாளையும் நீட்டினாள். அவன் நினைத்தபடி, அம்மா போகவேண்டிய ஆத்தூர் சின்னக் கிராமம். ஆனால் அதற்கும் குறைந்தது ஒன்றரை மணி நேரப் பயணம். அம்மாவிடம் ரொம்ப வாஞ்சையாக 'அவ்வளவு தூரமாம்மா போற?' என்று கேட்டான். அம்மா, சரசாவின் நெருக்கம் பற்றித் திரும்ப விவரித்து, அப்பேர்ப்பட்டவள் அழைக்கும்போது போகாமல் இருப்பதா என்று முடித்தாள். 'நானே வந்து பஸ் ஏத்தி விடறம்மா' என்றான். வெகுசீக்கிரத்தில் முகம் கழுவி ஆடை மாற்றித் தயாரானான்.
அம்மாவோடு சிரித்துப் பேசியபடி அவன் படியிறங்கும்போது பார்த்த கீழ்வீட்டுப் பெண் கனவு காண்பவளைப் போல விழி விரித்து நின்றாள். அவளை மேலும் சீண்ட வேண்டும் என்னும் ஆவல் மிக, பிரியத்தோடு அம்மாவின் பையைக் கையில் வாங்கிக்கொண்டான். அவனைப் பற்றிய சித்திரத்தில் கீறல் விழுந்ததைப் புருசனிடம் சொல்வாளா? சந்தேகம்தான். ஆட்டோ வில் அம்மாவை ஏற்றினான். ரொம்பக் கூச்சத்தோடு 'எதுக்குடா?' என்று சொல்லிக்கொண்டே ஏறி உட்கார்ந்துகொண்டாள் அம்மா. ஆட்டோ பயணம் அம்மாவுக்கு இதுதான் முதல்முறையாக இருக்கக் கூடும். தாராளமாக இடம் இருந்தபோதும் ஒடுங்கி உட்கார்ந்திருந்தாள் அம்மா.

தலைநகரத்திற்குச் செல்லும் பெருவழியிலிருந்த ஆத்தூருக்குப் பயணச் சீட்டு வாங்கினான். அந்த ஆத்தூருக்குப் போக எட்டு மணிநேரம். அம்மாவைப் பேருந்தின் மையப்பகுதி இருக்கையில் உட்காரவைத்தான். ஆத்தூர் வந்ததும் மறக்காமல் அம்மாவை இறக்கிவிடும்படி நடத்துநரிடம் சொல்லி வைத்தான். பையனுக்குப் பொறுப்பு வந்துவிட்டதென்று சந்தோசப்படும் அம்மாவின் முகம் ஜன்னல் வழித் தெரிந்தது. கையாட்டி வழியனுப்பிவிட்டு அறைக்கு நடந்தான். மறுநாள் விடிகாலையில் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் பையோடு அம்மா நிற்கும் காட்சி மனத்தில் வந்தது. அந்த ஊரில் பரோபகாரிகள் அதிகம். யாராவது அம்மாவுக்குத் தண்ணீர் தருவார்கள். படுத்துக்கொள்ளும்படி தெருவோரத்தில் இடமும் கொடுப்பார்கள்.

ஞாயிற்றுக்கிழமைக்காகக் காத்திருக்கத் தொடங்கினான் பூபதி.

*****

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

Jegadeesh Kumar on August 8, 2011 at 6:50 PM said...

அற்புதமான கதை. முடிவு மட்டும் செயற்கையாக, அதிர்ச்சி தர வேண்டுமென்பதற்காகக் கொடுக்கப்பட்டிருப்பதைப் போலிருக்கிறது.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்