Showing posts with label அம்பை. Show all posts
Showing posts with label அம்பை. Show all posts

Aug 28, 2012

மிலேச்சன்-அம்பை

எழுபதுகளில் எழுச்சி பெற்று வரும் பெண்ணினத்தின் முக்கியக் குரல்களில் ஒன்றாக அறியப்பட்ட 'அம்பை'யின் இயற்பெயர் சி.எஸ்.லக்ஷ்மி. பிறந்தது கோயம்புத்தூரில் (17-11-1944). இந்தியப் பெண்களின் பிரச்னைகள், அவர்களுடைய சமூக அந்தஸ்து ஆகியவை பற்றிய இவரது கட்டுரைகள் பிரபல ஆங்கில சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. 'அந்தி மாலை'  (நாவல், 1966), 'நந்திமலைச் சாரலிலே' (குழந்தைகள் நாவல், 1961), 'சிறகுகள் முறியும்' (சிறுகதைகள், 1976) - இவை நூல் வடிவில் வெளிவந்துள்ள படைப்பு கள். 'தங்கராஜ் எங்கே?' என்ற குழந்தைகள் திரைப் படத்துக்காக வசனம் எழுதியிருக்கிறார்.

ambai (3)

ஊரின் ஒதுக்குப்புறத்தில், பிறரின் தொடல்களுக்கு அருகதையற்ற கீழ்ஜாதி ஆத்மாவாய்த் தன்னை உணர்ந்தான் சாம்பு அந்த இடத்தில்; அந்தச் சமயத்தில்.

அவனைச் சுற்றிலும் பேச்சு நடந்துகொண்டிருந்தது. அவன் பங்கேற்காததைப் பற்றிக் கவலைப்படாத பேச்சு. அவன் அங்கே யிருந்த நாற்காலிகளில் ஒன்றாக இருந்திருக்கலாம். ஸவிதா, அவளுக்கும் அவள் பெற்றோர்களுக்குமிடையே உள்ள அபிப்பிராய பேதங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள், காலை சிற்றுண்டி யின் போது. "அவர்களுக்கு நான் பெரிய பிசினஸ் எக்ஸிக்யூடிவைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை. எனக்கு அப்படியில்லை. அறிவு பூர்வமாக நான் ஒருவனை விரும்பவேண்டும். அவனுக்கு மற்றவர்களின் துன்பங்களில் பங்கேற்கத் துடிப்பு இருக்க வேண்டும்."

அவனுக்கு ஏனோ அவன் தங்கை இந்துவின் நினைவு வந்தது. ஸவிதா, உனக்குத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கிறது. உன் அப்பா பெரிய வர்த்தகர். ஓர் அறிவு ஜீவியை நாடக்கூட உன் போன்ற வர்களுக்குத்தான் உரிமை. ஆனால் இந்து? அவள் காலையில் எழுந்து அம்மாவிடம் ஆயிரம் திட்டுகள் கேட்டவாறே இயங்கி, அவளே கஞ்சி போட புடைவை ஒன்றை உடுத்தி, குட்டி டிபன்பாக்ஸில் மத்தியான்னத்துக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு பஸ் பிடிக்க ஓடுவாள். பஸ்ஸில் இடம் விடும் முதல் ஆள் அவள் கவனத்தைக் கவர்ந்துவிடுவான். புன்சிரிப்புப் பூக்கும். அவள் மனம் குளிர ஓர் ஆண் முகம் போதும். தர்க்கரீதியாக இயங்குவது இல்லை அவள் மனம். அவள் வெறும் உணர்ச்சிகளின் கலவை. தியாகம், பாசம், தூய்மை, தேசபக்தி, அன்பு, காதல் போன்ற சொற்கள் அவள் மனத்தின் தந்திகளை மீட்டுபவை. அவளிடம் கல்யாணத்தைப் பற்றிப் பேசி ஒருவனைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் அவள் மிரண்டுவிடுவாள். காலம் காலமாய் அவள் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இல்லாத, இருந்து பழக்கமில்லாத உரிமை அது. அவள் காதலித்தாலும் சினிமா கூட்டிப் போக, புடைவைகள் வாங்கித் தர, அடிக்காமல் அன்பு செலுத்த (அப்பாவிடம் வாங்கிய பெல்ட் அடிகளின் எதிரொலி) ஒருவனைத்தான் காதலிப்பாள். கல்யாணம் செய்துகொண்டு, பிள்ளைகள் பெற்றுச் சினிமாப் பார்க்கும் திருப்தியிலும் பண்டிகைகள் கொண்டாடும் பக்தியிலும் வாழ்க்கையைச் செலவழித்து விடுவாள். தனக்கு நிராகரிக்கப்பட்டது எது என்பதை அவள் அறியமாட்டாள். அந்த மட்டும் திருப்தி. அவன் அதை உணரும்போதுதான் சிக்கல்கள்.

"மதராஸி இன்று ரொம்ப யோசிக்கிறார்" என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டுச் சிரித்தாள் ஸவிதா. புன்னகை செய்தான் சாம்பு.

"ஒரு கொள்கைக்குக் கட்டுப்பட்ட அறிவு ஜீவியைப் பற்றி என்ன நினைக்கிறாய் சாம்பு?" என்று கேட்டாள் ஆங்கிலத்தில்.

"நான் கூட ஒரு கொள்கைக்குக் கட்டுப்பட்ட அறிவு ஜீவி தான். என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்" என்றான் பதிலுக்கு.

அவள் கடகடவென்று சிரித்தாள்.

"நல்ல ஜோக்" என்றாள்.

"ஏன்?" என்றான்.

"உன் கொள்கை என்ன?" என்றாள் உதடுகளை மடக்கிச் சிரித்தபடி.

"உன்னைப் போன்ற ஓர் அறிவு ஜீவியை மணப்பதுதான்" என்றான் பட்டென்று.

அவள் திடுக்கிடவில்லை. ஒரு நாளில் பத்து முறைகளாவது இவளை மணக்க விரும்புவது பற்றித் தெரிவிக்கும் ஆண்கள் அவள் தோழர்கள். சாம்பு சொன்னதுதான் அவளை வியப்பில் ஆழ்த்தியது.

"குடித்திருக்கிறாயா இத்தனை காலையிலேயே?" என்றாள்.

சாம்பு மேஜையை விட்டு எழுந்தான்.

சென்னை வீதிகளில் உலவும் மனிதர்களை வெறுத்து, மூச்சு முட்டும் அதன் கருத்துகளைப் பகிஷ்கரித்து அவன் டில்லியை வந்தடைந்தான். ஒரு நாள் விடிகாலை, எம்.ஏ. பரீட்சை முடிந்த நிம்மதியில் நடக்க அவன் கிளம்பினான் சென்னையில். கோலம் போட்டவாறே அவனை ஊடுருவி நோக்கும் சந்தியா; (காதலை அவள் நம்புகிறாள், மடப்பெண்!) வயதுக்கு வந்துவிட்ட தன் பேத்தியை மனத்தில் இருத்தி அவனை நோக்கும் எதிர் வீட்டுத் தாத்தா; யுகம் யுகமாய்ச் சிகரெட் கடன் தந்த பெட்டிக்கடை நாயர்; தெரு ஓரத்தில் எந்தக் கூச்சமும் இல்லாமல் எல்லாராலும் அங்கீகரிக்கப்பட்ட மண்ணில் புரண்டு, சேற்றில் உளைந்து பக்கெட் பக்கெட்டாய் மூத்திரம் கொட்டும் எருமை மாடுகள்; வளைந்து குறுகி, பின் அகன்று மீண்டும் சுருங்கிக்கொண்ட, கோலங்கள் பூண்ட அந்த வீதி - எல்லாமே அந்த விடிகாலை வேளையில் ஓர் அந்நியக் கோலம் பூண்டன. திடீரென்று பெருங்கரம் ஒன்று அவனைத் தூக்கி அங்கே கொண்டுவந்து நிறுத்தியது போலத் தோன்றியது. அவன் சாம்பமூர்த்தி அல்ல. கள்ளிக்கோட்டையில் வந்திறங்கிய வாஸ்கோடகாமா போல், ஒரு மிலேச்சனின் கண்களோடு அந்த வீதியை நோட்டமிட்டான். அவனுக்கு மூச்சு முட்டியது.

அவனுக்குரிய இடமில்லை அது என்று தோன்றியது.

பாராகம்பாத் தெரு மரங்களின் நிழலில், இந்தியா கேட்டின் பரந்த புல்லில் பி.எச்டி பட்டத்துக்குப் படிக்கும் அறிவு ஜீவிகளின் சிந்தனையில் தன்னைக் கலந்துகொள்ள அவன் முயன்றான்.

"ஹலோ சாம்பு! இன்னிக்கு வராய் இல்லையா?" மணி கேட்டான். "எங்கே?"

"இன்னிக்கு ஸ்டிரைக். காம்பஸுக்குப் போகணும்." "எதுக்காக ஸ்ட்ரைக்?" "விலைவாசி ஒசந்ததுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க."

"அரிசி என்ன விலை விக்கறதுன்னு தெரியுமா உனக்கு? டேய், பீர் விலை ஒசந்ததுன்னாதானேடா உனக்கு உறைக்கும்?"

"இதோ பாரு. உன்னோட பேச எனக்கு நேரமில்லை. நான் பிஸியா இருக்கேன். வரயா இல்லையா?"

"வரேன்."

"விலைவாசியை இறக்கு."

"இந்திரா ஒழிக."

"மாதாஜி முர்தாபாத்."

"டவுன் வித் ப்ளாக்மார்க்கடியர்ஸ் அண்ட் ஹோர்டர்ஸ்."

"சாம்புவைப் பாரேன். என்ன ஆக்ரோஷமாய்க் கத்தறான்."

"இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்லேதான் ஒருத்தனோட அடங்கிக்கிடக்கிற மூர்க்கத்தனம் வெளியே வரது. கூட்டத்திலே அவன் ஒருத்தன் ஆயிட்டான் இல்லையா?"

சாம்பு பக்கத்தில் வந்தான்.

"காலையில் என்ன சாப்பிட்டாய்?"

"என்ன விளையாடறயா?"

"சொல்லு."

"முட்டை டோஸ்ட், ஜாம், காஃபி, வாழைப்பழம்."

"பயத்தம்பருப்புக் கஞ்சின்னு கேள்விப்பட்டிருக்கிறாயா?"

"ஏன்?"

"அதுதான் எங்க வீட்டுலே கார்த்தாலே சாப்பிட. மிராண்டா ஹவுசில் படிக்கிறாளே உன் தங்கை, கெரஸின் க்யூன்னா என்ன, அதுலே நிக்கற அநுபவம் எப்படீன்னு தெரியுமா அவளுக்கு?"

"நீ சொல்றது தப்பு, சாம்பு. ஒரு விஷயத்தைப் பற்றி என் எதிர்ப்பைத் தெரிவிக்கக் கஷ்டப்படறவனை நான் பார்த்து அதைப் புரிஞ்சுண்டாப் போதும். நானே அதை அநுபவிக்க வேண்டிய அவசியமில்லை. கான்ஸரை ஆபரேஷன் செய்யற டாக்டர் அதோட கொடுமையைப் பார்த்துப் புரிஞ்சுண்டாப் போதும் - அவனுக்கே கான்ஸர் வரவேண்டிய அவசியம் இல்லை."

"இது வியாதி இல்லை."

"இதுவும் ஒரு வியாதிதான், சமூகத்தைப் பீடிக்கிற வியாதி."

"அப்படியே வைச்சிப்போம். நான் அதை அநுபவச்சிருக்கேன்."

"என் சின்னத் தம்பிக்குத் தூங்கறப்போ கதை சொல்லறச்சே, 'அதுதான் ராமராஜ்யம் ஒரே பாலும் தேனும் ஓடும், ரத்னங்கள் வீட்டுலே இறைஞ்சு கிடக்கும்' அப்படி எல்லாம் சொன்னா, ராம ராஜ்யத்துலே கெரோஸின் நிறையக் கிடைக்குமோ அப்படீன்னு அவன் கேள்வி கேக்கறப்போ எந்தப் பின்னணியிலேந்து அது பொறந்ததுன்னு எனக்குப் புரிகிறது. அம்மா கரண்டியைச் சாதத்துலே வெக்கறபோதே ரொம்பச் சமத்தா 'அம்மா, எனக்குப் பசிக்கலே; ஒரே ஒரு கரண்டி போதும்'னு என் கடைசித் தங்கை சொல்லறபோது அரிசி விளைவோட பாரம் என் நெஞ்சிலே ஏறிக்கறது."

பக்கத்தில் நின்றவாறு சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டிருந்த ஸவிதா பெரிதாகச் சிரித்தாள்.

கோஷங்கள் மாலையில் முடிந்தன.

மீண்டும் ஹாஸ்டலுக்கு வரும் வழியில் ஆரதி பானர்ஜி அவனுடன் நடந்து வந்தாள். மென்குரலில் ஆங்கிலத்தில் கூறினாள்.

"உங்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடுதான். ஏனென்றால் நீங்கள் கூறும் அநுபவங்கள் என் வீட்டில் புதிதல்ல" என்றாள்.

"நீ பி.எச்டி. செய்யாமல் வேலைக்குப் போயிருந்தால் உன் வீட்டிற்கு அது பயன்பட்டிருக்கும் இல்லையா?"

அவள் புன்னகை செய்தாள்.

"ஆமாம். ஆனால் என் கனவுகள் என்னை இங்கே அழைத்து வந்தன."

"எந்த மாதிரிக் கனவுகள்?"

"மூன்று வருடங்களில் பி.எச்டி. முடித்துவிடலாம். பின்பு பெரிய வேலை. ஒருவேளை என் வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்து வைக்க ஒரு பணக்காரக் கணவன் கூடக் கிடைக்கலாம். நிஜத்தில் நடந்தது வேறு. பி.எச்.டி.யின் முடிவில் கூடிய வயதும் மனம் பிடிக்காத வேலையும் நித்தியக் கன்னி பட்டமுந்தான் எஞ்சும் போல் இருக்கின்றன."

"உன் மனசுக்குப் பிடித்த யாரும் இங்கில்லையா?"

அவள் அவனைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள். பட்டென்று சொன்னாள்: "என்னிடம் உள்ள மொத்த புடைவைகள் ஐந்து."

"புரியவில்லை."

"ஓபராய் போய்க் காஃபி குடிக்கவோ, அக்பர் ஹோட்டல் போய்ச் சாப்பிடவோ அணிந்துகொள்ளக் கூடிய புடைவைகள் என்னிடம் இல்லை. பெரிய ஹோட்டல்களில் நுழைந்தவுடனேயே என் கண்கள் விரிந்து நாவடைத்துப் போய் விடுகிறது. என் முந்நூறு ரூபாய் ஸ்காலர்ஷிப்பில் நூறு ரூபாய் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன். மரியாதைக்குக் கூட என்னால் எங்காவது வெளியே போனால் 'நான் பில் தருகிறேன்' என்று சொல்ல முடியாது. எனக்கு இந்த மனநிலையில் ஏற்படும் எந்த அன்பும் காதல் என்ற பட்டம் பெற முடியாது. அது சுயநல எண்ணங்களோடு திட்டமிட்டுப் பின் நடைமுறையில் செய்யப்படும் வியாபாரந்தான். காதல் என்ற சொல்லுக்கே நம் வாழ்க்கை முறையில் இடம் இல்லை. இது குறிப்பிட்ட சிலரின் ஏகபோக உரிமை."

"ம்."

"ஒரு நிமிஷம்" என்று அப்பால் சென்றாள்.

"ஏய் சாம்பு, ஆரதியிடம் ஜாக்கிரதை. அவள் ஒரு கணவனைத் தேடிக்கொண்டிருக்கிறாள். விழுந்து விடாதே."

பின்னால் கனைத்தாள் ஆரதி.

"ஆரதி, நான் ஒன்றும்..."

"பரவாயில்லை கோவிந்த். நீ டெல்லியின் நாற்றச் சந்துகளில், விளக்குக் கம்பம் புடைவை கட்டிக்கொண்டு வந்தால் கூடப் பின்னால் போகிறாய் என்று கேள்விப்பட்டேன். நான் உன்னை விடத் தேவலை இல்லையா?"

கோவிந்துக்குப் பலமான அடிதான்.

அதன்பின் மௌனமாகவே நடந்தனர்.

ஹாஸ்டலில் இந்துவின் கடிதம் வந்திருந்தது.

‘வைரத் தோடாம் அண்ணா. அப்பா முடியாது என்று கூறிவிட்டார். அண்ணா நீ பி.எச்டி. முடித்ததும் நமக்கு இந்த மாதிரி தொல்லை இல்லை. நீ புரொபஸராகிவிடுவாய். அண்ணா நீ நன்றாகப் படி. எனக்கு ஆஃபிஸில் வேலை ஜாஸ்தி. புது ஆஃபீஸர் ரொம்ப டிக்டேஷன் தந்துவிடுகிறார். நாங்கள் எல்லாருமாக ‘நேற்று இன்று நாளை’ போனோம். எனக்குப் பிடித்தது.”

இந்து, இந்து உன் உலகம் எவ்வளவு வித்தியாசமானது. என்னுடையதை விட?

பி.எச்டி. முடித்தால் புரொபஸராகி விடுவேனா? இந்த பி.எச்டி.யை எப்போதுதான் முடிப்பது? புரொபஸர் கருணையின்றி பி.எச்டி. வாங்க முடியுமா? அவர் ஜீனியஸ்தான். அதுதான் தொல்லை. பத்து வருடங்களுக்கு குறைந்து அவரிடம் பி.எச்டி. வாங்க முடியாது. தீஸிஸ் விஷயமாகப் போனால் மிக அழகாக ரெயில்வே ஸ்டிரைக் பற்றிப் பேசுவார். ஜோன் பேயனின் ஸெக்ஸி குரல் பற்றிப் பேசுவார். நிக்ஸன் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைப் பற்றிச் சொல்வார். ஜெரால்ட் ஃபோர்டு எதற்கும் பயனில்லை என்பார். யாரும் நினைவு வைக்க முடியாத சரித்திர சம்பவங்களை நினைவு கூர்ந்து ஜோக் அடிப்பார். ஒன்றரை மணி நேரம் ஆகிவிடும்.

“ஸார், என் சாப்டர்...”

“என்ன சாப்டர்?”

“ஒன்றாவது ஸார்.”

“வீட்டுலே குடுத்தியா ஆஃபிஸிலியா?”

“வீட்டுலேதான்.”

“இன்னொரு காப்பி உண்டா?”

“ம். ஸார்.”

“நாளைக்குக் கொண்டாயேன். பார்க்கலாம்.”

“சாரி, ஸார்.”

இரண்டு வருடங்களாக இதுதான் நடக்கிறது, இந்து. உங்களுக்கு எல்லாம் இது எப்படிப் புரியும்?

“என்ன சாம்பு, லவ் லெட்டரா?” தேஷ்பாண்டே கேட்டான்.

“இல்லை தேஷ்பாண்டே.”

“கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்களா வீட்டில்?”

சிரித்தான் சாம்பு, “ம்ஹூம்.”

“சரி, இன்னிக்கு வெச்சுக்கலாமா?”

“வேண்டாம் தேஷ்பாண்டே.”

“டேய், நீ ஒரு முட்டாள் மதராஸி, வாழ்க்கையை ரசிக்கத் தெரியாத மதராஸி.”

"இருக்கட்டும்."

"உனக்குத் தைரியம் இல்லை. ஒரு பெக் சாப்பிட்டா நீ டவுன் தான்."

"என்னைச் சாலஞ்ச் பண்ணாதே."

"சும்மா பேச்சுத்தான் நீ. அம்மா திட்டுவாளா?"

"சரி, இன்னிக்கு வெச்சுக்கலாம்."

சாயங்காலம் தேஷ்பாண்டேயின் அறையில் ஐந்தாறு நபர்கள் கூடினர். சுடச்சுடத் தொண்டையில் இறங்கிப் பின் சூடு உடம்பில் பரவியது. ஸிக்கிம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

திடீரென்று யானை பலம் வந்தது போலிருந்தது. குறுக்காகத் தொப்பி வைத்துக்கொண்ட நெப்போலியன் தான் எனத் தோன்றியது. பிரஷ் மீசை வைத்த ஹிட்லராக மாறி யூதர்களைக் கூட்டம் கூட்டமாக அழிப்பது போல் தோன்றியது. வேஷ்டி சட்டையுடன் அண்ணாதுரை, ஒரு கூட்டத்தில் பேசுவது போல் தோன்றியது. சிவாஜி கணேசன் முகம் கொண்ட ராஜராஜ சோழன் தான் என்று மார் தட்டிக்கொள்ள அவா எழுந்தது. இழைய முடியாத டில்லி சூழ்நிலை. டைப் அடித்து அடித்து விரல்களைச் சொடுக்கிக் கொள்ளும் இந்து, பாத்திரத்தின் அடியில் இருக்கும் சாதத்தைக் கரண்டியின் சுரண்டல் ஒலி இல்லாமல் எடுக்கும் அம்மா, எல்லாம் மறைந்து அவனே பூதாகாரமாய் ரூபமெடுத்து அத்தனையையும் அடித்துக்கொண்டு மேலெழுந்து வருவது போல் உணர்வு தோன்றியது.

"ஸிக்கிமை ஆக்ரமிக்க வேண்டும்" என்று உரக்கச் சொன்னான்.

"ஏய் சாம்பு, என்ன ஏறிடுத்தோ நன்னா?" மணி கேட்டான்.

"சேச்சே, அதெல்லாம் இல்லை."

"ஜாக்கிரதை, ஒரேயடியாக் குடிக்காதே. மெள்ள மெள்ள."

"நான்ஸென்ஸ். நான் சரியாத்தான் இருக்கேன். ஸவிதா வரலியா?"

"ஸவிதா இங்கே எங்கேடா வருவா?"

"ஏன் வரக்கூடாது? நான்தான் அவ தேடற துடிப்புள்ள இளைஞன். நான் நடுத்தரக் குடும்பம்னா அவ என்னை லவ் பண்ணக்கூடாதா? நான் ஒரு துடிப்புள்ள இளைஞன்."

ஸிக்கிம் பற்றிய பேச்சு நின்றது.

சாம்பு பேசிக்கொண்டே போனான்.

"ஸவிதாவை எனக்குப் பிடிக்கறது. ஆனா இந்த உலகமே வேற. அரசியல், ஆராய்ச்சி, வெளிநாட்டுத் தொடர்பு பற்றிப் பேசற அக்கறை இல்லாத உலகம் இது. தேஷ்பாண்டே, இங்கே ஓட்டை போட்டுண்டு வந்த எலி நான். இங்கே இருக்கிற யார் மாதிரியும் நான் இல்லே. நான் ஒரு துரத்தப்படும் எலி. பூனைகள் உலகத்துலே அகப்பட்டுண்ட எலி. ஸவிதாவை நெருங்க முடியாத எலி. என் தங்கை இந்து இருக்கிற உலகத்துலேயும் நான் இல்லே. கோலம், கோபுரம், புடைவை, சினிமா, கற்பு, கணவன், அம்மா, அப்பா இவர்கள் எல்லாருக்கும் நான் அந்நியமாப் போய்விட்டேன். ஓ, எங்கே?" என்று எழுந்து கால்களை உதறி அறை முழுவதும் தேடி ஓடினான்.

"ஹே, எதைத்தான் தேடுகிறாய்?"

"என் வேர்கள், என் வேர்கள்" என்று ஆங்கிலத்தில் கூறி அழுதான் சாம்பு.

திடீரென்று எழுந்து, "எனக்கு எங்கேயும் இடம் இல்லை" என்று கூறி ஓட ஆரம்பித்தவன் முறித்துக்கொண்டு கீழே விழுந்தான். அறை முழுவதும் வாந்தி எடுத்த நெடி.

"தேஷ்பாண்டே, இதெல்லாம் உன் தப்பு. ஹோல் ஈவினிங் கில்... ஸ்பாயில்ட்."

"ஏய், இவன் முழிக்கமாட்டேன் என்கிறானே?"

"முகமெல்லாம் வெளுத்துவிட்டது."

"குட் லார்ட்! டாக்ஸி கொண்டுவா. வெலிங்டன் ஹாஸ்பிடலுக்கு ஓடலாம்."

கண்ணை விழித்தபோது தேஷ்பாண்டேயின் முகம் தெரிந்தது.

"ஐ ஆம் சாரி."

"இட்ஸ் ஓ கே! எத்தனை பெக் குடித்தாய்?"

"ஒன்பது."

"ஜீஸஸ்!"

"எனக்கு அத்தனையும் தேவைப்பட்டது, தேஷ்பாண்டே! தேஷ்பாண்டே நான் இந்த இடத்தில் இருக்க வேண்டியவன் இல்லை. ஏழு வருஷம் பி.எச்டி. பண்ண என்னால் முடியாது. என் தங்கை கல்யாணம் ஆகாமல் தவித்து விடுவாள். என் அம்மா உருக்குலைந்து போய் விடுவாள். அறிவுஜீவியாவது கூட எனக்கு ஓர் ஆடம்பரமான விவகாரந்தான். அங்கேயும் நான் ஓர் அந்நியன் தான். ஆனாலும் அங்கே நான் தேவைப்படறேன்."

"டேக் ரெஸ்ட், சாம்பு."

தலை திரும்பியபோது ஆரதி வருவது தெரிந்தது.

தேஷ்பாண்டே எழுந்தான். ஆரதியைப் பார்த்து மரியாதைக்குப் புன்னகை செய்துவிட்டுப் போனான்.

"என்ன சாம்பு, இது என்ன இப்படிப் பண்ணிவிட்டீர்கள்?"

கண்களில் நீர் பெருகியது.

"ஆரதி, நான் ரொம்பத் தனியனாக இருக்கிறேன்."

"ம்."

"என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை."

"ம்."

"உனக்கும் இந்த அனுபவம் உண்டா?"

கையிலிருந்த பையைப் பார்த்தவாறே ஆரதி பேசினாள்.

"ம், உண்டு. இதை விட உண்டு. உங்களுக்கு வீட்டுக்குத் திரும்பிப் போக முடியும். அங்கே மூத்தபிள்ளை என்ற அந்தஸ்து உண்டு. எனக்குத் திரும்பிப் போக முடியாது. என் குடும்பம் நான் இல்லாமல் இருக்கப் பழகிவிட்டது. நான் அங்கே போகும்போதெல் லாம் வெளியாளாய் உணர்கிறேன். அவர்களைப் பொறுத்தவரை பிரச்னைகள் இல்லாத ஒரு பெண். அந்த எண்ணத்தை மாற்ற நான் விரும்பவில்லை. இரண்டு உண்மைகளை நான் உணர்வதால் என் நிலைமையை என்னால் ஏற்க முடிகிறது. ஒன்று, வேலை செய்து தான் வாழவேண்டும் என்ற சமூகப் பிரக்ஞையால் பிறக்கும் உணர்வு. இரண்டு, நாம் எல்லோருமே ஒவ்வொரு வகையில் தனியாள்தான் என்ற உணர்வு."

"நான் ஸவிதாவை விரும்புகிறேன்."

ஆரதி புன்னகை செய்தாள். "எனக்குத் தெரியும்."

"நான் பைத்தியக்காரன் என்று நினைக்கிறாயா?"

"ம்ஹூம். உண்மைகளைப் பார்க்காதவர்."

"புரியவில்லை."

"ஸவிதாவை நீங்கள் விரும்புவது நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்தவன் என்ற தாழ்மையுணர்ச்சியால்தான். அந்த வர்க்கத்து உணர்வுகளிலிருந்து விடுபட விரும்பும் வேகத்தால்தான். இந்த உணர்வே ஒரு தப்பிக்கும் முயற்சிதான். ஏணி மேல் ஏறி, எந்த வர்க்கத்தை ஏளனம் செய்கிறீர்களோ அதே வர்க்கத்தை நீங்கள் எட்டிப் பார்க்கிறீர்கள். கீழேயும் உங்களுக்கு இடம் இல்லை. மேலே யும் உங்களுக்கு இடம் இருக்காது."

"கோபிக்காதே. நீ என்னை விரும்புகிறாயா?"

அவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

"மற்றவர்கள் நினைப்பதுபோல் நான் ஒரு கணவனை நிஜமாகவே தேடி அலையவில்லை. உண்மையான பரிவுணர்வைக் காட்ட என் போன்றவர்களுக்கும் முடியும்."

"ஐ ஆம் ஸாரி."

"டோண்ட் பி" என்று கூறிவிட்டு எழுந்தாள்.

அவள் போனபின் வெகுநேரம் நெஞ்சில் பல உணர்ச்சிகள் குழம்பித் தவிக்க வைத்தன. வேர்களற்ற நான் யார்? என்னை எந்த அநுபவங்களோடு நான் ஒன்றிப் போகவைக்க முடியும்? ஆராய்ச்சி செய்ய நேரமோ, பணமோ அவனிடம் இல்லை. அது ஒரு நீண்டகாலத் திட்டம். அவன் போன்றோர்களிடம் இல்லாத ஒரு போகப் பொருள்; காலத்தை அலட்சியம் செய்யும் மனப் பான்மைதான். அவன் காலத்துடன், ஒன்று, அதனுடன் சண்டை யிட்டு, அதனிடம் மண்டிபோட வேண்டியவன். இல்லாவிட்டால் இந்துவின் வாழ்வு குலைந்துவிடும். தம்பியின் எதிர்காலம் இருளடை யும். எங்கும் புகுந்து எப்படியும் வாழும் எலிகளில் அவன் ஒருவன். புரிந்தது. ஆனால் ஏற்க முடியவில்லை. குப்பைத் தொட்டியின் மேல் மல்லாக்கப் படுத்து இறந்து, காக்கை தன் வயிற்றைக் குத்திச் சதை யைப் பிடுங்கும் எலியாய்த் தன்னை உணர்ந்தான். அவன் வித்தியாச மாக எதையும் செய்ய முடியாது. அவனுக்கு நிராகரிக்கப்பட்ட உரிமை அது. அவன் எதிர்வீட்டு ஸந்தியாவை மணக்கலாம். அவ ளுடன் நல்ல கணவனாகப் படுக்கலாம். அவள்மேல் ஆதிக்கம் செலுத் தலாம். குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம். பணம் இல்லாமல் தவிக்கலாம். ரிடையர் ஆகலாம், இறக்கலாம். குப்பைத் தொட்டி மேல் செத்த எலி போல, இதுவே அவனுக்கு விதிக்கப்பட்ட வரம்புகள்.

வரம்புகள், வரம்புகள், வரம்புகள்!

ஆஸ்பத்திரியின் கட்டிலில்; அதன்மேல் அவன், கோபாலை யரின் மகன் சாம்பமூர்த்தி. அவனே அவனுக்கு அந்நியமானவனாகப் பட்டான்.

அவன் திரும்பிப் போவான். கோலங்களின் ஓரமாக எருமைகளைத் தாண்டி அந்தத் தெருவில் நடப்பான்; ஆனால் அதுவல்ல அவன் இடம். அத் தெருவின் மண்; அதன் மீது பஸ் பிடிக்க ஓடும் இந்து; சைக்கிளில் போகும் அப்பா; புத்தகப் பையுடன் போகும் தம்பி; எல்லாரும் எலிகள்; பொந்து போட ஓடும் எலிகள். வரம்புகளைக் கட்டிக்கொண்டு அதனுள் ஓடும் எலிகள்.

பல்லாயிரக்கணக்கான எலிகள், மாறுபட்ட அவனைக் கோரைப் பற்களால் சுரண்டி வால்களால் அவனைத் தாக்கி அவன் மேல் ஆக்கிரமிப்பது போல் உணர்ந்தான். திடீரென்று கோடிக்கணக்கான பூனைகள் எலிபோல் தோன்றிய அவனை நகங்களால் கீறி வாய்க்குள் அடைத்துக்கொள்வதைப் போல் தோன்றியது.

சாம்பு வீரிட்டான்.

--------


    புதிய தமிழ்ச் சிறுகதைகள் ,தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்
    நேஷனல் புக் டிரஸ்ட் ,இந்தியா. புது டில்லி. ,1984

    May 8, 2011

    வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை

    ஒரு சதுர கஜம் எட்டரை விலைக்கு நிலம் வாங்கி வீடு கட்டினாராம் கிஷனின் அப்பா. ரயில்பெட்டித் தொடர் மாதிரி வரிசையாய் அறைகள். எல்லா அறைகளும் முடிந்தபின் போனால் போகிறது என்று ஒட்டவைத்தாற்போல் ஒரு சமையலறை. இரு ஜன்னல்கள். ஒரு ஜன்னலின் கீழ், குழாய் வைத்த தொட்டி, ஒரு பெரிய தட்டுக்கூட வைக்க வகையில்லாமல் குறுகியது. கீழே, செங்கல் தடுப்பு இல்லாத சாக்கடை முற்றம். மேலே குழாயைத் திறந்ததும் கீழே பாதங்கள் குறுகுறுக்கும். பத்து நிமிடங்களில் ஒரு சிறு வெள்ளக்காடு காலடியில். அதில் நின்று நின்று அடிப்பாதம் எல்லாம் வெடிப்புக் கீறல்கள். சமையலறையில் அடி வைத்து, முதல் நாள் சமைத்து, கைக்குத் தங்க வளையல் போட்ட உடனேயே வெடிப்புக்குத் தடவ ஒரு மெழுகுக் களிம்பு தந்து விடுவாள், ஜீஜி என்று எல்லோரும் கூப்பிடும் கிஷனின் அம்மா.   ambai5

    சமையலறையின் கிழக்குப்புறம் பார்த்த ஜன்னல் வழியே பச்சை மலைகள். மேலே ஒரு வெள்ளைப் பொட்டுக் கோயில். பிள்ளையார் கோயில். அந்த ஜன்னலின் கீழேதான் சமைக்கும் மேடை. வெடிப்புப் பாதங்கள் பச்சை மலையில் உறுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்த ஜன்னல் வெளியேதான் துணி உலர்த்தும் கொடி. கால்சராய், சட்டை, பைஜாமா, புடவை, பாவாடை விரிந்து ஜன்னலை மறைக்கும்.

    கொத்தமல்லிப் பொடி, காரப் பொடி, கரம் மசாலாப் பொடி தூவி,அரைத்த பசு மஞ்சளும், இஞ்சியும் தடவப்பட்டுத் தயிரில் ஊறிய மாமிசத் துண்டங்களைக் கிளறி நிமிர்பவர்களை எதிர்கொள்வது ஒரு நாடா தொங்கும் பைஜாமாவாக இருக்கலாம். இதில் யாருக்கும் ஆட்சேபணை இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் வாழும் பாங்கு சமையலறையைச் சுற்றியே இருந்தது. சமையலறை என்ற தத்துவத்தை ஒட்டி, சாப்பாட்டுப் பிரியர்கள் - மதுப் பிரியர்கள் என்றே பெயரெடுத்த வம்சம். அனுபவிப்பவர்கள். உல்லாசிகள். பார்க்கப்போனால் இவர்கள் கல்யாணத்தில் அஜ்மீர் உறவினர்களுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்காத விஷயம் யாருக்கும் எந்தவித மதுபானமும் குடிக்கத் தரவில்லை என்பதுதான்.

    குலதெய்வம் அம்பாவுக்குக்கூட மதுதான் பிரஸாதம். ஸ்காட்சிலிருந்து நாட்டுச் சரக்குவரை எதைத் திறந்தாலும் சுவரில் தெளித்து “ஜெய் அம்பே” சொல்லிவிட்டுத்தான் குடிப்பது. பிறந்த குழந்தையின் வாயில் முதலில் மதுவில் முக்கிய விரலைத்தான் இடுவது. அப்படி இருக்கும்போது இப்படிக் கல்யாணம் செய்துகொண்டால்? சரி. ரம், ஜின், விஸ்கி வேண்டாம். அஜ்மீரிலேயே தயாராகும் ஆரஞ்சு வண்ணக் கேஸர் கஸ்தூரி இல்லையா? மண்டையைப் போய் ஒரு உதை உதைக்குமே? சே சே. இது என்ன இப்படிக் கல்யாணம் செய்துகொண்டாய் என்றார்கள் அவனிடம். வீரனுக்கு லட்சணமான குதிரையும் மதுவும் இல்லாமல் ஒரு கல்யாணமா? ராட்சஸப் பூக்கள் வரைந்த கடும் செம்மண், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு வண்ணப் பாவாடைகள் இடுப்பிலிருந்து உப்பிப் பருத்த பிருஷ்டங்களின்மேல் மடங்கி மடங்கிச் சரிய, வெள்ளி நிறச் சரிகைகள் இட்ட முக்காடுகளைத் தூக்கி வயதான பெண்கள் அவனிடம் கேட்டார்கள்: குடிக்க ஒன்றுமில்லையா?

    ஜீஜி நடமாடிக்கொண்டிருந்தபோது டாணென்று மாலை ஏழு மணிக்கு அப்பளம் சுட ஆரம்பித்துவிடுவாள். பப்பாஜி வெளியறை முக்காலியில் மற்ற விஷயங்களை வைத்துவிட்டுத் தயாராக இருப்பார். ஜீஜி கார அப்பளம் தட்டில் அடுக்கி வைத்து வருவாள். கார அப்பளம் தீர்ந்ததும் நாக்கில் சுள்ளென்று உறைக்கும் பிகானீர் ஸேவ். அது அலுத்தால் சோளப் பக்கோடா. அல்லது மிளகாயும் கடலை மாவும் தடவிப் பொரித்த நிலக்கடலை. எதிரெதிரே அமர்ந்து ‘ஜெய் அம்பே’ என்று விட்டு ஆரம்பிப்பார்கள். பிள்ளைகளும் பெண்களும் இருந்தால் குடும்பத்தோடு சிரித்துக்கொண்டு. ஜீஜி நாட்டுப் பாடல்கள் பாடுவாள் - ‘சந்தைக்குப் போனால் எனக்கொரு குஞ்சலம் வாங்கி வா.... நல்ல வண்ணத் தாவணி வாங்கிவா....’ ‘இன்னமுமா ஆசை?’ என்று பப்பாஜி சிரிப்பார்.

    சமையலறை மூலையில் ஒரு கும்மட்டி அடுப்பில் சாய் செய்யத் தண்ணீர் கொதித்தவாறே இருக்கும். சாப்பிடும் சமயத்தில் வீட்டு வாசலில் யாராவது தெரிந்தவர் வந்துவிட்டால் முதலில் ‘ஜில்’லென்று தண்ணீர்.

    “சாப்பிடுங்களேன். சாச்சாவுக்கு ஒரு தட்டு கொடு” என்று ஆரம்பிப்பார் பப்பாஜி.

    “இல்லை. சும்மா இப்படி வந்தேன்.”

    “சரி, சாய் குடிக்க என்ன வந்தது?”

    “வேண்டாமே.”

    “காஃபி?”

    “தண்ணி போதும்.”

    “அதெப்படி வெறும் தண்ணி. கொஞ்சம் ஷர்பத் போட்டுக் குடியுங்கள்.”

    "சரி.”

    ஜீஜி எழுந்திருப்பாள்.

    “அப்படியே ஒரு தட்டில் ரெண்டு கபாப் கொடு.”

    ஜீஜி சமையலறையை எட்டும்முன் காலையில் செய்த வெந்தயக் கீரை பரோட்டா பப்பாஜிக்கு நினைவு வரும். “ஸுனியேஜி” என்று மனைவியை விளிப்பார். “அந்த மேதி பரோட்டாவும் ரெண்டு சூடாக்கி எண்ணெய் தடவிக் கொண்டுவா. சாச்சா ருசி பார்க்கட்டும்” என்பார்.

    வந்தவர் தோல்வியை ஒப்புக்கொள்வார்.

    “நான் சாப்பிட்டே விடுகிறேன்.”

    ஜீஜி எப்படியும் சமையலறைக்குப் போவாள். இரண்டு முட்டைகள் மிளகும் உப்பும் தூவிப் பொரிக்க. ஒருவேளை, சாப்பாட்டு அளவில் ஏதாவது குறைந்துவிட்டால்?

    ஆனால் சமையலறை என்ற பௌதிக விவரம் அவர்களைப் பாதிக்கவில்லை. அப்படிப்பட்ட ஒன்று இல்லாததுபோல் இருந்தார்கள். அவர்கள் கூட்டுக் குடும்ப வீடுகளில் பரந்த கல்தரை முற்றம், கூடம் இவற்றைத் தாண்டிய இருள் மூலை சமையலறை. பூஜ்ய வாட் விளக்கு எரியும் அங்கு. முக்காடு அணிந்து,  அழுத்தமான வண்ணப் பாவாடைகள் இருளை ஒட்டியே இருக்க, பெண்கள் நிழல்களாய்த் தெரிவார்கள் அந்த அறையில். அறைந்து அறைந்து சப்பாத்தி மாவு பிசைந்துகொண்டோ, அடுப்படியில் கும்மென்று மணக்கும் மஸாலா  பருப்பைக் கிளறியவாறோ. சமையலறை ஒரு இடம் இல்லை. ஒரு கோட்பாடு மட்டுமே. அத்தனை ருசியான, நாக்கை அடிமைப்படுத்தும் சாப்பாடும் மாயக் கம்பளத்தில் வந்ததுபோல் அலட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள்.

    மீனாட்சிதான் ஒரு முறை சாப்பிடும் நேரத்தில் அந்த விஷயத்தைப்பற்றிப் பேச ஆரம்பித்தாள், பப்பாஜி அப்போது கீழே இருந்த கார் ‘ஷெட்’டின் மேல் ஒரு அறை கட்டிக்கொண்டிருந்தார்.

    “பப்பாஜி, சமையலறைக்கு வெளியே உள்ள தாழ்வாரத்தைப் பெரிதுபண்ணிவிடுங்களேன். அதை நீங்கள் அகலமாக்கினால் நாற்காலி போட்டு உட்காரலாம். இடது பக்கம் ஒரு பாத்ரூம் கட்டினால் அதில் பெரிய தொட்டி போடலாம். பாத்திரம் தேய்க்க. பாத்ரூமுக்கு வெளியே துணி உலர்த்த அலுமினியக் கம்பி போட்டு விடலாம்.”

    பப்பாஜி இந்த அபிப்ராயத்தால் தாக்கப்பட்டவர்போல் பார்த்தார்.

    ஜீஜியும் வியப்படைந்தவள்போல் அவரைப் பார்த்தாள். மருமகள்கள் இதுவரை இப்படிப்பட்ட அபிப்ராயங்களை முன்வைத்ததில்லை. ராதா பாபிஜி, தட்டை வெறித்துப் பார்த்தாள். குஸுமா தலை முக்காட்டைச் சரி செய்துகொண்டாள், அவள் படபடப்பை மறைக்க. பப்பாஜி கிஷனை நோக்கினார். அவன் நிதானமாகச் சாப்பிட்டவாறிருந்தான்.

    பப்பாஜி தொண்டையைச் செருமிக்கொண்டு, “எதற்காக?” என்றார்.

    “இந்த சமையலறைத் தொட்டி ரொம்பச் சின்னது. தண்ணி வேறு சரியாகப் போவதில்லை. வேலைக்காரி அங்கேயே பாத்திரம் தேய்த்தால் சமையலறை முழுவதும் தண்ணீர். நிற்க முடியவில்லை. ஜன்னலுக்கு வெளியில் துணி தொங்கினால் மலையை மறைக்கிறது பப்பாஜி.”

    கிஷனைப் பார்த்தார் மீண்டும். அந்தக் கட்டடக் கலை நிபுணன் தன் மனைவியோடு உடன்பட்டான்.

    “அவள் சொல்வது சரிதான் பப்பாஜி. அப்படியே செய்து விடலாம்.”

    “நீ எங்கே சமையலறைப் பக்கம் போனாய்?”

    “அவள் மைசூர் சமையல் செய்யும்போது இவன்தான் மிளகாய், வெங்காயம் அரிந்தான்” என்றாள் ஜீஜி.

    “பேசாமல் உனக்கே தங்க வளையல் போடலாம் போலிருக்கிறதே.”

    “தங்கவளை எதற்கு பப்பாஜி. மோதிரம் போடுங்கள்.”

    பப்பாஜி சிரித்தார்.

    அறை கட்டி முடித்தாகிவிட்டது. சமையலறை நிலவரம் மாற்றப்படவில்லை. துணி உலர்த்த இன்னும் இரண்டு நைலான் கயிறுகள் கட்டப்பட்டன, ஜன்னல் எதிரே. பப்பாஜியின் மௌனச் சவால்: பெண்ணே, மைசூர்ப் பெண்ணே, இங்கே நிரந்தரமாக வாழாத உனக்கு மலை எதற்கு? அதன் பச்சை எதற்கு? ராஜஸ்தானத்து சமையல் பண்பாட்டுக்கும் ஜன்னலுக்கும், பாத்திரம் அலம்பும் தொட்டிக்கும், என்ன சம்பந்தம் பெண்ணே. கறுத்த நிறமுடைய, முக்காடு அணிய மறுக்கும், என் பையனை வசியப்படுத்திய, நிறையப் பேசும் பெண்ணே...

    ***

    பின்னிரவு மூன்று மணி வாக்கில் மயில்கள் அகவ ஆரம்பித்தன. ஒன்றன்பின் ஒன்றாக. கர்ண கடூரமாக. குரல் இழந்த சாதகம். ஐந்தரை மணிக்கு அவளும் கிஷனும் மொட்டை மாடி போனபோது எதிரே மரத்தில் சிவன் விரித்த ஜடையாய் மயில் வால் தொங்கியது. கரு நீலமும், மென் பச்சையும், தீர்க்கப் பச்சையும் பளீரிடத் திரும்பியது. எதிர்பாராதபோது பறந்து மொட்டைமாடிச் சுவரில் அமர்ந்து வாலை நீட்டிப்போட்டது. பிறகு, இரண்டு மொட்டை வால் மயில்கள். திரும்புவதற்குள் இன்னும் இரண்டு, சாட்டை வால்களுடன். வயிற்றினுள் ஒரு மென் தன்மை இதமாய்ப் பரவியது. காலைக்கடன்களை முடித்ததும் வயிற்றுக் கனம் அகலும் இதம். அந்தக் கருநீலப் பச்சை ஐஸ் துகள் சிலீருடன் எல்லா அடங்காச் சூட்டையும் தணித்தது. கிஷனின் உதடுகளில் ஒரு முறை நாக்கால் தடவி மென்மையாக முத்தமிட்டாள். பனித்துளி ஒட்டிய, அடித்தளச் சூட்டை இனம் காட்டிய முத்தம்.

    மொட்டை மாடிக் கதவு கிர்ரிட்டது. படி ஜீஜி (பெரிய ஜீஜி) எழுந்தாயிற்று. கதவருகே இருந்த பெரிய ட்ரம்மிலிருந்து கரி எடுக்க வந்திருப்பாள். கும்மட்டி அடுப்புப் பற்றவைக்க. படி ஜீஜி பப்பாஜியின் சிறிய தாயார். பப்பாஜிக்கு பதினேழு வயதாகும்போது அவருடைய தந்தை இன்னொரு திருமணம் செய்து கொண்டார் ஒரு பதினேழு வயதுப் பெண்ணை. ஐந்து பெண்கள் பெற்றாள். பப்பாஜிதான் ஆதரவு. பெர்யர்தான் படி ஜீஜி. அவளுக்கும் ஜீஜிக்கும் இடையே இரண்டே வயதுதான் வித்தியாஸம். பொக்கை வாய். பொய்ப் பல் வேண்டாம் என்று விட்டாள். மாமிஸம் சாப்பிடுவதை விட்ட பின்னர் எதற்குப் பல் என்று கூறிவிட்டாள்.

    காலில் அணிந்த கனத்த வெள்ளித் தண்டை படியில் இடிக்க, போய்விட்டாள் படி ஜீஜி.

    ”சாய் கொண்டு வரட்டுமா மீனா?”

    ”ம்.”

    கிஷன் போனதும் மாடி இரும்புத் தொட்டிக் குழாயைத் திறந்து முகம் கழுவி, பல் தேய்த்தாள்.

    தொப்பியால் மூடிய கெட்டிலில் சாய் கொண்டுவந்தான் கிஷன். கீழே வைத்து இரு கோப்பைகளில் சாய் ஊற்றியபோது இஞ்சி, துளசி மணம் பரவியது. ஒரு காலை நட்சத்திரம் மினுக்கியது. மயில் நீலப் பச்சையில் தெறித்தது. சாய் தொண்டையில் சூடாய் இறங்கியது.

    கீழே போனபோது சமையலறை மூலையில் பெரிய பித்தளை டம்ளரில் கிஷன் ஊற்றித் தந்திருந்த சாயை முக்காட்டுத் தாவணித் துணியால் பிடித்தவாறு அமர்ந்து, ஊதி ஊதிக் குடித்துக்கொண்டிருந்தாள் படி ஜீஜி. ராதா பாபிஜி இன்னொரு பெரிய கெட்டிலில் சாய்த் தூளைப் போட்டுச் சுடுதண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.

    “நாஸ்தாவுக்கு மாவு பிசையட்டுமா?” என்றாள் படி ஜீஜி.

    “பப்பாஜி உலவப் போயிருக்கிறார். சமோசாவும் ஜிலேபியும் வாங்கி வருவார். ரொட்டி வாட்டினால் போதும், அதை நான் வெளியில் டோஸ்ட் செய்துகொள்கிறேன். இன்றைக்கு என்ன நம் சமையலா, இல்லை மைசூர் சமையலா?”

    “அவளும் கிஷனுமாய் நேற்று காய்கறியும் தேங்காயும் வாங்கி வந்தார்கள்.”

    “என்ன தேங்காய் சமையல் சப்புச்சப்பென்று? நீங்கள் ஒன்று செய்யுங்கள், படி ஜீஜி. மஞ்சளும் இஞ்சியும் அரைத்துவிடுங்கள்.  மட்டன் புலாவ் செய்துவிடலாம். சுரைக்காய் துருவிவைத்து விடுங்கள். கோஃப்தா செய்துவிடலாம். சேப்பங்கிழங்கைத் தொலி சீவிவிடுங்கள். பெரிய ஏலம், மிளகு, லவங்கப்பட்டை, தனியா, லவங்கம் இடித்துவிடுங்கள். நல்லா நைஸாக. தனியாவை வேறாக எடுத்து இடியுங்கள் கொஞ்சம். ராத்திரி ஆலு-கோபிக்குப் போடலாம்.”

    சமையலறைக்கு வெளியே வந்தாள் சாய் கெட்டிலும் கோப்பைகளும் வைத்த தட்டை ஏந்தியவாறு.

    “என்ன மீனா. இன்றைக்கு என்ன சமைக்கப் போகிறாய்?”

    “எதுவும் இல்லை. நாங்கள் கணேஷ் மந்திர் மலையில் ஏறப்போகிறோம்.”

    ”சரிதான்.”

    மீனாட்சி சமையலறையில் நுழைந்தாள் இரண்டாம் ஈடு சாய் தயாரிக்க.

    படி ஜீஜி பொக்கை வாய் திறந்து சிரித்தாள். தன் பித்தளை டம்ளரை நீட்டினாள்.

    “எனக்கும் சாய்.”

    “இஞ்சி போடவா படி ஜீஜி?”

    “ம். போடு. எனக்கு, நீ போடும் சாய் பிடிக்கும்.”

    “சமோசாவும் ஜிலேபியும் வாங்கி வந்திருக்கிறேன். கொஞ்சம் ஜிலேபியைப் பாலில் போடுங்கள்” என்று ஒரு பொது உத்தரவு வெளியிலிருந்து வந்தது. மீனாட்சி ஜிலேபிப் பொட்டலத்தைச் சமையலறைக்குக் கொண்டுவந்து பிரித்தாள்.

    ”உஷ்..... இதோ.... இதோ....”

    மீனாட்சி திரும்பினாள். “எனக்கு நாலு குடு” என்றாள் படி ஜீஜி.

    அது ஒரு உணவுப் போர். நிதர்சனமாகப் பங்குபெறுவோர் - ஜீஜி, படி ஜீஜி. தாத்தா உயிருடன் இருந்தபோது படி ஜீஜி கொடுங்கோல் ஆட்சி செய்தாள். மலை மலையாய்ச் சப்பாத்தி மாவு பிசைந்தாள் ஜீஜி. கூடை கூடையாய் வெங்காயம் அரிந்து கிலோ கணக்கில் மாமிசம் சமைத்தாள். மாலை வேளைகளில் படி ஜீஜி கேஸர் கஸ்தூரி குடித்தபோது அப்பளம் சுட்டாள். பக்கோடா செய்தாள். குடல் பொரித்தாள். தாத்தா இறந்தார். பத்து நாட்களில் சமையலறையில் ஜீஜிக்குப் பதவிப் பிரமாணம் நடந்தது. குங்குமம், வெற்றிலை, மது, மாமிசம் இவற்றுடன் படி ஜீஜியின் மற்ற சாப்பாடும் பறிக்கப்பட்டது. நிதம் நிதம் மாமிசம் சமைக்கப்பட்டது. மரக்கறி உணவு உண்பவர்களுக்கு (படி ஜீஜி மாத்திரம்தான்) ஜனநாயக உணர்வுடன் உருளைக்கிழங்கு வழங்கப்பட்டது. படி ஜீஜி இரவெல்லாம் ஏப்பம் விட்டுக் கொண்டும், உடம்பையே கிழிப்பதுபோல் குசுவிட்டுக் கொண்டும், கக்கூஸில் ‘உம் ஆ’ என்று முனகியவாறும் தன் போர்க்களத் தோல்வியைக் கொண்டாடிக்கொண்டிருந்தாள். மீண்டும் தாக்கப்படும்முன் அவள் இரண்டாம் போர்முனை ஒன்றைத் துவக்கினாள். ஆறு மாதத்திற்கு ஒரு முறை படி ஜீஜிமேல் அம்பா வர ஆரம்பித்தாள்.

    ஜீஜியும் பப்பாஜியும் அவரவர் பானங்கள், சுட்ட அப்பளங்கள் இவற்றுடன் அமரும் மாலை வேளைகளை அம்பா தேர்ந்தெடுத்தாள். முதலில் அறையிலிருந்து ‘ஹே’ என்று குரல் கொடுத்தாள் அடி வயிற்றிலிருந்து. பதறி ஓடி வந்ததும் “என்னை மறந்தாயா?” என்று சீறினாள். தாழ்ந்து வணங்கி “உத்தரவிடுங்கள் அம்பே” என்று ஜீஜி சொன்னதும், “எனக்கான பானத்தைத் தா, கேஸர் கஸ்தூரி வேண்டும். ஒரு கிலோ பர்பி வேண்டும். வறுத்த இறைச்சி வேண்டும்.... அ... ஆ...” என்று கட்டளையிட்டாள். எல்லாம் தரப்பட்டதும் அம்பா “போங்கள் எல்லோரும்” என்று உத்தரவிடுங்கள். படி ஜீஜியின் அறையில் ஆரவாரம் கேட்கும் சற்று நாழிகை.

    மறுநாள் காலை மதுவால் கனத்த கண் இமைகளைக் கஷ்டப்பட்டுத் திறந்து சமையலறையில் ஒரு பொக்கைவாய்ப் புன்னகையுடன் காட்சியளிப்பாள் படி ஜீஜி. “அம்பா கஷ்டப்படுத்திவிட்டாள்” என்பாள்.

    படி ஜீஜியை வம்புக்கு இழுக்கலாம். அம்பாவைக் கேள்வி கேட்கும் தைரியம் ஜீஜிக்கு வரவில்லை.

    “ஜிலேபி தா” என்றாள் படி ஜீஜி.

    நாலு ஜிலேபிகளைத் தந்தாள் மீனாட்சி. வீட்டில் எல்லோருக்குமாக ஜிலேபி பிரிக்கப்படும்போது படி ஜீஜிக்கு அவள் பங்கு கிடைக்கும். இது ஆசையினால். ஆரம்பத்தில் இவற்றை அவள் எங்கேதான் வைக்கிறாள் என்று நினைத்தாள் மீனாட்சி. பிறகுதான் தெரிந்தது பல மடிப்புகள் தைத்த நாலு கஜப் பாவாடையினுள் அவள் இரு ஜேபிகள் தைத்திருந்தாள். அவற்றை மீனாட்சிக்குக் காட்டியிருக்கிறாள்.

    தொப்பியால் சாய் கெட்டிலை மூடினாள்.

    ”மசாலா சாமான்களைத் தந்துவிட்டுப் போயேன்” என்றாள் படி ஜீஜி. ”நெய்யும் வேணும். மட்டன் புலாவ் செய்ய.”

    இது சமீபத்தில் எழுந்த ஒரு புதுக்களம். ஜீஜியின் ஆஸ்த்மாவும், ரத்த அழுத்தமும் அவள் நடமாட்டத்தைக் குறைத்துவிட்டன. அவள் படுக்கை அருகே உள்ள மர பீரோவில் லவங்கம், குங்குமப்பூ, லவங்கப்பட்டை, மிளகு, திராட்சை, பெரிய ஏலம், ஏலக்காய், சர்க்கரை, நெய், முந்திரி எல்லாம் இருக்கும். அவளைத் தாண்டாமல் பீரோவை எட்ட முடியாது. அதை அடையும்முன் ஒரு கேள்விப் பட்டியல் நீட்டப்படும். எதற்காக நெய்? நேற்றுத் தந்தது என்ன ஆயிற்று? சப்பாத்திக்குத் தடவினதில் மீதி அரைக் கிண்ணம் இருந்தால் இப்போதைக்குக் கால் கிண்ணம் போதுமே? மசாலா சாமான்களைக் காட்டிவிட்டு எடுத்துப்போ. காஷ்மீரத்திலிருந்து வரவழைத்த குங்குமப்பூ. அதைப் புலவில் கொட்ட வேண்டாம். மரக்கறி சாப்பிடுபவர்களுக்கு என்ன காய்கறி? நேற்று சமைத்தது ஏதும் மீறவில்லையா அவர்களுக்கு? சாப்பிட்டுச் சாப்பிட்டுக் கக்கூஸ் போனால் யாருக்கு என்ன பயன்?

    ஒளியற்ற, ஜன்னல் குறுகிய அந்தச் சமையலறையிலிருந்து, கடலில் வசிக்கும் ஆக்டபஸ் ஜந்துவின் எண்கால்போல் ஆதிக்கக்கரங்கள் நீண்டு வளைத்துப்போட்டன. கால்கள் இறுக இறுகக் கட்டுண்டு கிடந்தனர் ஆனந்தமாக. அவை இடுப்பை இறுக்கினால் ஒட்டியாணம் என்றும், காலைச் சுற்றினால் கொலுசு என்றும், தலையில் பட்டால் கிரீடம் என்றும் நினைத்துக் கொண்டனர் பெண்கள். நாலாபுறமும் கம்பிகள் எழும்பிய உலகில் புகுந்துகொண்டு அதை ராஜ்யம் என்று நினைத்து அரசோச்சினர். இன்று மட்டன் புலவு, நாளை பூரி மசாலா என்று பூமியைத் திருப்பிப் போடும் முடிவுகளை எடுத்தனர். பேடி அதிகாரம்.

    ஜன்னலைத் திறந்து மலையையும், பச்சையையும், ஆகாசத்தையும், நீலத்தையும்  உள்ளே இழுத்ததும் பலம் உறிஞ்சப்பட்டாற்போல் இளைத்தனர். வீணா மோஸியைப்போல். கிஷனின் சித்தி. ஐம்பது வயது. பதினைந்து வயதில் விதவை. ஒரு கிராமத்தில் டீச்சராக இருந்தாள். பள்ளிச் சொந்தக்காரர் வீட்டுத் தோட்டத்து மூலையில் ஒரு அறையும் சமையலறையும். அசோகமரம் வாசலில். சமையலறை பின்னால் சம்பக் மரம்.. வெள்ளைப் பூக்களும் மஞ்சள் தண்டுமாய், ஜன்னலை ஒட்டிய பூங்கொடிகள் உள்ளே நுழைந்துவிடும் சுதந்திரமாய். பசித்தால் சமையல். மாலையில் பக்கத்திலுள்ள குழந்தைகள் வந்துவிடும். டீச்சரைப் பார்க்க. இல்லாவிட்டால் அசோகமரத்துக் குயில் பாட்டு. ஆனால் வீணா மோஸி “நான் அதிகாரமற்றுப் போனேன்” என்பாள். ‘டீச்சர், டீச்சர்’ என்று சுற்றிக்கொள்ளும் குழந்தைகள். பள்ளியின் ஆரபக் கல்வியின் பூரணப் பொறுப்பு. நினைத்தால் வீசு நடை பஜார் வரை. நார்க்கட்டிலை அசோக மரத்தின் கீழே இழுத்துப்போட்டு கக்ஹூ கக்ஹூ என்று தாகம் தீரும்வரை குயில் தோழமை. காலையில் பின்கதவைத் திறந்ததும் தொடும் தூரத்தில் வெள்ளை மலர்கள். இருந்தும், வீணா மோஸிக்கு மூச்சு முட்டியது. வெட்ட வெளியில் எம்பியதும் மண்ணுக்காக வீறிட்டாள், யோனியும், கருப்பையும், மார்க்காம்புகளும் கல்லாகின. கனம், இழுப்பு, கீழ் நோக்கி விழுந்து விழுந்து, விழுந்து விழுந்து, மண்ணில் சரண். பாதங்களைப் புதைத்து அசைவற்று நிற்க.

    ***

    ஏரியின் மூலையிலிருந்து வெள்ளை இறக்கைகள் நளினமாய்த் தாழ்ந்தும், உயர்ந்தும், சாய்ந்தும் நகர ஆரம்பித்தன. கண்ணில் பட்ட முதல் கணம் ஒரு சிறு வியப்பு மீனாட்சியினுள் சிதறியது. ஏரியின் முழு வீச்சிலும் சுழன்று நீரில் மிதக்கும்போது அந்தச் சிவப்பு அலகுகள் தூரத்தில் ஒளிர்ந்தன. பிறகு மீண்டும் எழும்பி வெள்ளை இறக்கைகளைச் சரேலெனப் பிரித்து இடமும் வலமும் சாய்ந்தும் எழுந்தும்.... வெகு அருகே, முகத்தின் அருகே இறக்கை வீச்சு, பவழ அலகு தட்டையாய் நீண்டு. ரஷ்யப் பறவைகள். ஆனா சாகர் ஏரியில் சில மாதங்கள் வரும் திடீர் விருந்தினராய்.

    அதற்கு முந்தைய இரவுதான் ஏரிப் பயணம் தீர்மானிக்கப்பட்டது. எல்லா உறவினர்களுடனும் ஏரியைப் பார்க்கும் திட்டம். இருபது பேர்களுக்கு நூறு ஏரி. உருளைக்கிழங்கு ஸப்ஜி, தக்காளிச் சட்னி, ஸாண்ட்விச் நூறு, நொறுக்குத் தீனி, குழந்தைகளுக்கு நிரப்பப்பட்ட பால் புட்டிகள், ஃப்ளாஸ்க்கில் வெந்நீர். மாலையில் சூடாகப் பக்கோடா  சாப்பிட ஒரு ஸ்டவ், ஒரு பாட்டிலில் எண்ணெய், கடலை மாவு, வெங்காயம், மிளகாய்ப் பொடி, உப்பு, பெரிய மிளகாய் - பஜ்ஜி போட - இத்யாதி. விடிகாலை நான்கு மணிக்குச் சமையலறை விளக்கு எரிந்தது. ஒரு பெரிய தாம்பாளத்தில் கோதுமை மாவைப் போட்டுப் பிசைய ஆரம்பத்தில் ஜீஜி. குஸுமா வாணலியில் எண்ணெயை விட்டு, பிசைந்த மாவை இட்டுப் பொரிக்கத் துவங்கினாள். ராதா பாபிஜி ரொட்டியில் வெண்ணெயும் சட்னியும் தடவ ஆரம்பித்தாள். ரொட்டிப் பொட்டலங்கள் அவளைச் சுற்றி, படி ஜீஜி நொறுக்குத் தீனிகளைப் ப்ளாஸ்டிக் பொட்டலங்களில் போட்டு ரப்பர் வளையத்தால் இறுக்கினாள். ஏரிப் பயணத்தின் இந்த அம்சத்தைப் பற்றி மீனா யோசித்திருக்கவில்லை.

    “மீனா, எழுந்துவிட்டாயா?” என்றாள் ராதா பாபிஜி. கூந்தல் வியர்வையில் ஒட்டிக்கொண்டிருந்தது. “சாய் போடுகிறாயா?”

    மீனா இவர்கள் எல்லோருக்கும் சாய் போட ஆரம்பித்தாள். துளசி இலையைப் போட்டாள் வெந்நீரில். பல் தேய்த்துவிட்டு வந்த கிஷன் கோப்பைகளைத் தட்டில் வைத்தான்.

    ராதா பாபிஜி தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தாள். “குழந்தைகளைக் குளிப்பாட்ட வேண்டும். ப்ளாஸ்டிக் பையில் ரெண்டு, மூணு ஜட்டி அதிகப்படியாய் எடுத்துக்கொள்ள வேண்டும். ப்ரியா சில சமயம் சொல்லாமலே போய்விடுவாள். புல்லில் விரிக்க ஐந்தாறு கம்பளங்களாவது சுருட்டி வைக்கவேண்டும். எத்தனை கைக்குழந்தைகள் மொத்தம்? நாலு.  பால்டப்பா, க்ளாக்ஸோ மீனாவுக்கு. அர்ச்சனா குழந்தைக்கு லாக்டோஜன், மறக்காமல் பிஸ்கட் பொட்டலம். இதுக்கு உப்புதான் பிடிக்கும். இல்லாவிட்டால் வழியில் வாங்க வேண்டும். அழுது தொலைக்கும் இல்லாவிட்டால். இவருக்குப் பிடிக்காது. சர்க்கரை, ஸ்பூன் மறக்காமல். பரிமாறக் கரண்டி, தட்டுகள், குஸுமா, அந்த சோப் பாட்டிலை எடுத்துக்கொள், தட்டுக்கழுவ, அங்கே குழாய் உண்டு. படி ஜீஜி, வெங்காயம் ஒரு பத்து பதினைந்து அரிந்துவிடுங்கள். ப்ளாஸ்டிக் பொட்டலத்தில் போட்டுக்கொண்டு போனால் நிமிஷமாய் பக்கோடா. மீனா, ப்ளீஸ், குழந்தைகளைக் குளிப்பாட்டுகிறாயா?”

    “பாபிஜி, ஆறு மணிதான் ஆகிறது. அழும் எழுப்பினால். கோபால் பாய் சாஹப் குளிப்பாட்டட்டுமே அப்புறமாய்.”

    ”ஆமாம். அவர் குளிப்பாட்டுவார், நினைத்துக்கொண்டு இரு.”

    மீனா சாய் கோப்பையை நீட்டினாள். பித்தளை டம்ளரில் படி ஜீஜிக்கு விட்டுத் தந்தாள். ராதா பாபிஜி சலிப்புடன் பேசியது அவளுக்குப் புரிந்தது. ராதா பாபிஜி கணக்கில் புலி. அதில் மேல்படிப்பு மேற்கொள்ள வீட்டில் அனுமதிக்காததால் ஒரு வங்கியில் பெரிய பதவியில் இருந்தாள். வங்கியில் அவளுக்கு சகுந்தலாதேவி என்றே பெயர். சில மாதங்களுக்குமுன் அவளும் கோபால்பாய் ஸாஹபும் கிஷனையும், மீனாட்சியையும் ஜோத்பூருக்கு வந்து சில நாட்கள் தங்கும்படி அழைத்திருந்தனர். அங்குள்ள ஆஸ்பத்திரியில் கோபால்பாய் சாஹப் டாக்டர். நல்ல வெய்யில் காலம். மத்தியானச் சாப்பாடு இன்னும் ஆகவில்லை.

    “இந்த ஊர் வெய்யில் எரித்துவிடும். ஒன்றும் செய்ய முடியாது. ராதா பாங்க் வேலைக்காக இரண்டு நாட்கள் போனாள். தவித்துவிட்டேன். சமையலறையில் நிற்க முடியவில்லை. இங்கே வேலைக்கு ஆளும் கிடைக்கமாட்டார்கள். ஒரு டீ போடக்கூட சமையலறையில் நிற்க முடியவில்லை என்றால் பார்த்துக்கொள் கிஷன்.”

    கிஷன் மெள்ளச் சொன்னான்: “பாங்கில் பெரிய வேலை பார்க்கும் ராதா பாபிஜி இப்போது அதே சமையலறையில்தானே சமைத்துக்கொண்டிருக்கிறாள்?”

    ”ஆமாம் அதற்கென்ன? பெண்களுக்கு அதெல்லாம் சகஜம்தானே?”

    கோபால்பாய் சாஹப் விடுமுறைக்கு வந்த வேளையில் சீக்கிரம் எழுந்து குழந்தைகளைக் குளிப்பாட்டுவார் என்று எதிர்பார்க்க முடியாதுதான்.

    “ராதா பாபிஜி, எந்தப் புடவை கட்டிக்கொள்ளப்போகிறீர்கள்?” என்றாள் குஸுமா.

    “அந்தச் சிவப்பு ஸில்க்தான். ராத்திரியே இஸ்திரி போட்டாகிவிட்டது. அவருடையது அப்புறம் குழந்தைகளுடய சட்டைகளுக்கும் போட்டுவிட்டேன்.”

    ”நான் அந்தக் கறுப்புப் பொட்டுப் போட்ட வெள்ளைப் புடவை கட்டலாம் என்று நினைத்தேன். ரவிக்கை இஸ்திரி போடவில்லை. மீனா, என் கறுப்பு ரவிக்கை தருகிறாயா?”

    “எடுத்துக்கொள்ளேன். ஆனால் அது ஸ்லீவ்லெஸ்.”

    “அடடா! அப்படியானால் என் ரவிக்கையை இஸ்திரி போடுகிறாயா மீனா? நான் ஸ்லீவ்லெஸ் போடமுடியாது. என் கை சுத்தமாயில்லை.”

    “தலைப்பால் போர்த்திக்கொண்டு விடு பேசாமல். நீளத் தலைப்பு விட்டு. உன் கைக்கு அடியில் யார் வந்து பார்க்கப்போகிறார்கள்?”

    ”இதோ பார் மீனா. தமாஷ் பண்ணாதே. இஸ்திரி போடுகிறாயா?”

    “சரி. சரி.”

    மெதுவாகச் சுவரைப் பிடித்து நடந்து வந்து ஜீஜி ஊறுகாய் பரணியைத் திறந்தாள்.

    “என்ன செய்கிறீர்கள் ஜீஜி, போய்ப் படுங்கள் பேசாமல்” என்று அதட்டினாள் ராதா பாபிஜி.

    “ஊறுகாய் பிடிக்குமே எல்லோருக்கும். எடுத்து வைக்கிறேன்.”

    ”அங்கே சமையலறையில் என்ன சத்தம், தூங்கவிடாமல்?” என்று குரல் கேட்டது.

    நச்சென்று மௌனம்.

    ரகசியக் குரலில், “மீனா, சாய் அடுப்பில் உருளைக்கிழங்கை வேகப்போடுகிறாயா?”

    “ராதா பாபிஜி, தாளித்து ப்ரஷர் குக்கரில் போடலாமே? வேகவிட்டு உரிக்கவேண்டாம்” குஸுமா கிசுகிசுத்தாள்.

    “நீ செய் அதை. மீதி பூரி படி ஜீஜி பொரிக்கட்டும்.”

    எட்டு மணி அளவில் கழுத்து, அக்குள் எல்லாம் வியர்வை மழை. ரவிக்கை ஒட்டிக்கொண்டது. எண்ணெய்ப் புகை கண்ணில். முழுத்தூக்கம் இல்லாமல் கனம் ஏறிய இமைகள். பப்பாஜி சமையலறையில் எட்டிப் பார்த்தார்.

    ”ஏரிக்குப் போகலாம் என்றதுமே உற்சாகம் பொத்துக்கொண்டு விடுமே உங்களுக்கு?” என்றார்.

    அஹ்ஹா என்று சிரித்தார்.

    சிறு சிறு பறவைகள் கக்ளக் என்றபடி நீரில் மிதந்தன கறுப்பும் மஞ்சளுமாய். திடீரென்று வெள்ளை இறக்கை வீச்சு. பவழ நிழலுடன்.

    கம்பளங்களில் சீட்டுக் குலுக்கல். சிலவற்றில் பெண்கள். “மம்மீஜி, டட்டி” என்று பின்பாகத்தைப் பிடித்துக்கொண்டு குழந்தை சொல்லும்வரை. பழைய பேப்பரைக் கையில் ஏந்தியபின், கக்கூஸ் பயணம். குழந்தை தலையில் ஒரு குட்டு. வலிக்க வலிக்க. அம்மாக்கள் ஒழித்த இடத்தில் கன்னிப் பெண்கள். இடையிடையே சீட்டை வைத்துவிட்டு எழுந்து தண்ணீர் உபசாரம்.

    சாப்பிட்டு தட்டுகளை குஸுமாவும் ராதா பாபிஜியும் கழுவியாயிற்று.

    ஸ்டவ் ஏற்றல். பக்கோடா போட ஆரம்பித்தனர்.

    “அரே என்ன வாசனை? எனக்கு இரண்டு வெறும் மிளகாயுடன்”

    இடையில் குழந்தைகளுடன் பேச்சு.

    “ராஜூ, நீ என்ன செய்வாய் பெரியவன் ஆனதும்?”

    “பைலட். ஸுய்ங்கென்று.”

    “நீ, ப்ரியா?”

    ”நானு... நானு.... நானு.... வந்து... தப்பாத்தி தெய்வேன் எங்க வீட்டுலே.”

    “என்ன சமத்தாய்ப் பேசுகிறது?” ஜீஜி சிரித்தாள்.

    “அஜ்மீரைச் சுற்றியுள்ள அத்தனை மலைகளிலும் நான் ஏறியிருக்கிறேன்” என்றார் பப்பாஜி.

    “ஜீஜி, நீங்கள்?” என்றாள் மீனாட்சி.

    ”அவர் மலை ஏறினபோதெல்லாம் எனக்கு வயிற்றில் குழந்தை” என்றாள் ஜீஜி. சிரித்தாள் வாய்விட்டு. எல்லோரும் சிரித்தனர். ஜீஜி பதினாலு குழந்தைகள் பெற்றாள்.

    எல்லாவற்றையும் வாரிக்கொண்டு, இன்னொரு முறை ‘டட்டி’ போகலாமா என்று யோசித்த குழந்தைகளின் மனதைத் திசை திருப்பிவிட்டு கிளம்பினர்.

    குஸுமா பின்தங்கினாள். “மீனா, மெள்ள நடவேன். இன்னும் நான் பறவைகளைச் சரியாகப் பார்க்கவில்லை.”

    “ஸதீஷைக் கூப்பிடவா?”

    “இல்லை, இல்லை. அவர் போகட்டும், கலாட்டா ஆகிவிடும் அவரைக் கூப்பிட்டால்.”

    மெதுவாக நடந்தார்கள்.

    “பத்து நாள் தள்ளிப்போயிற்று. லேடி டாக்டரிடம் போகணும் என்று நினைப்பதற்குள் வந்துவிட்டது.”

    ”தயாராக வந்தாயா? நீ சொல்லியிருந்தால் கடைக்குப் போய் ஸானிடரி டவல் வாங்கியிருக்கலாமே...”

    “தயாராய்த்தான் வந்தேன். இருந்தாலும் வெள்ளைப் புடவை. கொஞ்சம் பின்னால் பார்.”

    “இல்லை. ஒன்றும் ஆகவில்லை.”

    “வேகமாக நடப்போமா? ஏரிப்பக்கம் உட்கார நேரம் இல்லை. ராத்திரி சமையலுக்குப் பூண்டு உரிக்க வேண்டும்.”

    “வா நீ பேசாமல்.”

    ஏரி அருகே குஸுமாவை உட்கார்த்தி மௌனித்தாள்.

    ஜீஜியிடம் ஒரு முறை “உங்கள் மூன்றாம் பிள்ளைக்கு எப்படிப்பட்ட மருமகள் வேண்டும்?” என்றபோது சடாரென்று பதிலளித்தாள் ஜீஜி - படித்தவள். வெளுப்பானவள், பேசாதவள் என்று. “சரியாகச் சொன்னாய்” என்றார் பப்பாஜி. அப்படி ஒரு பெண் இருப்பாள் என்று மீனாட்சி நம்ப மறுத்தாள். ஜீஜியின் பதில் அன்று மத்தியானம் நடந்திருந்த சம்பவத்தின் நீட்சி என்று நினைத்தாள். மத்தியானம் பப்பாஜியின் நண்பர் வந்திருந்தார். சரும நோய் நிபுணர். அப்போது மீனாட்சிக்குக் கையில் சில வெள்ளைத் திட்டுக்கள் வந்திருந்தன. கொஞ்சம் அரிப்புடன். சரும நோய் நிபுணரிடம் பப்பாஜி அறிமுகப்படுத்தினார்: இவள் கிஷனின் மனைவி. ஓயாமல் ஊர் சுற்றுகிறாள். சதா கையில் புத்தகம். வாயாடி. இவள் கையைப் பாருங்கள்.

    நிபுணர் உபதேசம் : நீ வீட்டில் இரு. மற்ற பெண்கள் மாதிரி. எல்லாம் சரியாகிவிடும். அவரவர் அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட மாதிரி இருந்துவிட்டால் ஏது நோய்?

    “ஆஹா” என்றார் பப்பாஜி.

    ஜீஜி கூறியது அதை ஒட்டிய ஹாஸ்யம் என்று நினைத்தாள். ஆனால் ஜீஜியின் விளக்கத்துக்கு உரை போட்டாற்போல் கிடைத்தாள் குஸுமா.

    அரசியலில் எம்.ஏ. ஃப்ரெஞ்சில் டிப்ளோமா. எதற்காக ஃப்ரெஞ்ச் படித்தாள் என்று தெரியவில்லை. திருமணத்திற்காகக் காத்திருக்கும்போது ஏதாவது மொழியில் டிப்ளோமோ வாங்குவது காத்திருத்தலின் ஒரு அம்சம் என்று தெரிந்தது. வெளியூரில் வேலை செய்யும் மாப்பிள்ளையானால் வெளிநாட்டு மொழி உபயோகமாக இருக்குமாம். பூ வேலை செய்த குஷன்கள், தலையணை உறைகள், கை வேலைப் பொருட்கள், பூ வேலையும் லேஸ் வேலையும் செய்த புடவைகள் எல்லாம் செய்திருந்தாள் குஸுமா அந்தச் சமயத்தில். பூ அலங்கார வகுப்புகள், பேக்கரி வகுப்புகள், தையல் வகுப்புகள், ஜாம், ஜூஸ், ஊறுகாய் வகுப்புகள் எதையும் அவள் விட்டுவைக்கவில்லை. எல்லா வித்தைகளையும் கற்றிருந்தாள். பூரணமான மருமகள்.

    வெகு தூரத்திற்குப் போய்விட்டிருந்த வெள்ளைக் கூட்டம் நினைத்துக்கொண்டாற்போல் உயரே எழும்பி வட்டம் சுற்றி இடப்பக்கம் வந்தது. மிதமான வேகத்தில் மிதந்தாற்போல் வந்து சுழன்றது.

    குஸுமா அழ ஆரம்பித்தாள்.

    ”அந்த அலகு... என்ன சிவப்பு...” என்று விசித்தாள்.

    மெல்லச் சிவக்கத் தொடங்கிய மாலையில் பவழம் மிதந்தது இறக்கைகளுடன்.

    உரிக்காத பூண்டு... இறக்கைகள் திறந்தன மறுவட்டம் அடிக்க.

    உருவாகாத கரு... ஒயிலாக நீரின்மேல் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்று சறுக்கி இறங்கி மிதந்தன.

    விசும்பல் ஒலி.

    ***

    ஹோலிப் பண்டிகை விடுமுறையில் அஜ்மீர் வந்தபோதுதான் ஜீஜிக்கு நோயின் கடுமையான தாக்குதல் நேர்ந்தது. ஒரு மத்தியானம், அன்றைய சமையலுக்கான உபகரணங்களைத் தந்துவிட்டு சாவியை இடுப்பில் செருகிக்கொண்டு குளிர்ப்பதனப் பெட்டியில் என்ன மிஞ்சியிருக்கிறது என்று பார்க்க ஜீஜி மெல்ல நடந்து வந்தாள். அதை எட்டும் முன்பே மூச்சு முட்டியது. சுவாசம் பெருத்த ஓசையுடன் இழுத்தது. மற்றவர் ஓடி வரும்முன் தன் கனத்த சரீரத்துடன் தரையில் விழுந்துவிட்டாள் ஜீஜி. வியர்வை பெருகியது. சிறுநீர்  பெருகி உடையெல்லாம் ஈரம்.

    “நான் போய்விடுவேன்... நான் போய்விடுவேன்... என் மருமகள்கள் எல்லோரும் வெளியூரில்... அந்தப் பாவி படி ஜீஜி என் சமையலறையை ஆளப்போகிறாள்... ஹே பக்வான்...” என்று அரற்றிக்கொண்டே தலையை இடமும் வலமும் திருப்பினாள். கீழே இருந்த டாக்டர் ஓடி வந்து ஊசி போட்டார். மூச்சு சீராகியது. இமைகள் இழுக்க உறங்கிப்போனாள்.

    கண் விழித்ததும் இடுப்புச் சாவியைத் தொட்டுக்கொண்டாள். “ராத்திரி என்ன சமையல்?” என்று கேட்டாள். பீன்ஸ் என்றதும் “ஏன், நான் காலிஃப்ளவர் அல்லவா சொல்லியிருந்தேன்? அவள் மாற்றினாளா? நான் போய்விடுவேன் என்று நினைத்தாளோ?” என்று பொருமினாள்.

    “இல்லை ஜீஜி. காலிஃப்ளவர் கிடைக்கவில்லை பஜாரில்.”

    ”புடவை... வேறு புடவை... தா” என்றாள்.

    குஸுமா, ஜீஜியின் பீரோவைத் திறந்து பச்சைப் புடவை, பச்சை உள்பாவாடை, இளம் மஞ்சள் ரவிக்கை எடுத்தாள். ஜீஜியின் படுக்கை அருகே வைத்தாள். தலையைத் திருப்பிப் பார்த்த ஜீஜி, “பச்சை வளையல் எங்கே?” என்றாள் ஈனஸ்வரத்தில். மீனாட்சி வளையல் பெட்டியைத் திறந்து பச்சைக் கண்ணாடி வளையல்களை எடுத்து வைத்தாள்.

    கதவை மூடி ஜீஜியின் ஆடைகளை அகற்றினர். முழுவதும் சிவக்கப் பழுத்த பழம் ஒன்று வற்றினாற்போல் இருந்தது அவள் உடம்பு. அகங்கையில் கோடுகள் கனத்து ஓடின. புறங்கை சுருங்கி நரம்புகள் பளபளத்தன. அடிவயிற்றில் ஏரிட்டு உழுதாற்போல் ஆழமான பிரசவ வரித் தழும்புகள். அவள் உறுப்பின்மேல் புறத்துமயிர் வெளேரென்று பசையற்று, அங்கங்கே உதிர்ந்து இருந்தது. பருத்துப் பின் தளர்ந்த பின்பாகமும், தொடைகளும் வெளுத்த கீறல்களுடன் சுருங்கித் தொங்கின. உள்தொடை இடுக்கின் அருகே கருகிய வாழைத் தோல்போல் வதங்கிக் கிடந்தது. ஸ்தனங்கள் சுருங்கிய திராட்சை முலைக்காம்புகளுடன் தாழ்ந்து தொங்கின. கழுத்தில் பல தங்கச் செயின்களின் கரிக்கோடுகள். நெற்றியில் வகிட்டின் முனையில் கனத்த தங்கக் குண்டுடன் தலையில் அணிந்த சுட்டிப் பட்டம் அழுத்தி அழுத்தி வழுக்கை விழுந்தாற்போல் வழவழவென்று ஒரு தழும்பு.

    வாழ்ந்த உடம்பு. சிறுநீர், மலம், ரத்தம், குழந்தைகள் எல்லாவற்றையும் வெளிப்படுத்தியிருந்த உடம்பு. எத்தனை தடங்கள் அதில்!

    புடவை கட்டி முடித்ததும், ஜீஜியின் தலையை வாரி, வண்ண நூல் குஞ்சலம் தொங்கும் கருத்த நூல் சவுரியைக் கூந்தலில் இணைத்துப் பின்னிவிட்டாள் ராதா பாபிஜி. பீரோ சாவியை குஸுமா ஜீஜியின் இடுப்பில் செருகினாள். ஜீஜி படுக்கையில் சாய்ந்துகொண்டாள்.

    மற்றவர்கள் போனதும் ஜீஜி அருகில் உட்கார்ந்துகொண்டாள் மீனாட்சி. ஜீஜியின் கை இடுப்பைத் துழாவியது. ஜன்னல் திரைகள் மூடப்பட்ட அறை இருண்டிருந்தது.

    மருந்து, தூக்கம், அயர்ச்சி சேர்ந்து ஜீஜியின் குரல் கனத்து வெளிப்பட்டது. ஆனால் காற்றினில் அலைந்துவிட்டு வந்ததுபோல் அழுத்தமின்றி இருந்தது.

    “சிகப்புக் கலர் பாவாடை...”

    “என்ன ஜீஜி?”

    “என் கல்யாணப் பாவாடை. சிகப்புக் கலர். தங்க வெள்ளிச் சரிகை உடலெல்லாம். தங்கத் தகட்டுப் பொட்டு. பன்னிரெண்டு தங்க வளையல்கள். இரண்டு அட்டிகை, சிவப்பில், பச்சையில், முத்துத் தோடு. பவழத் தோடு. நெற்றிச் சுட்டியின் தங்கக் குண்டு அஞ்சு பவுன். ஒரு வெள்ளிச் சாவி வளையம். பதினாலு வயது எனக்கு. என்னை வழியனுப்புகிற ‘பிதாயி’ன்போது என் அம்மா காதில் சொன்னாள். நெஞ்சில் முட்டுகிறது அந்த ‘பிதாய்’. முக்காட்டோடு அவள் குனிந்து என்னைக் கட்டிக்கொண்டாள். பெரிய மூக்கு வளையம். உறுத்தியது. “சமையலறையை ஆக்ரமித்துக்கொள். அலங்காரம் செய்து கொள்ள மறக்காதே.... இரண்டும்தான் உன் பலம். அதிலிருந்துதான் அதிகாரம்....”

    “இருக்கட்டும் ஜீஜி. தூங்குங்கள்.”

    “முப்பது பேர் வீட்டில். அஞ்சு கிலோ ‘ஆட்டா’ பிசைவேன். முந்நூறு சப்பாத்தி இடுவேன். முதல் தடவை இரண்டு உள்ளங்கையும் ரத்தம் கட்டி நீலமாய் இருந்தது. தோள் பட்டையில் குத்திக் குத்தி வலித்தது.... பப்பாஜி சொன்னார்... சபாஷ்... நீ நல்ல உழைப்பாளி... என்று....”

    ஹா என்று மூச்சு விட்டாள்.

    “கோபாலுக்கு முன் ஒரு ஆண் குழந்தை. அவன் போய்விட்டான். தெரியுமா? ஒரு வயதில். பூஜை அன்று, எல்லோரும் சமையலறையில்... குழந்தை படியேறி மதில் சுவரில் ஏறப்பார்த்து விழுந்துவிட்டான்... முப்பது படி ஏறியிருந்தான்.... எண்ணெயில் பூரியைப் போட்டது ஈச்சென்ற அலறல்.....  வயிற்றில் முட்டியது.... பின் மண்டையில் பிளவு... முற்றத்துக் கல் தரையில் வெள்ளைப் புழுக்கை மாதிரி அவன் மூளை சிதறியிருந்தது... ஆண் பிள்ளைகள் எல்லாம் வந்தபின்... பொரித்தேன்... மீனா... கேட்கிறாயா... பொரித்தேன் மீதம் பூரிகளை...”

    மீனாட்சி ஜீஜியின் நெற்றியில் தடவினாள்.

    “மாமனார் போனதும் வெள்ளிச் சாவி வளையத்தில் சாவி கோத்துக்கொண்டேன்.....”

    “மீனா... எனக்கு எத்தனை செல்வாக்கு பார்த்தாயா? நன ராணி மாதிரி அதிகாரம் செலுத்துகிரேன்... இல்லையா?” ஜீஜி முனகினாள். உறங்கினாற்போல் கிடந்தாள்.

    பெரிய வட்டப் புஷ்ப வடிவில் கமலமும், நீலமும் பச்சையும், முத்தும் பதித்த தோடுகளை அணிந்த சருகுச் செவிகள் அருகே மீனாட்சி குனிந்தாள். விரிந்த கடலில் பாம்புப் படுக்கையில் மகா விஷ்ணு மிதப்பதுபோல் ஜீஜியும் அவளும் மட்டுமே. இருண்டு கிடந்த அறையில் ஒரு தொப்புள் கொடி அறுந்த தன்மை ஏற்பட்டது. அந்த உரையாடலை அவள் நிகழ்த்தினாளா, அது தன்னால் ஏற்பட்டதா, அப்படிப் பல முறை யோசித்ததால் நிகழ்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதா, அது ஜீஜிக்கும் அவளுக்கும் மட்டுமேயான உரையாடலா என்று தெரியவில்லை.

    ஜீஜி, அந்தச் சமையலறை, அட்டிகை, வளை, தங்கக் குண்டுச்சுட்டி - அதிலெல்லாம் ஒரு பலமுமில்லை.

    அதிகாரம் அதிலிருந்து வரவில்லை.

    அது பப்பாஜியை ஒட்டிய அதிகாரம்.

    அதிலிருந்து எல்லாம்.

    விடுபடுங்கள்.

    விடுபடுங்கள்.

    விடுபடுங்கள்..

    விடுபட்டால்... அப்புறம்.... எஞ்சுவது?

    சமையலறை, நகைகள், குழந்தைகள், பப்பாஜி எல்லாவற்றையும் துறந்த நீங்கள்தான். அறுபட்ட நீங்கள், வெறும் கேஸர்பாயி, கேஸர்பாயி மட்டுமே. அங்கிருந்துதான் பலம். அதிகாரம்.

    அதை எல்லாம் துறந்த நான்... நான்... யார்?

    கண்டுபிடியுங்கள். முங்கிப் பாருங்கள்.

    எதில்?

    கிணற்ரில், உங்கள் அந்தரங்கக் கிணற்றில்.

    பற்றிக்கொள்ள எதுவுமில்லையே... பயமாக..

    இன்னும் முங்குங்கள். முங்குங்கள். கேஸர்பாயிக்கும் உலகுக்கும் என்ன சம்பந்தம் என்று பாருங்கள்.

    நிதம் இடப்பட்ட அந்த முந்நூறு சப்பாத்திகளும், பதினாலு குழந்தைகளை உதைக்கவிட்ட வயிறும் இல்லாவிட்டால்

    மட்டன் புலவு, மஸாலா, பூரி - ஆலு, தனியாப் பொடி, உப்பு, சர்க்கரை, பால், எண்ணெய், நெய் என்று யோசித்திருக்கா விட்டால்

    நாலு நாட்களுக்கு ஒரு முறை ஸ்டவ் திரியை இழுத்துவிட வேண்டும்; மண்ணெண்ணெய் கிடைக்கும்போது வாங்க வேண்டும்; மழைக்காலத்தின் கவலை அரிசி, பருப்பில் பூச்சி; மாங்காய்க் காலத்தில் ஊறுகாய்; வெய்யில் காலத்தில் அப்பளம்; பழங்கள் வரும் காலத்தை ஒட்டி ஷர்பத், ஜூஸ், ஜாம்; பழைய துணிகள் போட்டுப் பாத்திரம்; சமையலறை முற்றத்துக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சுண்ணாம்பு; மாதவிடாய் தள்ளிப் போயிற்றோ என்று கவலை; தள்ளிப் போகாவிட்டால் கவலை என்று மண்டையெல்லாம் பூச்சி, ஊறுகாய், சுண்ணாம்பு அடைத்திருக்காவிட்டால்.

    மூளையின் இழுப்பறைகளை இவற்றை எல்லாம் போட்டு நிரப்பியிருக்காவிட்டால்

    ஒருவேளை நீங்கள் அந்த ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம்; தண்ணீர் கெட்டிலின் மூக்கு நுனி ஆவியைப் பார்த்திருக்கலாம்;

    புதுக் கண்டங்களைக் கண்டுபிடித்திருக்கலாம். கைலாய பர்வதத்தில் அமர்ந்து காவியம் எழுதியிருக்கலாம். குகைகளுக்கு ஓவியம் தீட்டியிருக்கலாம். பறந்திருக்கலாம். போர்கள், சிறை, தூக்குமரங்கள், ரஸாயன யுத்தங்கள் இல்லாத உலகம் உண்டாக்கியிருக்கலாம்.

    நீங்கள் எங்கே போய்விட்டீர்கள் ஜீஜி?

    சரியான அளவில் எல்லாம் இடப்பட்ட சமையலில்

    காதிலும் கழுத்திலும் நுதலிலும் உறுத்திய நகையில்

    பலம் என்று

    எப்படி நினைத்துக்கொண்டீர்கள்?

    முங்குங்கள் இன்னும் ஆழமாக.

    அடியை எட்டியதும் உலகளந்த நீரைத் தொடுவீர்கள். சுற்றியுள்ள உலகுடன் தொடர்பு கொள்வீர்கள்.

    உங்கள் யோனியும், ஸ்தனங்களும், கருப்பையும் சுழன்று விழும் சமையல் மணம் தூரப் போய்விடும். நகையின் மினுமினுப்பு மறைந்துவிடும். பால்தன்மை அற்ற நீங்கள். அதில் சிக்காத நீங்கள், அதில் குறுகாத நீங்கள். அதனின்றும் விடுபட்ட நீங்கள்.

    அதைத் தொடுங்கள் ஜீஜி.

    தொட்டு

    எழுங்கள்.

    எழுங்கள்.

    எழுங்கள்.

    அதுதான் பலம். அதனின்றும்தான் அதிகாரம்.

    ஜீஜி திரும்பி, மீனாட்சியின் தேடிப் பற்றிக்கொண்டாள்.

    *****

    வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (சிறுகதைத் தொகுப்பு) – க்ரியா பதிப்பகம். அம்பை சிறுகதைகள் (1972-2000) – காலச்சுவடு பதிப்பகம்

    இணையத்தில் புத்தகம் வாங்க இங்கே செல்லவும்.

    Apr 30, 2011

    வெளிப்பாடு - அம்பை

    அந்தப் பேருந்து நிலையத்தை நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதன் ஓசைகளையும், பிம்பங்களையும் மனதில் உறைந்து போக வைத்துவிட வேண்டும். பின்னால் நினைவுகூற. முக்கலும், முனகலும், பெருமூச்சுமாய் ஒரு தமிழ் சினிமாப் பாட்டு. வீடியோ கோச்சுகளின் அழைப்பை விடுக்கும் கூவல்கள். அறிவிப்புகள். பாட்டின் அதிர்வுப் பின்னணியில், மடக்கிய ரவிக்கையிலிருந்து வெளிப்பட்ட ஒரு முலை. காம்பு விறைத்து, பழுத்து. அதைச் சிறு சப்பலுடன் கவ்விய சிறு  உதடுகள். நீலமும் சிவப்புமாய், கூச அடித்த பட்டுப் புடவையின்  கழுத்துப்புற ஈரம். எண்ணெய் தடவி இறுக்கிப் பின்னிய தலையோடு ஒட்டிக்கொண்டிருந்த பின் தலையில் விரல்கள் நுழைத்த மல்லி, கதம்பம். கட்டணக் கழிப்பிடம் அருகேயே சுவரில் பீச்சியவனின் ஒரு கருத்த பிருஷ்டம். உள்நாக்குத் தெரிய, வாயைத் திறந்து கேவலின் உச்சக்கட்ட ஒலி செத்த நிலையில் ஒரு ரெட்டைக்குச்சிப் பின்னல் பெண்.

    கண்டக்டரைச் சுற்றி இருந்த கூட்டத்தில் அவன் - சிதம்பரம் - மோதிக்imagesகொண்டிருந்தான் அவளுக்காக. வேஷ்டியைக் கீழேயே விடமாட்டான் போலிருந்தது. அவள் காலையில் பார்த்ததிலிருந்து அது மடித்தே இருந்தது. ஒரு அரைக்கைச் சட்டை. காலில் ஒரு தேய்ந்த செருப்பு. காலையில் ரயில் நிலையத்துக்கும் இப்படித்தான் வந்தான். நொடியில் அவளை அடையாளம் கண்டு கொண்டுவிட்டான். சிறு பெட்டியை அவள் கையிலிருந்து வாங்கினான் முதலில். அவளால் பெட்டி தூக்க முடியாது; டிக்கெட் வாங்குதல் போன்ற விஷயங்களைச் செய்ய முடியாது என்பது பற்றித் தீர்மானமாக இருந்தான். ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து நடக்கத் தொடங்கியது, “ஏ யப்பா! இப்படி விறுவிறுன்னு நடக்கறீங்களே!” என்று வியந்தான். நடத்திக்கொண்டே போனான்.

    “எங்கே போறோம்?”

    “இதோ, இந்த முக்குவரிக்கும்தான். தாமிரவருணிக்கு. ஆத்துல குளிச்சிட்டுப் போயிடலாம்.”

    “ஐயோ! எனக்கு அங்கல்லாம் குளிக்க வராது.”

    ”அய்ய! ஒண்ணுமில்லிங்க. எத்தன பேரு குளிக்கறாங்க பாருங்க.”

    மார்பில் பாதித் துணி. மீதி, கல்லில் பட் பட். நீர் தெறித்தது. மஞ்சள் கன்னங்களும், பாதங்களும், ஈரத் தொடைகளும். ஈரமுடி முதுகில். தலைப்பை வாயில் கவ்வி நொடியில் ரவிக்கை ஏறியது. மின்னல் மாதிரி இடையும், பின்பகுதியும் பளீரிட்டபின், மந்திரம் போட்டதுபோல் புடவை இடுப்பில்.

    முடியாது. அவளுக்கு நிறைய விஷயங்கள் இருந்தன அணிந்துகொள்ள. எளிமையானவை அல்ல. திறந்தவெளியில் அவிழ்க்கவும் முடியாது.

    “முடியாதுங்களா?”

    ”இல்ல. பழக்கமில்ல.”

    “இங்க வந்து தாமிரவருணி குளிக்காம போகலாமா?”

    “இல்லல்ல. முடியாது.”

    மறுப்பால் சற்றுப் பாதிக்கப்பட்டான். “ஏங்க, ஆத்துல குளிக்கறது என்னங்க கஷ்டம்?” என்று முணுமுணுத்தான். “சரி வாங்க” என்று மீண்டும் நடத்தினான்.

    ஒரு மரக்கதவின் முன் நின்று, “அண்ணி, அண்ணி” என்றான். கதவு திறந்தது.

    திறந்தவரிடம், “இவங்கதான்... நான் சொன்னேனே? ரிப்போர்ட் எழுதணுமாம். கிருஷ்ணமூர்த்தி உதவி பண்ணச் சொல்லிக் கடுதாசி போட்டிருந்தார். கணபதி இல்ல ஊர்ல. ஓட்டல்லே ரூம் போடலாம்னு பார்த்தேன். வேணாங்கறாங்க. அரை நாள்தானே இங்கன. அதான் கூட்டிட்டு வந்தேன்.”

    ”ஓட்டல் எதுக்கு நம்ம வீடு இருக்கச் சொல்ல? உள்ளாற வாங்க,” என்றார்.

    உள்ளே, சமையலறையிலிருந்து ஒரு முகம் எட்டிப் பார்த்தது.

    “குளிக்கணுமாம்.” என்று அறிவித்தான் செய்தி மாதிரி.

    “என்ன?” என்றாள் அண்ணி.

    “குளிக்கணுமாம்.”

    “ஆத்துப் பக்கமா வரலியா?”

    “வந்தமே.  பளக்கம் இல்லியாம்.”

    ”இருக்கட்டும். இப்ப குளிக்கலாம்.” என்றாள்.

    காப்பி வந்தது.

    “வாங்க” என்றாள்.

    சமையலறையின் முற்றத்தைக் காட்டி, “பக்கிட்டுல தண்ணி வெச்சிருக்கேன். ஊத்திக்கிடுங்க. கதவு சாத்த வேண்டாம். யாரும் வரமாட்டாங்க” என்றாள்.

    அடுப்பில் பருப்பு மஞ்சள் வாசனையுடன் வெந்தது. இன்னொரு அடுப்பில் தோசைக்கல்.

    “மஞ்சத்துண்டு பொறையில இருக்கு”. என்று விருக்கென்று உள்ளே வந்து தோசைக்கல் முன்னால் அமர்ந்தாள். அவள் அப்படி சர்வசாதாரணமாய்ப் புகுந்தது பாதிப்பதற்குமுன், தோசைக்கான மாவை ஊற்றினாள்.

    ஜிவ்வென்று பசி வயிற்றைக் கவ்வியது. அம்மியில் சிதைந்த முதல் பச்சை மிளகாய் நெடி மூக்கில் ஏறித் தலையில் போதையாய் முட்டியது.

    “முதுகு தேய்க்கணுமா?”

    ”இல்ல, இல்ல, வேண்டாம்.”

    “கூச்சப்படுறீகளோ? பொம்பளைகளுக்குள்ள என்ன கூச்சம்?”

    முதல் தோசை, பொன் நிற முறுகலாய் வாழை இழைமேல் விழுந்தது. இன்னொரு ‘சொய்’. கரண்டியால் ஒரு தேய் தேய்த்ததும் வட்டமாய் விரிந்தது.

    “முடிக்கு எண்ணெய் தேக்க மாட்டீகளோ?”

    ”தேப்பனே.”

    “பின்னே ஏன் இப்படி உதுந்துபோய்க் கிடக்கு? கரகரன்னுட்டு ரெண்டு கை எண்ணெய் தேய்ச்சு சீக்காய்ப் பொடி கொழச்சு தாமிரவருணில குளிச்சா முடி ஏன் வளராதுங்கேன்?”

    அவள் தலையைப் பார்த்தாள். கருகருவென்று வெங்கலப் பானை மாதிரி முடிந்த தலைமயிர்.

    ”என் முடியைப் பாக்கீகளா? எனக்கு வயசு அம்பது. ஒரு முடி நரைக்கல. இன்னும் தூரம் போகலை.”

    உனக்கு மறைக்க ஒன்றுமே இல்லையா? உன்னையும் என்னை மாதிரி அடக்கி அடக்கித்தான் - தலைப்பு ஏன் இப்படித் தொங்கறது? இடுப்பில் செருகு. வாசல் பக்கம் என்ன பண்றே? வாயை மூடு. கொரல் வெளில வரக்கூடாது. படிப்பு கிடக்கட்டும்; இந்தக் காயை நறுக்கித் தா. அப்புறம் தயிர் கடையலாம் - வளர்த்திருப்பார்கள். எந்த பலத்துடன் இப்படி வெள்ளையாய்ப் பேசுகிறாய்? சிரிக்கிறாய்?

    “பதினாலு வயசிலே கல்யாணம். இவுகளுக்கு வயசு இருபது. அல்லு அசலு இல்ல. சொந்த மாமா பையன். பெறகு என்ன? சோறு வடிக்கிற ராச்சியந்தான். ரெண்டு பொட்டச்சிக. ஒரு மகன். கட்டிக் கொடுத்தாச்சு. அட, பேரன் எடுத்திட்டன்னா பாத்துக்குங்களேன்.”

    இதுதான் உன் வாழ்க்கையின் கதையா? நாலு வரியில்?

    உள்ளாடைகளை எப்படி அணிவது என்று யோசித்தாள்.

    ”தோசை வெச்சுட்டு வாரேன் அவுகளுக்கு. சாப்பிடச் சாப்பிட வெக்கணும். இல்லாட்டா மூக்கு மேல கோவம் புசுக்குன்னு ஒரு அறை வெச்சார்னா....” சிரித்தாள். வெளியே விரைந்தாள் வாழை இலையுடன்.

    வேகமாக உடைகளை அணிந்தாள். சரியாகத் துடைக்காத உடம்பில் ரவிக்கை சுலபமாக ஏறவில்லை. முழங்கை அருகே பிடித்தது.

    ”சாப்பிட வரீகளா? எனக்குப் பசிக்கி.”

    “நான் தோசை சுடட்டுமா?”

    “அட, தோசை சுடத் தெரியுமா?”

    “ஏன், தெரியாதுன்னு நீனைச்சீங்களா? ஒங்களை மாதிரி அவ்வளவு அழகா வராது. ஆனா சுடுவேன்.”

    “என்ன மாதிரின்னா, என் வயசு என்ன, உங்க வயசு என்ன? பத்து வயசு தொடங்கி சுடறேன். நாப்பது வருஷத்துல ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு தோசை... அம்மம்மா...”

    ஒரு வருடத்துக்கு ஏழாயிரத்து முந்நூறு தோசைகள். நாற்பது வருடங்களில் இரண்டு லட்சத்துத் தொண்ணூற்றிரண்டாயிரம் தோசைகள். இது தவிர இட்லிகள், வடைகள், அப்பங்கள், பொரியல்கள், குழம்புகள். எவ்வளவு முறை சோறு வடித்திருப்பாள்? எவ்வளவு கிலோ அரிசி சமைத்திருப்பாள்? இவள் சிரிக்கிறாள்.

    “என்னா ரிப்போர்டு எளுதணும்?”

    “பொம்பளைங்க பத்தி.”

    ”பொம்பளைங்க பத்தி எளுத என்ன இருக்கு?”

    ”அதாவது அவங்க எப்படி வாழறாங்க என்னெல்லாம் வேலை செய்யறாங்க அவங்க தங்களோட வாழ்க்கையைப் பத்தி என்ன நெனைக்கிறாங்க...”

    ”என்ன நெனக்கிறாங்க? புள்ள பெறுதோம். ஆக்கிப் போடுதோம்.”

    ”எப்பப் பாரு புள்ள பெறலியே? நடுவிலே ஏதாவது யோசிச்சிருப்பீங்க, இல்ல?”

    ”ஆமா, ரோசிச்சோம், போங்க.”

    மௌனமாகச் சாப்பிட்டார்கள்.

    தோசை விள்ளலைச் சட்டினியில் தோய்த்தபின், வாயில் போடாமல் இவளைப் பார்த்தாள்.

    “ஒரு பொஸ்தகமுங்க. எங்க வூட்டுல இருந்திச்சு. நான் சின்னப் புள்ளையா இருக்கச்சொல்ல. ஒரே போட்டோவுங்க. சமுத்திர போட்டோ, நொரையா அலை. செல போட்டோவுலே அப்படியே கண்ணாடி மாதிரி கெடக்கு சமுத்திரம். திருச்செந்தூர் கோயில் விளால நான் பாத்திருக்கேன் சமுத்திரம். ஒரு வாட்டி சொரம் வந்து சமுத்திரம் சமுத்திரமுன்னுட்டு பெனாத்தினேன். ‘பயித்தியாரி, பயித்தியாரி’ன்னு இவுக ஒரே கோவம். அதென்னமோ வியாதிங்க. சமுத்திர சாபம். சமுத்திரம் பாக்கணுமே பாக்கணுமேன்னுட்டு பறப்பேன். இவுக ஒரு அறை வெப்பாக பாருங்க, அடங்கிடுவேன். முருக பக்தருங்க இவுக....”

    ஒரு நகரத்தில் ஒரு சின்னப் பெண். அவள் வசித்த தெருவின் முனையில் ஒரு சிறு புத்தகக் கடை. கண்ணாடிச் சுவர்கள். இவள் மூக்கும் கண்களும் மட்டும் கண்ணாடிச் சுவர்வரை எட்டும் எம்பினால். ஒரு சுழல் அலமாரியின் பின்னால் அது இருந்தது. நீலக் கடலின் ஒரு ஓய்ந்த முனை. நிலாவின் ஒளிக்கதிர்கள் மெத்தென்று ஊடுருவியது ஒரு தையல்போல். ஒரு படகு, கடல், படகு, நிலா எல்லாம் ஒன்றோடொன்று கலந்திருந்தது நீலமாக. அவளுக்கு நீலம் பிடிக்கும், ரொம்ப. தெரு முனையை அடையும் போதெல்லாம் அவள் கண்களும் மூக்கும் கண்னாடியை அழுத்தும். அவர் பார்த்தார் ஒருநாள், கடைக்காரர்.

    “என்ன பாப்பா?”

    “சமுத்திரம்.” இவள் காட்டினாள்.

    “உள்ளே வா.”

    அவர் அதைக் கழற்றி அவளிடம் பார்க்கத் தந்தார். அது ஒரு ஐரோப்பிய ஓவியம். மோனேயா? நினைவில்லை. ஒருநாள் அதை அவளுக்குத் தந்தார். அவள் குழந்தை பருவத்தின் ஒரு மென்மையான பகுதி. ஓவியக் கடல்.

    “என்ன டீச்சர், இவகிட்ட பேசறீங்களா? ஒண்ணும் தெரியாது இவளுக்கு. மீன் கொளம்பு வேணா நல்லா ஆக்குவா.” சிரித்தார்.

    இவள் நிமிர்ந்து அவளைப் பார்த்தாள். அவள் இவளை அரைக்கணம் பார்த்துவிட்டு இலையுடன் எழுந்து தன் கணவனைத் தாண்டிப் போனாள்.

    கிளம்பும்போது, “அடுத்த வாட்டி ரெண்டு நாள் இருக்குற மாதிரி வாங்க டீச்சர். திருச்செந்தூர் போகலாம்,” என்றாள்.

    ”ஆமா, ஆமா, சாப்பாடெல்லாம் கட்டிட்டுப் போகலாம். நல்லாயிருக்கும் டீச்சர் முருகன் கோவில்,” என்றார் அவர்.

    அவள் கன்னத்தை வருட வேண்டும் போலிருந்தது. இறுக்கி முடிந்திருந்த கூந்தலைக் கீழே தளரக் கொட்டிப் பார்க்க வேண்டும். கனத்த தங்கச் சங்கிலிகள் கிடந்த கறுத்த கழுத்தைத் தொட வேண்டும். ஆனால் ஸ்தூலமாகப் பகிர்ந்துகொண்டது தோசையை மட்டும்தான். அதனால், “உங்கள் கைதோசை சாப்பிட வருவேன் இன்னொரு தடவை” என்றாள்.

    பஸ் டிக்கெட்டோடு வந்தான் அவன்.

    “போயிடுவீங்க இல்ல? அங்க கணபதி வருவார். வேலை முடிஞ்சதும் அவரு வீட்டுக்கு வந்திடலாம். இப்ப அவரு இங்க இல்ல. அதனாலதான்... போயிடுவீங்க இல்ல?”

    ”டெல்லியிலேர்ந்து இங்க வரலியா? ஏன் போக முடியாது?”

    “இல்ல.... ஒத்தையா....”

    “அதெல்லாம் போயிடுவேன்.”

    பஸ் கிளம்பும்முன் கண்டக்டரிடம், “அவுங்க புதுசு. கொஞ்சம் பாத்து எறக்கிவிடுங்கய்யா,” என்றான்.

    மூச்சு முட்டியது. பாதுகாப்பும் ஒரு அடக்குமுறைதான். நீ வீட்டில் இருந்தால் உன்னை நான் காப்பாற்ற முடியும். வெளியே வந்து நான் சுவாசிக்கும் காற்றை நீ உள்ளுக்கு இழுத்தவுடனேயே அபாயம் உன்னைச் சூழ்கிறது. எட்டுத் திக்கும் வாயை அகல விரிக்கிறது உன்னை விழுங்க. என் கரிசனத்தைப் பார். எவ்வளவு அக்கறை பார் எனக்கு. கடல் வேண்டியிருந்தது அவளுக்கு. அலைகளை வீசி வீசிப் போட்டு அலையும் உதாசீனக் கடல்.

    கணபதி வந்திருந்தார். வேலையை முடித்து பஸ் ஏறி அவர் வீட்டை அடையும்போது இரவு மணி ஒன்று. நீண்ட, கல்லால் ஆன ரேழியில் நடந்து வெளிமுற்றத்தைத் தாண்டிக் கதவை எட்டினார்கள். கதவைத் தட்டாமல் ‘சந்திரா, சந்திரா’ என்றார் சன்னமாக. சிரித்த முகத்துடன் ஒரு இருபது வயசுப் பெண் வந்தாள். மேல்புறம் இரும்புக்கம்பிகள் போட்ட கதவைத் திறந்தாள். கலைந்த தலை மயிரை ஒதுக்கியபடி “வாங்க” என்றாள்.

    “அண்ணி மச்சுலே படுத்திருக்காங்க,” என்றாள் அவரிடம்.

    “என் தங்கை” என்றார்.

    சிரித்தாள். கூடத்தில் சமையலறையை ஒட்டி ஒரு சிறு பாயை விரித்தாள்.  “உட்காருங்க.”

    ஸ்டவ் பற்றவைத்து,  தோசைக்கல்லைப் போட்டாள். உள்ளே விறகடுப்பு கோலத்துடன் உட்கார்ந்திருந்தது.

    இரண்டு வாழை இலைக் கீற்றுகளை விரித்தாள்.

    தோசை விழுந்தது அதில். மிளகாய்ப் பொடி, நெய், சாப்பிட்டு முடிக்கும்முன் டம்ளரில் சுடச்சுடப் பால்.

    காலையில் டீயுடன் எழுப்பினாள்.

    “எப்படித் தெரியும் டீதான் சாப்பிடுவேன்னுட்டு?”

    “அண்ணா சொன்னாரு, டெல்லிக்காரங்களுக்கு டீதான் பிடிக்கும்ன்னு”

    “அப்புறம்?”

    “விறுவிறுன்னு நடப்பீங்கன்னுட்டு, ஒத்தையா எல்லா இடத்துக்கும் போவீங்கன்னுட்டு.”

    “நீ வரியா என்னோட?”

    “நான் எப்பிடி? அனுப்ப மாட்டாக வெளில எல்லாம்.”

    ”போகவே மாட்டியா?”

    “எப்பனாச்சும். கோயில், திருவிழா, அண்ணா அண்ணி அழைச்சிட்டுப் போனா சினிமா.”

    “பின்ன வீட்டுல என்ன பண்ணுவ?”

    ”வேலை இருக்குமே. அம்மா ஒத்தையா எப்படி எல்லாம் செய்வாக? அண்ணியும் நானும் செய்வோம். மாட்டுக்குத் தீனி, தோசை மாவாட்டறது, சட்டினி, தொவையல் அரைக்கறது எல்லாம். துணி தோய்ப்பேன். சின்னண்ணா ஷர்ட்டு, பான்ட்டு தோச்சு, கஞ்சி போட்டு, பெட்டி போட்டு வைக்கணும். இல்லாட்டி ரொம்ப கோவிப்பான். மத்தியானம் நேரம் கெடச்சா பத்திரிகை படிப்பேன். தொடர்கதை....”

    “டீ நல்லா இருக்கு”

    “அந்த ‘சுரபி’ பத்திரிகைல வர கதேல அந்தாளு கூப்பிடுறான்னு இவ போயிருக்கா. தொடரும் போட்டுட்டாக. அவன் கெடுத்திடுவான்னு பயமா இருக்குது. இவ போகக் கூடாதில்ல?”

    ”உனக்கு வெளியே போகத் தோணாது?”

    “போகலாமே. கல்யாணம் கட்டிட்டா மாப்பிள்ளையோட போகலாம். கடை, கண்ணி, சினிமா, வேத்தூரு எல்லாம். மாப்பிள்ளை பார்த்தாக. ஒண்ணும் கூடிவரல்ல.”

    “எந்த மாதிரி புருஷன் வேணும் உனக்கு?”

    ”ஏன், மாப்பிள்ளை பாத்துத் தருவீகளோ?” குறும்பு கண்ணில்.

    “நான் பார்க்கட்டுமா டெல்லி மாப்பிள்ளை? செக்கச் செவேல்ன்னுட்டு பஞ்சாபி மாப்பிள்ளை?”

    “கேலி பேசுறீங்க”

    ”இல்லல்ல. நீ சொல்லேன்.”

    “எப்படிப்பட்டவருன்னா? நல்லவரா இருக்கோணும்.”

    “நல்லவர்ன்னா? சிகரெட்டு பிடிக்கக் கூடாதா? குடிக்கக் கூடாதா எப்படி?”

    “கோவக்காரரா இருக்கக் கூடாது. கை நீட்டக் கூடாது.”

    “ஏழையா பணக்காரரா?”

    “நல்ல கொணமா இருக்கோணும். படிச்சவர்னா சம்பளம் நல்லாதானே இருக்கும்? நல்லா வெச்சுக்கிடணும்.”

    ஒரு பேப்பரை எடுத்தாள். “கல்யாணம் கட்டிட்டு என்னெல்லாம் வேணும் சொல்லு. நான் பட்டியல் போடறேன்.”

    “கேலியா?”

    ”சே, நிஜமாவே. சொல்லு”

    ஊஞ்சல் சங்கிலியில் தலையைச் சாய்த்து, முழங்காலைப் பலகையில்  ஊன்றி நின்றாள். கூந்தல் அலையாய் நெற்றியில் விழுந்தது. பாய்மர இமைகள் மேலெழுந்தன படகுக் கண்கள் மிதக்க. பட்டியல் அவளிடம் இருந்தது.

    தெருவுல நடக்கணும் தெனம்.

    ஓட்டல்ல பலகாரம் சாப்பிடணும்.

    கடைக்குப் போய் நானே பொடவை எடுக்கணும்.

    சினிமா போகணும்.

    நெறைய ஊர் பாக்கணும்.

    பின்கட்டு உலகில் பதியப் பதிய நடந்தாள். எருமை மாட்டை அடக்கினாள். தீனி போட்டாள். தீட்டானால் குளிக்கும் இருட்குகை ஸ்நான அறையைக் காட்டினாள். எட்டிப்பார்க்கும் போதெல்லாம் அடுப்படியில். தோசை சுடவா அக்கா? இட்டிலி ஊற்றித் தரட்டுமா? இரவில் புடவை விலகாமல் இரு கால்களையும் அடக்கி, மடக்கிப் படுத்தாள். யார் ஒரு தும்மல் போட்டாலும் எழுந்து மிளகு சீரகம் பொடித்த சுடுதண்ணி போட, விசை தட்டியவுடன் இயங்குபவள் போல் டாணென்று எழுந்தாள். இரவில் அவளுடைய கையை எடுத்து முகத்தில் வைத்துக்கொண்டாள். சோற்றுமணம் அடித்தது. பல யுகங்களின் சோற்று மணம்.

    பெட்டியை மூடும்போது சொன்னாள்:

    “நீங்க போயிட்டீங்கன்னா உங்களை ரொம்பத் தேடும் எனக்கு.”

    “கல்யாணப் பத்திரிகை வெப்பே இல்ல எனக்கு?”

    ”பின்ன? வெக்காம?”

    கணபதி பெட்டியை எடுத்துக்கொண்டார். முன்கட்டுச் சுவர்வரை வந்தாள்.  “அதுவரை வாயேன்” என்று தெருவை ஒட்டிய கதவைக் காட்டியதும் “ம்ஹூம்” என்றாள். சிரித்தாள். கத்திரிப்பூ நிறச் சேலை அணிந்திருந்தாள். தெருக்கதவை எட்டியபோது, “அக்காவுக்கு நம்ம ஊரு அல்வா வாங்கித்தர மறக்காதீக” என்று அவள் குரல் வந்தது. திரும்பிப் பார்த்தபோது அவள் கட்டியிருந்த கத்திரிப்பூ நிறச் சேலையின் தலைப்பு முனை மட்டும் தெரிந்தது.

    கத்திரிப்பூ நிறத் துணியை மனதில் படரவிட்டாள். அது மடங்கி விரிந்து அலையாய்ச் சுழன்றது. கத்திரிப்பூ நிறக்கடல். அது சிறிது சிறிதாய் விஷ நீலமாகியது. பொங்கிப் பொங்கி வந்தது. கன்னத்தில் சொடுக்கும் அடியின் ஓசை வந்தது. முருக பக்தரின் அடி.

    பஸ் நிறுத்தத்தில் சிதம்பரம் ஒரு பொட்டலத்தை நீட்டினான்.

    “என்ன இது?”

    “அந்த அண்ணிகிட்ட நீங்க கிளம்பறீங்கன்னுட்டு சொன்னேன். தோசை கட்டித் தந்தாங்க. வழியில சாப்பிட.”

    சந்திராவின் வேண்டுகோள்படி கணபதி அல்வாவுடன் வந்தார். வாழை இலையில் நெய்யுடன் வழுக்கிய அல்வா.

    ********

    Mar 25, 2011

    ஒரு கட்டுக்கதை - அம்பை

    பன்றி என்னுடன் சம்பாஷிக்க வந்தபோது மாலை ஆறரை மணி இருக்கும். ஒரு பதினைந்து
    இருபது குட்டிகளாவது இருக்கும் தொளதொளத்துத் தொங்கிய அதன் வயிற்றில்.
    சாக்கடையில் புரண்டுவிட்டு வந்திருந்தது. மேல்உடம்பு கன்னங்கரேல் என்று
    சாக்கடைத் தண்ணீரில் பளபளத்தது. கீழே, வயிறு சதையின் நிறத்தில்
    கட்டிகட்டியாய்த் தொங்கியது.ambai5

    ''இதோ பார். எனக்குப் பேச வேண்டும்'' என்றது.

    ''என்னை எப்படித் தேர்ந்தெடுத்தாய்?'' என்றேன்.

    ''உன் புத்திசாலித்தனமான, தீட்சண்யமான கண்களைக் கண்டு உன்னைத் தேர்ந்தெடுத்தேன் என்றெல்லாம் சொல்வேன் என்று எதிர்பார்க்காதே. பார்க்கப்போனால் அப்படி ஒரு ஒளியும் எனக்குத் தெரியவில்லை. பார், நான் ஒரு பன்றி. எனக்குப் பேச வாய்ப்புக் கொடு. பொழுது போகாமல் திண்டாடும் பன்றி நான்'' என்றது.

    அப்படி புகழ்ச்சியில் மயங்கும் நபர் இல்லை நான். இருந்தாலும் இது கொஞ்சம் அத்து மீறிய ஆணவமாய்ப் பட்டது.

    ''இதோ பார், எனக்கு நேரம் இல்லை'' என்று சூடாகச் சொல்வதற்குள் குட்டிகள் தொங்கும் பகுதியைப் பக்கவாட்டில் தழையவிட்டு அமர்ந்துவிட்டது பன்றி.

    ''சரி பேசு'' என்றேன்.

    ''பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்'' என்றது, பெருத்த தலையைக் கீழே சாய்த்தபடி.

    ''என் காதில் விழவில்லை''

    ''மெளனமாய்ப் பேசுகிறேன்'' என்றது.

    ஆணவப் பன்றிகளுக்கு அடுத்தபடி என்னால் பொறுக்க முடியாதது வேதாந்தப் பன்றிகள். அசுவாரஸ்யமாய்த் தலையைத் திருப்பிக் கொண்டடேன் எதிர்ப்பக்கம்.

    ''சும்மா தமாஷ். ஜனங்கள் மிருகங்களின் வாயிலிருந்து ஞானம் சொட்டும் சொற்கள் வரும் என்று நினைக்கிறார்கள். நீதிக் கதைகளில் ஓட விடுகிறார்கள். 'சீ, சீ இந்தப் பழம் புளிக்கும்' போன்ற நீதியை உதிர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குப்பையில் அளைந்து, சோர்ந்து, சலித்துப்போன பன்றி நான். ஞான சம்பந்தமான விஷயங்களில் எனக்கு ஈடுபாடில்லை'' என்றது.

    ''எதைப் பற்றித்தான் பேச விரும்புகிறாய்?''

    ''உங்கள் கட்டடத்தின் வாயிற்கதவு பற்றி.''

    மாடியும் கீழுமாய் ஆறு வீடுகள் கொண்ட கட்டடம் அது. அடுத்தாற்போல், முள்வேலியால் இரு பக்கமும் அடைக்கப்பட்ட வெற்று மனை. வெற்று மனை என்று சொன்னது பேச்சுக்காத்தான்.குடிசை ஜனங்களின் கட்டணம் இல்லாத கழிப்பிடம் அது. பன்றிகளின் வாசஸ்தலம். மத்தியான வேளைகளில் ஜன்னல் அருகே ட்ரியோ ட்ரியோ என்று கூச்சம் கேட்கும். பன்றிகள் ஓடும். சில சமயம் தெரு ஆரம்பத்திலுள்ள சந்தில் நுழையும் போது க்ஹே க்ஹே என்று ஆரம்பத்திலுள்ள ச்நதில் நுழையும்போது க்ஹே க்ஹே என்று மூச்சு சீறும் கதறல் கேட்கும். நின்றால், ''போயிட்டேயிருங்க. பன்னி அடிக்கிறாங்க'' என்று தள்ளி விடுவார்கள்.

    ''எதுக்கு, எதுக்குப்பா அடிக்கிறாங்க?''

    ''எதுக்கு அடிப்பாங்க? சாப்பிடத்தான். நவந்துகிட்டே இருங்க.''

    கட்டடத்தின் வாயிற்கதவில் ஒருநாள் நுழையும் சதுர அளவு இடம் இருந்தது. பலமுறை,
    துரத்தப்பட்ட பன்றிகள் அதில் நுழைந்து ஓடும். அதை மூடிவிடும் யோசனை இருந்தது.

    ''அந்த நுழைவாயில் எனக்குப் பிடிக்கிறது. அதில் நான் ஆனந்தமாய் நுழைய முடிகிறது. நாலு பக்கமும் முள்வேலி இருக்க, நுழைவதற்கான வாகான இடம். பரபரவென்ற நான் ஓடும்போது சுவர்க்கக் கதவு மாதிரி எனக்குத் திறந்து வழிவிடுகிறது. அதைப்பற்றிப் பேச எனக்குப் பிடிக்கிறது. ஒரு பன்றிக்குத் தேவை, நுழையக் கூடிய கதவுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.''

    வோட்ஹவுஸின் புத்தகங்களின் செல்லப் பன்றி நினைவுக்கு வந்தது. பிரபுவின் கொழுத்த ரோஜா வண்ணப் பன்றி. போட்டிகளில் பரிசு பெறும் பன்றி.

    அதைப்பற்றிச் சொன்னேன்.

    அமெரிக்கப் பன்றிப் பண்ணைகளில் கொழுக்கவைக்கப்பட்டு, வலியில்லாமல் இறக்கும் பன்றிகள்பற்றிச் சொன்னேன். வலியில்லாமல் இறப்பது ஒரு பெரிய சலுகைதான் என்ற.
    நிறம்பற்றி அவ்வளவு சுவாரஸ்யம் காட்டவில்லை. சாகப்போகிற பன்றி கறுப்பானால் என்ன, ரோஜா வண்ணமானால் என்ன என்றது. மற்றவர்கள் சாப்பிடுவதற்காக இறப்பதுப்பற்றி ஒரு ட்சேபனையும் காட்டவில்லை. அதுபற்றிக் கேட்டபோது ஆட்சேபணை காட்டக்கூடிய அதிகாரம் உள்ள நிலையில் தான் இல்லை என்று பேச மறுத்துவிட்டது. சிறிது நேரம் மெளனத்தில் கழிந்தது.

    ''சாவைப்பற்றி என்ன நினைக்கிறாய்?'' என்றேன்.

    ''அது ஒரு பெரிய கழி'' என்றது. ''நீளமாய், உருண்டையாய் இருப்பது. இரும்பாலோ, மரத்தாலோ ஆனது. இரும்பானால் ஆசனத்திலிருந்து வாய்வரை செருகப்படும் சாவு. மரமானால் அடிச்சாவு.

    ''எப்படி அலட்டிக்கொள்ளாமல் சொல்கிறாய்?''

    ''அலட்டிக்கொண்டு ஒன்றம் ஆகப்போவதில்லை. செருகுச் சாவு, அடிச்சாவு, இயந்திரச்சாவு என்று பிரித்துத் தேர்ந்தெடுக்கும் சலுகை வேண்டும் என்று போராடலாம். பன்றிகளிடம் ஒற்றுமை இல்லை.''

    ''இயற்கையான சாவு பற்றிச் சொல்லமாட்டேன் என்கிறாயே?''

    ''சாவதில் என்ன இயற்கை இருக்கிறது? வலுக்கட்டாயம்தான்.''

    ''இல்லையில்லை. மரத்திலிருந்து இலை உதிர்வது மாதிரி மெல்ல இயற்கையோடு கலப்பது...''

    ''எனக்கு ஒரு உபகாரம் செய்''

    ''என்ன?''

    ''தயவுசெய்து இதில் கவிதையைக் கொண்டுவராதே'' என் வாழ்க்கை ஏற்கனவே கெட்டுக்கிடக்கிறது. கவிதையை வேறு என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.''

    ''நான் சொன்னதில் என்ன கவிதைத்தனம் இருக்கிறது?''

    ''நீ சாவிலிருந்து ரத்தத்தைப் பிரிக்கிறாய். ரத்தம் சிந்தாத, அழகான இலையுதிர்ச் சாவு பற்றிச் சொல்கிறாய். ஆனால் ரத்தம் சேர்ந்தது சாவு. வெளியில் கொட்டினாலும் உள்ளே உறைந்து போனாலும் ரத்தமில்லாமல் சாவு இல்லை. நீ சாவை அழகாக்கப் பார்க்கிறாய்.''

    குற்றச்சாட்டு.

    சாவைப்பற்றி முதலில் எண்ணியது பன்னிரண்டு வயதில். கால்கள் அந்தரத்தில் மிதக்க, ஒரு பந்தை எம்பிப் பிடித்துக் கொண்டிருந்தபோது, தலையை மேலே வீசிப் பந்தைப் பார்த்த கணத்தில், வலியுடன் கூடிய மின்னலாய் அந்த எண்ணம் தாக்கியது. நாம் சாகிறோம். உள்ளே ஓடிவந்து முட்டியில் முகம் கவித்துப் பயந்தேன். கை, கால், முகம், உடம்பு எல்லாம் அந்நியமாகப்பட்டது. மாட்டிவிட்ட ஒன்றாய்த் தோன்றியது. இதனுள்ளே நான், நான், நான் என்று புகுந்து பார்த்தேன். பீதி கவ்வியது. செவிக் குழியிலா, கண்ணினுள்ளா, பல்லிடுக்கிலா, அக்குள் பள்ளத்திலா எதில் நான் இருக்கிறேன் என்று தேடினேன். பயத்தில் வியர்த்துப்போனேன்.

    அதன்பின் சில சலுகைகளை நானே எனக்குத் தந்துகொண்டேன். சில வகைகளில் நான் சாக
    விரும்பவில்லை. விபத்தில் சாக விரும்பவில்லை. உடல் சிதைய, திடீர்த் தாக்குதலில் சாவு, விபத்துச் சாவு. எனக்கு வேண்டாம். வலியுடன் துடித்துச் சாவு - அதுவும் வேண்டாம். இரண்டாம் உலகப்போர்பற்றிப் படித்தபின் யூதர்களைப் போல் விஷப் புகைக்கூண்டுகளில் சாக நான் விரும்பவில்லை. அணு ஆயுதத்தால் ஆன ஹிரோஷிமாச் சாவும் வேண்டாம். வியட்நாமிற்குப்பின் நபாம் போன்ற இரசாயனக் குண்டுகளால் ஆன சாவையும் ஒதுக்கினேன். ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்கக் கண்டங்களைக் கண்டுகொண்டபின், பஞ்சசாவு, வெள்ளச் சாவு, பூகம்பச் சாவு, சிறையில் சாவு, தூக்குக் கயிற்றுச் சாவு, துப்பாக்கிச் சாவு என்று ஒவ்வொன்றாய் விலக்கிக்கொண்டே வந்தேன். எஞ்சியது அழகுச் சாவு. வெளியுடன் கலக்கும் கவிதைச் சாவு. வலியில்லை. ரணமில்ல. குருதியில்லை.

    பன்றியின் கோபம் எனக்குப் புரிந்தது.

    சில நாட்களுக்குப் பின் ஒரு விடிகாலைப் பொழுது க்ஹரே... என்று அலறல் கேட்டது. நாலு பேர் கழியுடன் பன்றியைத் துரத்தினார்கள். அது விரைந்து வாயிற்கதவை நோக்கி ஓடியது. அதன் உடம்பு இன்னமும் பெருத்துவிட்டதை அது மறந்துவிட்டது. அந்தச் சதுர இடைவெளியில் சிக்கிக்கொண்டது. நான் ஓடிவரும் முன் ரத்தம் பீறிட்டு, பொம்மைகள் மாதிரிப் பன்றிக் குட்டிகள் வெளியில் விழுந்தன.அருகில் போனதும் பன்றி என்னை அடையாளம் கண்டுகொண்டது. சிவப்பேறிய கண்களைத் திறந்து சொல்லியது.

    ''தயவுசெய்து சாவைப்பற்றிய ஏதாவது அரிய உண்மையைச் சொல்லிவிட்டுப் போவேன் என்று
    எதிர்பார்க்காதே. ஒன்றுதான் என்னால் சொல்ல முடியும். நாம் சாகிறோம்.''

    நீண்ட கழிகள் நெருங்கி வந்தன.

    *நன்றி : வீட்டின் மூலையில் ஒரு சமையலறை*

    May 18, 2010

    அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை

     

    அம்மா என்றதும் பளிச் பளிச்சென்று சில நிகழ்ச்சிகள் மட்டுமே நெஞ்சைக்
    குத்துகின்றன. அக்கா கல்யாணி அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து கொண்டிருந்தாள்.
    புரிந்து கொள்ளும் வயதில்லை எனக்கு. நான்கு வயது.

    ambai2 விடிகாலையில் கண் விழிக்கிறேன். ஏதோ தமுக்கு மாதிரி சத்தம் கேட்கிறது. கதவருகே சென்று பார்க்கிறேன். கல்யாணியைப் பலகையில் உட்கார்த்தி இருக்கிறார்கள். எதிரே எவனோ கொத்து இலையோட நிற்கிறான். ஆ ஊ வென்று சில மாதங்கள் மட்டுமே சிரிப்புக் காட்டிய தம்பிப் பாப்பா நான் இருந்த அறையிலேயே தொட்டிலில் இருக்கிறான்.

    "நீரஜாட்சீ, போய்க் கொண்டு வா" என்கிறார்கள் யாரோ.

    நான் அம்மாவைப் பார்க்கிறேன்.

    கருநீலப் புடவை நினைவில் இருக்கிறது. தலைமயிரை முடிந்து கொண்டிருக்கிறாள். என்
    அறையை ஒட்டிய சின்ன அறையில் அம்மா நுழைகிறாள். தலைப்பை நீக்குகிறாள். கையில் இருந்த சிறு கிண்ணியில் மெல்ல தன் மார்பிலிருந்து பால் எடுக்கிறாள். கண்களில் நீர் கொட்டுகிறது.

    விடிகாலை  இருட்டோடு புதைக்கப்பட்டிருக்கும் தவலைக்கு அடியில் விறகு வைத்து
    வெந்நீர் காய்ச்ச அம்மா எழுந்திருக்கிறாள் தினமும்.

    ஒருநாள் நான் அவளைப் பார்க்கிறேன். அம்மாவின் தலைமயிர் முடிச்சவிழ்ந்து
    தொங்குகிறது. குந்தி உட்கார்ந்திருக்கிறாள் அம்மா. கூந்தல் பாதி கன்னத்திலும்
    பாதி காதின் மேலும் விரிந்து கிடக்கிறது. அடுப்பு பற்றிக் கொண்டதும் குனிந்து
    பார்த்த அம்மாவின் பாதி முகத்தில் தீயின் செம்மை வீசுகிறது. அன்று அம்மா
    சிவப்புப் புடவை வேறு உடுத்தியிருக்கிறாள். உற்றுப் பார்த்துக் கொண்டே
    இருக்கையில் 'டக்'கென்று அவள் எழுந்து நிற்கிறாள். கூந்தல் முட்டுவரை
    தொங்குகிறது.

    விலகியிருந்த தலைப்பினூடே ஊக்குகள் அவிழ்ந்த ரவிக்கை அடியே பச்சை நரம்போடிய வெளேரென்ற மார்பகங்கள் தெரிகின்றன. எங்கிருந்தோ பறந்து வந்து அங்கே நின்ற அக்கினியின் பெண்ணாய் அவள் தோன்றுகிறாள். அவள் அம்மாவா? அம்மா தானா?

    "காளி காளி மகா காளி பத்ர காளி நமோஸ்துதே" என்ற ஸ்லோகம் ஏன் நினைவிற்கு
    வருகிறது?

    "அம்மா.."

    அம்மா தலையைத் திருப்பிப் பார்க்கிறாள்.

    "இங்கே என்ன செய்யறாயடீ?"

    பேச முடியவில்லை. உடம்பு வியர்க்கிறது.

    வீட்டில் ஹோமம் நடக்கிறது. அம்மாவின் உதட்டின் சிவப்பாலோ, குங்குமத்தின்
    தீட்சண்யத்தாலோ கொழுந்து விட்டெரியும் ஜ்வாலையின் பிம்பம் அவளாகப் படுகிறது.
    "அக்னியே ஸ்வாஆஆஹா.." என்று ஸ்வாஹாவை நீட்டி முழக்கி நெருப்பில் நெய்யை
    ஊற்றுகிறார்கள். அந்த "ஸ்வாஹாஆ.." வின்போது பார்வை நெருப்பின் மீதும் அம்மாவின் மீதும் போகிறது.

    எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டுகிறாள் அம்மா. புடவையைத் தூக்கிச்
    செருகியிருக்கிறாள். வெளுப்பாய், வழவழவென்று துடை தெரிகிறது. குனிந்து
    நிமிரும்போது பச்சை நரம்போடுகிறது.

    "அம்மா நீ மாத்திரம் ஏம்மா இவ்வளவு வெளுப்பு? நான் ஏம்மா கருப்பு?"

    சிரிப்பு.

    "போடி உன் அழகு யாருக்கு வரும்?"

    நிகழ்ச்சிகளில் ஒரு சம்பந்தமுமில்லை. அம்மா தான் அவற்றின் ராணி. அசுத்தங்களை
    எரித்துச் சுத்திகரிக்கும் நெருப்பு அவள். ஒரு சிரிப்பில் மனத்தில் கோடானுகோடி
    அழகுகளைத் தோரணமாட வைப்பவள் அவள். சிருஷ்டி கர்த்தா. அவள் மடியில் தலை வைத்துப் படுக்கும் போது நீண்ட மெல்லிய தண்ணென்ற விரல்களால் தடவி, "உனக்கு டான்ஸ் கத்துத் தரப் போறென். நல்ல வாகான உடம்பு" என்றோ, "என்ன அடர்த்தியடி மயிர்" என்றோ சர்வ சாதாரணமான ஒன்றைத் தான் சொல்வாள். ஆனால் மனத்தில் குல்லென்று எதுவோ மலரும்.

    அம்மாவைப் பற்றிய இத்தகைய உணர்வுகளை அம்மாவே ஊட்டினாளா, நானே நினைத்தேனா தெரியவில்லை. என்னுள் பல அழகுகளுக்கு விதை ஊன்றியபோது தன்னுள் அவள் எதை ஸ்தாபித்துக் கொண்டாளோ தெரியவில்லை.

    அப்போது பதிமூன்று வயது. பாவாடைகள் குட்டையாகப் போக ஆரம்பித்து விட்டன. அம்மா எல்லாவற்றையும் நீளமாக்குகிறாள்.

    அம்மா மடியில் படுக்கும் மாலை வேளை ஒன்றில் எங்கோ படித்த வரிகள் திடீரென்று நினைவுவர அம்மாவைக் கேட்கிறேன்.

    "அம்மா பருவம்னா என்னம்மா?"

    மெளனம்.

    நீண்டநேர மெளனம்.

    திடீரென்று சொல்கிறாள்.

    "நீ இப்படியே இருடீம்மா பாவாடைய அலைய விட்டுண்டு ஓடி ஆடிண்டு..."

    சித்தி பெண் ராதுவைப் பெண் பார்க்க வருகிறார்களாம். அம்மா போய் விடுகிறாள்
    அங்கே. அந்த முக்கியமான நாளில் அம்மா இல்லை. கல்யாணி தான் தீபாவளி அன்று
    எண்ணெய் தேய்த்துத் தலை மயிரை அலசி விடுகிறாள். குளியலறையின் ஜன்னல் வழியாக இருள் கலையாத வானம் தெரிகிறது.

    "கல்லுஸ்.. ரொம்ப சீக்கிரம் எழுப்பிட்டேடீ, பட்டாசு சத்தமே கேக்கலயே இன்னும்"

    "உனக்கு எண்ணை தேய்ச்சுட்டு நானும் தேய்ச்சுக்க வேண்டாமா? வயசு பதிமூணு ஆறது.
    எண்ணை தேய்ச்சுக்க வராது உனக்கு. குனிடீ"

    கல்யாணிக்கு பொறுமை கிடையாது. தேங்காய் நாரை உரிப்பது போல் தலையை வலிக்க வலிக்கத் தேய்க்கிறாள் கல்யாணி.

    கத்தரிப்பூ ஸாடின் துணியில் அம்மா எனக்குப் பாவாடை தைத்திருக்கிறாள் அந்த
    தீபாவளிக்கு. வழுக்கிக் கொண்டு தையல் மிஷினில் ஓடும்போதே மனம் ஆசைப்பட்டது.
    அந்த முறை அளவு எடுத்து பாவாடை தைத்தாள் அம்மா.

    "அளவு எடுக்கணும் வாடீ.. ஒசந்து போய்ட்டே நீ" அளவு எடுத்துவிட்டு நிமிர்கிறாள்.

    "ரெண்டு இஞ்ச் பெரிசாய்டுத்து இந்தப் பொண்ணு"

    கத்தரிப்பூ ஸாடின் பாவாடை மற்ற பாவாடைகள் மாதிரி குட்டையாக இருக்காது.
    வழுக்கிக் கொண்டு தரையை எட்டும்.

    உலுக்கென்று எழுப்பி நிற்க வைத்துத் தலையத் துவட்டுகிறாள் கல்யாணி. ஷிம்மீஸை
    மாட்டிக் கொண்டு பூஜை அறைக்கு ஓட்டம். பலகை மேல் அடுக்கியிருந்த புதுத்
    துணிகளில் அப்பா என்னுடையதைத் தருகிறார்.

    "இந்தாடி கறுப்பி..." அப்பா அப்படித் தான் கூப்பிடுவார்.

    அப்பா அப்படிச் சொல்லும் போது சில சமயம் கூடத்தில் ஹா வென்று தொங்கும் கண்ணாடி முன் நின்றுகொண்டு பார்ப்பேன். அம்மா, காதில் "எத்தனை அழகு நீ" என்று
    கிசுகிசுப்பதைப் போல் இருக்கும்.

    சரளா வீட்டில் உள்ள கண்ணாடிப் பெட்டியில் உள்ள மீன் மாதிரி வழுக்கிக் கொண்டு
    போகிறது பாவாடை. வெல்வெட் சட்டை. பொட்டு இட்டுக் கொண்டு அப்பா முன் போகிறேன்.

    "அட பரவாயில்லையே!" என்கிறார் அப்பா.

    பட்டாஸை எடுத்து முன் அறையில் வைத்து விட்டு சண்பக மரத்தில் ஏற ஓடுகிறேன்.
    நித்தியம் காலையில் சண்பக மரத்தில் ஏறிப் பூப்பறிப்பது ஒரு வேலை. பூக்குடலையில் பூ நிரப்பி அம்மாவிடம் தந்தால், "கொள்ளை பூ" என்று கண்களை விரித்து அம்மா தன் விரல்களை அதில் அளைய விடுவாள். விரல்களே தெரியாது.

    ஸாடின் பாவாடை வழுக்குகிறது. உச்சாணிக் கொம்பில் ஏற முடியவில்லை. இருட்டு வேறு. இறங்கும் தறுவாயில் படேர் என்று வெடிக்கிறது யார் வீட்டிலோ ஒரு பட்டாஸ். உடம்பு நடுங்க மரத்திலிருந்து ஒரு குதி. வீட்டினுள் ஓட்டம். மூச்சு வாங்குகிறது.

    ஆசுவாசப்படுத்திக் கொண்டு முன் அறைக்கு ஓடி என் பங்குப் பட்டாஸை வெடிக்கிறேன். அப்புறம் தான் பூக்குடலை நினைவு வருகிறது. விடிந்திருக்கிறது. பாவாடையைத் தூக்கிப் பிடித்தவாறே மரத்தினடியில் கிடந்த பூக்குடலையை எடுக்கக் குனிகிறேன். பூக்கள் சில சிதறியிருக்கின்றன. நன்றாகக் குனிந்து எடுக்கும்போது பாவாடை தரையில் விரிகிறது. புதுப்பாவாடையில் அங்கும் இங்கும் கறைகள். மரம் ஏறியதாலோ?

    "கல்லூஸ்.." என்று அழைத்தவாறே உள்ளே வந்து "பாவாடை எல்லாம்
    அழுக்காக்கியுட்டேண்டி. அம்மா வைவாளா?" என்று கேட்டுக் கொண்டு பூக்குடலையுடன்
    அவள் முன் நிற்கிறேன். கல்யாணி ஒரு நிமிடம் வெறிக்கப் பார்த்துவிட்டு "அப்பா"
    என்று கூவிக் கொண்டே போகிறாள்.

    கல்யாணியின் பார்வை, பூக்குடலையைக் கூட வாங்காமல் அவள் உள்ளே ஓடியது எல்லாமாக மனத்தில் கம்பளிப் பூச்சி நெளிகிறது. ஸாடின் பாவாடையைப் பார்க்கிறேன். வெல்வெட் சட்டையைத் தடவிப் பார்க்கிறேன். ஒன்றும் ஆகவில்லையே?

    பகவானே, எனக்கு ஒன்றும் ஆகவில்லையே? என்னை நானே கேட்டுக் கொள்ளும் போதே தெரிகிறது ஏதோ ஆகிவிட்டதென்று. எங்கும் பட்டாஸ் ஒலிகள் கேட்டவாறிருக்கின்றன. கையில் பிடித்த பூக்குடலையுடன் வேகமாக மூச்சு விட்டவாறு உடம்பு பதற உதடுகள் துடிக்க நிற்கிறேன். ஹோ வென்று அழுகை வருகிறது.

    அம்மாவைப் பார்க்க வேண்டும். சின்னாளப்பட்டு உடுத்திய தோளில் தலையை அழுத்திப் பதித்துக் கொள்ள வேண்டும். "பயமா இருக்கே" என்று வெட்கமில்லாமல் சொல்லி அழ வேண்டும். அம்மா தலையைத் தடவித் தருவாள். என்னவோ ஆகிவிட்டதே பயங்கரமாக...

    முறுக்குப் பிழிய வரும் மொட்டைப் பாட்டியை எங்கிருந்தோ கூட்டிக் கொண்டு
    வருகிறாள் கல்யாணி. பாட்டி அருகில் வந்தாள்.

    "என்னடீம்மா அழறே? என்னாய்டுத்து இப்போ? லோகத்துலே இல்லாதது ஆய்டுத்தா?"

    பாட்டி சொன்னது ஒன்றும் புரியவில்லை. என் உணர்வு தான் எதையோ புரிந்து கொண்டு பயத்தில் சில்லிட்டதே ஒழிய அறிவுக்கு ஒன்றும் எட்டவில்லை. மனத்தின்
    ஆழத்திலிருந்து ஆறாத தாகமாய்க் கிளம்பிய ஒரே ஒரு அழைப்பு... "அம்மா"..

    ஐந்து வயதில் ஒருமுறை காணாமல் போய் விட்டதை மீண்டும் நினைக்கிறேன். பெரிய பூங்கா ஒன்றில் நீள் இருள் கவிவது தெரியாமல் நடக்கிறேன். திடீரென்று இருளும், மரங்களும், ஓசைகளும், அமைதியும் மனத்தில் பயத்தை உண்டாக்குகின்றன.  அப்பா தான் தேடிப் பிடிக்கிறார். ஆனால் அம்மாவைப் பார்த்ததும் தான் அழுகை பீறிடுகிறது.

    அம்மா பக்கத்தில் போட்டுக் கொள்கிறாள். தடவித் தருகிறாள். :ஒன்னும் ஆகலியே.
    எல்லம் சரியாப் போயிடுத்தே" என்று மெல்லப் பேசுகிறாள். சிவந்த உதடுகள்
    நெருப்புக் கீற்றாய் ஜ்வலிக்க தன் முகத்தை என் முகத்தின் மீது வைக்கிறாள்.

    இப்போதும் எங்கேயோ காணாமல் போய் விட்டதைப் போல அடித்துக் கொள்கிறது. கீழே உட்கார்ந்து முட்டங்காலில் தலை பதித்து அழுகிறேன். எதுவோ முடிந்து விட்டது போல் தோன்றுகிறது. தியேட்டரில் 'சுபம்' காட்டிய பிறகு எழுந்து வெளியே வருவதைப் போல், எதையோ விட்டுவிட்டு வந்தாற் போல் தோன்றுகிறது. அந்தச் சமயத்தில் உலக
    சரித்திரத்தில் எனக்கு ஒருத்திக்கு மட்டுமே அந்த துக்கம் சம்பவித்தது போல்
    படுகிறது. அத்தனை துக்கங்களையும் வெல்வெட் சட்டை அணிந்த மெல்லிய தோள்கள் மேல் சுமையாய்த் தாங்குவது போல் அழுகிறேன்.

    இருவருமாக இருந்த மாலை வேளைகளில் அம்மா இது பற்றி ஏன் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். மனத்தை வியாபித்த உணர்வு பயம் மட்டுமே. புதுச் சூழ்நிலையில் புது மனிதர்களிடையே உண்டாகும் சாதாரண பயம் அல்ல. பாம்பைக் கண்டு அலறும் மிரளலில் அரண்டு போய் வாயடைத்துப் போகும் பதைப்பு. மன மூலைகளிலெல்லாம் பயம் சிலந்தி வலைகளாகத் தொங்குகிறது.

    வெளுத்த உதடுகள் பிளந்து கிடக்கப் பார்த்த உருவம் மனத்தில் தோன்றுகிறது. மண்டை கல்லில் மோதிவிட்டது. என் முன்னே மென் சிவப்பாய் வழுக்கையாய் நடந்து கொண்டிருந்த தலை திடீரென்று குகை வாயாய்த் திறந்து கரும்சிவப்பாய் ரத்தம் பீறிட்டு வந்தது. நிமிடத்தில் ரத்தம் தலையில் கொட்டியது. ரத்தத்தையே வெறித்துப் பார்த்தேன். சிவப்பு எங்கும் படந்து கண்களிலேயே பாய்ந்து ஓடுவது போல்
    தோன்றியது. மனம் மீண்டும் மீண்டும் அரற்றியது. "ஐயோ எத்தனை ரத்தம், எத்தனை
    ரத்தம்" வாயில் ஓசையே பிறக்கவில்லை. ரத்தப் படுக்கை. கிழவன் வாய் திறந்தது,
    கண்கள் வெறித்துப் போனது, நெஞ்சில் துருத்திக் கொண்டு நிற்கிறது.

    ரத்தம் எத்தனை பயங்கரமானது... உதடுகள் வெளூக்க.. கை கால்கள் அசைவற்றுப் போக..

    அம்மா தேவை. இருட்டைக் கண்டு பயந்ததும் அணைத்து ஆறுதல் சொல்வது போல், இந்த பயத்திலிருந்து மீள அம்மா வேண்டும் என்று மனம் ஏங்குகிறது. அம்மா ஜில்லென்று கரத்தைத் தோளில் வைத்து, "இதுவும் ஒரு அழகுதான்" என்கக் கூடாதா?

    "எழுந்திரேண்டீ ப்ளீஸ்.. எத்தனை நாழிடீ அழுவாய்?" என்னுடன் கூட உட்கார்ந்து
    தானும் ஒரு குரல் அழுத கல்யாணி கெஞ்சுகிறாள்.

    "அம்மா.."

    "அம்மாதான் அடுத்த வாரம் வராளே. இப்போ தான் இதைப் பற்றி லெட்டர் போட்டேன்.
    ராதுவுக்குப் பெண் பார்க்கிறது எல்லாம் முடிஞ்சப்புறம் வருவா. இப்போ நீ
    எழுந்திருடீ. சுத்த தலைவேதனை." கல்யாணிக்கு கோபம் வர ஆரம்பிக்கிறது.

    "எனக்கு என்னடீ ஆய்டுத்து?"

    "உன் தலை மண்டை ஆய்டுத்து, எத்தனை தடவை சொல்லறது?

    "இனிமே எல்லாம் நான் மரத்துலே ஏறக் கூடாதா?"

    'நறுக்' என்று குட்டுகிறாள் கல்யாணி.

    "தடிச்சி! அரை மணியா எழுந்திரு, பாவாடையை மாத்தறேன்னு கெஞ்சறேன். நீ கேள்வி வேற கேக்கறியா? அப்பா இவள் ரொம்பப் படுத்தறாப்பா" என்று அப்பாவுக்கு குரல்
    கொடுக்கிறாள்.

    அப்பா வந்து "அசட்டுத்தனம் பண்ணக் கூடாது. கல்யாணி சொல்றபடி கேக்கனும்"
    என்கிறார்.

    முறுக்குப் பாட்டி வேறு, "என்ன அடம்பிடிக்கிறாள்? எல்லாருக்கும் வர தலைவிதி
    தானே" என்கிறாள், அப்பா போன பிறகு.

    ஏழுநாட்கள். அம்மா வர இன்னும் ஏழு நாட்கள்.ராதுவைப் பெண் பார்த்த பிறகு.
    இருட்டில் தடுமாறுவதைப் போல் ஏழு நாட்கள். அடுத்தகத்து மாமி, எதிர்வீட்டு மாமி
    எல்லோரும் வருகிறார்கள் ஒருநாள்.

    "தாவணி போடலயாடி கல்யாணி?"

    "எல்லாம் அம்மா வந்தப்புறம் தான் மாமி. இது அடங்காப் பிடாரி. அம்மா சொன்னால்
    தான் கேட்கும்"

    "இனிமே எல்லாம் சரியாப் போய்டுவா. இனிமே அடக்க ஒடுக்கம் வந்துடும்"

    "ஏன்?" இனிமேல் என்ன ஆகிவிடும்?

    தாவணி ஏன் போட்டுக் கொள்ள வேண்டும்? அம்மா சொன்னாளே.. 'இப்டியே இருடீம்மா..
    பாவாடைய அலைய விட்டுண்டு..' நான் ஏன் மாற வேண்டும்? யாருமே விளக்குவதில்லை.

    பொம்மை போல் என்னை உட்கார்த்தி வைத்துப் பேசுகிறார்கள். அப்பா வந்தால்
    தலைப்பைப் போர்த்திக் கொண்டு மெதுவாகப் பேசுகிறார்கள்.

    ஐந்தாம் நாள் "நீயே எண்ணெய் தேய்ச்சிக்கோடி" என்னிடம் சுடச் சுட எண்ணையைக்
    கிண்ணியில் ஊற்றிக் கொடுக்கிறாள் கல்யாணி.

    இடுப்பின் கீழ் நீண்ட கூந்தலுடன் அழுதவாறே போராடிவிட்டு ஷிம்மீஸுடன் கூடத்துக்
    கண்ணாடி முன் நிற்கிறேன்.

    "இனிமே பாத்ரூமிலேயே டிரெஸ் பண்ணிக்கனும் தெரிஞ்சுதா" என்கிறார் அப்பா.

    அப்பா போன பிறகு கதவைச் சாத்துகிறேன். ஷிம்மீஸைக் கழற்றிப் போடுகிறேன். கறுப்பு உடம்பை கண்ணாடி பிரதிபலிக்கிறது. முகத்தை விடச் சற்றே நிறம் மட்டமான தோள்கள், கைகள், மார்பு, இடை, மென்மையான துடைகளின் மேல் கை ஓடுகிறது. நான் அதே பெண் இல்லையா? அம்மா என்ன சொல்லப் போகிறாள்?

    ஸ்கூல் யூனிபார்ம் போட்டுக் கொள்கிறேன். கதவைத் திறந்ததும் கல்யாணி வருகிறாள்.
    "ஸ்கூல்லே ஏன் வரல்லேன்னு கேட்டா என்னடீ சொல்வே?"

    கல்யாணியை வெறித்துப் பார்க்கிறேன். கூண்டிலிருந்து விடுபட்ட பட்சி போல்
    குதூகலத்துடன் ஸ்கூலுக்கு கிளம்ம்பிக் கொண்டிருந்த வேகம் குறைகிறது.

    "ஒன்னும் சொல்லவேண்டாம். சும்மா இரு"

    அன்று கேம்ஸ் பீரியடில் விளையாடவில்லை. அகன்ற மரம் ஒன்றின் பின் மறைந்து
    கொள்கிறேன். முன்பு ஒரு முறை அப்படி விளையாடாமல் இருந்திருக்கிறேன். மறுநாள்
    காலை மிஸ். லீலா மேனன் வகுப்பில் "நேற்று விளையாடாத முட்டாள்கள் யார்?"
    என்றாள். நான் எழுந்திருக்கவில்லை.

    "நீ ஏன் எழுந்திருக்கவில்லை?" என்றாள்.

    "நான் முட்டாள் இல்லையே மிஸ்" என்றேன். ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்டில் எழுதி
    விட்டாள் இம்பர்டினண்ட் என்று.

    அன்று மிஸ்.லீலா மேனன் திட்டு பற்றிக் கூட மனம் பயப்படவில்லை. இப்போது எனக்கு ஆகியிருக்கும் ஒன்றைவிட வேறு எதுவும் எப்போதும் என்னை பாதிக்காது என்று படுகிறது. மரத்தடியே உட்கார்ந்து வழக்கம் போல எனிட் ப்ளைடன் படிப்பதில்லை. கீழே வெட்டப்பட்டிருந்த குழியில் உதிர்ந்தவாறிருக்கும் பழுத்த இலைகளிடம் நான் கேட்கிறேன். "எனக்கு என்ன தான் ஆகித் தொலைந்து விட்டது?"

    கூண்டிலிருக்கும் கைதி நீதிபதியின் வாயைப் பார்ப்பது போல் அம்மாவின் சொல்
    ஒன்றுக்காக மட்டுமே மனம் எதிர்பார்க்கிறது. கண்களைத் தாழ்த்தி என்னைப்
    பார்த்தவாறே, "உனக்கு ஆகியிருக்கும் இதுவும் அழகு தான்" என்பாளா அம்மா?
    பயமுறுத்திய முறுக்குப் பாட்டி, கல்யாணி எல்லோரையும் புன்னகையின் ஒரு
    தீப்பொறியில் அவள் ஒதுக்கித் தள்ளி விடுவாள். அம்மா வித்தியாசமானவள். அவள்
    நிற்கும் இடத்தில் வேண்டாதவை அழிந்து வெறும் அழகு மட்டுமே ஆட்சி செலுத்தும்.
    அவளுக்கு எல்லாமே அழகு தான்.

    அம்மா ரொம்பத் தேவையாக இருக்கிறாள். ஏதோ ஒன்று விளக்கப்பட வேண்டும். கத்தரிப்பூ ஸாடின் பாவாடையை நினைத்தாலே உடம்பு வியர்த்துப் போய் நடுங்குகிறதே. நாக்கு தடித்துப் போய் மரக்கட்டையாய் வாயில் லொட்டென்று படுத்து விடுகிறதே. திடீரென்று இருட்டு கவிந்து கொள்கிற மாதிரியும் திரும்பிப் பார்ப்பதற்குள் 'ணங்'கென்ற சத்தமும், ரத்தப் பெருக்கும் நீண்டு கட்டையாய்ப் போன உடலும் அந்த இருட்டில் தோன்றுவது போல இருக்கிறதே, அதை மென்மையான வார்த்தைகளால் யாராவது விளக்க வேண்டும்.

    நான் யாருமே இல்லாமல் இருப்பது போல் உணர்கிறேன். தோட்டக்காரன் எழுப்பியபின்
    மெல்ல வீட்டுக்குப் போகிறேன்.

    "ஏண்டீ இவ்ளோ லேட்? எங்கே போனே?"

    "எங்கேயும் போகல.. மரத்தடியிலே உட்கார்ந்திருந்தேன்"

    "தனியாவா?"

    "உம்"

    "ஏண்டீ நீ என்ன இன்னும் சின்னப் பொண்ணா? ஏதாவது ஆகிவைத்தால்?"

    ஸ்கூல் பையை விட்டெறிகிறேன். முகம் எல்லாம் சூடேறுகிறது. செவிகளைக் கையால் மூடிக் கொண்டு வீறிட்டுக் கத்துகிறேன்.

    "நான் அப்படித்தஅன் உட்காருவேன். எனக்கு ஒன்னும் ஆகலை"

    ஒவ்வொரு வார்த்தையையும் நீட்டி, அழுத்தி வெறிக்கத்தலாய்க் கத்துகிறேன்.
    அப்பாவும் கல்யாணியும் அதிர்ந்து போய் நிற்கின்றனர். நான் கோபித்துக் கொண்டு
    மொட்டை மாடிக்குப் போய் உட்காருகிறேன். சண்பக மரத்தின் வாசனையோடு அங்கேயே இருக்கலாம். கல்யாணியும் அப்பாவும் இங்கே வரக் கூடாது. நானும் சண்பக மர வாசனையும் மட்டுமே. ஒன்றும் பேசாத, தொடாத அந்த வாசனை வீட்டு மனிதர்களை விட நெருங்கிய ஒன்றாகப் படுகிறது. இவர்கள் பேசாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அம்மா மாதிரி விழிகளை விரித்துச் சிரிப்பு.

    அம்மா அப்படி பார்த்தால் நெஞ்சினுள் ஏதோ செய்யும். வாய்விட்டு சிரிக்கத்
    தோன்றும். பாடத் தோன்றும். அம்மா சிருஷ்டிப்பவள். ஆனந்தத்தை, உத்ஸாகத்தை, அழகை எல்லாம் தலையைத் திருப்பி ஒரு புன்னகையால் ஜாலம் செய்து வரவழைப்பவள்.

    கல்யாணி மேலே வருகிறாள்.

    "சாப்பிட வாடீம்மா சின்ன ராணி, அம்மா உன்னைச் செல்லம் கொடுத்து குட்டிச்
    சுவராக்கிட்டா"

    அலட்சியமாக உதட்டைப் பிதுக்கியவாறே எழுந்து கொள்கிறேன்.

    மறுநாள் காலை அம்மா வருகிறாள். டாக்ஸியின் கதவைத் திறந்து கரும்பச்சைப்
    பட்டுபுடவை கசங்கியிருக்க, அம்மா வீட்டிற்குள் வருகிறாள்.

    "என்ன ஆச்சு?" என்கிறார் அப்பா.

    "பொண்ணு கறுப்பாம். வேண்டாம்னுட்டான் கடங்காரன்"

    "உன் தங்கை என்ன சொல்றா"

    "வருத்தப்படறா பாவம்"

    "நமக்கும் ஒரு கறுப்புப் பொண்ணு உண்டு"

    மொட்டென்று அம்மா முன் போய் நிற்கிறேன். கல்யாணி லெட்டரில் எழுதியதை விட
    விளக்கமாய் நானே சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. மெல்ல அவள் கழுத்துப்
    பதிவில் உதடுகள் நடுங்க மென்குரலில் எல்லாவற்றையும் அரற்ற வேண்டும் போல்
    படுகிறது. நெஞ்சில் நெளியும் பயத்தைக் கூற வேண்டும் என்று அடித்துக் கொள்கிறது.

    ஏதோ மர்மமான ஒன்றை - இரவு படுத்துக் கொண்டதும் தொண்டையை அடைத்துக் கொள்ள வைக்கும் உணர்வை, என் உடம்பே எனக்கு மாறுதலாகப் படும் தவிப்பை - அம்மா விளக்கப் போகிறாள் மெல்ல என்று அவள் முகத்தையே பார்க்கிறேன். வாழைத்தண்டு போல் நீண்ட கரங்களால் அவள் என்னை அணைக்கப் போகிறாள். நான் அழப் போகிறேன் உரக்க. அம்மாவின் கூந்தலில் விரல்களைத் துளைத்துப் பெருத்த கேவல்களுடன் அழப் போகிறேன்.

    அம்மா என்னைப் பார்க்கிறாள். நான் ஒரு கணம் அவள் கண்முன் ராதுவாய் மாறுகிறேனா என்று தெரியவில்லை.

    "உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம்? இதுவேற இனிமே ஒரு பாரம்" சுளீரென்று
    கேள்வி.

    யாரைக் குற்றம் சாட்டுகிறாள்?

    ஒலியில்லாக் கேவல்கள் நெஞ்சை முட்டுகின்றன.

    அம்மாவின் உதடுகளும், நாசியும், நெற்றிக் குங்குமமும், மூக்குப் பொட்டும்,
    கண்களும் ரத்த நிற ஜ்வாலையை உமிழ்வது போல் தோன்றுகிறது. அந்த நெருப்பில் அவள் மேல் போர்த்தியிருந்த தேவ ஸ்வரூபம் அவிழ்ந்து விழ நிர்வாணமான வெறும் மனித அம்மாவாய் அவள் படுகிறாள். அந்த ஈரமில்லாச் சொற்கள் பட்டாக் கத்தியாய் எழுந்து முன்பு முளைவிட்டிருந்த அத்தனை அழகுகளையும் குருட்டுத் தனமாக ஹதம் செய்கிறது. தீராத பயங்கள் கரும் சித்திரங்களாய் நெஞ்சில் ஒட்டிக் கொள்கின்றன.

    அக்னியே ஸ்வாஆஆஹா... அசுத்தங்கள் மட்டும் எரிக்கப்படவில்லை. மொட்டுக்களும்
    மலர்களும் கூட கருகிப் போயின.

    ******

    நன்றி: 'கசடதபற' ( டிசம்பர் 1971)

    நன்றி..

    இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

    அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்