Showing posts with label இந்திரா பார்த்தசாரதி. Show all posts
Showing posts with label இந்திரா பார்த்தசாரதி. Show all posts

Oct 20, 2012

ஆதவன் சிறுகதைகள் தொகுப்பு முன்னுரை-இ.பா

    ஆதவன் சிறுகதைகள் தொகுப்பு"  - இந்திரா பார்த்தசாரதி

முன்னுரை

'கணங்களை ரசிக்க ஓர் அமைதி தேவை. தனிமை தேவை. வாழ்வியக்கத்தின் இரைச்சலுக்கும், வேகத்துக்குமிடையே நுட்பமான, ஆழ்ந்த பரிமாற்றங்கள் சாத்தியமில்லை. எனவே இந்தக் கூடாரங்கள். இவற்றில் நாம் கொஞ்சம் ஆசுவாசமாக, அமைதியான கதியில், வாழ்வின் கூறுகளை அசை போடலாம். வாழ்க்கையின் சந்தோஷங்களையும், சோர்வுகளையும், ஆரோகண அவரோகங்களாக்கி அவற்றின் சேர்க்கையில் ஓர் இசையைக் கேட்க முயலலாம்.'

'முதலில் இரவு வரும்' என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில், ஆதவன் தம்முடைய சிறுகதைகளைப் பற்றி இவ்வாறு விமர்சிக்கிறார். அவர் 'கூடாரங்கள்' என்று குறிப்பிடுவது aathavan அவருடைய சிறுகதைகளை. இந்தப் புத்தகந் தான் ('முதலில் இரவு வரும்') அவருக்குச் சாகித்திய அகெதமி விருதை வாங்கித் தந்தது.

இலக்கியத்தைப் பற்றி ஆதவன் கொண்டிருக்கும் கொள்கையையும், மேற்காணும் கூற்று நிறுவுகிறது. ஆரவார மற்ற அமைதியான சூழ்நிலையில், தனிமையின் சொர்க்கத் தில், தன்னுருவ வேட்டையில் இறங்கி, தன் அடையாளத்தைக் காணும் முயற்சியே இலக்கியம்.

இவ்வடையாளம், சூன்யத்தில் பிரசன்னமாவதில்லை 'நான் - நீ' உறவில்தான் அர்த்தமாகிறது. இலக்கியம் தனி மொழியன்று. உரையாடல். உரையாடல் என்பதால் இது நடையைப் பொருத்த விஷயம். நடை என்பது எண்ணத்தின் நிழல். வாசகன் மீது நம்பிக்கை வைக்காமல் தனக்குத்தானே உரக்கச் சிந்தித்துக் கொண்டிருக்கும் எழுத்து இலக்கியமாகாது.

ஆதவன் தன் கதைகள் முழுவதிலும் 'உரக்கச் சிந்திக்கிறார்' என்பது உண்மை. ஆனால் வாசகனுடன் உரையாடுகின்றோம் என்பதை அவர் மறக்கவில்லை என்பது தான் அவர் எழுத்தின் வெற்றி.

அவர் தன் எழுத்தின் மூலம், சமூகத்துடனிருக்கும் தம் உறவை, அடையாளத்தை, மிக நளினமாக, கலை நேர்த்தியுடன் உறுதிப்படுத்திக் கொள்ள முயலுகிறார்.

தில்லியில் சிறுவயதிலிருந்தே இருந்து வந்த இவர், தமிழில் எழுதுவதென்று துணிந்ததே, தம் வேரைத் துண்டித்துக் கொள்ள முயலவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அதே சமயத்தில், தமிழ் நாட்டின் தற்காலத்திய கலாச்சாரச் சூழ்நிலையிலிருந்து ஒதுங்கி, ஒரு பார்வையாளராக இச் சமூகத்துக்குள் தம் முகத்தைத் தேடுவதையே ஓர் இலக்கிய விளையாட்டாகக் கொண்டிருப்பதுதான் இவர் எழுத்தின் பலம்.

இவர் தம்முடைய நூல்களுக்கு எழுதிய பல முன்னுரைகளில், தாம் எழுதுவதை, ஒரு 'விளையாட்டு' என்றே குறிப்பிடுகிறார். 'விளையாட்டு' என்றால் வெறும் பொழுதுபோக்கு என்று கொள்ளக் கூடாது. தத்துவக் கண்ணோடு பார்க்கும்போது, எல்லாமே, பாவனைதான். 'அலகிலா விளையாட்டுடையார்' என்று முத்தொழில் செய்யும் இறைவனையே குறிப்பிடுகிறான் கம்பன். இலக்கியமும் முத்தொழில் ஆற்றுகின்றது. எழுத்தாளனை இவ்வகையில் இறைவன் என்று கூறுவதில் எந்தத் தடையுமிருக்க முடியாது.

'விளையாட்டு' என்று கொள்ளும் சிந்தனையில்தான், எழுத்தாளனால் தன்னைச் சமூகத்தோடு ஆரோக்கியமான உறவு கொண்ட நிலையில், தத்துவார்த்தமாக 'அந்நியப் படுத்தி'க்கொள்ளவும் முடியும். இதுதான் அவனுக்குப் 'பார்வையாளன்' என்ற தகுதியைத் தருகிறது. 'பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன், உலகத்தினர் தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதையோ அல்லது சமரஸம் செய்து கொள்வதையோ, ஒதுங்கிய நிலையில் தன் கை விரல் நகத்தைச் சீவியவாறு பார்த்துக் கொண்டிருக்கிறான்' என்று ஜேம்ஸ் ஜாய்ஸ் கூறுவது போல், எழுத்தாளனும் இறைவன் நிலையிலிருந்து, பார்வையாளனாக இருக்கும் போதுதான் அவன் படைக்கும் இலக்கியம் கலைப் பரிமாணத்தைப் பெறுகின்றது.

ஆதவன் கூறுகிறார்: 'சொற்களைக் கட்டி மேய்ப்பது எனக்குச் சின்ன வயதிலிருந்தே பிடித்தமான காரியம். அவற்றின் இனிய ஓசைகளும், நயமான வேறுபாடுகளும், அவற்றின் பரஸ்பர உறவுகளும், இந்த உறவுகளின் நீந்துகிற அர்த்தங்களும், எல்லாமே எனக்குப் பிடிக்கும். மனிதர்களையும் எனக்குப் பிடிக்கும். மனிதர்களுடன் உறவு கொள்வது பிடிக்கும்.'

சொல், தனி மனிதன் சமூகத்தோடு கொள்கின்ற உறவை நிச்சயப்படுத்தும் ஒரு கருவி. சமூகரீதியாக உணர்ச்சிப் பரிமாற்றங்களைத் தெரிவிப்பது சொல். சமுதாயத்தில் மனிதச் சந்திப்பினாலோ அல்லது மோதலினாலோ ஏற்படும், அல்லது ஏற்பட வேண்டிய மாறுதல்களை அறிவிப்பது சொல் விஞ்ஞானத்தின் பரிபாஷை கலைச்சொற்கள். (Technical language) இலக்கியத்தின் பரிபாஷை அழகுணர்ச்சி (aesthetics). சமுதாய ஒப்பந்தமான சொல், இலக்கியமாகப் பரிமாணமமுறும்போது, அது அச்சொல்லை ஆளுகின்றவனின் உள் தோற்றமாக (Personality) அவதாரம் எடுக்கின்றது. இதுதான் அவனது சமூகத்தில் அவனுக்கேற்படும் அடையாளம். சொல்தான் சமுதாய உணர்ச்சியைத் தெரிவிக்கும் கருவி. சமுதாய ஒப்பந்தத்தின் செலாவணி.

ஆதவன் தம் உருவ வேட்டையில் தம்மை இழந்து விடவில்லை. 'இயற்கையைப் பற்றிப் பாடிய இருவர்களில் ஷெல்லி இயற்கையில் தம்மை இழந்தார். வேர்ட்ஸ்வொர்த் தம்மைக் கண்டு தெளிந்தார்' என்று விமர்சகர்கள் கூறுவார்கள். ஆதவன் தன்னை, 'சொற்களை மேய்த்து' 'விளையாடி'க் கண்டு கொள்ளும் முயற்சிகளாகத்தாம் அவர் எழுத்து அமைகின்றது.

இவருடைய 'அடையாளம்' என்ன? அவரே எழுதுகிறார். என்னுடைய 'நானை' இனம் கண்டு கொள்வதற்காக நான் எழுதுவதுண்டு. என்னுடைய 'நானி'லிருந்து விலகி இளைப்பாறவும் எழுதுவதுண்டு. எல்லா 'நான்'களுமே நியாயமானவையாகவும், முக்கியமானவையாகவும் படும். ஆகவே, என்னுடைய 'நான்' என்று ஒன்றை முன் நிறுத்திக் கொள்வதும், பிறருடைய 'நான்'களுடன் போட்டியிடுவதும் குழந்தைத் தனமாகவும் தோன்றும். ஆமாம். நான் ஓர் 'இரண்டு கட்சி ஆசாமி'

இரண்டு கட்சி ஆசாமி எனும்போது அவர் தம்மை ஒரு Paranoid Schizo Phrenic ஆகச் சித்திரித்துக் கொள்ளவில்லை. உளவியல் தர்க்கத்தின்படித் தம்மை வாதியாகவும் பிரதி வாதியாகவும் பார்க்கும் தெளிவைத்தான் குறிப்பிடுகிறார். இதனால், தனிமனிதனுக்கும், சமுதாயத்துக்குமிடையே உள்ள உறவில் காணும் முரண்பாடுகளை அவரால் புரிந்துகொள்ள முடிகின்றது. புரிந்து கொள்கின்றாரேயன்றித் தீர்ப்பு வழங்க முன் வருவதில்லை. இது தம்முடைய பொறுப்பில்லை என்று ஒதுங்கி விடுகிறார்.

இதனால்தான் இவருக்கு இலக்கியம் பற்றிய கொள்கைத் தீவிரம் எதுவுமில்லை என்ற ஓர் அபிப்பிராயம் இவரைப் பற்றி சில இலக்கிய விமர்சகர்களிடையே உண்டு.

இதைப் பற்றியும் அவரே கூறுகிறார்: 'திட்டவட்டமான சில எதிர்பார்ப்புகளைத் திசை காட்டியாகக் கொண்டு இலக்கியத்தில் ஏதோ சில இலக்குகளைக் கணக்குப் பிசகாமல் துரத்துகிற கெட்டிக்காரர்கள் மீது எனக்குப் பொறாமை உண்டு. திசைகாட்டி ஏதுமின்றி, பரந்த இலக்கியக் கடலில் தன் கலனில் காற்றின் போக்கில் அடித்துச் செல்லப்பட விரும்பும் சோம்பேறி நான். இலக்குகளிலும், முடிவுகளிலும் அல்ல, வெறும் தேடலிலேயே இன்பங் காணும் அனைவரையும் இனிய தோழர்களாக என் கலன் அன்புடன் வரவேற்கிறது!'

எழுத்தாளன் ஒருவனுக்குக் 'கொள்கைத் தீவிரம்' தேவையா என்ற கேள்வி எழுகின்றது. பட்டயத்தைக் கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு, அப்பட்டயத்தை நியாயப்படுத்துவதற்காக எழுதுவதுதான் 'கொள்கைத்தீவிரமா' என்றும் கேட்கலாம்.

படைப்பாளி படைக்கிறான். விமர்சனப் பாதிரி நாம கரணம் சூட்டுகிறான். இதுவே பட்டயமும் ஆ கிவிடுகின்றது. பல சமயங்களில், இப்பட்டயத்தையே ஓர் சிலுவையாக எழுத்தாளன் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்போது தான், அவன் படைப்பாற்றல் ஒரு வரையறைக்குள் குறுகி, அவன் எழுத்து, சலிப்பைத் தரும் ஓர் 'எதிர்பார்க்கக் கூடிய' (Predictable) விஷயமாக ஆகிவிடுகின்றது.

கலையின் சிரஞ்சீவித் தன்மை, அது தருகின்ற 'ஆச்சர்யத்தில்' தான் இருக்கிறது. ஒரே ராகத்தை ஒரு சங்கீத மேதை பல்வேறு சமயங்களில், பல்வேறு விதமாகப் பாடுவது போல. ind_paaஆதவன் எழுத்தில் இந்த 'ஆச்சர்யத்தை' என்னால் காண முடிகின்றது. 'ஒரு பழைய கிழவர், ஒரு புதிய உலகம்' எழுதிய ஆதவன் தான், மிக நளினமான காதற் கதைகளும் எழுதியிருக்கிறார்.

ஆனால் எல்லாக் கதைகளிலும், அடிப்படையாக ஒரு விரக்தியை நம்மால் உணர முடிகின்றது. அவர் கதை 'இன்டர்வியூ'வில் வரும் சுவாமிநாதன் கூறுவது. ஆசிரியருடைய மன நிலையையும் பிரதிபலிக்கின்றது. 'முதலாவதாக இருப்பதற்கும் கூச்சம், கடைசியாக இருப்பதற்கும் வெறுப்பு' 'முதலில் இரவு வரும்' என்ற தலைப்பே, இவர் மன இயல்பை வெளிப்படுத்துகின்றது. 'குளிர் காலம் வந்தால், இதற்குப் பிறகு வசந்தம் நிச்சயம் வந்துதானே ஆகவேண்டும்?' என்று ஷெல்லி கூறுகிறான். ஆதவனும் வரவேற்பது 'முதலில் இரவு'; அக்கதையில் ராஜாராமன் சொல்லுகிறான்: 'ராத்திரி, ராத்திரி முடிஞ்சப்புறம் மறுபடியும் சூரியன் வரும். வெளிச்சமா ஆயிடும். அதுதான் நாளைக்கு'.

நிகழ்காலம் நரகம், வருங்காலம் சொர்க்கம், நிகழ்கால விரக்தியைத் தவிர்க்க முடியாது. ஆனால் 'நாளைக்கு' என்பதும், 'இன்றைக்கு' என்று ஆகிவிட்டால், அப்பொழுதும் சொர்க்கம் நரகமாகிவிடும். அது, நிச்சயமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய 'நாளை'யாக இருப்பதில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது. இந்த எதிர்பார்ப்புதான் வாழ்க்கையின் கால அட்டவணை.

'ஒரு பழைய கிழவர், ஒரு புதிய உலகம்' என்ற கதையில் ஆதவன் (இக்கதையை எழுதும்போது இவர் வயது 31) ஒரு கிழவரின் அகத்தில் புகுந்து கொண்டு சிந்தனை ஓட்டமாகக் கதையில் சொல்லுகிறார். புற நிகழ்ச்சி ஒவ்வொன்றும் அவருடைய சிந்தனை, விளக்கை ஒளி வீசச் செய்வதற்காகப் பயன்படும் மின்சார 'ஸ்விட்ச்'. மனைவியை இழந்த கிழவர் மகன் வீட்டிலிருக்கிறார். தம் உலகை இழந்து விட்ட தவிப்பில் அவர் புதிய உலகைக் கண்டு மருள்கிறார். அவருக்குப் பிடித்தமான நாவிதன் கடைக்கு முடி வெட்டிக் கொள்ளச் செல்லும்போது, தமக்குத் தாமே உருவாக்கிக் கொண்ட ஒரு நிரந்தரமான சலிப்பில் உழலும், இக்கால இளைஞர்களைக் கண்டு, புதிய உலகம் இப்படி 'உருப்படியான தீவிரப் பிடிப்பில்லாமலும், நம்பிக்கை இல்லாமலும் ஆழமான எதனுடனும் தம்மைச் சம்பந்தப் படுத்திக் கொள்ளாமலும் இருக்க வேண்டுமா என்று மனம் வருந்துகிறார். தம் உலகத்திய வாழ்க்கை மதிப்புகளைப் பற்றி எண்ணிப் பார்க்கிறார். தம் மண வாழ்க்கையையும், தம் மகனின் மண வாழ்க்கையையும் பற்றி எண்ணிப் பார்க்கும் போது, இத்தகைய அந்தரங்க உறவுகளில் கூட இக்காலத்தில் போலித் தனம் மேலோங்கி இருக்க வேண்டுமா என்பதுதான் அவர் வேதனை. அவர் மகனும், மகளும் கல்லூரி ஆசிரியர்கள்.

அன்று மாலை பல்கலைக் கழகப் பேராசிரியாகிய மோத்வானியும், அவர் மனைவியும் பேச வருகிறார்கள். மோத்வானி இக்கால அறிவு உலகின் பிரதிநிதி. போலி அறிவு ஜீவி. இடம், வலம், நடு ஆகிய எல்லா அரசியல் கட்சிகளையும் சார்ந்தவர். அதாவது, வாழ்க்கையில் வெற்றி அடைவது எப்படி என்று அறிந்தவர். விஸ்கி குடித்துக் கொண்டே, வறுமையற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முயலுவதாகச் சொல்லிக் கொள்ளும் இந்த 'ட்ராயிங் ரூம்' சோஷலிஸ்டுகளின் உரையாடலில் பங்கு கொள்ளாமல் கிழவர் ஒதுங்குகிறார். அவருக்கு அன்று காலை மயிர் வெட்டிவிட்ட நாவிதனை போலித் தனமான மனக் கிளர்ச்சியின் வெளியீடாக ஓர் இளைஞன் கத்தியால் குத்தி விட்ட விபரீத செய்தியைக் கெட்கிறார். கள்ளங் கபடமற்ற தன் பேத்தியை இறுகத் தழுவிக் கொள்வதுடன் கதை முடிகிறது.

இளைஞனின் 'அந்நியமாதல்' கதைகளைப் படித்த நமக்கு ஒரு கிழவரின் 'அந்நியமாதல்' கதை ஒரு வேறு வகையான அனுபவம். இக்கிழவர் உலகை வெறுக்கவில்லை. நாவிதனின் ஸ்பரிஸம், முடி வெட்டிக் கொண்டு வெந்நீரில் குளித்தல், நல்ல காப்பி ஆகிய வாழ்க்கையில் சின்ன சின்ன சலுகைகள் கூட அவருக்குச் சொர்க்கமாக இருக்கின்றன. வாழ்க்கையை வெறுத்துப் போலிப் பரவசங்களில் ஆழ்ந்து நிலை கொள்ளாமல் தவிக்கும் இக்கால இளைஞர்கள் மீது தான் இவருக்குக் கோபம்.

வர்க்கப் பேதங்களுடைய சமூகத்தில், தொழில் வளர்ச்சிகளின் காரணமாகச் சமூகச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பொருளாதாரக் காரணங்களினால் குடும்ப வாழ்க்கை நிலை குலைகின்றது. அடிப்படையில், பிரபுத்துவ சமூக அமைப்பை உடைய ஒரு சமுதாயத்தின் மீது, தொழில் யுக வாழ்க்கைக்குரிய மதிப்புக்கள் சுமத்தப்படும்போது, முரண் பாடுகள் மேலோங்குகின்றன. வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டு வதிலும், போலிப் பரவசங்களிலும், விளையாட்டுக்காகச் செய்யும் வன்முறைகளிலுந்தான் தங்களை நிரூபித்துக் கொள்ள முடியுமென்று இளைஞர்கள் கருதுகிறார்கள். அவர்களுக்கு நிறையக் கோபம் இருக்கிறது. யார் மீது என்றுதான் அவர்களுக்குப் புரியவில்லை; 'இன்று', 'இன்றாக' இருப்பதற்குக் காரணம் 'இன்று', 'நேற்றைய தினத்தின்' தொடர்ச்சிதான் என்று 'நேற்றைய தினத்தை' அடியோடு வெறுக்கும் மனப்பான்மையில், 'நாளை'யைப் பற்றிய நினைவே இல்லாமலிருக்கிறார்கள். பழைமையை அடியோடு அழிக்கும் ஆவேசந்தான் இக்கதையில், அந்த முள்ளங்கி இளைஞனைப் பழமையின் சின்னமாக இருக்கும் நாவிதனைக் கொல்லத் தூண்டுகிறது. ஆனால் கிழவருக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை போய்விடவில்லை.

அந்தச் சிறிய குழந்தையை அக்கிழவர் தழுவிக் கொள்வதாகக் காட்டும் குறியீடு மூலம், ஆதவன், இதை அழகாக விளக்குகிறார். கிழவருக்குப் பழமையின்பாலிருக்கும் பிடிப்பு, போலித் தனமான, வெறுக்கத்தக்க ஈடுபாடன்றி, சமூக உறவுகளில் ஒருவன் தன் 'சுதந்தரத்தை' உணர முடியுமென்று புரிந்து கொள்ளும் கேண்மையுணர்வு. 'சமூக உறவுகள்' என்றால், கிழவரின் மகனுக்கும், மோத்வானிக்குமிடையே இருக்கின்ற போலித் தனமான உறவு அன்று; அவர்களுக்கும், நாவிதர் களுக்குமிடையே உள்ள உறவு, கிழவர் புதிய உலகுக்கேற்ப தம்மை மாற்றிக் கொள்ளத் தயாராகவிருப்பது ஒரு முக்கியமான விஷயம்.

'பழமை நேர்மையும் ஆழமும் கொண்டிருந்தால், ஒருவனால் தன்னை நியாயமான, சரித்திர நிர்ப்பந்தங் களினால் ஏற்படுகின்ற புதிய மாறுதல்களுக்கேற்ப மாற்றிக் கொள்ள முடியும். அத்தகைய உள் வலு அதற்கு உண்டு' என்று ஜார்ஜி மார்க்காவ் கூறுகிறார்:

ஆதவனின் ஒவ்வொரு கதையும் உள் நோக்கிச் செல்லும் பயணம். அப்பயணத்தின் விளைவாகப் புலப்படும் மதிப்பீடுகளின் அடிப்படையில், புற நிகழ்ச்சிகள் பரிசீலனைக் குள்ளாகின்றன.

ஆனால் ஆதவன் தீர்ப்பு வழங்குவதில்லை. மென்மையும், நளினமும், நாசூக்கும் கலந்த நடையின் மூலம், சொல்ல விரும்பும் கருத்தை, எழுத்தின் வடிவத்தின் வழியாக உணர்த்துகின்றார்.

இதுவே அவர் கலையின் வெற்றி.

***

Sep 6, 2012

தொலைவு - இந்திரா பார்த்தசாரதி

கும்பகோணத்தில் 1-7-1930-இல் பிறந்தவர். 'இ.பா' (இயற் பெயர் - ஆர். பார்த்தசாரதி) டில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர், வைணவ சித்தாந்தம் குறித்த ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் பெற்றவர். அறுபதுகளில் எழுதத் தொடங்கிய இவர் நாவல், சிறுகதை, நாடகம், இலக்கியத் திறனாய்வு ஆகிய பல துறைகளில் சாதனை புரிந்து 'குருதிப்புனல்'என்னும் நாவலுக்காக 1978-இல் சாகித்ய அகாதமி விருது பெற்றார். நூலுருவில் பதினைந்துக்கு மேல் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. அங்கதச்சுவை பரிமளிக்கும் உரைநடை இவருடைய தனிச்சிறப்பு. ஆங்கிலம் மற்றும் பிற இந்திய, உலக மொழிகளில் இவருடைய படைப்பு கள் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன. 'மழை', 'போர்வை போர்த்திய உடல்கள்', 'நந்தன் கதை' ஆகிய இவருடைய நாடகங்கள் தமிழ் மேடைகளில் மட்டும் அல்லாமல் இதர மொழிகளிலும் அரங்கேற்றப்பட்டுப் பெரும் வெற்றியும் பாராட்டும் பெற்றிருக்கின்றன.

indhra parthasaradhi

 

 

 

 

 

 

 

 

 

 

ஜன்பத் போக்குவரத்துத் தீவு. பச்சை ஒளி தந்த அநுமதியில் அதுவரையில் சிலையாய் நின்ற ராட்சஸ பஸ்கள் சீறிக்கொண்டு புறப்பட்டன.

"அப்பா, அதோ "*ஸ்கூட்டர்..." என்று கூவியவாறே வாசுவின் பாதுகாப்பிலிருந்து விடுவித்துக்கொண்டு சிவப்பு ஒளியையும் பாரா மல் வீதியின் குறுக்கே ஓடினாள் கமலி.

"கமலி!" என்று கத்தினான் வாசு.

அவள் ஏமாற்றத்துடன் திரும்பிப் பார்த்தாள். வாசு அவள் கையைப் பற்றி வேகமாகப் பின்னால் இழுத்துக்கொண்டு வந்தான்.

"வாக்'னு வந்தப்புறந்தான் போகணும்னு நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? வயது ஏழாச்சு. இது கூடத் தெரியலியே?"

"அந்த ஸ்கூட்டர் காலியாயிருக்கு. யாரானும் ஏறிடுவாப்பா." "ஏறிட்டுப் போகட்டும். ரோடை இப்போ கிராஸ் பண்ணக் கூடாது." --------------- *தில்லியில் ஆட்டோ ரிக்‌ஷாவை "ஸ்கூட்டர்" என்று குறிப்பிடுவது வழக்கம்.

"அதோ எல்லாரும் பண்றாளேப்பா!"

"ஒத்தர் தப்புப் பண்ணினா எல்லாரும் பண்ணணுமா?"

கமலிக்கு அப்பாவின் பேரில் கோபம் கோபமாக வந்தது. அரை மணி நேரமாக இருவரும் ஸ்கூட்டருக்காக அலைகிறார்கள். ப்ளாசாவி லிருந்து அவளை இதுவரை நடத்தியே அழைத்து வந்துவிட்டான் வாசு.

அவர்கள் பஸ்ஸில் போயிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு பஸ்ஸிலும் கூட்டம் பொங்கி வழிந்தது. குழந்தையையும் இழுத்துக் கொண்டு முண்டியடித்து ஏற முடியுமா? - வாசுவால் இதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. டாக்சியில் போகலாமென்றால் அதற்கு வசதியில்லை. லோதி காலனி போவதற்கு நாலு ரூபாய் ஆகும். இடைக்கால நிவாரணம் கொடுக்கப் போகிறார்கள்; வாஸ்தவந்தான். போன மாதம் அக்காவுக்கு உடம்பு சரியில்லை என்று அவன் பம்பாய் போய் வரும்படியாக ஆகிவிட்டது. அதற்கு வாங்கிய கடன் தீர வேண்டும். கடன் வாங்குவது என்பது அவனுக்குப் பிடிக் காத காரியம். ஆனால் திடீர் திடீரென்று செலவுகள் ஏற்படும்போது அவற்றை எப்படிச் சமாளிப்பது?

"அப்பா, அந்த ஸ்கூட்டரிலே யாரோ ஏறிட்டா" என்று அலுத்துக் கொண்டே சொன்னாள் கமலா.

குழந்தையின் எரிச்சல் அவனுக்குப் புரிந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்? சாயந்திரம் ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டால் ஒரு ஸ்கூட்டர் கூடக் கனாட் பிளேசில் கிடைக்காது. கிடைப்பதும், கிடைக்காமல் இருப்பதும் ஒவ்வொருவருடைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.

தனக்கு என்றுமே அதிர்ஷ்டம் கிடையாது என்று நினைத்தான் வாசு. அவன் மெடிக்கல் காலேஜில் சேரவேண்டுமென்று ஆசைப் பட்டான். அதற்கு வேண்டிய நல்ல மார்க்கும் வாங்கியிருந்தான். ஆனால் இண்டர்வியூவில், "மத்திய ஆப்பிரிக்காவில் இரண்டாண்டு களுக்கு முன் எவ்வளவு அங்குலம் மழை பெய்தது?" என்று கேட்ட போது, அவனுக்குப் பதில் தெரியவில்லை. ஆகவே, அதற்கு அடுத்த வருஷம், "உலகம் நெடுக எங்கெங்கு மழை பெய்கிறது? எப்படி வெயில் காய்கிறது?" என்பவை பற்றியெல்லாம் அலசி ஆராய்ந்து விட்டு, இண்டர்வியூவுக்கு போனான். 'மெக்ஸிகோவில் மத்தியான வேலைகளில் மக்கள் என்ன செய்கிறார்கள்?" என்று கேட்டார்கள். அந்த வருஷமும் அவனுக்கு இடம் கிடைக்கவில்லை. பி. ஏ. படித்து விட்டுத் தில்லியில் மத்திய அரசாங்கத்தில் வேலை செய்ய வேண்டு மென்று அவன் தலையில் எழுதியிருந்தது - அப்படித்தான் அவன் அதை ஏற்றுக்கொண்டான்.

"அப்பா, 'வாக்'னு வந்துடுத்து."

"சரி, கையைப் பிடி. ஓடாதே!" ஸிந்தியா ஹவுஸ் பக்கம் போய் இருவரும் நின்றார்கள்.

"காலை வலிக்கிறது" என்றாள் கமலை. மரீனா ஹோட்டலருகே நின்று கொண்டிருந்த ஸ்கூட்டரில் ஏறியிருந்தால் இத்தனை நேரம் அவர்கள் வீட்டுக்குப் போயிருக்கலாம். அந்த ஸ்கூட்டர்காரனும் லோதி காலனிப் பக்கம் போக வேண்டியவன்தான் போல் இருக்கிறது. வாசுவை ஏற்றிக்கொள்ள இணங்கினான். ஆனால் ஒரு பெண் கோபமாக வந்து, அந்த ஸ்கூட்டரைத் தானே முதலில் கூப்பிட்டதாகச் சொன்னாள். ஸ்கூட்டர்காரன் அவள் எங்கே போகவேண்டுமென்று கேட்டான். அந்த பெண் கர்ஸன் ரோட் போகவேண்டும் என்றாள். நடந்தே போய்விடலாம் என்று யோசனை சொன்னான் ஸ்கூட்டர்காரன். அந்தப் பெண் முதலில் கூப்பிட்டிருந்தால் அவள் கோபம் நியாயமானது என்றே பட்டது வாசுவுக்கு. அவளை அழைத்துப் போகும்படி சொல்லிவிட்டு விலகிக்கொண்டான். அந்த பெண் நன்றியைச் சொல்லாமல் உரிமைப் போராட்டத்தில் வெற்றி அடைந்தது போல் ஏறிக்கொண்டாளே என்ற வருத்தம் இல்லாமல் இல்லை. நியாயத்தைப் பற்றி அப்பொழுது அவன் அவ்வளவு கவலைப்படாமல் இருந்திருந்தானானால் கமலிக்கு இப்பொழுது காலை வலித்திருக்காது.

வாழ்க்கையில் அடிப்படையான சில விஷயங்களுக்கு மதிப்பு அளிக்காவிட்டால், சமுகத்தில் வாழ்ந்து என்ன பிரயோசனம்? சிக்கலாகிக்கொண்டு வரும் சமுதாயத்தில் இது சாத்தியமா?

பிளாசா அருகே மூன்று ஸ்கூட்டர்கள் காலியாக நின்றுகொண்டிருந்தன. வாசு கமலியின் கையைப் பிடித்துக்கொண்டு பரிதாபமாக நின்றான். ஒருவராவது அவனை ஏறிட்டுப் பார்க்கவில்லை. வாசு, கால் மேல் கால் போட்டுக்கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்துச் சொன்னான்: "ஸ்கூட்டர் வேண்டும்."

அவன் வாசுவைப் பார்க்காமலே கேட்டான்: "எங்கே போக வேண்டும்?"

"லோதி காலனி."

அவன் பதில் சொல்லவில்லை. சிகரெட்டைப் பலமாக இழுத்துப் புகையை விட்டான். இன்னொருவன் வாசு செங்கோட்டை வருவதாக இருந்தால் அங்கு அழைத்துப் போவதாகப் கூறினான். லோதி காலனிக்குப் பதிலாகச் செங்கோட்டைக்கு அருகில் தான் இருந்திருக்கக் கூடாதா என்று வாசுவுக்குத் தோன்றிற்று. அப்பொழுது சுவரருகே நின்றுவிட்டுப் பைஜாமாவை இருக்கக் கட்டிக்கொண்டே வந்த ஒருவன், நாலு ரூபாய் கொடுப்பதானால் லோதி காலனிக்கு வருவதாகச் சொன்னான். டாக்ஸிக்கே நாலு ரூபாய்தான் ஆகும். அந்த வசதி இருந்தால் ஸ்கூட்டருடன் எதற்காகப் பேரம்? - வாசுவுக்கு மிகுந்த கோபம் வந்தது. யார் மீது என்று அவனுக்கே புரியவில்லை.

"அப்பா, அதோ ஸ்கூட்டர்" என்றாள் கமலி.

மேற்புறம் திறந்து வெயிலுக்குச் சௌகரியமாய், காற்றோட்டமாய் இருந்தது அந்த ஸ்கூட்டர். சார்ட்டைப் பார்க்கவேண்டிய அவசியமில்லாமல் புதிதாகப் பொருத்தப்பட்டிருந்தது கட்டண மீட்டர். வாழ்க்கையின் லட்சியமே கைகூடி விட்டாற்போல் ஓடினான் வாசு. ஆனால் இரண்டு தடவை கேட்டும் ஸ்கூட்டர்காரன் பதில் சொல்லவில்லை. மூன்றாம் தடவை கேட்டும் ஸ்கூட்டர்காரன் பதில் சொல்லவில்லை. சீறி விழுந்தான். "ரேடியேட்டர் சூடாகிவிட்டது. இன்னும் ஒரு மணி நேரத்துக்கு எங்கும் போவதாக இல்லை." ரேடியேட்டரைக் காட்டிலும் அவன்தான் சூடாயிருந்தான் என்று வாசுவுக்குத் தோன்றிற்று.

தனக்கு மிகவும் பிடித்திருந்த ஸ்கூட்டர் கிடைக்கவில்லையே என்று எரிச்சலாக வந்தது, வாசுவுக்கு. புதிய கட்டணம் அமலுக்கு வந்து ஆறு மாதமாகிறது. முக்கால்வாசி ஸ்கூட்டர்களில் சார்ட் தான் தொங்குகிறது; கணக்குப் பார்த்துக் கொடுப்பதற்கு ஒருவன் தன் சிந்தனை முழுவதையும் ஒருமைபடுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் ஏமாற்றி விடுவார்கள். புதிய மீட்டரில் பழைய மீட்டரைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்தாலும் பரவாயில்லை. பழைய மீட்டரில் ஏமாறாமலிருப்பதுதான் தீய எதிர்ச் சக்திகளினின்றும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது போலாகுமென்று நினைத்தான் வாசு. தில்லி போன்ற நகரங்களில் ஒருவனுக்குத் தான் ஏமாறாமல் இருக்கவேண்டுமென்ற ஜாக்கிரதை உணர்வே முழு நேரக் காரியமாக இருந்தால், அவன் ஆக்கப் பூர்வமாக வளர்வது எப்படி?

"டாக்ஸியிலே போகலாமாப்பா?" என்று கேட்டாள் கமலி. அவளுக்குக் கால் வலிக்கிறது என்ற பிரத்தியட்ச உண்மையைத் தவிர, மாதத்துக் கடைசி வாரத்தில் மத்திய சர்க்கார் அஸிஸ்டெண்டால் இதைப் பற்றி யோசித்துப் பார்க்க முடியுமா என்ற பொருளாதாரப் பிரச்னையைப் பற்றிக் கவலையில்லை. இப்போது அவனால் அது முடியாது என்பது இருக்கட்டும்; மாத முதல் வாரத்தில் கூட என்றைக்காவது குற்ற உணர்ச்சி இல்லாமல் அவனால் டாக்ஸியில் போக முடிவதில்லை. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட இயந்திர பூர்வமாகிவிட்ட சமுகத்தின் ஒழுக்க நியதிகள், ஒருவனைக் குற்ற உணர்ச்சியால் அவஸ்தைப்படும் நிலைக்குக் கண்டிஷன் செய்துவிடுகின்றன போல் இருக்கிறது.

"ஸ்கூட்டரே கிடைக்காது"என்று சாபம் கொடுப்பது போல் சொன்னாள் கமலி.

"அவசரப்படாதே, கிடைக்கும்."

"பஸ்ஸிலே போகலாமே!" அப்பா தன்னை டாக்ஸியில் அழைத்துச் செல்ல தயாராக இல்லை என்பது அவளுக்குப் புரிந்து விட்டது.ஸ்கூட்டரே குறிக்கோளாகய் அலைவதைக் காட்டிலும் பஸ்ஸில் போகலாமே என்று அவளுக்குத் தோன்றிற்று.

"கூட்டத்திலே ஏற முடியுமா உன்னாலே?"

"பின்னாலே என்னதான் பண்றது? ஆத்துக்குப் போகாமலேயே இருக்கலாங்கறேளா?"

இக்கேள்வி ஒரு பயங்கரமான எதிர்காலத்தை அவன் மனக் கண் முன்பு நிறுத்தியது. ஸ்கூட்டரே கிடைக்காமல் ஸ்கூட்டரைத் தேடி இருவரும் வாழ்நாள் முழுவதும் கனாட் பிளேஸில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவன் கிழவனாகி விடுகிறான். கமலியும் வளர்ந்து பெரிய பெண்ணாகி விடுகிறாள். ஸ்கூட்டர்க்காரர்களின் அடுத்த தலைமுறையும் அவர்களை ஏற்றிச் செல்ல மறுத்துவிடுகிறது.

" அப்பா, இதோ பஸ் காலியா வரது.போயிடலாம்."

வாசு திரும்பிப்பார்த்தான், பஸ் காலியாகத்தான் இருந்தது. ஆனால் லோதி காலனி செல்லும் பஸ் அல்ல; அது மதராஸ் ஹோட்டலுடன் நின்றுவிடும். அதனால்தான் கூட்டமே இல்லை.

" இந்தப் பஸ் லோதி காலனி போகாது" என்றான் வாசு.

"ஏன் எல்லாப் பஸ்ஸையும் லோதி காலனிக்கு விடமாட் டேங்கறா?"

இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்லுவது? லோதி காலனி ரோம் அல்ல, எல்லா சாலைகளும் அங்கே செல்ல. அரசாங்கம் பஸ் போக்குவரத்து நடத்துவதன் நோக்கம் என்ன என்று கமலிக்கு விளங்க வைக்க முடியுமாவென ஒரு கணம் யோசித்தான். சமூகத்தைப் பற்றிக் கவலைப்படும் சர்க்காருக்குத் தான் தனி மனிதனைப்பற்றி அக்கறை இல்லை. தனி மனிதன் தன் உரிமைகளைத் தியாகம் செய்யத் தயாராக இருந்தால்தான் சமூகம் என்ற கருத்துப் பிறக்கிறது. இது கமலிக்குப் புரியுமா?

அவளுக்கு என்ன, இது யாருக்குத்தான் புரிகிறது? தனிமனிதன் சமூகத்துக்குள் புகுந்துகொள்வதே, சமூகம் என்ற மானசீகத்தைத் தனக்குச் சௌகரியமாகப் பயன்படுத்திக் கொள்ளத்தான் என்று தோன்றுகிறது. இதில் வெற்றியடையும் சிலரே தங்களை அத்தகைய 'ஃப்ராங்கென்ஸ்டீன்' பூதமாக்கிக்கொண்டு தனி மனிதனை மேய்ந்து வருகிறார்கள்.ஆனால் தன்ன‌ளவில் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கி,சமூகத்தில் ஒழுக்க விதிகளைப் பின்பற்றுவதே இந்த ஸ்தாபனத்தின் யந்திரக் குரூரத்தை ஓரளவு எதிர்த்துப் போராடு வது போல்தானே?ஹரிச்சந்திரன் உண்மையைத் தவிர வேறு பேசுவதேயில்லை என்பதைக் கண்டதும் விசுவாமித்திரனுக்கு எவ் வளவு எரிச்சல்,ஆத்திரம்!

"அப்பா,அதோ மூர்த்தி மாமா போறா!"

வாசு திரும்பிப் பார்த்தான்.கமலியின் குரலைக் கேட்டதும், மூர்த்தி காரை நிறுத்தினான்.அவன் வாசுவோடு படித்தவன்.கல் லூரியில் படிக்கும் போது அவன் பெயர் கோபாலன்.பெயர் வைத்த தோஷமோ என்னவோ,வெண்ணெய்க்குப் பதிலாக அவன் மற்ற மாணவர்களின் சைக்கிள்களையெல்லாம் திருடி விற்றுவிடுவது வழக்கம்.ஒரு நாள் அகப்பட்டுக் கொண்டான்.அவனும் நாதன் என்ற இன்னொரு பையனுமாகச் சேர்ந்து அந்தக் களவைச் செய்து வந்தார்கள்.இரண்டு பேருக்கும் ஆறுமாதச் சிறைத் தண்டனை கிடைத்தது.நாதன் இப்போது சென்னையில் பிரபல கிரிமினல் வக்கீல்.கோபாலனோ மூர்த்தியாகி, தில்லியில் ஒரு கம்பெனியில் லையாசான் ஆபீஸராக இருந்து வருகிறான்.

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் மூர்த்தியை உத்தியோக் பவனில் வாசு பார்த்தான்."கோபாலன்"என்று கூப்பிட்டதும் ஓரளவு திடுக்கிட்டு அவன் திரும்பிப் பார்த்தான்.பிறகு வாசுவைத் தெரிந்த மாதிரியே அவன் காட்டிக்கொள்ளவில்லை."என் பெயர் மூர்த்தி, கோபாலன் இல்லை;யூ ஆர் மிஸ்டேக்கன்"என்றான்.வாசுவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.இப்படி உருவ ஒற்றுமை சாத்தியமா? இரண்டு நாள் கழித்து வாசுவின் வீட்டைத் தேடி வந்து அவன் சொன்ன பிறகுதான் விஷயம் புரிந்தது."என் பெயர் இனிமேமூர்த்தி தான்;கோபாலனை மறந்துடு.இங்கே ஏதோ நல்லபடியா இருக் கேன்.கிட்டத்தட்ட காலேஜ்லே செஞ்சிண்டிருந்த வேலை மாதிரி தான்.ஆனா அப்போ நாதன் பார்ட்னர்.இப்போ கவர்ன்மென்ட்டு.... கார் வெச்சிண்டிருக்கேன்.சுந்தர் நகர்லே வீடு.ஆத்துக்கு வாயேன் ஒரு நாள்."

உத்தியோக் பவனில் வேலை பார்க்கும் தன்னைப் பயன்படுத்திக் கொள்ள‌ப் பார்க்கிறான் என்பது வாசுவுக்கு அவன் வீட்டுக்குப் போன பிறகுதான் புரிந்தது.போவதை நிறுத்திவிட்டான்.ஆனால் அவன் வாசுவின் வீட்டுக்கு ஐந்தாறு தடவை வந்து போயிருக்கிறான்.

"ஹல்லோ,வாசு!எங்கே போகணும்,வீட்டுக்கா?"

"ஆத்துக்குத்தான்"என்று சொல்லிக் கொண்டே வாசுவை நம் பிக்கையுடன் பார்த்தாள் கமலி.

ஸ்கூட்டர் கிடைக்கவில்லையே, இவனுடன் போய்விடலாமா என்று ஒரு கணம் சிந்தித்தான் வாசு. கூடாது: தான் அவனுக்கு ஒரளவு கடமைப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு தனக்கு ஏற்படக் கூடாது. இந்த உணர்வே சால்ஜாப்பாக, அவனிடமிருந்து வேறு பல சௌகரியங்கள் எதிர்பார்க்கக்கூடிய இச்சை ஏற்படக்கூடும். தனக்கு அப்படி ஏற்படவேண்டும் என்றுதான் மூர்த்தி எதிர்பார்க்கிறான். ஓருவருடன் ஒருவர் இணைந்து வாழ்வதுதான் சமுகம் என்ற கருத்து, எப்படி ஒருவரையொருவர் பயன்படுத்திக் கொண்டு சமுகம் தரும் வாய்ப்புக்களை யெல்லாம் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்வது என்று ஆகிவிட்டது! -மூர்த்தியுடன் போனால் தானும் இந்தக் கருத்துக்கு உடன்பட்டது போலாகும். உடனடியான சௌகரியத்துக்காகக் கொள்கையைத் தியாகம் செய்யலாம?- கூடவே கூடாது.

"நான் வல்லே, நீ போ" என்றான் வாசு.

"லோதி காலனிப் பக்கந்தான் நான் போறேன், வா!"

"நீ எதிர்த் திசையிலே போறே, லோதி காலனிப் பக்கந்தான் போறேங்கிறேயே?"

"இங்கே ஒத்தரைப் பார்த்துட்டு, லோதி காலனி போகணும், வா."

"நீ சுந்தர் நகரிலே இருக்கே. லோதி காலனி வழியாச் சுத்திண்டு போகணுமா? - நீ போ. தாங்க் யூ!"

"என்ன இவ்வளவு 'பிகு' பண்ணிக்கிறே? - உத்தியோக் பவனுக்கு வந்து உன்னைத் தொந்தரவு பண்ணமாட்டேன், சரிதானே? ஐ நோ லாட்ஸ் ஆஃப் அதர் பீபிள் இன் உத்யோக் பவன்."

எதற்காக இதைச் சொல்லுகிறான்? - 'நீ உன் ஆபிஸில் அற்ப மானவன். உன் உதவி தேவையில்லை' என்பதற்காகவா? அல்லது, 'யார் யாருக்கோ நான் பணம் தரத் தயராக இருக்கும்போது என்னுடன் படித்த நீ ஏன் இப்படி அப்பாவியாய் இருக்கிறாய்?' என்று சுட்டிக்காட்டவா? பணத்தினால் எதைத்தான் சாதிக்க முடியாது? - இதோ, இப்பொழுது இவனுடைய அந்தரங்கத்தை ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. டாக்ஸியில் போயிருக்கிலாம். ஏன், சொந்தக் காரே வைத்திருக் கலாம்.

"என்ன யோஜிக்கிறே? கம் ஆன், ஏறு."

"நோ... ப்ளீஸ்..." கமலியின் கையை இழுத்துக்கொண்டு வேகமாக நடந்து சென்றான் வாசு.

கமலி கோபத்தில் வாசுவின் கைகளை உதறினாள். "எனக்கு நடக்கத் தெரியும்."

வாசு அவள் கோபத்தைப் புரிந்து கொண்டான்.ஒன்றும் சொல்லவில்லை.

'ஸிந்தியா ஹவுஸ்'எதிரே இரண்டு ஸ்கூட்டர்கள் நின்று கொண்டிருந்தன.ட்ரைவர்களைக் காணவில்லை.ஒரு ஸ்கூட்டரின் அருகே போய் நின்று சுற்று முற்றும் பார்த்தான் வாசு.அப்பொழுது கமலி 'ஹார்ன்' அடித்தாள்.

"நோ.அப்படியெல்லாம் அடிக்கக்கூடாது."

எங்கிருந்தோ ஒரு டிரைவர் அப்பொழுது அங்கே திடீரென்று தோன்றினான்."எங்கே போக வேண்டும்?"என்றான்.

"லோதி காலணி."

"திரும்பி வர வேண்டுமா?"

"இல்லை."

டிரைவர் பதில் கூறாமல் பீடியைப் பற்றவைத்துக்கொண்டான்.

"என்ன ஸ்கூட்டர் வருமா? வராதா?"

"என் நம்பர் இப்பொ‌ழுது இல்லை.அந்த ஸ்கூட்டர்காரனைக் கேளுங்கள்."

"அந்த‌ ஸ்கூட்ட‌ர்கார‌ன் எங்கே?"

"தெரியாது."

இத‌ற்குள் ஐந்தாறு பேர்க‌ள் ஸ்கூட்டருக்காக அங்கு வ‌ந்து விட்டார்க‌ள்.எல்லாருக்கும் ஒரே ப‌தில்தான்.

அந்த‌ ஸ்கூட்ட‌ர்கார‌ன் கால்ம‌ணி க‌ழித்து வ‌ந்தான். வாசு அவ‌னிட‌ம் ஓடினான்."லோதி கால‌னி போக‌ வேண்டும்." என்றான்.

அப்பொழுது ஓர் அழ‌கானப் பெண்.க‌ண்க‌ளால் சிரித்துக் கொண்டே கேட்டாள்."காக்கா ந‌க‌ர் போக‌வேண்டும்.

ஸ்கூட்டர்கார‌ன் அந்த‌ப் பெண்ணை ஏற‌ச்சொன்ன‌தும் வாசு கூறினான்:"நான் இங்கே கால்ம‌ணி நேர‌மாக‌க் காத்துக்கொண் டிருக்கேன்.இந்த‌ ஸ்கூட்ட‌ர்கார‌ரைக் கேளுங்க‌ள்...."

அந்த‌ ஸ்கூட்ட‌ர்கார‌ன் த‌ன்னைச் சாட்சிக்கு அழைத்த‌தும் வேறு ப‌க்க‌ம் திரும்பிக்கொண்டு விட்டான்.வாசு விட‌வில்லை. "யார் முத‌லில் வ‌ந்தார்க‌ள்?"என்று அவ‌னைக் கேட்டான்.

"யார் வ‌ந்தால் என்ன‌?அதோ அவள்* கிள‌ம்பிப் போய்விட் டான்*."என்று சிரித்துக் கொண்டே சொன்னான்,அந்த‌ ஸ்கூட்டர்க் கார‌ன்.

அந்த‌ப் பெண் 'டாடா,பைபை'சொல்லாத‌ குறை! ஸ்கூட்ட‌ர் போய்விட்ட‌து.அவ‌ன் உட‌ம்பு கோப‌த்தால் ஆடிய‌து. அங்கிருந்த‌ இன்னொரு ஸ்கூட்ட‌ரையும்,டாக்சி ஸ்டாண்டிலிருந்த‌ டாக்சிக‌ளையும்,தெருவில் போய்க்கொண்டிருந்த‌ கார்க‌ளையும், பஸ்களையும் - எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிவிட வேண்டுமென்ற வெறி வந்தது. கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்குப் போவதற்கு அவன் பத்து வருஷத்துக்கு முன்னால் பஸ்ஸையோ, ஸ்கூட்டரையோ அல்லது டாக்சியையோ எதிர்ப்பார்த்துகொண்டா இருந்தான்? - தன்னால் இப்பொழுது கமலியைத் தூக்கிக்கொண்டு லோதி காலனிக்கு நடந்துபோக முடியாதா?

கமலி தூக்கக்கூடாது என்று முரண்டு பிடிக்கலாம். அவளைச் சமாதானப்படுத்தித் தூக்கிக்கொண்டு போகலாம் என்றாலும், அவனுக்குப் பைத்தியக்காரன் என்ற பட்டந்தான் கிடைக்கும். சிக்கலாகிவிட்ட சமூகத்தில் ஒருவன், 'சமுகம் என்றால் தன்னைத் தவிர மற்றவர்கள்' என்ற பிரக்ஞையோடு அவர்கள் அபிப்பிராயத்துக்கு இசைந்து வாழவேண்டியிருக்கிறது. ஆனால் இதை எதிர்த்துப் போராட வேண்டும்.

"கமலி வா, நடந்தே போயிடலாம்" என்றான் வாசு.

"நடந்தேவா?" என்று அவள் திகைத்தாள்.

"நடக்க முடியலேன்னா சொல்லு, தூக்கிண்டு போறேன்" என்றான் வாசு.

வரிசை வரிசையாகக் கார்களும், டாக்ஸிகளும் விரைந்துகொண்டிருந்தன.

வாசுவும் கமலியும் இன்னும் வெகுதூரம் போகவேண்டும்.

--------------------------------

புதிய தமிழ்ச் சிறுகதைகள் ,தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்
நேஷனல் புக் டிரஸ்ட் ,இந்தியா. புது டில்லி. ,1984

May 19, 2012

எழுத்தாளுமைகள் பற்றிய ரவிசுப்ரமணியனின் ஆவணப்படங்கள்

1. ஜெயகாந்தன்:எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்
“ஒரு எழுத்தாளனை எதற்காக ஆவணப்படம் எடுக்க வேண்டும்? அவனுக்காக அவனது எழுத்துக்கள் பேசும். அவன் போனபின்னும் அவை பேசிக் கொண்டிருக்கும். கலைஞனின் சொற்கள் அழியாது. தன் ஆக்கங்களில் பேசியவற்றுக்கு அப்பால், அவன் ஒரு பேட்டியிலோ ravisuஅல்லது ஆவணப்படத்திலோ ஒன்றும் சொல்லிவிடப்போவதில்லை. இலக்கியம் சார்ந்த நோக்கில் இத்தகைய ஆவணப்படுத்தல்களுக்கு எந்த இடமும் இல்லை.
ஆனால் நமக்கு இலக்கியவாதி என்ற ஆளுமை தேவைப்படுகிறது.  வள்ளுவரும் கம்பனும் எப்படி இருந்தார்கள் என நாம் அறிவதில்லை. ஆனால் அவர்களைப்பற்றிய கதைகள் நமக்குக் கிடைக்கின்றன. அவர்களை நாம் மனக்கண்ணில் வரைந்துகொள்கிறோம். இன்று அவர்களுக்கு முகங்களை உருவாக்கியிருக்கிறோம். தாடிமீசையுடன் வள்ளுவரும், அடர்ந்த பெரிய மீசையுடன் கம்பரும்.
ஏன்? காரணம் நாம் படைப்பை படிக்கையில் படைப்பாளியுடன் உரையாடுகிறோம் என்பதே. அருவமான எழுத்தாளனுடன் நம்மால் பேச முடிவதில்லை. நமக்கு உருவம் தேவையாகிறது. எந்தக் காரணத்தால் கடவுள்களுக்கு உருவம் அமைந்ததோ அதே காரணத்தால்தான் நாம் கலைஞர்களுக்கும் உருவம் அளிக்கிறோம்.
பெரும் கலைஞர்களின் உருவத்தைப் போற்றுவது உலக மரபு. ஹோமரின் சிலை நமக்குக் கிடைக்கிறது. நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் கோயில் கொண்டிருக்கிறார். புகைப்படக்கலை வந்தபின்னர் இது இன்னும் முக்கியமானதாக ஆகியது. பாரதியின் பாடல்களுக்கு நிகராகவே அவரது தீவிரமான கண்கள் கொண்ட புகைப்படங்களும் ஆர்யா வரைந்த ஓவியமும் தமிழ் மக்களின் மனதில் பதிந்திருக்கின்றன. அந்த சித்திரங்களே கூட மக்களிடம் உக்கிரமாக உரையாடக்கூடியவையே. அவரது பாடல்களில் இருந்து அந்த முகத்தை பிரிக்க முடியாது
கலைஞனின் உடல் அவனுடைய கருத்துக்களின் பிம்பமாக மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் அது அவன் சொன்ன அனைத்துக்கும் உரிய குறியீடாக ஆகிறது. ஆகவேதான் நாம் கலைஞனின் உடலை ஆவணப்படுத்துகிறோம். நம் நாட்டில் முறையான ஆவணப்பதிவுகள் அனேகமாக இல்லை. இப்போதுதான் தொடங்கியிருக்கின்றது. ரவிசுப்ரமணியன் இயக்கிய ‘ எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக்கலைஞன் - ஜெயகாந்தன் ‘ என்ற ஆவணப்படம் அதில் ஒரு முக்கிய சாதனை.” 

ஜெயமோகன்

ஆவணப்படத்தைப் பார்க்க 

 https://youtu.be/ahC22jv1JjQ 

image_2

2. மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்

ஆளுமைகள் குறித்த ஆவணப்படங்களோ, ஆளற்ற பொட்டலில் மேடைப் பேச்சு போல் பரிதாபத்துக்குரியவை. இந்த அவலங்களின் மிகச் சில விதிவிலக்குகளில் ரவிசுப்ரமணியனின் 'மா.அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்' ஒன்று.
இயக்குனர் ம.செந்தமிழன்
ஆவணப்படத்தைப் பார்க்க 



arang
3. இந்திரா பார்த்தசாரதி எனும் நவீன நாடகக் கலைஞன்

நூற்றுக்கணக்கான விவரணப்படங்களையும் குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் தொலைக்காட்சிகளுக்காக தயாரித்திருக்கிற ரவிசுப்ரமணியன், அவ்வகை தொலைக்காட்சிப் பார்வையாளர்களைத் தவிர்த்து விட்டு, அதன் பாதிப்புகளிலிருந்தும், அதன் எளிமையிலிருந்தும் விலகி, இந்திராபார்த்தசாரதி என்ற நாடகாசிரியரைப் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுத்திருப்பதில் தனது அடுத்த கட்டப் பாய்ச்சலை நிரூபித்திருக்கிறார்.
பி.அப்பன்
ஆவணப்படத்தைப் பார்க்க 





ip
நன்றி: ரவிசுப்ரமணியன்

Jan 20, 2011

அவஸ்தைகள்-இந்திரா பார்த்தசாரதி

சாமான்களை சரிபார்த்து, நண்பர்களுக்குக் கைகாட்டி விட்டு, என் சீட்டில் உட்காரப் போனபோதுதான் அவரை கவனித்தேன்.

பவளம் போன்ற திருமேனி. என் உள்ளுணர்வு சொல்லிற்று, வயது அறுபத்தைந்i_paaதிருக்கலாமென்று. ஆனால் கண், கண்ட வயது ஐம்பது. நிரந்தர 'ஸினிஸிஸ'த்தின் நிழற் கீற்றாய் படிந்த ஏளனப்   புன்னகை. கை விரல் ஒன்பதில் ஒவ்வொரு கல்லென்று நவரத்தின மோதிரங்கள்.

அவர் அணிந்திருந்த உடையும், அவருடைய தோற்றமும் அவரை ஹிந்தி மாநிலத்தவர் என்று அறிவித்தது. தும்மைப் பூ போல் பளீரென்ற வேட்டி, குர்த்தா.

அவர் அறிதுயில் கோலம் கொண்டிருந்தார், கால்களை தாராளமாக நீட்டியபடி. இன்னொருவர் அங்கு உட்கார வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு இருந்ததாகவே தெரியவில்லை. உலகத்தைப் பந்தாகச் சுற்றி தம் குர்தாப் பையில் வைத்திருப்பவர் போல் அவர் அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் காலருகே இரண்டு பேர் பணிவுடன் நின்று கொண்டிருந்தார்கள். தமிழர்கள். சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் ஒரு வடநாட்டுக்காரருக்கு பணிவிடை செய்வது போல் முறுக்கேறிய மீசையுடன் இரண்டு தமிழர்கள் நின்று கொண்டிருந்தது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

'பழம் எல்லாம் சரியா?' என்று பாதிஹிந்தியிலும், பாதி ஆங்கிலத்திலும் அவர் கேட்ட கேள்விக்கு, அவர்கள் தலையை ஆட்டி 'சரிய்யா' என்றார்கள் தமிழில்.

'ஸீட்'டுக்குக் கீழே இரண்டு பழக்கூடைகள் இருந்தன.

அவர் எங்களைப் பார்த்துப் புன்னகை செய்தார்.

'எங்கே போகிறீர்கள்?' என்றார் ஹிந்தியில்.

'டெல்லிக்கு' என்றாள் என் மனைவி.

'ஹும்!' அவர் ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினார்.

அது ஏ.ஸி. ஸ்லீப்பர், இரண்டாம் வகுப்புப் பெட்டி. இன்னொரு ஸீட்டில் உட்கார வேண்டியவன் - அவன் இளைஞன், இருபத்திரெண்டு வயதிருக்கலாம் - ஒரு சூட்கேஸ், பை, சகிதமாக வந்து அவரருகில் நின்றான்.

'என்ன வேணும்?' என்றார் ஆங்கிலத்தில்.

'இது என் இடம், எழுந்திருங்கள், உட்கார வேண்டும்.'

'தம்பி, அட்ஜெஸ்ட் பண்ணிகிட்டு உட்காரு. ஐயா ரயில்வே போர்ட் மெம்பர்.'

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இவரா ரயில்வே போர்ட் மெம்பர்? அரசாங்க உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முகத்தில் ஒரு தனிக்களை இருக்கும். இவரைப்பார்த்தால், ஜோதிடர் என்று சொல்லாம். இல்லாவிட்டால், ஓர் அரசியல்வாதி என்று என்று சொல்லலாம், ஒரு மந்திரி என்று கூட வைத்துக் கொள்ளலாம். நிச்சயமாக அரசாங்கத்தில் உயர்தர உத்தியோகத்திலிருப்பவர் என்று யாருமே சொல்லமாட்டார்கள். மேலும், 'ரயில்வே போர்ட் மெம்பர்', இந்த வகுப்பில் ஏன் பயணம் செய்ய வேண்டும்? அவருக்கு ஸலூன் இருக்கக்கூடுமே!

'அவர் யாரா இருந்தா எனக்கு என்னய்யா? என் இடம் எனக்கு வேணும்..' என்றான் இளைஞன்.

அவர் அந்தப் பையன் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளாமல், ஓர் ஆரஞ்சுப் பழத்தை உறித்துக் கொண்டிருந்தார்.

'ப்ளீஸ் கெட் அப், ஐ வான்ட் டு ஸிட்டெளன்' என்றான் அவ்விளைஞன், குரலில் சற்று கண்டிப்புத் தோன்ற.

'வேறு இடம் பார்த்துக் கொள். நான் கண்டக்டரிடம் சொல்லுகிறேன்' என்றார் அவர் ஹிந்தியில்.

'ஓகே. நானே சொல்லுகிறேன். நீங்கள் யாராயிருந்தாலும் சரி, என் ஸீட்டை உங்களால் ஆக்ரமிக்க முடியாது. நீங்கள் ரயில்வே போர்ட் மெம்பர் என்று சொல்வதே பொய். அரசியல்வாதியாக இருக்கலாம்' என்றான் அந்த இளைஞன் ஹிந்தியில்.

அவன் ஹிந்தியில் சொன்னது, அவருடைய பணியாளர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் அவனை ஏற இறங்கப் பார்த்தார்கள்.

அவர் அவர் அவனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். பிறகு கால்களை மடக்கிக் கொண்டார்.

'என்னய்யா பெரியவரைப் போய் இப்படி..' என்றான் அவருடைய ஆட்களில் ஒருவன்.

'அப்படிச் சொல்லுங்க.. பெரியவர், மரியாதை தரவேண்டியதுதான். ரயில்வே போர்ட் மெம்பர், அது இதுன்னு சொல்லாதீங்க..'

'ரயில்வே போர்ட் மெம்பர்தான்யா; நாங்களும் ரயில்வேயில்தான் வேலை செய்யறோம்.'

அந்த இளைஞன் அவர்களைப் புன்னகையுடன் நோக்கிவிட்டு உட்கார்ந்தான். அவர்களையும் அவர் இவ்வாறு சொல்லி ஏமாற்றியிருக்கக் கூடுமென்று அந்தப் புன்னகை கூறியது.

அவர் என் மனைவியை நோக்கி ஹிந்தியில் சொன்னார். 'என் பேர் ரவிஷங்கர் மிஸ்ரா. இது நான் எழுதிய நூல், கவிதைத் தொகுப்பு'

அவர் தம் பக்கத்திலிருந்த புத்தகத்தை எடுத்து அவளிடம் கொடுத்தார்.

அவர் கவிஞராக இருக்கக் கூடுமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. நானும் இலக்கிய ரசிகனாக இருக்க முடியாதென்று அவர் நினைத்த காரணத்தினால் தான் அந்தப் புத்தகத்தை என் மனைவியிடம் கொடுத்தார் என்று எனக்குத் தோன்றியது.

என் மனைவி அந்தப் புத்தகத்தைப் புரட்டினாள்.நானும் பார்த்தேன்.

சின்னச் சின்னக் கவிதைகள். மூன்று வரிகளுக்கு மேலில்லை.

'முன்னுரை யார் என்று பாருங்கள்' என்றார் அவர்.

ஓர், அரசியல் பெரும்புள்ளி.

புத்தகத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள அவர் கையை நீட்டினார். கவிதைகளை என் மனைவி படித்தாக வேண்டுமென்று அவர் விரும்பியதாகத் தெரியவில்லை.

'எனக்குப் பல்கலைக் கழகப் பட்டம் டாக்டர் என்பதோடு, நான் தொழிலிலும் டாக்டர்' என்றார் அவர்.

கவிஞர், டாக்டர், இன்னும் என்னென்ன ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றனவோ என்று எனக்குத் தோன்றிற்று.

அவர் இன்னொரு புத்தகத்தை எடுத்து என் மனைவியிடம் கொடுத்தார்.

மருத்துவ நூல், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி எல்லாம் கலந்த ஒரு நூல்.

'அல்லோபதி இல்லையா?' என்று நான் கேட்டேன்.

'எனக்குத் தெரியும்.. ஆனால் நம் நாட்டுக்கேற்றவை இவைதான் என்பது என் அபிப்பிராயம். புற்றுநோயைக் கூட குணப்படுத்திவிட முடியும், செய்து காட்டியிருக்கிறேன்.'

'நீங்கள் ரயில்வே போர்ட்மெம்பர் என்று இவர்கள் சொல்லுகிறார்களே?' அவர் அதை மறுக்கவுமில்லை, ஆமோதிக்கவுமில்லை. வெறும் புன்னகைதான் பதில்.

ரயில்வே அட்வைஸரி கவுன்சில் மெம்பரா இருக்கலாம் என்றான் அந்தப் பையன்.

இரண்டும் ஒண்ணுதானுங்க! என்றான் அந்த இருவரில் ஒருவன்.

எப்படிங்க ஒண்ணா இருக்க முடியும்? ரயில்வேல வேலை செய்யறீங்க, இது, கூடவா தெரியலே? என்னவா இருக்கீங்க? என்றான் இளைஞன்.

பழ காண்ட்ராக்டருங்க

எனக்குப் புரிந்தது.

வண்டி புறப்படும் போலிருந்தது.

கோயிங் ஸார். குட் ஜர்னி ஸார். என்று கைகளைக் கூப்பி அவரிடம் விடைபெற்றுக் கொண்டு, அவர்கள் வண்டியை விட்டு இறங்கினார்கள்.

'என் பேர் மோகன்' என்று சொல்லிக் கொண்டே கைகளைக் கூப்பினான் அந்த இளைஞன். நீங்கள் யாரென்று எனக்குத் தெரியும், என் அப்பாவை உங்களுக்குத் தெரியும். ராஜகோபாலன் பிடிஐ ' என்று தொடர்ந்தான்.

ஓ.. அப்படியா? அவர் எப்படியிருக்கார்?

செளக்கியம். நான் இன்ஜினியரிங் முடிச்சிருக்கேன். அடுத்த வாரம் அமெரிக்கா போறேன்.

குட்.. கம்ப்யூட்டரா?

ஆமாம்.

அங்கேயே செட்டில் ஆயிடுவே..

நோ நோ.. திரும்பி வந்துடுவேன்...

அவர் எங்களிருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரையும் உரையாடலில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக நான் மோகன் அமெரிக்கா போகப் போவதைப் பற்றிச் சொன்னேன்.

கையை நீட்டு என்றார் அவர் எழுந்து உட்கார்ந்தவாறு.

மன்னிக்கவும். எனக்கு நம்பிக்கையில்லை.

அமெரிக்காவில் முக்கால்வாசிப் பேருக்கு நம்பிக்கையுண்டு தெரியுமா?

இருக்கலாம் எனக்கு இல்லை.

நான் பெரிய ஜோதிடன். டில்லியில் மிஸ்ரா என்று நீ கேள்விப்பட்டதேயில்லையா? நன்றாக ஹிந்தி பேசுகிறாய், நீ டில்லயில் தானே இருக்கிறாய்?

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் டில்லியில்தான். எனக்கு உங்களைப் பற்றித் தெரியாது.

மொரார்ஜியிடம் எண்பதில் சொன்னேன், உங்களுக்கு இன்னும் கொஞ்ச காலந்தான் பதவியென்று. இந்திராகாந்தி என்னை தேடிக் கொண்டு வந்தார். தேர்தலில் ஜெயிப்பீர்கள் என்றேன். கைலாஷ் காலனியில் என் வீட்டுக்கு வந்தாயானால், வாசலில் வரிசையாய் கார் நின்று கொண்டிருக்கும், ஜோஸ்யம் கேக்க. உனக்குக் காசு வாங்காமல் சொல்லுகிறேன் என்கிறேன், வேண்டாமென்கிறாய்.

மன்னிக்கவும். இறந்த காலத்தைப் பற்றி எனக்குத் தெரியும். எதிர்காலத்தில் என்ன நடக்குமென்று ஸஸ்பென்ஸ் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு விட்டால் வாழ்க்கை போரடிக்கும் என்றான் மோகன்.

என்ன நடக்குமென்று தெரிந்து கொண்டால், தவறுகள் செய்யாமல் உன்னைத் திருத்திக் கொள்ள உதவுமல்லவா?

விதியில் உங்களுக்கு நம்பிக்கையிண்டா?

நிச்சயமாக

அப்படியானால் நடப்பது நடந்துதானே ஆகவேண்டும்? தவறுகளை எப்படி திருத்திக் கொள்ள இயலும்?

குதர்க்கம் பேசுகிறாய். இந்தக் காலத்து இளைஞர்கள் எல்லோருமே இப்படித்தானிருக்கிறார்கள். உங்கள் ரீகன் மனைவியும் ஜோஸ்யம் கேட்கிறாள் தெரியுமா?

எங்கள் ரீகனா? நான் அமெரிக்காவுக்குப் போகப் போகிறேன் என்பதால் அமெரிக்கனாகி விடுவேனா? என்று கூறிவிட்டு மோகன் சிரித்தான்.

அப்பொழுது கண்டக்டர் அங்கு வந்தார். 'நீங்கள் தான் மிஸ்டர் மிஸ்ராவா?' என்றார் மிகவும் பவ்யமாக.

அவர் தலையசைத்தார்.

எல்லாம் செளகர்யமாக இருக்கிறதா?

இருக்கிறது. நான் மிஸ்டர் மிஸ்ரா இல்லை, டாக்டர்...'

மன்னிக்கவும்... மருத்துவ...

ஆமாம்.

ஏதாவது வேண்டுமா, உங்களுக்கு?

ஒரு தலையணைதான் கொடுத்தான் உங்கள் பையன். போதாது; இரண்டு வேண்டும்'

'எஸ் ஸார்'

வண்டி தாமதமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு நாளைக்கு அடுத்த நாள் பதினொன்று மணிக்கு உங்கள் மந்திரி ஸிந்தியாவுடன் அப்பாய்ன்ட்மென்ட் புரிந்ததா?

எஸ் ஸார்.

ஏதாவது வேண்டுமானால், பிறகு சொல்லுகிறேன்.

எஸ் ஸார்

இவருக்கு ஏன் இவ்வளவு மரியாதை? ரயில்வே அட்வைஸரி கவுன்ஸிலில் மெம்பர் என்பதாலா, இல்லாவிட்டால் அவர் சொல்வது போல் அரசாங்க ஜோஸ்யர் தானா?

அவர் அணிந்திருந்த ஒன்பது மோதிரங்கள் மீது என் கவனம் சென்றது.

”ஒன்று கேட்கலாமா?” என்றேன் நான்.

”கேளுங்கள். ”

”கையில் ஒன்பது மோதிரங்கள் அணிந்திருக்கிறீர்களே.. ”

”அதுவா?” என்று அவர் புன்னகையுடன் கூறினார். ”நவரத்தினங்கள். ஒன்பது என்ற எண்ணின் விஷேஷம் தெரியுமா? ”

”தெரியாது. ”

'”ஒன்பதை இரண்டால் பெருக்கி வரும் தொகையின் எண்களைக் கூட்டிப் பாருங்கள். ஒன்பது. இந்த மாதிரி எந்த எண்ணால் பெருக்கிக் கூட்டிப் பார்த்தாலும் கடைசியில் வருவது ஒன்பதுதான். உதாரணமாக 9 x 102 = 918; 9 + 1 + 8 = 18; 1 + 8 = 9. இந்த மாதிரி, இது ஏன் தெரியுமா? ”

”தெரியாது. ”

”ஒன்பதுதான் இறைவன். எதனாலும் பாதிக்கப் படாதவன். ஒன்பதைக் கடவுளாக ஏற்றுக் கொண்டால், எல்லா நன்மைகளும் ஏற்படும். இன்று என்ன தேதி? ”

”பதினெட்டு. ”

”அதாவது, 1 + 8 = 9.  நான் எந்தக் காரியம் செய்தாலும் ஒன்பதில்தான் செய்வேன். நவக்கிரகங்களின் தாத்பர்யம் இப்பொழுது புரிகிறதா? ”

”எல்லோருக்குமே ஒன்பது நல்லதுதானா?” என்று கேட்டாள் மனைவி.

”நிச்சயமாக. ”

என்னை நவரத்தினக் கல் மோதிரம் வாங்கிப் போட்டுக் கொள்ளுங்கள் என்று நச்சரிக்கப் போகின்றாளோ என்ற பயம் எனக்கு வந்தது.

'எல்லாருக்குமில்லை' என்ற நான் இழுத்தேன்.

”இல்லை. எல்லாருக்குந்தான்.” என்றார் அவர் உறுதியான குரலில்.

என் மனைவி அவரிடம் கையை நீட்டினாள்.

”ஒரு கேள்வி கேளுங்கள் சொல்லுகிறேன்.” என்றார் அவர்.

”எனக்கு ஆஸ்துமா உண்டு. அது எப்பொழுது போகும்? ”

அவர் ஐந்து நிமிஷங்கள் கையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

பிறகு சொன்னார். ”நவக்கிரக பூஜை செய்யுங்கள். பூஜை ஒன்பது நாள் நடக்க வேண்டும். நவரத்தினக் கல் மோதிரம் அணிய வேண்டியது அவசியம். பாதிப் பேர் இதுதான் நீலம் இதுதான் மரகதம் என்று பொய் கல்லைக் காட்டி ஏமாற்றுவார்கள். உண்மையான கல் வேண்டுமானால், இந்தாருங்கள்.." என்று சொல்லிக் கொண்டே அவர் தம்மருகில் வைத்திருந்த டயரியில் இருந்து ஒரு கார்டை எடுத்துக்கொடுத்தார்.

”இந்த ஆள் நம்பகமானவன். என் பேரைச் சொல்லுங்கள். இந்தாருங்கள், இதுதான் என் முகவரி. ”

”நவகிரக பூஜை நீங்களே வந்து செய்வீர்களா?” என்று கேட்டேன் நான்.

”அது என்னால் முடியாது. நான் ஆட்களை அனுப்பி வைக்கிறேன். ”

அவர் உடனே கண்களை மூடிக்கொண்டார். சில விநாடிகளுக்குப் பிறகு கண்களைத் திறந்து 'மன்னித்துக் கொள்ளுங்கள். நான் ஒரு மணிநேரம் தியானம் செய்யவேண்டும் ' என்றார்.

”செய்யுங்கள். ”

”இந்த ஆளை நம்பறீங்களா?” என்றான் மோகன்.

”ஏதானும் சக்தி இருக்கணும். இல்லாமலா. மொரார்ஜி, இந்திராகாந்தி எல்லாரும் இவரைத் தேடிண்டு போறா?” என்றாள் என் மனைவி.

”பதவி வந்துட்டா அதுக்கு நாம தகுதியா என்ற சந்தேகம் எல்லா அரசியல்வாதிகளுக்கும் வந்துடும். அதனால் ஜோஸ்யர்களை தேடிண்டு போறாங்க. சக்தியுமில்லே ஒரு மண்ணாங்கட்டியுமில்லே. ”

என் மனைவியும் கண்களை மூடிக்கொண்டதிலிருந்து அவள் அவனுடன் வாக்காட விரும்பவில்லை என்று தெரிந்தது.

திடீரென்று கண்விழித்தேன். ஒரே சத்தம். 'டாக்டர்.. டாக்டர்'

நாலைந்து பேராக மிஸ்ராவை எழுப்ப முயன்று கொண்டிருந்தார்கள்.

அவருக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. அவர் கண்களைத் திறக்கவேயில்லை.

”என்ன அவருக்கு?” என்றேன் நான்.

”எங்களுக்குத் தெரியாது, கண்டக்டர் சொன்னார், இவர் டாக்டர்னு. இங்கேயிருந்து மூணாம் கம்பார்ட்மெண்ட்லே ஒரு குழந்தைக்குத் தூக்கித் தூக்கிப் போடுது. என்னன்னு தெரியலே. இவரைக் கூட்டிக்கிட்டுப் போகலாம்னு வந்தோம்”. என்றான் ஒருவன்.

”டாக்டர் மிஸ்ரா, டாக்டர் மிஸ்ரா” என்று நானும் அவரை எழுப்ப முயன்றேன்.

அப்பொழுது என் மனைவி சொன்னாள்,” உங்களுக்குச் சத்தம் கேட்கலியா, அவருக்கே பயங்கர ஆஸ்துமா மூச்சு வாங்கறதைப் பாருங்க.. ”

மேலே படுத்துக் கொண்டிருந்த மோகன் கீழே இறங்கினான்.

அவன் வந்தவர்களிடம் சொன்னான் : ”இவர் டாக்டருமில்லை ஒண்ணுமில்லை. குழந்தையைக் காப்பாத்தணும்னா வேற கம்பார்ட்மெண்ட்லே டாக்டர் இருந்தாப் பாருங்க'

வந்தவர்கள் போய்விட்டார்கள்.

அவரை எழுப்பி, ”என்கிட்டே மருந்து இருக்கு, சாப்பிடறாரா கேளுங்கோ.. ' என்றாள் என் மனைவி.

மிகவும் கஷ்டப்பட்டு அவரை எழுப்பினேன். கண்களைத் திறந்து சுற்று முற்றும் பார்த்தார். அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

”டெட்ரால் எஸ்ஏ இருக்கு வேணுமா?” என்றாள என் மனைவி.

”வண்டியிலே நவகிரக பூஜை செய்ய முடியுமா?” என்று கேட்டான் மோகன்.

”அது தப்பு. கஷ்டப்படறவாளுக்கு உதவி செய்யணும். கிண்டல் செய்யக் கூடாது. ஆஸ்துமான்னா என்னன்னு கஷ்டப்படறவாளுக்குத் தெரியும்.” ' என்றாள் என் மனைவி.

ஐயாம் ஸாரி மாமி என்றான் மோகன்.

********

Dec 7, 2010

கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்-இந்திரா பார்த்தசாரதி

சிலப்பதிகாரத்தைப் பற்றி ஒரு மிகப் பெரிய தமிழ்ப் பேராசிரியர் எழுதிய கட்டுரை ஒன்றை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்படியான சோதனை எனக்கு ஒரு தடவை ஏற்பட்டது. அவர் எழுதியிருந்தார்: 'கண்ணகி பழங்குடிமகளிர் வழி வந்த பச்சைத் தமிழ்ப்பெண். மழலைப் பருவத்திலேயே தமிழிப் பண்பாம் கற்பு நெறி உணர்ந்த பொற்பின் செல்வி. எல்லாக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற ஆரணங்கு..... '

'மழலைப் பருவத்திலேயே தமிழ்ப் பண்பாம் கற்புநெறி உணர்ந்த பொற்பின்IndiraParthasarathi செல்வி ' என்ற வரிதான் எனக்கு மிகவும் தொந்தரவு கொடுத்தது. பச்சைத் தமிழ்ப் பெண் குழ்ந்தைக்கு மழலைப்பருவத்திலேயே கற்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால்,  ஃப்ராய்ட் இதைப்பற்றி என்ன சொல்லுவார் என்று சிந்தித்துப் பார்த்தேன்.... மேலும் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள அக்குழந்தை என்ன நடவடிக்கை மேற்கொள்ள முடியும் ? இருபத்திநாலு மணி நேரமும் ஜட்டியைக் கழற்றாமலிருக்கலாம். கண்ணகி காலத்தில் ஜட்டி இல்லை என்றால், அரசயிலை தவறிப்போய்க்கூட ஒதுங்கக் கூடாது என்று கவனமாக இருக்கலாம்.... நான் என் சிந்தனையை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது, அவர்கள் சிரித்ததுதான். பழைய இலக்கியங்களைப் பற்றித் தமிழ்ப் 'பைத்தியக்காரத்தனம் ' ஏதுமில்லாமல், நல்ல இலக்கியக் கட்டுரைகள் எழுதினால், இதற்கு வரவேற்பு இருக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படக் காரணமாயிற்று.

சிலப்பதிகார ஆசிரியராக இளங்கோவடிகள் (டாக்டர் கலைஞரோ அல்லது ம.பொ.சி.யோ அல்ல.... சமீபத்தில் டில்லி வந்திருந்த தமிழ்நாடு ஆளுநர் திரு. கே.கே. ஷா ஒருவரைக் கேட்டாராம், 'நீங்கள் கலைஞர் எழுதியுள்ள சிலப்பதிகாரம் என்ற காவியத்தைப் படித்திருக்கிறீர்களா ? ' என்று .... அதனால்தான் 'இளங்கோவடிகள் ' என்று வற்புறுத்திச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது) இந்நூலை எழுதியதன் மூலம் பல புரட்சிகளைச் செய்திருக்கிறார். தன்னேரில்லாத் தலைவன்தான் காவியத் தலைவனாக இருக்க வேண்டுமென்ற கொள்கையை மீறியிருக்கிறார்; கோவலன் பலஹீனங்கள் நிறைந்த சாதாரண மனிதன். காவியத் தலைவியை ஒரு வண்ண மற்ற இயந்திர மங்கையாகக் காட்டிவிட்டு, இன்னொரு பெண்ணுக்கு (மாதவிக்கு) ஏற்றம் அளித்திருக்கிறார். இந்த இரண்டாவது கருத்தை வற்புறுத்துவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

இளங்கோவடிகள் மூன்று உண்மைகளை நிலைநாட்டத்தான் சிலப்பதிகாரம் எழுதினார் என்று பதிகத்தை ஆதாரமாகக் கொண்டு சொல்லப்படும் தவறான கருத்தை நாம் முதலில் மறந்தால்தான். இந்நூலை நாம் இலக்கிய ரீதியாக அணுக முடியும். பதிகம் எழுதியவர் இளங்கோவடிகள் அல்லர் என்பது பதிகத்தையும் நூலையும் தெளிவாகப் படித்தால் விளங்கும். 1971. சிலர் சிலப்பதிகாரத்தை எழுதியவர் கலைஞரா அல்லது ம.பொ.சியா என்று ஐயுறும் போது, நிதி அரிப்பு உடைய ஒருவன் இந்தப் பதிகத்தை எழுதி சிலப்பதிகாரத்தில் ஏதோ ஒரு காலத்தில் ஏன் சேர்த்திருக்கக்கூடாது ?-- நடை வித்தியாசங்களுக்கு இக்கருத்தைத்தான் வலியுறுத்துகிறது.

இளங்கோவடிகள் விதியில் நம்பிக்கையுடையவர் என்பதை நான் மறுக்கவில்லை... இக்காவியத்தில் கிரேக்க நாடகங்களில் அழுத்தமாகச் சொல்லப்படும் 'விதியின் இன்றியமையாமை ' என்ற பண்பு மேலோங்கியிருக்கக் காண்கிறோம்... இதற்கு என்ன காரணம் ? ஒவ்வொருவருடைய குண அமைப்பே அவருக்கு விதியாக அமைந்துவிடுகிறது என்ற கொள்கையுடையவர் இளங்கோவடிகள்.

சிலப்பதிகாரத்தை ஆழமாகப் படிக்கும் போதுதான் இளங்கோவடிகளின் அனுதாபம் கண்ணகிக்கு இல்லை என்ற உண்மை தெரிய வரும். கண்ணகியின் குணச் சித்திரத்தை அவர் எப்படி அமைத்திருக்கிறார் ?

காதல் செய்து திருமணம் செய்துகொள்ளக்கூடிய தகுதி கண்ணகிக்குக் கிடையாது என்று காட்டுவதுபோல், பெற்றோர்களே தீர்மானம் செய்த கோவலனுக்கும் கண்ணகிக்கும் கல்யாணம் செய்து வைப்பதாக ஆரம்பத்திலேயே காட்டப்படுகிறது. வடநாட்டுக் கதையை எழுதிய கம்பன், இராமனுக்கும் சீதைக்கும் காதல் திருமணம் செய்து வைத்துத் தமிழ் மரபைக் காப்பாற்றும்போது, இளங்கோவடிகள் ஏன் இவ்வாறு செய்யவில்லை யென்பதற்கு இதுதான் காரணமாக இருக்க வேண்டும். கோவலன் திருமணத்துக்கு முன்பு கண்ணகியைப் பார்த்திருந்தானால், அவன் அவள்பால் நிச்சயமாகக் காதல் கொண்டிருக்க மாட்டான். அவன் அவள்பால் காதல் கொள்வதற்கான பண்பு ஒன்றும் அவளிடத்துக்கிடையாது.

இளங்கோவடிகள் கண்ணகியை எவ்வாறு அறிமுகப்படுத்துகிறார் என்று பாருங்கள்:

'போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்

தீதிலா வடமீனின் திறம் இவள் திறமென்றும்

மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்

காதலார் பெயர் மன்னும் கண்ணகி என்பாள். '

அவளுடைய வடிவத்தைப் பற்றி ஒரு வரியிலே சொல்லிவிட்டு, அவளுடைய குணத்தைப் பற்றித்தான் அதிகமாகச் சித்தரித்துக் காட்டுகிறார். அருந்ததிபோல் கற்புடையவளாக இருக்கவேண்டும் என்பதுதான் கண்ணகியின் 'அப்ஸெஷன் '. இப்படி அவள் இருப்பதற்கான வாய்ப்பைத் தந்த ஒரு சாதனமாகத்தான் அவள் திருமணத்தை நினைக்கிறாள்.

முதல் இரவிலேயே கோவலனுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. அவன் ஒரு கலாரஸிகன். கற்பனை மிகுந்தவன். அவன் ஓர் இலட்சியப் பெண்ணை மனத்தில் உருவகித்துக் கொண்டு, அவள்தான் கண்ணகி என்று பாவித்து அவளுடைய நலங்களையெல்லாம் பாராட்டுகிறார்.

மாசறு பொன்னே வலம்புரி முத்தே

காசறு விரையே கரும்பே தேனே

அரும்பொற் பாவாய் ஆருயிர் மருந்தே

பெருங்குடி வணிகன் பெருமட மகளே

மலையிடைப் பிறவா மணியே என்கோ

அலையிடைப் பிறவா அமுதே என்கோ

யாழிடைப் பிறவா இசையே என்கோ

கண்ணகி வடமீனின் திறத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த காரணத்தினாலோ என்னவோ அவள் வாய் திறந்து இதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல், மெளனமாக இருக்கிறாள். ஒரு பொம்மையைத் திருமணம் செய்துகொண்டு விட்டோமோ என்ற சந்தேகம் கொண்ட கோவலன் மாதவியை நாடியதில் ஆச்சர்யமில்லை.

கண்ணகி கோவலனுடன் நெருங்கி அளவளாவியதாகக் 'கொலைக் களக்காதை ' வரை எங்குமே காட்டவில்லை ஆசிரியர். இன்னும் சொல்லப் போனால், தேவந்தி என்ற பார்ப்பனப் பெண்ணிடம் தன் கனவைக் கூறுமிடத்தைத் தவிர, கணவனைப் பிரிந்த துயரத்தைத் தனக்கு ஒரு பெருமையாகக் கொண்டு அவள் வாளாயிருப்பதைத்தான் இளங்கோவடிகள் சுட்டிக் காட்டுகிறார். சோமகுண்டம், சூரிய குண்டம் என்ற பெயருடைய துறைகளில் மூழ்கிக் காமவேள் கோட்டம் சென்று தொழுதால் பிரிந்த கணவனை மீண்டும் அடையலாம் என்று தேவந்தி அவளிடத்துக் கூறும்போது, அது 'பீடன்று ' என்று சொல்லிக் கண்ணகி மறுத்துவிடுகிறாள். கோவலன் திரும்பி வந்துவிட்டால் தன் கற்புநெறியை உலகுக்குக் காட்ட முடியாமல் போய்விடுமோ என்று அவள் அஞ்சியதாகத் தெரிகிறது.

ஆனால் கோவலன் அவள் தேவந்தியிடம் பேசிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் மாதவியை விட்டு நீங்கி அவளை அடைகிறான். கலைஞர்களுக்கே உள்ள ஒரு நிலை கொள்ளா மனமுடையவன் கோவலன். தான் அநுபவிக்கும் பொருள் தனக்கே மட்டும் உரியதாக இருக்க வேண்டும் என்று ஆக்ரமிப்பு மனப்பான்மை அவனுக்கிருந்தது. மாதவி கோயிலில் சென்று பலர் முன்னிலையில் நடனமாடுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அத்தகைய சந்தர்ப்பமொன்றில்தான் அவன் கோபத்தைத் தணிக்க மாதவி அவனைக் கடலாட அழைத்துச் சென்றாள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால் அங்கும் அவன் சினத்தின் செறிவை உணராமல், வழக்கம்போல் அவன் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு ஒன்று அவள் பாடப்போய், அவன் அவளைப் புறக்கணித்துக் கண்ணகியிடம் வந்துவிடுகிறான். கோவலன் எவ்வளவு எளிதாக உணர்ச்சி வயப்படுகிறான் என்பதை ஆசிரியர் இதன் மூலம் காட்டுகிறார்.

கோவலன் கண்ணகியிடம் வந்து மாதவியைத் தூற்றுகிறான். 'சலம் புணர் கொள்கைச் சலதி ' என்கிறான். பிறகு, பழைய நினைவுகளைத் தூண்டும் பூம்புகாரில் இருப்பதை விட மதுரைக்குச் சென்று புதிய வாழ்வு தொடங்குவோம் என்று மனதில் கருதி அவளை உடனே புறப்படும்படி பணிக்கிறான். கணவனை கணவனாகக் கண்டு அவன்பால் காதல் கொண்ட ஒரு பெண் எப்படி நடந்துகொண்டிருப்பாள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவ்வளவு நாட்கள் தன்னைவிட்டுப் பிரிந்திருந்ததற்காக முதலில் சீறியிருப்பாள். இதைத்தான் கோவலன் அவளிடம் எதிர்பார்த்தான்.

ஏனென்றால் 'கொலைக்களக் காதையில் ' அவன் அவளைக் கேட்கிறான். 'இவ்வளவு துன்பம் நான் உனக்குச் செய்திருந்தும், அன்று பூம்புகாரில் நான் மதுரைக்குப் புறப்படு என்றதும், புறப்பட்டு விட்டாயே, என் செய்தனை ? ' கண்ணகி பூம்புகாரில் தன்னிடம் கோபங்கொள்ளவில்லை என்பது அவன்மனத்தை உறுத்திக் கொண்டே இருந்திருக்கவேண்டும். அவள் கோபங்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, அவள் கோவலனின் மனநிலையைப் பற்றிக் கவலைப்படாமல், தன் சிலம்புகளை எடுத்துக்கொண்டு அவன் மறுபடியும் மாதவியிடம் போனால் தனக்கு எந்தவிதமான தடையுமில்லை என்பது போல் பேசுகிறாள். தன்னுடைய பழைய வாழ்க்கைக்காக வருந்தி அவன் மனம் விட்டு பேசும்போது, 'உங்களைவிட நான் எவ்வளவு உயர்ந்தவள் ' என்று காட்டுவது போல் அவள் பேசியதுதான் அவனுடைய எரிச்சலுக்குக் காரணமாக இருக்கவேண்டும். 'சரி உன் சிலம்புகளை எடுத்துக்கொண்டு வா, அவற்றை விற்று இழந்த பொருள்களை மீண்டும் பெறுவோம் ' என்று வியாபார மொழியில் அவன் பதில் கூறுகிறான்.

மதுரைக்கு இருவரும் புறப்பட்டுப் போகும்போது, நடு வழியிலேயே அவள்பால் சலிப்படைந்த அவன் அவளைப் பிரிந்துவிடக்கூடாதே என்ற ஒரு பாதுகாப்பு நிலையாகக் காவுந்தி அடிகள் வந்து சேர்கின்றார். கோவலனும் கண்ணகியும் தனித்து இருப்பதற்கான பல வாய்ப்புக்கள் ஏற்பட்டாலும், கோவலன் மனம் அவளுடன் ஒட்டவில்லை. அவன் கண்ணகியிடத்து பேசுவதைக் காட்டிலும், கவுந்தி அடிகளிடந்தான் அதிகம் பேசுகிறான். புறஞ்சேரி இறுத்த காதையில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. கோசிகாமணி கோவலனிடம் மாதவி தந்த ஓலையைக் கொடுக்கிறான்; அவள் அந்த ஓலையைத் தன் கூந்தலில் ஒற்றி அனுப்பியிருந்த காரணத்தால், அவ்வோலையின் நறுமணத்தை மோந்தளவில், மெய்மறந்து நிற்கிறான் கோவலன்.

பழைய நினைவுகள் எழுகின்றன. ஏட்டைப் பிரித்துப் பார்க்க வேண்டுமென்று கூட அவனுக்குத் தோன்றவில்லை. 'சலம்புணர் கொள்ளச் சலதி ' என்று மாதவியை ஏசியவனுக்கு அவளோடு நடத்திய இன்ப வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. கட்டிய மனைவி என்ற காரணத்தினால் கண்ணகியோடு இன்ப வாழ்க்கை நடத்த வேண்டுமென்று கடமையுணர்வின் பொருட்டு அவன் முயன்றாலும், கண்ணகி அதற்கு இடங்கொடுக்கவில்லை. கணவனை மனிதன் என்று மறந்து தெய்வமாக ஏற்று, தானும் கற்புத் தெய்வமாக வேண்டுமென்ற ஆவேசத்தில், ஒதுங்கியே வாழ்கிறாள். மாதவி அனுப்பிய கடிதம் அவனை மறுபடியும் பழைய கோவலனாக மாற்றிவிடுகிறது. மனத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. வழியில் கண்ட பாணர்களிடம் யாழை வாங்கி, யாவரும் வியக்கும்படியான அளவுக்கு இசையைக் கூட்டுகிறான். கோவலனுக்கும் கண்ணகிக்கும் எந்த அளவிலும் மனப்பொருத்தமில்லை என்று மிக நுண்மையான முறையில் காட்டுகிறார் இளங்கோவடிகள்.

கண்ணகி 'கொலைக்களக் காதையில் ' கோவலனிடம் கூறுகிறாள்: ' நீங்கள் என்னைவிட்டுப் பிரிந்ததைப் பற்றிக்கூட நான் அதிகமாக வருந்தவில்லை... ஆனால் நீங்கள் என்னை விட்டுப் பிரிந்திருக்கிறீர்கள் என்பதற்காக நான் வருத்தத்துடன் தோன்றினால் உங்கள் பெற்றோர் வருந்துவார்களே என்று நான் புன்னகையுடன் இருக்கத் தொடங்கினேன்.

ஆனால் தாங்கள் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக இந்தப் பெண் பொய்ப் புன்னகையுடன் இருக்கிறாளே என்று அவர்கள் மனம் இன்னும் அதிகமாக வருந்தும்படியான அளவுக்கு நீங்கள் தவறான ஒழுக்கத்தில் ஈடுபட்டார்கள்... நான் ஒரு கற்புடைய பெண். என்னைப் பொறுத்தவரையில் நான் நடந்துகொண்டதுதான் எனக்கு நியாயமாகப் படுகிறது.. ' தான் ஒரு கற்புடைய பெண் என்பதை வலியுறுத்தி, கோவலன் பிரிந்தது தன் கற்பைக் காட்ட ஒரு வாய்ப்பாக இருந்தது போல் அவள் பேசுகிறாள். கோவலன் தவறாகக் குற்றஞ் சாட்டப்பட்டுக் கொலையுண்டு இறந்தான் என்று கேள்வியுற்ற அவள், மதுரை வீதிகளில் அரற்றிக்கொண்டு வரும்போது கூறுகிறாள்:

 

பெண்டிரும் உண்டு கொல் பெண்டிரும் உண்டு கொல்

கொண்ட கொழுநர் உறுகுறை குறை தாங்குறூஉம்

பெண்டிரும் உண்டு கொல் பெண்டிரும் உண்டு கொல். '

'பொது மகளிரிடைப் பிரிதலும் அவரோடு கலந்த செல்வியும் புணர்ச்சிக் குறிகளும் கண்டுழியும் அவர் தெருட்டத் தெருண்டு குறையறப் பொறுத்தல் ' என்று உணர எழுதுகிறார் அடியார்க்கு நல்லார். ஆகவே கோவலன் மாதவியிடத்துச் சென்றதைத் தன் கற்பின் ஆற்றலினால் பொறுத்துக்கொண்ட செய்தியைத் தனக்கு ஒரு பெருமை தரும்விஷயமாக ஏற்றிப் பேசுகிறாள் கண்ணகி. கோவலன் மாதவியிடத்துப் போயிருக்காவிட்டால், இதுகண்ணகிக்கு ஒரு பெரிய ஏமாற்றமாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. பழைய தமிழிலக்கியங்களில், தலைவன் பரத்தையரிடம் சென்று திரும்பும்போது, தலைவி ஊடுவதாகப் பல செய்யுட்கள் காணப்படுகின்றன.

ஆனால் கண்ணகி இத்தகைய தமிழ் மரபிலும் வந்தவளாகத் தெரியவில்லை. கோவலன் மாதவியிடம் சென்றதற்காகக் கடிந்து ஒரு சொல்கூடப் பேசவில்லை. கற்பைப்பற்றிய அவளுடைய 'அப்செஷன் ' தான் காவியம் முழுவதும் பேசப்படுகிறது. மாதவி கோவலனைப் பிரிந்ததும் கோசிகாமாணி மூலம் கடிதம் அனுப்புகிறாள், இது இயற்கை. ஆனால் கண்ணகி, கோவலன் அவளை விட்டுப் பிரிந்திருந்தபோது, கடிதமோ, தூதோ அனுப்பியதாகச் சிலப்பதிகாரம் முழுவதும் செய்தியில்லை. இளங்கோவடிகள் கண்ணகியின் குணச்சித்திரத்தை எவ்வளவு நுணுக்கமாகப் படைத்திருக்கிறார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

கோவலன் ஒரு சாதாரண மனிதனுக்குரிய விருப்பு, வெறுப்புக்களுடையவன். தெய்வமாக வேண்டுமென்ற ஆவேசத்துடன் இருந்த ஒரு பெண்ணை மணந்ததுதான் அவன் குற்றம். அவன் மதுரைக்குப் புறப்படும்படி கண்ணகியைக்கேட்டபோது, அவள் இதற்கு மறுத்து, அவன் மாதவியிடம் இதுவரை இருந்ததற்காக ஏசி அவனுடன் வழக்காடியிருந்திருந்தால், கோவலன் மதுரைக்குப் போகாமலே இருந்திருக்கலாம். சிலப்பதிகாரக் கதை நடந்திருக்காது.... அதாவது, சிலம்பை ஒட்டிய நிகழ்ச்சி ஏற்பட்டிருக்காது. சிலப்பதிகாரத்தில் சிலம்பு ஒரு குறிப்பிடத்தக்க கதாபாத்திரம். காதலை நாடிவந்த கோவலனிடம் சிலம்பைக் குறிப்பிட்டு அவற்றை மாதவியிடம் எடுத்துச் செல்லும்படி கண்ணகி சொன்னபோதுதான், அவளிடம் சலிப்படைந்த கோவலனுக்குச் சிலம்பின் வணிக முக்கியத்துவத்தை உணர்வதற்கான ஒரு சூழ்நிலை உருவாகிறது. காதல் எண்ணம்போய் வியாபார நோக்கு தலைதூக்குகிறது.

மாதவி கோவலனுக்கு ஏற்ற மனைவியாக இருக்கிறாள். அவனுடைய மனநிலை அறிந்து அவனுக்கு இன்பம் ஊட்டுகிறாள். அவனுக்குக் 'கலவியும் புலவியும் மாறி மாறி ' அளிக்கிறாள். 'கலவியும் புலவியும் மாறி மாறி அளித்து ' என்று இளங்கோவடிகள் கூறுவது, அன்டனி அன்ட் கிளியோபாட்ராவில் ஒரு நிகழ்ச்சியை நினைவூட்டுகிறது. கிளியோபாட்ரா தன் தோழி சார்மியாளிடம் பேசிக் கொண்டிருப்பதாக ஒரு சித்திரம்.

CLEOPATRA

See where he is, who 's with him, what he does

I did not send you; if you find him sad

Say I am dancing; if in mirth, report

That I am sudden sick; quick and return.

CHARMIAN

` Madam, me thinks if you did love him dearly

You do not hold the method to enforce

The like from him.

CLEOPATRA

what should I do, I do not

CHARMIAN

In each thing give him way

Cross him in nothing

CLEOPATRA

Thou teachest like a fool

The way to lose him.

மாதவி கிளியோபாட்ராவைப்போல் காதல் கலையில் தேர்ந்தவள். கோவலன் அவள் இந்திர விழாவின்போது நடனமாடிவிட்டு (அனைவர் முன்பும்) வருவது அவனுக்கு வெறுப்பைத் தருகிறது. அவன் கோபத்துடன் இருக்கிறான். இதை உணர்ந்த அவள் தன்னை நன்றாக அலங்கரித்துக்கொண்டு அவன் முன் வருகிறாள். இந்த ஒப்பனை 32 வரிகளில் சித்தரிக்கப்படுகின்றது. ஆன்டனியைக் கிளியோபாட்ரா முதல் முதலில் சந்திக்கச் சென்றபோது வருகின்ற வருணனையைப் போல், சிலப்பதிகாரத்தில் இது ஓர் அருமையான பகுதி. கண்ணகிக்கும் மாதவிக்குமிடையே இக்குண வேறுபாட்டை மிக நுட்பமாகக் காட்டுகிறார் இளங்கோவடிகள்.

கண்ணகியின் கற்பைச் சிறப்பித்துக் கூறுவதற்காகத்தான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றினார் என்பது தவறான கருத்து. அப்படியிருந்திருந்தால், காவிய மரபின்படி இக்காவியத்துக்கு அவர் கண்ணகியின் பெயரையே இட்டிருக்க வேண்டும். மனப் பொருத்தமில்லாத ஒரு மண வாழ்க்கையின் பாலைவன நிலையைச் சுட்டிக் காட்ட எழுந்ததே இக்காவியம். வஞ்சிக் காண்டம் ஓர் இடைச் செருகல் என்றுங் கருத இடமிருக்கிறது...

நன்றி: திண்ணை

Nov 24, 2010

இ.பா: நெடுவழிப் பயணம்-எஸ்.ரா

இந்திரா பார்த்தசாரதி
கதாவிலாசம்


ஊர் சுற்றிகளின் மீது எனக்கு எப்போதுமே தனி ப்ரியம் உண்டு. அதிலும், நெடுஞ்சாலை திறந்து கிடக்கிறது என்பதால், நோக்கமற்று எங்குவேண்டுமானாலும் சுற்றித் திரியும் மனிதர்கள் வரம் பெற்றவர்கள்!

ருஷ்யாவின் புகழ்பெற்ற தத்துவஞானியான குர்ஜீப், ஒரு ஊர்சுற்றி! அவரும் அவரது நண்பர்களும் i_paaமனம் போன போக்கில் சுற்றி அலைவார்கள். போகுமிடங்களில் என்ன கிடைக்கிறதோ, அவற்றை வாங்கி பிளாட்பாரத்தில் கடை போட்டு விற்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை ஈட்டிக்கொண்டு, அடுத்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.

ஒரு முறை பாலைவனத்தைக் கடந்து போகும் நிலை உருவாகிறது. அவர்கள் ஒரு கிராமத்தில் தங்கி, அடுத்து எப்படிப் பயணம் மேற்கொள்வது என்று யோசனை செய்கிறார்கள். ‘பாலைப் புயல்  வருவதற்குள் கடந்து போகாவிட்டால், புயல் உங்களை அடித்துக்கொண்டு போய்விடும்’ என்கிறார் அங்கே இருக்கிற கிராமவாசி. ‘பாலைப் புயலில் என்ன நடக்கும்?’ என்று ஆர்வமாகக் கேட்கிறார் குர்ஜீப். ‘பாலைவனத்தில் புயல் அடிக்கத் துவங்கினால், இருபது அடி உயரம் வரை மணல் மேலே சுற்றிக்கொண்டு வரும். அதனால், நடந்து செல்பவர் களை மணல் மூடிவிடும்’ என்கிறார் கிராமவாசி. குர்ஜீப் உற்சாகமாகி, ‘அப்படியானால் நாம் பாலைவனப் புயல் துவங்கியதும், நம் பயணத்தைத் துவக்கலாம்’ என்று சொல்லிவிட்டு, அங்கேயே தங்கி, இருபது அடி உயரத்துக்கு ஏணி போல ஒன்றைச் செய்து, அதன்மீது ஏறி நின்றபடி பாலைவனத்தில் நடப்பதற்குத் தினமும் பழகுகிறார்கள்.
முடிவில், பாலைப் புயல் உருவாகிறது. அவர்கள் தங்கள் கால்களில் மர ஏணிகளைக் கட்டிக்கொண்டு பாலைவனத்தில் நடந்து போகிறார்கள். தங்கள் காலடியில் புயல் கடந்து
போவதைக் கண்டதாகவும், புயல் நாம் நினைப்பது போல அச்சம் தரக்கூடியது அல்ல, அது ஒரு மூர்க்கமான அழகுடையது என்று குறிப்பிடும் குர்ஜீப், ‘சாகசம்தான் பயணத்தின் உண்மையான சுவை!’ என்கிறார்.

பத்து வருடங்களுக்கு முன்பு, ஒரு முறை சென்னையில் இருந்து மதுரைக்குப் போவதற்காக, இது போன்றதொரு சாகசப் பயணத்தை மேற்கொள்ளத் தீர்மானித்தேன். அதைச் சாகசம் என்று நானாகச் சொல்லிக்கொள்வதற்குக் காரணம், டவுன் பஸ் டவுன் பஸ்ஸாக மாறி சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்வது என நான் முடிவெடுத்ததுதான்.

பொதுவாக, டவுன் பஸ்ஸில் ஒரு மணி நேரம் செல்வதற்குள், அது இருபது இடங்களில் நிற்கும். மூச்சு திணறக் கூட்டம் தொற்றிக் கொண்டுவிடும். அப்படி யான பஸ்ஸில் மதுரை வரை போவதென்றால், அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று அனுபவித்துப் பார்க்கத் தோன்றியது. மறுநாளே அதைச் செயல்படுத்த முடிவு செய்தேன்.

பயணம் கிளம்பும் முன் நானே சில கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொண்டேன். டவுன் பஸ்ஸில் மட்டும்தான் போக வேண்டும். இரவில் டவுன் பஸ் ஓடவில்லை என்றால், எங்கே கடைசியாகச் செல் கிறோமோ, அந்த பஸ் ஸ்டாண்டில் இரவைக் கழிக்க வேண்டும். மறுநாள் காலை, முதல் டவுன் பஸ்ஸைப் பிடித்துப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன்.
பயணம் சைதாப்பேட்டையில் துவங்கியது. ஒரு டவுன் பஸ்ஸில் மாலை ஏழு மணிக்குப் புறப்பட்டேன். ஒரு மணி நேரத்தில் தாம்பரம் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து வண்டலூர் வரை ஒரு பஸ், அங்கிருந்து செங்கல்பட்டு வரை ஒரு பஸ் என செங்கல்பட்டு போய்ச் சேர்வதற்குள் இரவாகி விட்டிருந்தது.

அங்கேயே பஸ் ஸ்டாண்டில் தங்கிவிடுவது என்று முடிவு செய்தேன். இரண்டாவது காட்சி சினிமாவுக்குப் போய்விட்டு வந்து பஸ் ஸ்டாண்டில் பாதி இருண்டுகிடந்த கொடிக்கம்பத்தின் முன் வந்து சாய்ந்து உட்கார்ந்தேன்.

வானில் அன்று எக்கச்சக்க நட்சத்திரங்கள். இரவுப் பேருந்து கள் கடந்து சென்றுகொண்டே இருந்தன. பக்கத்துக் கிராமங் களுக்குச் செல்லும் மனிதர்கள் ஒன்றிரண்டு பேர் துண்டை விரித்து ஓரமாக படுத்து உறங்கினார்கள். ஒரு பிச்சைக்காரன் எதிரேயிருந்த அடி பைப் ஒன்றில் தண்ணீர் அடித்து குளித்துக்கொண்டு இருந்தான். காற்று ஏகாந்தமாக இருந்தது. எப்போது உறங்கினேன் என்று தெரியாது.

விடிகாலையின் குளிர் உடலை நடுக்கிய போது, பொழுது விடிந்து, பேருந்து நிலையத் தில் முதல் பஸ்ஸின் வெளிச்சம் தெரிந்தது. பாதித் தூக்கத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டேன். தூங்கிக்கொண்டே பஸ்ஸில் போய் இறங்கி, அங்கே அடுத்த பஸ்ஸைப் பிடித்து இன்னொரு ஊர் என கசகசப்பும் அசதியுமாக பயணம் நீண்டது. முதல் நாள் மாலை புறப்பட்ட ஏழு மணியையும் கடந்துவிட்டது. அப்போதும் நான் மதுரையை நெருங்கவில்லை. ஒன்பதரை மணிக்கு மேலூரைக் கடந்து, தொலைவில் மதுரையின் மெல்லிய வெளிச்சம் தெரியத் துவங்கியது.

மதுரைக்கு வந்து இறங்கியபோது மணி பத்தைக் கடந்துவிட்டிருந்தது. டவுன் பஸ் டிக்கெட்டுகள் யாவும் என் பையில் நிரம்பியிருந் தன. அப்படியே நண்பனின் அறைக்குச் சென்று கதவைத் தட்டியபோது, அவன் என்னை விநோதமாகப் பார்த்தபடி, ‘எங்கேயிருந்து வருகிறாய்?’ என்று கேட்டான். ‘சென்னையிலிருந்து’ என்று சொன்னதும் சிரிப்போடு, ‘எப்படி நடந்தே வந்தியா?’ என்று கேட்டான்.

இதுவும் நல்ல யோசனையாக இருக்கிறதே என்று தோன்றியது. நான் சிரித்துக்கொண்டே பையில்  இருந்த டவுன் பஸ் டிக்கெட்டுகளை எடுத்துக் காட்டினேன். அவனால் நம்ப முடியவில்லை. எதற்காக இந்த முட்டாள்தனம் என்பதுபோல என்னைப் பார்த்துத் திகைத்துப் போயிருந்தான். குளித்துவிட்டு மொட்டை மாடியில் படுத்துக்கொண்டபடி ஏகாந்தமான காற்றை அனுபவித்தபோது, பயணத்தின் உண்மையான ருசி புலப்பட்டது.

எத்தனை விதமான மனிதர்கள், எவ்வளவு பேருந்து நிறுத்தங்கள், எத்தனை கிராமங்களின் பெயர்கள்... உண்மையில் அதிவேகமாகக் கடந்துவிடும் பயணம் என்பது இத்தனையும் இழந்துவிடுவது என்பது அப்போதுதான் புரிந்தது. கூட இருந்த என் நண்பன் சொன்னான்... ‘இப்படித்தானே நமது முன்னோர்கள் ஒரு ஊரைவிட்டு மற்றொரு ஊர் போயிருப்பார்கள்! நீ இந்தக் காலத்து ஆள் இல்லைடா... பழைய ஆசாமி!’ இருவரும் சிரித்துக்கொண்டோம்.

காலம் எவ்வளவோ மாற்றங் களைக் கொண்டுவந்தபடி உள்ளது. அதில் மிக முக்கியமானது வாகனங்கள். சாலை வசதி! இந்தியா முழுவதும் சுற்றி அலைந்தபோதும் தமிழகத்தில் உள்ளது போல இத்தனை அழகான பஸ்களையோ, முறையான சாலைகளையோ வேறு எங்கும் கண்டதில்லை.

அதிலும் இங்குள்ள சொகுசுப் பேருந்துகளைக் காணும்போது அதன் மதிப்பு நமக்குத் தெரிவது இல்லை. மற்ற மாநிலங்களில் பயணம் செய்யும்போதுதான், நாம் எவ்வளவு பாக்கியசாலிகள் என்பது புரியும்.

வட மாநிலங்களில் உள்ள பேருந்துகளும், பேருந்து நிலையங் களும் நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாதபடி இருக்கும். டெல்லியின் புகழ்பெற்ற பேருந்து நிலையம் செங்கல்பட்டு பேருந்து நிலையத்தின் அளவில்தான் இருக்கிறது. அதுவும் அங்கிருந்து கிளம்பும் நூற்றுக்கணக்கான அதிவேகப் புற நகர்ப் பேருந்துகளும் நமது லோக்கல் டவுன் பஸ்ஸைப் போன்றவை. அதன் சிவப்பு நிறமும், ஒருபோதும் மூட முடியாத கண்ணாடி ஜன்னல்களும் என்றும் மாறவே மாறாதவை.
மாநகர வாழ்க்கையில் ஒவ்வொரு வரும் சராசரியாக தினம் இரண்டு மணி நேரமாவது பயணம் செய்கிறார்கள். அதிலும் ரயிலும், பேருந்தும், ஆட்டோக்களும், கார்களும் பகலிரவு பேதமில்லாமல் சாலையைக் கடந்துகொண்டேதான் இருக்கின்றன.

சென்னையில் எவ்வளவு ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன என்று கற்பனை செய்து பார்க்கவே முடிய வில்லை. ஆனாலும், சென்னை ஆட்டோ டிரைவர்களிடம் பேரம் பேசி முடிப்பது பெரிய கலை. அதில் விற்பன்னர் ஆவது எவருக்கும் சாத்தியமானதும் இல்லை.

‘ஹெராக்களிட்ஸ்’ஸின் புகழ்பெற்ற வாசகமான ‘ஓடும் ஆற்றில் இரண்டு முறை ஒரே இடத்தில் இறங்க முடியாது!’ என்பது போல, சென்னையில் ஒரே இடத்துக்கு, ஒரே வாடகை s.ramakrishnanகொடுத்து இரண்டு முறை பயணம் செய்த சந்தர்ப்பம் இதுவரை வாய்க்கவே இல்லை.

மாநகர வாழ்வில் ஆட்டோக்களைப் பிடிக்கும் சாகசம் ஏற்படும் ஒவ்வொரு முறையும் மனதில் நினைவோடுவது இந்திரா பார்த்தசாரதியின் ‘தொலைவு’ என்ற கதை. இந்திரா பார்த்தசாரதி பல வருடங்கள் டெல்லியில் வாழ்ந்தவர். அவரது இக்கதை, டெல்லியில் ஒரு அப்பாவும் பெண்ணும், ஒரு ஆட்டோ பிடிப்பதற்காக எப்படி அலைகிறார்கள் என்பதைப் பற்றியதே!

ஜன்பத்  டெல்லியின் போக்குவரத்து மிகுந்த இடம். அங்கே வாசுவும் அவரது ஏழு வயது மகள் கமலியும் தங்கள் வீட்டுக் குச் செல்ல ஒரு ஆட்டோ பிடிப்பதற்காகக் காத்திருக்கிறார்கள். டவுன் பஸ் ஏறிப் போக முடியாது. அவ்வளவு கூட்டம். காலியாக ஏதாவது ஒரு ஆட்டோ வந்தால் அதில் ஏறிக்கொண்டுவிடலாம் என்று காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் நேரம் ஆட்டோ கிடைக்கவே இல்லை.

மெதுவாக சாலையில் நடந்தபடியே ஏதாவது ஆட்டோ வருகிறதா என்று பார்த்துக்கொண்டே போகிறார்கள். டாக்ஸியில் போகலாம். ஆனால், அதற்கு மாத வருமானம் இடம் தரவில்லை. தனது குடும்பச் சுமையை நினைத்தபடியே வாசு மெதுவாக நடக்கும்போது, அவன் நண்பன் மூர்த்தி காரில் வருகிறான். அவன், தான் லோதி காலனி வழியாகப் போவதாகச் சொல்லி ஏறிக்கொள்ளச் சொல்கிறான்.

வாசுவுக்கு அது பிடிக்கவில்லை. காரணம், பால்ய வயதில் உதவாக்கரையாக இருந்த அவன் டெல்லிக்கு வந்து பெரிய ஆளாக மாறியிருப்பது வாசுவுக் குச் சற்றே பொறாமையை உருவாக்குகிறது. அதோடு, முன்பு சில முறை அவன் தன் னைப் பயன்படுத்தி தன் காரியங்களைச் சாதித்துக்கொள்ள முயன்றது நினைவுக்கு வரவே, அவனோடு செல்ல மறுக்கிறான்.
கமலிக்கு இது ஆத்திரமாக இருக் கிறது. அவள் நடந்தே போய்விடலாம் என்று ஆவேசம் கொண்டவள்போல வீம்பாக நடக்கிறாள். முடிவாக, ஒரு ஆட்டோ நிற்பதைக் கண்டு அவர்கள் காத்திருக்கும்போது, வேறு ஒரு பெண் வந்து அதில் ஏறிக்கொண்டு போய் விடுகிறாள். ‘நம் ஊரில் இப்படி ஆட்டோவுக்குக் காத்துக் கிடக்கவா செய்தோம்! பேசாமல் நடந்தே போய்விடலாம்’ என்று முடிவு செய்தபடி, அவனும் கமலியைக் கூட்டிக்கொண்டு வீராப்பாக நடக்கத் துவங்குகிறான் என்பதோடு கதை முடிகிறது.

மாநகரின் என்றும் மாறாத காட்சிகளில் ஒன்று இக்கதையில் துல்லியமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

போதி மரத்தில் ஞானம் பெற்ற புத்தனேகூட எண்பது வயது வரை நடந்து சுற்றி இருக்கிறான். கிறிஸ்துவும்கூட தேசம் விட்டு தேசம் அலைந்து திரிந்திருக்கிறார். உலகுக்கு வழிகாட்ட வந்தவர்கள் ஓரிடத்தில் தங்கியிருப்பதில்லை. அல்லது, பயணம்தான் அவர்களை உலகுக்கு வெளிப்படுத்துகிறது.

சாலை நம் வாசலில் துவங்கி, முடிவற்று உலகமெங்கும் விரிந்தோடிக் கொண்டு இருக்கிறது. நமக்குத் தேவையானது எல்லாம் பயணம் போவதற்கான விருப்பமும் மனதும் மட்டும்தான்! கும்பகோணத்தில் 1930-ல் பிறந்த இந்திரா பார்த்தசாரதி தமிழின் தனிச்சிறப்பு மிக்க எழுத்தாளர். இவர் வைஷ்ண சித்தாந்தம் குறித்து ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றவர். இவரது குருதிப்புனல் நாவலுக் காக 1978-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர். சிறந்த நாடகாசிரியர். நாடக உலகுக்கு இவர் ஆற்றிய சேவைக்காக சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவர். இப்படி இரண்டு முக்கிய தேசிய விருதுகள் பெற்ற ஒரே எழுத்தாளர் இவர் மட்டுமே! மழை, போர்வை போர்த்திய உடல்கள், நந்தன் கதை போன்றவை இவரது முக்கிய நாடகங்கள். பாண்டிச்சேரிப் பல்கலைக் கழகத்தின் நாடகத்துறை இயக்குநராக சில காலம் பணியாற்றியுள்ள இந்திரா பார்த்தசாரதி, தற்போது அமெரிக்காவாசி.

நன்றி: கதாவிலாசம், விகடன் பிரசுரம்

Sep 24, 2010

இ.பா……. எண்பது!-பாரதி மணி

என் ஐம்பதுவருட நண்பர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு எண்பது வயதாகிறது. சென்ற ஜூலை மாதம் 9-ம் தேதி உயிர்மை பதிப்பகமும் மணற்கேணியும் இணைந்து நடத்திய கருத்தரங்கிலும், அடுத்தநாள் TAG Centre-ல் இ.பா. குடும்பத்தினர் சேர்ந்து கொண்டாடிய விழாவிலும், தன் நீண்ட, பயனுள்ள வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும், இளமைத்துடிப்புடனும் தன் நியதிப்படி வாழ்ந்த ஒரு நல்ல மனிதரைப்பார்க்க முடிந்தது. இ.பா. நண்பர்களிடம் எந்த எதிர்பார்ப்புகளும் bharthimani4 இல்லாமல் பழகுவார். அவருக்கு யாரும் விரோதிகளில்லை. ‘இலக்கிய அரசியல்’ இல்லாதவர். எதற்கும் விட்டுக்கொடுக்காதவர். தமிழக அரசின் கலைமாமணி விருதை வேண்டாமென்று மறுத்தவர். தனது கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி தயங்காமல் சொல்பவர். அமெரிக்காவில் வசிக்கும் தன் மகன் முகுந்த் சிரமப்பட்டு வாங்கிக்கொடுத்த ‘பச்சை அட்டையை (American Green Card) அங்கு வசிக்க தனக்குப்பிடிக்கவில்லையென்று அங்கேயே வீசி எறிந்துவிட்டு, ஆற்காட்டாரின் மின்வெட்டுகளை சந்திக்க நிரந்தரமாக சென்னை வந்தவர். நான் சென்னை வந்தபிறகு, மீண்டும் எங்கள் நட்பு நெருக்கமானது. வாரத்துக்கொருமுறையாவது, அவரை நானோ, என்னை அவரோ தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தால், பேசிக்கொண்டேயிருப்போம். என் வீட்டிலேயோ, அவர் வீட்டிலேயோ யாராவது வந்து அழைப்புமணி அடிப்பதுவரை அது தொடரும். ‘யாரோ வாசல்லே வந்திருக்கா. அப்புறமா பேசுவோம்’ என்பது தான் எங்கள் கடைசி வாக்கியமாக இருக்கும்! பேசின செல் போனில் Call Duration 48 minutes 22 seconds என்று காட்டும்! எங்களுக்கும் பொழுது போகவேண்டாமா?

சி ல வருடங்களுக்குமுன் தன் மனைவி இந்திராவை இழந்த பார்த்தசாரதி, தன் எண்பதாவது வயதில் சதாபிஷேகத்தை மனைவியில்லாமல் கொண்டாட விரும்பவில்லை. மனைவியின் மறைவு, இவரை பெரிய அளவில் பாதித்தது. திருமதி இந்திரா இ.பா.வை ஒரு குழந்தையைப்போல் சீராட்டி குடும்ப பாரத்திலிருந்து இவருக்கு விடுதலையளித்து முற்றிலும் இலக்கியப்பணிக்காக இவரை தமிழுலகத்துக்கு தந்தார். அவர் இருந்ததுவரை, எல்லா குடும்பக்கவலைகளையும் அவரே சுமந்தார். மாதச்சம்பளத்தை இந்திராவிடம் கொடுத்துவிட்டு இவர் கவலையே இல்லாமல் இருப்பார். இ.பாவிடம் ‘இப்போ முகுந்த் எத்தனாவது படிக்கிறான்?’ என்று கேட்டால், கொஞ்சம் யோசித்துத்தான் பதில் சொல்வார்! பார்த்தசாரதி கொடுத்துவைத்தவர். எல்லோருக்கும் இம்மாதிரி மனைவிகள் அமைவதில்லை. இப்போதும் அவருக்கு அரிசி என்ன விலை, LPG சிலிண்டர் என்ன விலையென்று கேட்டால் தெரியாது! தன் அக்கா மகளையே மணந்தார். இந்திரா தன் கணவரின் காரியம் யாவினும் கைகொடுத்த அதிசயப்பெண்மணி. குழந்தைகள் பிறந்து சம்சாரம் ஆனபின்பும் தில்லிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து Master of Music பட்டம் பெற்றவர். புதுச்சேரியில் இருந்தபோது நாடகப்பள்ளி போட்ட ஒரு நாடகத்துக்கு இசையமைத்திருந்தார். இந்திராவை நான் கடைசியாகப்பார்த்தது சென்னையில் அவர் காலில் அடிபட்டு பிளாஸ்டரோடு படுக்கையில் இருந்தபோது. மூன்று மணிநேரம் சுவாரஸ்யமாக பழங்கதைகள் பேசிக்கொண்டிருந்தோம். அவரது அபார சங்கீத ஞானம் தான் பேத்தி அபூர்வாவிடம் இப்போது பரிமளிக்கிறது. தன் மனைவி இந்திராவின் இழப்பிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை. இ.பா.வும் சங்கீதத்தை விரும்பிக்கேட்பார். அவரால் எல்லா முக்கிய ராகங்களையும் அடையாளம் காணமுடியும். நான் சிலகாலம் செயலராக இருந்த தில்லி கர்நாடக சங்கீத சபாவின் எல்லா கச்சேரிகளிலும் இ.பா.வை பார்க்கலாம்.

ஆர். பார்த்தசாரதி, எழுத்தாளர் ஆனபோது தன் மனைவியின் பெயரையும் சேர்த்துக்கொண்டார். அப்போது அது புது ட்ரென்டை உருவாக்கியது. இவருக்குப்பின்னால் வந்த எழுத்தாளர்கள் பலர் தன் மனைவியின் பெயரையும் ஒட்டிக்கொண்டார்கள், சுஜாதா உட்பட. அப்போது சென்னை வந்தால், பல நண்பர்கள் ‘ஓ, இந்திரா பார்த்தசாரதி பொம்மனாட்டி இல்லையா?’என்று வியந்திருக்கிறார்கள். பிற மாநிலங்களிலிருந்து இவருக்கு Mrs. Indira Parthasarathy என்று பல அழைப்புகள் வந்திருக்கின்றன! இவர் சகோதரர் ஆர். வெங்கடாச்சாரி தன் மகனுடன் இப்போது பெங்களூரில் வசிக்கிறார். இவரும் தில்லியில் Times of India Group வெளியிடும் The Economic Times பத்திரிகையில் Chief News Editor ஆக பணிபுரிந்து ரிட்டயரானவர். எனக்கு பலவிதத்திலும் உதவி செய்திருக்கிறார். தில்லி வரும் என் வெளிநாட்டு வியாபார நண்பர்களைக்குறித்து நானே எழுதிக்கொடுக்கும் நேர்காணல்களையும் புகைப்படங்களையும் தானே பேட்டி கண்டதாக அடுத்தநாள் டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் எகனாமிக் டைம்ஸிலும் பெரிய புகைப்படங்களுடன் மூன்றாம் பக்கத்தில் வெளியிடுவார். தங்கள் புகைப்படங்களையும் கட்டுரைகளையும் பத்திரிகையில் பார்க்கும் ஜெர்மானிய நண்பர்கள் இந்தியாவில் அன்று அதுதான் முக்கியச்செய்தி என்று நினைத்து சந்தோஷப்படுவார்கள். என் ஆபீசில் என் புகழ் ராக்கெட் வேகத்தில் உயரே பறக்கும். இப்போதும் பெங்களூர் போனால் அவரை சந்திப்பதுண்டு.

34666_1317046215373_1507276454_30664210_3568118_nஇந்திரா பார்த்தசாரதியும் நானும் தில்லிக்குப்பொனது ஒரே வருடம். 1955. அவர் தில்லி Madrasi Education Association (MEA) – பிற்காலத்தில் தில்லிவாசிகள் அதை Money Eating Association என்று கேலி செய்வோம் --– நடத்திவந்த லோதிரோடு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகச்சேர்ந்தார். லோதி ரோடில் ஒரு அறையில் பிரும்மச்சாரியாக வாசம். சிதம்பரம் மெஸ்ஸில் இருவேளைச்சாப்பாடு. அங்கே ஓரிருமுறை பார்த்திருக்கிறேன். பேசியதில்லை. பார்த்தசாரதி பார்ப்பதற்கு இப்போதிருப்பதைவிட இன்னும் அழகாக இருப்பார்! (புகைப்படத்தில் நீங்களே பார்க்கலாம்). அவருக்கு அந்தப்பள்ளியில் சக ஆசிரியர் லக்ஷ்மணன். இந்த ‘ராமருக்கும்’ அவர் லட்சுமணனாகவே எப்போதும் இவருடனேயே இருப்பார். ’அந்த’ லட்சுமணனைப்போலவே, அவருக்கு ‘இந்த’ ராமரிடம் ஒரு பக்தி. எந்த வேலை சொன்னாலும், இன்முகத்தோடே செய்வார். இ.பா.வின் வீட்டில் ஒரு அங்கமாகவே மாறியிருந்தார். இவர் மனைவி இந்திராவுக்கு ஒரு தம்பி. குழந்தைகள் முகுந்த், பத்மா, மாதவிக்கு நல்ல மாமா. இவருடன் எப்போதுமே இருந்தாலும், இலக்கியத்துக்கும் அவருக்கும் ஸ்நானப்ராப்தி கூடக்கிடையாது! நல்ல ஆத்மா….இப்போது எங்கிருக்கிறாரோ? இந்தவருட ஆரம்பத்தில் இந்தப்பள்ளியின் பழைய மாணவர்கள் சங்கம் தில்லியில் ஒரு பெரிய விழாவை ஏற்பாடு செய்து, அதற்கு தலைமை தாங்க தன்னை நேரில் வந்து அழைத்ததாகவும், கால்வலி, முதுமை காரணமாக தன் இயலாமையைத்தெரிவித்ததாகவும் சாரதி என்னிடம் சொன்னார். ‘என்ன சிரமம் இருந்தாலும் போயுட்டு வாருமைய்யா! உம்மிடம் படித்த பழைய மாணவர்களை ஒருசேரப்பார்ப்பதும், அவர்கள் ஒவ்வொருவராக உங்கள் காலைத்தொட்டு வணங்கி, ‘சார்! நான் இன்ன வருடம் ஒங்ககிட்டெ படிச்ச மாணவன்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதும் எல்லோருக்கும் கிட்டாத பாக்யம் ஐயா! எழுத்தறிவித்தவன் இறைவனல்லவா?’ என்று அவருக்கு நான் ‘உபதேசம்’ செய்தேன்!

1956-ல் எங்கள் தட்சிணபாரத நாடக சபா தொடங்கியவுடன், மாலை வேளைகளில் நாடக  ஒத்திகைக்காக லோதிரோடு தமிழ்ப்பள்ளிக்குப்போவோம். பள்ளி நிர்வாகம் எங்கள் நாடக ஒத்திகைக்கு ஓரிரு வகுப்பு அறைகளை இலவசமாக தந்துதவியது. அப்போது பள்ளி வேலைகளை முடித்துவிட்டு, ராம லட்சுமணர்களாக இ.பா.வும் லக்ஷ்மணனும் வீட்டுக்குப்போகும் நேரம். ‘எப்போது நாடகம்? எங்கே மேடையேற்றம்?’ போன்ற விசாரணைகள். நான் ஆனந்தவிகடன், கல்கியில் அவரது முத்திரைக்கதைகளைப் படித்துவிட்டு, அவரை சந்திக்கும்போது பாராட்டுவேன். அதன்பிறகு தான் அவரது ‘தந்திர பூமி’ கணையாழியில் வெளிவந்தது என ஞாபகம். எங்கள் மனதில் முக்கியமான தமிழ் எழுத்தாளர் என்ற அந்தஸ்தைப்பெற்றுவிட்டிருந்தார். அவரிடம் பேசும்போது நாங்கள் காட்டும் மரியாதை அதிகமாயிற்று.

எங்களைப்போன்ற தில்லிவாசிகளுக்கு அவர் கதை, நாவல்களில் தமிழ்நாட்டு வாசகர்களை விட ஆர்வம் அதிகமாக இருந்தது. காரணம் அப்போதிருந்த பல தில்லிப்பிரமுகர்கள் அவர் நாவல்களில் கதைமாந்தராக உலா வருவார்கள். அவர் கதைகளில் முக்கிய விஞ்ஞானியும் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன், பூதலிங்கம் ICS, அவர் ம்னைவி ‘கிருத்திகா’, சக்ரவர்த்தி ஐயங்கார், சி.எஸ். ராமச்சந்திரன் ICS, கர்நாடக சங்கீதசபா தலைவர் ஏ.வி. வெங்கடசுப்பன் (சிலர் அவரை ‘ஆளை விடு வெங்கடசுப்பன் என்று கேலி செய்வார்கள்), National Cultural Organisation (NCO) தலைவர் என்.பி. சேஷாத்ரி –-- இவரைப்பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதியே தீரவேண்டும் -- இவர்களெல்லாம் இவரது படைப்புகளில் தங்கள் குண இயல்புகளுடன் வந்துபோவது தில்லியில் வாழ்ந்த எங்களுக்கு ஒரு போனஸ் மகிழ்ச்சி. ஒரு கதையில், ஒரு ICS அதிகாரியின் மனைவி, வெளிநாடு போகும் சின்ன அதிகாரிகளிடம் தங்களுக்குத்தேவையான, ஆனால் இந்தியாவில் அப்போது கிடைக்காத Bras, Sanitary Napkins போன்றவைகளின் அளவு கொடுத்து வாங்கி வரச்சொல்வார். அவர் யாரென்பது தில்லிவாசிகளுக்குத்தான் தெரியும். இன்னொரு நாவலில் – வேஷங்கள் என்று நினைக்கிறேன் -- ஒரு சபாவின் தலைவர் எல்லா சங்கீத வித்வான்களையும், அகால வேளையில் வீட்டுக்கு கூட்டிவந்து, ராக்கூத்தடித்து, கட்டிய மனைவியை ஒரு புழு போல் நினைத்து வேலைவாங்கும் படலம் விவரிக்கப்படும். அந்த முகம் யாருடையதென்று எங்களுக்குத்தான் தெரியும். வெளியூர் வாசகர்களுக்கு அவர் ஒரு பாத்திரம் மட்டுமே. இதைப்பற்றி இ.பா.விடம் கேட்டால், சிரித்துக்கொண்டே, ‘நல்லகாலம், அவர்களுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் வெகுதூரம். என் கதைகளை அவர்கள் படிப்பதே இல்லை!’ என்று சொல்வார்! அப்படியும் இவர் தன்னைப்பற்றி எழுதியதை படித்து கோபம் கொண்ட ஒரு சபா தலைவர் இவரை பழிக்குப்பழி வாங்க நினைத்து, எமெர்ஜென்ஸி காலத்தில் இவர் எழுதிய ஒரு கட்டுரையில் இந்திரா காந்தியைப்பற்றி அவதூறாக எழுதியதாக போலீசில் புகார் கொடுத்தார். எமெர்ஜென்ஸியல்லவா? இ.பா. டிபன்ஸ் காலனி போலீஸ் ஸ்டேஷனுக்கு போக நேர்ந்தது. நல்ல காலமாக இவரிடம் படித்த ஒரு IAS அதிகாரி சரியான சமயத்தில் தலையிட்டு, கொடுத்த புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லையென்று நிரூபித்ததால் வழக்கு தள்ளுபடியாயிற்று! இ.பா. கொஞ்சமும் கவலைப்படாமல், ‘நான் ஜெயிலுக்குப்போனதேயில்லை. கொஞ்சநாள் செளக்யமா இருந்துட்டு வரலாம்னு பாத்தா, அதுமட்டும் நடக்கலே! எமெர்ஜென்ஸிலே உள்ளே போனா இன்னும் விசேஷம்!’ என்று சிரிக்காமல் சொன்னார்.

இதற்கு நேர்மாறான இன்னொரு நிகழ்ச்சி. இ.பா. கல்கியில் ‘ஹெலிகாப்டர்கள் இறங்கிவிட்டன’ என்ற ஒரு தொடர்நாவல் எழுதிவந்தார். அதில் வரும் கதாநாயகன் மணமாகி இரு குழந்தைகளுக்குத்தந்தை. தில்லி அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பவர். அவருக்கு ஒரு நாடக நடிகையுடன் இருந்த தொடர்பு, அதன் விளைவாக தீக்குளிக்கும் மனைவி, அவர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள்…. இப்படிப்போகும். ஆரம்பமான இதழிலேயே இது யாரைப்பற்றிய கதை என்று எங்களுக்கு தெரிந்துவிட்டது. இந்தக்கதையின் உண்மை ‘நாயகன்’ கோபப்படுவதற்குப்பதிலாக, வாராவாரம் கல்கிப்பத்திரிகைக்காக காத்திருக்கத்தொடங்கினார். இவர் இ.பா.வுக்கும் எனக்கும் நெருங்கிய நண்பர். ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் கரோல்பாக் போய், பத்திரிகைக்கட்டு வந்து பிரித்ததும், முதல் பிரதியை வாங்கி அங்கேயே படித்துவிட்டு, எங்கெங்கே உண்மையிலிருந்து கதை மாறுபடுகிறது என்பதைப்பற்றி என்னிடம் சுவாரஸ்யத்துடன் விவாதிப்பார். தன் கதையை பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தொடராக எழுதுவதில் அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி! இ.பா. ஒருதடவை என்னிடம், ‘மணி! எனது ‘தந்திர பூமி’யில் வரும் கதாநாயகன் உங்களை மாதிரித்தான். நீங்கள் தான் இன்ஸ்பிரேஷன்’ என்று சொல்லியிருக்கிறார். But I don’t think he really meant it!
தமிழ்ப்பள்ளிக்குப்பிறகு இ.பா. தில்லி தயாள் சிங் கல்லூரியில் தமிழாசிரியராகப்பணியாற்றினார். பிறகு சிலவருடங்கள் தில்லிப்பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பிரிவில் ப்ரொபஸராக ஆனார். தமிழ் படிக்க வருட ஆரம்பத்தில் பத்து மாணவர்கள்…….பரீட்சை எழுதும்போது நாலுபேர் கூட தேறமாட்டார்கள். ஒரு முறை ஆர்வமாக தமிழ் படிக்க வந்த பஞ்சாபி மாணவனிடம் இ.பா. சந்தோஷமாக, ‘உன் தமிழ்ப்பற்று எனக்குப்பிடித்திருக்கிறது. உன்னை தமிழ் படிக்க தூண்டியது எது?’ என்று கேட்டதற்கு அந்த பஞ்சாபி, ‘ஸார், நான் ஒரு தமிழ்ப்பெண்ணை காதலிக்கிறேன்!’ என்று பதிலளித்தானாம். தமிழ்ப்பிரிவின் தலைவர் டாக்டர் ஆறுமுகம். சரியான அக்மார்க் முனைவர். நச்சினார்க்கினியாருக்குப்பிறகு தமிழில் கவிகளே இல்லையென்று சத்தியம் செய்வார். இ.பா.வின் ஒரு கதையைக்கூட அவர் படித்ததில்லை. ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள். பிறகு வந்த முனைவர் சாலை இளந்திரையன் இவருக்கு சில நெருக்கடிகளை உருவாக்கியவர். அதன்பிறகு ஐந்தாண்டுகள் வார்ஸா வாசம். தில்லி திரும்பியவுடன் புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப்பள்ளியில் இயக்குநர் பதவி. இ.பா. கதைகள்/நாவல்களில் உரையாடல்கள் முக்கியப்பங்கு வகிக்கும். கதைகளின் போக்கை விவரங்களை விட வசனங்களே மேலே எடுத்துச்செல்லும். உரையாடல்களில் அவருக்கே உரித்தான பகடியும் Black Humour கலந்த நகைச்சுவையும் அடிநாதமாக இருக்கும். நாடகத்துக்கு இவையெல்லாம் இன்றியமையாதவை. இவர் கதைகளையும், நாவல்களையும் படித்த எனக்கு ’இவர் ஒரு நல்ல நாடகத்தை உருவாக்கித்தரமுடியும்’ என்ற நம்பிக்கையிருந்தது. அதனால் அவரைப்பார்க்கும்போதெல்லாம், ‘சாரதி சார், எங்களுக்கு ஒரு நாடகம் எழுதித்தாங்களேன்!’ என்று கெஞ்ச ஆரம்பித்தேன். பிறகு தொடர்ந்த என் நச்சரிப்புகள் அவருக்கு ஒரு தலைவலியாக மாறியிருக்கக்கூடும். சில இடங்களில் அவர் என்னை தவிர்ப்பதாக உணர ஆரம்பித்தேன். பிறகு அவரை அதிகம் படுத்துவதில்லை!

1969-ல் ஒரு நாள். இ.பா. போனில் தொடர்பு கொண்டு, ‘நீங்க கேட்டமாதிரி, ஒரு நாடகம் எழுதியிருகேன். படிச்சுப்பாத்து, பிடிச்சுதுன்னா போடுங்க. இல்லெ திருப்பியனுப்பிடுங்க’ என்று சொன்னார். ஆபீசை கட் பண்ணிவிட்டு உடனே டிபன்ஸ் காலனியில் இருந்த அவர் வீட்டுக்குப் போனேன். ‘மழை’ என்ற தலைப்பிட்ட ஒரு நாடகப்பிரதியைக் கொடுத்தார். அதை முதல் 34234_1317045815363_1507276454_30664208_1212288_nதடவையாகப்படிக்கும்போது, தமிழ்நாடகங்களில் அதுவரை கிடைக்காத, வங்காள, மராட்டிய நாடகங்களில் மட்டுமே பார்க்கக்கிடைக்கும் மூன்றாம்நிலை உன்னதப்பரிமாணத்தை உணர்ந்தேன். தமிழில் இப்படி ஒரு நாடகமா? என்று வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனது தட்சிண பாரத நாடக சபாவின் மற்ற அங்கத்தினர்களிடம் கலந்தாலோசிக்காமலே, உடனே மறுபடியும் அவர் வீட்டுக்குப்போய், நாடகத்தை வெகுவாகப்பாராட்டி, எங்கள் அடுத்த நாடகம் இதுவாகத்தான் இருக்கும் என்று உறுதியளித்துவிட்டு வந்தேன். நாலே பாத்திரங்களும் மூன்றே காட்சிகளும் கொண்ட மழை நாடகத்தில் வரும் முக்கிய பாத்திரம் நிர்மலா தற்காலப் பெண்ணியத்தில் ஊறியவள். நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையுடன் அவள், தன் தந்தையைப்பார்க்கவரும் ஜேம்ஸ் என்ற டாக்டரிடம், ‘Doctor! Are all the Saints impotent?’……என்றும், இன்னொரு இடத்தில், ” டாக்டர்! I need a man……அது நீங்களாகவே இருக்கலாம்!’ போன்ற வசனங்களை அனாயாசமாக உதிர்ப்பாள். தில்லியில் நாடகங்களில் நடிக்க தொழில்முறை நடிகைகள் கிடையாது. அரசாங்க அலுவலகங்களில் உயர் அதிகாரிகளாகப்பணியாற்றும் IAS ஆபீசர்களின் மனைவி, மகள் போன்றவர்களுக்கு நாடகத்தில் நடிக்க விருப்பமும் திறனும் இருந்தால் அவர்களைத்தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுப்போம். மழை நாடகத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகையின் தந்தை என்னை போனில் கூப்பிட்டு, ‘மணி! இந்த நாடகத்தில வர சில டயலாக் ரொம்ப ஷார்ப்பா இருக்கு. என் டாட்டர் அதை மேடையில் பேச கூச்சப்படறா. அதை குறைக்க அல்லது எடுத்துவிட முடியுமா?’ என்று கேட்டார். அதற்கு நான் ‘ஸார், அந்த வசனங்களை எடுத்துவிட்டால் இது நாடகமே இல்லை. இந்த நாடகத்தின் உயிரே அதன் வசனங்கள் தான்!’ என்று சொல்லி போனை வைத்தேன். பிறகு இ.பா.விடம், ‘சார், உங்க நாடகத்தைப்போட எங்களுக்கு சம்மதம். ஆனால் ஒரு கண்டிஷன். நாடகத்துக்கு ஹீரோயினையும் நீங்க தான் தேடித்தரணும்’ என்று வேண்டிக்கொண்டேன்.
இருநாட்களுக்குப்பிறகு, ‘மணி! எழுத்தாளர் க.நா.சு. டிபன்ஸ் காலனிலே என்வீட்டுக்குப்பக்கத்திலெ இருக்கார். அவர் மகள் ஜமுனா Interior Designing படித்துக்கொண்டிருக்கும் மாணவி. அவளிடம் கேட்டேன். நடிக்க ஒத்துக்கொண்டாள். நீங்க போய்ப்பாருங்க’ என்று சொன்னார். 1970-ல் ஜமுனா நிர்மலாவாகவும், நான் ரகுவாகவும் இ.பா.வின் மழை நாடகத்தில் நடித்ததும், அந்த நாடகம் அனைத்திந்திய அனைத்துமொழி நாடகப்போட்டியில், நான்கு வங்காள, மூன்று மராட்டிய நாடகங்களுக்கிடையே ஒரே தமிழ் நாடகமாக போட்டியிட்டு அதில் மழை மிகச்சிறந்த நாடகமாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் பழைய கதை. மழை நாடகத்தில் நடிக்கும்போது எங்களுக்கிடையே காதல் அரும்பி, துளிர்த்து, மலராகி, நாங்கள் திருமணம் செய்துகொண்டது உங்களில் சிலருக்கு தெரியாத கதை! எங்கள் திருமணத்துக்கு இந்திராவும், சாரதியும் தான் முக்கிய காரணிகள்.
இ.பா. ஆஸ்திரேலியா போயிருந்தபோது, அங்கே ஈழத்தமிழ் எழுத்தாளர் எஸ்.பொ.வுடன் ஒரு நேர்காணல். அதில் இ.பா. ‘நான் மழை நாடகம் எழுத முக்கிய காரணம் எஸ்.கே.எஸ். மணி. ஆனால் மணியின் திருமணத்துக்கு நான் மட்டுமே காரணம். தமிழ்நாட்டில் ‘பலஸ்ருதி’யென்று சொல்வார்கள். ஒரு ஸ்லோகத்தைச்சொன்னால், அதற்கு இன்ன பலன் என்று உண்டு. தமிழ்நாட்டில் கல்யாணமாகாத பெண்களுக்கு நான் மழை நாடகத்தை பரிந்துரைக்கிறேன். 1970-ல் தில்லியில் முதன்முறையாக இந்த நாடகத்தில் நடித்த மணிக்கும் ஜமுனாவுக்கும் உடனே திருமணம் நடந்தது. சில வருடங்களுக்குப்பிறகு, லண்டனில் மழை நாடகத்தில் நடித்த பாலேந்திரனுக்கும், நிர்மலாவாக நடித்த பெண்ணுக்கும் திருமணமாயிற்று. அமெரிக்காவிலும் இதே நாடகத்தில் நடித்த இருவரும் தம்பதிகளாயினர். இதனால் அறியப்படுவது யாதெனில் கல்யாணமாகாத பெண்கள் ஒரு தடவை மழை நாடகத்தில் நடித்தால், அவர்களுக்கு விவாகப்ராப்தி உடனே சித்திக்கும்! என்று சொல்லியிருந்தார்.

இந்தியாவில் சாகித்ய அகாடெமி விருதும், சங்கீத நாடக அகாடெமி விருதும் பெற்ற ஒரே எழுத்தாளர் இ.பா. தான். அவர் கையெழுத்து கோழி கிண்டினது போல் படிக்க சிரமாக இருக்கும். சில சமயங்களில், ‘மணி! என்ன எழுதியிருக்கேன், படிச்சு சொல்லுங்க’ என்று என்னிடம் காட்டுவார். அப்போது நான், ‘சார், நீங்க எழுதியிருப்பது ஏதோ மார்ன் ஆர்ட் மாதிரி இருக்கு. இதை லலித் கலா அகாடெமிக்கு அனுப்பினால், இந்த வருஷம் விருது உங்களுக்குத்தான்! இந்தியாவிலேயே மூன்று அகாடெமி விருதுகளும் பெற்றவர் இ.பா. என்ற பெருமை எங்களுக்கெல்லாம் கிடைக்கும்!’ என்று நான் வேடிக்கையாகச் சொல்வேன். இ.பா. எழுதிய ‘ராமானுஜர்’ நாடகத்துக்கு கே.கே. பிர்லா ட்ரஸ்ட் உருவாக்கிய ‘சரஸ்வதி ஸ்ம்மான்’ விருது கிடைத்தது. இவ்வருடம் அவருக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருதைப்பற்றி யாராவது குறிப்பிட்டால், கூச்சத்துடன் நெளிவார்! உங்களில் பலருக்கு இ.பா.வின் ‘உச்சி வெயில்’ நாவலைத்தான் இயக்குநர் சேது மாதவன் ‘மறுபக்கம்’ என்ற தலைப்பில் திரைப்படமாக எடுத்தாரென்பது தெரிந்திருக்கும். இவரது ‘ராமானுஜர்’ நாடகத்தை பொதிகையில் சீரியலாக உங்களில் பலர் பார்த்திருக்கக்கூடும்.
இ.பா.விடம் என்னை ஈர்த்த இன்னொரு விஷயம் அவருக்கு ஆங்கில இலக்கியத்தில் இருக்கும் ஆளுமை. அவர் ஆங்கிலத்தில் பேசினால், மிகச்சரியான வார்த்தைகள் அங்கங்கே வந்து விழும். பலர் பேசுவது போல ‘I cannot be able to…….’ ரகமாக இருக்காது. இப்போதிருக்கும் தமிழ் எழுத்தாளர்களில் ஆங்கிலத்தை சரியாகக் கையாளும் புலமை அவருக்குண்டு. சுஜாதாவுக்கும் அது இருந்தது. எழுத்தாளர்களில் எத்தனை பேர் இன்று British Council-க்கும், American Library-க்கும் போய் தங்களைப் புதுப்பித்துக்கொள்கிறார்கள்? சென்னைக்கு வந்த புதிதில் இவர் பேச்சு ஆங்கிலத்தில் நினைத்து தமிழில் பேசுவதைப்போல இருந்ததுண்டு, க.நா.சு.வைப்போல. ஓரிரு வருடங்களில், இவருக்கு தமிழ் மேடைப்பேச்சு கைவசமாகி விட்டது. அவர் நல்ல மூடில் பேச ஆரம்பித்து முடிக்கும்போது, கைதட்டல்கள் ஒரு சடங்காக இல்லாமல், அவர் இருக்கையில் சென்று அமரும் வரை தொடரும்!
அதே போல, இ.பா.வின் ஆழ்வார்களைப்பற்றிய புரிதலும், நாலாயிர திவ்யப்பிரபந்தம் குறித்த அறிதலும் ஒருசில கட்டுரைகள் வாயிலாகவே வெளிவந்துள்ளன. அவருக்கு டாக்டர் பட்டம் வாங்கிக்கொடுத்ததே ஆழ்வார்களும் பிரபந்தமும் தான்! என்னைக் கேட்டால், நாரத கான சபா செயலர் கிருஷ்ணசுவாமி ஆண்டுதோறும் இ.பா.வை வைத்து தன் அரங்கில் ‘ஆழ்வார்களின் தமிழ் இலக்கியச்சுவை’ என்று பத்துநாள் இலக்கியப்பிரசங்கம் ஏற்பாடு செய்யவேண்டும். “ஸ்ரீயப்பதியான எம்பெருமான் சாட்சாத் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும்…….” என்று தொடங்கும் உபன்யாசங்களுக்குப்பதிலாக, ஆழ்வார்களையும், திவ்யப்பிரபந்தத்தையும், தமிழ் இலக்கிய நோக்கில் நமக்கு அறிமுகப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாக அது அமையும்!

தில்லியில் இ.பா.வும் கணையாழி கஸ்தூரி ரங்கனும் நெருங்கிய நண்பர்கள். இ.பா.வின் டிபன்ஸ் காலனி விலாசம் தான் சிலகாலம் கணையாழியின் முகவரியாக இருந்தது. இணையாசிரியராக இருந்த இ.பா.வுக்கும் சென்னையில் இருந்த அசோகமித்திரனுக்கும் அவ்வப்போது ஊடல்கள் உரசல்கள் ஏற்பட்டதுண்டு. இப்போது இருவரும் நெருங்கிய நண்பர்கள். இலக்கியச்சிந்தனை ப. லட்சுமணனும், மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும் இ.பா.வின் நெடுநாள் நண்பர்கள்.
’உயிர்மை’ பதிப்பகம் என் முதலும் கடைசியுமான பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகத்தை வெளியிட்டபோது, இ.பா.விடம் ஒரு முன்னுரை எழுதித்தர கேட்டுக்கொண்டேன். அதில் பொய்யான புகழாரங்களாகச்சொரிந்து என்னை திக்குமுக்காட வைத்துவிட்டார். அதிலிருந்து சில வரிகள்: ……….. ‘ஆனால் இது மட்டும் என்னால் சொல்லமுடியும். மழை அப்போது மணி மூலம் மேடையேறாதிருந்தால், நான் தொடர்ந்து நாடகம் எழுதியிருப்பேனா என்பது சந்தேகந்தான். அது மேடையேறுவதற்கு முழுக்காரணமாக இருந்தவர் மணி தான்’………..’மணி தேர்ந்த நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல், இலக்கியத்திலும் இசையிலும் மிகுந்த ஈடுபாடுடையவராக இருந்ததுதான் என்னை மிகவும் கவர்ந்தது’……….’தில்லிக்கு வரும் சென்னை இசைக் கலைஞர்களில், மிகவும் பிரபலமானவர்களை மணி வீட்டில் தான் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கும் மணியின் குடும்பத்துடன் ஓர் ஆத்மார்த்த உறவு இருந்ததையும் என்னால் உணர முடிந்தது.’……….’மணியினால் செய்து முடிக்கமுடியாத காரியம் எதுவுமில்லை என்பது போன்ற ஓர் அபிப்பிராயம் அவருடைய நண்பர் வட்டாரத்துக்கு எப்பொழுதுமே உண்டு. ‘மணியா? அவரிடம் சொன்னால் ஒரு வெள்ளை யானையையே உங்கள் வீட்டு வாசலில் கொண்டு வந்து கட்டிவிடுவார்' என்று சொல்வார்கள். தில்லியில் அவரால் பயன் அடையாத தென்னிந்தியக் கலாசாரக் குழு எதுவுமில்லை……….“ ‘முடியாது' என்பது என் அகராதியில் கிடையாது” என்று நெப்போலியன் சொல்வாராம். இது நண்பர் மணியைப் பொறுத்த வரையில் மிகவும் பொருந்தும்’………. முன்னுரையை இப்படி முடித்திருந்தார்: ‘அவருடைய எழுத்தாற்றல் சமீபத்தில் தா ன் எனக்குத்தெரிய வந்தது. ஆனால் நான் ஆச்சரியப்படவில்லை. இதுவரையில் அவர் ஏன் எழுதாமலிருந்தார் என்பது தான் என் ஆச்சரியம்!’

எவ்வளவு பெரிய வார்த்தைகள்? உண்மையிலேயே நெகிழ்ந்துபோனேன். யார் தயவும் இல்லாமலே இ.பா நாடகாசிரியர் ஆகியிருப்பார். அவரால் எங்கள் DBNS குழுவுக்கும் எனக்கும் நவீன தமிழ் நாடக இயக்கங்களின் முன்னோடி என்ற சிறப்பு 1970-லேயே கிடைத்தது. அது அவர் எனக்கு அளித்த பெருமை. எழுபதுகளின் தொடக்கத்தில் அவரை சந்திக்கும்போதெல்லாம் நச்சரித்து நச்சரித்து எழுதச்சொன்ன முதல் நாடகம் மழை, பிறகு போர்வை போர்த்திய உடல்கள், ஒளரங்கசீப் போன்ற நாடகங்களை அப்போதே தில்லியில் பலதடவைகள் வெற்றிகரமாக மேடையேற்றி, அவைகளில் நடித்த பெருமை எனக்குண்டு.

இ.பா. நாடகங்களில் ‘காலயந்திரங்கள்’ நாடகத்தை நான் போட்டதில்லை. அதில் வரும் மஹாதேவன் பாத்திரம் எனக்குப்பிடித்தது. அழகாக, மிகைப்படுத்தாமல், Subtle-ஆக செய்யவேண்டிய கதாபாத்திரம். சென்னையிலோ, மற்ற நகரங்களிலோ யாராவது இந்த நாடகத்தைப்போட முன்வந்தால், கைச்செலவு செய்துகொண்டு போய், காலணா வாங்காமல் மஹாதேவன் பாத்திரத்தை நடித்துவிட்டு வர நான் தயார்! இ.பா.வே சொல்லியிருக்கிறார்: “என் நாடகங்களில் அவர் எந்தப் பாத்திரமாக நடித்தாரோ, அந்தப் பாத்திரத்தைப் பற்றி நான் எப்பொழுதெல்லாம் நினைக்கின்றேனோ அப்பொழுதெல்லாம் மணிதான் என் கண் முன் வந்து நிற்பார். வேறு பலர் அந்த நாடகப் பாத்திரத்தில் பிறகு நடித்திருந்தாலும், மணிதான் என் கண்முன் வந்து நிற்கிறார்.” மஹாதேவனாகவும் நடித்து இ.பா.வை பயமுறுத்தலாமே! சரி, கட்டுரை நீண்டுகொண்டே போகிறது…….. இவரைப்பற்றி சொல்வதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

எனக்கு ஓர் ஆசை: இ.பா…..நூறு! விழாவிலும் அவரை மேடையில் இதே துடிப்புடன் பார்க்கவேண்டும்!
***** **** **** *****
bharatimani90@gmail.com உயிர்மை ஆகஸ்ட், 2010 இதழில் வெளிவந்தது

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்