Showing posts with label க.நா.சு. Show all posts
Showing posts with label க.நா.சு. Show all posts

Feb 1, 2023

புதுமைப்பித்தன் - க. நா. சுப்ரமண்யம் ( கவிதை)

புதுமைப்பித்தன் இருந்த

வீட்டைத் தாண்டிச் செல்லும்போது

இந்த வீட்டு முன்கூடத்தில் வெற்றிலைச் 

செல்லமும் உற்சாகமுமாக எத்தனையோ கதைத்து 

எத்தனையோ நாட்கள் போக்கியாகி

விட்டது. எத்தனையோ கதைகள் சொல்லி 

புஸ்தகங்கள் படித்து முடித்தாகி விட்டது 

ரெண்டுகப் காபிக்கு காசு இருக்கிறதா 

என்று பார்த்துக் கொண்டு காபியும் 

சாப்பிட்டுவிட்டு மீதி கையில் காசிருந்தால் 

வீட்டுக்கும் ஏதாவது வாங்கிக்கொண்டு 

பேசிக்கொண்டே திரும்பி வந்து உட்கார்ந்து 

பேசிப்பேசி பொழுதைத் தீர்த்த இடம் இது 

இரவாகியும் வீடு திரும்பாமல் பேச்சின் 

சுவாரஸ்யத்திலே இரவு பூரா தங்கிவிட்டு 

காலையில் காபி சாப்பிட்டுவிட்டுத் 

திரும்புவதுண்டு!

இப்போது இந்த

வீட்டுக்குள்ளே போனால் எங்கள் பேச்சைக் 

கேட்டிருந்த அந்த சாட்சி பூதமான சுவர்கள் 

எங்கள் பேச்சை எனக்குத் திருப்பிச் 

சொல்லுமா—? சொல்வதாக வேண்டுமானால் 

நான் கதை யெழுதலாம், சுவர்கள் பேசாது. 

நன்றி கெட்ட சுவர்கள் - அவை வீட்டுக் 

காரன் கட்சி தான் - எழுத்தின் அருமை 

தெரியாதவை. உலகமே எழுத்துக்கு - நல்ல 

எழுத்துக்கு எதிரியாய் இருக்கும் பொழுது -

வேறு சொல்ல என்ன இருக்கிறது...? 

எழுதாதே எழுதாதே என்று உலகம் கூடி 

சொல்ல நன்றாக எழுதினால் ஆபத்துதான் 

அதற்கு நானே உதாரணம் என்று

புதுமைப்பித்தன் சொல்லிப் போனாரோ 

என் சிந்தனை எங்கேயோ தொடர்கிறது.

***

‘க.நா.சு. கவிதைகள்’, சந்தியா பதிப்பகம், 2002

நன்றி: அழிசி ஸ்ரீநிவாச கோபாலன்

நினைவுகள் - க. நா. சுப்ரமண்யம்

முதல் தடவை புதுமைப்பித்தனைச் சந்தித்தது நினைவுக்கு வருகிறது. மணிக்கொடி காரியாலயத்தில் ஒரு சனிக்கிழமை நண்பகல் பன்னிரண்டு மணிக்கு கதைகள் கொடுத்தால் அவர்கள் போடுவார்களா என்று கேட்கப் போயிருந்தேன். 1935 நவம்பர் என்று எண்ணுகிறேன். மழை பெய்து ஓய்ந்திருந்தது.

இரண்டு ஆசாமிகளைச் சந்தித்தேன். ஒருவர் கண்ணால் பயமுறுத்துகிறவராக இருந்தார். ஒருவர் பல்லால் பயமுறுத்துகிறவராக இருந்தார். இருவரும் பயமுறுத்துகிறவர்களாகத்தான் அப்போது தோன்றினார்கள். கண் பி. எஸ். ராமையா என்றும், பல் சொ. விருத்தாசலம் என்கிற புதுமைப்பித்தன் என்றும் அறிந்துகொண்டேன்.

“ராசா கதை எழுதப் போறாக, என்ன சொல்றீக?” என்று பல் கண்ணைக் கேட்டது.

“எழுதட்டுமே. நமக்கென்ன ஆட்சேபம்?” என்றது கண்.

“கதை போட்டால் ஏதாவது பணம் கொடுப்பதுண்டா?” என்று அப்பாவித்தனமாகக் கேட்டேன். சொ.வி. கடகடவென்று உள்பற்களும் தெரிய சிரிக்க ஆரம்பித்துவிட்டார். கண் ஆசிரியராக லட்சணமாகப் பதில் சொல்லிற்று. “மணிக்கொடியில் கதை போட நீங்கள்தான் பணம் கொடுக்க வேண்டும். நாங்கள் கதைகளை விலை கொடுத்து வாங்குவதில்லை” என்றார்.

“விலைமதிப்பில்லாத கதைகளாக எழுதுங்கள்” என்றது பல்.

“போன இதழில் ‘சில்பியின் நரகம்’ என்று ஒரு கதை வந்ததே... படித்தீரா?” என்று


கேட்டது கண்.

“நல்ல கதை. படித்தேன். அதனால்தான் என் கதையையும் போடுவீர்களா என்று கேட்க வந்தேன்?”

“நல்ல கதைகளாக நான் ஒருவன் எழுதுகிறேனே, போதாதா?” என்று கேட்டது பல்.

“அவர்தான் அந்தக் கதையின் ஆசிரியர்.”

“அப்படியா? சந்தோஷம் உங்களைச் சந்தித்ததில்.”

“அப்படிச் சொல்லு ராசா!” என்றது பல்.

இது ‘ஹோப்லெஸ் கேஸ்’ என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும்போது மூன்றாவது ஆசாமி ஒருவர் உள்ளே வந்தார். நல்ல சிவப்பாக, நல்ல உயரமாக, எடுப்பான மூக்குடன், தீட்சண்யமான கண்களுடன், பல்லுக்கும் கண்ணுக்கும் நல்ல காண்ட்ராஸ்ட்.

“இவர் என் ஆர்டிஸ்ட். கே. பாஷ்யம் ஆர்யா” என்றது கண்.

ஆர்யா என்று அவர் சொன்னது ஆர்.ஏ. என்று எனக்குக் காதில் விழுந்தது. ஆர்.ஏ. என்றால் கலை உலகில் ராயல் அகேடெமிசியன் என்பதன் சுருக்கம். கதைகளுக்குப் பணம் தராத பத்திரிகை ஒரு ஆர்.ஏ.யை வேலைக்கு...

“‘ஆர்யா’ என்கிற புனைப்பெயரில் சித்திரங்கள் போடுகிறார். பெரிய ஆர்டிஸ்ட். ஆனால் அதைவிடப் பெரிய தேசபக்தர். பாஷ்யம் சட்டையைத் தூக்கிக் காட்டுங்கள்.” என்று ராமையா பாஷ்யத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்குப் பழக்கப்பட்டவர் போல ஆர்யா தன் சட்டையைக் கழுத்துவரைத் தூக்கிக் காட்டினார். விரல் மொத்தம் குறுக்கும் நெடுக்குமாகத் தழும்புகள் - கசையடித் தழும்புகள். நான் பிரமித்துப்போய் நின்றேன். ஒவ்வொரு தழும்பும் ஒன்பது வாய்களுடன் ‘நீயும் இருக்கிறாயே’ என்று கேட்பது போலத் தோன்றிற்று.

என் பிரமிப்பை நீக்குவதற்கே போல பல் சொல்லிற்று, அவருடைய பேடண்ட் கடகடச் சிரிப்புடன். “என்ன ராசா? பேச்சு வரவில்லை? அவர் தழும்புகள் அவர் முதுகில் தெரிகின்றன. எங்கள் தழும்புகள் உள்ளத்தில் இருப்பதனால் வெளியே தெரிவதில்லை. பாரதியார் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ராசாவே!”

“படித்திருக்கிறேன்.”

“ஹா! ஹா! கேள்விப்பட்டது மட்டுமில்லை. படித்தும் இருக்கிறார் மனுஷன். இதுவும் நம்மைப்போலத் தேறாத கேஸ் என்றுதான் தோன்றுகிறது ராமையா” என்றார்.

இப்படியாக நானும் அன்று தேறாத கேஸாக ‘மணிக்கொடி’ கோஷ்டியில் சேர்ந்துகொண்டேன். உள்ளத்தில் உள்ள வெளியே தெரியாத தழும்புகள், தேறாத கேஸ், பணமில்லாத இடைவிடாத இலக்கிய சேவை என்கிற விஷயங்கள் எல்லாம் தொடருகின்றன. மகாராஜர்கள் ராமையாவும் சொ.வி.யும் போய்விட்டார்கள். நான், அலாஸ் - இருக்கிறேன். சில சமயம் சொ.வி. நல்ல அதிருஷ்டக்காரர். சீக்கிரம் போய்விட்டார் என்று எனக்குத் தோன்றுவதுண்டு.

***

‘முன்றில்’ இதழ் 5 (க.நா.சு. நினைவு மலர்)

நன்றி: அழிசி ஸ்ரீநிவாச கோபாலன்


Oct 10, 2021

சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் - ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம்

 சிறுகதை என்கிற நவீன இலக்கியத் துறையில் தற்காலத் தமிழ் இலக்கியாசிரியர்கள் ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள்; கணிசமான அளவில் இத்துறையில் ஒரு வளம் காணக்கிடக்கிறது என்று சாதாரணமாக எல்லோருமே ஒப்புக்கொள்ளுகிறோம். ஆனால் இந்த வளத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பதிலே, எது வளம், எது வளமின்மை, என்று பார்ப்பதிலே, நமக்குள்ளே பலதரப்பட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. சிறுகதை என்பது முதலில் கதையாகத்தான் இருக்கவேண்டும் என்கிற ஒரு அடிப்படையை வைத்துக்கொண்டு, ராஜாஜி, சாமிநாதய்யர் போன்றவர்களையும், கல்கி, கி. வா. ஜகந்நாதன் போன்றவர்களையும், புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி போன்ற சிறுகதை ஆசிரியர்களுக்குச் சமானமானவர்களாக மதிப்பிட்டுச் சொல்லும் பழக்கம் இன்று நமக்கு இருக்கிறது. தமிழில் இதுவரை வெளிவந்துள்ள ஒரே ஒரு ‘தரத்தொகுப்பு’ நூலான ‘சிறுகதை மஞ்சரி’யிலே, கதைகளும் சிறுகதைகளும் (சோமு, சங்கர், அகிலன், ஜகந்நாதன், தூரன் முதலியவர்களுடையவை வெறும் கதைகள், புதுமைப்பித்தன், கு.ப.ரா., பிச்சமூர்த்தி, ஜானகிராமன் இவர்களுடையவை சிறுகதைகள்) இடம்பெற்றிருக்கின்றன. தொகுப்பாசிரியருக்கு கதைக்கும் சிறுகதைக்கும் உள்ள தாரதம்மியம் தெரியவில்லை என்பது வெளிப்படை.

கதை என்பது எத்தனையோ காலமாக, வழிவழி வந்த ஒரு சொத்து. (ஆனால்


அதற்கு இலக்கிய அந்தஸ்து சிறுகதையான பிறகுதான் ஏற்படும்). மஹாபாரதத்துக்கும், ராமாயணத்துக்கும் கதைதான் அடிப்படை. ஷேக்ஸ்பியரின் கவிதை நாடகங்களுக்கும் கதைதான் அடிப்படை. புறநானூறிலுள்ள பல செய்யுள்களுக்கும் கதைகள்தான் அடிப்படை. இது தவிர புத்தர் ஜாதகக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், பரமார்த்த குரு கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் இவையெல்லாம் கதைகள். இந்தக் கதைகளில் பலவும் ஆரம்பத்தில், ஆதி காலத்தில், இந்தியாவிலே தோன்றித்தான் உலகெங்கும் பரவின என்று சொல்லிப் பெருமைப்படுபவர்கள் உண்டு.

கதை என்பது ‘பொய்யை அடிப்படையாகக் கொண்ட ஒரு சித்திரம் - அல்லது பல சித்திரங்கள்’ என்று சொல்லலாம். பொய்யே கலக்காத கதைகளும் இருக்கலாம்தான். ஆனால் உலகத்தில் எந்த ஆதி இலக்கியத்திலும் பொய் சிறிதும் கலவாத கதை இருந்ததாகத் தெரியவில்லை. சத்தியத்தை நிலைநிறுத்தத் தோன்றிய அரிச்சந்திரன் கதையும்கூடப் பொய்யை அடிப்படையில் அடக்கிய கதைதான். தொல்காப்பியத்தில் தமிழ்ச் சிறுகதை பற்றிக் கூறுகிற ஆதாரம் இருப்பதாகக் கூறிப் பெருமைப்படுகிற (படுத்துகிற) பண்டிதர்களும்கூட இந்தப் ‘பொய்ச்’ சூத்திரத்தைத்தான் சொல்லுகிறார்கள். அது கதையின் இலக்கணம்; இலக்கிய அந்தஸ்தை எட்டாத எல்லாக் கதைகளுக்கும் லக்ஷணம் அது.

கதை என்பது இலக்கியத்தில் ஒரு தனித்துறையல்ல என்பது வெளிப்படை. அது எல்லாப் பகுதிகளுக்கும் பொதுவான ஒரு அம்சம். அதிலே இலக்கியத்தரம், மனிதத்தன்மைத்தரம் இரண்டும் சொல்ல இயலாது. நீதிக்கதை, உபயோகமானது, அசுவாரசியமானது, சுவாரசியமானது என்று பிரிவுகள் வேண்டுமானால் சொல்லலாமே தவிர, இலக்கியபூர்வமான தராதரம் சொல்ல இயலாது. கதை என்பது பொதுப்பட கவிதை, நாடகம், காவியம், வசன நூல்கள் பல, இவற்றிற்கெல்லாம் ஆதாரமாக இயங்குகிற ஒரு அடிப்படைக் கோப்பு. ஆனால் சிறுகதை என்பதோவெனில் இலக்கியத்தில் ஒரு தனித்துறை - அதாவது பரணி போல, உலா போல, குறவஞ்சி போல, காவியம் போல, நாவல் போல ஒரு தனித்துறை. இந்தச் சிறுகதை என்கிற இலக்கியத் தனித்துறை உலக இலக்கியத்திலேயே தலையெடுத்துச் சுமார் நூற்றிமுப்பது வருஷங்கள்தான் ஆகின்றன. எட்கார் ஆலன் போ என்கிற அமெரிக்க இலக்கியாசிரியர் தோற்றுவித்த இலக்கியத் தனித்துறை இது. (ஆனால் ஆங்கில, மேலை நாட்டுப் பண்டிதர்களில் சிலரும்கூட இதை இவ்வளவு தெளிவாக ஏற்றுக்கொண்டுவிடுவது கிடையாது. பைபிளில் இருக்கிறது சிறுகதை, கிரேக்க இலக்கியத்தில் உண்டு என்று பண்டிதர்களுக்கே உரிய பாணியில் அங்கும் சண்டைகள் உண்டு). இத்துறையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ப்ரெட் ஹார்ட்டி, ஹாதார்ண் போன்ற அமெரிக்க ஆசிரியர்களும் ப்ரான்ஸ்வா காப்பி, மெண்டெஸ், மோபாஸான் போன்ற பிரெஞ்சு ஆசிரியர்களும் செக்காவ் போன்ற ருஷ்ய ஆசிரியர்களும் போற்றி வளர்த்து வளம் செய்தார்கள். இருபதாம் நூற்றாண்டிலே ஆம்பிரோஸ் பியர்ஸ், ஷெர்வுட் ஆண்டர்ஸன், ஹெமிங்வே, பாக்னர், வில்லியம் ஸரோயன் போன்ற அமெரிக்கர்களும் லாகர்லெவ், வான் ஹெய்டன்ஸ்டாம், டாபெர் ஹால்ஸ்டிராம் போன்ற ஸ்வீடிஷ்காரர்களும் பிராண்டெல் லோ, பாலஸெக்கி போன்ற இத்தாலியர்களும், கார்க்கி, ப்யூனின் போன்ற ருஷ்யர்களும், ஜாய்ஸ், ஓகானர் போன்ற ஐரிஷ்காரர்களும், காப்கா, தாமஸ் மான் போன்ற ஜர்மானியர்களும் அந்டோல் பிரான்ஸ் போன்ற பிரஞ்சுக்காரர்களும் இலக்கிய அடிப்படையில் வளர்த்து வந்திருக்கிறார்கள். மேலை நாட்டு அவசர யுகத்தின் தேவைகள் பலவற்றால் ஆங்கிலத்திலும், வேறு ஐரோப்பிய மொழிகளிலும் பத்திரிகைகள் யுகமும் அவசர யுகமும் தோன்றிய பின், கதை, சிறுகதை என்கிற இலக்கிய உருவம் பெற்றுப் பின்னர் பத்திரிகைக் கதை என்று ஒரு தேய்வும் பெற்றது. இந்தப் பத்திரிகைக் கதைகளுக்குச் சிறந்த உதாரணங்களாக, ஸாமர்ஸெட் மாம், ஏ. இ. கோப்பார்டு, இர்வின் ஷா முதலியவர்களைச் சொல்லலாம்.

மேலை நாட்டில் தோன்றிய இச்சிறுகதை இலக்கிய வளம் இருபதாம் நூற்றாண்டிலே, இந்தியாவிலும் சீனாவிலும் ஜப்பானிலும் புது இலக்கியத்தில் இந்திய உருவமும், சீன உருவமும், ஜப்பானிய உருவமும் எடுத்தது. சென்ற முப்பது வருஷங்களில் ஜப்பானியச் சிறுகதை பிரமாதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. சீனத்துச் சிறுகதை ஆரம்பத்தில் பிரமாதமான வளர்ச்சி பெற்று, அரசியல் காரணங்களினால், சோஷலிஸ யதார்த்தவாதம் என்கிற குட்டையிலே (இலக்கிய உத்தியிலே) வந்து தேங்கிவிட்டது. சிறுகதைக்கு இந்திய உருவம் தருகிற முயற்சியை ரவீந்திரநாத தாகுர் சிறப்பாகச் செய்தார்.

தாகுரின் சிறுகதை முயற்சியை வ. வே. சு. ஐயரும், கவி சுப்ரமணிய பாரதியாரும் பின்பற்றினார்கள். வ. வே. சு. ஐயர் ‘குளத்தங்கரை அரசமர’த்தில் தாகுர் செய்த காரியத்தையே ஓரளவு தமிழில் வெற்றியுடன் திரும்பவும் செய்து பார்த்தார். அவர் எழுதிய மற்ற கதைகளிலும் அவர் ஓரளவுக்குப் பிறர் செய்ததையே பின்பற்றினார் - எனினும் ஓரளவு வெற்றிபெற்றார் என்பதனால் தமிழில் சிறுகதைக்கு வ. வெ. சு. ஐயரைத்தான் தந்தையென்று சொல்லுவது வழக்கமாகிவிட்டது. கவி பாரதியாரின் கதைகளைச் சிறுகதைகள் என்று சொல்லமுடியாது. வெறும் கதைகளாகவே சொன்னார் அவர். ஆங்கில, பிரெஞ்சு மொழிச் சிறுகதைகளையும், தாகுர் சிறுகதைகளையும் அறிந்தேதான் பாரதியார் தன் கதைகளை எழுதினார். ஆனாலும் உருவத்தைவிட அவருக்குச் சீர்திருத்தக் கருத்திலே மோகம் அதிகமான படியினாலே, அவர் கதைகள் சிறுகதைகளாக அமையவில்லை. பல கதைகள் கதைகளாகவும்கூட அமைதி பெறவில்லை. உதாரணமாக பாரதியாரின் ‘பூலோகரம்பை’யைச் சொல்லலாம். அற்புதமான ஒரு கதையை உருவம், அல்லது ஒரு உருவமல்லாத பிரக்ஞையுடன் செய்யாமல் வழிந்தோட விட்டுவிடுகிறார் பாரதியார். இந்தக் குறை மாதவையாவின் ‘குசிகர் குட்டிக் கதைக’ளிலும் உண்டு என்றுதான் சொல்லவேண்டும்.

சிறுகதை என்பதற்கு அடிப்படையாக அதை எழுதுகிறவனுடைய இலக்கிய உருவப் பிரக்ஞை அமைய வேண்டும். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, அல்லது அதிகமாக ஆழ்ந்து பார்க்கும்போதும்கூட, இவ்விஷயம் ஒரு உருவமல்லாத உருவமாகவே இருக்கலாம். ஆனால் அந்த உருவமல்லாத உருவத்தையும்கூட, குணத்தையும் விசேஷத்தையும்கூட, உணர்ந்தே, இலக்கியப் பிரக்ஞையுடன் செய்திருக்கிறான் ஆசிரியன் என்பதுதான் அதைச் சிறுகதையாக்குகிறது. சிறுகதையின் ஆரம்பம், நடு, முடிவு என்பதைப் பற்றிச் சொல்வது இப்போது விளையாட்டுக்கும் கேலிக்கும் இடமாகத் தோன்றலாம். ஆனால் அதுதான் சிறுகதை என்கிற இலக்கியத் துறையில் அடிப்படையான விஷயம். இந்த ஆரம்பம், இந்த நடு, இந்த முடிவுதான் வேண்டும் என்பது முன்கூட்டி நிச்சயமானதல்ல - ஆனால் அது ஏற்பட்ட பின், அது தவிர்க்கமுடியாதது என்கிற உணர்வு விமர்சகர்களுக்கும் வாசகனுக்கும் ஏற்பட வேண்டும். இந்த உணர்வை ஏற்படச் செய்பவனைத்தான் இலக்கியத்தில் சிறுகதாசிரியன் என்று நாம் கொண்டாட முடியும். நடை அழகு, விஷயத்தெளிவு, அமைதி முதலியனவெல்லாம் இலக்கியப் பரப்பில் எல்லாத் துறைகளுக்குமே பொதுவானவை. ஆனால் சிறுகதை உருவமும், உருவ அமைதியும், தவிர்க்கமுடியாத தன்மையும் (inevitability), ஒருமைப்பாடும் சிறுகதைக்கு மட்டும் உரியது. இதை எப்படி விமர்சகன் முதலில் தேர்ந்து புரிந்துகொள்ளுகிறான் என்பதும், வாசகர்கள் எப்படித் தெரிந்தோ தெரியாமலோ ஒரு வகையாக இனங்கண்டு கொள்ளுகிறார்கள் என்பதும், இலக்கிய விமர்சனம் சரியாக வளராத இக்காலத்தில், தமிழில் தெளிவாக்குவது சற்று சிரமமான காரியம்தான்.

இலக்கிய விமர்சகன் என்று, என்னைப்போல் சொல்லிக்கொண்டு வருபவன், இதைத் தன் படிப்பையும், பிறமொழிச் சிறுகதை அறிவையும் வைத்துக் கணித்துக்கொள்ளுகிறான் என்று மட்டும் சொல்லிவிட்டு, அதற்கு உதாரணமாக இன்று பழக்கமான ஆசிரியர்கள் சிலருடைய சிறுகதை உருவங்கள் பற்றிய குறிப்புகள் மட்டும் இங்கு தர முயலுகிறேன். உருவமேயல்லாத பலவித சிறுகதை உருவங்களை நமக்குச் சமைத்துத் தந்திருப்பவர் என்று வில்லியம் ஸரோயனைச் சொல்லலாம்; பாதரஸத்தைப் போலக் கைக்கடியிலிருந்து நழுவிவிடும் உருவம் பெற்றவை அவர் கதைகள். உருவமில்லாதது போன்ற, ஆனால் அலசிப் பார்த்தால் நல்முத்துப் போன்ற உருவம் படைத்த சிறுகதைகள் செக்காவினுடையவை. மழமழவென்று பூசி மெழுகிய களிமண் உருண்டைகள் மோபாஸானின் சிறுகதைகள். ஓ ஹென்ரியின் சிறுகதைகள் அழுத்தி விட்டுவிட்டால் மேலெழும்பி நம் கையையே பின்பற்றும் விசை spring போன்றவை. குதித்துக் கொம்மாளமிட்டுக்கொண்டு நம்மை முட்டித் தாக்க வரும் காளைகள் போன்ற சிறுகதைகள் ஹெமிங்வேயினுடையவை. ராக்ஷஸ எட்டுக்கால் பூச்சி போல் நின்று நிலைத்து நம்மை மயக்கி அருவருப்பையும் கவர்ச்சியையும் ஒருங்கே தந்து வலை வீசும் உருவம் படைத்தவை வில்லியம் பாக்னரின் சிறுகதைகள். நகாசு வேலையை அதிஅற்புதமாகச் செய்த பொன் அணிகள் அந்டோல் பிரான்சின் கதைகள். கார்க்கியின் கதைகளோ கனமான காட்டு மரத்தால் செய்யப்பட்ட உபயோகமான சாமான்கள்...

நம் வளர்ச்சி

பொதுவாக இத்தனையும் சொன்ன பிறகு தமிழில் சிறந்த சிறுகதைகள் என்கிற விஷயத்துக்கு வருவோம்.

வ. வெ. சு. ஐயருக்குப் பிறகு தமிழில் சிறுகதை வளர்ந்த சரித்திரம் அநேகமாக நம்மில் எல்லோருக்குமே தெரியும். மூன்று பிரிவுகளாகத் தற்காலத்திய கதை வளர்ச்சியை நாம் கணிக்கலாம். (ஒன்று) இலக்கியத்துறை என்று எதிலும் அடங்காத கதை முயற்சிகள். இம்முயற்சியில் தலைசிறந்தவர்கள் என்று அ. மாதவையா, டாக்டர் சாமிநாதய்யர் (நினைவுக் கதைகள்), எஸ். வி. வி., ராஜாஜி முதலியவர்களைச் சொல்லாம். இந்தக் கதைகளில் கருத்தால், விஷயத்தால், அவரவர்கள் மனோதர்மப்படி முக்கியத்துவம் தந்துகொள்ளலாம். இலக்கிய ரீதியாக முக்கியத்துவம் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது உதாரணமாக விதவைகளை உயர்த்துவதற்காகப் பயன்படக்கூடியன மாதவையாவின் கதைகள்; கள் குடிப்பதை ஒழிக்க உபயோகப்படக்கூடியவை ராஜாஜி கதைகள் என்றும், பழைய தலைமுறை சரித்திரங்களை அறிந்துகொள்ள உ . வெ. சாமிநாதய்யரின் கதைகள் உதவும் என்றும், வெறும் பொழுதுபோக்காக எஸ். வி. வி.யின் கதைகள் உதவும் என்றும் பொதுவாகச் சொல்லலாம். இவற்றிலே இலக்கியத்தரம் ஏற்றிவைப்பதற்கில்லை. இந்தப் பழைய கதாசிரியர்களுக்கு வாரிசுகளாக இன்று கதைகள் எழுதுபவர்களில் கி. வா. ஜகந்நாதனையும், பெ. தூரனையும் சொல்லலாம். சந்தர்ப்ப விசேஷத்தால் மணிக்கொடி கோஷ்டியினருக்குத் தலைவராக ஒருசிலரால் கருதப்படும் பி. எஸ். ராமையாவின் கதைகளும் (பொதுவாக) இந்த ரகத்தைச் சேர்ந்தவையே என்பது எனது அபிப்பிராயம்.

இரண்டாவதாகச் சொல்லவேண்டியது பத்திரிகைக் கதைகள், 1930-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து தமிழில் பத்திரிகைகள் யுகம் தொடங்கியது என்றும், இன்று பத்திரிகை யுகம் அதன் உச்சியை எட்டியிருக்கிறது என்றும் சொல்லலாம். இப்படிச் சொல்லுகிறபோது பத்திரிகை அவசரம், நெருக்கடி, எல்லாமாகச் சேர்ந்து அமைந்த கதைகளைச் சொல்லலாம். கல்கி இத்துறையில் வழிகாட்டியாக அமைந்தார். இந்தப் பத்திரிகைக் கதைகளுக்கு பல்லாயிரக்கணக்கான வாசகர்களைச் சம்பாதித்துக் கொடுத்தவரும் கல்கிதான். கல்கியின் கதைகளில் அநேகமாக எல்லாமே பிறர் கதை அஸ்திவாரத்தில் தோன்றியவைதான். சற்றே மாற்றியோ திருத்தியோ, தமிழில் உருவம் என்று அவருக்கு எட்டாததொன்றைக் கற்பனை செய்துகொண்டு உருமாற்றி வைக்கப்பட்டவைதான். அவரைப் பின்பற்றிப் பலரும் பத்திரிகைக் கதை எழுதி வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதாவது கதைக்கும் சிறுகதைக்கும் இடையில் ஒரு உருவம் இது. இலக்கிய ரீதியில் கவனித்தால் ஒருவிதமான குண விசேஷமும் இல்லாதது. எத்தனையோ பேர் சாதாரணமாகக் கையாண்ட விஷயங்களை மறுபடியும் ஒருதரம் படிக்கக்கூடிய பாஷையிலே, சிரமப்படுத்தாத வகையிலே எழுதியிருக்கிறார்கள். இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் என்று நூற்றுக்கணக்கான இன்றைய ஆசிரியர்களைச் சொல்லலாம். வாசகர்களை நினைவில் வைத்துக்கொண்டு கதைகள் எழுதுபவர்கள் இவர்கள்; பத்திரிகைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே எழுதுபவர்கள். தமிழ்நாட்டில் சிறுகதைப் பரிசுகள் பலவற்றையும் தட்டிக்கொண்டு போகிறவர்கள் இவர்களாகத்தான் இருக்கமுடியும்; குறிப்பிட்ட பஞ்சாயத்தார் ஐந்து பேரைத் திருப்தி செய்யக்கூடியவர்கள் இவர்கள். இங்கு பட்டியல் தருவதென்று ஆரம்பித்தால் இடம் போதாது. ஆனால் இந்தப் பத்திரிகை ரகத்திலே, குறிப்பாக வெற்றிபெற்றவர்கள் என்று அகிலன், பூவாளூர் சுந்தரராமன், சிரஞ்சீவி முதலியவர்களைச் சொல்லவேண்டும். இந்தப் பட்டியலில் இடம்பெறுபவர்கள் என்று சுகி, ரஸவாதி, ரா. கி. ரங்கராஜன், எல்லார்வி, மாயாவி போன்ற பலரைச் சொல்லலாம்.

தமிழில் சிறந்த சிறுகதைத் தொகுப்பு என்று ஒன்று வெளியிட வேண்டும் என்று எனக்குப் பணியளிக்கப்பட்டால் இவர்களையும், இவர்களுக்கு முந்திய வகுப்பில் சேர்ந்தவர்களாகச் சொல்லிய கதாசிரியர்களையும் நான் சேர்க்கமாட்டேன் என்பது தெளிவு. இப்போது அப்படிப்பட்ட தொகுப்பு நூலில் யார் யாரைச் சேர்க்கலாம் என்பது பற்றி இலக்கிய விமர்சன ரீதியில் பார்க்கலாம்.

இலக்கிய ரீதியில் சிறுகதைக்கு இலக்கியப் பிரக்ஞையுடன் அமைந்த உருவம் வேண்டும். அதுதான் ஒரு குறிப்பிட்ட சிறுகதையை, கதை, பத்திரிகைக் கதை என்கிற தரத்திலிருந்து உயர்த்தி இலக்கியப்பூர்வமான சிறுகதையாக்குகிறது என்று சொன்னேன். தமிழுக்கு மட்டுமல்ல. உலக இலக்கியப் பரப்புக்கே சிறுகதைத்துறை புதுத்துறைதான். ஆகவே பெரும்பாலும் நல்ல சிறுகதாசிரியர்கள் என்று உலக இலக்கியத்தில் இடம்பெறுபவர்கள் எல்லோருமே இலக்கிய சோதனைக்காரர்கள்தான். சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து, புதுத்தடம் போட்டுக்கொண்டு, இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயன்றவர்களைத்தான் சாதனைக்காரர்கள் என்று சொல்லலாம். இதிலே ஓரளவேணும் வெற்றி பெற்றவர்களைத்தான் சிறந்த சிறுகதாசிரியர்கள் என்று சொல்ல வேண்டும். இப்படி வெற்றி பெற்ற முதல் தமிழ்ச் சிறுகதாசிரியர்களில் பலர், அந்தக் காலத்தில் ‘மணிக்கொடி’ என்கிற அல்பாயுஸுப் பத்திரிகையில் தங்கள் சிரஞ்சீவிக் கதைகளை எழுதினார்கள். அதற்கு மணிக்கொடிக்குச் சிறிதும் பொறுப்பில்லை என்றாலும்கூட, ‘மணிக்கொடி கோஷ்டி’ என்கிற ஒரு பெயர் நிலைத்துவிட்டது. அதனால் நஷ்டம் ஒன்றுமில்லையே!

மணிக்கொடியில் எழுதிய நல்ல சிறுகதாசிரியர்கள் இருவர் இன்று நம்மிடையே இல்லை. ஒருவர் புதுமைப்பித்தன். மற்றவர் கு. ப. ராஜகோபாலன். இவர்கள் இருவருமே இலக்கியத்தில், குறிப்பாகச் சிறுகதைத் துறையில், சோதனைகள் செய்து பார்க்கும் திறனும், செய்த சோதனைகள் சிலவற்றில் இலக்கிய வெற்றியும் பெற்றவர்கள். புதுமைப்பித்தன் செய்த சோதனைகள் அதிகம்; வெற்றி தோல்விகளும் அதிகம். ஆனால் பெற்ற வெற்றிகள் கணிசமானவை. கு.ப.ரா. செய்த சோதனைகள் குறைவு. அந்த அளவில் வெற்றி அதிகம். எண்ணிக்கையளவில் கணக்கெடுத்தால் கு. ப. ரா.வின் வெற்றி பெற்ற சிறுகதைகள் புதுமைப்பித்தனுடைய வெற்றி பெற்ற சிறுகதை எண்ணிக்கையைவிட அதிகமானாலும்கூட, புதுமைப்பித்தனுடைய சோதனை ஆழம், பரப்பு இரண்டும் அதிகம் என்பதனால் அது தமிழில் சிறுகதை வளத்தை அதிகமாக்கியது. பிற்காலச் சோதனையாளருக்குச் சிறப்பான வழிகாட்டியது என்றும் சொல்ல வேண்டும்.

இன்னும் நம்மிடையே இருந்தும், அதிகமாக எழுதாமல் மணிக்கொடியில் மட்டும் சிறப்பாக எழுதிய ஆசிரியர்களிலே மௌனி என்பவரைத் தனியாகச் சொல்லவேண்டும். இவருடைய பதினைந்து பதினாறு சிறுகதைகளிலே, சிறப்பாக ‘அழியாச்சுடர்’, ‘பிரபஞ்சகானம்’ என்கிற சிறுகதைகளில் இதுவரை தமிழில் காணக்கிடைக்காத ஆழம் காணப்படுகிறது. சொல்வதற்கு மிகவும் சிரமமான பல விஷயங்களை, ஒரு லக்ஷியக் காதல் நோக்கிலிருந்து, romantic melancholy என்கிற ரீதியில், அழுத்தம் தந்து அற்புதமான சிறுகதை உருவம் படைத்திருக்கிறார் மௌனி. தமிழில் இன்றுவரை வெளிவந்துள்ள சிறுகதைகளிலே மௌனியின் இந்த இரண்டு சிறுகதைகளும் ஒரு சிகரம் என்பது என் அபிப்பிராயம்.

ந. பிச்சமூர்த்தி ஆரம்ப காலத்தில் கவிதை நிரம்பிய பல சோதனைகள் நடத்தினார். அவற்றிலே வானம்பாடி, மோஹினி, தாய் முதலியவை சிறப்பான வெற்றிகள். ஒரு இருபது வருஷ மௌனத்துக்குப் பிறகு அவர் மறுபடியும் சிறுகதைகள் எழுத இரண்டொரு வருஷமாகத் தொடங்கியிருக்கிறார். அந்தக் கதைகள் அற்புத உருவம் பெற்று, ஆழமும் அர்த்தமும் கூடித் திகழ்கின்றன.

ந. சிதம்பர சுப்ரமணியன் என்பவருக்குச் சிறுகதையில் உருவம் என்கிறதில் நம்பிக்கை கிடையாது. ஆகவே அவருடைய சிறுகதைகளைச் சோதனைகளாகக் கருதமுடியாது. ஆனால் அவற்றிலே ஒரு அற்புதமான உருவம், ஆரம்பமும் நடுவும் முடிவும் அமைகின்றன என்பது படிப்பவர்களுக்குத் தெரியும். இதுபோல சிறந்த தமிழ்ச் சிறுகதைத் தொகுதியில் இடம்பெறக்கூடிய ஆசிரியர்கள் என்று மணிக்கொடி கோஷ்டியினரில் வேறு பலரையும் சொல்லலாம். அவரவர்கள் திறமைக்கேற்ப சோதனைகள் செய்து பார்த்தவர்கள். சி. சு. செல்லப்பா, க. நா. சுப்ரமண்யம், சுந்தா, கி.ரா., எம். வி. வெங்கடராமன், முதலானோர். செல்லப்பாவின் ஆரம்ப காலக் கதைகள் ஒருவிதமானவை, பிற்காலத்தில் அவர் எழுதியுள்ள சிறுகதைகளில் கொஞ்சம் கனமான பகைப்புலமும் லேசான விஷயமும் அடங்கியிருக்கின்றன என்று சொல்லவேண்டும். கி.ரா.வின் சிறுகதைகளைப் பாட புஸ்தகச் சிறுகதைகள் என்றே சொல்லலாம். அவற்றில் ஆழமோ கனமோ அதிகம் கிடையாது; ஆனால் உருவம் உண்டு. சற்றேறக்குறைய பத்திரிகைத் தரத்தைத் தொடுகிற மாதிரிக் கதைகள் அவருடையவை என்றாலும் இலக்கிய முயற்சிகள்தான். சுந்தா மணிக்கொடி கோஷ்டியில் இலக்கியாசிரியராகத் தொடங்கி பத்தரிகை எழுத்தாளராக முடிந்தவர். இவருடைய ஆரம்ப காலக் கதைகளில் சில நல்ல சோதனைகள். க. நா. சுப்ரமண்யத்தின் மணிக்கொடிக் கதைகளில் உருவப் பிரக்ஞையுடன், ஆழந்தெரியச் செய்யப்படும் முயற்சிகள் அதிகம். வெற்றி பெற்ற ஒரே கதை என்று ‘சாவித்திரி’ என்பதைச் சொல்லலாம். இவருடைய பிற்காலத்துச் சிறுகதைகளில் சோதனை அம்சம் அதிகம். எம். வி. வெங்கடராமன் பல பழங்கதைகளை அற்புதமான புதுமெருகுடன் எழுதியிருக்கிறார். சிறுகதைகளாக அவற்றிற்கு ஒரு இலக்கியத்தரம் உண்டென்றாலும்கூட, அவை பழங்கதைகளின் புதுமெருகுதான்.

மணிக்கொடி கோஷ்டியைச் சேராத சிறுகதாசிரியர்களும் சிலர் அந்தக் காலத்தில் எழுதத்தான் எழுதினார்கள். இவர்களில் தி. ஜ. ரங்கநாதனையும், த. நா. குமாரஸ்வாமியையும், சங்கரராமையும் சிறப்பாகச் சொல்லலாம். முன்னிருவர் சிறுகதைகளிலும் சோதனை அம்சங்கள் மிகக் குறைவு. ஒரு சாதாரண நிலையில் நின்று கதை சொல்வதை, இலக்கிய அந்தஸ்தைத் தொட்டும் தொடாமலும் செய்பவர் தி.ஜ.ர.. குமாரஸ்வாமியின் சிறுகதைகளிலே ஒரு romantic melancholy யும் காதல் கட்டமும் சிறப்புகள். சங்கரராம் வேட்டைக் கதைகள், மாட்டுக் கதைகள், நாட்டுக் கதைகள் பல எழுதியுள்ளார். இவை பத்திரிகைக் கதைகளின் அம்சங்கள் பூராவும் பொருந்தி, ஓரளவு இலக்கிய நயமும் உள்ளவை.

1940க்குப் பிறகு தோன்றிய சிறுகதாசிரியர்களிலே சிறப்பாக மூன்று பேர்களைச் சொல்லவேண்டும். இலக்கிய ரீதியில் லா. ச. ராமாம்ருதம் ஒரு சோதனைச் சிறுகதாசிரியர். அவர் ஒரே மாதிரியான சோதனைதான் செய்கிறார். சோதனைகளைப் புதுமைப்பித்தன் மாதிரி மாற்றாமல், மௌனி மாதிரி, ஒரே ரீதியில் செய்பவர். இதில் அவர் நல்ல வெற்றி பெற்றிருக்கிறார் - கொட்டு மேளம், இதழ்கள் போன்ற கதைகளில். இரண்டாவதாகச் சொல்லவேண்டியவர் தி. ஜானகிராமன். இவருடைய சிறுகதைகளிலும் சோதனைப் பரப்பு குறைவு. ஆனால் இவர் சிறுகதைகளிலே தனித்வமும், ஒரு கிண்டலும், பேச்சு நடையும், உருவமற்ற ஒரு உருவமும் தெரிகின்றன. மூன்றாவதாகச் சொல்லவேண்டிய கு. அழகிரிசாமி குரலை உயர்த்தாமல் தன் சிறுகதைகளில் பலவிதமான விந்தைகளைச் செய்து காட்டுகிறார். நடை வேகத்தை முடுக்காமல் அவர் செய்துள்ள சோதனைகளில் பல சிறப்பானவை என்றும், பல சோதனைகளை வெற்றிகரமாக அவர் செய்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.

1948க்குப் பிறகு தமிழ்ச் சிறுகதைகளிலே சோதனை வேகமும் இலக்கிய நோக்கமும் தேய்ந்துவிட்ட மாதிரித் தோன்றுகிறது. சமீப காலத்தில் அதாவது இப்போது இரண்டொரு வருஷங்களாகத்தான் மீண்டும் உயிர் வந்த மாதிரி இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் சொல்லலாம். முக்கியமாக அதுவரை செய்யப்பட்ட இலக்கிய முயற்சிகளைச் சரிவரத் தராதரம் அறிந்து கணிக்க யாரும் முயற்சி செய்யாததையும், பத்திரிகை ஆதிக்கம் எழுத்திலே அதிகமாகிவிட்டதையும் சொல்லலாம். இந்தப் பத்து வருஷங்களில் நூற்றுக்கணக்கான கதாசிரியர்கள் தோன்றினாலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பத்திரிகைக் கதைகள் எழுதத்தான் முற்பட்டார்கள். அதுதான் லாபகரமாக இருந்தது. இந்த மோசமான நிலையிலே பழைய மணிக்கொடி கோஷ்டியினர் சிலரும், பின் வந்த மூவரும் தவிர வேறு யாரும் சிறப்பான சிறுகதைகள் என்று சொல்லும்படி எதுவும் எழுதவில்லை. ஆனால் சென்ற நாலைந்து வருஷங்களில் வந்த எழுத்துகளில் பலவற்றைச் சலித்துப் பார்க்கும்போது இரண்டு புதுப் பெயர்கள் கிடைக்கின்றன. ஒன்று சுந்தர ராமஸ்வாமி - இவருடைய சிறுகதைகளில் ஒரு லேசான கிண்டலும் கேலியும், ஒரு தனித்துவ நோக்கும் காணக் கிடக்கின்றன. அவர் கடைசியில் எழுதியுள்ள நாலைந்து கதைகளில் அதிஅற்புதமான உருவம் அமைந்திருக்கிறது. அதேபோல ஜெயகாந்தன் என்ற ஒரு இளைஞர் எழுதுகிற சிறுகதைகளிலே சில நன்றாகவும் பல சிறுபிள்ளைத்தனமாகவும் இருக்கின்றன என்று சொல்லலாம். கிழவன் கிழவி பிணக்குக் கதை ஒன்றும், நந்தவனத்திலோராண்டி என்கிற சிறுகதையையும் நல்ல சிறுகதைகளாகச் சொல்லலாம்.

பழைய சிறுகதை ஆசிரியர்களில் ந. பிச்சமூர்த்தியின் சமீப காலத்திய சிறுகதைகள் பலவற்றில் உருவமும் அழகும் கூடியுள்ளன. செல்லப்பாவின் சிறுகதைகளிலே பகைப்புலம், பின்னனி அதிகமாகவும், விஷயத் தெளிவு குறைந்தும் காணப்படுகிறது. க. நா. சு.வின் சிறுகதைகளிலே சோதனை அம்சங்களும் தத்துவ அம்சங்களும் அதிகரித்துள்ளன. லா.ச.ரா.வின் கதைகளில் ஒரு உருவ அமைதி காணக்கிடைக்கிறது. சமீப காலத்திய தி. ஜானகிராமனின் சிறுகதைகளில் உருவம் தேய்ந்து பழங்கதைகளின் விஷயத்தின் நிழல்தான் ஆடுகிறது. கு. அழகிரிசாமி இந்த ஐந்தாறு வருஷங்களில் ஒரு சிறுகதைகூட எழுதியதாகத் தெரியவில்லை. சிறுகதை என்கிற இலக்கிய அந்தஸ்தை எட்டாத பத்திரிகைக் கதைகள்கூட பெரும்பாலும் இந்தக் காலத்தில் தரம் மிகக் குறைந்து 1948-க்கு முன் பத்திரிகைக் கதை எட்டிய தரத்தை எட்டவில்லை.

என் கண்ணில் படாத நல்ல சிறுகதைகள் தமிழில் இருக்கலாம் என்பதை நான் விவாத அளவில் ஒப்புக்கொண்டாலும்கூட, கூடிய வரையில் யாராவது நன்றாயிருக்கிறது என்று சொன்னாலும் கதையைத் தேடிப் படிக்கிறேன் என்பதனால், அப்படிப்பட்ட ஒரு கதாசிரியன் பெயரையும் நான் விட்டுவிடவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

ஆனால் இந்த இருபத்தைந்து முப்பது வருஷங்களில் தமிழ் இலக்கியத்தில் சிறுகதைத் துறையில் ஒரு வளம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வளத்தைச் சொல்லுகிற அளவில் சிறுகதைத் தொகுதி ஒன்று வெளியிடுவதானால் அதில் கட்டாயமாக புதுமைப்பித்தன், மௌனி, கு. ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, சிதம்பரசுப்ரமணியன், லா. ச. ராமாம்ருதம், தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி இந்த எட்டுப் பேருடைய சிறுகதைகளும் சேரும். இவை தவிர சி. சு. செல்லப்பா, க. நா. சுப்ரமண்யம், தி. ஜ. ரங்கநாதன், கி.ரா., த. நா. குமாரஸ்வாமி, சங்கரராம் முதலியவர்களுடைய சிறுகதைகள் இரண்டாம் பக்ஷமாக இடம்பெறலாம். இதிலே சுந்தர ராமஸ்வாமி, ஜெயகாந்தன் இருவருடைய சிறுகதைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். தமிழ்ச் சிறுகதையில் இலக்கிய வளத்தைக் காட்ட இப்படிப்பட்ட ஒரு தொகுப்பு பிரயோசனப்படலாம்.

குறிப்பிட்ட ஆசிரியர்களுடைய எந்தெந்தக் கதைகளைச் சேர்த்துக்கொள்வது என்பது பற்றி விசாரிக்க வேண்டியது அவசியம். அதையும் பின்னர் செய்து பார்க்கலாம்.

எழுத்து, ஜனவரி 1959

அனுப்பியவர்: "அழிசி" ஸ்ரீனி


Aug 16, 2013

”காஞ்சனா” தொகுப்பு பற்றி–க,நா.சு

இரண்டொரு வருஷயங்களுக்கு முன் அயல் நாட்டு இலக்கியாசிரியர் ஒருவர் இந்தியாவுக்கு வந்திருந்தார்.   இந்திய பாஷை இலக்கியங்களைப்பற்றி அறிந்துகொண்டு போக அவருக்கு ஆசை.    இப்படி இங்கு வந்து சேருகிற மற்றவர்களைப் போல இல்லாமல் அவர், அவசரப்படாமல். நிதானமாக, நின்று, ஆர்வத்துடன், பல விஷயங்களை விசாரித்து அறிந்து கொள்ள முயன்றார்.  வசதியும், தகுதியுமுள்ளவராக இருந்தார் அவர்.   பல பேச்சுக்கிடையில் அவர் என்னை ஒரு கேள்வி கேட்டார்.   üüபொதுவாக இந்தியா பூராவிலுமே, சிறப்பாகத் தமிழில், பழமை என்று ஒன்று தப்ப முடியாத ஆட்சி செலுத்துகிறது என்பது தெளிவவாகத் தெரிகிறது.  எங்கள் இலக்கியங்களில் எங்கள் அனுபவம் என்னவென்றால்,  பழமையின் பிடி மென்னியைப் பிடிப்பதாகவும் இருக்கக் கூடாது ; நழுவிவிடக்கூடியதாகவும் இருக்கக் கூடாது ; இன்றைய இலக்கியத்தில்  பழமையின் சாயை இருக்கத்தான் வேண்டும்.  ஆனால், அதுவே புதுமைக்கு  அனுசரணையாகவும் இருக்க வேண்டும்.  பழமையே புரட்சிகரமானதாக இருக்கலாம். அந்தமாதிரி எழுத்து ஏதாவது உங்களிடையே உண்டா?"

  "உண்டு" என்று சொல்லிவிட்டுச் சிறிது தயங்கினேன் நான்.  பிறகு சொன்KA.-NA.-SU-Portrait-01னேன் ; "ராமாயணக் கதை உங்களுக்குக் கூட ஓரளவு தெரிந்திருக்கும்.  விசுவாமித்திரருடன் அயோத்தியை விட்டுக் கிளம்பிய ராமன், மிதிலை போகும் வழியிலே  ஒரு கல்லை மிதிக்கிறான்.  அக்கல், கௌதமனின் சாபம் பெற்ற அகல்யை.  ராமன் பாத தூளியினால் அகல்யை சாப விமோசனம் அடைகிறாள்.  ராமனுக்குக் கல்யாணமாகிறது.    அயோத்தியில் பட்டாபிஷேக ஏற்பாடுகளுக்கு மத்தியிலே,  ராமனும் சீதையும், லக்ஷ்மணனும் காட்டுக்குப் போகிறார்கள்.  ராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போனான்.  போர் புரிந்து ராவணனைக் கொன்று சீதையை மீட்ட ராமன், உலக அபவாதத்துக்குப் பயந்து, சீதையை அக்கினிப் பிரவேசம் செய்யச் சொல்கிறான்.   பிறகு அயோத்தி திரும்பி முடி சூட்டிக்கொண்டான்.  ஒருநாள் ராமனும், சீதையும் கௌதமரின் ஆசிரமத்துக்குக் கிளம்பினார்கள்.  அங்கே கல்லாயிருந்து பெண்ணான அகல்யை, சீதையின் வாயைக் கிண்டுகிறாள்.  வனவாச அனுபவம், லங்கா வாசம் முதலியன பற்றிக் கேட்டறிந்து கொள்கிறாள் அகல்யை.  கடைசியாகத் தன்னை ராமன்  அக்கினிப் பரிûக்ஷ செய்ததையும் சொன்னாள் சீதை, "உன்னையா?" " ராமனா?" என்று கேட்ட அகல்யை மீண்டும்  கல்லானாள் என்று எங்களுடைய இன்றைய கதாசிரியர்களில் ஒருவர் கதை எழுதியிருக்கிறார்.    நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் இதில் இருக்கிறது." என்றேன்.

  கதையை மனசில் வாங்கித் தெரிந்து கொள்ள அந்நிய நாட்டு இலக்கியாசிரியருக்குச் சிறிது நேரம் பிடித்தது.  பிறகு அவர் சொன்னார் ; "இந்தப் பிரச்சினையை மஹா கவி வால்மீகியே நியாயப்படித் தீர்த்துவைத்திருக்க வேண்டும்.    தன்மனைவிக்கு ஒரு நீதி, பிறன் பெண்டுக்கு ஒரு நீதி என்று லக்ஷிய புருஷனாகிய ராமனே நினைத்ததாக முடிவு ஏற்படும்படி அவர் விட்டது தவறுதான்." பிறகு கேட்டார் ; "அந்தக் கதையின் ஆசிரியர் பெயர் என்ன?" என்று.

"புதுமைப்பித்தன் என்று புனைப்பெயர் வைத்துக் கொண்ட ஒருவர்.  அவர் இயற்பெயர் விருத்தாச்சலம்," என்றேன் நான்.   தொடர்ந்து சொன்னேன் ; "இவ்வளவு தெளிவாக உங்களுக்குத் தெரிந்துவிட்ட விஷயம் எங்கள் பெரியவர்களுக்கு அவ்வளவு சுலபத்தில் விளங்கி விடுவதில்லை.  ஆதி கவி அப்படி எழுதவில்லை ;  இந்த புதுமைப்பித்தன் யார் சுண்டைக்காய் என்று சண்டைக்கே வந்து விடுவார்கள்.   ஆனால், அது என்னவானாலும் இன்றுள்ள சிருஷ்டிகர்த்தாக்கள் பழமைபற்றிக் கொண்டுள்ள நோக்கம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என்றே எண்ணுகிறேன்."

புதுமைப்பித்தனின் கதைத் தொகுதிகளில் ஒன்றான காஞ்சனை என்கிற தொகுதியில் உள்ள கதைகளில் ஒன்று மேலே கூறிய "சாப விமோசனம்", அற்புதமான கதை ; அற்புதமான உருவத்தில் விழுந்திருக்கிறது.  இந்தத் தலைமுறையின் சிறந்த சிறு கதைகளில் அது ஒன்று என்பது என் அபிப்பிராயம்.  அது வெளிவந்ததிலிருந்து இன்று வரை அந்தக் கதையை மட்டும் நான் இருபது தடவையாவது படித்திருப்பேன்.  படிக்குந்தோறும் படிக்குந்தோறும் புதிது புதிதாக இன்பம் தரும் கதை அது.   இப்படித் திரும்பத் திரும்பப் படிக்கக்கூடிய கதைகளும் நூல்களுமே நல்ல கதைகளும் நூல்களுமாகும் என்று சொல்வதில் தவறு என்ன?

  புதுமைப்பித்தன் தமிழில் இருநூறுக்கும் அதிகமாகவே கதைகள் எழுதியிருக்கிறார்.  எல்லாக் கதைகளுமே ஒரே தரத்தவை என்று சொல்லமுடியாது எனினும் ஒரு முப்பதுக்குமேல் நல்ல கதைகள் எழுதியிருக்கிறார்.  அவற்றில் ஒரு பத்தாவது காலத்தால் சாகாது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

காஞ்சனை என்கிற இந்தத் தொகுதியிலேயே இன்னொரு கதையைப் பார்க்கலாம்.  இது வேறு ஒரு தினுசான கதை.

"வீரபாண்டியன் பட்டணத்துச் சுப்பையா பிள்ளை, ஜீவனோபாயத்துக்காகச் சென்னையை முற்றுகையிட்ட போது சென்னைக்கு மின்சார ரயிலோ, அல்லது மீனம்பாக்கம் விமான நிலையமோ ஏற்படவில்லை.  மாம்பலம் என்ற செமண்டு கட்டிட நாகரிகம் அந்தக் காலத்திலெல்லாம் சதுப்பு நிலமான ஏரியாக இருந்தது.   தாம்பரம் ஒரு தூரப் பிரதேசம்" என்று தொடங்குகிறது கதை.  "பவள்க்காரத் தெருவில், திருநெல்வேலிவாசிகளின் சுயஜாதி அபிமானத்தைக் கொண்டு வளர்ந்த தனலட்சுமி புரோவிஷன் ஸ்டோர்ஸ், பிற்காலத்தில் தனலட்சுமி ஸ்டோர்ஸ் ஜவுளிக் கடையாக மாறியது.  தேசவிழிப்பின் முதல் அலையான ஒத்துழையாமை  இயக்கமும், பின்னர் அதன் பேரலையான உப்பு சத்தியாக்கிரஹமும், சுப்பையாப் பிள்ளையின் வாழ்க்கையிலோ மனப் போக்கிலோ மாறுதல் எதுவும் ஏற்படுத்தவில்லை.  வீரபாண்டியன் பட்டணத்தின் ஒரு சிறு பகுதியாகவே அவர் சென்னையில் நடமாடினார்.  ஜீவனோபாயம், பிறகு சௌகரியப்பட்டால் பிறருக்கு உதவி, சமூகத் தொடர்புகளுக்குப் பயந்து பணிதல் எல்லாம் சேர்ந்த உருவம் சுப்பையா பிள்ளை.  மின்சார ரயில் அவர்  வாழ்வில் ஒரு மாறுதலை ஏற்படுத்தியது.  அவர் தாம்பரத்தில் குடியேறினார்.  தினம் மின்சார ரயில் பயணம் அவசியமாயிற்று.....விடியற்காலம் கிணற்றுத் தண்ணீர் ஸ்நானம், பழையது, கையில் பழையது மூட்டை, பாஸ் வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டனாச் சில்லரைýý  இவற்றுடன் பவளக்காரத் தெருவுக்குக் கிளம்புவார்.  "இரவு கடைசி வண்டியில் காலித்தூக்டகுச் சட்டி, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டனாச் சில்லரை, பசி, கவலை-இவற்றுடன் தாம்பரத்துக்குத் திரும்புவார்."

சுப்பையா பிள்ளையின் நிறைந்த இந்த வாழ்வில் இன்னொரு நிறைவு அனுபவமும் புகக் காத்திருந்தது.  மாம்பலம் கூட்டத்தில் நெருக்கியடித்துக்கொண்டு மின்சார ரயிலில் ஏறினாள் ஒரு பெண்மணி.  சுப்பையா பிள்ளை உட்கார்ந்திருந்த ஆஸனத்துக்கு எதிர் ஆஸனத்தில் உட்கார்ந்து கொண்டாள்.  மாணவி  வைத்தியத்துக்குப் படிப்பவள்.  கழுத்தில் லாங் செயினுடன் ஒரு pudu5ஸ்டெதாஸ்கோப்பும் அலங்காரத்துக்காகத் தொங்கிற்று.   இன்ன வர்ணம் என்று நிச்சயமாகக் கூறமுடியாத பகல் வேஷ வர்ணங்களுடன்  கூடிய ஒரு புடைவை.  அதற்கு அமைவான ஜாக்கெட்.  செயற்கைச் சுருளுடன் கூடிய தலைமயிரைக் காதை மறைத்துக் கொண்டையிட்டிருந்தாள்.  நெற்றி உச்சியை உள்ளங்கையால் தேய்த்துக் தினவு தீர்த்துக்கொண்டார் சுப்பையா பிள்ளை.  கண்களைக் கசக்கிக் கொண்டு, ஒரு வாரமாகக் கத்தி படாத முகவாய்க் கட்டையைத் தடவிக் கொடுத்துக் கொண்டு, ஜன்னல் வழியாக எதிர்ப்பக்கத்தில் தெரியும் வீடுகளைப் பார்த்தார்.   பார்வை மறுபடியும் அந்தப் பெஞ்சுக்குத் திரும்பியது....'பெத்துப் போட்டால் போதுமா?' என்று தன் பெண்ணைப்பற்றி நினைத்தார்....ஷாக் அடித்தது போலப் பிள்ளையவர்கள் காலைப் பின்னுக்கு இழுத்தார்.  அவளது செருப்புக்காலின் நுனி அவரது பெருவிரல் நுனியைத் தொட்டது.   பிள்ளையவர்கள் கால், உடல், சகலத்தையும் உள்ளுக்கிழுத்துக் கொண்டார்....அவர் மனம் எப்பவோ நடந்த கல்யாண விஷயத்தில் இறங்கியது.  வீர பாண்டியன் பட்டணத்துக்கருக்கு மாப்பிள்ளை-மேளதாளக் குரவைகளுடன் வீட்டில் குடி புகுந்த ஸ்ரீமதி பிள்ளையின் மஞ்சள் அப்பி சுத்துருவில் மருக்கொழுந்துடன் கூடிய நாணிக்கோணிய உருவம்.  பிறகு தேக உபாதையையும் குடும்பச் சுமையும் தூக்கிச் சென்ற நாள் சங்கிலிகள்.  குத்துவிளக்கை அவித்துவைத்த குருட்டுக் காமம்..." எதிரில் இருந்த பெண் பார்க்கில் இறங்கிவிட்டாள்.  அதை அவர் கவனிக்கவேயில்லை.

  இது üசுப்பையா பிள்ளையின் காதல்கள் என்னும் கதை.

கட்டு எதற்கும் அடங்காத கதாசிரியர் புதுமைப்பித்தன்.  இதுதான் முடியும், இது முடியாது என்பதில்லை அவருக்கு,  எதையும் முயற்சி செய்து லாவகமாக உருவாக்கி விடுவதில் சமர்த்தர்.  சித்த வைத்திய தீபிகையின்  ஆசிரியரான கந்தசாமிப் பிள்ளையைத் தேடிக்கொண்டு கடவுளே வந்துவிட்டார்.  அவர் கதைகளில் ஒன்று;  பிராட்வே முனையில் ஹோட்டல் சுகாதாரம் பேசிக் கொண்டே காபி சாப்பிட்டுவிட்டு, நர வாகனத்தில் (ரிக்ஷாவில்தான்)  வீடு போய்ச் சேருகிறார்கள் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்.   கடவுளிடமே தன் பத்திரிகைக்கு ஜீவிய சந்தா வசூல் செய்துவிடப் பார்க்கிறார்  கந்தசாமிப்பிள்ளை.  "யார் ஜீவியம் ..." என்று கேட்கிறார் கடவுள். வீட்டிலே கந்தசாமிப் பிள்ளையின் பெண்குழந்தை அவர்களை வரவேற்கிறது.    "எனக்கு என்னகொண்டாந்தே?" என்று கேட்டாள் குழந்தை. "என்னைக் கொண்டாந்தன்" என்றார் பிள்ளை.  "என்னப்பா தினந்தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரி கடலையாவது கொண்டாரப் படாது" என்று சிணுங்கியது குழந்தை.  "பொரி கடலை உம்புக்காகாது. இதோபார் உனக்கு ஒரு தாத்தாவைக் கொண்டுவந்திருக்கிறேன்" என்று தன் பெண்ணுக்குக் கடவுளை அறிமுகப்படுத்திவைத்தார்.  குழந்தையின்பேரில் வைத்த கண்களை மாத்த கடவுளால் முடியவில்லை.  கந்தசாமிப் பிள்ளைக்குச் சிறுதொண்டர் கதை ஞாபகம் வந்துவிட்டது.  "சற்றுத் தயங்கினார் ; 'இப்பவெல்லாம் நான் சுத்த சைவன். மண்பானைச் சமையல் தான் பிடிக்கும். பால் தயிர்கூடச் சேர்த்துக் கொள்வதில்லை' என்று சிரித்தார் கடவுள்.  ஆசைக்கு என்று காலந் தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுந்து என்றார் கந்தசாமிப் பிள்ளை....'வாடியம்மா கருவேப்பிலைக் கொளுந்தே...' என்று கைகளை நீட்டினார் கடவுள்.  ஒரே குதியில் அவர் மடியில் ஏறிக்கொண்டது குழந்தை.   'எம்பேரு கருகப்பிலைக் கொழுந்தில்லை ; வள்ளி.  அம்மா மாத்திரம் என்னைக் கறுப்பி, கறுப்பின்னு கூப்பிடுதா....நான் என்ன அப்படியா?' என்று கேட்டது.  அது பதிலை எதிர் பார்க்கவில்லை" புதுமைப்பித்தனின் கதைகளில் வருகிற குழந்தைகள் அற்புதமான சிருஷ்டிகள்.  இன்றைய தமிழ் எழுத்திலே அந்தக் குழந்தைகளைப் போன்ற பூரணமான பாத்திரங்கள் வேறு இல்லை என்பது என் அபிப்பிராயம். அவை மறக்க முடியாத சிருஷ்டிகள்.
 
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்கிற கதை பூராவையுமே சொல்லிவிட வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.  அவ்வளவு நல்ல இடங்கள் பல இருக்கின்றன அதில்.  'கடவுளிடமும் ஜீவிய சந்தா வாங்கிக்கொண்டு தான் அவரை விட்டார்  கந்தசாமிப் பிள்ளை.....' என்று சொல்லி ஒருவாறாக முடித்துவிடுகிறேன்.
 
காஞ்சனைத் தொகுதியிலே முதல் கதையான காஞ்சனையே வெகு நுட்பமான ஒரு விஷயத்தை அழகிய உருவத்தில் சொல்கிறது, பழைய பெரிய எழுத்து விக்கிரமாதித்தின் கதைப் பாணியில் செல்லுகிற ஒரு மூட்டைப் பூச்சி கதை இருக்கிறது இத்தொகுதியில் - கட்டிலைவிட்டிறங்காக் கதை என்று பெயர் அதற்கு.   'மசாமசானம்' என்று ஒரு கதை.  அதில் தெரு ஒரத்திலே பிச்சைக்காரன் செத்துக்கொண்டு கிடக்கிறான்.  ஒரு குழந்தை மாம்பழத்தை மூக்கில் வைத்துத் தேய்த்துக் கொள்கிறது.   'செல்லம்மாள்' என்ற கதையில் செல்லம்மாள் இருபது பக்கங்களிலும் செத்துக் கிடக்கிறாள்-அவள் புருஷன் கடைசிக் கிரியைகளைச் செய்யத் தன்னைத் தயார் செய்து கொள்கிறான்.
 
இந்தத் தொகுதியில் இல்லாத வேறு பல கதைகளையும் பற்றிக் இங்கு சொல்லவேண்டும் போல இருக்கிறது எனக்கு.  சிற்பியின் நரகம், மனக்குகை ஓவியங்கள், ஞானக்குகை, கபாடபுரம்....இன்னும் பல ;  விதவிதமான கதைகளை விதவிதமான உத்திகளைக் கையாண்டு எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன்.    அவர் கதைகளிலே இரண்டு விசேஷ அம்சங்கள் சொல்லலாம்.  (ஒன்று) அவர் அவசியம்  என்று தேர்ந்தெடுத்துச் சொல்லும் விஷயங்கள்; அவர் கையாண்ட விஷயங்கள் எல்லாமே புரட்சிகரமானவை என்று பொதுவாகச் சொல்லலாம்.  (இரண்டு) அதைச் சொல்ல அவர் கையாண்ட நடை.  சிலசமயம் அவர் நடை தடுமாறி விஷயத்தை எட்டாது போனதும் உண்டு.   ஆனால் அவருடைய சிறந்த கதைகளில், சொல்லும் சிந்தனையும் சேர்ந்து அமைந்தன.  திருநெல்வேலி பேச்சுத் தமிழை அவர் பல இடங்களில் கவிதையாகவே கையாண்டிருக்கிறார். 

வருகிற நூற்றாண்டில் தமிழ்ச் சிறு கதைச் செல்வத்துக்கு நமக்குப் பலமான அஸ்திவாரம் போட்டுத் தந்து விட்டவர் புதுமைப்பித்தன் என்று சொல்ல வேண்டும்.
நன்றி: நவீன விருட்சம்

Apr 15, 2013

‘இலக்கிய விசாரம்’ முன்னுரை - க.நா.சு

லக்கிய விசாரம் என்பது சற்றுக் கனமான விஷயம்தான். அதைச் சுவைபடச் செய்ய வேண்டிய அவசியம் ஆரம்பத்தில் இன்றுள்ள நிலையில் உண்டு. கதைகள், நாவல்கள், நாடகங்கள் என்று எழுதும் ஆசிரியன் வாசகனை நினைத்துக்கொண்டு எழுதக்கூடாது. என்கிற கட்சியைச் சேர்ந்தவன் நான். எழுதி முடித்த பிறகு வாசகன் வரலாமே தவிர, அதற்கு முன் இலக்கியாசிரியன் முன் அவன் வரக்கூடாது; வந்தால் அவன் எழுத்துத் தரம் குறைகிறது. ஆனால் இலக்கிய விசாரம் செய்யும்போது மட்டும் எந்த இலக்கியாசிரியனும் வாசகனை மனத்தில் வைத்துக் கொண்டுதான் செய்தாக வேண்டும். இப்படிச் செய்கிற இலக்கிய விசாரத்தை ஒரு லக்ஷிய விசாரகனுக்கும் வாசகனுக்கும் நடக்கிற சம்பாஷணை உருவத்திலே செய்தால் நன்றாக வருமே என்று எனக்குப் பல kanasu98நாட்களாகவே ஒரு நினைப்பு.

ஜியார்ஜ் மூர் என்கிற ஆங்கில இலக்கியாசிரியர் Conversations in Ebury Street என்று லேசாக ஆங்கிலச் சம்பாஷணைகள் மூலம் இலக்கிய விசாரம் செய்து பார்த்திருக்கிறார். அதைப் படிக்கும்போது, அதேமாதிரி நானும் செய்து பார்க்கலாமே என்று எனக்குத் தோன்றியதுண்டு. நண்பர் புதுமைப்பித்தன் பதிப்பித்த ‘தினமணி ஆண்டு மலரி’லே இலக்கியச் சோலை என்று ஒரு சம்பாஷணை எழுதினேன். அது திருப்திகரமாகவே அமைந்தது. ஒரே நோக்கை மட்டும் எடுத்துச் சொல்லாமல், எதிர்க் கட்சியையையும் கூடியமட்டும் எடுத்துச் சொல்லிவிட முடிகிறது எனபது இந்த சம்பாஷணை உருவத்தில் ஒரு வசதி. அதேபோலப் பல வருஷங்களுக்குப் பிறகு பாரதியாரைப்பற்றி என்று பி.ஸ்ரீ.ஆசாரியா அப்போது நடத்திக் கொண்டிருந்த ‘லோகோபகாரி’ யில் ஒரு சம்பாஷணை எழுதினேன். அதுவும் எனக்குத் திருப்திகரமாகவே வந்தது.

இந்த இலக்கிய விசாரம் என்கிற விஷயத்தைச் சம்பாஷணை உருவத்தில் நான் 1945, 1946ல் திட்டமிட்டேன். உலக இலக்கியம் பூராவும் சுற்றி வரவும், கனமான விஷயங்களை லேசாகச் சொல்லவும், அவசியமானபோது பேச்சு விஷயத்துக்குத் திருப்பம் தரவும் சம்பாஷணை உருவம் மிகவும் லாயக்கானது என்பது இதை எழுதிய பிறகு எனக்கே முன்னைவிட அதிகத் தீர்மானமாயிற்று. இந்த உருவத்திலே தொடர்ந்து இலக்கிய விசாரத்தைச் செய்து வர நான் உத்தேசித்திருக்கிறேன்.

எந்த மொழியிலுமே இலக்கிய விசாரத்தின் ஆரம்ப காலத்திலே சில சிரமங்கள் உண்டு. சில வார்த்தைகளை நாம் எந்த அர்த்தத்தில் உபயோகிக்கிறோம் என்பது வாசகனுக்குத் தெளிவாகாத விஷயமாக இருக்கிறது. பழக்கத்தால் தான் அதை அவன் அறிந்து கொள்ள முடியும். வேதாந்தம், சைவ சித்தாந்தம் போன்ற துறைகளில் உள்ளதுபோல இலக்கிய விசார உலகமும் சங்கேத வார்த்தைகள் நிரம்பியது. நம்மிடையே தமிழ் இலக்கிய விசாரம் செய்ய ஆரம்ப்பிப்பவர்கள் மேலை நாடுகளில், முக்கியமாக ஆங்கிலம் வழங்கும் பிரதேசத்தில், உபயோகமாகும்Stream of Conciousness சங்கேத வார்த்தைகளை அப்படியே மொழிபெயர்த்து உபயோகித்து விடுகிறார்கள். ஆங்கில, பிறமொழி சங்கேத வார்த்தைகள் எதுவும் வராமல் விமர்சனம் செய்ய வேண்டும் – தமிழுக்கு என்று தனியாக இலக்கிய விசார சங்கேதங்கள் ஏற்படும் வரையில் என்பது என் அபிப்பிராயம். இல்லாவிட்டால் தமிழ் இலக்கிய விசாரம் ஆங்கில, ஐரோப்பிய இலக்கிய விசாரத்தின் நிழலாகவே இருக்கும்; தனி உருவம் பெறாது.

இந்த வழக்குக்குப் பண்டிதர்கள்தான் முதல் பலியாகிறார்கள் – ஒரு பண்டிதர் lyric என்கிற ஆங்கில சங்கேத பதத்திற்குத் தமிழ் அர்த்தம் தருவதற்காகப் படாதபாடு படுகிறார். வேறு ஒருவர் நனவோடை இலக்கியம் என்று Stream of Conciousness என்கிற ஒரு இலக்கிய நாவல் உக்தியை ஒரு இலக்கியமாகவே நினைத்துக் கட்டுரை எழுதுகிறார். இதிலேC onciousness என்பதே ஒரு தனிச் சாஸ்திரத்தின் தனிச் சங்கேதம். இலக்கியத்துக்கு வரும்போது அது எப்படி எப்படியோ மாறுகிறது. நமது பேராசிரியர் எழுதுவதற்கும், Stream of Conciousness என்று மேலைநாட்டார் சொல்வதற்கும் ஸ்நானப் பிராப்தி கூடக் கிடையாது என்பது வெளிப்படை விஷயம் தெரிந்தவர்களுக்கு.

இப்படியெல்லாம் இலக்கிய விசாரத்தை வளரவிடக்கூடாது. தமிழில் சிறுகதையும், நாவலும் இன்று தமிழ் உருவம் பெற வேண்டும் என்கிற ஆசை உள்ளவன் நான். இலக்கிய விமர்சனமும் தமிழ் உருவம் பெற வேண்டும் என்கிற ஆசை நிறவேற இலக்கிய விசாரம் என்கிற இச்சிறு நூல் நான் கட்டுகிற முதல் படி.

திருவல்லிக்கேணி    க. நா. சுப்ரமண்யம்.       10-8-58

நன்றி:  நினைவுத்தடங்கள் -  வே.சபாநாயகம்

Oct 15, 2012

க. நா. சு. வின் ஓர் உரை

க.நா.சு.100

இத்துடன் வெளியாகும் க.நா.சு.வின் உரை 16.2.1988 ஆம் நாள் ஒய்.எம்.ஸி.ஏ. கருத்தரங்கில் நிகழ்த்தப் பெற்றது. சிறுகதைபற்றிய பல விளக்கங்களையும் கொண்டிருப்பதே அவ்வுரையின் முக்கியத்துவம். இதுவரை பிரசுரமாகாதது.

மா. அரங்கநாதனின் ‘வீடு பேறு’ சிறுகதை தொகுப்பு பற்றிய கருத்தரங்கத்தின் போது ஆற்றிய உரை.

() () ()

இருபது இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்பொழுது புத்தக விமர்சன கூட்டங்களுக்குப் போனால் விமர்சனங்களில் ஒரு மாறுதல் இருப்பதையும் ஓரளவிற்கு புத்தகங்களைப் பற்றி பொதுவாகப் பேசுவதற்கு பலபேர் தயாராக இருக்கிறார்கள் என்பதும் நன்றாகவே தெரிகிறது. புத்தகத்தைப் பாராட்டி பேசிவிடுவதோடு நிறுத்திவிடாமல், காசு கொடுத்து வாங்கி இது நன்றாக இருக்கிறது என்று பத்துப்பேரிடம் சொல்லி அவர்கள் சந்திக்கிற ஆட்களும் மற்றவர்களிடம் சொன்னால், அந்தப் பத்துப்பேரும் வாங்காவிட்டாலும் ஓரிருவர் வாங்குவார்கள்  என்ற ஒரு நம்பிக்கையில் புத்தக விற்பனை ஓரளவு ka-naa-su-1நன்றாக ஆகுமென்று தோன்றுகிறது. இது ரொம்ப அவசியமான ஒரு விஷயம் என்று எண்ணுகிறேன். புத்தக விமர்சனக் கூட்டங்கள் மிகவும் சிறப்பாக நடக்கின்றன. இரண்டு மூன்று கூட்டங்களுக்கு நான் தலைமை வகித்தும், பேசப்போயும், வேடிக்கைப்பார்க்கப் போயும் அறிந்துக் கொண்டிருக்கிறேன். அந்த அளவுக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது என்று நான் சொல்லலாம். நல்லவேளையாக இதைச் சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன்.

இரண்டாவதாக சிறுகதைகள் என்பதைப் பற்றி பேசுவதற்கு நிறையவே இருக்கிறது. ஒரு எழுபத்தைந்து வருட சரித்திரம் இருக்கிறது. இந்த எழுபத்தைந்து வருட சரித்திரத்தில், சிறுகதைகளில் மிகவும் சிறப்பாக செயலாற்றி இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டுமானால், ஒரு பத்து / இருபது பேரை பெயர் சொல்லி குறிப்பிட்டுச் சொல்ல்லாம் என்று நான் சொல்வேன். கொஞ்சம் தாராளமாகச் சொல்பவர்கள் நாற்பது ஐம்பது பேரைச் சொல்ல்லாம் என்று சொல்வார்கள். ஒரு காலத்தில் கிட்டத்தட்ட முப்பது நாற்பது பேர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களில் ஒரு நான்கைந்து பேர்களைத்தான் சொல்ல முடிகிறது. அல்லது ஏழெட்டு பேரை சொல்ல முடிகிறது என்று வைத்துக் கொண்டாலுங்கூட அந்த ஏழெட்டுப் பேரை மட்டும் ஏன் சொல்லுகிறோம் என்று யோசித்துப் பார்க்கையில், அவர்கள் எல்லாருமே மற்றவர்கள் எழுதியதிலிருந்து மாறுபட்ட எழுத்துக்களைக் கொடுக்க வேண்டுமென்று முயற்சி செய்தார்கள் என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. அந்த மாதிரிப் பார்க்கும்போது இன்று எழுதப்படுகிற எழுத்துகளிலிருந்து மிகவும் பெரிய அளவில் மாறுபட்ட எழுத்தை மா. அரங்கநாதன் தன்னுடைய ‘வீடு பேறு’ என்ற நூலில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். ஒன்று இரண்டல்ல-இருபது கதைகள் இருக்கின்றன. இந்த கதைகள், இந்த மாறுபட்ட விதத்தில் பொது மக்களுக்கு இதுதான் பிடிக்குமென்று எல்லாரும் தெரிந்து எழுதுகிற சிலர் பழக்கமாக கையாளுகிற – புள்ளிவைத்த இடத்தில் கையெழுத்து போடுகிறமாதிரி வார்த்தைகள் போட்டு நிறுத்திவிடுகிற கதைகள் எழுதுகிற ஒரு தமிழ் உலகத்தில் – தனிப்பட்ட ஒரு குரலாக ஒலிக்கிறது. சிறு கதைகள் எழுதுவதற்கு என்றும் தைரியம் வேண்டியதாக விருக்கிறது. இதில் ஒரு விசேடம் என்னவென்றால், அந்த தைரியம் அரங்கநாதனுக்கு இருந்ததுமட்டுமல்ல-இந்தக் கதைகளில் சிலவற்றை பத்திரிகைகளிலும் பிரசுரித்துப் பார்த்திருக்கிறார். அதாவது ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு சிறுகதைகள் என்று தெரிந்து படிக்க்க்கூடிய வாசகர்கள் படிக்கும் சில பத்திகைகளில் பிரசுரித்துப் பார்த்திருக்கிறார். இதில் எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. அதை – பெயரைச் சொல்லாமல் – சொல்கிறேன். இவருடைய கதையை, ‘மைலாப்பூர்’ என்ற கதையை; ஞனரதத்தில் வெளியிட்டபோது, வெளியிட்டப்பிறகு, நான் ஒரு நண்பரை சந்திக்க நேர்ந்தது சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது ‘‘எனக்கு அந்தக் கதையில் என்ன எழுதியிருக்கிறார் என்று புரியவில்லை’’ என்று சொன்னார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் நான் பேசிக்கொண்டிருந்த அந்த நண்பர் கொஞ்சம் அறிவாளி. விமர்சனங்கள்-கதை என்று அவரும் எழுதுகிறவர்தான். எழுதுவதில் கொஞ்சம் திறமையுள்ளவர், படிப்பதிலும் திறமையுள்ளவர் என்று நான் நம்பிக்கொண்டிருந்தவர்தான். சொன்னவுடன் எனக்கு கொஞ்சம் வியப்பாகவும் இருந்த்து. என்ன புரியவில்லை என்று கேட்டேன். எதற்காக இதை எழுதியிருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை என்று சொன்னார். நான் அதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்து விட்டு நீங்கள் இன்னொரு முறை படித்துப் பாருங்கள் என்று சொல்லிவிட்டு, விட்டுவிட்டேன். ஆனால் அன்றிரவு தூங்கப் போகும்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. உங்களை உங்களுக்கே காட்டிக் கொடுப்பதற்காகத் தான் அந்தக்கதையை எழுதி இருக்கிறார் அரங்கநாதன் என்று சொல்லலாமா என்று தோன்றியது. இது எந்த சிறுகதை ஆசிரியரைப் பற்றியும் – தரமாக எழுதுகிற எந்தச் சிறுகதை ஆசிரியரைப் பற்றியும் – சொல்லக்கூடிய ஒரு விஷயம். ஆசிரியன் தன்னைப்பற்றி மட்டும் காட்டிக் கொள்வது இல்லை. வாசகனுடைய அறிவு தளத்திலிருந்து, அவனுடைய மனதிற்குள் அலைகளை எழுப்புகிற வேகத்தையும் அவனைச்சுற்றி சித்தரிக்கிறான். அவனுக்கே புரியாத சில விஷயங்களை புரியும்படியாக செய்வதற்கு புரியாத சில விஷயங்களை புரியும்படியாக செய்வதற்கு இந்தச் சிறுகதைகள் பிரயோஜனப்படுகின்றன. நல்ல சிறுகதைகள் என்று சொல்லக்கூடியவை பிரயோனப்படுகின்றன என்று சொல்ல வேண்டும். அந்த மாதிரி இந்தக்கதைகள் வேண்டியிருக்கிறது என்று அவரிடம் சொல்லாமல் விட்டுவிட்டோமே என எண்ணிக்கொண்டேன். அதற்குப் பிறகு அதைப்பற்றி பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை – அதனால் சொல்லவில்லை. இந்த மாதிரி கதைகள் எழுதுகிறபோது, ஒரு கனமாக கதைகள் எழுதுகிறவர்களை, அதிகமாக பாராட்டுவது என்பது நம்மூரில் பழக்கமில்லை என்று இக்கட்டத்தில் இரண்டுபேர் பாராட்டிவிட்டார்கள்.

தன்னுடைய பர்சனாலிட்டியை பாதித்துக் கொள்வதற்காகவோ, தனக்குள்ளேயே ஒரு முக்கியம் ஏற்படுத்திக் கொள்வதற்காகவோ சிறுகதை ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் என்று பொதுவாகச் சொல்ல்லாம். ஆனால் வாசகன் எதிர்கொண்டு, இந்த கதையைப் படிக்கிற வாசகன் மனதில் தன்னைப் பற்றி, அதாவது அந்த வாசகனைப் பற்றி ஓர் உருவத்தை ஏற்படுத்துவதற்காகவும் இந்த சிறுகதை ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் என்று சொல்லவேண்டும். இதை மிகவும் சிறப்பாக சமீப காலத்தில் செய்திருப்பவர் என்று லத்தின் அமெரிக்காவில் உள்ள ‘ஜார்ஜ் லூயி போர்ஹே’ என்ற ஓர் ஆசிரியரைப் பற்றி, அவர் ஓர் அறிவுதளத்தில் நின்று எழுதுகிறார் என்கிற அளவில் சொல்லுகிறார்கள். அவருக்கு உலகம் பூராவும் புகழ் பரவியிருக்கிறது என்பது உண்மை. ஆனால் தமிழில் இருக்கிற ரசனை என்னவென்றால் ஓரளவிற்கு தமிழரிடையே கூட தரமான சிறுகதைகள் என்றால் பாராட்டப்படுவதில்லை என்ற ஒரு வழக்கம் ஏற்பட்டுவிட்டது. அரங்கநாதன் எழுதியிருக்கிற கதைகள் போர்ஹே எழுதிய கதைகளுக்கு சற்றும் குறைந்ததல்ல என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு ஒரு பரந்த அறிவு தளத்திலிருந்து மோனாலிசா, நசிகேதனும் யமனும் – அப்புறக் இன்னொரு தலைப்பு – இந்த மாதிரி எல்லாம் பார்க்கும் போது ஒரு பரந்த அறிவு தளத்திலிருந்து, நமது பண்பாட்டின் பல அம்சங்களை நாம் தெரிந்து கொள்ளும் அளவிற்கு இவர் எழுதியிருக்கிறார் என்று மிகவும் நன்றாகத் தெரிகிறது. ஒரு Intellectual அறிவு தளத்தில் – போலி அல்லாத அறிவுத்தளத்தில் – உள்ளது. இதில் இரண்டு விஷயங்கள் சொல்ல வேண்டும். அறிவுதளம் என்று சொல்லுகிற போது போலியாக ஓர் அறிவு தளம் அதாவது நமக்கு நம்முடைய படிப்பில் இருந்து வராத, நம்முடைய மண்ணில் வேர்விடாத அறிவு இயக்கங்கள் பல பரவி இருக்கின்றது. உலகில் அவைகளுக்கெல்லாம் நாம் வாரிசாக எண்ணிக்கொண்டு, அந்த அறிவு தளத்திலிருந்து செய்யப்படுகிற சில விஷயங்களை நம்மிடையே பார்க்க முடிகிறது. இந்த மாதிரி பார்க்கிற விஷயங்கள் மனோ தத்துவ காரியங்கள், மனோதத்துவ அலசல்கள் என்கிற அளவில் சைக்யாட்ரிக் என்கிற மாதிரி – சைக்கோபாத் என்று சொல்கிற அளவில் எல்லாம் படுகிறபோது, ஓரளவு போலியாகப் போய்விடுகிறது. இந்தப் போலித்தனம் சில சமயம் அரசியலிலும் காணப்படுகிறது. அரசியலில் நாம் யோசித்துப் பார்த்தோமானால், அரசியல் சிந்தனைகளில் ஒரு சிந்தனை கூட நம்முடைய சிந்தனை நம்முடைய மண்ணில் இருந்து கிளம்பியது என்று சொல்லும்படியாக இந்தியாவில் இன்னும் ஏற்படவில்லை என்பது உண்மை. அதனாலேயே இந்த அறிவு தளத்தில் ஒரு போலி அம்சம் எப்போதும் இருக்கிறது. இந்தப் போலி அம்சத்தை மீறி அறிவு தளத்தில் நம்மைச் சுற்றியிருக்கிற மக்களிடமிருந்து, நாம் நிற்கிற மண்ணிலிருந்து கிளம்புகிற வேர்கள், கிழங்குகளிலிருந்து வருகிற ஓர் அறிவு தளத்தை வளர்த்துக் கொள்வது மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. அதை சிலபேர் செய்திருக்கிறார்கள் என்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

அந்த மாதிரி போலி அல்லாத ஓர் அறிவு தளத்தில் இந்தக் கதைகள் – அரங்கநாதனின் கதைகள் – செயல்படுவதை நான் பாராட்டுகிறேன். பார்க்கும் போது மிகவும் சிறப்பாகப் பாராட்ட வேண்டும் என்று தோன்றுகிறது.

நான் போலி அறிவு தளத்தில் வந்த கதைகள் என்று சொல்வதற்கு ஓர் உதாரணம் சொல்ல்லாமென்று தோன்றுகிறது. ‘பள்ளம்’ என்று ஒரு சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது. அந்தப் புத்தகத்தை எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. அதில் ஒரு கதை. குரங்குகள் வந்து உபத்திரவப்படுத்தும், ஒரு சமதாயத்தில், அந்தக் குரங்குகளை ஒழிப்பதற்கு அதன் கைகளில் தண்ணீர் பாம்புகளைச் சுற்றி ஓர் ஓலைச்சுருள் மாதிரிக் கொடுத்துவிட்டால் அந்தப் பாம்புகள் அவைகளைக் கவ்விக் கொள்ளும் – அவைகளும் விடாது, குரங்குகளும் பயந்து ஓடிவிடும் என்று ஒரு கதை வந்திருக்கிறது. அதைப் பார்க்கும்போது இது எந்த ஊரில் நடக்கிற விஷயம் – நம்மூரில் யாருக்குமே வந்திராது என்று சொல்லக்கூடும். இந்தக் கதையை எழுதியவர் மிகவும் நல்ல சிறுகதைகள் பல எழுதியிருக்கிறவர்தாம். ஆனால் இந்த அறிவு போலித்தனத்தினால் ஏற்பட்ட ஒரு விளைவாக இந்த மாதிரி கதைகள் சிலவும் நம்மூரில் வரத்தொடங்கி இருக்கின்றன, அந்த மாதிரி போலியான அறிவு தளத்தில் நிற்காது – நல்ல அறிவு தளத்தில் – நமக்குரிய அறிவு தளத்தில் நின்று கதை எழுதுவது என்பது சிலபேருக்கு கைவந்திருக்கிறது. இப்படி கைவந்தவர்களில் சில பேரை குறிப்பாகச் சொல்லலாம். புதுமைப்பித்தனைச் சொல்ல வேண்டும். புதுமைப்பித்தனால் அரங்கநாதன் பாதிக்கப்படுகிறார் என்று நண்பர் சொன்னார். அது எனக்கு அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை ஏனென்றால் புதுமைப்பித்தன் கால சிந்தனையில் பலவிதமான கலப்படங்கள் வந்திருக்கின்றன. ஓரளவு தெளிவின்மை கூட இருந்த்து என்று சொல்லக்கூடும். அரங்கநாதன் சிந்தனையில் – அவர் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு எழுதுகிறார் என்பதாலேயே ஓரளவிற்கு சிந்தனைத் தெளிவு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லக்கூடும், சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. இதேமாதிரி பூரணத்துவம் தெரிகிறது என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். இந்த மாதிரி பலபேர் எழுதியிருக்கிறார்கள். சுந்தர்ராமசாமியில் பிரசாதம் என்றி சிறுகதைத் தொகுப்பில் பல கதைகள் அந்த மாதிரியாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். தி. ஜானகிராமன் ஆரம்பகாலத்தில் எழுதிய கதைகள் கொட்டுமேளம் முதலிய தொகுப்புக்களில் வந்த கதைகள் – அந்த மாதிரி பல.

இப்படி சொல்லக்கூடியவர்களில் இருபது முப்பது பேர்கள் நம்மிடையே தேறுவார்கள். அந்தமாதிரியாக ஒரு கனமாக தளத்தில் போலியல்லாத அறிவு தளத்தில் நின்று கதைகள் எழுதுகிற கலை அரங்கநாதனுக்கு நன்றாக்க் கைவந்திருக்கிறது என்பது இந்தக் கதைகளைப் படிக்கும் போது தெரியும். நாம் ஒவ்வொரு கதையாக படித்துச் சொல்ல வேண்டும் என்று எண்ணவில்லை. ஆனால் ஒவ்வொரு கதையிலுமே முத்துக்கறுப்பன் என்கிற பெயரை அறிமுகம் செய்து வைக்கிற போதே ‘ஷாக் ட்ரீட்மென்ட்’ கொடுக்கிறமாதிரி ஓர் உலுக்கலை ஏற்படுத்தி விடுகிறார் என்பது அவருக்கு ஒரு சிறப்பான அம்சமாக இதில் காண முடிகிறது.

இதில் இன்னொரு விஷயம், இந்தமாதிரி பாராட்டுக் கூட்டங்கள் போட்டு ஒரு ஆசிரியரை பாராட்டுகிறபோது, ஓஹோ நாம் ஏதோ பிரமாதமாக செய்து விட்டோம் என்று அந்த ஆசிரியர் திருப்திபட்டுக் கொண்டே அதோடு நிறுத்திவிடவோ கூடும். அந்த மாதிரி அரங்கநாதன் செய்யமாட்டார் என்று நம்புகிறேன். அவருக்கு ஒரு மெச்சூரிட்டி இருக்கிறது. இந்தக் கதைகளிலேயே அது தெரிகிறது. இவருடைய முதல் புத்தகத்தை - ‘பொருளின் பொருள் கவிதை’ என்றப் புத்தகத்தைப் பற்றிச் சொன்னார்கள். அதுவும் விளக்கமுடியாத கவிதையைப் பற்றி, சொல்ல இயலாத சில விஷயங்களை, தமிழ் வார்த்தைகளில் சொல்வதற்கு அவர் முயன்றுபார்த்திருக்கிறார். அதுமிகவும் நல்ல முயற்சி. அந்த மாதிரியான ஒரு முயற்சி தமிழுக்கு மிகவும் புதிது. மிகவும் அவசியமானது. பல பேர் செய்து பார்த்திருக்க வேண்டியது. அவரவர்கள் நோக்கிலிருந்து செய்து பார்க்க வேண்டியதென்று எனக்கு தோன்றுகிறது. அந்தமாதிரி இந்தக்கதைகளைத் தொடர்ந்து அவர் நாவல்கள் எழுதலாம், கவிதைகள் எழுதலாம். எது எழுதினாலும் இந்தச் சிறுகதைகளுக்கு அப்பால் போவதாக அமையவேண்டும் என்பது எனது வேண்டுகோள். அது மிகவும் அசவியம். ஏனென்றால் இலக்கியத்தில் சாதனை என்பது ஏதோ ஓரிடத்தில் நின்று விடுவதல்ல. அது மேலே மேலே என்று போய்க் கொண்டிருப்பதால் தான் இன்னும் பலர் எழுத வேண்டியதாய் இருக்கிறது. எழுதியவரே தான் செய்த்து போதாது என்று ஒரு நிலையில்தான் அடுத்த புத்தகத்தையும் எழுத வேண்டியிருக்கிறது. அதற்கு ஓர் அளவிற்கு ஒரு மெச்சூரிட்டி வேண்டும். இதோடு அவர் திருப்தி அடைந்துவிடக் கூடாது என்கிற நினைப்பு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு இதைச் சொல்கிறேன். அது அவருக்கு இருக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அவர் இன்னும் நிறைய எழுதவேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.

நன்றாக எழுதுகிறவர்கள் மிகவும் அருகிக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக இலக்கியம் என்று கேட்பவர்கள் மேலைநாடுகளில் இப்போது இருக்கிறார்கள். சினிமா போதாதா டீ.வி. போதாதா மற்றும் வேறு பல விஷயங்கள் இருக்கின்றனவே - உலகில் அதெல்லாம் போதும் – இலக்கியம் என்ற ஒன்று ஏதோ பத்துபேர் கூடிக்கொண்டு ஏதோ ஒன்றை எதற்காக செய்கிறார்கள் என்று கேட்கிற ஒரு நிலைமை வந்திருக்கிறது என்பது பேராசிரியர்கள் வாயிலாக தெரிகிறது. ஆங்கிலப் பேராசிரியர்கள் கேட்கிறார்கள். நாம் இதுவரையில் முன்னூறு நானூறு வருடங்களாக இலக்கியம் இலக்கியம் என்று சொல்லிக் கொண்டு வந்ததெல்லாம் இனிமேல் எடுபடாது – செல்லாது. ஏனெனில் டி.வி.யும் காமிக்ஸ் புத்தகங்களும் சினிமாவும் தான் பிரயோஜனப்படும் என்று சொல்லி ஒதுங்கிக்கொள்ள முயல்கிறார்கள். ஆனால் இலக்கியத்திற்கு என்றைக்குமே ஒரு தேவை இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. கனமான விஷயங்களுக்கு எப்போதுமே ஒரு வால்யூ, தேவை இருக்கத்தான் செய்கிறது. இந்த சினிமா, டி.வி. என்று சொன்னாலும் கூட அவைகளெல்லாம் வார்த்தை என்கிற – மொழி என்கிற – ஒரு சரடோடு இணைக்கப்பட்டதாகத் தான் இருக்கிறது. இந்த மொழி என்பதை சரியாகத் தெரிந்து கொள்ள, சரியாகச் செயல்படும்படியாக செய்வதற்கு கனமான இலக்கிய ஆசிரியர்கள் எந்தக் காலத்திற்கும் தேவைப்படுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. சற்றேறக்குறைய ஒரு மூவாயிரம் வருடங்களாக இலக்கியம் என்கிற சரடை – கனமாக சரடை – புரிந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு பாராட்டுகள் ஓரளவு ஆர்வமுள்ளவர்கள் அதிகமாக ஈடுபடுவதில்லை என்றாலுங்கூட இலக்கியம் என்பது இருந்துகொண்டுதான் இருக்கும்.

இந்த இலக்கியம் என்பது இருந்து கொண்டிருக்கிற வரையில் அரங்கநாதன் போன்றவர்கள் நிறைய செய்ய வேண்டிய காரியங்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்து வெயல்படவேண்டியது மிகவும் அவசியம். ஆனால் இந்த மாதிரிப் புத்தகங்களை ஆயிரம்பேர் கூட படிப்பதில்லையே என்ற ஒரு கேள்வி தமிழ்நாட்டில் பிரத்யேகமாக தமிழ் நாட்டிற்கு மட்டும் உரியதாக – இருந்துக் கொண்டிருக்கிறது. இதை எப்படித் தீர்த்து வைப்பதென்றுதான் தெரியவில்லை. நல்ல கதைகளாக எழுதியிருக்கிறார். நல்லப் புத்தகமாக நல்ல அச்சாக ப்ரூப் மிஸ்டேக்ஸ் இல்லாமல் வருகிற புத்தகங்கள் மிகவும் குறைவு என்பது புத்தகங்கள் படிக்கிற எல்லாருக்கும் தெரியும். இப்போது ஆங்கிலத்தில் வருகிற தினசரி பத்திரிகைகளில் கூட ஒரு பக்கத்திற்கு மூன்று ப்ரூப் மிஸ்டேக்ஸ் வந்துவிடுகிறது. இந்த மாதிரி புத்தகங்கள் – அமைப்பு எல்லாமே நேர்த்தியாக வந்திருக்கின்ற புத்தகத்தை வாங்கவேண்டியவர்கள் மிகவும் அதிகமாக இருக்கவேண்டும். அதிகமாக என்றால் பத்தாயிரக் கணக்கில் வேண்டாம், ஆயிரம் இரண்டாயிரம் என்கிற அளவிலாவது இருக்க வேண்டும் என்கிற நினைப்பு நம் எல்லாருக்கும் இருக்கிறது. அந்த மாதிரி வாசகர்களை – காசு கொடுத்து புத்தகம் வாங்கி படிக்கிற வாசகர்களை – கண்டு பிடிப்பது மிகவும் சிரம்மாக இருக்கிறது. இதை எப்படித் தீர்த்துவைப்பது என்பது என் காலத்தில் நடக்கப் போகிற காரியமல்ல. நமது சந்த்தியர் காலத்தில் – உங்கள் காலத்தில் – நடப்பதற்கு ஏதாவது வழி ஏற்படவேண்டும்.

நல்ல புத்தகங்களைப் படிப்பவர்கள் பத்துப் பேரிடமாவது ஒரு மாதத்தில் இந்தப் புத்தகம் படித்தேன் நன்றாக இருந்த்து என்று திருப்பித் திருப்பி அவர்கள் நம்மிடம் என்ன சொன்னாலும் கூட பொறுத்துக் கொண்டு சொல்ல வேண்டும் என்று நண்பர் சொன்னார். அதையே வேண்டுகோளாக நானும் விடுக்கிறேன். யாரிடமும் புத்தகம் படிக்காதவர் என்று தெரிந்தாலுங் கூட சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த விளம்பரத்திற்கு ஓர் உபயோகம் இருக்கும். இதை நான் முப்பது வருடங்களாக சில பேர்களை திருப்பித் திருப்பிச் சொல்லியே ஓரளவிற்கு அவர்கள் புத்தகங்களுக்கு ஒரு டிமாண்ட் ஏற்படுத்த முடிந்திருக்கிறது. அது எனக்கு மிகவும் திருப்தியாக இருக்கிற ஒரு விஷயம். இந்த மாதிரி விளம்பரப்படுத்த வேண்டியது நல்ல புத்தகங்களை – விளம்பரப்படுத்த வேண்டியது – மிகவும் அவசியம். சிறுகதைகள் மிகவும் குறைவாகவே – நல்ல கதைகள் என்று சொல்லக்கூடியவை – இந்தக் காலத்தில் வருகின்றன என்று சொல்ல வேண்டும், இந்தச் சிறுகதைகளில் – மிகவும் குறைவாக வருகிறவைகளில் – மிகவும் சிறந்த ஒரு கதைத் தொகுப்பாக இந்த ‘வீடு பேறு’ என்னும் கதைத் தொகுப்பு அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு கதையும் ஒரு அனுபவமாக அமைகிறது என்று சொல்வது மட்டும் போதாது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு கதையைப் படிக்கிற போதும் மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூணடுகிற ஒரு அம்சம் இதில் இருக்கிறது. அந்த கனம் அரங்கநாதனின் ஒரு ஸ்பெஷாலிட்டி என்றும் சொல்லலாம். திருப்பித் திருப்பி படிப்பதற்கு இதில் விஷயமிருக்கிறது. இதை வெறும் கதையாகச் சொல்லியிருந்தால் – சம்பவமாகச் சொல்லியிருந்தால், சம்பவம் முடிந்துவிட்டது – கதையை முடித்த பிறகு அந்த சம்பவம் ஞாபகம் இருக்கும். அந்த சம்பவத்திற்கு முந்தைய சம்பவமும் ஞாபகமிருக்கும். திருப்பி எடுத்து படிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் அந்த சம்பவங்களைச் சொல்வதில் இவர் ஓர் உத்தியைக் கையாளுகிறார். இதை எவ்வளவு பேர் நீங்கள் படித்திருக்கிறீர்கள் என்று தெரியாது. ‘எர்னஸ்ட் ஹெமிங்க்வே’ என்பவர் ஒரு சிறப்பான இலக்கிய ஆசிரியர் என்று பெயர் வாங்கிய முதல் புத்தகம் Farewell to Arms என்ற ஒரு புத்தகம். 1924-25ல் வெளிவந்த்து. அந்த புத்தகத்தைப் பற்றி விமர்சகர்கள் பாராட்டிய ஓர் அம்சம் என்னவென்றால், இந்த நாவலில் சொல்லிய விஷயங்கள் மிகவும் சிறப்பானவை என்று சொல்லி ஹெமிங்க்வே என்பவருக்கு ஒரு முதல்தரமான இலக்கிய அந்தஸ்து ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

அந்த மாதிரி அரங்கநாதனின் சிறுகதைகளில் சொல்லாத விஷயங்கள் – அரணையைப் பற்றி – அரணை என்கிற பெயரே சொல்லாமல் வந்திருக்கிறது என்று நண்பர் வாசித்துக் காண்பித்தார். அந்தமாதிரி சொல்லாமல் விட்ட விஷயங்கள் எழுப்புகிற தொனி நம்மை மீண்டும் மீண்டும் இந்தக் கதைகளை திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டிவிடக் கூடியவை. இந்த சொல்லாமல் விட்ட விஷயங்களை எப்படி நாம் கிரகித்துக்கொள்கிறோம் என்பது ஒவ்வொரு தடவை படிக்கிற போதும் இதை முதல் தடவை நாம் கவனிக்க முடியவில்லையே இரண்டாவது தடவை தானே கவனிக்க முடிந்தது – இன்னும் என்ன இருக்கிறது இதில் கவனிப்பதற்கு என்று யோசித்துப் பார்த்துப் படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதே மாதிரி படிக்க வேண்டிய இலக்கிய ஆசிரியர்கள் தமிழில் இதற்கு முன் இரண்டு மூன்று பேர் இருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் சில கதைகள் எல்லாம் திரும்பத் திரும்ப படித்து அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டிய கதைகள்.

அதற்கு மாறாக படித்த உடனேயே புரிந்து விடுகிற கதைகளை சிலபேர்கள் மிகவும் விறுவிறுப்பாக எழுதியிருந்தாலும்கூட அவர்களை இலக்கிய ஆசிரியர்களாக ஏற்றுக் கொள்வது மிகவும் சிரம்மாக இருக்கிறது. இதை இலக்கியத்திற்கே ஒரு தொனி என்கிற அடிப்படையைத்தான் அதாவது உடனே விளங்காத ஆனால் பின்னால் நிச்சய விளக்கிக்கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிற விஷயங்கள் சிறுகதையில் ஏற்படுகிறபோது – கவிதைகளில் ஏற்படுகிற மாதிரி – நாவல்களில் கூட இதுமாதிரி உண்டு – இலக்கியத் தரமாக இருக்கிற நாடகங்களிலும் உண்டு – இந்த தொனி என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். அது அரங்கநாதனில் மிகவும் பூரணமாக தொனிக்கிறது என்கிற விதத்தில் இந்தச் சிறுகதைகள் உள்ளன. இது 1987ல் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு மூன்று வருடங்களில் என் கண்களில் கிட்டத்தட்ட ஒரு இருபத்தைந்து சிறுகதை தொகுப்புகள் பட்டிருக்கும். அதில் மிகச்சிறந்த ஒன்றாக இதை நான் கருதுகிறேன் என்று சொல்லி அரங்கநாதனுக்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறுகிறேன்.

ஒரு இரண்டாயிரம் பேராவது வாங்கிப்படிப்பதற்கு ஏதாவது வசதி செய்வதற்கு விளம்பரப் படுத்துவதற்கு யாராவது உதவினால் நல்லது என்று நினைக்கிறேன். நல்லப் புத்தகங்கள் என்று சொல்லி – எடுத்துச் சொல்லி நூறுபேருக்கு அல்லது ஆயிரம் பேருக்கு இந்தப் புத்தகம் நல்ல புத்தகம் என்று சொல்லி, எழுதி, தெரியப்படுத்துவதற்காக ஒரு ஸ்தாபனம் மிகவும் அவசியமென்று கருதுகிறேன். நல்ல சிறுகதைகள் வெளியிடுவதற்கு இப்போது தமிழில் ஸ்தாபனங்கள் எதுவும் இல்லை. எல்லாரும் மணிக்கொடி மணிக்கொடி என்று அந்தக் காலத்தில் இருந்து ஒரு பத்திரிகையைப் பற்றி பேசுகிறார்கள். அது இருந்தது-போனது. ஆனால் இப்போது என்ன பண்ண வேண்டும். நல்ல கதைகள் எழுதுகிறவர்கள் எங்கே எழுதுவது என்று கேட்டால் ஏதோ ஒரு கணையாழி இருக்கிற மாதிரிச் சொல்லலாம் – சில சமயம் அது நல்ல கதைகள் போடுகிறது. ஏதோ தீபத்தில் சில சமயம் நல்ல கதைகள் வருகின்றன. இந்த மாதிரி ஒன்றிரண்டு பத்திரிகைகள். இப்படியிருக்கிற ஒரு நிலையில் இம்மாதிரி கதைகள் எல்லாம் வெளிவருவதற்குக்கூட ஏதாவது ஒரு ஸ்தாபனம் ஏற்பாடு செய்யவேண்டும். இது எப்படி நடக்குமென்று எனக்கு தெரியாது. நான் இதையெல்லாம் பல தடவை சொல்லிச் சொல்லி தோற்றுப் போனவன் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு விஷயம். இதை எப்படிச் செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இது இப்படியே தொடர்ந்து ஆனந்த விகடனில் வருகிற கதைகள் போதும் – குமுதம் கதைகள் போதும் என்று தமிழர்கள் காலத்தள்ளுவது சரியல்ல என்று தோன்றுகிறது. இந்தக் கதைகளுக்கு அப்பால் சிறுகதை என்ற ஓர் இலக்கியம் உண்டு. அந்த சிறுகதைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதைப் படிக்க வேண்டியவர்கள் ஆயிரம் இரண்டாயிரம் பேராவது தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என்கிற ஒரு நினைப்பு ஏற்படவேண்டும். அது எப்படி ஏற்படும் என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தான் பலருக்கும் சொல்லி இந்த மாதிரி நல்ல புத்தகங்களைப் படிப்பதற்கு வாசகர்களைத் தூண்ட வேண்டும் என்று எண்ணுகிறேன் இலக்கியத்திற்கு ஒரு இயக்கமாக இயங்க வேண்டியவர்கள் இலக்கிய ஆசிரியர்கள் அல்ல. இலக்கிய ஆசிரியர்கள் வாசகர்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் நன்றாக எழுதுவதே நின்றுவிடும். வாசகர்கள் தாம் தங்களது ரசனையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, தங்களது ரசனையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, தங்களது அறிவை விருத்தி செய்து கொள்வதற்கு, தங்களது தமிழ் வளத்தை விருத்தி செய்து கொள்வதற்கு நல்ல புத்தகங்களை தேடிக் கொண்டுபோய்படித்தாக வேண்டும். அப்படி தேடிக் கொண்டுபோய் படிப்பதுடன் மற்றவர்களையும் வாசிக்கச் செய்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும்.

நன்றி: மா. அரங்கநாதன் தளம்

Oct 12, 2012

எனக்கு மாமனாராகவும் இருந்த க.நா.சு. - பாரதி மணி

க.நா.சு.100

ஐம்பதுகளில் நான் கல்கண்டு, கண்ணன், ஜில்ஜில், அணில் போன்ற சிறுவர் பத்திரிகைகள் படித்துக் கொண்டிருந்த போது, எங்களூர் பார்வதிபுரத்தில் நடராஜன் என்ற அறிவுஜீவி — ஹிந்தியில் Ghar Jamai என்று அறியப்படும், பணக்கார மாமனாருக்கு ‘வாழ்க்கைப்பட்ட’ வீட்டோடு KA.-NA.-SU-Portrait-01மாப்பிள்ளையாக — இருந்தார். ஊரே அவரை ‘மாப்பிள்ளை’யென்று தான் கூப்பிடும். எங்களுக்கு அவர் ‘மாப்ளை மாமா’.  மிகவும் சுவாரசியமாக, எதைப்பற்றியும் பேசத்தெரிந்தவர். அவருக்கு தேவையெல்லாம் லீவுநாட்களில் எங்களைப்போன்ற பதின்மவயது ‘ஆடியன்ஸ்’ தான். மணிக்கணக்கில் வாயைப்பிளந்து கேட்டுக்கொண்டிருப்போம். பலநாட்கள் என் அம்மா திண்ணைக்கு வந்து, அவரிடம் ‘ஓய்! மணி ரெண்டாகப்போறது. இன்னும் குளிக்காமெ, சாப்பிடாமெ, உம்ம பேச்சைக்கேட்டுண்டு ஒக்காந்திருக்கான். எல்லாம் ஆறிப்போயாச்சு. அப்பறமா சாப்டுட்டு பேசலாமே!’ என்று எங்கள் ‘இலக்கிய விசாரணைக்கு’ ஒரு முற்றுப்புள்ளி வைப்பாள்! நான் தில்லி வந்து, பிறகு லீவில் ஊருக்குப்போயிருந்தபோது, தில்லியில் நான் கேட்ட படே குலாம் அலிகான், பேகம் அக்தர் இசை பற்றியும், பால சரஸ்வதி அபிநயம் குறித்தும் நான் சொல்ல, அவர் கேட்டுக் கொண்டிருப்  பார். அவரிடம் தான் முதன்முதலாக சாணிப்பேப்பரில் அச்சிடப்பட்ட எழுத்து பத்திரிகையைப்பார்த்தேன். பழைய பிரதிகளை பைண்ட் போட்டு வைத்திருப்பார். தான் ஒரு வரி கூட எழுதாமல், நல்ல எழுத்தை ரசிக்கத்தெரிந்த ‘இலக்கியவாதி’! இளவயதிலேயே நல்ல எழுத்தை இனம் கண்டு, தேடித்தேடி வாசிக்கும் பழக்கத்தை எனக்குள் வித்திட்ட ஆசான்.

விகடன், கல்கி கதைகளைப்படிக்கும் என்னிடம், கிருஷ்ணன் நம்பியின் கதை வந்திருக்கும் சரஸ்வதி யைக்கொடுத்து படிக்கச்சொல்லுவார். பாவம்…..அறுபது வருடங்கள் கழித்து எழுத ஆரம்பித்த ஒரு ‘நல்ல எழுத்தாளரை’ப் படிக்காமலே போய்விட்டார்!

எந்த பிரபல எழுத்தாளர்கள் நாகர்கோவிலுக்கு / கன்யாகுமரிக்கு வந்தாலும், நடராஜனுக்கு தகவல் வந்துவிடும். அவருடன் நான் போய் சந்தித்த மூத்த எழுத்தாளர்கள் அனேகம். எனக்கு அவர்களைப்பார்க்க தணியாத ஆவல் இருந்ததோ இல்லையோ, பார்வதிபுரத்திலிருந்து தெற்கு ரோடு -– இப்போதுகாலச்சுவடு விலாசமிருக்கும் K.P. Road –- வழியாக நடந்துபோகும்போது, பேச்சுத்துணைக்காகவாவது என்னையும் வற்புறுத்தி இழுத்துக்கொண்டு போய்விடுவார். அவர் மூலமாகத்தான் ‘மணிமேடை சுதர்ஸன் ஸ்டோர்ஸ் சுந்தரமையர் பையன் நம்ம வேப்பமூடு ஜங்ஷனை வெச்சு ஒரு நாவல் எழுதியிருக்கான்’ என்று ஒரு புளியமரத்தின் கதை கையெழுத்துப்பிரதியைப் படித்துப்பார்த்தேன். பிறகுதான் அது சரஸ்வதியில் தொடராக வந்தது. நாஞ்சில்நாட்டு எழுத்தாளர்களிடம் அவருக்கு தனிப்பிரியம். கிருஷ்ணன் நம்பிக்கும், சு.ரா.வுக்கும் நெருங்கிய நண்பர்.

ஒருநாள் மாலை என்னிடம் ‘நாறோலுக்கு’ வரியா? க.நா.சு. வந்திருக்காராம். சென்ட்ரல் லாட்ஜிலே தங்கியிருக்கார். பாத்துட்டு வருவோம்’ என்றார். எனக்கு அப்போது தன் இனிஷியலை K.N.S. என்று ஆங்கிலத்தில் சுருக்காமல், தமிழில் க.நா.சு. என்று வைத்துக்கொண்டிருப்பவரை பார்த்துவிட்டு வரலாமேயென்று தோன்றியது. லாட்ஜில் சின்ன அறையில் நம்பியும், சு.ரா.வும் அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள். சட்டையில்லாத, பூணூல் இல்லாத உடம்பு, இன்னும் மறையாத அம்மைத்தழும்பு, பூ விழுந்த கண், சீப்பையே கண்டிராத தலை. பிற்காலத்தில் தன் ஒரே மகளை எனக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்போகும் மனிதரை நான் முதன்முதலில் சந்தித்தேன். ஆனால் தன் ’வருங்கால மாப்பிள்ளை’க்கான எந்த மரியாதையையும் எனக்குத்தரவில்லை! படுக்கையின் ஒரு மூலையில் நானும் ஒண்டி உட்கார்ந்து, பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். பேச்சு நடுவில், ‘காப்பி சாப்பிடலாமே…….. கோல்டன் லாட்ஜில சொல்லுவோம். கிச்சாமணி குண்டுப்போத்தி ஹோட்டல்லேருந்து ரசவடை வாங்கிண்டு வருவன்.’ என்று நடராஜன் சொல்ல, ராமசாமி கொடுத்த பத்து ரூபாய் நோட்டுடன் கீழே வந்தேன். ‘கெட்டிச்சட்னி நெறைய வைக்கச்சொல்லுங்க’ என்று க.நா.சு சொன்னதும், மணிமேடையிலிருந்து ரெண்டணா வாடகை சைக்கிள் எடுத்து வடசேரி இறக்கத்துக்குப்போனதும் நினைவிருக்கிறது.

நான் தில்லி போனபிறகு, அறுபதுகளின் இறுதியில் க.நா.சு. சென்னையிலிருந்து தில்லி வந்துவிட்டதாக அறிந்தேன். அவ்வப்போது ரஃபி மார்க் I.E.N.S. ஹாலில் கஸ்தூரி ரங்கன் நடத்தும் கணையாழி மாதாந்திரக் கூட்டங்களிலும், கர்ஸன் ரோடு மலையாளி மெஸ்ஸிலும்,  நான் மெம்பராக இருந்த தில்லி ஃபிலிம் ஸொசைட்டி திரையிடல்களிலும் அவரைப்பார்த்திருக்கிறேன். சர்வதேச திரைப்படவிழாவில் நான் போகும் நாலு தியேட்டர்களில் ஒரு தியேட்டருக்கு மகளுடன் வந்திருப்பார். ஒரு வணக்கத்தோடு சரி. ‘நிறைய கெட்டிச்சட்னியோடு ரசவடை வாங்கித்தந்தேனே!’யென்று பழங்கதையால் அவரை துன்புறுத்தியதில்லை. பிறகு முளைத்த UNI கான்டீனுக்கும் அடிக்கடி வருவார். அவர் தோற்றமோ என்னவோ இணக்கமாக பேசத்தோன்றவில்லை.

1970-ல் இ.பா. மழை நாடகம் எழுதியதும், அதில் கதாநாயகியாக நடித்த ஜமுனாவுக்கு, எனக்கே தெரியாமல் என்மேல் ’பற்று’ ஏற்பட்டதையும் சொல்லியிருக்கிறேன். மாமிகளின் மத்தியில் எப்போதும் எனக்கு ஒரு நல்ல பெயர் உண்டு. ‘மணிக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பாக்கணும். ஆண் காரியம் பெண் காரியம் தெரிந்த சூட்டிகை. கைநிறைய சம்பளம் வாங்கறான். எந்த மகராஜிக்கு குடுத்து வச்சிருக்கோ?’ என்று பலரும் சொல்லக்கேட்டிருக்கிறேன். இ.பா.வின் மாமியார் மூலமாக எனக்கு வேறு இடத்தில் பெண் பார்ப்பதை அறிந்து, மகள் தந்தையிடம் தன் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அடுத்தநாள் காலை க.நா.சு. நான் அப்போது வேலை பார்த்த பிர்லா ஆபீசுக்கு வந்து என்னிடம் பேசினார். அப்போது தான் எனக்கே அந்த எண்ணம் இருந்ததை உணரமுடிந்தது. என் அக்காவிடம் க.நா.சு. வந்த விஷயத்தை சொன்னபோது, ‘ஆமாண்டா… ரொம்ப நல்ல பொண்ணு….நமக்கு ஏன் இந்த ஐடியா முன்னாடி தோணலே?’ என்று என் திருமணத்துக்கு முதல் அட்சதை போட்டார்.

காதல் திருமணங்களில் ஏற்படும் எந்த பிரச்னையும் இல்லாமல் இரு குடும்பத்தினரின் ஒத்த கருத்தோடு ஜமுனாவின் கைத்தலம் பற்றினேன்.. திருமணம் ஒரு கனமழைநாளில், போட்ட பெரிய பந்தலெல்லாம் தண்ணீரில் முழுகி, அங்கிருந்த ஒரு நாடக மேடையில் இனிதே நடந்தேறியது. எனக்கு நாடகமே உலகம் அல்லவா! இ.பா.வின் மழை நாடகத்தில் தொடங்கிய காதல், அவரது இரண்டாவது படைப்பான போர்வை போர்த்திய உடல்கள் நாடகத்தில் நடிக்கும்போது கல்யாணத்தில் முடிந்தது. திருமணத்தன்று, தாரைவார்த்து கொடுக்குமுன் நடக்கும் விரதத்தின்போது க.நா.சு. பூணூல் அணிந்திருந்தார். பலவருடங்கள் கழித்து, அவரிடம் ‘உங்களுக்கு நம்பிக்கையில்லாத விஷயத்தை ஏன் செய்தீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘உங்கள் வீட்டாருக்கு அதில் நம்பிக்கையிருந்தது. அந்த நல்ல நாளில் அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை!’யென்று பதிலளித்தார். தில்லியில் நடந்த என் திருமண நாளன்று, பார்வதிபுரத்தில் முதல் பாராவில் குறிப்பிட்டிருந்த நடராஜன் தன் வீட்டில் ஒரு விருந்தே ஏற்பாடு செய்திருந்தாராம். அவருக்குப்பிடித்த எழுத்தாளர் க.நா.சு.வின் மகளை நம்ம ஊர் கிச்சாமணி கல்யாணம் செய்துகொள்கிறான் என்றால் சும்மாவா?

என் திருமணத்திற்குப்பிறகு, தனியாகப்போக நினைத்த அவரை வற்புறுத்தி என்னோடு இருக்கும்படி சொன்னேன். ஒருவரையொருவர் புரிந்து கொண்டதால், பத்துவருடங்களுக்கும் மேலாக ஒரே கூரையின் கீழ் எந்த உரசலுமில்லாமல், மற்றவர் கருத்துக்கு மரியாதையோடு இருக்கமுடிந்தது.  அடுத்தநாளைப்பற்றிய கவலையே இல்லாதவர். எனக்கு அவரிடமிருந்த ஒரே வருத்தம் பத்திரிகைகளுக்கு எழுதி, வரும் பணத்தை இருக்கும்போது தாராளமாக ஹோட்டலுக்கு செலவழித்துவிட்டு, பணம் இல்லாத நாளில், ‘ராஜி! போஸ்ட்மேன் வந்தாரா?’ என்று மணியார்டருக்கு காத்திருப்பது தான்.  ஞாயிற்றுக்கிழமைகளில் நான் சமைக்கும் சமையலை ரசித்து, சப்புக்கொட்டி சாப்பிடுவார். சும்மா சொல்லக்கூடாது….. நான் நன்றாகவே சமைப்பேன். என் அம்மாவின் சீடன்.

என் நண்பர்கள் வட்டத்தில் நான் செய்யும் மொருமொருவேன்றிருக்கும் மசால் வடையும் தூள் பக்கோடாவும் பிரசித்தம். அவை தான் மாலைவேளைகளில் எனது ‘சோமபான’ விருந்துகளுக்கு ஸைட் டிஷ்! (சிறு வயதிலிருந்தே நான் ஒரு மசால்வடைப்ரியன். ‘சுண்டெலியா பொறந்திருக்க வேண்டியவன்டா நீ’ என்று அலுத்துக்கொண்டே, என் அம்மா எண்ணெய்ச்சட்டியை வைப்பாள்!)  பத்து வடைகள் சாப்பிட்டபின்னும், ‘ராஜி! மணி பண்ணின வடை இருக்கா? இருந்தா….இன்னும் ரெண்டு கொண்டுவாயேன்!’ என்று கேட்டு வாங்கிச்சாப்பிடுவார். என் எழுத்தைப் பாராட்டும்போது கிடைக்கும் சந்தோஷம் அப்போது வரும். என் குழந்தைகளுக்கு பிரியமான தாத்தா. என் குழந்தைகளுக்கு உலக இலக்கியத்தை அறிமுகம் செய்தவர்.

மாலை நேரங்களில் ஒருநாள் கூட நண்பர்களுடன் ‘Bar’ திறந்திருக்கும் என் ‘தாகசாந்தி கேந்திர’த்துக்கு அவர் வந்ததேயில்லை. வருடாவருடம் டிசம்பர் 31 இரவு நடக்கும் புத்தாண்டு பார்ட்டியில் ஒரு பெக் ’ராயல் ஸல்யூட்’ ஊற்றி அவர் ரூமுக்குச்சென்று, அவரை வற்புறுத்தி குடிக்கச்சொல்லுவேன். மரியாதை நிமித்தம் அதை வாங்கி வைத்துக்கொள்வார். அடுத்தநாள் காலையில் அது அப்படியே இருக்கும்!

தம்பதி சமேதராக நாங்கள் எப்போது தமிழ்நாட்டுக்கு வந்தாலும், வருமுன் ‘மெட்ராசிலே செல்லப்பா, முத்துசாமியைப் பாருங்கோ. சிதம்பரத்துக்குப்போனா மெளனியைப்பாத்துட்டு வாங்கோ. உங்க ஊருக்குப்போனா நம்பியையும், சுந்தரராமசாமியையும், திருவனந்தபுரத்தில் டி.கே. துரைசாமியையும் ஒரு நடை பாத்துட்டு வாங்கோ’ என்று அவர் சொல்ல மறப்பதேயில்லை.

சென்னையில் க.நா.சு. நடத்திய இலக்கியவட்டம், ராமபாணம், சந்திரோதயம், சூறாவளி க்குப்பிறகு, தில்லிக்கு வந்தபின்னும் அவருக்கு இலக்கியப்பத்திரிகை நடத்தும் ஆவல் தணியவில்லை. சமயம் நேரும்போதெல்லாம், என் மாமியார் ராஜி, ‘எங்காத்திலெ ஒட்டியாணம், வங்கி, காசுமாலை, புல்லாக்கு உட்பட ரெண்டு தடவை செட் நகை பண்ணிப்போட்டா. எல்லாத்தையும் சூறாவளி பண்ணிட்டார்’ என்று புலம்புவார். தில்லியில் Lipi Literary Syndicate என்ற அமைப்பைத்தொடங்கினார். இந்தத் தடவை நிறுத்தாமல் தொடர்ந்து Lipi லிபி என்ற ஆங்கில இலக்கியப் பத்திரிகை நடத்தவேண்டுமென்று விரும்பினார். அப்போது நான் HDPE Woven Sacks தயாரிப்பாளர்களின் அகில இந்திய சங்கத்துக்கு தில்லியில் பிரதிநிதியாக இருந்தேன். எழுபதுகளில் உரத்தட்டுப்பாடிருந்தது. துறைமுகங்களில் வந்திறங்கும் Bulk Urea/DAP/MOP உரங்களுக்கு 15 கோடி காலி சாக்குமூட்டைகள் தேவைப்பட்டன. இந்திய அரசின் உணவுத்துறையிடம் அந்த பெரிய ஆர்டரை வாங்கிக்கொடுத்து, அதை சரியாக நிறைவேற்றும் பொறுப்பு என்னுடையது. அவர்களை சும்மா விடலாமா? வசதியுள்ள 70 அங்கத்தினர்களிடம் Lipi Literary Syndicate-க்கு விளம்பரத்திற்காக, தலா ஆயிரம் ரூபாய்க்கு அவர்கள் தலையில் கை வைத்தேன். இதற்கெல்லாம் C.A.G. Report / Lok Ayukta Report வராது! என்னிடம் அவர்களுக்கு காரியமாகவேண்டியிருந்ததால், க.நா.சு.வுக்கு ரூ.70,000 வந்தது. அப்போது இது ஒரு நல்ல தொகை. அது தீரும் வரை லிபி நான்கு இதழ்கள் வெளிவந்தன! அவரது ஆசையும் தீர்ந்தது!

உங்களில் பலருக்குத்தெரியாத விஷயம் சரண்சிங் சிலமாதங்களுக்கு இந்தியப்பிரதமராக இருந்தபோது, அவர் நடத்தி வந்த Rural India என்ற பத்திரிகைக்கு க.நா.சு.வை ஆசிரியராக இருக்கும்படி வேண்டிக் கொண்டார். தினமும் வீட்டுக்கு கார் வந்து அழைத்துப்போகும். கட்சியிலிருந்த எம்.பி., ராம் விலாஸ் பாஸ்வானிடம் ஏற்பட்ட கருத்துவேற்றுமையால், இரண்டே மாதத்தில்கால் கடுதாசி கொடுத்துவிட்டார். சரண்சிங் எத்தனையோ வற்புறுத்தியும், போகவேயில்லை.

1982 வாக்கில் மைசூரில் யூ.ஆர். அனந்தமூர்த்தி ஏற்பாடு செய்திருந்த இந்திய எழுத்தாளர் பட்டறை முடிந்தபின் இருமாதங்கள் சென்னையில் இருந்துவிட்டு வருகிறேனென்று தில்லியிலிருந்து புறப்பட்டார். பல வருடங்களாக மறுபதிப்பு வராமலிருந்த அவரது எல்லா மொழிபெயர்ப்புகளும், படைப்புகளும் அப்போது புற்றீசல் போல புது பதிப்புகள் வர ஆரம்பித்தன. க.நா.சு.வின் பெயரைக்கூட கேள்விப்பட்டிராத இளம் தலைமுறையினர் அவரைப் படிக்கத் தொடங்கினர். ‘தமிழ்நாட்டிலே புதுசா என்னை கவனிக்க ஆரம்பிச்சுருக்காங்க.குங்குமத்திலும், துக்ளக்கிலும் தொடர்ந்து எழுதச்சொல்றா. சந்தோஷமா இருக்கு. கொஞ்சநாள் சென்னையிலெ இருக்கேன்’ என்று இன்லாண்ட் கடிதமெழுதிவிட்டு, என் ’சித்தன் போக்கு சிவன் போக்கு’ மாமனார் மைலாப்பூர்TSV கோவில் தெருவில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்தார்.

குங்குமம் பத்திரிகையில் அவர் எழுதிய ‘.நா.சு. பக்கத்தில்கருணாநிதிக்கெதிரான விமர்சனங்களையும் பதிவுசெய்ய முரசொலி மாறன் அனுமதித்திருந்தார். சொந்த மகளுக்கும் மேலாக சென்னையில் எல்லா உதவிகளையும் செய்ய, லதா ராமகிருஷ்ணன், மற்றும் மஹாதேவன் போன்றோர் பக்கத்தில் இருந்தனர். இரண்டு மாதம் சென்னை வாசம் என்பது நான்கு வருடங்கள் நீடித்தது. க.நா.சு வாழ்க்கையில் அவை மகிழ்ச்சிகரமானவை. ஒரு பிரபல வார இதழின் நிருபர் இடக்காக ‘ரொம்பநாள் கழிச்சு சென்னைக்கு ஏன் வந்திருக்கீங்க? என்று கேட்டதற்கு, ‘கடைசிக்காலத்திலே இங்கே சாகலாம்னு வந்திருக்கேன்!’ என்று பதிலளித்தாராம். இந்த வார்த்தையை அவர் காப்பாற்றவில்லை. 1988-ல் தன் கடைசி நாட்களைக்கழிக்க அவருக்குப் பிடித்த தில்லியில் என் வீட்டுக்கு வந்துவிட்டார். இதைப்பற்றி விரிவாக இன்னொரு கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.

எண்பதுகளில் ஒரு தடவை நாகர்கோவில் போனபோது, பார்வதிபுரத்திலிருந்த என் அம்மாவைப் பார்க்க சுந்தர ராமசாமியுடன் போயிருந்தார். ‘அன்னிக்கு உங்காத்திலெ சாப்பிட்ட பூப்போல, வாயில் கரையும் இட்லியும், சாம்பாரும், அந்த தேங்காய் சட்னியும் போல நான் வேற எங்கெயும் சாப்பிட்டதில்லே. நானும் பல இடங்களில் கை நனைத்தவன்’ என்று பலநாள் சொல்லிக்கொண்டிருந்தார். ஆம்… என் தாயின் இட்லியும் சட்னியும் உலகப்பிரசித்தம்!

அதனால் தான் எனக்கு ‘முருகன் இட்லிக்கடை’யெல்லாம் சாதாரணமாகப்படுகிறது. எனக்கு நாக்கு நாலேகால் முழம். காளியாக்குடி அல்வாவில் தொடங்கி, எந்த ஊரிலும், சிற்றூரிலும் எந்தெந்த ஹோட்டல்களில் எதெது விசேஷம் என்பதற்கு அவர் ஒரு ரெடி ரெக்கனர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல…… சிம்லாவில் எந்த மூலையில் ராத்திரி பத்து மணிக்கு மேல் சிறந்த ‘கடக் சாய்’, சமோஸா கிடைக்குமென்பது அவருக்கு அத்துப்படி.

2003-ல் தமிழக அரசு க.நா.சு.வின் படைப்புக்களை நாட்டுடமையாக்கி, அவரது வாரிசுகளுக்கு ரூ.3.00 லட்சம் கொடுப்பதாக அறிவித்தது. இதற்கு தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் தலைவராக இருந்த டாக்டர். மா. ராஜேந்திரன் எடுத்துக்கொண்ட முயற்சி தான் முழுமுதற்காரணம். ஒரு மாதம் முன்பே, க.நா.சு.வின் பெயரை பரிந்துரைத்ததாகவும், அமைச்சர் விரைவில் அதை சட்டசபையில் அறிவிப்பாரென்றும் மா.ரா. தகவல் சொன்னார். அதற்கான அறிவிப்பு பத்திரிகைகளில் வந்த தினம், ஐந்தாறு பிரபல எழுத்தாளர்கள் என்னை தனித்தனியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாம் எடுத்த முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்ற ‘உண்மை’யை எனக்கு விளக்கமாக எடுத்துச்சொல்லி, கட்டாயமாக என் ‘நன்றி’யையும் பிடுங்கி வாங்கிக்கொண்டார்கள்! க.நா.சு.வின் மற்றொரு வாரிசான என் மனைவி, தனக்கு இதில் எந்தப்பங்கும் தேவையில்லையென்று எழுதிக் கொடுத்து விட்டதால், மொத்தப்பணமும் க.நா.சு.வின் மனைவி ராஜிக்கே வழங்கப்பட்டது. அதே வருடம் நாட்டுடமையாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரின் பணத்துக்கு, சுமார் 25 வாரிசுகள் போட்டி போட்டதும், அதற்கான விழா நடந்த கோட்டை முதலமைச்சர் அலுவலகம் வந்தபிறகும், ஒரு ’வாரிசு’ இறந்த எழுத்தாளரை கடைசிக் காலத்தில் கவனித்துக்கொண்டதால், தனக்கு அதிகப்பங்கு வேண்டுமென்று ’தெருச்சண்டை’யாக்கியதும் பார்க்க வேடிக்கையாக இருந்தது. கடைசியில் ரூ. 3 லட்சத்தை 26 காசோலைகளாக பிரித்து பங்கு போட்டுக்கொண்டு, சந்தோஷமாக வீடு திரும்பினார்கள்!

தஞ்சாவூரில் பிறந்திருந்தாலும், க.நா.சு.வுக்கு கெட்ட வார்த்தைகள் பாடமாகவில்லை. அவர் திட்டி நான் கேட்டதேயில்லை. இ.பா.வும் அப்படித்தான். ஆனால் தி. ஜானகிராமன் இதிலும் வல்லவர்! சிலசமயம் க.நா.சு.வுடன் பேசிக்கொண்டிருக்கும் எழுத்தாள நண்பர் சக எழுத்தாளரை ‘பச்சைத்தெறியில்’ திட்டும்போது, இவர் நெளிவதை பலமுறை ரசித்திருக்கிறேன். ‘விடுய்யா’ என்று அவரை சமாதானப்படுத்துவார். தினமும் வெளியில் போய்விட்டு, வீடு திரும்பும்போது வாசலில் பேசியதற்கதிகமாக கேட்கும் தமிழ் தெரியாத ஆட்டோக்காரிடமும், என் குழந்தைகளை அவர் கண் முன்னால் அடிக்கும் என் மனைவியிடமும், அவரது அதிகபட்ச கோபத்தில் வரும் கெட்டவார்த்தை ‘Bloody Fool’ என்பது தான். வயதில் சின்னவர்களையும் அவர்கள் இல்லாதபோதும் கூட மரியாதையோடு தான் குறிப்பிடுவார். ’ராஜி! ஆதவன் வந்தாரா?’ பலதடவை அவரை மடக்கி, ‘எனக்கு ஒங்க மகன் வயசு தான் இருக்கும். ஏன் வாங்கோ….போங்கோனு படுத்தறீங்க!’ என்று கடிந்துகொண்டாலும் அவர் தன்னை மாற்றிக்கொண்டதில்லை.

எனக்கு அவரிடம் பிடித்த இன்னொரு விஷயம் அவரது அநாயாச மரணம்.எல்லோருக்கும் அந்த பாக்யம் கிட்டுவதில்லை. லேசாக ஜுரம் என்று படுத்தவர் அடுத்தநாள் அதிகாலையில் சிரமப்படாமல், மற்றவர்களை சிரமப்படுத்தாமல் போய்விட்டார்.  எனக்கும் அதுபோல நடக்கவேண்டுமென்று தினமும் வேண்டிக்கொள்கிறேன். அவன் சித்தம் எப்படியோ?

நன்றி: காலச்சுவடு -க.நா.சு. நூற்றாண்டு விழா  மலரில் வெளிவந்தது.

Oct 11, 2012

க.நா.சுவின் தட்டச்சுப்பொறி-ஜெயமோகன்.

க.நா.சு.100

மலையாள நாவலாசிரியர் சி.ராதாகிருஷ்ணன் இன்று வாழும் முக்கியமான படைப்பாளி. செவ்வியல் தன்மை கொண்ட பெரும்நாவல்களை உருவாக்கியவர். தன் சுயசரிதையில் அவரது முதல் நாவலான நிழல்பாடுகள் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக Patches of shade என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வந்த அனுபவத்தை சொல்லியிருக்கிறார். நேஷனல் புக் டிரஸ்ட் ஆங்கிலத்தில் வெளியிடுவதற்கான மொழியாக்கங்களுக்கு ஒரு போட்டி வைத்தபோது அன்று இளம் எழுத்தாளராக இருந்த சி.ராதாகிருஷ்ணன் தன் நாவலின் பிரதியை அனுப்பியிருந்தார். டெல்லியில் தேர்வுக்குழுவில் என்ன நடந்தது என்று பிறகு அவர் அறிந்தார்.

’ஒரு சாகித்ய அக்காதமி விருதுகூட வாங்காத இவன் யார்?’ என்ற அணுகுமுறை நடுவர்கள் மத்தியில் இருந்தது. அவரது நாவலை எட்டு நடுவர்களில் ஒருவர்கூட வாசித்தே பார்க்கவில்லை. two ஆனால் ஒரே ஒரு நடுவர் மட்டும் போட்டிக்காக அளிக்கப்பட்ட முப்பது நாவல்களையும் வாசித்துப்பார்த்தார். வந்தவற்றில் சி.ராதாகிருஷ்ணனின் நாவல்தான் சிறந்தது என்று அவர் நினைத்தார். நடுவர்கள் எல்லாரும் பேசிமுடித்ததும் திட்டவட்டமாகத் தன் கருத்தைச் சொன்னார்.பொதுவாக வங்காளிகள் எல்லாவற்றையும் வங்கத்துக்குக் கொண்டுசெல்லமுயல்வார்கள், பிற எவரையும் ஒரு பொருட்டாக நினைக்கவும் மாட்டார்கள். கூட்டாகச் செயல்படுவதிலும் விடாது வாதிடுவதிலும் மன்னர்கள். ஆனால் அந்த நடுவர் தன் முடிவில் திடமாக இருந்தார்

அவரால் தன் கருத்தைத் தர்க்கபூர்வமாக முன்வைத்து வாதிடமுடியவில்லை. அவருக்கு அது தேவையில்லை என்ற எண்ணமிருந்தது. ’நாவல் இதோ இருக்கிறது, படித்துப்பாருங்கள்’ என்று மட்டும் அவர் திரும்பத் திரும்பச் சொன்னார். தன் ரசனைமீது மட்டுமல்ல அந்த நடுவர்களின் ரசனைமேலும் அவருக்கு நம்பிக்கை இருந்தது. கூட்டம் கலைந்தது. மறுநாள் கூடியபோது எட்டு நடுவர்களில் ஆறுபேர் அந்நாவலை மிகச்சிறந்த நாவலாக ஒப்புக்கொண்டார்கள். வங்காளிகள் இருவரும் அந்நாவல் நல்ல படைப்பென்றாலும் ஒரு வங்க நாவல் ஒருபடிமேல் என்று வாதிட்டார்கள். பரிசு சி.ராதாகிருஷ்ணன் நாவலுக்குக் கிடைத்தது. அந்த நடுவர் தமிழ்நாட்டைச்சேர்ந்த ஒரு வயதான ஆங்கில எழுத்தாளர், பெயர் கெ.என்.சுப்ரமணியம் என்று சி.ராதாகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

இந்த ஒரு நிகழ்ச்சியில் இருந்து நாம் அறியும் ஒரு முழுமையான சித்திரம் உள்ளது. க.நா.சு அன்று சி.ராதாகிருஷ்ணன் போல நிறைய வாசிக்கும் முக்கியமான இந்திய எழுத்தாளர்களுக்குக் கூட அறிமுகமில்லாதவராக இருந்தார். தமிழ்நாட்டைப்பற்றி ஆங்கிலநாளிதழ்களில் கட்டுரைகள் எழுதுபவர் என்பதே அவரது அடையாளம். அவர் தமிழின் மகத்தான இலக்கிய ஆளுமை என்பதை டெல்லியில் அவரைச்சுற்றி இருந்தவர்கள்கூட உணர்ந்திருக்கவில்லை.அவரது டெல்லிநண்பர்கள் சிலரால் அவர் அந்த நடுவர்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பார். அந்த சிறு ஊதியம் அவருக்கு ஒருமாதகால வாழ்க்கைக்கு உதவுமே என அவர்கள் நினைத்திருப்பார்கள்.

க.நா.சு வின் ஆளுமையும் அந்த நிகழ்ச்சியில் தெரிகிறது. க.நா.சுவுக்கு இலக்கியம் என்பது ஒரு பதவியோ, பணியோ அல்ல. அது அவரது வாழ்க்கைஇலட்சியம். அவரது உபாசனை அது. அதில் சமரசமோ அலட்சியமோ அவருக்குச் சாத்தியமில்லை. பூர்ணமான அர்ப்பணிப்புடன் மட்டுமே அவரால் அதைச்செய்யமுடியும். அதில் சுயநலமோ, தன்னகங்காரமோ ,சாதிமதஇனமொழிப் பிரிவினைகளோ அவருக்குக் கிடையாது. அந்தப்போட்டியில் அவருடைய நண்பர் எழுதிய ஒரு தமிழ்நாவலும் இருந்திருந்தால் அவர் அதன் தரத்தை மட்டுமே கருத்தில்கொண்டிருப்பார். அவரது இலக்கிய ஈடுபாடு என்பது ஆத்திகனின் கடவுள்பக்திபோல.

அவரது துல்லியமான இலக்கிய ரசனை நாம் அறிந்ததுதான். திட்டவட்டமாக இலக்கிய ஆக்கங்களை ஒப்பிட்டுத் தரப்படுத்தி மதிப்பிட அவரால் முடியும். அவ்வாறு அடையப்பெற்ற தன் முடிவுகளை எந்தவித ஐயமும் மழுப்பலும் இல்லாமல் அவர் முன்வைப்பார். ஆனால் க.நா.சு தன்னுடைய ரசனையை அல்லது முடிவை முன்வைத்து வாதிடுவதில்லை. ‘என் வாசிப்பிலே இப்டி தோண்றது. நீங்க வாசிச்சுப்பாருங்கோ’ என்ற அளவுக்குமேல் அவரது இலக்கிய விவாதம் நீள்வதில்லை. அங்கும் அதைத்தான் அவர் சொன்னார்.

அவருக்கு இலக்கியரசனையை விவாதம்மூலம் வளர்க்கமுடியும் என்பதில் நம்பிக்கை இல்லை. இலக்கியரசனை என்பது அந்தரங்கமான ஓர் அனுபவம் என அவர் நம்பினார். ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொரு தளத்தில் நிகழ்கிறது. வாசகனின் வாழ்வனுபவங்கள் , அவன் அகம் உருவாகிவந்த விதம், அவனுடைய உணர்ச்சிநிலை ஆகியவற்றுடன் பிணைந்தது அது. ஆகவே வாசக அனுபவத்தைப் பரிமாறிக்கொள்ளமுடியாது. இலக்கியரசனையை வளர்க்க இலக்கியங்களை வாசிப்பது மட்டுமே ஒரே வழி. அதற்கு நல்ல இலக்கியங்களை சுட்டிக்காட்டினால் மட்டுமே போதுமானது.

க.நா.சு தமிழின் தலைசிறந்த விமர்சகர் என்று சொல்லப்படுகிறார். ஆனால் அவர் இலக்கியவிமர்சனம் என்று சொல்ல அதிகமாக ஏதும் எழுதியதில்லை. அவருக்கு இலக்கியக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லை. இலக்கியத்தை வகைப்படுத்துவதிலும் ஆர்வமில்லை. ஆக அவரால் செய்யக்கூடுவது இலக்கிய அறிமுகம், இலக்கியவரலாற்றுக்குறிப்புகள், இலக்கியப் பரிந்துரைகள் ஆகிய மூன்றுமே. மூன்றையும் ஒட்டுமொத்தமாக இலக்கிய இதழியல் எனலாம். அவர் சலிக்காமல்செய்து வந்ததும் அதுவே.

க.நா.சு வின் முக்கியமான சீடர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி ’உலகமெங்கும் இலக்கிய விமர்சகர் என்ற சொல் எந்த அர்த்ததில் பயன்படுத்தப்படுகிறதோ அந்த அர்த்தத்தில் க.நா.சுவை இலக்கிய விமர்சகர் என்று சொல்லமுடியாது, அவரை இலக்கியச் சிபாரிசுக்காரர் என்று சொல்லலாம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு கறாரான கல்வித்துறைசார்ந்த வரையறையில் அப்படிச் சொல்லலாம்தான். ஆனால் அது சரியானது என்று படவில்லை. ஏனென்றால் ஒன்று, உலகம் முழுக்க இலக்கியவிமர்சனத்துக்கு என்று அப்படி ஒரு பொதுவரையறை இல்லை. இரண்டு க.நா.சுவின் அணுகுமுறைக்கு இந்தியமரபில் நீண்ட தொடர்ச்சியும் வேரும் உண்டு.

சுந்தர ராமசாமி எந்த அளவுகோலால் க.நா.சு இலக்கிய விமர்சகர் இல்லை என்கிறாரோ அந்த அளவுகோலால்தான் தமிழில் நமக்கு இலக்கிய விமர்சனமரபு இல்லை என்றும் சொல்கிறார். அதுவும் பொருந்தாத மதிப்பீடே. மேல்நாட்டு இலக்கியவிமர்சனம் என்பது பதினெட்டாம் நூற்றாண்டுமுதல் உருவாகி வந்த ஒன்று. இறையியல் விவாதங்களில் இருந்து அதற்கான மொழியும் கலைச்சொற்களும் உருவாகிவந்தன. அதையே நாம் இன்று இலக்கியவிமர்சனம் என்கிறோம். இலக்கிய அனுபவத்தை வகுத்துரைப்பது, இலக்கிய மதிப்பீடுகளை முன்வைத்து வாதிடுவது ஆகிய இரண்டும் அதன் அடிப்படைகள். இலக்கியத்தைப் புறவயமாக விவாதிக்கமுடியும் , விவாதிக்கவேண்டும் என்ற நம்பிக்கையே அதன் அடிப்படை. அந்த நம்பிக்கை இந்திய இலக்கியத் தளத்தில் மேலோங்கியிருக்கவில்லை. ஆகவே மேலைநாட்டு இலக்கியவிமர்சனத்தின் பாணியிலான எழுத்துக்கள் நம்மிடம் இல்லை. நம்முடைய இலக்கிய விமர்சன முறையே வேறு.

இந்திய இலக்கிய மரபு இலக்கியத்தில் லட்சணம் சார்ந்தும் ரசம் சார்ந்தும் அணுகியது. லட்சணமே இலக்கணம். நாம் இலக்கியத்தில் புறவயமாக விவாதித்தது இலக்கணத்தைத்தான். ஆனால் இலக்கண அணுகுமுறை குறுகிய வரையறைகளைச் சார்ந்ததாக இருக்கவில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்ற விரிவான பார்வை கொண்டதாக இருந்தது. இலக்கிய ஆக்கத்தில் புறவயமாக வகுத்துக்கொள்ளத்தக்க எல்லா அம்சங்களையும் கணக்கில் கொண்டு விவாதிக்கக்கூடியதாக இருந்தது. நம்முடைய இலக்கணவிவாதங்கள் நமது இலக்கியவிமர்சனங்கள் என்று சொல்லலாம். ரசம் சார்ந்த அணுகுமுறை இலக்கியம் உருவாக்கும் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது. இலக்கியச்சுவை வாசகனின் மனதிலேயே நிகழ்கிறது. ஆகவே அது புறவயமாக விவாதிக்கத்தக்கதல்ல. அதில் சுட்டிக்காட்டப்படுவதற்கு அப்பால் விமர்சகன் எதுவும் செய்வதற்கில்லை. அந்தவகையான ரசனை விமர்சனம் இங்கே வலுவாக இருந்துள்ளது.

நம்முடைய ஆரம்பகட்ட விமர்சகர்களில் பல வகையாலும் இரட்டையர் என்று சொல்லத்தக்கவர்கள் சி.சு.செல்லப்பாவும் க.நா.சுவும். இவர்கள் இருவரும் மேலே சொல்லப்பட்ட இருவகை விமர்சனமுறைகளை சரியாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதைக் காணலாம். சி.சு.செல்லப்பா எப்போதுமே இலக்கணம்சார்ந்த அணுகுமுறை கொண்டவர். ஒரு ஆக்கத்தை எப்படி வகுத்துக்கொள்வதென்பதே அவரது நோக்கம். ஆனால் க.நா.சு எப்போதுமே அப்படைப்பு உருவாக்கும் சுவையையே முக்கியமாக கவனிக்கிறார். அவரது ரசனைவிமர்சனம் படைப்புகளை நல்ல வாசகனாக நின்று வாசித்தபின் அவை உருவாக்கும் அனுபவங்களின் அடிப்படையில் மதிப்பிடுவதாகும். இந்த வழிமுறை இங்கே சங்ககாலம் முதல் இருந்துள்ளது. இந்த அளவுகோலின்படித்தான் பல்லாயிரம் பாடல்களில் இருந்து சிலபாடல்கள் தேந்ந்தெடுக்கப்பட்டு சங்க இலக்கியத் தொகைநூல்கள் உருவாயின. பல்வேறு காவியங்களில் இருந்து ஐம்பெரும்காப்பியங்கள் அடையாளம் காணப்பட்டு முன்வைக்கப்பட்டன. திருக்குறளும் கம்பராமாயணமும் முன்னிறுத்தப்பட்டன.

க.நா.சு பட்டியல்தான் போட்டார் என்பவர்கள் நம்முடைய ஒட்டுமொத்த இலக்கிய மரபே பட்டியல்கள்தான் என்ற உண்மையைக் கவனிப்பதில்லை. சங்க இலக்கியம் என்று நாம் சொல்வது என்ன? பிரம்மாண்டமான ஒரு காலஅளவில் உருவான ஆக்கங்களில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட ஆக்கங்களின் பட்டியல்கள்தானே? அன்று முதல் நாலாயிர திவ்யப்பிரபந்தம் , சைவத்திருமுறைகள் ஈறாக நம்முடைய இலக்கிய அறிஞர்கள் தொடர்ச்சியாகப் பட்டியல்கள் தானே போட்டிருக்கிறார்கள்? அந்தப்பட்டியல்கள்தானே நல்ல ஆக்கங்களை அடையாளம்காட்டித் தொகுத்து அடுத்த தலைமுறைக்கு அளித்தன? அதன் வழியாக நாம் தமிழிலக்கியம் என்று இன்று காணும் இந்த தொடர்ச்சியான பேரியக்கத்தை நிலைநிறுத்தின? சைவத்திருமுறைகளைப் ‘பட்டியலிட்ட’ நம்பியாண்டார் நம்பிக்கும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைப்‘பட்டியலிட்ட’ நாதமுனிகளுக்கும் ஒரு சமகால முகம் என்று நான் க.நா.சுவைச் சொல்வேன். க.நா.சுவின் பட்டியல்களே நாம் இன்று நவீனத்தமிழிலக்கியம் என்று சொல்லும் அமைப்பின் அல்லது இயக்கத்தின் அடித்தளத்தைக் கட்டமைத்தன.

க.நா.சு இலக்கியத்திறனாய்வு என்றபேரில் விரிவான அலசல்களையும் தர்க்கங்களையும் எழுதவில்லை. ஆனால் அவர் நவீனத்தமிழிலக்கியச்சூழலில் திட்டவட்டமாக இலக்கிய அளவுகோல் ஒன்றை உருவாக்கி நிலைநிறுத்தினார். அவரை நாம் மாபெரும் இலக்கிய விமர்சகர் என்று சொல்வது அவர் என்ன எழுதினார் என்பதனால் அல்ல, என்ன சாதித்தார் என்பதனால்தான். இன்று நோக்கும்போது பிரமிக்கத்தக்க கருத்தியல்வெற்றி என்று அதைச் சொல்லத்தோன்றுகிறது. இன்று இடதுசாரிகள், திராவிடசாரிகள், வணிகச்சாரிகள் உட்பட அனேகமாக எல்லா தரப்பினரும் நவீனஇலக்கியமரபு என்று ஒத்துக்கொள்ளும் ஒரு படைப்புவரிசை உள்ளது. அந்த வரிசை க.நா.சு அவரது ரசனைவிமர்சனம் மூலம் அடையாளம் காட்டி அரைநூற்றாண்டுக்காலம் தொடர்ச்சியாக வலியுறுத்தி நிறுவியது. க.நா.சு வெறுமே டைரிதான் எழுதினார் என்றால் அந்த டைரிதான் நவீனத்தமிழிலக்கியம் என்ற அமைப்பாக ஆகியது என்று சொல்லலாம்.

திரும்பவும் அந்த முதல் நிகழ்ச்சியைப் பார்க்கிறேன். அன்று அந்த நடுவர்குழுவில் இந்திய இலக்கியத்தின் பெருந்தலைகள் பல இருந்தன. க.நா.சு தமிழகத்தில் மதிக்கப்படாமல் கிட்டத்தட்ட துரத்தப்பட்டு டெல்லியில் அடைக்கலம் புகுந்த நிலையில் இருந்தவர். அவருக்கு சாகித்ய அக்காதமி விருதே மிக முதிய வயதில்தான் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தன்னுடைய சொந்த ரசனை சார்ந்த ஒரு முடிவை அந்த நடுவர்குழுவின் முடிவாக மிக எளிதாக ஆக்கிவிட்டார். அது எப்படி? க.நா.சுவிடம் இருந்த அந்த அறிவதிகாரம் என்ன? அதுவே இங்கே தமிழ்நாட்டிலும் அவரது சொந்தரசனையை ஒரு தரமான வாசகர்வட்டம் தங்கள் ரசனையாக எடுத்துக்கொள்ள வழிவகுத்தது. அதனூடாகத் தமிழிலக்கியத்தில் ஒரு தெளிவான வாசகத்தரப்பாக அதை நிறுத்தியது.

அதை இப்படிச் சொல்லலாம். படைப்புகளின் முன்னால் க.நா.சு தன்னை ஒரு ‘வெறும்’ வாசகனாக நிறுத்திக்கொண்டார். தனக்கென்று அரசியல்கொள்கைகளோ அழகியல்கோட்பாடுகளோ எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. தான் வாசித்த நூல்களைக்கூடத் தனக்கான அடையாளமாக ஆக்கிக்கொள்ளவில்லை.பல்லாயிரம்நூல்களை வாசித்தபின்னரும் ஒரு புதியவாசகராகவே படைப்புகளின் முன் நின்றார். தன்னுடைய சொந்த வாழ்க்கையை முன்வைத்து வாசித்தார். வாழ்க்கையைப்பற்றியும் மனிதர்களைப்பற்றியும் தன் அனுபவங்கள் அளித்த அறிதல்களையே படைப்புகளைப் புரிந்துகொள்வதற்கான கருவிகளாகக் கண்டார். இலக்கியப்படைப்பு தனக்களிக்கும் சித்திரத்தைத் தன் கற்பனையைக்கொண்டு விரிவாக்கி முழுமையாக்கினார். ஆகவே அவருக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத உலகங்களை எழுதிய நீல பத்மநாபன் ,ஆர்.ஷண்முகசுந்தரம், பூமணி போன்றவர்களின் புனைவுலகங்களுக்குள் மிக இயல்பாக நுழைந்து வாழ்ந்தார்.

இலக்கிய ஆக்கம் முன்னிலைப்படுதுவது க.நா.சு போன்ற ஒரு வாசக மனத்தையே. அது தமிழ்மொழிப்பரப்பின், இந்தியசிந்தனைப்பரப்பின்,மானுடப்பண்பாட்டுவெளியின் நுண்ணிய ஓர் அலகு. அங்கே அந்தப்பண்பாட்டுத்தளத்தின் எல்லா விதைகளும் உறங்கும் ஒரு நிலம் அது. அங்கே ஒரு பிடி நீரை மட்டும் படைப்பாளி விட்டால்போதும், விதவிதமான விதைகள் முளைவிட்டு மேலெழும். இந்த அம்சத்தையே இலக்கிய நுண்ணுணர்வு [Literary Sensitivity ] என்ற பொதுச்சொல்லால் குறிப்பிடுறோம். அது எப்படி உருவாகிறது, எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கெல்லாம் எவ்வளவோ கோட்பாடுசார்ந்த விளக்கங்கள் உள்ளன. ஆனால் இலக்கியங்களை அறிவது இந்த அம்சம்தான். அது ஒருவருக்கு அவரது வாழ்க்கையால் உருவாக்கப்படுவது, அவரது ஆளுமையாகவே ஆகிவிடுவது.

ஆகவே க.நா.சுவுக்கு இலக்கியத்தில் கொள்கை, கட்சி சார்ந்த பேதங்களே இருக்கவில்லை. அவரை முற்போக்கு முகாம் முழுவீச்சில் எதிர்த்தபோதுகூட முற்போக்கு எழுத்தாளரான கு.சின்னப்பபாரதியின் தாகம் நாவலை அவர்தான் அடையாளம் காட்டினார். எவ்வளவோ முற்போக்கு இலக்கியங்களை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆர்.ஷண்முக சுந்தரம் போல மறக்கப்பட்டுவிட்டவர்களை பற்றித் தொடர்ந்து பேசினார். படைப்பில் அவர் உள்ளே நுழைந்து வாழ இடமிருக்கிறதா என்பதே அவரது அளவுகோலாக இருந்தது. அவரது அளவுகோல் அபூர்வமாகவே பிழைசெய்தது. சிறந்த உதாரணம் ப.சிங்காரம். சிங்காரத்தின் அங்கதத்தை க.நா.சுவால் உள்வாங்கமுடியவில்லை.

‘விமர்சகன் ஒரு முன்னுதாரண வாசகன்’ என்ற கூற்றுக்கு மிகச்சிறந்த உதாரணம் அவர். அவர் விமர்சகர் அல்ல என்பவர்கள் கூட அவரது காலகட்டத்தின் மிகச்சிறந்த தமிழ்வாசகர் அவரே என்று எண்ணினார்கள். அவரது கருத்துக்களை அறிந்துகொள்ள ஆர்வம்காட்டினார்கள். அவருடன் தொடர்ந்து விவாதித்தார்கள். இலக்கிய ஆக்கங்கள் தேடுவது இத்த்தகைய மிகச்சிறந்த வாசகர்களையே. எந்த இடத்திலும் நல்லவாசகர்களை இலக்கியப்படைப்பு கண்டடைகிறது. ஆகவேதான் இலக்கியம் என்ற தொடர்ச்சி நீடிக்கமுடிகிறது. எந்த ஒரு நல்ல வாசகனும் உள்ளூர க.நா.சுவுடன் தன்னை அடையாளம் காண்பான். அவர் சொல்லும் முடிவுகளை அவன் தன் முடிவுகளுடன் ஒப்பிடுவான். அவரை நெருங்கிவருவான். டெல்லியில் நிகழ்ந்தது அதுவே. இலக்கியம் நுண்ணுணர்வு மிக்க மனங்களை நோக்கிப் பேசுகிறது, அந்த மனங்களில் அன்று மிக நுண்மையானது க.நா.சுவின் மனம். ஆகவேதான் அவர் வாசகத்தரப்பின் தலைமைக்குரலாக ஒலித்தார். இலக்கியவிமர்சகராகப் பங்களிப்பாற்றினார். ஒருவேளை அவர் ஒரு வரிகூட எழுதாமலிருந்தாலும்கூட அவர் இலக்கியவிமர்சகராகவே கருதப்படுவார்.

க.நா.சு ஒரு தட்டச்சுப்பொறி வைத்திருந்தார். கையில் மடித்துக் கொண்டுசெல்லக்கூடிய சிறியவகை யந்திரம். அதில் தட்டச்சு செய்ய ஒரு தனிப்பயிற்சி தேவை. அவரது ஒரே ஸ்தாவர-ஜங்கம சொத்து அதுதான். நாலைந்து ஜிப்பா வேட்டிகளை ஒரு பையில் எடுத்துக்கொண்டு இதை இடுக்கிக்கொண்டால் அவர் எங்கும் சென்று எவ்வளவுநாளும் தங்கமுடியும். என் நண்பர் மு.கி.சந்தானம் க.நா.சுவின் ரசிகர். அடிக்கடி க.நா.சுவைத் தன் விருந்தினராக தர்மபுரிக்கும் ஓசூருக்கும் வரவழைத்து வீட்டில் தங்கவைத்து உபசரித்திருக்கிறார். காலையில் சிற்றுண்டி, காபி. அதன்பின் இரவுதான் சிற்றுண்டி. சோறு அனேகமாகத் தேவையில்லை. எளிய கொறிக்கும் உணவுகள் போதும். வேறு எந்த வசதிகளும் தேவையில்லை.

க.நா.சு எங்கோ அவர் தன் கட்டுரைகளைத் தட்டச்சு செய்வதாக எழுதிவிட்டார். அதை வாசித்த அன்றைய மார்க்சியப் பேராசானும் ஈழத்தின் பெரும்தனவந்தருமான க.கைலாசபதி, க.நா.சு ஒரு செல்வச்சீமான் என்றும் சொந்தமாகத் தட்டச்சுப்பொறி வைத்திருப்பவர் என்றும் அதற்கான பணம் சி.ஐ.ஏயில் இருந்து அவருக்கு வருவதாகவும் எழுதினார். நம்மூர் மார்க்ஸியர் அரைநூற்றாண்டுக்காலம் அதை திருப்பித்திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். க.நா.சு அதை வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டார் என்றாலும் உள்ளூர அவருக்கு வருத்தமிருந்தது. ஆனால் உள்ளும் புறமும் எதையும் பெரிதாக சுமந்தலைபவர் அல்ல. மானசீகமாக அவர் ஒரு நாடோடி. வம்புகளுக்கு எதிர்வினையாற்றும் வழக்கமே அவரிடம் இல்லை.

அதிகாலையில் க.நா.சு எழுந்துவிடுவார். அன்று எழுதவேண்டியதை எழுதிக் காலையிலேயே தபாலில் போட்டுவிட்டால் அவரது வேலைமுடிந்தது. அதன் பின் வாசிப்பும், உலாவுவதும், பேச்சும்தான். அதிகாலையின் அமைதியில் விளக்கின் சிவப்பு ஒளி கனத்த கண்ணாடிச்சில்லுகளில் கனல, சற்றே கூனலிட்டு அமர்ந்து க.நா.சு தட்டச்சு செய்யும் காட்சி தன் நினைவில் என்றும் இருப்பது என்றார் மு.கி.சந்தானம். அந்தத் தட்டச்சுப்பொறி மிகப்பழையது. நாலைந்து எழுத்துக்களுக்கு ஒருமுறை அதன் அச்சுகள் சிக்கிக்கொள்ளும். க.நா.சு அதைப் பொறுமையாகப் பிரித்துவிட்டு மீண்டும் தட்டுவார். அவரது மொழிநடையில் எப்போதும் அந்த தடங்கல் பிரதிபலித்தது என்று நான் சொன்னேன்

‘அந்தத் தட்டச்சுப்பொறி அனேகமாக மூர்மார்க்கெட்டில் இரண்டாம்விலைக்கு வாங்கியதாக இருக்கும்” என்றார் மு.கி.சந்தானம். அந்தக்காலத்தில் இங்கிலாந்தில் இருந்து அப்படிக் கொஞ்சம் பழைய கருவிகள் மூர்மார்க்கெட்டுக்கு வரும். நான் சிரித்தபடி “அது மூன்றுநான்கு கைகள் மாறியதாகக் கூட இருக்கலாம். அதற்கு முன் டி.எஸ்.எலியட் வைத்திருந்திருக்கலாம். கூல்ரிட்ஜ் வைத்திருந்திருக்கலாம்’ என்றேன்.

நன்றி: ஜெயமோகன்.காம்

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்