மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் பொருட்டு நம் நண்பர்களால் உருவாக்கப்பட்ட விருது ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ . எல்லாவகையிலும் அடுத்த தலைமுறையினரால் அளிக்கப்படுவதாக இருக்கவேண்டும் இது என்பதை ஆரம்பத்திலேயே கவனத்தில் கொண்டோம்.
இதுவரை ஆ.மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இம்முறை மூத்த கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வழங்கப்படுகிறது.
ரூபாய் ஒரு லட்சமும் நினைவுப்பரிசும் அடங்கியது இது.வழக்கமாக பரிசுபெறுபவர் பற்றி ஒரு நூல் வெளியிடப்படும். இம்முறை நண்பர் கெ.பி.வினோத் ஞானக்கூத்தனைப்பற்றி தயாரிக்கும் ஆவணப்படம் ஒன்று வெளியிடப்படுகிறது.
வரும் 28-12-2014 அன்று கோவையில் இவ்விழா நிகழவிருக்கிறது.
ஞானக்கூத்தன் தமிழின் நவீனத்துவத்தை உருவாக்கிய முன்னோடிக்கவிஞர்களில் ஒருவர். கசடதபற என்னும் முக்கியமான சிற்றிதழின் பின்னணிச் சக்தியாக விளங்கியவர். தமிழின் அங்கதக்கவிதைகளின் முன்னோடி. கூரிய நவீன மொழியில் எழுதிய கவிதைகள் மூலம் கவிதையின் இயல்பையே மாற்றியமைத்தவர்
மாலையில் விருதளிப்பு விழா. இடம் - நானி கலை அரங்கம், மணி மேல்நிலைப் பள்ளி, கோவை
ஞானக்கூத்தன் பற்றி கெ.பி.வினோத் எடுத்த ஆவணப்படத்தை இயக்குநர் வசந்தபாலன் வெளியிடுகிறார். விழா தொடங்குவதற்கு முன்னர் 5 மணிக்கு இந்த ஆவணப்படம் திரையிடப்படும்
விஷ்ணுபுரம் விருதை மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவன் அளிக்கிறார்.
விஷ்ணுபுரம் விருதை மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவன் அளிக்கிறார்.
கவிஞர் புவியரசு, எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, பாவண்ணன், கவிஞர் இசை ஆகியோர் பேசுகிறார்கள்.
-ஜெயமோகன்